Monday, June 3, 2019

மகத்தான இரவு - 4சய்யிதினா முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்)


(அல்-குன்யா லி தாலிபி தரீக்குல் ஹக்கு என்னும் நூலிலிருந்து… ‘பஹாரே மதீனா.காம்’-இன் ஆங்கில மொழிபெயர்ப்பு வழித் தமிழாக்கம்: ரமீஸ் பிலாலி)
 

4
மகத்தான இரவின் நாள் மறைக்கப்பட்டது ஏன்?(”லைலத்துல் கத்ரு இரவு நிகழ்வது பற்றி ஒரு குறிப்பிட்ட தேதியை அல்லாஹ் தனது அடியார்களுக்கு ஏன் அறிவிக்கவில்லை?” என்னும் வினாவுக்கான விடை.)

    

  ”ஜும்ஆ நாளின் இரவு (லைலத்துல் ஜும்ஆ) தெளிவாக அறிவித்திருப்பது போன்று லைலத்துல் கத்ரு இரவு பற்றி அல்லாஹ் தனது அடியார்களுக்கு ஒரு குறிப்பிட்ட தேதியைத் திட்டவட்டமாக அறிவிக்காதது ஏன்?” என்று யாரேனுமொருவர் கேட்டால் அதற்கு யாம் பகரும் விடை இதுதான்:
      
 ”தனது அடியார்கள் அக்குறிப்பிட்ட இரவில் தாம் போதுமான நற்காரியங்களை வணக்க வழிபாடுகளை செய்துவிட்டோம் என்று கருதி பொடுபோக்காக இருந்துவிடக் கூடாது என்பது இறைவனின் நோக்கமாக இருக்கலாம். இப்படியான ஒரு தெளிவின்மை இல்லாதிருந்தால் மக்கள் சொல்வார்கள்: ‘ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த ஓர் இரவிலே நாங்கள் வணங்கிவிட்டோம். எனவே அல்லாஹ் எங்களுக்குப் பாவ மன்னிப்பை வழங்கிவிட்டான். எனவே இப்போது நாங்கள் அல்லாஹ்வின் பார்வையில் ஆன்மிகத்தின் மேலான நிலைகளுக்கும் சொர்க்கப் பூங்காக்களுக்கும் உரியவர்கள் ஆகிவிட்டோம்!” எனவே, அவர்கள் நற்செயல்கள் ஆற்றும் முயற்சிகளையே கைவிட்டுத் தமது சுகபோகங்களில் திளைக்கத் தொடங்கி விடுவர். அவ்வாறு நியாயமற்ற ஆதரவுக்கு இரையாகிப் போய் மறுமையில் கைசேதமான அழிவிற்கு ஆளாகிவிடுவர்.


   
          இதே போல் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். ஓர் எச்சரிக்கைக்காக அல்லாஹ் தனது அடியார்களுக்கு அவர்கள் மரணிக்கும் நாளை மறைத்தே வைத்திருக்கிறான். அப்படி இல்லை எனில் (அதாவது, ஒவ்வொருவருக்கும் அவர்களின் ஆயுள் என்ன என்பது முன்பே தெரிந்துவிட்டால்) நீளமான ஆயுள் கொடுக்கப்பட்ட ஒருவர், மரண நாளுக்கு இன்னும் அதிக ஆண்டுகள் உள்ள நிலையில் சொல்வார், “நான் எனது உலக இச்சைகளைக் கட்டவிழ்த்துவிட நாடுகிறேன். இவ்வுலகம் வழங்குகின்ற எல்லா சுகங்களையும் அனுபவிக்க நாடுகிறேன். அதன் வசதிகளை எல்லாம் முழுமையாக அனுபவித்துக் களிப்பேன். எனது மரண நாள் நெருங்கி வரும்போது நான் பாவ மன்னிப்புத் தேடி வணக்க வழிபாடுகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன். அப்போது நான் ஒரு திருந்திய நல்லடியானாக இறந்துவிடுவேன்.”
    
  உண்மையில், அல்லாஹ் அவர்களின் மரண வேளைகளை மறைத்து வைத்திருப்பதால் அவர்கள் தமது மரணம் பற்றி எப்போதுமே எச்சரிக்கையுடனும் சூதானமாகவும் இருந்து வர வேண்டியிருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் நற்செயல்கள் புரிவதற்கான நிலைத்த முனைப்பும், மனவுறுதியுடன் இறைவனின் பக்கம் திரும்பவும், தமது பண்புகளை மேம்படுத்த நிலையான முயற்சிகள் மேற்கொள்ளவும் ஏதுவாகிறது. எனவே, மரணம் அவர்களிடம் எப்போது வரினும் அவர்கள் தம்மை நல்லதோர் ஆன்மிக நிலையில் கண்டுகொள்ள முடியும். இவ்வுலகில் விதிக்கப்பட்ட சுகங்கள் மற்றும் புலனின்பங்களின் தமது பங்குகளை (அக்ஸாம்) அவர்கள் பெருவதுடன் மறுமையில் அவர்கள் இறைவனின் அருளால் (ரஹ்மத்) அவனின் தண்டனையை விட்டும் பாதுகாப்பை அடைந்தோராவர்.
       
ஓர் அறிஞரின் கருத்து இங்கே கவனத்திற்குரியது: “அல்லாஹ் ஐந்தனுள் ஐந்தை மறைத்து வைத்திருக்கிறான்: 1. வணக்க வழிபாடுகளில் (தாஅத்) அல்லாஹ் தனது இன்பங்களை மறைத்து வைத்திருக்கிறான்; 2. மாறுசெய்வதான பாவங்களில் (மஆஸி) அல்லாஹ் தனது சினத்தை மறைத்து வைத்திருக்கிறான்; 3. கடமையான பிற தொழுகைகளில் (ஸலவாத்) அல்லாஹ் நடுநிலையான தொழுகையை (அஸ்-சலாத்துல் உஸ்த்தா) மறைத்து வைத்திருக்கிறான்; 4. தனது பிற படைப்பினங்களில் அல்லாஹ் தனது நேசரை (வலீ) மறைத்து வைத்திருக்கிறான்; 5. லைலத்துல் கத்ரு என்னும் மகத்தான இரவை அல்லாஹ் ரமலான் மாதத்தினுள் மறைத்து வைத்திருக்கிறான்.”
      [குறிப்பு: ”அனைத்துத் தொழுகைகளையும் நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்” (ஹாஃபிழூ அலஸ் ஸலவாத்தி வஸ் ஸலாத்தில் உஸ்த்தா – 2:238)]

 

(தொடரும்...)

மகத்தான இரவு - 3


சய்யிதினா 
முஹ்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்)

(அல்-குன்யா லி தாலிபி தரீக்குல் ஹக்கு என்னும் நூலிலிருந்து… ‘பஹாரே மதீனா.காம்’-இன் ஆங்கில மொழிபெயர்ப்பு வழித் தமிழாக்கம்: ரமீஸ் பிலாலி)


3
மிகச் சிறந்தது எது? ஜும்ஆ நாளின் இரவா? மகத்தான இரவா?

(லைலத்துல் ஜும்ஆ என்னும் வெள்ளிக்கிழமை இரவு (ஆங்கில நாள் கணக்கின் படி வியாழக் கிழமையின் இரவு) மற்றும் ரமலான் மாதத்தில் வரும் லைலத்துல் கத்ரு என்னும் மகத்தான இரவு ஆகிய இவ்விரண்டில் மற்றொன்றை விடச் சிறந்த இரவு எது? என்னும் கேள்விக்கான விடை பற்றி மார்க்க அறிஞர்களின் கருத்து வேறுபாடுகள் பற்றி.)

      லைலத்துல் ஜும்ஆ அல்லது லைலத்துல் கத்ரு. எது மிகச் சிறந்தது? நமது சகாக்களான மார்க்க அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள ஒரு கேள்வி இது.

      ஒருபக்கம், இவ்விரண்டில் லைலத்துல் ஜும்ஆவே சிறந்தது என்று ஹைகு அபூ அப்தில்லாஹிப்னு பத்தா, ஷைகு அபுல் ஹசனுல் ஜஸரி மற்றும் அபூ ஹஃப்ஸ் உமருல் பர்மகீ (ரஹ்-ம்) ஆகியோர் கருதுகின்றனர்.

      மறுபக்கம், மீண்டும் மீண்டும் ஆண்டுதோறும் வருகின்ற அனைத்து லைல்த்துல் கத்ரு இரவுகளிலும் ஒரேயொரு இரவு மட்டுமே ஜும்ஆ இரவை விடவும் சிறந்தது; குர்ஆன் இறக்கி வைக்கப்பட்ட அந்த அசலான லைலத்துல் கத்ரு இரவுதான் அது என்று அபுல் ஹசன் அத்-தமீமி (ரஹ்) அவர்கள் கருதுகின்றார். பிற லைலத்துல் கத்ரு இரவுகள் அனைத்தையும் விட ஜும்ஆ இரவு சிறப்பு வாய்ந்தது என்பது அவரின் கருத்து.

      ஹம்பலி மத்ஹப் என்னும் மார்க்கச் சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த இந்த அறிஞர்களைத் தவிர பிற மார்க்க அறிஞர்களில் (உலமாஃ) பெரும்பான்மையோர் லைலத்துல் ஜும்ஆவைவிட மட்டுமல்லாது நாட்காட்டியில் உள்ள அனைத்து இரவுகளைக் காட்டிலும் லைலத்துல் கத்ரு இரவே மிகச் சிறந்தது என்று கருதுகின்றனர்.

      எனினும், நமது ஹம்பலி மத்ஹப் சகாக்களின் கருத்தினை உறுதிப்படுத்துகின்ற ஹதீஸ் ஏதுக்கள் அதிகமுண்டு. அவற்றை இங்கே விளக்குவோம்:

      நீதிபதி அல்-காளி இமாம் அபூ யஃலா (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் ஒரு ஹதீஸ்: சய்யிதினா இப்னு அப்பாஸ் (ரலி-மா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ‘லலைத்துல் ஜும்ஆவில் அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரையும் மன்னிக்கின்றான்.’

      ஏனைய பிற இரவுகளில் எதற்கும் இத்தகைய சிறப்புத் தன்மையை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக அறியப்படவில்லை.

      இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அருளியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: “துலக்கமான இரவு (லைலத்துல் கர்ராஃ), மிகப் பிரகாசமான நாள் (அல்-யவ்முல் அழ்ஹர்), ஜும்ஆ இரவு (லைலத்துல் ஜும்ஆ) மற்றும் ஜும்ஆ நாளின் பகல் ஆகியவற்றில் என் மீது அல்லாஹ்வின் சலவாத்தை அதிகமதிகம் பிரார்த்தியுங்கள்.”

      கர்ராஃ என்னும் அடைமொழி குர்ரா என்னும் பெயர்ச்சொல்லில் இருந்து வருகின்றது. குர்ரா என்றால் ஒன்றின் தனித்தன்மை, சிறப்புத் தன்மை என்று அர்த்தமாகும்.

      ஜும்ஆ இரவே இரண்டில் சிறந்தது என்பதற்கான இன்னொரு அத்தாட்சி அஃது ஜும்ஆ பகலை ஒட்டி முற்பட்டு வருவதாக இருக்கிறது என்பதாகும். இது ஓர் நெத்தியடியான புள்ளி. ஏனெனில், ஜும்ஆ நாளின் சிறப்புகள் பற்றி நிறையச் சொல்லப்பட்டுள்ளோம். எண்ணிக்கையில் அந்த அளவுக்கு லைலத்துல் கத்ரின் சிறப்புகள் பற்றிச் சொல்லப்படவில்லை.     இதன் தொடர்பில், பின்வரும் ஹதீஸ்கள் நமது கவனத்திற்கு உரியவை ஆகின்றன:
      நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அனஸிப்னு மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “சூரியன் உதிக்க விரையும் நாளில் அல்லாஹ்வின் பார்வையில் ஜும்ஆ நாளினும் (யவ்முல் ஜும்ஆ) மிகச் சிறந்ததும் பிரியமானதுமான நாள் வேறொன்று இல்லை.”

      இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அருளியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “உயிர்த்தெழுப்பப்படும் நாளில் (யவ்முல் கியாமா) அல்லாஹ் நாட்களையும் அவற்றின் நிலைகள் வெளிப்படும்படியான விதத்தில் உயிர்த்தெழுப்புவான். ஜும்ஆ நாளினை அவன் எழுப்பும்போது அது பிரகாசமான அழகுடன் ஜொலித்துக் கொண்டிருக்கும். அந்நாளுக்குரியோர் மிகவும் மரியாதையுடன் அதற்கு முகமன் உரைப்பர். தனது கண்ணியமான மணாளனை நோக்கி ஒரு மணப்பெண் அழைத்துச் செல்லப்படும் மணப்பெண் பிரகாசத்துடன் நடக்க அவளைச் சுற்றியிருப்போர் அவளை வியப்புடன் பார்ப்பதுபோல் அக்காட்சி இருக்கும். அவர்களின் சரும நிறம் பனியைப் போல் வெண்மையாகவும் அவர்களின் நறுமணம் கஸ்தூரியாகவும் இருக்கும். அவர்கள் கற்பூர மலைகளுக்குள் நுழைவார்கள். அல்-மவாகிஃப் என்னும் நிறுத்தத்தில் கூடியிருக்கும் மனிதர்களும் ஜின்களும் அவர்களைப் பார்த்து வியப்படைவார்கள். அவர்கள் சுவர்கத்திற்குள் நுழையும் வரையிலும் அவர்களை இவர்கள் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.”

      ”நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஏற்றுக்கொள்ளும் படியாகத்தான் இருக்கின்றது. ஆனால், அல்லாஹ் தனது திருமறையில் ”மகத்தான இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது” (லைலத்துல் கத்ரி ஃகைரும் மின் அல்ஃபி ஷஹ்ரின்) என்று சொல்லியிருக்கிறானே?” என்று யாரேனுமொருவர் கேட்கிறார் எனில் அவருக்கு யாம் பகரும் விடை இதுவாகத்தான் இருக்கும்: “ஜும்ஆ தினம் அல்லாத மற்ற நாட்களின் மதிப்பீட்டில் ஆயிரம் மாதங்கள் அளவு (அதாவது, முப்பதாயிரம் நாட்கள் அளவு) கண்ணியமான இரவாக லைலத்துல் கத்ரு இருக்கும். அக்கணக்கீட்டில் லைலத்துல் ஜும்ஆ இடம்பெறாது.” இவ்விடை மிக எளிதாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள்ப்படக் கூடியதுதான். ஏனெனில், லைலத்துல் கத்ரு இரவே மிகச் சிறந்தது என்று கருதுவோரும்கூட ”ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது – அக்கணக்கீட்டினுள் ஒரு லைலத்துல் கத்ரு இல்லாத பிற நாட்களை வைத்து அளந்த நிலையில்” என்றுதான் விளங்குகின்றார்கள்.”

      நமது கருத்துக்கு ஆதரவாக இன்னொரு புள்ளியையும் முன்வைக்கலாம். அதாவது லைலத்துல் ஜும்ஆ என்பது சுவனத்தில் நிரந்தரமானது அழியாதது. ஏனெனில், சொர்க்கவாசிகள் அல்லாஹ்வைச் சந்திப்பது என்பது அந்நாளில்தான் நிகழும். மேலும், ஜும்ஆ இரவின் நிகழ்வு நிலை இக்கீழுலகில் நாட்காட்டிகளில் உறுதியாகத் தெரியப்படுகிறது. ஆனால், லலைத்துல் கத்ரு இரவின் நிகழ்வு என்பது யூகத்துக்கு உரியதாகவே உள்ளது.

      அபுல் ஹசன் அத்-தமீமி போன்றோர் முன்வைக்கும் மாற்றுப் பார்வையின் சார்பிலும் ஆதாரங்களை முன்வைக்க முடியும் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. லைலத்துல் கத்ரு இரவே ஜும்ஆ இரவை விடவும் சிறந்தது என்று கூறுவோர் ”மகத்தான இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது” (லைலத்துல் கத்ரி ஃகைரும் மின் அல்ஃபி ஷஹ்ரின்) என்னும் திருவசனத்தை ஓதிக்காட்டியே தொடங்குவது வழமை.

      ஆயிரம் மாதங்கள் என்பது எண்பத்து மூண்று ஆண்டுகள் நான்கு மாதங்கள் என்பதைச் சுட்டிக் காட்டி அவர்கள் பின்வரும் ஹதீஸ்களை முன்வைக்கிறார்கள்:

      இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களது சமுதாயத்தினரின் (உம்மத்) ஆயுள் காலம் எடுத்துக் காட்டப்பட்டது. அது மிகவும் குறுகிய காலமாக இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். எனவே லைலத்துல் கத்ரு அவர்களுக்கு அருளப்பட்டது.

      இமாம் மாலிகிப்னு அனஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”நம்பகமான ஒருவரிடமிருந்து நான் கேட்டிருக்கிறேன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருமுறை தனது வாழ்நாளிலேயே அல்லாஹ்வின் அருளால் அனைத்துச் சமுதாயத்தினரின் ஆயுள்களை எல்லாம் கண்டார்கள். முந்தைய சமுதாயங்களின் ஆயுள்களுடன் ஒப்பிடுகையில் தமது சமுதாயத்தினரின் ஆயுள் மிகவும் குறுகியதாக இருப்பதாகவும் தமது மக்கள் அதிக நன்மைகளைச் செய்ய இயலாமல் போய்விடும் என்றும் வருந்தினார்கள். அப்போதுதான் அல்லாஹ் லைலத்துல் கத்ரு இரவை அவர்களுக்கு அருளினான்.”

      இமாம் மாலிகிப்னு அனஸ் (ரஹ்) அவர்கள் மேலும் சொன்னார்கள்: “சயீதிப்னுல் முஸய்யிப் ஒருமுறை சொன்னதாக என் கவனத்திற்கு வந்தது: ‘எவரேனுமொருவர் லைலத்துல் கத்ரில் இரவு நேரத் தொழுகைக்கு (ஸலாத்துல் இஷாஃ) வந்துவிடுவார் எனில் அவர் மிகுதமான நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்.” 

      இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அருளியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: “எவரேனும் ஒருவர் இரவு (இஷாஃ) மற்றும் அந்தி (மக்ரிப்) தொழுகைகளைக் குழுவுடன் (ஜமாஅத்) தொழுவாரெனில் லைலத்துல் கத்ரு இரவின் நன்மைகளில் தமது பங்கினை அவர் அடைந்து கொள்வார். மேலும், அவர் சூரத்துல் கத்ரு அத்தியாயத்தை ஓதுவார் எனில் முழுக் குர்ஆனில் நான்கில் ஒரு பங்கினை அவர் ஓதியது போன்றதாகும்.”(தொடரும்...)