இப்போதுதானொரு
சுற்றுலாத் தலமாய்
உருவாகி வருகிறதாம் இவ்விடம்
யாமும்
பதினைந்து பேர்
மலையேறி வந்தடைந்தோம்
பசிய
புற்கள் போர்த்தியதான
நெடுங்குன்றங்கள்
இரண்டரை
கி.மீ வரை
அழித்தழித்து
இடப்பட்டுவரும்
சாலையில்
யானை
போல் அசைந்தேகிற்று
ஐம்பது ரூபாய் கட்டணத்தில் எம் வேன்
அங்கிருந்து
செங்குத்தான
பெருஞ்சரிவு
“வாகமன்
வ்யூ பாய்ண்ட்” என்று
காலத்திற்கேற்ற பெயர் சூட்டியுள்ளார்கள்
அப்பால்
பச்சை
நிறம் மெல்ல மாறி
நீலமாய்த்
தோன்றும்
மலையடுக்குகள்
அழுக்குகள்
அழியும் இத்தகு
வ்யூ
பாய்ண்டிலும்
அவரவரின்
பாய்ண்ட் ஆஃப் வ்யூ
எஞ்சியிருக்கத்தான் செய்யுமோ?
இப்போது
அவ்விடம்
எவர்
கையின் உடைமை?
என்னென்ன
கட்டப் போகிறார்?
விடுதிகளா?
கடைகளா? காட்சியகங்களா?
எத்தனைக்
கோடி மூதலீடு வைத்தார்?
(இறைவா!)
அவ்விடத்தின்
ஆக உயரமான முகட்டில்
தேங்கி
நின்றது மாந்தர் திரள்
நட்ட
கம்பில் கட்டியதோர் துணிக்குழல்
பதாகை
போல் பறந்திருந்தது அங்கே
அவ்விடம்தான்
பாரா-க்ளைடிங் தளம் என்றனர்
ஆயிரம்
ரூபாய் என்பதால்
ஒருவரும்
இசையாத மானுடத்திற்கு
ஒரு சுற்றுப்
பறந்து வந்து
வேடிக்கை காட்டினார் வல்லுநர்
பறத்தலின்
பரவசம் ஏதுமில்லா
அந்தக்
கூலிப்பறவையைத்
தத்தமது
செல்பேசிகளில் பிடித்துக்கொண்டு
நடை தொடர்ந்தனர் கேளிர்
யாம்
அங்கு வருதற்கென
மலையைக்
காயம் செய்து
பாறைகளை
நொறுக்கிப் போடப்படும்
அப்பாதையின்
காட்சி
பெருவலியாய் உறுத்திற்று நெஞ்சில்
இது சரியல்லடீ
என்றேன்
என்னவென்று கேட்டாள் என்னவள்
மலைக்காடுகள்
அப்படியே இருக்கவேண்டும்
அதன்
காதலர் மட்டுமே அங்கு வருவார்
என்று
கிசுகிசுத்தேன் அவளிடம்,
ஆன்மாவின்
பித்தேறிச் சுடரும்
என் பாய்ண்ட் ஆஃப் வ்யூ
சுற்றுலாவுக்கென்றே
வந்திருப்போர்
தமக்கு
இங்கே நிகழ்வதறியார்
இவ்விடமொரு
புனிதத் தலம் என்பதறியார்
தாம் யாத்ரீகர் ஆகியிருப்பதும் அறியார்
இறைவா!
நீ நிறைந்தொளிரவும்
நினைத்
தொழும் இவ்விடத்தில்
ஆலயங்களேதும் உண்டாகாதிருக்கட்டும்
No comments:
Post a Comment