Saturday, May 27, 2017

ஜென்னத்


                குடும்பத்தோடு திருச்சிக்குத் திரும்பிவிட்டேன். இவ்வாண்டின் விடுமுறை நாட்கள் வாசிப்பிலும் கேரள மலைகளின் பயணத்திலுமாக மன நிறைவை அடியேனுக்கு அளித்தது. உத்தமப்பாளைய நண்பர்களில் மூவரை மட்டும் தனித்தனியே சந்திக்கவும் உரையாடவும் முடிந்தது.

      திருச்சிக்குக் கிளம்புவதற்கு இரு தினங்கள் முன்பு வரலாற்றுப் பேராசிரியர் பஷீர் அஹ்மது அலைப்பேசினார். “அப்படியே வந்து உங்களைத் தேக்கடிக்கு அழைத்துச் செல்லலாம் என்று திட்டம். அங்கேயே சாப்பிடலாம். மாலை உங்களை வீட்டில் வந்து விட்டுவிடுகிறேன். உங்களிடம் தஃலீம் கேட்க வேண்டும்” என்று சொன்னார். சரியாக அந்த நாளில் உறவினர்களின் விசேஷம் இருந்ததால் முடியாமல் போயிற்று. ”அடுத்த முறை வரும்போது பார்க்கலாம்” என்று சொல்லி வைத்தேன்.

      இச்சேதியை அவளிடம் சொன்னபோது, “நல்லாயிருக்கே நீங்க மட்டும் தேக்கடிக்கு போய் ஜாலியா சுத்தீட்டு வருவீங்க. நாங்க இங்க கிடக்கணுமாக்கும்” என்று புலவி கொண்டாள்.

      அப்போதுதான் இன்னொன்றை நினைவு கூர்ந்தேன். கம்பம் வந்து இரு நாட்களில் சையத் இப்றாஹீம் பிலாலி அலைப்பேசினார். அவரும் ஏறத்தாழ இதையேதான் சொன்னார். “ஊருக்குப் போறீங்கன்னு ஒரு வார்த்த சொல்லலியே? நானும் காரெடுத்துட்டு வந்திருப்பேன். இருவரும் பேசிக்கொண்டே மலைகளில் சுற்றிவிட்டு வந்திருக்கலாமே?”

      மே மாத விடுமுறையின் தொடக்கத்திலும் முடிவிலுமாக் இப்படி இரண்டு அழைப்புக்கள். இருவரும் என்னுடன் பேச விரும்பியது ஆன்மிகம்தான். ஆனால் இருவரும் வேறு வேறு வகைப்பட்ட ஆளுமைகள். கிளம்புமன்று காலை தமிழ்ப்பேராசிரியர் இளவல் முகமது ரபீக் என்னும் ”மானசீகன்” சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவர் இன்னொரு ரகம். இப்படி ஒருவரின் சாயல் இன்னொருவரில் இல்லாத பல நபர்களுடன் பேசிக்கொண்டிருக்கத்தான் செய்கிறேன். அவரவர் பார்வைக்கோணங்களில் உள்ள நியாயத்தை உணர முடிகிறது. ஒவ்வொருவரிலும் நானும் கொஞ்சம் இருக்கவே செய்கிறேன்.

      சகதர்மினியின் புலவி நுணுக்கம் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் ஆன்மிகம் பேசத்தான் வெளியே செல்கிறோம் என்பதில் அவளுக்கு எந்த ஆர்வமும் இல்லை. பெண்களின் சித்தாந்தம் போலும், வெளியே செல்வது என்பது மகிழ்ச்சி. பிறகுதான் அது ஆன்மிகமா வெங்காயமா என்பதெல்லாம். இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள் என்று என்னென்ன ‘வாதி’ வகைகள் இருக்கின்றனவோ அனைத்திலும் ஆண்கள் எங்காவது சுற்றுலாச் சென்று உரையாடி வருவதும் இருக்கின்றது.

”அந்தத் தஃலீமை இங்கே வீட்ல உக்காந்து பேச முடியாதா? தேக்கடியில போய் பேசினாத்தான் வெளங்குமா?” என்றுதான் என்னவள் கேட்டிருப்பாள். அப்படி அவள் கேட்பதாகக் கற்பனை எழுந்தபோது நான் புத்தரின் மனைவி யசோதாவை நினைவு கூர்ந்தேன். “நீங்கள் அடைந்த ஞானம் எங்கும் இருக்கிறது எனில் இந்த அரண்மனையில் அது இல்லையா? இங்கே இருந்தபடிக்கே அதை அடைந்திருக்க முடியாதா?” என்று அவள் புத்தரிடம் கேட்கிறாள். ஞானம் அடைந்த பிறகு புத்தரால் விடை சொல்லமுடியாத ஒரே கேள்வி அதுதான் என்கிறார் ஓஷோ. மனைவியின் கேள்விக்கணை பாய்ந்து வரும்போது புத்தராவது சித்தராவது!

நண்பர்கள் சொன்னது நடந்திருந்தால் என்னும் கற்பனையும் வந்தது. நெடிதுயர்ந்த மலைகளினூடே பயணித்தபடி சூஃபித் தத்துவங்களைப் பேசுவது. ஊசியிலைக்காடுகளில் அமர்ந்தபடி உஜூதின் (உள்ளமையின்) விளக்கங்களை உரையாடுவது (அதைவிடவும் உள்ளமையுடன் உரையாடுவது இனிதல்லவா?), கட்டஞ்சாயா சுவைத்தபடி கஸ்ஸாலி இமாமை விவாதிப்பது, புற்கள் விரிந்த பாறைப் பரப்பில் தொழுவது என்றிப்படி விரிந்தது அது. வீட்டில் அமர்ந்து பேசுவதை விடவும் இயற்கையின் மடியில் அமர்ந்து பேசுவது நிச்சயமாக வேறுதான். அதில் நம் ஆழ்மனத்தின் சுனையூற்று திறந்து கொள்ளும் போலும். அதைத்தான் ஒவ்வொருவரும் தேடுகிறார்களா? ஒருவேளை அச்சூழலின் அழகையும் அமைதியையும் பேச்சு கெடுத்துவிட்டிருக்கவும் கூடும். மௌனமாய் அமர்ந்து தியானம் செய்வதே பொருத்தமாகலாம்.

ஒருமுறை அப்படிக் குடும்பத்துடன் போய் வருகையில், எட்டாம் மைல் என்னும் இடத்தைத் தாண்டி என்று நினைக்கிறேன், காடுகளுக்குள் ஆங்காங்கே மரங்களின் மீது குடில்கள் அமைந்த ஒரு விடுதியை சகதர்மினி சுட்டிக்காட்டினாள். ஒன்றும் சொல்லவில்லை. சொற்கள் தேவையற்ற குறிப்பு அது. ”அங்கு நாம் இருந்தால் நன்றாயிருக்குமே?” என்னும் உணர்வின் வெளிப்பாடு. அந்த மரக்குடிலைப் பார்த்தபோது எனக்கு ”காடு” புதினத்தில் வரும் மலைப்பெண் நீலியின் குடில் நியாபகம் வந்தது. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அந்த நீலி இருக்கத்தான் செய்கிறாள். ”நாகரிகம்” இன்னும் தீண்டாத கன்னிமை கொண்ட செழுங்காடு போன்ற நீலி.

Related image

இதோ இங்கேதான் வண்டிப்பெரியாருக்குத் தென்மேற்கே முப்பது கி.மீ தொலைவில் இருக்கிறது கவி (GAVI). இத்தடவை விடுமுறைக்கு எங்கே செல்வது என்னும் கேள்விக்கு என் மனத்தில் தோன்றிய முதல் இடம் அதுதான். உலகச் சூழுலா மையங்களின் (Eco-tourism) பட்டியலில் இடம் பெற்றுவிட்ட மலைக்காடு அது. ”கடவுளின் காடு” என்னும் தலைப்பில் அவ்விடம் பற்றி ஜெயமோகன் எழுதிய கட்டுரையைப் படித்தபோதுதான் அப்படியொரு இடம் இருப்பதை அறிந்தேன் (ஏப்ரல் 3, 2016 http://www.jeyamohan.in/86276#.WSlX4et94_4). விசாரித்துவிட்டு வேண்டாம் என்றாயிற்று. ஒருநாள் அங்கே ராத்தங்குதற்கான செலவு பெரிதுதான், எம் நிலைமைக்கு. ஜெயமோகன் அங்கே தங்கிப்போனதைச் சொன்னபோது ’அவர் சினிமாக்காரர்’ என்று சகதர்மினி காரணம் சொன்னாள். மானசீகனிடம் சொன்னபோதும் அதையேத்தான் சொன்னார், “சினிமாக்காரய்ங்க கூட்டிட்டு வந்திருப்பாய்ங்கஜி” என்று. அப்படியே நடந்திருந்தாலும், அவர் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக உழைத்த எழுத்துழைப்பின் பயனாக அந்த நிலையை அடைந்திருக்கிறார். ஆனால், இந்த வசதி எவ்வித அறிவுபோதமும் அற்ற ஓர் இளம்நடிகனுக்கு அல்லது பெருநடிகனின் மகனுக்கு ஆயத்தமாகவே கிடைக்கும் ஒன்றுதானே? என்று சொன்னேன். அது வேறு திசைப்பேச்சு.

“காடு முதலில் உருவாக்கும் எண்ணம் தூய்மை என்ற ஒற்றைச் சொல்தான். அந்த சொல்லை பலவிதமாக நாம் விளக்கிக்கொண்டே செல்லமுடியும். நாமறியும் நகர, கிராம வாழ்க்கையை நம் ஆழ்மனம் தவிர்க்க முயன்றபடியே உள்ளது. சத்தம், புழுதி, சாக்கடை, கட்டிடங்களின் சாலைகளின் ஒழுங்கின்மை, வாகனங்களின் நெரிசல், மக்களின் பிதுங்கல். காடு சட்டென்று நம்மை அவற்றில் இருந்து விடுவிக்கிறது” என்று தனது கட்டுரையில் ஜெயமோகன் எழுதியிருந்தார். அத்துடன் ”அடுக்களைப்பாடு” என்பதையும் பெண்களின் உளவியல் சேர்த்துக்கொள்ளக்கூடும். நியாயம்தானே?

Image result for thekkady treetop

சகதர்மினி சுட்டிக்காட்டிய மரக்குடில் மீண்டும் மீண்டும் எனது நினைவில் தோன்றிக்கொண்டிருந்தது. இன்று அங்கே வந்து தங்கிப்போவோர் யாவர்? நான்கு நட்சத்திரத் தகுதியில் இயங்கும் அவ்விடுதியின் கட்டணங்கள் எல்லோருக்கும் எட்டக்கூடிய ஒன்றா? என்னும் சிந்தனைகள் எழுந்தன. அது மலையன்மார் கட்டும் காட்டுக் குடில் போன்றதொரு விடுதிதான். ஆனால் இன்றது பொருளாதார அடுக்குகளில் நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டா உயரத்தில் கொண்டு செல்லப்பட்டிருப்பதன் நகைமுரண் உறுத்திற்று. நாகரிகத்தின் செந்நிலையில் வாழுமொருவர் காட்டுவாசி போல் மாறிவிடுவதான பாவனை கொள்வதன் விலை இவ்வளவு அதிகமாய் இருக்கிறது. அதிலும் காதலின் நிமித்தமான பாவனைகளாகவே அவை பெரிதும் விளம்பரப்படுத்தப் படுகின்றன. ”ஹனிமூன் பேக்கேஜ்” என்பது இந்த வணிகத்தில் ஒரு பிரபலமான சொல்லாடல். காட்டுவாசிகளின் வாழ்வில் அது போன்ற மரக்குடில்களில் எத்தனையோ இணைகள் – நீலனும் நீலிகளும் – காதலித்திருப்பார்கள்.

நாகரிக வளர்ச்சியின் மேம்பட்ட நிலைகளை எட்டிவிட்ட நாம், காட்டு வாழ்வை விட்டுப் பெருந்தொலைவு விலகி வந்துவிட்ட நாம் மீண்டும் கானகத் தேனிலவை ஏன் விரும்புகிறோம்? மனத்தின் ஆழத்தில் அந்தத் தேடல் ஏன் இருக்கிறது? ”எத்தனைதான் மனிதன் எல்லா விஷயங்களையும் நாகரிகப் படுத்திக்கொண்டு விட்டாலும் காமம் என்பதை அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதில் அவன் தனது நாகரிகத்தைக் கழற்றிவிடுகிறான். உணவைக்கூட அவன் நாகரிகப்படுத்திவிட்டான். ஆனால் காமம் இன்னமும் பச்சையாகவே இருக்கிறது. அதை அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதுவே அவனில் இன்னமும் இயற்கையின் அம்சமாக இருக்கிறது. அதையும் செயற்கையாக்கி விடுவான் எனில் பிறகு அவனில் மனிதம் இருக்காது” என்று ஓஷோ தந்த விளக்கத்தை நினைவு கூர்ந்தேன்.

ஆனால், அவர் சொன்னபடி அல்லாது, உள்ளுணர்வால் தனது ஒற்றை இயற்கையம்சத்தை மனிதன் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறான் என்பதையும், அதனைத் தக்கவைத்துக்கொள்ளவும் முடிந்த வழிகளில் மீட்டெடுத்து அனுபவிக்கவும் விரும்புகிறான் என்பதையுமே பெருகி வரும் சூழுலா மையங்களின் மீதான ஈடுபாடு காட்டுகின்றது. தனது வீட்டையேகூட காட்டின் பாவனை கொள்ளச்செய்யும் ’கலை’யை அவன் வளர்த்து வருகிறான். வீட்டுக்குள் மலையருவிகள் போன்று மாதிரிகள் வைத்தல், அது முடியாவிடில் அருவி கொட்டும் பெருங்காட்டின் சுவர்ப்படம் ஒட்டுதல், காட்டில் கேட்கும் ஓசைகளை ’லோன்ஜ்’ இசையாய்க் கசிய விடுதல், காட்டுப்பூக்களின் புற்களின் நறுமணத்தை அறையில் இழையவிடுதல் போன்ற ‘நாகரிக’ப் பிரயத்தனங்கள்.

இச்சிந்தனைகள் எனது இனத்தொன்மையின், எனது வேரின் நினைவைக் கிளர்த்துகின்றன. தொல்தமிழர் வாழ்வு என்பது காடுகளுடன் இயைந்ததாக இருந்திருக்க வேண்டும். ஐந்திணைப் பாகுபாட்டில் கூடலும் கூடல் நிமித்தமும் குறிஞ்சித் திணையாகக் காட்டப்பட்டது. திரியா நிலவகை நான்கிலும் உள்ள மாந்தரிடம் காதலும் கலவியும் இருந்திருக்கும் எனினும் குறிஞ்சியே அவர்களின் அகம் வரித்த உள்நிலமாக இருந்தது. மேலும், களவு மற்றும் கற்பெனப் பிரிக்கப்பட்ட அகத்திணையில் களவு வாழ்வில் காதலரின் புணர்தல் என்பது காட்டினுள் நிகழ்ந்தது. தமிழரிடம் மட்டுமன்று, உலகின் தொல் வாழ்வியல் எங்கிருந்தாலும் அதில் இத்தகு நிகழ்வுகளைக் காணலாம். எனவே இன்று ’நாகரிக’ வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கும் உலக மக்கள் அனைவரின் மரபணுக்களின் நினைவிலும் கானகக் காதலாடலின் பதிவுகள் இருக்கத்தான் செய்யும்.

காடும் மரக்குடிலும் என் சிந்தனையை ஆதம்-ஹவ்வா தொன்மச் செய்திக்கு இட்டுச் செல்கிறது. நமது நாகரிக வளர்ச்சிக்கு இயையவே சொர்க்கத்தின் வருணனைப் பரிணாமமும் சொல்லப்பட்டுள்ளதாகப் படுகிறது. ஆதம் என்னும் முதல் ஆணும் அவரின் ஜோடியாக ஹவ்வா என்னும் முதல் பெண்ணும் படைக்கப்பட்டு அவர்கள் சொர்க்கத்தில் இருந்ததாக வரும் பதிவுகளில் மாட மாளிகைகளைக் காணவில்லை. அவர்கள் மரச்செறிவுகளும் நீரோடைகளும் கொண்டதாக வருணிக்கப்படும் சொர்க்கத்திலேயே இருந்திருக்கிறார்கள். அதனைக் காடு எனல் தகும்.

ஆனால் விசுவாசிகளுக்கு நபிகள் நாயகம் நன்மாராயம் உரைத்த சொர்க்கத்தில் முத்தும் பவழமும் வைரமும் இன்ன பிற ரத்தினங்களும் தங்கமும் வெள்ளியும் அலங்கரித்தும் இழைத்தும் கட்டப்படுகின்ற மாடமாளிகைகளைக் காண்கிறோம். விசுவாசிகளுக்கு மகிழ்ச்சியூட்டவும் உற்சாகப்படுத்தவுமாக இத்தகு வாக்குறுதிகளை இறைவனும் அவனின் தூதரும் தருகிறார்கள் என்று விளக்கமுண்டு. ஆனால், எனது தனிப்பட்ட ரசனையில் நான் ஒருபோதும் இத்தகைய வாக்குறுதிகளால் மகிழ்ச்சியோ உற்சாகமோ அடைந்ததில்லை. என்ன செய்வது? ஒருவேளை இவையெல்லாம் வெகுஜன ரசனைக்கு ஏற்ப சொல்லப்படுவன என்றே நான் புரிந்துகொள்கிறேன். அத்தகைய சொர்க்க வருணனைகளைப் பள்ளிவாசலில் நடைபெறும் பிரசங்கங்களில் எவரேனும் பேசும்போது கேட்போர்களின் இதழ்களில் மலரும் பூரித்த குறுஞ்சிரிப்பில் நான் பங்கேற்றதில்லை. மாறாக அத்தகு காட்சிகளி ஒருவித ஒவ்வாமையை என்னில் தூண்டியிருக்கின்றன. முஹம்மத் என்னும் திருநாமத்திற்கு என் உயிரே அர்ப்பணமாவதில் அர்த்தமுண்டு. ஆனால் இத்தகைய பொன் மாளிகை வருணிப்புக்களில் நான் மனம் சொக்கிப்போவேன் எனில் இறைவன் எனக்கு அருளியிருக்கும் ரசனைக்கு நான் நன்றி பாராட்டியவன் ஆக முடியாது. எனவே, அபூபக்கர் உமர் உஸ்மான் அலீ முதலிய பெருந்தோழர்களின் விசயத்தில் அறிவிக்கப்பட்ட இத்தகு நற்செய்திகளும்கூட அவர்களை முன்னிறுத்தி வெகுஜனத்திற்கு உரைக்கப்பட்டவையே அன்றி நபியோ அல்லது அவரின் அணுக்கத் தோழர்களோ அத்தகைய ரசனை கொண்டவர்கள் அல்ல என்பதே எனது புரிதல்.


ஆதமும் ஹவ்வாவும் உலவிய காடாகிய சொர்க்கமே எனது ரசனைக்கு எற்புடையதாகும். ஒருவேளை அது காடாக அல்லாது தோட்டமாகத்தான் இருக்க வேண்டும் எனில் ’திருத்தப்பட்ட’, முகலாய அல்லது ஆங்கிலேய ’சித்திரச் சோலைகளாக’ இல்லாமல், காட்டின் ஆன்மாவைத் துலக்கிக் காட்டும்படி அமைந்த ஜென் தோட்டங்களாக – ஜென்னத்களாக – இருக்கும் என்றே கருதுகிறேன். இங்கே இப்போதும்கூட மனிதன் கட்டியிருக்கும் மகத்தான பிரம்மாண்டமான கட்டடங்கள் என்று காட்டப்படும் எதனையும் நான் வியந்து பார்த்தது கிடையாது. சுவரோரம் முளைத்து வரும் புல்லின் ஓர் இதழ் என் இதயத்திற்குத் தரும் ஆனந்தம்கூட அவற்றில் ஒருபோதும் கிடைத்தது இல்லை. 


4 comments:

  1. யசோதையின் கேள்விக்கு புத்தனால் பதிலளிக்கமுடியாமல் போனதாக ஓஷோ சொல்வது வேடிக்கையானது.
    யசோதையின் “நீங்கள் அடைந்த ஞானம் எங்கும் இருக்கிறது எனில் இந்த அரண்மனையில் அது இல்லையா? இங்கே இருந்தபடிக்கே அதை அடைந்திருக்க முடியாதா?” என்கிற கேள்விக்கு புத்தன் பதில் அளித்திருந்தாலும் அது யசோதைக்கு புரிந்திருக்கப் போவதில்லை; புரிந்திருந்தாலும் ஏற்றுக்கொண்டிருக்கப் போவதில்லை என்பதை அறிந்திருந்ததால் புத்தன் யசோதையின் கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை என்பதே புத்தனைப் பற்றிய; அவன் அடைந்த ஞானத்தைப் பற்றிய சரியான புரிதலாக இருக்க முடியும். அந்தச் சரியான புரிதல் ஓஷோக்கு இல்லை போலும்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. புத்தன்:
    நான் அடைந்த ஞானம் இந்த அரண்மனையிலும் இருக்கிறது என்றாலும் இந்த அரண்மனையின் ஆரவாரங்கள் அந்த ஞானத்தைப் பெற என்னை அனுமதித்து இருக்காது. வெடிச்சத்தத்திற்கு மத்தியில் தரையில் விழும் குண்டூசி சத்தத்தை எப்படிக் கேட்க முடியும்? இங்கே வெடி வெடிப்பதும், குண்டூசி விழுவதும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது. குண்டூசி விழும் சத்தத்தை வெடிச்சத்தம் இல்லாத இடத்தில் கேட்டுப் பழகிக்கொண்டதால் இப்போது இந்த வெடிச்சத்தத்திலும் என்னால் குண்டூசி விழும் சத்தத்தையும் கேட்க முடிகிறது. ஆகவே குண்டூசி சத்தம் (நான் அடைந்த ஞானம்) எங்குமிருக்கிறது என்று என்னால் இப்போது சொல்ல முடிகிறது.

    யசோதா:
    போய்யா லூசு ....

    புத்தன்:
    ஹா...ஹா..ஹா ..ஐ லவ் யூ ஹனி

    ReplyDelete
  4. "இங்கே இப்போதும்கூட மனிதன் கட்டியிருக்கும் மகத்தான பிரம்மாண்டமான கட்டடங்கள் என்று காட்டப்படும் எதனையும் நான் வியந்து பார்த்தது கிடையாது. சுவரோரம் முளைத்து வரும் புல்லின் ஓர் இதழ் என் இதயத்திற்குத் தரும் ஆனந்தம்கூட அவற்றில் ஒருபோதும் கிடைத்தது இல்லை. "

    = Sufi Tonic

    ReplyDelete