அனைத்துப் படைப்புக்களும் இறைவனின் ஞானத்தில் இருந்தே
படைக்கப்பட்டுள்ளன. தனது அறிவில் கருத்துப் படிவங்களாய் உள்ள அவற்றை அவன் பொருட்களாக்குகிறான்.
இந்தத் தன்மையே ஃகாலிக் (படைப்பாளன்) என்னும் திருநாமத்தின் செயல்பாடு (function) என்று
நோக்க, பூமியில் அவனால் வைக்கப்பட்ட அவனது பிரதிநிதி (காண்க: குர்ஆன்: 2:30) ஆன மனிதனில்
அத்தன்மை மிகவும் உச்சமாகப் பிரதிபலிப்பதில் ஆச்சரியமேதும் இல்லை. இந்நிலையில்தான்
அவனும் “படைப்பாளன்” என்னும் பெயரை தஷ்பீஹ் – குறியீட்டு ஒப்பியல் நிலையில் பெறுகிறான்.
”அல்லாஹ் பெரும்பாக்கியமுடையவன்; படைப்பாளர்களுள் மிகச்
சிறந்தவன்” (ஃப-தபாரக்கல்லாஹு அஹ்சனுல் ஃகாலி(க்)கீன்
– குர்ஆன்: 23:14) என்று தனது திருநாமத்தில் பன்மையை (ஃகாலிக்கீன் – படைப்பாளர்கள்)
அவன் சுட்டியிருப்பதில் எதார்த்தப் படைப்பாளன் (ஃகாலிக்கே ஹகீகி) ஆகிய அவனைச் சார்ந்து
தஃலீக் (படைத்தல்) செய்கிற வேறு படைப்பாளர்கள் யாவர்? யாருக்குத் தனது திருநாமத்தை
– அது பொதுமைத் திருநாமம் (இஸ்மெ ஆம்மஹ்) என்னும் அடிப்படையில் – இறைவன் சூட்டிப் பேசுகிறான்?
எந்தெந்த உயிரினங்களின் அறிவில் தனது கருத்தினை வைத்து அது உருவாகி வருவதற்கு அவற்றைச்
செயல்பட வைக்கிறானோ அந்த உயிரினங்கள் எல்லாம் இந்த “ஃகாலிக்கீன்” (படைப்பாளர்கள்) என்னும்
அடைமொழியில் அடங்கும். (”அல்லாஹ்வே சிறந்த முறையில் படைக்கிறான் என்பதைத்தான் ’படைப்பாளர்களுள்
சிறந்தவன்’ என்று சொல்லப்பட்டுள்ளது, எனவே அவனை அன்றி வேறு படைப்பாளர்கள் இருப்பதாக
எண்ணக்கூடாது” என்று சிலர் விளக்கம் தருகிறார்கள். ”அவனை அன்றி சுயமாகப் படைப்பவர்கள்
யாருமில்லை; சுயமாகப் படைப்பவன் அவன் ஒருவனே” என்னும் விளக்கத்தில் இப்படிச் சொன்னால்தான்
சரி. ஆனால், அவனைச் சார்ந்து படைத்தல் என்னும் நிலையில் அவனது கருவியாய் இயங்கும்
”வெளிப்படைப் படைப்பாளன்” (ஃகாலிக்கே மஜாஸி) என்னும் விளக்கத்துடன், புரிதலுடன் படைப்பளன்
என்னும் பெயரை அவனல்லாதவற்றில் எதற்கும் பயன்படுதுவதையும் அவ்வாறு பயன்படுத்தக் கூடாது
என்று இக்கூற்று மறுக்கும் எனில் இது வெறும் சமாளிப்பும் சப்பைக்கட்டுமான வாதமே அன்றி
வேறில்லை. அந்த வாதத்தில் குர்ஆனிய ஞான ஒளியே இல்லை.) ”அவனைச் சார்ந்து படைத்தல்” என்று
நாம் சொல்வதை குர்ஆனின் ஓர் திருவசனம் கொண்டே விளக்குகிறேன். இருவகையான படைத்தல் நிலைகளை
அந்தத் திருவசனம் தெள்ளத் தெளிவாகப் பிரித்து விளங்கிக்கொள்ளும் வாய்ப்பினை நமக்குத்
தருகிறது. ”படைத்தல்” (தஃலீக்) என்னும் வினையை, ஃகாலிக் (படைப்பாளன்) என்னும் பெயரை
அல்லாஹ் அல்லாதாருக்கு எந்நிலையிலும் பயன்படுத்த முடியவே முடியாது” என்னும் வாதம் குர்ஆனுக்கே
மாற்றமானது என்பதற்கு இத்திருவசனம் ஒரு பிரமாணமாக இருக்கிறது. இத்திருவசனத்தின் ஒளியில்
அத்தகைய அரைவேக்காட்டு வாதத்தை நாம் புறந்தள்ளுகிறோம்.
மறுமை நாளில் ஏசுவுடன் (நபி ஈசா (அலை)) அல்லாஹ் உரையாடுவதைச்
சுட்டும் திருவசனம் (குர்ஆன்:5:110) ஏசு நிகழ்த்திய பல அற்புதங்களைப் பட்டியலிடுகிறது.
அதில் இரண்டு பகுதிகள் பொதுவாக நாம் படைத்தல் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்திக் கொள்வதற்கு
பேருதவி செய்கின்றன. அவற்றுள் முதல் பகுதி இது: “என் உத்தரவின்படி களிமண்ணிலிருந்து
பறவையின் வடிவ மாதிரியை நீர் ’படைத்து’ அதில் நீர் ஊதியபோது என் உத்தரவுகொண்டு அது
பறவையாகிற்று” (வ இத் தஃக்லுகு மினத் தீனி கஹைஅதித் தைரி பிஇத்னீ ஃபதன்ஃபுஃகு ஃபீஹா ஃபதகூனு
தைரம் பிஇத்னீ – குர்ஆன்:5:110).
களிமண்ணிலிருந்து பறவை வடிவின் மாதிரியைச் ’செய்தல்’
என்பதை இங்கே அல்லாஹ் ’படைத்தல்’ என்றே சொல்ல்யிருக்கிறான். “தஃக்லுகு” என்னும் வினையின்
அடியாக அந்த வினையை ஆற்றிய “ஃகாலிக்” இங்கே யார் என்றால் நபி ஈசா (அலை) என்பதே இத்திருவசனம்
தரும் விடையாகிறது. எனினும் அவர் ஃகாலிக்கெ மஜாஸி (வெளிப்படையான படைப்பாளன்) என்றும்
அந்தப் பறவைகளின் மாதிரியை உண்டாக்கும் உதிப்பை அவரின் மனதில் பதித்து இயக்கிய எதார்த்தப்
படைப்பாளன் (ஃகாலிக்கே ஹகீகி) இறைவனே என்றும் நாம் விளங்குகிறோம். இதில் முன்னதை மறுத்தால்
குர்ஆனை மறுத்துரைத்த குஃப்ரு (நிராகரிப்பு) என்னும் நிலையும், பின்னதை மறுத்துரைத்தால்
இறைவனுக்கு ஏசுவை இணையாக்கிய ஷிர்க் என்னும் நிலையும் உண்டாகும். இரண்டையும் சமவயமாய்
ஏற்கும் போதுதான் தவ்ஹீது என்னும் ஏகத்துவம் ஸ்தாபிதமாகும்.
இப்பகுதியில் இன்னொரு முக்கியமான சொல் ஏசுநாதர் ஊதியதைக்
குறிக்கும் ”தன்ஃபுஃகு” என்பதாகும். அவர் எதை ஊதினார் என்பது இங்கே சொல்லப்படவே இல்லை.
அல்லது எதிலிருந்து ஊதினார் என்பது சொல்லப்படவில்லை. ஆனால் களிமண், படைத்தல், ஊதுதல்
ஆகிய மூன்று சொல்லாடல்களையும் குறிப்பிட்டு அல்லாஹ்வின் செயல்பாட்டைக் கூறும் திருவசனங்களில்
ஊதுதல் என்பதன் விவரிப்பு ஒன்று நமக்குக் கிடைக்கிறது:
”உம் ரட்சகன் வானவரிடம், ‘நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து
மனிதனைப் படைக்க இருக்கின்றேன்’ என்று கூறியபோது; ’நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது
ஆவியிலிருந்து அவருக்குள் ஊதியதும் விழுந்து அவருக்குச் சிரம் பணியுங்கள்’ (என்று கூறியபோது)”
(இத் கால றப்புக லில்மலாஇ(க்)க(த்)தி இன்னீ
ஃகாலி(க்)கு பஷரம் மின் த்தீனின், ஃபஇதா சவ்வய்த்துஹு ஃபநஃபஃக்து ஃபீஹி மிர்-ரூஹீ ஃபகஊ
லஹு சாஜிதீன் - குர்ஆன்:38:71-72)
ஏசு நாதர் பறவைகளின் மாதிரியைச் செய்ததைக் குறிப்பிடும்
வசனப்பகுதியும் இறைவன் மனிதனைப் படைத்ததைச் சொல்லும் இந்த வசனங்களும் களிமண், படைத்தல்,
ஊதுதல் ஆகிய மூன்று சொல்லாடல்களைக் கொண்டுள்ள நிலையில் ஒப்புநோக்க ஏதுவாகின்றன. ஏசுநாதர்
பறவைகளுக்குள் ஊதியதைச் சொல்லும்போது ’ஃபதன்ஃபகு ஃபீஹா’ – ’அதனுள் நீ ஊதியபோது’ என்று
மட்டுமே குறிப்பிடப்பட்டது. எதிலிருந்து ஊதினார், எதை ஊதினார் என்னும் விவரம் இல்லை.
ஆனால், இறைவன் மனிதனுக்குள் ஊதியதைச் சொல்லும் இத்திருவசனம் (38:72) ‘ஃபநஃபஃக்து ஃபீஹி
மிர்-ரூஹீ’ – ’அவருக்குள் எனது ஆவியிலிருந்து ஊதினேன்’ என்றுள்ளது. முந்தைய திருவசனத்தில்
சொல்லப்படாத மர்மத்திற்கான விளக்கத்தைப் பிந்தைய வசனத்தின் வார்த்தைகளே நமக்குத் தருகின்றன.
ஜீவ ஊற்று என்பது இறைவன் மட்டுமே. அவனிலிருந்தே அது வந்தடைய வேண்டும். ஏசுநாதர் ஊதினும்
அது இறைவனிலிருந்து அருளப்படவில்லை எனில் அந்தப் பறவைகள் உயிர் பெற்றுப் பறந்திருக்க
முடியாது. ஆனால் அவை பறவைகளாயின என்றே திருவசனம் சொல்கிறது.
இவ்விரு திருவசனங்களில், படைத்தல் என்பதும் உயிரூட்டல்
என்பதும் வேறு வேறு செயல்பாடுகளாகச் சொல்லப்பட்டிருப்பதை ஓர்க. ஏனெனில், இது மிகவும்
முக்கியமானதொரு வேறுபாடாகும்.
”மனிதனைக் களிமண்ணிலிருந்து படைப்பேன்” என்று சொல்லுமிடத்தில்
“இன்ஸான்” என்று சொல்லாது ”பஷர்” என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அது மனிதனின்
உடலையே குறித்து நிற்கிறது. அந்த உடலில் உயிரானது பிறகே ஊதப்படுகிறது. அதற்கு ”ஃகாலிக்”
என்பதுடன் இன்னொரு திருநாமத்தின் இயக்கமும் இணையவேண்டியிருக்கிறது. அதாவது, “அல்-முஹ்யி”
(ஜீவனளிப்பவன்). ஏனெனில், ”அவனே நித்திய ஜீவன்” (ஹுவல் ஹய்யுல் கய்யூம் – குர்ஆன்:2:255). இறைவனின் படைத்தல் என்னும் செயல்பாட்டையும்
மனிதனின் படைத்தல் என்னும் செயல்பாட்டினையும் இது வேறுபடுத்திக் காட்டுகிறது.
இறைவன் படைத்து உயிரூட்டுகிறான். மனிதன் படைத்தால் உயிரூட்ட
முடியாது. எனவேதான் ஏசுநாதர் களிமண்ணிலிருந்து பறவைகளின் உடல் மாதிரியை (ஹைஅத்) “படைத்தார்”
என்று சொல்லும்போதும், அவற்றுள் ஊதியதைச் சொல்லும்போதும் முக்கியமான இன்னொரு வார்த்தை
இணைக்கப்பட்டுள்ளது: “பிஇத்னீ” – ”எனது உத்தரவு / அனுமதி”. ஏனெனில் இறைவனை அன்றி உயிரளிப்போன்
(முஹ்யி) யாருமில்லை. அவனது உத்தரவு / அனுமதி இல்லாது செய்யப்படுகின்ற – குர் ஆனியச்
சொல்லாடலின்படிச் சொல்வதெனில் ‘படைக்கப்படுகின்ற’ – உயிரினத்தின் வடிவ மாதிரிகள், அதாவது
சிலைகள் விஷயத்தில் அவற்றுக்கு உயிரூட்டுமாறு அவற்றைப் ‘படைத்தவர்களை’ நோக்கி மறுமையில்
அல்லாஹ் கட்டளையிடுவான்; அது அவர்களால் முடியாமல் தண்டனை அடைவார்கள் என்று நபிமொழியில்
காண்கிறோம். இறைவனின் உத்தரவு அல்லது அனுமதி இன்றி சுயேச்சகையாக நிகழ்த்தப்பெறும் யாதொரு
காரியமும் (அமலும்) உயிர்ப்புள்ளதாக அமையாது. நமது வழிபாடுகள் கூட உயிர்ப்பின்றிப்
போவதற்கு நமது சுயேச்சை மிகைப்பதே காரணம். ஏனெனில் நாம் படைத்தல் என்பது எதார்த்தத்தில்
இறைவனின் படைத்தலாக இருக்கும் சத்தியத்தை நமது சுயேச்சை என்னும் திரையே மூடியுள்ளது.
நமது காரியங்கள் (அமல்கள்) அனைத்தின் நிலையும் இதுதான். ”நிச்சயமாக அல்லாஹ்வே உங்களையும்
உங்கள் செயல்களையும் படைத்தான்” (வல்லாஹு ஃகல(க்)ககும் வ மா தஃமலூன் – குர்ஆன்:
37:96). நம் செயல்கள் (அமல்கள்) அல்லாஹ்வால் படைக்கப்படுகின்றன என்பதே அவற்றின் எதார்த்தமாயுள்ள
நிலையை மறந்து நமது சுயேச்சையை முற்படுத்தும் மாயையே நமது செயல்களைச் சிலைகளாக்குகிறது.
இந்நிலையில் வழிபாடே சிலையாகிவிடுகிறது! அதற்கு உயீரூட்டும்படியான கட்டளையை நாம் ஒருபோதும்
நிறைவேற்ற முடியாது. எனவே, ”அவனன்றி ஓரணுவும் அசையாது” என்னும் நிலைக்கு அடியான் தன்னை
ஒப்படைத்து (இதனையே இஸ்லாம் என்னும் சொல் குறிக்கிறது) அவனின் உத்தரவுப்படி அசையும்போது
அவனின் செயல்பாடுகளில் ”முஹ்யி” என்னும் திருநாமத்தின் சுடர் வெளிப்பட்டு உயிர்ப்புள்ளதாகிறது.
ஏசுநாதர் பறவைகளைப் படைத்தார் என்று கூறுமிடத்தில் உள்ள ”பிஇத்னீ” என்னும் சொல் தரும்
விளக்கங்கள் இவை.
அத்தகைய உத்தரவு / அனுமதி என்பது அனைவருக்கும் ஒரே தராதரத்தில்
கிடைப்பதில்லை. வழிபாடுகளுக்கான உத்தரவு அல்லது
அனுமதி போன்றதல்ல இது. இறைத்தூதர்களின் “முஃஜிஸா” மற்றும் இறைநேசர்களின் ”கராமத்” ஆகிய
மீவியற்கை நிகழ்வுகளான அற்புதங்களுக்குரிய அனுமதி அல்லது உத்தரவு என்பது அவனின் திருப்பொருத்தத்தின்
(“ரிளா”/ “ரிள்வான்”) மேலான படித்தரங்களை நியதியாகக் கொண்டுள்ளது. அத்தகைய மீவியற்கை
நிகழ்வுகள் மனிதனை இறைவனின் பிரதிநிதியாக நிறுத்துவதில் உச்சபட்ச சாத்தியங்களை செயல்படுத்திக்
காடுபவை. இதற்கான ஓர் உதாரணத்தை மேற்சொன்ன திருவசனம் – ஏசுநாதரின் அற்புதங்களை விவரிக்கும்
திருவசனம் – நமக்குத் தருகிறது. ”படைத்தல் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்திக் கொள்வதற்கு
பேருதவி செய்யும்” இரண்டு பகுதிகள் என்று நான் முன்பு குறிப்பிட்டதன் இரண்டாம் பகுதி
அது. இதுவரை நாம் விவரித்து வந்த முதற்பகுதி ”ஃகாலிக்” என்னும் திருநாமத்தை மனிதனின்
மீது போர்த்திப் பார்க்கிறது. மனிதன் படைத்தாலும் அதற்கு அவன் உயிரூட்ட இயலாது என்னும்
படித்தரத்தைச் சுட்டுகிறது. இரண்டாம் பகுதி, அதைவிடவும் ஒரு படி மேலே செல்கிறது. ”முஹ்யி”
(உயிரளிப்பவன்) என்னும் தனது திருநாமத்தை இறைவன் தனது பிரதிநிதியான மனிதனின் மீது போர்த்திக்
காணும் படித்தரத்தை அது சுட்டுகிறது. அந்நிலையில் உயிரூட்டும் செயல் மனிதன் செய்வதாகக்
காட்டப்படுகிறது.
அவ்வசனப் பகுதி இது: ”என் உத்தரவுடன் இறந்தோரை நீ (உயிர்ப்பித்து)
வெளியாக்கிய போது” - (வ இத் துஃக்ரிஜுல் மவ்த்தா
பிஇத்னீ – குர்ஆன்:5:110). ஏசுநாதர் நிகழ்த்திய “இறந்தவனுக்கு உயிரூட்டிய” அற்புத
நிகழ்வு இது. இறந்தவனின் அந்த உடல் இறைவனால் “படைக்கப்”பட்டது. அதற்கு முன்பு இறைவனே
உயிரூட்டி வெளிப்படுத்தியிருந்தான். “முமீத்து” (மரணமளிப்போன்) என்னும் திருநாமத்தின்
இயக்கத்தால் அதனை அவனே பிணமாக்கினான். இப்போது அவனே தனது தூதரான ஏசுநாதரின் வழியே அதற்கு
உயிரூட்டுகிறான். எனினும் தனது திருநாமத்தைத் தனது கருவியின் மீது போர்த்தி அவரே அதனைச்
செய்ததாகக் குறிப்பிடுகிறான். (அல்லாஹ்வே கர்த்தன்; ஏசுநாதர் கருவி!).
இந்நிகழ்வில், ”ஹைஅத்” படைப்பின் உடலமைப்பு மாறவில்லை.
எனவே ஃகாலிக் என்னும் திருநாமத்தின் இயக்கம் இல்லை. ஆனால் முஹ்யி என்னும் திருநாமத்தின்
இயக்கமுள்ளது. இவ்விரு திருநாமங்களின் இயக்கமும் ஒருசேர நிகழ்த்தும் அற்புதமும் இருக்கிறது.
அது நபி மூசா (அலை) அவர்களின் வழியாக நிகழ்ந்தது. அவரின் கைத்தடி ஒரு பாம்பாக மாற்றப்பட்ட
அற்புதம் அது. எகிப்திய கொடுங்கோல் மன்னனான ஃபிர்-அவ்னின் அவையில் அந்த அற்புதத்தை
மூசா நபி நிகழ்த்திக்காட்டினார். அதற்கு முன் தூர் மலையடிவாரத்தில், புனித துவா சமவெளியில்
(”பில் வாதில் முகத்தஸி துவா” – குர்ஆன்:20:12) முன் நிகழ்வாக அந்த அற்புதத்தை இறைவன் அவருக்கு
நிகழ்த்திக்காட்டி வழங்கினான். அந்த நிகழ்வைத் திருக்குர்ஆன் பின்வருமாறு சொல்கிறது:
”(அல்லாஹ் சொன்னான்)
‘மூசாவே! நின் வலது
கையில் இருப்பதென்ன?’
(மூசா) சொன்னார்,
‘இஃதென் கைத்தடி.
அதில் நான் சாய்ந்துகொள்வேன்
அதுகொண்டு என் ஆடுகளுக்குத்
தழை பறிப்பேன்
அதிலெனக்கு மேலும்
பயன்களுண்டு’
(அல்லாஹ்) சொன்னான்,
‘மூசாவே! அதனைக் கீழே
போடுங்கள்’
அவர் அதனைக் கீழே
போட்டார்
அப்போது அது விரைந்து
நெளியும் பாம்பாயிற்று
(அல்லாஹ்) சொன்னான்,
‘அதனைப் பிடியும்,
அஞ்சற்க,
அஃது அதன் முந்தைய
நிலையிலாகும்;
மேலும், உம் கரத்தைக்
கக்கத்தில் வைத்தெடுக்கவும்
அது மாசற்ற வெண்மையாய்
வெளிப்படும்
(இது) இன்னொரு சான்றாகும்;
நமது மாபெரும் அத்தாட்சிகளிலிருந்து
உமக்குக் காண்பிப்பதற்காக”
(குர்ஆன்:20:17-23)
இந்நிகழ்வில் கழி ஒன்று பாம்பாக மாறியுள்ளது. களிமண்
என்னும் பொருள் தானதல்லாத இன்னொரு பொருளான சதையாக (மனித மற்றும் பறவை உடலாக) மாற்றப்படுவதைப்
பற்றிய திருவசனங்களை முன்பு விரிவாகக் கண்டோம். அந்நிலையுடன் இஃதும் ஒப்பு நோக்கற்பாலது.
மூலப்பொருள் ஒன்றினை எடுத்து) அதில் இன்னொரு சிருஷ்டிக்கான
உருவ அமைப்பைச் செய்தலை தஃக்லீக் (படைத்தல்) என்று இந்தத் திருவசனங்கள் காட்டுகின்றன.
இதில் ஃகாலிக் என்னும் திருநாமத்தின் சுடர் வெளிப்படுகிறது. களிமண் என்பதிலிருந்து
மனிதவுடல் அல்லது பறவையுடல் செய்யப்படும்போது களிமண்ணில் இல்லாத உருவம் அதில் புதிதாக
உண்டாகிறது. இந்த உருவமூட்டல் “அல்-முஸவ்விர்” (உருவமளிப்போன்) என்னும் திருநாமத்தின்
இயக்கமாகும். ”ஃகாலிக்” என்னும் திருநாமத்தின் இயக்கத்துடன் “முஸவ்விர்” என்னும் திருநாமத்தின்
இயக்கமும் இயைந்துள்ளது. இந்நிலையிலும் அதன் பருப்பொருள் (material) களிமண்ணாகவே இருக்கிறது.
அது எப்போது களிமண் அல்லாத சதையாகிறது? அதாவது ஒரு மூலப்பொருள்
தான் அல்லாத இன்னொரு பொருளாக மாற்றமடையும் “தகய்யுர்” நிகழ்ந்தாக வேண்டியிருக்கிறது.
அது நிகழாவிடில் மனிதன் சதையுடல் கொண்டவனாக அல்லாமல் களிமண்ணுடல் கொண்டவனாகவே இருந்திருப்பான்.
ஏசுநாதர் பறவையுருவம் செய்தது பற்றிக் குறிப்பிடும் வசனப்பகுதியை நினைவு கூர்க. அவர்
அதனுள் ஊதியதும்தான் இறையுத்தரவால் அவை ”பறவை”களாக (அதாவது களிமண் என்பது சதையாலான
பறவையாக) மாறிற்று. இதையே முதல் மனிதராகிய ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் படைக்கப்பட்டது
பற்றிய வசனப்பகுதியில் பொருத்திப் பார்க்கவும். அல்லாஹ் அவரின் களிமண்ணுடலுக்குள் தனது
ஆவியிலிருந்து ஊதியதும்தான் அது சதையுடலாக மாற்றமடைந்தது என்று விளக்கமாகும். எனவே,
முஹ்யி என்னும் திருநாமத்தின் உயிரூட்டும் இயக்கமே “தகய்யுர்” என்பதையும் நிகழ்த்துகிறது.
ஆதம் நபியின் சிருஷ்டித் தருணத்தைப் பேசும் திருவசனத்தில்
“வ இதா சவ்வய்த்துஹு” – “நான் அவரைச் செம்மை செய்ததும்” என்னும் சொற்றொடரை இங்கே கவனிப்போம்.
இது, உயிர் ஊதப்படும் முன் நிகழ்வதால், “அவரின் உடலுக்குரியதாக செய்து வைக்கப்பட்டிருக்கும்
களிமண்ணுடலைச் செவ்வை செய்ததும்” என்று அதன் பொருள் விரியும். களிமண்ணுடலைச் செவ்வை செய்தல் என்றால் என்ன? இன்னொரு
இடத்திலும், தஃக்லீக் (படைத்தல்) என்பதையும் செம்மை செய்தல் என்பதையும் அல்லாஹ் இருவேறு
பணிகளாகப் பிரித்துச் சொல்கிறான். “அவனே படைத்துச் செவ்வையாக்கினான்” (அல்லதீ ஃகல(க்)க ஃபசவ்வா – குர்ஆன்:87:2) செவ்வையாக்குதல்
என்றால் என்ன? விகிதவடிவம் அல்லது பரிமாணவடிவம் ஆக்குதல் என்னும் விளக்கத்தை இன்னொரு
திருவசனம் தருகிறது: “திண்ணமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்” (லகத் ஃகலக்னல் இன்சான ஃபீ அஹ்சனித் தக்வீம்
– குர்ஆன்:95:4). இவ்வசனத்தில் ’அழகிய அமைப்பு’ (அஹ்சனித் தக்வீம்) என்பது செவ்வையான
அமைப்பைக் குறிக்கிறது. செவ்வியம் என்பது தக்க விகிதப் பரிமாணங்களைப் பெற்றிருக்கும்
நிலையாகும். (இஸ்லாமியக் கலை இப்பண்பையே பிரதானமாக வளர்த்தெடுத்துள்ளமையை அதன் கட்டடக்கலையில்
குறிப்பாகவும் தெளிவாகவும் நாம் அவதானிக்க முடியும்).
களிமண்ணில் வடிவம் சமைக்கப்பட்டதை “ஃகல(க்)க” என்னும்
பதம் காட்டுகிறது என்றால் “ஃபசவ்வா” என்னும் பதம் அவ்வடிவைத் தனித்தன்மையுடன் துலங்கச்
செய்ததைக் காட்டுகிறது. அதாவது, ஃகாலிக் என்னும் திருநாமத்தின் இயக்கத்தைத் தொடர்ந்து
“முஸவ்விர்” என்னும் திருநாமத்தின் இயக்கம் நிகழ்கிறது என்பது இதிலிருந்து பெறப்படும்.
அதன் பிறகே “முஹ்யி” என்னும் திருநாமத்தின் உயிரூட்டல் நிகழ்ந்திருப்பதைக் கண்டோம்.
மூசா நபியின் அற்புத நிகழ்வில், கைத்தடி பாம்பானதில்,
அதே சமயத்தில் மரம் என்பது சதையுடலாகும் தகய்யுரும் (இதுவே தஃக்லீக் (படைத்தல்) என்பதாகவும்
உள்ளது), பாம்பின் வடிவத்தை, உருவத்தை ஏற்கும் தஸவ்வுரும், உயிர் பெறுதலும் நிகழ்வதைக்
காண்கிறோம். எனவே ஃகாலிக், முஸவ்விர், முஹ்யி ஆகிய மூன்று திருநாமங்களும் ஒரே சமயத்தில்
இயங்கும் நிகழ்வு அது. அவ்வகையில் அதன் வெளிப்பாடு மிகவும் பேரற்புதமே ஆகும்.
அந்தப் பாம்பு மீண்டும் தடியாக மாற மூசா நபி அவர்கள்
அதனைப் பிடிக்க வேண்டும் என்பது இறைக்கட்டளை. அதன் தாத்பரியம் பற்றிக் கொஞ்சம் சிந்திப்போம்.
ஏனெனில் மூசா நபியின் ”கை” இங்கே தனிக் கவனம் பெறுகிறது.
to be continued...
No comments:
Post a Comment