Saturday, May 27, 2017

ஜென்னத்


                குடும்பத்தோடு திருச்சிக்குத் திரும்பிவிட்டேன். இவ்வாண்டின் விடுமுறை நாட்கள் வாசிப்பிலும் கேரள மலைகளின் பயணத்திலுமாக மன நிறைவை அடியேனுக்கு அளித்தது. உத்தமப்பாளைய நண்பர்களில் மூவரை மட்டும் தனித்தனியே சந்திக்கவும் உரையாடவும் முடிந்தது.

      திருச்சிக்குக் கிளம்புவதற்கு இரு தினங்கள் முன்பு வரலாற்றுப் பேராசிரியர் பஷீர் அஹ்மது அலைப்பேசினார். “அப்படியே வந்து உங்களைத் தேக்கடிக்கு அழைத்துச் செல்லலாம் என்று திட்டம். அங்கேயே சாப்பிடலாம். மாலை உங்களை வீட்டில் வந்து விட்டுவிடுகிறேன். உங்களிடம் தஃலீம் கேட்க வேண்டும்” என்று சொன்னார். சரியாக அந்த நாளில் உறவினர்களின் விசேஷம் இருந்ததால் முடியாமல் போயிற்று. ”அடுத்த முறை வரும்போது பார்க்கலாம்” என்று சொல்லி வைத்தேன்.

      இச்சேதியை அவளிடம் சொன்னபோது, “நல்லாயிருக்கே நீங்க மட்டும் தேக்கடிக்கு போய் ஜாலியா சுத்தீட்டு வருவீங்க. நாங்க இங்க கிடக்கணுமாக்கும்” என்று புலவி கொண்டாள்.

      அப்போதுதான் இன்னொன்றை நினைவு கூர்ந்தேன். கம்பம் வந்து இரு நாட்களில் சையத் இப்றாஹீம் பிலாலி அலைப்பேசினார். அவரும் ஏறத்தாழ இதையேதான் சொன்னார். “ஊருக்குப் போறீங்கன்னு ஒரு வார்த்த சொல்லலியே? நானும் காரெடுத்துட்டு வந்திருப்பேன். இருவரும் பேசிக்கொண்டே மலைகளில் சுற்றிவிட்டு வந்திருக்கலாமே?”

      மே மாத விடுமுறையின் தொடக்கத்திலும் முடிவிலுமாக் இப்படி இரண்டு அழைப்புக்கள். இருவரும் என்னுடன் பேச விரும்பியது ஆன்மிகம்தான். ஆனால் இருவரும் வேறு வேறு வகைப்பட்ட ஆளுமைகள். கிளம்புமன்று காலை தமிழ்ப்பேராசிரியர் இளவல் முகமது ரபீக் என்னும் ”மானசீகன்” சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவர் இன்னொரு ரகம். இப்படி ஒருவரின் சாயல் இன்னொருவரில் இல்லாத பல நபர்களுடன் பேசிக்கொண்டிருக்கத்தான் செய்கிறேன். அவரவர் பார்வைக்கோணங்களில் உள்ள நியாயத்தை உணர முடிகிறது. ஒவ்வொருவரிலும் நானும் கொஞ்சம் இருக்கவே செய்கிறேன்.

      சகதர்மினியின் புலவி நுணுக்கம் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் ஆன்மிகம் பேசத்தான் வெளியே செல்கிறோம் என்பதில் அவளுக்கு எந்த ஆர்வமும் இல்லை. பெண்களின் சித்தாந்தம் போலும், வெளியே செல்வது என்பது மகிழ்ச்சி. பிறகுதான் அது ஆன்மிகமா வெங்காயமா என்பதெல்லாம். இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள் என்று என்னென்ன ‘வாதி’ வகைகள் இருக்கின்றனவோ அனைத்திலும் ஆண்கள் எங்காவது சுற்றுலாச் சென்று உரையாடி வருவதும் இருக்கின்றது.

”அந்தத் தஃலீமை இங்கே வீட்ல உக்காந்து பேச முடியாதா? தேக்கடியில போய் பேசினாத்தான் வெளங்குமா?” என்றுதான் என்னவள் கேட்டிருப்பாள். அப்படி அவள் கேட்பதாகக் கற்பனை எழுந்தபோது நான் புத்தரின் மனைவி யசோதாவை நினைவு கூர்ந்தேன். “நீங்கள் அடைந்த ஞானம் எங்கும் இருக்கிறது எனில் இந்த அரண்மனையில் அது இல்லையா? இங்கே இருந்தபடிக்கே அதை அடைந்திருக்க முடியாதா?” என்று அவள் புத்தரிடம் கேட்கிறாள். ஞானம் அடைந்த பிறகு புத்தரால் விடை சொல்லமுடியாத ஒரே கேள்வி அதுதான் என்கிறார் ஓஷோ. மனைவியின் கேள்விக்கணை பாய்ந்து வரும்போது புத்தராவது சித்தராவது!

நண்பர்கள் சொன்னது நடந்திருந்தால் என்னும் கற்பனையும் வந்தது. நெடிதுயர்ந்த மலைகளினூடே பயணித்தபடி சூஃபித் தத்துவங்களைப் பேசுவது. ஊசியிலைக்காடுகளில் அமர்ந்தபடி உஜூதின் (உள்ளமையின்) விளக்கங்களை உரையாடுவது (அதைவிடவும் உள்ளமையுடன் உரையாடுவது இனிதல்லவா?), கட்டஞ்சாயா சுவைத்தபடி கஸ்ஸாலி இமாமை விவாதிப்பது, புற்கள் விரிந்த பாறைப் பரப்பில் தொழுவது என்றிப்படி விரிந்தது அது. வீட்டில் அமர்ந்து பேசுவதை விடவும் இயற்கையின் மடியில் அமர்ந்து பேசுவது நிச்சயமாக வேறுதான். அதில் நம் ஆழ்மனத்தின் சுனையூற்று திறந்து கொள்ளும் போலும். அதைத்தான் ஒவ்வொருவரும் தேடுகிறார்களா? ஒருவேளை அச்சூழலின் அழகையும் அமைதியையும் பேச்சு கெடுத்துவிட்டிருக்கவும் கூடும். மௌனமாய் அமர்ந்து தியானம் செய்வதே பொருத்தமாகலாம்.

ஒருமுறை அப்படிக் குடும்பத்துடன் போய் வருகையில், எட்டாம் மைல் என்னும் இடத்தைத் தாண்டி என்று நினைக்கிறேன், காடுகளுக்குள் ஆங்காங்கே மரங்களின் மீது குடில்கள் அமைந்த ஒரு விடுதியை சகதர்மினி சுட்டிக்காட்டினாள். ஒன்றும் சொல்லவில்லை. சொற்கள் தேவையற்ற குறிப்பு அது. ”அங்கு நாம் இருந்தால் நன்றாயிருக்குமே?” என்னும் உணர்வின் வெளிப்பாடு. அந்த மரக்குடிலைப் பார்த்தபோது எனக்கு ”காடு” புதினத்தில் வரும் மலைப்பெண் நீலியின் குடில் நியாபகம் வந்தது. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அந்த நீலி இருக்கத்தான் செய்கிறாள். ”நாகரிகம்” இன்னும் தீண்டாத கன்னிமை கொண்ட செழுங்காடு போன்ற நீலி.

Related image

இதோ இங்கேதான் வண்டிப்பெரியாருக்குத் தென்மேற்கே முப்பது கி.மீ தொலைவில் இருக்கிறது கவி (GAVI). இத்தடவை விடுமுறைக்கு எங்கே செல்வது என்னும் கேள்விக்கு என் மனத்தில் தோன்றிய முதல் இடம் அதுதான். உலகச் சூழுலா மையங்களின் (Eco-tourism) பட்டியலில் இடம் பெற்றுவிட்ட மலைக்காடு அது. ”கடவுளின் காடு” என்னும் தலைப்பில் அவ்விடம் பற்றி ஜெயமோகன் எழுதிய கட்டுரையைப் படித்தபோதுதான் அப்படியொரு இடம் இருப்பதை அறிந்தேன் (ஏப்ரல் 3, 2016 http://www.jeyamohan.in/86276#.WSlX4et94_4). விசாரித்துவிட்டு வேண்டாம் என்றாயிற்று. ஒருநாள் அங்கே ராத்தங்குதற்கான செலவு பெரிதுதான், எம் நிலைமைக்கு. ஜெயமோகன் அங்கே தங்கிப்போனதைச் சொன்னபோது ’அவர் சினிமாக்காரர்’ என்று சகதர்மினி காரணம் சொன்னாள். மானசீகனிடம் சொன்னபோதும் அதையேத்தான் சொன்னார், “சினிமாக்காரய்ங்க கூட்டிட்டு வந்திருப்பாய்ங்கஜி” என்று. அப்படியே நடந்திருந்தாலும், அவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உழைத்த எழுத்துழைப்பின் பயனாக அந்த நிலையை அடைந்திருக்கிறார். ஆனால், இந்த வசதி எவ்வித அறிவுபோதமும் அற்ற ஓர் இளம்நடிகனுக்கு அல்லது பெருநடிகனின் மகனுக்கு ஆயத்தமாகவே கிடைக்கும் ஒன்றுதானே? என்று சொன்னேன். அது வேறு திசைப்பேச்சு.

“காடு முதலில் உருவாக்கும் எண்ணம் தூய்மை என்ற ஒற்றைச் சொல்தான். அந்த சொல்லை பலவிதமாக நாம் விளக்கிக்கொண்டே செல்லமுடியும். நாமறியும் நகர, கிராம வாழ்க்கையை நம் ஆழ்மனம் தவிர்க்க முயன்றபடியே உள்ளது. சத்தம், புழுதி, சாக்கடை, கட்டிடங்களின் சாலைகளின் ஒழுங்கின்மை, வாகனங்களின் நெரிசல், மக்களின் பிதுங்கல். காடு சட்டென்று நம்மை அவற்றில் இருந்து விடுவிக்கிறது” என்று தனது கட்டுரையில் ஜெயமோகன் எழுதியிருந்தார். அத்துடன் ”அடுக்களைப்பாடு” என்பதையும் பெண்களின் உளவியல் சேர்த்துக்கொள்ளக்கூடும். நியாயம்தானே?

Image result for thekkady treetop

சகதர்மினி சுட்டிக்காட்டிய மரக்குடில் மீண்டும் மீண்டும் எனது நினைவில் தோன்றிக்கொண்டிருந்தது. இன்று அங்கே வந்து தங்கிப்போவோர் யாவர்? நான்கு நட்சத்திரத் தகுதியில் இயங்கும் அவ்விடுதியின் கட்டணங்கள் எல்லோருக்கும் எட்டக்கூடிய ஒன்றா? என்னும் சிந்தனைகள் எழுந்தன. அது மலையன்மார் கட்டும் காட்டுக் குடில் போன்றதொரு விடுதிதான். ஆனால் இன்றது பொருளாதார அடுக்குகளில் நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டா உயரத்தில் கொண்டு செல்லப்பட்டிருப்பதன் நகைமுரண் உறுத்திற்று. நாகரிகத்தின் செந்நிலையில் வாழுமொருவர் காட்டுவாசி போல் மாறிவிடுவதான பாவனை கொள்வதன் விலை இவ்வளவு அதிகமாய் இருக்கிறது. அதிலும் காதலின் நிமித்தமான பாவனைகளாகவே அவை பெரிதும் விளம்பரப்படுத்தப் படுகின்றன. ”ஹனிமூன் பேக்கேஜ்” என்பது இந்த வணிகத்தில் ஒரு பிரபலமான சொல்லாடல். காட்டுவாசிகளின் வாழ்வில் அது போன்ற மரக்குடில்களில் எத்தனையோ இணைகள் – நீலனும் நீலிகளும் – காதலித்திருப்பார்கள்.

நாகரிக வளர்ச்சியின் மேம்பட்ட நிலைகளை எட்டிவிட்ட நாம், காட்டு வாழ்வை விட்டுப் பெருந்தொலைவு விலகி வந்துவிட்ட நாம் மீண்டும் கானகத் தேனிலவை ஏன் விரும்புகிறோம்? மனத்தின் ஆழத்தில் அந்தத் தேடல் ஏன் இருக்கிறது? ”எத்தனைதான் மனிதன் எல்லா விஷயங்களையும் நாகரிகப் படுத்திக்கொண்டு விட்டாலும் காமம் என்பதை அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதில் அவன் தனது நாகரிகத்தைக் கழற்றிவிடுகிறான். உணவைக்கூட அவன் நாகரிகப்படுத்திவிட்டான். ஆனால் காமம் இன்னமும் பச்சையாகவே இருக்கிறது. அதை அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதுவே அவனில் இன்னமும் இயற்கையின் அம்சமாக இருக்கிறது. அதையும் செயற்கையாக்கி விடுவான் எனில் பிறகு அவனில் மனிதம் இருக்காது” என்று ஓஷோ தந்த விளக்கத்தை நினைவு கூர்ந்தேன்.

ஆனால், அவர் சொன்னபடி அல்லாது, உள்ளுணர்வால் தனது ஒற்றை இயற்கையம்சத்தை மனிதன் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறான் என்பதையும், அதனைத் தக்கவைத்துக்கொள்ளவும் முடிந்த வழிகளில் மீட்டெடுத்து அனுபவிக்கவும் விரும்புகிறான் என்பதையுமே பெருகி வரும் சூழுலா மையங்களின் மீதான ஈடுபாடு காட்டுகின்றது. தனது வீட்டையேகூட காட்டின் பாவனை கொள்ளச்செய்யும் ’கலை’யை அவன் வளர்த்து வருகிறான். வீட்டுக்குள் மலையருவிகள் போன்று மாதிரிகள் வைத்தல், அது முடியாவிடில் அருவி கொட்டும் பெருங்காட்டின் சுவர்ப்படம் ஒட்டுதல், காட்டில் கேட்கும் ஓசைகளை ’லோன்ஜ்’ இசையாய்க் கசிய விடுதல், காட்டுப்பூக்களின் புற்களின் நறுமணத்தை அறையில் இழையவிடுதல் போன்ற ‘நாகரிக’ப் பிரயத்தனங்கள்.

இச்சிந்தனைகள் எனது இனத்தொன்மையின், எனது வேரின் நினைவைக் கிளர்த்துகின்றன. தொல்தமிழர் வாழ்வு என்பது காடுகளுடன் இயைந்ததாக இருந்திருக்க வேண்டும். ஐந்திணைப் பாகுபாட்டில் கூடலும் கூடல் நிமித்தமும் குறிஞ்சித் திணையாகக் காட்டப்பட்டது. திரியா நிலவகை நான்கிலும் உள்ள மாந்தரிடம் காதலும் கலவியும் இருந்திருக்கும் எனினும் குறிஞ்சியே அவர்களின் அகம் வரித்த உள்நிலமாக இருந்தது. மேலும், களவு மற்றும் கற்பெனப் பிரிக்கப்பட்ட அகத்திணையில் களவு வாழ்வில் காதலரின் புணர்தல் என்பது காட்டினுள் நிகழ்ந்தது. தமிழரிடம் மட்டுமன்று, உலகின் தொல் வாழ்வியல் எங்கிருந்தாலும் அதில் இத்தகு நிகழ்வுகளைக் காணலாம். எனவே இன்று ’நாகரிக’ வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கும் உலக மக்கள் அனைவரின் மரபணுக்களின் நினைவிலும் கானகக் காதலாடலின் பதிவுகள் இருக்கத்தான் செய்யும்.

காடும் மரக்குடிலும் என் சிந்தனையை ஆதம்-ஹவ்வா தொன்மச் செய்திக்கு இட்டுச் செல்கிறது. நமது நாகரிக வளர்ச்சிக்கு இயையவே சொர்க்கத்தின் வருணனைப் பரிணாமமும் சொல்லப்பட்டுள்ளதாகப் படுகிறது. ஆதம் என்னும் முதல் ஆணும் அவரின் ஜோடியாக ஹவ்வா என்னும் முதல் பெண்ணும் படைக்கப்பட்டு அவர்கள் சொர்க்கத்தில் இருந்ததாக வரும் பதிவுகளில் மாட மாளிகைகளைக் காணவில்லை. அவர்கள் மரச்செறிவுகளும் நீரோடைகளும் கொண்டதாக வருணிக்கப்படும் சொர்க்கத்திலேயே இருந்திருக்கிறார்கள். அதனைக் காடு எனல் தகும்.

ஆனால் விசுவாசிகளுக்கு நபிகள் நாயகம் நன்மாராயம் உரைத்த சொர்க்கத்தில் முத்தும் பவழமும் வைரமும் இன்ன பிற ரத்தினங்களும் தங்கமும் வெள்ளியும் அலங்கரித்தும் இழைத்தும் கட்டப்படுகின்ற மாடமாளிகைகளைக் காண்கிறோம். விசுவாசிகளுக்கு மகிழ்ச்சியூட்டவும் உற்சாகப்படுத்தவுமாக இத்தகு வாக்குறுதிகளை இறைவனும் அவனின் தூதரும் தருகிறார்கள் என்று விளக்கமுண்டு. ஆனால், எனது தனிப்பட்ட ரசனையில் நான் ஒருபோதும் இத்தகைய வாக்குறுதிகளால் மகிழ்ச்சியோ உற்சாகமோ அடைந்ததில்லை. என்ன செய்வது? ஒருவேளை இவையெல்லாம் வெகுஜன ரசனைக்கு ஏற்ப சொல்லப்படுவன என்றே நான் புரிந்துகொள்கிறேன். அத்தகைய சொர்க்க வருணனைகளைப் பள்ளிவாசலில் நடைபெறும் பிரசங்கங்களில் எவரேனும் பேசும்போது கேட்போர்களின் இதழ்களில் மலரும் பூரித்த குறுஞ்சிரிப்பில் நான் பங்கேற்றதில்லை. மாறாக அத்தகு காட்சிகளி ஒருவித ஒவ்வாமையை என்னில் தூண்டியிருக்கின்றன. முஹம்மத் என்னும் திருநாமத்திற்கு என் உயிரே அர்ப்பணமாவதில் அர்த்தமுண்டு. ஆனால் இத்தகைய பொன் மாளிகை வருணிப்புக்களில் நான் மனம் சொக்கிப்போவேன் எனில் இறைவன் எனக்கு அருளியிருக்கும் ரசனைக்கு நான் நன்றி பாராட்டியவன் ஆக முடியாது. எனவே, அபூபக்கர் உமர் உஸ்மான் அலீ முதலிய பெருந்தோழர்களின் விசயத்தில் அறிவிக்கப்பட்ட இத்தகு நற்செய்திகளும்கூட அவர்களை முன்னிறுத்தி வெகுஜனத்திற்கு உரைக்கப்பட்டவையே அன்றி நபியோ அல்லது அவரின் அணுக்கத் தோழர்களோ அத்தகைய ரசனை கொண்டவர்கள் அல்ல என்பதே எனது புரிதல்.


ஆதமும் ஹவ்வாவும் உலவிய காடாகிய சொர்க்கமே எனது ரசனைக்கு எற்புடையதாகும். ஒருவேளை அது காடாக அல்லாது தோட்டமாகத்தான் இருக்க வேண்டும் எனில் ’திருத்தப்பட்ட’, முகலாய அல்லது ஆங்கிலேய ’சித்திரச் சோலைகளாக’ இல்லாமல், காட்டின் ஆன்மாவைத் துலக்கிக் காட்டும்படி அமைந்த ஜென் தோட்டங்களாக – ஜென்னத்களாக – இருக்கும் என்றே கருதுகிறேன். இங்கே இப்போதும்கூட மனிதன் கட்டியிருக்கும் மகத்தான பிரம்மாண்டமான கட்டடங்கள் என்று காட்டப்படும் எதனையும் நான் வியந்து பார்த்தது கிடையாது. சுவரோரம் முளைத்து வரும் புல்லின் ஓர் இதழ் என் இதயத்திற்குத் தரும் ஆனந்தம்கூட அவற்றில் ஒருபோதும் கிடைத்தது இல்லை. 


Monday, May 22, 2017

ஏக்கறு சலாம்

Related image

‘மொட்டக்குன்னு’ என்பதே
அவ்விடத்தின் இயற்பெயர்
“ரோலிங் மெடோஸ்” என்பது அதன்
டெசிக்னேஷன் என்றறிக

ஒவ்வொரு குன்றாக ஏறி நின்று
ஒவ்வொரு குன்றிலும் ஏறி நிற்போரை
ஒவ்வொருவரும் காண்கிறார் இங்கே

யாம் வந்தடைந்த சமயம்
மழைக்கான அறிகுறிகள் இருந்தது
வாகனத்தில் இருந்து இறங்கிய அக்கணமே
எனை அறிந்து கொண்டு முத்தமிட்ட காற்றில்
போதமழிக்கும் காதலை உணர்ந்தேன்

ஒளியைக் குளிர்வித்திருந்தது இருள்
இருளை ஒளிர்வித்திருந்தது ஒளி

அவ்விடம் அவ்வேளைக்கேற்ற
திருநாமம் யாதாகும் என்று யோசித்து
அழகிய பெயர்களின் பட்டியலில்
உள்ளம் துழாவிற்று

நீ அளவற்ற அருளாளன்
நீ நிகரற்ற அன்புடையோன்
நீ உள்ளன்பன்
நீ பேரொளி
முதல் நீ முடிவு நீ
புறன் நீ அகன் நீ
நித்திய ஜீவன் நீயே
என்றெல்லாம் தொடர்ந்தது நாமாவளி

வானில் காணும் உறுத்தாத ஒளியை
மண்ணில் கிடந்த பசுமைக் கனவை
வாழும் மரங்களில் வளரும் கனிவை
மேயும் கால்நடை காட்டும் வழியை
மொழியில் சிக்காத மோனப் பிழிவை
மொழியில் மொழியுமொரு நாமம் எது?

எல்லா நாமங்களின் அர்த்தபாவங்களும்
உள்ளாகும் ஓர் அழகிய திருநாமம்
சாந்தி சாந்தி சாந்தி என்றே
ஒலிப்பதாயிற்று
அஸ்-சலாம்!

வாயால் உரைத்துரைத்து
வண்ணம் கரைந்த வார்த்தையை
இங்கே
காணும் பொருள் யாவினுடனும்
கண்ணால் உரைத்துரைத்துக்
களித்திருந்தேன்

பேரமைதி என்னும் பெயரின் சுடரால்
நிம்மதி எங்ஙனும் நிறைக!
ஆமீன்!

நிம்மதி நாடி அன்றோ
வீடுகள் விட்டகன்று
இங்கே வருகின்றார் எல்லோரும்?
நிம்மதி என்பதன்றோ
அனைவரும் அனைத்திலும்
வேட்கும் பொருள்?

‘எப்பொருளுமாய்
நீயே வந்து
நிம்மதி நல்கும்
நிராமயமே!’
என்றென் உள்ளத்திலொரு சுருதி கேட்கவும்
அதுவே பற்றி பாவித்து
ஆனந்த லயத்தில் அலைந்திருந்தேன்

அப்போதென் கண்ணில் பட்டார் அவர்
ஏதோவொரு குடும்பத்தைக்
காரில் அழைத்து வந்த
ஓட்டுநர் போல் தோன்றினார்

வெண்ணிற வேட்டியை
மடித்துக்கட்டியபடி
மருண்ட பசுவின் பார்வையுடன்
இங்குமங்கும் அலமந்திருந்தார்

”சிறுநீர்க்கழிப்பிடம் அங்கே” என்று
கைக்காட்டினேன்
(அதுவுமென்ன?
சாலப் பெரியதோர் நிம்மதி அன்றோ?)

அல்ல அல்ல என்பது போல் தலையசைத்து
மரச்செறிவுக்குள் சென்று மறைந்தார்

நேதி நேதி என்றுரைத்துச் சென்ற
அந்த ரிஷிதான்
என்ன தவம் நாடினார்
என்று நான் யோசித்து நின்றேன்

சற்று நேரத்தில் திரும்பி வந்தவர்
நெடி வீசச் சிரித்து அகன்றார்

அது போல் குளிர்மையான
அவ்விடத்து அவ்வேளை
பீடி பற்ற வைத்து இழுக்காவிடில்
நிம்மதியே வாராதாம் அவருக்கு(குறிப்பு: ”ஏக்கறு சலாம்” என்பது குமரகுருபரர் இயற்றிய பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்றில் உள்ள சொற்றொடர். முருகன் வள்ளிக்கு சலாம் சொல்வதாக எழுதியுள்ளார். ”ஏக்கறு சலாம்” என்றால் ஏக்கம் தணித்து நிம்மதி நல்கும் சலாம் என்று பொருள்.)

Sunday, May 21, 2017

வ்யூ பாய்ண்ட்

இப்போதுதானொரு சுற்றுலாத் தலமாய்
உருவாகி வருகிறதாம் இவ்விடம்

யாமும் பதினைந்து பேர்
மலையேறி வந்தடைந்தோம்

பசிய புற்கள் போர்த்தியதான
நெடுங்குன்றங்கள்

இரண்டரை கி.மீ வரை
அழித்தழித்து இடப்பட்டுவரும்
சாலையில்
யானை போல் அசைந்தேகிற்று
ஐம்பது ரூபாய் கட்டணத்தில் எம் வேன்

அங்கிருந்து
செங்குத்தான பெருஞ்சரிவு
“வாகமன் வ்யூ பாய்ண்ட்” என்று
காலத்திற்கேற்ற பெயர் சூட்டியுள்ளார்கள்

அப்பால்
பச்சை நிறம் மெல்ல மாறி
நீலமாய்த் தோன்றும்
மலையடுக்குகள்

அழுக்குகள் அழியும் இத்தகு
வ்யூ பாய்ண்டிலும்
அவரவரின் பாய்ண்ட் ஆஃப் வ்யூ
எஞ்சியிருக்கத்தான் செய்யுமோ?

இப்போது அவ்விடம்
எவர் கையின் உடைமை?
என்னென்ன கட்டப் போகிறார்?
விடுதிகளா? கடைகளா? காட்சியகங்களா?
எத்தனைக் கோடி மூதலீடு வைத்தார்?
(இறைவா!)

அவ்விடத்தின் ஆக உயரமான முகட்டில்
தேங்கி நின்றது மாந்தர் திரள்
நட்ட கம்பில் கட்டியதோர் துணிக்குழல்
பதாகை போல் பறந்திருந்தது அங்கே
அவ்விடம்தான்
பாரா-க்ளைடிங் தளம் என்றனர்

ஆயிரம் ரூபாய் என்பதால்
ஒருவரும் இசையாத மானுடத்திற்கு
ஒரு சுற்றுப் பறந்து வந்து
வேடிக்கை காட்டினார் வல்லுநர்

பறத்தலின் பரவசம் ஏதுமில்லா
அந்தக் கூலிப்பறவையைத்
தத்தமது செல்பேசிகளில் பிடித்துக்கொண்டு
நடை தொடர்ந்தனர் கேளிர்

யாம் அங்கு வருதற்கென
மலையைக் காயம் செய்து
பாறைகளை நொறுக்கிப் போடப்படும்
அப்பாதையின் காட்சி
பெருவலியாய் உறுத்திற்று நெஞ்சில்

இது சரியல்லடீ என்றேன்
என்னவென்று கேட்டாள் என்னவள்

மலைக்காடுகள் அப்படியே இருக்கவேண்டும்
அதன் காதலர் மட்டுமே அங்கு வருவார்
என்று கிசுகிசுத்தேன் அவளிடம்,
ஆன்மாவின் பித்தேறிச் சுடரும்
என் பாய்ண்ட் ஆஃப் வ்யூ

சுற்றுலாவுக்கென்றே வந்திருப்போர்
தமக்கு இங்கே நிகழ்வதறியார்
இவ்விடமொரு புனிதத் தலம் என்பதறியார்
தாம் யாத்ரீகர் ஆகியிருப்பதும் அறியார்

இறைவா!
நீ நிறைந்தொளிரவும்
நினைத் தொழும் இவ்விடத்தில்
ஆலயங்களேதும் உண்டாகாதிருக்கட்டும்Saturday, May 20, 2017

காடு பூத்த தமிழ் நிலத்தில்...

Related image

இவ்வருடக் கோடை விடுமுறை முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. ஏறத்தாழ கடந்த ஒரு மாத காலமாகக் கம்பம் என்னும் ஊரில் இருக்கிறேன். இந்தக் குறிஞ்சித் திணை நிலத்தில் பிறந்தாளான என் சகதர்மினி நான் பிறந்த திருச்சியில் கோடைப் பருவம் கொள்ளும் உக்கிரம் தாளாள் ஆதலால், கடந்த பத்தாண்டுகளாக ஒவ்வொரு மே மாதத்திலும் இங்கே வந்திருப்பது வழக்கம். குடமிடும் உள்ளங்கைகளின் நடுவில் ஆடாது நின்றொளிரும் அகல்விளக்கின் சுடர் போல மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள ஊரிது. கேரள இடுக்கி மாவட்டத்தின் விளிம்பில் இருப்பது.

      இந்தத் தடவை விடுமுறை வாசிப்புக்கென்று நூற்களைத் தேர்ந்த போது குறிஞ்சி நிலம் சார்ந்த புனைவுகளை மனம் நாடிற்று. சென்ற இருமாதங்களுக்கு முன்புதான் ஜெயமோகன் எழுதிய ”காடு” புதினத்தைப் படித்து முடித்திருந்தேன். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரசனையாலமையும் ஒரு அகநிலம் இருக்கும். Interior Landscapes என்று ஏ.கே.ராமானுஜம் குறிப்பிடுவது போல் அது மனம் வரித்துக்கொண்ட நிலம். அந்த அகநிலம் ஒருவர் பிறந்த புறநிலமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. குறிஞ்சியில் பிறந்த என் சகதர்மினிக்கு நெய்தல் நிலமே அற்புதம். அலையாடும் கடல் கண்டு தீராது அவளுக்கு. மருதத்தில் பிறந்து வளர்ந்த எனக்கோ குறிஞ்சித் திணையின் மீது பெருகி வந்தபடி இருக்குமொரு மயக்குள்ளது. மரபணுவிலேயே பதிந்து என்னிடம் வந்த ரசனையாக அது இருக்கக்கூடும். ஐந்து தலைமுறைக்கு முன்னிருந்த பெருவணிகரான எனது முதுபாட்டனார் மருத்துவப் பயன் கருதி மலையிலும் கடற்கரையிலும் ஓய்வில்லங்கள் கட்டியிருந்தார். சஞ்சீவிப் பர்வதத்தின் மென்காற்று மேனியைத் தழுவும் வகையில் நெடுஞ்சாளரங்கள் வரிசையாக வைத்த ஓய்வில்லம் கன்னியாகுமரியில் இருந்தது. என் பால்ய பருவத்தில் சென்றிருக்கிறேன். அதுபோல், மதுரைக்கும் திண்டுக்கல்லுக்கும் நடுவில் எழுந்துள்ள சிறுமலையில் தோட்டங்களும் ஓய்வில்லமும் இருந்துள்ளது. என் தாய் தனது சிறுவயதில் அங்கே சென்றிருக்கிறார். இன்றளவும் எம் குடும்பத்தினரின் ஒரு வளைவு அங்கே இருப்பதாகச் சொல்கிறார்.

 ”காடு” நாவல் தந்த பித்து இன்னமும் தணியாத நிலையில் இங்கே வந்தேன். இயற்பியலாளர் ஃப்ரிட்ஜாஃப் காப்ரா எழுதிய “The Science of Leonardo” நூலைப் பாதி படித்திருந்த நிலையில் கொண்டு வந்தேன். அத்துடன், மார்ட்டின் லிங்க்ஸ் எழுதிய “சூஃபியிசம் என்றால் என்ன?” (தமிழில் புன்யாமின்), அரவிந்தன் நீலகண்டன் மற்றும் சாந்தினிதேவி ராமசாமி இணைந்தெழுதிய “இந்திய அறிதல் முறைகள்”, ஜெயமோகன் எழுதிய காவியப் பெரும்புதினமான “விஷ்ணுபுரம்”, மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதி கே.வி.ஜெயஸ்ரீ தமிழாக்கம் செய்துள்ள புதினமான “நிலம் பூத்து மலர்ந்த நாள்” ஆகிய நூற்களையும் எடுத்துவந்தேன். விஷ்ணுபுரம் பதினைந்து நாட்களை எடுத்துக்கொண்டது. 14,15.05.2017 ஆகிய இரு நாட்களில் “நிலம் பூத்து மலர்ந்த நாள்” புதினத்தை வாசித்து முடித்தேன்.

Image result for nilam poothu malarntha naal tamil

இக்காலகட்டத்தில் மூன்று முறை கேரள மலைப்பகுதிகளில் பயணித்து வந்ததும் உள்ளும் புறமும் ஒத்திசைந்து வாசிப்பனுபவத்தை ஆழப்படுத்தின. மலையாள மொழியும் கேரள மலைப்பகுதிகளும் என்றைக்குமாக என்னை ஈர்த்து வந்துள்ளன. (சூஃபி வழியில் எனது குருநாதரின் குருநாதரான “ஜுஹூரிஷாஹ்” அவர்களின் அடக்கத்தலம் (தர்கா) மலப்புரத்தில் கருவாரக்குண்டு என்னும் சிற்றூரில் அமைந்துள்ளதும்கூட தற்செயல் அல்ல என்பதென் உள்ளுணர்வு.) அந்த ஈர்ப்பிற்கான காரணங்கள் கேட்பீராயின் இரண்டினைச் சொல்வேன்: இயற்கை மற்றும் தமிழ்.

இத்தகைய ரசிகனான என் கையில் தன் மரபின், பண்பாட்டின் வேரினைத் தமிழில் தேடியடைந்திருக்கும் ஒரு மலையாளப் புதினத்தின் நல்ல தமிழாக்கம் கிடைத்தால் எத்தகைய செல்வம் கிடைத்ததாக மகிழ்ந்திருப்பேன் என்பதை நீங்கள் உய்த்துணரவே என் தனிப்பட்ட பின்னணியை சற்றே நீளமாக எழுதலாயிற்று. ஆம், “நிலம் பூத்து மலர்ந்த நாள்” நாவல் கிடைத்ததை, அந்நாவலில் வரும் பாணரும் கூத்தரும் பொருநரும் புரக்கும் வண்மை திகழ் மன்னனிடம் பரிசு பெறுகையில் அடையும் உவகையோடே நான் கொண்டாடுகிறேன்.

ஞான் மலையாளம் படித்தறியேன். சரளமாகப் பேசவும் வராது. ஆசையால், பேசுவோரின் வாய் பார்த்திருப்பதுண்டு. அந்த மொழியோட்டத்தில் விரவியுள்ள தூய தமிழ்ச்சொற்களைப் பிடித்தென் மனதில் அடைகாப்பதில், ஓடை நீர்க் குடைந்தாடி சிறுமீன் பிடித்து மகிழ்வதான விளையாட்டின் உவகை கொள்வேன். அத்தகையதொரு செயற்பாடு இம்மொழியாக்கத்திலும் நிகழ்ந்துள்ளதாக நாஞ்சில் நாடன் குறிப்பிடுகிறார்: “மலையாளம் என்பது ஆதித் தமிழே என்பதறிவேன். மலையாளச் சொற்களை, அதன் ஆதித் தமிழ்ச் சொற்களைக் கண்டெடுத்து மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்துவது இந்த நூலின் வலு.” இம்மொழியாக்கம் எந்த அளவு மூலத்துடன் ஒத்திசைந்து நிகழ்ந்துள்ளது என்பதையும் அவர் சொல்கிறார்: “இஃதோர் மலையாள மூல நாவலின் தமிழ்ப் பெயர்ப்பு. மூலத்தின் இதன் தலைப்பு ‘நிலம் பூத்து மலர்ந்ந நாள்’. தமிழாக்கத்தில் கே.வி.ஜெயஸ்ரீ அளித்த தலைப்பு ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’. தலைப்பின் இயல்பான மொழிமாற்றம் போலவே, மொத்த நாவலின் மொழிமாற்றமும் எந்த நெருடலும் இன்றி, பூ உதிர்வது போல நடந்திருக்கிறது.”

Image result for manoj kuroor
manoj kuroor photo on back side of the book.

தலைப்பை நோக்க, மலையாளத்திற்கும் தமிழுக்கும் ஒரேயொரு எழுத்துத்தான் வேறுபாடு. சொல்வதெனில், தமிழாக்கத்தின் தலைப்புக் கூட ‘கே.வி.ஜெயஸ்ரீ அளித்த தலைப்பு’ அல்ல. அது மனோஜ் குரூர் தந்த தலைப்பேதான். புனத்தில் குஞ்ஞப்துல்லா எழுதிய “ஸ்மாரகசிலகள்” (நினைவுக்கற்கள்) என்னும் புதினத்தை குளச்சல்.மு.யூசுப் “மீஸான் கற்கள்” என்று தமிழில் தலைப்பிட்டது போன்று அல்ல இது. ”பாத்துமாயுடே ஆடு” என்பதும் ”தோட்டியுடே மகன்” என்பதும் ”செம்மீன்” என்பதும் மலையாளம் எனில் மலையாளம், தமிழெனில் தமிழே! அதுபோன்றே இந்நூலின் தலைப்புமாம்.

மலையாளம் என்பது ஆதித் தமிழே என்று நாஞ்சில் நாடன் சொல்கிறாரே, இதனைப் பிற திராவிட மொழிகள் நோக்கிச் சொல்ல முடியாமை நினையத் தகும். அந்த உறவல்லவா இந்நாவலின் மூலத்தையும் மொழியாக்கத்தையும் சாத்தியப் படுத்தியுள்ளது? அவ்வுறவு மேலும் மேலும் இத்தகய கொடைகளைத் தரவேண்டும் என்பதென் ஆசை. கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு என் மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்.

இப்புதினம் பற்றி குறுஞ்செய்தி கொண்டு நண்பருக்கு அறிமுகப்படுத்த வேண்டுமெனில் இதன் முன்னுரைகளின் தலைப்புக்களையும் சில வரிகளையும் தந்தாலே போதும், இவை போல:
“மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்”
“நாவலின் களம் பாணர் கூத்தர் பொருநர் வாழ்வியல் மரபு”
”ஆதித் தமிழ் மண்ணின் வாழ்வு”

ஒரு புதினத்தை இரண்டு அணுகுமுறைகளில் அசை போடலாம். ஒன்று அது தரும் அகவெழுச்சியின் திசையில். மற்றொன்று அறிவியங்கும் கோட்பாடுகளின் திசையில். இப்புதினத்தை வாசிப்பதற்கென்று நானொரு சூழலைத் தேர்ந்துகொண்ட போதே அகவெழுச்சியின் அணுகுமுறையிலேயே இதனை வாசிப்பதென்று முன்முடிவாகிவிட்டதை இப்போது அவதானிக்க முடிகிறது. வியப்பேதுமில்லை, ஜெயமோகன் தன்னிலையாகச் சொல்வதும் இதுவாகவே இருக்கக் கண்டேன்: “இந்த நாவலைத் தத்துவப் போக்கிலும், உணர்வு நிலையிலும் பல்வேறு விதங்களில் விவரிக்கவும், விவாதிக்கவும் என்னால் முடியும். ஆனால் இதொரு பாவனை மட்டுமேயெனவும், வெறுமொரு கனவு மட்டுமேயெனவும் சிந்திக்கத்தான் இப்போது விரும்புகிறேன்.”

இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், வாசிக்கும்போதே மனம் தன் ஓரவிளிம்பில் குறித்து வைத்துக்கொண்ட சில பகுதிகளின் மீது திறனாய்வு நோக்கில் விவாதிக்கவியலும். அது தேவைதானா என்றெழும் எண்ணத்தையும் மீறி சில சொல்லத்தான் வேண்டும். அவை கராரான விமரிசனங்கள் அல்ல. விளக்கம் தேடும் ஐயப்பாடுகள் என்று சொல்லலாம்.

Image result for jeyamohan

      ”கொற்றவை” நாவல் பற்றி விமர்சகர் ஞானியுடனான உரையாடலை நினைவு கூர்கிறார் ஜெயமோகன். அவர் ஞானியிடம் சொன்னதிலொரு பகுதி: “பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு, பல்வேறு வகையிலான போர்களால் குலைந்துபோன தமிழ் நிலப்பரப்பில் பிறந்தவர் நீங்கள். அன்னியரால் தீண்டப்படாத பரிசுத்தமான தமிழ் நிலம் கேரளம்தான்.” இவ்வரிகளில் உள்ள அவதானத்தை உருவாக்கிய வரலாற்றுப் பின்னணி என்ன என்பது ஆய்வுக்குரிய ஒன்று. அதே சமயம், இதனைத் தொடர்ந்து வரும் பத்தியில் ஜெ.மோ இப்படிச் சொல்கிறார்: “இன்றைய மலையாளிக்கு தமிழின் பழமைக்கு வருவதற்கான முக்கியமான தடையென்பது, அவன் பிறந்து விழும், சுவாசித்து வாழும் இன்றைய மலையாளமே”. இவ்விரு கருத்துக்களும் முரண்படுவதாகத் தோன்றுகிறது. முற்கருத்து உரைப்பது போல், கேரளம் என்பது அன்னியரால் தீண்டப்படாத பரிசுத்தமான தமிழ் நிலம்” என்றிருப்பின், தமிழின் பழமைக்கு வருவதற்கான முக்கியமான தடை எப்படி உருவாயிற்று? “அவன் பிறந்து விழும், சுவாசித்து வாழும் இன்றைய மலையாளமே” அந்தத் தடை என்று சொல்லும் வரி அதற்கான விடையைத் தருகிறதா? ”மலையாளம் என்பது ஆதித் தமிழே” என்று நாஞ்சில் நாடன் சொல்வதற்கும் இந்த வரிக்கும் உள்ள தொடர்பும் முரணும் என்ன? மலையாளம் என்பது ஆதித் தமிழ் எனில் இன்றைய மலையாளம் எப்படி தமிழின் பழமைக்கு வரவிடாது தடுக்கும் தடையாயிற்று? இன்றைய மலையாளம் என்பதுதான் என்ன? ஆம். நேற்றைய மலையாளம் என்பது பழந்தமிழ். இன்றைய மலையாளம் என்பது சம்ஸ்க்ருதம் அவாவிய தமிழ். இது அம்மொழி காட்டும் நிதர்சனமான உண்மை அல்லவா? எனில் அங்கேயும் ”படையெடுப்பு” ஒன்று நிகழ்ந்தேயுள்ளது. ஜெயமோகன் சூசகமாகச் சுட்டிக்காட்டும் இந்தத் தடையை மலையாளிகள் தகர்க்கவேண்டும் என்பதை இந்நாவல் எதிர்நோக்குகிறதா? அத்தகைய உளப்பாங்கை அவர்களின் கூட்டுநினைவில் இந்நாவல் சிறிதேனும் உருவாக்குமா? இந்நாவலை மலையாளிகள் பெரிதும் கொண்டாடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறதே, அந்தக் கொண்டாட்டம் இந்நாவலை இந்நோக்கில் உள்வாங்கிச் செய்யப்படுகிறதா? இதனால், சேரருக்கும் ’பாண்டி’க்குமான உறவில் கனிவு உண்டாகுமா? அத்தகைய பெரும் விச்சு இந்த நாவலால் அங்கே நிகழ்ந்திருக்கிறதா? கட்டப்பனையில் அல்லது வண்டிப்பெரியாறில் ஏதேனுமொரு கடையில் கேட்டால்கூட அவர்களுக்கு இந்நாவலைப் பற்றித் தெரிந்திருக்குமா? (இங்கே தமிழின் நிகழ்காலப் பெரும்படைப்புக்கள் பற்றித் தமிழ்ப் பேராசிரியர்களுக்கே ஒன்றும் தெரியாதே?) என்பன போன்ற கேள்விகள் என் மனத்தில் எழுந்த வண்ணமிருந்தன. எனினும் இவற்றையெல்லாம் மிகவும் தீவிரப்படுத்திக்கொள்ள நான் முனையவில்லை.

      ”நாவலின் களம் பாணர் கூத்தர் பொருநர் வாழ்வியல் மரபு” என்று நான் எடுத்துக்காட்டியிருக்கும் வரி நாஞ்சில் நாடன் அவர்கள் நல்கியுள்ள முன்னுரையில் இருக்கிறது. அந்தக் கலைஞர்களுடன் பரணர் கபிலர் ஔவை என்னும் முப்பெரும் புலவர்களையும் பாரி நன்னன் அதியமான் ஆகிய மன்னர்களையும் மாந்தர்களாகக் கொண்டு இந்நாவலின் கதைப்பரப்பு விரிந்துள்ளது. இந்தன் காலம் சங்க காலம் என்று குறிப்பிடப்படுவது. ஒரு தமிழ்பேராசிரியன் என்ற வகையில், சங்கப் பாடல்களைப் பயிற்றுவிப்பவன் என்னும் நிலையில், இச்சொற்றொடர் என் கவனத்தை நிறுத்திற்று. ”குறுந்தொகையில் விளிம்பு நிலை மாந்தர்கள்”, “அகநானூற்றில் விளிம்புநிலை மாந்தர்கள்” என்றெல்லாம் தலைப்பு வைத்துக்கொண்டு நிகழ்த்தப்பெறும் ஆய்வுகள் என் மனக்கண் முன் தோன்றி ஒரு கணம் அச்சமூட்டின. இந்நாவல் இத்தனை உயிர்ப்புடனும் ஊக்கத்துடனும் அணுகியிருக்கும் இக்களத்தினை அத்தனை வரட்டுத்தனமாகவும் அணுகமுடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டுக்கள் நமது உயர்கல்விக் கூடங்களில் குவிந்துகிடக்கலாம். தமிழனே தமிழின் பழமைக்கு வருவதற்குத் தடையாக இருப்பது எது? என்று நானும் அப்போதெல்லாம் நொந்து சிந்தித்திருக்கிறேன்.

      பாணர் கூத்தர் பொருநர்... இந்தச் சொற்றொடரை வாசிக்கும்போதே அகத்தில் அவர்கள் எழுந்து நடந்து வர ஆரம்பித்திருந்தார்கள். இவர்கள் எங்கிருந்து எழுந்து வருகிறார்கள்? அதற்கான விடை என் தேகம் முழுவதும் கரந்தும் பரந்தும் இருக்கும் மரபணுக்கள் அன்றி வேறெவை? மதத்தால் நானொரு முஸ்லிம் ஆனாலும் என் மரபணு என்பது, இறைவன் எனக்கருளிய இன-மொழி அடையாளம் என்பது தமிழல்லவா? இதனைச் சொல்லத் தயங்கினேன் எனில் அதுவே இறைஞானத்தை மறுப்பதாகாதா? இந்த ரீதியில் நான் பலகாலம் பலமுறை ஆழ்ந்து எண்ணியிருக்கிறேன். “இஸ்லாம் எங்கள் வழி; இன்பத் தமிழ் எங்கள் மொழி” என்னும் பிரபலமான வரி இவண் ஞாபகம் வருகிறது. அத்துடன், “இஸ்லாம் இந்து மதத்துக்கு விரோதமானதா?” என்று கவி.கா.மு.ஷெரீஃப் எழுதிய நூலும்.

      தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவன் நான். ஒரு தமிழ்முஸ்லிமுக்கு அவனது உபநினைவுப் புலத்தில் வரலாற்றுப் பின்னோக்கு என்பது அவனது இன-மொழி அடையாளத்தின் வழியே தொல் தமிழ் நிலத்திற்குச் செல்வதாக அல்லாமல் சமய அடையாளத்தின் வழியே நபிகள் நாயகம் வாழ்ந்த அரபு நிலத்திற்குச் செல்வதாகவே பெரும்பான்மையும் நிகழ்கிறது. உதாரணமாக, உறவினர் வீட்டுத் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டேன். திக்கித் திக்கிப்பேசும் ஒரு நபரைப் பற்றி ஒருவர் விசாரித்தார். “அதாங்க, மூசா அலைஹிஸ்சலாம் மாதிரி பேசுவாரே, அவருங்க?” என்றார். (வள்ளல் எனில் தமிழ் முஸ்லிமுக்கு ஹாத்திம் தாயீ, தமிழ்ஹிந்துவுக்கு கர்ணன் என்றால் கடையெழு வள்ளலகள் எங்கே தொலைந்தார்கள்?) இங்கே, மத அடையாளங்களைத் தாண்டி தமிழடையாளங்களை முன்வைத்த உரையாடல்கள் தமிழரிடையே நிகழவேண்டிய தேவை பெரிதுள்ளது.

      என் மச்சானும் சக ஆன்மிகச் சீடருமான சையத் இப்றாஹீம் பிலாலியுடன் இக்கோணத்தில் முன்பு உரையாடியதும், ”தமிழனாகிய நான் எனது தொன்மையை அறிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் சொன்னபோது, அப்போது அண்மையில் நான் வாசித்துப் போற்றிய தேவநேயப் பாவாணரின் ”தமிழர் மதம்” என்னும் நூலை அவருக்கும் படிக்கத் தந்ததும் ஓர்மையாகிறது. அவர் கேட்ட அந்தத் தொன்மைதான் எனது மரபணுக்களில் நாம் சுமந்திருப்பது. அதை உணர்ந்திருப்பதால்தான் சங்க இலக்கியப் பரப்பெங்கும் என்னைக் காட்டும் ஆடிகள் நிரம்பியுள்ளன. அப்புலவரிலும் கலைஞரிலும் அரசரிலும் நான் இருக்கிறேன். இந்நாவலின் குலும்பனாகவும் சந்தனாகவும் மயிலனாகவும் பெரும்பாணனாகவும் பாரியாகவும் நன்னனாகவும் அதியமானாகவும் நான் உருக்கொண்டு வாழ முடிகிறது. என் பாரியாளின் காதற் கனிவின் மழலைக் குழைவில் ”காடு” காண் நீலியை ரசிக்கவும், இந்நாவலில் சீரையின் உணர்வெழுச்சி வருணிக்கப்படும் பக்கங்களில் சிறுமியான என் மகளின் நீர்நிறைக் கண்கள் எரியும் சினமேறிய முகத்தையே என் மனம் பிரதிபலித்துக் காணவும் செய்வததுவே.

      மனோஜ் கரூரின் இந்நாவலை “மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்” என்று குறிப்பிடும் நாஞ்சில் நாடன், “தமிழில் எழுதப்படும் இங்கிலீசு நாவல்கள்” என்பவற்றையும் ஒரு பிடி பிடிக்கிறார். முனைவர் பட்டத்துடன் சமாதி நிலை அடைந்துவிடும் தமிழ்ப்பேராசிரியர்களையும் அவரின் அங்கதம் தாளிக்கும் இடங்களில் கும்பமுனி அவரில் விழித்துக்கொண்ட சன்னதத்தைக் காணமுடிகிறது. (சத்தியம் சாற்றுகிறீர் கும்பமுனி! தமிழ்ப்பேராசிரியன் என்னும் நிலையில் நீமுரைப்பதை யாம் நன்கறிவோம்!) மொழிபெயர்ப்பில் இந்நாவலை வாசிக்கும்போது ஜெயமோகன் எழுதியிருப்பதைப் போன்றே பல இடங்களில் மயக்கமுணர்ந்தேன். சான்றாக ஓரிடம்:

      ”பிறந்து விழுந்த குழந்தையின் கண்கள் உலகத்தைப் பார்ப்பது போல வெளிச்சம் நீர்ப்பரப்பின்மீது சுழன்று நடந்தது. இடையில் ஒரு மின்னல் அடிப்பரப்புவரை பாய்ந்தபோது பெரியதொரு கண்ணாடி உருளியாக ஆறு ஒளிர்ந்தது. ஆற்றங்கரை மரங்கள் தெளிவான நீர்ப்பரப்பில் தலைகீழாக நிற்பதைக் கண்டு சீரை சன்னமாகச் சிரித்தாள்.”
      நீரென்பது கண்ணாடியாகும் இப்படிமக்காட்சி ஜெயமோகனின் புனைவெழுத்தில் மீண்டும் மீண்டும் வருகின்ற ஒன்று. மட்டுமல்ல நிலத்தில் கிடக்கும் நீரில் வானம் வரை அனைத்தும் தலைகீழ்ப் பிம்பமாதல் என்பதுமொரு தத்துவத் தொனிப்புடன் சொல்லப்படுவதையும் காணலாம். இவ்விடத்தில் தேவதேவனின் கவிதை வரிகள் ஞாபகம் வருகின்றன:
”நீரில் தெரியும் நெற்கதிர்கள்
சொர்க்கத்தின் விளைச்சல்கள்
நீங்கள் அவற்றை
நேரடியாக அறுவடைசெய்யமுடியாது”


      என் இக்கட்டுரைக்கு, இந்நாவலைப் பின்பற்றி, நிலம் சார்ந்தே தலைப்பிட்டுள்ளேன்: “காடு பூத்த தமிழ் நிலத்தில்...”.  இரு காரணிகளாக நான் சொன்னதிலும் இயற்கை மற்றும் தமிழ் என்று இயற்கையை முற்படுத்திச் சொன்னேன். முசிறித் துறைமுகம் இந்நாவலில் முக்கியமானதொரு களமாக இடம்பெற்றிருப்பினும், ஆனைமலை ஏழிமலை பறம்புமலை என்பதாக மலைப்பகுதிகளான குறிஞ்சி மற்றும் கானகப் பகுதிகளான முல்லை நிலங்களிலேயே இக்கதை நிகழ்கிறது.  வேள் பாரி ஆண்ட பறம்புநாடு மூவேந்தரால் வீழ்த்தப்பட்ட சோக வரலாற்றை இந்நாவல் சொல்கிறது. பாரியின் அந்நிலப்பகுதி இன்றைய தமிழகத்தையும் கேரளாவையும் இணைப்பதாக அமைந்திருக்கும் தகவல் இந்நாவலின் பொருண்மை சார்ந்து அர்த்தம் கொண்டொரு சோகவுணர்வை மனத்தில் கிளர்த்துகிறது. தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிரான்மலை தொடங்கிக் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள நெடுங்காடி வரை பாரியின் நாடாக இருந்துள்ளது.

இந்த மலைப்பரப்புக்களை எல்லாம் இக்கதை மாந்தர்கள், பாணரும் கூத்தரும் பொருநருமான கலைஞர்கள், நடையாய் நடந்தலைந்து கடக்கின்றார்கள் என்பதான காட்சிகளைப் படிக்கப் படிக்க என் அகநிலத்தில் நானும் அவர்களுடன் நடந்திருந்தேன். விடுமுறை நிமித்தமாய்க் குடும்பத்துடன் இங்கே பயணித்தலைந்த பசுமையான ஊர்களெல்லாம் அதன் ஈராயிரம் ஆண்டுகள் தாண்டி இப்போது வெளியே பிரதிபலிப்பதாகத் தோன்றிற்று. மலையாளம் என்னும் பெயரே தமிழன்றோ? மலைப்பகுதிகளில் உள்ள ஊர்களின் பெயர்களெல்லாம் இயற்கை சார்ந்த தமிழ்ப்பெயர்களாகவே இருக்கின்றன. குமுளி, தேக்கடி, வண்டிப்பெரியாறு, வண்டன்மேடு, குட்டிக்கானம், புலியன்மலை, சேத்துக்குழி, கட்டப்பனை, ஐஞ்சுருளி, மொட்டக்குன்னு (வாகமன் புல்வெளிகள்), பரந்தம்பாறா (பருந்துப் பாறை என்பதன் மரூஉ), மூனாறு இத்தியாதி.

Image result for john pennycuick memorial


இந்நாவலின் முடிவில் வருமொரு காட்சி பற்றி ஒன்றுரைப்பேன். மயிலன் மொழிவதாய் அமைந்துள்ளது அப்பகுதி. பெரியாற்றுக் கரையோரமாக நடந்து ஒரு நாள் அவன் வந்து சேருமிடமிடத்தில் தம் குடும்பத்தினரைக் காண்கிறான். “உச்சத்தில் பாடப்பட்ட பாட்டைக் கேட்டுக்கொண்டே அங்கிருக்கும் ஒரு கோவிலை அடைந்தேன். கூடல் நகரைச் சுட்டெரிக்க இடமுலையைத் திருகியெறிந்த கண்ணகி கோவில்.” என்று அந்த இடத்தைச் சுட்டுகிறான். இப்பகுதியைப் படிக்கும்போது அடடா! என்றிருந்தது. அதற்கு ஐந்து நாட்களுக்கு முன்புதான் சித்திரா பௌர்ணமி அன்று, ஆண்டுதோறும் நடைபெறும் மங்களதேவி விழா அவ்விடத்தில் நடந்து முடிந்திருந்தது. கேரளக் காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் நடைபெறும் அவ்விழாவிற்குச் சென்றுகொண்டிருந்த தமிழ் யாத்ரீகர்களை நான் கண்டேன்.  சின்னமனூர் உத்தமப்பாளையம் கம்பம் கூடலூர் என்று நெடுகவும் அறிவிப்புச் சுவரொட்டிகளில் கண்ணகி சிலம்பேந்தி நின்று வழக்குரைக்கும் படம் இடம்பெற்றிருந்தது. கண்ணகிக் கோட்டம் எனப்படும் அந்தச் சிற்றாலயம் இருக்கும் மலையின் கீழ் “லோயர் கேம்ப்” என்னும் பகுதியில் அமைந்திருக்கும் கர்னல் பென்னிகுக் நினைவிடத்தில் சென்று அமர்ந்திருந்தேன். என் வாழ்வில், நிலம் பூத்து மலர்ந்த நாட்களில் அதுவும் ஒரு நாளாய் இருந்தது.

Friday, May 19, 2017

நான் விளக்கைப் படைத்தேன் - part 5

Image result for sacred valley of tuwa
sacred valley of Tuwa at mount Tur Sinai

எகிப்தின் மன்னனிடம் மூசா நபியை அனுப்பும்போது இறைவன் அவரிடம் இரண்டு அற்புதங்களைத் தந்து அனுப்புகிறான். ஒன்று, அவரின் கைத்தடி பாம்பாக மாறுவது. மற்றொன்று, மூசா நபியின் கை வெண்மையாகப் பிரகாசித்தல். அதனைக் குர்ஆன் இப்படிக் கூறுகிறது: ”மேலும், உம் கரத்தைக் கக்கத்தில் வைத்தெடுக்கவும்; அது மாசற்ற வெண்மையாய் வெளிப்படும். (இது) இன்னொரு சான்றாகும்” (குர்ஆன் – 20:22).

கைத்தடி மற்றும் கை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியதன் மூலம் அவை சார்ந்த இரண்டு அற்புதங்களையும் தான் மூசாவுக்குத் தரப்போவதை இவ்வுரையாடலின் ஆரம்பத்திலேயே இறைவன் சூசகமாகச் சுட்டிக்காட்டிவிட்டான்: ”மூசாவே! நின் வலது கையில் இருப்பதென்ன?” (வ மா தில்க பியமீனி(க்)க யா மூசா – குர்ஆன்:20:17). எனவே ”வெண் கை” (யதுல் பைளாஃ) என்னும் அற்புதம் காட்டியது மூசா நபியின் வலதுகரமே.

மூசா நபி அவர்களின் கை இறைத் திருநாமத்தின் கருவியாக இருக்கும் சிறப்பு நிலையைக் குறிக்கவே அங்ஙனம் வெண்மையாக மாறிற்று எனலாம். அதாவது, உயிரூட்டுதற்கான திருநாமம் “முஹ்யி” என்பதாக இருப்பதைப் போன்றே அந்த உயிரை மீட்டு எடுத்துக்கொள்வதற்கான திருநாமம் “முமீத்” (மரணமளிப்போன்) என்பதாகும். முஹ்யி என்னும் திருநாமத்தின் வெளிப்பாடு கழியைப் பாம்பாக்குவதில் செயல்படுகிறது எனில், முமீத் என்னும் திருநாமம் பாம்பை மீண்டும் கழியாக்குவதில் செயல்படுகிறது. மூசா நபி கழியைக் கீழே போட்டவுடன் அவர்களின் தொடர்பின்றியே அதனை இறைவன் பாம்பாக்கினான். ஆனால் பாம்பு கழியாவதற்கு அவர்களின் கை அதனைத் தொட வேண்டும் என்றான். துவா வெளியில் அந்நிகழ்வின் முன்னோட்டத்தில் அவர்களின் கை பார்ப்பதற்குச் சாதாரணமாகத்தான் இருக்கிறது. எனினும் அது அந்தரங்கத்தி இறைவனின் திருநாமத்தின் கருவியாக இருக்கும் நிலையை வெளிப்படுத்திக்காட்ட அதனை மாசற்ற வெண்மையாகப் பிரகாசிக்கச் செய்தான். அந்தக் கை முமீத் என்னும் திருநாமத்தின் கருவியாக இருந்து தொட்டவுடன் உயீர் மீட்டுக்கொள்ளப்பட்டு மேலும் அது பழைய நிலைக்குக் கைத்தடியாகவே ஆக்கப்பட்டது.

மூசா நபியின் வலது கையில் ”முமீத்” என்னும் திருநாமம் இயங்குவதற்கான முன்னோட்டம் அதற்கு வெகு காலத்திற்கு முன்பே அவரில் நிகழ்ந்திருக்கிறது. அதில், தன் இனத்தவர் ஒருவருடன் சண்டை போட்டுக்கொண்டிருந்த ஓரு எதிரியை மூசா நபி குத்தினார்கள். அதில் அவன் மரணித்துவிட்டான். அவர்களின் குத்து எந்த வேகத்தில் இருந்திருக்கும்? அந்த வேகத்தைத் தொனிப்பது போல் அந்நிகழ்வை அல்லாஹ் துரிதமாகச் சொல்கிறான்: “மூசா அவனைக் குத்தினார்; அவனை முடித்துவிட்டார்!” (ஃபகஸஹு மூசா ஃபகளா அலைஹி – 28:15). (இந்த வசனத்தின் தொடர்ச்சியை வைத்து இங்கே பேசப்படும் கருத்துக்கு முரணான ஐயப்பாடுகள் எழக்கூடும். அவற்றைத் தனியே ”மூசாவின் குத்து” என்னும் கட்டுரையில் பின்னர் பேசுகிறேன், இன்-ஷா-அல்லாஹ்)

Image result for snake like stick

முமீத் என்னும் திருநாமத்தின் செயல்பாடு பாம்பின் உயிரைப் பறித்த பின் அது செத்த பாம்பாகவே அன்றோ கிடக்க வேண்டும்? அது எப்படி கைத்தடியாக மாறுகிறது. ஃகாலிக் முஸவ்விர் முஹ்யி ஆகிய முத்திருநாமங்கள் ஏகநேரத்தில் கைத்தடி மீதியங்கி அதனைப் பாம்பாக மாற்றியது போல் இங்கே முமீத் ஃகாலிக் முஸவ்விர் ஆகிய முத்திருநாமங்கள் ஏகநேரத்தில் இயங்கிப் பாம்பினை மீண்டும் கைத்தடி ஆக்குகின்றன. எனவே மூசா நபியின் கை பற்றிய உடனேயே அது நடந்துவிடுகிறது.

அத்திருநாமங்கள் ஏன் ஏக நேரத்தில் இயங்க வேண்டும்? இதில் திருநாமங்கள் பற்றியதொரு ஞானம் இருக்கிறது. அதாவது இறைவனின் திருநாமங்கள் அவனது உள்ளமையில், சுயத்தில் இவ்விடம் அவ்விடம் என்னும் குறிப்பின்றி அனைத்துத் திருநாமங்களும் நீக்கமற முழுதும் நிரைந்திருக்கின்றன. மனிதவுடலில் கண்ணில் மட்டும் பார்வை, காதில் மட்டும் கேள்வி, நாவில் மட்டும் பேச்சு என்பதைப் போல் அல்ல அவனது திருநாமங்களும் பண்புகளும். எனவே அவை ஏககாலத்தில் ஒரே புள்ளியில் வெளியாக முடியும்.

மனித அல்லது பறவையின் உடலமைப்பினைக் களிமண்ணில் செய்யும்போது அதனைச் சதையுடலாக மாற்ற வேண்டி உயிரூட்டுதல் என்னும் நிகழ்வு அவசியமாகிறது. ஆதம் நபியின் விஷயத்தில் அல்லாஹ்வே அதனைச் செய்தான். தனது முஹ்யி என்னும் திருநாமத்தை அதன் மேல் இயங்க வைத்து உயிரூட்டினான். அந்நிகழ்வு அவன் தனது ஆவியிலிருந்து ஊதியதாக இருந்தது. ஏசுநாதர் பறவை வடிவங்களைக் களிமண்ணில் செய்த நிகழ்வில் அத்திருநாமம் அவர்களின் மூச்சு ஊதலைக் கருவியாக எடுத்துக் கொண்டது. ஏசுநாதர் இறந்துபோன ஒருவனை உயிருடனெழுப்பிய அற்புதத்தில் அவர்களே “முஹ்யி” என்னும் திருநாமத்தின் கருவியாக ஆக்கிக்கொள்ளப்பட்டார்கள். அது இறைவனின் அனுமதி அல்லது உத்தரவின் பேரில் நிகழ்ந்தது. எனவே அவனிட்ட ஆணைக்கு உடனுதவி செய்வது அவனின் பொறுப்பு என்னும் நிலையில் அவனது திருநாமம் இயங்கி உயிரூட்டிற்று.

இறைவனின் மூலப்படிவத்தில் எந்தெந்த படைப்பினத்தின் மீது அவனது முஹ்யி என்னும் திருநாமம் இயங்க வேண்டும் என்பதாக அவனது ஞானத்தின் பொது நியதி உள்ளதோ அந்தந்த படைப்பினத்தின் உருவங்கள் அவனது உயிரூட்டத்தைத் தேடுவதாகவே இருக்கும். இதில்தான் உயிரின உருவங்களை மண் / கல் அல்லது உலோகம் கொண்டு சிலை வடிப்பதை அல்லது அவற்றின் ஓவியங்கள் வரையப்படுவதை இஸ்லாம் தடுத்து வைத்திருப்பதற்கும் ஆனால் அதே மூலப்பொருட்களைக் கொண்டு பாத்திரங்கள் கட்டடங்கள் போன்ற பொருட்கள் செய்யப்படுதற்கு அனுமதி இருப்பதற்குமான விளக்கம் இருக்கிறது.

Related image

ஒரு ஓவியன் அல்லது சிற்பி தனது கலைப் படைப்பிற்கான உருவத்தை எங்கிருந்து எடுக்கிறான்? அது ஏற்கனவே உள்ள ஒருவரை மாதிரியாக வைத்து உருவாகும் ஓவியமாக / சிலையாக இருக்கலாம். உதாரணமாக, லியோனார்டோ டாவின்சி வரைந்த புகழ்பெற்ற ஓவியமான மோனா லிசா என்பது லிசா கெரார்தினி என்னும் பெண்ணை மாதிரியாக வைத்து வரையப்பட்டதாகும். இன்னொரு சாத்தியம் என்னவெனில், ஒரு கலைஞன் தனது கற்பனையில் கண்டெடுத்த உருவமாக அது இருக்கலாம். ஆனால் கற்பனைப் புலன் என்பது ஏற்கனவே முன் கண்ட உருவங்களின் பதிவுகளின்றிப் புத்தம் புதிதாக ஓர் உயிரின உருவத்தைச் சிந்திக்குமா? என்னும் கேள்வி எழுகிறது. (ஏற்கனவே பதிந்திருக்கும் சிருஷ்டிகளின் உருவங்களில், வெவேறு சிருஷ்டிகளின் உருவக்கூறுகளைத் தெரிவு செய்து ஒன்றிணைத்து, சர்ரியலிச ஓவிய பாணியில் போல், ஒரு ‘புதிய’ உயிரினம் போல் காட்டினாலும் அது உண்மையில் புதிய உயிரினவுருவம் அல்ல என்பது விளங்கும்.)

எப்படியோ, ஒருவன் வரையும் அல்லது செதுக்கும் ஓவிய / சிலை ரூபம் என்பது எங்கிருந்து வருகிறது? ஒரு குழந்தை பிறக்கிறது, வளர்கிறது. அதன் உருவத்தை அமைத்து மெல்ல மெல்ல மாற்றிப் பருவந்தோரும் ஒவ்வொரு விதத்தில் காணும் உருவைக் கொடுப்பது யார்? அது யாருடைய உருவப் படைப்பு? அந்த உருவங்கள் எங்கிருந்து வந்தன அல்லது வருகின்றன? அவை இறைவனின் ஞானத்தில் இருக்கின்றன. அல்-முஸவ்விர் என்னும் திருநாமத்தின் இயக்கம் அவற்றை வெளிப்படுத்துகிறது. இறைஞானத்தின் பொது நியதிப்படி அதில் உயிரூட்டம் எந்த அளவு இருக்கவேண்டும் என்று கண்டதோ அந்த உயிரளிப்பை முஹ்யி என்னும் திருநாமத்தின் இயக்கம் தருகிறது. ஓர் ஓவியன் அல்லது சிற்பி ஓர் உருவப்படைப்பைச் செய்யும்போது அவ்வுரு இறைஞானப் படிவத்திலிருந்தே வருகின்றது! அந்த உருவம் ”உயிரினம்” (மனிதன், விலங்கு) என்பதன் உருவமாக இருக்கும் பட்சத்தில் அதில் உயிரூட்டப்படுதற்கான கோரிக்கை (இக்திழா) எழுகிறது. அதற்கு உயிரூட்டுமாறு அதனை வரைந்த / செதுக்கிய கலைஞனை இறைவன் மறுமையில் நிர்ப்பந்திப்பது அதனால்தான். ஆனால் அக்கலைஞனுக்கு முஹ்யி என்னும் திருநாமத்தின் ஒத்துழைப்புக் கிட்டாது. ஏனெனில் அவனின் ஓவிய / சிற்பப் படைப்புச் செயல் என்பது இறைவனின் அனுமதி பெற்ற ஒன்றல்ல. எனவே வரம்பு மீறியமைக்கான தண்டனையை அவன் பெறுவான்.

Image result for hyper realistic painting

ஓவியம் அல்லது சிற்பத்தில் உருவங்கள் தமக்குரிய உயிரூட்டத்தைக் கோரும் என்பதை நம் உயிரின் மீது அவை உண்டாக்கும் அதிர்விலிருந்தே உணரலாம். ஒரு வீடு அல்லது நிலக்காட்சியின் ஓவியத்தை (still life or landscape painting)ப் பார்ப்பதற்கும் ஒரு பறவை அல்லது விலங்கு அல்லது மனித உருவத்தின் ஓவியத்தைப் பார்ப்பதற்கும் வேறுபாடு இருக்கின்றது. உயிரினங்களின் ஓவியங்களை பார்வையாளனின் உபநினைவுத் தளம் சலனப்படுத்தியே காணும். அவ்வுருவங்கள் உயிரூட்டத்திற்குரியவை என்னும் நியதி சிருஷ்டிப் பரப்பெங்கும் ஆக அடிப்படையான ஒன்று. அந்த தெய்வீக விதிக்கு உட்பட்டே மனித நினைவுப்புலம் இயங்கும். அவனின் ஜாக்ரத் நினைவகம் அதனை மறுக்க விரும்பினாலும் எத்தனித்தாலும் அவனது உபநினைவுப்புலம் (ஸ்வப்னம்) அதனைச் சலனமுறுத்திக்கொள்ளும். பிம்பங்களில் ஆக அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துவது தன்னினத்தின் எதிர்ப்பாலின உருவமாகவே இருக்கும். ஏனெனில் இயற்கை நெறியில், ஆண்-பெண் என்னும் இணையே சிருஷ்டிச் செயல்பாட்டின் கருவியாக உள்ளது. எனவே பெண்ணுருவம் போல் ஆணைச் சலனமுறுத்தும் உருவம் பிறிதில்லை. அதுவே பெண்ணுக்கு ஆணுமாம்.

இப்படி நோக்க, உருவங்களை ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் படைக்கும் வினையில் ஈடுபடுமொரு கலைஞனை விடவும், இறைவனால் படைக்கப்பட்டு வடிவம் கொடுக்கப்பட்டு (செவ்வை செய்யப்பட்டு) உயிரூட்டப்பட்ட, அவனது ரட்சிப்பால் (ருபூபிய்யத்) வளர்க்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து, இன்னொரு ஆன்மாவை அதற்கான உடலுடன் வெளிப்படுத்துதற்கான தாம்பத்யத்தில் இயங்குகின்ற ஒருவன் மேலானவன் ஆவான். அதனாற்றான், ஓவியங்களையும் சிலைகளையும் மார்க்கத்தில் தடை செய்த நபிகள் நாயகம் சொன்னார்கள், “திருமணம் எனது வழிமுறை. எனது வழிமுறையை எவன் புறக்கணித்தானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்” (அந்நிக்காஹ் மின் சுன்ன(த்)தீ வ மன் ரகிப அன் சுன்ன(த்)தீ ஃபலைச மின்னீ). 

இங்கே, இக்கட்டுரையின் தொடக்கத்தில் எடுத்துக்கொண்ட பொருண்மைக்கே நான் திரும்புகிறேன். கருத்தைப் பொருளாக வெளிப்படுத்துவது இறைவனின் தன்மையாகும். அத்தன்மையை அவன் தனது படைப்பினங்களின் வழியே செயல்படுத்துவதுண்டு. அப்படைப்பினங்களில் ஏனையவற்றினும் மனிதனிடமே மிகவும் அபரிதமாக அப்பண்பு வெளிப்படுகின்றது. எனவே அவன் “ஃகலீஃபத்துல்லாஹ்” – இறைவனின் பிரதிநிதி எனப்படுகின்றான். (அல்லது இடவலமாக, மனிதன் இறைவனின் பிரதிநிதி என்பதால் அவனுக்கு இத்தன்மை அபரிதமாக வழங்கப்பட்டுள்ளது.)

இங்கே ஒரு கேள்வி எழுகிறது. மனிதன் தனக்கு வழங்கப்பட்ட தகுதியைத் தவறாகப் பயன்படுத்தினால்? (ஏனெனில், அவன் தவறிழைப்பதற்கான சாத்தியத்துடனேயே படைக்கப்பட்டவன்.). அவன் வரம்புகளை மீறினால்?

ஆம், அவன் தவறிழைக்கிறான். அவனது சிந்தனையின் வெளிப்பாடாக அமைந்த நாகரிகக் கூறுகள் அனைத்தும் இயற்கையைச் சுரண்டும் நாச வேலையாகக் குரூரம் கொள்வதைக் காண்கிறோம். இதனைத் தடுத்து நிறுத்தித் தன்னைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டிய கடமை மனிதனுக்குண்டு. அவனது படைப்பின் குரல் ஒருபோதும் ஆணவத்தின் குரலாக ஒலித்துவிடக் கூடாது.

அதற்குத்தானோ என்னவோ, கட்டடத் திறமையில் மனிதனை விட விஞ்சியவையாக அல்லாஹ் சின்னஞ்சிறு பூச்சிகளை வைத்திருக்கிறான். உதாரணத்திற்கு, நாம் முன்பு கண்ட கரையான். ஒரு கரையானின் அளவையும் அதன் புற்றின் அளவையும் ஒருபக்கமும் மனிதனின் அளவையும் அவன் கட்டியுள்ள கட்டடங்களின் அளவையும் மறுபக்கமும் வைத்து அவற்றின் விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் மனிதன் கரையானிடம் படுதோல்வி அடைவதைக் காணலாம். ”கரையான்களின் அற்புதம்” (The Miracle of the Termites) என்னும் நூலில் ஹாரூன் யஹ்யா பின்வரும் மேற்கோளைச் சுட்டிக்காட்டுகிறார்: “சராசரியான புற்றின் உயரத்தை ஒரு வேலைக்காரக் கரையானின் அளவுடன் ஒப்பிட்டு அந்த விகிதத்தை ஐந்தரை அடி உயரமுள்ள மனித நிலைக்கு மாற்றி நோக்கின், அக்கரையான் புற்று 960 மீட்டர் (1349 அடி) உயரமுள்ள விண்முட்டிக் கட்டடமாக – இப்போது உலகிலுள்ள எந்தக் கட்டடத்தை விடவும் மிக உயரமானதாக - இருக்கும். உதாரணமாக, அது எகிப்தின் மகா பிரமிடை விடவும் ஐந்து மடங்கு உயரமானது. கரையான் தனது புற்றினை மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகளில் கட்டிவிடுவதைக் கருத, அது மனித உழைப்பில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நிகராகும்” (எரிக் ஹாய்ட் மற்றும் பெட் ஷுல்ட்ஸ், “Insect Life”, ந்யூ யார்க், ஜான் வில்லி அண்ட் சன்ஸ், 1999, பக்கம்.160)


இத்தருணத்தில், மனிதனுக்கும் இறைவனுக்குமான உரையாடலாக அல்லாமா இக்பால் இயற்றிய பாரசீகக் கவிதை ஒன்று என நினைவுக்கு வருகிறது. அக்கவிதையுடன் இக்கட்டுரைக்குத் திரையிடுகிறேன்.

”இறைவன் மனிதனிடம் சொன்னான்:
’எங்கே நான் நீரும் மண்ணும் கொண்டு
ஓர் உலகையே படைத்தேனோ
அங்கே ஈரான் துருக்கி எகிப்தென்று
தேசங்களைப் படைத்துவிட்டாய் நீ
புழுதியில் நான்
இரும்பின் மூலத் தாதைப் படைத்தேன்
நீ வாளும் வேலும் துப்பாக்கியும் படைத்தாய்
பெருமரம் வீழ்த்தும் கோடரியைப் படைத்தாய்
பாடும் பறவைக்குச் சிறையாகும்
கூண்டினைப் படைத்தாய் நீ’
மனிதன் இறைவனிடம் சொன்னான்:
‘நீ இரவைப் படைத்தாய்
நான் விளக்கைப் படைத்தேன்
நீ களிமண் படைத்தாய்
நான் கோப்பையைப் படைத்தேன்
பாலைவனமும் மலைமுகடும்
சமவெளியும் படைத்தாய் நீ
மலர்வனமும் சோலைகளும்
தோட்டமும் படைத்தேன் நான்
கல்லில் கண்ணாடி படைத்தவன் நானே!
விஷத்தில் அமிர்தம் கடைந்தவன் நானே!’”