Sunday, February 24, 2013

அலைகளுக்கு அப்பால்அந்திப் பொழுது. அலைகடல் முன் கரையில் தோஸ்த்துடன் அமர்ந்திருந்தேன். அலைகள் மீண்டும் மீண்டும் எழுந்து விழுவதும் கரையில் தவழ்ந்துவிட்டுக் கடலுக்குள் மீள்வதுமான காட்சி சுகமாய் இருந்தது.

”எத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் கடலின் அலைகள் கரையில் விளையாடும் காட்சி அலுப்பதே இல்லையே?” என்றேன். தோஸ்த் புன்னகை செய்தார்.

“கடலின் அலைகள் எப்படி உள்ளன? ஒரே மாதிரியா? வெவ்வேறு மாதிரியா?” என்று கேட்டார்.

“ஒரே மாதிரிதான் உள்ளன. அதே நிறம். ஏறத்தாழ ஒவ்வொரு அலையும் அதே உயரம். அதே வளை வடிவம். நீரால் ஆன துப்பட்டா போல் விளிம்பில் வெள்ளையாய் நுரை கட்டிக்கொள்ளும் அலங்காரம். ஒரே மாதிரிதான் அலைகள் மீண்டும் மீண்டும் வருகின்றன என்றாலும் அவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதில் சலிக்காத சுவாரஸ்யம் உள்ளது” என்றேன்.

”ஒரே மாதிரி இருக்கும் இந்த அலைகளைப் பார்ப்பதிலேயே மனதிற்கு இவ்வளவு சுவை இருக்கிறது என்றால், ஒவ்வொரு அலையும் புதுப்புது கோலமாய் வந்தால்? புதிய புதிய வடிவங்களில், வண்ணங்களில் வந்தால்? அதில் எத்தனை சுவாரஸ்யம் இருக்கும்?” என்று கேட்டார் தோஸ்த், பேச்சை ஓர் இலக்கை நோக்கிச் செலுத்துபவர் போல.

“சொல்லத் தெரியவில்லை. சுவாரஸ்யம் அதிகமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது” என்றேன்.

“ஒரு பலூன்காரன் ஒரே வண்ணத்தில் ஒரே வடிவம் கொண்ட பலூன்களைக் கொண்டு வந்தால் குழந்தைகள் லேசாகத்தான் சுவாரஸ்யம் அடையும். ஆனால் அவன் பல வண்ணங்களில் பல வடிவங்களில் பலூன்களைக் கொண்டு வந்தால் குழந்தைகள் அதிகமாகக் குதூகலிப்பார்கள் அல்லவா? வளர்ந்தவர்களின் மனநிலையும் அப்படித்தான் 
இருக்கிறது. விதங்களில் நாம் சுவாரஸ்யம் அடைகின்றோம்.

இந்தப் பிரபஞ்ச தோற்றம், அதில் உள்ள சர்வகோடி சிருஷ்டிகளின் கோலங்கள் எல்லாம் இறை உள்ளமை என்னும் கடலில் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் அலைகள். வெவ்வேறு வடிவங்களிலும் வண்ணங்களிலும் தோன்றித் தோன்றி மறையும் இந்த அலைகளில் நம் மனங்கள் சிக்கிக் கொண்டும் சொக்கிக் கொண்டும் சுக துக்கங்களை அனுபவிக்கின்றன. ஆனால் சுவாரஸ்யம் குறையவே இல்லை. குறிப்பாக, இக்காலம் அலைகள் அபரிதமாகக் கிளம்பி ஆர்ப்பரிக்கும் காலமாக இருக்கிறது. மனிதனின் சிந்தனை வழியாகவே எத்தனை எத்தனை வகையான அலைகள் பொங்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பார். வீடுகள், வாகனங்கள், ஆடைகள், அணிகள், உணவுகள், வகை வகையான பொருட்கள்... சுவாரஸ்யத்தைத் தூண்டும் அலைகள்.

அலைகளுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று காணும் ஆர்வம் ஒருபோதும் எழாத நிலைக்கு இவை மனிதனை வைத்துவிடும் போலும்.

அலைகளில் கடல்தான் இருக்கிறது. ஆனால் அலைகளில் கடலின் ஆழம் இருப்பதில்லை. ஆழம் அறிய வேண்டும் எனில் அலைகளுக்கு அப்பால் செல்லத்தான் வேண்டும்.

கடற்கரையில் புரளும் அலைகளின் மீது மீனவன் தன் வலைகளை வீசுவதில்லை. நீ உன் சிந்தனை வலையை படைப்புகள் என்னும் அலைகளுக்கு அப்பால் வீசு.

அலைகளில் விளையாடுவது தீதல்ல. ஆனால் அலைகளில் விளையாடிக்கொண்டு மட்டுமே காலம் கழிப்பவன் மீனவன் ஆகான்.

அலைகளுக்கு அப்பால் பல ஆபத்துக்கள் காத்துக் கிடக்கின்றன. சுறா மீனின் தாக்குதலைக் கரையில் அமர்ந்திருப்பவர்கள் அறிவது அரிது. ஆன்மிகத்தின் ஆழங்களுக்கு நீ செல்லச் செல்ல அதிலிருக்கும் ஆபத்துக்களை அறிவாய்.

சிறந்த மீனவன் சுறா மீன்களையும் பிடித்து விடும் கலையில் தேர்வான்.
அலைகள் ஓயட்டும் கடலுக்குள் செல்கிறேன் என்று ஒரு மீனவன் சொன்னால் அவன் கடலுக்குச் செல்லும் காலம் வரப்போவதில்லை.

“ஓர் அந்நியனைப் போல் அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல் இவ்வுலகில் நீ ஆகு” (குன் ஃபித்துன்யா கஅன்னக கரீபுன் அவ் ஆபிருஸ் ஸபீல்; நூல்:புகாரி.) என்பது நபி (ஸல்) அவர்களின் அருள்மொழி.

ஓர் இடத்திற்கு வரும் அந்நியனுக்கு அவ்விடத்தில் உள்ள எதுவும் பரிச்சயமானதாக இருக்காது. அதுபோல் மாறிவரும் உலகக் கோலங்களில் எல்லாம் பரிச்சயப்பட்டுக் கொண்டிருக்காதே. உன் காலம் வீணாகக் கழிந்துவிடும்.
வழிப்போக்கன் ஓரிடத்தில் நிரந்தரமாகத் தங்குவதில்லை. எப்பொருளையும் உன் மனம் தங்குமிடமாக எடுத்துக் கொள்ளாதே.

செவிகளையும் கண்களையும் இறுக்கி மூடு
அப்பால் செல் அப்பால் செல் அப்பால் செல்
என்கிறார் மௌலானா ரூமி (ரஹ்)

எம் பணி
காலையிலும் மாலையிலும்
கடந்து செல்வதே
செல்வது செல்வது
நிரந்தரமாய்ச் செல்வதே
என்கிறார் அல்லாமா இக்பால் (ரஹ்)

Sunday, February 17, 2013

கண்சாட்சி”கடற்கரையில் நடனமாடிய
காலடிச் சுவடுகள் எங்கே?”
                  -ஜோனி மிச்செல்

”THE EYE WITNESS” (கண்சாட்சி) என்னும் சூஃபிப் பாடலுக்கான பின்னூட்டத்தில் இந்த மேற்கோள் வரிகளைக் கண்டேன்.

இவ்வுலகம் கடற்கரை. இவ்வாழ்வு அந்தக் கடற்கரையில் நாம் ஆடும் நடனம். காலடிச் சுவடுகள் அடுத்தடுத்து அலைகளால் அழிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்னும் ஆழ்ந்த பொருள் இந்த மேற்கோளில் தொனிக்கிறது.

”ஐவிட்னஸ்” என்னும் அந்தப் பாடல் ஒரு சூஃபிப் பாடல். ”If man but knew” (1972) என்னும் இசைப்பேழையில் உள்ள மூன்றாம் பாடல். அப்பாடலை இயற்றியவர் சூஃபி குருவான ஷைக் முஹம்மத் இப்னுல் ஹபீப் (ரஹ்) என்பவர். அதை இசையுடன் பாடியிருக்கும் குழுவின் பெயர் ”ஹபீபிய்யா.” மொரோக்கோ நாட்டின் இசைக் குழு.

”ஹபீபிய்யா” என்னும் அந்த இசைக்குழுவின் உறுப்பினர்கள்: மைக்கேல் எவான்ஸ் (மண்டோலா & கிதார்), ஐயான் வைட்மேன் (வாய்ப்பாட்டு, ஷகுஹாச்சி, பியானோ, பினா ஆர்கன் & ஓபோ), ரோஜர் பொவெல் (சஃபி மேளம் & ட்ரம்ஸ்), கொன்றாட் அர்க்யுலெட்டா (வாய்ப்பாட்டு, ஷகுஹாச்சி, நை புல்லாங்குழல், சிதர் & பாஞ்சோ), சூசன் அர்க்யுலெட்டா (வாய்ப்பாட்டு, ஷகுஹாச்சி, கோட்டோ, வையோலா & கிதார்).

இக்குழுவில் இருக்கும் ஐயான் வைட்மேனும் ரோஜர் பொவெலும் முன்பு “மைட்டி பேபி” என்னும் இசைக்குழுவில் இருந்தவர்கள். அது 1968-ல் லண்டனில் உருவாக்கப்பட்டது. அதில் இவர்களுடன் அலன் பாம் கிங், மைக் இவான்ஸ் மற்றும் மார்டின் ஸ்டோன் ஆகியோரும் இருந்தனர். ”மைட்டி பேபி”, “ஜக் ஆஃப் லவ்” ஆகிய இரண்டு இசைப்பேழைகள் இக்குழுவின் பயனாக வெளிவந்தன. அத்தருணத்தில் வைட்மேன், இவான்ஸ், பொவெல் ஆகிய மூவரும் சூஃபி நெறிக்கு மாறியதால் அக்குழு முடிவுக்கு வந்தது. இவர்கள் மூவரும் “ஹபீபிய்யா” என்னும் பெயரில் ஒரு புதிய இசைக்குழுவைத் தொடங்கி “If man but knew” என்னும் இசைப்பேழையை 1972-ல் வெளியிட்டார்கள்.

சூஃபி நெறியின்பால் இவர்களை ஈர்த்த ஷைக் முஹம்மது இப்னுல் ஹபீப் அல்-ஹசனி (ரஹ்) என்பவர் மொரொக்கோவில் உள்ள தர்க்கவி-ஷாதலிய்யா தரீக்கா என்னும் சூஃபி ஆன்மிகப் பள்ளியின் குருவாக வாழ்ந்து 10-ஜனவரி-1972 அன்று இவ்வுலகிலிருந்து மறைந்தார். அதாவது, ஹபீபிய்யா இசைக்குழுவினர் சூஃபி நெறியில் தம்மை இணைத்துக்கொண்ட அதே வருடம்.

தர்க்கவி-ஷாதலிய்யா சூஃபிப்பள்ளியின் தியானக்கூடம் இங்கிலாந்திலும் இயங்கி வந்தது. அதன் வழியாகத்தான் ஹபீபிய்யா இசைக்குழுவினர் அந்நெறியில் இணைந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

அவர்கள் இசையமைத்துப் பாடியுள்ள, “the eye witness” என்னும் பெயரில் இசைப்பேழையில் இடம்பெற்றுள்ள, ஷைக் அவர்களின் கஸீதா என்னும் ஆன்மிகம் கவிதையினைத் தமிழாக்கித் தருகின்றேன்.

“தூய காட்சிநிலை ஆசிப்பவனே!
உருவங்களையும் உயிரையும் விட்டு
மேலெழுவாயாக!

ஆதிப் பாழுக்கு ஆகு
இல்லாதவனாய் இரு, அழிந்தவனே!

ஒவ்வொரு காலத்திலும்
அர்த்தங்கள் பரவி வந்ததொரு
ரகசியம் கொண்டு உள்ளமையைத் தரிசிப்பாய்!

செயல்களின், பொருள்களின் தோற்றங்கள்
செய்பவனை எவ்வகையிலும் பலவாக்குவதில்லை.

அழியும் ஒவ்வொரு பொருளுக்கும்
அப்பால் எழுபவன்
உள்ளமையைக் காண்கிறான் இருமை இன்றி.

அருள்மயமான, பரிபாலிக்கின்ற, நெருக்கமான ரட்சகனின்
தரிசனத்தைப் பெற்றவனின் வெற்றியே!

தன் இருள்நிலை விட்டுத் திரும்பி வரும்
அடியவனை ஆதரிக்கும் ரட்சகன் அவன்.

அடிமையின் திருப்பமானது
காதலையும் நெருக்கத்தையும் கொண்டுவருகிறது.

அருட்கொடை காண்கையில்
அல்லாஹ்வை நினைத்தல்
உள்ளத்தில் ஒளிமிக்க
உதிப்பை உண்டாக்கும்.

தன்னைவிட்டும் பாதுகாப்படைந்தவன்
படைப்பைவிட்டும் பாதுகாப்படைந்தான்.

இச்சைகளில் மனதிற்கு எதிராகு
இறைஞானியின் உடனிருப்பைத் தேடு.

மனத்தின் மறைந்த குறைகளைக் காட்டி
ஆன்மிக மருந்தினை அளிப்பார் அவர்.

பாதையில் உன்னுடன் பதமாக இருப்பார்
சோதனையில் வீழ்வோரின் வழிதவரிச் சென்றோரின்
வேதனை மீது இரக்கம் கொள்வார்.

உள்ளமையின் தியானத்தில் உன்னை அழிப்பார்.

திருமறை கொண்டு திறப்பார்
இதயத்தில் இறைவனின் நீங்கா நினைவை.

அர்த்தங்கள் பொங்கிவரும் அறிவுரை வழியே
உயிருக்குப் புத்துணர்ச்சி ஊட்டிடுவார்.

இறைவா!
அருள்மறையின் தோற்றுவாய் தொனிக்கப்படும் காலமெல்லாம்
திருநபியின் மீது உன் பேரருளைப் பொழிந்திடுவாய்.

இறைக்கொள்கை கொண்டு மக்கள்
பலன் பெரும் காலமெல்லாம்
திருநபியின் குடும்பம் மீதும்
அன்னாரின் தோழர்கள் மீதும்
பேரருளைப் பொழிந்திடுவாய்.

சத்தியப் பரம்பொருளே!
என் வாழ்நாளில் உள்ளோர் அனைவருக்கும்
பேரின்பமும் திருப்தியும் அருள்வாயாக!”

Wednesday, February 13, 2013

ஒரு ரகசிய நூல் - 3மார்க் பூத் இந்த நூலின் முதல் அத்தியாயத்திலேயே மனிதனின் பெருமையை விவரித்துச் செல்கிறார்.

”இந்நூல் விவரிக்கும் பிரபஞ்சம் வித்தியாசமானது. அது மனிதகுலத்தை நினைவில் கொண்டு படைக்கப்பட்டது” என்கிறார் அவர். அதாவது நாம் வாழும் பிரபஞ்சம் நம்மை இலக்காக வைத்துப் படைக்கப்பட்டது.

“படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக
மனுவைப் படைத்தான் தனைவணங்க”
என்கிறார் தக்கலை பீரப்பா அவர்கள்.

இப்பிரபஞ்சம் கடவுளுடைய மனத்தில் இருந்து தோன்றியது என்கிறார் மார்க் பூத். அதாவது அவர் கருத்துமுதல்வாதக் கொள்கையைத்தான் முன்வைக்கிறார். ”இந்த ’பொருளுக்கு முன் மனம்’ ஆன பிரபஞ்சத்தில் பொருள் என்பது கடவுளின் மனத்திலிருந்து உண்டானது என்பது மட்டுமல்ல, மனித மனம் சாத்தியமாவதற்கான அனைத்து நிலைகளிலும் அது உண்டாக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தின் நோக்க மையமே மனித மனம்தான். பிரபஞ்சம் அதை போஷிக்கிறது, அதன் தேவைகள் நிறைவேறும்படி உள்ளது. கடவுளின் மனம் பொருள்களை எப்படிப் பாதிக்கிறதோ, அதே அளவிற்கு இல்லை எனினும், அதே வகையில் மனித மனமும் அதனைப் பாதிக்கின்றது” என்று சொல்லும் மார்க் பூத் தொடரும் பத்திகளில் ஓரிடத்தில் சொல்கிறார்: “மனித மனத்தைப் பாதித்தே தவிர இப்பிரபஞ்சத்தில் எதுவும் நடப்பதில்லை.”

மேலே சொல்லப்பட்ட கருத்து ஓர் விஷயத்தின் பக்கம் கவனத்தை ஈர்த்து நிற்கிறது. அதுதான் இறைவன் மனிதனுக்கு அளித்திருக்கும் தன்னிச்சை. இதனை இஃக்தியார் என்று சூஃபிகள் சொல்கின்றனர். இறைவனின் மகா அற்புதமாக இதனை நான் உணர்கிறேன். அதன் ரகசியம் என்ன என்பதை வார்த்தைகள் விவரிக்க முடியாது என்றே நினைக்கிறேன். இறைவனை அன்றி வேறு யாரும் அந்த இஃக்தியாரை (தன்னிச்சையை) வழங்க இயலாது. இறைவனிடமிருந்து பெற்ற அந்த அதி அற்புத அருட்கொடையை மனிதன் இன்னொன்றுக்கு வழங்க முடியாது. ஆனால் அதை இன்னொன்றுக்கு வழங்கிவிட வேண்டும் என்னும் துடிப்பு அவன் உள்ளத்தில் இருக்கிறது. Artificial Intelligence என்னும் நவீன கணினி அறிவியல் துறை சாதிக்க முயன்று கொண்டிருப்பது அதையே!

அறிவியலுக்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள உறவும் உறழ்வும் பற்றி இருபதாம் நூற்றாண்டு கண்ட விஞ்ஞானிகளும் மெய்ஞ்ஞானிகளும் நிறையவே பேசியிருக்கிறார்கள். அவர்களின் அகப்பார்வைகள் தரும் தரிசனங்களின் அடியாக இரண்டையும் இவ்வாறு தொடர்பு படுத்திக் காணலாம்:

அறிவியலின் களம் புறம்; ஆன்மிகத்தின் களம் அகம்.

அறிவியல் என்பது பருப்பொருளின் ஆன்மிகம்; ஆன்மிகம் என்பது ஆன்மாவின் அறிவியல்.

இப்பிரபஞ்சம் குறித்து அறிவியலும் ஆன்மிகமும் தரும் விளக்கங்கள் பற்றி மார்க் பூத் சொல்கிறார்: “நவீன விஞ்ஞானம் இப்பிரபஞ்சம் எப்படி இப்போது இருப்பது போல் உள்ளது என்பதை விளக்குகிறது. இந்நூலில் நாம் காணப்போகும் வகையிலான தொல் தத்துவம் பிரபஞ்சம் பற்றிய நமது அனுபவம் இப்படியாக அமைந்தது எப்படி என்பதை விளக்குகிறது. விஞ்ஞானத்தைப் பொருத்த வரை விளக்கப்பட வேண்டிய மிகப்பெரிய அற்புதம் இப்பிரபஞ்சமே. ஆன்மிகத் தத்துவத்திற்கோ மாபெரும் அற்புதம் மனிதப் பிரக்ஞையே” (பக்கம்.42)

அகம் புறம் இரண்டையும் சமன்படுத்தி முன்செல்ல வேண்டிய கட்டத்தில் மனிதகுலம் இன்றுள்ளது என்பது கண்கூடு. ஆன்மிகம் என்பது உலகைத் துறக்கச் சொல்லும் எனில் அந்த போதனை இன்று வெற்றி பெறாது என்பது திண்ணம். புறவுலகைக் கண்டு அஞ்சும் ஆன்மிகம் அல்ல, அதனைத் தன் முழுக்கட்டுப்பாட்டில் வைத்துப் பயன்படுத்தும் ஆற்றல் கொண்ட ஆன்மிகமே இன்று தேவைப்படுகிறது. அறிவியலும் சமய தத்துவங்களை எல்லாம் உதவாக் கற்பனைகள் என்று சொல்லித் தப்பித்துவிட முடியாது. நவீன அறிவியல் கூற்றுக்களே ஆன்மிக மந்திரங்கள் போல் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. அனைவரும் அறிந்த மிகப் பிரபலமான அறிவியல் சமன்பாடான ஈயீக்வல்டூ எம்சீஸ்கொயர் என்பதை வேறு கோணத்தில் சொன்னால் பருப்பொருளாய்க் காண்பதெல்லாம் சக்தி அன்றி வேறில்லை; வார்த்தையே மாம்சமாகியுள்ளது; வானம் பூமியெங்கும் இறையொளியே நிறைந்திருக்கிறது!

விஞ்ஞானமோ மெய்ஞ்ஞானமோ அகமும் புறமும் முழுமையாய் அறியப்பட வேண்டும் என்னும் பார்வை இன்று உறுதிப்பட்டுள்ளது. எனவே இரகசியமாகச் சொல்லப்பட்டு வந்த ஆன்மிகச் சிந்தனைகள் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசப்படும் சூழல் உலகில் உருவாகி உள்ளது. அந்த ரகசியங்கள் பூடகமாகச் சொல்லி வைக்கப்பட்ட புராணங்களும் தொன்மங்களும் மறுவாசிப்புச் செய்யப்படும் தேவையை நவீன மனிதன் உணர்ந்திருக்கிறான். அது வெறும் கற்பனைக் குப்பைகளின் மூட்டை அல்ல, தன் முன்னோர் தனக்குத் தந்து சென்றுள்ள புதிரான செல்வம் என்பதை அவன் உணர்ந்திருக்கிறான். மார்க் பூத் எழுதுகிறார்:

“மனிதப் பிரக்ஞை என்பது ஒருவித பேரற்புதம். இன்று நாம் இதனை மேலோட்டமாகக் காணத் தலைப்பட்டுள்ளோம். ஆனால், ஆதிமக்கள் அதன் அற்புதத் தன்மையால் வியப்படைந்தார்கள். அவர்களின் அறிவுத் தலைவர்கள் மனிதப் பிரக்ஞையில் ஏற்படும் மிக நுண்ணிய மாற்றத்தைக்கூட, இன்றைய நவீன விஞ்ஞானி தன் புறச்சூழலில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்யும் சிரத்தைக்குச் சற்றும் குறையாத சிரத்தையுடன், துல்லியமாக அவர்கள் பதிவுசெய்தார்கள். அவர்களின் இந்த வரலாற்றுப் பதிவு – அதன் தொன்மங்கள் மற்றும் அற்புத நிகழ்வுகளுடன் – மனிதப் பிரக்ஞை எவ்வாறு பரிணமித்தது என்பதன் வரலாறு ஆகும்.” (பக்கம்.42)

பிரபஞ்சம் / உலகம் என்பதற்கு ஆங்கிலத்தில் Universe என்று பெயரிட்டவன் விவரமுள்ள ஆளாகத்தான் இருக்க வேண்டும். ஒற்றைச் சொற்றொடர் என்று அதற்கு அவன் பெயர் சூட்டியுள்ளான். ஒரு சொற்றொடர் என்பது ஒரு பொருளைத் தருவது. அந்தப் பொருள் அச்சொற்றொடரின் ஒவ்வொரு வார்த்தையாலும் உருவாகி வருவது. ஆனால் தனித்து ஏதேனும் ஒரு வார்த்தைக்கு மட்டும் உரியது அல்ல. அச்சொற்றொடரின் ஒவ்வொரு எழுத்துக்கும் அதில் பங்கு இருக்கிறது.

மேலும் verse என்பது செய்யுளடியைக் குறிக்கும். அதாவது அது இலக்கணப்படிச் செய்யப்படுவது, ஏனோ தானோ என்று கிறுக்கப்படுவது அல்ல. அதுபோல் பிரபஞ்சாதிகளின் அமைப்பில் ஓர் ஒழுங்குமுறை உண்டு.

செய்யுள் வரியைச் செய்தவன் ஒருவன் – புலவன் கவிஞன் – இருக்க வேண்டும். அவனது எண்ணமே செய்யுள் வரியாகி இருக்கிறது. இப்பிரபஞ்சத்தையும் செய்தவன் ஒருவன் – இறைவன் – இருக்கிறான். அவனின் எண்ணத்திலிருந்தே அது தோன்றியுள்ளது.

பிரபஞ்சமே ஒற்றைமயமானது – அதாவது ஒரு முழு உயிரி என்று பார்க்கிறது நவீன நோயட்டிக் விஞ்ஞானம். நம் சூரியக் குடும்பம் அதில் ஓர் அங்கம் மட்டுமே. சூரியக் குடும்பத்தில் பூமி ஓர் உறுப்பு மட்டுமே.

மனிதனை “சிறிய பிரபஞ்சம்” என்று அழைப்பதுண்டு. பிரபஞ்சத்தில் உள்ளதெல்லாம் அவனில் உண்டு என்பது கருத்து. ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு’ என்பர். இக்கருத்துப்பட ஓரிடத்தில் மார்க் பூத் சொல்கிறார்:

”காட்சியுலகம் (visible world) என்பது மனிதனைப் உள்வெளியாகப் புரட்டிய அமைப்பில் உள்ள ஒன்றுதான். நுரையீரலும் பறவையும் ஒரே பிரபஞ்ச சக்தியின் வெவ்வேறு தளங்களிலான வெளிப்பாடுதான். மனித உடலை மேலிருந்து கீழாக நோக்கினால் அதன் உள்ளுறுப்புக்களின் அமைப்பு சூரியக் குடும்பத்தைப் பிரதிபலிக்கும் என்பது ரகசியப் பள்ளிகளின் அறிஞர்களுக்கு பொருள்பொதிந்த ஒரு கருத்துத்தான்” (பக்கம்.54)

இப்படிக் கூறும் பூத் இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் சொல்கிறார். முடிந்தால் சரிபார்த்துக் கொள்ளுங்கள்: “மனிதர்கள் நாளொன்றுக்குச் சராசரியாக 25920 தடவைகள் சுவாசிக்கிறார்கள். அஃது ஒரு ப்ளேட்டோனிக் வருடத்தில் உள்ள நாட்களாகும். (ஒரு ப்ளேட்டோனின் ஆண்டு என்பது சூரியன் உடுக்கூட்ட – சோடியாக் என்னும் ராசியமைப்பு – வட்டத்தை ஒரு முறை சுற்றி வருகின்ற காலம்.) சராசரி அல்லது இலட்சிய மனித ஆயுள் ஆன எழுபத்திரண்டு ஆண்டு என்பதில் உள்ள நாட்களின் எண்ணிக்கையும் அதுவே!” (பக்கம்.56, 57)

மார்க் பூத் ஆரம்பத்திலேயே சொல்வது போல் இந்த நூல் மாற்றுச் சிந்தனைகளை முன்வைக்கும் ஒன்றுதான். சரியாகச் சொல்வதெனில் இந்நூல் முன்வைக்கும் பல சிந்தனைகள் தலைகீழானவை. பொதுவாக மக்கள் மனம் சிந்திக்கும் திசைக்கு நேரெதிர் திசையில் சிந்தனையைச் செலுத்திப் பார்க்கும் பயிற்சியை வழங்குபவை. (ஐயோ, சிந்திப்பதே ஒரு கஷ்ட காரியமாக இருக்கும்போது இப்படியெல்லாம் பயிற்சி செய்யச் சொன்னால் நடக்கிற காரியமா என்று நினைப்பவர்கள் ஜகா வாங்கிவிட வேண்டியதுதான்.)

அவ்வாறு தலைகீழாக ஏன் சிந்திக்க வேண்டும்? என்பது ஒரு நியாயமான கேள்வி. உலகில் பல அறிஞர்கள் அப்படித் தலைகீழாக சிந்தித்தவர்களே. அதனால்தான் உலகம் அவர்களைப் பித்தர்கள் என்பது போல் பார்த்தது. Esoteric minds பல நேரங்களில் Eccentric minds-ஆகப் பார்க்கப்படுவது வரலாற்றில் சகஜமான ஒன்று. “எது வெளிப்படுகிறதோ அது தெளிவாகத் தெரிவதில்லை; மென்மை வன்மையை வெல்கிறது; வெறுமையாக உள்ளதே அதிகம் பயன்படுகிறது; எது வளைகிறதோ அது நிமிர்கிறது” (தாவ்தெ ச்சிங் – லாவோசு) என்கிற ரீதியில் பேசுகிற ஒருவனை சராசரி மனிதர்கள் வேறு எப்படிப் பார்ப்பார்கள் சொல்லுங்கள்?

இன்னமும் அந்தக் கேள்வி எஞ்சி நிற்கிறது. ’பெரீய்ய மண்டைகள்’ எனப்படும் அந்த ஞானிகள் ஏன் அப்படித் தலைகீழாக – அதாவது சராசரி மனத்திற்கு எதிர் திசையில் – சிந்தித்தார்கள்? ஏனெனில் சராசரி மனிதர்கள் தலைகீழாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்! எனவே, நேராகச் சிந்திப்பதற்காக அவர்கள் தலைகீழாகச் சிந்தித்தார்கள்!

இதற்கு ஓர் உதாரணம். ஒரு மண்டபத்தில் ஆயிரம் வவ்வால்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தன. அங்கே உள்ளே “Batman” நடந்து வருகிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனையும் ஒரு பெரீய்ய வவ்வால் என்றே கருதும் அந்த வவ்வால்கள் அந்த பெரிய வவ்வாலுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகவே நினைக்கும். ஆனால் அந்த வவ்வால்களின் உலகில் (மண்டபத்தின் மேற்கூரையில்) ’நுழையும்’ batman அவைகளைப் போலவே தலைகீழாக – அதாவது அவற்றின் இயல்பில் நேராக – நடந்துகொள்ள (தொங்க) வேண்டியிருக்கும். வேறு வழி இல்லை.

சரி. அந்த வவ்வால்களில் அவை பேட்மேனாகப் பரிணமிப்பதற்கான சாத்தியம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவற்றை பேட்மேனாக மாற்றுவதற்குத்தான் அந்த பேட்மேன் அவற்றின் உலகிற்கு வந்திருக்கிறார் எனில் அவற்றுக்கு அவர் தரும் பயிற்சி என்னவாக இருக்கும்? தலைகீழாக நடப்பதுதான்! அதாவது வவ்வால் உலகிற்குத் தலைகீழாக நடக்கும்போது அது பேட்மேனின் உலகிற்கு நேரானதாக இருக்கும். ஏனெனில் பேட்மேன் என்பவர் வவ்வால் அல்ல, அவர் ஒரு மனிதர்.

நம் சூழ்நிலைகள் நம் எண்ணங்களை உருவாக்குகின்றன என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நம் எண்ணங்களே நம் சூழ்நிலைகளை உருவாக்குகின்றன என்று ஆன்மிகம் சொல்கிறது.

பொருள் முதலில் இருந்தது; மனம் (எண்ணங்கள்) அதன் விளைவாக உண்டானவை என்று விஞ்ஞானம் சொல்கிறது.

இறைவனின் எண்ணத்திலிருந்தே பொருள்கள் உண்டாயின என்கிறது மெய்ஞ்ஞானம்.
மார்க் பூத் சொல்கிறார்: “இன்று நாம் இயல்பாக மக்கள் சிந்திக்கிறார்கள் (people thinking) என்று காண்கிறோம்; பழங்கால மக்களோ சிந்தனைகள் மனிதர்களை ஆக்குகின்றன (thoughts peopling) என்று பார்த்தார்கள்” (பக்கம்.57)

சிந்தனைக்குப் பல சவால்களையும் உழைப்பையும் முன்வைக்கும் இந்த நூலில் ஓரிடத்தில் விஞ்ஞானி நீல்போர் சொன்ன அற்புதமான கருத்தொன்றினை மேற்கோள் காட்டுகிறார் பூத்: “சரியான கருத்தின் எதிர்க்கருத்து தவறானதாகவே அமையும். ஆனால், ஆழமான உண்மையின் எதிர்க்கருத்து இன்னொரு ஆழமான உண்மையாக இருக்கக்கூடும்.”
விஞ்ஞானி ஒருவன் வெளிப்படுத்திய மெய்ஞ்ஞானப் பார்வை இது!

இனி, இந்நூலிலிருந்து சில பகுதிகளையும் அவை தொடர்பாக இந்நூலில் சொல்லாமல் விடப்பட்டவை என்று நான் சிந்தித்தவற்றையும் எழுதுகிறேன்.

(தொடரும்)

ஒரு ரகசிய நூல் -2


”நிச்சயமாக அல்லாஹ் ஆதமை அவனின் தோற்றத்தில் படைத்தான்” என்னும் ஹதீஸ் வாசகத்திற்கு இருவரின் பக்கமும் எப்பொருளில் சேர்த்து விளங்க வேண்டும் என்பதை இமாம் ஜாஃபருஸ் சாதிக் (ரஹ்) அவர்கள் தரும் விளக்கம் தெளிவுபடுத்துகிறது : “அந்த உருவம் என்பது தோற்றப்பட்டதும் படைக்கப்பட்டதும் ஆகும். அல்லாஹ் தான் படைத்த அனைத்து உருவங்களிலும் மேலானதாக அதனைத் தேர்ந்தெடுத்து அதைத் தன்னுடன் சார்த்திக் கூறினான், எப்படி அவன் கஃபாவையும் ரூஹையும் (ஆன்மாவையும்) தன்னுடன் சார்த்தி ’என் வீடு’ (2:125, 22:26) என்றும் ’என் உயிரிலிருந்து அவருள் ஊதினேன்’ (15:29, 38:72) என்று சொன்னானோ அது போல.”

”பைத்தீ” – என்வீடு என்று அல்லாஹ் சொல்வதன் பொருள் அந்த வீடு (இறையாலயம்) அவனது உடைமை என்பதுதானே தவிர அவனே வீடாக இருக்கிறான் என்பதல்ல.
“ரூஹீ” - என்னுயிர் என்று அல்லாஹ் சொல்வதன் பொருள் உயிர் (ஆன்மா) அவனது உடைமை (அவனால் படைக்கப்பட்டது) என்பதுதானே தவிர அவனே அந்த ஆன்மா என்பதல்ல.

ஏசுநாதரைச் சிறப்பித்து ‘ரூஹுல்லாஹ்’ – அல்லாஹ்வின் உயிர் என்றும் ‘ஆயத்துல்லாஹ்’ – அல்லாஹ்வின் வார்த்தை (அடையாளம்) என்றும் சொல்லும்போதும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டதும் அவனது உடைமையானதுமான உயிர், வார்த்தை (அடையாளம்) என்றுதான் சொல்கிறோம்.

‘நாக்கதல்லாஹி’ – அல்லாஹ்வின் பெண் ஒட்டகை (7:73) என்று சொல்லும்போதும் அந்தப் பெண் ஒட்டகை அல்லாஹ்வின் படைப்பு என்றும் அவனின் உடைமை என்றும்தான் புரிந்துகொள்கிறோம்.

‘நூருல்லாஹ்’ – அல்லாஹ்வின் ஒளி என்று நபி (ஸல்) அவர்களைச் சொல்லும்போதும் அவர்கள் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட ஒளியாக அவனுடைய உடைமையாக இருக்கிறார்கள் என்னும் பொருளில்தான் சொல்கிறோமே அல்லாமல் அவர்களே அல்லாஹ் என்று தவறாக விளங்கிக் கொள்வதில்லை.

‘சூரத்திஹி’ – அவனின் உருவம் என்று சொல்லும்போது ’ஹி’ என்னும் விகுதியை அல்லாஹ்வின் பக்கம் சார்த்தும்போது அவனால் படைக்கப்பட்டதும் அவனின் உடைமை (ஆஸார்) ஆனதுமான ஆதமின் உருவம் என்றுதான் விளங்கவேண்டுமே அல்லாது அவனின் பண்பாக (சிஃபத்) அதை விளங்கி அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று கருதினால் சுத்த வழிகேடாகிவிடும், இணைவைப்பாகிவிடும்.

இறைவனின் படைப்புக்கள் அனைத்திலும் மனிதன் தனித்தன்மையும் தனிச்சிறப்பும் வாய்ந்தவன் என்பதை மேற்கண்ட விளக்கங்கள் காட்டுகின்றன.

இறைவனின் அழகிய திருநாமங்கள் 99 என்று நபிகள் நாயகம் (ஸல்) ஒரு கணக்குச் சொல்லியிருக்கிறார்கள். அதனடியாகத் திருக்குர்ஆனில் இருந்து அர்ரஹ்மான், அர்ரஹீம் என்று தொடங்கி 99 திருநாமங்கள் பட்டியலிடப்படுவதுண்டு. அதில் அல்லாஹ் என்னும் திருநாமம் இடம்பெறாது. ஏனெனில் இவை 99-ம் இறைவனின் ரட்சகத்தன்மையை (ருபூபிய்யத்) திருப்பண்புகளை (சிஃபாத்) குறிப்பவை. ஆனால் அல்லாஹ் என்பது இறைவனின் சுயத்தை (Being) குறிக்கும் திருநாமம் ஆகும். அவனது அனைத்துப் பண்புகளும் அவனின் சுயத்தில் தரிப்பட்டவை. அவனது சுயத்தை விட்டு அவனின் எப்பண்பும் பிரிந்தது அல்ல.

ஒட்டுமொத்த படைப்பினங்களுள் மனிதனின் நிலை எத்தகையது எனில் 99 திருநாமங்களுடன் ஒப்பிடும்போது அல்லாஹ் என்னும் சுயப்பெயரின் நிலை எவ்வளவு உயர்வானதோ அதைப்போல என்று சூஃபிகள் சொல்கின்றனர். அதாவது இறைவனின் திருப்பண்புகளில் ஒருசிலவற்றுக்கு மட்டுமே கண்ணாடியாக இருந்து பிரதிபலிப்பதாகப் பிற படைப்புக்கள் அனைத்தும் இருக்கின்றன. ஆனால் இறைவனின் அனைத்துப் பண்புகளும் பிரதிபலிக்கக்கூடிய கண்ணாடியாக மனிதன் இருக்கிறான். அதாவது அல்லாஹ் என்னும் மகத்தான திருநாமத்திற்குரிய (இஸ்முல் அஃழம்) கண்ணாடியாக மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான்.

எல்லா மனிதர்களும் இந்த நிலையிலே இருக்கிறார்கள் என்பது கருத்தல்ல. மனிதன் அந்த நிலைக்கு முன்னேற இயலும் என்பது கருத்து. பொதுவாக, மனிதனை – ஆதம் நபியை – ஃகலீஃபத்துல்லாஹ் (அல்லாஹ்வின் பிரதிநிதி) என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. அந்த நிலையே இறைவனின் சுயத்திற்குக் கண்ணாடியாக இருக்கும் நிலை ஆகும். அந்த நிலையில் இருப்பவரை “முழுமையான மனிதன்” (அல்-இன்சானுல் காமில்) என்று அப்துல் கரீம் ஜீலி (ரஹ்) குறிப்பிட்டார்கள்.

படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளின் மீதும் இறைத்திருநாமங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு பொருளின் பெயரும் இறைவனின் பெயர்களுடன் தொடர்புள்ளதாக இருக்கிறது. எனவே அனைத்துப் பெயர்களின் தொகுப்பும் அல்லாஹ் என்னும் மகத்தான பெயருடன் தொடர்புடையதாக இருக்கும். அல்லாஹ் என்னும் மகத்தான திருப்பெயரின் ஒளிச்சுடருக்குக் கண்ணாடியாக மனிதன் இருப்பதால் அவனில் அனைத்துப் பொருள்களின் பெயர்களும் அடங்கிவிடுகின்றன.

“மேலும் அவன் ஆதமுக்குப் பெயர்கள் அனைத்தையும் கற்பித்தான்” (வ அல்லம ஆதமல் அஸ்மாஅ குல்லஹா – 2:31)

திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள ஆன்மிகக் கலைச்சொற்களில் ஒன்று ”வஜ்ஹு” (முகம்) என்பது. இறைவனைக் குறித்துப் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இச்சொல்லின் உட்பொருள் இறைவனின் உள்ளமை என்று மார்க்க அறிஞர்களும் ஞானிகளும் சொல்கிறார்கள்.

”அனைத்துப் பொருட்களும் அழிபவையே
அவனின் முகத்தைத் தவிர”
(குல்லு ஷைஇன் ஹாலிக்குன் இல்லா வஜ்ஹஹு – 28:11)
என்னும் திருவசனத்தின் உட்பொருள் “இறைவனின் உள்ளமை மட்டும் அழியாது இருக்கும். அது தன்னில் வெளிப்படுத்திக் காட்டி நிற்கும் படைப்புக்களான வஸ்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும்” என்பதாகும்.

இறைவனின் ஞானத்தில் மனிதனுக்குச் சிறப்பானதொரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும், அவன் இறைவனது சுயத்தின் ஒளிச்சுடர்களை (தஜல்லியாத்) பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறான் என்றும் கண்டோம். இதனடிப்படையில் இமாம் பாகிர் (ரஹ்) அவர்கள் ”நாமே இறைவனின் முகம்” (நஹ்னு வஜ்ஹுல்லாஹ்) என்று சொன்னதாக ஒரு குறிப்பு உண்டு.

“அவனைப் போல் எதுவும் இல்லை” (லைச கமித்லிஹி ஷைஉன் 42:11) என்னும் திருவசனத்தை மீண்டும் கவனிப்போம். இதன் மூல வார்த்தைகளை நேரடியாகப் பொருள் கொண்டால் “லைச இல்லை; க போல்; மித்லிஹி –அவனின் உதாரணம்; ஷைஉன் – பொருள்” – என்று பார்த்தால் “அவனின் உதாரணம் போல் எப்பொருளும் இல்லை” என்று வரும். இதனுடன் இன்னுமிரு திருவசனங்கள் தரும் கருத்தையும் ஒப்புநோக்க வேண்டியுள்ளது:
“மேலும் அவனுக்கே உயர்வான உதாரணம் உரியது”
(வலில்லாஹில் மதலுல் அஃலா – 16:60)
“மேலும் வானங்களிலும் பூமியிலும் உயர்வான உதாரணம் அவனுக்கே”
(வலஹுல் மதலுல் அஃலா ஃபிஸ்ஸமாவாத்தி வல் அர்ளி – 30:27)

இவ்வசனங்களின் கருத்து, ”சூரத்திஹி” என்பதற்கு இமாம் ஜஃபர் சாதிக் (ரஹ்) அவர்கள் கொடுத்த விளக்கத்தின் போக்கில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதாவது, தான் படைத்த மனித சூரத்தை (உருவத்தை அமைப்பை) அல்லாஹ் அதன் சிறப்பினைப் புலப்படுத்தும் நோக்கில் தன் பக்கம் சாற்றிச் சொன்னது போல் இங்கே ’உயர்வான உதாரணம்’ (மதலுல் அஃலா) என்பதையும் அவன் தன் பக்கம் சார்த்திக் கூறியிருக்கிறான். அந்த உயர்வான உதாரணம் மனிதப் படைப்பே ஆகும்.

Friday, February 8, 2013

கசியும் பானைஃப்யூஷன் பாடல் ஒன்று கேட்டேன். அதன் கவித்துவமான வரிகளின் முதற்பகுதி எனக்கு மவ்லானா ரூமியின் கவிதைகளை நியாபகப் படுத்தின.

நான் கேட்ட அந்தப் பாடல் பக்திப் பாடல் அன்று. அது எனக்கு ஆன்மிகக் கவியை நினைவூட்டியது எப்படி என்று வியந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அன்பெனும் ஒற்றை உணர்வின் பல்வேறு பரிமானங்கள் பற்றி ஏதோ ஒரு கட்டுரையில் அப்துல் ரகுமான் எழுதியிருந்ததை அசை போட்டேன். அன்பு இரக்கம் காதல் நேசம் பாசம் இப்படி அதற்குத்தான் எத்தனை எத்தனை முகங்கள் என்று வியந்தபின் சொல்லியிருப்பார், ‘காமம் என்பதும் கோரப்பல் முளைத்த காதல்தான்’ என்று.

மொட்டு பூ பிஞ்சு காய் கனி - எல்லாம் ஒரே கொப்பில்தான் அல்லவா?

காய்க்கும் கனிக்கும் இடைப்பட்ட நிலையில் – செங்காய் என்பது காயாகவும் கனியாகவும் சுவைப்பது போல் – அன்பின் நிலைகளிலும் இடைநிலைகள் உண்டு.

அப்படித்தான், நான் கேட்ட அந்தப் பாடலில் காமமும் காதலும் பக்தியும் கலந்திருந்தன.

”அருள் என்னும் அன்பீன் குழவி” என்கிறார் வள்ளுவர்.

”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?” எனக் கேட்பவரும் அவரே.

எல்லைகளைக் கரைத்துக் கொள்ளும் அன்பு அருளாகி விடுகிறது!

எல்லை உள்ளது உருவம். எல்லைகள் கரைந்தால் அருவம்.

எல்லைகள் உள்ளது மனிதக் காதல். எல்லைகள் கரைந்திடின் இறைக்காதல்.

காதலின் தீ எல்லைகளை எரித்துவிடுகிறது.


இறைத்தூதர் யூசுஃப் பேரழகர். அவர்மேல் சுலைகா கொண்ட காதல் அந்தத் தீயாய் இருந்து அவரின் உள்ளத்தை உருக்கிக் கொண்டிருந்ததை மவ்லானா ரூமி தன் மந்திர வரிகளால் கவிதையாக்கித் தருகிறார்கள். கோல்மன் பார்க்ஸ் “The Phrasing Must Change” என்று ஆங்கிலத்தில் தந்த அந்தக் கவிதையை அடியேன் தமிழ் செய்கிறேன்.

“உன் ஆன்மாவைப் பற்றி
அதனை அறிந்தோரிடம் கேள்
அவர்கள் சொல்லும் வார்த்தைகளைச்
சொல்லிக்கொண்டு திரியாதே

கடுகு விதை முதல்
சந்தனக் கட்டை வரை
எல்லாம் தனக்கு யூசுஃபின் பெயராய்
இருக்கச் செய்தாள் சுலைகா

அவர்மீது அத்தனைக் காதல் அவளுக்கு
அவள் மட்டுமே உள்ளர்த்தம் அறிந்த
வெவ்வேறு பேச்சுக்களில்
அவரின் பெயரை மறைத்து வைத்தாள்

’தீயின் அருகில் உருகுகின்றது மெழுகு’
என்றவள் சொல்லும்போது
என் காதல் என்னைக் கேட்கிறது
என்பதை அப்படிச் சொன்னாள்

அல்லது
‘பாருங்கள், மேலே உள்ளது நிலா’ என்றோ
‘மரக்கிளையில் புதிய இலைகள்’ என்றோ
‘கிளைகள் நடுங்கி அசைகின்றன’ என்றோ
‘மல்லி விதைகள் தீப்பிடித்தன’ என்றோ
‘ரோஜாக்கள் திறக்கின்றன’ என்றோ
‘அரசர் இன்று மகிழ்ச்சியாய் இருக்கிறார்’ என்றோ
‘அடடே! அது கொடுத்து வைத்ததல்லவா?’ என்றோ
‘இருக்கைகளைத் துடைக்க வேண்டும்’ என்றோ
‘நீர்ச் சுமப்பவன் வந்திருக்கிறான்’ என்றோ
’கிட்டத்தட்ட நண்பகல்’ என்றோ
‘காய்கள் பக்குவமாய் உள்ளன’ என்றோ
‘ரொட்டிக்கு இன்னும் கொஞ்சம் உப்பு தேவை’ என்றோ
‘மேகங்கள் காற்றுக்கு எதிராய்ப் போவது போலுள்ளது’ என்றோ
’தலைவலிக்கிறது’ என்றோ
‘தலைவலி தேவலம்’ என்றோ
எதை அவள் புகழ்ந்தாலும்
அதில் அவள் சொல்வது யூசுஃபின் உறவு
எதை அவள் இகழ்ந்தாலும்
அதில் அவள் சொல்வது அவரின் பிரிவு

பசியோடு அவள் இருந்தால், அது அவருக்காகவே
தாகமா? அவரின் பெயரே ஷர்பத்.
குளிர், அவரே போர்வை.

அப்படியொரு காதலில் யாரும் இருந்தால்
நண்பன் அவருக்குச் செய்வது இதுதான்

புனிதப் பெயர்களை
மக்கள் அடிக்கடிப் பயன்படுத்துகிறார்கள்
எனினும், அவர்கள் அதற்கு உழைப்பதில்லை

இறைவனின் பெயர் கொண்டு
ஏசுநாதர் நிகழ்த்திய அற்புதம்...
சுலைகா அதனை
யூசுஃபின் பெயரில் உணர்ந்தாள்

ஒருவர் மற்றொருவரின்
உள் மையத்துடன் இணைந்திருக்கும்போது
அந்த நிலையைப் பேசுவதே
’ஹூ’ என்னும் பெயரை
உச்சரிப்பதாகும்,
தான் அற்று வெறுமையாய்,
காதல் மட்டுமே நிரம்பியதாய்.

’தன்னுள் இருப்பதையே பானை கசிய விடுகிறது’
என்று சொல்கிறது பழமொழி ஒன்று

உறவின் குங்கும இழை, சிரிப்பு
பிரிவின் வெங்காய நெடி, அழுகை

பிறருக்கோ ஆயிரம் வேலைகளும்
அவர்கள் நேசிக்கும் மக்களும் உண்டு.
நம் நண்பனுடன் நண்பனின் வேலை அதுவல்ல”

யூசுஃபின் மீது சுலைகா கொண்டிருந்த காதல் பின்னாளில் இறைவன் மீதான பக்தியாய்க் கனிந்து விட்டது என்னும் குறிப்பொன்றை இமாம் கஸ்ஸாலி எழுதியிருக்கிறார்கள். யூசுஃபில் தெரிந்த அந்த அற்புத அழகிற்கு மூலம் இறைவன்தான் என்பதை அறிந்ததும் அவரின் மனம் அந்த இறைவனின் பக்கம் திரும்பிவிட்டதாம்.

“என் நெஞ்சம் ஐயா,
தீ உண்டிருந்த மெழுகலவோ”
என்கிறார் தாயுமானவர்.

மேற்கண்ட கவிதையின் குரலிலேயே மவ்லானா ரூமி பேசும் இன்னொரு கவிதை, ”WAX” என்னும் தலைப்பில் கோல்மன் பார்க்ஸ் ஆங்கிலத்தில் தந்ததை தமிழ் செய்கிறேன்:

“உன்னையும்
நீ எப்படி இருக்கிறாய் என்பதையும்
நான் பார்க்கும்போது
மற்றதை விட்டும் என் கண்களை மூடுகிறேன்

உன் சுலைமான் முத்திரைக்காக
என் தேகம் முழுவதும் மெழுகாகிறேன்

ஒளி ஆகிவிடக் காத்திருக்கிறேன்

விஷயங்கள் மீதான
கருத்துக்களைக் களைகிறேன்

உன் மூச்சிற்காக
நாணலின் குழலாகிறேன்

என் கைக்குள் இருந்தாய் நீ
நானோ அது கொண்டு
எதையோ தேடித் துழாவியிருந்தேன்

நான் உன் கைக்குள் இருந்தேன்
எனினும், கொஞ்சமே அறிந்தோரிடம்
கேள்விகள் கேட்டிருந்தேன்

என் வீட்டுக்குள் நுழைந்து திருடினேன் எனில்,
என் தோட்டத்தின் காய்கறிகள் பறிக்க
வேலி தாண்டிக் குதித்தேன் எனில்
மிகவும் அசடாக அல்லது போதையில்
அல்லதொரு கிறுக்கனாய்
இருந்திருக்கத்தான் வேண்டும் நான்.
எனினும் இனி அல்ல.
என் ரகசிய சுயத்தைக்
குத்திக்கொண்டும் கிள்ளிக்கொண்டும் இருந்த
அந்த அஞ்ஞான முஷ்டியை விட்டும்
விடுதலை அடைந்துவிட்டேன்.

பிரபஞ்சமும்
விண்மீன்களின் ஒளியும்
என் வழியே வருகின்றன.
உன் திருவிழா வளைவின் மீது
வைக்கப்பட்டுள்ள இளம்பிறை நான்.”

இனி, ஆரம்பத்தில் நான் சொன்ன அந்த ஃப்யூஷன் பாடல்:“ஒரு விஷயம் நீ அறிய விரும்புகிறேன்
இது எப்படி என்று தெரியும் உனக்கு

படிக நிலாவை நான் பார்க்கும்போது,
இலையுதிர் காலத்தின் சிவந்த கிளையை
என் ஜன்னலில் நான் காணும்போது,
சொல்லாமல் தோன்றும் சாம்பலைத்
தீயின் அருகில் நான் தீண்டும்போது,
அல்லது, விறகின் மரத்த தேகத்தை...
ஒவ்வொன்றும்
உன்னிடமே என்னைக் கொண்டு வருகின்றன.
நறுமணங்கள், ஒளி, உலோகங்கள்
இருப்பன எல்லாம்,
எனக்காகக் காத்திருக்கும் உன் தீவு நோக்கி
நீந்திச்செல்லும் சிறிய படகுகள் போல்
ஒவ்வொன்றும்
உன்னிடமே என்னைக் கொண்டு வருகின்றன.

சரி, இப்போது
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை நேசிப்பதை நீ நிறுத்திவிட்டால்
நான் உன்னை நேசிப்பதும்...
கொஞ்சம் கொஞ்சமாய்
நீ என்னை மறந்துபோனால்
என்னைத் தேடாதே
நானும் உன்னை மறந்து விட்டிருப்பேன்

என் வாழ்வில் கடந்து செல்லும்
பதாகை படபடக்கும் காற்றுகளை
உன்மத்தம் என்றெண்ணி
என் வேர்கள் பிடித்துள்ள இதயத்தின் கரையில்
என்னை விட்டு நீங்கிச்செல்ல
நீ முடிவெடுத்தாய் எனில்...
நினைவில் வை,
அந்நாளில், அவ்வேளையில்,
நான் என் கரங்களை உயர்த்துவேன்
என் வேர்கள் வேறு நிலம் தேடிப் புறப்படும்.

ஆனால், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பொழுதும்
உன்னை எனக்கென்று உணர்ந்தாய் எனில்,
தீராத இனிமையுடன்
ஒவ்வொரு நாளும் ஒரு மலர்
என்னைத் தேடி உன் உதடுகளுக்கு ஏறிவரும்.
என் காதலே! என்னவனே!
அந்த நெருப்பெல்லாம் மீண்டும் கிளர்கிறது என்னில்
உன் காதலைத் தின்று வளரும் என் காதல்
நேசனே!
நீயிருக்கும் காலமெல்லாம்
உன் கைகளில் இருக்கு அது
என்னை நீங்காமல்”

“உள்ளிருக்கும் ஆன்மா” (The Spirit Within) என்னும் இசைப்பேழைக்கு உருவாக்கி வெளியிடாமல் வைக்கப்பட்ட “Forgotten in the Wonderland” என்னும் மடோனாவின் பாடல் இது.