Tuesday, May 16, 2017

சக்கரம்

Image result for girl in chakra

அந்தி அண்மித்த மாலைப்பொழுது
என்னவளின் பிறந்தகத்தில் இங்கே
விரிவானம் நோக்கிய மொட்டை மாடியில்
காற்று வெளியிடை தனித்திருந்தேன்

(தியானிக்கின்றேனாம்
கவி ஆகையால் கற்பனை செய்கிறேனாம்
வெறுங்கவி அல்ல பேராசிரியரும் கூட
(எனவே, கவியாய் இருப்பது பெரும்பிழையன்று)
அதனால் சிந்திக்கின்றேனாம்
என்னைப் பற்றிய அவர்களின் சித்தாந்தம்
இருக்கட்டுமே
வற்றாக் கருணையின் அரவணைப்பாய்
தட்டில் இனிப்பும் பலகாரமும்
ஏலம் மணக்க நாவில் ஒட்டும் தேநீரும்
வந்துவிடும் எப்போதும்.)

ஊரையே சுற்றி வளைத்ததாக
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மடிப்புக்கள்
நீல நிறம் கொண்டென் விழியும் நெஞ்சும்
குளுமை செய்தனவாய் நிறைந்திருந்தன

அண்மையில் படித்த நூற்கள் சுமந்து
ஓடும் திருஷ்ணையில் மிதந்தும் அமிழ்ந்தும்
அவ்வப்போது கரையேறி நின்றும்
குளிரில் தேகம் வெடவெடப்பது போல்
இறைநாமம் செபித்தும்
மார்ஜார தியானத்தில் மனமிருந்தது

ஓடக்கரைத் தெருமுனையில்
கிளிப்பச்சை வண்ணம் தீட்டியிருக்கும்
அவ்லியா பீடத்தில் வளர்ந்து நிற்கும்
தனித்த பூவரசின் கோலமொரு குறியீடாய்க்
கண்டு அதில் நின்றது பார்வை

வந்தார்கள் படையெடுத்து
தீராத விளையாட்டின் பிள்ளைகள்
அடியேனின் மரபணுச் சித்திரங்கள் இரண்டு
அவர்களின் மச்சிகள் தம்பிகள் தங்கைகள்

ஆகச் சிறியளாம் வாண்டு ஒருத்தி
என் கையால் இருமுழ உசரமிருப்பாளை
அச்சாணி ஆக்கியொரு அனிச்ச சக்கரம்
உருவாகிற்றங்கே

இம்மென்றால் வனவாசம்
ஏனென்றால் சிறைவாசம்
தனக்கே விதித்துக்கொண்டு
நிமிடத்திற்கொருமுறை
மூலையில் அமர்ந்துவிடுவாள்

சிற்சில மயிலிறகு பெய்தாலே
முறியும் அச்சாக இருந்தது அவள் மனம்

விளையாட்டுச் சக்கரம் சுழலுவான் வேண்டி
ஆரங்கள் எல்லாம் அவள் வயின் சாய்ந்து
சாமங்கள் சொல்லிச் சாமரம் வீசி
குறுநகையுறுத்தி எழுப்பி
அவள் விதிக்கும் விசித்திர நியதிகள் கேட்டுத்
தொடர்ந்தது அவர்களின் விளையாட்டு

யானைக்குட்டிகள் போன்ற
நெகிழிநீர்த் தொட்டிகள் இரண்டும்
காரைச்சுவர் கொண்ட பழையது ஒன்றும்
கீழிருக்கும் சயன அறையின்
மேற்தள மேடுமாக
இத்தனையே வசதிக்குள்
எத்தனை லாவகமாய் ஒளிந்துகொள்கிறார்கள்!
எப்படியெல்லாம் கண்டடைகிறார்கள்!

ஒருவருக்குள் மீண்டும் மீண்டும் அவரைக்
கண்டடைய முடிவதுதான்
வாழ்வின் தலையான அர்த்தமோ?
உறவுகளின் உன்னதமோ?

விசாரங்களில் நொண்டியடிக்கும் மனம்
எட்டிப் பிடிக்க முடியாத தூரத்திற்கு
அதற்குள் 
சுழன்று போயிருந்தது
ஆகச் சின்னஞ் சிறியள் ஒருத்தியை
அச்சாகக் கொண்டு உருவான சக்கரம்




(இடம்: கம்பம், தேனி மாவட்டம்)
(திருஷ்ணை: எண்ணங்களின் தொடரோட்டம், சித்த விருத்தி. இதனை நிறுத்தி வைப்பது யோகம்; மார்ஜாரம்: பூனை)


No comments:

Post a Comment