sacred valley of Tuwa at mount Tur Sinai
எகிப்தின் மன்னனிடம் மூசா நபியை அனுப்பும்போது இறைவன்
அவரிடம் இரண்டு அற்புதங்களைத் தந்து அனுப்புகிறான். ஒன்று, அவரின் கைத்தடி பாம்பாக
மாறுவது. மற்றொன்று, மூசா நபியின் கை வெண்மையாகப் பிரகாசித்தல். அதனைக் குர்ஆன் இப்படிக்
கூறுகிறது: ”மேலும், உம் கரத்தைக் கக்கத்தில் வைத்தெடுக்கவும்; அது மாசற்ற வெண்மையாய்
வெளிப்படும். (இது) இன்னொரு சான்றாகும்” (குர்ஆன் – 20:22).
கைத்தடி மற்றும் கை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியதன்
மூலம் அவை சார்ந்த இரண்டு அற்புதங்களையும் தான் மூசாவுக்குத் தரப்போவதை இவ்வுரையாடலின்
ஆரம்பத்திலேயே இறைவன் சூசகமாகச் சுட்டிக்காட்டிவிட்டான்: ”மூசாவே! நின் வலது கையில்
இருப்பதென்ன?” (வ மா தில்க பியமீனி(க்)க யா
மூசா – குர்ஆன்:20:17). எனவே ”வெண் கை” (யதுல் பைளாஃ) என்னும் அற்புதம் காட்டியது
மூசா நபியின் வலதுகரமே.
மூசா நபி அவர்களின் கை இறைத் திருநாமத்தின் கருவியாக
இருக்கும் சிறப்பு நிலையைக் குறிக்கவே அங்ஙனம் வெண்மையாக மாறிற்று எனலாம். அதாவது,
உயிரூட்டுதற்கான திருநாமம் “முஹ்யி” என்பதாக இருப்பதைப் போன்றே அந்த உயிரை மீட்டு எடுத்துக்கொள்வதற்கான
திருநாமம் “முமீத்” (மரணமளிப்போன்) என்பதாகும். முஹ்யி என்னும் திருநாமத்தின் வெளிப்பாடு
கழியைப் பாம்பாக்குவதில் செயல்படுகிறது எனில், முமீத் என்னும் திருநாமம் பாம்பை மீண்டும்
கழியாக்குவதில் செயல்படுகிறது. மூசா நபி கழியைக் கீழே போட்டவுடன் அவர்களின் தொடர்பின்றியே
அதனை இறைவன் பாம்பாக்கினான். ஆனால் பாம்பு கழியாவதற்கு அவர்களின் கை அதனைத் தொட வேண்டும்
என்றான். துவா வெளியில் அந்நிகழ்வின் முன்னோட்டத்தில் அவர்களின் கை பார்ப்பதற்குச்
சாதாரணமாகத்தான் இருக்கிறது. எனினும் அது அந்தரங்கத்தி இறைவனின் திருநாமத்தின் கருவியாக
இருக்கும் நிலையை வெளிப்படுத்திக்காட்ட அதனை மாசற்ற வெண்மையாகப் பிரகாசிக்கச் செய்தான்.
அந்தக் கை முமீத் என்னும் திருநாமத்தின் கருவியாக இருந்து தொட்டவுடன் உயீர் மீட்டுக்கொள்ளப்பட்டு
மேலும் அது பழைய நிலைக்குக் கைத்தடியாகவே ஆக்கப்பட்டது.
மூசா நபியின் வலது கையில் ”முமீத்” என்னும் திருநாமம்
இயங்குவதற்கான முன்னோட்டம் அதற்கு வெகு காலத்திற்கு முன்பே அவரில் நிகழ்ந்திருக்கிறது.
அதில், தன் இனத்தவர் ஒருவருடன் சண்டை போட்டுக்கொண்டிருந்த ஓரு எதிரியை மூசா நபி குத்தினார்கள்.
அதில் அவன் மரணித்துவிட்டான். அவர்களின் குத்து எந்த வேகத்தில் இருந்திருக்கும்? அந்த
வேகத்தைத் தொனிப்பது போல் அந்நிகழ்வை அல்லாஹ் துரிதமாகச் சொல்கிறான்: “மூசா அவனைக்
குத்தினார்; அவனை முடித்துவிட்டார்!” (ஃபகஸஹு மூசா ஃபகளா அலைஹி – 28:15). (இந்த வசனத்தின்
தொடர்ச்சியை வைத்து இங்கே பேசப்படும் கருத்துக்கு முரணான ஐயப்பாடுகள் எழக்கூடும். அவற்றைத்
தனியே ”மூசாவின் குத்து” என்னும் கட்டுரையில் பின்னர் பேசுகிறேன், இன்-ஷா-அல்லாஹ்)
முமீத் என்னும் திருநாமத்தின் செயல்பாடு பாம்பின் உயிரைப்
பறித்த பின் அது செத்த பாம்பாகவே அன்றோ கிடக்க வேண்டும்? அது எப்படி கைத்தடியாக மாறுகிறது.
ஃகாலிக் முஸவ்விர் முஹ்யி ஆகிய முத்திருநாமங்கள் ஏகநேரத்தில் கைத்தடி மீதியங்கி அதனைப்
பாம்பாக மாற்றியது போல் இங்கே முமீத் ஃகாலிக் முஸவ்விர் ஆகிய முத்திருநாமங்கள் ஏகநேரத்தில்
இயங்கிப் பாம்பினை மீண்டும் கைத்தடி ஆக்குகின்றன. எனவே மூசா நபியின் கை பற்றிய உடனேயே
அது நடந்துவிடுகிறது.
அத்திருநாமங்கள் ஏன் ஏக நேரத்தில் இயங்க வேண்டும்? இதில்
திருநாமங்கள் பற்றியதொரு ஞானம் இருக்கிறது. அதாவது இறைவனின் திருநாமங்கள் அவனது உள்ளமையில்,
சுயத்தில் இவ்விடம் அவ்விடம் என்னும் குறிப்பின்றி அனைத்துத் திருநாமங்களும் நீக்கமற
முழுதும் நிரைந்திருக்கின்றன. மனிதவுடலில் கண்ணில் மட்டும் பார்வை, காதில் மட்டும்
கேள்வி, நாவில் மட்டும் பேச்சு என்பதைப் போல் அல்ல அவனது திருநாமங்களும் பண்புகளும்.
எனவே அவை ஏககாலத்தில் ஒரே புள்ளியில் வெளியாக முடியும்.
மனித அல்லது பறவையின் உடலமைப்பினைக் களிமண்ணில் செய்யும்போது
அதனைச் சதையுடலாக மாற்ற வேண்டி உயிரூட்டுதல் என்னும் நிகழ்வு அவசியமாகிறது. ஆதம் நபியின்
விஷயத்தில் அல்லாஹ்வே அதனைச் செய்தான். தனது முஹ்யி என்னும் திருநாமத்தை அதன் மேல்
இயங்க வைத்து உயிரூட்டினான். அந்நிகழ்வு அவன் தனது ஆவியிலிருந்து ஊதியதாக இருந்தது.
ஏசுநாதர் பறவை வடிவங்களைக் களிமண்ணில் செய்த நிகழ்வில் அத்திருநாமம் அவர்களின் மூச்சு
ஊதலைக் கருவியாக எடுத்துக் கொண்டது. ஏசுநாதர் இறந்துபோன ஒருவனை உயிருடனெழுப்பிய அற்புதத்தில்
அவர்களே “முஹ்யி” என்னும் திருநாமத்தின் கருவியாக ஆக்கிக்கொள்ளப்பட்டார்கள். அது இறைவனின்
அனுமதி அல்லது உத்தரவின் பேரில் நிகழ்ந்தது. எனவே அவனிட்ட ஆணைக்கு உடனுதவி செய்வது
அவனின் பொறுப்பு என்னும் நிலையில் அவனது திருநாமம் இயங்கி உயிரூட்டிற்று.
இறைவனின் மூலப்படிவத்தில் எந்தெந்த படைப்பினத்தின் மீது
அவனது முஹ்யி என்னும் திருநாமம் இயங்க வேண்டும் என்பதாக அவனது ஞானத்தின் பொது நியதி
உள்ளதோ அந்தந்த படைப்பினத்தின் உருவங்கள் அவனது உயிரூட்டத்தைத் தேடுவதாகவே இருக்கும்.
இதில்தான் உயிரின உருவங்களை மண் / கல் அல்லது உலோகம் கொண்டு சிலை வடிப்பதை அல்லது அவற்றின்
ஓவியங்கள் வரையப்படுவதை இஸ்லாம் தடுத்து வைத்திருப்பதற்கும் ஆனால் அதே மூலப்பொருட்களைக்
கொண்டு பாத்திரங்கள் கட்டடங்கள் போன்ற பொருட்கள் செய்யப்படுதற்கு அனுமதி இருப்பதற்குமான
விளக்கம் இருக்கிறது.
ஒரு ஓவியன் அல்லது சிற்பி தனது கலைப் படைப்பிற்கான உருவத்தை
எங்கிருந்து எடுக்கிறான்? அது ஏற்கனவே உள்ள ஒருவரை மாதிரியாக வைத்து உருவாகும் ஓவியமாக
/ சிலையாக இருக்கலாம். உதாரணமாக, லியோனார்டோ டாவின்சி வரைந்த புகழ்பெற்ற ஓவியமான மோனா
லிசா என்பது லிசா கெரார்தினி என்னும் பெண்ணை மாதிரியாக வைத்து வரையப்பட்டதாகும். இன்னொரு
சாத்தியம் என்னவெனில், ஒரு கலைஞன் தனது கற்பனையில் கண்டெடுத்த உருவமாக அது இருக்கலாம்.
ஆனால் கற்பனைப் புலன் என்பது ஏற்கனவே முன் கண்ட உருவங்களின் பதிவுகளின்றிப் புத்தம்
புதிதாக ஓர் உயிரின உருவத்தைச் சிந்திக்குமா? என்னும் கேள்வி எழுகிறது. (ஏற்கனவே பதிந்திருக்கும்
சிருஷ்டிகளின் உருவங்களில், வெவேறு சிருஷ்டிகளின் உருவக்கூறுகளைத் தெரிவு செய்து ஒன்றிணைத்து,
சர்ரியலிச ஓவிய பாணியில் போல், ஒரு ‘புதிய’ உயிரினம் போல் காட்டினாலும் அது உண்மையில்
புதிய உயிரினவுருவம் அல்ல என்பது விளங்கும்.)
எப்படியோ, ஒருவன் வரையும் அல்லது செதுக்கும் ஓவிய /
சிலை ரூபம் என்பது எங்கிருந்து வருகிறது? ஒரு குழந்தை பிறக்கிறது, வளர்கிறது. அதன்
உருவத்தை அமைத்து மெல்ல மெல்ல மாற்றிப் பருவந்தோரும் ஒவ்வொரு விதத்தில் காணும் உருவைக்
கொடுப்பது யார்? அது யாருடைய உருவப் படைப்பு? அந்த உருவங்கள் எங்கிருந்து வந்தன அல்லது
வருகின்றன? அவை இறைவனின் ஞானத்தில் இருக்கின்றன. அல்-முஸவ்விர் என்னும் திருநாமத்தின்
இயக்கம் அவற்றை வெளிப்படுத்துகிறது. இறைஞானத்தின் பொது நியதிப்படி அதில் உயிரூட்டம்
எந்த அளவு இருக்கவேண்டும் என்று கண்டதோ அந்த உயிரளிப்பை முஹ்யி என்னும் திருநாமத்தின்
இயக்கம் தருகிறது. ஓர் ஓவியன் அல்லது சிற்பி ஓர் உருவப்படைப்பைச் செய்யும்போது அவ்வுரு
இறைஞானப் படிவத்திலிருந்தே வருகின்றது! அந்த உருவம் ”உயிரினம்” (மனிதன், விலங்கு) என்பதன்
உருவமாக இருக்கும் பட்சத்தில் அதில் உயிரூட்டப்படுதற்கான கோரிக்கை (இக்திழா) எழுகிறது.
அதற்கு உயிரூட்டுமாறு அதனை வரைந்த / செதுக்கிய கலைஞனை இறைவன் மறுமையில் நிர்ப்பந்திப்பது
அதனால்தான். ஆனால் அக்கலைஞனுக்கு முஹ்யி என்னும் திருநாமத்தின் ஒத்துழைப்புக் கிட்டாது.
ஏனெனில் அவனின் ஓவிய / சிற்பப் படைப்புச் செயல் என்பது இறைவனின் அனுமதி பெற்ற ஒன்றல்ல.
எனவே வரம்பு மீறியமைக்கான தண்டனையை அவன் பெறுவான்.
ஓவியம் அல்லது சிற்பத்தில் உருவங்கள் தமக்குரிய உயிரூட்டத்தைக்
கோரும் என்பதை நம் உயிரின் மீது அவை உண்டாக்கும் அதிர்விலிருந்தே உணரலாம். ஒரு வீடு
அல்லது நிலக்காட்சியின் ஓவியத்தை (still life or landscape painting)ப் பார்ப்பதற்கும்
ஒரு பறவை அல்லது விலங்கு அல்லது மனித உருவத்தின் ஓவியத்தைப் பார்ப்பதற்கும் வேறுபாடு
இருக்கின்றது. உயிரினங்களின் ஓவியங்களை பார்வையாளனின் உபநினைவுத் தளம் சலனப்படுத்தியே
காணும். அவ்வுருவங்கள் உயிரூட்டத்திற்குரியவை என்னும் நியதி சிருஷ்டிப் பரப்பெங்கும்
ஆக அடிப்படையான ஒன்று. அந்த தெய்வீக விதிக்கு உட்பட்டே மனித நினைவுப்புலம் இயங்கும்.
அவனின் ஜாக்ரத் நினைவகம் அதனை மறுக்க விரும்பினாலும் எத்தனித்தாலும் அவனது உபநினைவுப்புலம்
(ஸ்வப்னம்) அதனைச் சலனமுறுத்திக்கொள்ளும். பிம்பங்களில் ஆக அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துவது
தன்னினத்தின் எதிர்ப்பாலின உருவமாகவே இருக்கும். ஏனெனில் இயற்கை நெறியில், ஆண்-பெண்
என்னும் இணையே சிருஷ்டிச் செயல்பாட்டின் கருவியாக உள்ளது. எனவே பெண்ணுருவம் போல் ஆணைச்
சலனமுறுத்தும் உருவம் பிறிதில்லை. அதுவே பெண்ணுக்கு ஆணுமாம்.
இப்படி நோக்க, உருவங்களை ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும்
படைக்கும் வினையில் ஈடுபடுமொரு கலைஞனை விடவும், இறைவனால் படைக்கப்பட்டு வடிவம் கொடுக்கப்பட்டு
(செவ்வை செய்யப்பட்டு) உயிரூட்டப்பட்ட, அவனது ரட்சிப்பால் (ருபூபிய்யத்) வளர்க்கப்பட்ட
பெண்ணைத் திருமணம் செய்து, இன்னொரு ஆன்மாவை அதற்கான உடலுடன் வெளிப்படுத்துதற்கான தாம்பத்யத்தில்
இயங்குகின்ற ஒருவன் மேலானவன் ஆவான். அதனாற்றான், ஓவியங்களையும் சிலைகளையும் மார்க்கத்தில்
தடை செய்த நபிகள் நாயகம் சொன்னார்கள், “திருமணம் எனது வழிமுறை. எனது வழிமுறையை எவன்
புறக்கணித்தானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்” (அந்நிக்காஹ் மின் சுன்ன(த்)தீ வ மன் ரகிப அன் சுன்ன(த்)தீ ஃபலைச மின்னீ).
இங்கே, இக்கட்டுரையின் தொடக்கத்தில் எடுத்துக்கொண்ட
பொருண்மைக்கே நான் திரும்புகிறேன். கருத்தைப் பொருளாக வெளிப்படுத்துவது இறைவனின் தன்மையாகும்.
அத்தன்மையை அவன் தனது படைப்பினங்களின் வழியே செயல்படுத்துவதுண்டு. அப்படைப்பினங்களில்
ஏனையவற்றினும் மனிதனிடமே மிகவும் அபரிதமாக அப்பண்பு வெளிப்படுகின்றது. எனவே அவன் “ஃகலீஃபத்துல்லாஹ்”
– இறைவனின் பிரதிநிதி எனப்படுகின்றான். (அல்லது இடவலமாக, மனிதன் இறைவனின் பிரதிநிதி
என்பதால் அவனுக்கு இத்தன்மை அபரிதமாக வழங்கப்பட்டுள்ளது.)
இங்கே ஒரு கேள்வி எழுகிறது. மனிதன் தனக்கு வழங்கப்பட்ட
தகுதியைத் தவறாகப் பயன்படுத்தினால்? (ஏனெனில், அவன் தவறிழைப்பதற்கான சாத்தியத்துடனேயே
படைக்கப்பட்டவன்.). அவன் வரம்புகளை மீறினால்?
ஆம், அவன் தவறிழைக்கிறான். அவனது சிந்தனையின் வெளிப்பாடாக
அமைந்த நாகரிகக் கூறுகள் அனைத்தும் இயற்கையைச் சுரண்டும் நாச வேலையாகக் குரூரம் கொள்வதைக்
காண்கிறோம். இதனைத் தடுத்து நிறுத்தித் தன்னைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டிய கடமை
மனிதனுக்குண்டு. அவனது படைப்பின் குரல் ஒருபோதும் ஆணவத்தின் குரலாக ஒலித்துவிடக் கூடாது.
அதற்குத்தானோ என்னவோ, கட்டடத் திறமையில் மனிதனை விட
விஞ்சியவையாக அல்லாஹ் சின்னஞ்சிறு பூச்சிகளை வைத்திருக்கிறான். உதாரணத்திற்கு, நாம்
முன்பு கண்ட கரையான். ஒரு கரையானின் அளவையும் அதன் புற்றின் அளவையும் ஒருபக்கமும் மனிதனின்
அளவையும் அவன் கட்டியுள்ள கட்டடங்களின் அளவையும் மறுபக்கமும் வைத்து அவற்றின் விகிதங்களை
ஒப்பிட்டுப் பார்த்தால் மனிதன் கரையானிடம் படுதோல்வி அடைவதைக் காணலாம். ”கரையான்களின்
அற்புதம்” (The Miracle of the Termites) என்னும் நூலில் ஹாரூன் யஹ்யா பின்வரும் மேற்கோளைச்
சுட்டிக்காட்டுகிறார்: “சராசரியான புற்றின் உயரத்தை ஒரு வேலைக்காரக் கரையானின் அளவுடன்
ஒப்பிட்டு அந்த விகிதத்தை ஐந்தரை அடி உயரமுள்ள மனித நிலைக்கு மாற்றி நோக்கின், அக்கரையான்
புற்று 960 மீட்டர் (1349 அடி) உயரமுள்ள விண்முட்டிக் கட்டடமாக – இப்போது உலகிலுள்ள
எந்தக் கட்டடத்தை விடவும் மிக உயரமானதாக - இருக்கும். உதாரணமாக, அது எகிப்தின் மகா
பிரமிடை விடவும் ஐந்து மடங்கு உயரமானது. கரையான் தனது புற்றினை மூன்றிலிருந்து நான்கு
ஆண்டுகளில் கட்டிவிடுவதைக் கருத, அது மனித உழைப்பில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நிகராகும்”
(எரிக் ஹாய்ட் மற்றும் பெட் ஷுல்ட்ஸ், “Insect Life”, ந்யூ யார்க், ஜான் வில்லி அண்ட்
சன்ஸ், 1999, பக்கம்.160)
இத்தருணத்தில், மனிதனுக்கும் இறைவனுக்குமான உரையாடலாக
அல்லாமா இக்பால் இயற்றிய பாரசீகக் கவிதை ஒன்று என நினைவுக்கு வருகிறது. அக்கவிதையுடன்
இக்கட்டுரைக்குத் திரையிடுகிறேன்.
”இறைவன் மனிதனிடம்
சொன்னான்:
’எங்கே நான் நீரும்
மண்ணும் கொண்டு
ஓர் உலகையே படைத்தேனோ
அங்கே ஈரான் துருக்கி
எகிப்தென்று
தேசங்களைப் படைத்துவிட்டாய்
நீ
புழுதியில் நான்
இரும்பின் மூலத் தாதைப்
படைத்தேன்
நீ வாளும் வேலும்
துப்பாக்கியும் படைத்தாய்
பெருமரம் வீழ்த்தும்
கோடரியைப் படைத்தாய்
பாடும் பறவைக்குச்
சிறையாகும்
கூண்டினைப் படைத்தாய்
நீ’
மனிதன் இறைவனிடம்
சொன்னான்:
‘நீ இரவைப் படைத்தாய்
நான் விளக்கைப் படைத்தேன்
நீ களிமண் படைத்தாய்
நான் கோப்பையைப் படைத்தேன்
பாலைவனமும் மலைமுகடும்
சமவெளியும் படைத்தாய்
நீ
மலர்வனமும் சோலைகளும்
தோட்டமும் படைத்தேன்
நான்
கல்லில் கண்ணாடி படைத்தவன்
நானே!
விஷத்தில் அமிர்தம்
கடைந்தவன் நானே!’”
No comments:
Post a Comment