Tuesday, November 30, 2010

ஆறு முகங்கள்

சுவிஸ் நாட்டு ஸ்படிகவியல் விஞ்ஞானி (CRYSTALLOGRAPHER ) லூயிஸ் ஆல்பெர்ட் நெக்கர் தன் ஆய்வுக்கூடத்தில் ஒரு ஸ்படிகத் துகளை ஆழ்ந்து நோக்கி ஆராய்ந்து கொண்டிருந்தார். ஆராய்ச்சி மண்டையைக் கசக்கவே சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று வெளியே சென்று வந்தார். (பாத்ரூம் போயிருக்கலாம். அல்லது டீ குடிக்கப் போயிருக்கலாம். அல்லது போயிருக்கலாம். விடுங்க மனுஷன.) அவர் திரும்பி வந்து அந்த ஸ்படிகத் துகளைக் கண்டபோது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தத் துகள் திரும்பிக் கிடந்தது. கூடத்தில் வேறு யாருமில்லை. துகள் எப்படிப் புரண்டது? என்று யோசித்தார்.( ஸ்படிகத் துகள் மூச்சாவுக்கோ அல்லது டீ குடிக்கவோ போய் வந்திருக்க முடியாது.)
 அவர் யோசனையுடன் அந்த ஸ்படிகத் துகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது மீண்டும் சட்டென்று புரண்டு படுத்தது! என்னடா இது, ஒரு துளியூண்டு ஸ்படிகம் இப்படி டக்காயட்டி வேலை காட்டுது என்று குழம்பிப்போய் நெக்கர் அந்தத் துகளை ஆழ்ந்து கவனித்தார். என்ன நடக்கிறது என்பது சட்டென்று அவர் மூளையில் பிடிபட்டது. உண்மையில் அந்தத் துகள் புரளவெல்லாம் இல்லை. அது தேமேவென்று அப்படியேதான் கிடக்கிறது. நெக்கரின் மூளையில் உள்ள பார்வைப் புலனில்தான் அந்த காட்சி மாற்றம் நடக்கிறது. அந்த ஸ்படிகத்தின் வடிவம் அதனை இரு வேறு முறைகளில் பார்க்கத் தக்கதாக உள்ளது. கீழ்நோக்கி இடதுபக்கம் சாய்ந்ததாக அல்லது மேல்நோக்கி  வலதுபக்கம் சாய்ந்ததாக.1832 -ல் நெக்கர் தான் கண்டறிந்த அந்த "காட்சிப் பிழை" உருவமான "NECKER CUBE " (நெக்கர் கனசதுரம்) படத்தை வெளியிட்டார். மனித மூளையின் செயல்பாடுகளை, அது புறவுலகத்தை அகவயமாக உருவகப் படுத்திக்கொள்ளும் புலப்பாட்டு முறையை ஆராயும் நரம்பியலர்கள் (NEUROLOGISTS ) தங்கள் ஆய்வில் நெக்கர் கனசதுரம் போன்ற இருண்மை வடிவங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தையும் முக்கியமாகக் காண்கிறார்கள். 

கனசதுரத்தின் இந்தப் பண்பும் "AS ABOVE SO BELOW " என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகக் காண்கிறேன். அதாதவது அந்தத் தத்துவத்திற்கான கச்சிதமான வடிவமாக கனசதுரம் இருக்கிறது. கனசதுர இறையாலயமான கஃபாவிற்கும் இதற்கும் ஒரு தொடர்புண்டு. இறைவிதானத்தில் இருந்து இறங்கும் அருள் கஃபாவில் இறங்குகிறது, அங்கிருந்து உலகெங்கும் பரவிச் செல்கிறது. அதேபோல் வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் கஃபாவில் திரண்டு அங்கிருந்து இறைவிதானத்திற்கு உயர்த்தப் படுகின்றன என்பதை இந்த வடிவத்தின் இருண்மைப் பண்பு பிரதிபலிக்கின்றது எனலாம். 

ஒரு கனசதுரத்தில் ஆறு பக்கங்கள் உள்ளன என்பது பல கோணங்களில் சிந்திக்க வைக்கிறது. ஆங்கிலத்தில் '6 SIDES ' என்று கூறுவதை '6 FACETS ' என்றும் சொல்லலாம். அதை அப்படியே தமிழில் சொல்வதென்றால் "ஆறுமுகம்" என்றாகிறது. கனசதுரத்தின் ஆறு பக்கங்கள் மூன்று பரிமாண இடத்தின் (3D SPACE ) X , Y , Z என்னும் மூன்று அச்சுக்களின் (AXIS ) வழியே தோன்றும் ஆறு திசைகளைக் குறிக்கும். இடம், வலம், மேல், கீழ், முன், பின் என்று ஆறு திசைகளைக் குறிக்கிறது. இறைவனின் அருள் பிரபஞ்சமெங்கும் பரவுவதை ஆறு திசைகளில் பரவுவதாகக் கொண்டு கஃபாவின் ஆறு பக்கங்கள் குறிக்கின்றன. 

இறைவனின் பண்புகளைக் குறித்து சிந்தித்த இந்து ஆன்மிக மரபு மூன்று பண்புகளை முதன்மைப்படுத்தி "சத் சித் ஆனந்தம்" என்று அவனை வருணித்தது. இவற்றுடன் தொடர்புடைய பண்புகளில் "அழகு" என்னும் பண்பு சிறப்பிடம் பெற்றது. உலகின் எல்லா ஆன்மிக மரபுகளும் இறைவன் அழகு மயமானவன் என்னும் கருத்தைக் கொண்டுள்ளன. அவனுடைய அழகு பிரபஞ்சமெங்கும் வெளிப்பட்டுள்ளது என்னும் தத்துவத்தைக் குறியீடாகச் சொல்ல நினைத்தவர்கள் அதற்கு ஒரு அழகிய இளைஞனின் வடிவத்தைக் கொடுத்தார்கள். ஆறு திசைகளிலும் அந்த அழகு விரிகிறது என்று காட்ட அந்த உருவத்திற்கு ஆறு முகங்களை வைத்தார்கள்.


அழகு என்பதற்குச் செந்தமிழில் எழில், முருகு போன்ற சொற்களும் உள்ளன. அழகு என்னும் தத்துவமே குறியீடாக "முருகன்" என்று உருவகிக்கப் பட்டது. ( அதனால்தான் திரு.வி.க தன் நூலுக்கு 'முருகன் அல்லது அழகு' என்று பெயர் வைத்தார். அதில் இந்தத் தத்துவத்தின் விளக்கத்தைக் காணலாம்.'அழகன்' என்று கூறாமல் 'அழகு' என்று சொல்லியிருப்பது OBJECT IS SUBJECT என்று அவர் சொல்லுவதாகப் படுகிறது). அந்த அழகு ஆறு திசைகளில் விரிவதால் 'ஆறுமுகம்' (சண்முகம்) ஆனது. ஒவ்வொரு முகமும் ஒரு திசையைக் குறிக்கும். அதில் மேல்நோக்கிய முகம் முக்கியமானது என்பார்கள். அதற்கு "அதோமுகம்" என்று பெயர். AS ABOVE SO BELOW என்பதால் போலும்!

திசை என்பதைக் குறிக்க "முகம்" என்னும் சொல் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருப்பதைப் போலவே அரபியிலும் இருக்கிறது. திருக்குரானிலேயே அப்படிப் பயன்படுத்தப் பட்டுள்ளதைக் காண்கிறோம்.
கபாவின் திசை தெரியாவிட்டால் எந்த திசையை மணம் உணர்கிறதோ அந்த திசையை நோக்கித் தொழுகை செய்யலாம் என்று அனுமதி அளித்து இறங்கிய வசனம் அது.
"கிழக்கும் மேற்கும்
அல்லாஹ்விற்குரிய.
எத்திசை நீ திரும்பினும்
அத்திசையில் அல்லாஹ்வின் 
முகம் நிறைந்துள்ளது.
நிச்சயமாக அல்லாஹ்
எங்கும் நிறைந்தவன்
எல்லாம் அறிந்தவன்."
(2 : 115 )

என்பது அந்த வாசத்தின் கருத்து. அரபி மூலத்தில் "வஜ்ஹுல்லாஹ்" என்னும் சொற்றொடர் வந்துள்ளது. "அல்லாஹ்வின் முகம்" என்பது அதன் நேரடிப் பொருள். முகம் என்பது இறைவனின் உள்ளமையைக் குறிக்கும் என்று சூஃபிகள் கூறுகின்றனர். 'அல்லாவின் திசை' என்னும் சார்புப் பொருளும் சொல்லப்படுகிறது.

ஆறு திசைகள்  கஃபாவுடன்  மட்டுமல்ல, அதனை மையப்புள்ளியாக வைத்து நிகழ்த்தப்படும் தொழுகையுடனும் தொடர்பு கொண்டுள்ளன. அதைப் பின்னர் சொல்கிறேன்.  

Monday, November 29, 2010

ஏழு மணி காட்சி


அடர்ந்து கிடக்கின்றன
அருகம்புற்கள் அழகாய்
சாக்கடை ஓரங்களில்.

குளிருக்கு இதமாய்ச்
சுடச்சுட தேநீர் தந்து
மக்களை மகிழ்விக்கிறது
சாக்கடை ஓரத்தில்
டீக்கடை ஒன்று.

அருகம்புல் மேயும்
காராம்பசுவின்
கண்ணில் பளபளத்தது
அனைத்தையும் இணைத்து
இழையோடும் சரடு.

மனதைப் போலவே இருந்தது
இந்த ஒரு காட்சியும்.

Wednesday, November 24, 2010

இறங்கி வந்த புள்ளி

"ஒரு சதுரம் எப்போது சதுரமாக இருப்பதில்லை?" (WHEN A SQUARE IS NOT A SQUARE ?). டான் பிரவ்ன் எழுதிய "ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ்" நாவலில் வரும் கேள்வி இது. விடை ரொம்ப சிம்பிள்தான். 45 டிகிரி கோணத்தில் ஒரு சதுரத்தைச் சாய்த்தால் அது 'டைமன்ட்' வடிவம் ஆகிவிடும்! இது ஒரு சித்து விளையாட்டு போலத்தான்.

நான் கேட்க வந்த கேள்வி வேறு. ஒரு சதுரம் எப்போது வட்டமாகிறது? இதற்கான விடையைக் கொஞ்சம் விளக்கித்தான் ஆகவேண்டும். 2D - யில், அதாவது இரு பரிமாணத்தில் குறைவான பக்கங்கள் கொண்ட "CLOSED FIGURE " முக்கோணம். அதிலிருந்து ஆரம்பித்து பக்கங்களைக் கூட்டிக்கொண்டே போனால் சதுரம் (SQUARE ), ஐங்கோணம் (PENTAGON ), அறுகோணம் (HEXAGON ), எழுகோணம் (HEPTAGON / SEPTAGON ), எண்கோணம் (OCTAGON ), நவகோணம் (NONAGON / ENNEAGON ), தசகோணம் (DECAGON ) இப்படிப் போய்க்கொண்டே இருக்கும். பக்கங்கள் அதிகமாக அதிகமாக அந்த வடிவத்தின் உள்கோணம் அதிகமாகிக் கொண்டே வரும். உதாரணமாக, ஒரு சீரான திரிகோணத்தின் (முக்கோணம் - TRIANGLE / TRIGON ) உள்கோணம் (INTERIOR ANGLE ) 60 டிகிரி. ஒரு சதுரத்தின் (SQUARE / TETRAGON ) உள்கோணம் 90 டிகிரி. ஒரு ஐங்கோணத்தின் (PENTAGON ) உள்கோணம் 108 டிகிரி. இவ்வாறு பல பக்கங்கள் கொண்ட சீரான 2D வடிவங்களைப் 'பலகோணம்' (POLYGON ) என்று அழைக்கிறார்கள். ( இந்த வார்த்தைகளே எனக்கு வியப்பைத் தருகின்றன. கிரேக்க மொழியில் POLY என்றால் பல என்று பொருள். POLY = பல. GON என்றால் கோணம் என்று பொருள். GON = கோணம்!) 

பக்கங்களை அதிகமாக்கிக் கொண்டே போய் நூறு பக்ககங்கள் கொண்டது 'சதகோணம்' (HECTAGON ). அதன் உள்கோணம் 176 .4  டிகிரி. ஆயிரம் பக்கங்கள் கொண்டது "CHILIAGON ", அதன் உள்கோணம் 179 .64  டிகிரி. பத்தாயிரம் பக்கங்கள் கொண்டது "MYRIAGON ", அதன் உள்கோணம் 179 .964  டிகிரி. பத்து லட்சம் பக்கங்கள் கொண்டது 'MEGAGON '. அதன் உள்கோணம் 180 டிகிரிக்கு இம்மி குறைவு. பத்தின் நூறு மடங்கு பக்கங்கள் கொண்டது 'GOOGOLGON '. அதன் உள்கோணம் 180 டிகிரிக்கு இம்மிக்கு இம்மி குறைவு. இப்படி கணக்குப் புலிகள், அல்ல கணக்கு டைனோசர்கள் கில்லி வேலை காட்டியிருக்கிறார்கள். ("அணுவினைச் சத கூறிட்ட கோணிலும் உளன்" என்று கம்பன் பாடும்போது ஒருவேளை அவன் மிக நுண்ணிய ACUTE ANGLE (குறுங்கோணம்) பற்றிப் பேசுகிறானோ?)

பன்னிரு பக்கங்கள் கொண்ட டோதெகாகானைப் பார்த்தாலே அது நமக்கு வட்டமாகத்தான் தெரியும். நூறு, லட்சம் பக்கங்கள் கொண்ட பாலிகான்கள் கணக்கின் கறாரான கணக்கின்படி வட்டம் அல்ல என்றாலும் அது வட்டம்தான் என்று சத்தியம் செய்வோம். துளைக்கும் பார்வை கொண்ட கணித மூளைக்குத்தான் அவை 'அவட்டமாகத்' தெரியும். ("வட்டமாத்தானே இரிக்கி" என்று நாம் தலையைச் சொறிவோம். 'கபோதிப் பய' என்று நம்மைப் பார்ப்பார்கள்.) இந்தப் பாலிகான்கள் எல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது.பேசாமல் சாருக்கானைப் பார்க்க வேண்டியதுதான்.

பக்கங்களை அதிகப்படுத்திக் கொண்டே போனால் சதுரம் வட்டமாகிவிடும். குறைத்துக் கொண்டே வந்தால் வட்டம் சதுரமாகிவிடும். சதுரத்தின் நான்கு கோணங்களின் மொத்தம் 360 டிகிரி. அதாவது வட்டத்தின் கோணம்! எனவே, சதுரம் என்பது வட்டத்தின் மிக எளிமையான பிரதிநிதி!இனி 3D வடிவங்களுக்கு வருவோம். சதுரத்தின் முப்பரிமாண வடிவம் கனசதுரம் (CUBE ). வட்டத்தின் முப்பரிமாண வடிவம் கோளம் (SPHERE ). பிரபஞ்சவெளியில் சுழல்கின்ற பொருள்கள் எல்லாம் கோள வடிவில்தான் இருக்கின்றன, பூமி உற்பட. பிரபஞ்சமே கோள வடிவம் என்றுதான் தொல் மரபுகள் கருதுகின்றன. அதானால்தான் கனசதுரமான 'கஃபா' கோளமான பிரபஞ்சத்தின் பிரதிநிதியாக நிற்கிறது.சதுரத்தைவிட முக்கோணம் குறைந்த பக்கங்கள் கொண்டதாக இருக்கிறதே என்று தோன்றலாம். ஆனால் முக்கோணத்தில் சில தன்மைகள் குறைகின்றன. வட்டத்திலும் சதுரத்திலும் மேல்-கீழ்  ஒரே மாதிரி உள்ளதுபோல் முக்கோணத்தில் இல்லை. முக்கோணம் கீழிருந்து மேலே செல்லச் செல்ல இருபரிமாணத்  தன்மையை இழந்து புள்ளியில் முடிகிறது. ஒருவகையில் இது முக்கோணத்தின் சிறப்பம்சமும்கூட! அது ஒரு 'TRANSITION ' தன்மையைப் பெற்றுள்ளது. முக்கோணப் பக்கங்கள் கொண்ட 'பிரமிட்' வடிவத்தை எகிப்திய ஆத்மசிந்தனை மரபு தெரிவு செய்தது இந்தத் தன்மையால்தான் எனலாம். ஏனெனில் இறந்து போன மன்னர்களின் ஆத்மாக்கள் மேலுலகம் செல்லும் பாதையாகத்தான் பிரமிடுகள் கட்டப்பட்டன. 

முப்பரிமாணத்தில் பிரமிடின் இன்னொரு குறை அது இரண்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாகியுள்ளது என்பது. அடித்தளத்திற்கு சதுரம், பக்கங்களுக்கு முக்கோணம். ஒரே வடிவத்தால் குறைந்தபட்ச பக்கங்கள் கொண்டு உருவான முப்பரிமாண மூடிய பொருள் (CLOSED OBJECT ) கனசதுரம்தான். மேல்-கீழ் அதே போன்றது. 'AS ABOVE SO BELOW '! 
         
கனசதுரமான கஃபாவை முஸ்லிம்கள் 'இடம்' சுற்றுவது பற்றி ஒரு சிந்தனை.(வலம் சுற்றுவது அல்ல, கவனிக்க.) கனசதுரத்தை மையப்படுத்திய வட்டங்களாக அவை உருவாகின்றன! (CONCENTRIC CIRCLES ). அந்த வகையில் வட்டங்களின் மையப் புள்ளியைக் கஃபா குறிக்கின்றது. மையப்புள்ளியில் இருந்து வெளியே விரிந்து பரவுபவை வட்டங்கள். ஒரு சதுரக் கல்லினை ஒரு தெளிந்த குளத்தின் நடுவில் போட்டால் நீரலைகள் வட்டங்களாகத்தானே பரவும்? அது சதுரமான குளமாக இருந்தாலும்!

அந்த மையப் புள்ளி ஓர் ஆதி புள்ளியைக் குறிக்கின்றது. திருக்குரானின் வசனங்களின் சாரம் அதன் முதல் அத்தியாயத்தில் இருக்கிறது என்பதும், அந்த முதல் அத்தியாயத்தின்   சாரம் அதன் தலைப்பில் உள்ள "பிஸ்மில்லாஹ்..." வாசகத்தில் இருக்கிறது என்றும், அந்த மந்திரத்தின் சாரம் அதன் முதல் எழுத்தான 'பே' என்பதன் புள்ளியில் (நுக்தா)  இருக்கிறது என்றும் சூஃபித்துவத்தில் கூறப்படுகிறது. கஃபா அந்த நுக்தாவைக் குறிக்கிறது!

'பே' என்பது அரபி மொழியின் இரண்டாம் எழுத்து. "அஃலிப்" என்பது முதல் எழுத்து. (ALPHA என்று கிரேக்க மொழியில்!) மேலிருந்து கீழிறங்கும் ஒரு கோடு அது. சூஃபித்துவத்தில் அது பிரபஞ்சம் வெளிப்பட்டதன் (தனஸ்ஸுலாத் ) குறியீடு. மேல் புள்ளியிலிருந்து ஆரம்பித்துக் கீழிறங்கி ஒரு புள்ளியில் நிற்கிறது. அந்தக் கீழ்ப்புள்ளி பூமியின் மையத்தை - அதாவது பூமியின் தொப்புளைக் குறிக்கிறது. அதுதான் 'பே' என்னும் இரண்டாம் எழுத்தின் கீழே வைக்கப்பட்டுள்ளது. கஃபா என்னும் அந்த மையப்புள்ளியில் இருந்துதான் பரவும் நீரலைகள் போல் பூமியின் மேற்பரப்பு விரிந்தது  என்று இஸ்லாமிய மரபு கூறுகிறது. மெக்கா நகரின் ஆதி பெயர் 'பக்கா' என்பதாகும். அதாவது 'பே' என்னும் எழுத்தில் துவங்கும் பெயர்! 

"மனிதர்களுக்கு வைக்கப்பட்ட 
ஆதி இல்லம் 
நிச்சயமாக பக்காவில் இருப்பதுதான்.
அது பேரருள் செய்யப்பட்டது 
அது பிரபஞ்சத்திற்கு நேர்வழி."
(திருக்குரான் 3 : 96 )

என்னும் திருமறை வாசகம் இதனைச் சுட்டுகிறது. 'பக்கா' என்னும் பெயர் பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் வருகிறது. ஆனால் அது மெக்கா நகரைத்தான் குறிக்கிறதா என்பதில் முஸ்லிம்களுக்கும் பிற சமயத்தவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. (சகோதரச் சண்டை! தம்பி அண்ணனைக் கொலை செய்ததுதான் உலகின் முதல் கொலை என்று பைபிளும் குரானும் கூறுகின்றன!)
பழைய ஏற்பாட்டில் வரும் அந்த வசனம் இது:
"பக்காவின் வெளியைக் கடந்து செல்லும் அவர்கள்
அதில் ஒரு கிணற்றை ஏற்படுத்தினார்கள்.
மழை அதனை நிறைத்தது." 
(PSALMS : 84 : 6 )

பழைய ஏற்பாட்டின் இந்த வசனத்தை ஷைக் அஹ்மத் தீதாத் திருக்குர்ஆன் வசனத்துடன் இனம் கண்டு வியாக்கியானம் செய்தார். இதில் வரும் 'பக்கா' என்பது மக்காவைத்தான் குறிக்கிறது என்றார். இதில் கூறப்பட்டுள்ள கிணறு என்பது கபாவின் அருகில் உள்ள 'ஜம்ஜம்' கிணறு என்று கூறினார். அவரின் இந்தக் கருத்தை ஜாகிர் நாயக், பிலால் பிலிப்ஸ் போன்ற இஸ்லாமியப் பிரச்சாரகர்கள் வழிமொழிந்து கொண்டுள்ளார்கள். பழைய ஏற்பாட்டின் ஆங்கிலப் பிரதியில் இந்த வசனத்தைப் பார்த்தால் ஷைக் அஹ்மத் தீதாத்தின் கருத்து ஏற்கும்படியாக இல்லை.

"(Who) passing through the valley of Baca make it a well; the rain also filleth the pools"
என்னும் வாசகம் அது. ஆனால் பைபிளின் சிக்கல் என்னவென்றால் அது ஏசுநாதர் பேசிய மூல மொழியில் இல்லை என்பதுதான். எனவே ஒரு வசனத்தை பல வகைகளில் மறு ஆக்கம் செய்துகொள்ள வழியுள்ளது. மேற்சொன்ன வசனத்தை அவ்வாறு மறு ஆக்கம் செய்து "NEW INTERNATIONAL VERSION " பைபிளில் இவ்வாறு பதிப்பித்துள்ளார்கள்:
"5.Blessed are those whose strength is in You,
Who have set their hearts on pilgrimage.           
6. As they pass through the Valley of Baca,
they make it a place of springs;
the autumn rains also cover it with pools.
7. They go from strength to strength,
till each appears before God in Zion."

இந்த வசனங்களில் குறிப்பிடப்படும் 'பக்கா' என்னும் இடம் அரேபியாவில் உள்ள மக்காவைக் குறிக்காது என்று கூறுபவர்கள் ஏழாவது வசனத்தையும் சேர்த்து 'CONTEXT ' - பிரதி சார்ந்த பொருளை கவனிக்கச் சொல்கிறார்கள். அதில் 'சியோன்' என்னும் இடம் குறிப்பிடப்படுகிறது. சியோன் என்பது ஜெருசலேமுக்கு அருகில் உள்ள ஒரு மலை. எனவே 'பக்கா' என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது ஜெருசலேமின் பகுதிகளைத்தான் என்பது அவர்களின் கருத்து. இந்த வசனங்கள் இறைத்தூதர் தாவூது (DAVID ) இறைவனிடம் பேசுவதாக உள்ளவை. இறைத்தூதர் தாவூதும்  அவரின் மகன் இறைத்தூதர் சுலைமானும் (SOLOMON ) ஜெருசலேம் நகரில்தான் ஆலையத்தைக்  கட்டினார்கள் என்று பைபிளும் குரானும் கூறுகின்றன. அந்த அடிப்படையில் பைபிள் குறிப்பிடும் 'பக்கா' என்பது அரேபியாவில் உள்ள மெக்கா நகரையோ 'கஃபா' ஆலயத்தையோ குறிக்காது என்று கொள்ளவேண்டும்.

மேலும், 'அவர்கள் பக்கா வெளியைக் கடந்து செல்வார்கள்' என்றுதான் பைபிள் வசனம் கூறுகிறது. இது கஃபாவிற்குச் செல்லும் புனித யாத்திரையைக் குறிப்பதாக இருந்தால் 'கடந்து செல்வார்கள்' என்று வராது.பைபிளில் குறிப்பிடப்படும் 'பக்கா' என்பது ஜெருசலேமைத்தான் குறிக்கும் என்பதற்கு என் மனதில் இன்னொரு வகையில் விளக்கம் தோன்றுகிறது. நபிகள் நாயகத்தின் தூதுப்பணியின் பனிரெண்டாம் ஆண்டில் தொழுகை அருளப்பட்டது. அப்போது கஃபாவில் முன்னூறுக்கும் மேற்பட்ட இடைச்செருகல் சிலைகள் இருந்ததால் முஸ்லிம்களின் தொழுகை திசையாக ஜெருசலேம் நகரில் இறைத்தூதர்கள் தாவூதும் சுலைமானும் கட்டிய "பைத்துல் முகத்தஸ்" ஆலயம் நியமிக்கப்பட்டது. 'பைத்துல் முகத்தஸ்' என்றால் 'புனிதமான வீடு' 'மகத்தான வீடு' 'பேரருள் செய்யப்பட வீடு' என்பன போன்ற அர்த்தங்கள் உண்டு. மக்காவை 'பக்கா' என்று குறிப்பிடும் திருக்குர்ஆன் வசனத்தில் வரும் "பேரருள் செய்யப்பட வீடு" என்பதுடன் இதனை ஒப்பு நோக்கும்போது ஒன்று தெளிவாகிறது. அதாவது பைபிள் குறிப்பிடும் பக்கா என்பது ஜெருசலேமைத்தான். குரான் குறிப்பிடும் பக்கா என்பது மக்கா நகரைத்தான். இதில் சிக்கல் ஏதுமில்லை. 'பக்கா' என்பது ஒரு பொதுப்பெயர். ஒரு பெயர் பல மனிதர்களுக்கு இருப்பதும் ஒரே பெயரில் பல ஊர்கள் இருப்பதும் இயல்பானதுதான்.

ஆரம்ப காலத்தில் முஸ்லிம்கள் ஜெருசலேமில் உள்ள ஆலயத்தை நோக்கித் தொழுது வந்தார்கள் என்பது இன்னொரு விஷயத்தையும் காட்டுகிறது. பூமியின் மையம் அல்லது தொப்புள் என்று கருதப்பட்ட பல இடங்கள் ஏதோ ஒரு வகையில் அல்லது தளத்தில் ஒன்றிணைந்தவை. அப்படிக் கருதப்பட்ட இடங்களை GEODETIC CENTRES என்று அழைக்கிறார்கள். எகிப்தின் 'தீப்ஸ்', துருக்கியின் 'அராரத்' மலை, கிரேக்கத்தின் 'டோடோனா' போன்ற இடங்களின் அந்தப் பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒரு புராதன நகரமும் இடம்பெறுகிறது. 'அலகாபாத்' என்று நாம் கொத்திக் குதறி அழைக்கும் 'அல்லாஹ்-ஆபாத்' நகரம்தான் அது!

அல்லாஹாபத் நகரின் பழைய பெயர் 'பிரயாக்'. மகாபாரதம் குறிப்பிடும் 270 புனிதத் தளங்களில் இறுதியான தளம் இது. பிரபஞ்ச உருவாக்கத்தின் மையப்புள்ளி என்று புராணங்கள் இந்த நகரை அழைக்கின்றன. கி.பி.644 -ல் சீன யாத்த்ரிகன் ஹுவான் சாங் இந்த நகருக்கு வந்துள்ளார். அப்போது பிரயாக் நகரின் தலைமைக் கோவில் ஒரு தீவில் இருந்துள்ளது. அதன் தெற்கே கண்டறியப்பட்ட ஒரு புராதனக் கோவில் சிவன் ருத்ர நடனம் ஆடுவது போன்ற ஒரு சிலையைக் கொண்டுள்ளது. இன்றும் பிரயாகில்தான் உலகின் மிகப்பெரிய திருவிழாவான கும்பமேளா நடைபெறுகிறது.இந்தத் தகவல்களை மைக்கேல் வுட் என்பவர் "IN SEARCH OF THE FIRST CIVILIZATIONS " என்னும் நூலில் எழுதியுள்ளார். முகலாய ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டபோது அவர்கள் பல நகரங்களை நிர்மாணித்தார்கள், பல நகரங்களை மாற்றியமைத்தார்கள் என்று வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. அதில் பல இடங்கள் அவற்றை நிர்மாணித்த மன்னர்களின் பெயராலேயே அழைக்கப்பட்டன. ஹைதர் அலி நிர்மாணித்த நகரம் 'ஹைதராபாத்', சிக்கந்தர் என்பவரின் பெயரால் சிக்கந்தராபாத், அவுரங்கசீபின் பெயரால் ஔரங்காபாத் என்பதுபோல. "ப்ரயாக்" நகரத்தின் பெயரை அவர்கள் "அல்லாஹாபாத்" என்று மாற்றினார்கள். "அல்லாஹ்-ஆபாத்" என்றால் "அல்லாஹ்வால் வளமாக்கப்பட்ட ஊர்" என்று அர்த்தம்! திருக்குர்ஆன் வசனத்தில் (3 :96 ) "பிபக்கத்தின் முபாரகன்" - பேரருள் செய்யப்பட நகரம் என்று மெக்காவிற்குச் சொல்லப்பட்ட வருணனையின் பொருள்படுகின்ற ஒரு பெயரை அவர்கள் ஏன் இந்தியாவில் உள்ள ஒரு "தொப்புள்" நகரத்திற்கு வைத்தார்கள் என்பது சிந்தனைக்கு உரியது.

மேற்சொன்ன திருக்குர்ஆன் வசனத்தை ஆராய்ந்தால் இன்னும் பல கதவுகள் திறக்கின்றன. பின்னர் திறக்கிறேன்.     

Monday, November 22, 2010

மொழியின் உலகம்சூரியன் என்பதினும்
பிரம்மாண்டமாய் உள்ளது
நிலா என்னும் சொல்.

நட்சத்திரம் என்பதும்
விண்மீன் என்பதும்
வேறு வேறு.

பாஷை
பாடை ஆகவேண்டாம்.
பழிக்குப் பழி
மொழிக்குப் பழி.

தவளைக்கு
என் மொழியில்
தவக்களை 
என்று பெயர்.

மொழியின் 
தவக்களை
கவிதை.

மழலை மொழியில் 
மழலைக்கு 
என்ன பெயர்?

மழலை
மொழியா?

தமிழுக்கு
அமுதென்று பேர்.
பிற மொழிகளுக்கும் கூட.

தாய்-சேய்
என்பதுபோல் 
உயிர்-மயிர்.

மௌனம் 
அழகான சொல்.
சப்தங்கள் அல்ல
மௌனத்திற்கு ஆபத்து
மௌனம் என்னும் சொல்.

கிணற்றுத் தவளை
மொழி அறியும்.
பழைய குளத்தின் தவளை
வழி அறியும்.

மொழி விளையாட்டில்
வெற்றி அரிது.

மொழியில்
சாத்தியம் பெரிது.
சத்தியம் அரிது.

சங்கேதம்


"அலீப் லாம் மீம்"...

திறந்தவுடன் ஒரு
சங்கேதப் பூட்டு.

ஞானிகள் பலப்பல
அர்த்தங்கள் கூறுவர்.

மூளை வியர்த்தது

புழுக்கம் தாளாது
ஜன்னல் திறந்தேன்.

சற்றுமுன் மழையில்
நனைந்த மரத்தில்
பாடித் திரிந்தன
பறவைகள்.

குக்கூ என்று
சங்கேதம் உரைத்துப்
பறந்தது ஒன்று.

ஒற்றை முலை!

போர்த்துகீசிய எழுத்தாளர் பாவ்லோ கொயல்லோ (PAULO COELHO ) எழுதிய ஒரு விநோதப் பதிவு பற்றிச் சமீபத்தில் எம்.ஜி.சுரேஷ் தன் வலைப்பூவில் ஒரு இடுகை போட்டிருந்தார். பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்சின் தொப்புளை வைத்து செய்யப்பட ஆய்வு அது! 

"கொயல்லோ தனது ‘அல்கெமிஸ்ட்’, ‘தி பில்க்ரிமேஜ்’ போன்ற பல தத்துவார்த்தமான நாவல்களுக்குப் பெயர் பெற்றவர். சூஃபிஸமும், சித்தர் மரபும் அவரிடம் ஓர் புள்ளியில் சந்திப்பதை நாம் கண்டு கொள்ள முடியும். அத்தகைய சீரியஸான மனிதரிடமிருந்து பிரிட்னியின் தொப்புள் பற்றிய வியாக்யானத்தை நான் எதிர்பார்க்கவில்லை." என்று கொயல்லோவைப் பற்றி எம்.ஜி.சுரேஷ் கூறுகிறார். அப்படி அந்த தத்துவச் சித்தன் என்னதான் சொல்லிவிட்டார் என்று தொடர்ந்து படித்தபோது உலகின் பல ஆன்மீக மரபுகள் தங்கள் ஆலயங்களைத் "தொப்புள்" என்று அழைத்திருப்பதை அவர் ஆராய்ந்துள்ளார் என்று தெரிய வந்தது. 

பண்டைய கிரீசின் அப்போலோ ஆலயத்தில் இருந்த ஒரு சலவைக் கல், ஜோர்டனில் உள்ள பெற்றாவில் இருக்கும் ஓர் இடம், ஜெருசலேம் நகரம், ஈஸ்டர் தீவுகள் ஆகியவை பிரபஞ்சத்தின் மையம் என்று கருதப்பட்டதால் அவை "தொப்புள்" என்று அழைக்கப்பட்டுள்ளன. மனித உடலின் மையம் என்று தொப்புளை அவர்கள் கருதியிருக்கிறார்கள். எனவே தங்கள் ஆலயங்களைப் பிரபஞ்சத்தின் மையம் என்று குறிக்க அவற்றைத் தொப்புள் என்று அழைத்துள்ளார்கள்! இதில் பாவ்லோ கொயல்லோ மீது நொந்துகொள்வது ஏன் என்று புரியவில்லை. ஒரு பாப் பாடகியின் தொப்புளைப் பார்த்ததும் அவரது சிந்தனை ஆன்மிக மரபுகளின் திசையில் திரும்பியிருக்கிறது என்பதே வியப்பான ஒன்றுதான். 'வயசாயிடுச்சில்ல...வேற என்னா தோணும்?' என்று கூறிவிடமுடியாது. வயதாவதாலேயே ஒருவருக்கு ஆன்மிகப் பார்வையெல்லாம் வந்துவிடாது. அவர் மனதில் அசலாக ஒரு ஆன்மிக நோக்கு இருப்பதால்தான் அவரின் சிந்தனை இந்தத் திசையில் திரும்புகிறது.

உலகின் பல புராதன ஆலயங்கள் தொப்புள் என்னும் பெயரால் அழைக்கப்பட்டுள்ளன என்னும் செய்தி என் சிந்தனையைக் கிளறுகிறது. நான் என் தொப்புளைத்தான் பார்த்துக் கொள்கிறேன்! தொப்புள் வடு என்பது ஓர் ஆதி உறவின் குறியீடு. தாய்கூட தன் குழந்தையின் முகத்தைப் பார்க்காத காலத்தின் அடையாளம் அது. தாயின் கருவறைக்குள் உண்டான ரத்த உறவின் அடையாளம். பிரபஞ்சம் வெளிப்படாமல் இறைவனின் சிந்தனையில் படிவங்களாகத்  தரிப்பட்டிருந்த காலத்தில் இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இருந்த உறவின் குறியீடு என்று இதனைக் காணலாம். எனவேதான் ஆலயங்கள் தொப்புள் என்று அழைக்கப்பட்டன போலும்! (வெளிப்பாட்டிற்கு முன் பிரபஞ்சம் இறைவனின் சிந்தனையில் - ஞானத்தில் படிவங்களாகத் தரிப்பட்டிருந்த நிலையை சூஃபித்துவத்தில் வாஹிதிய்யத் என்று கூறுவர். அந்தப் படிவங்களுக்கு "அஃயானே தாபிதா" என்று பெயர்.) 

புராதன ஆலயங்கள் இவ்வாறு தொப்புள் என்று அழைக்கப்பட்டிருக்க எனக்குத் தெரிய ஒரு ஆலயம் மட்டும் 'முலை' (BREAST ) என்று அழைக்கப் பட்டுள்ளது! உலகெங்கிலும் முஸ்லிம்கள் தங்கள் தொழுகையில் முன்னோக்கும் "கஃபா" (KA'BA ) -வைத்தான் சொல்கிறேன். மெக்கா நகரில் அமைந்துள்ள கஃபாதான் உலகின் மையம் என்ற கருத்து முஸ்லிம் அறிஞர்களிடையே நெடுங்காலமாக உள்ளது. அதற்கான எதிர்க்கருத்துக்களும் விவாதிக்கப் படுகின்றன. பல ஆன்மிக மரபுகள் உலகின் பல இடங்களைப் பூமியின் தொப்புள் என்று கூறியள்ளது போலவே மெக்கா நகரில் உள்ள கஃபாவும் "NAVEL OF THE EARTH " என்று அழைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அது பூமியின் முலையாகவும் பார்க்கப்பட்டுள்ளது. தமிழில் எழுதப்பட்டுள்ள இஸ்லாமிய நூல்களில்கூட மெக்கா நகரைக் குறிப்பிடும்போது "மண்ணின் மார்பகம்" என்றே சிலர் எழுதியிருக்கிறார்கள். (மண்ணின் தொப்புள் என்று இவர்கள் எழுதவில்லை.)ஒரே ஆலயம் தொப்புளாகவும் மார்பாகவும் வருணிக்கப் பட்டுள்ளது. மனித உடலின் மையப்புள்ளி என்று தொப்புளைத்தான் கூறமுடியும். அந்த அர்த்தத்தில்தான் ஆலயங்கள் பூமியின் தொப்புள் எனப்பட்டன. 'மார்பு' என்று கூறப்பட்டது வேறு பொருளில். பிறந்து வெளியே வந்தபின் தாயுடன் ஒரு குழந்தை கொள்ளும் உறவின் குறியீடு அது! "கஃபா" என்னும் சொல்லுக்கு நேரடியான அர்த்தம் கன சதுரம் (CUBE ) என்பதுதான். "காஃப் - ஐன் -பே" என்னும் மூன்றேழுத்து வேர்ச்சொல்லில் இருந்து உருவான வார்த்தை அது. அதன் சார்பு அர்த்தங்களையும் சேர்த்துப் பின்வரும் மூன்று அர்த்தங்களைக் கூறலாம்:
1 . உயர்த்தப் பட்ட இடம். 
2 . கன சதுரம் (CUBE ) ( CUBE என்னும் ஆங்கில வார்த்தையின் மூலம் கஃபா என்னும் அரபி வார்த்தைதான்.) 
3 . உருவாகி வரும் வடிவம்.

கஃபா என்னும் சொல்லுக்குரிய வேர்ச்சொல்லுடன் தொடர்புடையதாக "காயிப்" என்னும் சொல் கருதப்படுகிறது. 'காயிப்' என்றால் 'முலை' என்று பொருள். தாயின் முலை குழந்தைக்குப் பால் ஊட்டி வளர்ப்பதுபோல் கஃபா மனிதனின் ஆன்மாவுக்குச் சக்தியைப் புகட்டுகிறது என்னும் கருத்தில் அதனை "மண்ணின் மார்பகம்" என்று அழைக்கிறார்கள்.
"ஆதி இறையில்லமே!
பூமியின் ஒற்றை முலையே!"
என்று ஒரு கவிதையில் கஃபாவைப் பற்றி என் பேராசிரியர் பீ.மு.மன்சூர் எழுதியிருந்தார்.

குழந்தை பிறந்து வெளியே வந்தவுடன் தாயின் பரிபாலனத்தைப் பெறுவதன் அடையாளமாக முலை இருப்பதால், இப்பிரபஞ்சம் வெளிப்பட்ட பின் இறைவனால் பரிபாலிக்கப் படுவதன் குறியீடாக அதனைக் கூறலாம். பிரபஞ்சம் வெளிப்படுத்தப் பட்டுள்ள நிலைக்கு சூஃபித்துவத்தில் 'அஃயானே காரிஜா' என்று சொல்லப்படும். ஒரே ஆலயம் இவ்வாறு தொப்புளாகவும் முலையாகவும் வருணிக்கப்படுவதன் மூலம் அது உள்ளும் புறமுமாக இருப்பதைச் சுட்டுகிறது. இறைத்தூதர் இத்ரீஸ் என்று கருதப்படும் ஹெர்மேஸ் (HERMES ) என்னும் கிரேக்க ஆத்மஞானி கூறிய "AS ABOVE SO BELOW , AS WITHIN SO WITHOUT " என்னும் தத்துவத்தை இது குறிப்பதாகவும் காணலாம்.

'கஃபா என்பது கன சதுர வடிவம். காயிப் என்பது கோள வடிவம். சதுரத்திற்கும் வட்டத்திற்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா?' என்று மண்டையைச் சொறிந்தபோது பல விஷயங்கள் பளிச்சிட்டன. அவற்றைப் பின்னர் சொல்கிறேன்.

Wednesday, November 10, 2010

உருவெளிக் களங்கள் - 7

ஏசுநாதரின் உண்மையான உருவம் எது? மேற்கத்திய ஓவியங்களில் நாம் காண்பவை ஞானிகளும் கலைஞர்களும் ஏசுவைப் பற்றிய கருத்துருவமாக உருவகித்துக் கொண்ட தோற்றங்களைத்தான். ஆனால் வரலாற்று ஏசுநாதரின் உருவம் எப்படி இருந்தது என்பதற்குத் தெளிவான விடை இல்லை. 

இத்தாலி நாட்டில், டுரின் நகரில் உள்ள புனித ஜான் கதீட்ரல் என்னும் தேவாலயத்தில் ஒரு கோடித்துணி உள்ளது. "SHROUD OF TURIN " என்று அழைக்கப்படும் இந்தத் துணி உலகப் புகழ் பெற்றது. வருடந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசித்துச் செல்லும் வரலாற்றுப் பொருளாகவே அது மாறிவிட்டது. அதற்கான காரணம் அதத் துணியைக் கிருத்தவர்கள் ஏசுநாதரின் கோடித்துணி என்று கருதுவதுதான். உண்மையில் அது ஏசுநாதர் அடக்கப் பட்டபோது அவர்மீது சுற்றப்பட்டிருந்த துணிதானா என்பதில் பல கருத்து வேறுபாடுகளும் விவாதங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ரேடியோ கார்பன் சோதனைகள் அந்தத் துணி கி.பி.1260 - 1390  காலகட்டத்தில் எப்போதோ செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றன.டுரின் சவக்கோடியில் ஒரு மனித உருவத்தின் முழு அச்சு உள்ளது. அது ஏசுவின் உண்மையான, வரலாற்று ஆதாரமான உருவம் என்று கத்தோலிக்க கிருத்துவர்கள் நம்புகின்றனர். 1958 -ல் போப் பயஸ் XII அது ஏசுநாதரின் முகம்தான் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மார்ச்,2010 -ல் ஹிஸ்டரி சேனல் தயாரித்த "THE REAL FACE OF JESUS " என்னும் நிகழ்ச்சிக்காக STUDIO MACBETH என்னும் நிறுவனம் ரே டௌனிங் என்பவரின் தலைமையில் கணிப்பொறி உருத்தோற்றத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டுரின் துணியிலிருக்கும் உருவத்தை முப்பரிமாணப் படமாக உருவாக்கினார்கள். அந்தத் துணியால் சுற்றப்பட்டிருந்த உடல் உண்மையிலேயே ஏசுநாதரின் உடல்தான் என்றால் ஏசுவின் உண்மை உருவம் இதுதான் என்று தங்கள் தொழில்நுட்பம் தந்த படத்தையும் வெளியிட்டார்கள். அதில் ஏசு எப்படி இருந்தார் என்றால், கிருத்துவர்கள் அந்த முகத்தை ஏசுவின் சீடரின் முகமாகக் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! அவ்வளவு சாதாரணமாக இருந்தது!


இந்தச் செய்தி 'ஹிந்து' நாளிதழில் வெளிவந்தபோது நானும் அப்படத்தைக் கண்டேன். அது ஒரு 'ஹாலிவுட்' கதாநாயகன் முகம் போன்றெல்லாம் இல்லை. விகட  நடிகர் 'சின்னி' ஜெயந்தைப் போல் இருந்தது! மூக்கு கூர்மையாக இல்லாமல் மொழுக்கென்று இருந்தது. அதைப் பார்த்தபோது ராமகிருஷ்ண பரமஹம்சரின் கனவு அனுபவம்தான் எனக்கு ஞாபகம் வந்தது.

ராமகிருஷ்ண பரமஹம்சர் ஏசுவின்மீதும் நபிகள் நாயகத்தின் மீதும் பேரன்பு கொண்டவர். இருவர் மீதும் தியானம் செய்தவர். மரியையின் கையில் குழந்தை ஏசு இருக்கும் ஒரு படத்தை ஒருமுறை பார்த்தவுடனே பரவச நிலையை அவர் எட்டியதாக ஒரு சம்பவம் உண்டு. ஏசுவையும் நபிகள் நாயகத்தையும் தான் கனவில் கண்டதாக ராமகிருஷ்ணர் கூறியுள்ளார். அதில் ஏசுவைப் பற்றி வருணிக்கும்போது ஏசுவின் மூக்கு தட்டையாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்! 

ஏசு நாதரின் உருவத் தோற்றம் பற்றி நபிகள் நாயகம் கூறியுள்ள ஹதீஸ்கள்  உள்ளன. நபித்தோழர் இப்னு உமர் அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில், தான் விண்ணேற்றம் சென்றபோது மோசசையும் ஏசுவையும் ஆபிரகாமையும் பார்த்ததாக நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். அதில், "ஈசா (ஏசு) சிவந்த நிறமுடையவராக, சுருள் கேசம் கொண்டவராக, அகன்ற நெஞ்சுடையவராக இருந்தார்." என்று வருணித்துள்ளார்கள்.(புகாரி, நூல்:55 , எண்: 648 )

நபித்தோழர் அபூ ஹுரைரா அவர்கள் அறிவிக்கும் இன்னொரு ஹதீஸில் ஏசு நாதரின் இரண்டாம் வருகை பற்றிய செய்தியில், "அவர் சராசரி உயரமுள்ள சிவந்த மனிதராக இருப்பார். வெளிர் மஞ்சள் நிறத்தில் இரண்டு ஆடைகள் அணிந்திருப்பார். அவர் தலையிலிருந்து நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருப்பதைப்  போல் இருக்கும், ஆனால் அது நனைந்திருக்காது." என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.(சுனன் அபூ தாவூது, நூல்: 37, எண்: 4310 .)

இந்த வருணனைகள் ஏசுநாதரை ஒரு அழகான மனிதராகவே எண்ணத் தோன்றுகின்றன. அழகு என்பதும் இறைத்தூதர்களின் லட்சணங்களில் ஒன்றுதான். அக அழகும் புற அழகும் ஒன்று சேர்ந்தவர்களாகவே இறைத்தூதர்களை எண்ணமுடியும். அவர்கள் எளிமையாக இருந்திருக்கலாம். அது வேறு. ஏசுவே ஒரு நாடோடி வாழ்க்கையில் திரிந்து கொண்டிருந்தவர்தான். ஏசுவின் இந்த அம்சத்தை எழுபதுகளில் அமெரிக்க ஹிப்பிகள் வரித்துக் கொண்டார்கள். ஏசுவின் ஆளுமையைக் கௌபாய் மோல்டில் வார்த்து தங்களின் ஆதர்ஷன உருவத்தை அவர்கள் அடைந்தார்கள் என்று சொல்லலாம்!

ஏசுநாதரின் உண்மையான உருவம் என்று நவீன தொழில்நுட்ப ஆய்வுகள் முன்வைக்கும் உருவத்தை ஆன்மிக உணர்வுள்ள எந்த மனமும் ஏற்றுக் கொள்ளாது என்றே எண்ணுகிறேன். அது நேர்த்தியான வடிவில் இல்லை என்பது மட்டும் காரணமல்ல. ஆன்மிகத் தன்மையை அது பிரதிபலிக்கவில்லை என்பதும் ஒரு காரணம். அது ஒரு ரோஜாப் பூவின் சவத்தைப் போல் இருக்கிறது! 

நபிகள் நாயகம் ஏசுவைப் பற்றிக் கூறியுள்ள ஹதீஸ்களின் வழியே நான் உருவகித்துக் கொள்ளும் ஏசுவின் தோற்றம் மேற்கத்திய செவ்வியல் ஓவியங்கள் காட்டும் தோற்றமாகத்தான்  உள்ளது. அது மட்டுமல்ல நபிகள் நாயகத்தின் உருவத்தை நபித் தோழர்கள் வருணித்துள்ள ஹதீஸ்களைப் படிக்கும்போது அந்த அழகிய வருணிப்புக்களை அப்படியே ஏசுநாதருக்கும் என்னால் பொருத்திப் பார்க்க முடியும். ஏசுவுடன் மட்டுமல்ல மண்ணில் வந்த எல்லா இறைத்தூதர்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியும்!

"இம்மையிலும் மறுமையிலும் மொத்த மனிதகுலத்தில் மர்யமின் மகன் ஏசுவுடன் மிகவும் நெருக்கமானவன் நானே!" என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம், நூல் 30 , எண்: 5836 .) இந்த நபிமொழி ஆன்மிக ரீதியான நெருக்கத்தைப் பற்றிச் சொல்லப்பட்டது என்றபோதும் அதன் ஒரு பரிமாணமாக உருவத் தோற்றத்தையும் குறிக்கக் கூடும் என்று நான் கருதுகிறேன். ஏசுவும் நபிகள் நாயகமும் ஆபிரகாம் என்னும் ஒரே முப்பாட்டனாரின் வம்சக் கிளைகளில் வந்தவர்களே!

ஏசுநாதர் வாழ்ந்த காலத்திலேயே வரையப்பட்ட அவருடைய போர்ட்ரைட் ஓவியம் எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தாலும் அது துல்லியமாக இருக்கும் என்று கூற முடியாது. அது ஒரு வகையில் நல்லதும்கூட. அதனால்தான் ஆன்மிக அனுபவங்களுக்கு ஏற்ப அவரின் தோற்றத்தை ஒரு குறியீடாகப் பல விதங்களில் உருவகித்துக் கொள்ள முடிகிறது.

ஏசுநாதரை எத்தனையோ கவிஞர்கள் வருணித்துப் பாடியுள்ளார்கள். கலீல் கிப்ரான் வருணித்த ஒரு வரி என்னை மிகவும் அதிசத்தில் ஆழ்த்தியது. அதற்கு இணையான ஒரு வருணிப்பை நான் இதுவரை கண்டதில்லை. ஏசுநாதரின் வாயைப் பற்றிய வருணனை அது. காதலியின் சிவந்த உதடுகளை வருணித்த கவிஞர்கள்கூட இந்த அளவு அற்புதமாக வருணித்ததில்லை! அப்படி ஒரு வரியை கலீல் கிப்ரானின் ஆன்மிகக் காதல் எட்டிப் பிடித்துள்ளது. அவர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் எழுதிய நூலான "JESUS THE SON OF MAN" என்னும் நூலில் "THE WOMAN FROM BYBLOS" என்னும் அத்தியாயத்தில் வரும் வரிகள் இவை:
"He who spoke as the rivers speak
He whose voice and time were twins
He whose mouth was a red pain made sweet
He on whose lips gall would turn to honey"
இந்த நான்கு வரிகளுமே அற்புதமானவைதான். ஏசுவின் பேச்சையும் குரலையும் வாயையும் வருணிக்கின்றன. என்னை மிகவும் பாதித்தது மூன்றாம் வரி. HE WHOSE MOUTH WAS A RED PAIN MADE SWEET...  பல முறை இந்த வரிகளை மீண்டும் மீண்டும் சிந்தித்திருக்கிறேன். என்னவோ செய்கிறது!

இந்த உதட்டு வருணனையில் என் மனதை ஸ்தம்பிக்கச் செய்த இன்னொரு வரியையும் நான் சொல்லித்தான் ஆகவேண்டும். அது ஏசுவின் அன்னை மர்யம் அவர்களைப் பற்றிய வருணனை. வருணித்த கவிஞர் மௌலானா ரூமி. சூபி உலகின் சிகரக் கவிஞர். பெண்ணை வருணிப்பது என்றாலே அது ரசாபாசம் ஆகிவிட வாய்ப்புகள் உண்டு. ஆன்மிகக் கவிஞர்களால்தான் பெண்ணைப் புனித நிலையில் பாட முடியும் என்பதை உலகின் மகாகவிகள் எல்லாம் நிரூபித்துள்ளார்கள். அந்த லிஸ்டில் மவ்லானா ரூமி அவர்களை நிச்சயம் முன்னணியில் வைக்கவேண்டும். ஏசுவின் பரிசுத்த அன்னையை அங்க வருணனை செய்தெல்லாம் வருணிக்க முடியாது. ஆனால் மௌலானா ரூமியின் கவிதை ஏசுவின் பிறப்பைப் பற்றிப் பேசுகிறது! அந்த வரியில் மர்யம் அவர்களின் பரிசுத்த யோனியைப் பற்றியும் எழுதியுள்ளார்! அந்தக் கவிதை வரியைக் கூறும் முன் இரண்டு விஷயங்களை கவனத்திற்காகச் சொல்லிவிடுகிறேன்.

1 . "மேலும் இம்ரானின் புதல்வியான மர்யமையும்
(அல்லாஹ் உதாரணமாக்கினான்)
அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்.
நாம் அதில் நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம்" (66 : 12 )
என்னும் திருக்குர்ஆன் வசனத்தில் அன்னை மர்யமின் மறைவுறுப்பு (அவ்ரத்) இறைவனாலேயே புனிதப்படுத்திக் கூறப்பட்டுவிட்டது.


2 . ஏசுநாதர் இஸ்லாமிய மரபில் "ஆயதுல்லாஹ்" என்று அழைக்கப்படுகிறார். இதற்கு "இறைவனின் வார்த்தை" என்று ஒரு அர்த்தம் உண்டு.


மௌலானா ரூமியின் கவிதை வரி:
"மர்யமின் உதடுகள் திறந்து
இறைவனின் வார்த்தையைப் பேசின"


இந்த ஒற்றை வரி என் மனதில் வெளிச்சமும் மின்சாரமும் பாய்ச்சிய மின்னலாய் இறங்கியது. இதற்கு மேல் புனிதப்படுத்தி ஒரு கவிஞன் பாடிவிடமுடியாது என்றே எண்ணுகிறேன். எல்லா உடல்களும் சமமானவை அல்ல. ஞானியாரின் உடல்களும் உருவங்களும் வேறு தளத்தில் பார்க்கப் படுபவை. பெண்ணையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். ஆன்மிகப் பார்வை கொண்டவர்களால்தான் அப்படிப் பார்க்கவும் முடியும் என்பதைப் பொட்டில் அடித்ததுபோல் எனக்கு உணர்த்திய வரி இது.

Tuesday, November 9, 2010

பேரழகுபடைப்புத் தூரிகையின்
பச்சைத் தீற்றல்கள்
புல்லின் இதழ்கள்.

பேரழகின் எளிமை
எளிமையின் பேரழகு.

புல்லின் இதழ்மேல்
பனித்துளி

பேரழகின் எளிமை
எளிமையின் பேரழகு.


பனித்துளியில்
ஒளிர்கிறது
சூரியன்.


பேரழகின் எளிமை 
எளிமையின் பேரழகு.


பனித்துளி எடுத்து
இதயத்திற்குள் வைத்தேன்
சூரியன்
இரவை ரசித்திருக்க.

Saturday, November 6, 2010

உருவெளிக் களங்கள் - 6

வரலாற்றைவிட புனைவுகள்தான் மனிதர்களின் ஆழ்மனதிற்குத் திருப்தியைத் தர முடியும் என்பதையே கலைகள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றன. முகலாய மன்னர் அக்பரின் ராஜபுத்திர மனைவி ஜோதாபாயின் கதை திரைப்படமாக வந்தபோது அக்பராக ஹிருத்திக் ரோஷன் நடித்திருந்ததை அறிந்து இப்படித்தான் தோன்றியது. வரலாற்றுக் குறிப்புக்களில் காணக்கிடைக்கும் அக்பரின் தோற்றத்துடன் ஹிருத்திக்கின் முகமும் உடலும் எந்த விதத்திலும் பொருந்தாது!அக்பர்  GENU VARUM என்று அழைக்கப்படும் கவட்டக் கால்கள் - வளைந்த கால்கள் - கொண்டவர். எனவே அவர் நடந்தால் 'டேஷூன்ட்' நாய் நடப்பதைப்போல் இருக்கும்! அத்துடன் அக்பர் சற்றே பருமனானவரும்கூட. அவரின் முகம் பம்பளிமாஸ் போல் பொத்தென்று இருக்கும். மூக்கு உருண்டை. கன்னத்தில் ஒரு பெரிய மரு. இப்படியொரு தோற்றத்தைத் தேடிக்கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்றுதான் ஹிருத்திக்கை அக்பராக நடிக்க வைத்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அல்லது அப்படிப்பட்ட உருவம் காமெடியனாகத்தான் தோன்றுமே தவிர ஹீரோவாக எடுக்காது என்பது காரணமாக இருக்கலாம். எப்படியோ ஒரு கவட்டைக்கால் குள்ளனை உலக அழகி ஒருத்தி உருகி வழிந்து காதலிக்கும் 'வரலாற்றுக் காட்சி'களை ரசிக்கும் வாய்ப்பு இந்தியர்களுக்குக் கிடைக்காமலே போய்விட்டது. குடும்பக் கட்டுப்பாட்டு முக்கோண வடிவமும் கத்திமூக்கும் சாம்பல் கண்ணும் செம்பட்டைத் தலையும் கொண்ட ஹிருத்திக்கின் முகம் எந்த விதத்திலாவது மன்னர் அக்பருக்குப் பொருந்துமா சொல்லுங்கள்?

ஆனால் வெகுஜனத்திற்குத் தேவை வரலாறு அல்ல. செவ்வியல் புனைவுகள்தான்! அந்த வகையில் பல்வேறு கால தேச மாற்றங்களுக்கு ஏற்ப பலவகைகளில் உருவகிக்கப்பட்ட இரண்டு ஆளுமைகள் என்று ஏசு நாதரையும் புத்தரையும்தான் கூறவேண்டும்.ஏசுநாதர் யூத மரபில் பிறந்தவர். எனவே அவருடைய தோல் கோதுமை நிறத்தில்தான் இருந்திருக்க வேண்டும். தலைமுடி நிச்சயமாகக் கறுப்புத்தான். கண்மணிகளின் நிறமும் கறுப்பே. இப்படித்தான் ஏசுவின் அசல் உருவத்தை நாம் நிர்ணயிக்க முடியும். ஆனால் ஐரோப்பிய ஓவியங்களையும் உலகெங்கிலும் உள்ள தேவாலயங்களையும் பார்த்தால் விதவிதமான ஏசு நாதர்களைக் காணலாம்! தங்க நிறக் கேசம் கொண்ட BLONDE ஏசுநாதர்கூட இருக்கிறார்! அரக்கு அல்லது நீல நிற விழிகள் கொண்ட ஏசுவையும் காணலாம். ஏசு அப்படித் தோன்றியிருக்க வேண்டுனானால் அவர் காண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டிருந்திருக்க வேண்டும்!

இயேசுநாதரின் முகத்தை இவ்வாறு பல ஓவியர்களும் தங்கள் கற்பனைகளுக்கு ஏற்ப வரைந்துகொண்டிருந்தார்கள். அதில் அவர்களின் இனம், நாடு சார்ந்த அடையாளங்களை ஏற்றினார்கள். ஆனால் இந்தியாவின் தேவாலயங்களில் இந்தியனின் அடையாளமுள்ள ஒரு ஏசுவை நாம் காண முடிவதில்லை. ஏனெனில், வெள்ளையர்களின் ஆட்சியில் அவர்கள் வெள்ளைக்கார ஏசுவைதான் நமக்கு வழங்கினார்கள்! அமெரிக்கா, ஆப்ரிகா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கும் ஐரோப்பிய ஜாடை கொண்ட ஏசுநாதர்தான் சென்றார். வெள்ளையர்கள் கருப்பர்களைத் தாழ்வாக நடத்தும் போக்கு பல நூற்றாண்டுகளாக நடந்து வருவதால், தேவாலயங்களிலும் அந்த நிறபேதம் முகத்தில் அறையவே, தன்னை நாயை விடக் கேவலமாக நடத்தும் ஒருவனின் இன அடையாளங்களுடன் இருக்கும் ஏசுவை வழிபட கறுப்பர்களின் மணம் ஒப்பவில்லை. அவர்கள் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது தங்கள் நீக்ரோ அடையாளத்தில் ஒரு கறுப்பு ஏசுவை (BLACK JESUS ) உருவாக்கிவிட்டார்கள்!


கறுப்பின விடுதலை இயக்கத்தின் (BLACK LIBERATION MOVEMENT ) சமயவியல் கூறு என்று இதனைச் சொல்லலாம். யூத ஏசுவை ஐரோப்பியர்கள் ஒரு வெள்ளை ஏசுவாக மாற்றுவது சாத்தியம் என்றால் அவரை ஒரு நீக்ரோ ஏசுவாக மாற்றுவது ஏன் சாத்தியமாகாது? எனவே கறுப்பர்கள் தங்களுக்கான கறுப்பு ஏசுவை உருவாக்கி தங்களுக்கான தேவாலயங்களில் அவரைச் சிலுவையில் தொங்கவிட்டு வழிபடுகிறார்கள். கறுப்பு ஏசுவின் படங்களுடன் பைபிள் கதைகளை அச்சிட்டுத் தங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள்!ஆனால் பிரச்சனை இத்துடன் முடியாது. ஏசுவின் அன்னை மரியா ஒரு யூதப் பெண்ணாயிற்றே? அவருக்கு எப்படி நீக்ரோ குழந்தை பிறந்ததாகக் கூறுவது? எனவே, கன்னி மரியாளையும் ஒரு கறுப்புப் பெண்ணாக மாற்றிவிட்டார்கள்!

ஏசுநாதரின் உருவம் எப்போதும் சோகமயமாகவே வரையப்படுகிறது. சோகம்தான் ஆன்மிக வெளிப்பாடு என்பது போன்ற ஒரு கருத்தாக்கத்தை ஏசுவின்மீது ஏற்றிவிட்டார்கள். அவருடைய கண்களில் ஒருவித ஏக்கம் தென்படுவதையும் காணலாம். ஆனால் ஏசு ஒரு புரட்சியாளர். ஓஷோவின் பாஷையில் கூறுவதானால் அவர் ஒரு கிளர்ச்சியாளர்! ஐந்து வயது சிறுவனாகத் தன் பிறந்த மண்ணை நீங்கிச் செல்லும் ஏசு முப்பது வயது இளைஞனாக மீண்டும் ஜெருசலேம் நகருக்கு வருகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் எங்கு சென்றார் என்ன செய்தார் என்னும் விவரம் பைபிளில் இல்லை. எஸ்ஸீன்ஸ் என்னும் ஆன்மிகப் பள்ளியில் பயின்றார் என்றும், இந்தியாவிற்கு வந்து யோகிகளுடன் வளர்ந்து ஆன்மிகம் பயின்றார் என்றும், புத்த ஞானிகளுடன் தங்கி தியானம் பயின்றார் என்றும் பல யூகங்கள் உள்ளன. ஆனால் ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது. முப்பது வயதில் அவர் வந்தபோது துடிப்பு மிக்க இளைஞனாக, யூதர்களின் அநியாயங்களை என்திர்க்கும் ஒரு கிளர்ச்சியாளராகத்தான் அவர் வந்தார்.ஜெருசலேமின் யூதக் கோயிலுக்குள் (SYNAGOGUE ) நுழையும் ஏசு அங்கே அமர்ந்து வட்டித்தொழில் செய்துகொண்டிருந்தோரையும் வேன்புராக்களைக் கூண்டில் அடைத்து விற்றுக் கொண்டிருந்தோரையும் சாட்டையால் விளாசித் தள்ளினார் என்று பைபிள் கூறுகிறது (மார்க்கு 11 : 15 ). இக்காட்சியை ஒரு ஐரோப்பிய ஓவியத்தில் கண்டபோது முதன் முதலாக ஏசுவின் முகத்தில் வீரம் ததும்புவதைக் கண்டேன். ( குறிப்பு: பைபிளின் இந்தக் காட்சிதான் 'எங்கள் வீட்டுப் பிள்ளை' படத்தில் இரண்டாம் எம்.ஜி.ஆர் எண்ட்ரி ஆகி 'நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்' என்று சாட்டையை விளாசிக்கொண்டு பாடும் பாடலுக்கான இன்ஸ்பிரேஷன் என்று எண்ணுகிறேன்.) 

வாயில் பற்கள் தெரிய சிரிக்கும் ஏசுவைப் பார்க்க வேண்டும் என்றும் ஒரு ஆசை இருந்தது. ஏனெனில் ஏசுவுக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கோ சிரிக்கும் முகங்களைத்தான் பிடிக்கும். சிடுசிடு மூஞ்சிகளையோ உம்மனாமூஞ்சிகளையோ அவர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே ஏசு மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டிருந்த கணங்கள் அவர் வாழ்க்கையில் இருந்திருக்க வேண்டும் அல்லவா? அந்தக் கணங்களை மெல் கிப்சன் (MEL GIBSON ) இயக்கிய "THE PASSION OF THE CHRIST " (2004 ) என்னும் திரைப்படத்தில் கண்டேன். தன் அன்னை மரியைக்கு மகனாக, ஒரு தச்சனாக சாதாரணமான வாழ்க்கைக் கணங்களை முழுமையாக வாழும் ஒரு ஏசுநாதரைச் சில காட்சிகளில் மெல் கிப்சன் காட்டியிருந்தார்.
பைபிள் குறிப்பின்படி ஏசுநாதருக்கு முப்பத்துமூன்று வயதாக இருக்கவேண்டும் என்பதால் ஜேம்ஸ் கேவீசல் (JAMES CAVIEZEL ) என்னும் 33 வயது நடிகரை ஏசுநாதராக இப்படத்தில் மெல் கிப்சன் நடிக்கவைத்திருந்தார். இந்த விஷயமும் என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில், தொலைக்காட்சியில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்த என் சிறு பிராயத்தில் ஏதேனும் கிருத்துவப் பண்டிகை வந்துவிட்டால் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் ஒரு பாடலைக் கட்டாயம் போடுவார்கள். "தேவ மைந்தன் போகின்றான், மேரி மைந்தன் போகின்றான்" என்று வரும் அப்பாடலில் சிலுவை சுமந்து செல்லும் ஏசுவாக ஒருவரைக் காட்டுவார்கள். அவருக்கு ஐம்பது வயது இருக்கும்! பாருங்கள், ஏசுநாதர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்னும் நல்ல எண்ணம் ஒரு தமிழ்ப்பட இயக்குனருக்குத்தான் இருந்திருக்கிறது! 

ஏசுநாதரின் ஜாடை உண்மையில் யாருடையது? அவர் 'தந்தை' இல்லாமல் பிறந்தவர். அசெக்சுவல் பிறப்பின் வெளிப்பாடு. இதை பைபிளும் குரானும் கூறுகின்றன. வானவர் தலைவர் ஜிப்ரயீல் (GABRIEL ) மண்ணுக்கு வந்து அருள்வாக்கு சொல்லி ஏசுவின் ஆன்மாவை கன்னிப் பெண்ணான மரியாவின் கர்ப்பப் பைக்குள் 'ஊதி'யதால் ஏசு பிறக்கிறார். அதாவது அவருடைய உடல் என்பது முழுக்கவும் மரியாவின் 24 குரோமோசோம்களைக் கொண்டு உருவானது. மரியாவின் DNA -வில் அவருடைய பெற்றோர்களின் ஜீன் செய்திதான் இருக்கும். அந்தச் செய்திகளின் அடிப்படையில் உருவான ஏசுநாதரின் உருவ அமைப்பு மரியாவின் தந்தையைப் போல் இருக்க வாய்ப்பு உள்ளது. தாத்தாவின் ஜாடையில் பேரப் பிள்ளைகள் இருப்பது சகஜம்தானே? மரியாவின் தந்தை ஒரு மன்னர். 'இம்ரான்' என்பது அவர் பெயர். திருக்குரானின் மூன்றாம் அத்தியாயம் 'ஆலி இம்ரான்' (இம்ரானின் குடும்பம்) கன்னி மரியை மற்றும் ஏசுநாதர் பற்றிப் பேசுகிறது. ஆக, ஏசுவின் உருவத்தில் ஒரு ராஜ களை இருந்திருக்க வேண்டும். "I AM THE KING " என்று அவர் பேசியது ஆன்மிக அடிப்படையில் என்றாலும் ரோம் கவர்னருக்கு அது அரசியல் சிக்கலை உண்டாக்கியதற்கு இதுவும் ஒரு காரணமாகலாம்!

ஏசுவின் உருவமூலம் பற்றி இன்னொரு பார்வையும் உள்ளது. சூஃபி ஞானி இப்னுல் அரபி அவர்களின் கருத்து அது. அதாவது ஏசுநாதர் எந்த உருவத்தில் பிறக்க வேண்டும் என்று இறைவனின் ஞானத்தில் இருந்ததோ அந்த உருவம் கொண்டுதான் ஜிப்ரயீல் கன்னி மரியாவின் முன் தோன்றினார் என்று அவர் கூறியுள்ளார். இந்தக் கருத்து உண்மையிலேயே புதுமையானதுதான்.  

மரியாவின் முன் வானவர் தலைவர் ஜிப்ரயீல் தோன்றி நற்செய்தி சொல்லும் சம்பவம் பைபிளிலும் குரானிலும் வருகிறது. ஆனால் விவரணைகள் சற்று வேறுபடுகின்றன. இந்த நிகழ்வைக் கூறும் பைபிள் பகுதி லூக்கா ( 26 -38 )-ல் தனிமையில் இருந்த மரியாவிடம் வானவர் ஜிப்ரயீல் தன் சுய உருவில் வந்ததாக இடம்பெற்றுள்ளது. அதாவது அவர் சிறகுகள் வைத்துக்கொண்டு வந்தார் என்பது கருத்து. எனவேதான் இந்த நிகழ்வை ஓவியங்களாகத் தீட்டிய பல கிருத்துவ ஓவியர்கள் ஜிப்ரயீலை சிறகுகளுடன் வரைந்தார்கள்.இது சூபி ஞானி இப்னுல் அரபியின் கருத்தில் பொருந்தவில்லை. ஏனெனில், அவர் வாதத்தின் படி, ஜிப்ரயீல் சிறகுகளுடன் மரியாவின் முன் தோன்றியிருந்தால் ஏசுநாதரும் சிறகுகளுடன் பிறந்திருக்கவேண்டும்! இப்னுல் அரபியின் கருத்து திருக்குரானை அடிப்படையாகக் கொண்டது. ஏசுவின் பிறப்பு பற்றிப் பேசுகின்ற திருக்குரானின் இன்னொரு அத்தியாயம் 'மர்யம்' (எண்: 19 ). மனிதர்களை விட்டு ஒதுங்கித் தனிமைத் தியானத்தில் இருந்த மரியாவின் முன் வானவர் ஜிப்ரயீல் தோன்றியதை இந்த அத்தியாயத்தின் 16 ,17 -ம் வசனங்கள் பின்வருமாறு பேசுகின்றன:

"இந்த வேதத்தில் மர்யமை நினைப்பீராக.
அவர் தன் இல்லத்தினரை நீங்கிக்
கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் தனித்தபோது
அவர்களை விட்டு ஒரு திரையை அமைத்துக் கொண்டார்.
அப்போது நாம் அவரிடத்தில் நம் ஆன்மாவை அனுப்பிவைத்தோம்.
அவருக்கு ஒரு நிறைவான மனிதராக
அவர் தோன்றினார்"

இந்த வசனத்தில் "நிறைவான மனிதராக அவர் தோன்றினார்" என்பது அரபி மூலத்தில் " பதமஸ்ஸல லஹா பஷரன் சவிய்யா" என்றுள்ளது. தமஸ்ஸுல் என்பது கண்ணுக்குப் புலப்படும் உருவத் தோற்றத்தைக் குறிக்கும். பஷர் என்னும் அரபிச் சொல்லும் உருவ நிலையில் உடல் தோற்றம் கொண்ட மனிதனையே குறிக்கும். சவிய்யா என்னும் அரபுச் சொல் 'செவ்வை' (PERFECT ) - குறைகளற்ற என்னும் பொருள் தரும். எனவே, வானவர் தலைவர் ஜிப்ரயீல் குறையற்ற ஒரு மனித உடலின் தோற்றத்துடன் வந்தார்கள் என்றாகிறது. இதை வைத்துத்தான் இப்னுல் அரபி தன் கருத்தை முன்வைத்துள்ளார்கள்.

ஏசுவின் ஆன்மா கன்னி மரியாவின் கர்ப்பவறைக்குள் எவ்வாறு சேர்ந்தது என்பதைச் சிந்திக்கும் போது பெண்ணின் உடலியல் சார்ந்த சிந்தனைகள் எழுந்துவிடுகின்றன. இந்த நிலை பல முஸ்லிம் சிந்தனையாளர்களைச் சங்கடப் படுத்தியுள்ளது. இறைத்தூதராக முஸ்லிம்கள் மதிக்கும் ஏசுநாதரின் பரிசுத்த அன்னையின் மீது சற்றே பிசகிய எண்ணம் எழுவதையும் ஒரு முஸ்லிமால் அனுமதிக்க முடியாது! இதனால், ஏசுவின் ஆன்மா மரியமின் கற்பத்திற்குள் சேர்க்கப்பட்ட முறை பற்றிச் சிந்திப்பதில் பலரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதில்லை. இந்த நிகழ்வு கிருத்துவ இறையியலில் ANNUNCIATION என்று கூறப்படுகிறது. இதைப் பற்றித் திருக்குரானின் 66 -ம் அத்தியாயம் "அத்-தஹ்ரீம்" ( 'தடை' என்று அர்த்தம்!)-ல் வரும் 12 -ம் வசனம் பின்வருமாறு கூறுகிறது:

"மேலும் இம்ரானின் புதல்வியான மர்யமையும்
(அல்லாஹ் உதாரணமாக்கினான்)
அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்.
நாம் அதில் நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம்"  

இந்த வசனத்தின் அரபி மூலத்தில் "ஃபர்ஜ்" என்னும் வார்த்தை வந்துள்ளது. ஃபர்ஜ்  என்னும் வார்த்தை இங்கே ஆகுபெயராக அல்லது குறியீட்டுப் பெயராகக் 'கற்பு' என்று அர்த்தம் பெற்றுள்ளது. அதன் நேரடி அர்த்தம் "யோனி" என்பதாகும். கற்பைக் காப்பது என்பது மறைவுறுப்பைப் பாவங்களை விட்டும் காப்பதுதானே! நான் மேலே கொடுத்திருக்கும் வசன மொழிபெயர்ப்பு ஹாஜி முஹம்மது ஜான் அவர்களுடையது.
அவர் மிகத் தெளிவாகவே கற்பு என்று மொழிபெயர்த்துள்ளார். இதை வைத்துத்தான் "நாம் அதில் நம் ஆத்மாவிலிருந்து ஊதினோம்" என்னும் வசனப் பகுதியை விளங்க முடியும். இதை இவ்வாறு விளங்குவதற்கு சில மனங்கள் தயங்குகின்றன. சவூதி அரசு வெளியிட்டுள்ள திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பில், முஹம்மது தகியுத்தீன் ஹிலாலி மற்றும் முஹம்மது முஹ்சின் கான் ஆகிய மொழிபெயர்ப்பாளர்கள் ஆத்மாவை இறைவன் மர்யமின் ஆடையின் கையுறையில் ஊதினான் என்பதாகக் கூறியுள்ளார்கள். அவர்களின் மொழிபெயர்ப்பு இது:

"And Maryam (Mary), the daughter of 'Imran who guarded her chastity. And We breathed into (the sleeve of her shirt or her garment) through Our Ruh [i.e. Jibril (Gabriel)]" (66: 12)

இவ்வசனத்தின் மொழிபெயர்ப்புக்கான அடிக்குறிப்பில் அவர்கள் இவ்வாறு எழுதியுள்ளார்கள்: 
"*It is said that Jibril (Gabriel) had merely breathed in the sleeve of Maryam's (Mary) shirt, and thus she concieved ."

இந்த மொழிபெயர்ப்பும் அடிக்குறிப்பும் வசனத்தின் அரபி மூலத்திற்குப் பொருந்தவில்லை. ஊதப்பட்டது ஆன்மாதான். அது ஸ்தூலத்தை எவ்விதத்திலும் பாதிக்காமல் செல்லவல்லது. எனவேதான் கர்ப்பம் தரித்த பின்னரும் மர்யம் கன்னியாகவே இருந்தார்கள்!

  

Wednesday, November 3, 2010

உருவெளிக் களங்கள் - 5

ஞானிகளின் முகங்கள் மீது எப்போதுமே ஒரு தனி ஈர்ப்பு உள்ளது. கதைகளில் வருகின்ற ஞானியாரின் உருவங்கள் எப்போதும் சில தனித்தன்மைகளுடன் சித்தரிக்கப்படுகின்றன. அதில் மிக முக்கியமானது மூக்கு. முகம் எவ்வளவுதான் களையாக, பொலிவாக, நிறமாக இருந்தாலும் மூக்கு நேர்த்தியாக இல்லையென்றால் அந்த முகம் அவ்வளவாக சோபிப்பதில்லை. சில நேரங்களில் முக அமைப்பு ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது!'கிளியோபட்ராவின் மூக்கு மட்டும் சற்றே துருத்திக்கொண்டோ அல்லது அமுங்கியோ இருந்திருந்தால் எகிப்து மற்றும் கிரேக்க நாட்டின் வரலாறு வேறு விதமாக இருந்திருக்கும்' என்று கூறுவார்கள். சமீபத்தில் திருச்சிக்கு சோனியா காந்தி வந்துபோனார். சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ராகுல் காந்தியின் படமும், பிரியங்கா காந்தியின் படமும் இருந்தது. அதைப் பார்த்த என் மனைவி என்னிடம் சொன்னாள், "நல்ல வேளை இவங்க ரெண்டு பேரும் அவங்க அப்பா ஜாடையில வந்துட்டாங்க." நேரு குடும்பத்துக்கே அடையாளமாகிவிட்ட அந்த எடுப்பான மூக்குதான் என் மனைவியைக் கவர்ந்திருக்க வேண்டும். பிரியங்காவிடம் நான் கவனித்த இன்னொரு விஷயம் அவரது சிகையலங்காரம். அதாவது பையனைப் போல் பாய்கட் வெட்டியிருக்கிறார். அது அவருடைய முகத்தோற்றத்தை அவரது பாட்டி இந்திரா காந்தியைப் போல் காட்டுகிறது. வரலாற்று மீட்டுருவாக்கம் என்பது நம் நாட்டில் இப்படித்தான் உண்டாக முடியும் போலும்!ஜெயமோகன் எழுதிய 'திசைகளின் நடுவே' என்னும் அருமையான சிறுகதை ஒன்றுண்டு. மகாபாரத காலத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியை வைத்து எழுதியுள்ளார். அதில் ஒரு சார்வாகன் வருகிறான். நாத்திகத்தை மெய்காண் முறையாகக் கொண்ட பொருள்முதல்வாதி. கார்ல் மார்க்சுக்குப் பூட்டனுக்குப் பூட்டன். அவனையும் ஒரு ரிஷியாகவே காண்கிறார்கள். ஜெயமோகன் அவனை இப்படி வருணிக்கிறார்: "பெருச்சாளித் தோலால் ஆன கோவணம் மட்டும் அணிந்த, நெடிய கரிய உடல். பூச்சிக்கடியிலிருந்து தப்ப உடம்பெங்கும் சாம்பல் பூசியிருந்தான். தாடியும் மீசையும் அடர்ந்த நீண்ட முகத்தில் எடுப்பான நாசி. ஜ்வலிக்கும் சிவந்த கண்கள். ஒரு கையில் சாலமரக் கிளையிலான யோகத்தண்டு. மறுகையில் மன்டையோட்டுத் திருவோடு. இவன்தானா? பிரமிப்பும் உத்வேகமும் என்னுள் நிறைந்தன."  இதேபோல் பலரும் எழுதியிருக்கிறார்கள். ஞானி என்றால் அவருக்கு மூக்கு எடுப்பாக இருக்கவேண்டும் என்பது ஒரு எழுதாத விதியாகிவிட்டது. ஆனால் சீனா, ஜப்பான் நாட்டிலுள்ள ஞானிகளின் மூக்குகள் சப்பையாகத்தானே இருக்கும்? லாவோ சூ, சுவாங் சூ, லேய் சூ என்னும் தாவோ மும்மூர்த்திகளின் முகங்கள் எப்படியிருந்திருக்கும்? சப்பை மூக்குடன்தான்! எடுப்பான மூக்குதான் ஞானிகளின் லட்சணம் என்பதற்காக ஞானம் அடைந்த கையோடு ஆஸ்பத்திரிக்குப் போய் 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்யமுடியுமா என்ன?

சூபி ஞானிகளின் பெயர்களைப் படிக்கும்போதெல்லாம் கற்பனையில் அவர்களின் உருவங்கள் நிழலாடும். ஆனால் எந்த சூபி ஞானியையும் நான் சப்பை மூக்குடன் கற்பனை செய்து ரசித்ததில்லை. ஒரு மங்கோலியனின்  கற்பனையில் அப்படி வருவார்களோ என்னவோ? அவரவருக்குப் பெர்சனல் அளவுகோல்கள் உண்டல்லவா? இமாம் கஜ்ஜாலி என்று சொன்னவுடன் நீண்ட தாடி வைத்த ஹசன் ஹஜ்ரத் என் நினைவில் வந்துவிடுவார். பாலக்கரையில் சைக்கிளில் சுற்றித் திரியும் ஒருவர்தான் என் டைரக்ஷனில் முல்லா நஸ்ருத்தீன்! வரலாற்று நாயகர்களை இப்படி சமகாலத்தில் கண்ணெதிரே கண்டு வாழ முடிகிறது! சிங்கப்பூர் பக்கத்திலிருந்து சூபி ஞானி என்று ஒருவரின் படத்தை நண்பர் ஒருவர் காட்டியபோது எனக்குப் பெரிதும் ஏமாற்றமே ஏற்பட்டது. சப்பை மூக்கும் சரியாக முளைக்காத மீசையும் தாடியுமாக பூனை கண்களை மூடிக்கொண்டதுபோல் இருந்தார்! உருவத்தை வைத்து அவரை சூபி ஞானி என்று என்னால் ஏற்கவே முடியவில்லை! ஆனால் அந்த நாட்டில் அவருக்குப் பல சீடர்கள் இருக்கக் கூடும். ஒரு குருவின் லட்சணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு சூபித்துவ நூலில் பட்டியல் போட்டிருந்தது. அதில் புற லட்சணங்கள் பற்றிய லிஸ்டில் "அவர் சீடனின் கண்களுக்கு அழகாகத் தெரியும் தோற்றத்துடன் இருக்க வேண்டும்" என்று ஒரு குறிப்பும் இருந்தது. அதாவது அவர் அழகுப்போட்டிகளில் வரும் ஆணழகனைப் போல் இருக்கவேண்டும் என்பதல்ல. முகக்களை என்று கூறுகிறோமே, அது அவரிடம் இருக்கவேண்டும். ஞான வழியிலும் கவர்ச்சி நிச்சயம் வேலை செய்கிறது. அழகின் ஆகர்ஷணம் தேவைப்படுகிறது!

"இருபது இளம்பெண்களின்
அழகில் இல்லாத ஈர்ப்பு 
ஞானியின் கண்களில் உள்ளது"
என்று மௌலானா ரூமி பாடுவதைப்போல!ஹெர்மான் ஹெஸ்ஸே எழுதிய அற்புதமான நூல் 'சித்தார்த்தா'. அதில் இளம் சித்தார்த்தன் தன் நண்பன் கோவிந்தனுடன் சென்று புத்தரைக் காணும் காட்சி மிகவும் முக்கியமான ஒன்று. புத்தர் ஒரு ஞானி என்பதை அவரது தோற்றமே அவனுக்குக் கூறிவிடும். ஹெஸ்ஸே எழுதிய மிக அழகான வரிகளில் அவர் புத்தரை வருணித்து எழுதிய வரிகளும் அடங்கும்: "பணிவுடனும், சிந்தனையில் ஆழ்ந்தும் புத்தர் தன் பாதையில் சென்றார். அவருடைய முகம் மகிழ்ச்சியாகவும் இல்லை, சோகமாகவும் இல்லை. மறைந்த புன்னகையுடன், அமைதியாக, மௌனமாக, ஆரோக்கியமான ஒரு குழந்தையைப் போல, காவி அணிந்தவராக அவருடைய பிட்சுக்களை மாதிரித்தான், நேர்த்தியான விதிமுறையின்படிக்  காலடி எடுத்து வைத்து, புத்தர் நடந்தார். ஆனால் அவருடைய முகமும், அவருடைய நடையும், மௌனமாய்ச் சாய்ந்த பார்வையும், மௌனமாய் அசையும் கைகளும், ஒவ்வொரு விரலும்கூட அமைதியையும், முழுமையையும் வெளிப்படுத்தின. அவற்றில் தேடல் இல்லை, போலிமை இல்லை. அவை ஓர் உதிரா நிம்மதியில்,  ஓர் உதிரா ஒளியில், தீண்ட முடியாத ஒரு அமைதியில் மெல்ல சுவாசித்தன."

சாத்தானின் புன்னகைகுழந்தைக்குள்
நுழைகிறது சமூகம்
ஒரு மோசமான படையெடுப்பாய்.

விளைநிலம் அழித்து
எழுகின்ற கட்டடமாய்.

நிஜங்கள்
நிழற்படங்களாகி
நிழற்படங்கள்
வார்த்தைகளாகி
குழந்தை
செய்தித்தாள் ஆகிறது.

தனிமரம்
தோப்பாகிவிடுகிறது
புதிய தளிர்கள்
தோன்றுவதில்லை
பூக்கள் எதுவும்
மலர்வதில்லை.

குழந்தைக்குள்
சமூகம் நுழையும் நாள்
குழந்தையின்
இறந்தநாள் ஆகிறது.

மாமரத்தில்
தேங்காய் காய்க்க
ரோஜாச் செடியில்
புடலங்காய் தோன்ற
கோழி பால் சுரக்க
மாடு முட்டையிட
வகுப்பறையில் நடக்கிறது
விபரீத ரசாயனம்.

'எழுத்தறிவித்தவன்
இறைவன் ஆகும்'
பிரம்படிக்குப் பயந்து
ஒப்பிக்கிறது குழந்தை.

சாத்தான்
புன்னகைக்கிறான்.

'என்ன ஆகப்போகிறாய்?'
என்னும் கேள்விக்கு
என்னென்னவோ சொல்கிறது
குழந்தை.

'மீண்டும் குழந்தையாகப் போகிறேன்'
என்று சொல்வதில்லையே
எந்தவொரு குழந்தையும்.

ஒரு குழந்தை
பிரஜையாகும்போது
ஒரு பிரபஞ்சவிதை
அழிந்துவிடுகிறது.

பூக்காட்சிபூ பார்த்துச் செல்லும்
கண்கள் பல.

பூ பார்ப்பதில்
பார்க்காமல் செல்லும் 
கண்கள் சில.

பூ பார்ப்பதில்
பார்த்து மட்டும் செல்லும்
கண்கள் சில.

பூ பார்ப்பதில்
பறித்துச் செல்லும்
கண்கள் சில.

பூ பார்ப்பதில்
பூவாகிச் செல்பவர்
யார்?