Sunday, April 10, 2011

கஸல் பூங்காஉருதுக் கவிதை உலகத்தில் உலா வருகிறேன் சில மாதங்களாக. நாகூர் ரூமி அவர்கள் திருச்சி வந்திருந்த போது கஸல் பற்றிய பேச்சு வந்தது. “குலாம் அலீ கேட்டிருக்கிறீர்களா?” என்று என்னைக் கேட்டார். ஜக்ஜீத் சிங், ஹரிஹரன், நுஸ்ரத் ஃபதேஹ் அலீ கான் ஆகிய மூவரின் குரல்களில்தான் நான் அதிகமாக கஸல்களை ரசித்துள்ளேன். குலாம் அலீ கேட்டதில்லை. “கேளுங்கள், கமகம் கொட்டும். ஒரே வரியைப் பல மாதிரியாகப் பாடுவார்” என்று நாகூர் ரூமி சொல்லிச் சென்றார். பற்ற வைத்துவிட்டுப் போய்விட்டார்!


சில வருடங்களாக கஸல் கேட்பதை நிறுத்தியிருந்த நான் மீண்டும் கேட்கத் தொடங்கினேன். என் டேப் ரிக்கார்டர் ரிப்பேர் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது, அதுதான் காரணம். என்னிடம் உள்ளதெல்லாம் ஒலிநாடாக்கள்- டேப் கேஸட்டுகள். இப்போது மடிக்கணினி இருப்பதால் கஸல்களை டவ்ன்லோட் செய்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். குலாம் அலீ, மெஹ்தி ஹசன், தலத் அஸீஸ், ஆஷா போன்ஸ்லே – கய்யாம், அனூப் ஜலோத்தா என்று ஒரு கஸல் ராஜசபையே இப்போது என் கணினிக்குள் காத்திருக்கிறது.


அது இரவா? இல்லை பகலா? என்று சொல்ல இயலாத ஒரு நேரகதியில், அது கோடையா? இல்லை வசந்தமா? என்று கூற முடியாத ஒரு பருவநிலையில், அது விழிப்பா? இல்லை கனவா? என்று உணர மாட்டாத ஒரு மனநிலையில், அது ஒளியா? இல்லை இருளா? என்று விளக்க இயலாத ஒரு லயத்தில் கஸலின் பூங்காவில் உலவிக் கொண்டிருக்கிறேன்.கஸலின் பாடுபொருள் காதல்தான். பெரும்பாலும் காதல்தான். கஸல், காதலின் கவிதை. அதன் ஆன்மாவின் இலக்கணம் இதுதான். ஆனால் கஸல் பாடப்படும் விதம், காதலை அது சொல்லும் விதம், அது பெண்ணின் மீதான காதலாகவும் அர்த்தப்படும், இறைவனின் மீதான காதலாகவும் அர்த்தப்படும். எப்படி அர்த்தம் எடுத்துக் கொள்கிறோம் என்பது அவரவர் ‘பக்குவம்’ சார்ந்தது, தாகம் சார்ந்தது. எல்லா வரிகளும் அப்படித்தான் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் பல வரிகளை என்னால் அப்படி இனம்கண்டு ரசிக்க முடிகிறது. எப்படியோ, வலீ முஹம்மத் வலீ (1667-1707) என்னும் கவிஞர் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது:


“காதல் விளையாட்டின்


அனுபவமே சிறந்தது


இறைவன்மீது என்றாலும் சரி


பெண்ணின்மீது என்றாலும் சரி”


இரண்டுமே கைவரப் பெற்றவர்கள், இரண்டிற்கும் உள்ள உறவை அறிந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். தயவு செய்து என்மேல் பொறாமை படாதீர்கள்! இறைவன் இந்த அருட்கொடையை நம் அனைவருக்கும் உண்மையாக்கி வைப்பானாக!


”அடைய முடியாத காதலியே அழகாக இருக்கிறாள்” என்று அப்துல் ரகுமான் எங்கோ எழுதியிருப்பதாக ஞாபகம். அது உண்மையானால் இந்த இலக்கணம் இறைவனைத் தவிர வேறு யாருக்குப் பொருந்தும்? முழுமையாக அடையப்பட முடியாதவன் அவன் மட்டுமே!


“காதலின் முதல் கடிதத்தை எழுத


கொஞ்சம் தாமதம் ஆகத்தான் செய்யும்.


பறவைக் குஞ்சுகள் பறப்பதற்குக்


கொஞ்சம் தாமதம் ஆகத்தான் செய்யும்”


என்று ஆரம்பிக்கிறது ‘ஹஸ்தி’ என்னும் கவிஞர் எழுதிய ஒரு கஸல். லௌகீகம், ஆன்மிகம் என்று இரண்டு தளத்திலும் இதனை அர்த்தப் படுத்தலாம். ஒரு பெண்ணின் மீது காதல் கொண்ட ஒருவன் அவளுக்குக் கடிதம் எழுத நினைக்கிறான். அவனோ அவள் மீது ’உண்மை’யாகவே காதல் கொண்டவன். நிராகரிக்கப்படும் அபாயம் அவன் உயிரை எரிக்கிறது. நகத்தைக் கடித்துத் துப்பி விரல்களை எல்லாம் ரணகளம் ஆக்கிவிடுகிறான். தாள் தாளாகக் கிழித்துப் போட்டுக் கொண்டே இருக்கிறான். அவளைத் திருப்தி படுத்தக் கூடிய ஒரு கடிதத்தைத் தான் எழுதிவிட்டதாக அவனால் திருப்தி அடைய முடியவில்லை. இதைத்தான் ஹஸ்தியின் கஸல் வரிகள் சொல்கிறது. ஆனால் அது சொல்வது இது மட்டுமா?


இதே வரிகளை ஆன்மிகத் தளத்தில், சூஃபித்துவ வெளிச்சத்தில் பார்க்கலாம். இறைவனைத் திருப்தி படுத்தக்கூடிய ஒரு தொழுகையை நான் நிறைவேற்ற நினைக்கிறேன். இத்தனை வருடங்கள் தொழுதும், இறைவனால் என் தொழுகையில் குற்றம் காணவே முடியாது என்று சொல்ல முடியுமா? அப்படி ஒரு தொழுகையாவது என்னிடம் உண்டா? அப்படித் தொழுதுவிட்டேன் என்று என்னால் திருப்தி அடைய முடியுமா? என் தொழுகையில் உள்ள குறைகள் எனக்கே உருத்துகிறதே! இதற்கு என்ன காரணம்? அதையும் ஹஸ்தி தன் கஸலில் கூறுகிறார்:


“உடலைப் பற்றிய பேச்சில்லை


அவளின் உள்ளம் வரை போக வேண்டியிருந்தது.


தொலை தூரப் பயணம் செல்ல வேண்டுமெனில்


கொஞ்சம் தாமதம் ஆகத்தான் செய்யும்.”


இது விளக்காமலே புரியும் என்று நம்புகிறேன்! வெறும் உடலின் அளவில் இருந்தால் அது காதல் அல்ல. ஒரு பிணத்தைக் காதலிக்க முடியாது அல்லவா? உடலால் அவள் அருகில் இருக்கிறாள். ஆனால் அவளின் உள்ளம் அவனை விட்டும் வெகு தொலைவில் இருக்கிறது. எனவே இப்படிப் பாடுகிறான். உடலில் இருந்து உள்ளத்திற்குச் செல்வது மிக நீண்ட பயணம் என்கிறான்.


இந்த வரிகளை சூஃபித்துவ வெளிச்சத்தில் புரிந்து கொள்ளும்போது எப்படி மாறுகிறது பாருங்கள். உடலால் தொழுகையை நிறைவேற்றி விடுவது மிக எளிது. ஆனால் தொழுகை என்பது வெறுமனே உடலால் சில சடங்குகளை நிறைவேற்றும் விஷயம் அல்ல. உடல் ஒரு கருவி. அதைக்கொண்டு தொழுவது உள்ளம்தான். “இதயத்தின் பிரசன்னம் இல்லாமல் தொழுகை இல்லை” (லா ஸலாத்த இல்லா பிஹுளூரில் கல்ப்) என்பது நபி(ஸல்) அவர்களின் அருள்மொழி. அப்படி இறைவனில் உள்ளம் கரைய ஒரு தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்றால் நாம் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இல்லையா?


“இதயத்தின் வேதனைக்காக


மனிதனைப் படைத்தான்.


வழிபாடு மட்டுமே நோக்கம் எனில்


வானவர்க்கு என்ன குறை?”


என்று கேட்கிறார் கவிஞர் ஜிகர். எவ்வளவு சரியான கேள்வி!

Monday, April 4, 2011

கஜல் துளிகள்எண்ணங்களைவிடவும்
நுட்பமாய் இருக்கிறாய் நீ.

உன்னைப் பற்றிய கவிதைகள்
கல்லில் செதுக்கப்படும்
பூக்கள் ஆகின்றன.கண்ணாக நீ இருந்தாய்
இமையாக நான் இருந்தேன்
இரவெல்லாம்.

உறக்கமாய்  நான் இருந்தேன்
கனவாக நீ இருந்தாய்
இரவெல்லாம்.காத்திருப்பதில் என்ன பயன்
நீ வரும் பாதை
எதுவென்று தெரியாமல்?

பாதை தெரிந்தும்
பயன்தான் என்ன,
நீ யாரென்று தெரியாமல்?
வண்ணத்தில் மயங்காதே
வண்ணங்களைக் காட்டும்
ஒளியைக் காதலி.

ரோஜாவைச் சுற்றும்
புல்புலுக்குக் கிடைப்பதில்லை
விளக்கைச் சுற்றும்
விட்டிலின் முடிவு.Sunday, April 3, 2011

திரைகளுக்குப் பின்னால்...(தொடர்ச்சி - 1 )முழுமையை அதன் பகுதிகளைக் கொண்டு அறியலாம் என்னும் அறிவியல் அணுகுமுறை செவ்வியல் அறிவியலின் அடிப்படை ஆகும். இதனை ‘reductionism’ என்று குறிப்பிடுவர். அதாவது முழுமையை அறிய அதனை பகுதிகளாகப் பகுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக ஆராய்ந்து அறிய வேண்டும். அப்படி அறிந்த முடிவுகளைத் தொகுத்துக் கொண்டால் முழுமையைப் பற்றி நாம் அறிந்துவிடலாம். இதுதான் அதன் செயல்முறை. இங்கேதான் பகுத்தறிவின் தன்முனைப்பு பிறக்கிறது. எதையும் கூறுபோட்டு உண்மையைக் கண்டறிந்துவிடலாம் என்னும் மப்பில் அது பல நூற்றாண்டுகள் திரிந்துகொண்டிருந்தது. அப்படிக் கூறுபோட்டுக் கொண்டே போய் பிரபஞ்சத்தின் மூலப்பொருளை (Materia-Prima) அறிந்துவிட அது எத்தனித்தது. அந்த எத்தனிப்பில் ஒரு காலத்தில் அணுவாதம் (atomism) போன்ற கோட்பாடுகள் தோன்றின.
நவீன அறிவியலின் போக்கில் சில அறிவுத் துறைகள் முன்னகர்ந்த போது விஞ்ஞானிகளுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது என்று கென் வில்பர் கூறினாரே, அந்த அதிர்ச்சி என்ன என்பதை டீன் ராடினின் வார்த்தைகளால் கேட்போம்: “அந்த அதிர்ச்சி என்னவெனில், ஜடத்தின் அடிப்படைக் கட்டுமானத்தை நாம் நெருங்க நெருங்க reductionism –பகுப்பியல்- உண்மையாக இல்லை என்பதுதான். செவ்வியல் அறிவியலின் அனுமானங்கள் கோரும் கருத்துXஜடம் என்னும் பிரிவினைகளை நாம் அந்தத் தளங்களில் பேண முடியவில்லை. மாறாக அந்தத் தளங்களில் முழுமைவாதமும் கருத்துவாதங்களும் மேலோங்குகின்றன.” (“The shock was that reductionism did not hold true when we got closer and closer to the ultimate constituents of matter. In those realms, we were unable to maintain the subject-object distinctions required by the assumptions of classical science, and holistic and mentalist concepts began to take over.” Page.293)இந்தப் பக்கத்தில் இருந்து டீன் ராடின் எழுதிச் செல்லும் விஷயங்களை மிகவும் சுவாரஸ்யத்துடன் படித்தேன். உண்மையில் இந்தப் பகுதி ஹல்வாதான் என்று சான்றளிக்கிறேன்! அதன் முக்கியமான புள்ளிகளைச் சொல்கிறேன்.க்வாண்டம் இயற்பியலின் சிக்கல்களை அலசும்போது சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் சொன்னார்: “இயற்கையைப் பற்றிய நம் புரிதலுக்கு அடிப்படையானவை என்று இன்று நாம் கருதும் கோட்பாடுகள், எனக்கு அவை தூய எண்ணத்தின் கட்டமைப்புக்களாகத் தெரிகின்றன. இந்தப் பிரபஞ்சம் என்பது ஒரு மாபெரும் இயந்திரம் என்பதைவிட ஒரு மாபெரும் எண்ணம் என்பதாகத் தெரிகிறது.” (“The concepts which now prove to be fundamental to our understanding of nature… seem to my mind to be structures of pure thought,... the universe begins to look more like a great thought than a great machine.” –Sir James Jeans, “The Mysterious Universe”)நவீன அறிவியலின் இந்தக் கட்டத்தில் பிரக்ஞை பற்றிய வினாக்கள் தோன்றின. பிரபஞ்சம் என்பது ஒரு எண்ணமா? பிரபஞ்சம் பிரக்ஞை உடையதா? பிரக்ஞையைப் பற்றி பகுத்தறிவு ரீதியான அறிவியலுக்கு ‘ஒரு எழவும்’ தெரியவில்லை என்பதை விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. “பிரக்ஞையின் இயல்பே அறிவியலின் மிகப்பெரிய மர்மம். மனிதப் பிரக்ஞை பற்றி நம்மிடம் மோசமான அல்லது அரைகுறையான கோட்பாடுகள் உள்ளன என்பதல்ல, நம்மிடம் அப்படிப்பட்ட கோட்பாடுகளே இல்லை. பிரக்ஞையைப் பற்றி நமக்குத் தெரிந்ததெல்லாம் அது தலையுடன் சம்பந்தப்பட்டது, காலுடன் அல்ல என்பது மட்டுமே.” என்று இயற்பியல் விஞ்ஞானி நிக் ஹெர்ப(ர்)ட் எழுதினார். (“Science’s biggest mystery is the nature of consciousness. It is not that we possess bad or imperfect theories of human awareness; we simply have no such theories at all. About all we know about consciousness is that it has something to do with the head, rather than the foot.” –Nick Herbert, “Quantum Reality: Beyond the new physics”)பிரபஞ்சம் பற்றிய நவீன அறிவியலின் நோக்கு பொருள்முதல்வாதத்தில் இருந்து விலகி அல்லது முன்னகர்ந்து கருத்துமுதல்வாதத்திற்குள் நுழைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. எண்ணம் அல்லது பிரக்ஞைதான் முதலில் இருந்தது, அது ஜடத்தைத் தோற்றுவித்தது என்று அது காண்கிறது. எர்வின் ஷ்ரோடிங்கர் சொன்னார்: “பிரபஞ்சத்தின் முதல் தோற்றம் பிரக்ஞையைக் கொண்டே ஆனது, அதனைக் கொண்டே, நாம் உறுதியாகச் சொல்லலாம், உலகம் முதலில் உள்ளதானது. பிரபஞ்சத்தில் பிரக்ஞைக் கூறுகள் உள்ளன.” (“Consciousness is that by which this world first becomes manifest, by which indeed, we can quite calmly say, it first becomes present; that the world consists of the elements of consciousness.” –Erwin Schrodinger, “My view of the world”)நவீன அறிவியல் இன்று கண்டுகொண்டுள்ள இந்தக் கருத்தை ஆன்மிக மரபுகள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே கண்டடைந்துவிட்டன. ஜடப் பிரபஞ்சம் என்பது பிரக்ஞையின் விளைவு என்பதைக் கூறும் சூஃபித்துவ விளக்கங்கள் என் மனதில் நிழலாடுகின்றன. இது கொஞ்சம் சிக்கலான, நுட்பமான விஷயம்தான். திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள இறைத் திருநாமங்களில் ஒன்று “ழாஹிர்.” அதாவது இறைவன் வெளிப்படையானவன் (MANIFEST). (அவன் எப்படி வெளிப்படுகிறான், எங்கே வெளிப்பட்டிருக்கிறான் என்பதை விளக்க இங்கே அவகாசம் இல்லை.) எனவே சூஃபிகள் “அல்-ஹக் மஹ்ஸூஸ், அல்-ஃகல்க் மஃகூல்” என்று காண்கிறார்கள். அதாவது சத்தியப் பரம்பொருள் வெளிப்படையானது, படைப்புக்கள் என்னும் பருப்பொருள் அதன் அறிவில்/ ப்ரக்ஞையில் உள்ளது. அதாவது சர்வகோடி

சிருஷ்டிகளும் அவனது அறிவில் தரிப்பட்டுள்ளன. அவை இறைவனுடைய நாட்டத்தின் விளைவாக உண்டானவை.

“ஒரு வஸ்துவை அவன் நாடும்போது

அவனது கட்டளை

நிச்சயமாக அதனிடம் அவன்

’ஆகு’ என்று சொல்வதாகும்.

திண்ணமாக அது ஆகிறது.”

(இன்னமா அம்ருஹு இதா அராத ஷைஅன் அன்(ய்) யகூல லஹு குன் ஃபயகூன் -36:82)

என்னும் திருக்குர்ஆன் வசனத்தில் பொருள் என்பது இறைவனுடைய நாட்டத்தின் (இராதத்) விளைவு என்பது சுட்டப்பட்டுள்ளது.மரபுசார் அறிவியல் பிரக்ஞை என்பதை பொருள்முதல்வாதப் பரிணாமத்தில் உண்டான ஒரு விளைவாகவே கருதியது. ஜடப்பொருட்களின் உறவாடலில் அனிச்சையாக உயிரும் ப்ரக்ஞையும் தோன்றின என்றே அது சொன்னது. உடல் அழியும்போது அதிலிருந்து உயிர்/ஆத்மா/ஜீவன் என்று தனியாக எதுவும் பிரிவதில்லை என்று அது வாதிட்டது. பருப்பொருளின் அழிவில் ப்ரக்ஞையும் காணாமல் போய்விடும் என்று அது சொன்னது. ஆனால் நவீன அறிவியல் இதை மறுக்கிறது. மரபறிவியலையும் நவீன அறிவியலையும் ஒப்பிட்டு வேறுபடுத்திக் காட்டும் விஞ்ஞானி வில்லில் ஹார்மன் சொல்கிறார்: “ஆன்மிக நிலைகளும் சமய அனுபவங்களும் உள்ளிட்ட பிரக்ஞை நிலைகளின் முழுக் கற்றை அனைத்துக் கலாச்சாரங்களின் இதயத்தில் இருந்துவந்துள்ளது. இந்த பிரக்ஞை நிலைகள் மெய்ம்மையின் பிற பரிமானங்களுக்கான ஒரு ஜன்னலாக, ஒரு முக்கியமான கருவியாக இருக்கக் கூடும்.” (“The entire spectrum of states of consciousness, including religious experiences and mystical states, has been at the heart of all cultures. These states of consciousness may be an important investigative tool, a “window” to other dimensions of reality.” –Willis Harman.)இந்தப் பார்வையைத்தான் ஆன்மிக மரபுகள் முதலில் இருந்தே முன்வைத்தன. பார்ப்பவனிடம் மாற்றங்கள் ஏற்படாதவரை பார்த்தலில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. அதாவது பிரபஞ்சத்தில் விரவி நிற்கும் மெய்ப்பொருளை அறிவதற்கு, வள்ளுவர் சொல்வதுபோல் “எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருளின் மெய்ப்பொருளைக் காண்பதற்கு”, இப்போது நமக்குள்ள புலன்கள் சார்ந்த அல்லது புலன்களில் கட்டுப்பட்ட பிரக்ஞை நிலை போதாது. உண்மையை இந்தப் புலன்களின் அனுபவங்கள் திரித்துக் காட்டுகின்றன. எனவே உண்மையை அறியவேண்டும் என்றால் முதலில் பிரக்ஞையின் முழுக்கற்றையையும், அதன் சகல அலைவரிசைகளையும் நாம் அறிவதோடு அவற்றில் செயல்படும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளவேண்டும். அதைத்தான் ஆன்மிக முறைகள் பல பயிற்சிகளின்மூலம் உருவாக்கின. பதஞ்சலி உருவாக்கிய யோக முறைமை போல, புத்தரின் விபஸ்ஸனா போல, விக்ஞான் பைரவ தந்திரத்தின் உத்திகள் போல, தாவோ போல, ஜென் போல, சூஃபி மரபு உருவாக்கித்தந்துள்ள முஷஹதா, முராக்கபா, ஃபாஸ்-எ-அன்ஃபாஸ் என்பன போல.ஆனால் தங்களைப் பகுத்தறிவு மேதாவிகள் என்று காட்டிக்கொள்பவர்கள் ஐம்புலன்கள் சார்ந்த பிரக்ஞை நிலைகளைத் தாண்டி பிரக்ஞையின் பிற பரினாமங்களை அறிவதற்கான பயிற்சி முறைகள் எதையும் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே ஆன்மிகத்தின் அகப்பார்வை சொல்லும் ‘உண்மைகளை’ அது நிராகரிக்கிறது. முல்லா நஸ்ருத்தீன் கதை ஒன்று இதை விளக்குகிறது. நாத்திகன் ஒருவன் முல்லாவிடம் வாதிட்டுக் கொண்டிருந்தான். சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் இல்லவே இல்லை என்று அவன் சொன்னான். சொர்க்கம் நரகம் இருப்பது உண்மை என்று முல்லா சொன்னார். “அப்படியானால் உங்கள் சொர்க்கத்தில் இருந்து எனக்கு ஒரு ஆப்பிள் பழம் எடுத்துக் கொடுங்கள், எனக்குப் பசிக்கிறது.” என்று அவன் நக்கலாகச் சொன்னான். முல்லா உடனே தன் கையை நீட்டிப் பக்கத்தில் ஒரு கூடையில் இருந்த ஆப்பிளை எடுத்து அவன் கையில் திணித்தார். அவன் அதைப் பார்த்துவிட்டு “என்ன முல்லா, உங்கள் கடவுளின் சொர்க்கத்து ஆப்பிள் இப்படி அடிபட்டு கொஞ்சம் அழுகிப்போய் இருக்கிறது?” என்று சொன்னான். அவனிடம் முல்லா கூறினார், “நண்பரே, சொர்க்கத்து ஆப்பிள் உங்கள் கைக்கு வந்தவுடன் இப்படி ஆகிவிட்டது. உங்கள் கை அப்படி. நான் என்ன செய்ய?” இப்படித்தான், மெய்ம்மை நம் புலன்களில் திரிக்கப்பட்டுவிடுகிறது. எனவே மெய்ம்மையை நாம் புலன்களின் மூலம் அறிய முடியாது. புலன்களின் இயற்கை அமைப்பே அப்படி.ஒரு பொருளை வெளியிலிருந்து விலகி நின்று அறிய முயலும் பகுத்தறிவு ரீதியான மரபு விஞ்ஞானத்திற்கும் முழுமைவாத நவீன விஞ்ஞானத்திற்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கும் விஞ்ஞானி வில்லிஸ்  ஹார்மன் சொல்கிறார்: “விலகி நின்று பௌதிகப் பொருட்களை அலசுவதில் இருந்து புரிதல் என்பது கிடைக்காது. அவதானிக்கும் பொருளைத் தன்னில் இனம் காண்பது மற்றும் அதனுடன் ஒன்றிப்போவது கொண்டே புரிதல் உண்டாகும். மெய்ம்மை என்பது உடலின் புலன்கள் தரும் தகவல்களாலும், உள்ளார்ந்த ஆழமான அக உதிப்புக்களாலும் அணுகப்படுகிறது. உடலின் புலன்கள் தரும் தகவல்களுக்கு விழிப்புடன் இருக்கும் அளவில் மட்டும் மெய்ம்மையை நாம் அறிவது மட்டுப்படுவதில்லை. ஆனால் அது அழகியல் மற்றும் ஆன்மிகப் புலன்களையும் சார்ந்துள்ளது.” (Understanding comes not from detachment, objectivity, and analysis but from identifying with the observed, becoming one with it. Reality is contacted through physical sense data and through inner, deep, intuitive knowing. Our encounter with reality is not limited to being aware of messages from our physical senses, but includes aesthetic, spiritual, and mystical senses.” –Willis Harman.)உண்மையை அறிவதற்கு உடலின் புலன்கள் மட்டும் பத்தாது, ஆன்மிகப் புலன்களும் திறக்க வேண்டும் என்று ஆன்மிக மரபுகள் சொல்லி வந்துள்ளன. அந்த ஆன்மிகப் புலன்களை சூஃபித்துவம் “லதாயிஃப்” என்று அழைக்கிறது. பதஞ்சலியின் யோக மரபில் அவை சக்கரங்கள் எனப்பட்டன. புலன்களை மீறிய அறிதல்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்னும் வினாவை “ஸை” (PSI) எழுப்புகிறது என்று சொல்லும் டீன் ராடின் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கிறார்: “நாம் அலட்சியப்படுத்திவிட்ட ரகசியப் புலன்கள் எவையேனும் இருக்கின்றனவா?” (Are there secret senses we have overlooked?”) இந்தக் கேள்விக்கு ஆன்மிகம் மிகத் தெளிவாகவே பதில் சொல்கிறது. ‘ஆம். உலகில் மிகச் சொற்பமானவர்களைத் தவிர, பெரும்பாலான மக்கள் தங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மிகப் புலன்களை அலட்சியப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.” அவர்களின் நிலையை நபிகள் நாயகம் ‘உறக்க நிலை’ என்று சொல்லிவிட்டார்கள். ‘மக்கள் தூக்கத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மரணிக்கும்போது விழித்துக் கொள்வார்கள்’ (அன்னாஸு நியாமுன் வ இதா மாத்து இன்தபஹு) அப்படி அவர்களின் உட்புலன்கள் விழிக்கும்போது அனைத்துப் பொருட்களின் எதார்த்த நிலையை அறிவார்கள். எனவே எதுவரை ஆன்மிகப் புலன்கள் திறக்கவில்லையோ அதுவரை பிரபஞ்சத்தின் எதார்த்தம் என்ன என்பதை அறிய முடியாது. மண்ணில் வாழும்போதே ஆன்மிகப் புலன்களை விழிப்படைய செய்வதைத்தான் சூஃபிகள் ‘மரணிக்கும் முன்பே மரணித்தல்’ என்கிறார்கள். ’மரணிக்கும் முன்பே மரணித்துவிடு’ (மூத்து கப்ல அன்தமூத்து) என்பது நபிவாக்கு. ஞானப் பார்வை, அகப்பார்வை என்றெல்லாம் சொல்லப்படுவது அந்த அகப் புலன்களின் ஆற்றலைத்தான். ”நெஞ்சின் கண்கள்” என்று திருக்குரான் குறிப்பிடுவதும் அந்த அகப் புலன்களைத்தான்.உடற்புலன்களின் எல்லைகளைக் கடந்த அகப்புலன்களின் அனுபவங்களான “ஸை” (PSI) பற்றி டீன் ராடின் எழுதியுள்ள ஒரு வரியை நான் மிகவும் ரசித்தேன். “அது ஒரு திராணியா? திறமையா? ஆதிநிலைக்கு மீண்டும் தூக்கி எறியப்பட்ட நிலையா? அல்லது நம் எதிர்காலத்தின் தரிசனமா?” (Is it an ability, a talent, a throwback to a more primitive sense, or a glimpse of our future?) ’ஆதிநிலை’ என்றுதான் சொல்ல வேண்டும். சூஃபித்துவத்தின் விளக்கம் அதுதான். ஆதிமனிதர் இறைத்தூதர் ஆதம் அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அறிந்திருந்தார் என்று திருக்குர்ஆன் சுட்டிக் காட்டுகின்ற நிலை!

(தொடரும்)