Tuesday, July 28, 2015

...என்றார் சூஃபி - part 14

45

சூஃபி ஞானிகள் எழுதிய நூற்கள் பல உள்ளன. எனினும் எனது சூஃபி மகானின் கையில் ஒரு புத்தகத்தையோ அல்லது எழுதுகோலையோ நான் பார்த்ததில்லை. இது பற்றி அவரிடம் ஒரு நாள் கேட்டேன்.

புன்னகைத்தபடி சூஃபி சொன்னார், “நமது வேலை வேறு. கையையும் வாயையும்விட நமக்கு மூக்கே முக்கியமானது. நமது பாதையில் நாம் மூக்கால் நடக்கிறோம்.”

இதைச் சொல்லிவிட்டு அவர் நகர்ந்து அப்பால் போய்விட்டார். நான் தோட்டத்தின் முற்றத்தில் அமர்ந்து அவர் சொன்னதை அசை போட்டுக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் அந்தப் பக்கமாக வந்தவர் என்னருகில் நின்றார்.

“புத்தகப் பூச்சி ஒருபோதும் பட்டாம்பூச்சி ஆவதில்லை… ஒருவேளை அது Paper Butterfly ஆகலாம்” என்றார் சூஃபி.

46

      தன்முனைப்பு எப்படியெல்லாம் நுட்பமாக உருவாகிவிடும் என்பதை விளக்கிய போது சூஃபி பின்வரும் கதையைச் சொன்னார்.

      இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர் அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை). மற்றவன் பெயர் உபைதுல்லாஹ் (அல்லாஹ்வின் சிறிய அடிமை). இருவரும் ஒருநாள் தத்தமது குடும்பப் பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
     
”எங்கள் தாத்தா ஒரு பெரிய நிலச்சுவான். ஆயிரம் ஏக்கர் நிலம் அவருக்கு இருந்தது. ஊரிலேயே பெரிய பங்களா எங்களுடையதுதான்” என்றான் அப்துல்லாஹ்.

      ”ப்பூ இவ்வளவுதானா? எங்க தாத்தாகிட்ட பத்தாயிரம் ஏக்கர் நிலம் இருந்தது. ஊரே எங்க பங்களாவுக்குள்ளதான் இருந்தது!” என்றான் உபைதுல்லாஹ்.

      மிகவும் கடுப்பாகிப் போன அப்துல்லாஹ் சொன்னான், “இங்க பாரு. என்ன இருந்தாலும் நான் அப்துல்லாஹ். நீ உபைதுல்லாஹ். எனக்குக் கீழதான் நீங்கிறத மறந்துடாத.”

      இந்தக் குட்டிக்கதையைக் கேட்டு நாங்கள் சிரித்தோம். அந்த உவகை அலைகள் அடங்கிய பின் சூஃபி மீண்டும் பேசினார்.

      ”மதிப்பில், பெரிய பூஜ்யமும் சிறிய பூஜ்யமும் சமம்தான்” (In value, big zero and small zero are equal) என்றார் சூஃபி.

47
”கணிதத்தில் ஒரு சில கேள்விகள் கேட்கிறேன்” என்று ஆரம்பித்தார் சூஃபி. “ஐந்து பெரிதா நான்கு பெரிதா?” என்று கேட்டார். “ஐந்துதான் பெரிது” என்றோம். “இரண்டு பெரிதா மூன்று பெரிதா?” என்றார். “மூன்று” என்றோம்.

      சூஃபி தன் கையில் வைத்திருந்த ஓர் அட்டையை எங்களிடம் காட்டினார். அதில் பின்வருமாறு இருந்தது:
Count down
5
4
3
2
1
0

”இந்தக் கவுண்ட் டவ்னில் என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டோம்.

“இப்போது இதில் ஐந்தைவிடவும் நான்கு பெரிது அல்லவா? மூன்றைவிடவும் இரண்டு பெரிது அல்லவா? எல்லா எண்களையும் விட பூஜ்யம்தான் மிகப் பெரியது அல்லவா?”

”ஆம்” என்றோம்.

“எல்லாப் படைப்புக்களின் எதார்த்தம் இந்தப் பூஜ்யம்தான். சூஃபிகள் உணர்ந்த ஞானம் இது. இருப்பது இறைவன் மட்டுமே. அவனே உள்ளமை (உஜூத்). இருக்கும் உள்ளமை ஒன்றே, ஏக உள்ளமை – வஹ்தத்துல் உஜூத். இதுவே ஏகத்துவ ஞானம் (இல்முத் தவ்ஹீத்). அந்த இறைவனின் சுயம் பூர்வீகமானது (தாத்தெ கிதம்). படைப்புக்களின் சுயம் வெறுமை (தாத்தெ அதம்). ’அடிமை’ (அப்து) என்னும் சொல்லின் தாத்பரியம் இதுவே. எனவே ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு பூஜ்யம்.

பூஜ்யத்தில் இருந்தே மற்ற எண்கள் பலுகிப் பெருகியுள்ளன. சிலர் பத்தாக இருக்கிறார்கள். சிலர் ஒன்பதாக இருக்கிறார்கள். சிலர் எட்டாக இருக்கிறார்கள். ஆளுமைச் சிதைவுகள். இதில் தான் யார் என்பதில் குழப்பம். சில காலம் இது என்றும் சில காலம் அது என்றும் மயக்கம். தொடர்ந்து ஒரே நபராக இருப்பதில் தயக்கம். பொய் ஆளுமை சிதையும் போது கலக்கம்.

ஆன்மிகம் என்பது கவ்ண்ட் டவ்ன். 10 9 8 7 6 5 4 3 2 1 0.

”இறைவனே இருக்கிறான், நான் இல்லை” என்பதை உணர்ந்து கொண்ட ஒருவன், தன்னைப் பூஜ்யம் என்று உணர்ந்து கொண்ட ஒருவன் ஆகிறான். பிரபஞ்சம் அத்தகைய ஒருவனையே பூஜ்யஸ்ரீ என்று கொண்டாடும். அவனே இறை உள்ளமையின் கண்ணாடி.
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் பூஜ்ய நிலையில் திளைத்திருக்கிறது. அழகான ஆரோக்கியமான பூஜ்யங்கள் (Beautiful healthy zeros).

இதோ நாம் அமர்ந்திருக்கும் இந்தத் தோட்டத்தில் உள்ள ஒவ்வொன்றும் பூஜ்ய நிலையில் இருக்கின்றன. இறைவனைக் காட்டும் ஒவ்வொரு பூஜ்யக் கண்ணாடியும் மதிப்புடையதே.

பூஜ்யஸ்ரீ கொரியன் புல்!
பூஜ்யஸ்ரீ கூழாங் கல்!
பூஜ்யஸ்ரீ மூங்கில்!
பூஜ்யஸ்ரீ பழைய குளம்!
பூஜ்யஸ்ரீ தவளை!
பூஜ்யஸ்ரீ தவிட்டுக் குருவி!
பூஜ்யஸ்ரீ வெட்டுக்கிளி!

’அனைத்து வஸ்துக்களும் என் ஒளியிலிருந்து வந்தன’ என்கிறார் மகாபூஜ்யஸ்ரீ முஹம்மத் (ஸல்).

’பிரபஞ்சத்தை வளைக்கும்
மாபெரும் பூஜ்யம்
முஹம்மத் (ஸல்)’
என்றார் சூஃபி.

48
      மத வாழ்வைப் பொருத்த வரை மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னார் சூஃபி: அறிபவர்கள், ஆற்றுபவர்கள், ஆகுபவர்கள்.

Knowing ones; Doing ones; Being ones.

இவை மூன்றும் முறையே ஆன்மிகத்தின் படிநிலைகள் என்று காணலாம்.

பலர் ஆன்மிக விஷயங்களை அறிவதோடு நின்று விடுகிறார்கள். அவர்களில் சிலரே செயலாற்றும் நிலைக்கு உயர்கிறார்கள்.

அவர்களில் பலர் வழிபாடுகள் தியானங்கள் செய்வதோடு நின்று விடுகிறார்கள். சிலரே அதுவாகி இருத்தல் என்னும் நிலையை அடைகிறார்கள்.

அறிதல் என்பது க்கால் (qaal – பேச்சு) மட்டுமே.
ஆற்றுதல் என்பது ஃபஅல் (fa’al – செயல்) மட்டுமே.
ஆகுதல் என்பதே ஹால் (haal - அனுபவ நிலை).

நபி (ஸல்) அவர்கள் செய்த ஒரு பிரார்த்தனை இம்மூன்று கட்டங்களையும் குறிக்கிறது:
“அல்லாஹும்மர்ஸுக்னா இலமத் தவ்ஹீதி வ அமலல் இஃக்லாஸி வ ஹுஸ்னல் ஃகாத்திமா” (அல்லாஹ்வே! எமக்கு ஏகத்துவ அறிவும் பரிசுத்த வழிபாடும் அழகிய முடிவும் அருள்வாயாக”


‘அதுவாகும் நிலையே அழகிய முடிவு’ என்றார் சூஃபி.

Wednesday, July 15, 2015

ரமலான்’2015 part-2


இறைவன் சங்கை (கரீம்) ஆனவன்:
’யா அய்யுஹல் இன்சானு மா கர்ர(க்)க பிரப்பி(க்)கல் கரீம்” – “மனிதனே! சங்கையான உன் ரட்சகனை விட்டும் உன்னை மருட்டியது எது?” (82:6)
(எனவே மாயை (குரூர்) விலகும் போது இறை பிரக்ஞை (தக்வா) தோன்றுகிறது)

சங்கையான இறைவன் அருளிய வேதமும் சங்கை (கரீம்) ஆனது:
”இன்னஹு லகுர்ஆனுன் கரீம்” – “நிச்சயமாக இது சங்கை மிக்க குர்ஆன்” (56:77)

அந்த வேதம் அருளப்பட்ட மாதம் ரமலான். அதுவும் சங்கை (கரீம்) ஆனது:
”ஷஹ்ரு ரமலானல்லதீ உன்ஸில ஃபீஹில் குர்ஆன்” – “ரமலான் எத்தகைய மாதம் எனில் அதில் குர் ஆன் இறக்கப்பட்டது” (2:185)

ரமலானில் கடமை ஆக்கப்பட்டுள்ள நோன்பின் நோக்கம் தக்வா. அதனை அடைந்தவர்களும் சங்கை (கரீம்) ஆவார்கள்:
“இன்ன அக்ரம(க்)கும் இந்தல்லாஹி அத்கா(க்)கும்” – நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடம் மிகவும் சங்கையானவர் உங்களில் தக்வா உள்ளவரே” (49:1)
l

நாம் இங்கே நோன்பு திறப்பதற்காக அமர்ந்திருக்கிறோம். இது ஏதோ விருந்து என்பது போல் ஆக்கப்பட்டு விட்டது. சிறப்பு இஃப்தார் விருந்துகள் என்னும் பெயரில் அரசியல் கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. அதற்கும் நோன்பின் நோக்கத்திற்கும் எள் முனை அளவும் தொடர்பு இல்லை. ஆன்மிக விருந்தாக இருக்க வேண்டிய ஒன்று அரசியல் விருந்தாக மலிந்துவிட்டது.

’இஃப்தார்’ என்னும் சொல்லின் ரகசியங்களை அறியாமல் நாம் அதை ஆன்மிக விருந்தாக்க இயலாது. இஃப்தார் என்றால் திறப்பு என்னு பொருள். எனவேதான் தமிழில் நாம் இதனை ‘நோன்பு திறத்தல்’ என்று சொல்கிறோம். இந்தச் சொல்லின் உட்பொருள்கள் நமக்குத் திறந்தாக வேண்டும்! இல்லை எனில் நோன்பின் நோக்கத்தை நாம் நிறைவேற்ற இயலாமல் போய்விடும்.

”ஃபாத்திஹா” என்றாலும் திறப்பு என்றுதான் பொருள். அதன் வேர்ச்சொல் ‘ஃபதஹ’ என்பது. திறத்தல், வெற்றி பெறல் என்பது அதன் அர்த்தங்கள். ஃபத்ஹ் என்றால் வெற்றி. 

ஃபலாஹ் என்றாலும் வெற்றி. தொழுகைக்கு அப்படி ஒரு பெயர் உண்டு. ஃபலாஹ் என்னும் தொழுகையில் ஃபாத்திஹா என்னும் திறப்பே வெற்றியின் வாசல் ஆகிறது.

இஃப்தார் என்னும் திறப்பு கொஞ்சம் வித்தியாசமானது. இதன் வேர்ச்சொல் ’ஃபதர’ என்பது. உடைத்துத் திறத்தல் என்பது இதன் பொருள். எனவேதான் நோன்பு திறத்தல் என்பதை ஆங்கிலத்தில் ‘break fast’ என்று சொல்கிறோம்.

’ஃபலக’ என்றாலும் உடைத்துத் திறத்தல் என்று பொருள் உண்டு. “ஃபலக்” என்றால் வைகறை, விடியல். அதனை ஆங்கிலத்தில் ‘day break’ என்று சொல்கிறோம்.

மூடியிருக்கும் கதவுகளைத் திறப்பதற்கும் அக்ரோட் ஓட்டினை உடைத்துத் திறப்பதற்கும் வித்தியாசம் உள்ளது அல்லவா?

இஃப்தார் என்னும் திறப்பு அக்ரோட் ஓட்டினை உடைத்துத் திறப்பது போல. இன்னும் பொருத்தமாகச் சொல்வதெனில் தட்டித் திறப்பது. இது முட்டையின் ஓட்டினை உடைப்பது போன்றதல்ல. அது வெறும் உடைத்தல், திறத்தல் அல்ல.

ஃபலக, ஃபதஹ, ஃபதர என்னும் இம்மூன்று வேர்ச் சொற்களில் இருந்தும் இறைவனைக் குறிக்கும் மூன்று திருநாமங்கள் உண்டு: அல்-ஃபாலிக், அல்-ஃபத்தாஹ், அல்-ஃபாத்திர்.

”இன்னல்லாஹ ஃபாலிக்குல் ஹப்பி வன்-நவா” – “நிச்சயமாக அல்லாஹ்வே விதைகளையும் கொட்டைகளையும் பிளப்பவன்” (6:95)

”ஹுவல் ஃபத்தாஹுல் அலீம்” – “அவனே திறப்பாளன் அறிவாளன்” (34:26)

அல்ஹம்துலில்லாஹி ஃபாத்திருஸ் ஸமாவாத்தி வல் அர்ள்” – “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” (35:1)

இம்மூன்று பெயர்களுக்கும் ஒன்றுடன் ஒன்று ஆழமான அர்த்தத் தொடர்புகள் உண்டு.
விதைகளைப் பிளந்து திறத்தலைக் குறிப்பிடும் வசனத்தில் இறைவனுக்கு “ஃபாலிக்” என்னும் பெயர் சொல்லப் பட்டுள்ளது. விதை பிளப்பதற்கு அறபியில் ’ஃபலாஹ்’ என்னும் சொல்லும் உண்டு. அதற்கு ’வெற்றி’ என்று அர்த்தம். பாலை மணலில் பேரீத்தம் விதை பிளந்து முளை விடுவது என்பது உண்மையில் மாபெரும் வெற்றி அல்லவா? ஃபதஹ் என்றாலும் வெற்றி.

ஃபலக் என்றால் விடியல். இறைவன் தானொரு மறைந்த பொக்கிஷமாக இருந்த நிலை, படைப்புக்கள் வெளிப்படாமல் இருந்த நிலை, அவை அதமிய்யத் non-existence என்பதாக இருந்த நிலை, பேரிருள் என்று உருவகம் பெறும். எனவே படைப்பு வெளிப்படத் தொடங்கிய நிலை விடியல் ஆகும். ஃபாலிக் என்னும் சொல் விதைகளைப் பிளப்பவன் எனில், படைப்புக்களின் முதல் விடியலும் பிரபஞ்ச விதையின் பிளப்பிலிருந்து வந்ததே. அந்தப் பிரபஞ்ச விதை “முஹம்மதின் ஒளி” (நூரே முஹம்மதி) எனப்படுகிறது.
இனி இஃப்தார் என்பதன் பக்கம் கவனம் செலுத்துவோம்.

இஃப்தார் என்றால் திறத்தல். ஆனால் திறப்பவன் யார்?

அல்லாஹ்வின் பெயர் “அல்-ஃபாத்திர்”. அதாவது அல்லாஹ்வே ஃபாத்திர் (திறப்பவன்). அவனை அன்றித் திறப்பவன் வேறு யாரும் இல்லை. லா ஃபாத்திர இல்லா ஹுவ.  

என்னில் நோன்பைத் திறப்பவன் அவனே. ஏனெனில், என்னில் நோன்பை வைத்தவனும் அவனே. வைத்தவன்தானே திறக்கவும் வேண்டும்!

”அஸ்ஸவ்மு லீ வ அனா அஜ்ஸீ பிஹி” – “நோன்பு எனது. அதற்கு நானே நற்கூலி தருகிறேன்” (புகாரி, முஸ்லிம், மாலிக், திர்மிதி, நஸாயீ, இப்னு மாஜா).

நோன்பு அவனது என்னும் போது அதனை அவன் அன்றி வேறு எவர் திறக்க முடியும்?

”வல்லதீ ஹுவ யுத்-இமுனீ வ யஸ்கீனி” – ”அவனே எனக்கு உணவூட்டுகிறான், அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்” (26:79)

உணவும் பானமும் அடியானுடன் தொடர்பு படுத்தப்பட வேண்டும். ஏனெனில் உணவும் பானமும் அடியானின் தேவைகள். பசியும் தாகமும் அடியானின் நிலைகள். 
இறைவனுக்கு அந்நிலைகள் இல்லை. அவனுக்கு உணவு பானம் தேவை இல்லை.

உணவையும் பானத்தையும் அடியானுடன் தொடர்பு படுத்தி, ஊட்டுதல் குடிப்பாட்டுதல் ஆகிய செயல்களை இறைவனுடன் அடையாளப்படுத்த வேண்டும். இந்த அகப்பார்வையே ’தக்வா’. அடியானின் உண்ணுதல் பருகுதலில், அந்த அடியானுக்கு ஊட்டுபவனாக, அந்த அடியானிலேயே அல்லாஹ்வை நோட்டமிடுவது தக்வா என்னும் நிலை ஆகும்.

இஃப்தார் என்பதன் வேர்ச்சொல்லான ஃபதர என்பதில் இருந்து ஃபித்ரத் என்னும் சொல் கிளைக்கிறது. ஃபித்ரத் என்றால் இயல்பு இயற்கை என்று பொருள். பசியும் தாகமும் நமது ஃபித்ரத். ”நோன்பு எனது” (அஸ்ஸவ்மு லீ) என்று அல்லாஹ் கூறுவதன் பொருள் என்ன? உணவும் பானமும் இணைவிழைச்சும் தேவை இல்லாத நிலை என்பது இறைவனின் இயல்பு. அவன் நம்மில் தனது இயல்பை வெளிப்படுத்திப் பார்ப்பதே நோன்பு. நோன்பாளி தன்னில் அவனையே நோட்டமிட வேண்டும். அதுவே தக்வா என்னும் இறைப் பிரக்ஞை ஆகும்.

இஃப்தார் என்பது நோன்பைத் திறப்பது எனில், திறந்து காணும் பொருள் யாது? அவனேதான்!

“வ அனா அஜ்ஸீ பிஹி” – “அவனுக்கு நானே நற்கூலி தருகிறேன்” என்பதன் உட்பொருள் என்ன? “அவனுக்கு நானே நற்கூலி” என்பதுதான். இறைவன் அடியானுக்குத் தன்னையே தருகிறான் என்பதன் பொருள், அடியானுடன் அவன் எப்போதும் இருக்கிறான் என்னும் உணர்வை அனுபவத்தை அந்த அனுபவத்தின் பரவசத்தைத் தருகிறான். தன் இருப்பின் பிரக்ஞையை அடியானுக்கு அருள்கிறான். அந்தப் பிரக்ஞை நோன்பு திறந்த பின்னும் அடியானில் தொடர்ந்து வரும்.

ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் முதல் நாளில் கொண்டாடப்படும் பெருநாளும் ”ஈதுல் ஃபித்ரு” என்பதாகவே பெயர் பெறுகிறது. ரமலான் முழுவதும் ஒரு நோன்பு நிலையாகப் பார்க்கப் பட்டால், பெருநாள் அந்த நோன்பின் இஃப்தார் ஆகிறது!

நாம் மீண்டும் நமது இயல்புக்குத் திரும்பி விடுகிறோம் என்பது மட்டுமல்ல ஈதுல் ஃபித்ரு. ரமலான் மாதத்தில், ஒவ்வொரு நாளும் இஃப்தாரில் அடையப் பெற்ற தக்வா என்னும் இறை ப்ரக்ஞையைப் பேணியபடி இனி வாழப்போகிறோம் என்பதே அதன் தாத்பரியம்.
l

நாம் இங்கே இஃப்தாருக்காக அமர்ந்திருக்கிறோம். நம் முன் பல வகையான உணவுகளும் பானங்களும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாம் தக்வா செய்ய வேண்டிய பயிற்சியே இந்த இஃப்தார்.

நோன்பாளியான என்னில் மட்டுமா அல்லாஹ் இருக்கிறான்? இந்த உணவுகளிலும் பானங்களிலும் அவனே பிரசன்னமாகி இருக்கிறான். இதை உணர்ந்து கொள்ளவே இஃப்தார்.

என்னில் நோன்பைப் பேணியதும் அவனே; என்னில் நோன்பைத் திறப்பதும் அவனே.
நோன்பாளிக்கு இது மிகவும் மகிழ்ச்சியான நேரம்.

நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்: “லிஸ்ஸியாமி ஃபர்ஹ(த்)தானி யஃப்ரஹுஹுமா இதா அஃப்தர ஃபரிஹ வ இதா ல(க்)கிய ரப்பஹு ஃபரிஹ பிஸவ்மிஹி” – “நோன்பாளிக்கு இரண்டு பேரின்பங்கள் உண்டு. ஒன்று இஃப்தாரில். மற்றொன்று அவன் தனது ரட்சகனைச் சந்திக்கும்போது, நோன்பின் காரணமாக.” (புகாரி: கிதாபுஸ் ஸவ்ம்: 1904)

இறைவனின் திருக்காட்சியால் அடையும் இன்பத்துடன் இஃப்தாரின் இன்பம் இணைத்துச் சொல்லப்பட்டிருப்பது அந்த இன்பத்தின் மேன்மையைக் காட்டுகிறது.

பொதுவாக, எது ஒன்றிற்காக நாம் காத்திருக்கிறோமோ அதன் நினைவு நமக்கு அடிக்கடி வருவது மனித இயல்பு. எது ஒன்றின் தேவை இன்னும் நிறைவேறாமல் இருக்கிறதோ அதன் நினைவு அடிக்கடி வந்துகொண்டிருப்பது தவறு என்று சொல்ல முடியாது.

நோன்பு வைத்திருக்கும் நிலையில் மனதில் உணவு பானம் பற்றிய நினைவு, கற்பனை வந்து கொண்டே இருப்பது மனித இயல்புதான். நமது ஃபித்ரத் அது. ஆனால் நமது ஃபித்ரத்தில் அல்லாஹ்வின் ஃபித்ரத்தை நோட்டமிடவும் வேண்டும்.

மறுமையில் இறைவனின் லிகா (சந்திப்பு) என்பதுதான் பேரின்பம் எனில் இம்மை முழுவதும் அந்த தரிசன இஃப்தாருக்கான நோன்புதான். அந்த லிகாவின் நினைவிலேயே ஒருவன் மூழ்கி இருப்பது இபாதத் (வழிபாடு) அல்லவா?

அப்படியானால், நோன்பின் பேரின்பம் இஃப்தாரில் எனில் அந்த இஃப்தாரின் நினைவில் மனம் மூழ்கி இருப்பதும் இபாதத் (வழிபாடு)தானே? ஏனெனில், நோன்பாளியிடம் உணவு பானம் ஆகியவற்றின் கோலத்தில் சந்திக்க வருபவன் அந்த இறைவனே! இறைவன் எந்தக் கோலத்தில் (ஷகல்) என்னிடம் வரவிருக்கிறானோ அந்தக் கோலத்தின் நினைவு எதார்த்தத்தில் அவனின் நினைவே!

தக்வா இல்லை நீங்கள் ஷகலைப் பார்த்து ஏமாந்து போவீர்கள். (இறைப் பிரக்ஞை இல்லை எனில் நீங்கள் கோலத்தைப் பார்த்து ஏமாந்து போவீர்கள்).

ஷகலின் நிஸ்பத்தில் அவனது ஷுகலை அடையும் தருணமே இஃப்தார் (நோன்பு திறப்பு என்பது கோலத்தின் தொடர்பில் அவனது அனுபவத்தை அடையும் தருணமே ஆகும்).

மறுமையில் புறக்கண்களாலும் இறைவனை தரிசிக்கும் பேரின்பம் இருக்கிறது. 

இம்மையில், அகக்கண்களால் இறைவனை தரிசிக்கும் பேரின்பத்தை அடைவதற்கான பயிற்சியே இஃப்தார். எனவே இஃப்தாரின் இன்பம் இறைச் சந்திப்பின் இன்பத்துடன் சொல்லப்பட்டது. 

ரமலான்’2015 part-1

{இவ்வருடத்தின் புனித ரமலான் மாதத்தில் ஏற்பட்ட சிந்தனைகள் பல. அவற்றில் இந்தப் பதிவுகள் சில.}


இரண்டு மாதங்களாக நாம் எதிர்பார்த்த புனித மாதமான ரமலான் வந்திருக்கிறது. இன்னொரு விதத்தில் இந்தப் புனித மாதத்திற்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம்.

ரமலான் மாதம் நம்மை நோக்கி வந்ததா? நாம் ரமலான் மாதத்தை நோக்கி வந்தோமா? அதாவது, காலம் நம்மை நோக்கிப் பயணிக்கிறதா? அல்லது நாம் காலத்தை நோக்கிப் பயணிக்கிறோமா? இது சிந்தனைக்கு உரியது. இரண்டு விதமாகவுமே பார்க்க முடியும்.

ரஜப் மாதத்தின் பிறை தோன்றி விட்டால் நபி(ஸல்) அவர்கள் பின் வருமாறு பிரார்த்தனை செய்வார்கள்:

”அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப வ ஷஃபான வ பல்லிக்னா ரமலான்” (நூற்கள்: தபரானி, அஹ்மத்)

”அல்லாஹ்வே! ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு அபிவிருத்தி அருள்வாயாக! மேலும், ரமலான் மாதத்தை நாங்கள் அடையச் செய்வாயாக.”

இதில், ரமலானை நோக்கிய நமது நகர்வு சுட்டப்படுகிறது. காலத்தின் கட்டங்களுக்குள் நாம் பயணிக்கிறோம்.

ரமலான் மாதத்தை அடைந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு தம் தோழர்களிடம் சொன்னார்கள்:

”அதா(க்)கும் ரமலானு ஷஹ்ருன் முபார(க்)குன்...” (நஸாயீ:2106)

“புனித மாதமான ரமலான் உங்களிடம் வந்துள்ளது...”

இதில், நம்மை நோக்கிய ரமலானின் நகர்வு சுட்டப்பட்டுள்ளது. காலம் நம்மில் பயணிக்கிறது!

நாம் காலத்தில் பயணிக்கிறோம்; காலம் நம்மில் பயணிக்கிறது.

கடலில் மீன் நீந்தித் திரிகிறது; கடலும் தன்னுள் பல நீரலைகளாகச் சுழன்று கொண்டிருக்கிறது.

நம்மில் காலம் வெளிப்படுகிறது; காலத்தில் நாம் வெளிப்படுகிறோம். ரமலானில் நாம், நம்மில் ரமலான் என்று ஆகிறோம்.

”ஃபமன் ஷஹித மின்குமுஷ் ஷஹ்ர ஃபல்யஸும்ஹு” (2:185) என்று அல்லாஹ் சொல்வதைக் கவனியுங்கள். இத்திருவசனப் பகுதியில் உள்ள ஷஹித என்னும் சொல்லைக் கொண்டு பலவிதமான மொழிபெயர்ப்புக்கள் செய்யப்பட்டுள்ளன.


”எவர் அந்த மாதத்தை தரிசிக்கிறாரோ அவர் அதில் நோற்கட்டும்” என்கிறது sahih international மொ.பெ. ஷஹித என்னும் சொல்லை அது ‘sight’ என்று அர்த்தப் படுத்துகிறது. எனவே, ”எவர் அந்த மாதத்தை (அதில் பிறையை) தரிசிக்கிறாரோ அவர் அதில் நோற்கட்டும்” என்று அடைப்புக் குறியிட்டு, பிறை பார்த்தல் என்பதாக பாவிக்கிறது.

இன்னொரு மொழிபெயர்ப்பு: “உங்களில் எவர் அதில் பிரசன்னமாகிறாரோ அவர் அதில் நோற்கட்டும்” (’And whosoever of you is present, let him fast the month’ tr. Muhammad Marmaduke Pikthall).

இதில் ஷஹித என்னும் சொல் பிரசன்னம் (presence) என்று பாவிக்கப் பட்டுள்ளது.

தமிழில் இந்த வசனப் பகுதி இவ்வாறு மொழிபெயர்க்கப் படுகிறது: “உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோற்கட்டும்”. (முஹம்மத் ஜான் ட்ரஸ்ட்)

இம்மூன்று அர்த்தங்களுமே ஒன்றுதான்: தரிசித்தல், இருத்தல், அடைதல். இந்த மூன்று பண்புகளும் இதயத்துடன் தொடர்புள்ளவை. இந்தப் பண்புகள் எந்த மனிதனின் இதயத்தில் உள்ளதோ அத்தகைய மனிதனே நோன்பின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும். 

அதாவது, நோன்பின் நோக்கத்தை ஒருவன் அடைய வேண்டும் எனில் அவனிடம் இருக்க வேண்டிய தகுதிகள் இவை. அவனுடைய உள்ளம் அகப்பார்வை (பஸாரத்) கொண்டதாக, பிரசன்னம் (ஹள்ரத்) உள்ளதாக, அடைதல் (வஜ்த், ஷுகல்) உள்ளதாக இருக்க வேண்டும். மொத்தமாகச் சொல்வதெனில், அவன் ’ஷாஹித்’ (சாட்சியாளன், witness) ஆக இருக்க வேண்டும்.

நோன்பின் நோக்கம் என்ன? அதைப் பின்வரும் திருவசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்:
“யா அய்யுஹல்லதீன ஆமனூ குதிப அலைக்குமுஸ் ஸியாமு கமா குதிப அலல்லதீன மின் கப்லி(க்)கும் லஅல்ல(க்)கும் தத்தகூன்”

“நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மீது நோன்பு கடமை ஆக்கப் பட்டிருக்கிறது, உங்களுக்கு முன் இருந்தோரின் மீது கடமை ஆக்கப் பட்டதைப் போலவே, நீங்கள் தக்வா அடைவதற்காக” (2:183)

நோன்பு கடமை ஆக்கப் பட்டதில் இந்த நோக்கத்தை வைத்துத்தான் முன் இருந்த சமூகங்களுக்கும் நமக்குமான நோன்பின் ஒப்புமை. அதாவது, அவர்களுக்கும் ரமலான் மாதம் முழுவதும் வைகறை முதல் அந்தி வரை என்னும் அமைப்பில் நோன்பு விதிக்கப் பட்டிருந்ததாக அர்த்தம் அல்ல. நோன்பின் அமைப்பு எப்படியாக இருந்தாலும் சரி, எல்லாச் சமூகங்களுக்கும் நோன்பின் நோக்கம் ஒன்றுதான். அதுதான் தக்வா. அதை அடைவதற்காகவே நோன்பு கடமை ஆக்கப்பட்டது.

நோன்பின் நோக்கம் ’தக்வா’ என்று இவ்வசனம் தெளிவாகக் காட்டுகிறது. ஆனால் தக்வா என்பது என்ன என்பதில்தான் தெளிவு இல்லாமல் சமுதாயம் குழம்புகிறது!

மேற்சொன்ன திருவசனத்தில் ”ல-அல்ல(க்)கும் தத்தகூன்” – “நீங்கள் தக்வா அடைவதற்காக” என்னும் பகுதியை எவ்வாறு அர்த்தப் படுத்தி மொழி பெயர்த்திருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் கவனிப்போம்.

”நீங்கள் நேர்மையாளர் ஆவதற்காக” - that you may become righteous என்கிறது சஹீஹ் இண்டர்னேஷனல் மொ.பெ.

”நீங்கள் (தீமைகளைத்) தவிர்த்துக் கொள்வதற்காக” – that ye may ward off (evil) என்கிறது பிக்தாலின் மொ.பெ.

”நீங்கள் சுயக் கட்டுப்பாடு கொள்வதற்காக” - that ye may (learn) self-restraint என்கிறது யூசுஃப் அலிய்யின் மொ.பெ.

இந்த மொழிபெயர்ப்புக்கள் எல்லாமே தோராயமாகவும் பூடகமாகவுமே உள்ளன. இவற்றின் அர்த்த நீட்சிகளை நாம் கண்டறிய வேண்டிய தேவை ஏற்படுகிறது. இல்லை எனில் தக்வா என்னும் கோட்பாட்டை நாம் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் தக்வா என்பதோ மிகவும் முக்கியமான ஒன்றாக, நோன்பின் நோக்கமாக இருக்கிறது.

மேற்சொன்ன மூன்று மொழி பெயர்ப்புக்கள் தரும் அர்த்தங்கள் அனைத்துமே தக்வா என்னும் சொல் உணர்த்தும் பண்பின் பரிமாணங்களைக் காட்டுபவைதான். இம்மூன்றும் ஒன்று சேரும் புள்ளி தக்வா எனலாம். இவை எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதை நாம் காண வேண்டும்.

நேர்மை, தவிர்தல், சுயக் கட்டுப்பாடு ஆகிய மூன்றும் எப்போது தக்வாவை உருவாக்கும்?
“இத்தகூ ஃபிராஸத்தல் முஃமின்” என்று ஒரு ஹதீஸில் வருகிறது. அதாவது, “இறை நம்பிக்கையாளனின் அகப்பார்வையைத் தவிர்த்துக் கொள்”.

மேற்சொன்ன மொ.பெயர்ப்புக்களில் “நீங்கள் (தீமைகளைத்) தவிர்த்துக் கொள்வதற்காக” என்று யூசுஃப் அலி அவர்கள் தரும் மொழி பெயர்ப்பு ’ஷரீஅத்’ என்னும் நிலையில் நின்று பேசுகிறது. ஆனால் தக்வா என்பதன் தத்துவ விளக்கம் அந்த நிலையோடு மட்டும் நின்று விடுவதில்லை. அதன் அந்தரங்க நிலைகளை நோக்கி நாம் நகர்ந்தாக வேண்டும்.

திருக்குர்ஆனில் தக்வா என்பது இறைவனுடன் தொடர்பு படுத்திப் பேசப்படுகிறது.

”ஃபத்த(க்)குல்லாஹ்” – “நிச்சயமாக அல்லாஹ்வைத் தக்வா செய்யுங்கள்” (3:50; 3:123; 5:100; 8:1; 11:78; 26:108,110,126,131,144,150,163,179; 43:63; 64:16; 65:10)

”யா அய்யுஹல்லதீன ஆமனூ இத்த(க்)குல்லாஹ வ கூனூ ம-அஸ் ஸாதி(க்)கீன்” -  ”நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வைத் தக்வா செய்யுங்கள். மேலும், சத்தியவான்களுடன் ஆகிவிடுங்கள்” (9:119)

”வத்த(க்)குல்லாஹ ரப்ப(க்)கும்” – “உங்கள் ரட்சகனாகிய அல்லாஹ்வைத் தக்வா செய்யுங்கள்” (65:1)

இந்தத் திருவசனங்களில் எல்லாம் தக்வா என்பது “அல்லாஹ்வை அஞ்சுங்கள்” “fear Allah” என்பதாகவே மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தக்வா என்றால் இறையச்சம் என்பதாகவே பரவலாகப் பொருள் செய்யப்படுகின்றது. அவாம் என்னும் பொது மக்களின் நிலையைப் பொருத்த வரை இந்த அர்த்தம் சரியானதாக இருக்கலாம். ஆனால் ஆன்மிகத்தில் இது ஆரம்ப நிலை மட்டுமே. இறையச்சம் என்பது ’தக்வா’வின் பிள்ளைப் பருவம். சிறு பிள்ளைகளிடம் வளர்ந்தவர்களும் அவர்களின் பாஷையிலேயே பேசவேண்டி இருக்கிறது. ஆனால், வளர்ந்தவர்களுக்கு ’தக்வா’வின் அடுத்தடுத்த கட்டங்கள் தேவையாகின்றன.  

உண்மையில் (இறை) அச்சம் என்பதைக் குறிக்க வேறு அறபிச் சொற்கள் இருக்கின்றன. ஃகவ்ஃப் மற்றும் ஃகஷ்யா.

”வ லிமன் ஃகாஃப மகாம றப்பிஹி ஜன்ன(த்)தான்” – “தன் ரட்சகனின் நிலையை அஞ்சியவனுக்கு இரண்டு சுவர்க்கங்கள் உண்டு” (55:46)

இன்னொரு திருவசனம் அச்சம் (ஃகஷ்யா) என்பதையும் தக்வா என்பதையும் வேறுபடுத்திக் காட்டுகிறது:

“வ ம(ன்)ய்யுதி-இல்லாஹ வ ரசூலஹு வ யஃக்‌ஷல்லாஹ வ யத்தக்ஹி ஃப-உலா-இக ஹுமுல் ஃபா-இஸூன்” – “எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும் கீழ்ப்படிந்து அல்லாஹ்வை அஞ்சி மேலும் அவனைத் தக்வா செய்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்” (24:52)

இவ்வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்று கவனிக்கத் தக்கது:

“And whoever obeys Allah and His Messenger and fears Allah and is conscious of Him - it is those who are the attainers.” (மொழிபெயர்ப்பு: Sahih International)

இங்கே தக்வா என்பது அல்லாஹ்வைப் பற்றிய பிரக்ஞை – God-consciousness என்பதாக அர்த்தம் செய்யப்பட்டுள்ளது. தக்வா என்பதன் மிகச் சரியான விளக்கம் இதுதான்.

தமிழில் இவ்வசனத்தின் மொழிபெயர்ப்பு ஒன்றில், ஃகஷ்யா மற்றும் தக்வா ஆகிய இரண்டையும் ஒற்றைச் சொல்லாக ’பயபக்தி’ என்று தந்திருக்கிறார்கள்:

“இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்” (ஹாஜி முஹம்மது ஜான் ட்ரஸ்ட்)

பயபக்தி என்பதில் பயம் என்பது ஃகஷ்யா, பக்தி என்பது தக்வா.

பக்தி என்றால் என்ன என்னும் கேள்விக்கு விளக்கம் ’ஒவ்வொரு கணமும் இறைவனைப் பற்றிய பிரக்ஞையுடன் இருப்பது’ – to be God-conscious every moment என்பதே.

இந்த இறைப் பிரக்ஞையை அடைவது எப்படி? அதற்கான முறைகளை அறிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

”யா அய்யுஹல்லதீன ஆமனூ இத்த(க்)குல்லாஹ ஹக்க து(க்)காத்திஹி” – “விசுவாசம் கொண்டோரே! அல்லாஹ்வைத் தக்வா செய்யுங்கள், அவனது தக்வாவிற்கான முறைப்படி” (3:102)

அவனது தக்வாவிற்கான முறை, அவனது பிரக்ஞைக்கான முறை என்பது தனித்தன்மையான ஒன்று என்பதை இதனால் விளங்கலாம். அப்படித்தானே இருக்க முடியும்? படைப்புக்களைப் பற்றிய பிரக்ஞையும் படைத்தவனைப் பற்றிய பிரக்ஞையும் எப்படி ஒரே மாதிரி இருக்க முடியும்?

 படைப்புக்களைப் பற்றிய பிரக்ஞை மாயைகளால் உண்டாகிறது.

வ மல் ஹயாத்துத் துன்யா இல்லா ம(த்)தா-உல் குரூர்” - “இவ்வுலக வாழ்க்கை மாய சுகமே அன்றி வேறில்லை” (57:20)

படைத்தவனைப் பற்றிய பிரக்ஞை என்பது அந்த மாயைகளைக் களைவதால் உண்டாகும் ஒன்று. எனவே அதற்கான வழிமுறைகள் தனித்தன்மை கொண்டதாகத்தான் இருக்க முடியும். சூஃபி ஆன்மிகப் பள்ளிகள் (தரீக்கா) அந்த வழிமுறைகளைச் சொல்லித் தருகின்றன.

இறைவன் எங்கோ படைப்புக்களை விட்டும் தனித்து இருக்கிறான் என்றால் அவனைப் பிரக்ஞை கொள்வது என்பது ’இங்கே’ சாத்தியமில்லாமல் போய்விடும். பிரக்ஞை கொள்வது என்பது இருப்பை உணர்வது என்பதாகும்.


இங்கே இறைவனைப் பிரக்ஞை கொள்வது என்பதன் பொருள் இங்கே அவனது இருப்பை உணர்வதுதான். சிருஷ்டியில் இறைவனை அறிவதும் உணர்வதும் அடைவதும் தக்வா ஆகும்.

Tuesday, June 9, 2015

...என்றார் சூஃபி - part 13

44

’இறையச்சம்’ பற்றிப் பேசியிருந்தோம். நிறைய கேள்விகளும் அவரவருக்குத் தோன்றும் விளக்கங்களுமாக நேரம் போய்க் கொண்டிருந்தது.

’இறைநேசர்கள் இறைவனை அஞ்சுவது எவ்வாறு? அதாவது, நேசம் இருக்கும் இடத்தில் அச்சம் எத்தகையதாக இருக்கும்?’

‘இறையச்சம், இறைநேசம், இறைஞானம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள தொடர்பு என்ன?’

’இறைநேசர்களுக்கு அச்சமும் கவலையும் இல்லை எனும்போது இறையச்சம் என்பதன் இடம் என்ன?’

இவை போன்ற கேள்விகள் சபையை நகர்த்திச் சென்று கொண்டிருந்தன. அப்போதுதான் சூஃபி ஒரு சிறிய கதையைச் சொல்லி விளக்கம் தந்தார். அது ஒரு ஜென் கதை!

’ஜென் மற்றும் தாவோ ஆன்மிகவாதிகள் தற்காப்புக் கலைகளையும் தியானமாக உருவாக்கினார்கள். அதில் வில் வித்தையும் ஒன்று.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிராமத்தில் ஒரு வாலிபன் இருந்தான். சிறந்த விற்கலைஞனாக – வில் வித்தை வீரனாக உருவாக வேண்டும் என்று அவனுக்கு ஆசை. அந்த ஆசை அவனின் இதயத்தில் அணையாத தீயாக எரிந்து கொண்டிருந்தது. உள்ளூர் குரு ஒருவரிடம் சில வருடங்கள் மிகவும் சிரத்தையாக அவன் வில் வித்தையைக் கற்றுக் கொண்டான். அம்பு எய்வதில் மிகவும் தேர்ந்து விட்டான். இனி தன்னை வெல்ல எவரும் இருக்க முடியாது என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் உண்டானது. இது பற்றி ஒருநாள் தன் குருவிடம் பேசினான்.

‘குருவே! வானில் எவ்வளவு உயரத்தில் பறவை சென்றாலும் அதனைச் சரியாகக் குறி வைத்து வீழ்த்தும் ஆற்றலை நான் பெற்றுவிட்டேன். இனி வில் வித்தையில் நான் கற்றுக் கொள்ள எதுவும் இல்லை அல்லவா? நான் ஒரு முழுமையான விற்கலைஞன் ஆகிவிட்டேன் அல்லவா?’ என்று அவன் கேட்டான்.

லேசாகப் புன்னகை செய்தபடி அவனிடம் குரு சொன்னார், ‘பையா! நீ கற்றுக் கொள்ள வேண்டிய வித்தை இன்னும் ஒன்று இருக்கிறது. அதை அடையாத வரை நீ ஒரு முழுமையான விற்கலைஞன் ஆக மாட்டாய். ஏன், அந்த வித்தை எனக்கே தெரியாது. நானும் ஒரு முழுமையான விற்கலைஞன் அல்லன்.’

இதைக் கேட்டு அவன் திகைத்தான். அந்த வித்தையைத் தான் எங்கு போய்க் கற்றுக்கொள்ள இயலும் என்று வினவினான். மிகத் தொலைவில் உள்ள மாகாணம் ஒன்றில் மலைச் சாரலில் வசிக்கும் ஒரு குருவிடம் செல்லுமாறு அவனிடம் உள்ளூர் குரு கூறினார். அவரிடம் விடை பெற்றுக் கொண்டு அவன் கிளம்பினான்.

மலைச் சாரலில் ஒரு குடிலில் வசிக்கும் குருவிடம் அவன் சீடன் ஆனான். அப்படி என்ன புதிய வித்தை அவரிடம் உள்ளது என்று அறிய மிகவும் ஆர்வமாக இருந்தான். சில வருட பயிற்சிகளுக்குப் பிறகு அதற்கான தருணம் வந்தது. குரு அவனை அழைத்துக் கொண்டு அந்த மலை மீது ஏறினார். சில ஆயிரம் அடிகள் உயரத்தில் அந்தரத்தில் நீட்டிக் கொண்டிருப்பது போன்று ஒரு செங்குத்தான பாறை. சீடனின் கையைப் பிடித்தபடி அழைத்துச் சென்று அதன் விளிம்பில் அவர் நின்றார். சீடன் அரண்டு போனான்! பயத்தில் அவனின் கால்கள் உதறிக் கொண்டிருந்தன. குரு தனது வில்லை எடுத்து அதில் ஒரு கணையை வைத்து நேராக மேலே பார்த்தார். வட்டமடித்துக் கொண்டிருந்த பருந்து ஒன்றினை வீழ்த்தினார். ‘நீ செய் பார்ப்போம்’ என்பது போல் சீடனைப் பார்த்தார். அவன் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. வில்லில் அம்பினை வைத்துப் பிடிக்கவே அவனால் முடியவில்லை. குருவின் பாதத்தில் விழுந்து அழுதான் அவன். அதன் பின் அந்த வித்தைக்கான பயிற்சிகளில் கடுமையாக ஈடுபட்டான். ‘சிறந்த விற்கலைஞனுக்கு உயரத்தைப் பற்றிய அச்சம் துளிகூட இருக்கக் கூடாது’ என்று குரு அவனிடம் கூறினார். சில வருடங்களில் அவன் தேர்ச்சி பெற்றான். பல்லாயிரம் அடி உயரச் செங்குத்துப் பாறை விளிம்புகளில் அவன் நிற்கும் போது கால்கள் வேர் பிடித்தது போல் உறுதியாக நின்றன. அவன் கைகளில் நிதானம் இருந்தது.

இப்போது மீண்டும் அவன் உள்ளத்தில் தன் திறமையைப் பற்றிய மமதை உண்டானது. ‘இப்போது என்னை வெல்ல இவ்வுலகில் யாருமே இருக்க முடியாது அல்லவா குருவே?’ என்று அவன் கேட்டான். குரு நிதானமாகச் சொன்னார், ‘அடப் போப்பா நீ வேற. 
இதுவெல்லாம் ஒரு வித்தையே அல்ல! உண்மையான வில் கலைஞன் என்றால் அதற்கு வேறொரு திறமை வேண்டும். அது இல்லாமல் வில் வித்தை ஒருபோதும் முழுமை பெறாது. அந்த வித்தையை நான் என் வாழ்வில் கற்றுத் தேரவே முடியவில்லை. அந்த வித்தையை அறிந்தவர் ஒரே ஒரு குருதான் இப்போது இருக்கிறார்.’

அந்த குருவிடம் சீடனாகச் சேர்ந்து எப்படியாவது அவரிடம் உள்ள தனித்தன்மையான வித்தையைக் கற்றுவிட வேண்டும் என்று அவன் பிரதிக்ஞை செய்து கொண்டான். இதற்கு மேல் ஒரு வில் வித்தை இருக்கும் என்பதை அவனால் கற்பனைகூட செய்ய முடியவில்லை.

தனக்குத் தரப்பட்ட ’முகவரி’யை அவன் மிகவும் கஷ்டப்பட்டுச் சென்றடைந்தான். அந்த தேசத்திலேயே அதுதான் மிகவும் உயரமான மலைமுகடு. அதன் சாரலில் ஒரு குகையில் இருந்தார் அந்த குரு. படு கிழம்! ’இந்த வயதில் இவர் எப்படி வில் வித்தை சொல்லித் தருவார்?’ என்று எண்ணிச் சோர்வடைந்தான் அவன். எனினும் சில காலம் அவருக்குக் கர்ம சிரத்தையாகப் பணிவிடை செய்தான். அவர் இவனைத் தனது சீடனாக ஏற்றுக் கொண்டார். எல்லா வித்தைகளிலும் ஏற்கனவே அவன் தேர்ச்சி பெற்றிருப்பதை அறிந்தார். தன்னிடம் உள்ள ரகசியமான வித்தையை அவனுக்குக் கற்றுத் தர நாள் குறித்தார். அன்று முதல் அவன் தூக்கம் இல்லாமல் தவித்தான்! அந்த நாள் நெருங்க நெருங்க அவனின் நெஞ்சுக்குள் இதயம் எகிறி குதித்துக் கொண்டிருந்தது. அந்த நாளும் வந்தது.

அதிகாலை நேரம். குளிர்க் காற்று வீசிக் கொண்டிருந்தது. குகையை விட்டு வெளியேறிய குரு தள்ளாடியபடி நடந்து சென்றார். இவன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்து சென்றான். தூக்கத்தில் நடப்பது போல் அவர் மிகவும் நிதானமாக நடந்து சென்று ஒரு முகட்டில் நின்றார். அங்கிருந்து முழு உலகமும் தெரியும் என்பது போன்ற உயரம்! அவன் அவரின் கால்களை உற்று நோக்கினான். அவை இரும்புத் தூண்களைப் போல் உறுதியாக நின்றன. அவர் தன் கையை உயர்த்தி உச்சி வானத்தில் அவனிடம் சுட்டிக் காட்டினார். முதலில் அவனுக்கு ஒன்றுமே பிடி படவில்லை. கூர்ந்து கவனித்த போது புள்ளி போல் ஒரு பறவை தென்பட்டது. எவ்வளவு வளைத்து எய்தாலும் அத்தனை உயரத்திற்கு அம்பு செல்லவே முடியாது. இவர் என்ன அந்தப் பறவையைக் காட்டுகிறார் என்று எண்ணியபடி அவரிடம் வில்லை நீட்டினான். வேண்டாம் என்பது போல் சைகை செய்தார். பிறகு திரும்பி ஒரு கணம் கண்களை மூடி நின்றார். முகத்தை மேலே உயர்த்தியபடிக் கண்களைத் திறந்து அந்தப் பறவையை நோக்கினார். சட்டென்று அது கீழ் நோக்கி விழுந்தது! மண்ணில் அது விழுந்ததும் நம்ப முடியாமல் சீடன் அதனைப் பார்த்தான். செத்துக் கிடந்தது. வியப்பில் உறைந்து போய் அந்தக் கிழ குருவைப் பார்த்தான். அந்த மலை முகட்டில் அவர் நின்றிருந்தான். வயதால் அவரின் முதுகு வளைந்திருந்தது. அவரே ஒரு வில்லாக இருந்தார்!

அந்தக் காட்சியில் அவன் உணர்ந்ததைத்தான் அவர் அவனுக்கு இறுதி உபதேசமாகத் தந்தார்: “தானே ஒரு வில்லாக மாறி விடுபவன்தான் சிறந்த வில் வித்தைக்காரன்.”

இந்தக் கதையைச் சொல்லி முடித்து சில கணங்கள் மௌனமாக இருந்தார் சூஃபி. பிறகு 
எங்களிடம் கேட்டார், “மலை முகட்டில் அச்சமின்றி நிற்கும் ஒருவனின் கால்களை அச்சத்தால் நடுங்க வைக்க என்ன வழி?”

நாங்கள் பதில் சொல்ல மாட்டோம் என்பதை உணர்ந்த சூஃபி அவரே சொன்னார், “அதை விடவும் உயரமான மலை முகட்டில் அவனைக் கொண்டு போய் நிறுத்த வேண்டும். புதிய உயரத்தில் அவனின் கால்கள் முதலில் அச்சத்தால் நடுங்கும். சில நாட்களில் அதுவும் பழகிப் போகும். பிறகு அதை விடவும் உயரமான முகட்டிற்கு ஏற வேண்டும். இப்படியே மேலே மேலே செல்லச் செல்ல அச்சமும் புதிதாக அனுபவமாகும். ஆனால் அந்த அச்சம் பரவசத்தின், தியானத்தின் முகத்திரைதான்.

இறையச்சம் என்பதும் இப்படித்தான். இறையனுபவத்தின் உயரங்களை நீங்கள் புதிது புதிதாக அடைய அடைய அதனை முதன்முதலில் எதிர்கொள்வதன் அச்சம் இருக்கத்தான் செய்யும். இறையச்சத்தில் இருங்கள் என்பதன் பொருள் ஆன்மிகத்தில் மேலும் மேலும் உயரங்களை அடைந்து கொண்டே இருங்கள் என்பதாகும்.

எனவே, இறைவனை ஆன்மிக அனுபவத்தால் அறிய அறிய அச்சமும் அதற்கேற்ப புதிதாகிறது. ’இன்னமா யஃக்‌ஷல்லாஹ மின் இபாதிஹில் உலமாஉ’ (35:28) ‘நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே’ என்னும் திருவசனத்தில் இறையச்சம் எனபதன் நியதியாக அறிதல் சுட்டப்பட்டிருப்பதை கவனிக்கவும். அது வெறும் ஏட்டறிவு அல்ல. ஆன்மிகப் பட்டறிவே ஆகும்.

’உங்களில் அல்லாஹ்வை மிகவும் அதிகமாக அறிந்திருப்பவன் நானே, அவனை அதிகமாக அஞ்சுபவனும் நானே’ என்பது நபி(ஸல்) அவர்களின் அருள்மொழி. (சஹீஹைன்: புஃகாரி, முஸ்லிம்)

அதாவது, எல்லையற்ற இறைவனிடமிருந்து அவர்கள் கணந்தோறும் புதிய புதிய ஆன்மிக உயரங்களை அடைந்து கொண்டே இருக்கிறார்கள். அனுபவத்திற்கேற்ப, அதன் படித்தர உயரத்திற்கேற்ப அச்சத்தின் தன்மையும் அமைகிறது. பரவசத்தின் தன்மையும்தான்.” என்றார் சூஃபி.

பிறகு, இறையச்சம் பற்றி வேறோர் உவமை சொல்லிப் பேசினார்:

“கடற்கரையில் நிற்கும் சிறுவர்களை கவனித்திருகிறீர்களா? அலைகளில் கால் நனைத்துக் குதூகலிக்கும் அவர்கள் தூரத்தில் சற்றே பெரிய அலை எழும்போது பயந்து கத்துவார்கள். ஆனால் அந்த அச்சத்தில் ஆனந்தமும் கலந்திருக்கும். அதே கடலில் ஆழிப்பேரலை வந்தால் – சுநாமி வந்தால் என்னாகும்? பெரியவர்களும்கூட பயப்படுவார்கள்.
சென்னை நெம்மேலி கடற்கரையில் நண்பர் டாக்டர் அஸ்லம் பிலாலி 

உங்கள் உள்ளம் ஒரு கடற்கரை. அதன் அப்பக்கம் ஆன்மிகக் கடல் இருக்கிறது. அதில் இறைவன் அனுப்பும் ஆன்மிக அனுபவ அலைகள் வீசிக் கொண்டிருக்கும். நீங்கள் ஓர்மையோடு அதில் கால்பதித்து நிற்க வேண்டும். அதுவே தியானம்.

உங்கள் உள்ளத்தில் கொஞ்சமாவது இறையனுபவ அலைகள் வீசிக் கொண்டிருக்க வேண்டும். இறைநேசர்களின் இதயங்களில் இறைக்கடலின் ஆழிப் பேரலைகள் வீசிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், கடற்கரையைப் பார்த்தே இல்லாத ஒருவன் ’நான் சுநாமிக்கு அஞ்சுகிறேன்’ என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்? அப்படித்தான், வெற்றுப் பேச்சாகப் பலரின் முகங்களில் போலி இறையச்சம் அசடு வழிகிறது! அவர்களின் உள்ளங்கள் இறந்த கடலாக – dead sea ஆக இருக்கின்றன. அலைகளே அவற்றில் எழுவதில்லை.


இறையனுபவத்தின் ஆழிப் பேரலைகள் நம் உள்ளத்தில் பொங்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்” என்றார் சூஃபி.

Sunday, June 7, 2015

...என்றார் சூஃபி - part 12

42
பள்ளிப் படிப்பை முடித்துவிட்ட தன் பிள்ளையின் எதிர்காலத்திற்கு அறிவுரை வழங்கும்படிக் கேட்டுக் கொண்டார் ஒரு நண்பர். அந்தப் பிள்ளையின் திறமைகள் பற்றியும் ஆர்வங்கள் பற்றியும் விசாரித்த பின் சூஃபி நிதானமாகப் பேசினார்.

”ஓரு தென்னங் கன்றின் எதிர்காலம் என்ன? தென்னை மரம்தான்.

ஒரு ரோஜாக் கன்றின் எதிர்காலம் என்ன? ரோஜாச் செடிதான்.

ஓர் ஆலவிதையின் எதிர்காலம் என்ன? ஆலமரம்தான்.

ஒரு பூனைக்குட்டியின் எதிர்காலம் என்ன? பூனைதான்.

ஒரு கிளிக் குஞ்சின் எதிர்காலம் என்ன? கிளிதான்.

செடி கொடிகளில் விலங்குகளில் பறவைகளில் எதிர்காலம் என்பது இயற்கையில் நிர்ணயிக்கப் பட்டுவிட்ட ஒன்று. எனவே எந்தச் சிக்கலும் கிடையாது.

ஆனால் மனிதனில் அது வெறுமனே அவனது உடல் சார்ந்த விஷயம் அல்ல. ஆளுமையின் உருவாக்கம் சார்ந்தது. எனவே சிக்கல் எழுகிறது.

மனித குலத்தின் சாபக் கேடுகளில் ஒன்று ஆளுமையின் மதிப்பைப் பொருளாதாரத்தைக் கொண்டு கணக்கிடுவதாகும். இந்த மனநிலை மனித குலம் முழுக்கவும் புரையோடிக் கிடக்கிறது.

வருமானம் குவிக்கும் ஆளுமைகளாக நம் பிள்ளைகள் உருவாக வேண்டும் என்பதிலே நமக்குத் தீராத வேட்கை உண்டாகியுள்ளது. இதனால் மனித குலம் அடைந்த அக இழப்புப் பற்றிய சுரணையே இங்கு இல்லை.


மருத்துவனாக அல்லது பொறிஞனாக ஆக்கப்பட வேண்டும் என்னும் கல்வி ‘அறுவை’ சிகிச்சையில் அபார்ஷன் ஆகிவிட்ட கவிஞர்கள், கலைஞர்கள், ஞானிகள் எத்தனை பேர்?”

சிறிது நேர மௌனத்திற்குப் பின் சூஃபி திருமறை வசனமொன்றை ஓதிக் காட்டிச் சொன்னார்:

”வ லா தக்துலூ அவ்லாதகும் ஃகஷ்யத இம்லாக்;
நஹ்னு நர்ஸுகுஹும் வ இய்யாகும்;
இன்ன கத்லஹும் கான ஃகித்அன் கபீரா” (17:31)
(”வறுமைக்கு அஞ்சி உம் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்;
அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்;
அவர்களைக் கொல்வது திண்ணமாக மாபெரும் பாவமாகும்”)

இந்தத் திருவசனம் சிசுக்கொலை பற்றிக் கூறுவதாகப் பொருள் வைக்கப்படுகிறது. அது சரிதான். ஆனால் உடலைக் கொலை செய்வது மட்டும்தான் கொலையா? அத்தகைய கொலைகள் இன்று குறைந்து வந்துள்ளன. ஆனால் அகக் கொலை இன்று பெருகி வந்துள்ள நிலையில் அந்தப் பின்னணிக்கும் இவ்வசனம் பொருத்தமாக உள்ளதை நாம் உணர வேண்டும்.

ஒரு மனிதரின் நற்பெயரை வேண்டுமென்றே நாசப்படுத்தும் காரியத்தை ஆங்கிலத்தில் “Character assassination” என்று சொல்வார்கள்.

ஒரு மனிதனில் இறையருளால் இயற்கையாக உருவாகி வரும் ஆளுமை நசிக்கப் படுவதை நான் “Personality assassination” – ஆளுமைப் படுகொலை என்று குறிப்பிடுகிறேன். 
இந்தப் படுகொலையைப் பரவலாகவே நம் சமூகத்தில் பெற்றோர்கள் செய்து வருகிறார்கள்.

பெற்றோர்களில் பலரும் தாம் படாத பாடு பட்டுத் தம் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியிருப்பதாக நினைக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் எப்பொழுதோ இறந்து போய்விட்டதை அவர்கள் அறிவதில்லை!” என்றார் சூஃபி.

43

திருமணத்தினால் உண்டாகும் பயன்கள் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். கலகலப்பாக நடந்து கொண்டிருந்த சபைக்குச் சற்று நேரத்தில் சூஃபி வருகை தந்தார். என்ன பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை விசாரித்தார். “திருமணத்தால் உண்டாகும் மேலான பயன் என்ன?” என்று அவரிடம் கேட்டோம்.

“பொதுவாக மனிதனுக்குத் தனது மலஜலம் - கழிவு பற்றிய அருவருப்புணர்வு இருக்காது. திருமண வாழ்வு இந்த மனநிலையை சற்றே விசாலமாக்குகிறது! அதாவது தன் மனைவி மக்கள் என்று சிலரின் மலஜலத்தைப் பற்றிய அருவருப்புணர்வு அற்றவனாக ஒருவனை அது மாற்றுகிறது!” என்றார் சூஃபி.

இந்த பதில் சபையோருக்கு அதிர்ச்சியாகவும் வினோதமாகவும் இருந்தது. இதைத் தொடர்ந்து நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து மூன்று சம்பவங்களை அவர் நினைவு கூர்ந்தார்:

நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க ஒரு தோழர் தனது சிறு வயதுப் பெண் குழந்தையுடன் வந்திருந்தார். நபியைக் கண்டு குதூகலித்த அந்தக் குழந்தை அவர்களை நோக்கித் தாவியது. நபிக்கும் குழந்தைகள் என்றால் பிரியம். அந்தக் குழந்தையை எடுத்து அவர்கள் தம் மடியில் அமர வைத்துக் கொண்டார்கள். சிறிது நேரத்தில் அக்குழந்தை சிறுநீர் பெய்யத் தொடங்கியது. அதன் தந்தை பதறுகிறார். தன் குழந்தையை அச்சுறுத்தித் தடுக்க முனைந்தார். உடனே நபி அவரைத் தடுத்தார்கள். சும்மா இருக்கும்படி ஜாடை செய்தார்கள். குழந்தை சிறுநீர் கழிக்கட்டும், அதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று உணர்த்தினார்கள்.

இரண்டாவது நிகழ்ச்சி:

மதினா நகரில் நபி(ஸல்) தனது மஸ்ஜிதை நிர்மாணித்து அதில் தினமும் தனது தோழர்களுடன் தொழுகை நடத்தி வந்தார்கள். அவர்களைச் சந்திக்க பல திசைகளிலும் இருந்து மக்கள் வந்து கொண்டிருந்தார்கள். உபதேசங்களும் அதே மஸ்ஜிதில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஒரு நாள், வட அரேபியப் பகுதியிலிருந்து பதூயீன் இனத்தைச் சேர்ந்த காட்டரபி ஒருவர் நபியைக் காண வந்திருந்தார். தொழுகையில் அவரும் கலந்து கொண்டார். அப்போது அவருக்குத் திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டிய நெருக்கடி உண்டானது. சட்டென்று தனது அங்கியைத் தூக்கியபடி அப்படியே மஸ்ஜிதில் சிறுநீர் கழித்து விட்டார்! தோழர்கள் அவரைத் தாக்கப் பாய்ந்த போது நபி(ஸல்) தன் தோழர்களை விலக்கிவிட்டு அந்தக் காட்டரபியைச் சிறிது தள்ளி அழைத்துச் சென்று பொறுமையாக அவருக்கு எடுத்துச் சொன்னார்கள், ‘இஃது இறைவனை வணங்கும் இடம். இதனைத் தூய்மையாக வைக்க வேண்டும். இது போல் அசுத்தம் செய்ய்க் கூடாது’.

மூன்றாவது நிகழ்ச்சி:

மதினாவிற்கு ஒரு காட்டரபிக் குழு வருகை தந்தது. ஆளுக்கொருவரை தம் இல்லத்திற்கு விருந்தினராக அழைத்துச் செல்ல வேண்டும் என்று நபி (ஸல்) கட்டளை இட்டார்கள். தாமும் ஒருவரை தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த ஆள் இருப்பவர்களிலேயே மிகவும் வாட்ட சாட்டமாக இருந்தார். பெருந்தீனிக்காரர். வயிறு உப்ப உண்ட பின் அவருக்கு ஒரு அறை தரப்படுகிறது, இரவு தங்குவதற்காக. அவர் உள்ளே படுத்துக் கொண்ட பிறகு யாரோ ஒருவர் வெளியே கொண்டியை மாட்டிவிட்டுச் சென்றுவிடுகிறார். நள்ளிரவில் அந்தக் காட்டரபிக்கு வயிற்றைக் கலக்குகிறது. வெளியே போக நினைத்த அவருக்குப் பெரிய அதிர்ச்சி, கதவு வெளிப்பக்கம் கொண்டி மாட்டியுள்ளது. என்ன செய்வதென்று குழம்பிப் போய் அவர் மீண்டும் படுத்து உறங்குகிறார். நாணல்கள் காற்றில் அசையும் ஓர் அருமையான ஊர் ஒதுக்குப்புறத்தைக் கனவில் காண்கிறார். ஒருவர் தன்னை லேசாக்கிக் கொள்ள தோதுவான இடம்! அவர் சட்டென்று அமர்ந்து பணியைத் தொடங்குகிறார். முழுவதுமாக ஆசுவாசப் படுத்திக்கொண்ட பின் கனவு கலைகிறது. துர்வாடை மூக்கைத் துளைக்கவும் விழித்து எழுந்து பார்க்கிறார். நபியின் வீட்டு அறையைத் தான் அசிங்கப்படுத்தி வைத்திருப்பதைக் கண்டு சாம்புகிறார். தனக்கும் இது பெருத்த அவமானம் ஆகிவிடும் என்று நினைத்த அவர் படாத பாடு பட்டுப் போராடி கதவின் வெளிக் கொண்டியைத் திறந்து அதே வேகத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓடி விடுகிறார். விடியல் தொழுகையை முடித்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் தம் விருந்தினரைக் காண வருகிறார்கள். ஆளைக் காணவில்லை. அவருக்குக் கொடுக்கப் பட்டிருந்த போர்வை மலம் அப்பி நாறிக் கிடக்கிறது. புன்னகை மலர்ந்திருக்கும் பூமுகம் மாறாமல் நபி(ஸல்) அவர்கள் ஒரு வாலியில் நீர் கொண்டு வந்து அந்தப் போர்வையை அலசத் தொடங்குகிறார்கள். அப்போது அங்கே அந்தக் காட்டரபி வருகிறார், தான் மறந்து வைத்து விட்ட தனது போர்வாளை எடுப்பதற்காக. தன் கைப்பிள்ளையின் துணியை ஒரு தாய் அலசுவது போல் நபி (ஸல்) தான் மலம் கழித்த போர்வையைத் துவைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். நபியின் கைகளைப் பிடித்து நெகிழ்ந்தவராக அக்கணமே அவர்களின் தோழராக, சீடராக மாறுகிறார்.


“அல்-ஃகல்க்கு இயாளுல்லாஹ்” – “படைப்புக்கள் (அனைத்தும்) இறைவனின் குடும்பம்” என்பது நபிமொழி.

அந்தக் குடும்பத்திற்கு அவர்கள் தாயாக இருக்கிறார்கள்.

இறைவன் அவர்களை “ரஹ்மத்துல்லில் ஆலமீன்” – “அகிலங்களுக்கெல்லாம் கருணை” என்று புகழ்கிறான்.


’தாயின் முன் குழந்தை போல் நபியின் முன் பிரபஞ்சம்’ என்றார் சூஃபி.