Saturday, April 28, 2012

கடற்கரையில்...முட்டம், சங்குத்துறை… அடுத்ததாக சொத்தவிளை கடற்கரையில் நின்றிருந்தேன். கடற்கரைகள் வேறு வேறாக இருந்தாலும் கடல் ஒன்றுதான். அரபிக்கடல். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அலைகள் ஒவ்வொரு விதமாக இருந்தன. முட்டத்தில் குமுறிப் பாய்ந்தன என்றால் இங்கே சொத்தவிளையில் நிதானமாக வந்து கால்களைத் தழுவுகின்றன.

கரைகளுக்கு வேறு வேறு பெயர்கள் வைத்துக்கொண்டது நாம்தான். கடல் ஒன்றுதான்.
குழந்தைகள் குதூகலத்துடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் கடலலைகள் கால்களில் மோத நின்றேன். சில அலைகள் நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு எட்டாமலேயே திரும்பிப் போய்விட்டன. சில அலைகள் வெறுமனே வந்து தொட்டுச் சென்றன. தங்கள் முழங்கால் அளவுக்குப் பாய்ந்து வந்து தாண்டிச் செல்லும் ‘பெரிய’ அலைகளைக் குழந்தைகள் ஆர்வமுடன் எதிர்பார்த்தார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் எந்த அலை அப்படிப் பெரிதாக உருவாகி வரும் என்று கணித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

எனக்குச் சட்டென்று ஞானிகள் சொல்லும் பழைய உவமை நினைவுக்கு வந்தது:
“இறைவா! நீ கடல்
நாம் உன் அலைகள்”

அலைகள் தோன்றும் இடத்தைப் பார்த்துக் குழந்தைகள் கத்திக் கொண்டிருந்தார்கள், அந்த அலை பெரிதாகி வரும் என்றோ அல்லது அது விரைவிலேயே அமுங்கி விடும் என்றோ.

ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போதே நாமும் இப்படித்தான் எதிர்பார்க்கிறோம். அது நீண்ட காலம் வாழவேண்டும். வாழ்வில் ‘பெரிய ஆளாக’ அது வரவேண்டும். இப்படிப் பல எதிர்பார்ப்புக்கள். சில குழந்தைகள் சிறு வயதிலேயே அல்ப்பாயுசில் போய்விடுகின்றன. சிலர் நடுத்தர வயது வரை வாழ்கிறார்கள். சிலர் நீண்ட காலம் வயோதிகப் பருவம் எய்தி வாழ்ந்து பின் மறைகிறார்கள்.

அதேபோல் சில அலைகள் எழுந்த வேகத்தில் அமுங்கி விட்டன. சில அலைகள் சிறிது தூரம் புரண்ட பின் விழுந்துவிட்டன. சில அலைகள் மட்டும் சீறிப் பாய்ந்து வேகமாக ஓடிக் கரையில் நன்றாக ஏறி நனைத்துவிட்டு மீண்டு சென்றன. அந்த நீண்ட அலைகள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஊட்டின. வாழாத அலைகள் அவர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தை அளித்தன.

எந்த அலை எப்படிப் பாய்கிறது என்பது கடலினை எவ்விதத்திலும் பாதித்ததாகத் தெரியவில்லை. அதன் விசாலமான பரப்பில் இந்த அலைகள் விளிம்பில் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கின்றன.

சிறிய அலை, நடு அலை, பெரிய அலை என்று எல்லாமே மீண்டும் அந்தக் கடலுக்குள்தான் மீள்கின்றன. குழந்தை இறந்தாலும் சரி, வயோதிகர் இறந்தாலும் சரி நாம் சொல்வது ஒன்றுதான் “நாம் இறைவனுக்கு உரியவர்கள். அவனிடமே நாம் மீண்டுகொண்டிருக்கிறோம்”

நடு அலையாக நான் நின்றுகொண்டிருந்தேன். நான்கு சிறிய அலைகள் என் முன் விளையாடிக் கொண்டிருந்தன. நான் என மனதில் சொல்லிக் கொண்டேன்,
“எங்கள் இறைவா! நீ கடலாக இருக்கிறாய்
நாங்கள் உன் அலைகளாக இருக்கிறோம்”

Thursday, April 19, 2012

மெகாஹிட்


                                                                              
”வீல்”
புது வீட்டிற்குக் குடி வந்தபின் இது பத்தாம் அல்லது பதினோராம் தடவையாக அலறுகிறாள் என் சகதர்மினி. எந்த க்ஷேத்திரத்தில் இருந்து இந்த அசரீரி என்று லேசாக விழிகளை உயர்த்திப் பார்த்தேன். வழக்கம்போல் சமையலறையில் இருந்துதான். அன்னமிட்ட கையில் தோசை திருப்பியுடன் நின்றிருந்தாள். தோசை ஏதும் நன்றாக வந்துவிட்டதா? அந்த அதிர்ச்சியில்தான் இந்த அலறலா? என்று முதலில் நினைத்தேன்.

இது ஒரு தனி கதை. வாழ்வென்னும் காவியத்தில் இது ஒரு கிளைக்கதை என்று வேண்டுமானால் சொல்லலாம். அதாவது, சமையல் விஷயத்தில் சகதர்மினி உலகளாவிய சிந்தனையும் திறமையும் கொண்டவள். அரபி சுலைமானி தேநீர், அமெரிக்கன் காஃபி, முகல் பிரியாணி, காஷ்மீரி புலாவ், சிலோன் முட்டை புரோட்டா, இத்தாலியன் பீசா, ஃப்ரெஞ்சு ஃபிங்கர்ஸ் போன்ற பலவிதமான பதார்த்தங்கள் செய்து கலக்குபவள். பாருங்கள், ஜப்பானின் ஹைகூ, அரபி-பாரசீக கஜல், ஆங்கிலத்தின் லிமிரிக் சானட் போன்றவையெல்லாம் நானும் எழுதுவேன் என்று சொல்லிக்கொண்டு திராபையாக எழுதி ஜல்லியடிக்கும் என் போன்றவர்களே ‘நாங்கள் உலகளாவிய சிந்தனை கொண்டவர்கள்’ என்று பீற்றிக்கொள்ளும்போது இத்தனை நாடுகளின் உணவு வகைகளை உருப்படியாகச் சமைக்கும் சகதர்மினிகளை நாம் ஏன் உலகளாவிய சிந்தனையாளர்கள் என்று சொல்லக்கூடாது? நியாயம்தானே?

courtesy: cometokitchen.wordpress.com

இந்த உலகளாவிய சமையல் திறன்கூட இந்தியப் பெண்களுக்கே உரித்தான வரம் என்றுதான் சொல்லவேண்டும். இங்கே உள்ளூரிலேயே பிராந்தியத்துக்கு ஒவ்வொரு வகையான சமையல் இருக்கின்ற காரணத்தால் அவற்றையெல்லாம் கற்றுக்கொள்ளும் திறமை இயல்பாகவே நம் பெண்களுக்கு அமைந்துவிடுகிறது போலும். சமையல் விஷயத்தில் இங்கே ஒவ்வொரு ஊருமே ஒரு நாடுதான் என்று சொல்லலாம். எனவேதான் ‘ச்சீஸ் பர்கர்’ செய்யும் ஓர் இந்தியப் பெண்ணை நாம் அதிசயமாகப் பார்ப்பதில்லை. ஆனால் பனியாரம் சுடும் ஓர் ஐரோப்பிய ஸ்த்ரீயை நாம் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.

இப்படி உலக நாடுகளின் உணவுகளை எல்லாம் லாவகமாகச் செய்து கலக்கினாலும் தமிழர் நாகரிகத்தின் தனித்தன்மைகளில் ஒன்றான இந்த தோசை மட்டும் என் சகதர்மினியைப் பழிவாங்கிக் கொண்டிருப்பது ஏனென்று தெரியவில்லை. ஒருவேளை நான் தமிழ்ப் பேராசிரியன் என்பதாலா? அவளும் பிரயத்தனங்களுடன் எப்படியாவது தோசையை உருவாக்கிவிடத்தான் செய்கிறாள். எப்பாடு பட்டாவது மசால் தோசை, கைமா தோசை என்று அதிலும் பல வகைகளைச் சமைத்துப் பரிமாறுகிறாள். ஆனால் பதத்தில் ஏதோ ஒன்று பிசகி அவளைக் கண்கலங்க வைத்துவிடுகிறது. பெரும்பாலும் கல்லுடன் ஒட்டிக்கொண்டு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கும். கல்லில்தான் மிஸ்டேக் என்று மாற்றிப் பார்த்தாகிவிட்டது. ’நான் ஸ்டிக் பான்’ என்று சொல்கிறார்களே, அதன் பெயரே மகா பொய் என்று நிரூபிப்பதில் ஒரு குரூர திருப்தி இருக்கிறது என்பதுபோல் கோந்து போட்டது மாதிரி ஒட்டிக்கொள்கிறது. எங்கள் வீட்டு தோசை மாவுக்கு ஏன் இப்படியொரு ஐக்கிய உணர்வு என்று இன்றுவரை விளங்கவில்லை. இல்லையென்றால் ஒரு தினுசாக முறுகி வருகிறது, அதாவது ஒரே வட்டத்தில் இரவும் பகலும் இருப்பது மாதிரி, காதல் திருமணம் செய்துகொண்ட நீக்ரோவும் ஐரோப்பியனும் ஆலிங்கனத்தில் இருப்பது போல் ஒரு பாதி மட்டும் முறுகி இருக்கும். தோசை அஹிம்சையைக் கடைப்பிடித்து விட்டதென்றால் அது ஓர் இன்ப அதிர்ச்சிதான். அதனால்தான் சகதர்மினி திடீரென்று அலறியதற்கு அதுதான் காரணமாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன்.

“வீல்” என்று அலறினாள் என்றா சொன்னேன்? பாருங்கள், என் எழுத்துத் திறமை அவ்வளவுதான். அந்த அலறல் சத்தத்தைத் துல்லியமாக எழுதிக்காட்ட என்னால் முடியாது. ஏன், யாராலும் முடியாது. எந்த மொழியிலும் முடியாது. ஏதோ தோராயமாக ஒத்துவருகின்ற ஒரு சப்தத்தை நான் எழுதியிருக்கிறேன் அவ்வளவுதான். சகதர்மினிகள் எழுப்பும் பல சப்தங்கள் மொழியின் எல்லைகளைக் கடந்தவை என்பது கணவன்மார்கள் அறிந்த ஒன்றுதானே!

இரண்டாம் முறையும் அவள் அபாயக் குரல் எழுப்பியபோதுதான் நான் அலர்ட் ஆனேன். இதற்குமேலும் மடிக்கணினியில் ஓர்ந்து உட்கார்ந்திருப்பது நல்ல கணவனுக்கான லட்சணமல்ல. பிறகு நான் மடிக்கணினியை-யே கட்டிக்கொண்டு அழ வேண்டியதுதான். சபாஷ், எத்தனை நல்ல வாழ்த்து! ‘அதையே கட்டிக்கொண்டு அழுங்கள்’ என்பது சகதர்மினிகள் அவ்வப்போது பேசும் ஆப்த வாக்கியங்களில் ஒன்றுதானே? கணவன்மார்களுக்குத்தான் கட்டிக்கொண்டு அழ எத்தனை வஸ்துக்கள் வாய்த்திருக்கின்றன. தினத்தந்தி பேப்பர், ஆஃபீஸ் ஃபைல், லேப்டாப், டூவீலர், வாக்மேன், தஸ்பீஹ் மணி… நான் நினைத்துப் பார்க்கிறேன், அதையே கட்டிக்கொண்டு ஏன் சிரிக்கக் கூடாது? அழத்தான் வேண்டுமா? சகதர்மினிகள் இப்படி எரிச்சலாகப் பேசும் ஆப்த வாக்கியத்திலும் ஓர் ஆழமான தத்துவம் இருக்கிறது அன்பர்களே! ஆணின் வாழ்க்கையை முழுமை செய்பவள் அவள்தானே? அவள் இல்லாமல் வேறு எதை நீங்கள் ‘கட்டிக்’கொண்டாலும் நிம்மதி இருக்காது, மகிழ்ச்சி இருக்காது.

சரி, கையில் சட்டாப்பையுடன் நிற்பவளின் வாயிலிருந்து ஆப்த வாக்கியம் புறப்படுவதற்குள் நான் புறப்பட்டுவிட்டேன் க்ஷேத்திரம் நோக்கி.
“என்னப்பா? என்ன?”
அவள் விரலால் சுட்டிக்காட்டுகிறாள். கேஸ் சிலிண்டருக்கு அருகில் நிற்கிறது அந்த பிரஹஸ்பதி. அரக்கு நிறத்தில் பளபளக்கும் மேனியுடன், இரண்டு கைகளிலும் நீளமான வாள்களைப் பிடித்துக்கொண்டு அனாயசமாக சுழற்றும் வீரனைப் போல் இரண்டு மீசையை வைத்துக்கொண்டு – கரப்பான். அது மீசையை ஆட்டுவதைப் பார்த்தால், ‘மீசை வச்ச ஆம்பிளையா இருந்தா ஒண்டிக்கு ஒண்டி வாடா பாக்கலாம்’ என்று சவால் விடுவதைப் போல் இருக்கிறது. சகதர்மினியை பயமுறுத்தும் சத்ருக்கள் என்று நான்கைந்து பேர் இருக்கிறார்கள். பின் பால்கனியில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைக்கூடையைக் குடைய வரும் பூனை, கோழி, பல்லி போன்றவை. இந்தப் பட்டியலில் இப்போது முன்னணியில் இருப்பது கரப்பான்.

கரப்பானுக்கும் எனக்குமான உறவு என் பால்ய நாட்களிலேயே ஆரம்பமாகிவிட்ட ஒன்று. அப்போதெல்லாம் எனக்கு அதனிடம் தனிப்பட்ட பகையென்று எதுவுமில்லை. கிராமத்தில் இருந்த எங்கள் வீட்டில் அவை சர்வ சுதந்திரமாக பவனி வரும், குறிப்பாக சமையலறையில். என் அம்மா உட்பட நாங்கள் யாருமே அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. மதியம் அம்மா உறங்கிக் கொண்டிருக்கும் நேரம் பொட்டுக்கடலையும் சக்கரையும் எடுப்பதற்காகப் பதுங்கிப் பதுங்கிக் கிச்சனுக்குள் போய்ப் பார்த்தால் டப்பா மீது நின்றுகொண்டு மீசையை சுழற்றிக்கொண்டிருக்கும். “இந்தா ச்சூ” என்று விரட்டிவிட்டு வேலையைப் பார்ப்போம். எப்போதாவது ஓரிரண்டு கரப்பான் செருப்படி பட்டுச் செத்ததுண்டு.

இப்படியாக நாங்கள் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் ப்ளஸ்-டூவில் வந்து வாய்த்தது கரப்பானை ஆய்வு செய்யும் பாடம். ஒரு கண்ணாடிச் சில்லின்மீது அதை மல்லாத்திப் போட்டு கால்களைப் பரப்பிவிட்டு ஒவ்வொரு பாகமாகப் பிரித்தெடுத்து- என் பிராமண நண்பர்கள்கூட குமட்டாமல் செய்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதன் மண்டையைத் தனியாகக் கழற்றி வாய் மூக்கையெல்லாம் வேறு தனித்தனியாக எடுத்துவைக்க வேண்டுமாம்! அப்போதிலிருந்து ஆரம்பித்தது எனக்கு, கரப்பான் என்றால் வயிற்றில் ஒரு பந்தை உருட்டும்.

என்ன இருந்தாலும் கரப்பான் நான் மிகவும் வியக்கும் ஒரு ஜீவன். ரத்தத்தில் சிவப்பு கிடையாது. அது மூச்சுவிட காற்று வேண்டும், ஆனால் ஆக்சிஜன்தான் வேண்டும் என்ற கெடுபிடி இல்லை. அதனால், மீத்தேன் அதிகமாக உள்ள செவ்வாய் கிரகத்திற்குக்கூட சுற்றுலா அனுப்பி வைத்தால் ஜாலியாக இருந்துவிட்டு வருமாம். (ஆனால் செவ்வாய் என்றாலே நமக்கு மூச்சுத் திணறல்தான்!) டைனோசார்கள் காலத்திலேயே இவையும் அவர்களுடன் இருந்தனவாம். ஒரு பிரளயத்தில் அந்தப் பெரும்புள்ளிகள் எல்லாம் பூண்டோடு அழிந்துவிட இவை மட்டும் புல்பூண்டே இல்லாத பூமிப்பரப்பிலும் எப்படியோ தாக்குப் பிடித்துக்கொண்டு பிழைத்து வந்து இன்றுவரை ஜமாய்த்துக் கொண்டுள்ளன. மண்ணில் சாமானியமாக மக்காத பிளாஸ்டிக்கைக்கூட தின்று செறித்துவிடுமாம். என்னவொரு படைப்பு பார்த்தீர்களா?

ஆனால் இந்தச் சிறப்பெல்லாம் மனிதர்களின்முன் எடுபடுவதில்லை. வி.ஐ.பி பூச்சி என்பதற்காக நம் இருப்பிடத்தைத் தாரை வார்த்துக் கொடுக்கவா முடியும்? ”ஒழித்துக் கட்டுங்கள்” என்று சகதர்மினி கட்டளை போட்டுவிட்டாள். மீண்டும் என் பால்ய காலம் நியாபகம் வருகிறது. என் அம்மாவுக்கு வைரிகளாக இருந்தது கருவண்டுதான். வீட்டின் பின்னே கொள்ளையில் இருந்த பத்துப் பனிரெண்டு தென்னை மரங்களில் இருந்து ராத்திரிகளில் விர்ரென்று வீட்டிற்குள் பறந்துவரும். எலுமிச்சை சைஸில் பளபளப்பான கறுப்பாக இருக்கும் அந்த வண்டைப் பார்த்ததுமே அம்மா உச்ச ஸ்தாயியில் வீறிட்டு அலறுவார். அதை துவம்சம் செய்து அம்மாவைக் ’காப்பதற்கு’ அத்தா பாயும் காட்சி இன்னமும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது. இப்போது நான் என் சகதர்மினியின் அச்சத்தைப் போக்க இந்தக் கரப்பானை ஒழித்துக் கட்ட வேண்டும். இது இன்று நேற்று ஏற்பட்ட நடப்பாகத் தெரியவில்லை. பல்லாயிரம் வருக்டங்களுக்கு முன்பே, கானகங்களில் வாழ்ந்த காலத்தில், குகையில் பயந்து ஒடுங்கியிருக்கும் தன் துணைவியையும் குழந்தைகளையும் பாதுகாக்க ஆதி மனிதன் கையில் ஆயுதம் ஏந்தி சிங்கம் புலி போன்ற விலங்குகளுடன் சண்டையிட்டிருப்பான் அல்லவா? இது அந்த மரபின் தொடர்ச்சிதான் போலும். “ஆண்கள் பெண்களின் அதிகாரிகள்” என்று குர்ஆன் சொல்கிறது.

கரப்பானை ஒழிப்பதற்கான உத்திகளும் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. கரப்பானின் உருவத்தில் எந்தப் பரிணாம வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று நினைக்கிறேன். அதுவரை நாம் பிழைத்தோம். மென் இன் பிளாக் படத்தில் வரும் ஜந்துக்கள் போல், ஒரு கரப்பான் நாய் சைஸில் இருந்தால் நம் நிலைமை என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள். நல்ல வேளையாக அவை கறிவேப்பிலை அளவுக்கு மேல் வளர்வதில்லை. டார்வின் தியரியைப் பொய்யாக்கியவை அவை. வலியதான டைனோசர்களின் இனமே அழிந்துவிட்ட நிலையில் இந்த அற்பப் பூச்சிகள் பிழைத்துக்கொண்டன. அவற்றை ஒழிப்பதற்காக வகுக்கப்படும் உத்திகளை மீறி அடுத்த கட்டத்திற்குப் போய்விடுகின்றன.

நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு மாத்திரை வந்தது. கரப்பானின் ரசனையை எப்படியோ கண்டுபிடித்து அதற்கேற்ப அந்த மாத்திரையைத் தயாரித்திருந்தார்கள். கரப்பானுக்கு அது கேட்பரீஸ் டெம்ப்டேஷன் போல் இருக்குமாம். அதைத் தின்றுவிட்டால் போதும், சிறிது நேரத்தில் கரப்பான் டீஹைட்ரேட் ஆகிவிடும், அதாவது அதன் உடலில் உள்ள நீரெல்லாம் வத்தி குளுக்கோஸ் ஏத்த வேண்டிய நிலைக்கு வந்துவிடும். நாம் முன்பே எச்சரிக்கையாக எல்லா தண்ணீர்க் குழாய்களையும் அடைத்து வைத்துவிட வேண்டும். தண்ணீரைத் தேடி அலைந்து அல்லாடிக் கடைசியில் மண்டையைப் போட்டுவிடும். மனிதனுக்கு என்ன ஒரு குரூர புத்தி பாருங்கள். என்னதான் பூச்சிகளை அழிப்பதாக இருந்தாலும் அதில் இத்தனை கிரிமினல் அம்சம் தேவைதானா என்று தோன்றுகிறது. கொசு அடிப்பதற்கு மின்சார மட்டை வந்தபோது அமோகமாக விற்பனை ஆனது. வாங்குவது தகுமா என்று நான் மிகவும் யோசித்தேன். அது எங்கே கிடைக்கும் என்று என் நண்பரான ஒரு ஹஜ்ரத் விசாரித்தார். கொசு அடிப்பதற்கு மிக அற்புதமான கருவி என்று வேறு பாராட்டினார்.

பிறகு வந்தது ஒரு விஷ சுண்ணக் கட்டி – பாய்ஸன் ச்சாக்பீஸ். அதை வைத்துக் கரப்பான் வரும் வழிகளில் எல்லாம் கோடு வரைந்துவிட வேண்டுமாம். அதன்பின் விசா எடுக்காமல் அந்த எல்லையைக் கரப்பான் தாண்டாது என்று நமக்கு ஒரு நெனப்பு! சமையலறையின் ஷெல்ஃபுக் கட்டைகளில் எல்லாம் அவ்வப்போது கோடு வரைந்து கொண்டிருந்தேன். நாம் போடும் கோடுகளை நாமே சந்தோஷமாகத் தாண்டிக் கொண்டிருக்கும்போது கரப்பானுக்கு மட்டும் என்ன தலைவிதியா? அவையும் படு குஷியாக எல்லை மீறி வாழ்ந்து செழித்தன. விஷங்களில் கொடிய விஷம் வறுமை என்பார்கள். அந்த வறுமைக் கோட்டிற்குள் இருக்கும்போதே நம் இந்தியாவின் பெரும்பான்மை ஜனத்தொகை அமோகமாக விளைந்து கொண்டிருக்கிறதே! இந்தக் கரப்பான்களும் இந்தியாவின் பிரஜைகள்தானே, அவற்றிடம் மட்டும் அந்தப் பண்பு இல்லாமலா போய்விடும்?

இப்போது லேட்டஸ்ட்டாக வந்திருப்பது ஸ்ப்ரே. ஹிட் என்று வந்திருக்கும் இந்த ’விஷப் பீச்சி’ இல்லத்தரசிகளிடம் சூப்பர் ஹிட்டாம். கொசுவுக்கும் ஒரு ஸ்ப்ரே வந்திருப்பதாக விளம்பரத்தில் காட்டுகிறார்கள். கொசுப்பட்டாளம் வந்தவுடன் கணவனும் பிள்ளையும் வீட்டுக்கு வெளியே ஓடுகிறார்கள். இதைப் பார்க்கும் இல்லத்தரசி உடனே ஒரு ஸ்ப்ரே கேனை எடுத்து வருகிறாள். கொசுப்படை அவள் முன் வந்து ஆஜராகிறது, “தேவதையே! உன் கையால் சாவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்பது போல. ஒரு பித்தானை அமுக்கி அந்தக் கொசுப்படையை அழித்துவிடுகிறாள் அவள். வாழ்க பெருங்கருணை!

என் சகதர்மினியும் ஒரு ஹிட் வாங்கி வந்தாள். இந்த மாடலில் ஸ்ப்ரேவைப் பீச்சுவதற்கு ஒரு பீச்சாங்கோல் இருக்கிறது. துப்பாக்கிக் குழாய் போல் அதை நேராகக் கரப்பானை நோக்கிக் குறி வைத்துவிட்டு பித்தானை ஒரே அழுத்து. கரப்பான்கள் அதிர்ச்சியில் நாலைந்து ரவுண்டு ஓடிவிட்டு அப்படியே டபக்கென்று மல்லாந்து கால்களை உதறிக்கொண்டு மவுத்தாகி விடுகின்றன. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

முதலில் சில நாட்கள் சகதர்மினியே ஹிட்டைப் பயன்படுத்திக் கரப்பான்களை உண்டு இல்லை என்று வேட்டையாடிக் கொண்டிருந்தாள். கருணையே வடிவானவள்! எப்படி இது முடிகிறது என்று யோசித்துப் பார்த்தேன். பூச்சிகளுக்கும் உணவிட வேண்டும் என்னும் சிந்தனை கொண்டவள். அதனால் நாம் சாப்பிட்டு விட்டுப் போடும் குப்பையில் ஏதாவது கொஞ்சம் மிச்சமிருந்தால் பாதகமில்லை என்று நினைப்பவள். ஜீவகாருண்யை. அவள்தான் ஹிட் அடித்துக் கரப்பான்களை ஒழிக்கிறாள்.

நினைத்துப் பார்த்தால் இது வாழ்வின் நியதி என்பது புலப்படும். மான்குட்டியை சிங்கம் வேட்டையாடுகிறது. குறிப்பாக, வேட்டைக்குத் தலைமை தாங்கிச் செல்வது பெண் சிங்கம்தான். தன் பசியைவிடத் தன் குட்டிகளுக்கு உணவு வேண்டும் என்பதற்காக. அந்த வேட்டையின் பின்னணியில் இருப்பது வெறி அல்ல, கருணைதான்.

தன் பிள்ளையின் தலையில் இருக்கும் பேனை எடுத்து நசுக்கிக் கொல்வதிலிருந்து பாச்சை பல்லிகள் எதுவும் உணவுகளில் விழுந்து வைக்கக்கூடாது என்று கொல்வதெல்லாம் தன் ரத்த உறவுகளாக உள்ள ஜீவன்களின் நலனுக்காகத்தான். இதே அடிப்படையில்தான் நாம் கருணை பொங்கும் ராமன் தன் கையில் வில்லுடன் இருப்பதையும், காதலனான கிருஷ்ணன் தன் கையில் சக்கரம் வைத்திருப்பதையும் பார்க்கிறோம். தீயோரை அழிக்கும் அந்தச் சக்கரத்தை ஓர் ஆழ்வாராகவே பாவிக்கிறது வைணவம் – சக்கரத்தாழ்வான்! கல்கி அவதாரம் கையில் வாள் ஏந்தி வருவார் என்றுதான் குறிப்பு. நபிகள் நாயகம் வாள் ஏந்தி வந்தார்கள்! ‘அல்லாஹ்வின் போர்வாள்’ – ஸைஃபுல்லாஹ் என்று அவர்களை இமாம் பூஸரி வருணித்தார்கள். அவர்கள் அகில உலகங்களின் அருட்கொடை என்கிறது குர்ஆன்.

இதைச் சொல்லும்போது ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. ’எல்லா உயிர்களும் இறைவடிவம். எனவே எல்லா ஜீவன்கள் மீதும் கருணை காட்டுங்கள்’ ராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசித்ததைக் கேட்டு உள்ளம் இளகிப்போன சீடர் ஒருவர் அதே சிந்தனையாகத் தன் வீட்டிற்குச் சென்றாராம். இரவில் கொசுக்கள் பிய்த்துப் பிடுங்கவே இறைவடிவமான அவற்றை அடிப்பதா வேண்டாமா என்று அவருக்குப் பெரிய சிக்கலாகி விட்டது. அவர்தான் கொசுக்களை இறைவடிவம் என்று பார்க்கிறாரே தவிர அவை அவரை இறைவடிவம் என்று பார்ப்பதாகத் தெரியவில்லை. நள்ளிரவு வரை தத்தளித்துக் கொண்டிருந்த அவர் தன் குருவிடமே இதற்கொரு முடிவைக் கேட்டுவிடலாம் என்று அவரின் வீட்டை நோக்கிச் சென்றார். அவர் வந்த போது ராமகிருஷ்ணர் தன் மெத்தையில் அமர்ந்து ஒவ்வொரு மூட்டை பூச்சியாகத் தேடிப் பிடித்து நசுக்கிக் கொண்டிருந்தாராம். ‘இந்தப் பூச்சிகளால் பெரும் தொந்திரவப்பா. ராவெல்லாம் தூங்கவிட மாட்டேங்குது’ என்றாராம். அழித்தல் என்பதும் இறைக்கருணையின் ஒரு அம்சம்தான் என்பதை இப்படித்தான் விளங்கிக் கொள்ளவேண்டும். படைத்தல் காத்தல் அழித்தல் ஒவ்வொன்றும் சார்பானவையே. சகதர்மினி நிம்மதியாக தோசை படைக்க வேண்டுமென்றால் கரப்பான்களை அழித்துத்தான் ஆகவேண்டும்!

எப்போதெல்லாம் கரப்பான் கிச்சனிலும் பாத்ரூமிலும் அதிகரித்து அட்டகாசம் செய்கிறதோ அப்போதெல்லாம் கையில் ஹிட்டுடன் தோன்றி அவற்றை சம்ஹாரம் செய்துகொண்டிருந்தாள் சகதர்மினி. மனிதர்களில் சூப்பர்மேன் உள்ளது போல் கரப்பானிலும் சில பறப்பான்கள் உண்டு! அப்படி ஒரு சூப்பர் கரப்பான் ஒருநாள் வந்தது. ‘பொறுத்தது போதும் பொங்கி எழு’ என்பதுபோல் அங்குமிங்கும் விர்ரென்று பறந்து அது டகல்பாஜி வேலை காட்டவும் சகதர்மினி அரண்டு போனாள். அப்போதிலிருந்து சம்ஹாரப் பணியை நான் ஏற்கவேண்டியதாயிற்று.

”வீல்” என்று அவளை அலறவைத்த கரப்பானுக்கு எதிராக நான் ஹிட்டாய்தம் ஏந்தினேன். பீச்சாங்குழலை நீட்டிவிட்டு அதை மூலை முடுக்கெல்லாம் தேடிக் கண்டுபிடித்து ஒரு ஹிட் அடித்தேன். அது லாவகமாகத் தாவிக்கொண்டு உணவு மேஜைக்கு அடியில் ஓடியது. இந்த ’விளையாட்டு’ என் பிள்ளைகளுக்கு ரொம்பவும் குஷி ஏற்றவே அவர்களும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டு வளைய வளைய வந்தார்கள். ‘அக்யூஸ்டு சப்ஜெயிலில் இருந்து தப்பித்து ஓடுகிறான். அவனை என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளுகிறேன் பார்’ என்பது போல் விரட்டித் துரத்திக் கடைசியில் ஒரு ஷாட்டில் மேற்படி ’கரபறப்பான் டபக்கென்று மல்லாந்து விழுந்து கைகளை அதாவது கால்களை உதறியது. சகராத்து நிலையில் எனக்கு எதிராக பத்துவா செய்கிறதோ? என்று பயமாக இருந்தது.

இதுவரை எத்தனை கரப்பான்கள் ஹிட் ஆயின என்று எண்ணவில்லை. ‘நூறாவது நாளை நோக்கி...” என்பது போல் இதுவும் போய்க்கொண்டிருக்கிறது. ஒருநாள் நிச்சயம் ‘மெகாஹிட்’ ஆகிவிடும்.

Thursday, April 12, 2012

மனக்கேணிஃபேண்ட்டஸி திரைப்படமான ‘TWILIGHT’-ல் ஒரு காட்சி. இரத்தக் காட்டேரி இனத்தைச் சேர்ந்த வாலிபன் (என்றும் பதினேழு) எட்வர்டு கல்லன் அவ்வூரின் பேரழகியான இசபெல்லா ஸ்வான் என்னும் பெண்ணுடன் காதலில் வீழ்கிறான். (கள்ளன்!) அவளும் அவனைக் காதலிக்கிறாள், அவன் ஒரு காட்டேரி என்பது தெரிந்தே! ஒரு விபத்திலிருந்து அவளின் உயிரை எட்வர்டு காப்பாற்றுகிறான், மிக அசாதாரணமான வேகத்துடனும் பலத்துடனும். இன்னொரு முறை, சுற்றுலா சென்ற ஊரில் இசபெல்லா நள்ளிரவில் தனியே வீதியில் உலாத்திக் கொண்டிருக்கும்போது சில போக்கிரிகள் அவளை வம்பிழுக்கும் போது எங்கிருந்தோ சட்டென்று வரும் எட்வர்டு அவர்களிடமிருந்து அவளின் கற்பைக் காப்பாற்றுகிறான். அன்று இரவு அவர்கள் இருவரும் உணவு உண்பதற்காக ஒரு ரெஸ்டாரண்ட்டுக்குப் போகிறார்கள். எட்வர்டு தன்னை ரகசியமாகத் தொடர்ந்து வருகிறான் என்று சந்தேகப்படும் இசபெல்லா அவன் எப்படித் தன்னைக் காப்பாற்ற அந்த இடத்திற்கு அவ்வளவு வேகமாக வந்தான் என்று அவனிடம் வினவுகிறாள். பிறரின் மனதைப் படிக்கும் ஆற்றல் தனக்கு இருப்பதை அப்போது எட்வர்டு அவளிடம் சொல்கிறான். அந்த உரையாடல்:
நீ என்னைப் பின் தொடர்கிறாயா?”
“நான்... நான் உன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று உணர்கிறேன்”
“அப்படீன்னா நீ என்னைத் தொடர்ந்து வந்திருக்க?”
“உனக்கு என் உதவி தேவைப்படும்வரை இடைவெளி இருக்கட்டும்னு இருந்தேன். அப்போதான் அந்தப் பொறுக்கிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் கேட்டேன்.”
“என்ன சொல்ற, அவுங்க நெனக்கிறத நீ கேட்டியா?”
”………”
“அப்படீன்னா, நீ என்ன… நீ மனதைப் படிக்கிறவனா?”
“இங்கே இருக்கிற எல்லோரோட மனதையும் என்னால படிக்க முடியுது, உன் மனதைத் தவிர. அவுங்க மனசுல இருக்கிறதெல்லாம்… பணம், காமம், பணம், காமம்... அப்புறம் உன் மனதைப் பார்த்தால்… ஒன்றுமே இல்லை. இது ரொம்பவும் வெறுப்பூட்டுவதா இருக்கு.”
என் மனதில் ஏதாவது கோளாறா?”
(இசபெல்லா இப்படிக் கேட்டதும் எட்வர்டு ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறான்.)
“பாரு, மனங்களை என்னால படிக்க முடியுதுன்னு நான் சொல்றேன், நீ உன்னிடம் ஏதோ குறை இருக்குன்னு நெனக்கிற.”

இந்தக் கடைசி வசனம் என் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. எத்தனை அழகான வசனம்! இசபெல்லாவும் எட்வர்டும் இரண்டு விதமான மனங்களின் பிரதிநிதிகள். ஒரு மனம் மிகவும் சாதாரணமானது, களங்கமற்றது. இயற்கையான நிலையில் எந்தக் கீறலும் இல்லாமல் நிர்மலமாக இருப்பது. ஒரு குழந்தையின் மனம் என்று சொல்லலாம். இன்னொரு மனம் சராசரி மனநிலைக்கு அப்பாற்பட்டது. அசாதரணமான ஆற்றல் ஒன்று அதனிடம் லபித்துள்ளது. பிற மனங்களுக்குள் ஊடுருவிப் பார்க்கும் சக்தி அதற்குள்ளது. ஆனால் அந்த நிலை அதற்கு ஒரு வரமாக இல்லை. சராசரி மனங்களின் விகாரங்களைக் கண்டு கண்டு நொந்து போயிருக்கிறது அது.

தூய்மையான காற்றை நாம் பார்க்க முடிவதில்லை. இசபெல்லாவின் மனம் அப்படியிருக்கிறது. அதனால்தான் எட்வர்டால் அதனைப் படிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே அவன் அவள்மீது காதல் கொள்கிறான். அவளின் மனமே அவனுக்குத் தூய ஆக்ஸிஜன் போல் புத்துணர்ச்சி அளிப்பதாகிறது.

மாசடைந்த புகையை நாம் பார்க்க முடிகிறது. அந்த விடுதியில் அமர்ந்திருப்பவர்களின் மனங்கள் அப்படியிருக்கின்றன. அதனால்தான் எட்வர்டால் அவர்களின் எண்ணங்களைப் படிக்க முடிகிறது.

தூய காற்றைக் கண்கள் காணமுடியவில்லை என்றால் அது காற்றின் குறை அல்லவே? ஆனால் இசபெல்லா தன் மனத்தில் ஏதேனும் குறை இருக்குமோ என்று நினைக்கிறாள். இது அவளுடைய அப்பாவித்தனத்தைக் காட்டுகிறது. இதை நினைத்தே எட்வர்டு நமட்டுச் சிரிப்பை உதிர்க்கிறான். அமானுஷ்யமான ஆற்றல் கொண்டுள்ள தன் மனம்தான் சிக்கலானது, குறை கொண்டது என்று அவன் சொல்கிறான்.

மனித மனதில் பல ஆற்றல்கள் மறைந்து கிடக்கின்றன என்று ஆன்மிகவாதிகளும் உளவியலாளர்களும் சொல்கிறார்கள். ஆனால் அந்த ஆற்றல்கள் எந்த வகையில் விழிப்படைகின்றன என்பதைப் பொருத்தே அவை வரமா சாபமா என்று சொல்ல முடியும். மனத்தின் அமானுஷ்யமான ஆற்றல் என்பது எல்லா நிலைகளிலும் மேன்மையானதாக அமையும் என்பதில்லை.

விழிப்படையக் கூடாத நேரத்தில் விழித்துக்கொள்ளும் மனோசக்தி, அல்லது விழிக்க வேண்டிய முறையில் அல்லாது விபத்தாக விழித்துக்கொள்ளும் மனோசக்தி பெரும்பாலும் பாதகமாக அமைந்துவிடக்கூடும்.

ரஸ்புடினுக்கும் பற்பல பாபாக்களுக்கும் கிடைத்த மனோசக்திகளை நான் இவ்வகையில்தான் காண்கிறேன். அதற்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள இடைவெளி மிகவும் பெரிது என்றே புரிந்துவைத்திருக்கிறேன், ஆன்மிகத்தில் அவற்றை ஒத்த ஆற்றல்கள் வெளிப்படலாம் என்றாலும்கூட.

சட்டென்று சொல்லாமல் கொள்ளாமல் (கொல்லாமல்!) விழிப்படைந்துவிடும் மனோசக்தியானது அதனைப் பெற்றவரால் கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது நிலைமை இன்னும் பரிதாபம். அமெரிக்காவில் ஒரு பெண்மணிக்குத் தலையில் அடிப்பட்ட பின் எல்லா வானொலி அலைவரிசைகளும் இலவசமாகவே கேட்க ஆரம்பித்துவிட்டதாம், வெறும் காதுகளில், அதுவும் எல்லாம் ஏககாலத்தில்! குறிப்பிட்ட அலைவரிசையை மட்டும் தேர்ந்தெடுப்பதற்கோ அல்லது வானொலியை அணைப்பதற்கோ அந்தப் பெண்ணின் காதுகளில் எந்த வசதியும் இல்லை! இந்த நரக வேதனையை நினைத்துப் பார்த்தாலே குலை நடுங்குகிறது ஐயா! (ஒருவேளை நம் பெண்களுக்கு இப்படி எல்லா மெகா சீரியல்களும் தெரிய ஆரம்பித்துவிட்டால் அதை சொர்க்க வரமாக நினைப்பார்களோ?)

உண்மையான ஆன்மிகவாதிகள் வரமாக நினைப்பது மனோசக்திகளையோ அஷ்டமா சித்திகளையோ அல்ல, மனமற்ற நிலையைத்தான். மற்றவரின் எண்ணங்கள் தன் மனதில் பிரதிபலிக்கும் நிலையை அல்ல, அப்படி நடப்பதற்கு முற்காரணமாக அமைவதான, தன் மனதில் எந்த எண்ணச் சலனமும் இல்லாத மௌன நிலையைத்தான்!

ரமண மகரிஷியின் காலத்தில் நடந்ததாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. அவருடைய முக்கியமான வேலையே தன்னைக் காண வருபவர்களின் மனத்தில் எண்ணங்களின் அலைகளை சாந்தப்படுத்துவதாக இருந்தது. அப்போது சாமியார் ஒருவரின் சீடர்கள் ரமணரின் சீடர்களைச் சந்தித்துத் தங்கள் குருவின் ஆன்மிக ஆற்றல்களை, அவரின் சித்திகளின் பெருமைகளை எல்லாம் சொல்லி ‘இப்படியெல்லாம் உங்கள் குருவால் செய்ய முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு ரமணரின் சீடர்கள் மிகவும் அழகான ஆழமான பதில் ஒன்றைச் சொன்னார்களாம்: “உங்கள் குருவிற்கு இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என்ற மனம் இருக்கிறது. அதனால் செய்கிறார். ஆனால் எங்கள் குருவிற்கு இதையெல்லாம் செய்யவேண்டும் என்று எண்ணுவதற்கு ஒரு மனம் இல்லையே!”

உண்மையில் மிகப் பெரிய அற்புதம் இந்த மனமற்ற நிலைதான். இந்தக் கருத்து ஜென் தத்துவத்தில் மிகவும் வலியுறுத்தப்படும் ஒன்று. “எப்போது ஒரு மனிதன் அசாதாரணமானவன் ஆகிறான்?” என்று சீடன் கேட்ட கேள்விக்கு ஒரு ஜென் குரு இப்படி பதில் சொல்கிறார், “அவன் மிகவும் சாதாரணமாக இருக்கும்போது!”

தான் அசாதாரணமாக இருக்கவேண்டும் என்னும் எண்ணம்தான் எல்லா மனிதர்களின் மனதிலும் சதா ஓடிக்கொண்டே இருக்கிறதே? அதை நிதர்சனமாக்குவதற்கு அவர்கள் செய்யும் பிரயத்தனங்கள் கொஞ்ச நஞ்சமா? மனிதனின் முயற்சிகளுக்கான உந்து சக்தி என்று இதனைப் பார்க்கலாம் என்றாலும் அதன் எல்லைகளை அவன் உணராதபோது அது தன்முனைப்பின் தாண்டவம் ஆகிவிடுகிறது. அந்த ஜென் குரு சொன்னது போல் மிகவும் சாதாரணமாக இருப்பதுதான் இந்த உலகில் மிகவும் அசாதாரணமானது. ஆனால் ‘நான் சாதாரணமானவன்’ என்று மனதில் நினைப்பு வந்துவிடுமானால் முதலுக்கே மோசமாகிவிட்டது என்று பொருள்!

மனதின் இந்தச் சிக்கலை இமாம் கஸ்ஸாலி அவர்கள் விளக்கியிருக்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள்: “எளிய ஆடைகள் அணிவது ஓர் நற்பண்புதான். ஆனால் ‘மக்கள் என் ஆடைகளைப் பார்த்து என்னை மிகவும் எளிமையானவன் என்று போற்றுவார்கள்’ என்னும் நினைப்பில் ஒருவன் எளிய ஆடைகளை அணிந்தால் அது ஆடம்பரமான ஆடைகளை அணிவதை விடவும் மிகவும் கர்வம் பிடித்த காரியம் ஆகும். அப்போது அது ஒரு நற்பண்பே அல்ல.”

மெஹர் பாபாவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கே நினைவு கூரலாம். பேசுவதையே நிறுத்திவிட்டு மௌன நிலையில் கரைந்து கொண்டிருந்தவர் மெஹர் பாபா. அவருடைய மனக்கடலில் எண்ண அலைகள் எழுவதே அபூர்வமாகிவிட்டதாம். நாமெல்லாம் சிந்தனை இல்லாமல் இருப்பதற்குப் பெரும்பாடு படுகிறோம் என்றால் அவர் ஓரிரு சிந்தனைகளைக் கொண்டு வருவதற்கே முயற்சி செய்யவேண்டி இருந்ததாம். அப்போது, பிறரின் மனதில் ஓடும் எண்ணங்களைச் சரியாக வாசித்துச் சொல்லிவிடும் ஆற்றல் கொண்ட ஒருவன் அவரை ஒருமுறை சந்திக்க வருகிறான். கண்களை மூடி அமர்ந்து கொண்டு தன் முன்னால் உள்ள மனிதரின் மனதில் ஓடும் எண்ணங்களை அப்படியே சொல்லிவிடுவான். மெஹர் பாபாவின் முன் அவன் அமர்த்தப்படுகிறான். கண்களை மூடி அமர்ந்த அவன் ஓரிரு நிமிடங்களிலேயே வெலவெலத்துப் போய்விட்டான். மெஹர் பாபாவின் மனதை அவனால் படிக்கவே முடியவில்லை. அவர் தப்பித்து எங்காவது போய்விட்டாரா என்று கண்களை லேசாகத் திறந்து பார்க்கிறான். அவர் அங்கேயே சிரித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். மீண்டும் முயற்சி செய்கிறான். ஒருமணி நேரத்தில் அவன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டான். ‘என்ன வகையான மனிதர் இவர். நான் எவ்வளவோ துழாவிப் பார்த்தேன், இவரின் மனதில் ஒரு சிந்தனைகூட இல்லை!’ என்று சொன்னானாம்.

சூஃபித்துவத்தின் பால பாடமே தனக்கு எவ்விதச் சக்தியும் இல்லை என்பதுதான். “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்னும் மந்திரம் இஸ்லாமிய அடிப்படை மந்திரங்களில் ஒன்று. “அல்லாஹ்வைக் கொண்டே அன்றி எனக்கு எவ்வித ஆற்றலோ சக்தியோ இல்லை” என்பதே அதன் பொருள். உடல் சக்தி, மனோ சக்தி எதுவும் எந்தப் படைப்புக்கும் சுயமாக இல்லை. ஆனால் அல்லாஹ்வின் சக்தி நம்மில் பிரதிபலித்தால் மட்டுமே நம்மால் எதையும் செய்ய முடியும். ஒரு கொசுவின் இறகுகள் அசைவதும் அவனின் சக்தியைக் கொண்டுதான். கண்கள் இமைப்பதும் இறைவனின் ஆற்றலைக் கொண்டுதான்.

இக்கருத்தை மௌலானா ரூமி இப்படிச் சொல்கிறார்கள்:
“லா ஹவ்ல வலா குவ்வத்த என்று
மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்க நினைத்தேன்
என்னால் அது முடியவில்லை!”
அதாவது, எனக்குச் சக்தியில்லை என்று கூறுவதற்கான சக்தியும் இறைவனிடமிருந்தே வரவேண்டும்!

இறைத்தூதர்களும் இறைநேசர்களும் செய்த பல அற்புதங்கள் உள்ளன. ஆனால் உண்மையில் அவற்றை அவர்கள் விரும்பிச் செய்யவில்லை. சொல்லப்போனால் அவற்றைச் செய்தது அவர்களே அல்ல. அவை அவர்களின் வழியாக நிகழ்ந்தவை மட்டுமே. முள்ளை முள்ளால் எடுப்பது போல் ஒரு தீய மனதின் ஆட்டத்திற்கு எதிராகத்தான் வேறு வழியின்றி அவை நிகழ்த்தப்பட்டிருக்கும். மூசா நபியின் அற்புதம் எகிப்தின் மாந்திரீக வாதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது போல். அப்போதும் கூட அந்த அற்புதம் அவர்களுடைய கைத்தடியின் வழியாகத்தான் நிகழ்ந்தது. கைத்தடிக்கு எப்படி சுய இச்சை இல்லையோ அதே போல் மூசா நபிக்கும் சுய இச்சை இல்லை. இதுதான் இறைத்தூதர்கள் மற்றும் இறைநேசர்களின் மனநிலை.

என் குருநாதர் சொன்னார்கள், “இறைநேசர்கள் ஒருபோதும் அற்புதங்கள் நிகழ்த்த ஆசைப்பட மாட்டார்கள். அது எப்போதாவது அவர்களின் வழியே நிகழும்போதும்கூட அதைக்கொண்டு பிரபலமாகிவிடுமோ என்று கூச்சப்படுவார்கள், எப்படியென்றால், ஒரு பெண் தன் மாதவிடாய் பிறருக்கு வெளியாகிவிடுமோ என்று கூச்சப்படுவதைப் போல!”

’விளையாட்டின் ஆனந்தம்’ என்னும் பாடலில் குணங்குடி மஸ்தான் (ரஹ்) அவர்கள் பாடுகிறார்கள்:
“அண்ட கோடிகளும் ஓர் பந்தெனக் கைக்குள்
அடக்கி விளையாட வல்லீர்
அகிலம் ஓர் ஏழினையும் ஆடும் கறங்குபோல்
ஆட்டி விளையாட வல்லீர்”
இறைவனின் அருளைக் கொண்டு இப்படியான ஆற்றல் ஓர் இறைநேசருக்கு இருப்பது ஒன்றும் இயலாத காரியமல்ல. ஆனால் இறைநேசரின் உண்மையான மேன்மை இத்தகைய ஆற்றலை அடைவதில் இல்லை. மாறாக இப்படிப்பட்ட ஆற்றலைக் கொண்டு சித்துவேலைகள் செய்யாமல் இருப்பதில்தான் இருக்கிறது. காதலியைச் சந்திக்கப் போய்க்கொண்டிருக்கும் காதலன் ஒருவன் தெருவில் சிறுவர்கள் விளையாடும் பந்தினைப் பொறுக்கியெடுத்து வித்தை காட்டி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்க மாட்டான். இந்தப் பிரபஞ்ச வீதியில் உருண்டுகொண்டிருக்கும் பந்துகளிடம் இறைநேசர்களுக்கு என்ன வேலை இருக்கிறது? அவர்கள் தங்கள் இதயம் கவர்ந்த இறைவனை அடையச் சென்றுகொண்டிருப்பவர்கள் அல்லவா?

ஆன்மிகப் பயிற்சிகளில் ஒரு கட்டம் வருகிறது. அது மனம் என்னும் மண்ணை ஆழமாகத் தோண்டுவது போன்றதுதான். அப்போது ஒரு நிலை வரை வெறும் மண் மட்டுமே வந்துகொண்டுள்ளது. பிறகு கசடுகள் குழைந்த கச்சா எண்ணெய் வருகிறது. மனத்தின் ஆற்றல்கள் வெளிப்படுவதுதான் அந்தக் கச்சா எண்ணெய். அதை அடைவது ஒன்றும் பெரிய வேலை அல்ல. அந்தக் கச்சா எண்ணெய்யைத் தூய்மை செய்வதுதான் உண்மையான பணி. அவசரப்பட்டு கச்சா எண்ணெய்யையே விளக்கில் கொட்டுபவன் விளக்கைப் பழுதாக்கி விடுவான். அதை அப்படியே வாகனத்தில் ஊற்றுபவன் வாகனத்தைப் பழுதாக்கி விடுவான்.

உண்மையான இறைஞானிகள் தங்கள் மனத்தின் கச்சா எண்ணெய்யைத் தூய்மையாக்கி விளக்கில் ஊற்றி விட்டார்கள். தெய்விகத்தின் ஒளிச்சுடரை ஏற்றி வைத்து நமக்கெல்லாம் வெளிச்சம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்!

Saturday, April 7, 2012

ரோ…ஜா
இந்த ரோஜா
இந்தப் பனித்துளிகள்…

வான்மணப் பெண்ணின்
துப்பட்டாவில்
வைர அலங்காரமா?

உள்ளுருகும் பக்தியால்
உறங்காத பாவை
வைகறை நீராடி
வருகின்றாளா?

காதலனின் இதயத்தின் மீது
காதலி சிந்திய
கண்ணீர்த்துளிகளா?

காலம் பல காத்திருந்து
காதலனைக் கண்டதால்
நாணத்தில் சிவந்த கன்னம்
நனைந்துள்ளதா
ஆனந்தக் கண்ணீரில்?

ஒருநாள் புன்னகை
பலநாள் அழுகை
யாருடைய விதியோ?


இந்த ரோஜா
இந்தப் பனித்துளிகள்…

இரவெல்லாம் அழுதிருந்த
இறைநேசரின்
சிவந்த விழிகளா?

மௌனம் கலைத்து
மொழிந்த ரகசியத்தின்
வார்த்தைகள்
உதடுகளிலேயே
உறைந்து போனதா?

இந்த ரோஜா
இந்தப் பனித்துளிகள்...

நபிக்கு இப்படித்தான்
வியர்த்தது என்று
செடிகள் நம்மிடம்
செப்பும் செய்தியா?

நபியின் நறுமணத்தை
வாங்கிச் செல்ல வந்திருக்கும்
வானவர்களா?

இமாம் ஹுசைனின்
இன்னுடல் மீது
வானத்திலிருந்து
வாஞ்சைநபி அழுத
காட்சியின் நிழற்படமா?

இந்த ரோஜா
இந்தப் பனித்துளிகள்...


Friday, April 6, 2012

ஆதம் கீதம்
வலது பக்கம் கடல்
இடது பக்கம் மலை
அலைகள் புரளும் கரை

மண்ணாகவில்லை நீர்
நீராகவில்லை மண்
உயிராகவில்லை உடல்
உடலாகவில்லை உயிர்

இரண்டிற்கும் இடையில்
இரண்டினும் வேறாய்
இருந்தேன் நான்

மூல ஒளியின்
முகவரியில் இருந்து
முதல் ஒளி
என்னைத் தீண்ட
எதிர்பார்த்திருந்தேன்

இருளும் ஒளியும்
இல்லாத பொழுதில்
ஒளியின் ஒளி வந்து
வழிகாட்டக் காத்திருந்தேன்

தூது வந்த
உயிரின் மூச்சில்
உள்ளும் புறமும்
நறுமணம் ஆனது
உயிரின் உயிருடன்
திருமணம் ஆனது

தன்னுள் இருந்ததை
என்னுள் வைத்தான்

ஒளிச்சிறகுகளின்
எல்லைக்கு அப்பால்
ஏகனின் ஒளி காண
ஏகும் ஒளி
என்னுள் வந்ததால்
விண்ணிலும் மண்ணிலும்
விரிந்த சிறகுகள்
அத்தனையும் எனக்குள்
அடங்கின

இறைவனின் பெயருடன்
இணைந்த பெயருக்கு
வடிவாகி நின்றேன்
அனைத்துப் பெயர்களும்
அருளானது

புறத்தில் ஒளியைப்
பார்க்கும் நெருப்பு
அகத்தில் ஒளியைப்
பார்க்கவில்லை
மண்ணின் முன் அது
இருளானது

முகூர்த்தம் முடிந்து
முதலிரவானது
அகத்தின் ஒளியைத் தேடினேன்
அகப்படாததால் வாடினேன்

இணையில்லான்
என்னிலிருந்து எனக்கொரு
இணை செய்தான்
துயிலும்போது
துணை செய்தான்

வளைந்த எலும்பில்
வடிவாகி வந்தாள் அவள்

அந்தரங்கத்தின் சாரம்
ஆனது என் தாரம்

தன்னிலிருந்து
என்னுள் வைத்ததைப்
பெண்ணில் காணச் செய்தான்
பேரின்பம் பேணச் செய்தான்

உயிரின் உயிரை
உடலின் உடலில்
கண்டேன்
காதல் கொண்டேன்

சுடரில் சுகம் பெறும் முன்
விளக்கை வாழ்த்தச் சொன்னான்

அடிமை தன் சாரத்தில்
அமைதி பெற்றிட
அடிமைத்தனத்தின் சாரம்
அவசியம் அல்லவா?

முதல் ஒளியான
விளக்கின் மீது
விளம்பும் வாழ்த்து
மூல மந்திரத்தின்
விளக்கம் அல்லவா?

அகிலங்களின் இறைவனுடன்
அகிலங்களின் அருட்கொடையை
இணையாக்காது
இணைத்து வைப்பதே
இணையுடன் இணைவதற்கு
மணக்கொடை ஆனது

தொழுகைகள்
சொர்க்கத்தின்
திறவுகோல் அல்லவா?

வெளிப்பட்ட உள்ளொளி
வெளிச்சமிட்ட உள்ளன்பில்
களித்திருந்தேன்…
கள்ளமில்லாக்
காதல் நாட்கள்
கழித்திருந்தேன்

நெருப்பின் ஒளி
நேச மொழி
பகர்ந்து மயக்கியதில்
விருப்புற்றுச் சுவைத்தாள்
விலக்குக் கனி

ரசித்ததால்
புசித்தேன் நான்
சோதிக் கனி
பாதிச் சுவைத்துத் தந்த
மீதிக்கனி

சோதனையில் தாழ்ந்தோம்
வேதனையில் வீழ்ந்தோம்

என்னுடலைத் தன்னுடலின்
மூலமாய்க் கொண்டவள்
என்னுடலின் மூலத்திற்கு
அழைத்து வந்தாள்

ரத்தம் ஓட்டுவான் என்று
வானவர்கள் சொன்னவனின்
ரத்த நாளங்களில் ஓடுபவன்
செய்த சூழ்ச்சியால்,
உயிரின் பன்னீர்
உருக்கொள்ளும்
கருவறை வாசலில்
கசிந்தது
உதிரச் செந்நீர்

அத்தனை பெயரையும்
அப்பால் ஆக்கி
முத்தாகிச் சுடர்ந்த
முதல் ஒளியின் பெயரை
முன்வைத்துக் கேட்டேன்
மன்னிப்பைப் பெற்றேன்

தீயொளியின் பக்கம்
திரும்பியவர்க்கெல்லாம்
மன்னிப்பைப் பெறும் மார்க்கம்
முதல் ஒளியின் முற்றத்தில்
போய் நின்று கேட்பதன்றோ?

என்னுள் வந்த
ஒளியை விட்டு
ஒதுங்கிப் போனவன்
என்னுருவில் வரும்
விழுதுகளை எல்லாம்
தீயில் வீழ்த்திவிட நாடுகிறான்
திட்டங்கள் பலவும் போடுகிறான்
நயமாய் நாடகம் ஆடுகிறான்

என்னுள் வந்த ஒளியை
நேசமுடன் நெஞ்சில்
ஏந்தி வருபவரைக் கண்டால்
எரிந்துவிடும் அச்சத்தில்
தூர தூரம் ஓடுகிறான்.