Thursday, June 23, 2022

கஜல் விகடன்

 

உருது மொழியின் உன்னதமான கவிதை வடிவம் கஜல். காதலைப் பேசுவதில் கஜலுக்கு இணையான வேறொரு கவிதை வடிவம் இருக்க முடியாது.

            ஆனால், சோக உணர்வு இழையோட கஜல் பாடிக் கொண்டிருந்த கவிஞர்களின் மத்தியில் அங்கதத்தை ஆயுதமாக ஏந்தி வந்தவர் அக்பர் அல்லாஹாபாதி. ஆம், அவர் கஜல் உலகின் விகடகவி.

            அவர் தன் கவிதைகளை வாசித்த போது ’கஜலில் நகைச்சுவையா?’ என்று உருதுக் கவியுலகம் புருவம் உயர்த்தி வியந்து பார்த்தது.            அக்பர் அல்லாஹாபாதியிடம் காதல், ஆன்மிகம், உளவியல் என்று கஜல் கவிதை மரபின் அத்தனை பொருண்மைகளும் இருந்தன. ஆனால், அவர் தன் சிந்தனைகளை எள்ளலும் பகடியுமாக வெளியிட்டார்.

            கஜலின் உள்ளீடுகள் க்ளீஷே என்னும் தேய்வழக்குகளாகி மலிந்து போனபோது அக்பர் அல்லாஹாபாதி அவற்றை மறுபரிசீலனை செய்யும் நோக்கில் பகடி பண்ணி அதிர்ச்சி வைத்தியம் பார்த்தார் என்று சொல்லலாம்.

            கஜல் கவிதைகளில் ஆங்கிலச் சொற்களை அள்ளித் தெளிப்பதில் தனி ஆற்றல் அவருக்கு இருந்தது. அது அவரின் கவிதைகளில் அங்கதச் சுவையை அதிகப் படுத்திற்று. ஆங்கிலேயரின் ஆட்சியில் மேற்கத்திய கலாச்சாரம் இந்தியர்களிடம் பரவி வந்ததை அவர் கவிதைகள் அவ்விதம் பதிவு செய்துள்ளன. எனவே அவரை “லிசானுல் அஸர்” (காலத்தின் நாவு) என்று கவிஞர்களும் ரசிகர்களும் போற்றினார்கள்.     

            அவரின் பரந்துபட்ட கவியுலகில் இருந்து சில விகடத் தெறிப்புகளை இங்கே தமிழாக்கித் தருகிறேன்.

            ”உன் பிரிவே என் மரண சாசனம்” என்று புலம்பும் காதலர்களை அக்பர் பார்க்கிறார். அவருக்கும் காதலின் பிரிவு அனுபவம் இருக்கிறதாம். ஆனால், அவரின் புலம்பல் வேறு விதமாக இருக்கிறது:

            ”யாருக்கோ வந்திருக்கலாம்

             காதலின் பிரிவில் மரணம்.

             எனக்கோ தூக்கம் கூட

             வரமாட்டேன் என்கிறது!”

            ஆங்கிலத்தில் tongue என்னும் சொல் மொழியையும் குறிக்கிறது, அதைப் பேசும் நாவையும் குறிக்கிறது. Mother tongue என்றால் தாய்மொழி என்று அர்த்தம். தமிழிலும் நாவன்மை என்றால் மொழித் திறன் என்று பொருள். யாரேனும் துடுக்காகப் பேசினால், “என்ன, நாக்கு நீளுது?” என்று கேட்கிறோம். உருதுவிலும் ஸபான் என்னும் சொல் மொழியையும் நாவையும் குறிக்கிறது. இந்த சிலேடையை வைத்துக் கொண்டு பகடி ஆடுகிறார் அக்பர்:

            ”நான் சொன்னேன்:

             பல்வேறு மொழிகளில் பண்டிதன் நான்;

             ஜெர்மன் ஃபிரெஞ்சு லத்தீன் ஆங்கிலம்

             அனைத்திலும் என் திறமையை

             அகில உலகமே அறிந்துள்ளது!

             ஒரு வாயாடி ‘மிஸ்’ என்னிடம்

             விவாதத்தில் இறங்கினாள்,

             அவளின் நாக்கு நீண்டது.

             அப்போது மேகத்தில் மின்னல் அடித்தது

             வானில் இருந்தது வெண்ணிலா.

             அவள் சொன்னாள்:

             இந்த நாவை நீ அடையவில்லை எனில்

             வாழ்வின் ருசியை அறியவே மாட்டாய்!”

            மஜ்னூனுக்கு லைலாவின் மீது காதல் வந்தது எப்போது என்று தெரியுமா? பால்ய வயதில்! ஆரம்பப் பள்ளியில் இருவரும் படித்துக் கொண்டிருந்தபோது. காவியம் அப்படித்தான் சொல்கிறது. எதார்த்தத்தில் அப்படி நிகழ்ந்தால் என்ன ஆகும்? இதோ அக்பர் சொல்கிறார்:

            ”காதல் எனக்குத் தீய விதி ஆனது.

             எல்லா முயற்சிகளும் செய்த பின்னும்

             A,B என்பதற்கு அப்பால் ஏறவில்லை எனக்கு,

             B.A வரை சென்றுவிட்டார்

             என்னுடன் படித்த எல்லாரும்.”

            அவர் காலத்தில் பி.ஏ என்பது பென்னம் பெரிய படிப்பாக இருந்தது. ஒருவன் கல்லூரியில் சேர்ந்து விட்டான் என்று தெரிந்தாலே பெரிய இடத்திலிருந்து பெண் தர போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்பார்கள் என்ற சூழ்நிலை இருந்தது. அப்படித்தான் அக்பருக்கும் ஒரு பீபி (மனைவி) வாய்த்தாளாம். பிறகென்ன, ’வாழ்வின் ருசி’யை அனுபவிக்க ஆரம்பித்தார். அவர் சொல்கிறார்:

            ”பி.ஏ தேரினேன்,

             விரும்பியபடி

             பீபி கிடைத்துவிட்டாள்.

             அது மதியின் காரியமாக இருந்தது,

             இது விதியின் காரியமாக முடிந்தது!”

            1920-களில் பி.ஏ, எம்.ஏ ஆகிய படிப்புகள் உயர்ந்த மதிப்புடன் இருந்த சூழலை அவரின் இன்னொரு அங்கதக் கவிதை தெளிவாகக் காட்டுகிறது. அதில் லைலா – மஜ்னூன் என்னும் மரபான கவிதைக் குறியீட்டை அக்பர் கையாள்கிறார்:

            ”மஜ்னூனிடம் சொன்னார் லைலாவின் அம்மா:

             ’எப்படியேனும் எம்.ஏ தேரிவிடு,

             லைலாவை உனக்கே கட்டி வைக்கிறேன்,

             தயங்காமல் உனக்கு மாமியார் ஆவேன்.’

             மஜ்னூன் சொன்னான்:

             ’என்ன பேசுகின்றீர்?

             காதலன் எங்கே? காலேஜ் எங்கே?

             இயல்பாகக் கிளம்பும் உணர்ச்சிகள் எங்கே?

             செயற்கையாய் திணிக்கப்படும் சிந்தனைகள் எங்கே?

            கிழவியே! உனக்கு என்ன ஆனது?

            மான் தன் முதுகில் புல்லுக்கட்டு சுமக்குமா?”

            இலட்சியங்களுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்து தியாகி (ஷஹீத்) என்னும் புகழை அடைபவர்கள் இருக்கிறார்கள். நாட்டுக்காக உயிர் நீத்த பகத் சிங் “ஷஹீதே வதன்” (தேசத் தியாகி) என்றே போற்றப்படுகிறார். அக்பர் அல்லாஹாபாதியும் அந்த உயரிய நிலையை அடைந்திருக்கிறாராம். ஆனால், அவர் ஷஹீத் ஆனது போரில் அல்ல, அக்கப்போரில். அது எப்படி என்று அவர் சொல்கிறார்:

            ”எந்தவொரு மன்னனின் படையிலும்

             வீழ்ந்துபடவில்லை அக்பர்;

             மனைவியிடம் சண்டை போட்டே

             அவனொரு தியாகி ஆகிவிட்டான்!”            அப்படி என்ன விபரீதம் நிகழ்ந்தது? என்று நாம் பதறுகிறோம். வாழ்வின் எதார்த்தம் ஒன்றை அக்பர் நம்மிடம் தெரிவிக்கிறார்:

            ”காதலன் காதலி என்னும் உறவில்

             எவ்வளவு இன்பம் இருந்தது முன்பு!

            எங்கே போனது அது,

            கணவன் மனைவி என்று ஆன பின்பு?”

            கணவனும் மனைவியும் காதலர்களாய் இருக்கும் வரம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. கணவன் மனைவி என்பது ஏதோ அலுவல் பணி போல் அலுத்துப் போனால் அதிலே எப்படி இன்பம் இருக்கும்?

            எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெளிவாகச் சொல்ல வேண்டும் எனில் அவர் ஒரு தீர்க்கதரிசியாகத்தான் இருக்க வேண்டும். அடுத்த நொடி என்ன நிகழும் என்று நமக்குத் தெரியாது. வாழ்க்கையிலேயே இந்த நிலை என்றால், மரணத்துக்குப் பின் என்ன நடக்கும் என்று தன்னால் சொல்ல முடியும் என்கிறார் அக்பர். நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதை அவர் சொல்லியும் விடுகிறார்:

            இறந்துபோன பின் என்ன நடக்கும்

உனக்கு நான் சொல்லவா?

பிரியாணி தின்பார்கள் எல்லாரும்

ஓதுவார்கள் உனக்கு ஃபாத்திஹா!

 

            ஆம், முஸ்லிம் சமூகத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்குப் புண்ணியம் சேர்க்கும் பொருட்டு ஃபாத்திஹா என்னும் சிறப்புப் பிரார்த்தனை ஒதி உற்றார் உறவினர்களுக்கு விருந்து போடுவது மரபு.            நாட்டு நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் அவரிடம் கொஞ்சம் கேட்கலாம். தன்னலமற்ற தலைவர்கள் எல்லாரும் வரலாறு ஆகிவிட்டார்கள். இப்போதெல்லாம் வெளிப் பகட்டை வைத்தே தலைவர் ஆகிவிடுகிறார்கள். ஆடையே ஆளைத் தீர்மானிக்கிறது; பேச்சே மக்களை மயக்கிவிடுகிறது. அக்பர் சொல்கிறார்:

            ”கோட்டும் சூட்டும்

             அணிந்து கொண்டான்,

             ‘மிஸ்டர்’ ஆகிவிட்டான்.

             பொதுக்கூட்டத்தில்

             வாய் திறந்தான்,

             ‘லீடர்’ ஆகிவிட்டான்!”

            எல்லாத் தொழில்களிலும் ஊழல் மலிந்துவிட்டது உண்மைதான். அக்பர் வழக்கறிஞர் பணியை ஒரு பிடி பிடிக்கிறார்:

            ”வழக்கறிஞர் பிறந்தார்.

             சாத்தான் கூறினான்:

             இன்று நானும்கூட

             அப்பா ஆகிவிட்டேன்!”

            ஐரோப்பியக் கலாச்சாரம் இந்தியர்களிடம் பரவி வந்த காலகட்டத்தைத் தன் கவிதைகளில் அவர் பதிவு செய்திருக்கிறார். அந்த மாற்றம் அவருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது. ஆனால் அதையும் அங்கதச் சுவையுடன்தான் பாடியிருக்கிறார். எதிர்காலத்தில் முஸ்லிம் பெண்களிடம் ’பர்தா’ என்னும் திரையும் இந்துப் பெண்களிடம் ’கூங்கட்’ என்னும் முக்காடும் இல்லாமல் போய்விடும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தப் பொருண்மையில் ஒரு கவிதை:

            ”முகத்திரை இன்றி சில பெண்கள்

             கண் முன் காட்சி ஆனார்கள்;

             சமுதாயத்தின் வெட்கக்கேடே! என்று

             நிலத்தில் சாய்ந்துவிட்டார் அக்பர்.

             ‘எங்கே போனது உங்கள் முகத்திரை?’

             என்று கேட்டார் அவர்களிடம்.

             ‘ஓ அதுவா? ஆண்களின் அறிவின் மீது

             விழுந்து கிடக்கிறது’ என்றார்கள்.”

            தமிழுக்கு ஈழத்துக் கவிஞர் மஹாகவி போல, மலையாளத்துக்கு குஞ்ஞுண்ணி போல, உருது மொழிக்கு அக்பர் அல்லாஹாபாதி என்று சொல்லலாம்.

            அவரின் கவிதைகளில் கேலியும் கிண்டலும் மட்டும்தான் இருக்கிறது என்று எண்ணி விடாதீர்கள். அவரின் காத்திரமான அரசியல் கவிதைகளையும் ஆழமான ஆன்மிகக் கவிதைகளையும் நாம் பார்க்க வேண்டும்.

             இந்திய விடுதலைக்கான போராட்டம் கொதி நிலைக்கு வந்து கொண்டிருந்த காலம். 1919-இல் பிரிட்டிஷ் அரசு ஒருவித சமரசத்துக்கு வந்தது. ஆங்கிலேயரின் மேற்பார்வையில் இந்தியர்களுக்கு சில அதிகாரங்கள் வழங்கப்படும் என்று அது சொன்னது. அதற்கு மாண்டேக் – செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் என்று பெயர். அவ்வளவுதான், இந்தியத் தலைவர்களுக்கு இடையே பதவிச் சண்டைகள் மூள ஆரம்பித்தன. அக்பர் அல்லாஹாபாதி அதை இப்படிக் குத்திக் காட்டினார்:

            ”சகோதரர்கள் சண்டையில்

             சட்டையைக் கோர்த்துவிட்டார்கள்!

             சுயராஜ்யம் வந்துவிட்டது!”

            மேற்கத்திய கல்வியும் கலாச்சாரப் பரவலும் இந்தியர்களுக்கு நன்மை செய்யாது என்று அக்பர் அல்லாஹாபாதி மிக உறுதியாக நம்பினார். இந்திய இளைஞர்கள் கல்லூரிகளில் சேர்ந்து பி.ஏ., எம்.ஏ முதலிய பட்டப் படிப்புகளை மேற்கொள்வதில் அவருக்குக் கிஞ்சிற்றும் விருப்பம் இல்லை. கவிதைகளால் அதைக் கண்டனம் செய்தார்.            ”ஓ! நம் தேசத்தின் பெருமிதமான இவர்களை

             வருணிக்க என்னிடம் வார்த்தைகள் ஏது?

             பட்டதாரி ஆனார்கள்

             பணி செய்து முடித்தார்கள்

             ஓய்வூதியம் பெற்றார்கள்

             செத்துப் போனார்கள்!”

என்று அவர் ’நித்திய தரித்திரர்’ ஆன ’கலக மானிடப் பூச்சி’களின் வாழ்க்கையை வரைந்து காட்டுகிறார்.

            ”இந்தியா இஸ்லாத்தின் வீடாகவும் இல்லை

             இலக்குவன ராமரின் நாடாகவும் இல்லை

            நாம் அனைவரும் ஆங்கிலேயரின் அடிமைகள்

            இந்தியா இப்போது ஐரோப்பாவின் மண்டி!”

என்று தீ உமிழவும் அவரின் பேனாவுக்கு ஆற்றல் இருந்தது.

            அக்பர் அல்லாஹாபாதி சூஃபித்துவத்தில் ஈடுபாடு காட்டியிருக்கிறார். சூஃபித்துவம் இறைஞானம் அடைவதற்குக் காதலையே வழியாக முன் வைக்கிறது. அதாவது, ஆன்மீக அனுபவங்களின் வழியாகவே இறைஞானம் அடைய முடியும்; தத்துவச் சிந்தனைகள் இறைஞானம் தராது என்று சொல்கிறது. அக்பர் அல்லாஹாபாதி தனது கவிதைகளில் இதனைப் பல இடங்களில் வலியுறுத்துகிறார்.

            ”தத்துவவாதியின் விவாதங்கள்

             இறைவனை அடைவதில்லை.

             அவன் முடிச்சுகளை

 அவிழ்த்துக்கொண்டே போகிறான்,

 முடிவேதும் கிடைப்பதில்லை!”

சூஃபி கவிதைகள் காதலின் மொழியில் பெண்ணைப் பேசுவது போன்ற தோரணையில் இறைவனைப் பற்றிப் பேசிவிடுகின்றன. அதற்கு அக்பரிடம் இருந்து ஓர் அழகான எடுத்துக்காட்டு இது:

அறிந்தேன் கடைசியில்

 நீ யார் என்று;

 வரிந்து கொள்ளலாம்

 இதயத்தில் உன்னை,

 புரிந்து கொள்ள முடியாது

 புத்தியால் ஒருபோதும்.”

இதே கருத்தைத் தரும் இன்னொரு கவிதை:

“அறிவுக்குள் விழுகின்ற ஒன்று

 எல்லையற்ற ஒன்றாய்

 எப்படி இருக்க முடியும்?

 மனத்தின் புரிதலில்

 வந்துவிடும் ஒருவன்

 இறைவனாய் எப்படி

 இருக்க முடியும்?”

            ’உலகில் இரு; உலகைச் சேர்ந்தவனாக இருக்காதே’ என்று ஞானிகள் சொல்கிறார்கள். அக்பர் அந்த நிலைக்கு மிக இலகுவாகக் கனிந்து விட்டார் என்று தெரிகிறது. அவர் சொல்கிறார்:

            ”உலகில் இருக்கிறேன்,

             அதைத் தேடுபவனாக நானில்லை;

             சந்தையைக் கடந்து போகிறேன்,

             அதில் எதையும் வாங்கும் எண்ணமில்லை!”

            இந்த ஆன்மிகச் சிந்தனைகள் எல்லாம் மரபாக சூஃபி ஞானிகள் சொல்லி வருவதுதானே என்று நினைத்தபடி அக்பரின் கவிதைகளை வாசித்துக்கொண்டு போனால் இதுவரை யாரும் சொல்லாத கோணத்தில் சில சிந்தனைகளை அவர் வெளிப்படுத்துகிறார்.

            உள்ளத்தை விட்டும் உருவங்களை நீக்க வேண்டும் என்றுதான் சூஃபி ஞானிகள் சொல்வார்கள். ஆனால், உருவங்கள் இறைவனின் கைவண்ணத்தைக் காட்டுகின்றன, அவனது ஆற்றலின் அத்தாட்சிகளாக இருக்கின்றன என்று அக்பர் பார்க்கிறார். இறைவனுக்கு ’முஸவ்விர்’ (’உருவமளிப்போன்’) என்றொரு திருநாமம் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் அத்தனை உருவங்களும். இந்தக் கோணத்தில் கூர்ந்து நோக்கும்போது அக்பருக்கு ஓர் அற்புத தரிசனம் கிடைக்கிறது:

            ”இறைவா!

             எத்தகைய எத்தகைய

             உருவங்களை நீ

             உண்டாக்கி இருக்கிறாய்!

             உருவம் ஒவ்வொன்றும்

             உள்ளத்தில் ஏந்திக்கொள்ள

             தகுதியைப் பெற்றுள்ளதே!”

            இறைவன் இருக்கிறான் என்று எப்படி அறிவது? படைப்புக்களை ஆராய்ந்தால் படைத்தவன் இருப்பது உறுதியாகும் என்று ஞானிகள் சொல்கின்றனர். அதை அக்பர் அல்லாஹாபாதி சொல்லும் விதத்தில் அழகும் அழுத்தமும் இருக்கிறது:

            ”ஒவ்வொரு அணுவும்

             இறைவனின் ஒளியால்

             பிரகாசிக்கின்றது.

             ஒவ்வொரு மூச்சும் சொல்கிறது

             நாம் இருக்கிறோம் என்றால்

             இறைவனும் இருக்கிறான்!”

            இதைப் படித்து முடித்துவிட்டுக் கண்களை மூடிக் கொண்டேன். நெஞ்சில் நிம்மதி நிரம்பிற்று. மூச்சு சுகமாக இருந்தது.

Tuesday, June 21, 2022

பூர்ணிமைக் கிண்ணம்

 

’குணா’ என்றொரு திரைப்படம் (1991). அதன் கதை ஆன்மிகக் குறியீடுகளைப் பயன்படுத்தி எழுதப்பட்ட ஒன்று.

            குணா சிறுவனாக இருக்கும்போதே அவனின் அப்பா அவனையும் அவனின் தாயையும் நிர்க்கதியாக விட்டுவிட்டு எங்கோ போய்விடுகிறார். சூழ்நிலை அவனின் தாய் மனோன்மணியை வேசை ஆக்கிவிடுகிறது. அப்படி வளரும் அவனுக்குத் தன் பிறப்பு அழுக்கானது என்னும் சிந்தனை மனப்பிறழ்வை ஏற்படுத்துகிறது. குணசீலம் கோயிலில் சங்கிலியால் கட்டிப் போடப்படுகிறான். எனவே “குணா” என்பதே அவன் பெயராகிவிடுகிறது. குணாவுக்கு அவனின் சிற்றப்பன் கள்ளச் சாவியால் பூட்டுகளைத் திறக்கும் வித்தையைக் கற்றுத் தருகிறான்.


            
பிறகு குணா ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறுகிறான். அங்கே வினோதமான பைத்தியங்கள் இருக்கின்றன. பக்திப் பரவசம் நிரம்பிய பித்தர் ஒருவரும் இருக்கிறார். அவர் தன்னை அபிராமி பட்டர் என்று பாவித்துக் கொள்கிறார். குணா சிவபெருமானின் அம்சம் என்றும் அவன் பௌர்ணமி இரவில் அபிராமியைத் திருமணம் செய்துகொண்டால் அவனின் அழுக்கு நீங்கித் தூய்மை ஆகிவிடுவான் என்றும் அவர் குணாவின் மனத்தில் பதிய வைக்கிறார். (பௌர்ணமி என்பது இப்படத்தில் மிக முக்கியமான குறியீடாகத் தொடர்ந்து வருகிறது.)

            கோயில் கருவூலத்தைத் திருடுவதற்காகச் சிற்றப்பனும் அவனின் நண்பர்களும் துறவி போல் வேடமிட்டுக்கொண்டு குணாவை அங்கே அழைத்துச் செல்கின்றனர். அபிராமி அங்கே வருவாள் என்று சிற்றப்பன் அவனிடம் சொல்கிறான். அப்போது, அண்மையில் தன் தந்தையை இழந்தவளும் அறுபது கோடி ரூபாய் சொத்துக்கு ஒரே வாரிசுமான யுவதி ஒருத்தி அன்னதானம் இடுவதற்காகக் கோயிலுக்கு வருகிறாள். தற்செயலான சமிக்ஞைகள் தனக்கு அடையாளம் காட்டுவதாகப் புரிந்துகொள்ளும் குணா அந்த இளம் பெண்ணையே அபிராமி என்று மனதிற்குள் வரித்துக் கொள்கிறான். கோயிலில் நடக்கும் திருட்டுக் கலவரத்தில் நகையையும் அவளையும் தூக்கிக் கொண்டு காரில் தப்பிவிடுகிறான்.

            ’மதிகெட்டான் சோலை’ என்னும் மலையில் உள்ள பாழடைந்த தேவாலயம் ஒன்றில் சில காலம் அவளைத் தங்க வைக்கிறான். தானும் அவளும் சிவனும் சக்தியும் என்று அவளிடம் சொல்கிறான். அவனின் பிதற்றல்களால் அவள் எரிச்சல் அடைகிறாள். அவனிடம் இருந்து தப்பித்துப் போவது எப்படி என்று சிந்திக்கிறாள். ஒருகட்டத்தில், தன் தந்தையின் காரியதரிசி தன்னைக் கொன்றுவிட்டு சொத்து முழுவதையும் சுருட்டிக்கொள்ள நினைக்கிறான் என்பது அவளுக்குத் தெரிகிறது. மனிதர்கள் அனைவரும் பதவி, பணம், காமம் ஆகிய பித்துப் பிடித்து வாழ்கிறார்கள் என்பதையும் குணாவின் மனப் பிறழ்வுக்குள் தூய காதல் இருப்பதையும் உணர்கிறாள்.

            தன்னை ஒரு திருடன் என்று கருதி விரட்டி வரும் காவலர்களிடம் இருந்தும் பணத்துக்காகக் கொலை செய்யத் துடிக்கும் பகைவரிடம் இருந்தும் தப்பிக்க குணா தன் நாயகியுடன் மலையுச்சியில் இருக்கும் குகைக்குப் போய்விடுகிறான். அங்கும் அவனைத் தேடி வரும் காவலரும் பகைவரும் செய்யும் தாக்குதலில் தப்பிதமாக நாயகி இறந்துவிடுகிறாள். அந்த மரணத்தை அவனால் நம்ப முடியவில்லை. இந்த உலகத்தை விட்டே போனால்தான் அவளுடன் வாழ முடியும் என்று முடிவு செய்தவனாக அவளின் உடலைத் தூக்கிக்கொண்டு மலையுச்சியில் இருந்து பள்ளத்தில் பாய்கிறான். அப்போது வானில் பௌர்ணமி இலங்குவதைக் காட்டியபடி திரைப்படம் முடிகிறது.

            உருவம் உள்ளத்தில் பதிந்துவிட்டால் அதை அழிப்பதுதான் எவ்வளவு கடினமாக இருக்கிறது! அதிலும் அந்த உருவத்தை தெய்விகத்தின் குறியீடாக வரித்துவிடும்போது அதை அழிப்பது சாத்தியமே இல்லாமல் போய்விடும். குணாவின் கதை இதையும் உணர்த்துகிறது.


            
ராமகிருஷ்ண பரமஹம்சர் காளி பக்தராக இருந்தார். காளி தேவியின் உருவம் அவரின் உள்ளத்தில் மிக உறுதியாகப் பதிந்து போயிருந்தது. தோத்தாபுரி அவருக்கு யோகப் பயிற்சி அளித்தபோது தியானத்துக்குள் அவரால் மூழ்கிச் செல்ல முடியவில்லை. கண்களை மூடினால் போதும், சமாதி நிலையை அடையவிடாமல் காளியின் உருவம் குறுக்கே நின்றது. அந்த உருவத்தை வெட்டிவிட்டு முன்னே செல்லும்படி தோத்தாபுரி அவரிடம் கூறினார். ‘வாள் எங்கே?’ என்று கேட்ட ராமகிருஷ்ணரிடம் தோத்தாபுரி சொன்னார்: “எந்தக் கற்பனையில் இருந்து உன் காளியை உருவாக்கினாயோ அதே கற்பனையில் இருந்து வாளெடுத்து அவளை வெட்டு!” பிறகு காளி வெட்டப்படுவதாக ராமகிருஷ்ணர் கற்பனை செய்துகொள்ளத் தோதாக அவரின் நெற்றியில் தோத்தாபுரி ஒரு கண்ணாடிச் சில்லு கொண்டு கீறினார். உருவத்தைத் தாண்டிய பிறகுதான் நிர்க்குண பிரம்மத்தின் யோக நிலை அவருக்கு சித்தித்தது என்கிறது அவரின் சரிதை.

            ”ஸ்தூலம் கடப்பதே பாலம் கடப்பது” என்கிறார் சூஃபி மகான் ஷாஹ் மதார் ஆலிம். ஆனால் காரியத்தில் அதைச் சாதிப்பது எப்படி? ’சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்பதை யாம் அறிவோம்.

            இன்னொரு அழகான நிகழ்ச்சியும் நினைவுக்கு வருகிறது.            ஹரிவன்ஷ் லால் பூஞ்சா ஓர் அத்வைத ஞானி. ‘பாப்பாஜி’ என்று அழைக்கப்படுகிறார். ரமண மகரிஷியின் தொடர்பே அவரை ஞான நிலைக்கு இட்டுச் சென்றது. ரமணரிடம் தான் பெற்ற வழிகாட்டல்கள் பற்றி அவர் பேசும்போது ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார். அப்போது பாப்பாஜிக்கு இளம் வயது. அவர் கிருஷ்ண பக்தியில் மூழ்கியிருந்தார். அவரின் கண் முன்னே ஸ்தூல வடிவமாகவே கிருஷ்ணன் தோன்றும் தரிசனங்களை அவர் அடைந்திருந்தார். திருவண்ணாமலைக்கு அவர் வந்தபோது ஒருமுறை அவர் மலையின் அப்பக்கம் போய் வெகு நேரம் கழித்து வந்தார். அவர் எங்கே போயிருந்தார் என்று ரமணர் விசாரித்தார். கிருஷ்ணன் தோன்றியதாகவும் அவனுடன் விளையாடிவிட்டு வருவதாகவும் பாப்பாஜி சொன்னார். ‘இப்போ கிருஷ்ணன் எங்கே?’ என்று ரமணர் கேட்டார். ‘அவன் மறைந்துவிட்டான்’ என்றார் பாப்பாஜி. அப்போது ரமணர் செய்த உபதேசம்தான் பாப்பாஜியை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது: “எது தோன்றவும் மறையவும் செய்கிறதோ அது சத்தியம் அல்ல, இறைவன் அல்ல. அது உன் மனக் கற்பனையின் நீட்சிதான். பார்த்தவன் இங்கே இருக்கிறாய். பார்க்கப்பட்டவன் எங்கே? அவன் இப்போது இங்கே இல்லை. பார்த்த நீ இப்போது இங்கே இருக்கிறாய். பார்த்தவன் யார் என்று அறி!”

            உருவங்கள் தோன்றி மறைகின்றன. அவை எதுவும் இறைவன் இல்லை. அவை இறைவனை வெளிப்படுத்தும் வாயில்கள் ஆகலாம். ஆனால், அவையே இறைவன் ஆகிவிடாது.

            இறைவனுக்குத் தோற்றமும் மறைவும் இல்லை. அவனுக்கு உருவம் இல்லை. அவன் எப்போதும் மாற்றமின்றி நிலையாக இருக்கிறான்.

            எல்லாம் சரி. என்றாலும் உருவத்தை விட்டுவிடுவது அவ்வளவு எளிதாக இல்லையே? எத்தனை எத்தனை உருவங்கள் உள்ளத்தைக் கவர்கின்றன, வனத்தில் தோன்றும் வைகறை நேரத்துப் பூக்களைப் போல், அந்தப் பூக்களின் இதழ்களில் மின்னும் பனித்துளிகளைப் போல்.

            பூக்கள் தோன்றி மலர்ந்து உதிர்ந்து மறையலாம். ஆனால் பூ என்னும் தொல் படிமம் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு பூவிலும் அதையேதான் தரிசிக்கிறோம். உண்மையில் நம் மனத்தைக் கவர்வது பல பூக்கள் அல்ல; அந்தத் தொல் படிமமான ஒற்றைப் பூவே இந்த அனைத்துப் பூக்களின் வழியாகவும் நம்மை ஈர்க்கிறது.

            உன்னதமான ஓர் ஒற்றைப் படிமத்தைத் தேடித்தான் உருவங்கள் அனைத்தையும் உள்ளம் சலிக்கிறது போலும்.

            உருவம் அற்ற இறைவனை நீ எப்படி தரிசிப்பாய்? ஓர் உருவத்தில்தான் அவன் வெளிப்பட்டாக வேண்டும். “மதுவே போதை தருகிறது, கோப்பை அல்ல; எனினும், கோப்பை இன்றி மதுவை அருந்த முடியாது,” என்கிறார் மகாகவி இக்பால்.

            ’கோப்பையே வேண்டாம்’ என்று உதறித் தள்ளுபவனும்கூட கூஜா என்னும் ஒரு பெரிய கோப்பையில் இருந்துதான் பானத்தைப் பருகுகிறான்.             படைப்புக்கள் என்னும் சிறு கிண்ணங்கள் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்ட பின்னரும், இறைத்தூதர் என்னும் கூஜா தனக்கு வேண்டும் என்று கோருகிறார் இக்பால்:

                                    ”தேடப்படும் சத்தியமே!

                                     எப்போதேனும் வா,

                                     உருவமெனும் ஆடையை

                                     உடுத்திக்கொண்டு!

                                     பக்திப் பரவசத்தில்

                                     பலநூறு சிரவணக்கம்

                                     துடித்தபடி உள்ளன

                                     அர்ப்பணமாகும்

                                     என் நெற்றியில்!”

            ஆனால், அதே அல்லாமா இக்பால் அவர்கள் வேறு விதமாகவும் நமக்கு அறிவுரை சொல்கிறார்.

            கூஜாவில் இருந்தே குடிப்பவரும்கூட அடையாத போதையை லைலா என்னும் எளிய கிண்ணத்தில் பருகி அடைந்தவன் மஜ்னூன். எனவேதான், பேரின்பக் காதலுக்குக் குறியீடாக அவனின் காதலை ஞானிகள் கையாள்கின்றனர். அவனும் இலக்கை அடைந்தவன் அல்லன்; லைலாவே அவனுக்குத் தடையாக நிற்கிறாள் என்கிறார் இக்பால். அவர் நமக்குச் சொல்கிறார்:

                                    ”ஊரைத் துறந்துவிட்டான் மஜ்னூன்,

                                     நீ பாலைவனத்தையும் துறந்துவிடு!

                                     சத்தியத்தின் தரிசனம் வேண்டுமெனில்

                                     லைலாவையும் துறந்துவிடு!

                                     பிரசங்கியே!

                                     துறவின் முழுமைதான்

                                     இலக்கை அடைகிறது.

                                     இவ்வுலகைத் துறந்துவிட்டாய்,

                                     எனில் இப்போது

                                     மறுவுலகையும் துறந்துவிடு!”

            இதற்கு மஜ்னூன் என்ன சொல்வான்? ”ஈருலகையும் நான் எப்போதோ விட்டுவிட்டேன். ஆனால், லைலா ஈருலகையும் சேர்ந்தவள் இல்லையே?” என்றுதான் கேட்பான்.

Monday, June 20, 2022

துளிகளின் உரையாடல்


            அறிவியல் உலகில் ஐன்ஸ்டீனும், கலை உலகில் தாகூரும் மாபெரும் மேதைகள். 1930-இல் ஜெர்மனியில் உள்ள காபுத் என்னும் மலைக்குன்றின் மேல் இருக்கும் மரவீடு ஒன்றில் ஐன்ஸ்டீனை தாகூர் சந்தித்து உரையாடினார்.

            இரண்டு கடல்கள் சந்தித்துக் கொண்டது போன்ற நிகழ்வு அது.

            ஐன்ஸ்டீனின் மருமான் திமித்ரி மரியனாஃப் மற்றும் தாகூரின் செயலாளர் அமியா சக்ரவர்த்தி ஆகியோர் அப்போது உடன் இருந்தனர். இரண்டு மேதைகளின் உரையாடல்களை அவர்கள் குறிப்பெடுத்து அறிக்கை தயாரித்தனர். அது 10,ஆகஸ்டு 1930 அன்று நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியானது.

            ”அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்ப்பது மிக சுவாரஸ்யமானது – தாகூர், ஒரு சிந்தனையாளனின் தலை கொண்ட கவிஞர், மற்றும் ஐன்ஸ்டீன், ஒரு கவிஞனின் தலை கொண்ட சிந்தனையாளர்,” என்று அந்த அறிக்கை மிக அழகாகக் குறிப்பிடுகிறது.  இருவரின் உரையாடல், “இரண்டு கிரகங்கள் பேசிக் கொள்வதைப் போல் இருந்தது” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

            மெய்ப்பொருள் காண்பது பற்றி அவரவரின் துறை சார்ந்த உன்னத அறிவுடன் இருவரும் நிகழ்த்திய உரையாடல் இன்று அறிவுலக வரலாற்று ஆவணம் என்று போற்றப்படுகிறது. அதை இங்கே தருகிறேன்.

l

            


    தாகூர்: நீங்கள் தொன்மையான இரண்டு பொருண்மைகளைக் கணிதத்தால் வேட்டையாடுவதில் முனைந்துள்ளீர்கள் – காலம் மற்றும் இடம். நானோ, மனிதனின் முடிவற்ற உலகம் மற்றும் சத்தியத்தின் பிரபஞ்சம் ஆகியவை பற்றி இந்த நாட்டில் உரையாற்றி வருகிறேன்.

            ஐன்ஸ்டீன்: இறைவன் இந்த உலகத்தை விட்டும் பிரிந்த நிலையில் இருக்கிறான் என்பதை நீங்கள் நம்புகின்றீர்களா?

            தா: பிரிந்ததாக இல்லை. மனிதனின் முடிவற்ற ஆளுமை பிரபஞ்சத்தை கிரகிக்கிறது. மனித ஆளுமையால் உள்வாங்கப்படாத எது ஒன்றும் இருக்க முடியாது. பிரபஞ்சத்தின் உண்மை என்பது மனித உண்மையே என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

            ஒரு விஞ்ஞானத் தகவலைக் கொண்டு இதை நான் விளக்குகிறேன். பருப்பொருள் புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் ஆகியவற்றால் உருவாகியுள்ளது. அவற்றுக்கு இடையே வெளிகள் உள்ளன. ஆனால் பருப்பொருள் திடமானதகாகத் தெரிகிறது. அதேபோல் மானுடம் தனிநபர்களால் ஆனதாகத் தெரிகிறது. ஆனால் அவர்களுக்கு இடையில் மனித உறவுகளின் இணைப்புகள் இருக்கின்றன. அது மனித உலகிற்கு ஓர் உயிர்ப்புள்ள ஒற்றுமையைத் தருகிறது. இதே விதத்தில் பிரபஞ்சம் முழுவதுமே நம்முடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மனித பிரபஞ்சம் ஆகும். இந்தச் சிந்தனையை நான் கலை இலக்கியம் மற்றும் மனிதனின் சமய உணர்வு ஆகியவற்றில் தொடர்ந்து ஓர்ந்திருக்கிறேன்.


            
ஐ: பிரபஞ்சத்தின் இயல்பு குறித்து இரவேறு கோட்பாடுகள் உள்ளன: 1) உலகம் என்பது மானுடத்தைச் சார்ந்த ஒன்று; 2) உலகம் என்பது மனிதத்தை விட்டும் தனித்ததான ஒரு எதார்த்தம்.

            தா: நம் பிரபஞ்சம் நித்தியனான மனிதனுடன் ஒத்திசையும்போது அதை நாம் சத்தியம் என்பதாக அறிகிறோம், அழகு என்பதாக உணர்கிறோம்.

            ஐ: இது முற்றிலும் மனித நோக்கிலான பிரபஞ்சக் கோட்பாடாகும்.

            தா: வேறு விதக் கோட்பாடு இருக்க முடியாது. இவ்வுலகம் ஒரு மனித உலகம் – அதைப் பற்றிய விஞ்ஞானப் பார்வையும் விஞ்ஞானி என்னும் ஒரு மனிதனின் பார்வையே. அதற்கு சத்தியத்தை நல்குகின்ற அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அளவை ஒன்று இருக்கிறது. அது, நமது அனுபவங்களின் வழி தன் அனுபவங்களைக் காணும் நித்திய மனிதன் என்னும் அளவுகோல்.

            ஐ: இது மனிதன் என்னும் சுயத்தின் மெய்யுணர்வாகும்.

            தா: ஆம். ஒற்றை நித்திய வஸ்து. அதை நாம் நமது உணர்ச்சிகள் மற்றும் செயல்கள் ஆகியவற்றில் உணர்ந்தறிய வேண்டும். நமது தனிப்பட்ட எல்லைகளால் தனக்கொரு எல்லைகள் உண்டாகிவிடாத அதி மனிதனை நாம் உணர்ந்தறிந்தோம். அறிவியல் என்பது தனிநபர்களுக்கு உட்படாத ஒன்றைக் குறித்ததே கருதுகின்றது. அது தனிநபர் சார்பற்ற உண்மைகளின் மனித உலகமாக இருக்கிறது. சமயம் இந்த உண்மைகளை உணர்ந்தறிந்து அதை நமது ஆழ்ந்த தேவைகளுடன் இணைக்கிறது; சத்தியம் பற்றிய நமது தனிநபர் உணர்வு பிரபஞ்ச அளவில் முக்கியத்துவம் அடைகின்றது. சமயம் சத்தியத்திற்கு மதிப்பீடுகளை இடுகின்றது. சத்தியத்துடனான நமது ஒத்திசைவைக் கொண்டே அது நல்லது என்று நாம் அறிந்திருக்கிறோம்.

            ஐ: அப்படியானால், சத்தியம் அல்லது அழகு என்பது மனிதனை விட்டுப் பிரிந்தது இல்லை அல்லவா?

            தா: இல்லை.

            ஐ: இனி மனிதர்களே இல்லை என்றாகிவிட்டால், அப்புறம் ’பெல்வதீரின் அப்பல்லோ’ (என்னும் தொல் கிரேக்க சலவைச் சிற்பம்) அழகாய் இருக்காது அல்லவா?

            தா: இல்லை.

            ஐ: அழகைப் பொறுத்தவரை இந்தக் கோட்பாட்டை நான் ஒப்புகிறேன், ஆனால் உண்மையின் விசயத்தில் இதை நான் ஏற்கவில்லை.

            தா: ஏன் இல்லை, சத்தியமும் மனிதனின் வழியாகவே உணரப்படுகிறது.

            ஐ: என் கோட்பாடு உண்மை என்று என்னால் நிரூபிக்க முடியாது. ஆனால் அது என் மதம் ஆகும்.

            தா: அழகு என்பது பிரபஞ்ச சுயத்தில் இருக்கும் பூரண ஒத்திசைவில் உள்ளது. சத்தியம் என்பது பிரபஞ்ச மனத்தின் பூரண அறிவில் உள்ளது. தனி நபர்கள் ஆகிய நாம் அதனை நமது சொந்த தவறுகளாலும் பிழைகளாலும், நமது அனுபவச் சேகரங்களாலும், நமது ஒளியூட்டப்பட்ட உணர்வாலும் அணுகுகிறோம். அப்படி அல்ல எனில், வேறு எப்படி நாம் சத்தியத்தை அறிவோம்?

            ஐ: மானுடத்துக்கு அப்பால் ஆன தனித்த ஒன்றாகப் பார்க்கப்படும் சத்தியமே மெய்யாகும் என்பதை நான் அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியாது. ஆனால் அதை நான் உறுதியாக நம்புகிறேன். உதாரணமாக, ஜியோமிதியில் பைத்தாகோரஸின் தேற்றம் ஒரு தோராயமான உண்மையைச் சொல்கிறது என்றும் அது மனிதனின் இருப்பைச் சார்ந்தது அல்ல என்றும் நான் நம்புகிறேன். எப்படியோ, மனிதனுக்கு அப்பாலான ஒரு எதார்த்தம் இருக்கும் எனில் அந்த எதார்த்தத்தைப் போன்றே சத்தியம் ஒன்றும் இருக்க முடியும். அதே ஏரணப்படி, முன்னதன் இன்மை பின்னதன் இன்மையையும் கோருகிறது.

            தா: பிரபஞ்ச சுயத்துடன் ஒருமித்துள்ள சத்தியம் என்பது மனிதத் தன்மைக்குப் படுவதாகத்தான் இருக்க வேண்டும். இல்லை எனில், தனி நபர்களாகிய நாம் உண்மை என்று உணரும் எதனையும் உண்மை என்றே உரைக்க முடியாது – குறைந்தபட்சம், மனிதனின் சிந்தனைப் புலம் கொண்டு தர்க்க முறையில் அறிவியல் ரீதியாக மட்டுமே எட்ட முடிகின்ற உண்மையும் கூட. இந்தியத் தத்துவத்தின்படி, தூய உன்னத சத்தியமான பிரம்மன் இருக்கிறான். பிரிந்து நிற்கும் தனி மனித மனத்தினால் அல்லது வார்த்தைகளைக் கொண்டு விளக்குவதால் அதனை அறிய முடியாது. தனி மனம் என்பது முடிவிலியில் முற்றிலும் மூழ்கிவிடும்போதே அது அறியப்படுகிறது. ஆனால், அத்தகைய உண்மை அறிவியலுக்கு உரியதாக முடியாது. நாம் ஆலோசிக்கும் சத்தியத்தின் இயல்பு யாதெனில், தோற்றம் ஆகும். அதாவது, மனித மனத்திற்கு உண்மை என்று தோன்றுவதாகும். அதனால், அது மனித உண்மை ஆகும். அதனை மாயை (illusion / தோற்றப் பிழை) என்று அழைக்கிறோம்.

            ஐ: அப்படி எனில், இந்தியக் கோட்பாடாக இருக்கக்கூடிய உங்கள் கோட்பாட்டின்படி, அது ஒரு தனி மனிதனின் மாயை அல்ல, ஆனால் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மாயை.

            தா: தனி உயிரும் ஒருமைக்கு, மானுடத்துக்கு உரியதுதான். எனவே, அனைத்து மனித மனமும் சத்தியத்தை உணர்ந்தறிகிறது; இந்திய மனமும் ஐரோப்பிய மனமும் பொதுவான உணர்ந்தறிதலில் சந்திக்கின்றன.

            ஐ: ஜெர்மன் மொழியில் உயிரினம் என்னும் சொல் அனைத்து மனிதர்களையும் குறிக்கிறது. மேலும், குரங்குகளும் தவளைகளும்கூட அதில் அடங்கும்.

            தா: அறிவியலில் நாம் தனி மனித மனத்தின் தனிப்பட்ட எல்லைகளை எல்லாம் களைந்து கொண்டே போய் பிரபஞ்ச மனிதனின் மனத்தில் இருக்கும் சத்திய தரிசனத்தை அடைகிறோம்.

            ஐ: சத்தியம் என்பது நமது உணர்வை விட்டும் தனித்த பிரிந்த ஒன்றா? என்பதில்தான் சிக்கல் ஆரம்பம் ஆகிறது.

            தா: நாம் உண்மை என்று குறிப்பிடுவது எதார்த்தத்தின் பொருண்மை / அகநிலை (subjective) மற்றும் புறநிலை (objective) ஆகியவற்றின் அறிவார்ந்த ஒத்திசைவில் இருக்கிறது. அவ்விரண்டும் அதி மனிதனுக்கு உரியவை ஆகும்.

            ஐ: நம்முடைய அன்றாட வாழ்வில், நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கு மனிதனை விட்டும் தனிப்பட்டதான எதார்த்தத்தை நாம் சார்த்தும் நிர்ப்பந்தம் இருக்கிறது. நமது புலன அனுபவங்களை அறிவார்ந்த முறையில் ஒன்றிணைக்க அப்படி நாம் செய்கிறோம். உதாரணமாக, இந்த வீட்டில் யாருமே இல்லை என்றாலும் அந்த மேஜை அது இருக்கும் இடத்தில் இருக்கவே செய்கிறது.

            தா: ஆம், அது தனிநபர் மனத்திற்கு வெளியே இருக்கிறது. ஆனால், பிரபஞ்ச மனத்திற்கு உள்ளேதான் இருக்கிறது. நான் கிரகிக்கும் மேஜை என்பது நான் வைத்திருக்கும் உணர்வுக்கு ஏற்பத்தான் கிரகிக்கப்படுகிறது.

            ஐ: வீட்டில் யாருமே இல்லை என்றாலும் மேஜை அதுவாகவேதான் இருக்கும் – ஆனால் உங்கள் கண்ணோட்டத்தில் இது பிழைபடுகிறது – ஏனெனில், அங்கே மேஜை நம்மை சாராமல் தனித்திருக்கிறது என்பதன் பொருள் என்ன என்பதை நாம் விளக்க முடியாது. மனிதகுலத்துக்கு அப்பால் ஆன சத்தியத்தின் இருப்பு என்ற நமது இயல்பான கண்ணோட்டத்தை விளக்கவோ நிரூபிக்கவோ முடியாது. ஆனால் இது எவரிடமும் தொக்காத ஒரு நம்பிக்கை ஆகும் – ஆதிவாசிகள் கூட. சத்தியத்துக்கு நாம் ஒரு அதிமனிதப் புறநிலையைக் கற்பனிக்கிறோம்; அது என்ன என்பதை நம்மால் சொல்ல முடியாவிட்டாலும், நமது இருத்தல், நமது அனுபவம் மற்றும் நமது மனம் ஆகியவற்றுக்கு அப்பாலான தனித்த இந்த சத்திய எதார்த்தத்தை நாம் அப்படி உருவகிக்காமல் இருக்க முடியாது. 

            தா: மேஜை என்னும் பருப்பொருள் ஒரு தோற்றமே; மனிதன் மனம் இல்லை என்றால் அது மேஜை என்று கிரகிக்கின்ற ஒன்றும் இருக்காது என்பதை அறிவியல் நிரூபித்திருக்கிறது. அதே சமயம், பருப்பொருள் எதார்த்தம் (physical reality, மாம்ச எதார்த்தம்) என்பது மின்னாற்றலின் சுழல்களால் ஆன ஒரு பெருந்திரளே ஆகும் என்ற தகவலும் மனித மனத்திற்கு உரியதே என்பதையும் நாம் ஏற்க வேண்டும்.

            மெய்யறிதலில் பிரபஞ்ச மனத்திற்கும் தனி நபரில் அதுவே கட்டுப்பட்டுள்ள மனநிலைக்கும் இடையில் ஒரு நிரந்தர பிணக்கு இருக்கிறது. நமது அறிவியல், தத்துவம், அறவியல் ஆகியவற்றில் இதனைச் சமாதானம் பண்ணும் செயற்பாடுகள் தொடர்ந்து நடக்கின்றன. இப்படியோ அப்படியோ, மனிதத்துக்கு முற்றிலும் தொடர்பே இல்லாத சத்தியம் ஏதேனும் இருக்கும் எனில் நமக்கு அது முற்றிலும் ‘இன்மை’யே (non-existing) ஆகும்.

            இடத்தில் (in space; வெளியில்) அல்லாது காலத்தில் மாத்திரமே நிகழும் தொடர்ச்சி கொண்ட மனம் ஒன்றைக் கற்பனை செய்வது கடினமன்று. உதாரணமாக, இசைக் குறிப்புகளின் வரிசை. அத்தகைய ஒரு மனத்திற்கு அப்படிப்பட்ட சத்தியக் கோட்பாடு என்பது இசையின் எதார்த்தத்தை ஒத்ததாகும். அதில் பைத்தோகாரஸின் ஜியோமிதிக்கு எந்த அர்த்தமும் கிடையாது. இது தாளின் எதார்த்தம்; இலக்கியத்தின் எதார்த்தத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அந்தக் காகிதத்தைத் தின்னும் பூச்சியின் மனத்திற்கு இலக்கியம் என்பது ஓர் இன்மை, இல்-பொருள். ஆனால், மனித மனத்திற்கு இலக்கியம் என்பது  அந்தக் காகிதத்தை விடவும் மேலானது, உண்மையான மதிப்புடையது. அதேபோல், மனித மனத்திற்கு புலன் வழியிலோ பகுத்தறிவு ரீதியாகவோ தொடர்புறாத ஓர் உண்மை இருக்கும் எனில், நாம் மனிதர்களாக இருக்கும் வரை அது இன்மையாகவே இருக்கும்.

            ஐ: அப்படி எனில், நான் உங்களை விட சமயத்தன்மை மிக்கவன்!

            தா: என் தனிமனித சுயத்தில் அதி மனிதனையும் பிரபஞ்சத்தன்மை கொண்ட மனித உயிரையும் ஒன்றிணைப்பதே எனது சமயம்.

l

            இந்த நிகழ்வு இரண்டு கடல்கள் சந்தித்துக் கொண்டதைப் போன்றது என்று ஆரம்பத்தில் சொன்னேன். உண்மையில், இது கடல் பற்றி இரண்டு துளிகளின் உரையாடல் என்று சொல்லலாம்.

            அறிவியல் ஆன்மிகம் ஆகிய இரண்டு மெய்யறிதலுக்கும் மனிதனே அளவுகோலாக இருக்கிறான் என்பதை இந்த உரையாடல் காட்டுகின்றது.

            மனிதன் ஒரு பிரபஞ்சமாக இருக்கிறான் என்றும் பிரபஞ்சமே ஒரு மனிதனாக இருக்கிறது என்றும் இந்த உரையாடல் உணர்த்துகிறது.

            இதில் பேசப்பட்ட செய்திகள் புதியவை அல்ல. மிகவும் தொன்மையான சிந்தனைகளே.

            அதி-மனிதன் என்று தாகூர் குறிப்பிடுவதையே சூஃபிகள் “அல்-இன்சானுல் காமில்” (பூரண மனிதன் / முழு மனிதன்) என்று குறிப்பிடுகின்றனர். ”பிரபஞ்ச மனம்” என்று அவர் சொல்வதை சூஃபிகள் “நஃப்சுன் காமிலா” (பூரண மனம் / முழு மனம்) என்று சொல்கின்றனர்.

            அறிவியலும் ஆன்மிகமும் இங்கே ஒன்றை ஒன்று ஆசையுடன் சந்தித்து உரையாடிக் கொள்கின்றன. ஒன்றை ஒன்று உண்மைப் படுத்துகின்றன. இந்தப் புரிதல் மேதைகளுக்கே ஏற்படும்.

            அறிவியலில் உள்ள கலையையும், கலையில் உள்ள அறிவியலையும் கண்டறியும் போக்கு அண்மையில் பெருகி வந்துள்ளது. அறிவியலும் கலையும் ஒன்றாகும் புள்ளியில் சத்தியத்தின் கதவு திறக்கிறது.