Thursday, September 26, 2019

அனா ஹதம்மோகன ராகம் நின் தேகம்
கீர்த்தனம் ஆக்கி ஞான் பாடும்
-கவிஞர் வாலி.

ராகினீ!
என் தர்மாவதீ!

சம்பூரணமாய்ச்
சமைந்தவளே!

ஏகன் சமைத்த
உன் வடிவம்
ஏழிசை

கரந்து
எனக்கே கமழும்
உன் கந்தம்
நளினகாந்தி

அன்றாடம் புதிதாய்
அழைக்கும்
உன் அசைவுகள்
ரீதி கௌளை

சவியுறத் தழுவிய
நதியென
உன் நடை
சலநாட்டை

உயிரின் ஒளிமிகு
உன் பார்வை
பூபாளம்

வினாடியெனினும்
விலகாதணையும்
அன்பின் அன்றிலே!
உன் சிணுங்கல்
ஹம்ஸத்வனி

மனமெனும் ஏரியில்
அலைகளாடும்
உன் பேச்சு
ஹம்ஸநாதம்

சக்தி எழுந்த
சாந்த ரூபம்
உன் கோபம்
கம்பீர நாட்டை
குறிஞ்சி மலர்ந்த
அரிய அழகே!
உன் சிரிப்பு
மலைய மாருதம்

இல்லத்திருந்து
உள்ளம் உருகும்
உன் ஏக்கம்
ஜோன்பூரி

கலி தீர ஒளி சேர
இருள் மாய அருள் பாய
உன் பிரார்த்தனை
பஹுதாரி

மருள் மான் கண்ணில்
அரிமா நோக்கென
உன் புலவி
சிம்மேந்திர மத்யமம்

கருணை அமிர்தக்
கடலின் பாவாய்!
உன் ஸ்பரிசம்
பாகேஸ்ரீ

முக்தியின்
முன்சுவையாகும்
உன் முத்தம்
மதுவந்தி

’நான்’ கரையும்
நம் ஏகாந்தக் கலவி
அனாஹதம்.

Saturday, September 14, 2019

ஆவென ஆவேனோ?               

 நல்லான் தீம்பால் நனி கசிய...” என்னும் கட்டுரையின் முடிவில் ’அப்துல் ரகுமான் அவர்கள் அருள் என்னும் அமலப் பால் அருந்திய ஆன்மிகர்’ என்று குறிப்பிட்டிருந்தேன்.
      
 அமலப் பால் என்றால் என்ன? தூய பால். அழுக்குப் படாத பால்.

      தூய பால் என்றே நேரடியாகச் சொல்லலாமே? அதை விடுத்து அமலப் பால் என்று நேரற்றுச் சொன்னது ஏன்? என்றொரு கேள்வி எழுந்தது.

      அக்கட்டுரை பசு மற்றும் பால் ஆகிய ஆன்மிகக் குறியீடுகளைப் பற்றிப் பேசியது. பசு என்பது ஆன்மாவையும் பால் என்பது ஞானத்தையும் குறிப்பன என்று விளக்கி எழுதப்பட்டது. எனவே, ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்கள் நீங்கிய தூய அறிவு என்னும் பொருளும் தொனிக்கும் வண்ணம் அமலப் பால் என்று குறிப்பிட்டேன்.

      மட்டுமன்று, பசுவின் மடி பால் சுரத்தலைப் பற்றிப் பேசும் திருக்குர்ஆன் வசனமும் நினைவில் நின்றது:

      ”கால்நடைகளில் உமக்கொரு கல்வி உளது.
      சாணிக்கும் குருதிக்கும் இடையில்
      அதன் வயிற்றிலிருந்து உமக்குத்
      தூய பாலினைப் புகட்டுகின்றோம்;
      அருந்துவோர்க்கு ஆனந்தம் ஆவது.”
      (16:66)

      சாணம் மற்றும் ரத்தம் ஆகியவற்றால் அழுக்காகி விடாமல் வெளியாகும் தூய பால். எனவே அது அமலப் பால்.

      ஆன்மா என்னும் பசு உலகப் பற்றுத் தளைகளான பாசம் விட்டு விலகி படைத்த இறைவனிடம் திரும்ப வேண்டும் என்று குறியீடாக ஆன்மிகம் பேசுகிறது சைவ சித்தாந்தம்.

      அ என்னும் தமிழ் எழுத்தின் வடிவம் பசுவின் முகம் என்ப.

      அதனை அடுத்து எழுந்த ஆ என்பது தலையுடன் வால் சேர்ந்த வடிவம். அதாவது முன் பக்க அடையாளம் தலை, பின் பக்க அடையாளம் வால் என முழுப் பசுவையும் குறித்தது. அதனால் ஆ என்னும் சொல்லின் பொருள் பசு என்றாயிற்று.

      அ என்பது எழுத்து. ஆ என்பது சொல். அது குறிக்கும் பொருள் பசு. குறியீடாக ஆன்மா.

      அடுத்த எழுத்து இ. அது இறைவனைக் குறிக்கிறது. எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதை ஆன்மா அறிதல் வேண்டும்.

      பசு பதியிடம் திரும்ப வேண்டும். அதாவது, ஆன்மா இறைவனிடம் திரும்ப வேண்டும். அந்நிலையே ஈடேற்றம். ஈ என்பது ஈடேற்றம். அதனை இறைவன் ஆன்மாவுக்கு ஈகின்றான். அவனது பக்தியில் ’ஈ’யின் தலை அளவு கண்ணீர் சொரிந்தார்க்கும் அருள்கிறான் என்பது நபிமொழி ஒன்றின் கருத்து. ஈயொன்றின் ஒரு சிறகு அளவுக்கேனும் மதிப்பில்லாதது இவ்வுலகு என்பது இன்னொரு நபிமொழியின் கருத்து. அத்தகையை இழிந்த உலகை விட்டு இறைவனிடம் திரும்புகின்ற ஆன்மாவுக்கு ஈடேற்றம் ஈகின்றான்.

      இனி, அறபி எழுத்துக்கள் கொண்டு இவ்விளக்கம் புகல்வாம்.

      அலிஃப் என்பது அல்லாஹ்வைக் குறிக்கும் (அதன் வடிவம் ஒன்று என்னும் எண்ணின் வடிவமுமாம். இறைவன் ஒருவன் என்பதைக் குறிக்கும். அதன் எழுது முறை மேலிருந்து கீழாம். அவன் அருளால் உலகங்கள் யாவையும் தோன்றியதைக் குறிக்கும். அதனை சூஃபிகள் ‘தனஸ்ஸுலாத்’ என்பர். எண்ணும் எழுத்தும் அறிவித்த இறைவன் ஒருவனே எனலுமாம்).

      பசு என்றும் பதியின் முன்னிற்க வேண்டும். அலிஃப் என்னும் எழுத்தினை அடுத்து பே / பா என்னும் எழுத்து. அது ”ப(க்)கரா” (பசு) என்பதைக் குறிக்கிறது.

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம் “அல்-ஃபாத்திஹா” (திறப்பு). அதன் ஏழு திருவசனங்கள் மூன்று நிலையின. முதல் மூன்று திருவசனங்கள் இறைவனை அறிமுகஞ் செய்கின்றன. நான்காம் திருவசனம் இறைவனுக்கும் அடியார்க்கும் உள்ள உறவைக் கூறுகிறது. அடுத்த மூன்று வசனங்கள் அல்வழிப் படாது காப்பு. (பதியைப் பசு அணுகுதல் நேர்வழி. அது பாசத்தால் வழி தவறிப் போய்விடாமல் அவனே காக்கிறான்).

திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் ”அல்-பகரா” (பசு) என்பதையும் ஓர்க.

அறபி மொழியின் மூன்றாம் எழுத்து தே / தா. அது ”தவ்பா” (திருப்பம்) என்பதைக் குறிக்கிறது. ஆன்மாவாகிய பசு அல்லாஹ்விடம் திரும்புதல்.

அறபி மொழியின் நான்காம் எழுத்து “த்ஸெ” என்பது. இது, “ஸவாப்” (நற்கூலி) என்பதைக் குறிக்கும். பதியிடம் திரும்பிய பசுவுக்கான நல்லருள், சன்மானம்.

அறபி மொழியின் ஐந்தாம் எழுத்து ”ஜீம்”. இது, ’ஜன்னத்’ (சொர்க்கம்) என்பதைக் குறிக்கும். அதாவது வீடு பேறு, பரமபதம். இதுவே திரும்பிய ஆன்மா அடையும் நற்கூலி.

அறபி மொழியின் ஆறாம் எழுத்து “ஹே”. இது, ’ஹம்து’ (புகழ்) என்பதைக் குறிக்கும். அதாவது, ஆன்மா எப்போதும் இறைப்புகழின் அமுதம் அருந்தி ஆனந்திக்கிறது.  
உலகிற் போந்த இறைத் தூதர்கள் அனைவரும் கால்நடை மேய்த்துள்ளனர் என்பது நபிமொழி தரும் செய்தி. எனவே, உலகின் முதல் மனிதர் ஆதம் ஓர் ஆயர். முதற்றொழில் ஆநிரை மேய்த்தல். மந்தை கலையாது காத்தலும் விட்டு விலகிச் சென்ற கால்நடைகளை மீட்டலும் மேய்ப்பரின் பணி. இறைத்த்தூதர்கள் புறத்தில் மாட்டிற்கும் ஆட்டிற்கும் ஆற்றிய பணி ஒப்பவே அகத்தில் மனிதர்க்கு ஆற்றினர்.

      மொழிகளின் எழுத்துக்கள் கொண்டு ஈண்டு உரைப்பன வெறும் மொழி விளையாட்டா? அற்றன்று. ரஸோக்திகளோ? கூறுவோர் கூறுக. அகர முதல ஆய எழுத்துக்களினுள் ஏகன் வைத்த எண்ணிறந்த ஞானங்களில் ஒரு சிட்டிகை என் சிந்தையில் சிந்திற்று. அதை இங்கே பேசினேன்.

      அகர ஆகார அட்சராதிகளைச் சற்றே ஆய்ந்தேன். ஆ என அதிசயித்து அங்காந்து சமைந்தேன். ”என்றைக்கு நிற்தேடும் ஆவென ஆவேனோ?” என்றழுதேன்.

Friday, September 13, 2019

நல்லான் தீம்பால் நனி கசிய... - 2


இனி, கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய “மேய்ச்சல்” என்னுமிக் கவிதையின் உட்பொருள் விளக்கம் செப்புவாம். விளக்கவுரையை வடமொழியில் “பாஷ்யம்” என்று சொல்வர். தன்னைப் பசுவாக உருவகித்துக் கவிக்கோ எழுதியிருக்கும் இக்கவிதைக்கு அடியேன் சொல்லுமிவ் விளக்கவுரை ‘(கவிக்)கோ பாஷ்யம்’ என்க.

’என்னை மனிதனை விட உயர்த்து’ என்று
இறைவனிடம் கேட்டேன்.
அவன் என்னைப்
பசுவாக்கினான்.
 
ஞானக் கவிதைகள் கையாளும் குறியீடுகளிற் பயிற்சியிலார் சட்டென்று இவ்வரிகளை நோக்க இதனை எதார்த்தப் பொருட்கொண்டு பசு என்னும் விலங்கு  மனிதனை விடவும் உயர்ந்தது என்னும் இந்துத்துவக் கொள்கையை அப்துல் ரகுமான் ஏற்றுக்கொண்டார் எனப் பிழைபட விளங்குவர். இக்கவிதை அத்தகைய எளிய அறிவினருக்கானதன்று.

‘பசு’ என்பது இங்கே குறியீடு. சைவ சித்தாந்தத்தின் அடிப்படையே இக்குறியீட்டைப் பயன்படுத்தித்தான் வரையப்பட்டுள்ளது. இறைவனைப் பதி என்றும், ஆன்மாவைப் பசு என்றும், இறைவனை நினைக்க அணுக அடைய விடாது பசுவைத் தடுக்கும் ஆணவம், கன்மம் மாயை என்னும் மும்மலங்களாகிய தளைகளைப் பாசம் என்றும் அது குறியீடாக்கிப் பகர்கின்றது.

“பதி பசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
பதியணு கில்பசு பாசம் நிலாவே”
                  (திருமந்திரம்:115)

என்னும் திருமந்திரப் பாடலில் நான்கே நான்கு வரிகளில் சைவ சித்தாந்தம் என்னும் மெய்யியல் கொள்கை வரையறுக்கப் பட்டுவிட்டது என்று சொல்கிறார் சைவ அறிஞரும் திருமந்திர வல்லுநருமான பேராசிரியர் கரு.ஆறுமுகத் தமிழன்.

எனவே, இங்கே ’அவன் என்னைப் பசுவாக்கினான்’ என்பதன் பொருள் அவன் என்னை ஆன்மா ஆக்கினான் என்பதே. எல்லா மனிதர்களிலும் ஆன்மா இருக்கத்தானே செய்கிறது, இதில் ஆன்மா அக்கினான் என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்கலாம். மனிதர்கள் பெரும்பான்மையோரிடம் ஆன்மிக விழிப்புணர்வு இல்லை. ஆன்மா இருப்பினும் அதன் விழிப்புப் பெறாதவர் விலங்கனையர். விலங்குகளிடத்தும் ஓர் சுயாதீனமுண்டு. அதனை சூஃபிகள் (நஃப்ஸெ ஹைவானாத் – animal soul) என்பர். மனிதனில் அதனினும் வேறாக (நஃப்ஸெ இன்சானிய்யா – Human soul) என்பதுண்டு. முன்னது மனிதனில் உண்ணல், பருகல், இணை விழைதல் முதலிய விலங்குணர்வுகளை எழுப்புகின்றது. மனிதான்மா எப்போதும் இறைவனை அணுகி அடைதற்கே இயங்கும். உடலில் இருப்பினும் ஆன்மாவில் விழிப்புப் பெற்றவர்களை ஆன்மா என்றே அழைக்கலாம். அதன் குறியீடு ’பசு’.

அவனே என்
மேய்ப்பனும் ஆனான்

சொல்லத் தேவையென்ன? இது கிறித்துவக் குறியீடு என்பது அனைவரும் அறிந்ததே. ”நானே நல்ல மேய்ப்பன்” (யோவான் 10:11).  அறநெறி செலுத்தும் வழிகாட்டிக்கு அறபி மொழியிலொரு பெயர் ”ஹாத்” (haadh) என்பது. எதார்த்தத்தில் இறைவனே அவ்வழிகாட்டி. ஆனால் அப்பணியை அவன் தனது தூதர்களைக் கருவியாகக் கொண்டு செய்கிறான் என்பது இஸ்லாம் தரும் விளக்கம். எனவே அத்தகைய தூதர்களையும் உருவகமாக “ஹாத்” என்று அழைக்கப்படும். ஏசுவும் நபிகள் நாயகமும் இதர இறைத்தூதர்கள் அனைவரும் நல்ல மேய்ப்பர்கள் என்பது அப்படியே. (வெளிப்படையாகவும், இம்மண்ணில் அவர்கள் கால்நடை மேய்த்திருக்கின்றனர் என்பது வேறு விடயம். “கால்நடை மேய்த்திராத எவரையும் அல்லாஹ் இம்மண்ணுக்குத் தனது தூதராக அனுப்பவில்லை” என்று நபி (ஸல்) நவின்றுளார் (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா; நூற்கள்: புகாரி, முவத்தா, இப்னு மாஜா). மாலியம் ஏத்தும் கண்ணனும் ஆநிரை மேய்ப்பனே). எனவே, எதார்த்த மேய்ப்பனாகிய இறைவனையே தனது மேய்ப்பன் என்று கவிக்கோ குறிப்பிடுகிறார்.       
 அவன் என்னைக்
காயாத மேய்ச்சல் நிலங்களுக்கு
ஓட்டிச் சென்றான்

      ’காயாத மேய்ச்சல் நிலங்கள்’ என்பது இறைப் பண்புகளைக் குறிக்கும். அல்லது, இறைப்பண்புகள் வெளிப்படுகின்ற பிரபஞ்சத்தைக் குறிக்கும் என்றும் சொல்லலாம். இறைப்பண்புகளில் தலையானது ”ஜீவன் / உயிர்”. இறைவனின் உயிர்ப்பு (ஹயாத்) நிரந்தரமானது. எனவே அவனுக்கு நித்திய ஜீவன் (அல்-ஹய்யுல் கய்யூம்) என்று பெயர். (”அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம்” – ’அல்லாஹ், அவனை அன்றி வேறிறைவன் இல்லை, நித்திய ஜீவன்’ – குர்ஆன்: 2:255). மேலும், ”வ ஜஅல்னா மினல் மாஇ குல்ல ஷைஇன் ஹய்ய்” - “ஒவ்வொரு பொருளையும் நீரிலிருந்தே உயிராக்கி வைத்தோம்” – குர்ஆன்: 21:30). நீரின் தன்மை ஈரம். அது உயிரின் தன்மை என்று சொல்லப் படுவதுமுண்டு. சீவன் உள்ளன நீருடன் இருக்கும். சீவன் அற்றன காய்ந்து போகும். எனவே, உயிர் முதற்றான இறைப்பண்புகள் வெளிப்படும் தளங்களைக் “காயாத மேய்ச்சல் நிலங்கள்” என்றார்.

      இன்னொரு கோணத்தில், இறைஞான விளக்கங்கள் பரக்க எழுதப்பட்ட நூற்களின் தொகுதிகளை இக்குறியீடு சுட்டுவதாகக் கொள்ளலாம். அவற்றைப் படிப்பதே மேய்ச்சலாகிறது. கவிக்கோ ஒரு சிறந்த வாசகர். ஞான நூற்களை மேய்ந்தவர், தோய்ந்தவர். எனவே இப்படி அர்த்தப்படுத்துதலும் பொருந்துகிறது.

      இதனை வைணவக் குறியீடு என்று சொல்லினும் ஒக்கும். வடமொழி வேதங்களும் உபநிஷத்துக்களும் தமிழ் மட்டுமே அறிவார்க்கு ஒன்றும் விளங்கா நிலையில் அவற்றில் ஆழங்காற்பட்டு அவற்றின் ஞானங்களை எல்லாம் செந்தமிழிற் செய்தளித்தார் நம்மாழ்வார். எனவே அவரை, “வேதம் தமிழ் செய்த நன்மாறன்” என்ப. பொதுவாகவே, ஆழ்வார்கள் பாடிய ஆயிரங்கள் நான்கனுள்ளும் வேத ஞானம் வெளிப்படுகிறது என்பர். ”செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் / தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே” என்று பாடுகிறார் வேதாந்த தேசிகர். மறை நிலங்கள் – காயாத மேய்ச்சல் நிலங்கள்.

அவனே எனக்கு
மேயவும், அசை போடவும்
கற்றுக் கொடுத்தான்.

வேத உரை தெளிய ஓதுதல் மேய்தல். வேத மறை தெளிய ஓர்தல் அசை போடுதல்.

மாடுகள் மேய்ச்சல் நிலங்களில் மெல்ல அசைந்து நடந்து மேயும். பின்னர் நீரின் தண்மை தட்டுப்படும் ஓரிடம் தேர்ந்து சாய்ந்து மேய்ந்த உணவை அசை போடும்.

அதுபோல், தொழுகை மெதுவான அசைவுகளுடன் செய்யப்படுகிறது. தியானம் ஓரிடத்தில் அசையாது அமர்ந்து செய்யப்படுகிறது. தொழுகையில் திருமறை ஓதப்படுகிறது. தியானத்தில் மறையின் விழுப்பொருள் ஓர்மை ஆகிறது. தொழுகை என்பது மேய்தல்; தியானம் என்பது அசை போடுதல்.
நான் சூரியனையும்
நட்சத்திரங்களையும்
மேய்ந்தேன்.

சப்தங்களையும் ரசங்களையும்
மேய்ந்தேன்.

வாசனைகளையும் ஸ்பரிசங்களையும்
மேய்ந்தேன்.

வாய் மூக்கு கண் செவி மெய் ஆகிய ஐம்புலன்கள் ஆன்மாவின் கருவிகள். அவற்றின் வழி முறையே சுவை, நாற்றம், படிமம், ஓசை, ஸ்பரிசம் ஆகியன அறியப்படுகின்றன. ஆறாம் அறிவு மனம் சார்ந்தது. “ஆறறி வதுவே அவற்றொடு மனனே” என்பது தொல்காப்பியம். மனம் இவ்வைம்புலன்களொடு சேர்ந்தும் அறியும்; அவற்றை விட்டு நீங்கித் தனித்தும் அறியும் ஆற்றலுடைத்து. இவ்வரிகள் ஐம்புலன் வழிக் கிடைக்கும் அனுபவங்களில் இறைவனை அறிதலைச் சுட்டுகிறது. இறைவனுக்கு எண்ணிறந்த திருப்பண்புகள் உள (’திருக்கல்யாண குணங்கள்’ என்றொரு சொல்லாடல் வைணவத்தில் உண்டு. சிஃபாத் என்னும் அறபிக் கலைச்சொல்லுக்குத் தமிழாக்கமாக ஆர்.பி.எம் கனி அதனைப் பயன்படுத்தியுள்ளார்). அவை வெளிப்பட்டு நிற்கும் இறைநிலைக்கு “சற்குண பிரம்மம்” என்று பெயர். அதனை சூஃபித்துவம் “தஷ்பீஹ்” நிலை என்று சொல்லும். இவ்வரிகள் அந்நிலையில் இறைவனை அடைதலைக் குறிக்கிறது.

மேய்ந்தவற்றை அசைபோட்டபோதுதான்
புற்கள் பலவகை என்றாலும்
அவற்றின் சாரம் ஒன்றுதான்
என்பதை அறிந்தேன்

      இஃது, இறைவனின் ஒருமைத்துவம் (வஹ்தத்) பற்றிய ஞானம். “புல்புலில் பாடலாக இருப்பதே / ரோஜாவில் நறுமணமாக இருக்கிறது // மொழிப் பழக்கம் நம்மை ஏமாற்றுகிறது / இல்லை எனில் / பாடலே புல்புலின் நறுமணம் / நறுமணமே ரோஜாவின் கானம்” என்று மகாகவி இக்பால் பாடுகிறார் (தமிழாக்கம் கவிக்கோ செய்ததுதான். காண்க: ”அஹிம்சை நெருப்பு” என்னும் கட்டுரை / நூல்: ’அவளுக்கு நிலா என்று பெயர்’). சிஃபாத் என்னும் திருப்பண்புகள் பலவாயினும் அவை அனைத்தும் ஸ்தாபிதமாகி நிற்கும் இறை சுயம் (ஜாத் / தாத் / Dhaath) ஒன்றே அன்றிப் பல அல்ல.

      பிறகு, என் மேய்ப்பன் என்னை
வெட்ட வெளிக்கு ஓட்டிச் சென்றான்
அங்கே ஒரு புல்கூட இல்லை

மேய்ச்சல் நிலங்களிலேயே
அது மேலானதாய் இருந்தது.


       
 இறைஞானத்தை அடைவதற்கு சூஃபி நெறியிற் செய்யப்படும் பயிற்சி முறை பற்றிய விளக்கம் ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும். இறைவன் பற்றிய குறிப்புக்கள் நான்கு: 1) ஆஸார் (இறைவனின் உடைமைகள் / விளைவுகள். இஃது அவனது படைப்புக்கள் அனைத்தையும் குறிக்கும். ‘வானங்களும் பூமியும் அவற்றில் உள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியன’ என்னும் கருத்து குர்ஆன் நெடுகிலும் பல்லிடங்களில் மொழியப்படுகிறது). 2) அஃப்ஆல் (செயற்பாடுகள். படைத்தல் காத்தல் அழித்தல் கரத்தல் அருளல் முதலியன. இந்நிலைச் சாதகர் ‘எல்லாம் அவன் செயல்’ என நிற்பாரே). 3) சிஃபாத் (இறைவனின் தெய்வீகப் பண்புகள்- Divine Attributes). 4. தாத் / ஜாத் (சுயம். இதனைக் குறிக்க ஆங்கில சூஃபி நூற்களில் Essence என்னும் சொல் கையாளப்பட்டுள்ளது. ஜாத் என்பதுடன் தொடர்புடைய உஜூது என்னுமொரு சொல் உண்டு. அதனை உள்ளமை என்று தமிழிலும் Being என்று ஆங்கிலத்திலும் குறிப்பர். அதற்குப் பகரச் சொல் ”ஹக்” என்பதாம். சத்யம் என்று வடமொழியிலும், மெய் என்று தமிழிலும் Reality என்று ஆங்கிலத்திலும் குறிப்பர்). இந்நான்கு அறபிமொழி சூஃபித்துவக் கலைச்சொற்களை நினைவில் வைக்கவும்.

       ”வெட்ட வெளி” என்பது இறைவனது ஜாத் (சுயம்) என்பதற்கான குறியீடு. இறைவனின் திருப்பண்புகள் வெளிப்படாத நிலை என்பது பற்றி இந்து வேதாந்தம் பேசுகிறது. அந்நிலையில் இறைவனுக்கு ’நிர்க்குண பிரம்மம்’ என்று பெயர். (நிர்க்குணி என்றால் குணங்கள் அற்றவன் என்று பொருள் கொள்வது தவறு. குணங்கள் வெளிப்படாது நிற்கும் நிலை என்று விளக்கம் தருவார் அண்ணங்கராச்சாரியார்).

       இவ்வரிகளில், இறைப் பண்புகள் பற்றிய ஞானம் கிரகிக்கப்பட்ட பின் அதனினும் மேலான இறை சுயம் பற்றிய ஞானத்தை நோக்கி இறைவன் தன்னை இட்டுச் சென்றதாகக் கவிக்கோ பேசுகிறார். இறைவனின் ’ஆஸார்’ ஆகிய படைப்புக்களை ஆழ்ந்து நோக்கி அவனைச் சிந்தித்து அறிவது முழுமை பெற்ற பின்னரே அவனது அஃப்ஆல் கொண்டு அவனை அறிவதற்குத் தகுதி ஏற்படுகிறது. அவனது திருச் செயல்கள் (திருவிளையாடல்கள்) கொண்டு அவனை அறிதல் முழுமை அடைந்தால் அதன் பிறகு அவனை அவனது சிஃபாத் கொண்டு அறிதலுக்கான கதவம் திறக்கிறது. அவனது திருப்பண்புகள் கொண்டு அவனை அறிதல் முழுமை அடைந்தால் அதன் பிறகே அவனை அவனது சுயம் பற்றிய ஞானம் அருளப்படும்.

       ‘அங்கே ஒரு புல்கூட இல்லை’ என்னும் வரி நிர்க்குண நிலையைக் குறிக்கிறது. சூஃபித்துவம் இதனை “தன்ஸீஹ்” என்று சொல்கிறது.

       இறைவனின் திருப்பண்புகளை விடவும் அவனது சுயம் மேலானது. அவனது திருப்பண்புகள் பற்றிய ஞானத்தைக் காட்டிலும் அவனது சுயம் பற்றிய ஞானம் மேலானது. எனவே அது ’மேலான மேய்ச்சல் நிலம்’ எனப்பட்டது.

      அங்கேதான் நான்
      அதிகமாக மேய்ந்தேன்

பசி அதிகரிக்க
என் மேய்ப்பனையே மேய்ந்துவிட்டேன்

இறைவனின் திருப்பண்புகளில் தன்னை அழித்துக் கொள்ளும் நிலை ஒன்றுண்டு. ”தீயிலிட்ட இரும்பு தீயின் தன்மை கொள்வது போல்” என்று ஞானியர் உவமை கூறி விளக்குவர். “தஃகல்ல(க்)கூ பி அஃலாக்கில்லாஹ்” – ’இறைப் பண்புகளில் உம்மை உருவாக்கிக் கொள்க’ என்பது நபிமொழி. இதனை ஃபனா ஃபிஸ் சிஃபாத் என்று சூஃபித்துவம் குறிப்பிடும். அந்நிலையினும் மேலானது இறைவனின் சுயத்தில் தன்னை அழித்துக் கொள்ளும் நிலை. இதனை ‘ஃபனா ஃபில்-தாத்’ என்று சூஃபித்துவம் குறிப்பிடும்.

”பசி அதிகரிக்க என் மேய்ப்பனையே மேய்ந்துவிட்டேன்” என்பதை விளங்க நபி (ஸல்) அறிவிக்கும் இறைமொழி (ஹதீஸ் குத்ஸி) ஒன்று உதவுகிறது: “என் அடியானை நான் நேசிக்கும்போது அவனின் பார்வையாக நானே ஆகிவிடுகிறேன். அவன் என்னைக் கொண்டே பார்க்கிறான். அவனின் கேள்வியாக நானே ஆகிவிடுகிறேன். அவன் என்னைக் கொண்டே கேட்கிறான். அவனின் கையாக நானே ஆகிவிடுகிறேன். அவன் என்னைக் கொண்டே பற்றுகிறான். அவனின் காலாக நானே ஆகிவிடுகிறேன். அவன் என்னைக் கொண்டே நடக்கிறான்.” (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா; நூல்: புகாரி:6502).

நான் மேய்ந்ததெல்லாம்
என் ரத்தமானது

என் மடி
ரத்தத்தைப் பாலாக்கியது

பல்சமய மெய்யியல் துறைகளிலும் ‘ஞானம்’ என்பது ’பால்’ என்று குறியீடு ஆக்கப்படுவதைக் காணலாம்.

“பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே”
                        (திருமந்திரம் 2883)

      நபிகள் நாயகத்தின் வாழ்விலே ஓர் அற்புத நிகழ்வு “மிஃறாஜ்” (விண்ணேற்றம்). வானவர் கோன் ஜிப்ரீல் வந்து, ஏகனின் சன்னிதிக்கு ஏகுங்கள் என்று, ’புராக்’கெனும் விண்புரவி மீது நபியை அமர வைத்து அழைத்துச் சென்ற நிகழ்வு. அதில் விண்ணில் ஓரிடத்தில் ஜிப்ரீல் அவர்கள் நபியின் முன் இரண்டு கிண்ணங்களை வைத்து பருகும்படி வேண்டுகிறார். ஒரு கிண்ணத்தில் மது உள்ளது. மற்றொன்றில் பால். நபி (ஸல்) அவர்கள் பாற்கிண்ணத்தைத் தேர்ந்து பருகினார்கள். அந்தப் பால் என்பது “அல்-ஃபித்ரத்” (சுயத்தின் இயல்பு) என்று ஜிப்ரீல் அவர்கள் குறிப்பிட்டார்கள். மது என்பது மதி மயக்கம் – வழிகேடு என்று குறிப்பிட்டார்கள். இந்நிகழ்வு நடந்த இடத்தின் பெயர் “ஆலியா” (மேலான இடம்) என்பபடுகிறது.

      ஃபித்ரத் என்றால் சுயத்தின் இயல்பு. சரி, சுயத்தின் அல்லது ஆன்மாவின் இயல்பு என்ன?

      ஆன்மாவைச் சுட்டும் குறியீடு பசு என்று கண்டோம். அதனைத் திருமூலர் “பாற்பசு” என்று குறிப்பிடுகிறார். பசு வளர்ப்பது பாலுக்காகத்தானே? சாணிக்கும் மூத்திரத்திற்கும் என்று பசு வளர்ப்பார் உண்டோ? இறைவன் ஆன்மாவைப் படைத்தது அது அவனை அறிவதற்கே. இறைவனை அறிதலே ஆன்மாவின் இயல்பு (அல்-ஃபித்ரத்).

 
      முட்டிக் குடிப்பவர்களுக்கும்
கறப்பவர்களுக்கும்
என் மடி பால் சுரக்கிறது

      இது குருநிலை. ”யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பர் திருமூலர். இந்த அருளுணர்வே சீடர்களைத் தேடும்படிச் செய்கிறது. “வான் பற்றி நின்ற மறைப் பொருளை” அவணிக்கு அறிவித்து ஈடேற்றத் துடிக்கும் உள்ளம் குருநாதரின் உள்ளம். ‘என் மடி பால் சுரக்கிறது’ – அதாவது எனதுள்ளத்தில் ஞானம் பொங்குகிறது.
       
ஞானியை நேசிப்போர் இரண்டு வகை. அன்பர்களும் சீடர்களும். அன்பர்கள் ஞானியை மதிப்பர்; ஆனால் குருவாக ஏற்றிலர். சீடர்கள் ஞானியை குருவாக ஏற்பவர்கள். சீடர்கள் குருவுக்காகவே குருவை நேசிப்போர். அவர்கள் பசுவின் கன்று போன்றோர். அவர்களே குருவுக்கு அணுக்கர் ஆவோர். பசுவின் மடியில் உண்மையில் பால் சுரப்பது கன்றுக்காகவே. அதுபோல் குருவின் உள்ளத்தில் ஞானம் சுரப்பது சீடர்களுக்காகவே. ஞான விளக்கங்களுக்காக குருவின் மீது மதிப்பு வைக்கும் பிறர் பாலுக்காகப் பசு வளர்க்கும் மனிதர்களைப் போன்றோர். அவர்கள் பசுவிடம் பாலைக் கறக்கின்றனர். பசு இல்லை என்று மறுப்பதில்லை.

      ”பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே” என்று திருமந்திரம் சுட்டும் ‘பால் சொரியும் பசு’ என்பது இறை ஞானியைக் குறிக்கிறது. இக்குறியீடு சைவத்தில் மட்டுமன்று, மாலியத்திலும் உண்டு. ஆண்டாள் பாடிய அமுதகவிகளான திருப்பாவை காண்மின்:

      “தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
      வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்”
(பாடல்:3)

இவ்வடிகளில் பசுக்கள் ஞான குருமார்களைக் குறிக்கிறது என்பது உள்ளுறை. ஸ்ரீகாஞ்சீ ப்ரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரியார் இவ்வடிகளுக்கு எழுதும் உள்ளுறை விளக்கம்: ”[தீரச் சரண முபகத:] என்றபடி – சிஷ்யன் பிற்காலியாதே குருகுலத்திற் புக்கு நிலைத்திருந்து தனக்குத் தாரகங்களான ஆசிரியன் பொற்பதங்களைப் பற்றிப் பிரார்த்திக்க உபதேச பாத்ர பூதரான சிஷ்யரைப் பரிபூர்ண ஞானிகளாக்குமவர்களாய், சிஷ்ய ஸுலபராய், இடைவிடாத பகவத் குணாநுபவத்தினால் பரிபுஷ்டரான ஆசாரியர்களுடைய அவிச்சிந்நமான ஸம்பத்து மல்கும்படியைக் கூறுவன.”

இனி, இவ்வடிகளுக்கு ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியார் தரும் உள்ளுறை விளக்கம்: ”உறுதியான மனத்துடன் தம்மைப் பிரார்த்திக்குஞ் சிஷ்யர்க்குப் பரிபூரணமான ஜ்ஞாநத்தைக் கொடுத்துப் பகவத் குணங்களை யநுபவிப்பித்துப் புஷ்டராக்கும் ஆசார்யஸம்ருத்தி யுண்டாகுமென்பதாம்.”

திருப்பாவையில் இன்னொரு பாடல் அடி: “கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து” (பாடல்:11).

இவ்வடியை இப்படிக் கொண்டு கூட்டிப் பொருள் எழுதுகிறார் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்: ”கன்று கறவை பல கணங்கள் கறந்து: கன்றாகிய பசுக்களினுடைய பல திரள்களைக் கறப்பவர்களும்.”

”கன்றாகிய பசுக்கள்” என்றால் என்ன? கன்றினை ஈன்ற பசுதான் பால் சுரக்கும். கன்றாகிய பசு என்பதை எப்படி விளங்குவது? இளம் கன்றுகளில் பால் கறந்தார்கள் என்று இவ்வடிக்கு அப்படியே நேரடிப் பொருள் எடுத்தால் அபத்தமாகும். இதற்கு உள்ளுறைப் பொருளே உரைத்தல் வேண்டும். அண்ணங்கராசாரியார் தரும் உள்ளுறை விளக்கம் கண்டு வியந்து போனேன். கேளுங்கள்.

இப்பாடல் (எண்:11) பூதத்தாழ்வாரைப் பற்றிய பாடல் என்று அவர் சொல்கிறார். அது எப்படி என்று விளக்கமும் தருகிறார். அதற்கு, இப்பாடலின் முதல் மூன்று அடிகளைக் கவனிக்கவும்:

“கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே”

கோவலர் என்று இங்கே குறியீடாகச் சுட்டப்படுவோர் ஆழ்வார்கள்.

’குற்றமொன்றில்லாத கோவலர்’ என்று சுட்டப்படுவோர் முதலாழ்வார் மூவர் (பொய்கை ஆழ்வார், பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார்). பிற ஆழ்வார்களுக்குக் குற்றம் ஒன்று உண்டு என்று சொல்கிறார் அண்ணங்கராசாரியார். அது என்ன குற்றம்? “யோநிஜத்வமாகிற வொரு குற்றம் மற்றை யாழ்வார்களுக்குண்டு.” [இது மாலியச் சமய நம்பிக்கை என்று நான் கருதவில்லை. இது இவரது தனிப்பட்ட கருத்தாதல் வேண்டும்].

இனி, “பொற்கொடியே” என்னும் விளி முதலாழ்வார் மூவருள் மூன்றாமவரான பூதத்தாழ்வாரையே குறிக்கும். எப்படி எனில், அவர்தாம், “கோல்தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும் மனம்” என்று தம்மையொரு கொடியாகப் பாடிக்கொண்டவர்.

“கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து” என்பது முதலாழ்வார் மூவரைக் குறிக்கிறது. அது ஏன் கன்றாகிய கறவை? ஏனெனில், “மற்றை யாழ்வார்கள் பெரிய பெரிய பாசுரங்களை யளித்தார்கள்.” எனவே அவர்கள் “வள்ளல் பெரும்பசுக்கள். “முதலாழ்வார்கள் அங்ஙனன்றிக்கே வெண்பாவாகிய மிகச் சிறிய பாசுரங்களை யளித்தார்கள்.

“பொய்கையாழ்வாரருளிய திருவந்தாதி கறவைக் கணம்;

”பூதத்தாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள்;

”பேயாழ்வார் திருவந்தாதியும் சேர்ந்து கறவைக் கணங்கள் பல.”

இனி, “கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து” என்னும் அடிக்கு “குடிகுடியாக வந்தடைந்த ஸிஷ்யர்களுக்கு ஜ்ஞாநோபதேசஞ் செய்து.” என்று பொருளுரைக்கிறார் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியார்.

இப்படித்தான் உரைகள் இருக்க வேண்டும். திருப்பாவைக்கு ஈடுகளும் ஆசாரியர்களும் சொல்லியிருக்கும் உரைகளைப் பயின்றேனுக்கு இற்றை நாள் எளியவுரை தெளிவுரை என்னும் பெயர்கள் தாங்கிப் போதாவுரை, பழுதுரை, பிழையுரை ஆகியன பல்கிப் பெருகிப் பனுவல்களுக்குப் பாதகஞ் செய்வதைப் பார்த்தால் பதற்றமாகிறது.

முட்டிக் குடிப்பவர்களுக்கும்
கறப்பவர்களுக்கும்
என் மடி பால் சுரக்கிறது

அதாவது, சில நேரங்களில் சீடர்களின் முயற்சி இன்றிக்கே குருமகான் ஞானப் பாலின் பெருக்கினை அவர்களின் உள்ளத்துக்கு ஊட்டிவிடுவார்; சில நேரங்களில் சீடர்களைச் சோதித்து அவர்களின் கடின முயற்சிக்குப் பயனாகவே ஞானம் வழங்கப்படும்.

“தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி / வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்” என்னும் திருப்பாவை அடிகளுக்கு பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் சொல்லுமொரு நுட்ப உரை இது: “முலையை ஒருகால் தொட்டு விட்டால் மாறாது பால் பெருகிக் குடங்குடமாக நிறையும் என்பது ஒரு கருத்து. பற்றிப் பற்றி வலிக்கக் குடங்களை நிறைக்குமென்றலு மொன்று.”

      குடிப்பதற்கோ கறப்பதற்கோ
யாரும் இல்லை என்றாலும்
என் பால், காம்புகளின் வழியே
கசிந்து சிந்துகிறது.

என்கிறார் கவிக்கோ. இவ்வரிகளும் திருப்பாவை அடிகளை நினைவூட்டுகின்றன:

      ”கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
      நினைத்து முலைவழியே நின்று பால் சோர”
      (பாடல்:12)

      கறப்பார் இல்லை, கன்றும் அருகில் இல்லை. கன்றின் நினைவே காம்புகளில் பால் கசியும்படிச் செய்கிறது என்பதன் உட்பொருள் யாது? ஞானியின் உள்ளம் தன்னில் ஊற்றெடுக்கும் ஞானத்தை ஊட்டுதற்குத் தகுதி வாய்ந்த சீடக் குழவியைத் தேடுகின்றது. சில நேரங்களில், சீடன் குருவைத் தேடித் தவிப்பதினும் பன்மடங்கு குரு சீடனைத் தேடித் தவிப்பதாகி விடுகிறது. வரலாற்றில் இதற்குச் சான்றுகளுண்டு. மௌலானா ரூமியின் ஆன்மிக குரு ஷம்ஸுத்தீன் தப்ரேஸி அவர்கள் தனக்குத் தகுதி படைத்த அந்தச் சீடரைக் காட்டியருளுமாறு இறைவனிடம் வேண்டினார். காட்டித் தந்தால் காணிக்கை என்ன என்று கேள்வி வந்தது. தலையைத் தரத் துணிந்தார்.

      ”கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி /   நினைத்து முலைவழியே நின்று பால் சோர” என்னும் அடிகளுக்கு சங்க இலக்கியத்தில் இருந்து ஓர் ஒப்புமை காட்டலாம்:

      ”கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
      நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்(கு)
      எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது”
      (குறுந்தொகை-27)

என்று வெள்ளிவீதியார் பாடுகிறார். ஒரே குறியீடுதான், ஒரு கவியிடம் சிற்றின்பம் பேசுகிறது, மற்றொரு கவியிடம் பேரின்பம் பேசுகிறது.

      ஞானம் என்பதன் குறியீடுதான் பால் என்று பார்த்து வருகிறோம். அப்பால் ’ஆ’வின் பாலன்று; ஆன்மாவின் பால். மண்ணகத்து மாட்டுப் பாலன்று; விண்ணகத்து வீட்டுப் பால். வானேர் அமுதம் என்ரும் வானமுதப் பால் என்றும் அதனைச் சொல்வர்.

      மேற்சொன்ன பாடலில் அடுத்த பாதி அடியைச் சேர்த்து அவதானிக்கலாம்:

      ”கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
      நினைத்து முலைவழியே நின்று பால் சோர
      நனைத்தில்லம் சேறாக்கும்...”

       மருத்துவர் Dr.சென்னி பத்மநாபன் M.D என்பார் திருப்பாவைப் பாசுரங்களை ஆங்கிலம் மற்றும் எஸ்பஞோல் (Spanish) ஆகிய மொழிகளிற் பெயர்த்துள்ளார். மேற்காணும் அடிகளுக்கு அவர் தரும் ஆங்கிலப் பெயர்ப்பு இது:

”Young buffalo yearns for calf, mumbles;
                Milk dribbles from udder and home a mire wet.”

                மேலுமொரு அடியைச் சேர்த்துக் காண்போம்:

       கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
      நினைத்து முலைவழியே நின்று பால் சோர
      நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றி...”

இந்நான்கு அடிகளை ஒருங்கே ஓர்ந்து உரை வேந்தர் வை.மு.கோ ஓர் அழகிய உரை வரைந்துள்ளார்: “மேலே பனிமழை பொழிந்து வெள்ளமிட, கீழே பால் வெள்ளமிட, நடுவே ஸ்ரீகிருஷ்ணனிடத்து மால் [பெருங் காதல்] வெள்ளமிட…”

பனி என்பது எதார்த்தத்திலேயே வானிலிருந்து பொழிவது. ஈண்டு பால் என்பது குறியீடாக வானமுதமாகிய ஞானத்தைக் குறிக்கிறது. முன்னது உடலுக்கு உறுதி பயப்பது. பின்னது உயிர்க்கு உறுதி பயப்பது. முன்னது பைம்புல் இதழ்களின் மீது அணி செய்து பசுக்கள் மேய்ந்துண்பது. பின்னது பசுவின் மடி பொழிவது. இவ்விரண்டையுமே பருகி வளர்ந்த ஒரு கதாநாயகனை ஆங்கில இலக்கியத்திற் காண்கிறோம். அவன், சாமுவேல் டைலர் கோலரிஜ் எழுதிய “குப்லா கான்.” அக்கவிதையில் இரண்டு அடிகள்: “For he on honey-dew hath fed, / And drunk the milk of paradise.” (“வைகறைப் புல்லிதழ் தேன்துளி மாந்தி / வானமுதப் பால் சுவையால் வளர்ந்தவன்” என்பது மேஜர் தி.சா.ராஜு தரும் தமிழாக்கம்.)

பால் என்பது இறைவனின் திருப்பண்புகளுக்கான குறியீடாக மாலியத்திற் பேசப்படுகிறது. ”பாற்கடல்” (க்ஷீரஸாகரம்) என்று அதற்குப் பெயர். அப்துல் ரகுமான் ஓரிடத்திற் சொல்கிறார்:

“பாற்கடலைக் கடைந்தார்கள்
அமிர்தமும் ஆலகாலமும் வந்தன.
நான் ஆலகாலத்தைக் கடைந்தேன்
அமிர்தம் வந்தது!”

எப்படி வந்தது? ஆலகாலமும் பால்தான். பூதகியின் முலை சுரக்கும் நச்சுப்பால் கண்ணனின் வாயில் அமிர்தம் ஆகும்.

மண்ணில் பிறக்கும் முன் தான் அநுபவித்திருந்த பரமபதப் பேற்றினை எண்ணி எண்ணித் திருஞானசம்பந்தர் ஏங்கி அழுதார் என்றும் அவருக்கு பராசக்தி ஞானப் பால் ஊட்டினார் என்றும் சைவம் சொல்லும். இதுவுமொரு குறியீடுதான். உமை அப்பிள்ளைக்கு ஊட்டிய ஞானப் பால் இப்போது கிடைக்குமா? “எப்போ வருவாரோ” என்னும் ’பெருந்’தலைப்பில் சேக்கிழார் குறித்துத் தான் நிகழ்த்திய கருத்துப் பொழிவில் ’சேக்கிழாரடிப்பொடி’ முதுமுனைவர் தி.ந.ராமச்சந்திரன் அவர்கள் செப்பியதக் கேண்மின்:

“வாங்கக் குடம் நிறைக்கும் ஞானப்பால் இந்நூலில் இருக்கிறது. எங்கு தைவர வேண்டும், எப்படி அதை வலிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள்.”

அது சரி. மண்ணிலத்து நிலங்கள் மேயும் பசுக்கள் வேண்டுமெனில் தக்கார் தகவிலார் யார் வலித்தாலும் தீம்பால் சுரந்தளிக்கும். அவற்றை மரப்பசுக் காட்டி ஏமாற்றிக் கறந்து பால் கொள்ள முடியும். ஆனால், மறை நிலத்துப் பைம்புல் கரம்பிச் சுவைக்கும் ஆன்ம ஆநிரை புக்கு அவற்றினின்றும் ஞானப் பாலினைப் புல்லிய நெஞ்சத்தர் புன்மை மதியினர் கறந்தெடுக்க ஒல்லுமோ? முடியாது.

பதி என்னும் பரமனை அணுகும் பசு முதலில் ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களை விட்டு விலகித் தூய்மையாக வேண்டும் என்கிறது சைவ சித்தாந்தம்.

அழுக்காறுகளை விட்டும் அகத்தைத் தூய்மை ஆக்குவதே ஆன்மிகத்தின் முதற்பணி. “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்” என்கிறது திருக்குறள். இப்பணியை சூஃபிகள் “தஜ்கியத்துன் நஃப்ஸ்” என்பர். இறைவனின் பக்கம் உள்ளம் திரும்புவதை “தவ்பா” என்பர்.

வேதம் என்னும் பசுவின் மடி அதன் கன்றுக்கு மட்டுமே பால் சுரக்கும். சூதர் அதன் மடி வலித்தல் செல்லாது. “ஹுதல்லில் முத்த(க்)கீன்” – “பயபக்தர்கட்கே நேர்வழி பயக்கும்” (2:2) என்கிறது குர்ஆன்.

அன்னனம், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் அருள் என்னும் அமலப் பால் மாந்தி ஆன்மிக ஒளி பிறங்கும் அழகிய கவிதைகள் அளித்திருக்கிறார் என்றுரைத்து இக்கட்டுரை முடிப்பாம்.