7. என் வீட்டைத் தேடி
அன்புள்ள மீம்,
புலம்பெயர்ந்தோர்
பின்வரும் மூன்று வகைமையில் ஏதேனும் ஒன்றில் விழுவர்: மதப்பரப்புநர், கூலிப்படை
அல்லது ஒவ்வாதவன். மீண்டும் மீண்டுமான கடற்தாண்டிய எனது அலைவுகளைக் கருத நான்
பெரும்பாலும் ஓர் ஒவ்வாதவளாகவே இருந்திருக்கிறேன் என்பேன்.
முரண் இதோ: அகத்தில் நான் அமெரிக்காவுக்கு
அன்னியமாய் உணரும் அதே வேளை வேறு எந்த நாட்டிலும் வெளிநாட்டவள் என்னும்
அடையாளத்துடன் என்னால் நிம்மதி காண முடிந்தது. உதாரணமாக, வீட்டுப்பெண்கள் தமது
முற்றங்களில் இருந்தபடி என்னைச் சுட்டிக்காட்டிக் கெக்கலித்த, சிறார்கள் என்
பின்னே கும்பலாய்த் தொடர்ந்துவந்த, சுற்றுலாப் பயணிகள் என்னுடன் புகைப்படம்
எடுத்துக்கொள்ளும்படிக் கேட்ட, நான் அப்பட்டமான வெள்ளைக்காரியாகத் தெரிந்த
இந்தியாவில், எனது சொந்த நிறத்தில் எனது தாய்நாட்டை விடவும் நான் மிகவும்
சவுகரியமாக உணர்ந்தேன்.
சொந்தக்காரியாகவே
நான் சுற்ற முடிந்த ஜெர்மனி நார்வே போன்ற நாடுகளிலும்கூட நானொரு வெளிநாட்டவள்
என்னும் சுதந்திரத்தில் திளைத்தேன். ஏனெனில், சுதந்திரம் என்பது அமெரிக்காவின்
இலக்க அடையாளமாக இருப்பினும் அமெரிக்க சமூகத்தில் தன்னை உறுப்பினராக
வைத்துக்கொள்வதற்கான குறுகிய நியதிகளில் பொருந்தவும் போட்டிகளின் அழுத்தங்களாலும்
நான் மிகவும் நசுக்கப்படுவதாக உணர்ந்தேன். வெளிநாடுகளில், நான் மூச்சு விடலாம்
போல் தோன்றியது.
ஒரு
குறிப்பிட்ட நாட்டில் வாழவும் பணிபுரியவும் என்னை அனுமதிக்கும் எனது கடவுச்சீட்டின்
ஒவ்வொரு விசாவுடனும் ஒரு வெளிநாட்டினர் விதிவிலக்கு அனுமதி எனக்குக்
கிடைத்துவிட்டதாக நான் கற்பனை செய்வேன். அவ்வனுமதி நான் மொழியை அரைகுறையாகப்
பேசவும் விடுமுறை நாட்களைக் கடைப்பிடிக்காதிருக்கவும் இறுதியாக, நடுத்தர வர்க்க
வாழ்வியலின் சட்டகமான ’ஓரிடத்தில் குடியமர்தல்’ மற்றும், இல்லம் மற்றும் பிள்ளைகள்
என்னும் வடிவில் அந்த நங்கூரத்திற்கு மேலும் எடையேற்றுதற்கு ஒருவரின் சக்திகள்
மற்றும் ஆற்றல்கள் அனைத்தையும் செலவிடுவதல் என்பதை என்னைவிட்டும் நீக்கிவிட்டது
என்றே கருதுவேன்.
”நிச்சயமாக
மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கிறான்” (70:19) என்கிறது குர்ஆன். ஆனால்
ஓரிடத்தில் தங்கியிருத்தலே எனக்கு மிகவும் சங்கடமான விசயமாக இருந்தது. என்
நினைவில் நிற்கும் முகவரிகளைப் பட்டியலிட்டேன். கடந்த இருபது வருடங்களில்
குறைந்தது இருபது முகவரிகள். ஏன் அத்தனை அவசரமாய் நகர்ந்தேன்? ஒன்று எனது நாட்பட்ட
ஆர்வம்: ஒன்றில் நான் சுவாரஸ்யப் பட்டுவிட்டால் அதனை முழுமையாக அறியும்வரை
ஓயமாட்டேன். அல்லது இன்னும் நறுக்கென்று சொல்வதெனில், என்னைத் தொலைக்கவே நான்
பயணிக்கிறேன்.
அது
வெளிப்படையான அப்பியாசமாகவும் (அதோ, இஸ்தான்பூலில் நான் கேளிக்கைகளின் அட்டவனையைப்
பார்த்தபடி, என்னை நோக்கி முகவர் மீண்டும் மீண்டும் சொல்கிறார், “நீங்கள்
ஆசியாவுக்குப் போகவேண்டும்!”), குறியீடான ஒன்றாகவும் இருந்தது. சிலநேரங்களில், அது
ஒரு சமாளிக்கும் வழிமுறை. சில மனிதர்கள் பணிச்சுமையாலும் அல்லது போதை
வஸ்துக்களாலும் தம்மை மந்தப்படுத்திக்கொள்வது போல, வலியிலிருது தப்பிக்க நான்
என்னைப் பயணங்களில் அல்லது புதிய இடங்களில் மூழ்கடித்தேன். உதாரணமாக, என்
வெளிநாட்டு நகர்வுகள் பெரும்பாலும் ஓர் உறவுமுறிவைத் தொடர்ந்ததாகவே இருந்தது.
நீரதனைப்
புரிந்துகொள்வீர் என்றெனக்குத் தெரியும். ஒருவகையில், நீங்கள் மக்காவை விட்டு
மதீனாவுக்குச் சென்றபோது அதுதான் நடந்தது. குர்ஆனின் செய்தியே உமது வாழ்வின் புதிய
காதலாய் இருந்தது; அது உம் வாழ்வையும் நிகழ்கால உறவுகளையும் பெரிதும் மாற்றியது.
விரைவில் உமது சொந்தக் குடும்பத்திலும் ஊரிலும் உமக்கொரு இடம் இல்லாமல் ஆயிற்று.
மக்கள் உம்மைக் காண பெரிதும் மகிழ்கின்ற ஒருவராக, தோளில் தட்டி உம்மை ஒரு
தேநீருக்கு அமரச் செய்யும்படியான ஒருவராக இருந்ததிலிருந்து உள்ளே வர தடை
செய்யப்பட்ட ஒருவராக உம் நிலை ஆனது. நீர் மறைந்து போக அவர்கள் விரும்பினர். அதுவே
அவர்களின் முயற்சிகளாகவும் வெளிப்பட்டது: உம் மீது குப்பைகளைக் கொட்டுவது,
அசிங்கமான வார்த்தைகளை வீசுவது, உம்மைத் தவிர்ப்பது, உம்மையும் உம் தொண்டர்களையும்
தனிமைப்படுத்துவது. படிக்கவே மனம் பதறுகிறது: நீங்கள் புறப்பட வேண்டிய நேரம் என்று
ஒவ்வொருவரும் எண்ணத் தலைப்பட்ட அந்த நீண்ட நெடும் கடின காலம். அவர்கள் உம்
வாழ்வைக் கடினமாக்குவதால் விட்டுச்செல்வதா என்று நினைக்கும் அளவுக்கு உமது
விசுவாசமும் பொறுப்புணர்வும் அத்தனை அதிகமாய் இருந்தது. எனினும் விஷயங்கள் ஒரு
முடிவுக்கு வந்திருந்தன.
நீங்கள்
சொன்னதாக அறிவிப்பு: “மக்காவே! உனது மக்கள் என்னை வற்புறுத்தி இருக்காவிடில் நான்
ஒருபோதும் உன்னைப் பிரிந்திருக்க மாட்டேன்”. அகதி ஆக்கப்படுதல் உமது சொந்த முடிவாக
இருக்கும்போது சோகத்தையும் இழப்புணர்வையும் அது பன்மடங்காக்கிவிடும் என்பதை நான்
அறிவேன்.
அதே
சமயம், தாய்வீட்டை விட்டுப் பிரிவது ஓர் இறைத்தூதராக உமது இலட்சியத்தின் ஓர்
உள்ளம்சம் என்று உணர்கிறேன். உமது கலாச்சாரத்தில் எப்போதும் நீங்கள் ஒருதுளி
விலகியே இருந்தீர்கள் – பழங்குடித் தொடர்புகளில் ஓர் அனாதையாக,
சதித்திட்டமிடுவோரின் சமூகத்தில் அகநேர்மை கொண்ட ஒருவராக – எனினும் உமது
செய்தியின் உண்மையை நீங்கள் வாழ்ந்து காட்ட, சமூகக் கட்டுப்பாடுகள் ஒருவருக்கு
அதிகார அடுக்குகளில் இடம் பெற்றுத் தருகின்ற அமைப்பை விட்டும் நீங்கள் அப்பால்
நீங்கிச் செல்லவேண்டியிருந்தது.
பிற
நாடுகளில் வாழ்ந்த அனுபவத்தால் நான் அமெரிக்காவை வித்தியாசமாகப் பார்க்கத்
தொடங்கினேன். எமது வெளிநாட்டுக் கொள்கையின் நயவஞ்சகத்தை, ஜனநாயக விழுமியங்களை
முழங்கும் சர்வாதிகாரிகளை நான் கண்டேன். எம் உள்நாட்டு அரசியலின் சீரழிவை நான்
கண்டேன். ‘பணமும் பதவியும்’ என்று அது போற்றப்பட்டு வந்தது. அமெரிக்காவின் ஒரு
சிறுபான்மை பணக்காரர்களால் ஆளப்படுவதற்காக உருவாக்கப்படும் நமது மூன்றாம் உலகம்
கண் முன்னே விரிந்தது. அது ஏழைகளும் படிப்பற்றோரும் கொண்ட அடிமட்ட உலகமாய்
இருந்தது. எனினும் அமெரிக்கரின் பாசாங்கற்ற நல்லெண்ணத்தையும் நான் கண்டேன்,
பிறருக்கு உதவவும் பொது நன்மைக்கு உழைக்கவுமான அவர்களின் ஆர்வத்தை, தன்னார்வத்தை,
எவ்வித பொருளுதவியையும் அல்லது அரசுதவியையும் எதிர்பாராமல் தொண்டாற்றுவதைக்
கண்டேன். மிகவும் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்துவிடுவதில் எமது எல்லையற்ற
தேசத் தன்னம்பிக்கையைக் கண்டேன்.
உமது
மக்களை விட்டுப் பிரிந்த நிலையில் நீங்கள் அவர்களிடம் இதே பண்புகளில் சிலவற்றைக்
கண்டிருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை. பழமரபிற்கான அவர்களின் விசுவாசமும்
உடன்பாட்டுப் பெருமிதமும் இறைவிசுவாசிகளின் சமூக உருவாக்கத்தினுள் செலுத்தப்பட்ட
ஏதுவாயிற்று. வணிகத்தில் அவர்தம் திறன் புதிய சிந்தனைகளை தூர எல்லைகளுக்கு
எடுத்துச் செல்ல ஏதுவாயிற்று. அவர்தம் கவிதை ரசனைகூட உமக்கு அருளப்பட்ட
இறைவெளிப்பாடுகளின் அழகையும் சத்தியத்தையும் உள்வாங்கிக்கொள்வதற்கான அகப்புலனை
உருவாக்க ஏதுவாயிற்று.
இவையெல்லாம்,
பின்னாளில் நீங்கள் திரும்பி வந்து மக்காவை உமதென்று அறிவித்த நிகழ்வில்
உறுதியாயிற்று. உம்மை அகதியாக வெளியேற்றிய நகரமே இஸ்லாத்தின் ஆன்மிகத் தலைநகர்
ஆயிற்று. அது எனக்கொரு நம்பிக்கையைத் தருகிறது, எதற்கென்று என்னால் சொல்ல
முடியாவிட்டாலும். அமெரிக்காவை விட்டு நான் வெளியேறும் ஒவ்வொரு முறையும் இம்முறை
அது வேறு விதமாக இருக்கும் என்று எண்ணியபடியே போகிறேன். இறுதியில் நான் என்
இடத்தைக் கண்டடைவேனா? (இதுவரை இல்லை). ஒருவேளை, எவ்வித பூகோல வரைவுமின்றி, ஒத்த
மனங்களும் இதயங்களுமான சமூகத்தில் எனது இடத்தை நான் அடைவேன் போலும்.
ஒரு
சில வாரங்களுக்கும் முன் – செப்டம்பர் 11-இல் – நான் ’மவ்லவி தரீக்கா’ என்னும்
சூஃபி நெறியில் தீட்சை பெற்றேன். அச்சடங்கின் முடிவில் தாதா சொன்னார், “வீட்டுக்கு
நல்வரவு”. உடனே என்னை நண்பர்கள் சூழ்ந்துகொண்டு ஒவ்வொருவரும் அணைத்து அதனையே
என்னிடம் சொன்னார்கள். நான் அழுதுவிடுவேன் என்று அனுமானித்து டிஷ்யூ தாள்கள்
எடுத்து வந்திருந்தேன். ஆனால், கன்னங்கள் வலிக்க வலிக்கச் புன்னகைத்திருந்தேன்.
அது
ஒரு நகைமுரண், இவ்வுலகில் அன்னியனாக இருப்பதும் இடமற்றதில் எனது இறுதி இடத்தைக்
கண்டுகொள்வதும். ஆனால் அதுவும்கூட உம்முடன் இணைந்து நான் பயணித்துக் காண வேண்டிய
ஓர் உலகமே.
பாலைவனத்திலொரு
தருநிழலில் உம்முடன் நின்றபடி...
அன்னா.
No comments:
Post a Comment