Thursday, September 29, 2022

வையத் தலைமை கொள்

 

(07-09-2022 அன்று ஜமால் முகமது கல்லூரியில் அதன் ’தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம்’ நடத்திய தொடக்க விழாவில் நிகழ்த்திய உரை. சூழ்நிலை கருதி அவ்விழாவில் பேசாமல் விட்ட செய்திகளை இப்பிரதியில் இணைத்திருக்கிறேன்; செம்மை கருதி, அங்கு பேசிய சில செய்திகளை இதில் நீக்கியிருக்கிறேன்.)

பேராசிரியர்களே! மாணவ மக்களே!

இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தபோதே பேராசிரியர் த.செல்வராஜ் அவர்கள்  ”வையத் தலைமை கொள்” என்னும் இந்தத் தலைப்பை எனக்கு வழங்கினார். இந்தத் தலைப்பு பாரதியார் இயற்றிய புதிய ஆத்திசூடியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

வையத் தலைமை கொள் என்று அவர் ஏன் சொன்னார்? வையத் தலைமை என்றால் என்ன? வையத்துக்கு ஒற்றைத் தலைமை சாத்தியமா? வையத் தலைமை கொள்வதற்கான பண்புகள் எவை? என்ற வினாக்களை எழுப்பிக் கொண்டு என் சிந்தனையைச் செலுத்துகிறேன்.



வீட்டுத் தலைமையே எத்தனை சிரமமானது என்பதை இங்கே இருக்கும் பேராசிரியர்கள் நன்றாக அறிவோம். இதில் வையத் தலைமை என்று பாரதி குறிப்பிடுவது அதிகம் அல்லவா? என்று எண்ணலாம். வீதித் தலைமை, ஊர்த் தலைமை, மாவட்டத் தலைமை, மாநிலத் தலைமை என்று மேலே செல்லச் செல்ல அதை அடைபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும். இப்படி இருக்க, வையத் தலைமை என்று சொன்னால் எல்லோரும் அதற்கு ஆசைப்பட முடியுமா? என்று கேட்கலாம். புதிய ஆத்திசூடியிலேயே பாரதி தயங்காமல் சொல்கிறார்: ”பெரிதினும் பெரிது கேள்” (71)

உலகப் பார்வை என்பது தமிழ் மரபு, தமிழர் இயல்பு. உலகைக் குறிக்கத்தான் தமிழில் எத்தனை சொற்கள்: வையம், உலகம், ஞாலம், அவனி, புவி, பூமி, குவலயம். வடமொழிச் சொல்லாக இருந்தாலும் ‘ஜகம்’ என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

உலகத்தைச் சுட்டி அல்லது வாழ்த்தித் தொடங்கும் பேரிலக்கியங்கள் தமிழில் உள்ளன. “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்று தொடங்குகிறது திருக்குறள். “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு / பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு” என்று தொடங்குகிறது திருமுருகாற்றுப்படை. “உலகம் யாவையும் தாமுள வாக்கலும்” என்று தொடங்குகிறது கம்பராமாயணம். “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என்று தொடங்குகிறது சேக்கிழாரின் பெரிய புராணம்.

ஐ.நா சபையின் வரவேற்பு வாசலில்  உலகப் பார்வை கொண்ட உன்னதக் கவிதை வரிகளை உலக மொழிகள் பலவற்றின் இலக்கியங்களில் இருந்தும் எடுத்துப் பொறித்து வைத்திருக்கிறார்கள். பாரசீக மொழியிலிருந்து கூட சூஃபி ஞானி இமாம் சாஅதி எழுதிய கவிதை அதில் இடம்பெற்றுள்ளது. “பனீ ஆதம் அஃழாயே யக் பைகரந்த்” – ’மனிதர்கள் அனைவரும் ஓருடலின் அங்கங்கள் ஆவர்’ என்று அந்தக் கவிதை தொடங்குகிறது. தமிழ் இலக்கியத்தில் இருந்து கணியன் பூங்குன்றனார் எழுதிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் பாடலைத் தேர்ந்தெடுத்து அங்கே பொறித்துள்ளார்கள்.

இந்தத் தமிழ் மரபில் நின்று உலகப் பார்வை பெற்ற பாரதியார் “வையத் தலைமை கொள்” என்று சொல்வதில் வியப்பில்லை.

பல ஆண்டுகளுக்கு முன், ‘பாரதியின் ஆன்மிகப் பார்வை’ என்னும் தலைப்பில் ஜெயகாந்தன் ஓர் அற்புத உரை நிகழ்த்தியிருக்கிறார். வேதம் என்னும் சொல் பாரதியின் கவிதைகளில் எப்படியெல்லாம் இடம் பெற்றிருக்கிறது என்று சுட்டிக் காட்டினார். அதுபோல், “வையத் தலைமை கொள்” என்னும் தலைப்பை ஓர்ந்தபோது வையம் என்பது பாரதியாரின் கவிதைகளில் எப்படியெல்லாம் சுட்டப்பட்டிருக்கிறது என்று நான் சிந்தித்துச் சிலிர்த்துப் போனேன்.



உலகப் பார்வை என்பது இன்றைக்கு மேலாண்மைத் துறையில் வலியுறுத்தப்படுகிறது. அது வணிகர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. இதழியலாளர் சம்ஸ் எழுதிய ஒரு செய்தியை இன்று வாசித்தேன். அதில் glocalian (குலோக்கலியன்) என்னும் ஆங்கிலச் சொல் பற்றி அவர் விளக்கியிருந்தார். லோக்கல் என்பது உள்ளூர், வட்டாரம் என்னும் அர்த்தங்களில் அமைகிறது. குளோபல் என்பது உலகளாவியது என்று பொருட்படும். இவ்விரண்டையும் இணைக்கும் சொல்தான் குலோக்கலியன் என்பது. ’சோனி’ நிறுவனத்தை ஆரம்பித்த அகியோ மரீட்டா உருவாக்கிய glocal (குலோக்கல்) என்னும் சொல்லில் இருந்து இந்த வார்த்தை வருகிறது. இதை வைத்து அமெரிக்காவில் ஒரு வணிகக் கோட்பாடு ஒன்று உருவாகியிருக்கிறது: “Think globally, act locally.” இந்தக் கோட்பாட்டைத் தனது இதழியல் பணிக்குத் தகுந்தபடி “உள்ளூர்ப் பார்வையில் இருந்து உலகைப் பார்; உலகப் பார்வையில் இருந்து உள்ளூரைப் பார்” என்று தான் வரித்துக் கொண்டிருப்பதாக சம்ஸ் சொல்கிறார். இதை உங்களின் வாழ்க்கைப் பாதைக்குத் தகுந்தவாறு நீங்களும் வரித்துக் கொள்ளலாம்.

”வையத் தலைமை” கொள்வதற்கு நாம் என்னென்ன பண்புகளை நம்மில் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டால் “புதிய ஆத்திசூடியில்” பாரதி சொல்லியிருக்கும் பண்புகளே அதற்கான விடை என்று கருதலாம். அவற்றை ஒவ்வொன்றாக விளக்கிப் பேச இங்கே அவகாசம் இல்லை என்பதால் ஒரு சிலவற்றை மட்டும் தொட்டுக்காட்டி என் உரையை முடிக்க நாடுகிறேன்.

பாரதியின் ஆத்திசூடி “அச்சம் தவிர்” என்று ஆரம்பிக்கிறது. “உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் / அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே” என்று பாடியவர் அவர். “பயம் எனும் பேய்தனை அடித்தோம்” என்று ஜெய பேரிகை கொட்டியவர். அங்கேயும் ஓர் உலகப் பார்வை: “வியனுல கனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வைக் கைப்பிடித்தோம்.”

உங்களுக்கு ஒரு திருக்குறளை இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்: “சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை / இகல்வெல்லல் யார்க்கும் அரிது.” சொல் வன்மை, சோர்வு இன்மை, அஞ்சாமை ஆகிய இந்த மூன்றும் எவனிடம் இருக்குமோ அவனை அவ்வளவு எளிதில் தோற்கடிக்க முடியாது. திருவள்ளுவர் குறிப்பிடும் இந்த மூன்று பண்புகளையும் பாரதி பல இடங்களில் பாடியிருக்கிறார். ’அஞ்சாமை’ பற்றி நான் இப்போது சொன்னேன்.

அடக்குமுறை செய்கின்ற அரசனுக்கு முன்னால் நின்று அப்பர் பாடுகிறார்: “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்.” அவர் கையில் ஆயுதம் ஏதுமில்லை; அவருக்குத் துணையாகப் பெரும்படை இல்லை. ஆனால் அவரின் உள்ளத்தில் அச்சம் இல்லை. அத்தகைய வீரத்தை பாரதி தன் மகள் சகுந்தலாவுக்கு உபதேசித்தார்: “பாதகம் செய்பவரைக் கண்டால் – நீ / பயம் கொள்ளல் ஆகாது பாப்பா / மோதி மிதித்துவிடு பாப்பா – அவர் / முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.” இந்த உபதேசம், “கீழோர்க்கு அஞ்சேல்” (16) என்றும், “தீயோர்க்கு அஞ்சேல்” (45) என்றும், ”சீறுவோர்ச் சீறு” (28) என்றும் புதிய ஆத்திசூடியில் ரத்தினச் சுருக்கமாக இடம்பெறுகிறது. “நமனை அஞ்சோம்” என்னும் அப்பரின் வாக்கு, “சாவதற்கு அஞ்சேல்” (26) என்று பாரதியின் நாவில் வெளிப்படுகிறது.



பாரதி வாழ்ந்த காலத்தில் மக்களை அச்சம் பீடித்திருந்தது, ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது. “நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த / நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் / அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே” என்று அன்று நாடு இருந்த நிலையைப் பாடிக் காட்டுகிறார். தங்கள் கோழைத்தனத்தை அவர்கள் பண்பாடு என்னும் பெயரால் பூசி மெழுகியதைப் பார்த்து நெஞ்சு பொறுக்காமல் “அச்சமே கீழ்களது ஆச்சாரம்” என்று பொங்கினார்.  இருக்கும் பொருள்களுக்கு அஞ்சுவதோடு கற்பனை செய்தும் அஞ்சிக் கிடந்தார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்: “வஞ்சனைப் பேய்கள் என்பார் – இந்த / மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார் / துஞ்சுது முகட்டில் என்பார் – மிகத் / துயர் படுவார் எண்ணிப் பயப்படுவார்.” எனவே, “பேய்களுக்கு அஞ்சேல்” (72) என்று புதிய ஆத்திசூடியில் தனியாகச் சொல்ல வேண்டியதாயிற்று.

உள்ளத்தில் இருந்து அச்சத்தை நீக்கிவிட்டால் அதில் ஊக்கமும் வீரமும் ஊறி வரும். எனவே, ”ரௌத்திரம் பழகு” (96) என்று சொல்கிறார். எப்படிப் பழகுவது? வரலாற்றில் வீரத்தின் அடையாளமாக இருந்த மேன்மக்களை கவனித்துப் பார். “சூரரைப் போற்று” (30). அப்போது உனக்கும் அந்த வீரம் விளையும்.

”சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்” என்பதை இன்னொரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால், சொலல் வல்லன் என்பது கல்வி கற்றலைக் குறிப்பதாகவும், சோர்விலன் என்பது அதைச் செயற்படுத்தும் தொழில் வாழ்க்கையைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். கல்வி கற்று அதைச் செயல்படுத்தும் போது – அதற்குத் தக நிற்கும்போது – நீங்கள் பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அப்போது அஞ்சாமல் போராட வேண்டும் என்பதையே அஞ்சான் என்பது குறிப்பதாகக் கருதலாம்.

சொலல்வல்லன் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். அந்தப் பண்பையே பாரதியார் “சொல்வது தெளிந்து சொல்” (34) என்றும் “நேர்ப்படப் பேசு” (61) என்றும் ஆத்திசூடியில் ஆணை இடுகிறார்.

”சோர்விலன்” என்பது வெற்றியாளனுக்கு உரிய இன்னொரு பண்பு. சோர்வு ஏன் வருகிறது? ஊக்கம் குன்றுவதால் சோர்வு ஏற்படுகிறது. “ஊக்கமது கைவிடேல்” என்பது பழைய ஆத்திசூடியில் ஔவை சொன்ன அறிவுரை. சோர்வு வாழ்க்கையை அழித்துவிடும் என்று பாரதியார் எச்சரிக்கிறார்: “கெடுப்பது சோர்வு” (19). எனவே, “சிதையா நெஞ்சு கொள்” (27) என்பது அவர் தரும் அறிவுரை. பொருள்களில் மிக உறுதியானது வைரம். நிலத்துக்குள் புதைந்து கிடக்கும் கரிதான் வைரம் ஆகிறது. நிலத்தின் அழுத்தமே கரியை வைரம் ஆக்குகிறது. கரி எளிதில் உடைந்து விடும். அது வைரம் ஆகிவிட்டால் அது எளிதில் உடையாத உறுதியை அடைந்துவிடும். உன் மனம் கரியைப் போல் இருக்கக் கூடாது, வைரம் போல் இருக்க வேண்டும். எனவே, “சுமையினுக்கு இளைத்திடேல்” (29). வாழ்க்கைச் சுமைகள் உன்னை வைரம் ஆக்குகின்றன என்று உணர்ந்து கொள். சிதையாத நெஞ்சு என்பது வைர நெஞ்சு. ஆதலால், “வைரமுடைய நெஞ்சு வேணும் – இது / வாழும் முறைமையடி பாப்பா” என்று பாடுகிறார்.



 சோர்வைப் போக்கி ஊக்கத்தைப் பெருக்கும் பயிற்சிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதை ”ராஜஸம் பயில்” (90) என்று சொல்லி உணர்த்துகிறார். சோர்வு நீங்கி, ஊக்கம் நிரம்பி இருப்பது எற்றுக்கு? “நாளெல்லாம் வினை செய்” (55) என்பதற்கு. வினை என்றால் தொழில், பணி. “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று வாழ்வதற்கு. இதற்குக் ”கர்ம யோகம்” என்று பெயர்.

“நமக்குத் தொழில் கவிதை / நாட்டுக்கு உழைத்தல் / இமைப் பொழுதும் சோராதிருத்தல்” என்பது பாரதியார் தனக்குத் தானே வரித்துக் கொண்ட வாழ்க்கை நெறி. இமைப் பொழுதும், அதாவது ஒரு நொடி நேரம்கூட சோர்ந்து விடாமல் தன் தொழிலைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிறார். அதற்காகத்தான், “விசையுறு பந்தினைப் போல் – மனம் / விரும்பிய படி செல்லும் உடல் கேட்டேன்” என்று வேண்டினார்.

தொழில் எதற்கு? பணம் சம்பாதிப்பதற்கு, சொத்துக்களைப் பெருக்குவதற்கு என்று நாம் நினைப்போம். பாரதியார் சொல்கிறார்: நாட்டுக்கு உழைப்பதற்கு. அவர் தனக்கு ஈடு இணையற்ற கவித்திறன் வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கெஞ்சும் போதெல்லாம் உலக நோக்கு அங்கே இருப்பதைப் பார்க்கிறோம்.

வல்லமை வேண்டும் என்று கேட்கும்போதும் அது எதற்கு வேண்டும் என்னும் தெளிவான கோரிக்கை: ”வல்லமை தாராயோ? – இந்த / மாநிலம் பயனுற வாழ்வதற்கே.”

பாட்டுத் திறன் வேண்டும் என்று கேட்கும்போதும் அது எதற்கு என்னும் தெளிவான நோக்கம்: “என்றன் பாட்டுத் திறத்தாலே / இவ்வையத்தைப் பாலித்திட வேணும்.”

சோர்வு இல்லாமல் நாளெல்லாம் வினை ஆற்றினால், செய்யும் தொழிலே தெய்வத்திடம் சேர்க்கும் கர்ம யோகமாக, ஒரு தவமாக மாறிவிடும். இந்த அர்த்தத்தில் ஆத்திசூடியில் இன்னொரு அடி: “தவத்தினை நிதம் புரி” (53).

தவம் என்பதற்கு வேறொரு இடத்தில் பாரதியார் ஒரு வரையறை தருகிறார்: “தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம் / வையத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை.”

அச்சம் அழித்து, பயம் எனும் பேயை அடித்து, ஜெய பேரிகை கொட்டிய பாரதியார், “அன்பென்று கொட்டு முரசே – மக்கள் / அத்தனைப் பேரும் நிகராம்!” என்றும் பாடுகிறார். “என் குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய / மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள் / அறிவை விரிவு செய், அகண்டமாக்கு / விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை / அணைந்து கொள் உனைச் சங்கமம் ஆக்கு / மானிடச் சமுத்திரம் நானென்று கூவு” என்பது அவரது சீடர் பாரதிதாசன் தரும் சிந்தனை. இந்த உலகப் பார்வை, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மரபின் விளைச்சல் என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.



பன்னீராயிரம் மாணவர்கள் பயிலும் இந்தக் கல்லூரியில் இப்போது நாலாயிரத்து ஐந்நூறு மாணவிகளும் பயில்கிறார்கள். “தையலை உயர்வு செய்” (50) என்கிறது பாரதியின் ஆத்திசூடி. பெண்களுக்கான கல்வி என்பது அதில் ஒரு வழிமுறை. அது எதற்காக? பாரதியார் சொல்கிறார்: “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் / அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்.”

உயர்ந்த சிந்தனைகளை நான் பசுமரத்து ஆணி போல் உங்கள் மனங்களில் பதிக்க வந்திருக்கிறேன் என்று என்னை அறிமுகப் படுத்திய மாணவர் சொன்னார். பாரதியாரின் ஆத்திசூடி தரும் சிந்தனைகளை உங்கள் உள்ளங்களில் பதித்துக் கொள்ளுங்கள். அது போல் நீங்களும் சிந்திக்கப் பழகுங்கள். கீழான எண்ணங்களுக்கு ஒருபோதும் இடம் கொடாதீர்.

”உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்று திருவள்ளுவர் சொல்கிறார். அதை “எண்ணுவது உயர்வு” (7) என்று பாரதியார் வழிமொழிகிறார். அதாவது, உயர்வான சிந்தனைகள் வேண்டும். அது எப்படி இருக்கும்? “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சிந்திக்கும். தான் பசித்துக் கிடக்கும் வேளையிலும், “வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்” என்று சிந்திக்கும். அங்கேயும், “பயிற்றிப் பல கல்வி தந்து / இப்பாரினை உயர்த்திடல் வேண்டும்” என்னும் உலகளாவிய பார்வை. அதே பார்வை ரௌத்திரம் கொள்ளும்போது, “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று முழங்குகிறது.

பாரதியாரின் புதிய ஆத்திசூடி 110 அடிகளைக் கொண்டது. அதில் 109-ஆவது அடி, “வையத் தலைமை கொள்” என்பது. இறுதியாக, 110-ஆவது அடியாக அவர் சொல்கிறார்: “வௌவுதல் நீக்கு.” உங்களுக்குத் தெரியும், பதவி ஆட்சி அதிகாரம் என்றெல்லாம் அடைந்துவிட்டால் அடுத்த நொடியில் இருந்தே வௌவுதல் அதாவது சுரண்டல் ஆரம்பம் ஆகிவிடுகிறது. எனவே, ”வையத் தலைமை கொள்” என்று வாழ்த்துவதுடன் ”வௌவுதல் நீக்கு” என்றும் பாரதியார் எச்சரிக்கிறார். ஏனெனில் பதவியில் அமர்ந்தோர் தவறுகள் செய்தால் “அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.”

வையம் வளமுடன் வாழ வேண்டும் என்று விழைகின்ற இந்த மனமும், உலகப் பார்வை கொண்ட சிந்தனையும்தான் உண்மையான வையத் தலைமை. அது உங்களுக்கு வாய்க்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

Thursday, September 22, 2022

காலம் இனிது

 


கடந்த – நிகழ் – எதிர் என்னும் காலப் பிரிவு வெறுமனே பிடிவாதமாகத் தொடரும் ஒரு மாயை மட்டுமே.” என்றார் நவீன அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

முக்காலம் என்பது எக்காலத்திலும் இருந்ததில்லை என்று ஞானியரும் சொல்கின்றனர்.

முக்காலம் என்பது நம் மனம் கற்பனை செய்து அனுபவித்து வரும் அமைப்பு என்று அவர்கள் நமக்கு உணர்த்துகின்றனர்.

”கோலம் மிகுந்தொளி கூட்டி, மயக்கமும் காட்டி, எழும் / காலம் எனும் பெரும் கற்பனைக்கே மயலாகி…” என்று பாடுகிறார் திருலோக சீதாராம். காலத்தின் கோலம் யாரும் எளிதில் விட்டு விடுதலை ஆகி நிற்க முடியாத பெரும் கவர்ச்சி கொண்டது. ஒளி மயமானது, மயக்குவது.

            இந்தக் காலமே இடத்தில் பற்பல காட்சிகளைக் காட்டுகிறது. காலம் ஒருமையாகவும், இடம் பன்மையாகவும் இருக்கிறது என்று கூறுகிறார் பாரதியார்: “காலம் என்றே ஒரு நினைவும் / காட்சி என்றே பல நினைவும் / கோலமும் பொய்களோ? அங்கு / குணங்களும் பொய்களோ?” என்பது அவரின் விசாரணை.



கடந்த – நிகழ் – எதிர் என்று கணங்களின் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் இந்தக் காலத்துக்கு ஒரு முடிவு உண்டு, சாவு உண்டு என்பது ஞானிகளின் தரிசனம்.

அதன் முடிவை “கியாமத்” என்கிறது இஸ்லாம். ’கியாம்’ என்றால் நிற்றல் என்று பொருள். காலத்தின் தொடரோட்டம் நின்றுவிடும் நிலையை “கியாமத்” என்னும் சொல் குறிக்கிறது. அதற்குப் பிறகு நொடி இல்லை, நிமிடம் இல்லை, மணி இல்லை, நாள் இல்லை, வாரம் இல்லை, திங்கள் இல்லை, பருவம் இல்லை, ஆண்டு இல்லை, யுகம் இல்லை, ஊழி இல்லை. காலம் என்று நாம் இன்று அனுபவித்துக் காணும் ஒன்று இல்லவே இல்லை.

மஞ்சு தவழ் மலைகள் எல்லாம் பஞ்சுப் பஞ்செனப் பறந்து சிதறும் பேரூழி பற்றிக் குர்ஆன் வருணிக்கிறது. “அந்நாளில் மனிதர்கள் சிதறிக் கிடக்கும் ஈசல்கள் போலாவர்; மேலும், மலைகள் யாவும் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்றாகும்” (குர்ஆன்: 101:3-4)

காலத்தை இல்லாமல் ஆக்குவது எது? இறை சக்தி என்கிறார் பாரதியார்.

”சக்திக் கூத்தில் ஒளி ஒரு தாளம்” என்று சொல்லிக் காலம் அளந்த அந்த மகாகவி, ஊழிக் கூத்திடும் சக்தியின் கோலத்தைப் பார்க்கும்போது காலம் செத்துவிடும் என்று “கியாமத்” பற்றிப் பாடுகிறார்:

“எத்திக்கினிலும் நின்விழி அனல் போய் எட்டித்

 தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்”

அதாவது அண்ட சராசரங்கள் யாவும் வெடித்துச் சிதறி அழியும்போது காலமும் அழிந்துவிடும். இடம் அழியின் காலமும் அழியும்.



இறைமையின் ரௌத்திரம் ஓர் அபூர்வ அழகு என்பது ”ரௌத்திரம் பழகு” என்று சொன்ன அந்த மகாகவிக்குத் தெரிகிறது,. உருவகமாக அதனைப் பெண்ணாக்கி, காளி என்று பெயர் கொடுத்து சாக்த மரபில் நின்று அவன் பாடுகிறான். அந்த அபூர்வ அழகு முகக் கண்ணுக்கும் அகக் கண்ணுக்கும் உயிருக்கும் அமர நிலை தரும் அமிர்த விருந்தாகிறது: “மின்னுகின்ற பேரொளி காண், காலம் கொன்ற விருந்து காண், கடவுளுக்கோர் வெற்றி காணே.”

இறைமையின் ஒரு ’பார்வை’, ஒற்றை ஒளிச்சுடர், பாய்ந்தால் போதும், மலைகள் பொடிப் பொடியாகும். இறைத்தூதர் மூசா (அலை) அவர்களின் நிகழ்ச்சி ஒன்று இதனைக் காட்டுகிறது:

”நாம் குறித்த இடத்திற்கு மூசா வந்தபோது

 அவரின் ரட்சகன் அவருடன் பேசினான்;

 ‘என் ரட்சகா! யானுனைக் காண வேண்டும்

 நின்னை எனக்குக் காட்டியருள்’ என்றார்;

 இறைவன் அவரிடம் இயம்பினான்:

 நீ எனைக் காணாய் ஒருபோதும்;

 எனினும் நீ அந்த மலையைப் பார்

 அது தன் இடத்தில் நிலைத்திருந்தால்

 அப்போது நீ எனைக் காண்பாய்.’

 அவரின் ரட்சகன் அந்த வெற்பிடம்

 ஒளிச் சுடர் கொண்டு வெளிப்பட்டபோது

 பொடித்துப் பூழ்தி ஆனதுவே!

 மூர்ச்சித்து விழுந்தார் மூசா நபியும்!

 தெளிந்து எழுந்ததும் மொழிந்தார்:

 ‘நீ மிகத் தூயன்! உன்னிடம் திரும்பினேன்!

 நம்பிக்கையாளருள் முதல்வன் ஆகிறேன்!’”

                                                (குர்ஆன்: 7:143)

இறைவனின் ஒளிச்சுடர் வெளிப்பட்ட போது வெற்பு பொடிப் பொடி ஆனது. காதல் மிகைக்கும் போது முகத்தின் அழகே திரையை எரித்துவிடுகிறது! அது பூர்வீக அழகு, தெய்வீக அழகு. அத்தகைய ஒரு காட்சி, மூசா நபி வேண்டியது போன்ற தரிசனம், பார்வையைக் கூசச் செய்து மயக்கமுற்று விழச் செய்தாலும் இதயத்திற்கு அது பேரினப் பரிசாகிறது. மகாகவி அல்லாமா இக்பால் சொல்கிறார்:

“உள்ளமையின் திரை சற்றே கிழிந்துள்ளது

 பூர்வீக அழகு வெளிப்பட்டுள்ளது சற்றே!

 இதயத்திற்கோ இது ஓர் ஆயிரம் லாபம்;

 பார்வைக்கோ ஒரே ஒரு நட்டம் மட்டும்!”

            (ஹுஸ்னே அஜல் கி ஹே நமூத்; ச்சாக் ஹே பர்தாயே உஜூத்;

                தில் கே லியே ஹஜார் ஸூத்; ஏக் நிகாஹ் கா ஸியான்.

-        பாலே ஜிப்ரீல் 132: தவ்க்கோ ஷவ்க்.)

”உள்ளமையின் திரை சற்றே கிழிந்துள்ளது..” என்கிறார் இக்பால். மொத்தத் திரையும் கிழிந்து போவதே ”கியாமத்”. காலமும் இடமுமே உள்ளமையின் திரைகள். அவை கிழியும். அதாவது, இடம் சாகும்; காலம் சாகும்.



தமிழில், ‘திரை’ என்றால் அலை என்று ஓர் அர்த்தம் உண்டு. திரை-கடல் என்பது அலை-கடல். அலைகள் கடலால் ஆனவை. இதுவும் இங்கே பொருந்தும். இடம் காலம் அல்லது ’இட-காலம்’ என்னும் திரை இறைவன் தன் உள்ளமையில் வெளிப்படுத்திக் காட்டுவது. இறைவனால் ஆனவை. எனவேதான், “நானே காலம்” (அன தஹ்ரு) என்கிறான் இறைவன்.

அதாவது, கடந்த-நிகழ்-எதிர் என்னும் முக்காலம் காலாதீதத்தால் ஆனது.

அலையில் கடலே அன்றி வேறில்லை. அலையைக் காண்பவன் அதில் கடலைக் காணலாகும். அதுபோல், தொடர் காலத்தில் காலாதீதத்தை அன்றி வேறில்லை. தொடர் காலத்தைக் காண்போன் அதில் காலாதீதத்தைக் காணலாகும்.

”துடிப்பற்று நிற்கிறது இக்கணம்

 நடிக்கிறது அதில் காலாதீதம்”

என்று எழுதினார் பிரமிள்.

”மண் துகள் ஒன்றில் மாநிலம் காணல்

 விண்ணை ஒரு சிறு பூவில் பார்த்தல்

 ஒரு கைப்பிடிக்குள் எல்லை இன்மை

 சிறு கணம் அதனுள் முடிவிலி காலம்”

என்று “கள்ளமின்மையின் அறிகுறிகள்” (Auguries of Innocence) என்னும் கவிதையில் எழுதுகிறார் வில்லியம் பிளேக்.



            தொடர் நிலைக் காலம் தேய்ந்து மறைந்து காலாதீதம் தரிசனமாகும் எல்லை வரை எட்ட முயல்கிறது நவீன இயற்பியல். விண்மீன் ஒன்று அழிந்து கருந்துளை ஆகும் நிகழ்வை ஆய்கையில் காலம் பற்றிய தரிசனம் ஒன்றை அது அடைந்தது. அதாவது, விண்மீன் குலைந்து மடியுந்தோறும் காலத்தின் கதி, கால ஓட்டத்தின் வேகம் குறைந்து கொண்டே வருகிறது. நிகழ்வு முடியும் எல்லையில் (event horizon) காலம் சட்டென்று நின்றுவிடுகிறது. எனவே, “விண்மீன் முழுமையாகக் குலைந்து வீழ முடிவிலிக் காலம் எடுக்கிறது” என்ற்கிறார் ஃபிரிட்ஜாஃப் காப்ரா (“The Tao of Physics,” Space-Time, p.196.) ஆனால், நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவில் இந்நிகழ்வு முடிந்தும் விடுகிறது. எனில், இந்நிகழ்வு அளவுள்ள காலத்தில் நடந்ததா? அல்லது அளவற்ற காலத்தில் நடந்ததா? என்று கேட்டால், சார்பியல் கோட்பாட்டில் இத்தகு கேள்விகளுக்கு அர்த்தமில்லை என்று அவர் சொல்கிறார். அதாவது, அங்கே நிகழ் காலமும் காலாதீதமும் ஒன்றே. அதாவது, நிகழ்வெல்லையில் (event horizon) ‘துடிப்பற்று நிற்கிறதுஇக்கணம், நடிக்கிறது அதில் காலாதீதம்.’ ஏனெனில், உள்ளமையின் நோக்கில் தொடர் காலமும் காலாதீதமும் ஒன்றே.

            ஆன்மிக ரீதியாக நோக்குங்கால், மூசா நபி அவர்கள் இறைவனின் தரிசனம் வேண்டியபோது ஒரு - “event horizon” – நிகழ்வெல்லை நிலையில்தான் இருந்தார்கள் என்று கருதலாம். அதாவது சூஃபிகள் சொல்லும் ஃபனா-பகா என்னும் நிலையில் இருந்திருக்கிறார்கள். அதற்கான குறிப்பு மேற்சொன்ன (7:143)-ஆம் திருவசனத்தில் இருக்கிறது. அவரின் ரட்சகன் அவருடன் பேசினான்;  ‘என் ரட்சகா! யானுனைக் காண வேண்டும்; நின்னை எனக்குக் காட்டியருள்’ என்றார்’ என்னும் பகுதியைக் கவனிக்கவும். இறைவன் அவருடன் பேசினான் என்று சொல்லிவிட்டு உடனே அவர் இறைவனிடம் பேசியதே சொல்லப்படுகிறது. (”வ கல்லமஹு றப்பஹு கால றப்பி அரினீ அன்ழுர் இலைக்க” என்பது அறபி மூலப் பகுதி.) இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் தன்னிச்சையாக, சுயமாகப் பேசவில்லை. அவர்கள் மொழிந்த அந்தக் கோரிக்கையை இறைவனே அவர்களைப் பேச வைத்தான் என்பதை இது காட்டுகிறது. அதாவது, அவர்கள் ஃபனா ஃபில்லாஹ் என்னும் நிலையில் – இறைவனில் தன்னை இழந்த நிலையில் – இருந்தார்கள். ”அவர் தன்னிச்சையாகப் பேசுவதில்லை” (வ மா யன்திகு அனில் ஹவா – 53:3) என்று நபி (ஸல்) அவர்களைப் பற்றிய வருணிப்புடன் ஒப்புநோக்கினால், மூசா (அலை) அவர்கள் ஃபனா ஃபிர் றசூல் என்னும் நிலையில் – மூல ஒளியான நூரே முஹம்மதில் தன் சுயம் மூழ்கிய நிலையில் இருந்தார்கள் என்றும் சொல்லலாம்.

            காலாதீதம் ஒளி என்றால் தொடர் காலம் என்பது வானவில். வானவில்லின் ஒவ்வொரு வண்ணத்திலும் ஒளியே இருக்கிறது. ஒளியே அந்த வண்ணத்தைக் காட்டுகிறது, அந்த வண்ணமாக இருக்கிறது. அதுபோல்,

            காலாதீதம் மௌனம் என்றால் காலம் என்பது ஏழிசை. மௌனமே இசையாகிறது. இசையின் ஒவ்வொரு ஓசைக்குள்ளும் மௌனம் இருக்கிறது.

            காலம்தான் இடவெளியில் காட்சிகளைக் கொண்டு வந்து தருகிறது. நன்று-இனிது என்று பாரதி சிலவற்றைப் பேசுகின்ற பாணியில் சொல்வதெனில், காலாதீதம் நன்று; காலம் இனிது.

Saturday, September 17, 2022

காலமும் தாளமும்

 


            மனித மனம் பறவைகளைப் பெரிதும் இசையுடன் தொடர்பு படுத்திப் பார்க்கிறது. விதிவிலக்குகள் சில உண்டு. கிளி என்றால் பேச்சு. மயில் என்றால் நடனம். ஆனால், புள்ளினங்கள் யாவும் இசையுடன்தான் இயைகின்றன. உலகம் முழுவதும் இதுதான் மரபு.

            பாரதி எழுதிய குயில் பாட்டும் அப்படியே. குயில் ஆன்மாவின் குறியீடு என்பது அப்பாட்டிற்கான வியாக்கியானம். அந்தக் குயிலை வைத்து இசை என்னும் கலையை ஆழமாக அளந்து பேசுகிறார் பாரதி. குயில் தன் காதல் நிலையை உரைக்கும் பாடலில் இசை பற்றியே அதிகம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு பகுதி:

                        தாளம் தாளம் தாளம்;

                        தாளத்திற்கோர் தடை உண்டாயின்

                        கூளம் கூளம் கூளம்

            இந்த வரிகளை முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் இப்படி ஆங்கில ஆக்கம் செய்து அளித்துள்ளார்:

                        Time, Time, Time, Time;

                        If Time at all be not kept

                        Is it not dirt ill-left?

            பாரதியார் ஷெல்லியின் கவிதைகளில் மூழ்கித் திளைத்தவர் என்பதறிவோம். அவர் ஷேக்ஸ்பியரைப் படித்திருக்கிறாரா? தி.ந.ரா அவர்கள் தமது மொழிபெயர்ப்பில் மேற்கண்ட பகுதிக்குப் பின்வரும் அடிக்குறிப்பு வரைகிறார்:

                        “Ha, ha, keep time: how sour sweet music is

                         When time is broke and no proportion kept”

-        King Richard II. 1,1,42

            காலப் பிரமாணம் என்பது இசைக்கு அடிப்படை. ராகம் என்பது காலத்தின் மூச்சு; தாளம் என்பது காலத்தின் இதயத் துடிப்பு. ராகம் என்பது காலப் பறவையின் வானச் சிறகடிப்பு; தாளம் என்பது காலப் புரவியின் நிலமளக்கும் காலடியோட்டம்.



            பழந் தமிழிசை என்னும் கர்நாடக இசையில் துருவ, மட்டிய, ரூபக, ஜம்பை, திரிபுடை, அட, ஏக என்னும் ஏழு தாளங்களும் கால அளவை வைத்தே வகுக்கப்பட்டுள்ளன.

            தாளம் பற்றிப் பேசும்போது பாரதியின் இன்னோர் அற்புத வரியை நினைவுகூராமல் இருக்க முடியாது. சக்தி குறித்த வசனக் கவிதையில் அவர் சொல்கிறார்: “சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம்.”

            பிரபஞ்சமெங்கும் நீக்கமறப் பரவி இயங்குவதும் இயக்குவதுமான சக்தியைப் பற்றிப் பேசுகிறார் பாரதி. பிரபஞ்ச இயக்கத்தை நடனம் என்று உருவகிக்கிறது சைவ மெய்யியல். தாளம் இல்லாமல் நடனம் இல்லை. எதன் தாளம்? சக்தியின் தாளம். (சக்தி – Energy). சக்தி இல்லாத இடமே இல்லை என்பதாலும், அது தாளமிடுகிறது என்பதாலும் ‘சர்வம் தாள மயம்’ ஆகிறது. அந்தத் தாளத்தின் வெளிப்பாடு எது? ஒளி!

            ”சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம்” என்னும் வரியில் உள்ள ’ஒரு’ என்னும் ஒரு சிறு சொல் உறுத்திக் கொண்டே இருந்தது. சக்திக் கூத்தில் ஒளியே தாளம் என்று சொல்லியிருக்கலாமே? அது ஏன் ஒளி ஒரு தாளம் என்று சொன்னார்? இந்தக் கேள்வி வெகு காலம் என் உள்ளத்தைக் குடைந்து கொண்டிருந்தது. ஒரு தாளம் என்பது one beat என்பதைக் குறிக்கிறது என்று கொண்டால், ஒளி ஒரு தாளம் என்பதன் பொருள் என்ன? தாளத்தை beat (அடி / தட்டு / கொட்டு) என்று அளப்பது போல் ஒளிக்கு அளவு உண்டா? உண்டு என்கிறது இயற்பியல் விஞ்ஞானம்.



            ஒரு தாளம் என்பது தாளத்தின் ஓர் அலகு. எனில், ஒளியின் ஓர் அலகு எது? ஐன்ஸ்டீன் அதனை ’குவாண்டா’ (quanta) என்று அழைத்தார். பின்னர் அது ஃபோட்டான் (photon) என்றும் பெயர் பெற்றது. ஒளி அலை வடிவில் பாய்கிறது. எடையிலிகள் ஆன ஃபோட்டான்கள் வெளியில் அதி வேகத்தில் பயணிக்கின்றன என்று முன்பு சொல்லி வந்தனர். உண்மையில் ஃபோட்டான்கள் தாம் இருக்கும் இடத்திலேயே அதிர்ந்து மேலும் கீழுமாய் அசைகின்றனவே அன்றி அவை நகர்வதில்லை என்றும், தொடர்ந்து நிற்கும் ஃபோட்டான்கள் ஒவ்வொன்றும் தாம் இருக்குமிடத்திலேயே மேலும் கீழுமாய் அசைந்து அலை ஒன்று நகர்ந்து செல்வது போன்ற தோற்றத்தைக் காட்டுகின்றன என்றும் குவாண்டம் இயற்பியல் கண்டறிந்தது.

அதாவது , வெளியெங்கும் சக்தியின் சலனம் மட்டுமே நகர்கிறது, துகளன்று. இதுவே சக்திக் கூத்து என்றும் சிவ தாண்டவம் என்றும் சுட்டப்படுகிறது. இது ஒரு கணம்கூட, கன்ணிமை நொடியின் கோடியில் ஒரு பங்கு நேரம் கூட ஓய்வதில்லை. ஆம், சக்தியின் அலைகள் ஓய்வதில்லை.

ஓய்வு நிலையை தூக்கம் என்னும் சொல் குறிக்கும். இறைவனுக்கு சோர்வும் ஓய்வும் கிடையாது. “அவனை சிறுதுயிலோ பெருந்துயிலோ பீடிக்காது” (குர்ஆன் 2:255) ஏனெனில், இறைவன் எல்லையற்ற சக்தி உடையோன். “சக்தி அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” (குர்ஆன் 2:165) ஆதலால், இறையாற்றல் எப்போதும் எல்லா இடங்களிலும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. “ஓவ்வொரு கணமும் அவன் புதிய மாட்சியில் இருக்கிறான்” (குர்ஆன் 55:29)

இறை சக்தியே இயங்குகிறது; அது பருப்பொருள் மீது வெளிப்படுவதால் அப்பொருளே இயங்குவது போல் தெரிகிறது. அணுத் துகள் அசையவில்லை. அதை சக்தி அசைக்கிறது. ”அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது”.

இறை சக்தியே படைக்கிறது, காக்கிறது, அழிக்கிறது. இம்மூன்று காரியங்களும் ஏக காலத்தில் நிகழ்கின்றன. எனவே, பொருள்கள் நிலையாக இருப்பன போல் தோன்றுகிறது.  அணுத்துகள்கள் உடைபடும் போது உடைந்த துகள்கள் சிறியவையாக இல்லாமல் தம் மூலப் பொருளின் அளவையே கொண்டுள்ளன என்றும் சக்தி அவற்றை அப்படி ஆக்கிவிடுகிறது என்றும் நவீன இயற்பியல் கண்டறிந்தத விந்தைச் செய்தியைச் சொல்லும் இயற்பியலாளர் ஃபிரிட்ஜாஃப் காப்ரா, “இதனால், உப அணுத் துகள்கள் ஒரே சமயத்தில் அழிக்க முடிந்தவையாகவும் அழிக்க முடியாதவையாகவும் இருக்கின்றன” என்று சொல்கிறார் (”Tao of Physics” / 4.’The New Physics’, p.89)



நாம் வாழும் பிரபஞ்ச வெளி முப்பரிமாணம் கொண்டது. இத்துடன் காலம் என்பது நான்காம் பரிமாணம் என்று சொன்னார் ஐன்ஸ்டீன். இடமும் காலமும் தனித்தனியாக இல்லை, அவை இரண்டும் பிரிக்க முடியாத ஒன்று என்று சொல்லி, இட-காலம் (‘space-time’) என்னுமொரு கோட்பாட்டை 1908-இல் முன்வைத்தார் இயற்பியலாளர் ஹெர்மன் மின்கோவ்ஸ்கி. “இனிமேல், தனியே இடமும், தனியே காலமும் வெற்று நிழல்களாய்க் கரைந்து போகும். அவ்விரண்டும் சங்கமித்த ஒன்றே தனித்த உண்மையாய் நிற்கும்” என்று அவர் சொன்னார் (”Tao of Physics” / 12.’Space-time’, p.185)

நவீன இயற்பியலின் தொடர் ஆய்வுகள் இடம் மற்றும் காலம் குறித்துப் புதுப் பார்வைகளைத் திறந்தன. பிரபஞ்ச வெளி வளைந்திருக்கிறது (Space is curved) என்றார் ஐன்ஸ்டீன். ’காலம் எல்லா இடங்களிலும் ஒரே கதியில் ஓடவில்லை’ என்றார்கள். மேலும், “பிரபஞ்சத்தின் வெவ்வேறு இடங்களில் இடம் வேறு வேறு கோணங்களில் வளைந்திருக்கிறது, காலம் வேறு வேறு கதிகளில் ஓடுகிறது” என்றும் சொன்னார்கள் (”Tao of Physics” / 12.’Space-time’, p.197)



அதாவது, சக்திக் கூத்தில் பல்வேறு தாள கதிகள் இருக்கின்றன. சப்த தாளங்களும் ஒரே நடனத்தில் ஏக காலத்தில் நிகழ்வது போல்!

சக்தியின் இயக்கமே ஒளி. அது பிரபஞ்சமெங்கும் நிறைதிருக்கிறது. “அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கிறான்” (குர்ஆன் 24:35) எனினும், கட்புலன் ஆகும் இந்த அளக்க முடிந்த ஒளி அல்ல அது. அவன் இந்த ஒளிக்கு ஒளியாக இருக்கிறான்.

ஒளியின் கதியே காலம். ”நானே காலமாக இருக்கிறேன்” என்பது இறைவாக்கு (புகாரி:4549 & முஸ்லிம்: 2246.) எனினும், அளக்க முடிந்த இந்தக் காலம் அல்ல அது. அவன் இந்தக் காலத்திற்குக் காலமாக இருக்கிறான்.

சக்தியே ஒளியாகவும் காலமாகவும் இருக்கிறது எனில், வெளியாக (இடமாக) இருப்பது எது? சக்தியேதான்!

நவீன இயற்பியல் இன்னொன்றையும் கண்டது: “சக்தியே வெளியாக இருக்கிறது. பருப்பொருட்கள் யாவும் வெளியின் குறிப்பிடம் சார் உறைவே; சக்தியின் தோன்றி மறையும் திரட்சியே” (Particles are merely local condensations of the field; concentrations of energy which come and go.”) (”Tao of Physics” / 12.’Space-time’, p.197)

எனவே, ”நானே காலமாக இருக்கிறேன்” என்னும் வாக்கிலேயே ‘நானே இடமாக இருக்கிறேன்’ என்பதும் பொதிந்திருக்கிறது. பேருண்மை மற்றும் பிரபஞ்சம் ஆகியவற்றின் தளத்தில் காலத்தைச் சொன்னாலே இடத்தையும் சொன்னதாகிறது.

இறைமையே இடத்தையும் காலத்தையும் வெளிப்படுத்துகிறது. அது, இடம் கருதின் பொருளாய்க் காட்டும், காலம் கருதின் வினையாய்க் காட்டும்.

Monday, September 12, 2022

தீரா உள்ளூற்று

 


         மிகவும் அரிதாகவே நல்லதொரு இசைப் பாடல் கிடைக்கிறது. வரிகள் நன்றாக இருந்தால் இசை தேராது, இசை சிறப்பு என்றால் வரிகள் தேயும், இசையும் வரிகளும் தரம் காட்டினால் காட்சி சகிக்காது. மூன்றும் சிறப்பாகவும் பொருத்தமாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைந்து திருப்தி தருவது அரிதினும் அரிது. அவ்வகையில், 2018-ஆம் ஆண்டு வெளியான 96 என்னும் திரைப்படத்தில் உள்ள ;லைஃப் ஆஃப் ராம்’ என்னும் இசைப் பாடலே அதன் பின் இந்நாள் வரை நான் ’அண்மையில் கேட்ட’ அருமையான பாடலாகத் தொடர்கிறது.

            இது ஆன்மிகச் சாயல்கள் கொண்ட ஒரு பாடல். ஆன்மிகத்தில் பரிச்சயம் உள்ள அனைவருக்கும் இதை அடையாளம் காண்பதில் சிரமம் ஏதுமில்லை. இது வாழ்க்கையைச் சொல்லும் பாடல் என்றால் அனைவருக்கும் புரியும். வாழ்வைப் பிரிந்து ஆன்மிகம் ஏது?

            எத்தனை உள்ளங்கள் இந்தப் பாடலை எப்படியெல்லாம் கொண்டாடின என்பதை இப்பாடலுக்கான பின்னூட்டங்களை வாசித்தால் அறியலாம். “Introvert anthem” என்று ஒருவர் போற்றியிருந்தார். ஹாரிஸ் ஹரி என்றொருவர் வியந்து எழுதியதை இங்கே சுட்ட விரும்புகிறேன்: “ஒரு பாடல், தனிமையில் இருக்கும் ஒருவனை சட்டென எழுப்பி, ‘இது உன் வாழ்க்கை இல்லை, எழுந்து செல் உன் வாழ்க்கையை நோக்கி’ என அழைத்துச் செல்கிறது என்றால், எவ்வளவு பெரிய படைப்பு அந்தப் பாடல் என்பது, இதனைக் காணும் என்னைப் போன்ற தனிமை விரும்பிகளுக்குப் புரியும்.”



            இந்தப் பாடலை எழுதியவர் யார் என்று விசாரித்தேன். அவன் கவியுலகின் பேரரசோ சிற்றரசோ அல்லன். ஆனால், கவிச்சித்தன் என்று அழைக்கலாம் என்னும்படி இப்பாடலை எழுதியிருக்கிறார் கார்த்திக் நேத்தா.



இசை அமைத்தவர் கோவிந்த் வசந்தா என்று அறிந்தேன். ஆச்சரியம். இவரை நான் எட்டாண்டுகளுக்கு முன்பே அறிவேன். கோவிந்த் மேனன் என்று அப்போது பெயர். கப்பா டி.வி என்னும் யூடியூப் சேனலில், தாய்க்குடம் பிரிட்ஜ் என்னும் குழுவில் இவரது வைலின் வாசிப்பில் வெளியான கோர்வைகளைக் கேட்டு ரசித்து நண்பர்களுக்கும் பகிர்ந்திருக்கிறேன். அப்போதே இசை இவருக்கொரு தியானம் என்பதை உணர்ந்தேன். இப்போது இப்பாடலில் அவரின் இசைக் கற்பனையில் அந்த தியான ருசி வெளிப்பட்டுள்ளது.

             இப்பாடல் தமிழிலும் தெலுங்கிலும் தனித்தனியாக உருவாக்கப் பட்டுள்ளது. இரண்டுக்கும் இருவேறு மெட்டுக்கள், இருவேறு காட்சிப்பாடுகள், இருவேறு பாடல் வரிகள். (சுந்தரத் தெலுங்கினில் இசைக்கும் பாடல் மெட்டிற்கு எழுதப்பட்ட தமிழ் பிரதி ஒன்றும் இருக்கிறது. அதையும் சேர்த்தே பேச வேண்டும்.)

            காட்சியைப் பற்றி இங்கே விரிவாகப் பேசப் போவதில்லை. இயற்கையின் அழகுகளை வெவ்வேறு இடங்களில் – ஐந்திணை நிலங்களில் – அவன் பயணித்துக் காணும் காட்சிகளில் எல்லாம் – “காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்னும் பாரதியின் வரிகளும், மக்கள் திரளில் தன்னைக் கலந்தபோதும் தனிமையாக அவன் செல்வதில் – “மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள் … … … மானுட சமுத்திரம் நான் என்று கூவு” என்னும் பாரதிதாசன் வரிகளும் நினைவுக்கு வருகின்றன. (நான் ஒருமுறை இயற்கை அழகு கொழிக்கும் இடம் ஒன்றில் அவ்வாறு எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் “LIFE OF RAMeez” என்று எழுதி நண்பர்களுக்கு அனுப்பினேன். சித்த சேட்டை!)

            இனி, இப்பாடலின் வரிகளில், ஞானிகள் மற்றும் பெருங்கவிகள் சொன்ன கருத்துக்களுடன் ஒப்பிடக் கூடிய இடங்களைத் தொட்டுக் காட்ட விழைகிறேன்.

            ”வாழா என் வாழ்வை வாழவே

             தாழாமல் மேலே போகிறேன்

             தீரா உள்ளூற்றைத் தீண்டவே

             இன்றே இங்கே மீள்கிறேன்

             இங்கே இன்றே ஆழ்கிறேன்”

            ”வாழாதொரு வாழ்வைத் தீண்டித்

            தெளிவில் பூப்பேன்”

 

            உன்னுள் ஆழ்ந்து செல்வதே இங்கு விட்டு விடுதலை ஆகி மேலே செல்வதாகும். “தீரா உள்ளூற்றைத் தீண்டவே…” என்னும் வரியில் மவ்லானா ரூமியின் சாயல். அடுத்த வரியே சூஃபித்துவத்தில் இருந்து ஜென்னுக்குத் தாவுகிறது. நிகழ் கணத்தில் விழிப்புடன் இருத்தல் என்பது ஜென்னில் வலியுறுத்தப்படும் அடிப்படைகளுள் ஒன்று. உண்மையில் மனித மனம் நிகழ்காலத்தைத் தவற விட்டுவிட்டு நேற்றிலும் நாளையிலும் அலைகிறது. எனவே நிகழ்காலத்துக்கு அதைக் கொண்டு வந்து நிறுத்துவது என்பது மீள்வதுதான். பின்னர், ஆழ்வது தியானம்.

            இப்பாடல் நெடுகிலும் மீண்டும் மீண்டும் ஆழ்தல், ஆழம் ஆகிய சொற்கள் இடம் பெறுகின்றன. தன்னுள் ஆழும் தியான நிலையை இப்பாடல் பேசுகிறது. அங்கே வெளியே இருக்கும் வெளிச்சமோ இருளோ இல்லை; இருளும் ஒளியும் ஒன்றான ஒரு நிலை இருக்கிறது; அங்கே, வெளியே இருக்கும் கால நேரம் இல்லை, அதற்கே உரிய ஒரு காலம் அல்லது காலமின்மை இருக்கிறது. இதைச் சொல்லும் வரிகள்:

            ”ஆழ் என்பது மெய்ஞான போதம்

             போல் என்பது பகட்டு வாதமே

             நாள் என்பதும் பொய்யான காலம்

             இப்போதில் எல்லாமும்

             கேள் என்குதே தெளிந்த ஞானமே

             கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே”

            இசையமைப்பில் பாடும்போது இந்த வரிகள் வேறொரு கட்டமைப்புக் கொண்டுள்ளன. முதல் மூன்று வரிகளின் பின்னும் “இப்போதில் எல்லாமும்” என்பது மீள்வரியாக (refrain) வருகிறது. அதுவும், “இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும்” என்று உள்-மீள் சொல் (inter–refrain) கொண்டிருக்கிறது. இதை, ((இப்போதில் X 3) எல்லாமும்) X 3) என்று கணிதச் சூத்திரம் போல் எழுதலாம். இந்தக் கட்டமைப்பு இசையின் தாளக் கட்டுக்கு மெருகூட்டுகிறது.

            ”யாரோ போல் நான் என்னைப் பார்க்கிறேன்

             ஏதும் இல்லாமலே இயல்பாய்

             சுடர் போல் தெளிவாய்”

            ”காணாதொரு வெளிச்சத்தில்

             எனை நானே, அட! முழுதாய்ப் பார்ப்பேன்”

            சாட்சி பாவம்! (saakshi bhaavam). தன்னை விலகி நின்று கவனித்தல். கோட்பாடுகளின் வழியாக அல்ல. சுயத்தின் சுடர் என்னும் அகப் பார்வை கொண்டு பார்த்தல்.

            ”நானே இல்லாத ஆழத்தில்

             நான் வாழ்கிறேன்;

             கண்ணாடியாய்ப் பிறந்தே

             காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்”

            இறைமையின் சுயம் மட்டுமே உண்மையில் இருக்கின்றது. இருப்பது ஒரே ஒரு ’நான்’ மட்டுமே. அது பலகோடி ’நான்’களாகக் காட்சி தருகின்றது. படைப்பைக் கண்ணாடி ஆக்கிப் பிரதிபலிக்கின்றது. இன்னனம் ஞானியர் உரைப்பர். ”வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்…” என்று தொடங்கும் பாரதியின் பாடலை இங்கே நினைவு கூர்கிறேன்.

            ”இரு காலின் இடையிலே

             உரசும் பூனையாய்

             வாழ்க்கை போதும் அடடா”

            வாழ்க்கை இயல்பானது, எளிமையானது, சிக்கலற்றது என்பதைச் சொல்லும் இவ்வரிகளில் ஒரு ஜென் ஹைகூ இருக்கிறது. இதை ஒரு ஜப்பானிய ஜென் கவி எழுதியிருந்தால் “கால்களின் இடையில் / உரசும் பூனை / வாழ்க்கை” என்று எழுதியிருப்பான்.

            ”நானே நானாய் இருப்பேன்

             நாளில் பூராய் வசிப்பேன்

             போலே வாழ்ந்தே

 சலிக்கும் வாழ்வை

 மறக்கிறேன்

 வாகாய் வாகாய் வாழ்கிறேன்

 பாகாய் பாகாய் ஆகிறேன்”

பாவனைகள் பண்ணாமல், நடிக்காமல் வாழும் வாழ்க்கை எத்தனை பேருக்கு வாய்க்கிறது? லௌகீக வாழ்வின் கெட்டிக்காரத்தனம் என்னும் பேரில் யார் யார் போன்றோ பாவித்து போலி செய்து வாழும் முறையைப் பலரும் ஏற்றிருக்கின்றனர். Personality -  ஆளுமை – என்பதன் மூலச் சொல்லான persona என்பதற்கு முகமூடி என்று பொருள். அரிதாரம் இன்றி வாழ்க்கைக்கு உண்மை ஆக வாழ்வோர் மிகச் சிலரே. வாழ்க்கையின் நீர்மைக்குத் தக வாகாய் வாழ உள்ளம் கல்லாய் இல்லாமல் பாகாய் உருகியிருக்க வேண்டும்.

“நான் என்பது யாரோ பெருந்திரளினிலே? – ஏடே!

 நான் என்பதை வீசி எழுந்தேனே மனமே!

 தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே – கூவி

 வாவென்றொரு வாழ்க்கை

 சிறு குரலாய் அருளாய்ப் பேச”

இழக்க வேண்டிய நான் என்பதொன்று உண்டு. வெளியே இருந்து கொடுக்கப்பட்டிருக்கும் போலியான அடையாளங்களைத் தான் என்று காணும் நான் அது. அதைத் துறக்கும் கணத்தில் ஓர் அக எழுச்சி நிகழ்கிறது.

“(அ)தோ காற்றோடு வல்லூறு தான் போகுதே

 பாதை இல்லாமலே அழகாய்

 நிகழே அதுவாய்”

பறத்தல் மட்டுமல்ல, பறவையே ஒரு நிகழ்வுதான். அதன் உள்ளுணர்வே அதன் பாதை. ”வரவும் போகவும் / இந்த நீர்ப்பறவைகள் / சுவடுகள் வைப்பதில்லை / பாதையிற் செல்வதில்லை” என்கிறார் ஜென் ஞானி டோஜன்.

”திமிலேறி காளை மேல் தூங்கும் காகமாய்

 பூமி மீது இருப்பேன்

 புவி போகும் போக்கில்

 கை கோர்த்து நானும் நடப்பேன்”

சித்தன் போக்கு சிவன் போக்கு அல்லவா? அதாவது, இறை நாட்டமே ஞானியின் நாட்டம். இறைவன் நிகழ்த்துவதை எல்லாம் பொருந்திக் கொளல், இயைந்து செலல். ”பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர் முறை வழிப் படூஉம்” என்கிறார் கணியன் பூங்குன்றன். அதாவது, ஓடி வரும் பெரிய நதியின் விசையின் படி தெப்பம் போகும். ”நின் படகை வெறுமை ஆக்கி உலகெனும் நதி கட” என்கிறார் சுவாங்சூ.

”ஆறறிவென்றே அலட்டாமல்

 அலட்டாமல் எளிதாய் நானும்

 ஓர் உயிர் என்றே இருப்பேனே.

 குழம்பாமல்

 யார் உடைத்தாலும்

 சிரிக்கின்ற பொம்மை போலே

 நான் என் இயல்பில் இருப்பேன்”

உன் படகை வெறுமை ஆக்குவதற்கான வழி இது. நீ மனிதன் என்னும் உணர்வு, ஏனைய உயிர்களை விட மேலானவன் என்னும் எண்ணம் கர்வமாக, ஆணவமாக மாறிவிடக் கூடும். அறிவை வைத்து உன் மேன்மையை அளக்காதே. உலகில் வாழும் பலகோடி உயிர்களில் நீயும் ஓர் உயிர் என்று மட்டும் உணர்ந்து இரு. அப்போது ஆணவம் இல்லாமல் எளிமையாய் இருப்பாய். அப்போது, வெளியிலிருந்து உன் மீது தாக்கும் எதுவும் உன் இயல்பை பாதிக்காத நிலையில், உன் இயல்பில் இருப்பாய்.

“ஓடும் நதியின் மேலே

 உட்காரும் தட்டான் போலே

 லேசாக அமர்ந்தே பறப்பேனே”

அத்தனை லாலவகம். எதையும் பற்ற வேண்டும் என்றோ, கைப்பற்ற வேண்டும் என்றோ நோக்கம் இல்லை. “ஒரு புல்லின் இதழையும் அசைக்காமல் காட்டினுள் நுழைகிறான்; ஒரு சிறு அலை கூட எழுப்பாமல் நீருக்குள் நுழைகிறான்” என்று சொல்கிறது பாடியோன் பெயர் அறியப்படாத சீனத்துக் கவிதை ஒன்று.

”பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்

 இப்போது கண்ணாக;

 பேருண்மையில் கலந்து போகிறேன்

 இப்போது ஒன்றாக;

 பேரன்பிலே தள்ளாடி பூத்தேன்

 இப்போது நன்றாக;

 பேராற்றலில் கரைந்து போகிறேன்

 பூத பேத வாத மோகம் மறைகிறதே”

உண்மையின் ஓர் ஒளிச்சுடர் காண்பதற்கும் எவ்வளவு தொலைவு போக வேண்டியிருக்கிறது! பேரெல்லையில் உட்கார்ந்து பார்ப்பது என்றால் என்ன? பேரெல்லை எது? இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையா? சித்தம் அந்த எல்லை வரை போய்த்தானே சத்தியத்தை தரிசிக்க முடியும்? பேரெல்லை, பேருண்மை, பேரன்பு, பேராற்றல் என்று இவ்வரிகள் ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தையும் தன்னுள் கொண்ட ஏக நிலையைப் பேசுகிறது. அந்நிலை உணர்ந்தார்க்கு அதன் பின் ஐம்பூதங்களும் அவை கலந்த மயக்கத்தால் ஆகியிருக்கும் பற்பல பொருட்களும் வேறு வேறு என்று பார்க்கும் பேதப் பார்வை மறைந்து விடுகிறது. “ஒன்றாகக் காண்பதுவே காட்சி” என்கிறார் ஔவையார். “எல்லா பூதங்களிலும் சமமாக இருப்பவன் பரமேஸ்வரன்; அழிபவற்றில் அழியாததை எவன் காண்பானோ அவனே காட்சியுடையான்” (13:27) என்கிறது பகவத் கீதை.

பாடலின் இரண்டாம் சரணத்தை இங்கே முழுதாய்த் தருகிறேன். அதன் விளக்கங்களுக்கு மேற்சொன்ன செய்திகளே போதும் என்று கருதுகிறேன்:

“நான் எனக்குள்ளே

 அசைந்தேனே ஊஞ்சல் போலே

 யார் எனை அசைத்தே ரசித்தாரோ?

 பேரலைமேலே

 விளையாடும் காகம் போலே

 யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்?

 சீறும் புலியைப் பார்த்தே

 சிரிக்கின்ற சிசுவைப் போலே

 கோபங்கள் மறந்தே சிரிப்பேனே.

 பதறாமல்

 பூவிழும் குளத்தின் மேலே

 உருவாகும் வளையல்போலே

 நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே

 கதறாமல்

 வாகாய் வாகாய் வாழ்கிறேன்

 பாகாய் பாகாய் ஆகிறேன்

 தோதாய் தோதாய்ப் போகிறேன்

 தூதாய் தூதாய் ஆகிறேன்

 போதாய் போதாய்ப் பூக்கிறேன்

 காதாய் காதாய்க் கேட்கிறேன்

 தாலாட்டும் காலம்

 தலையாட்டும் ஞானம்

 தாய் போல் பாடுதே

 ஆரோ ஆரோ ராரிரோ…”

இந்த வரிகளின் முதல் வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள். எல்லாம் நெடில் ஓசை கொண்டு ஆரம்பிக்கும் சொற்கள். நான், யார், பேரலை, சீறும், கோபங்கள், பூவிழும் – இப்படி எல்லாமே நெடில் ஓசை கொண்டு தொடங்குவன. இது இப்பாடலின் மெட்டுக்கு மிகவும் அவசியமான ஒன்று. அப்படியும் வரிகளின் கவித்துவமும் கருத்தும் அற்புதமாக வந்திருக்கின்றன. சிற்சில இடங்களில் உளறல் போன்றும் தொனிக்கின்றன. உன்னதக் கவிதை உளறல் நிகர்க்கும்; ஞானியர் பித்தரைப் போல்வர்.



”ஏதாரெதுரைனா எதுவெலுதுண்டோ அடிகானா…” என்று தொடங்கும் தெலுங்குப் பிரதிக்கான பாடலை ஸ்ரீவெண்ணல சீதாராம சாஸ்த்ரி எழுதியுள்ளார். அதன் ஆங்கிலப் பெயர்ப்பின் வழி அதனைத் தமிழாக்கம் செய்துள்ளேன்:

என் முன் விரியும் எந்த ஒரு பாதைக்கும்

இலக்கு என்னவென்று கேட்டதில்லை நான்.

வாழ்க்கை எனை இட்டுச் செல்லும்

வழியிலே போகின்றேன்.

தேடல் எதுவும் எனக்கில்லை என்றபோதும்

கோடி பொருட்கள் எனைச் சூழ்ந்து நின்றபோதும்

ஆடாத அசையாத கற்சிலை ஒன்று

மெல்ல கனவில் கரைவது போல் ஆகின்றேன்.

யாரேனும் நான் யாரென்று கேட்டால்

மாறவில்லை, முன்பிருந்த ஆளேதான் நான் என்பேன்

மரணம்வரை ஒரு கேள்வியாய் நானிருப்பேன்

மாற்றம் செய்யாதே என்னில்

என்று காலத்திடம் கேட்கிறேன்.

தனிமையில் கிடக்கிறேன் நான் என்று

என்னைத் துரத்தி வந்து

எவரும் கூற வேண்டாம்;

இன்னும் பல ஆயுளுக்கு

என்னவளின் நினைவுகளை

என்னுள் வைத்திருக்கின்றேன்

என்பதை யார் அறிவார்?

யாரின் துணையால் ஓடுகிறது

இந்நாட்களில் என் மூச்சு?

ஆறுதல் என் உள்ளத்துக்கு

அளிப்பது இங்கே யார் பேச்சு?

புது நாள் புலர்ந்து ஒளிரும்போது

புதிய நானும் பிறக்கின்றேன் மீண்டும்,

காலம் என்னைப்

புதிதாகப் பெற்றதைப் போல்.

என் கதையை முடிவின்றி

சொல்லியபடி இருக்கின்றேன்

முடிவேதும் இல்லாத கதைதான் நான்.

 

காற்றில் ஏகுமொரு பருந்தினைப் போல்

என்றன் கால்கள் எங்கும் நிற்பதில்லை.

 

முகவரியும் பதிலும் இல்லாத கடிதமொன்று

மௌனத்தில் கதறுவதை

ஏன் என்று வியக்கின்றேன்

உலகம் எனைச் சுற்றிப்

பின்னியதோர் தனிமையை

எனதென்று அழைக்கின்றேன்.

நான் சொல்வது புரிகிறதா?

நானும் என் நிழலும் ஆன

இருவருமே போதுமாவோம்

வேறொருவர் துணை வேண்டேன்.

முன்பு தாயின் மடியில் அப்போது

பின்பு தூரத்து நம்பிக்கைகள் இப்போது

என்று,

நிலா என்னை ஈர்க்கிறது.

தொலைவில் இருக்கிறது என்றாலும்

நிலவின் ஒளி என்னைச் சூழ்ந்து

தாலாட்டித் தூங்க வைக்கும்

தாய்மையை உணர்கிறேன்

ஆரோ ஆரோ ராரிரோ…”

கார்த்திக் நேத்தா தமிழுக்கு எழுதிய பாடல் வரிகளின் உயரத்தை தெலுங்குப் பிரதியின் வரிகள் தொடவில்லை என்று எனக்குப் படுகிறது.

“வானம் எனக்கொரு போதி மரம்” என்று வைரமுத்து எழுதியபோது தமிழ்த் திரைப்பாடல் துறை வேறு உடை மாற்றிக் கொண்டது என்று சொல்வார்கள். அது போல் இப்பாடலும் எண்ணத் தகும்.