‘மொட்டக்குன்னு’
என்பதே
அவ்விடத்தின்
இயற்பெயர்
“ரோலிங்
மெடோஸ்” என்பது அதன்
டெசிக்னேஷன் என்றறிக
ஒவ்வொரு
குன்றாக ஏறி நின்று
ஒவ்வொரு
குன்றிலும் ஏறி நிற்போரை
ஒவ்வொருவரும் காண்கிறார் இங்கே
யாம்
வந்தடைந்த சமயம்
மழைக்கான
அறிகுறிகள் இருந்தது
வாகனத்தில்
இருந்து இறங்கிய அக்கணமே
எனை அறிந்து
கொண்டு முத்தமிட்ட காற்றில்
போதமழிக்கும் காதலை உணர்ந்தேன்
ஒளியைக்
குளிர்வித்திருந்தது இருள்
இருளை ஒளிர்வித்திருந்தது ஒளி
அவ்விடம்
அவ்வேளைக்கேற்ற
திருநாமம்
யாதாகும் என்று யோசித்து
அழகிய
பெயர்களின் பட்டியலில்
உள்ளம் துழாவிற்று
நீ அளவற்ற
அருளாளன்
நீ நிகரற்ற
அன்புடையோன்
நீ உள்ளன்பன்
நீ பேரொளி
முதல்
நீ முடிவு நீ
புறன்
நீ அகன் நீ
நித்திய
ஜீவன் நீயே
என்றெல்லாம் தொடர்ந்தது நாமாவளி
வானில்
காணும் உறுத்தாத ஒளியை
மண்ணில்
கிடந்த பசுமைக் கனவை
வாழும்
மரங்களில் வளரும் கனிவை
மேயும்
கால்நடை காட்டும் வழியை
மொழியில்
சிக்காத மோனப் பிழிவை
மொழியில் மொழியுமொரு நாமம் எது?
எல்லா
நாமங்களின் அர்த்தபாவங்களும்
உள்ளாகும்
ஓர் அழகிய திருநாமம்
சாந்தி
சாந்தி சாந்தி என்றே
ஒலிப்பதாயிற்று
அஸ்-சலாம்!
வாயால்
உரைத்துரைத்து
வண்ணம்
கரைந்த வார்த்தையை
இங்கே
காணும்
பொருள் யாவினுடனும்
கண்ணால்
உரைத்துரைத்துக்
களித்திருந்தேன்
பேரமைதி
என்னும் பெயரின் சுடரால்
நிம்மதி
எங்ஙனும் நிறைக!
ஆமீன்!
நிம்மதி
நாடி அன்றோ
வீடுகள்
விட்டகன்று
இங்கே
வருகின்றார் எல்லோரும்?
நிம்மதி
என்பதன்றோ
அனைவரும்
அனைத்திலும்
வேட்கும் பொருள்?
‘எப்பொருளுமாய்
நீயே
வந்து
நிம்மதி
நல்கும்
நிராமயமே!’
என்றென்
உள்ளத்திலொரு சுருதி கேட்கவும்
அதுவே
பற்றி பாவித்து
ஆனந்த லயத்தில் அலைந்திருந்தேன்
அப்போதென்
கண்ணில் பட்டார் அவர்
ஏதோவொரு
குடும்பத்தைக்
காரில்
அழைத்து வந்த
ஓட்டுநர் போல் தோன்றினார்
வெண்ணிற
வேட்டியை
மடித்துக்கட்டியபடி
மருண்ட
பசுவின் பார்வையுடன்
இங்குமங்கும் அலமந்திருந்தார்
”சிறுநீர்க்கழிப்பிடம்
அங்கே” என்று
கைக்காட்டினேன்
(அதுவுமென்ன?
சாலப் பெரியதோர் நிம்மதி அன்றோ?)
அல்ல
அல்ல என்பது போல் தலையசைத்து
மரச்செறிவுக்குள் சென்று மறைந்தார்
நேதி
நேதி என்றுரைத்துச் சென்ற
அந்த
ரிஷிதான்
என்ன
தவம் நாடினார்
என்று நான் யோசித்து நின்றேன்
சற்று
நேரத்தில் திரும்பி வந்தவர்
நெடி வீசச் சிரித்து அகன்றார்
அது போல்
குளிர்மையான
அவ்விடத்து
அவ்வேளை
பீடி
பற்ற வைத்து இழுக்காவிடில்
நிம்மதியே
வாராதாம் அவருக்கு
(குறிப்பு: ”ஏக்கறு சலாம்” என்பது குமரகுருபரர்
இயற்றிய பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்றில் உள்ள சொற்றொடர். முருகன் வள்ளிக்கு சலாம் சொல்வதாக
எழுதியுள்ளார். ”ஏக்கறு சலாம்” என்றால் ஏக்கம் தணித்து நிம்மதி நல்கும் சலாம் என்று
பொருள்.)
No comments:
Post a Comment