Wednesday, September 29, 2010

பெருவெடிப்பு மன்னர்கள்!



கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட இனம்தான் நம் தமிழினம் என்பதைப் பிரபஞ்சவியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஆராய்ச்சி நிரூபித்துவிட்டது என்பதை நான் எழுதிமுடித்து மைகூட காயவில்லை. அதற்குள்ளாகச் செய்தி அறிந்த பல தமிழன்பர்கள் நேரில் வந்தும் அலைபேசியிலும் தங்கள் விம்மித நிலையைத் தமிழில்கூட வெளிப்படுத்த இயலாமல் தவித்தார்கள். 'சங்கப் புலவர்' நமச்சிவாயம் அவர்கள் என் கைகளைப் பற்றிக்கொண்டு, "அந்த வெள்ளைக்கார விஞ்ஞானியை அழைத்துவாருங்கள் தம்பி.சங்கத்தின் சார்பில் அவருக்குத் 'தமிழ்த்தாயின் தலைமகன்' என்று விருது வழங்குவோம்" என்று நெகிழ்ந்தார்.நான் என் கைகளை உருவிக்கொண்டு என் கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைத்தவனாக, "ஐயா, உண்மையிலேயே அவருக்குத் தலை மட்டும்தான் வேலை செய்கிறது! ஆனால் அவர் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்தவரில்லையே? எப்படித் தமிழ்த்தாயின் தலைமகன் என்று அழைப்பது. வேண்டுமானால் ஒன்று செய்வோம். 'தமிழ்த்தாயின் தத்துமகன்' என்று விருது வழங்குவோம்!" என்று கூறினேன். என் ஆலோசனை அவருக்கு மகிழ்ச்சி தரவே சகப் புலவர்களிடம் இதைக் கூறி இறும்பூது எய்தச் சென்றார்.இதை நான் எப்படி ஸ்டீபன் ஹாக்கிங்கிடம் கூறுவேன்?


இன்னும் சிலர் அவருடைய 'காலத்தின் சுருக்கமான வரலாறு' என்ற நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கலாம் என்றும், அவருக்கு ஞான பீட விருதே வழங்கலாம் என்றும் கருத்துக் கூறினார்கள். தமிழ் இளைஞர்கள் சிலர்கூடி "இசுதீபன் ஆக்கிங்கு தமிழ்ப் பேரவை" தொடங்கியிருப்பதாகவும் ஒரு அன்பர் நவின்றார். இன்னொரு அன்பர் பல்கலைக்கழகம் ஒன்றில் அல்லது பலவற்றில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் பெயரால் ஒரு இருக்கை அமைக்கவேண்டும் என்றார். இப்படிப் பலரும் பல ஐடியாக்களை என் முன் பொழிந்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். இப்பொழுதே கவிஞர்கள் சிலர் ஸ்டீபன் ஹாக்கிங் பிள்ளைத்தமிழ், இசுடீபன் ஆக்கிங்கு மகாகாவியம் என்றெல்லாம் இலக்கியம் படைக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றும் அறிந்தேன். தலை சுற்றியது. 

ஒரு கருத்து வெளியானால் அதை எல்லோருமே ஏற்றுக்கொண்டு விடுவார்களா என்ன? ஸ்டீபன் ஹாக்கிங்கின் அனுபவமே ஒரு மாயை என்றும், அதற்கும் "கல்தோன்றி மண்தோன்றா..." என்ற பாடல் வரிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சிலர் மறுப்புக் கூறியுள்ளார்கள். இத்தனைக்கும் என் கருத்து அந்த வரிகளுக்குப் பொருத்தமாகத்தான் உள்ளது.
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றிய மூத்தக் குடி"
என்பதில் உள்ள "வாள்" என்பதற்கு ஒளி என்று ஒரு பொருள் உள்ளது அல்லவா? அதைத்தான் ஸ்டீபன் ஹாக்கிங்குடைய ஆய்வின்படி பெருவெடிப்பில் தோன்றிய ஒளி என்று நான் கொண்டு அப்போதே தமிழினம் பிறந்துவிட்டது என்று நிறுவியிருந்தேன். இதைத் தமிழ்வீறு.மா.மு.இளவேங்கை என்பவர் வன்மையாகக் கண்டித்து மறுத்துள்ளார். "செந்தமிழ்க் கொம்பு" என்னும் மாத இதழில் அவர் எழுதியுள்ள முப்பது பக்க வீருரையில் ( பத்திரிகை மொத்தம் முப்பத்து நான்கு பக்கங்கள், விளம்பரங்கள் உட்பட!) அவர் கூறியிருப்பதாவது:
"தமிழர்களே! ஆரோ இசுதீபன் ஆக்கிங்கு என்னும் அறிவியலாளனின் பெயரால் இரமீசு பிலாலி என்னும் பித்தன் பிதற்றியுள்ளதை அறிந்து நெஞ்சு வேகின்றோம்."வாளொடு முன் தோன்றிய மூத்த குடி" என்பதில் உள்ள 'வாள்' என்பதற்கு ஒளி என்று பொருள் கூறிப் பிழையான கருத்தைப் பரப்பியுள்ளார். இது தமிழரின் வீரச் சிறப்பை அறவே இருட்டடிப்புச் செய்யும் சதி என்று அறிக. 'வாள்' என்பதற்குப் 'போர்வாள்' என்பதே பொருத்தமான பொருளாம். கல்லும் மண்ணும் தோன்றும் முன்பே தமிழ்க்குடி தோன்றிவிட்டது என்பதில் இசுதீபன் ஆக்கிங்குடன் நமக்குக் கருத்து வேறுபாடில்லை. ஆனால் நம் தமிழ்க்குடியின் முன்னோர் அப்போதே போர்வாளுடன் செருக்களம் புகுந்து விழுப்புண்கள் ஏற்று விளையாடி வந்தவர்கள் என்பதை எக்காளத்துடன் எடுத்தியம்புகிறேன்!"
தோழர் இளவேங்கை அவர்கள் எக்காளத்துடன் கூறுகிறாரோ இல்லை எகத்தாளத்துடன் கூறுகிறாரோ, நான் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டேன். உண்மையில் இளவேங்கை அவர்கள் என் கருத்தை இன்னும் முன்னகர்த்திச் சென்றுள்ளார். அதாவது பெருவெடிப்பு நிகழும் கணத்திற்கு முன்பே தமிழ்ப் புலவர்கள் தோன்றிவிட்டார்கள் என்றால் அப்போதே தமிழ் மன்னர்களும் தோன்றியிருப்பார்கள் அல்லவா? அதாவது சேர சோழ பாண்டிய மன்னர்கள் எல்லாம் பெருவெடிப்பு மன்னர்கள்! BIG BANG EMPERORS! அதுமட்டுமல்ல, பெருவெடிப்பு என்னும் அந்த அற்புத நிகழ்வே திரண்டு நின்ற பிரபஞ்சப் புள்ளியைச் சேர வேந்தன் சூளுரைத்துத் தன் வாளால் கீரியவுடன் வெடித்துச் சிதறியதுதான்!
திருவிளையாடலில் மிகவும் புகழ் பெற்ற ஒருவிளையாடலை நீங்கள் அறிவீர்கள். 'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?' என்று பாண்டிய மன்னனுக்கு ஐயம் வந்ததே, அதுதான். அந்தப் புதிரும் இப்போது விடுபட்டு விடை கிடைத்துவிட்டது பாருங்கள். பெண்ணின் கூந்தல் மணம் பிரபஞ்சம் தோன்றிய அந்த ஆரம்பக் கணத்தின் நறுமணம்தான். அந்தக் கணத்தில் பிரபஞ்ச வெளியில் ஒளியும் புகையுமாக இருந்ததாகத்தானே அறிவியல் கூறுகிறது? பெண்ணின் கூந்தல் மணம் அந்தப் பிரபஞ்ச சாம்புராணிப் புகையின் நறுமணம்தான்! அவளுடைய அழகில் ஒளிரும் தேஜஸ் அந்தப் பெருவெடிப்புத் தருணத்தின் ஒளிதான்! இதுதான் தேஜஸ்வினி ரூப தத்துவம்!


இதனைத் தொடர்ந்து வேறு வாசிப்புக்களும் கிளம்பி வந்துகொண்டுள்ளன. சூபித்துவத்தில் ஈடுப்பட்டு கொண்ட என் நண்பர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு தன் விளக்கத்தை முன்வைத்தார். (இவர் ஹஜ்ரத் ஜாங்கிரி பாபா என்னும் சூபி ஞானியின் சீடராவார்.குல்பர்காவில் எனக்கு அறிமுகமானார். பின்பு நான்கைந்து முறை நாகூரிலும் சந்தித்துள்ளேன்.) அவர் சொன்ன கருத்தாவது: "வாள் என்றால் ஒளி என்னும் அர்த்தம் சரிதான். ஆனால் அது இறைவன் முதன்முதலாகப் படைத்த ஒளியைக் குறிக்கும். அது நூறே முஹம்மதி என்னும் நபிகள் நாயகத்தின் ஒளிதான். அந்த ஒளியோடு தோன்றிய முதல் குடி சூபிகள் ஆவர். அதாவது தமிழர்கள்தான் உலகில் தோன்றிய முதல் சூபிகள்!" என் சூபி நண்பர் இதற்குத் திருக்குறளை வேறு ஆதாரம் காட்டுகிறார். அதாவது,
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு"
என்பதில் வரும் "ஆதி பகவன்' என்பது இந்த நூறே முஹம்மதி என்னும் முதல் ஒளியைத்தான் குறிக்கிறதாம்!

நுண்ணுயிரியல் துறையில் ஆராய்ச்சிகள் செய்துவருபவரும் தமிழ் ஆர்வலருமான பேராசிரியர்.குரியகோஸ் இன்னொரு கோணத்தில் தன் கருத்தை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அதன்படி, "வாளொடு முன்தோன்றிய மூத்த குடி" என்பதே தவறாம். பாட பேதமாம். "வாலொடு முன் தோன்றிய மூத்த குடி" என்றுதான் இருக்கவேண்டுமாம். சரிதான், ஐயா லெமுரீயாக் கண்டத்தின் குரங்கு விஷயத்திற்கு வருகிறார் என்றுதான் இதைப் பார்த்ததும் நினைத்தேன். ஆனால் அவர் சொல்லியிருந்ததோ வேறு. கல்லீரலும் மண்ணீரலும் தாயின் கருவறையில் தோன்றுவதற்கு முன், ஏன் கருவே தோன்றுவதற்கு முன், வெறும் தலையும் வாலுமாகத்தான் உயிரணுக்கள் ஜீவ நீரில் நீந்திக் கொண்டிருக்கின்றன. அதைத்தான் 'வாலோடு முன் தோன்றுதல்' என்கிறார் அவர். நல்லவேளை, முன்தோன்றிய வால் என்று கொண்டுகூட்டிப் பொருள் கொண்டு வேறு வகையில் விளக்காமல் இருந்தார்! அது டார்வின் தியரியைப் பிளந்திருக்கும். பின்னால் வால் முளைத்த குரங்குகளாக மற்ற இனங்களெல்லாம் காடுகளில் உலவி வந்த காலத்தில் முன்னால் வால் முளைத்து எழுந்து நடந்த முதல் இனம் தமிழினமே என்னும் கருத்து உண்மையிலேயே மிகவும் புரட்சிகரமானதுதானே!     
  



Monday, September 27, 2010

பெருவெடிப்புக் கவிஞர்கள்



"உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ்தானே ஐயா?" என்று ஒரு மாணவன் கேட்டான். "இல்லை தம்பி" என்றேன் நான். அவனுக்கு அது பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். ஒரு தமிழாசிரியர் என்றால் "உலகில் தோன்றிய முதல் மொழி தமிழே" என்று உணர்ச்சி கொப்புளிக்க அரை மணி நேரமாவது ஹிஸ்டீரியா பேஷண்டைப் போல் முழங்கவேண்டமா? அனால் நான் மிகவும் சுருக்கமாக "இல்லை" என்றல்லாவா கூறிவிட்டேன். உலகில் தோன்றிய முதல் மொழி என்று ஒரு குறிப்பிட்ட மொழியைக் கூற முடியாது என்பதுதான் மானிடவியலும் மொழியியலும் நமக்குச் சொல்லும் செய்தி. தொன்மையான மொழிகள் என்று ஆதாரங்கள் கிடைத்துள்ள பல மொழிகளில் தமிழும் ஒன்று. அவ்வளவுதான்.

ஆனாலும், தமிழ் வெறியர்கள் பலர் உலகில் தோன்றிய முதல் மொழியே தமிழ்தான் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் எரிச்சலாகித்தான் புதுமைப்பித்தன் "உலகில் தோன்றிய முதல் குரங்கு தமிழ்க்குரங்கே!" என்று கூறினார். இப்படி இந்தத் தமிழ்ப் பிரியர்களை - தமிழ் வெறியர்களை நான் கிண்டல் செய்துகொண்டு வந்தாலும் அவர்களுக்கென்று ஏதேனும் ஆதரவுக் குரல் ஒலிக்காமலா போய்விடும்? அப்படி ஒரு குரல் நேற்று என் காதில் ஒலித்தது. அந்தக் குரலை யாராவது ஒரு மூணாங்கிளாஸ் தமிழ் வாத்தியாரோ அல்லது பாரதிதாசனாரின் ஐந்தாம் தலைமுறையில் தோன்றிய தமிழேறு தமிழ்மணி தமிழ்ச்சுடர் போன்று பெயர் வைத்த கவிஞன் எவனோ அறுசீர்க் கழிநெடிலடியில் தடாலடியாக முழங்கியிருந்தால் நான் ஆச்சிரியப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் அந்தக் குரல் யாருடையது தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள். என்னாலேயே முதலில் நம்பமுடியவில்லையே!

 ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking ) என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது என்ன, விஷயம் ரூட்டு மாறுகிறது என்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள். ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு பிரபஞ்சவியல் விஞ்ஞானி. குவாண்டம் இயற்பியலில் இன்றுள்ள ஜாம்பவான்களில் ஒருவர். ஐன்ஸ்டீனுக்கு அடுத்து வந்த மிகப்பெரிய அறிவியல் மூளை என்று போற்றப்படுபவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். ஆனால், ஆளைப்பார்த்தால் பரிதாபமாக இருக்கும். பக்கவாதம் போல், ஸ்டீபனுக்குக் கழுத்துக்குக் கீழே முழு வாதம். ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு சிந்தித்துக் கொண்டே இருக்கிறார். அதுதான் அவருடைய முழு நேரப்பணி. அவருடைய வாழ்க்கையே அதுதான். ஸ்பெஷல் கருவிகளை வைத்துத்தான் பேசுகிறார்.


சிவபெருமானுக்கு யோகேஸ்வரன் என்றும் யோகமூர்த்தி என்றும் பெயர் உண்டு. ஷண் மதங்களில் ஒன்றான சைவம் ஆறு ஞான மரபுகளில் ஒன்றான யோகத்துடன் இன்டர்செக்ட் ஆகி வந்த வடிவம் அது. இமய மலைச் சிகரம் ஒன்றில் கண்கள் மூடி கால்களை மடித்து அமர்ந்து சிவன் தியானம் செய்யும் வடிவம். அதுபோல்தான் ஸ்டீபன் ஹாக்கிங்கும் சதா சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு தன் மூளைக்குள் அண்ட சராசரங்களைச் சுழல விட்டபடி அவற்றின் ஊடாகக் காலத்தால் பின் நோக்கிப் பயணம் செய்கிறார், இந்தப் பிரபஞ்சம் தோன்றிய அந்த முதல் கணத்தைத் தரிசித்து விடவேண்டும் என்று. ஸ்டீபன் ஹாக்கிங் செய்யும் இந்த தவத்தைப் பார்த்தால் அவரை நீங்கள் "விஞ்ஞானச் சிவபெருமான்" என்றோ "விஞ்ஞான யோகி" என்றோ அழைப்பீர்கள்! ( "அட, இது ஒரு பெரிய விஷயமா? அண்ட சராசரம் உருவானதைப் பத்தி எங்க ஊரு கிளிஜோசியருட்ட கேட்டா புட்டு புட்டு வப்பாரு" என்று படுத்த வேண்டாம்.)

ஸ்டீபன் ஹாக்கிங் "காலத்தின் சுருக்கமான வரலாறு" (A BRIEF HISTORY OF TIME) என்று ஒரு நூல் எழுதியுள்ளார். அதில், பிரபஞ்சம் உருவாகி வந்த பல கோடி வருடங்களுக்கான பௌதிகக் காரணங்களின் அடிப்படையிலான வரலாறு கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது என்றும் முதல் ஐந்து அல்லது ஆறு நொடிகளுக்கான காரணத்தில்தான் கடவுள் ஒரு கருதுகோளாகத் தேவைப்படுகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். அதைக் கண்டறிவதில்தான் ஸ்டீபன் இப்போது முனைப்பாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்டீபன் அப்படி ஒரு ஆழ்நிலை தியானத்தில் - சூபி கலைச்சொல் வேண்டுமா? தருகிறேன்- 'முராக்கபா'வில் இருந்தபோது அந்த எதிர்பாராத ஒலியை அவர் கேட்டுள்ளார். கால வெளியில் பின்னோக்கி நகர்ந்து நகர்ந்து பிரபஞ்சம் ஒரு ஒற்றைப் புள்ளியாகச் செறிந்து நின்று "BIG BANG" என்னும் பெருவெடிப்பு நிகழ்வதற்கு முந்தைய கணங்களுக்குள் அவர் நுழைந்தபோது அந்த ஒலியைக் கேட்டுள்ளார். அவருடைய பிரக்ஞை அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டதாம். அது என்ன மந்திர உச்சாடன ஒலிகள் என்று கூர்ந்து கவனித்து நல்லவேளையாக நினைவில் பதித்துக் கொண்டாராம். உடனே அந்தக் கணத்திலிருந்து தூக்கியெறியப்பட்டு மீண்டும் பல கல்ப கோடி ஆண்டுகள் தாண்டி  வந்து சக்கர நாற்காலியில் விழுந்து பிண்டச் சிறையில் தன்னைக் கண்டுகொண்டாராம்.

தான் கேட்ட அந்த வினோத ஒலிகளை மீண்டும் மீண்டும் மண்டையில் போட்டுக் குடைந்த பிறகுதான் மனுஷனுக்குப் பொறி தட்டியுள்ளது. உடனே செல்போனில் என்னை அழைத்துப் பேசினார்! இங்கே ஒரு ரகசியத்தை நான் குறிப்பிட வேண்டும். ஸ்டீபன் என்னுடன் மட்டும் தமிழில் பேசுவார். அவருக்குத் தமிழ் ஓரளவுக்குத் தெரியும்! விஷயம் என்னவென்றால் அவர் கேட்ட அந்த ஒலிகள் தமிழ்தான்! தொடர்ந்து சங்கப் பாடல்களாக ஒலித்துக் கொண்டிருந்ததாம். தமிழர்களே, சிலிர்க்கிறது அல்லவா? இறும்பூது எய்துகிறீர்கள் அல்லவா? இல்லாமலா பின்ன?

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு 
முன் தோன்றிய மூத்த குடி"
அல்லவா நம் தமிழ்க்குடி? இந்த வரிகளின் அறிவியல் விளக்கம் இப்போது புரிகிறதா? பெருவெடிப்பு நிகழ்ந்து கல்லும் மண்ணும் தோன்றும் முன்பே தொல்காப்பியரும் கபில பரணரும் ஔவையாரும் அவரன்ன சங்கக் கவிஞர்களும் பிறந்து தமிழ்ப்பால் மாந்தி சங்கக் கவிதைகளைப் பாடியுள்ளனர். ( இதே தமிழ்ப்பாலைத்தான் ரஜினிகாந்த் இன்னமும் குடித்து வருகிறார். ஆனால் அவர் கவிதையெல்லாம் எழுதமாட்டார். தமிழை வாழ வைக்கிறார்!)

எனவே, சங்கக் கவிஞர்களை நாம் இனி "பெருவெடிப்புக் கவிஞர்கள்" (BIG BANG POETS) என்று அழைத்துப் பெருமை கொள்ளலாம். வெள்ளிவீதியாரை இவர்கள் பட்டியலில் சேர்க்க முடியாது. அவர் காலத்தால் பிற்பட்டவர். அதாவது பெருவெடிப்பு நிகழ்ந்த பல கோடி வருடங்களுக்குப் பின்னால் உருவான MILKY WAY OF GALAXY என்னும் பால் வீதி தோன்றிய ஞான்று பிறந்தவர் அவர். அதையே வெள்ளி வீதி என்ப. அதனால் அவர் "வெள்ளிவீதியார்" எனப்பட்டார்.

போதும் தமிழர்களே, நம் பெருமைகளைக் கேட்டு நமக்கே புல்லரிக்கிறது! ஆனால் எவனாவது தமிழ்ப் பகைவன் தோன்றி "பெரிய வெடிச் சத்தத்துடன் கவிதை எழுதியவர்கள் என்பதால்தான் பெருவெடிப்புக் கவிஞர்கள் என்று சங்கப் புலவர்களை அழைக்கிறோம்" என்று திரித்துப் பொருள்கூறித்  தமிழர்களின் நெஞ்சிலே நஞ்சு கலந்துவிடாமல் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வாழ்க தமிழ்! வெல்க தமிழ்! 



Sunday, September 26, 2010

பறக்கும் லிங்கம்


தலைப்பைப் பார்த்ததும் ஏதோ புராணக் கதையில் வரும் சம்பவம் என்று நினைக்க வேண்டாம். அல்லது, கல்லூரி மாணவனோ தாந்திரீகச் சாதகனோ கண்ட அமானுஷ்ய கனவு என்றும் எண்ணவேண்டாம். வேறு என்னதான் விஷயம் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன், சொல்கிறேன்.

"உடம்பெல்லாம் பல்லு. அது என்ன?" - சீப்பு.
"ஒரே பெட்டியில் ரெண்டு தைலம்?" - முட்டை.
இப்படியெல்லாம் கிராமங்களில் விடுகதை போடுவார்களே, அதுபோல் இதுவும் ஒரு தாந்திரீக விடுகதை என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போ சொல்லுங்க, "பறக்கும் லிங்கம். அது என்ன?" - விமானம்!

இதை நான் கூறவில்லை. டான் பிரவுன் (DAN BROWN ) எழுதிய டிசப்ஷன் பாய்ண்ட் (DECEPTION POINT ) நாவலில் வரும் ஒரு விமான வருணனை இது. அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலக விமானத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: "Rachel got out of the chopper and gazed up the steep gangway at the bulging hull. Into the flying phallus." (Chapter #6)


ஆனால் விமானத்தின் இரு பக்கங்களிலும் அசையாத இரண்டு இறக்கைகள் நீட்டிக்கொண்டுள்ளன. வானில் பறக்கும் விமானத்தைத் தரையிலிருந்து  அண்ணாந்து பார்த்தால் அது ஒரு பறக்கும் சிலுவைபோல் தோன்றும். அவ்வாறு சிறகுகளை அசைக்காமல் பருந்து மட்டும் மிக உயரத்தில் வட்டமிடுவதைப் பார்க்கலாம். கருடன் என்னும் பறக்கும் சிலுவையில் பயணம் செய்வது ஏசுநாதறல்ல, கிருஷ்ணன்!



விமானத்தை பறக்கும் சிலுவை என்று வைத்துக்கொண்டாலும்தான் என்ன? சிலுவையின் நேர்க்கோடு லிங்கம் என்றும், அதன் குறுக்குக்கோடு யோனி என்றும் ஒரு குறியீட்டு வாசிப்பு உண்டு.

விமானம் கண்டுபிடிக்கப்பட்டது ரைட் சகோதரர்களின் நினைவு மனத்தால் என்றாலும், பின்னால் அதற்கு இப்படியொரு வடிவத்தைக் கொடுத்த தொழில்நுட்பன் (Technologist ) தன் நினைவிலி மனத்திலிருந்துதான் கொடுத்திருக்கிறான். ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானத்தின் வடிவம் ஒரு வவ்வாலைப் போல் இருக்கும். அந்த வடிவத்தின் முன்னோடி ஓவியர் லியோனார்தோ டாவின்சி ஆவார். வவ்வாலின் வடிவத்தில் அவர்தான் முதன்முதலில் விமானத்தைக் கற்பனை செய்து வரைந்தார். அதற்கு ஓர்நிதோஹாப்டர் (Ornithohopter ) என்று பெயர்.

  

பறக்கின்ற வாகனம் ஒன்றிற்கு இப்படியொரு குறியீட்டு வடிவத்தை அவன் கொடுத்துத் திருப்தி அடைந்ததன் உளவியல் பின்னணி என்ன? எந்த ஒரு உயிரியல் சக்தி அவனை மண்ணை நோக்கி, இக உலகை நோக்கி இழுக்கிறதோ, அதே சக்தியைக் கொண்டு அவன் விண்ணை வசப்படுத்த விரும்புகிறான் என்பதுதான் அது!




கவிக்கோவும் புவிக்கோவும்



நான் மிகவும் சிலாகித்துப் படித்த கவிஞர்களில் ஒருவர் கவிக்கோ அப்துல் ரகுமான். ஒரு பத்து வருட காலம் அவருடைய நூல்கள் என்னைச் சிலிர்க்கச் செய்தவை என்று சொல்லவேண்டும். அதன் பின் நிலைமை மாறத் தொடங்கிவிட்டது. தமிழ்ப் புதுக்கவிதையில் அவருடைய ஆளுமையைத் தாண்டியவர்களை நான் கண்டடைய நேர்ந்தது. நான் மிகவும் தாமதமாகத்தான் அவரை விமரிசிக்கத் தொடங்கினேன். அதுவும், பிறர் செய்த விமரிசனங்கள் மீது என் சிந்தனையை செலுத்தியபோது அவை எழுப்பிய கேள்விகளுக்கு என்னால் பதில் கூறமுடியவில்லை.



கவிக்கோவைப் பார்த்து ஒரு பெண் எழுத்தாளர் கேட்டாராம்,"நீங்கள் உங்களைக் கவிஞர் என்று கூறிக்கொள்கிறீர்கள். ஆனால் கவிதைகளை விடவும் அதிகமாகக் கட்டுரைகள்தான் எழுதுகிறீர்கள். தயவு செய்து கவிதை எழுதுங்கள்." இந்த விமரிசனத்தில் ஞாயம் இருக்கிறது. ஏனெனில் இடையில் ஒரு கணிசமான காலம் அவர் கவிதையே எழுதியதாகத் தெரியவில்லை. கட்டுரை நூல்களாகவே வெளிவந்தன. கவிக்கோ என்பதற்கு பதிலாகக் "கட்டுரைக்கோ" என்று அழைக்கலாம்போல் தோன்றியது. ஆனால் இது ஒரு சிறிய விஷயம்தான். கலீல் கிப்ரன்கூட கவிதைகளை விடவும் அதிகமாக உரைநடைதான் எழுதியிருக்கிறான். ஆனால் அவனுடைய கல்லறையிலேயே "இங்கு நம் கவிஞன் உறங்குகிறான்" என்று பொறித்து வைத்து அவன் ஒரு கவிஞன்தான் என்று ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.

சமீபத்தில் முனைவர் அமுதா என்பவர் எழுதி வெளிவந்துள்ள "தமிழ் இலக்கிய வரலாறு" என்னும் நூலில் அவளுக்கு நிலா என்று பேர், சலவை மொட்டு, சுட்டு விரல், முட்டை வாசிகள், சொந்தச் சிறைகள் ஆகியவை அப்துல் ரகுமான் எழுதிய கவிதைத் தொகுதிகள் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் சுட்டு விரல் தவிர பிற எல்லாம் கட்டுரை நூல்கள்!

 கவிக்கோவின் மீதான விமரிசனங்கள் வேறு விதங்களில்  என் மனதைத் தாக்கின. குமுதமோ ஆனந்த விகடனோ தெரியவில்லை, ஒரு கற்பனை எழுத்தோவியம் வந்திருந்தது. சுருக்கமாகச் சொல்கிறேன். கவிஞர்கள் அனைவரும் கலைஞர் கருணாநிதியிடம்தான் நேசமாக இருக்கிறார்கள் என்பதால் கடுப்பாகிப்போன ஜெயலலிதா, அவர்கள் அனைவரையும் கடத்திக்கொண்டு வந்து தன்னைப் புகழ்ந்து கவிதை படிக்கச் சொல்வார். அதில் கவிஞர் வாலி மட்டும் வெளுத்து வாங்குவார். (காரணம் இருக்குதுங்கோ!) கவிக்கோவும் ஒரு கவிதை படிப்பதாகக் கற்பனை செய்து எழுதியிருந்தார்கள். ஆச்சரியம் என்னவென்றால் அது அவர் எழுதுகின்ற தரத்திலேயே இருந்தது. அதாவது, கவிக்கோவின் கவிதைத் தரத்தை ஒரு நக்கல் எழுத்தாளனால் நக்கலாகவே தொட்டுவிட முடிகிறது! படித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டதால் அந்தக் கவிதை எனக்குச் சரியாக நினைவில்லை. அது என்னவோ,
"நட்சத்திரங்கள் கண்மூடும்
பௌர்ணமிப் பொழுதில்
வானவில்லின்  வழியே
இறங்கி வந்தாய் நீ"
என்பதுபோல் இருக்கும். குறியீட்டுப் படிமக் கவிதை. இது வெகுவாக என்னைப் பாதித்தது. வைரமுத்துவுக்கென்று சில சொற்கள் உள்ளன. ஓரிரு பாணியும் உள்ளது. அதை அவதானித்தால் போதும். எந்த மங்குனிக் கவிஞனும் அதுபோல் எழுதிவிடலாம்.
"அடடா! என்ன இது?
என் மனதில் ஒரு
மசக்கைச் சிலிர்ப்பு?"
என்பது போன்று தொடங்கி நிலா, தென்றல், கன்னி, காதல், அருவி, குருவி என்று ஒரு டஜன் சாப்ட்வேர் சொற்களும், தீ, பிழம்பு, எரிமலை, பிரளயம் போன்று ஒரு டஜன் ஹார்ட்வேர் சொற்களும் போட்டு இளைஞர்களின் அண்டர்வேருக்கு அப்பீல் ஆகும் கவிதைகளைத் தந்து நீங்களும் கவிப்பேரரசு ஆகிவிடலாம்.



ஆனால் கவிக்கோவுக்கும் இது பொருந்தி வரும் நிலை இருப்பதைக் கண்டபோது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. கஜல் எழுதுகிறேன் என்று அவர் தொடர்ந்து வெளியிட்ட நூல்களில் ஆடம்பரம் இருக்கும் அளவு சாரம் இல்லையோ என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. ஒரு சில கவிதைப் பொறிகள் மட்டுமே பிரகாசம் காட்டின. மற்றவை வெறும் அவல் பொரியைப்போல் இருந்தன! ஒரு சில சொற்களின் செட்டும் அவற்றைக் கோர்க்க கவிக்கோ பாணியையும் கொஞ்சம் கற்றுக்கொண்டால் நாமும் அதைப்போல் எழுத முடியும் என்று தோன்றியது. பேராசிரியர்.வ.முஹம்மது யூனுஸ் அப்படிச் சில கஜல் பொறிகளை எழுதியும் காட்டினார். அதைத் தொடர்ந்து சில மாணவர்களும் அதைப்போல் எழுதத் தொடங்கிவிட்டார்கள். கஜல் பொறிகள் அவற்றின் கீழ்தளத்தில் கடலைப் பொரிகள்தானே? அதுமட்டுமல்ல, ஒரு மாணவன் எழுதிய கஜல் 'பொரி' ஒன்றில் நான் தவறு கண்டபோது "எண்ணன்னே, கவிக்கோ எழுதுனா ஒத்துக்குறீங்க. நான் எழுதுனா ஒத்துக்க மாட்டேங்குறீங்க" என்று போட்டானே பாக்கணும் அருவாள.  ஏழு வருஷம் ஆகியும் மறக்கல. 

இதெல்லாம் பரவாயில்லை. இன்னொரு சம்பவம் சொல்றேன் கேளுங்க. ஒரு முறை வகுப்பிற்கு அப்துல் ரகுமான் எழுதிய "இன்றிரவு பகலில்" நூலை எடுத்துச் சென்றேன். மாணவர்களுக்கு நல்ல நூல்களை அறிமுகம் செய்து வைப்பது ஆசிரியனான என் கடமை அல்லவா? அதனால், அவ்வப்போது ஏதாவது ஒரு நூலை எடுத்துச் சென்று அதைப்பற்றிக் கூறுவதுண்டு. "அப்துல் ரகுமான் எழுதிய அருமையான நூல் இது. 'இன்றிரவு பகலில்'" என்றுதான் சொன்னேன். ஒரு மாணவன் தன் அருகிலிருந்தவனிடம் ஏதோ கூறிச் சிரித்தது என் கண்ணில் பட்டது. நூலை மூட்டி வைத்துவிட்டு, அவனை எழுந்து நிற்கச் சொன்னேன். எழுந்து நின்றான். என்ன சிரிப்பு என்று கேட்டேன். பக்கத்தில் இருந்தவனையும் எழுப்பினேன். கால் மணி நேரம் மழுப்பிய பிறகு காரணத்தைச் சொன்னான். அதாவது, "இன்றிரவு பகலில்" என்னும் தலைப்பு ஏதோ நீலப் படத்தின் பெயரைப் போல் தொனிக்கிறதாம். அதனால் சிரித்தானாம். மாணவர்களிடம் இலக்கியப் பிரக்ஞையை வளர்க்கிறேன் என்று எனக்கு இதெல்லாம் தேவைதானா? பிறகு பொறுமையாக யோசித்த போதுதான் அவன் சொன்னதிலும் ஒரு பாய்ண்ட் இருப்பது தெரிந்தது. கவிக்கோ எழுதிய நூல்களின் பெயர்களை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்தேன்: "இன்றிரவு பகலில்", 'அவளுக்கு நிலா என்று பெயர்', 'உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்', 'சலவை மொட்டு', 'நேயர் விருப்பம்', 'உறங்கும் அழகி', 'பால் வீதி', 'ரகசியப் பூ'.... ஆகிய பெயர்கள் அந்த விஷயத்தை சஜ்ஜஸ்ட் செய்து தொனிப்பது போல் உள்ளதை உணர முடிந்தது. கவிக்கோ அப்படியெல்லாம் எழுதுபவறல்ல என்பது எனக்கும் உங்களுக்கும் தெரியும். என்றாலும் நாளை எவனாவது பின்-நவீனத்துவப் பார்வை முன்-நவீவத்துவப் பார்வை என்று கிளம்பி வந்து கட்டுடைப்பு கடப்பாரை என்று கவிக்கோவைக் குடைந்தால் இப்படியெல்லாம் விமரிசனம் வரும் அல்லவா? அது எவனோ சிக்மண்டு பிராய்டாமே? உளவியலைப் பிராண்டிப் பிராண்டி அடிமனசுல இருக்கிறது இதுதான் பார் என்று அள்ளிக்கிட்டு வந்து காட்டுவானாமே? அப்படி யாராவது கிளம்பி, "கவிக்கோ அப்துல் ரகுமான்: ஒரு பிராய்டிய குறுக்கு வெட்டுத் தோற்றம்" என்று நறுக்கிப் போட்டுவிட்டால் என்னாவது?

கவிக்கோ "வானம்பாடி" இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றுதான் கொள்ள காலமாக நான் நினைத்திருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது. அவர் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தவராம். அதாவது, வாணியம்பாடியில் இருந்து. அதைத்தான் நான் தவறாக விளங்கிவிட்டேன் போலும். அவர் கலைஞருடன்தான் நெருக்கமாக இருந்து கவிதைகள் பாடுவார். வானம்பாடிகளை ஆதரிப்பார், உற்சாகப் படுத்துவார். போராட்டங்களில் கலந்துகொள்ள மாட்டார். கண்ணதாசனைப்போல் மீன் சந்தையில் விண்மீன்களை விற்க மாட்டார். மீலாது விழாக்களில் நபிகள் நாயகத்தைப் புகழ்ந்து கவிதை பாடுவார். இந்து மதத்தின் தொன்மங்களை வைத்து சமூக, அரசியல் அங்கதக் கவிதைகள் புனைவார். ஆனால் அதற்கு இஸ்லாமியத் தொன்மங்களைப் பயன்படுத்த மாட்டார்! (இந்த விமரிசனம் இந்து மதத்தைச் சேர்ந்த என் பேராசிரிய நண்பர் ஒருவர் கூறியது) தெளிவானவர்.

ஆனால் அவருக்குமா இப்படியொரு எதிரி தோன்றவேண்டும்? அதுவும் அவருடைய பாணியிலேயே அவருக்கு எதிர்ப்பாட்டு பாடிக்கொண்டு. இது என்ன புதுக்கதை என்கிறீர்களா? புதுக்கதைதான். எவனோ புவிக்கோ என்று ஒரு புல்லுருவிக் கவிஞன் புறப்பட்டு உள்ளானாம். அடிப்பொடிகள் ஐம்பது பேரைச் சேர்த்துக்கொண்டு கவியரங்குகள் எல்லாம் நடத்துகிறானாம், கவிதை நூல்கள் வெளியிடுகிறானாம். என் பார்வைக்குக்கூட சில நூல்கள் வந்தன. "தயிர் வீதி" என்று ஒரு புத்தகம். வீதி வீதியாகத் திரிந்து தயிர் விற்கின்ற பெண்கள் படும் பாடுகளைப் பேசுகிறது. "சுண்டு விரல்" என்றொரு நூல். இளசுகளின் உள்ளத்தைச் சுண்டுமாம். ஒவ்வொரு வரியும் ஊவன்னாவில் ஆரம்பிக்கும் கவிதைகளின் தொகுப்பு ஒன்று."ஊலாபனை" என்று பெயர். "நாயர் விருப்பம்" என்று ஒரு கவிதை நூல். புவிக்கோவின் நெருங்கிய நண்பர் மாதவன் நாயர் என்பவர் விரும்பிக் கேட்ட விஷயங்களைப் பாடும் நூலாம் இது. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டால் உலகம் நிச்சயம் "யார் இந்தப் புவிக்கோ?" என்று விசாரித்துக்கொண்டு வந்து உதைக்குமாம். அவ்வளவு நன்றாக உள்ளதாம். "ரகசியப் பழம்" என்று ஒரு கவிதை நூல். இன்னும் வெளிவரவில்லை. தவம் செய்து எழுதிக்கொண்டிருக்கிறாராம். சாகித்திய அகாதமி விருது வாங்கும் என்று புவிக்கோவின் பரம ரசிகர்கள் சத்தியம் செய்கிறார்கள். அதற்கான முஸ்தீபுகளில் இறங்கி அரசியல் செய்துவருகிறாராம். பின்னே, அரசியல்வாதிகள் கவிதை எழுதலாம், கவிஞர்கள் அரசியல் செய்யக்கூடாதா? 

Wednesday, September 22, 2010

தவறுகளின் தமிழ்ப்பணி





பேராசிரியர் மா.நன்னன் எழுதிய "நல்ல தமிழ் பேச வேண்டுமா?" என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. நூலை வெளியிட்டுப் பேசிய பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள், "இப்பொழுதெல்லாம் தமிழைத் தப்பும் தவறுமாக எழுதிவைத்து அதனை ஆய்வேடு என்கிறார்கள். அதற்குப் பட்டங்களும் வழங்கப்படுகின்றன" என்று குறிப்பிட்டார். 

தமிழைப் பிழையின்றி எழுதவே தெரியாதவர்கள் பேராசிரியர்களாக இருப்பதையும் முனைவர் பட்டம் வரை பெற்று உலா வருவதையும் கண்டுவருகிறோம். தமிழை வைத்து இவர்கள் செய்யும் தொழில்களைக் காணும்போது "தமிழன்னை" போன்ற சொற்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்று படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, மாணவர்களின் விடைத்தாள்களில் காணப்படும் எழுத்துப் பிழைகளை வைத்து அங்கத இலக்கியத்தை நான் பல வருடங்களாகப் பயின்று வருகிறேன் என்பதையும் கூறவேண்டும். அந்த வகையில் தப்புத் தப்பாக எழுதித்தள்ளும் மாணவர்கள் எனக்கு ஆசிரியர்களும் ஆவார்கள்! அவர்களிடம் கற்ற சில 'பாடங்களை', அதாவது அங்கதமாக மலர்ந்த பாடபேதங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
(பாடபேதம் என்பதைச் சுருக்கமாகப் பா.பே என்று குறிப்பிடுகிறேன்)

தமிழில் ந,ன,ண ர,ற ல,ள, ழ ஆகிய எழுத்துக்களை மாணவர்கள் ஒரு ஆப்ஷனல் வசதியாகவே பார்க்கிறார்கள் போலும். எதை எங்கே வேண்டுமானாலும் போடலாம் என்று நினைக்கிறார்கள். இது அமெரிக்கக் கலாச்சாரத் தாக்கம் என்று நினைக்கிறேன்.

பா.பே.#1 :  சிலப்பதிகாரத்தின் 'புகார்க் காண்டம்' என்பதை ஒரு மாணவன் "புகாக் காண்டம்" என்று எழுதியிருந்தான். என்ன பொருளில் எழுதினானோ அவனுக்கே வெளிச்சம். இதற்கு இரண்டு மதிப்பெண்கள் வேறு நான் போடவேண்டும்.என் தலைஎழுத்து.

பா.பே.#2 : சிலப்பதிகாரக் கதையை இன்னொருவன் இப்படி எழுதியிருந்தான்: "காணல்வெறி என்பது இலங்காவடிகளின் கவிதை ஆற்றல் முழுமையாக வெளிப்படும் இடமாகும். அதில் கேவலன் மாதவியைப் பார்த்து 'உன் கைவண்ணம் அன்று கண்டேன், வாய் வண்ணம் இன்று கண்டேன்' என்று பாடினான். உடனே மாதவி அவனுடன் ஊட்டினாள்." இந்தச் 'சிலப்பதிகாரம் மாணவர் வெர்ஷனை "பாம்புகார்" என்று யாராவது படமெடுத்து விடாமலிருந்தால் சரி.

பா.பே.#3 :  "கத்தி இன்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்பது ஒரு புரட்சிப் பாடல் என்று ஒருவன் எழுதியிருந்தான். இதிலென்ன தவறு என்கிறீர்களா? ஒன்றுமில்லைதான். ஆனால் இந்தப் பாடலை எழுதியவர் நாமக்கள் கவிஞராம். அவரது இயற்பெயர் வெ.ரோமலிங்க அடிகளாம். பொதுவாக மாணவர்கள் "தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா" என்ற கவிதையைப் பாடியது புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் என்றுதான் எழுதுவார்கள். அது எவ்வளவோ தேவலாம். 

பா.பே.#4 :  கலைஞரின் மனோகரா வசனம் ஒன்றை ஒரு வகுப்பில் ஒரு முறை கூறியிருந்தேன். அதை இப்படி எழுதியிருந்தான் ஒருவன்: "துள்ளி வருகுது வேல், ஆவேசத்தை அள்ளி வருகுது வால்!" யப்பா மனோகரா, வால் ஒன்னு ஆவேசத்த அள்ளிக்கிட்டு வருதாம்ப்பா, பாத்துக்க.

பா.பே.#5 :  'புதுக்கவிதையின் வளர்ச்சி குறித்து எழுதுக' என்று கேள்வி கேட்டிருந்தது. அதற்கான விடையில் கவிஞர் வாலியைப் பற்றி ஒருவன் இப்படி எழுதியிருந்தான்: "வாலி ஒரு சிறந்த கவிஞர். இவர் அனுமாரை மறைந்திருந்து கொன்றார். [தேவைதான் அவருக்கு] இவர் எதிரியின் முன் வந்து நின்றால் எதிரியின் பழம் இவரிடம் வந்துவிடும்.[ஆமாம், திடீரென்று பழம் காணாமல் போய்விட்ட அதிர்ச்சியில் எதிரி மாரடைப்பு வந்து செத்துவிடுவான். இதுவும் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு அகிம்சை யுத்தம்!]

பா.பே.#6 :  சில மாணவர்களின் வைர வரிகளில் மீ-மெய்ம்மியல் சித்திரங்களைக் காண முடியும். 'ஆற்றிலே வெல்லம் புரண்டு புரண்டு ஓடியது' என்பதை அப்படியே கற்பனை செய்து பார்த்தால் தெரியும். 'மூளையிலே வால்' என்பதும் அப்படிப்பட்ட ஒரு வரிதான்.

பா.பே.#7 : 'அண்மையில் நடந்த விபத்தில்...' என்று ஒரு சிறுகதை துவங்கும். அதை வெகு சிரத்தையாக 'ஆண்மையில் நடந்த விபத்தில்...' என்று தொடங்கியிருந்தான். ஓபனிங் சீனிலேயே கதையை முடித்துவிட்டான்!

பா.பே.#8 : "பனை மாலை சூடிச் சேர வேந்தன் சிம்மக் குரலில் சூளுரைத்தான்" என்று நான் ஒழுங்காகத்தான் சங்க இலக்கியம் நடத்தியிருந்தேன். மாணவன் ஒருவனுக்கு அதில் உடன்பாடே இல்லை போலும். 'பணமாலை சூடி சேர வேந்தன் சிரமக் குரலில் சூளுரைத்தான்' என்பதுதான் அவனுக்குச் சரியாகப் படுகிறது.

பா.பே.#9 : இன்றைய மாணவர்களின் சிந்தனையே ஒரு மல்டி-டிசிப்ளின் போக்குடையாதாக இருக்கிறது. இலக்கியத்தில் அறிவியல் துறைகளை லாவகமாக நுழைப்பதில் இவர்கள் வல்லவர்கள்தான். 'விழையும் பயிர் முலையிலேயே தெரியும்' என்று ஒரு பழமொழியாம்! இது இலக்கியத்தில் அனாட்டமி போலும்.

பா.பே.#10 : ஒரு விடைத்தாளில் ஒரு கட்டுரை நெடுக "அரிஞர் அண்ணா", "பேரரிஞர் அண்ணா" என்றே எழுதப்பட்டிருந்தது. அப்படி என்னதான் அவர் அரிந்து தள்ளினார் என்று தெரியவில்லை. பகுத்தறிவு நளபாகத்தில் வெங்காயம் அரிந்தவர் என்று சொல்லவருகிறான் போலும். இன்னொரு செய்தியையும் பாருங்கள். அதாவது, நம் 'அரிஞர்' அண்ணா ஒரு மீட்டிங்குக்கு மிகவும் லேட்டாகப் போனாராம். அப்பவும் பெருங்கூட்டம் காத்திருந்ததாம். அவர்களைப் பார்த்து, "இங்க என்னய்யா செஞ்சுக்கிட்டிருகீங்க? வீட்டுக்குப் போய் சோலியப் பாருங்கய்யா" என்று கூறுவதுபோல் "மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களைத் தழுவுவதோ நித்திரை, மறக்காது இடுவீர் முத்திரை" என்று மிடுக்காக அடுக்கினாராம். உடனே தம்பிமார்கள் கிளம்பி வீடுகளுக்குச் சென்று மறக்காமல் முத்திரை இட்டார்களாம்! 

இப்படி தமிழின் எழுத்துக்களை தக்க இடங்களில் தப்பாகப் பயன்படுத்தியே பின்-நவீனத்துவம், மீ-மெய்ம்மை, கட்டுடைப்பு போன்ற உத்திகளை மாணவர்கள் உண்டாக்குவது இலக்கிய வளர்ச்சியில் நாம் எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறோம் என்பதைக் காட்டுகிறது அல்லவா? வாழ்க தமிழ்!   

Monday, September 20, 2010

தட்டைமுகத் தரிசனம்

                         

மக்காவில் எழுப்பப்பட்டுள்ள மணிக்கூண்டு பற்றிய சிந்தனைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெரும் ஒரு கட்டிடம் ரொம்ப அவசியம்தானா? என்று தோன்றியது. இது போன்ற சிறுபிள்ளைத்தனமான வேலைகள் சவூதி வஹ்ஹாபிகளின் மார்க்க உளவியலையே கேள்விக்குறியாக்குகின்றது. எந்த விதமான சமய போதமும் அற்ற ஒரு தற்குறிக் கூட்டம் என்றுதான் இந்த சவூதி வஹ்ஹாபிகளையும் அவர்களின் அடிவருடிகளையும் பார்க்கவேண்டியுள்ளது. இந்த மணிக்கூண்டு எந்த வகையில் புனித மக்காவிற்குச் சிறப்பு சேர்க்கின்றது என்று தெரியவில்லை.



 சவூதி அரசு என்பது வம்சாவழி மன்னராட்சியில் உள்ளது. மன்னர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மக்கா மற்றும் மதீனா நகரங்களின் நவீன வடிவமைப்பில் அவர்கள் காட்டி வந்துள்ள கட்டிட மோகத்திற்கு ஒரு சான்றாகவே இந்த மணிக்கூண்டு அமைந்துள்ளது. இது போன்ற பிரம்மாண்டமான கட்டிடங்கள் ஹஜ் பயணிகளின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் காபாவின் மீதான அவர்களின் கவனத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாக அமைந்துவிடக் கூடும். ஏனெனில் சராசரி மனநிலை எப்போதும் பெருவடிவங்களின் முன் எளிமையின் பேரழகை கவனத்தில் இழந்துவிடுவதாகவே உள்ளது. இங்கோ, அந்த மணிக்கூண்டின் அடியில் காபாவைப் பார்க்கும்போது ராட்சத கோலியாத்தின் முன் சின்னஞ்சிறு தாவூது (அலை) நிற்பதைப்போல் உள்ளது.

  உலகப் பொருட்களின் அங்காடிகள், நவீன விடுதிகள் என்று ஏற்கனவே சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் எல்லா வசதிகளும் மக்கா மற்றும் மதீனாவில் உள்ளன. இப்போது உலகின் மிக உயரமான மணிக்கூண்டு வேறு. போகும் போக்கைப் பார்த்தால் ஹஜ் செல்வதை ஏதோ டிஸ்னி லேண்டுக்குப் போவதைப் போல் ஆக்கிவிடுவார்கள் என்று தோன்றுகிறது!

இப்ராஹீம் நபி (அலை) காபாவைக் கட்டியது  ஐயாயிரம் வருடங்களுக்கு முன். சுற்றிலும் வெறும் வனாந்தரம். நடுவிலே காபா. அது ஒரு கச்சிதமான வடிவத்தில்கூட இல்லை. நன்கு சுவர்களும் அளவெடுத்துக் கட்டியதாக இல்லை. கொஞ்சம் கோணலாக இருந்தது என்றுதான் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட கட்டிடத்தைத்தான் இறைவன் தன் வீடு என்று கூறிச் சிறப்பளித்தான். கச்சிதமாக இருக்கிறதா அல்லது கோணலாக இருக்கிறதா என்பதல்ல அளவுகோல். அதைக் கட்டியது ஒரு இறைத்தூதர். அதுதான் விஷயம். ஒரு இறைத்தூதரின் கைகள் கோணலாகக் கட்டினாலும் அது இறைவனின் இல்லம்தான். சுலைமான் நபி (அலை) ஜெருசலேமில் கட்டிய இறையாலயம் கச்சிதமான கட்டிடாமாகும். அவர்கள் மாமன்னராக இருந்தார்கள். ஒரு அரண்மனைக்குரிய ஏற்பாடுகளுடன் இறையில்லத்தைக் கட்டினார்கள். அதுவும் இறையில்லம்தான். அது கச்சிதமாக இருந்ததால் அல்ல. அது ஒரு இறைத்தூதர் கட்டியது என்பதால். கோடிக்கணக்கான இறையில்லங்களைக் கட்டுவது விஷயமல்ல. எந்த மனநிலையில் ஒரு இறையில்லக் கட்டிடம் நிர்மாணிக்கப் படுகிறது என்பதுதான் இறைவனின் அங்கீகாரத்தைப் பெறும். இதைக் காபாவின் உருவாக்கமே நமக்குக் காட்டுகிறது.

இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டியபோது காபாவின் கட்டிட அமைப்பு  மிகவும் எளிமையானதாக இருந்தது. பின்னால் வந்த அரபிகளுக்கு காபாவில் ஒன்றுமே இல்லையே என்ற எண்ணம் மலர்ந்தது போலும். எனவே காலப்போக்கில் அதில் கூடுதலாகப் பல சிலைகள், அதாவது முன்னூற்றி அறுபது சிலைகள் நிறுவப்பட்டு மக்கள் தூல வணக்கத்திற்கு வந்துவிட்டார்கள். மக்களின் சிந்தனையை மீண்டும் அருவ வழிபாட்டிற்குத் திருப்பவேண்டிய நிலை வந்தபோது நபிகள் நாயகம் அந்தச் சிலைகளை எல்லாம் நிர்மூலப் படுத்தினார்கள். இப்ராஹீம் நபி அவர்கள் கட்டியபோது இருந்த நிலைக்கே காபா திருப்பப்பட்டது. காபாவைச் சுற்றிலும் சில சிறு மண் வீடுகள் தோன்றியிருந்தாலும் அவை காபாவை விடப் பெரிதாக இல்லை. எனவே காபா அந்த அரபு வனாந்திரத்தில் தன்னை முழுவதுமாகப் பரந்து விரிந்த வானத்திற்கு வெளிப்படுத்திக்கொண்டு நின்றது. அப்படித்தான் பல நூற்றாண்டுகளாக நின்றுவந்துள்ளது. ஆனால் அது இன்று மிகப்பெரிய நவீன கட்டிடத்திற்குள் உள்ளடங்கி ஒரு ஆஜானுபாகுவான மணிக்கூண்டை அண்ணாந்து பார்ப்பது போல் தோற்றமளிக்கிறது. இது வஹ்ஹாபிய உளவியலின் தோற்றம்தான்!

வஹ்ஹாபிய உளவியல் என்பது "டைட்டானிக்" கப்பல் கட்டிய அமெரிக்க உளவியலைப் போன்றதுதான். "உலகிலேயே பெரிசு என்னிடம்தான் உள்ளது"  என்று மார்தட்டிக் கூவவேண்டும். அதில் அதற்கு ஒரு தனிப் பெருமையும் அலாதியான சுகமும் உள்ளது. எளிமைக்கெல்லாம் அதன் அகராதியில் அர்த்தமே கிடையாது!

உண்மையில் காபா உருவாக்கும் சமய உணர்வெழுச்சி, ஆன்மிக மனநிலை என்பது அது நிற்கும் மண்ணோடு மட்டும் தொடர்புடையது அல்ல. காபாவின் மேல் பரந்து உயர்ந்து கவிந்து நிற்கும் வான வெளிக்கும் அதில் முக்கியமான பங்கு உண்டு. காபாவின் மாற்றப்படக்கூடாத ஒரு பரிமாணமாகவே அதன் மீது வானவெளி வியாபித்து நிற்கும் அமைப்பை நான் காண்கிறேன். அந்த நீல விதானம் எந்தக் கட்டிடத்தின் குறுக்கீடும் இன்றி ஹஜ்ஜிற்கு வருபவர்களின் பார்வைகளை இழுக்கவேண்டும். 
அப்போது அது உருவாக்கும் மனநிலை, மணிக்கூண்டு போன்ற கட்டிடங்கள் காபாவிற்கு அருகில் நிற்கும் நிலையில் உருவாக முடியாது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு கூறு காலம் பற்றியது. உலகில் உள்ள எல்லாப் பொருட்களுமே ஓர் ஒற்றைக்காலத்தில் இருப்பதாகப் பார்க்கும் பார்வைதான் மக்காவையும் மதீனாவையும் நவீன கட்டிடக்கலைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால் பழைய அரபி இனத்திற்கென்று தனியாகச் செவ்வியல் கட்டிடக்கலை எதுவும் கிடையாது. இன்று அராபிஸ்க் (Arabesque) என்று அழைக்கப்படும் கட்டிடக்கலைக்  கூறுகள் - பூ வேலைப்பாடுகள், ஜியோமிதிக் கோலங்கள் போன்றவை - எதுவும் நபிகள் நாயகம் காலத்தில் அரேபியாவில், குறிப்பாக காபாவிலும், மஸ்ஜிதுன் நபவியிலும் இருக்கவில்லை. அவை பாரசீகக் கலையுலகிலிருந்து பின்னால் அரபுலகம் வரித்துக் கொண்டவை. அவற்றை இஸ்லாமியக் கூறுகளாக மாற்றியது சூபிகள்தான். நபிகள் நாயகத்தின் காலத்தில் காபாவின் சுற்றுப்புறமும் சரி, மஸ்ஜிதுன் நபவியின் அமைப்பும் சரி, எந்தக் கலையலங்காரமும் இல்லாமல் மிக எளிமையான நிலையிலேயே இருந்தன. அந்த எளிமை இன்று இல்லை. தங்கப் பூச்சுக்கள் அலங்கரிக்க மக்காவும் மதீனாவும் வாட்டிகன் போல் மாற்றப்பட்டுள்ளன. கட்டிட வேலைப்பாடுகளில் அவை தாஜ்மகால் போன்ற கட்டிடங்களின் கலையமைப்பைப் பின்பற்றுகின்றன. இந்தப் புறச்சூழலில் ஹாஜி எவரும் நபிகள் நாயகத்தின் காலச் சூழலை அங்கு உணரமுடியாது. ஹஜ்ஜில் அடைந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான அனுபவத்திற்கு இந்த நவீனப் புறச்சூழல் மிகப்பெரிய தடையாக இருக்கும்! 

 ஆனால் வஹ்ஹாபிகளுக்கு காலம்-வெளி உருவாக்கும் அகநிலை, உள்ளுணர்வு போன்ற விஷயங்களிலெல்லாம் நம்பிக்கையே இல்லை. இது போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜியில் உள்ளம் எல்லாம் தடித்துக்கொண்டு அரிப்பெடுத்துவிடும். எனவே மக்காவிலும் சரி மதீனாவிலும் சரி, தொன்மைச் சூழலைப் பேணுவதற்குப் பதிலாகத் திட்டமிட்டே அழித்து வருகிறார்கள். உதாரணமாக, நபிகளாரின் குடும்பத்தாரும் தோழர்களும் வாழ்ந்த வீடுகளையெல்லாம் நூலகம், மருத்துவமனை போன்ற அலுவலகங்களாக மாற்றியுள்ளார்கள். அதாவது சும்மாக் கிடக்கும் இடத்திற்குப் பயன்பாட்டினை உருவாக்குகிறார்களாம்! இவ்வாறாக, மக்கா மற்றும் மதீனாவில் காணப்படுவது வஹ்ஹாபிசத்தின் தட்டையான அராஜக முகம்தான்!

இந்து மதத்தின் நிலை அப்படியே தலைகீழானது! டிஸ்கவரி சேனலில் காசியைப் பற்றி ஒரு ஆவணப்படம் காட்டினார்கள். காசி இன்னும் ஐந்தாம் நூற்றாண்டிலேயே இருப்பதாகத் தெரிந்தது. இது ஒரு தேக்க நிலை என்று கூறுவது முட்டாள்தனம். புரியாதவர்கள்தான் இதை உறைந்துபோன நிலை என்று காண்பார்கள். காசி முதன்முதலில் நிர்மாணிக்கப்பட்ட காலத்தின் சூழல் முடிந்த அளவு பேணப்பட்டு வருகிறது என்றுதான் கூறவேண்டும். சங்கரர் உலவிய காசியை, குமரகுருபரர் நடந்த காசியை இன்று ஒரு ஹிந்து அங்கே எளிதாக அடைந்துகொள்ள முடியும். ஆனால் இந்து மதத்தின் பிரச்சனை இந்தப் பேணுதலின் நீட்சியாக உண்டாவதுதான். அதாவது புறச்சூழலில் சுகாதாரக் குறைபாடு. ஆனால் இதை எளிதாக நிவர்த்தி செய்துவிட முடியும்.


   
இந்த விஷயத்தைப் பற்றித்தான் ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஒரு முறை, "இந்துக் கோயில்களில் சுத்தம் என்பதே இல்லை. எண்ணெய்ப் பிசுக்கும் வவ்வால் புளுக்கையுமாக உள்ளது. அதில் சென்று வணங்குவதைவிட நதியை வணங்கலாம். அதில் உயிர்த்துடிப்பு அதிகமாக உள்ளது!" ("ஒரே ஒரு புரட்சி")  என்று கூறினார்.

ஒரு பெருங்காய டப்பாவின் தூய வடிவம் என்பது உள்ளீடு எதுவும் இல்லாமல் காலி டப்பாவாக இருப்பதுதான். மார்க்கத்தை அதன் தூய வடிவில் பின்பற்றுவதாகக் கூறும் வஹ்ஹாபிகளின் நிலை ஆன்மிகச் சாராம்சம் எதுவுமற்ற வெறும் புறச்சடங்குகளால் ஆன காலி டப்பாவாகத்தான் இருக்கிறது. இதற்காக அது மிகுந்த இறுமாப்புடன் திரிகிறது!

Thursday, September 16, 2010

விடலைத்தாள்



மாணவர்கள் எழுதிய தேர்வுத்தாள்களைத் திருத்தித் திருத்தி ஏதோ சி.ஐ.டி வேலை பார்ப்பது போல் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இலக்கியத்தை, தமிழைப் புதுப் புது டெக்னிக்குகளில் கொலை செய்து வைத்திருப்பதைப் பக்கத்திற்குப் பக்கம் காணலாம். "கண்ணகியைக் கோவலன் கற்பழிக்க வந்தான்" ( இதில் அடுக்குமொழி வேறு!) என்று எழுதுவதெல்லாம் மாணவ உலகில் சர்வ சாதாரணமான விசயம். இப்படி எழுதிவிட்டு, "ஐயா, சிலப்பதிகாரம் பத்தி எழுதீருக்கேன்ல, பத்துக்கு ஆறாவது போடுங்க" என்று தருமி ரேஞ்சில் கெஞ்சுவதைப் பார்க்கவேண்டும் நீங்கள். மாணவன் ஆசிரியரின் மனநிலையில் சிந்திக்கத் தெரிந்து கொள்கிறானோ இல்லையோ, நான் மாணவனின் நிலையில் இருந்து சில இலக்கியங்களைச் சிந்தித்துப் பார்ப்பதுண்டு. அதில் ஒரு சர்ரியலிசத் தன்மை இருப்பதைக் காணலாம். சில நேரங்களில் காலத்தைக் கடந்த ஒரு போதமும் தென்படுவதுண்டு.

அந்த வகையில் சில தமிழ்க் கவிஞர்களைப் பற்றி, மாணவன் அவன் பாணியில்  குறிப்புக்கள் எழுதினால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை.

1 கண்ணதாசன்: இவர் திருக்குறளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். சினிமா உலகில் கொடி கட்டிப் பரந்த இவர் சில ஹாலிவுட் படங்களுக்கும் பாடல்கள் எழுதி தமிழுக்குப் புகழ் சேர்த்துள்ளார். பாரதியார் இவருடைய சீடராவார்.

2 . கவிக்கோ: இவர் எழுதிய "அம்மி கொத்த சிற்பி எதற்கு?" என்னும் புகழ் பெற்ற கவிதை புறநானூற்றில் காணப்படுகிறது. சிற்பி என்னும் சங்கக் கவிஞனை அரண்மனையில் அம்மி கொத்துவதற்காகச் சேரன் செங்குட்டுவன் அழைத்த போது அரசவைப் புலவராக இருந்த கவிக்கோ சீறி எழுந்து, "தேரா மன்னா! நான் இருக்கும்போது அம்மி கொத்த சிற்பி எதற்கு?" என்று கேட்டதே அந்தப் பாடல். இவர் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் இசுலாம் மதத்திற்கு மாறி தன் பெயரை அப்துல் ரகுமான் என்று வைத்துக் கொண்டார்.

3 . கவிப்பேரரசு வைரமுத்து: இவர் கவிப்பேயரசு என்பவரின் தம்பியாவார். இவரும் ஒரு சங்கக் கவிஞர் ஆவார். புதுக்கவிதை பாடுவதில் வல்லவர். இவர் கவிதை  பாடுவதற்காக அரண்மனைக்கு வந்தால் பாடுவதற்கு முன்பே மன்னர்கள் வைரமும் முத்தும் கொடுத்து அனுப்புவார்கள். அவ்வளவு சிறப்பு மிக்க கவிஞர். 

4 . மீரா:  இலக்கணம் மீறாமல் பாடக்கூடிய வல்லமை உடையவர். எனவே இவர் மீரா என்று அழைக்கப்பட்டார். இவர் பக்தி ரசம் சொட்டச் சொட்ட பாடுவார். இவர் கவிதை வாசித்து முடித்தவுடன் தாள்கள் நனைந்து ஈரமாக இருக்கும் என்று அறிஞர்கள் குறிப்பிடுவர். இவர் காதலைப் பாடுவதிலும் சிறப்பாகத் திகழ்கிறார். இவர் எழுதிய "கனவுகள் + நினைவுகள் = ஊசிகள்" என்னும் நூலில் இதனைக் காணலாம்.

5 . மேத்தா: இவர் புதுக்கவிதையின் தாத்தா என்று அழைக்கப்படுகிறார். ஆனால் இவருடைய கவிதைகளைப் படித்தவர்கள் இவரை புதுக்கவிதையின் கொல்லு தாத்தா என்று அழைக்கின்றனர். அந்த அளவுக்கு அற்புதமாக எழுதித் தள்ளுவார். இவர் சாகித்திய டம்மி விருது, பல ஆஸ்கார் விருது எல்லாம் பெற்றவர். இவர் ஆகாயத்துக்கு அடுத்த பக்கம் வூடு கட்டிப் பாடுவார்.

6 . சிற்பி: இவர் ஒளவையாரின் மாணவராவார். அறம் செய்ய விரும்புவார். அதனால் பல கவிதைகளை எழுதினார். இவர் தன் கவிதைகளைத் தாளில் எழுதாமல் உளி வைத்து கல்லில் செதுக்கி எழுதினார். எனவே இவரை மக்கள் சிற்பி என்று அழைத்தனர். இவர் ஆனைமலை புறாமலை அண்ணாமலை மற்றும் ஏழுமலைகளில் செதுக்கிய கவிதைகள் இன்றும் அழியாமல் உள்ளன. இவருடைய "சர்ப்ப தாகம்" என்னும் நூலுக்கு தமிழக அரசின் விருது பெற்றார்.

7 . பெருங்கவிக்கோ: இவர் ஒரு தமிழ்க்கவிஞர் ஆவார். முதலில் பெருங்காயம் விற்றுக்கொண்டிருந்தார். கவிக்கோவுக்கு மீசை இருக்காது. இவருக்கு பெரிய மீசை உண்டு. எனவே பெருங்கவிக்கோ என்று அழைக்கப்படுகிறார். இவர் தமிழ் உணர்வு பொங்கி வழியும் வண்ணம் எழுதுவார். யாப்பெருங்கலக்காரிகை வழி நின்று வருணித்து எழுதுவார். எனவே "எழுத்தாணியில் மை தீராக் கவிஞர்" என்று சங்கப் புலவர்கள் இவரை போற்றினார்கள். "கொம்மை ________ பொருப்பு வட்ட ________ " போன்ற வரிகள் இவர் கவிதைகளில் மிளிர்கின்றன. ( குறிப்பு: இலக்கியங்களில் 'முலை' என்று வரும் இடங்களில் டேஷ் போடுவது கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல்கலைக் கழகங்கள் கடைப்பிடித்து வரும் மரபு. அதை இந்த மாணவன்  பாடத்தில் உள்ளபடி கசடறக் கற்று எழுதியுள்ளான்)

8 . பாவலரேறு பெருஞ்சித்திரனார்: வீரம் கொப்பளிக்கும் கவிதைகளைக் குமுறிக் குமுறிப் பாடுவதில் திறமை உள்ள சங்கக் கவிஞர் இவர். இவர் பாடினால் கனல் தெறிக்கும், அனல் அடிக்கும் , புனல் கொதிக்கும். போர்ப்பாடல்களானலும் சரி காதல் பாடல்கள் ஆனாலும் சரி எல்லாவற்றையும் பெரிய சைசில் சித்திரமாக வருணித்துப் பாடுவதால் இவர் பெருஞ்சித்திரனார் என்று பெயர் பெற்றார். "பாவலரேறு" என்னும் பெயர் குறித்து கருத்து வேற்றுமைகள் உள்ளன. பாவலர்கள் ஏற்றிப் போற்றும் பாவலர் இவர் என்று புலவர்கள் கூறுகின்றனர். பாவலர்கள் ஏறும் பாவலர் இவர் என்று மானிடவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

9 . இன்குலாப்: இவர் குலாப் ஜாமூன் போல் இன்சுவை மிக்க கவிதைகள் செய்வதில் வல்லவர். இஸ்லாமியப் பாடல்கள் பல இயற்றியுள்ளார். இவர் குலாப் தஸ்தகீர் ஜாமூன் பாபா என்னும் சூபி ஞானியின் சீடராவார். இவருடைய பாடல்கள் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளிவந்துள்ளன. "முஸ்தபா முஸ்தபா..", "முக்காலா முக்காபுலா லைலா.." போன்ற இவரது பாடல்கள் மக்களின் மனம் கவர்ந்த பாடல்களாகும்.  

இதுவே தமிழ் இலக்கிய வரலாறில் நாம் காணலாகும் செய்திகளாகும்.

********       *********        *********

இந்த விடையை எழுதிய பின் மாணவன் தேர்வாளருக்காக எழுதிவைத்த ஓரக்குறிப்பையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்:
"ஐயா, நீங்கள் மனிதரில் தெய்வம். பொன்மனம் கொண்டவர். நான் மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். பார்ட் டைம் வேலை செய்கிறேன். படிக்க நேரம் கிடைக்கவில்லை. இரவெல்லாம் கண் முழித்து மிகவும் கஷ்டப்பட்டு படித்து எழுதியுள்ளேன். தயவு செய்து எனக்கு பாஸ் போடவும். நீங்கள் எல்லா வளமும் பெற்று வாழ கடவுளை வேண்டுகிறேன். நன்றி."

மேலும் ஒரு குறிப்பு:
கவிஞர் இன்குலாபின் குரு என்று மாணவன் குறிப்பிட்டுள்ள 'குலாப் தஸ்தகீர் ஜாமூன் பாபா' என்பவர் ஜெயமோகன் எழுதிய ஒரு கட்டுரையின் வழி அறியப்படுகிறார். அதைப் பற்றி வகுப்பறையில் நான் ஒரு முறை சொன்னதை மாணவன் ஞாபகம் செய்து எழுதியுள்ளான். இது அவனுடைய நினைவாற்றலுக்கு நல்ல சான்று. பாபாவைப் பற்றி மேலும் அறிய விரும்புவோர் ஜெயமோகன் எழுதிய "மனிதனாகி வந்த பரம்பொருள்" என்னும் கட்டுரையை அவரது வலைத்தளத்தில் காணவும்.

Wednesday, September 15, 2010

ஒபலீஸ்க் ஷைத்தான்




சவூதி அரசு இக்காலத்திற்கேற்ப ஹஜ் கிரியைகளை எளிதே நிறைவேற்றுவதற்கு செய்துள்ள நாகரிக வளர்ச்சி சார்ந்த வசதிகளில் ஒன்று, பல்லாயிரக்கணக்கான ஹாஜிகள் ஒரே நேரத்தில் கல்லெறிவதற்கு வசதியாக ஷைத்தானை 'விராட் ரூபத்தில்' அதாவது மிகப் பெரிதாக வார்த்துள்ளார்கள் என்பதாகும்.



ஒரு வகையில் பார்த்தால் இந்த வளர்ந்த ஷைத்தான் தூண் என்பது வாஷிங்க்டன் டி.சி-யில்  வெள்ளை மாளிகை, கேபிடால், லிங்கன் (Lincon என்று வாசிக்கவும்) ஆகியவை உள்ள பகுதியிலும்,  வாட்டிகன் நகரில் உள்ள பேதுருச் சதுக்கத்திலும் ( St .Peter 's  square ) காணப்படும் ஒபெலீஸ்க் (obelisk ) என்று கூறலாம். அதாவது, நீட்டப்பட்ட லிங்கம்!






obelisk என்னும் எகிப்துச் சொல்லுக்கு 'கடப்பாரை' என்றும் 'ஊசி' என்றும் பொருள்.(பாருங்கய்யா...எப்படி விஷயம்னு)  இது பழங்கால எகிப்தியர்களின் சூரியக்கடவுளான "ரா"வுடன் தொடர்புள்ளது.(ராவுடன் தொடர்புள்ளதா?... )


வாட்டிகன் போப்பாண்டவர் ஆலயத்தின் தூய பேதுருச் சதுக்கத்தில் உள்ள ஒபெலீஸ்க் ரோம் சாம்ராஜ்ஜிய மன்னர் கலிகுலா என்பவரால் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டது. கிறித்துவச் சமயத்திற்குள் உள்ள ரகசிய இயக்கமான ப்ரீ மேசன்ஸ் (free masons) என்னும் இயக்கத்தின் குறியீட்டு விளக்கத்தின்படி இந்த ஒபலீஸ்க் புராதனக் கடவுள்களில் ஒன்றான பால்பெக்கின் (Baalbek ) லிங்கத்தைக் குறிப்பதாகும். உலகில் ஏறத்தாழ முப்பது இடங்களில் இந்தச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள ஒபலீஸ்க் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன்னின் நினைவாக எழுப்பப்பட்டு "வாஷிங்டன் ஒபலீஸ்க்" என்று அழைக்கப்படுகிறது. இதுவெல்லாம் அமெரிக்க அமைப்பில் ப்ரீ மேசன்ஸ் அமைப்பு கொண்டுள்ள அந்தரங்க அதிகாரத்தைக் காட்டுகிறது என்று சமயவியல் அறிஞர்கள் பலர் கருதுகின்றனர்.

ப்ரீ மேசன்ஸ், நைட்ஸ் டெம்ப்லர்ஸ், இல்லுமிநாட்டி போன்ற ரகசிய இயக்கங்களின் பகான் (pagan ) கொள்கைகள் கிறித்துவ மதத்திற்குள் எந்த அளவு ஆழமாகவும் பரவலாகவும் ஊடுருவியுள்ளது என்பதை வாட்டிகன் தேவாலயங்களில் காணப்படும் சிற்பங்கள் ஓவியங்கள் கட்டிடங்கள் போன்றவற்றில் உள்ள குறியீடுகளை வைத்தே சமையவியல் அறிஞர்கள் விளக்குகின்றனர். பழங்கால  கிரேக்க எகிப்திய செமித்திய தெய்வங்களின் கூட்டம் கிறித்துவ மதத்திற்குள் அடைக்கலம் புகுந்து உருவானதே ரோமன் கத்தோலிக் அமைப்பு என்பதை இவை காட்டுகின்றன. 
சமீபத்தில் டான் பிரௌன் (Dan Brown ) எழுதிய நாவல்களான Angels and Demons , The Da Vinci Code , The Lost Symbol ஆகியவற்றில் இந்தக் குறியீடுகள் விளக்கப்படுவதைக் காண்கிறோம். இவற்றில் முதல் இரண்டு நாவல்களும் திரைப்படங்களாக வந்துள்ளன.


      

ஆக, புராண எகிப்து மற்றும் கிரேக்க காலத்து லிங்கமான ஒபலீஸ்க்கை ப்ரீ மேசன்ஸ் என்னும் அமைப்பினர் கிறித்துவ மதத்தினுள் கொண்டுவந்துள்ளார்கள் என்பது நீண்ட கால வரலாறு. இந்த அமைப்பு சாத்தானை வழிபடக்கூடிய ரகசிய அமைப்பு என்பதும் சமையவியல் அறிஞர்கள் பலரால் நிறுவப்பட்டுள்ளது. சாத்தான் வழிபாட்டிற்கு அடையாளமாக லிங்கத்தை இவர்கள் பயன்படுத்துகின்றனர் என்று அவர்கள் கருதுகின்றனர்.

எது எப்படியோ, இந்தக் கருத்துக்களை அறிந்துதானோ என்னவோ மக்காவில் சாத்தான் மீது கல்லடிக்கும் இடத்தில் சாத்தானின் அடையாளமாக இந்த ஒபலீஸ்க்கை அரபிகள் அமைத்துவிட்டார்கள்!


உண்மையில் சாத்தானுக்கு இது ஒரு சரியான குறியீடுதான்! ஏனெனில் வேறு எந்த விஷயத்தை விடவும் மனிதனின் மனதைப் பிறழச் செய்வதற்கு அவன் பயன்படுத்தும் விஷயம் காமம்தான். பின்வரும் இரண்டு நபிமொழிகளை - ஹதீஸ்களைக் கவனியுங்கள்:
"திண்ணமாக, ஷைத்தான் மனிதர்களின் ரத்த நாளங்களிலெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறான் (இன்னஷ் ஷைத்தான லயஜ்ரீ மிநிப்னி ஆதம மஜ்ரத்தமி)"

"ஷைத்தான் மனிதர்களின் அமருமிடங்களில் (மர்மஸ்தானங்களில்) விளையாடுகிறான் (இன்னஷ் ஷைத்தான யல்அபு பிமகாஇதி பனீ ஆதம)" 

அதாவது ஷைத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தும் தடகளமாக ரத்த நாளங்கள் இருந்தாலும்கூட அவன் 'கோல்' அடித்து ஸ்கோர் செய்யும் இடம் 'அல்குல்'தான். எனவே, ஷைத்தானை "ஒபலீஸ்க் ஷைத்தான்" ஆக்கிக் கல்லெறியும் கிரியையை ஹாஜிகள் நிறைவேற்றும்படி சவூதி அரசு செய்துள்ளது ஒரு புதிய ஏற்பாடு ஆகும்.

ப்ரீ மேசன்ஸ்-ன் நேர்மறை வழிபாட்டுக் குறியீடு இங்கே எதிர்மறை வழிபாட்டுக் குறியீடாகத் தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டுள்ளது!

அதாவது, இறைவனுக்கு நாம் செய்யும் வழிபாடு இரண்டு விதங்களில் அமைகிறது. எதிர்மறை வழிபாடு மற்றும் நேர்மறை வழிபாடு. தீமையை விலக்குவதும் தடுப்பதும் எதிர்மறை வழிபாடு. நன்மைகள் செய்வது நேர்மறை வழிபாடு. பொய்யான தெய்வங்களை அவை இறைவனல்ல என்று நிராகரிப்பதும்கூட இறைவனுக்கு நாம் செய்யும் வழிபாடுதான். அதாவது இது எதிர்மறை வழிபாடு. இறைவனையே ஏற்று வழிபடுவது நேர்மறை வழிபாடு.

"லா இலாஹ இல்லல்லாஹு " என்னும் திருக்கலிமா மந்திரத்தில் இவை இரண்டும் உள்ளன. "லா இலாஹ" என்பது எதிர்மறை வழிபாடு. "இல்லல்லாஹு" என்பது நேர்மறை வழிபாடு. கலிமா என்னும் மூலமந்திரம் எதிர்மறை வழிபாட்டில் துவங்கி நேர்மறை வழிபாட்டிற்குச் செல்கிறது. 

இதே அமைப்பில்தான் இஸ்லாத்தில் எல்லா வழிபாடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, முதலில் தவஹ்ஹுது ஓதி ஷைத்தானை நிராகரித்த பின்பே பிஸ்மில்லாஹ் ஓதுகிறோம். "தூக்கியெறியப்பட்ட - சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாவிடம் பாதுகாவல் தேடுகிறேன் ( அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தான் இர்ரஜீம்)" என்னும் தவஹ்ஹுதும் அல்லாஹ்வை நாம் வழிபடுவதே. இதனைப் போன்றே ஷைதானுக்குக் கல்லெறிவதும் ஒரு எதிர்மறை வழிபாடுதான். எனினும் அது ஒரு குறியீட்டு வழிபாடு. இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் நேராகவே ஷைத்தானின் மீது கல்லெறிந்தார்கள். அந்த நிகழ்வை நினைவு கூறும் வண்ணம் ஹாஜிகள் ஒரு கல்தூணில் ஷைத்தானை உருவகப்படுத்திக்கொண்டு கல்லெறிகிறார்கள். அதாவது, ஷைத்தானை உருவகப்படுத்திக்கொண்ட ஒரு குறியீட்டின் வழியாக இறைவனுக்கான ஒரு எதிர்மறை வழிபாட்டை நிறைவேற்றுகிறோம்!   

ஷைதானுக்கான குறியீடான ஒபலீஸ்க் கல்லெறியும் எதிர்மறை வழிபாட்டுக்குப் பயன்படுகிறது என்றால் நேர்மறை வழிபாட்டுக்கு எந்தக் குறியீடும் இல்லையா? காபா, கிப்லா என்பதெல்லாம் நேர்மறை வழிபாட்டுக் குறியீடுகள் என்று கூறலாம் என்றாலும், மனிதனே அந்தக் குறியீடாக இருக்கிறான் என்று கூறுவதுதான் சாலச் சிறந்தது. மனிதன் இறைவனின் பிரதிநிதி - 'கலீபதுல்லாஹ்.' அதனால்தான் வானவர்கள் அவனுக்குச் சிரம்தாழ்த்தி அதன் வழி இறைவனுக்கான நேர்மறை வழிபாட்டை நிறைவேற்றினார்கள்.

இதில் இன்னொரு விஷயமும் உள்ளது. அதாவது, அந்த ஷைத்தானின் குறியீடு மனிதனிலேயே உள்ளது! நபிகள் நாயகம் சொன்னதுபோல் ஷைத்தானை இஸ்லாத்தில் ஆக்கிவிடவேண்டும். பிறகு அது நேர்மறை வழிபாட்டிற்கு உரியதாகிவிடும்! "மனைவியுடன் கூடித் துய்ப்பது 'சதகா'-தர்மம்" என்னும் நபிமொழிக் கருத்தைக் கண்டுகொள்க.  

Tuesday, September 14, 2010

செல்போன்-றவன்




வகுப்பறையில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த மாணவன் ஒருவனைக் கையும் களவுமாகப் பிடித்து வந்து எங்கள் துறைத் தலைவர் முன் நிறுத்தினார் ஒரு பேராசிரியர். விசாரணை மற்றும் தக்கப் பரிசோதனைக்குப் பின் அந்த செல்போன் என்னும் 'மினி மசாலாத் திரையரங்கு' அந்த மாணவனிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டது. மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்த அந்த மாணவன் மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டிருந்தான்: "சார், எல்லாப் பசங்களுந்தான் வச்சிருக்காங்க. என்னை மட்டும் ஏன் புடிக்கிறீங்க?" ( தமிழுக்கே சிலேடையா? மவனே பேத்துருவேன்)

"ஐயகோ! இவன் விரிவுரையாளருக்கு வல்லின றகரம் போடுவான் போலிருக்கே. இந்தச் செல்லினத்தை - புல்லுருவியைப் பூண்டோடு அழித்துவிடவேண்டும்" என்று நான் காண்டாகக் கூறவில்லை. அவன் சொன்னதில் டபுள் மீனிங்கை ஒதுக்கிவிட்டு நேரான அர்த்தத்தில் கவனம் செலுத்தி யோசித்தேன். மாணவர்களின் நிலை உண்மையில் இப்படித்தான் இருக்கிறதா? ஏன் இப்படி ஆனது? 

தரையிறங்கி வந்த தாந்திரீகச் சிலைகள் போல் பத்திரிகைப் பக்கங்களில் பாவைகளின் படங்கள். திரையில் அவர்களின் தீட்சை. அதனால்தான் மாணவன் மந்திரித்துவிட்டது போல் இருக்கிறான். மலையாள மாந்திரீகம்! இந்த நிலையில் இருப்பவனிடம் போய் நான் இலக்கியம் இயம்ப வேண்டும் என்றால் நடக்கிற காரியமா? சம்போகச் சயனத்தில் இருப்பவனிடம் மளிகைக் கடை ரோக்கா வாசிப்பதுபோல் ஆகிவிடுகிறது. என் சக பேராசிரியர் ஒருவர் அடிக்கடிச் சொல்வார், "வகுப்பறையில் பாடம் நடத்துவது வன்புணர்ச்சி" என்று.

"இருட்டறையில் உள்ளதடா உலகம்" என்று பாரதிதாசன் பாடினார். மாணவன் உலகத்தைத் தேடி சினிமாக் கொட்டகைக்குப் போய்விட்டான். அவன் கனவு காணும் உலகம் அங்கேதான் இருக்கிறது.

"இருட்டறையில் ஏதில் பிணம் தழுவியதுபோல" என்று வள்ளுவர் ஒரு உவமை கூறுவாரே, அது சில வகுப்பறைகளுக்கும் பொருந்துகிறது.



இரண்டாம் பிரிவேளையிலேயே சில மாணவர்கள் கிறங்கி அமர்ந்திருப்பார்கள். தள்ளாடி மேசைமீது விழுகிறான். மந்தமான கண்கள். மந்தமான புத்தி. காரணம் கேட்டால் இரவெல்லாம் தூங்கவில்லை என்று கூறுவான். சம்சாரியான நானே ஷிப்ட் முறையிலாவது தூங்கி எழுந்து வருகிறேன். பிரம்மச்சாரியான இவனுக்கென்ன வந்தது? அலைபேசியோ? மடிக்கணினியோ?  சீவகச் சிந்தாமணியை அவன் கற்பனைப்புலன் 3D -யில் காட்டியிருக்கும்போலும்.

என்னவோ சொல்வார்களே, ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமாவா? இவனால் பதினெட்டிலேயே பகலில் நிமிரமுடியவில்லை. இந்த லட்சணத்தில் இவன் எதிர்கால இந்தியாவின் முதுகெலும்பு வேறு. ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கூறுகிறார்.

மதுரை கோவை நெல்லை தஞ்சை சென்னை என்று விதவிதமான ஸ்லாங் எல்லாம் போட்டு அரசியல் சினிமா நாட்டு நடப்பு எல்லாம் கலந்து பாடத்தைக் கொடுத்தாலும் இவர்களுக்குச் சுவைப்பதில்லை. என்ன சொல்வது? இவனுகளுக்கு மு.வ , வ.சுப.மா , தெ.பொ.மீ , அ.கி.ப வகையறாக்கள் வந்து தமிள்ல தாளிச்சிருக்கணும்... அப்பத் தெரியும் அருமை.

  

Monday, September 13, 2010

காணக் கண் கோடி வேண்டும்


"ஹஜ் போயிட்டு வந்தவங்கள போய்ப் பாத்தா ஜம்ஜம் தண்ணியும் பேரீச்சம் பழமும் கிடைக்கும்கறது சரிதான். ஆனா, ஹஜ் போயிட்டு வந்ததைப் பத்தி ஒரு மொக்கை போடுவாய்ங்க பாரு.... அதத் தாங்க முடியாதுப்பா."
                                         *****************************************
மேற்காணும் உரையாடலைப் பற்றி நான் கொஞ்சம் பேச விரும்புகிறேன்.
புனித ஹஜ் பயணம் சென்று வந்ததன் அனுபவங்களை ஒருவர் பகிர்ந்து கொள்ளும்  பேச்சு ஒரு சிறந்த மததன்மை கொண்ட உரையாக இல்லாமல் சாரமற்ற 'மொக்கை'யாக - அதாவது பிளேடாக ஆவது ஏன் என்ற காரணங்களை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

பெரும்பாலும் அவர்களின் பேச்சு பின்வரும் விஷயங்களைப் பற்றியதாக அமைந்திருக்கக் காணலாம்:
# வானளாவும் பள்ளிவாயில்களின் பரப்பளவும் உயரமும்
# உணவு விடுதிகள், உணவு வசதிகள் மற்றும் ஏற்பாடுகள்
# தண்ணீர் வசதிகள்
# சாலை மற்றும் வாகன வசதிகள்
# சவூதி அரசின் பல நிர்வாகத் திறமைகள்
இவையெல்லாம் இன்றைய நிலையில் நம் பலவீனங்களைச் சமாளிக்கும் பொருட்டு இறைவன் நமக்கு ஏற்படுத்தித் தந்துள்ள அருட்கொடைகள் என்பதில் ஐயமில்லை. இனி ஹஜ் சென்று வருபவர்கள் உலகின் மிக உயரமான மணிக்கூண்டு பற்றியும் பேசுவார்கள். ( "ஆஹா! எவ்வளவு பெரிய மணிக்கூண்டு தெரியுமா? காணக்கண் கோடி வேண்டும் மணிக்கூண்டை! அதைப் பாக்குறதுக்காவது நீங்க அவசியம் ஹஜ் போயிட்டு வாங்க" என்பது போன்ற பரவச உரையாடல்களையும் நாம் அவ்வப்போது கேட்க நேரலாம்)


இவையெல்லாம் அடிப்படை மனித வசதிகள் என்பதைக் கவனிக்க வேண்டும். இவை எதுவும் நபிகளாரின் காலத்தில் இருக்கவில்லை. இவற்றுக்கும் ஹஜ்ஜின் சாராம்சத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பொருளாதாரத்தில் முன்னிலையில் உள்ள அமெரிக்க-ஐரோப்பிய மற்றும் இதர பல நாடுகளில் காணலாகும் வசதிகள்தான் இவையெல்லாம். இதில் இஸ்லாத்திற்கென்று தனித்தன்மை ஏதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த நாகரீக வளர்ச்சிகளை எல்லாம்
- அதாவது தொழில்நுட்பம் சார்ந்த புற வளர்ச்சிகளை எல்லாம் அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியுடன்தான் சவூதி அரசு வளர்த்துக்கொண்டது. இவற்றை வியந்து வாயாரப் பேசுவது ஒருபோதும் இஸ்லாத்தை வியப்பதோ ஆன்மிகப் பேச்சோ அல்ல, இறையுணர்வால் உண்டாவதும் அல்ல.


இந்தக் கருத்துக்குத் தொடர்பான ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன்:
அபூ யஜீது பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் ஒருமுறை ஹஜ் சென்றபோது மதீனா நகருக்குச் செல்கிறார்கள். அப்போது மதீனாவில் ஏற்பட்டிருந்த கட்டிடங்களின் வளர்ச்சியைப் பார்த்துவிட்டு, அதனை ஹதீஸ்களின் வாயிலாக நாம் காணும் எளிமையான மதீனாவுடன் மனதில் ஒப்பிட்டு, 'இது என்ன ? நான் நபியின் நகரத்திற்கு வரவேண்டும் என்ற ஆவலுடன் வந்தேன். ஆனால் இதை பிரௌனின் நகரத்தைப் போல் ஆக்கிவிட்டார்களே!' என்று வேதனைப்பட்டார்கள்.

முதலில் எடுத்துக்கொண்ட கருத்தின்பக்கம் திரும்புவோம். அதாவது, ஹஜ் சென்று வந்தவர் தன் அனுபவங்களைக் கூறுவது ஏன் சாரமற்ற வெற்றுப் பேச்சாக உள்ளது?

காதலியைச் சந்திக்கும்போது ஒருவன் பரவசத்தை அனுபவிக்கிறான் எனில், அவளைப் பிரிந்திருந்த நேரங்களில் வேதனையை, துயரத்தை அனுபவித்திருப்பான் என்பதுதான் உண்மைக் காதலின் அடையாளம். இந்த உதாரணம் உங்களுக்குப் புரிகிறதா?

ஹஜ்ஜில் வழிபாடுகளின் உச்சத்திற்குச் செல்வதாக உணர்கின்றோம். ஹஜ் செல்லும் முன்பும், சென்று வந்த பின்பும் நம் இறையுணர்வு எந்த நிலையில் இருந்தது? இருக்கிறது? ஆன்மிக அகநிலை எதையுமே பெற்றிராத ஒருவர் ஹஜ் சென்றால் திடீரென்று அது உருவாகிவிட முடியாது. அதனால்தான் அவர் பார்த்துவிட்டு வந்து வியப்புடன் குறிப்பிடுவதெல்லாம் சடங்குகளின் புறம் சார்ந்த விஷயங்களில் ஏற்பட்டுள்ள வசதிகள் பற்றியதாகவே உள்ளன. பொருளாதார வளர்ச்சி அடைந்த எந்த நாட்டிற்கு அவர் சென்று வந்தாலும் இந்த விஷயங்களைப் பற்றித்தான் அவர் பேசுவார். இடனகளின் பெயர்களும் கட்டிடங்களின் பெயர்களும் மாறியிருக்கும். அவ்வளவுதான் வேறுபாடு. எனவேதான் ஹஜ்ஜின் தனித்தன்மையாக அவர் உணர்ந்த எதுவும் அவர் பேச்சில் வெளிப்படவில்லை என்கிறேன். ஏனெனில் அப்படியொரு சாராம்சத்தை உணர்வதற்கான மனப்பயிற்சி எதிலுமே அவர் அதுவரை ஈடுபட்டதில்லை.

ஜுனைது (ரஹ்) அவர்கள் தன் ஹஜ் அனுபவங்கள் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்கள்:
"நான் முதல் முறை ஹஜ் சென்றபோது இறையில்லத்தை மட்டும் கண்டேன், இறைவனைக் காணவில்லை. நான் இரண்டாம் முறை ஹஜ் சென்றபோது இறையில்லத்தையும் இறைவனையும் கண்டேன். நான் மூன்றாம் முறை ஹஜ் சென்றபோது இறைவனை மட்டுமே கண்டேன்."

நம் ஹஜ் யாத்திரைகள் எந்த நிலையில் உள்ளன?
காதலியைக் காணச்சென்று அவளின் முகத்தைக் காணாமல் முகத்திரையை மட்டுமே ஒருவன் பார்த்து வருவான் எனில் அதைப்பற்றி என்ன சொல்வது?

Sunday, September 12, 2010

கண்முன் கரையும் பிறை




முடிவாக 10 .09 .2010  ஈத் பெருநாள் என்று அரசு காஜி அறிவித்துவிட்டார். சன் செய்திகள் டி.வியில் பளிச் நியூசில் "நாளை ரம்ஜான்" என்று போட்டார்கள். உண்மையில் ரமலான் மாதம் முடிந்துவிட்டது. "நாளை ஷவ்வால்" என்றுதான் போடவேண்டும். ரமலான் மாதத்தில் நோன்பு வைத்ததற்காகக் கொண்டாடப்படும் பெருநாள் என்பதால் மக்களின் புழக்கப்படி இவ்வாறு போட்டுள்ளார்கள். தவறில்லை.

விசேஷம் என்னவென்றால், காலண்டரில் குறித்தபடியே பெருநாள் அறிவிக்கப்பட்டதுதான். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் பத்தாம் தேதி பெருநாள் கொண்டாடப்பட்டது. இதர மாநிலங்களில் பதினோராம் தேதி கொண்டாடினார்கள். அதாவது, இஸ்லாமிய முறைப்படியான காலக்கணக்கு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. அது ஒரு சீரான காலக்கணக்கு அல்ல. இதை ஒரு சிறப்பம்சமாகவே நான் காண்கிறேன். தமிழ்நாட்டில் ஷவ்வால்-1 , ஆனால் அதே நாள் கர்நாடகாவில் ரமலான்-30 . தமிழ்நாட்டில் ஷவ்வால்-2 , ஆனால் அதே நாள் கர்நாடகாவில் ஷவ்வால்-1 .
நாள்காட்டிகளோ தொலைபேசியோ கண்டறியப்படாத காலத்தில் எப்படி காலத்தைக் கணக்கிட்டிருப்பார்கள்? எப்படி மாதங்களை முடிவு செய்திருப்பார்கள்? இஸ்லாமிய காலண்டர் என்பது நிலாக்காலண்டர் lunar calendar . அந்த முறைப்படி பிறை பார்த்து மாதங்களைக் கணக்கிட்டால் அது சூரிய காலண்டர் போல் சீராக வராது. இஸ்லாமிய மாதங்களுக்கு இத்தனை நாட்கள் என்று நிலையான கணக்கு இல்லை. எனவே எந்த ஊரிலும் இஸ்லாமிய மாதங்களுக்கான காலண்டரை முன்கூட்டி அச்சடித்து வைப்பது சாத்தியமில்லை.

இவ்வாறு ஒவ்வொரு மாதமும் பிறை கணக்கிட்டு மாதங்களை அந்தந்தப் பகுதியில் கடைப்பிடித்து வந்தால் காலப்போக்கில் நான்கு ஐந்து நாட்கள்கூட வேறுபடுவதற்கு வாய்ப்பு உண்டு. எந்த ஊருக்கு இறைவன் எப்போது பிறையைக் காட்டுகிறானோ அப்போதுதான் அங்கே அடுத்த மாதத்தின் பிறப்பு. நபிகள் நாயகம் காலத்தில் அப்படித்தான் பின்பற்றப்பட்டது. பிறை பார்க்கும்படிதான்  அவர்களும் கற்றுத்தந்தார்கள்.

ஆனால் இன்று தூத்துக்குடியில் பிறை கண்டவுடன் சென்னைக்கு செல்போன் போட்டு அரசு காஜியிடம் கூறுகிறார்கள். உடனே அவர் தமிழ்நாட்டிற்கே ரமலான் முடிந்து விட்டது என்று அறிவித்துவிடுகிறார். அப்புறம் இறைவன் ஒவ்வொரு ஊருக்கும் பிறை காட்டுவதிற்கும், காட்டாமல் மறைப்பதற்கும் என்ன மரியாதை என்றே புரியவில்லை.

உண்மையில், ஊர் ஊருக்குப் பிறை பார்த்து மட்டுமே மாதங்களை முடிவு செய்தால் எப்படி இருக்கும்? காலப்போக்கில் இப்படி ஒரு நிலை உருவாகலாம். அதாவது, திருச்சியில் இன்று ஷவ்வால்-1 , கன்யாகுமரியில் ரமலான்-30 , மும்பையில் ஷவ்வால்-2 , ரியாதில் லைலதுல் கத்ரு, நியூ யார்க்கில் ரமலான்-28 , சென்னையில் ரமலான்-4 .... இது போன்ற ஒரு நிலைதான் இருக்கமுடியும். அபாடிப்பட்ட ஒரு நிலையின் வழியே காலத்தை அவதானிக்கும்போது காலம் என்பது திரவநிலையில் ததும்புவதாகக் காட்சி தருகிறது. உண்மையில், சூரியக் காலக் கணக்கு என்பது solid time என்றால் நிலாக் காலக் கணக்கு என்பது liquid time என்றுதான் சொல்ல வேண்டும்.


நபிகள் நாயகம் காலத்தில் இருந்து அப்படியொரு பாய்மக் காலத்தில்தான் (fluid time ) இஸ்லாமிய சமூகம் வாழ்ந்து வந்தது. (பழந்தமிழர்களின் காலக் கணக்கும் நிலாக் கணக்குதான். பின்பு ஜோஷியத்திற்கு வசதியாக நிலையான வடிவமுள்ள சாலிட் டைம் சூரியக்கணக்கு ஆரியப் புரோஹிதர்களால் கொண்டுவரப்பட்டது.) "சவூதிக்குப் போன் போட்டுக் கேட்போம். ஒரே நாளில் எல்லோரும் கொண்டாடுவோம். அதுதான் ஒற்றுமை" என்று பிதற்றுகின்ற மேதாவிகள் வந்தபிறகு இஸ்லாமியக் காலக் கணக்கு உறைந்துவிட்டது. அது தன் திரவ நிலையை - பாய்மத்தை ( fluidity ) இழந்துவிட்டது.

அந்திக்குப்பின் வானில் ஒரு மெல்லிய புன்னகையாகத் தோன்றிக் கண்முன் கரையும் பிறையில் காலத்தின் திரவச் சலனம் ஒரு நதிபோல் ஓடிக்கொண்டிருப்பதாகப் படுகிறது.

Wednesday, September 8, 2010

பாங்கர் நிமித்தம்




வீட்டில் அமர்ந்து ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். பள்ளியிலிருந்து மாலைத் தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. புத்தகத்தை மூடாமல் அப்படியே கவிழ்த்துத் தொடை மீது வைத்தேன். பாங்கிற்குப் பதில் சொல்லவேண்டும். என் மனதிற்குள் சொல்லிக்கொண்டிருந்தேன். புத்தகத்தில் வாசித்துக்கொண்டிருந்த செய்திக்கும் பாங்கின் பதிலுக்குமாக மனம் பிளவுபட்டுக் கிடந்தது. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. எந்த லயிப்பும் இல்லாமல் என் மனம் ஒரு சடங்கை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. 
பாங்கு சொல்லப்படும்போது பதில் கூற வேண்டும்.பேசக்கூடாது. அப்படிப் பேசினால், பாங்கை அவமதித்தால், அல்லாஹ் உங்களை நரக நெருப்பில் வீசித் தண்டிப்பான் என்று ஒரு அருள்வாக்கு கூறுகிறது. கேள்விப்பட்ட விஷயம்.

எனவே, பாங்கு ஒலிக்கும்போது எங்கள் வீட்டுப் பெண்கள் பேசவே மாட்டார்கள். பவ்யமாகத் தலையில் முக்காடிட்டு மறைத்துக்கொள்வார்கள். பாங்கிற்கு பதில் கூறுவார்களா என்று தெரியாது. கணவன்மார்கள் பேசினாலே பதில் கூறத் தயங்கும் பணிவுகொண்டவர்கள் அல்லாவை அஞ்சி இப்போதும் பதில் பேச மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால் டி.வியை ஆப் செய்ய மாட்டார்கள். அதில் மெகாசீரியல் ஓடிக்கொண்டிருக்கும். பேசக்கூடாது என்பதுதானே டீல்.பார்க்கக்கூடாது என்றில்லையே? எப்படியோ, பேசாமல் ஓர்மையுடன் மெகாசீரியல் பார்க்கும் உத்தியை அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். இறைவன் அவர்களுக்குச் சொர்கத்தை வழங்குவானாக!


ஆக, பாங்கிற்குப் பதில் கூறுவது என் மனதில் உப்பு சப்பில்லாத ஒரு சடங்காக நடந்துகொண்டிருந்தது. எத்தனை ஆழமான வரிகள்! அதற்கு எத்தனை நெகிழ்வான பதில்கள்! 'தொழுகைக்கு வாருங்கள்! தொழுகைக்கு வாருங்கள்! வெற்றி பெற வாருங்கள்! வெற்றிபெற வாருங்கள்!' என்று மோதினார் - பாங்கர் - அழைத்துக்கொண்டிருந்தார். சலாத், பலாஹ் ஆகிய சொற்களின் அர்த்த ஆழங்களில் சற்றே மூழ்கிப்போனேன். 'அல்லாஹ்வினது அன்றி எனக்குச் சுயமாக ஆற்றலோ சக்தியோ இல்லை' என்று பதில் கூறுகிறேன். அவன் அசைத்தால்தான் அசைவேன். இது எவ்வளவு உன்னதமான மனநிலை. ஆனால் அப்படிப்பட்ட மனநிலையில் இருந்துகொண்டுதான் நான் பாங்கிற்குப் பதில் கூறுகிறேனா? பாங்கிற்கு அழைப்பவரும் இதையெல்லாம் விளங்கி அப்படியொரு மனநிலையில் இருந்துதான் அழைக்கிறாரா? 


இதை எண்ணிப்பார்க்கும்போதுதான் பங்கிற்குப் பதில் கூறுவதன் பின்னணியில் உள்ள ஒரு முழுமையான வாழ்க்கைத்திட்டம் புரிகிறது. அதாவது, ஒரு நாளில் ஐந்து வேளைகள் பாங்கிற்குப் பதில் கூறவேண்டிய நிலை உள்ளது. அப்போது நீங்கள் சுயமுனைப்பு அற்ற நிலையில், அகங்காரம் அற்ற நிலையில் இருக்க வேண்டும், ஒரு வெற்றுக் கோப்பையைப் போல. ஆனால் இந்த நிலை பாங்கு சத்தம் கேட்டவுடன் சட்டென்று உண்டாகிவிட முடியாது. நீங்கள் ஏற்கனவே அந்த நிலையில் இருந்தாகவேண்டும்.ஐவேளை பாங்கு என்பது அந்த அர்ப்பணிப்பு நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்கின்ற ஒரு சோதனைக் கணம் மட்டுமே. பாங்கிற்கு முன் நீங்கள் எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் அது இந்த அகநிலையைப் பாதிக்கக்கூடாது. அப்படியொரு நிலையில் உங்கள் வாழ்க்கை செல்லவேண்டும். 


ஆனால், அல்லாமா இக்பால் கூறுவதுபோல் 'பாங்கில் பிலாலின் உயிர் இல்லை.' அதேபோல்  பாங்கிற்கான பதிலில் அகநிலை இல்லை. காதலன் - காதலி உரையாடல்போல் இருக்கவேண்டிய பாங்கும் பதிலும் நம்மிடம் எப்படி இருக்கிறது? காதலன் - காதலி வேடமிட்ட இருவர் நாடக ஒத்திகையில் பேசுவதுபோல் உள்ளது. இல்லை அதைவிட மோசமாக, காதலனும் காதலியுமாக வேடமிட்ட இரண்டு அரவாணிகள் பேசிக்கொள்வதுபோல் இருக்கிறது. அல்லாஹ் மன்னிப்பானாக!
  

கீழே விழுந்த மெட்டு




"என் சுவாசங்களின் 
மணிமாலையில் 
உன் பெயரை 
தியானம் செய்வேன்"
(சாசோன் கி மாலா பெ சிம்ரூன் மே தேரா நாம்...)

உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர் நுஸ்ரத் அவர்கள் பாடிய ஒரு சூபி பாடலின் ஆரம்ப வரி இது. ஒரு இறைக்காதலனின் உணர்வுகளை லௌகீகக் காதலின் தளத்திற்கும் பொருந்தும்படியான மெட்டில் வெளிப்படுத்தும் பக்திப்பாடல் அது.
இந்தப் பாடலின் மெட்டினை அப்படியே சுட்டு ஒரு தமிழ்த் திரைப்படத்தில் போட்டிருந்தார்கள். "கத்தாழ கண்ணால..." என்று தொடங்கும் அந்தப் பாடல் சினிமாவுக்கே உரிய மேலோட்டமான, சாரமற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்றாக இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. அந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்த கலைஞனின் தளத்திற்கு நுஸ்ரத்தின் மெட்டு இறக்கப்பட்டுவிட்டது. அவ்வளவுதான். அந்த இசைக்கலைஞனைக் கேட்டால் 'நுஸ்ரத்தின் பாடலால் இன்ஸ்பயர் ஆகி இதைப் போட்டேன்' என்று கூறுவான்.
                      இன்று திருச்சிக்கு முதலமைச்சரின் தலைமையில் தளபதியும் மந்திரிகளும் எண்ணற்ற இந்நாட்டு மன்னர்களும் வருகை தருவதால் நேற்று மாலை முதலே நகரம் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள் நெடுகப் பதாகைகளும் பளிச் பளிச் என்று நகைச்சுவை உணர்வு கொப்பளிக்கச் சிரிக்கும் முகங்களைக் காட்டும் போர்டுகளும், அவற்றில் அதே உணர்வினைத் தூண்டும் வாசகங்களும் அலங்கரிக்க, லவுடு ஸ்பீக்கர்களில் நாகூர் ஹனீபா தொண்டை கிழிய அலறிக்கொண்டிருந்தார். தில்லை நகர் வீதியில் இந்த 'ரொமாண்டிக்கான' சூழலில் நான் என் மனைவியுடன் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தபோது யாரோ ஒரு கழகக் கண்மணி பாடிக்கொண்டிருந்த அந்தப் பாடல் என் காதில் விழுந்தது. மேற்சொன்ன 'கத்தாழ கண்ணால' பாடலை அப்படியே காப்பி அடித்துத் தன் தலைவனை அவன் மெய்சிலிர்க்கப் புகழ்ந்து கொண்டிருந்தான். அரசியலுக்கே உரிய ஒரு வருணிக்க முடியாத நெடி அதில் காரமாக வீசிக்கொண்டிருந்தது.
எனக்கு நுஸ்ரத்தின் சூபிப் பாடலும், அதிலிருந்து இன்ஸ்பயர் ஆன சினிமாப் பாடலும் நினைவில் தோன்றி அதிலிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்த அரசியல் பாடலுக்கு அருகில் வந்து நின்றன. சிங்கமும் நாயும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்று விலங்கியல் கூறுகிறது. சிங்கம் போன்ற ஒரு பாடல் இன்ஸ்பயரேஷனில் நாயாகி, பின்பு காப்பியடித்தலில் சொரிநாயாகித் திருச்சி சாலையில் என் கண்முன்னே ஓடுவதுபோல் இருந்தது. 
கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் மனிதனும்கூட இறைவனுக்காக இசையமைக்கப்பட்ட ஒரு மெட்டுத்தான் என்று தோன்றுகிறது. ஆனால் அந்த மெட்டு சினிமாத்தனமாகவும் அரசியல்தனமாகவும் உருமாறிப் போய்விடுகிறது. 
"மனிதனை நாம் சிறந்த வடிவத்தில் படைத்தோம்.
பின்பு அவனைக் கீழினும் கீழான நிலைக்குத் தள்ளினோம்"
என்று திருக்குர்ஆன் கூறுகிறது.