Tuesday, October 30, 2018

கைவசமாகிறாய்...    


  இசைஞானி இளையராஜாவின் நெடிய இசைப்பயணம் தமிழிசை வரலாற்றில் ஒரு சகாப்தம் என்று சொன்னால் அனைவரும் அதனை அட்டியின்றி ஒப்புவர். அந்நெடும் பயணத்தில் சுவையான தருணங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவற்றை இளையராஜாவே அவ்வப்போது நினைவு கூர்ந்து சொல்லி வருகிறார்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் அன்னனம் அவர் நினைந்து சொன்னார், அவரது இசைத்தொழில் வாழ்வில் மருத்துவமனையில் படுத்திருந்தபடி பேசக்கூட இயலாமல் சீழ்கையொலியால் மெட்டமைத்துத் தந்து அதற்குக் கவிஞர் பாடலெழுதி அவர் இல்லாமலே கூடத்தில் பதிவான பாடல் “காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்” என்னும் பாடல்தானாம்.

அப்பாடல் வெளிவந்தபோது நான் பள்ளிப்பருவத்துச் சிறுவன். எனினும், அதன் சரணத்தில் வருகின்ற ஒரு முரண் அணியழகு கொண்ட வரியொன்று எனக்கு விசித்திரமாகப் பட்டு மனதில் ஒட்டிக்கொண்டது.

”என்னை நான் தேடித் தேடி
உன்னிடம் கண்டுகொண்டேன்”

என்று வைரமுத்து எழுதியிருப்பார். ஞானிகள் ’சின்மயம்’ என்று சொல்கிறார்களே, அது போன்றதொரு போதம் இவ்வரிகளில் இருப்பதாக உணர்கிறேன்.

      பின்னாளில், மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் நூலொன்றினைப் படித்துக் கொண்டிருந்தபோது காதலுக்கு அவர் சொன்னதொரு வரையறை என் மனத்தில் அப்படியே கல்வெட்டுப் போல் பதிந்து போயிற்று. வைரமுத்துவின் வரிக்கான மூலமாக அது இருக்க வாய்ப்புளது. தாகூர் சொல்கிறார், “Love is self-realization in the other” (காதல் என்பது மற்றவரில் தன்னுணர்தல்).

      இருத்தலியல் குறித்துச் சிந்தனைக் களத்தில் ஆழ உழுதிருக்கும் ஃபிரெஞ்சு தத்துவ வித்தகர் ழீன் பால் சார்த்தர் உரைத்த புகழ் பெற்றதொரு வாசகம் உண்டு: “Hell is other people” (மற்றவரே நரகம்). உள்ளத்தில் அன்பின் ஊற்று திறவாத மனிதர்க்கு இது உண்மையாகலாம். ஆனால் அன்புடையார்க்கு மற்றவரே சொர்க்கம் (The other is paradise). தாகூரின் ஞானப் பார்வை அதனையே நமக்கு உணர்த்துகிறது.

      ”என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்” என்று ஆண்-பெண் காதலில் பாடப்படும்போது அதில் ஒரு கவித்துவ அழகு இருக்கிறது. அது ஒருவகை ”மெய் மயக்கம்” எனலாம்; மெய்ஞானம் அல்ல.

      ஒரு மெய்ஞ்ஞானி இது போல் பாடுவாரா? சூஃபி ஞானி பீர் கவ்ஸி ஷாஹ் (ரஹ்) அவர்களின் உருதுக் கவிதைத் தொகுதியான “தய்யிபாத்தே கவ்ஸி” என்னும் நூலினைப் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு அந்த ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு கவிதையில், “மேன் ஃகுத் கோ டூண்ட்த்தா ஹூன் / ஓ ஹாத் ஆ ரஹா ஹே” என்று தனக்கும் இறைவனுக்குமான தொடர்பினைப் பற்றி அந்த மெய்ஞ்ஞானி பாடியிருத்தல் கண்டேன்.

      ”நான் என்னைத் தேடுகின்றேன்
      அவன் கைவசமாகி வருகின்றான்”

      இவ்வரிகளின் பின்னணியில் இருத்தலியல் பற்றிய சூஃபித் தத்துவம் இருக்கிறது. உள்ளமை என்பது இறைவனுக்கே சொந்தம். அவனே இருக்கின்றான். மற்றதெல்லாம் அவனது உள்ளமையில் அவன் தோற்றுகின்ற நாம ரூபங்களே என்கிறது சூஃபித்துவம். இருப்பதுதானே கிடைக்கும்? எனவே, தன்னைத் தேடிப் பார்த்தால் இறைவனே கைவசமாகி வருகின்றான் என்கிறார் அந்த மகான். அவரது கருத்தை இசைஞானியின் மெட்டுக்கேற்ப தகவமைத்து நான் இப்படிப் பாடிக் கொண்டேன்:

      ”என்னை நான் தேடித் தேடி
      உன்னையே கண்டு கொண்டேன்”.

யுகங்கள் கணங்கள் ஆகும்


    


கவிஞர் வாலி குறித்து நேற்று நண்பர் மானசீகன் ஒரு குறும்பதிவு போட்டிருந்தார். வாலியின் பன்முகத் தன்மை மற்றும் தகவமைத் திறன் ஆகியவற்றை அவரது திரைப்பாடல் வரிகளின் வழியே விதந்தோதிச் செல்லும் அப்பதிவில் ஓரிடம் என் கவனத்தை நிறுத்திற்று.

      ”ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை (Theory of Relativity) சினிமா பாடலில் சொன்னவரும் அவரே.

      ’மாதங்களும் வாரம் ஆகும் / நீயும் நானும் கூடினால்
      வாரங்களும் மாதம் ஆகும் / பாதை மாறி ஓடினால்’

      ’நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்
      நீயென்னை நீங்கிச் சென்றாலே
      வருஷங்கல் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்
      நீ எந்தன் பக்கம் நின்றாலே’”

பதிவைப் படித்து முடித்துவிட்டு மானசீகனுக்கு வட்ஸப்பில் செய்தி அனுப்பினேன். ’இவ்விரு படங்களுக்கு இடையில் இன்னொரு படத்தில் இதே கருத்து  ஒரு பாடலில் வருகிறது. வாலி என்றே நினைக்கிறேன்’ என்று. உறுதி செய்துகொள்ள   விக்கிப்பீடியாவில் தேடியபோது அது வைரமுத்து எழுதியது என்று காட்டிற்று. வாணி ஜெயராம் பாடிய “எது சுகம் சுகம்…” என்று தொடங்கும் பாடல் அது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தது. வண்டிச் சோலை சின்ராசு என்னும் படத்தில் இடம் பெற்றிருந்தது. வைரமுத்து எழுதிய வரிகள் இவை:

“கூடும் நேரம் பல யுகங்கள் கணங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்கள் ஆகும்”

இவ்வரிகளைச் சுட்டிக் காட்டியதோடு மானசீகனுக்கு இன்னொரு செய்தியும் தெரிவித்தேன்: “ஆனால், காதலில் இப்படியொரு உணர்வுத் தன்மை இருப்பதை யானறிய முதலில் எழுதியவர் உருது மகாகவி அல்லாமா இக்பால்தான்”. மானசீகன் ஆச்சரியப்பட்டார் என்றே நினைக்கிறேன். “இக்பால் வரிகள் ஜி?” என்று பதிலனுப்பினார். அவ்வரிகளைக் கேட்டார். தேடி அனுப்புவதாகச் சொன்னேன்.

மேற்சொன்ன திரைப்பாடல் வரிகளின் மூலம் இக்பாலின் வரிகளே என்று சுட்டிக்காட்டி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன் என்று நினைவு. கடந்த ஒன்பது ஆண்டுகளாக பிரபஞ்சக்குடிலில் எழுதிப் பதிவேற்றிய கட்டுரைக் குவியலினூடே அளைத்துத் தேடிச் சலித்துச் சோர்ந்தேன். எனது சிறு நூலகத்தின் தூண்டு நூற்கணங்களிடைத் தேடியபோது கே.சி.கந்தா என்பார் தொகுத்து, உருது மூலத்துடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட “Masterpieces of Urdu Ghazal – From 17th to 20th Century” என்னும் நூல் கிடைத்தது. (என் கல்லூரிக் கால நண்பன் அஸ்லம் பரிசளித்தது). அதில் அவ்வரிகளைக் கண்டு பிடித்தேன். உருதுவில் “மஹீனே வஸ்ல் கெ கடியோன் கி சூரத் உடுத்தே ஜாதே ஹேன் / மகர் கடியான் ஜுதாயி கீ குஸர்த்தீ ஹேன் மஹீனோன் மேன்” என்று அல்லாமா இக்பால் பாடியிருக்கிறார்.

“The months of union fly like hours
But the hours of severance crawl like months”

என்று கே.சி.கந்தா ஆங்கிலம் ஆக்கியிருக்கிறார். நான் அதனை இவ்வண்ணம் தமிழ் செய்தேன்:
       
      ”கூடலில் மாதங்கள்
      கணங்களைப் போல் மறையும்
      பிரிவினில் கணங்களும்
      மாதங்களாகி நிறையும்”.

Sunday, October 28, 2018

சுடர்மிகும் அறிவு


      


      

      நல்லதோர் வீணை செய்தே – அதை
      நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
      சொல்லடி சிவசக்தி – எனைச்      
      சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
என்று புலம்பினான் பாரதி. 

சுடர் மிகும் அறிவு என்பது எது? பள்ளியிலும் கல்லூரியிலும் பயிற்றுவிக்கப் படுகிறதே அந்த அறிவா? பாரதி பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்றவன்தான். அவற்றில் பெற்ற அறிவைத்தான் சுடர் மிகும் அறிவு என்று அவன் சொல்கிறானா?

பள்ளிக் கல்வியை, குறிப்பாக ஆங்கில வழிக் கல்வியை “ஊனர் கல்வி” என்று அவன் சாடுகிறான். பள்ளியில் தன்னைச் சேர்த்துவிட்டதில் தனது தந்தைக்கு ஆயிரம் செலவுகளும் தனக்கு ஆயிரம் இன்னல்களும் நேர்ந்தன என்று நொந்துரைக்கிறான்.

நமது பள்ளி கல்லூரிக் கல்விகள் தாய்மொழியின் மரபார்ந்த புழக்கத்தை ஒட்ட ஒழிப்பதில் பங்காற்றி வருகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்னமே அதனை பாரதி சுட்டியிருக்கிறான். ’போகின்ற பாரதத்தைப் பழித்தல்’ என்றொரு கவிதையில் “வீட்டு பாஷை கற்கிலாய் போ போ போ” என்று தூற்றுகிறான்.

வீட்டு பாஷை என்பது என்ன? என்று என்னிடம் மாணவன் ஒருவன் வினவினான். அவன் வீட்டில் கொள்ளுப் பாட்டியோ  கொள்ளுத் தாத்தாவோ இருக்க வேண்டுமே? இன்றைய தாத்தாக்களிடம் பாட்டிகளிடம்கூட வீட்டு பாஷை என்பதில்லை. நான் அவனுக்கு லா.ச.ரா, தி.ஜா போன்றோரின் கதைகளிலிருந்து உதாரணங்கள் உரைத்தேன். “ஓடுற பாம்புக்குக் கால் எண்ணிப்பிடுவர்”, “வந்துட்டானே, கழுகுக்கு மூக்குல வேத்த மாதிரி” என்பன போன்ற சொலவடைகள். பருமனான உடல் கொண்ட ஒருவனைப் பற்றிச் சொல்வதெனில், “அழிச்சா நாலு ஆளு செய்யலாம்” என்று சொல்வார்கள். எவ்வளவு கவிநயமிக்க புழக்க பாஷைகள்! இன்னிக்கு அவை போன இடம் தெரியல.

என் பாட்டி எண்பதைத் தொடப் போகிறார். நான் சிறுவனாக இருந்தபோது அவரிடம் இருந்த பாஷையை இப்போது கேட்கக் கிடைக்கவில்லை. ”ஜல்தி கெளம்பு” என்பது ’சீக்கிரம்’ ஆகிவிட்டது. பேச ஆளின்மையால் அவரிடமே வீட்டு பாஷை மெல்ல மறைந்துவிட்டது. நானும் வரித்துக்கொள்ளவில்லை. இப்போது நினைக்கப் பெரிய இழப்பாகத் தோன்றுகிறது.

வீட்டு பாஷையைக் கிளப்பி விட்டு அவ்விடத்தில் ஊனர் கல்வியின் தேய்வழக்குகள், “குட் மார்னிங் – குட் ஈவ்னிங் – குட் நைட் – ஹௌவார்யூ – நோ தேங்க்ஸ் – சார்ரி” இத்தியாதிகள், வந்தமர்ந்து ஆள்கின்றன. எல்லாம் கணினி நிரலின் கட்டளைகள் போல் – ஆம்பிக்யூட்டி இல்லாத நேரடி விளம்பல்கள். ஒன்றிலும் கவித்துவ அழகு இல்லை. அர்த்த பாவங்களின் அடுக்குகள் சிடுக்குகள் ஏதுமில்லை. மொழியே மொன்னையாகி வருகிறது. 

சரி. சுடர் மிகும் அறிவு என்று பாரதி சொன்னது எதனை? “மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்றாரே வள்ளுவர், அதுதான். மெய்யறிவு. மெய்ஞ்ஞானம் என்றெல்லாம் சுட்டப்படுவதுதான்.”உண்மையே விடுதலை செய்கிறது. விடுதலைக்கான உனது முயற்சி அல்ல” என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி.

அதாவது, உண்மையை நீ அறியும்போது அது உன்னை விடுதலை செய்கிறது என்று பொருள். உனக்கு விடுதலை நல்காத எந்தவொரு அறிவும் உண்மை அல்ல.

“விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்தச் சிட்டுக் குருவியைப் போலே” என்கிறான் பாரதி. சிட்டுக்குருவி எப்படி சுதந்திரமாக இருக்கிறது. அதனிடம் சுடர் மிகும் அறிவு இயற்கையிலேயே இருக்கிறது. பள்ளிக்கோ கல்லூரிக்கொ சென்று அந்த இயல்பறிவை அது கெடுத்துக்கொள்ளவில்லை.

எதனிடமிருந்து விடுதலை? என்னும் கேள்வி எழுகிறது. சைவ சித்தாந்த பரிபாஷையில் கூறுவதெனில், பசுவைப் பாசத்திடமிருந்து விடுவித்துப் பதியிடம் சேர்த்தலே விடுதலை. (பாசத்திற்குச் சுயாதீனம் உண்டா? தளைப்படுத்தும் ஆற்றல் அதற்கே உண்டா? இல்லை. பதியே கட்டுவான்; பதியே அவிழ்ப்பான்!)

“உண்மையே உன்னை விடுதலை செய்யும்” என்றுரைத்தால் அதனை ஆத்திகரும் ஏற்பர் நாத்திகரும் ஏற்பர். வலது இடது சிந்தனைவாதிகள் இருவருமே ஏற்பர். ஆனால் இரு தரப்புகளும் அதற்குத் தரும் விளக்கம் வெவ்வேறாக இருக்கும். அவ்விரண்டில் எவ்விளக்கம் சரியானது? இரண்டுமேதான். ஒவ்வொன்றும் அதனதன் தளத்தில் சரியாக உள்ளன.

பருவுலகால் மனிதன் கட்டமைத்திருக்கும் தளைகளிலிருந்து விடுதலை அடைதல் பற்றி இடதுசாரிகள் பேசுகின்றனர். பருவுலகின் இயல்பு நம் மீது ஏற்படுத்தும் தளைகளிலிருந்து விடுதலை அடைதல் பற்றி வலதுசாரிகள் பேசுகின்றனர். (வலதுசாரிகள் முன்னதை மறுதலிக்கையிலும் இடதுசாரிகள் பின்னதை மறுதலிக்கையிலும் அத்தரப்புகளின் நேர்மை கேள்விக்கு உள்ளாகிறது).

பாரதியின் கவிதை வரிகளை நேற்று அசை போட்டபோது “சுடர் மிகும் அறிவு” இப்படிப் புலம்புமா? என்று எண்ணினேன். அது விடுதலை நல்கும் அறிவு அல்லவா? அதற்கு எதிரான நிலை ஒன்றுண்டு. அது இடர் மிகும் அறிவு.

நேற்று அடியேனுக்குக் கடுமையான ஒருபக்கத் தலைவலி. விளக்கணைத்து அரவணைப்பான இருளில் கண்கள் மூடிக் கட்டிலில் அமர்ந்திருந்தேன், தலையணைகளில் சாய்ந்தபடி. ”வாணி ராணி” என்னும் பெருந்தொடர் (மெகா சீரியல் என்பதன் தமிழறிக) தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது மனத்தில் தோன்றிற்று, ‘இந்தத் தயாரிப்பாளருக்கு வெகுஜனத்தின் மனநிலை நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால் ஒரு பெருந்தொடரை வெற்றி பெறச் செய்ய அது மட்டும் போதாது. தமிழக வெகுஜனத்தின், குறிப்பாகத் தாய்க்குலத்தின் அறிவு நிலை என்ன என்பதையும் துல்லியமாக அறிந்திருக்கிறார். அபத்தம் என்பது அதற்கு அமிர்தம் என்பதை அறிந்திருக்கிறார்”.

இப்படியாக யோசனை அனிச்சை கதியில் ஓடும்போதே மண்டையில் விண்ணென்று நாடி போல் வலி துடித்தது. ஒரு எழவு சீரியல் எப்படிப் போனால் என்ன என்றிருக்க முடிகிறதா? சொல்லறச் சும்மா இரு மனமே என்றிருக்க இயல்கிறதா? இடர் மிகும் அறிவு!

பன்னூறு ஆண்டுகளாகக் கீழைத் தேயச் சமயங்கள் போதித்தது சுடர் மிகும் அறிவையே. சமயம் என்பதன் நோக்கம் மெய்யறிதலே. அதைச் சாதிப்பதற்கான பல்வித இயங்கு முறைமைகளின் கட்டமைப்பே சமயம்.

இன்று, கீழைத்தேய பழஞ்சமய அறிதல் முறைகளின் பக்கம் கவனம் செலுத்திவரும் மேலைத்தேய அறிவுலகம் பொய்யறிவின் சேகரத்திற்கு எதிரான எதிர்க்கற்றலை (unlearning) முன்னிறுத்திப் பேசுகிறது.

அறியாமை என்னும் நிலையே துயரின் ஊற்று என்பது கீழைத்தேயச் சிந்தனை மரபு தரும் விழிப்புக்களில் ஒன்று. அறியாமை என்பதிலிருந்து பொய்யறிவை நோக்கிச் செல்வது என்பது அதனினும் பெருந்துயர். இடர் மிகும் அறிவை முயன்று கற்பதினும் கல்லாதிருத்தலே நன்று.  அறியாமையிலிருந்து மெய்யறிவை நோக்கிச் செல்ல வேண்டும். சுடர் மிகும் அறிவினை அடைதல் வேண்டும்.

சுடர் மிகும் அறிவு யாது செய்யும்? பாரதியின் வரிகளில் பகர்வதெனில்,  பயிற்றிப் பல கல்வி தந்து இப்பாரினை உயர்த்தும்; பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலிக்கும்.

Thursday, October 25, 2018

யாதெனினும்
ஆயிரம் மலர்களினூடே
சிறகடிக்குமொரு
வண்ணத்துப் பூச்சியைப் போல்
எப்போதும் காட்சிதரும்
சுட்டிப்பெண்
இன்று
படிக்கட்டில் அமர்ந்திருந்தாள்
துவண்ட முகத்தைக்
கையில் முட்டுக்கொடுத்து

மனக்குறை
யாதெனினும் யாதெனினும்
அங்கையில் முகம் தாங்கற்க
வீழும் முகமல்ல நினது