இவருக்கு முன்னும் பின்னும்
இப்படி ஓர் ஆளுமை இருக்கவில்லை என்று சொல்லிக் கொண்டாடும்படியான மேதைகள் எல்லாத் துறைகளிலும்
இருக்கிறார்கள். கவ்வாலி இசைத் துறையில் அப்படி ஒரே ஒருவரைக் குறிப்பிட வேண்டும் என்றால்,
நிச்சயமாக நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான் எனலாம்.
நுஸ்ரத் பாடும் பாணியில் வலிமையும் அதே சமயம் மென்மையும் இருந்து
இதயத்தில் ரசவாதம் நிகழ்த்தும். அவரைக் கவ்வாலி இசையுலகின் அல்லாமா இக்பால் என்று அழைக்கலாம்.
நுஸ்ரத் பாடுவதைக் கேட்டுப் பாமரர்கள் முதல் பண்டிதர்கள் வரை
பரவசம் ஆகி ஆரவாரம் செய்வர், அழுவர், ஆனந்த மௌனத்தில் ஆழ்வர். தர்காக்களில் நடைபெறும்
உரூஸ் கொண்டாட்டங்களில் கிராமத்து மக்களுக்கும் தன் இசைக் கொடையை வாரி வழங்கி அதை ஓர்
ஆன்மிகப் பணியாகவே ஆற்றி வந்த அந்த இசை மேதையை மக்கள் ஆட்சேபித்து நிறுத்தச் சொன்ன
ஒரு பாடலும் உண்டு என்றால் ஆச்சரியம்தான்!
ஆம், ஞானப் பாடல் ஒன்றை அவர் கவ்வாலியாகப் பாடும்போது, அதன்
வரிகளின் அர்த்தங்கள் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி, இது என்ன இப்படி எழுதியிருக்கிறார்?
இது மத துவேஷமான அர்த்தம் உள்ளதாகத் தெரிகிறது, பாடாதீர்கள் என்று மக்கள சொன்னார்கள்.
அதற்கான விளக்கத்தை நுஸ்ரத்தால் சொல்ல முடியவில்லை.
இத்தனைக்கும் அந்தப் பாடலை எழுதியவர் சாதாரண மனிதர் அல்லர்.
மனம் போன போக்கில் எழுதும் வெறும் கவிஞர் அல்லர். அவர் இந்திய ஸூஃபி வரலாற்றில் உயர்ந்து
நிற்கும் சிகரங்களில் ஒருவர். பாபா ஃபரீதுத்தீன் (ரஹ்) அவர்கள். அன்னார் எழுதிய ”மன்
நியம் வல்லாஹி யாரா” (நானில்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக!) என்னும் பாடலில் வரும் ஒரு
வரியைத்தான் மக்கள் புரிந்துகொள்ள இயலாமல் ஆட்சேபித்தனர். அதை அவர் பல இடங்களிலும்
பாட முடியாமல் போயிற்று.
”அதைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை. நீங்கள் எப்போதும் போல்
பாடுங்கள்” என்று பீர் நஸீர் (ரஹ்) சொன்னார்கள்.
”இல்லை, மக்கள் என்னிடம் விளக்கம் கேட்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை”
என்று நுஸ்ரத் சொன்னார்.
”அப்படித்தான் ஆகும். ஃகாஸ்ஸயீன் (சிறப்பானோர்)களுக்கு உரிய
ஒன்று ’ஆம்ம்’ (பொது) மக்களிடம் வந்துவிட்டால் அவர்கள் கூச்சலும் குழப்பமும் பண்ண ஆரம்பித்து
விடுவார்கள். பாபா ஃபரீத் ஒரு மாபெரும் ஸூஃபி ஞானி, முஸ்த்தனத் ஆலிம் ( மார்க்க அறிஞர்),
ஸுன்னாஹ் (நபிவழி)யில் பேணுதலானவர். அவருடைய பாடல் அது. சொல்லுங்கள், எந்த வரியை மக்கள்
ஆட்சேபிக்கிறார்கள்.” என்று பீர் நஸீர் (ரஹ்) கேட்டார்.
நுஸ்ரத் சொன்னார், “அதில் ஒரு வரி இப்படி உள்ளது: ’மன் வலீயம் மன் அலீயம் மன் நபி’ (நான் இறைநேசன்,
நான் ஹஜ்ரத் அலீ, நான் இறைத்தூதர்). பாபா ஃபரீத் எப்படித் தன்னை அலீ (ரலி) என்றும்
நபி (இறைத்தூதர்) என்றும் சொல்லலாம்? என்று மக்கள் ஆட்சேபிக்கின்றனர்.”
பீர் நஸீருத்தீன் நஸீர் (ரஹ்) அந்தப் பாடல் பற்றி நுஸ்ரத்துக்கு
விளக்கம் அளித்தார். அதைச் சொல்லும் முன் அந்தப் பாடலை முழுமையாகப் பார்த்து விடுவோம்:
நானில்லை, என் நண்பர்களே!
அல்லாஹ்வின் மீது சத்தியமாக நானில்லை!
நான் உயிரின் உயிர், நான் ரகசியத்தின் ரகசியம்
உடல் நானில்லை
(மன் நியம் வல்லாஹ் யாரா(ன்) மன் நியம் /
ஜானே ஜானம் சிர்ரே சிர்ரம்
தன் நியம்)
கைப்பிடி மண்ணில் வந்த தூய ஒளி நான்
நான் புறக் கண்களால் பார்க்கக் கூடிய ஒளி
அல்லன்
(நூரே பாக்கம் ஆமதா தர் முஷ்தே ஃகாக்
/
கோர் ச்சஷ்மான் ரா வலே ரோஷன் நியம்)
ஒளியின் ஒளி நான், ஒளியின் ஒளி நான்
ஒளியுடன் ஒளி.
நான் ஒரு விளக்கோ தீப்பந்தமோ அல்லன்
(நூரே நூரம் நூரே நூரம் நூரோ நூர்
மன் ச்சராகோ பம்பா ஒ ரவ்கன் நியம்)
இறைநேசன் நான், ஹஜ்ரத் அலீ நான், நபி நான்;
இறைவனை நிராகரித்த பாரசீக மன்னர்களான
ஜாம், ருஸ்தம், பஹ்மன் ஆகியோர் அல்லன்.
(மன் வலீயம் மன் அலீயம் மன் நபி
ஜாம் நியம் ருஸ்தம் நியம் பஹ்மன் நியம்)
இந்த முழு உலகமும் என்னால் வெளிச்சமாகிவிட்டது
நான் சூரியன், இல்நுழை கதிரின் துன்னணு
அல்லன்!
(ஈன் ஹமா ஆலம் ஸ மன் ரோஷன் ஷுதாஸ்த்
ஆஃப்தாபம் ஜர்ராயே ரவ்ஸன் நியம்.)
என் ரகசியத்தில் அவனே வெளியாகிவிட்டான்
நான் இல்லை அல்லாஹ்வின் மீதாணை! நானில்லை.
(ஊஸ்த் அந்தர் சிர்ரே மன் ழாஹிர் ஷுதா
மன் நியம் மஸ்’ஊத் வல்லாஹ் மன் நியம்)
இதற்கு பீர் நஸீருத்தீன் நஸீர் (ரஹ்) சொன்ன விளக்கமாவது:
”மன் என்பதன் அர்த்தம்
நான் என்பதுதான். வெளிப்படையாக இந்த வரியைப் பார்க்கும்போது ’நான் வலீ, நான் அலீ, நான்
நபி’ என்று பாபா ஃபரீத் சொல்வது போல் தெரிகிறது. ஆனால், அவர்கள் அலீயும் அல்ல, நபியும்
அல்ல. அவர்கள் வலீயாக இருப்பது சாத்தியம். ஆனால், வலீ (இறைநேசர்) விடயத்தில் பிறர்தான்
ஒருவரை அப்படிச் சொல்வார்கள். ஒரு வலீ அவரே தன்னை வலீ என்று சொல்லிக் கொள்வதில்லை.
இதை ஆட்சேபிப்போருக்கு – ’முஃதரிஸ்’களுக்கு – பாபா ஃபரீத் எங்கிருந்து இதைச் சொல்கிறார்கள்
என்பது விளங்கவில்லை. இங்கே மன் (நான்)
என்பதன் நாட்டப் பொருள் (முராத்) ஃபரீதுத்தீன் அல்லர். நானில்லை என் நண்பர்களே நானில்லை.
இந்த உடல் நானில்லை. இந்த உடலை நான் என்று நினைத்து ஏமாறாதீர்கள். காட்சியில் தெரியும்
இந்த உடலின் மீது ஃபரீதுத்தீன் என்னும் பெயர் இடப்படுகிறது. ஆனால் உள்ளே இருப்பது வேறு
ஒன்று! அது வேறொரு உலகம்.
”நூரே பாக்கம் ஆமதா தர்
முஷ்தே ஃகாக் - கைப்பிடி மண்ணில்
வந்திருக்கும் தூய ஒளி நான். இது பாபா ஃபரீதுத்தீன் அவர்களின் கைப்பிடி மண் அல்ல. நாம்
அனைவரும் அந்த ஒரு கைப்பிடி மண்ணில் இருந்து படைக்கப்பட்டவர்கள்தாம். இங்கே பாபா ஃபரீதுத்தீன்
நபிமொழி ஒன்றின் பக்கம் குறிப்புக் காட்டுகிறார்கள். அதாவது, அல்லாஹ் மனிதனைப் படைக்க
நாடியபோது ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, பூமிக்குச் சென்று ஒரு கைப்பிடி மண் எடுத்து
வாருங்கள் என்று கட்டளை இட்டான். அந்தக் கைப்பிடி மண்ணில் இருந்தே மனித குலம் முழுவதும்
வந்தது. அதைத்தான் பாபா ஃபரீதுத்தீன் குறிப்பிடுகிறார்கள். அதில் இறைவனின் ஒளி வந்தது.
அதை அகக் குருடர்கள் தம் ஊனக் கண்களால் பார்க்க முடியாது!”
நிச்சயமாக இந்தப் பாடல் பொது வெளியில், பொது மக்களுக்குப் பாடப்பட
வேண்டிய ஒன்றல்ல. இது ஞான ரகசியங்களை விளங்கும் ஆற்றல் பெற்ற சிறப்பானோருக்கு உரிய
பாடலாகும். ஸூஃபிப் பள்ளிகளில் நடைபெறும் ஸமா என்னும் இசை நிகழ்வுகளில் மட்டும் பாடப்பட
வேண்டிய ஒன்றாகும்.
இந்தப் பாடலின் தாக்கத்தால் தமிழில் ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது.
அதை எழுதியவர் ஸூஃபி ஞானி ஃபாரூக்கி ஷாஹ் ஃபஜ்லி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்களாவர்.
அது நான் சார்ந்திருக்கும் ஆன்மிக நெறியின் கூடுகைகளில், திக்ரு மஜ்லிஸ் என்னும் தியான
அமர்வுகளில் பாடப் படுவதுண்டு. அப்படிப் பாடும்போது சீடர்கள் பலரும் கைஃபிய்யத் (உணர்ச்சிவசம்)
ஆவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், சரியாக விளங்கிக் கொண்டுதான் பரவசமாகிறார்களா
என்று எனக்கு ஐயம் ஏற்பட்டதுண்டு.
அது போன்ற பாடல்களைச் சரியாக விளங்க இறை ஞானப் பாடங்களின் பயிற்சிகளும்
விளக்கங்களும் தேவைப்படுகின்றன. அவற்றில் போதிய அனுபவமும் தெளிவும் இல்லாமல் அத்தகைய
பாடல்களைக் கேட்பதில் பிசகாக அர்த்தப்படுத்திக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.
’நான்’ என்பது பற்றிய இறைஞான ரகசியங்களை அறிந்தால்தான் ‘லா இலாஹ’
என்பதைச் செயற்படுத்தும் ரீதியில் நிராகரிக்கப்படும் ’நான்’ எது என்றும், ‘இல்லல்லாஹ்’
என்பதைச் செயற்படுத்தும் ரீதியில் உறுதிப்படுத்தப்படும் ‘நான்’ எது என்றும் விளங்கும்.
இறை ஞானியர் சொல்லும் ’குஃப்ரே ஹகீகி’ என்னும் தன்னை நிராகரித்தல் என்பதையே இங்கே நானில்லை
(மன் நியம்) என்பது குறிக்கிறது. மேலும், வஹ்தத்துல்
உஜூத் (ஏகத்துவ உள்ளமை) என்பதை, இறைவனுக்கு கைரான (வேறான) படைப்புக்களின் எதார்த்தத்தை
நிராகரிக்காத வகையில் விளங்கும்போது மட்டுமே – அதாவது படைப்புக்களுக்கு ஜாத் உண்டு (அதாவது, ஜாத்தே அதம் – நாம ரூபம்
மட்டுமுள்ள உள்ளமையற்ற சுயம். இது மஃலூமே இலாஹி – இறைவனின் அறிவில் உள்ள அஃயான் (குறிப்புகள்)
ஆகும்), ஆனால் அவற்றுக்கு சுயமாக உஜூது
இல்லை என்பதை விளங்கும்போது மட்டுமே, இத்தகைய பாடல்கள் நேர்வழியில் செலுத்தும்.
எப்படியோ, இறைவன் நம்முடன் இருக்கும் நிலையான ஐனிய்யத் மற்றும்
படைப்புக்கள் இறைவனுக்கு வேறாக இருப்பதான கைரிய்யத் அகிய இரண்டையும் சமனப் படுத்தியபடி
(balancing) புழங்குவோருக்கே இந்த ஞானப் பாடல்கள் நற்பயன் தரும். ”மஃரிஃபா (இறைஞானம்)
என்னும் காற்றில் பறப்பதற்கு ஐனிய்யத் மற்றும் கைரிய்யத் ஆகிய இரண்டு சிறகுகள் வேண்டும்”
என்று பீர் கவ்ஸி ஷாஹ் அக்பரி (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள். இந்தச் சிறகுகளில் ஒன்று
முறிந்தாலும் ஆன்மா என்னும் பறவையால் பறக்க முடியாது.
மேலும், இத்தகைய பாடல்களின் வரிகள் அனைத்தும் எல்லோருக்கும்
ஒரே விதமாக உணர்ச்சியை உண்டு பண்ணாது. ஒருவருக்கு பேருணர்ச்சியைக் கிளர்த்தும் ஒரு
வரி இன்னொருவருக்கு மிகச் சாதாரணமாகப் படலாம். அது அவரவர் இருக்கும் மனநிலை (ஹால்)
மற்றும் படித்தரம் (மகாம்) ஆகியவற்றைப் பொறுத்தது. ஒருவருக்கே கூட ஒவ்வொரு முறை கேட்கும்போதும்
ஒரு பாடலின் வேறு வேறு வரிகள் உணர்ச்சியைக் கிளர்த்தக் கூடும். இப்படித்தான் இந்தப்
பாடல்கள் ஆன்மிகத்துக்கான கருவிகளாக உள்ளன.
இதோ, ஃபாரூக்கி ஷாஹ் ஃபஜ்லி (தவ்வலல்லாஹு உம்ரஹு) அவர்கள் எழுதிய
மெய்ஞ்ஞானப் பாடல்:
நானில்லை
நானில்லை நிச்சயமாக நானில்லை
நான்
என்று சொல்வதும் நானில்லை
நாயனைத்
தவிர வேறில்லை
எனதென்று
சொல்வதும் எனதில்லை
ஏகனுடையதே,
வேறில்லை
லா இலாஹ இல்லல்லாஹ்
லா இலாஹ இல்லல்லாஹ்
(நானில்லை…)
மண்ணில்
நின்று வந்ததெல்லாமே
மண்ணென்றால்
அது பொய்யில்லை.
பொன்னில்
நின்று வந்ததெல்லாமே
பொன்னென்றால்
அது பொய்யில்லை.
ஒன்றில்
நின்று வந்ததெல்லாமே
ஒன்றேதான்,
ரெண்டில்லை.
ஹக்கில் நின்று வந்ததெல்லாமே
ஹக்கேதான் வேறில்லை
(நானில்லை…)
தன்னந்
தனியாய் இருந்தான் அல்லாஹ்
முன்னால்
வேறொரு பொருளில்லை.
குன்
என்றுரைத்தான்
தன்னைத்
தவிர ஆகிட அங்கொரு பொருளில்லை
ஆதியில்
இருந்தது அனைத்துமாய் ஆனது
ஆரிஃபின்
சொல்லில் பிழையில்லை.
ஆணையிட்டதும் ஆகிவிட்டதும்
அவனேதான் வேறில்லை.
(நானில்லை…)
என்னுடல்
இயங்கும் விந்தையைப் பார்த்தேன்
இயக்குபவன்
யார்? நானில்லை.
ரத்த
நாளங்கள் இதயத் தாளங்கள்
இரவும்
பகலும் ஓய்வில்லை.
என்னுயிர்
சுவாசம் என் குடல் ஜீரணம்
நானின்றி
நடக்குது பொய்யில்லை.
என்னில் இருந்து எல்லாம் செய்வது
ஹக்கேதான் வேறில்லை.
(நானில்லை…)
என்னுடல்
என்பேன், உடல் நானில்லை.
உள்ளம்
என்பதும் நானில்லை.
என்
உயிர் என்பேன், உயிர் நானில்லை
உண்மை
ரகசியம் நானில்லை.
நான்
என்று சொல்வதும் நானில்லை
எனதென்று
சொல்வதும் எனதில்லை
ஏகமாய் எங்கும் இருப்பவன் எவனோ
அவனேதான் வேறில்லை.
(நானில்லை…)
அணு
அணுவாக அலசிப் பார்த்தேன்
அணுவில்
கூட நானில்லை.
நொடி
நொடியாக நினைத்துப் பார்த்தேன்
நொடியும்கூட
நானில்லை.
அலசிப்
பார்த்ததும் நானில்லை
நினைத்துப்
பார்த்ததும் நானில்லை
பொய்யான நானில் மெய்யான நான்தான்
விளையாடும் பெரும்விந்தை.
(நானில்லை…)
சொன்னதும்
கேட்டதும் ஆனதும் அவனே
உருவங்கள்
மட்டும் அவனில்லை.
சிந்தை
உருவங்களைச் செயற்பட வைத்தான்
செயற்பட
வேறொன்று வரவில்லை.
சின்னதும்
பெரியதும் காட்சியில் வந்தது
காட்சியில்
வந்தது படைப்பில்லை.
சிந்தையில் இருந்த ஃபாரூக் ஃபஜ்லி
யான் பாடிட வந்தேன், நானில்லை.
(நானில்லை…)
No comments:
Post a Comment