Friday, May 31, 2019

மகத்தான இரவு

கவ்ஸுல் அஃழம் பீரானே பீர் சய்யிதினா 
முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்)
(அல்-குன்யா லி தாலிபி தரீக்குல் ஹக்கு என்னும் நூலிலிருந்து… ‘பஹாரே மதீனா.காம்’-இன் ஆங்கில மொழிபெயர்ப்பு வழித் தமிழாக்கம்: ரமீஸ் பிலாலி)

1
மகத்தான இரவின் தனித்தன்மைகள்

மேலான அல்லாஹ்வுடைய சொற்களின் தாத்பரியத்தின் மீது கவனம் செலுத்துவோம்:

      ”நிச்சயமாக நாமே அதனை மகத்தான இரவில் இறக்கி வைத்தோம்” (இன்னா அன்ஸல்னாஹு ஃபீ லைலத்தில் கத்ரி).
      
 ”மகத்தான இரவு யாதென உம்மை அறியச் செய்தது எது?” (வ மா அத்ராக்க மா லைலத்துல் கத்ரி)
    
  ”மகத்தான இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது” (லைலத்துல் கத்ரி ஃகைரும் மின் அல்ஃபி ஷஹ்ரின்)
    
  ”அதில் வானவர்களும் பரிசுத்த உயிரும் தமது ரட்சகனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர்” (தனஸ்ஸலுல் மலாஇக்கத்து வர்ரூஹு ஃபீஹா பி இத்னி றப்பிஹிம் மின் குல்லி அம்ரின்)
     
 ”வைகறை விடியல் வரை அது பேரமைதியாகும்” (சலாமுன் ஹிய ஹத்தா மத்லஇல் ஃபஜ்ரி) (குர்ஆன்: 97:1-5)
    
  நாம் முதலில் கவனிக்க வேண்டும், “அன்ஸல்னாஹு” (நாம் அதனை இறக்கினோம்) என்பதில் உள்ள ’ஹு’ என்னும் விகுதி குர்ஆனைக் குறிக்கும். மேலான அல்லாஹ் அதனை, பாதுகாக்கப்பட்ட பலகையில் (லவ்ஹுல் மஹ்ஃபூழ்) இருந்து கீழுலகின் வானத்திற்கு – அதனை வானவர்களில் எழுத்தர்களான (அஸ்-சஃபரா) வானவர்களிடம் இறக்கி அனுப்பினான். இவ்வாறு அது, பலகையிலிருந்து வானத்திற்கு, அடுத்த ஓராண்டு காலம் ஜிப்றீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கின்ற பகுதியளவு இறக்கப்பட்டது. அதே செயல்முறை தொடரும் ஆண்டும் நிகழ்த்த்ப்படும், அப்படியாக முழுக் குர்ஆனும் ரமலான் மாதத்தில் லைலத்துல் கத்ரு இரவில் இவ்வுலகின் வானத்திற்கு இறக்கப்பட்டது.
     
 ”நிச்சயமாக நாமே அதனை மகத்தான இரவில் இறக்கி வைத்தோம்” (இன்னா அன்ஸல்னாஹு ஃபீ லைலத்தில் கத்ரி)
     
 என்னும் திருவசனத்திற்கு சய்யிதினா இப்னு அப்பாஸ் (ரலி-மா) அவர்கள் ஒரு விரிவுரையைத் தருகின்றார்கள். அக்கருத்தினைப் பிற மார்க்க மேதைகளும் நவின்றுள்ளனர்: “இதன் பொருள்: நாம் ஜிப்றீலை இந்த அத்தியாயத்துடனும் முழுக் குர்ஆனுடனும், லைலத்துல் கத்ரில், பதிவு செய்யும் வானவர்களிடம் அனுப்பினோம். அதன் பிறகு அது தவணை முறையில் (நஜ்மன் நஜ்மா) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இருபத்துமூன்று ஆண்டுக் காலம் எல்லா மாதங்களிலும் இரவுகளிலும் பகல்களிலும் தருணங்களிலும் இறங்கி வந்தது.”
     
 ”மகத்தான இரவில்…” (ஃபீ லைலத்தில் கத்ரி…) என்னும் திருவசனப் பகுதியின் பொருளாவது: ’மிக உன்னதமான மிகக் கண்ணியமான இரவில் (லைலத்துல் அழீமா)’ என்பதாகும். அல்லது, சிலர் சொல்லியிருப்பது போல், ”இறைக் கட்டளையின் இரவில்” (லைலத்துல் ஹுக்மு) என்பதாகும். அவ்விரவின் அளப்பரிய ஆற்றலை (கத்ரு), சக்தியைப் பறைசாற்றவே அஃது லைலத்துல் கத்ரு (மகத்தான இரவு) எனப்பட்டது. ஏனெனில், மேலான அல்லாஹ் அதில்தான் இன்னும் ஓராண்டுக்கு, அதே இரவு அடுத்த ஆண்டில் மீண்டும் வரும் நாள் வரை, பொருட்கள் விஷயங்கள் எப்படி இருக்கப் போகின்றன என்பதை நிர்ணயிக்கிறான் (யுகத்திரு).
     
 அதன் பின் அவன் அருளியிருக்கிறான்: “”மகத்தான இரவு யாதென உம்மை அறியச் செய்தது எது?” (வ மா அத்ராக்க மா லைலத்துல் கத்ரி)
     
 அதாவது, “முஹம்மதே! அதன் பிரம்மாண்டமான முக்கியத்துவத்தை அல்லாஹ் உம்மை அறியும்படிச் செய்திருக்காவிடில் (நீங்கள் எப்படி அதனை அறிந்திருக்க முடியும்?)” இது ஏனென்றால், குர்ஆனில் கேள்வியானது இறந்தகாலத்தில் –”வ மா அத்ராக்க” (எது உம்மை அறியச் செய்தது?)- கேட்கப்படும் ஒவ்வொரு முறையும், அல்லாஹ் ஏற்கனவே போதிய அறிவை நபிக்கு வழங்கிவிட்டான் என்பதைக் காட்டுகிறது. மாறாக அக்கேள்வி எதிர்காலத்தைக் குறித்ததாக ”வ மா யுத்ரீக்க” (எது உம்மை அறியச் செய்யும்?) என்று எழுப்பப் படுமெனில் அவ்விசயத்தை இதுவரை அல்லாஹ் தன் தூதருக்கு அறிவிக்கவில்லை, இனிமேல்தான் அது பற்றி அறிவிக்கப் போகிறான் என்று பொருள். [குர்ஆன் வசனங்கள் 42:17, 80:3 ஆகியவற்றைப் பார்க்கவும் – மொ.பெ-ர்]
    
   லைலத்துல் கத்ரு (மகத்தான இரவு) என்று இறைவன் அறிவித்திருக்கும் இரவினைப் பற்றி இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும்: அஃது வலுப்பமான கண்ணியமும் ஞானமும் உள்ள இரவு (லைலத்துல் அழ்மத்து வல் ஹிக்மத்து). மேதைகள் சிலரின் கருத்துப்படி பின் வரும் திருவசனங்கள் இவ்விரவையே குறிக்கின்றன:

     ”நிச்சியமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக நாம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றோம். அவ்விரவில்தான் ஒவ்வொரு காரியமும் விவேகத்துடன் நிர்ணயிக்கப்படுகின்றது. (இன்னா அன்ஸல்னாஹு ஃபீ லைலத்தின் முபாரக்கத்தின் இன்னா குன்னா முன்திரீன்; ஃபீஹா யுஃப்ரக்கு குல்லு அம்ரின் ஹகீமின் – குர்ஆன்: 44:3-4)”

     அடுத்து, அவன் சொல்லியிருக்கிறான்: “”மகத்தான இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது” (லைலத்துல் கத்ரி ஃகைரும் மின் அல்ஃபி ஷஹ்ரின்)”

     அதாவது, அவ்விரவில் செய்யப்படுகின்ற நற்செயல்கள் அவ்விரவு இல்லாத ஆயிரம் மாதங்களில் செய்யப்படுகின்ற நற்செயல்களை விடவும் சிறந்தவை.

     ”ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது (ஃகைரும் மின் அல்ஃபி ஷஹ்ரின்)” என்று அல்லாஹ் சொல்லியிருப்பதை விட வேறு எதற்கும் நபித் தோழர்கள் (சஹாபாக்கள்) அத்தனை மகிழ்ச்சி அடைந்ததில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. அது பற்றிய வரலாறு பின்வருமாறு:

     ஒரு நாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது சஹாபாக்களிடம் பனீ இஸ்ராயீலின் நான்கு நல்லடியார்கள் பற்றியும், அவர்கள் எப்படி எண்பது ஆண்டுகள் அல்லாஹ்வை வழிபட்டார்கள் என்பது பற்றியும், அந்தக் காலம் முழுவதும் கண்ணிமைக்கும் நேரம் கூட அவர்கள் அவனுக்கு மாறு செய்யாமல் இருந்தது பற்றியும் விளக்கிக் கொண்டிருந்தார்கள். அய்யூப், ஜகரிய்யா, ஹிஸ்கீல் மற்றும் யூஷப்னு நூன் (அலைஹிமுஸ் சலாம்) ஆகியோரே அந்நால்வர். (குறிப்பு: ஹிஸ்கீல் மற்றும் யூஷப்னு நூன் ஆகியோரின் பெயர்கள் குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை. யூஷப்னு நூன் என்பவர் குர்ஆன் 18:60-ஆம் திருவசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூசா நபியின் பணியாளர் ஆவார் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.)

     சஹாபாக்கள் இதனைக் கேட்டு மிகவும் வியப்படைந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இறைத்தூதரிடம் சொன்னார்கள், “முஹம்மதே! இந்த நல்லடியார்கள் எண்பது ஆண்டு காலத்தில் கண்ணிமைக்கும் நேரம் கூட அல்லாஹ்வுக்கு மாறு செய்யாமல் முழுமையாக வணங்கி வழிபட்டார்கள் என்பது உமக்கும் உமது சகாக்களுக்கும் வியப்பளிபப்தாகத் தெரிகிறது. எனவே இப்போது அல்லாஹ் உமக்கு அதை விடவும் சிறந்த ஒன்றை அருளியிருக்கிறான்!” பிறகு அவர்கள் சூரத்துல் கத்ரு (குர்ஆன் 97:1-7) அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள்.

     பிறகு இறைத்தூதரிடம் ஜிப்ரீல் (அலை) சொன்னார்கள், “நீங்களும் உமது சகாக்களும் வியந்ததை விடவும் இது இன்னும் அற்புதமானது.” இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதனால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

     யஹ்யா பின் நஜீஹ் தெரிவிக்கிறார்: ”முன்னொரு காலத்தில், பனீ இஸ்ராயீல் கூட்டத்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் அல்லாஹ்வின் பாதையில் (ஃபீ சபீலில்லாஹ்) தனது ஆயுதத்தை ஆயிரம் மாதங்கள் செயற்படுத்தினார். அக்காலக் கட்டத்தில் ஒரு முறை கூட அவர் தனது ஆயுதத்தைக் கீழே வைக்கவே இல்லை. இறைத்தூதர் (ஸல்) இச்சரித்திரத்தைத் தனது சகாக்களுக்குச் சொன்னபோது அவர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள். அப்போதுதான் அல்லாஹ்,

     ”மகத்தான இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது” (லைலத்துல் கத்ரி ஃகைரும் மின் அல்ஃபி ஷஹ்ரின்)

என்னும் திருவசனத்தை அருளினான். அதாவது, “ஒரு முறை கூட கீழே வைக்காமல் அம்மனிதன் அல்லாஹ்வின் பாதையில் (ஃபீ சபீலில்லாஹ்) ஆயுதம் ஏந்திய அந்த ஆயிரம் மாதங்களை விடவும் இவ்விரவு சிறந்தது” என்னும் அர்த்தத்தில்.

      பனீ இஸ்ராயீல் மக்களிடம் அந்நபர் எப்பெயரால் அறியப்பட்டார் என்பது பற்றிச் சொல்பவர்களில் சிலர் அவரின் பெயர் நல்லடியார் ஷம்வூன் (ஷம்ஊனல் ஆபித் – Simon the worshipful servant) என்றும் வேறு சிலர் அவரின் பெயர் ஷம்ஸூன் (Samson) என்றும் சொல்கிறார்கள்.

      இனி, கத்ரு அத்தியாயத்தின் நான்கு மற்றும் ஐந்தாம் திருவசனங்களின் தாத்பரியங்கள் பற்றிக் கவனிப்போம்:

      ”அதில் வானவர்களும் பரிசுத்த உயிரும் தமது ரட்சகனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர்” (தனஸ்ஸலுல் மலாஇக்கத்து வர்ரூஹு ஃபீஹா பி இத்னி றப்பிஹிம் மின் குல்லி அம்ரின்)

      ”வைகறை விடியல் வரை அது பேரமைதியாகும்” (சலாமுன் ஹிய ஹத்தா மத்லஇல் ஃபஜ்ரி)

      1) தனஸ்ஸலுல் மலாஇக்கத்து – வானவர்கள் இறங்குகின்றார்கள் என்பதன் பொருளாவது, சூரியன் அஸ்த்தமித்த நேரத்திலிருந்து அது மீண்டும் உதயமாகும் நேரம் வரை வானவர்கள் தொடர்ச்சியாக பூமிக்கு இறங்குகின்றனர்.

      2) ”அர்-ரூஹ்” (உயிர்) என்பது ஜிப்ரீல் (அலை) அவர்களைக் குறிக்கும்.

      அத்-தஹ்ஹாக் அவர்களின் அறிவிப்பின்படி, இப்னு அப்பாஸ் (றலி) அவர்கள் சொல்கிறார்கள்: “அர்ரூஹ் என்பவர் மனித வடிவத்தில் மிக ஆஜானுபாகுவான உடற் கட்டமைப்புடன் இருப்பார். ’[நபியே!] ரூஹைப் பற்றி [யூதர்களாகிய] அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்’ (யஸ்அலூனக்க அனிர் ரூஹ் - 17:85) என்னும் திருவசனத்தில் அல்லாஹ் இவரைப் பற்றியே பிரஸ்தாபிக்கிறான்.

      ’உயிர்த்தெழுப்பப்படும் நாளில்’ (யவ்முல் கியாமா) வானவர்களுடன் வரிசையில் நிற்கின்ற ஒரு வானவர் இவர். ஆனால் இவர் தனக்கென்று ஒரு தனிப் படித்தரத்துடன் நிற்பார்.

      அல்-முகாத்தில் அவர்களின் கருத்துப்படி, “அல்லாஹ்வின் பார்வையில் அவரே வானவர்களில் மிகவும் சங்கை மிக்கவர் ஆவார்.”

      வேறோரு அறிஞர் சொல்லியிருக்கிறார்: “ரூஹ் என்னும் அந்த வானவர் மனித முகமும் பிற வானவர்களைப் போன்ற உடலும் கொண்டவர் ஆவார். அர்ஷுக்குக் கீழே உள்ள படைப்புக்கள் அனைத்திலும் மிக பிரம்மாண்டமான படைப்பு அவரே. பிற வானவர்கள் எல்லாம் வரிசையில் நிற்கும்போது அவர் ஒருவர் மட்டுமே ஒரு வரிசையாகப் பிரத்யேகமாக நிற்பார்.” இக்கருத்தின் இறுதிப் பகுதி பின்வரும் திருவசனத்தைச் சுட்டிக் காட்டுகிறது:

      ”ரூஹும் வானவர்களும் அணிவகுத்து நிற்கும் அந்நாளில்...” (யவ்ம யகூமுர் ரூஹு வல் மலாஇக்கத்து சஃப்ஃபா – 78:38).

      3) அதில் (ஃபீ-ஹா) என்பதன் பொருள் மகத்தான இரவில் (ஃபீ லைலத்துல் கத்ரி) என்பதுதான்.

      4) ”தம் இரட்சகனின் அனுமதியுடன்” (பி இத்னி றப்பிஹிம்) என்பதன் பொருள் தம் இரட்சகனின் கட்டளையுடன் (பி அம்ரி றப்பிஹிம்) என்பதாகும்.

      5) ”ஒவ்வொரு காரியத்தின் மீதும்…” (மின் குல்லி அம்ரு) என்பது ’ஒவ்வொர் நற்காரியத்தின் மீதும்” என்று சொல்லும் ஒரு முறையாகும்.

      6) ”பேரமைதி அது” (சலாமுன் ஹிய) என்பதன் பொருள் ‘அது பேரமையானது’ (ஹிய சலாமுன்) என்பதேதான். இஃது, அவ்விரவு மிகவும் பாதுகாப்பானதும் ரம்மியமானதும் (சலீமா) ஆகும் என்று உணர்த்துகின்றது. அவ்விரவில் உபாதையோ பிணியோ கிளம்பாது. மேலும், எவ்விதமான அமளி துமளிகளாலும் (கஹானா) அவ்விரவை இடையூறு செய்ய இயலாது.

      ’சலாமுன்’ என்பது அமைதியின் நன்மாராயம் சொல்லுதல் என்றும், வானவர்கள் அவ்விரவில் பூமியில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கு முகமன் சொல்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது (சலாமுல் மலாஇக்கத்தி அலல் முஃமினீன்). அவர்கள் நல்லடியார்களை நோக்கிச் சொல்கிறார்கள்: “சலாமுன் சலாமுன் ஹத்தா மத்லஇல் ஃபஜ்ரி.”

      7) “மத்லஇல் ஃபஜ்ரி” என்னும் சொற்றொடரில் நாம் அறபி மொழி அனுமதிக்கும் இன்னொரு வகையான வாசிப்பையும் கவனிக்க வேண்டும். அதாவது “மத்லஃ” என்னும் சொல்லில் “பி கஸ்ரில் லாம்” செய்தால், அதாவது ’லாம்’ என்னும் எழுத்தில் அகர ஒலிக்குறிப்பாக்கும் உள்ள ஃபத்ஹாவை (ஜபரை) இகர ஒலிக்குறிப்பாக்கும் கஸ்றாவாக (ஜேராக) உச்சரித்தால் ”மத்லிஃ” என்றாகும். விடியலின் மத்லிஃ என்பது உதிப்பை (அல்-துலூஃ) குறிக்கும். ஆனால், மத்லிஃ என்பது அவ்வுதிப்பு நிகழும் இடத்தை அல்லது புள்ளியை (யத்லுஃ) குறிக்கும்.

      (குறிப்பு: அ) “ஹிய ஹத்தா மத்லஇல் ஃபஜ்ரி” என்று ஓதுவதை “ஹிய ஹத்தா மத்லிஇல் ஃபஜ்ரி” என்று ஓதும் மரபும் உண்டு. அது ஓர் அனுமதிக்கப்பட்ட பகரமாகும். ஷைகு ஜலாலுத்தீனுல் மஹல்லி (இறப்பு: ஹிஜ்ரி 864) அவர்களால் முற்பாதியும், ஷைகு ஜலாலுத்தீனுஸ் சுயூத்தி (இறப்பு: ஹிஜ்ரி 911) அவர்களால் பிற்பாதியும் எழுதப்பட்ட தஃப்ஸீர் ஜலாலைன் என்னும் திருமறை விரிவுரை காண்க.

      இவ்விரு விதமான ஓதுதல்களிலும் நாடப்படும் நோக்கம் ஒன்றுதான். அதாவது, ‘இலா வக்தில் துலூஇஹி’ – “அது உதயமாகும் நேரம் வரை” என்பதுதான் என்று தஃப்ஸீர் ஜலாலைனில் குறிப்பிடப்படுகிறது.)

(தொடரும்...)

Wednesday, May 29, 2019

ஒரு சூஃபியின் டைரி - 19

#145 சக்தியிரவு (லைலத்துல் கத்ரு)

      ரமலான் மாதத்தின் பதினெட்டாம் இரவாகிய சக்தியிரவு (லைலத்துல் கத்ரு) பற்றி நான் சிந்தித்திருந்தேன். அவன் எனக்கு அவ்விரவை ஒவ்வோராண்டும் காட்டித் தருகிறான் என்பது எனது ஆன்மிக வழக்கமாக இருந்தது. சில நேரங்களில் அவன் எனது மதியத் தொழுகைக்குப் பின் அல்லது சில சமயம் மாலைத் தொழுகைக்குப் பின், லைலத்துல் கத்ரு பற்றிய இரண்டு திருவசனங்களின் அடிப்படையிலான ஏதேனுமொரு அகக்காட்சியை வழங்குவான். அவ்விரவு நிகழ்வதற்கு முன்பாக வானவருலகில் உள்ள வடிவங்கள் பற்றிய குறிப்புக்களை அவன் எனக்குக் காட்டுவான். 

      தொழும்போது நான் என மனதிற்குள் நினைத்தேன், “இறைவா! மகத்தான இரவின் திருக்காட்சியை விட்டு என்னைத் தடுத்துவிடாதே!” உயரமான இல்லிய்யூன் வரையில் விண்ணுலகப் பகுதிகளின் கதவுகள் திறக்கப்படுவதைக் கண்டேன். அதில் வானவர்களும் ஆன்மாக்களும் உலகிற்குத் தாம் இறங்குவது பற்றிச் சற்றே குழம்பியிருப்பவர்களாகத் தென்பட்டனர். சுவனவாசிகளைக் கண்டேன். ரிள்வான் (சொர்க்கத்தின் காவலர்) ஹூரிக(ள் என்னும் சொர்க்கக் கன்னிக)ளுக்கு ஆணை இட்டார், மணப்பெண்களைப் போல் அவர்கள் தமது கைகளிலும் பாதங்களிலும் மருதாணி இட்டுக்கொள்ள. சில வானவர்கள் கொம்புகளும் முழவுகளும் போர் முரசுகளும் எடுத்து வரக் கண்டேன். மேலான இறைவனின் வாசலில் துருக்கி முரசுகள் இருக்கக் கண்டேன். அவர்கள் அதனை ஒலிக்க ஆயத்தம் ஆனார்கள். இறைவனின் பிரசன்னத்தில் இருந்து உலக மக்கள் அனைவர் மீதும் சிவப்பு ரோஜாக்கள் பொழியப்பட இருப்பதைப் பார்த்தேன். இறைத்தூதர்களும் நல்லடியார்களும் குழுமியும் பிரிந்தும் இருக்கக் கண்டேன். மகத்துவம் மற்றும் வல்லமையின் வடிவில் மேலான இறைவன் அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்திக் காட்டப்போகிறான் எனக் கண்டேன்.

      இருபத்தியோராம் இரவே மகத்தான இரவு என்று அவன் எனக்கு உணர்த்தினான். வானவர் தலைவர் ஜிப்ரீலுடன் சேர்ந்து மகத்தான இரவில் இறங்கி வரும்போது கொண்டாடுவதும் சிரிப்பதும் வானவர்கள் மற்றும் ஆன்மாக்களின் வழக்கம். சில நேரங்களில் நான் அவர்களைத் துருக்கியர்களாகவும், சில நேரங்களில் நீணெடுங் கூந்தல் கொண்ட, அழகிய முகங்கள் கொண்ட மணப்பெண்களாகவும் கண்டேன். அவர்களில் சிலரை நான் மான்களின் வடிவில் கண்டேன். ஜிப்ரீல் அவர்களைப் போல் அழகிய முகம் கொண்ட வேறொரு வானவரை நான் காணவில்லை.

      அவ்விரவின் விடியலில் நான் இறைவனைத் தேடினேன். தூர்சீனா மலையில் மூசா நபியுடன் பேசியது போல் அவன் என்னிடம் பேசினான். சில மலைகள் பிளந்து விட்டன. தூர்சீனா மலையின் கிழக்குப் புறத்தில் அதிலொரு சாளரம் இருப்பதைக் கண்டேன். மேலான சத்தியப் பரம்பொருள் அந்த ஜன்னலின் வழியாக எட்டிப் பார்த்து என்னிடம் சொன்னான், “இவ்வாறுதான் நான் மூசாவுக்கு என்னைக் காட்டினேன்.” மூசா நபி இறைவனைக் கண்டு மயக்கமுற்றவர்களாக மலையிலிருந்து அதன் அடிவாரத்திற்கு விழுவதைப் பார்த்தேன். இதனை விடவும் மேலும் அழகானதொரு அகக் காட்சியையும் கண்டேன்.#146 பச்சாதாபக் கண்ணீர்கள்
      
 இறைநேசர்களில் இறைவனை பரவசக் காட்சிகளின் மூலம் அறிபவர்களுக்கு எதிராகச் சில ’குர்ஆன் ஓதுவார்கள்’ (காரிய்யீன்) மற்றும் அதிகாரிகள் எழுதியிருப்பது பற்றிய கதைகளை இன்று நான் கேள்விப்பட்டேன். அந்த இறைஞானிகள் திரைநீக்கம் (கஷ்ஃப்) என்பது அருளப்பட்ட நபர்களில் ஏகத்துவ ஞானம் மிக்கவர்கள், சாட்சிநிலை வாய்க்கப்பட்டோருள் மிகவும் உண்மையாளர்கள். அந்த குறைகூறிகள் இந்த இறைநேசர்களின் ஆன்மிகப் படித்தரங்களை மறுக்கிறார்கள். இது என்னை நோகச் செய்தது. ”அவதூறுக்கான பிராயச்சித்தம் அதனால் தாக்கப்பட்டவர்களுக்காக் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருதலே” என்று சொல்லப்பட்டிருப்பதால் நான் இறைவனிடம் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினேன்.

      பிறகு நான் மாலைத் தொழுகையை நிறைவேற்றினேன். பிறகு நான் பாலைவனத்தில் ஒரு மஞ்சள் நிற நாயைக் கண்டேன். அவதூறு பேசியோர் எல்லாம் அங்கே தமது வாயைப் பிளந்து கொண்டு நிற்பதைக் கண்டேன். அந்த நாய் தனது வாயால் கவ்வி அவர்களின் வாயிலிருந்து நாவுகளை வெளியே உருவிக் கொண்டிருந்தது. ஒரு கணத்திற்குள் அது அவர்களின் நாவுகளை எல்லாம் தின்று விட்டது. அத்துடன் காட்சி முடிந்தது. அது ரமலான் மாதத்தின் இருபதாம் நாளுக்கு முந்திய இரவு. யாரோவொருவர் சொல்லிக் கொண்டிருந்தார், “இந்த நாய் நரகத்தின் நாய்களில் ஒன்று. அவதூறு பேசுவோரின் நாவுகளே அதற்கு தினமும் உணவு. யாருடைய நாவை இந்த நாய் தின்கிறதோ அவரின் நோன்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை.”

      தனது தண்டனையை விட்டும் என்னைக் காப்பாற்றுமாறு நான் இறைவனிடம் அழுது புலம்பிக் கெஞ்சினேன். பிறகு நான் யோசித்தேன், புறம் பேசுவது இத்தகைய விளைவைக் கொண்டு வரும் என்றால் வருந்தி திருந்தி மன்னிப்புக் கேட்டு அழுகின்ற பச்சாதாபத்திற்கு என்ன சன்மானம் கிடைக்கும்?

      பிறகு நான் அழகிய வானவர்கள் வந்து எனது கண்ணீர்த் துளிகளைச் சேகரித்துப் பருகுவதைக் கண்டேன். ”நாங்கள் மேலான இறைவனுக்காக நோன்பு வைப்பவர்கள். உங்களுடைய கண்ணீரைக் கொண்டே நாங்கள் நோன்பு திறக்கிறோம்.” பிறகு, மதீனாவிலிருந்து என்னை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருவதைக் கண்டேன். அவரின் தோற்றம் கம்பீரமாக அச்சமூட்டுவதாக இருந்தது. துருக்கியரின் அங்கியும் தொப்பியும் அணிந்திருந்தார்கள். அவர்களின் வலது கரத்தில் ஒரு வில் இருந்தது. இடது கரத்தில் அம்புகளைப் பிடித்திருந்தார். அவர்கள் தனது வாயைத் திறந்து எனது நாவை எடுத்து மிக மென்மையாகத் தனது வாய்க்குள் வைத்துக் கொண்டார்கள். பிறகு நான் ஆதம், நூஹ், இப்றாஹீம், மூசா, ஈசா மற்றும் அனைத்து இறைத்தூதர்களும் அங்கே வரக் கண்டேன். அவர்கள் எல்லாம் எனது நாவைத் தமது வாய்க்குள் வைத்துக் கொண்டார்கள். பிறகு நான் ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்ராஃபீல். இஸ்ராயீல் மற்றும் அனைத்து வானவர்களையும் கண்டேன். அவர்களும் எனது நாவைத் தமது வாய்க்குள் வைத்துக் கொண்டார்கள். பிறகு இறைஞானிகளும் நல்லடியார்களும் அப்படியே செய்தார்கள்.

      பரவசங்களும் பெருமூச்சுக்களும் அழுகைகளும் என்னை ஆட்கொண்டன. வல்லமை மற்றும் அழகின் வடிவில் மேலான இறைவன் வானவருலகின் திரைகளைத் தூக்கினான். அப்போது ஆதமின் தோற்றத்தில் திருப்பண்புகளின் வெளிப்பாடுகளைக் கண்டேன். பிறகு அவன் இன்னொரு படித்தரத்தில் தனது மகத்துவம் மற்றும் வல்லமையைக் காட்டியருளினான். எழுபது படித்தரங்களில் நான் அவனைக் காணும்வரை அப்படியே தொடர்ந்தது. ஒவ்வொரு படித்தரத்திலும் முன்பு நான் அவனைக் கண்டது போலவே இருந்தான், குறிப்பாக இந்த குணத்தில். அவன் என்னுடன் மகத்தான பேச்சுடன் பேசினான். ஒவ்வொரு பேச்சிலும் நான் அவனுக்குச் செவி சாய்த்தேன். பிறகு அவன் என்னை அபிவிருத்தியின் மேஜையில் அமர வைத்தான். அவன் மீது நான் மகத்துவத்தின் வண்ணங்களைக் கண்டேன். அதுபோல் அதுவரை என் இதயத்தில் நிகழ்ந்ததே இல்லை. பிறகு அந்தப் பொருட்களை விட்டும் என்னை மேலான இறைவன் தன் பக்கம் இழுத்தான்.

      நான் இறைவனிடம் கேட்டேன், “இறைவா! நீ உண்ணுதல் பருகுதல் ஆகியவற்றை விட்டும் தூய்மையானவன். நான் பச்சாதாபத்தில் அழுதபோது வானவர்கள் எனது கண்ணீரைப் பருகினார்கள். ஏக்கத்திலும் தரிசனத்திலும் நான் அழுகின்ற கண்ணீரை அவர்கள் என்ன செய்கிறார்கள்?” அவன் சொன்னான், “அது எனது மது.” இது அவனது கருணை தனது இறைத்தூதர்கள் மற்றும் நேசர்களிடம் (அன்பியா வ அவ்லியா) கொண்டிருக்குமொரு விதியாகும். ஏனெனில், அவன் காலத்தின் பண்புகளைக் கடந்தவன்.#147 பசியுள்ள விருந்தினர்
      
 ”ஒரு வேளை உணவுக்கு நான் உமது விருந்தினராக இருப்பேன்” என்று அவன் மூசா நபியிடம் சொன்னதை நீங்கள் பார்க்கவில்லையா? மேலான இறைவனின் வார்த்தைகள் மீது கொண்ட நம்பிக்கையால் அவர் நல்ல உணவுகளைத் தயாரித்து வைத்துக்கொண்டு இறைநேசர்களின் வருகைக்காகக் காத்திருந்தார். ஓர் ஏழை மனிதர் வந்து மூசா நபியிடம் மிகவும் கடுகடுப்புடன் யாசகம் கேட்டார். மூசா நபி சொன்னார்கள், “ஒரு ஜாடியை எடுத்துக்கொண்டு நைல் நதியில் நீர் நிரப்பி வா. பிறகு நீ வேண்டியதைச் சாப்பிடு.” அந்த ஏழை மறைந்துபோனார். மூசா நபியின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மேஜை மீது இருந்தவற்றை எல்லாம் யூதர்கள் தின்று தீர்த்தார்கள். பிறகு மூசா நபி தூர்சீனா மலைக்குப் போனார்கள். “என் இறைவனே! என் ரட்சகனே! நீ என் விருந்திற்கு வரவில்லையே?” என்று கேட்டார்கள். “நான் உன்னிடம் வந்து உணவு கேட்டேன். ஆனால் நீ என்னை நைல் நதிக்கு அனுப்பி விட்டாய்” என்று இறைவன் அவர்களிடம் சொன்னான். “இறைவா! நீ அத்தகைய நிலையை விட்டும் தூய்மையானவன், அப்பாலானவன்” என்று மூசா நபி சொன்னார்கள். “மூசாவே! ஒரு ஏழைக்கு நீங்கள் உணவூட்டும்போது நீங்கள் எனக்கே உணவூட்டுகின்றீர் என்பது உமக்குத் தெரியாதா?” என்று இறைவன் கேட்டான். இவ்வாறு நபிமொழிகளில் சொல்லப்பட்டுள்ளது.  #148 ”அருளாளன் அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறான்”

      மகத்துவம், நித்தியம் மற்றும் தெய்வீகப் பிரசன்னம் ஆகியவற்றின் வடிவில் மேலான இறைவனை நான் மீண்டும் மீண்டும் கண்டேன். பிறகு, எந்தப் படித்தரமும் மிஞ்சாத நிலையில் நான் அவனை புனித வடிவத்தில் நெருக்கத்தின் வல்லமையில் கண்டேன். நித்தியம் பூர்வீகம் மற்றும் முடிவற்ற மறுமை ஆகியவற்றின் கடல்களுக்குள் நான் பாய்ந்தேன். பிறகு எனது குணங்கள் எல்லாம் அழிக்கப்பட்ட நிலையில் நான் வானவருலகிற்கு இறங்கினேன். அவனது வல்லமையின் முன் அனைத்துப் படைப்புக்களும் கடுகு விதையினும் சிறியதாய் இருக்கக் கண்டேன். பிறகு நான் போதையில் பிதற்றியபடிப் பூர்வீகத்தின் வெளிகளில் அலைந்தேன். அவன் தனது கருணை மற்றும் அழகின் ஆடைகளை எனக்கு அணிவித்தான். அங்கே நான் மேலான இறைவனின் காதலனாக இருந்தேன். அவன் என்னைக் காதலித்தான். அவன் என்னிடம் அன்பாக இருந்த விதத்தை அவன் நாடியவர்களுக்கே அன்றி அவனின் படைப்புக்களில் வேறு யாரிடம் நான் சொன்னாலும் அதனை அவர்களால் தாங்கவே முடியாது. பிறகு அவன் என் மீது அவனது திருப்பண்புகளைப் போர்த்தி அவனது சுயத்தை என்னுடன் இணைத்தான். பிறகு நான் நானே அவன் என்பதைப் போல் கண்டேன். என்னை அன்றி வேறு எதுவும் என் நினைவில் இல்லை. அந்தப் புள்ளியில் நின்றுவிட்டேன். பிறகு ரட்சகத்தன்மையில் இருந்து அடிமை நிலைக்கு இறங்கி வந்தேன்.

      பிறகு நான் என்னை வல்லமையின் இருப்பிடத்தில் காணும் வரை ஆழ்ந்த காதலின் படித்தரத்தை ஆசித்திருந்தேன். சத்தியப் பரம்பொருள் தெய்வீகத்தின் வடிவில் அலங்கரிக்கப்பட்டிருக்க நான் ஒரு மணி நேரம் நெருக்கத்தின் படித்தரத்தில் இருந்தேன், அவனன்றி உள்ள அனைத்தை விட்டும் மறைந்தவனாக. நெருக்கத்தின் படித்தரத்திற்காக நடுக்கம் மற்றும் அழுகையுடனும், கண்களால் தரிசித்ததற்காகப் பாராட்டுக்களுடனும் பலவிதப் பரவசங்கள் என்னை ஆட்கொண்டன.

      அவன் என்னை மீண்டும் மீண்டும் அழைத்தான். அப்போது நான் சிரம் பணிந்தேன். எனத் முதுகில் வல்லமையின் ஒளியினது சுமைகளைக் கண்டேன். “இறைவா! இது என்ன?” என்று கேட்டேன். “’அமர்தல்’ என்பதன் ஒளி” என்று சொன்னான். ”’அருளாளன் சிம்மானசத்தில் அமர்ந்துள்ளான்’ (அர்-ரஹ்மானு அலல் அர்ஷிஸ்தவா- குர்ஆன் 20:5) என்பதன் அர்த்தம் என்ன?” என்று கேட்டேன். மேலான இறைவன் சொன்னான், “நான் அர்ஷை உள்ளமையில் கொண்டு வந்தபோது, அதிலிருந்து எனது உள்ளமையின் வெளிப்பாட்டை எவர் மீதெல்லாம் நான் நாடுகின்றேனோ, அதுவே எனது ‘அமர்தல்’ என்பதாகும்.” என் சகோதரா! இறைநேசர்களில் நஃபீ (இறைவன் அல்லாதவற்றை இல்லாமை என்பதாகக் காணும்) குருமார்களின் விசயம் இது. எவரேனுமொருவர் அந்த ஞானத்தின் இடத்தில் இல்லாமல் இந்த நூலைக் கண்டால் நான் இறைவனுக்கு மனித உருவத்தை வழங்குகிறேன் என்று என்னைச் சாடுவார். ஆனால் அவரது தலை துண்டிக்கப்படும்.
#149 சக்தியிரவில் திகைப்புகள்

      ரமலான் மாதத்தின் இருபத்தோராம் இரவில், லைலத்துல் கத்ரு என்னும் சக்தியிரவில் மேலான இறைவனின் பேரருளால் நான் அற்புதமான வடிவங்களை தரிசித்தேன். அவற்றுள் நான் துருக்கியரின் தோற்றத்தில் வானவர்களைக் கண்டேன், சிலரை மணப்பெண்களின் தோற்றத்தில், மேலும் சிலரை காஃப் மலையின் உச்சியில். சிலர் மத்தளங் கொட்டக் கண்டேன். பிரசன்னத்தின் வாயிலில் ஜிப்ரீல் அவர்கள் ஒரு சிறுவனைப் போல் இசைக் கருவிகளை வாசித்திருக்கக் கண்டேன். பிரசன்னத்தின் மக்கள் யாவரையும் மகிழ்ச்சியும் சிரிப்பும் மிகைத்தன. அது மகத்தான இரவாதலால் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது போல் மலையிலிருந்து பாலைவனத்திற்கு இறங்கி சமவெளியெங்கும் பரவினர். மேலான இறைவன் அவ்விரவின் முதற்பகுதியிலும் நடுவிலும் தன்னை வெளிப்படுத்தினான்; இரவின் முதற்பகுதியில் மறைவின் கருவறைகளிலிருந்தும் இரவின் நடுப்பகுதியில் இல்லிய்யீன் எனுமிடத்தின் உச்சத்திலிருந்தும் தன்னை ஒரு சிவப்பு ரோஜாவில் வெளிப்படுத்திக் கொள்வது போல. இந்தத் திரை நீக்கங்களில் எல்லாம் அவனை விடவும் அழகான ஒன்றை நான் காணவே இல்லை. பிறகு அவன் இரவின் கடைசிப் பகுதியில் தெய்வீகம் வல்லமை மற்றும் அழகு ஆகியவை அலங்கரித்த தோற்றத்தில் தன் முன் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் இறங்கினான். அவன் சொன்னான், “எனது நெருக்கத்திற்கும் எனது தரிசனத்திற்கும் எனது விருப்பத்திற்கேற்ப வழிநடத்தப்பட்டவது நீ மட்டுமே. நான் யாருக்கேனும் கருணையை நாடினால் மறைவுலகின் ஒரு கதவை அவருக்காகத் திறந்துவிடுவேன். ஆனால் யாரும் என்னை நெருங்கத் துனிவதில்லை. ஏனெனில், எனது நெருக்கம் என்பது ஆன்மிக ஞானத்தின் நெருக்கம். அது இடத் தொலைவு சார்ந்த நெருக்கம் அல்ல. உன்னை சஞ்சலப்படுத்தியது எது? முன், பின், தொலைவு, கீழ், மேல், இடம், வலம், கற்பனை, பாவனை, நெருக்கம், விலகல் என்று எதுவுமே இல்லாமல் நான் எனது சுய உள்ளமையால் இருக்கிறேன். எனக்கே மகத்துவம்! நான் பூர்வீகமானவன், நிரந்தரமானவன், காலாதீதன். நான் வல்லமையாளனாக, நிரந்தரமானவனாக, இடமேதுமின்றி இருக்கிறேன். அர்ஷுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் யாவும் திகைத்துள்ளன. அவற்றின் இதயங்களில் திகைப்பைத் தவிர வேறு எதுவுமில்லை. நீயும் திகைத்தோருள் ஒருவனே. உன் மீது யாதொரு நிர்ப்பந்தமும் இல்லை.”
#150 இணைவுக்கான கோரிக்கை

      நான் சொன்னேன், “இறைவா! நான் அத்துடன் திருப்தி அடைய மாட்டேன்.” நான் அவனைப் பார்ப்பதைப் போன்றும் பார்க்காததைப் போன்றும் இருந்தது அது. ஏனெனில் நான் ஒருவித குருட்டுத்தன்மையில் இருந்தேன். பிறகு அவன் அந்த குருட்டுத் திரையை விலக்கினான். அப்போது நான் அவனை மறைவின் உள்ளுலகில் கண்டேன். அப்போதும் நான் விரும்பியது போல் அவனைக் காண முடியவில்லை. நான் அவனிடம் கெஞ்சி மன்றாடினேன். எனவே அவனை மறைவுலகின் வெளிப்புறத்தில் கண்டேன். அவனுடனான இணைவின் எதார்த்தத்தை நான் உணர்ந்து கொள்ள முடியவில்லை. எனக்கு கோபமும் வலியும் பொங்கியது. நான் சொன்னேன், “உனது அடியார்கள் உன்னை விட்டுத் திரும்பித் தமது தொழுகையில் தம்மையே நோக்கிக் கொள்கிறார்கள் என்பது சரிதான். இது என்ன சங்கடம்?” சிறிது நேரம் அப்படியே இருந்தேன். மேலான இறைவன் வானவருலகின் வெளிப்பகுதியில் தோன்றினான். நான் அவனை வல்லமை மற்றும் அழகின் வடிவத்தில் கண்டேன். அவன் என்னை தன்னருகில் இழுக்கவும் நான் அணுகினேன். அது நான் விரும்பியதைப் போன்றிருந்தது. ஆனால், பரவசம், ஞான நிலை, கூச்சல்கள், அழுகைகள் மற்றும் அவனது ஆட்கொள்ளும் அன்பும் அழகும் செய்யும் சஞ்சலங்கள், மற்றும் அவனுடனான இணைவின் இனிமை ஆகியவற்றின் அழுத்தத்தை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அந்நிலையில் சிறிது காலம் இருந்தேன்.


(தொடரும்...)