Monday, January 30, 2012

மூன்று கவிதைகள்


(of Bridal Mysticism)

கிணற்று வெள்ளம்
நீயே இனிய
நீராய்த் ததும்பும்
ஆழ்கிணறு நான்

எனினும் ஏனிந்தக்
கொல்லும் தாகம்?

காதல் தாம்பில்
கட்டிய இதயத்தை
என்னுள் இறக்குகிறேன்
நாளும் கைநோக

கருணையின் நீர்
கணக்கற்றுப் பொங்கிக்
கிணற்றின் விளிம்புக்கு
மேலெழுந்து வழியும்
நாளும் எந்நாளோ?

என் தோட்டம் முழுவதும்
உன் ஈரம் பெருகும்
தேதியும் எதுவோ?


  

காட்சி மாற்றம்


மறைந்து கொண்டிருக்கும்
உன் கோபத்திலேயே
தெரிகிறது
உன் காதலின் கனிவு

இல்லை இல்லை.
உன் காதலின் கனிவை
எனக்கு நீ
நாடிய கணத்தில்
மறையத் தொடங்கியது
உன் கோபம்

நீயே உன்னைக்
காட்டித் தராவிடில்
உன்னைக் காண்பது யார்?


  
கனிகளில் இல்லாக் கனிவுதினமும் நான்
கனிபறித்துக் கொண்டிருந்த
தோட்டம்தான் எனினும்
அன்றொரு நாள்
நீ பறிப்பதைக் கண்டதிலிருந்து
ஓய்ந்துவிட்டன
என் கைகள்

பறித்துச் செல்கையில்
திரும்பிப் பார்த்து
நீ செய்த புன்னகையில்
இருந்தது
உன் தோட்டத்தின் கனிகளில்
இல்லாததொரு கனிவு

உனக்கென வழிந்த
கண்ணீர்த் துளிகளில்
எங்கிருந்து வந்தது
வலியின் தித்திப்பு?

நீயேன் இப்படிக்
கண்ணீருக்கு இனிமையும்
கனிகளுக்குக் கைப்பும்
செய்தாய்?

மெல்லிய கிளைகளை
அளைத்துக் கொண்டிருக்கும்
காற்றின் லயத்தில்
அலைந்து கொண்டிருக்கிறேன்
கனிகள் பறிக்காமல்

உயிரில்
மீண்டும் எப்போது
சுவைக்கக் கிடைக்கும்
கனிகளில் இல்லாக் கனிவு.

Sunday, January 22, 2012

சகலருக்கும் விளம்புகிறேன்(எழுதி முடித்துப் பார்க்கையில் இது ஒரு திரிவக்ரக் கட்டுரையாக இருக்கக் கண்டேன். தன்னியல்பில் சென்று மூன்று பொருண்மைகள் பற்றிப் பேசும் கட்டுரையாக அமைந்துவிட்டது.)

உனக்கென்று ஒரு எழுத்து நடை இருக்கிறது. ஆங்கில வார்த்தைகளை அதிகமாகக் கலந்து எழுதி அதை நாசமாக்கிக் கொள்ளாதேஎன்று என் மீது அக்கறை உள்ள பேராசிரியர் வ.மு.யூனுஸ் சில தினங்களுக்கு முன் சொன்னார். வலைப்பூவில் நான் மலர்த்திவரும் பல வண்ண மலர்களில் சில பற்றி அவர் அடைந்த வாசிப்பனுபவத்தின் அடியாகப் பிறந்த அறிவுரை அது.
நான் விதவிதமான நடைகளின் ரசிகன். அதாவது எழுத்தில்! இரு துருவங்களாகக் கருதப்படும் எழுத்து நடைகளையும் அவற்றுக்கு இடையே உள்ள பாணிகளையும்கூட ரசிப்பவன். தனித்தமிழையும் ரசிப்பேன், மணிப்பிரவாளத்தையும் ரசிப்பேன். ஆங்கிலம் கலந்து எழுதினால் அதையும் ரசிப்பேன். மறைமலை அடிகள், வ.சுப.மாணிக்கம் போன்றோர் தம் கட்டுரையில் கையாண்டுள்ள நடையும் பிடிக்கும், சுஜாதாவின் எழுத்தும் பிடிக்கும். வட்டார வழக்கு அல்லது சமூகங்களின் பேச்சுநடை என்று வந்தால் எழுதுவார் எழுதினால் அவை எல்லாம் பிடிக்கும். இத்தனை ‘ரிச்னஸ்தமிழுக்கு வாய்த்த பேறு என்றே நான் கொண்டாடுகிறேன்.

ஆனால் வ.சுப.மாவுக்கு ஒரே நடைதான். அது என்னதான் செம்மாந்த தமிழ் நடையாக இருந்தாலும் மனுஷன் ‘வள்ளுவம்எழுதிய அதே நடையில் ‘நெல்லிக்கனிஎன்று நாடகம் எழுதும்போது எள்ளளவும் அதை என்னால் ரசிக்க முடியவில்லை. தமிழ் பழுத்த மூதறிஞர் நல்ல உரைநடைக்காரர், ஆனால் மோசமான புனைவிலக்கியவாதி. சொல்லப்போனால் அவருக்குப் புனைவிலக்கியமே கைவரவில்லை. அதைப் பற்றிய அடிப்படைகள் கூட அறியாதவர் என்பதே என் கருத்து.” என்று ஒருமுறை மாணவர்களிடம் சொன்னேன். ஆனால் அவர் காலத்திலேயே எழுதிய தி.ஜா எனக்கு அக்கார அடிசில், புதுமைப்பித்தன் எனக்கு இருட்டுக்கடை அல்வா!
ஒரு எழுத்தாளனுக்குப் பல மொழிநடைகள் கைவருவது ஒரு கூட்டல்புள்ளி என்றே கருதுகிறேன். அவனது இலக்கியப் படைப்பு இயல்பாக இருப்பதற்கே அது தேவைப்படும். ஏனெனில், உலகம் அப்படித்தான் இருக்கிறது. தற்போது யுவன் சந்திரசேகரின் ‘வெளியேற்றம்படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே நாவலுக்குள் எத்தனை வட்டார வழக்குகள் வந்து வசீகரிக்கின்றன! இதை சத்தியமாக மு.வ, அகிலன் போன்றோரிடம் காணவே முடியாது. இப்போது பார்க்க அவர்களின் ஒற்றைத் தன்மையான (Monotonous) மொழிநடை வெளிறித் தெரிகின்றது.
ஆமாம், கிரிக்கட்டில் மட்டையடிக்காரனுக்கு (Batsman) பலவிதமான ஷாட்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதைப் போல்தான் இது. நேரோட்டமும் (Strait drive) தெரிந்திருக்க வேண்டும், அப்புறம் வெளக்கமாத்த வச்சு வழிச்சுக் கூட்டுறாப்ல ஒரு ஷாட் இருக்குமே Sweepபுன்னுட்டு, அதுவும் தெரிஞ்சிருக்கணும். வர்ற பந்தை சைலண்ட்டா உள்ள வாங்கி பின்னால தள்ளிவிடற Pull ஷாட்டும் தெரியணும். எல்லா பந்தையும் ஒரே மாதிரி சகட்டுமேனிக்குச் சவட்டிக்கிட்டிருக்கிறவன் நல்ல மட்டையடிக்காரன் அல்லவே? இது எழுத்துக்கும் பொருந்துமில்லியா?

நிற்க.

எழுத்து நடை பற்றிய இந்தப் பேச்சை நான் சொல்ல வந்த வேறு விஷயத்துடன் இப்போது கோர்த்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

சில வாரங்களுக்கு முன் நாகூர் ரூமி ‘பில்லி சூனியம்என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள் செய்யும் மூளைச் சலவை குறித்த கட்டுரை அது. அதனைப் படித்த போது என் மனதில் சில விளம்பரங்களை அசை போட்டுக் கொண்டிருந்தேன்.  சிறு வயதில் என்னைக் கவர்ந்த விளம்பரம் எது என்று மண்டையைக் குடைந்து பார்த்ததில் ஒன்றுமே தட்டுப்படவில்லை. ஆனால் விவேக்கும் மயில்சாமியும் விளம்பரங்களை அநியாயத்துக்குப் பகடி செய்த்தைக் கேட்டு வயிறு புண்ணாகும்படிச் சிரித்துத் தீர்த்தது மட்டும் ஞாபகம் வந்தது.
சிறுவர்களுக்கான ஷூ விளம்பரம் ஒன்று. அந்த ப்ராண்ட் ஷூவை அணிந்து கொண்டு சிறார்கள் சுவரில் சாய்வாகவும் மேற்சுவரில் தலைகீழாகவும் ஓடி விளையாடுவார்கள். என் தம்பி ஒருவன் ஒத்தக் காலில் நின்று அந்த ப்ராண்டில் ரெட்டை ஷூ வாங்கினான். முதல் முறை அணிந்த வேகத்தில் ஆவலாக சுவரில் ஏற எத்தனித்து மல்லாந்து விழுந்து தவறான ஷூவைத் தந்துவிட்டார்கள் என்று கதறி அழுதது ஞாபகம் வந்தது. மற்றபடி சொல்லிக் கொள்ளும்படியாக வேறு எதுவும் நினைவில் உதிக்கவில்லை.

இன்றைய விளம்பரங்கள் மூளைச் சலவை செய்கின்றன என்பது உண்மைதான். மிளகாய் காரமாக இருப்பது போல் விளம்பரத்தின் இயல்பே அதுதானே? அது வேறு என்ன செய்யும்? ஆனால் கவித்துவமான, இரைச்சல் போடாத அற்புதமான விளம்பரங்களும் இப்போது வரத்தான் செய்கின்றன. சிமிழுக்குள் ஒரு நதியை அடைத்தது போன்ற விளம்பரங்கள். ஓரிரு நிமிடங்களே ஓடும் ஒரு விளம்பரத்தில் ஒரு சிறுகதையைச் சொல்லிவிட முடியுமா?சில மாதங்களுக்கு முன் ஏதோ ஒரு சேனலில் “NO ONE KILLED JESSICA” பார்த்துக் கொண்டிருந்தபோது இடையே அப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். அது எந்தப் பொருளுக்குமான விளம்பரம் அல்ல. வாங்கச் சொல்லும் விளம்பரம் அல்ல. கொடுக்கச் சொல்லும் விளம்பரம். பாருங்கள்:
ஒரு உணவுவிடுதியில் பலரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மேசையில் இளைஞன் ஒருவன் தனியே ஏதோ பருகிக் கொண்டிருக்கிறான். அவனருகே ஐந்து வயதினள் போன்ற ஒரு சிறுமி வந்து நிற்கிறாள். “தேங்க்யூ அன்க்கிள்என்று அவனுக்கு நன்றி சொல்கிறாள். முன்னபின்ன பார்த்திராத ஒரு சிறுமி தன்னிடம் வந்து நன்றி சொல்வதைப் பார்த்து அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “எனக்கு எதற்கு நன்றி சொல்கிறாய்?” என்று கேட்கிறான். “நான் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ரொம்ப சீரியஸான நெலமையில் ஆஸ்பத்திரியில் இருந்தேன். என் ஆபரேஷனுக்கு யாரோ ரத்தம் கொடுத்திருக்காங்க. அது யாருன்னு எனக்குத் தெரியல. உங்க வயசுல உள்ள ஒரு அன்க்கிள்னு அப்பா சொன்னாங்க. அதுனால உங்க வயசுல யாரப் பாத்தாலும் நன்றி சொல்றேன்என்கிறாள் அந்தச் சிறுமி. அவன் குழம்பியவனாக, “ஆனால் நான் இதுவரைக்கும் யாருக்கும் ரத்ததானம் கொடுத்ததில்லைஎன்கிறான். “இனிமேல் கொடுங்க அன்க்கிள்என்று சொல்லிவிட்டு அந்தச் சிறுமி நகர்கிறாள். அவள் அப்படி இயல்பாக சொல்லிய வார்த்தைகள் அவனின் மனநிலையில் மாற்றத்தைச் செய்வது அவன் முகபாவனையில் தெரிகிறது.

ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்த இந்த விளம்பரம் இன்னமும் ஞாபகம் இருக்கிறது. ஏனெனில் இதில் ஒரு கவித்துவமான வெளிப்பாடு இருக்கிறது. உள்மனத்திற்கான ஒரு செய்தி இருக்கிறது.


விளம்பரங்களின் மொழிநடை பற்றித்தான் நான் பேச வந்தது. இலக்கியத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வெளிப்படுகின்ற மொழிநடைகள் அந்த அந்த காலகட்டங்களின் விளம்பரங்களிலும் பிரதிபலிக்கும் போலும். தூசி தட்டி எடுத்து நான் படித்துக்கொண்டிருந்த சில பழைய நூற்களில் கண்ட விளம்பரங்கள் இப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தின. அவை அரை நூற்றாண்டு காலத்திற்கு முந்திய இஸ்லாமிய நூற்கள். அண்ணாவின் அடுக்கு மொழிநடையும் கலைஞரின் மிடுக்கு மொழிநடையும் தமிழ் மக்களை மகுடிநாதமாகக் கட்டிப் போட்டிருந்த காலகட்டம். அந்த நடையை அக்கால முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்புக்களிலும் காண முடியும். (அதேபோல் அக்கால முஸ்லிம் கவிஞர்களின் கவிதைகளில் அப்படியே பாரதிதாசனின் பாணியைப் பார்க்கலாம்.) உதாரணமாக, திருச்சி மதனீ சாகிபு எழுதிய ஒரு கவிதையின் நடையைப் பாருங்கள், அண்ணாதுரை பேசுவது போலவே இருக்கிறது:
“முஸ்லிம் விஞ்ஞானிகள் இலரோ அண்ணே – உண்டு,
    மூடி மறைத்துவிட்டார் வஞ்சகர் தம்பி
ஆதாரம் காட்ட முடியுமா அண்ணே – ஆஹா,
      ஆயிரம் காட்டும் வரலாறு தம்பி
அமெரிக்கா கண்டவர் கொலம்பசா அண்ணே – இல்லை
      அராபிய வீரர்கள் கண்டது தம்பி
கடிகாரம் கண்ட்து எவரோ அண்ணே – அரபி
      கத்தாபி என்பவர் அறிந்திடு தம்பி
‘போட்டோதொழிலுக்கு மூலவர் அண்ணே – அவரா?
      புவிபுகழ் இப்னு ஹாஷீம் தம்பி
‘பேப்பர்சிருஷ்டித்த சீலர் யார் அண்ணே – தீன்குலப்
      பெரியார் யூசுப் பின் உமர் தம்பி
‘டெலஸ்கோப்கர்த்தா சொல்லுவாய் அண்ணே – கேள்!
      திகழ்ஞானி அபுல்ஹஸன் என்றிடு தம்பி
‘பெண்டுலம்கண்டு பிடித்தது அண்ணே - வையப்
      பெருமகன் இப்னு யூனுஸ் தம்பி
துப்பாக்கி தந்த் விஞ்ஞானி அண்ணே – உணர்வாய்
      சுடர்மேதை மீர்வதுல் லாகான் தம்பி
கப்பலைக் கட்டிக் காட்டியவர் அண்ணே – இதோ
      கலைமதி அபுல் காசிம் தம்பி

1957-ம் ஆண்டு சீதக்காதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மதனீ கவிதை மலர்என்னும் சிறு நூலில் (விலை 12 ந.பைசா) மேற்கண்ட கவிதை இருக்கிறது. நூலின் உள் அட்டையில் எவரெஸ்ட் பிரிண்டர்ஸ் என்னும் ஸ்தாபனத்திற்கு ஒரு விளம்பரம் உள்ளது. விளம்பர நடையைப் பாருங்கள்:
“தமிழ்கூறு நல்லுலகப் பெருமக்களுக்கோர் தேன்சொட்டும் சேதி!
கண்ணையும் கருத்தையும் கவரத்தக்க அச்சு வேலைச் சித்திரங்களைக் காணவேண்டுமா?
இங்கே வாருங்கள்! இதயம் மகிழுங்கள்!
கைதேர்ந்த அச்சுத்தொழில் மேதைகளைக் கொண்டு நிர்வகிக்கப்படும் அச்சகம் இது ஒன்றே!
கலியாணப் பத்திரிகைகள், கடைகளுக்கு வேண்டிய பில், கவர், லெட்டர் பேபர் போன்ற சகலவிதமான வேலைகளும் நயமாக, நாகரிக முறையில், குறித்த நேரத்துக்குள் செய்து தரப்படும்.
(குறள்)
அச்சுத் தொழிலுக்கு ஆக்கம் தருவோர்கள்
இச்சகத்தில் வாழ்வர் இனிது

1957-ல் தாஜ்மகால் பதிப்பகம் சார்பில் வெளிவந்த குணங்குடி மஸ்தான் யார்?” (விலை ஆறு அணா. எழுத்தரசர் மணவை.ரெ.திருமலைசாமி சிறப்புரை கொண்டது.) என்னும் நூலில் இருந்து மதனீ சாகிபின் உரைநடைக்கு உதாரணமாக ஒரு பகுதியைப் படித்துப் பாருங்கள் (பழைய தமிழ்ப் படத்தில் கலைஞர் எழுதிய வசனத்தை சிவாஜி கணேசன் பேசுவது போலவே தொனிக்கின்றது அல்லவா?):
“காட்சிக்கு அவர் ஓர் கானகவாசிதான். கடமையிலோ, சீர்திருத்தக் காரராகவே காணப்பட்டார். ஆச்சரியப்படுவீர்கள், அவரின் முழக்கம் எதற்காகப் பயன்பட்டது என்று புரிந்து கொண்ட பிறகு.

நாடகமே உலகம்! அதை நம்பாதே நெஞ்சே! என்பதற்கா? அல்ல! மாயப் பிரபஞ்சத்தில் வாடாதே மனமே! என்ற சிந்து பாடவா? அல்ல! அன்பு மனைவி, ஆசைக் குழந்தை, சொத்து சுகம், வீடுவாசல் அனைத்தையும் விட்டொழித்து, சன்யாச வாசம் கொள்ளவா? அல்ல! மனிதன், ஓர் பாப மூட்டை! உலக வாழ்வு, அதைச் சுமக்கும் கழுதை! என்று பழித்துக் காட்டவா? அல்ல! அல்லவே அல்ல! பின் எதற்கு?

மதச் செருக்கை ஒழி என்றார் -  குலப்பித்துக் கூடாது என்றார் – பல கடவுள் பற்றைக் கண்டித்தார் – கண்சிமிட்டிக் காரிகளின் கனி மொழியில் மயங்கிக் காசையும் கருத்தையும் இழக்கும் காமுகரை எச்சரித்தார் – ஐஸ்வரிய மிகுந்த ஆணவக்காரர்களின் அக்ரமங்கள் அடுக்காது என்றார் – ஒழுக்கத்துடன் வாழும் உள்ளமும், உறுதியும் தேவை என்றார் – ஒரே கடவுள் நம்பிக்கை கொள்! என்றார் – நற்குணங்குடி கொண்ட மனிதனாக மாறு! என வற்புறுத்தினார் – மனிதகுலம் மாசிலாமல் விளங்க, மனிதப் பற்று மிக முக்கியம் என்றார் – அகத்தூய்மை பெறவும், அழிவில்லா இன்பம் காணவும் ஏகாந்தத் தொழுகையைக் கடைப்பிடிக்கத் தூண்டினார் – உபதேசிகள் உதடுகளின் அசைவைக் கவனிக்காதே! உள்ளத்தைக் கவனி!என்று இடித்துக் காட்டினார் – மதியோடு, நேர்மையோடு நட! மறிப்போரை நிர்மூலமாக்கு! எனத் தூண்டினார் – தீவினைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்க முயலுங்கள்! என மன்றாடினார் – முத்திநிலைபெற சத்தியத்தை நம்பியிரு! என்றார்

இப்படிப்பட்ட ஒரு நூலின் பின்னட்டையில் ஒரு விளம்பரம் இருக்கிறது. டைமன் பீடிகள்பற்றிய விளம்பரம்! அதற்கான காரணம் நூலின் முன்னட்டையிலேயே தெரிகிறது:
“சமூக ஊழியரும், ஏழைத் தொழிலாளர் இரட்சகரும், நற்குணங்குடி கொண்டவரும், திருச்சி டைமன் பீடி கம்பெனி உரிமையாளருமான K.அப்துல் அஜீம் சாஹிப் அண்ணல் அவர்கள் பொருளுதவியால் இந்நூல் வெளியிடப் பெற்றது.” 
நூலின் பின்னட்டையில் உள்ள விளம்பரம் இதோ:
“பீடி உலகிலே புரட்சி. புதுமை அற்புதம் புரிவது டைமன் பீடிகள்.
டைமன் பீடி புகை மணத்தை அனுபவிக்காதவர்கள்தான் மல்லிகை மணக்கும்! ரோஜா மணக்கும்! என்பார்கள்.
வேலை செய்து களைத்தோரே, களைப்புத் தீர வேண்டுமா?
ஆபீஸ் வேலை செய்வோரே, அல்லல் போக வேண்டுமா?
அறிவு வளர ஆசைப்படுவோரே, அறிவு பெறுக வேண்டுமா?
வியாபாரத் தொழில் புரிவோரே, சுறுசுறுப்புப் பெற விருப்பமா?
இதோ இங்கு வாருங்கள்! இந்த மருந்தைப் பாருங்கள்
நாடித் தளர்ச்சி நீக்கும் மருந்து, நல்ல இரத்தம் தரும் மருந்து,
நாணயம் நல்கும் சுடர் மருந்து, நல்லவராக்கும் அருள் மருந்து,
சுகாதார அமைப்பு கொண்ட மருந்து, சுகானந்தம் தரும் ஜீவ மருந்து.
டைமன் பீடி, பாலக்கரை திருச்சி. ஸ்தாபிதம் 1925.
இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஸ்தாபனம் அல்ல!
ஏழையர் வாழ்வில் இன்பம் பொங்க வழி வகை காட்டி, குடிசைத் தொழில் வளர்க்கும் ஸ்தாபனமாகும்.
ஊரில் உயர்ந்தது உறையூர் – கோபுரத்தில் சிறந்தது குத்துப்மினார் – கட்டடத்தில் அற்புதம் தாஜ்மஹால் – பட்டினங்களின் தாய் மக்கா! அதுபோல், பீடி உலகில் பெருமையும், சிறப்பும், பெரும் புகழும் கொண்டது டைமன் பீடி ஒன்றே!
உடலுறுதி பெறவும், உள்ளம் மகிழவும், நற்குணங் குடி கொள்ளவும் டைமன் பீடிகளையே உபயோகித்து வாருங்கள்!

மேற்படி விளம்பரத்தின் மீது ஒரு ‘விவேகவிமரிசனம்:
அடப்பாவிகளா! ஒரு நாத்தம்புடிச்ச பீடிக்கு இவ்ளோ பெரிய பில்ட்டப்பாடா? ஒங்க நான்சென்சுக்கு ஒரு அளவே இல்லியாடா? பீடி உலகிலே புரட்சிங்கிறிங்களே, அது என்ன ஃப்ரெஞ்சுப் புரட்சியாடா? புதுமை அற்புதம் புரியிறதுக்கு பீடி என்ன அவ்லியாவாடா? புத்து நோய கொண்டு வர்ற சனியனப் போயி மருந்து மருந்துன்னு சொல்லி விக்கிறது ஞாயமாடா? இதுதான் சுடர் மருந்து அருள் மருந்துன்னா அப்புறம் எதுக்குடா பக்தி தியானம் தொழுகை நோம்பெல்லாம்? அளவற்ற அருளாளன் வேதத்துக்குப் பதிலா பீடிக்கட்டு அனுப்புனாங்கிற மாதிரி இப்படி வெளம்பரம் பண்றீங்களே, அடுக்குமாடா? இறைவனின் திருக்கல்யாண குணங்கள் இதயத்தில் குடிகொள்ள வேண்டும்னு சொன்ன குணங்குடி மஸ்தான் சாகிபு வரலாற எழுதின புத்தகத்திலயே ‘நற்குணங் குடி கொள்ள டைமன் பீடிகளையே உபயோகித்து வாருங்கள்னு சொல்லி அவருக்கே ஆப்பு வச்சிட்டீங்களேடா!பீடித் தொழில் என்பது முஸ்லிம் சமுதாயத்தோடு அடையாளமாகிவிட்ட ஒரு குடிசைத் தொழில் என்றுதான் சொல்ல வேண்டும். 1963-ஆம் ஆண்டு மேலைப்பாளையம் எம்.என்.முஹையிதீன் என்பவர் வெளியிட்ட “முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி மலர்என்னும் நூலினுள் திருச்சி மெஸர்ஸ்.என்.பி.அப்துல் கபூரின் ‘903 கபூர் அன் ஸ்டீம் பீடிகள், மேலைப்பாளையம் வி.டி.எஸ்.அப்துல் ஹமீது ராவுத்தரின் 5-ம் நிர். பீடிகள், ‘இலங்கை – இந்தியாவில் மிகப் புகழ்பெற்ற காமா பெஸ்ட் இந்தியன் பெஸ்ட் பஹதூர் பீடிகள், சாங்கிலி – நிப்பாணி – அக்கூள் – மிர்ஜ் பண்டர்பூரி பீடி புகையிலைகள் முதல்தரமான சரக்குகளாகவும், கியாரண்டியுடன் விலை சகாயமாய் மொத்தமாக விற்பனை செய்து வருகிறோம்என்று சொல்லும் ஏஜெண்டு வி.அப்துல் ரஷீது, எம்.எஸ்,பி பீடிகளையே எப்போதும் பயன்படுத்தச் சொல்லும் எம்.சுல்தான் பிள்ளை அன் சன்ஸ் என்னும் வியாபாரியின் மாலிக் மஹால் (தொ.பே.எண்: 102, திருநெல்வேலி), புகைக்கச் சிறந்தது என்னும் சான்றுடன் திருநெல்வேலி ‘ஹுசேன் பீடிகள்’, புகைக்குச் சிறந்தது என்னும் சான்றுடன் திருநெல்வேலி ‘காஜா பீடிகள் ஆகிய பீடிகளின் விளம்பரங்கள் காணப்படுகின்றன.என் மனதில் புகைப்பதிவுகள் பால்ய வயதில் முதன்முதலாக ஏற்பட்ட்து திருவையாற்றில் நாங்கள் குடியிருந்த வீட்டின் ஓனர் மூலமாக. அப்போதே அவருக்கு எண்பது வயதைக் கடந்திருந்தது. வீட்டின் பின்னே பரந்து கிடந்த கொள்ளையில் வளர்க்கப்பட்ட பத்துப் பதினைந்து தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்களுக்குத் தண்ணீர் விடுவதற்காகத் தினமும் அதிகாலையிலேயே தலைப்பாக் கட்டுடன் வந்து வேட்டியை டப்பாக்கட்டு கட்டிக்கொண்டு ஒரு சுருட்டைப் பற்ற வைப்பார். குபுகுபுவன்று புகை கிளம்புவதை நாங்கள் வேடிக்கை பார்த்து ஆச்சரியப் படுவோம். ‘இத்தே பெரிய சிகரெட்டுப் புடிக்கிறாரே தாத்தாஎன்று தோன்றியது. அதன் பெயர் சுருட்டு என்பது பின்னால் தெரியவந்தது. கிராமத்தில்தான் அந்த முரட்டு வஸ்துவைப் புகைப்பார்கள் என்று எண்ணியிருந்தேன். இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் வாயில் அதைப் பார்த்தபோது அந்த எண்ணம் மாறியது. அவரே எம்ஜியாரின் ரெண்டுக்கு சிம்பலுக்குச் சொந்தக்காரர் என்பதும் புதிய தகவலாகக் கிடைத்தது. இப்போது தோன்றுகிறது, ‘சுருட்ட இப்படிப் பிடிக்கணும்என்று சர்ச்சில் காட்டிய சுருட்டுக் குறியைத்தான் விக்டரிக் குறி என்று விளங்கிக் கொண்டார்களோ என்னவோ?

என் தாய்வழிப் பாட்டனார், இங்கிலாந்து ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் படித்தவர், தன் கடைசிக் காலம் வரை சிகரெட்டு புகைத்துக் கொண்டிருந்தார். சிகரெட்டை அதன் பெட்டியிலிருந்து எடுத்து கையில் வைத்துக்கொண்டு அந்த டப்பாவின் மீதே மெதுவாகத் தட்டிக்கொண்டிருபார். அப்படி ஐந்து நிமிடங்கள் தட்டிய பிறகுதான் பற்ற வைப்பார். என் தந்தைவழிப் பாட்டனார் பீடி புகைப்பார். ஜிப்பாவில் எப்போதும் ஏதாவது ஒரு பிராண்ட் கட்டு இருக்கும். ஊரூருக்கு தனிச்சிறப்பு சேர்க்கும் பிராண்டுகள் பீடியில் உண்டு என்று ஒருமுறை ஒரு பட்டியலே சொல்லி எங்களை அசத்தினார். ‘பாவட்டா பீடிஎன்று அவர் சொன்ன பெயர் வினோதமாகத் தோன்ற நாங்கள் சிரித்தோம்.புகைத்து முடித்த பீடித் துண்டுகள் பீங்கானுக்குள் விழுந்து மிதக்காத ஒரு கழிப்பறையைப் பள்ளிவாசல்களில் பார்ப்பது அரிது. சில நேரங்களில் புகை சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில் உள்ளே சென்று அவதிப்பட்டிருக்கிறேன். தொழுகைக்குத் தயாராகிறவர்கள் கழிப்பறையில் பீடி புகைப்பதை ஒரு ஐதிகமாகவே வகுத்துக்கொண்டு விட்டார்கள் என்று சொல்லலாம் போல. ஓர்மையாகத் தொழுவதற்கு மனத்தை அது தயார் செய்கிறதோ என்னவோ? அல்லது பீடி புகைக்கையில் இருக்கும் மனவோர்மை தொழும்போது இருக்கிறதா என்பதை அவர்கள் பரிசீலனை செய்துகொள்ள வேண்டும். அல்லது காஃபியைப் போல் பீடியும் ஒரு நல்ல மலமிளக்கியோ என்னவோ? புகைப்பவர்கள்தான் சொல்ல வேண்டும்.

எதையோ சொல்ல ஆரம்பித்து எதையோ சொல்லி... இந்தக் கட்டுரை கட்டில்லாத உரையாக ரோலர் கோஸ்டர் போல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஓர் உளவியல் சோதனையைச் சொல்லி முடித்துக் கொள்ளலாம். அப்போது பி.எஸ்சி இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தேன். என் நண்பன் ஒருவனுக்கு சிகரெட் பழக்கம் இருந்தது. அதை விட்டுத் தொலைக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தச் சின்ன வயசிலேயே அவனுக்கு வந்துவிட்டது! நான் தத்துவம் உளவியல் ஆன்மிகம் என்றெல்லாம் படித்துக் குவிக்கிறேன் என்பதை அறிந்து என்னிடம் ஆலோசனை கேட்டான். சிகரெட் குடிப்பதில் கிடைக்கும் இன்பம் என்பது தாயின் மார்பில் பால் குடிப்பதின் இன்பத்தை ஒத்திருப்பதாக ஆழ்மனம் உணர்வதால்தான் புகைப்பழக்கத்தை அவ்வளவு உறுதியாக நிறுவிக்கொள்கிறது என்று ஓஷோ சொல்கிறார். வெதுவெதுப்பான பால தாயின் முலைக்காம்பில் இருந்து வாய்க்குள் இறங்குவது போன்ற உணர்வை அது தருகிறது; குழந்தைப் பருவத்தில் போதுமான அளவு தாயிடம் பாலருந்தியிராத ஆசாமிகள்தான் புகைப்பழக்கத்திற்கு எளிதில் ஆட்படுவார்கள்; அவர்களின் ஆழ்மனதில் குழந்தைப் பருவத்தில் பதிந்து போன ஆற்றாமையை இதன் மூலம் தீர்த்துக்கொள்ள அவர்களின் மனம் யத்தனிக்கிறது. திருமணம் ஆகிவிட்டால் இந்தப் பழக்கத்தை விட்டுவிடுவது கொஞ்சம் எளிதாகலாம் என்றெல்லாம் ஓஷோ சொல்கிறார்என்றேன். திகிலுடன் கேட்டுக் கொண்டிருந்தான். என்னப்பா அவரு என்னென்னமோ சொல்றாருஎன்றான். “நிறுத்துறதுக்கு ஒரு பயிற்சியும் சொல்றாரு, ட்ரை பண்றியா?என்று கேட்டுவிட்டு அதைச் சொன்னேன்.

அந்தப் பயிற்சியாவது: இரவு தனிமையும் அமைதியும் உள்ள ஒரு சூழலை ஏற்படுத்திக் கொள்வது. கட்டிலறையாக இருந்தால் நலம். விளக்கை அணைத்துவிட வேண்டும். மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். குழந்தைகள் பாலருந்தும் புட்டியில் வெதுவெதுப்பாகப் பாலருந்த வேண்டும்!

சொன்ன கருத்துக்களை அந்த நண்பன் எப்படிப் புரிந்து கொண்டான் என்றும் இந்த உளவியல் பயிற்சியைச் செய்தானா இல்லையா என்பதை யான் அறியேன். ஆறேழு வருடங்கள் கழித்து அவனைச் சந்தித்த போது ஐரோப்பாவில் இருப்பதாகச் சொன்னான். ‘இன்னமும் ஸ்மோக் பண்றியா?என்று கேட்டேன். நிறுத்திவிட்டதாகச் சொன்னான். திருமணமாகி விட்டதென்றும் சொன்னான்.


Tuesday, January 17, 2012

என்னுள்ளே என்னுள்ளே... (தொடர்ச்சி-2 )அவிலா தெரசாவின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துக் கொண்டிருந்தபோது மனம் கவனித்த இன்னொரு விஷயம் அவருடைய உருவ லட்சணங்களைப் பற்றிய வருணனை. ஆன்மிக ஞானிகளின் உருவங்கள் அவர்களுடைய போதனைகளைப் போல் நமக்கு அவசியமானவை அல்ல என்று மிக எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் உலகில் தோன்றிய இறைத்தூதர்கள், இறைஞானிகள் போன்றோரின் உருவ லட்சணங்கள் பற்றிய குறிப்புக்கள் பேணப்பட்டு வந்துள்ளதையே நாம் காண்கிறோம். அவை ஞான சாதகர்களின் மனங்களில் ஏற்படுத்தும் தாக்கம் தனித்தன்மையான ஒன்று. எனவே ஞானியரின் உருவத்தைக் காண்பதே ஒரு ஆன்மிகப் பேறு எனலாம்.

ஆனால் புகைப்படங்கள் தோன்றாத காலத்தே ஞானியரின் உருவங்கள் ஓவியங்களின் மூலமாகத்தான் பதிவு செய்யப்பட வேண்டிய நிலை இருந்தது. ஓவியம் என்பது ஓவியனின் மனத்தின் பதிவு. எந்திரப்பதிவைப் போல் அது உள்ளதை அப்படியே பிரதிபலிக்கும் என்று சொல்ல இயலாது. ஓவியத்தில் ஓவியனின் புனைவு இடம்பெறுவதைத் தவிர்க்க இயலாது. அதிலும், ஒரு ஞானியின் வாழ்நாளில் அவருடைய உருவம் பதிவுசெய்யப்பட்டிராத பட்சத்தில் அவருடைய மறைவுக்குப் பின் ஓவியர்கள் வரையும் ஓவியங்கள் முழுக்க முழுக்க கற்பனைப் புனைவுதான். அதில் இருப்பது வரலாறு அல்ல. அதற்கு வரலாற்று மதிப்பும் இல்லை. ஆனால் அதில் இருப்பது புனைவினால் உள்வாங்கிக் கொள்ளப்பட்ட ஞானம். புனைவின் வழி வெளிப்படும் ஞானம். எனவே அந்த ஓவியங்கள் குறியீடாகப் பயன்படுகின்றன. இவற்றால்தான் உருவ அல்லது அருவுருவ வழிபாட்டை அனுமதிக்கும் சமயநெறிகளில் அத்தகு ஓவியங்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருப்பதையும், உருவ வழிபாடு அனுமதிக்கப்படாத சமயநெறியான இஸ்லாத்தில் அத்தகு ஓவியங்கள் உருவாகாத நிலையையும் காண்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அவர்களின் காலத்திலேயே தன்னுடைய உருவம் ஒரு கலைப் பிம்பமாக மாற்றப்படுவதைத் தடுத்துவிட்டார்கள். அவ்வாறு இஸ்லாத்திற்குள் உருவ வழிபாடு நுழைந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கை காட்டினார்கள். ஓவியர் ஒருவர் அவர்களின் ஓவியத்தை வரைந்து கொண்டுவந்து அவர்களிடம் காட்டியபோது அதனை அவர்கள் தம் கைகளாலேயே கிழித்தெறிந்து விட்டார்கள்  என்பது வரலாற்றுப் பதிவு.

“என்னைக் கண்டவர் சத்தியத்தையே கண்டார்” (மன் ரஆனி ஃபகத் ரஅல் ஹக்) என்று திருவாய் மலர்ந்தருளிய நபிபெருமானின் உருவப்பதிவு இல்லவே இல்லை என்றபோதும் அவர்களின் அங்க லட்சணங்கள் பல ஹதீஸ்களில் (நபிமொழிகளில்) பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவர்களின் உருவ வருணிப்புக்களைக் கூறும் தனியொரு நூலாகவே “ஷமாயில் திர்மிதிஎன்னும் ஹதீஸ் கிரந்தம் திகழ்கின்றது என்பது கவனிக்கத்தக்கது. நபிகள் நாயகத்தின் உருவ லட்சணங்களை அறிந்து இன்பமடைய இது வழிசெய்கிறது. அவற்றைப் படிக்கும் நபிநேசர்கள் பரவசம் கொள்கிறார்கள். அதே லட்சணங்களில் தங்கள் உருவத்தை இயன்ற அளவு அமைத்துக் கொள்கிறார்கள்.

இது பற்றி என் சொந்த அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன். நபிகள் நாயகத்தின் கண்களின் இமை முடிகள் நீண்டு இருக்கும் என்பது நபிமொழிகளில் காணப்படும் குறிப்பு. இதனை என் தந்தை படித்திருக்கிறார். என் மகனை ஓர்நாள் அவர் கொஞ்சிக் கொண்டிருந்தபோது இதைக் குறிப்பிட்டு “உன் கண்கள் ரசூலுல்லாவின் கண்களைப் போல் இருக்கின்றனஎன்று சொல்லிச் சொல்லி அவனை முத்தமிட்டார். என் மகனின் கண்ணிமை முடி நீளமாகத்தான் இருக்கின்றன. இதுபோல், நபிகளின் உருவ லட்சணங்கள் தென்படும் உருவங்களில் அவர்களின் ஞாபகத்தைத் தூண்டிப் பரவசம் அடைய முடிகிறது.


இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது. நபிமொழிகளைப் படிக்கும்போது அதில் நாம் நபியின் வாழ்க்கை நிகழ்வுகளையே படிக்கிறோம். ஒரு விஷயத்தைப் படிக்கும்போது அதனைக் காட்சிப்படுத்திக் காணும் இயல்பு மனிதனின் கற்பனைப் புலனுக்கு உண்டு. அவ்வகையில் முகம் பார்த்தறியாத ஒரு நபரைப் பற்றிப் படிக்கும்போதும் அவரைப் பற்றிய வருணனைகளின் தரவுகளை வைத்துக்கொண்டு அவருக்கொரு சாத்தியமான உருவத்தைக் கற்பனித்துக் காட்சிப் படுத்திக்கொள்ளவே மனம் நாடும். சராசரி மனிதர்களைவிட ஒரு கலைஞனின், ஆன்மிக சாதகனின் மனதில் இது மிக உக்கிரமாகவே இருக்கும். படிக்கும்போது உள்மனதைக் கவனித்தால் இது புரியும். தெளிவான உருவமாக இல்லாவிட்டாலும் மலைப்பிரதேசப் பனிமூட்டத்தில் நமக்குப் பத்தடி தூரத்தில் நிற்கும் ஒருவரைக் காண்பது போல, அல்லது பனி படிந்த கண்ணாடி வழியே காண்பது போல, ஒரு நிழலசைவாக அந்தக் கற்பனை உருவம் நம் மனவுலகில் அசையும். நபியின் சரிதக் குறிப்புக்களைப் படிக்கும்போது மனவெளியில் நிழலுருவாய் அசையும் அந்த உருவம் நம் மனம் வலிந்து செய்து கொள்ளும் கற்பனை அல்ல. இறைவன் மனத்தை அமைத்திருக்கும் இயல்பால் (ஃபித்ரத்) வருவது. புறவுலகிற்கும் அகவுலகிற்குமாக மனித மனம் பிளவுபட்டுக் கிடப்பதால் அக்காட்சி தெளிவாகத் தெரியாமல் நிழலுரு போல் மங்கித் தெரிகிறது. கண்ணாடியின் மீது படிந்திருக்கும் பனிப்படலத்தைக் கருணையின் கைகள் துடைத்தால் அவ்வுருவம் தெளிவாகத் தெரியும். ஞானிகள் தம் கனவில் நபிகள் நாயகத்தைக் காண்பது அவ்வாறுதான். புறவுலகத் தொடர்பு அறுபட்ட பின், இறந்த பின் மண்ணறையில் நபியின் காட்சி கிடைத்துவிடுவதும் அதனால்தான். என் ஆழ்மன வெளியில் உலவிக்கொண்டிருக்கும் அந்த நிழலுருவைத் தெளிவாகக் காண்பதற்கு நான் பயிற்சிகளால் முயலத்தான் வேண்டும். (மூத்து கப்ல அன்த மூத்து – நீ மரணிக்கும் முன் மரணித்துவிடுஎன்பது நபிமொழி.) அதை நோக்கி நான் மெல்ல மெல்ல நகர்ந்து நெருங்க வேண்டும்.

நபிகள் நாயகத்திற்குப் புறவுலகில் ஒரு படமோ பிம்பமோ இல்லாதபோதுதான் இந்த நிலை இருப்பது சாத்தியமாகிறது. ஒருவேளை அவர்களுக்கு ஸ்பஷ்டமாக ஓர் உருவத்தை மனம் வரித்துக் கொள்ளுமானால் காரியமே கெட்டுவிடும். வெளியிலிருந்து அந்த பிம்பத்தை எடுத்துக்கொண்டு மனதிற்குள் அதை நான் நுழைத்துவிடும்படி ஆகிவிடும். (இதனால்தான் அரவிந்தர் சிறையில் கண்ட கிருஷ்ண தரிசனம் பொய்க்காட்சி என்று ஓஷோ கூறுகிறார். முன்பு வெளியுலகிலிருந்து மனதிற்குள் பதித்துக்கொண்டதால் உருவான தன் மனப்பிம்பத்தையே அவரின் மனம் மீண்டும் வெளியுலகில் பிரதிபலித்துக் கண்டது என்று சொல்கிறார்.)


ராமகிருஷ்ண பரமஹம்சரின் அனுபவத்தையும் நாம் இங்கே கவனிக்கவேண்டும். ஓவியத்தில் / சிற்பத்தில் இருந்து அவர் பெற்றுக்கொண்ட காளியின் உருவம் ஆழ்நிலை தியானத்திற்குத் தடையாக இருந்தது. கண்களை மூடினால் காளியின் ரூபம் வந்து நிற்கிறது. அவளைத் தாண்டி என்னால் செல்ல இயலவில்லைஎன்று அவர் தன் குருவிடம் சொல்கிறார். ஒரு குறிப்பிட்ட நிலைவரை ஆன்மிகத்தில் முன்னேற உதவியாக இருந்த பிம்பமே இப்போது அப்பால் செல்வதற்குத் தடையாக இருக்கிறது. அத்வைத வேதாந்தத்தில் அவருடைய குருவாக இருந்த தோத்தாபுரி அவரை நோக்கி ‘வாளெடுத்துக் காளிரூபத்தை வெட்டிவிட்டு அப்பால் செல். இல்லையெனில் உனக்கு நிர்விகல்ப சமாதி சித்தியாகாதுஎன்று சொல்கிறார். “வாளை நான் எங்கிருந்து எடுப்பேன்?” என்கிறார் ராமகிருஷ்ணர். “காளியின் வடிவை எங்கிருந்து எடுத்தாய்? அதே கற்பனையில் இருந்து வாளையும் எடு. நான் உன் நெற்றியில் வெட்டுவேன். அதே கணம் நீ உன்னுள் காளியை வெட்டிவிடுஎன்று சொன்ன தோத்தாபுரி கண்ணாடித் துண்டொன்றை எடுத்து ராமகிருஷ்ணரின் நெற்றியில் கீறினார். அப்போது தன் மனத்தில் காளியின் பிம்பம் கிழிவது போல் கண்ட ராமகிருஷ்ணர் உருவமற்ற நிர்விகல்ப நிலைக்குச் சென்றார்.


இந்தச் சம்பவத்தைப் பல இடங்களில் ஓஷோ பேசியிருக்கிறார். தோத்தாபுரி சொன்ன வாசகம் ‘அஷ்டவக்ர கீதையில்உள்ள ஒரு ஸ்லோகத்தின் கருத்து என்று அவர் சொல்கிறார். இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு அவர் பேசும் ஒரு விளக்கம் சுவாரஸ்யமானது: “பல வருட சாதகங்களின் பின் ஒரு கிறித்துவன் கண்களை மூடுகிறான். அவன் மனதில் கிறிஸ்து தோன்றுகிறார். கிருஷ்ண பக்தன் ஒருவன் கண்களை மூடினால் அவனிடம் கிருஷ்ணன் வருகிறார். புத்தரை நேசிப்பவன் கண்களை மூடினால் அவனிடம் புத்தர் வருகிறார். மகாவீரரை நேசிப்பவன் கண்களை மூடினால் அவனிடம் மகாவீரர் வருகிறார். ஒரு ஜைனனிடம் கிருஸ்து வருவதில்லை; ஒரு கிருஸ்தவனிடம் மகாவீரர் வருவதில்லை; நீங்கள் முன்னிறுத்தும் பிம்பம்தான் வரும். ராமகிருஷ்ணரின் முயற்சி காளியின் மீதாக இருந்தது. அந்த பிம்பம் ஸ்தூலமாகவே ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டதால், நினைத்துக் கொண்டதால் அந்த பிம்பம் நிஜத்தைப் போலவே ஆகிவிட்டது. காளி அவரின்முன் நிற்பதாகவே அவருக்குத் தோன்றியது. அங்கே யாரும் நின்றிருக்கவில்லை.

“ப்ரக்ஞை தனியே இருக்கிறது. இரண்டாம் ஒன்று அங்கே இல்லை, வேறு இல்லை. உன் கண்களை மூடு. வாளெடுத்துக் காளியை வெட்டுஎன்று தோத்தாபுரி சொன்னார். ராமகிருஷ்ணர் தன் கண்களை மூடிய மாத்திரத்தில் அவருடைய துணிச்சல் அணைந்துவிடுகிறது. காளியை வெட்ட வாளை ஓங்க வேண்டும் – பக்தன் தன் தெய்வத்தை வெட்ட வேண்டும் – அது மிகக் கடினமானது. உலகைத் துறப்பது மிகவும் எளிது. பிடித்துக்கொள்ள இந்த உலகில் உருப்படியாக என்னதான் இருக்கிறது? ஆனால் உங்கள் மனதின் ஆழத்தில் நீங்கள் ஓர் உருவத்தை நிறுவிவிட்டால், அதில் கவித்துவத்தை உருவாக்கிவிட்டால், மனதின் கனவு பிரத்யக்‌ஷம் ஆகிவிட்டால், அப்புறம் அதனைத் துறப்பது மிகவும் கடினம். உலகம் ஒரு கெட்ட கனவு (அதனைத் துறப்பது எளிது.) ஆனால் பக்தியின் கனவு, உணர்வின் கனவு கெட்ட கனவல்ல. அது மதுரமான இனிய கனவு. அதைத் துறப்பது எப்படி? அதை உடைப்பது எப்படி?” (The Mahageeta Vol.1) 

மகாவீரர், புத்தர், கிருஷ்ணர் மற்றும் இயேசுவைக் குறிப்பிட்ட ஓஷோ நபிகள் நாயகத்தைக் குறிப்பிடவில்லை. ஏனெனில் அவருடைய உருவப்படம் இல்லை. எனவே அவரின் உருவத்தை முஸ்லிம் ஒருவன் தன் மனத்தில் நிறுவிக்கொள்வது இயலாது. (கடவுளைக் குழந்தையாக பாவித்தல் என்னும் தியானமுறையைப் பற்றிப் பேசுமிடத்தில் திரு.வி.க அவர்களும் கிருஷ்ணன், முருகன், இயேசு ஆகியோரைத்தான் குறிப்பிடுகிறார். ஆனால் ‘நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்என்று இலக்கியம் இருக்கிறது. அதை எழுதிய புலவர் எப்படிக் கற்பனை செய்திருப்பார்? அவர் மனம் கவர்ந்த ஏதேனுமொரு குழந்தை அவருடைய மனதில் நிழலாடாமல் இருந்திருக்க முடியாது.)

மனம் பற்றி நிற்க இஸ்லாத்தில் எந்த உருவமும் கிடையாது. நேரடியாக நிற்குண வழிபாடுதான். நேரடியாக நிர்விகல்ப மனநிலைக்கான சாதனைதான். கஃபா, குரான் நூல்வடிவம், அல்லாஹ் என்னும் பெயரின் எழுத்துவடிவம் என்று எந்த உருவம் மனதில் வந்தாலும் அதன் மீது லயிக்க முடியாது. லயித்தால் அதனைச் சிலையாக்கிக் கொண்ட நிலை ஏற்படும். அப்படி எதன்மீதாவது கவனத்தைக் குவிக்கும்படி நபிகள் நாயகமும் சொல்லவில்லை. இயல்பாக மனதில் பிம்பங்களின் பாய்தல் (Flow / Stream of images) இருக்கும். அதில் மனதைப் படியவிடக்கூடாது. காலப்போக்கில் பிம்பங்களுக்கிடையிலான இடைவெளி அதிகமாகும். ஒரு கட்டத்தில் பிம்பங்களே இருக்காது. இப்படித்தான் தொழுகையில் சாதகம் செய்ய முடியும். ஆனால் இந்த நிலை எத்தனை முஸ்லிம்களால் எட்டப்படுகிறது என்பது கேள்விக்குறிதான்.

இஸ்லாமிய ஞான நெறியான சூஃபித்துவத்தில் ஈடுபடும் சீடனுக்குக் கூட இந்த இடர்ப்பாடு உண்டு. நபித்தோழர்கள் நபியின்மீது செலுத்தியது போல் தன் குருவின் மீது ஆழ்ந்த கவனம் செலுத்திவரும் அவனின் மனதில் அவரின் உருவம் பதிந்து போய் அதுவே ஒரு தடையாகிவிடக் கூடும். அதனால்தான் மௌலானா ரூமி சொன்னார்கள், “ஒரு குருவின் முக்கிய பணி தன்னை வைத்து சீடன் உண்டாக்கும் சிலையைத் தகர்ப்பதே!   

ஒரு ஞானியின் உருவத்தில் நமக்குக் கிடைப்பதென்ன? அதனைக் காண்பதில் ஏன் அத்தனைப் பரவசம் பிறக்க வேண்டும்? ஞானியின் உருவத்தில் உள்ள அழகு என்ன வகை அழகு?

அது உடலில் தெரியும் அழகு என்றாலும் உடலழகு அல்ல. ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்என்பது ஞானிகளுக்குத்தான் மிகப் பொருத்தம். உடலைத் திரையாக்கித் தன்னைக் காட்டும் ஞானத்தின் அழகு அது.

காதலின் முதல் நிலை காட்சி என்று தமிழ்மரபு சொல்கிறது. உலகின் அனைத்து இலக்கிய மரபிலும் இதுதான் நிலை. காட்சி வழிதான் காதல் பிறக்கிறது என்றே எல்லா இலக்கியங்களும் பாடுகின்றன. மனிதக் காதலை வைத்து இறைக்காதலை விளக்கும் முறைமையான நாயக-நாயகி பாவிகத்தில் இது எவ்வாறு இடம் பெறுகிறது என்று பார்ப்போம். இறைக்காட்சி என்பது முதல் நிலையிலேயே கிடைத்துவிடுவதில்லை. அது பக்தனின் லட்சியங்களில் ஒன்று. காதலியைப் பார்த்த பின் காதல் பிறப்பதாகத்தான் மனிதக் காதலின் மரபு பாடப்பட்டுள்ளது. ஆனால் இறைக்காதலில் இது சாத்தியமில்லை. அது நம்பிக்கையின் அடிப்படையில் பிறப்பது. காணாமலே காதல் என்பது இறைக்காதலுக்குத்தான் அப்படியே பொருந்தி வருகிறது. கேள்விப்பட்டுக் கேள்விப்பட்டுத்தான் காதல் வளர்வதாக அப்பர் அருமையாகப் பாடியிருக்கிறார்: “முன்னம் அவன்தன் நாமம் கேட்டாள், மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள், பின்னை அவன்தன் ஆரூர் கேட்டாள், பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்

 

இப்படி இருக்கும்போது நாயக நாயகி பாவனையில் மனிதக் காதலை வைத்து இறைக்காதலை விளக்க வேண்டும் என்றால் அது எவ்வாறு சாத்தியம்? காட்சி என்னும் முதல் நிலைக்கு ஆன்மிகத்தில் எதைச் சொல்வது? காம்ம் சான்ற ஞானப்பனுவல்எனப்படும் திருக்கோவையாருக்கு எழுதப்பட்டுள்ள உரைகளில் காட்சி என்னும் முதல் நிலைக்குப் பேரின்பப் பொருள் சொல்லப்பட்டுள்ளது. “உத்தம சற்குரு தரிசனமாகும்என்கிறது திருக்கோவையாருண்மை. இதற்கு விளக்கம் எழுதியுள்ள பெருமழைப்புலவர், “(பேரின்பம்) ‘குருவின் திருமேனி காண்டல்என்பதாம். (விளக்கம்) மிக்கதொரு பக்குவத்தின் மிகு சத்திநிபாதம் மேவுதலும் மக்களுருவிலெதிர் வந்த இறைவனாகிய நல்லாசிரியனை உயிர் காணுதலை ஈண்டுக் காட்சி என்னும் துறையாக உருவகித்தவாறும் என்க. ஈண்டுக் குரு என்றது தலைவியை; காண்டல் என்றது உயிராகிய தலைவன் கண்டது என்பது கருத்துஎன்று எழுதியுள்ளார்.  

 


குரு என்பவர் இறைவனின் ஒளிச்சுடர்கள் பிரகாசித்து நிற்கும் தலம் (மழ்ஹர் என்பது இதற்கான சூஃபித்துவக் கலைச்சொல்.) இறைவனின் ஜோதி பிரதிபலித்து வெளிச்சமிட்டுள்ள மாடம் அவர். மண்ணாலான சுவர் என்றாலும் அதில் விளக்கின் ஜோதி பிரதிபலிக்கும்போது நம்மைக் கவர்வது விளக்கேதான், சுவரல்ல. குருவின் உடல் வெறும் எலும்பு சதை தோல்தான் என்றாலும் அதில் பிரதிபலிப்பது இறைச்சுடர் என்பதால் குருவில் நம்மை வசீகரிப்பது இறைவன்தான்.

 

இந்த இடத்தில் திருவெம்பாவையின் முதற்பாடல் நினைவுக்கு வருகிறது. அதிகாலை நேரத்தில் தெருவில் இறைப்புகழைப் பாடியபடி பக்தைகள் வருகின்றார்கள். ஒருத்தி தன் வீட்டில் இன்னமும் மெத்தையில் உறங்கிக்கொண்டிருக்கிறாள். அவளை எழுப்புவதற்காக அவர்கள் பாடுகிறார்கள்,

“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்

 சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ?...

இவ்வரிகளுக்கு விளக்கம் தரும் பி.ஸ்ரீ சொல்கிறார், “இந்தக் கண்ணழகு புற அழகு மட்டுமன்று, அகத்தின் அழகையும் பிரதிபலிப்பதுதான். இவளும் தன் அகத்திலே ஆதியும் அந்தமும் இல்லாத சோதியைத் தியானிக்கிறவள்தான்.

 

இதுதான் ஞானிகளின் அழகிற்கும் விளக்கம். தம் அகக்கண்களால் அவர்கள் காணும் இறையொளியின் குளுமையான பிரகாசமே அவர்களின் கண்களிலும் ஒளிர்கிறது. எனவே கண்களே ஞானிகளின் பிரதானமான அழகு. ‘ஒளி படைத்த கண்ணினாய் வா வா வாஎன்று பாரதி அந்த ஞான அழகைத்தான் பாடினான். அதே ஒளி ஞானியின் உடலெங்கும் பரவிப் பிரகாசிப்பதை தேஜஸ் என்கிறோம். ஆனால் கண்களில்தான் அது அபரிதமாக ஒளிர்கிறது. எனவே கண்களே ஞானியின் விலாசம் எனல் தகும். மற்றவை எல்லாம் புறக்கோலம் ஆகக்கூடும். ஆனால் கண்கள் என்பவை அகக்கோலம்.

 

அவிலா தெரசாவின் உருவலட்சணங்கள் பற்றிய குறிப்பு இத்தனை சிந்தனைகளையும் தூண்டி விட்ட்து. அவரின் ஓவியங்களைப் பார்க்கும்போது ஒரு சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது. அதாவது, அவிலா தெரசா தன் நாற்பதாவது வயதிற்கு மேல்தான் ஆழ்நிலை தியானத்தில் காட்சிகளைக் காணத் தொடங்கினார். அவருடைய இளம் வயதில் அந்த நிலைகள் அவருக்கு ஏற்படவில்லை என்பதையே அவரின் சுயசரிதைக் குறிப்புக்கள் காட்டுகின்றன. வாலிபத்தில் மூன்று வருடங்கள் பக்கவாதத்தில் கிடந்ததும், அதன்பின் பதினெட்டு வருஷங்கள் வெறுமனே மந்தமாகவும் அகப்போராட்ட்த்திலும் கழிந்ததும் மட்டுமே அவர் வாழ்க்கை காட்டுவன. “என் கற்பனைப் புலன் மிகவும் பலவீனமாக இருந்தது. எந்த இறையியல் தத்துவத்தையும் விளங்கிக்கொள்ளும் நிலையில் என் அறிவாற்றல் அமைந்திருக்கவில்லைஎன்றே தன் இளமைக் காலத்தைப் பற்றி அவர் சொல்கிறார். ஆனால் அவிலா தெரசாவை ஓவியமாக வரைந்த பலரும் அவரின் இளமைக் கோலத்தையே தெரிந்தெடுத்து ஓவியம் தீட்டியிருக்கிறார்கள். அதிலும் அந்த ஓவியர்களின் தனித்தன்மையான புனைவுகளை நாம் காணமுடிகிறது.


 

அவிலா தெரசாவின் உருவம் பற்றிய குறிப்பு ஒன்றை “புனித அவிலா தெரசாவின் வாழ்க்கைநூலின் முன்னுரை தருகிறது: “வரலாற்று ஆசிரியர்கள் தெரசா தே அகுமதாவைப் பற்றி எதிர்காலத் தலைமுறைக்கு விரிவான விளக்கம் கொடுத்துள்ளனர். அவர் நடுத்தர உயரமும், சற்றுப் பருத்த உடலமைப்பையும் கொண்டிருந்தார். அவரது தனிச்சிறப்பான முகம் வட்ட வடிவு என்றோ நீள அமைப்பு என்றோ கூற இயலாது. அவர் வெண்ணிற மேனியும், செந்நிறக் கன்னங்களும் கொண்டிருந்தார். அகலமான நெற்றி, அடர்ந்த இளஞ்சிவப்புப் புருவங்கள், கரிய, கூரிய வட்ட வடிவிலான சற்றே முன் தள்ளிச் சரியாகப் பொருத்தப்பட்ட கண்கள், சிறிய மூக்கு; நடுத்தர அளவும் மென்மையாக அமைக்கப்பட்ட்துமான வாய்; வட்ட வடிவமைப்பான தாடை, சீரான அளவுடன் வரிசையாகப் பளிச்சிடும் வெண்பற்கள், இவை தெரசாவுக்கு எழில்மிகு தோற்றத்தைக் கொடுத்தன. முகத்தில் முத்துக்கள் போன்று அணிகலனாக மூன்று புள்ளிகள் அழகிற்கு அழகு சேர்த்திருந்தன. ஒன்று மூக்கின் நடுப்பகுதிக்கு கீழ், இன்னொன்று அதே பக்கம் வாயின் கீழ்ப்பகுதியில், அவருடைய கூந்தல் கருமையாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும், சற்றுச் சுருண்டும் காணப்பட்டது. எல்லோரிடமும் மகிழ்வுடனும், நட்புடனும் பேசிப்பழகும் பண்பு கொண்டவராகவும், பார்ப்பதற்கும் பேசுவதற்கும் இனிமையானவராகவும் காணப்பட்டார்” (பக்.2,3)

 


அவிலா தெரசா ஞானநிலை அடைந்த்து நாற்பது வயதுக்கு மேல்தான் என்று அவரின் சரிதை சொன்னாலும் மேற்சொன்ன இளமையான தோற்றத்திலேயே அவரை ஒரு ஞானியாகப் பல ஓவியர்கள் சித்தரித்திருக்கிறார்கள். அவருடைய கால கட்டத்திலேயே வரையப்பட்ட ஓவியம் என்று சொல்லப்படுவது யுவான் தே லா மைசரியா (Juan de la Miseria) வரைந்ததாகும். ஆனால் அந்த ஓவியத்தில் அவிலா தெரசாவின் முகம் இளமையை மெல்ல இழந்துவரும் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணின் முகமாகத்தான் காட்சி தருகிறது.

 


அவருடைய தனிச்சிறப்பான முகம் வட்ட வடிவு என்றோ நீள அமைப்பு என்றோ கூற இயலாது”  என்னும் குறிப்பை கவனிக்கவும். அவருடைய முகத்தை வட்டமாகவோ அல்லது நீளமாகவோ வரைந்துகொள்ளும் சுதந்திரத்தை ஓவியர்களுக்கு இது அளிக்கிறது எனலாம். எனவே ஓவியர்கள் இப்படியும் அப்படியுமாக அவரை வரைந்து வைத்திருக்கிறார்கள். இதற்குச் சிறந்த உதாரணமாக, ‘பருமனே அழகுஎன்னும் கோட்பாட்டாளரான பீட்டர் பால் ரூபன்ஸ் (Peter Paul Rubens) வரைந்த ஓவியத்தைக் கூறலாம். 


 

அவதானித்துப் பார்க்கும்போது இன்னொரு விஷயமும் புலப்படுகிறது. அதாவது வட்டமாக வரையப்பட்ட அவிலா தெரசாவின் முகங்கள் நாற்பதின் முதிர்ந்த வயதுடைய நிலையைக் காட்டுவதாகவும், சற்றே நீளமாக வரையப்பட்ட அவரின் முகத்தோற்றம் இளமைக்காலத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்கின்றன. அவருடைய முகத்தை சற்றே நீளமானதாக வரைந்த ஜெரார்ட், ஃப்ரான்சிஸ்கோ தே கோயா, ஜியோவான்னி பாடிஸ்டா ராஸ்ஸி, ஜோஸஃபா டி ஒபிதாஸ், செபாஸ்தியன் லானொஸ் வால்தெஸ் ஆகியோரின் ஓவியங்களில் அவிலா தெரசா இளமையான வயதினராகவே காட்சி தருகிறார்.

 


நாற்பது வயதில்தான் மனிதனின் அறிவு முழுமைப் பெறுகிறது என்று சொல்லப்படுகிறது. எதார்த்தத்தில் வயோதிகமே ஞானத்திற்குப் பொருத்தமானதாகக் கருதப்பட்டாலும் புனைவுலகில் ஓவியர்களும் சிற்பிகளும் இளமையைத்தான் ஞானத்திற்குப் பொருத்தமான வயதாக வரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காணலாம். வரலாற்று புத்தர் வயதானவர் என்றால் ஓவியத்தில் அவரை இளமையாக, மீசை தாடி இல்லாமல், சொல்லப்போனால் பெண்மையின் லட்சணங்கள் (வளைந்த புருவங்கள், சிறிய கூரான நாசி, சிவந்த குமிழ் உதடுகள்) ததும்பும் முகம் கொண்டவராக வரைகிறார்கள். இராமன், கிருஷ்ணன் ஆகியோரின் நிலையும் இஃதே. ஏனெனில் தம் கலைப்படைப்பில் அவர்கள் காட்ட நினைப்பது வெறும் எதார்த்தத்தை அல்ல. ஞானத்தை, அதன் தன்மைகளைத் தம் புனைவில் உள்வாங்கி உணர்ந்துகொண்ட வண்ணம் அவர்கள் சித்தரிக்க முயல்கிறார்கள். கலையில் முன்வைக்கப்படுவது புனைவுடுத்திய உண்மை. இது புரியாத மரமண்டைகள் கலை என்பது பொய்தானே என்று பிதற்றும்.

 

ஞானத்திற்குப் பொருத்தமான வயது என்று ஒன்று உண்டா? சொர்க்கத்தினருக்கு வயது முப்பத்து மூன்று என்று இஸ்லாம் சொல்கிறது. இயேசுநாதர் விண்ணுக்கு உயர்த்தப்பட்ட வயது அது. எப்படியோ, இளமைதான் ஞானத்தின் தன்மைக்குப் பொருத்தமானது என்று கலையின் கண் காண்கிறது. (ஞானமூலமாகிய இறைவனைத் தாடியில்லாத இளைஞனின் வடிவில் தன் கனவில் தரிசித்ததாக சர்ச்சைக்குரிய நபிமொழி ஒன்று உண்டு. (நூல்: முஸ்னத் அஹ்மத்). சொர்க்கத்தில் இறைவன் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் அறிந்த உருவத்தில் காட்சியளிப்பான், அப்போது அவனை அவர்கள் இறைவன் என்று தெரிந்துகொண்டு சாஷ்டாங்கம் செய்வார்கள் என்னும் கருத்தமைந்த நபிமொழியும் (நூல்: புஹாரி) சிந்தனைக்குரியது. அது என்ன உருவமோ?)

 

அவிலா தெரசாவின் உருவம் இளமைக் கோலத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதை எதார்த்தப் பதிவாகப் பார்ப்பதில் அர்த்தமில்லை. அவை குறியீட்டுத் தளத்தில் இயங்குவதாகவே நான் பார்க்கிறேன். அத்தகைய பதிவுகளில் மிகவும் முக்கியமான கலைப்படைப்பு ஒன்று உண்டு. அது ஓர் ஓவியம் அல்ல, சிற்பம். உலகப் புகழ் பெற்ற அந்தச் சிற்பத்தின் பெயர் (இத்தாலிய மொழியில்) “லா எஸ்டாஸி தி சாண்டா தெரசா” (THE ECSTASY OF SAINT TERESA – புனித தெரசாவின் பேரின்பம்.) இந்தச் சலவைச் சிற்பத்தைச் செதுக்கிய சிற்பியின் பெயர் ஜியான் லாரன்ஸோ பெர்னினி (GIAN LORENZO BERNINI (1598-1680)). ரோமில் (வாத்திக்கனில்) உள்ள சாண்டா மரியா தெல்லா விட்டோரியா (SANTA MARIA DELLA VITTORIA) என்னும் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை கிறித்துவ உலகில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய ஒன்று. இதனைச் சுற்றி நிகழ்த்தப்பட்டு வந்திருக்கும் விவாதங்கள் முக்கியமானவை. ஏனெனில் இந்தச் சிலை அவிலா தெரசா தன் ஆழ்நிலை தியானத்தில் அடைந்த ஒரு காட்சி நிலையை அடிப்படையாக வைத்து வடிக்கப்பட்டுள்ளது. அவிலா தெரசாவின் இளமைக்காலத்தின் நிகழ்வுகளில் இருந்து விளக்கங்களைக் கோரி நிற்கும் இந்தச் சிலை ஆழமான ஒரு குறியீடு என்றே நான் காண்கிறேன். அதன் உட்பொருளை அறிய கொஞ்சம் ஆழமாக அவதானிப்போம்.

(தொடரும்...)