Sunday, September 5, 2021

இரவினும் பெரிதே

               பேராசிரிய நண்பர் ஒருவர் சிறிய அறுவை சிகிச்சை முடித்து வீடு திரும்பியிருந்தார். நானும் மகனும் பார்க்கச் சென்றிருந்தோம்.

தனது அறுவை சிகிச்சை அனுபவம் பற்றி அவர் சொன்ன குறிப்பு ஒன்று சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது. சிகிச்சையின் போது தனக்கு உடல் கடந்த அனுபவம் (out of body experience) ஏற்பட்டதாக நண்பர் சொன்னார். ஆனால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் காட்சி இல்லை. வீடு ஒன்றை மேஸ்திரி கொத்தனார் முதலியோர் இடித்துச் செப்பணிட்டுக் கட்டும் காட்சி தோன்றியது என்றார்.

வீடு மனித உடலுக்கு ஒரு குறியீடுதான் என்று அவரிடம் நான் சொன்னேன். “கலீல் ஜிப்ரான் தனது “Prophet” (தீர்க்கதரிசி) என்னும் நூலில் இதனைக் குறிப்பிடுகிறார்: Your house is your larger body (உங்கள் வீடு உங்களின் பேருடல்). அதனால், Your body is your smaller house - உங்கள் உடல் உங்களின் சிற்றில்.”

வீட்டில் நமக்கேயான பிரத்யேக அறை இருக்கும் அல்லவா? நம் மனமே நமது அந்தரங்க அறை என்பது ஒரு கவித்துவ உருவகம்.


தமிழின் அற்புத அதிசய எழுத்தாளரான ஜெயமோகனின் ‘சங்கச் சித்திரங்கள்’ நூலில் ‘கரிய பேரலைகள்’ என்றொரு கட்டுரை. அதில் குறுந்தொகையின் 387-ஆம் பாடலை முன்வைத்து மனித மனம் இரவை என்னனம் எதிர்கொள்கிறது என்று பேசுகிறார். “கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே” என்பது அப்பாடலின் ஈற்றடி. “இரவெனும் வெள்ளம் கடலினும் பெரிது” என்பது பொருள்.கட்டுரையில் ஜெ.மோ-வின் இரண்டு வரிகள் என் சிந்தையைக் கவர்ந்தன:

”ஒருவனின் அறை அவன் மனமேதானோ?”

“நிழல்களில் இரவு பதுங்கி இருக்கிறது.”

மனம் சட்டென்று கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய கட்டுரை ஒன்றிற்குத் தாவியது. “அறைக்குள் அறை” என்பது தலைப்பு. ஜஃபர் கோரக்பூரி என்னும் உருதுக் கவிஞர் எழுதிய கஜல் ஒன்றைப் பற்றியது. அதன் முதல் அடியை ஜெ.மோ கட்டுரையில் ஓரக் குறிப்பாக எழுதினேன்: தின் கோ பீ அந்தேரா ஹே மேரே கம்ரே மேன்


கவிக்கோவின் மொழி பெயர்ப்பில் கஜலின் முதல் கண்ணி:

            பகலில் கூட

இருள் அதிகமாக இருக்கிறது

என் அறையில்

                        நிழல் கூட

                                    வருவதற்கு பயப்படுகிறது

                                    என் அறையில்

            கஜலின் கடைசி கண்ணி உருது கவிதை மரபில் இல்லாத புதுமையான ஒரு படிமத்தைக் காட்டுகிறது என்கிறார் கவிக்கோ:

                        திருடன்

எங்கே ஒளிந்திருக்கிறான்

எண்ணிப் பார்க்கிறேன்

                        இன்னும் ஓர்

                                    அறையிருக்கிறதோ

                                    என் அறையில்?

            ஜஃபரின் இந்த வரிகளைப் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான்  கூறூகிறார்:

            ”மனம் என்ற அறைக்குள்ளேயே இன்னுமோர் அந்தரங்க அறை இருக்கிறது. அடிமனம். மனிதனின் கள்ளத்தனங்கள் எல்லாம் அங்கேதான் போய் ஒளிந்துகொள்கின்றன.”

            இரவு என்னும் வெள்ளம் கடலினும் பெரிது என்கிறாள் சங்கப் பாடலின் பெண். அவளின் அடிமனம் என்னும் அந்தரங்க அறை அந்த இரவினும் பெரிது.

Friday, August 13, 2021

வள்ளல்

 சூஃபி கதை நேரம்...

(இத்ரீஸ் ஷாஹ் அவர்களின் “Stories of the Dervishes" என்னும் நூலின் தமிழாக்கம் இன்று நிறைவடைந்தது. மொத்தம் எண்பத்திரண்டு கதைகள். அவற்றில் ஒருசில கதைகளைத்தான் இங்கே அவ்வப்போது ‘சூஃபி கதை நேரம்’ என்னும் தலைப்பில் பகிர்ந்து வந்தேன். தமிழாக்கத்தின் கோப்பினை நண்பர் உவைஸுக்கு இன்று மின்னஞ்சல் செய்தேன். இன் ஷா அல்லாஹ், விரைவில் ‘சீர்மை’ பதிப்பகம் அதனை “தர்வேஷ்களின் கதைகள்” என்னும் நூலாக வெளியிடும். நூல் வந்ததும் அனைத்துக் கதைகளையும் நீங்கள் வாசிக்கலாம். இதோ இன்றைக்காக அதிலிருந்து கதை எண்#80)


புகாராவில் பணக்கார வள்ளல் ஒருவர் இருந்தார். கண்ணுக்குத் தெரியாத அதிகார அடுக்கில் அவர் மேல் நிலையில் இருந்ததால் உலக அதிபர் என்று அவர் அழைக்கப்பட்டார். தன் கொடைகளுக்கு அவர் ஒரு நிபந்தனை விதித்திருந்தார். நோயாளிகள், விதவைகள், அனாதைகள், முதியோர்கள் இத்தியாதி மக்களில் ஒவ்வொரு நாளும் ஒரு வகையினருக்கு மட்டும் அவர் தங்கத்தை வாரி வழங்கினார். ஆனால் யாராவது வாயைத் திறந்து பேசினால் அவருக்கு ஒன்றுமே வழங்கப்படாது.

ஆனால், எல்லோராலும் மௌனமாக இருக்க முடியவில்லை.

ஒரு நாள், வழக்கறிஞர்கள் கொடை வாங்கும் முறை வந்தது. அவர்களில் ஒருவனால் தன்னைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. மிக நேர்த்தியாகவும் திறமையாகவும் தன் கோரிக்கையை அவன் முன்வைத்தான்.

அவனுக்கு ஒன்றுமே வழங்கப்படவில்லை.

ஆனால் அவன் தன் முயற்சியை இத்துடன் நிறுத்தவில்லை. அடுத்த நாள் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. எனவே அந்த வழக்கறிஞன் கை உடைந்தவன் போல் நடித்தபடி அங்கே போய் நின்றான்.ஆனால், அதிபருக்கு அவனை அடையாளம் தெரிந்துவிட்டது. எனவே ஒன்றும் கொடுக்கப்படாமல் அவன் திருப்பி அனுப்பப்பட்டான்.

அடுத்த நாளே அவன் வேறு வேடம் இட்டான். தன் முகத்தை மூடிக்கொண்டு வேறு தினுசான மக்களில் ஒருவனாகச் சென்றான். மீண்டும் அடையாளம் காணப்பட்டு விலக்கப்பட்டான்.

மீண்டும் மீண்டும் அவன் முயற்சி செய்தான். ஒருமுறை பெண்ணாக வேடம் அணிந்துகொண்டும் போனான். ஆனால் பயன் இல்லை.

கடைசியில் அவன் ஒரு வெட்டியானைப் பிடித்து தன் மீது கோடித் துணியைச் சுற்றி கீழே கிடத்தும்படி ஏற்பாடு செய்தான். ’வள்ளல் அந்த வழியாகப் போகும்போது என்னை ஒரு பிணம் என்று கருதுவார். என் அடக்க காரியத்துக்காக அவர் ஏதாவது உதவி செய்வார். அதில் உனக்கு ஒரு பங்கு தருகிறேன்” என்று அவன் வெட்டியானிடம் சொன்னான்.

அப்படியே செய்யப்பட்டது. அதிபரின் கையில் இருந்து ஒரு பொற்காசு கோடித் துணி மீது போடப்பட்டது. எங்கே அதை வெட்டியான் முதலில் எடுத்துவிடுவானோ என்னும் அச்சத்தில் சட்டென்று வழக்கறிஞன் அதை வௌவிக்கொண்டான். அவன் வள்ளலிடம் சொன்னான்:  ’நீங்கள் உங்கள் கொடையை எனக்கு மறுத்தீர்கள். இப்போது அதை நான் அடைந்துவிட்டேன்!”

“நீ சாகும் வரை என்னிடம் இருந்து எதையும் நீ பெற முடியாது,” என்றார் அந்த வள்ளல். “’சா முன் சா’ – மூத்து கப்ல அன்தமூத்து என்று சொல்கிறார்களே, அந்த ஞான வாசகத்தின் அர்த்தம் இதுதான்.”இறப்பிற்குப் பிறகுதான் அருட்கொடை வருகிறது. அதற்கு முன் அல்ல. மேலும், அருட்கொடையைப் பெற்றுத் தரும் அந்த ’இறப்பு’ம்கூட ஒருவர் உதவி செய்தால்தான் சாத்தியப்படுகிறது.

db

            மவ்லானா ரூமி எழுதிய மஸ்னவி காவியத்தின் நான்காம் நூலில் இடம்பெறும் இக்கதையைத் தனியே விளக்கத் தேவையில்லை.

            எனினும், இகக்தை குறித்து தர்வேஷ்கள் தரும் விளக்கம்: சில கொடைகள் நாடுவோரால் ‘பறிக்கப்பட’ முடிந்தாலும், இக்கதையில் வரும் புகாராவின் வள்ளலைப் போன்றதொரு ஆசானிடம் இருந்து பெறப்படுகின்ற திறன் (”தங்கம்”) என்பது வெளித்தோற்றத்துக்கு அப்பாலும் ஆற்றல் உள்ளதாக இருக்கிறது. அந்த பிடிடாத ஆற்றலைத்தான் “பரக்கத்” என்று அழைக்கிறோம்.

Sunday, August 1, 2021

... என்றார் தர்வேஷ் - 2

 

”சொர்க்கத்தில் நாம் இறைவனுடன் உரையாடுவோம் அல்லவா?” என்று கேட்டார்கள்.

            ”ஆம். இறைவனுடன் அவனின் மொழியில் பேசுவோம்” என்றார் தர்வேஷ்.

            ”அறபி மொழிதானே?” என்றார் ஹஜ்ரத்.

            ”மௌனமே இறைவனின் அறபி” என்றார் தர்வேஷ்.

d


            
இறைவனின் பேச்சு நமது மொழிகளைப் போன்றது அல்ல. நாம் பேசும் மொழிகள் படைக்கப்பட்டவை. செவியால் கேட்கப்படும் ஒலி வடிவமும், கண்களால் பார்க்கப்படும் வரி வடிவமும் கொண்டவை.

            இந்த மொழிகளை மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகளும் பறவைகளும்கூட கேட்கின்றன, பார்க்கின்றன.

            உலகில் உள்ள பெரும்பான்மை மனிதர்களுக்கு ஒரு மொழிதான் தெரியும். அஃது, அவரவர் தாய்மொழி. சிலருக்கு இரண்டு மொழிகள் தெரியலாம். மூன்று மொழி அறிந்தோர் இன்னும் குறைவு. பன்மொழி அறிந்தோர் மிகவும் சொற்பமே. உலகில் மொத்தம் 6500 – ஆறாயிரத்து ஐநூறு – மொழிகள் பேசப்படுகின்றன என்றும், ஏறத்தாழ 4000 – நாலாயிரம் – மொழிகளுக்கு எழுத்து வடிவம் இருக்கின்றது என்றும் சொல்கிறார்கள். ஆனால், உலகின் பெரும்பான்மை மக்கள் ஒரு மொழி அறிந்தவர்கள் மட்டுமே.

            இதன் பொருள் என்ன? பெரிய பலகை ஒன்றில் நாலாயிரம் மொழிகளிலும் ஒரு வாசகம் எழுதி வைக்கப்பட்டால் உலகில் பெரும்பான்மை மனிதர்களால் அவற்றில் ஒரு மொழியில் எழுதப்பட்டதைத்தான் புரிந்துகொள்ள முடியும். மீதமுள்ள 3999 – மூவாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொன்னூற்று ஒன்பது – எழுத்து வடிவங்களும் அவர்களுக்கு அர்த்தம் விளங்காத கிறுக்கல்கள் மட்டுமே. அங்கே ஒரு மாடு அல்லது கழுதை வந்து நின்றால் அந்த வாசகங்கள் அனைத்தையும் அதுவும் பார்க்கும்! நாலாயிரம் மொழிகளுமே அதற்கு கிறுக்கல்கள்தாம்! இவ்வளவுதான் வேறுபாடு!

            எனக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால் சுருக்கெழுத்து (short-hand) பயின்ற ஒருவர் ஆங்கிலச் சுருக்கெழுத்தில் தான் எழுதிய ஏட்டைக் காட்டினார். அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, வாசிக்க இயலவில்லை. அதாவது, எனக்குத் தெரிந்த ஒரு மொழியின் ஒரு எழுத்து வடிவத்தையே வேரு எழுத்து வடிவ முறையில் எழுதிக் காட்டியபோது, எனக்குத் தெரிந்த மொழியே எனக்குப் புரியவில்லை!

            நாம் பேசும் வார்த்தைகளை விலங்குகளும் பறவைகளும்கூட கேட்கின்றன. நமக்கு நாலாயிரம் மொழிகளில் ஒன்றோ இரண்டோ விளங்கும். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் நாலாயிரம் மொழிகளுமே புரியாது, அவ்வளவுதான்.

            மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அவற்றுக்கே உரிய மொழிகள் இருக்கின்றன; அவற்றின் பேச்சை நாம் விளங்குவதில்லை என்று குர்ஆன் சொல்கிறது. நம் மொழி அதற்குப் புரியவில்லை. அதன் மொழி நமக்குப் புரியவில்லை. சரி சமம் ஆகிவிட்டது!

            இறைவனின் பேச்சு எப்படிப்பட்டது? இது பற்றி சூஃபி குருமார்கள் ஆழமான விளக்கம் தருகிறார்கள்.

            இறைவனின் பேச்சு ‘பிலா சவ்த்தின் பிலா ஹர்ஃபின்’ என்று வருணிக்கப் படுகிறது. அதாவது, ’ஓசையும் இல்லை எழுத்தும் இல்லை.’

            அறபி என்னும் சொல்லை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இதில் மூன்று எழுத்துக்கள் உள்ளன. நாம் அதை உச்சரிப்பதைப் கருவியில் பதிவு செய்து பின்னர் வேகம் இன்றி மெது அசைவில் (ஸ்லோ மோஷன்) ஓடவிட்டால் ஒன்றை அவதானிக்கலாம்.

            ”அ” என்பது உச்சரிக்கப்படும் கணத்தின்போது ‘றபி’ என்பது இல்லை. ”ற” என்னும் ஓசை உச்சரிக்கப்படும் கணத்தின்போது “அ-பி” என்பது இல்லை. “பி” என்பது உச்சரிக்கப்படும் கணத்தின்போது “அற” என்பது இல்லை. இப்படியான முன் பின் நிலையில் ஓசைகள் தோன்றி மறைவது நம் மொழியின் தன்மை. இறைவனின் பேச்சு இப்படி முன் பின்னாகத் தோன்றுவதும் மறைவதும் அன்று. அஃது எப்போதும் இருப்பது. அவன் ஏகன். அவன் பேச்சும் ஏகமே.

            ’ஓசையும் இல்லை எழுத்தும் இல்லை’ என்றால் என்ன பொருள்? அது மௌனம் என்பதுதான். எல்லா மொழிகளும் தோன்றும் மூல நிலை அதுவே. அதற்கு நீங்கள் எந்த மொழியின் பெயரை இட்டு அழைத்தாலும் பொருந்தும். எந்த உயிரினத்தின் மொழியாக அதைக் குறிப்பிட்டாலும் பொருந்தும்.

            “அறபி” என்னும் சொல்லுக்கு ‘பேச்சு மொழி’ என்று பொருள். ஏனைய மொழிகளை அறபிகள் ‘அஜமி’ என்று அழைத்தனர். ‘அஜமி’ என்னும் சொல்லுக்கு ‘ஊமை மொழி’ என்று பொருள். இது பண்டைய அறபிகளின் மொழிச் செருக்கைக் காட்டுவதாகக் கருதலாம்.

            ஆனால், ஆன்மிகத்தில் அறபி என்பதன் அடையாளம் வேறு. ஞானிகளின் பேச்சு அறபி எனப்படும். அஞ்ஞானிகளின் பேச்சு ’அஜமி’ எனப்படும்.

அதாவது, நாக்கு உள்ளவர்கள் ஒலிப்பதை எல்லாம் பேச்சு என்று மதிக்க முடியாது, மொழி என்று ஏற்க முடியாது. வெளிப்படையில் அதுவும் மொழியாகத் தோன்றலாம், மனித உருவம் போல. ஆனால், எப்படி மனித உருவம் பெற்றிருப்பதலாயே ஒருவரை “மனிதன்” என்று நாம் மதிப்பிட்டுவிட முடியாதோ அதே போல், எழுத்துக்களின் ஓசை இருப்பதாலேயே ஒருவரின் பேச்சை மொழி என்று மதிப்பிட்டுவிட முடியாது.

இறைவனின் ’பேச்சு’ என்பது ‘பிலா சவ்த்தின் பிலா ஹர்ஃபின்’ – ஓசை இலது, எழுத்து இலது. அதாவது, மௌனம். அது வெறுமனே சப்தமின்மை அன்று. அப்படிப் புரிந்து கொண்டால் நீங்கள் மௌனத்தை அறியவில்லை, அதனைத் தவற விடுகிறீர்கள் என்று பொருள்.

மௌனம் நேர்மறையானது; சப்தமின்மை எதிர்மறையானது.

ஒன்றின் இன்மை அன்று மௌனம். அது இருப்பின் பண்புகளில் ஒன்று.

சப்தமின்மை என்பது ஓசை இழப்பு. எனவே, மொழி இழப்பு. மௌனமோ அனைத்து மொழிகளின் ஊற்றுக்கண்.இறைவனின் பேச்சாகிய மௌனத்தை அடைந்தவர்கள், அறிந்தவர்கள் அதன் தொடர்பில் இருந்து பேசும்போது மொழி அர்த்தமுடையதாகிறது. அதற்கே ’அறபி’ என்று பெயர்.

வெளிப்படையாகப் பார்க்கும்போது, நபிகள் நாயகம் பேசியதும் அறபி, அவர்களின் அணுக்கத் தோழர் அபூபக்கர் பேசியதும் அறபி, அவர்களின் கடும் பகைவன் அபூஜஹல் பேசியதும் அறபி.

ஆனால், ஆன்மிக விளக்கத்தின்படி நோக்கும்போது, நபியும் அபூபக்கரும் பேசியது அறபி; அபூஜஹல் பேசியது அறபி அல்ல.

அபூஜஹல் பேசிய பேச்சு ஓசையின் கோலத்தில் அறபியாக இருந்தாலும் உண்மையில் அது ‘அஜமி’யே ஆகும். ஆனால், அபூபக்கரின் பேச்சு மட்டுமன்று,  மௌனமும்கூட ’அறபி’தான்.

நபித்தோழர் பிலால் அவர்கள் தொழுகை அழைப்பான பாங்கு ஒலித்தபோது அவரின் உச்சரிப்பு தவறாக இருந்தது பற்றி மதீனாவைச் சேர்ந்த நபித்தோழர்கள் சிலர் குறை பேசினர். ஆனால், அபிசீனியா (எத்தியோப்பியா) நாட்டினர் ஆன - ‘ஹபஷி’ ஆன - பிலாலின் பாங்கொலியை அல்லாஹ் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

ஹஜ்ரத் பிலால் அவர்களின் ஆன்மிக உணர்வு அவ்வளவு உன்னதமாக, ஆழமாக இருந்தது. வெளிப்படையில் மொழி இலக்கணப்படி அவர்களின் உச்சரிப்பு பிழையாகத் தெரியலாம். ஆனால், அந்தப் பிழையான உச்சரிப்பையே இறைவன் சரியான அறபி என்று ஏற்றுக்கொண்டான். ஏனெனில் அது அழியும் உலகின் அறபி அன்று, நித்திய ஜீவனான இறைவனின் அறபியில் இருந்து எழுந்த ஒன்று.

உருது மகாகவி இக்பால் சொல்கிறார்: ”ரெஹ் கயீ ரஸ்மெ அதான், ரூஹே பிலாலி ந ரஹீ” (ஜவாபே ஷிகவா:16). அதாவது,

“பாங்கின் சடங்கு

பேணப்படுகிறது;

பிலாலின் உயிர்மை

அதனுள் இல்லை!”

’பிலாலின் உயிர்மை’ என்பது எது? ஏக இறைவனின் பேச்சில் அவரின் பேச்சு அர்ப்பணம் ஆகிவிட்டது.  ’உமரின் நாவிலும் இதயத்திலும் நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை அருளியுள்ளான்’ (’இன்னல்லாஹ ஜஅலல்-ஹக்க அலா லிசானில் உமர வ கல்பிஹி’ – நூல்: திர்மிதி; ஹதீஸ் எண்: 3682 / (49:78))  என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஆன்மிக நிலை அது.”தொழுகையில் இருக்கும்போது ஒரு விசுவாசி நிச்சயமாகத் தனது ரட்சகனிடம் (அதாவது, இறைவனிடம் அந்தரங்கமாக) உரையாடுகிறான்” (இன்னல் முஃமின இதா கான ஃபிஸ் ஸலாத்தி ஃப-இன்னமா யுனாஜீ றப்பஹு – நூல்: சஹீஹ் புகாரீ:405; சஹீஹ் முஸ்லிம்: 547) என்று நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்.

உரையாடல் என்றால் இரண்டு தரப்பிலும் பேச்சுக்கள் நிகழ வேண்டும். தொழுகையில் அடியான் இறைவனின் திருமறை வசனங்களைத்தான் ஓதுகிறான். அது இறைவன் அவனிடம் பேசுவதாகும். ஓசை கொண்ட மொழியால் பேசுவது “அக்வால்” எனப்படும். ஓசையும் எழுத்தும் இல்லாத பேச்சுடைய இறைவன் தனது பேச்சினை மனிதர்களின் மொழி வடிவத்தில் வெளிப்படுத்தினான். அதை ஓதும் அடியானின் உள்ளத்திலும் உயிரிலும் ஏற்படும் உணர்வு நிலைகளே அடியான் அவனிடம் உரையாடுவதாகும. அதற்கு “அஹ்வால்” என்று பெயர்.

ஓசை இல்லா பேச்சுள்ள இறைவன் திருமறையின் மூலம் “அக்வால்” கொண்டு தன் அடியானிடம் பேசுகிறான். ஓசையுள்ள பேச்சுள்ள அடியான் “அஹ்வால்” கொண்டு தன் இறைவனிடம் பேசுகிறான். இவை ’அறபி’யின் இரண்டு நிலைகள்.

Thursday, July 15, 2021

தங்காத தங்கம்

 

வாழ்க்கை நிரந்தரம் இல்லை, வாழ்வில் எதுவும் நிலைப்பதில்லை என்னும் சிந்தனை எழாத மனிதன் இருக்க முடியாது. அதைப் பாடாத கவிஞனும் இருக்க முடியாது.

நிலையாமை பற்றி எத்தனையோ கவிதைகள் உள்ளன. அந்தச் சிந்தனையை வெளிப்படுத்தும் கவிதை மிக எளிதில் எதிர்மறைத் தொனியைப் பெற்றுவிடலாம். அதில் ஒரு சோர்வும் சோகமும் சுலபமாகச் சேர்ந்துவிடும்.

நிலையாமை பற்றிப் பேசும் கவிதை ஒன்று தன் அழகால் நம்மை வசீகரிக்கிறது என்பது மிகவும் அரிதானது. ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் ஃபிராஸ்ட் அத்தகைய கவிதை ஒன்றை எழுதியுள்ளார். “Nothing gold can stay” என்னும் கடைசி வரியே அதன் தலைப்பாக இடப்படுகிறது.

அது மிகவும் சிறிய கவிதை. எட்டு வரிகள் மட்டுமே. ஒவ்வொரு வரியும் மிக நிதானமாக நகரும் கவிதை அது. ஆம், அந்தக் கவிதையை நாம் அவசரமாக வாசிக்க முடியாது. அதன் அகத்திலேயே ஓர் உள்ளார்ந்த நிதானம் இருக்கின்றது.

நிலையாமை என்பது காலத்தால் உணரப்படும் ஒன்று. ’நேற்று இருந்தவன் இன்று இல்லை’ என்பதே இந்த உலகத்தின் பெருமை என்கிறார் திருவள்ளுவர்.

நிலையாமையைப் பேச வரும் ராபர்ட் ஃபிராஸ்ட் காலத்தையே கையில் எடுக்கிறார்:

            இயற்கையின் முதற்பசுமை

            தூய தங்கம்;

            தக்க வைக்கக் கடினமானது

            அவளின் இந்நிறம்.

விடியலில் எல்லாம் பொன்னிறமாகப் பொலிகின்றன. இயற்கையின் முதற் பசுமை மீது மஞ்சள் வெயில் விழுந்து அதைத் தங்கமாகப் பிரகாசிக்கச் செய்கிறது.

இயற்கை என்பது இங்கே வாழ்க்கை என்பதன் குறியீடு என்று விமர்சகர்கள் விளக்கம் தருகின்றனர். முதற்பசுமை என்பது இளமைப் பருவம். தங்கம் என்பது வாழ்வின் மதிப்பு. தங்கமே உலோகங்களில் மதிப்பு மிக்கது. அதுபோல் இளமைப் பருவமே வாழ்வில் மிகவும் மதிப்புடைய காலம்.

வைகறைப் பொழுதில் சேவல் கூவும் காட்சியை வருணிக்கும் வள்ளலார் “பொற்கோழி கூவிற்று” என்கிறார். கோழி என்பது சேவலைக் குறிக்கும் பொதுப் பெயர். அது என்ன பொற்கோழி? அதிகாலையில் பொன்னிற வெயில் தன் மேல் விழுவதால் சேவல் தங்கத்தால் ஆனது போல் தோன்றுகிறதாம். அதனால் அது பொற்கோழி!

இந்த வரியைத் தலைப்பாக வைத்து ஒரு தனிக் கட்டுரை எழுதியுள்ள திருலோக சீதாராம் இதற்கு ஒரு நயமான விளக்கம் நவில்கிறார். பொன் என்பது பணத்தை, செல்வத்தைக் குறிக்கும். காலை விடிந்ததும் மனிதர்களில் பலரையும் எழுப்பிவிடுவது அவர்கள் மனத்தில் உள்ள பணம் சேர்க்கும் ஆசைதான். பொன் என்னும் கோழியே அவர்களின் உள்ளத்தில் கூவி எழுப்புகிறது என்கிறார் அவர்.

ஆனால், அதிகாலையின் அந்தப் பொன்னிறம் வெகு நேரம் நீடிப்பதில்லை. அதுபோல் இளமைப் பருவம் என்பதும் சீக்கிரமே போய்விடுகிறது.

இயற்கையின் வண்ணங்களிலேயே இந்த விடியற் பொழுதின் தங்க நிறம்தான் தக்க வைக்க மிகவும் கடினமானது என்கிறார் ராபர்ட் ஃபிராஸ்ட். ஏன் இதைச் சொல்ல வேண்டும்? காரணம் உண்டு. தம் வாழ்வின் பருவங்களில் மனிதர்கள் தக்க வைக்க நினைப்பது இளமைப் பருவத்தையே. பிள்ளைப் பருவத்தில் இருக்கும்போது எப்போது வளர்ந்து வாலிபர் ஆவோம் என்று ஆசைப்படுகிறார்கள். முதுமை எட்டிப் பார்க்கும் வயதில் இளமையை இழுத்துப் பிடித்து வைக்க என்னென்ன வழிகள் என்று எண்ணுகிறார்கள்.

அடுத்து ஃபிராஸ்ட் சொல்கிறார்:

                    அவளின்


    கொழுந்து இலை


    ஒரு மலர்;


    ஆனால் அது

    சொற்ப நேரமே.

விடியலின் பொற்கதிர்கள் செய்யும் ஜாலத்தால் கொழுந்து இலையே ஒரு மலரைப் போல் காட்சி தருகிறது. எத்தனை அழகான காட்சிப் பிழை! புலன்களை ஏய்க்கும் மாய மயக்கு.

இளமைப் பருவம் என்பது எல்லாருக்குமே உண்மையான மலராக இருப்பதில்லை. இளமையில் எல்லாருக்குமே தம் வாழ்க்கை மலர்ந்து மணம் வீசப் போகிறது என்பது போன்ற உணர்வு எழத்தான் செய்கிறது. ஆனால், அரிதாக ஒரு சிலரின் வாழ்க்கை மட்டுமே மலர்கிறது. பலரின் வாழ்க்கை வெறும் இலையாகவே இருந்துவிடுகிறது.

            பிறகு

            இலையாகத் தணிகிறது

            இலை.

நான் பூ இல்லை, வெறும் இலைதான் என்று வாழ்க்கை ஒத்துக்கொள்ள வைத்துவிடுகிறது. ஆ! எத்தனை வேதனையான ஒப்புதல்!

            அப்படித்தான்

            ஏதேன் தோட்டம்

            சோகத்தில் மூழ்கியது.

ஒவ்வொரு இளைஞனும் ஆதம், ஒவ்வொரு இளைஞியும் ஏவாள். இளமைப் பருவம் அவர்களுக்கு சொர்க்கத்தின் ருசியைக் காட்டுகிறது. அப்போது அவர்களின் வாழ்க்கை ஏதேன் தோட்டமாகவே இருக்கிறது. ஆனால் அது நிலைப்பதில்லை. வாழ்வின் கனியை சுவைத்துக் கொண்டிருக்கும்போதே அது மறைந்து விடுகிறது. சொர்க்க இழப்பின் சோகம் கவிந்து விடுகிறது.

            அப்படித்தான்

            பகலாகி விடுகிறது

            விடியல் விரைவில்;

            நிலைப்பதில்லை

            பொன்னான எதுவும்.

என்று தன் கவிதையை முடிக்கிறார் ராபர்ட் ஃபிராஸ்ட்.

நாள் என்பது வாழ்வின் குறியீடு என்றால், விடியல் என்பது இளமைப் பருவம், அந்தி என்பது மரணம். வாழ்க்கை நிலையாமை பற்றிப் பேசியிருந்தால் அவர் அந்தி நேரத்தைச் சுட்டிக் காட்டியிருப்பார். இளமை நிலையாமை பற்றிப் பேசுவதால் விடியற் பொழுதைப் பாடுகிறார்.

ஒரு நாள் முடிவதில் இல்லாத சோகத்தை அதிகாலையின் பொன்னிற அழகு மாறிப்போவதில் உணர்கிறது கவியின் உள்ளம்.

 

 

Tuesday, July 13, 2021

விளக்க முடியாத வாழ்க்கை கொண்ட மனிதன்


             முன்பு ஒரு காலத்தில் மவ்ஜூது என்று ஒருவர் இருந்தார். அரசு அலுவலராக சிறிய வேலை கிடைத்து நகரம் ஒன்றில் வாழ்ந்து வந்தார். பதவி உயர்வு பெற்றுக் கணக்காயர் ஆகி அவரின் வாழ்நாள் முடிந்து போகும் என்று தோன்றியது.

            ஒருநாள், தனது வீட்டுக்கு அருகில் இருக்கும் பாழடைந்த பழைய கட்டடம் ஒன்றைச் சுற்றி இருக்கும் தோட்டத்தில் அவர் உலவிக் கொண்டிருந்த போது சூஃபிகளின் வழிகாட்டியான கிள்ரு என்னும் மர்ம நபர் பளபளக்கும் பச்சை அங்கி அணிந்து அவரின் முன் தோன்றினார். கிள்ரு சொன்னார்: “ஒளி மயமான எதிர்காலம் கொண்டவரே! வேலையை விட்டுவிடு. மூன்று நாட்களில் ஆற்றங்கரைக்கு வந்து என்னைப் பார்.” உடனே அவர் மறைந்துவிட்டார்.

            மவ்ஜூது நடுங்கியபடி தன் மேலதிகாரியிடம் சென்று தான் வேலையை ராஜினமா செய்வதாகச் சொன்னார். ஊரார் மிக விரைவிலேயே இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டார்கள். “மவ்ஜூது பாவம், அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது,” என்றார்கள். சீக்கிரமே அவரை மறந்தும் போனார்கள்.

            குறிப்பிட்ட நாளில் மவ்ஜூது, கிள்ருவைச் சந்தித்தார். கிள்ரு அவரிடம் சொன்னார்: “உன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு இந்த ஆற்றுக்குள் பாய்ந்துவிடு. உன்னை யாரேனும் காப்பாற்றக்கூடும்.”

            மவ்ஜூது அப்படியே செய்தார். தான் உண்மையிலேயே பைத்தியம் ஆகிவிட்டோமோ என்று அவருக்கே தோன்றியது.

            அவருக்கு நீச்சல் தெரியும் என்பதால் அவர் மூழ்கவில்லை. ஆனால் ஆற்றின் போக்கில் அவர் வெகுதூரம் போய்விட்டார். அப்போது மீனவன் ஒருவன் அவரை இழுத்துத் தனது படகுக்குள் போட்டான். “மடையனே! ஆற்று வெள்ளம் கடுமையாக இருக்கிறது. நீ என்ன செய்வதாய் நினைப்பு?” என்று அவன் கத்தினான்.

            மவ்ஜூது சொன்னார்: “உண்மையில் எனக்குத் தெரியாது.”

            ”நீ ஒரு கிறுக்கன்,” என்றான் மீனவன். “ஆனால், கவலையை விடு. அதோ அங்கே ஆற்றங்கரையில் இருக்கும் என் குடிசைக்கு உன்னைக் கூட்டிச் செல்கிறேன். உனக்கு என்ன செய்யலாம் என்று பொறுமையாக யோசிப்போம்.”


            
மவ்ஜுது கல்வி கற்றவன் என்பதைக் கண்டதும் மீனவன் அவரிடம் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டான். அதற்குப் பகரமாக மவ்ஜூதுக்கு உணவு கொடுத்தான். மீனவனின் வேலைக்கு மவ்ஜூது ஒத்தாசையாக இருந்தார். சில மாதங்கள் கழித்து கிள்ரு மீண்டும் தோன்றினார். மவ்ஜூது படுத்திருந்த கட்டிலின் கால்மாட்டில் வந்து நின்றுகொண்டு அவர் சொன்னார்: “இப்போதே எழுந்து மீனவனை விட்டுப் போய்விடு. உனக்கு வாழ்வாதாரம் தரப்படும்.”

            ஒரு மீனவனைப் போல் ஆடை அணிந்து கொண்டு மவ்ஜூது உடனே குடிசையை விட்டு வெளியேறினார். நெடுஞ்சாலைக்கு வந்து சேரும் வரை அவர் அலைந்து கொண்டிருந்தார். காலை விடிந்து கொண்டிருந்தது. கழுதை மீது விவசாயி ஒருவன் சந்தைக்குப் போவதைக் கண்டார். “நீ வேலை தேடுகிறாயா?” என்று அவன் மவ்ஜூதிடம் கேட்டான். “சந்தையில் வாங்கும் சரக்குகளைக் கொண்டு வர எனக்கு ஓர் ஆள் தேவைப்படுகிறது.”

            மவ்ஜூது அவருடன் சென்றார். அப்படியாக அவர் அந்த விவசாயிக்கு இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தார். அப்போது அவர் விவசாயம் பற்றி மிக அதிகமாகக் கற்றுவிட்டார். வேறு சில தொழில்களையும் கொஞ்சம் கற்றுக் கொண்டார்.

            ஒரு மதிய நேரம் அவர் கம்பளி நூற்றுக் கொண்டிருந்தபோது கிள்ரு அவர் முன் தோன்றினார். “இந்த வேலையை விட்டுவிடு. மவ்சில் நகருக்குப் போ. உன் சேமிப்பை வைத்து நீ ஒரு தோல் வணிகன் ஆகிவிடு.”


            
மவ்ஜூது கீழ்ப்படிந்தார்.

            அவர் மவ்சில் நகரில் ஒரு பிரபலமான தோல் வணிகர் ஆனார். மூன்று ஆண்டுகள் அவர் சிறப்பாக வணிகம் செய்திருந்த காலத்தில் கிள்ருவை ஒருமுறை கூட அவர் காணவில்லை. அவரிடம் ஏகப்பட்ட பணம் சேர்ந்துவிட்டது. எனவே, வீடு ஒன்றை வாங்கலாம் என்று நினைத்தார். அப்போது கிள்ரு அவரிடம் தோன்றிச் சொன்னார்: “உன் பணத்தை என்னிடம் கொடுத்துவிடு. இந்த ஊரை விட்டு வெளியேறு. தூரத்தில் உள்ள ஏதாவது ஊருக்கு… சமர்கந்துக்குப் போ. அங்கே மளிகைக்காரரிடம் வேலை செய்.”


            
மவ்ஜூது அப்படியே செய்தார்.

            அப்போது அவரிடம் பையப் பைய ஞானத்தின் அடையாளங்கள் வெளிப்பட ஆரம்பித்தன. தனது ஓய்வு நேரத்தில் அவர் நோயாளிகளை குணப்படுத்தினார், கடையில் தனது சக ஊழியர்களுக்கு சேவைகள் ஆற்றினார். ரசகசியங்களைப் பற்றிய அவரின் அறிவு நாளுக்கு நாள் ஆழமானது.

            மார்க்க அறிஞர்கள், தத்துவவாதிகள் மற்றும் பிறர் அவரை அணுகிக் கேட்டார்கள்: “நீங்கள் யாரிடம் கல்வி கற்றீர்கள்?”

            ”அதைச் சொல்வது கடினம்,” என்றார் மவ்ஜூது.

            அவரின் சீடர்கள் கேட்டனர், “உங்கள் பணியை நீங்கள் எப்படி ஆரம்பித்தீர்கள்?”

            ”ஒரு சிறிய அரசு அலுவலராக,” என்றார் அவர்.

            ”சுய சீர்திருத்தத்துக்காக நீங்கள் அந்த வேலையை விட்டுவிட்டீர்களா?”

            ”இல்லை. நான் சும்மா விட்டுவிட்டேன்.”

            அவர் சொல்வது அவர்களுக்குப் புரியவில்லை.

            அவரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக வடிக்க வேண்டும் என்று மக்கள் அவரை அணுகினார்கள்.

            ”வாழ்க்கையில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள்?” என்று அவர்கள் கேட்டனர்.

            ”நான் ஒரு ஆற்றுக்குள் குதித்தேன். மீனவன் ஆனேன். பிறகு மீனவனின் குடிசையை விட்டு ஒரு நள்ளிரவில் வெளியேறினேன். அதன் பின், நான் ஒரு விவசாயி ஆனேன். கம்பளி திரித்துக் கொண்டிருந்தபோது என் மனதை மாற்றிக்கொண்டு மவ்சிலுக்குப் போனேன். அங்கே நான் ஒரு தோல் வணிகர் ஆனேன். அங்கே கொஞ்சம் பணம் சேமித்தேன். ஆனால் அதை கொடுத்துவிட்டேன். பிறகு நான் நடந்து சமர்கந்துக்கு வந்து சேர்ந்தேன். இங்கே ஒரு மளிகைக்காரரிடம் வேலை பார்த்தேன். இதோ இப்போது இப்படி இருக்கிறேன்.

            ”ஆனால் நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் உங்களுக்குக் கிடைத்திருக்கும் ஆன்மிக ஆற்றல்களையும் ஞானத்தையும் அது விளக்குவதாக இல்லையே?” என்று அவரின் சரிதக்காரர்கள் கேட்டனர்.

            ”அப்படித்தான்,” என்றார் மவ்ஜூது.

            எனவே, சரிதக்காரர்கள் மவ்ஜூதுக்காக ஓர் அற்புதமாக வாழ்க்கை வரலாற்றைப் புனைந்து எழுதினர். ஏனெனில், ஞானிகள் எல்லாருக்குமே ஓர் அற்புத வரலாறு இருந்தாக வேண்டும்! அந்தக் கதை பொது மக்களின் ரசனைக்குத் தீனி போடுவதாக இருக்க வேண்டும் என்பது முக்கியமே தவிர ஆன்மிக வாழ்வின் எதார்த்தங்களுக்குத் தோதாக இருப்பது அல்ல.

            கிள்ரு பற்றி நேரடியாகப் பேச ஒருவரும் அனுமதிக்கப்படுவதில்லை. எனவேதான் இக்கதை உண்மையாக இல்லை. இது ஓர் வாழ்வின் சித்திரம். இது மாபெரும் சூஃபிகளில் ஒருவரின் உண்மையான வாழ்க்கை.

db

            ’மறைவுலகம்’ என்பது எல்லா நேரங்களிலும் பல்வேறு இடங்களில் வெளிப்படையான எதார்த்தத்துடன் குறுக்கிடுகிறது என்னும் சூஃபி நம்பிக்கையை விளக்குகின்ற முக்கியமான கதை இது என்று ஷைகு அலீ ஃபர்மாதி (இறப்பு: பொ.ஆ.1078) அவர்கள் கருதுகிறார்.

            விளக்க முடியாத அல்லது விளங்க முடியாத நிகழ்வுகள் என்று நாம் சொல்வதெல்லாம் இந்த குறுக்கீட்டினால் விளைபவையே என்று அவர் சொல்கிறார். மேலும், நிகழும் காரியங்களுக்கெல்லாம் காரணங்களைத் தாம் அறிந்திருப்பதாகப் பொது மக்கள் நினைக்கிறார்கள். அதனாலேயே அவர்களால் இந்த மறைவுலகக் குறுக்கீடுகளைக் கண்டுகொள்ள முடிவதில்லை. சாதாரண அனுபவங்களில் அப்பாலுலகின் எதார்த்தங்கள் குறுக்கிட முடியும் என்னும் சாத்தியத்தைப் பற்றி எப்போது அவர்களின் சிந்தை கருதுமோ அப்போதுதான் அது அவர்களுக்குப் புலப்படும்.

            பின்னாளில் நக்‌ஷ்பந்திய்யா நெறி என்று பெயர் பெற்ற சூஃபி அமைப்பின் குருமார்களில் (ஃகாஜகான்) ஷைகு அலீ ஃபர்மாதி அவர்கள் பத்தாம் ஷைகாக (குருவாக)வும் போதனை ஆசானாகவும் இருக்கிறார்.

            இந்தப் பிரதி பதினேழாம் நூற்றாண்டில் லாலா அன்வர் எழுதிய ஹிக்காயத்தே அப்தாலான் (’மாற்றமடைந்த ஞானியரின் கதைகள்’) என்னும் ஆவணத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கதைக்கு நான் எழுதியுள்ள விளக்கக் குறிப்பு:

            இந்தக் கதைக்கான விளக்கவுரையை நான் எழுத மாட்டேன். ஏனெனில், ஏற்கனவே இந்தக் கதைக்கான விளக்கவுரை (தஃப்ஸீர்) ஒரு நூலாக வெளிவந்துள்ளது. மட்டுமல்ல, அதை நான் மிகவும் ரசித்துப் படித்திருக்கிறேன். மிக அற்புதமான விளக்கவுரை அது. செய்தவர் ஓஷோ! 1978-ஆம் ஆண்டு வெளிவந்த “Wisdom of the Sands” (மணல்களின் ஞானம்) என்னும் அவரது நூலின் இரண்டாம் பாகத்தில் முதல் அத்தியாயமாக இக்கதையின் விளக்கம் இடம்பெற்றிருந்தது. பின்னர், 1988-இல் இக்கதையின் விரிவுரை மட்டும் ”Mojud – The Man with the Inexplicable Life” என்னும் தலைப்பில் “An ancient Sufi story with commentary by Bhagwan Shree Rajneesh” என்று முன் அட்டையில் அச்சிடப்பட்டுத் தனி நூலாக அவரின் கையெழுத்துடன் 112 பிரதிகள் மட்டுமாக அமெரிக்காவில் நியோ சந்யாஸ் இண்டெர்நேஷனல் அமைப்பால் வெளியிடப்பட்டது (ISBN: 0-945360-00-2, முதற்பதிப்பு 5000 பிரதிகள்). அந்த நூற்பிரதியின் பிடிஎஃப் கோப்பு என்னிடம் உள்ளது.              இந்தக் கதையின் விளக்கவுரையை ஓஷோ நிகழ்த்தியது பற்றிய குறிப்பு ஒன்று அந்நூலின் 45-ஆம் பக்கத்தில் தரப்பட்டுள்ளது:

            ”2 மார்ச் 1978-இன் காலையில் இந்தியாவில் பூனாவில் உள்ள ஸ்ரீரஜ்னீஷ் ஆசிரமத்தில் பகவான் ஸ்ரீரஜ்னீஷ் தன் சீடர்களுடன் அமர்ந்து ’மவ்ஜூது: விளக்க முடியாத வாழ்க்கை கொண்ட மனிதன்’ என்னும் இந்தத் தொன்மையான சூஃபிக் கதையின் மீது விளக்கவுரை வழங்கினார்”            எண்பது பக்கங்கள் கொண்ட இச்சிறு நூலில் நாற்பத்து நான்கு பக்கங்களில் படங்களுடன் பெரிய எழுத்தில் இச்சிறிய சூஃபி கதை அச்சிடப்பட்டுள்ளது. 46-ஆம் பக்கத்தில் இருந்து 80-ஆம் பக்கம் வரை ஓஷோ (அப்போது பகவான் ஸ்ரீரஜ்னீஷ்) பேசிய விளக்கவுரை இடம்பெற்றுள்ளது.

            தனது விளக்கவுரையை ஓஷோ இப்படி ஆரம்பிக்கிறார்:

            “இன்று நாம் உள்ளே செல்லவிருக்கும் கதை மகத்தான கதைகளில் ஒன்று. ஒரு சூஃபிக் கதையில் மட்டுமே இருக்கக் கூடிய தனித் தன்மையான சுவை இதில் உள்ளது. இது ஒப்பிட முடியாத ஒன்று. இந்தக் கதையை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் நீங்கள் மதத்தின் ரகசியத்தையே புரிந்து கொண்டீர்கள் என்று அர்த்தம். இந்தக் கதையை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் உங்களால் ஒருபோதும் மதத்தைப் புரிந்து கொள்ளவே முடியாது.

            ”இது சமயப் பிரக்ஞையின் அடித்தளத்திற்கு உரியது. இது இல்லாமல் சமய உருமாற்றம் இருக்க முடியாது. எனவே இந்தக் கதையை முடிந்தவரை மிகக் கவனமாகக் கேளுங்கள். இந்தக் கதை உங்கள் இருப்பினுள் ஆழ்ந்து விடட்டும். இந்தக் கதை ஒரு கதவைத் திறக்கக் கூடும்; உங்கள் வாழ்வில் நீங்கள் பழைய ஆளாக இல்லாத அளவுக்கு உங்களிடம் இக்கதை ஓர் அடிப்படை மாற்றத்தை நிகழ்த்தக் கூடும். ஆனால் இந்தக் கதை மிகவும் உன்னிப்பாக, நுணுக்கமாக, மிகவும் ஓர்மையாக, மிகவும் அன்பாகக் கேட்கப்பட வேண்டும். ஏனெனில், இது ஒரு விசித்திரமான கதை.

            ”இது வெறுமனே கதை அல்ல; சூஃபிக் கதைகள் எல்லாம் வெறுமனே கதைகள் அல்ல. அவை உங்களுக்கு வேடிக்கை காட்டுவதற்கு இல்லை. உங்கள் பொழுது போக்கிற்காக அவை இங்கே இல்லை. அவை எல்லாம் பயிற்சிக் கருவிகள். அவை ஏதோ ஒன்றைக் குறிக்கின்றன, ஏதோ ஒன்றைக் காட்டுகின்றன, ஏதோ ஒன்றைச் சுட்டுகின்றன. அவை சுட்டிகள், அறியப்படாத ஒன்றை நோக்கிய அம்புக் குறிகள், நிலவைச் சுட்டும் விரல்கள். சூஃபிகளின் இந்த வாக்கியத்தை நினைவில் வையுங்கள்: “என் விரலைக் கடிக்காதே, நான் சுட்டும் இடத்தை நோக்கு.” (பக்கம்:46)

            இந்த நூலின் பின் அட்டையில் வில்லியமெட் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பேராசிரியர் ஆன டெட் ஷே என்பவர் ஓஷோவின் விளக்கவுரை பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்: “இச்சிறு நூலில் அவர் மிகவும் எளிய, பழைய, காய்ந்து போன அரக்கு நிற சூஃபி நாணல் ஒன்றைக் கையில் எடுத்து தனது அன்பான கவனத்தால் அதை ஒரு புல்லாங்குழல் ஆக்கியிருக்கிறார். அதில் அவர் பரவச கீதத்தை இசைக்கிறார்.”

             இந்த நூலை நீங்கள் படித்துப் பார்த்தால் அந்த கீதத்தை நீங்களும் கேட்கலாம். நான் மிகவும் வியந்தும் ரசித்தும் படித்த நூற்களில் இதுவும் ஒன்று.

            ஓஷோவின் நூலில் கையாளப்படும் இக்கதைப் பிரதி இத்ரீஸ் ஷாஹ்வின் இந்த நூலில் (Tales of the Dervishes) இருந்து எடுக்கப்பட்டதே. அதன் ஒரு சொல்லைக்கூட அவர் மாற்றவில்லை. ஓஷோவை மிகவும் கவர்ந்த சூஃபி எழுத்தாளர் இத்ரீஸ் ஷாஹ். 1984-இல் ஓஷோவிற்குப் பல்லில் சிகிச்சை செய்ய வேண்டி நேர்ந்தது. பல்மருத்துவ இருக்கையில் அமர்ந்தபடியே அவர் தான் நேசித்த நூற்களைப் பற்றிச் சிறு சிறு குறிப்புகள் பேசினார். ஒவ்வொரு நாளும் பத்து நூற்கள் என்று பத்து நாட்கள். அவற்றின் தொகுப்பு ”The Books I have Loved” (’நான் நேசித்த நூற்கள்’) என்றொரு தனி நூலாக வெளிவந்துள்ளது. அதில் இத்ரீஸ் ஷாஹ்வை அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவரின் ஒரு குறிப்பிட்ட நூலை அல்ல. ஆளையே குறிப்பிடுகிறார், இப்படி: “நான்காவதாக: ஒரு மனிதர், இத்ரீஸ் ஷாஹ். அவரின் நூற்களில் எதையும் நான் குறிப்பிட மாட்டேன், ஏனெனில் அவை எல்லாமே அழகானவை. இந்த மனிதரின் ஒவ்வொரு நூலையும் நான் பரிந்துரைக்கிறேன்.”            அக்டோபர் 1977-இல் வெளிவந்த ’தர்ஷன் டைரி’ வரிசை நூலான “Only Losers Can Win This Game” என்னும் நூலின் அனுபந்தத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஓஷோ (பகவான் ஸ்ரீரஜ்னீஷ்) நூல் வரிசையில் ”Rajneesh Book of Nothing – 200 Blank Pages to Play With” என்றொரு நூல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் இத்ரீஸ் ஷாஹ்வைப் பின்பற்றி ஓஷோவின் சீடர்கள் அவரின் பெயரால் வெளியிட்ட ஒரு நூல்தான்.

            இத்ரீஸ் ஷாஹ் வெளியிட்ட அந்த சூஃபி நூலின் தலைப்பு “The Book of the Book” (நூலின் நூல்) என்பதாகும். அந்நூல் 1969-இல் முதன் முதலில் வெளியிடப்பட்டது (ISBN 978-1-78479-078-3). 2016-இல் இத்ரீஸ் ஷாஹ் ஃபவுண்டேஷன் (ISF) வெளியிட்டுள்ள பதிப்பு மொத்தம் 278 பக்கங்கள் இருக்கின்றன. அதில் இந்த நூல் உருவாகி வந்த வரலாறு என்று ஒன்பது சிறிய குறிப்புக்களை இத்ரீஸ் ஷாஹ் எழுதியிருக்கிறார். மீதமுள்ள பக்கங்கள் எல்லாம் எதுவுமே எழுதப்படாத /  அச்சிடப்படாத வெற்றுப் பக்கங்களே.            இந்த நூலுக்கு இத்ரீஸ் ஷாஹ் குறிப்புக்கள் எழுதியிருப்பதை ஓஷோ விமரிசனம் செய்து பேசியுள்ளார். 1971-ஆம் ஆண்டில் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2 வரை அபு மலையில் அவர் தனது சீடர்களுக்கு ’நிர்வானோபநிஷத்’ குறித்து உரையாற்றினார். 26 செப்டம்பர் அன்று பேசிய உரையில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

            ”சூஃபிகளிடம் ‘The Book of the Books’ (நூற்களின் நூல்) என்றொரு நூல் இருக்கிறது. அதில் ஒன்றுமே எழுதப்படவில்லை. அது வெறுமையாக உள்ளது. அதை வெளியிட எந்தப் பதிப்பகத்தாரும் முன்வரவில்லை. அதை அச்சிட யாருக்காவது பைத்தியமா என்ன? அச்சிடுவதற்கு அதில் ஒன்றுமே இல்லையே! அண்மையில், அதை அச்சிடும் துனிச்சல் ஒரு பதிப்பகத்தாருக்கு ஏற்பட்டது. ஏனெனில், அந்த வெறுமையான நூலுக்கு ஒரு முன்னுரை எழுதித்தர முஹம்மது நபியின் வழித்தோன்றல் ஒருவர் சம்மதித்தார். அந்த மனிதர், இத்ரீஸ் ஷாஹ். அவர் அந்த வெறுமையான நூலுக்கு பத்தோ இருபதோ பக்கங்களில் ஒரு முன்னுரை எழுதினார். இருபது பக்க முன்னுரையைத் தொடர்ந்து இருநூறு வெற்றுப் பக்கங்கள். ஒருவழியாக அந்த நூல் வெளியாகிவிட்டது.

            ”தவறான நோக்கங்களில் பல பேர் அந்த நூலை வாங்குகிறார்கள். அவர்கள் முன்னுரையைப் பார்க்கிறார்கள் – யார் முழு நூலையும் பார்ப்பது? – ஆனால் பின்னர் அவர்கள் முன்னுரைக்கு அப்பால் புரட்டும்போது புத்தகம் முழுவதும் வெறுமையாகவே இருக்கிறது. அந்த நூல் ஏன் வெறுமையாக இருக்கிறது என்று விளக்கும் முயற்சி அந்த முன்னுரையில் தெரிகிறது. இத்ரீஸ் ஷாஹ் அந்த நூலுக்கு அநியாயம் செய்துவிட்டார் என்று நான் நம்புகிறேன். ஐந்திலிருந்து ஏழு நூற்றாண்டுகளாக மிகத் துனிச்சலான நபர்கள் அந்த நூலை வெறுமையாகவே பாதுகாத்து வைத்துள்ளனர். அதன் ஆசிரியரே அதை வெறுமையாகத்தான் வைத்திருக்கிறார், முன்னுரைக்குத் தேவையே இல்லை. அந்த நூல் அப்படியே வெறுமையாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதைப் பதிப்பிக்க ஒருவரும் முன்வரவில்லை. மேலும், அதை வாசிக்கவும் யாரும் தயாராக இருந்திருக்க மாட்டார்கள். அதனால்தான், வேறு வழியின்றி இத்ரீஸ் ஷாஹ் அந்தத் தப்பான காரியத்தைச் செய்ய வேண்டியதாகிவிட்டது.” (”Behind a Thousand Names – Talks on Nirvana Upanishad” / chapter#2 The Inner Light.)

            இத்ரீஸ் ஷா எழுதியுள்ள அந்த ஒன்பது சிறு குறிப்புக்களை மொழிபெயர்த்து நான் இந்நூலின் பிற்சேர்க்கையாகத் தருகிறேன். அத்துடன் நான்கைந்து வெற்றுப் பக்கங்களாவது இருக்க வேண்டும். ஏனெனில் உண்மையான ”நூலின் நூல்” அந்த வெற்றுப் பக்கங்கள்தாம்! அப்படி எனில், “தர்வேஷ்களின் கதைகள்” என்னும் இந்த நூலை வாங்கிய உங்களுக்குத் தொன்மையான சூஃபி நூல் ஒன்றும் இணைப்பாகக் கிடைத்து விட்டது என்றாகிறது!

            இத்ரீஸ் ஷாஹ் எழுதியுள்ள குறிப்புக்களில் இந்த நூலை முதன் முதலின் வைத்திருந்த சூஃபி ஞானியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அந்த நூலைப் பின்னாளில் மாலி என்பவர் வைத்திருந்ததாகவும் அதை துருக்கியில் வாழ்ந்த சூஃபி ஞானி காஜா அஹ்மத் யசவி அவர்கள் வாங்கியதாகவும் இத்ரீஸ் ஷாஹ் குறிப்பிட்டிருக்கிறார். ஓஷோ அந்த நூல் முதலில் மவ்லானா ரூமியிடம் இருந்ததாகப் பேசியிருக்கிறார்:

            ”ஒரு மாபெரும் சூஃபி நூல் இருக்கிறது. உலகத்திலேயே சிறந்த நூல் என்று அதை நான் கூற விரும்புகிறேன். ஏனெனில் அதில் ஒன்றுமே எழுதப்படவில்லை! அது முழுவதும் வெறுமையாக இருக்கிறது.அது ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையானது. அதை முதன் முதலில் விலைக்கு வாங்கியவர் மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி. அவரின் சீடர்களுக்கு இது புரியாத புதிராகிவிட்டது. அந்த நூலை மவ்லானா ரூமி எவரின் முன்னிலையிலும் வாசிப்பதில்லை என்பதும் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. அதை அவர் தனது தலையணைக்கு அடியில் வைத்திருந்தார். எல்லாரும் போன பிறகு அறைக் கதவைத் தாழிட்டுக்கொண்டு அந்த நூலை எடுத்து அவர் வாசிப்பார். எல்லாரிடமும் இச்செயல் இயல்பாகவே ஆர்வத்தைக் கிளப்பிற்று. ”என்ன விதமான மர்ம புத்தகம் அது?” அதை அறிந்துகொள்ள தம்மால் இயன்ற வழிகளில் எல்லாம் மக்கள் முயன்றனர். சில நேரங்களில் ரூமியின் அறைக்கு மேல் கூரை மீது சில சீடர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் ஓட்டைப் பிரித்து உள்ளே நோக்கினார்கள். ஆனால் ரூமி வாசிக்கும் நூல் என்ன என்பதை அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.            ”ஜலாலுத்தீன் ரூமி இறந்த அன்று, ஜலாலுத்தீன் ரூமியை விடவும் அவர்கள் அந்த புத்தகத்தைப் பற்றித்தான் கவலைப்பட்டனர். ஆனால் அவர்கள் ஜலாலுத்தீன் ரூமியை நேசித்தனர். சூஃபிகள் வேறு எந்த குருநாதரை நேசித்ததை விடவும் அதிகமாக அவர்கள் ரூமியை நேசித்தனர். மவ்லானா என்றால் அன்பான குரு என்று பொருள். அந்தச் சொல் ஜலாலுத்தீன் ரூமிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, வேறு எவருக்கும் அல்ல. சூஃபிகளின் உலகில் கடந்த ஆயிரத்து இருநூறு ஆண்டுகளில் ஜலாலுத்தீன் ரூமியை விடவும் வசீகரமான, அழகான, அன்பான, மனிதாபிமானம் கொண்ட வேறு ஒருவர் இல்லை.

            ”ஆனால், தமது குருநாதர் இறந்துவிட்டார் என்பதைக்கூட அந்தச் சீடர்கள் மறந்துவிட்டனர். அவர்கள் விரைந்து சென்று அவரின் தலையணைக்குக் கீழிருந்து அந்த நூலை உருவியெடுத்துப் பார்த்தனர். அவர்கள் திகைத்துவிட்டார்கள் – அந்த நூல் முற்றிலும் வெறுமையாக இருந்தது! வாசிக்க அதில் ஒன்றுமே இல்லை. ஆனால் ரூமிக்கு மிக நெருக்கமாக இருந்த அணுக்கச் சீடர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டார்கள்.

            ”வார்த்தைகள் விடப்பட வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு மௌனம் நிகழும்.

            ”மௌனமாய் இரு என்பதே அந்த நூலின் முழு போதனை. முதலில் வார்த்தைகளை வடியவிடு. அடுத்து ஒலிகளையும் அடங்க விடு. பிறகு அங்கே ஒரு வெறுமை இருக்கிறது. ஓர் இன்மை. தூய வெளி. அந்தத் தூய்மையே தியானம் என்பது. ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாக எந்தவொரு பதிப்பகத்தாரும் அதை வெளியிடத் தயாராக இல்லை. ’இதில் பதிப்பதற்கு ஒன்றுமே இல்லையே?’ என்று அவர்கள் நிச்சயம் கேட்டிருப்பார்கள். கடைசியில் சூஃபி குரு ஒருவர் அதனைப் பதிப்பித்து வெளியிட்டார். இப்போது அது கிடைக்கிறது – ஆனால் அது வெறுமனே வெற்றுப் பக்கங்கள் மட்டுமே. அது ‘புத்தகங்களின் புத்தகம்’ என்று அழைக்கப்படுகிறது.

            ”ஓசையில் இருந்து மௌனத்திற்கு நகருங்கள்.” (”The Great Pilgirmage” /  chapter#21 From Here to Here.)

            ஓஷோ இந்த நூலின் தலைப்பை “Book of Books” (நூற்களின் நூல் / புத்தகங்களின் புத்தகம்) என்றே குறிப்பிடுகிறார். ஆனால், இத்ரீஸ் ஷாஹ் அதன் தலைப்பை “Book of the Book” (நூலின் நூல் / புத்தகத்தின் புத்தகம்) என்றே குறிப்பிடுகிறார். இவ்விடத்தில் ஓஷோ ஒரு நுட்பமான விசயத்தைத் தவற விடுகிறார் என்று படுகிறது. “Book of Books” என்பதினும் ”Book of the Book” என்னும் தலைப்பு ஆழமானது, சூஃபித்துவப் பின்னணியில் பொருள் செறிந்தது. “Book of the Book” என்னும் ஆங்கில வாசகத்தில் உள்ள “the” என்னும் definite article தொனிக்கும் அர்த்தத்தைத் தமிழாக்க இயலாமல் தடுமாறுகிறேன். அறபியில் இந்த அங்கில வாசகம் “கிதாபுல் கிதாப்” என்று பொருள்படும். கிதாப் என்றால் நூல் (Book) என்று பொருள். அல்-கிதாப் (The Book) என்றால் குறிப்பிட்ட ஒரு நூலைக் குறிக்கும். அல்லது அது மட்டுமே நூல் என்று அழுத்தம் தரும். அத்தகைய நூல் இறைமறை (வேதம்) மட்டுமே. இஸ்லாத்தில் ’அல்-கிதாப்’ என்பது இறைமறையான குர்ஆனைக் குறிக்கவே பயன்படுத்தப்படும் சொல்லாகும். இறைமறையாம் குர்ஆன் அறபி மொழியில் அமைந்திருக்கிறது. மனிதகுலத்தினருக்காக அது அறபி மொழியில் அருளப்பட்டது. எல்லா மொழிகளும் இறைவனால் படைக்கப்பட்டவையே. அறபி மொழியும் ஒரு படைப்புத்தான். ஏனெனில், எல்லா மொழிகளும் ஒலியை அடிப்படையாகக் கொண்டவை. அறபி மொழியும் ஒலிகளால்தான் அமைந்திருக்கிறது. ஒலி என்பதே படைப்புத்தான். ஆனால் இறைவனின் பேச்சு ஓசைகளையும் எழுத்துக்களையும் கடந்தது (பிலா சவ்த்தின் பிலா ஹர்ஃபின்). அதை நாம் மௌனம் என்றுதான் விளங்கிக்கொள்ள முடியும். மௌனத்திற்குத்தான் ஒலியும் எழுத்து வடிவமும் கிடையாது. அறபி மொழியில் எழுதப்படும் திருக்குர்ஆன் வரிவடிவத்தின் ஆரம்ப வாசகமாக இருப்பது “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” (’அருளாளனும் அன்பாளனும் ஆன அல்லாஹ்வின் திருப்பெயரால்’) என்பதாகும். இதன் முதல் எழுத்து அறபி அட்சர வரிசையின் இரண்டாம் எழுத்தாக அமைந்த ’பே’ என்னும் பகரம் ஆகும். இந்த வேதப் பிரதி ஒரு பகரம்தான். அதன் மூலம் – அசல் – என்பது இறைவனின் ஞானத்தில் இருக்கிறது. அது நமக்குப் புலப்படாது. அரபி அட்சர வரிசையின் முதல் எழுத்தான அலிஃப் என்னும் எழுத்து நமக்குப் புலப்படாத அந்த இறைஞானத்தில் உள்ள திருமறையைக் குறிக்கும். அதனுடன் இந்த புலப்படும் வேதத்துக்கு ஒரு தொடர்பு இருக்கிறது. இது அதன் வெளிப்பாடுதான். எனவே, பிஸ்மில்லாஹ் என்னும் வாசகத்தை எழுதும்போது அந்த அலிஃப் இந்த ‘பே’ என்னும் பகரத்துடன் இணைந்திருப்பது போல் சற்றே நீட்டி எழுதப்படுகிறது. வேறு இடங்களில் ‘பே’ என்னும் எழுத்து அப்படி எழுதப்படாது. இது ஒரு சமிக்ஞை. அந்த புலப்படாத மறைவான வேதத்தையே எழுத்துக்கள் இல்லாத வெற்றுப் பக்கங்கள் குறிக்கின்றன. எனவேதான், ”Book of the Book” (நூலின் நூல் / கிதாபுல் கிதாப்) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


    
        இந்தக் கதையின் முடிவுப் பகுதி கவனிக்கத்தக்கது. ”Truth is stranger than fiction” என்னும் ஆங்கிலச் சொலவடைக்கு உதாரணமாக அது இருக்கிறது. உண்மையில் நிகழ்ந்த சம்பவங்களை மவ்ஜூது சொல்லும்போது சரிதக்காரர்களால் அதை நம்பவே முடியவில்லை. எனவே மக்கள் நம்பும்படியான ஒரு கதையை அவருக்கு அவர்கள் புனைகிறார்கள். இந்தப் பகுதி அப்படியே ஒரு நாவலில் கையாளப்பட்டுள்ளது. கனடா நாட்டின் எழுத்தாளர் யான் மார்டெல் எழுதிய தத்துவப் புதினமான “Life of Pi” (’’பை’யின் வாழ்க்கை’, 2001) என்னும் நாவலின் முடிவு இதே போல் அமைந்திருப்பதை நீங்கள் காணலாம். அந்த நாவல் உலகப் புகழ் பெற்றதுடன் 2012-ஆம் ஆண்டு ஆங் லீ-இன் இயக்கத்தில் ஆங்கிலத் திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்றது. சரக்குக் கப்பல் சிதலமடைந்து 227 நாட்கள் ஒரு படகில் புலி ஒன்றுடன் இருந்து கரையை அடையும் இளைஞன் பிசைன் பட்டேல் ஜப்பானிய அதிகாரிகளிடம் நடந்த உண்மைகளைச் சொல்லும்போது அவர்கள் அதை நம்ப முடியாமல் மறுக்கிறார்கள். எனவே அவனே அவர்கள் நம்பும்படியான ஒரு கற்பனைக் கதையைப் புனைந்து கூறுகிறான். அப்போதுதான் அவன் உண்மையைக் கூறுகிறான் என்று அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.