Thursday, November 29, 2012

ஆலிஸின் க்ரைம் உலகம்சமீபத்தில் என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் புக்‌ஷோ ஒன்று நடத்தினார்கள். பிள்ளைகள் ஆளுக்கொரு நூல் வாங்க வேண்டும் என்று திட்டமாம். நச்சரித்தார்கள். பிள்ளைகளுக்கு நூல் வாங்கித் தருவதை முழு மனத்துடன் வரவேற்பவன் வலியுறுத்துபவன் என்ற பேரில் அவர்களுடன் பள்ளிக்குச் சென்றேன். நூல் இருந்த ஹாலில் ஒரு பகுதியில் மட்டும் பிள்ளைகளின் கூட்டம் குவிந்து மொய்த்துக் கொண்டிருந்தது. இத்தனை ஆர்வத்துடன் குழந்தைகளை ஈர்க்கிறது என்றால் ஏதோ விசேஷமான நூல் அங்கே இருக்க வேண்டும். அது என்ன நூல் என்று அறியும் ஆர்வம் என் உள்ளத்தில் கிளர்ந்தது. தோதாக என் பிள்ளைகளும் இரண்டு பக்கமும் என் கையைப் பிடித்து அந்தத் திசையில் இழுத்தார்கள். போய்ப் பார்த்தால் அங்கிருந்தது ஒரு ஏஃபோர் சைஸ் கார்டூன் புத்தகம்: ச்சோட்டா பீம்!

நொந்தே போனேன். தொ.காவில் அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு எதிர்ப்புச் சொல்பவன் அல்ல நான் என்றபோதும் கதை புத்தகமாகவெல்லாம் அதனை வாங்கி வைத்துப் பாதுகாப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, அது வேண்டவே வேண்டாம் என்று பிள்ளைகளிடம் மறுத்துவிட்டேன்.

வேறு நூற்களைப் பார்க்கலாம் என்று நகர்ந்த போது ‘சக்கரை வியாதிக்கு மூலிகை மருத்துவம்’, ‘சலவாத்தின் நற்பலன்கள்’, ‘யோகா செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்’, அன்னா ஹஜாரே வாழ்க்கை வரலாறு (!) போன்ற நூல்களும் இருந்தன. ‘இனிய வாழ்வுக்குத் தாம்பத்ய ரகசியங்கள்’ போன்ற நூற்களை வைக்காமல் விட்டார்களே என்று நிம்மதி அடைந்தேன். இப்படி ஒரு மூன்று ரேக்குகள் இருந்தன. நகர்ந்து வேறு பக்கம் போனதும் குழந்தைகளுக்கான நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. All time classics என்னும் லேபிலில் அடங்குபவை. பஞ்ச தந்திரம், அக்பர்-பீர்பல், தெனாலி ராமன், முல்லா நஸ்ருதீன், மரியாதை ராமன், விக்ரமாதித்யன், ஸ்நோ வைட்டும் ஏழு குள்ளர்களும், உறங்கும் அழகியும் மிருகமும், தவளையும் இளவரசியும், சின்றெல்லா, மூன்று கரடிகள், ஹாமலின் நகரத்து ஊதுகுழலோன், பரமார்த்த குருவும் சீடர்களும், கல்லிவர்ஸ் ட்ராவல்ஸ், ஆலீசின் அற்புத உலகம், விஜார்ட் ஆஃப் ஓஸ் இத்தியாதிகள்.

என் பிள்ளைகள் ஆளுக்கொரு நூல் வாங்கினார்கள். மகன் வாங்கியது ரீடிங் பூஸ்டர் என்னும் ஒரு பயிற்சி நூல். அதில் சொல்லப்பட்டுள்ள பல விஷயங்கள் அடியேனுக்கே புதுசு. உதாரணமாக, Sandwich உருவான கதை. படித்தால் நாலு ஆங்கில வார்த்தைகள் புதிதாகக் கற்றுக் கொள்ளலாம் என்னும் உப-பயனையும் அளிக்கும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நூலை அவன் தேர்ந்தெடுத்ததற்காக புக்‌ஷோ நடத்துபவர் விசேஷமாகப் பாராட்டினார், ”எல்லாப் பிள்ளைகளும் ச்சோட்டா பீமையே வாங்குகிறார்கள். நீ நல்ல நூலை எடுத்திருக்கிறாய். வெரி குட்” என்றார். நூலிலிருந்து சில வியப்பான தகவல்கள்:
கிரிக்கட் என்னும் பூச்சியின் காதுகள் அதன் முன்னங் கால்களின் முனையில் உள்ளன. ஒரு வெண்புள்ளி போல் அது தென்படும்.

ஐஸ் மழை தெரியும்தானே? அந்த பனிக்கட்டிகள் 25000 அடி உயரத்தில் உருவாகி விழுகின்றன.

முதலைகள் அஜீரணக் கோளாறு வராமல் இருப்பதற்காகப் பத்து முதல் பதினைந்து பவுண்டு எடைக்குக் கற்களை விழுங்குகின்றன. (பின்னே, ஹெல்த் ப்ளஸ்சுக்கு வந்து ஒரு பாட்டில் ஜெலுசில் கொடுங்கன்னா கேட்கும்?)

மின்மினிகள் மினுக்கும் என்பதை அறிவோம். ஆனால் அவற்றின் முட்டைகளும் மினுக்குமாம். (முட்டை பழக்கம் சுடுகாடு மட்டும்னு பழமொழி கிழமொழி வச்சிருக்குமோ?)

யுவெஸ்ஸில் கிழக்கு மாநிலங்களில் மட்டும்தான் மின்மினிகள் வாழ்கின்றனவாம். மேற்கு மாநிலங்களில் அவை அறவே இல்லையாம். ஏனென்றும் யாருக்கும் தெரியவில்லையாம். (”அங்கயில்லாம் நமக்குச் சுத்தபட்டு வராதுங்க.” ”அட ஏம்ம்ப்பா?”)

எல்லாப் பூச்சிகளுக்கும் இருசோடிச் சிறகுகள் இருக்கும். ஆனால் மின்மினிப் பூச்சிக்கு மட்டும் ஒரு சோடிச் சிறகுதான் உண்டு. (இவ்விளக்கு விதிவிலக்கு!)

டாக்டர்.ஸ்யூஸ் என்பவர் குழந்தைகளுக்கான கதாசிரியர். நாற்பத்தாறு நூற்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் nerd என்று ஒரு சொல் உள்ளது. அதை அவர்தான் 1950-ல் ‘If I ran the zoo’ என்னும் நூலில் அறிமுகம் செய்தாராம். ஆமாம், nerd என்பதற்குத் தமிழில் என்ன சொல்லலாம்? மேதை என்று சொல்லலாமா? ஜீனியஸ் என்றாகிவிடும். சான்றோன் – ம்ஹும், என்ன சொன்னாலும் நெருடுகிறதே!

மகள் எடுத்தது மிகவும் மெல்லிசான ஒரு படக்கதை நூல்: LITTLE RED RIDING HOOD. அவளைப் போலவே இருந்தது, ஒல்லியாக அழகாக. எட்டுப் பக்கங்கள் மட்டுமே கொண்ட அந்த நூலில் அற்புதமான ஓவியங்கள் இருக்கின்றன. குழந்தைகளுக்கான படக்கதை நூல்களுக்கென்று படம் வரைவது ஒரு தனிக்கலை. ஒவ்வொரு படத்திலும் உள்ள நுணுக்கமான டீட்டெய்ல்ஸ் என்னை வியக்க வைக்கிறது. இத்தனை சிறிய 2D ஸ்பேசில் ஓவியர் எவ்வளவு பெரிய 3D ஸ்பேசைக் காட்டுகிறார் என்பதும் வியப்பாக இருக்கும். எழுத்துக்களின் ஃபாண்ட் அளவும் பாணியும்கூட குழந்தைகள் நூலில் மிக முக்கியமானது. டான் ப்ரவ்னின் நாவலுக்கான எழுத்துருவில் அதை உருவாக்கக் கூடாது. வாக்கிய அமைப்புக்களை அவர்கள் இரண்டாக உடைத்துப் போட்டிருந்தார்கள். ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு படம். அதன் மேலே சிறிய வாக்கியம். கீழே சற்றே நீண்ட வாக்கியம். மேலே உள்ளதைப் பிள்ளைகள் வாய்விட்டு வாசிக்க வேண்டுமாம். கீழே உள்ள நீண்ட வாக்கியத்தை அவர்களுக்கு மாதாஜி அல்லது பிதாஜி வாசித்துக்காட்ட வேண்டுமாம். இவ்வாறாக அந்த நூலை வாசிக்க அதனால் பிள்ளைகளின் மனத்தில் உண்டாகும் உளவியல் மாற்றங்களை எண்ணிப்பார்க்கவும்:
புதிய சொற்களை அறிகிறார்கள்.
கற்பனைத் திறன் வளர்கிறது.
கண் முன் உள்ள காட்சியைக் கூர்ந்து அவதானிக்கும் மனோபாவம் வருகிறது.
பெற்றோருடன் நெருக்கம் அதிகமாகிறது.

இத்தனை உளவியல் சமாச்சாரங்கள் அதில் இருக்கின்றன. ஆனால், மறுநாள் ஒரு பேராசிரியர் சொன்னார், அவர் தன் பிள்ளைகளுக்கு எந்த நூலுமே வாங்கித் தரவில்லையாம். பாட நூல்களைப் படித்தாலே போதுமாம். அதாவது பரவாயில்லை. ஒரு காரணமும் சொன்னார், “ஃபாரின் புக்ஸுன்னு வச்சுக்கிட்டு, ஏழெட்டுப் பக்கங்கள்தான் இருக்கு, அது எண்பது ரூவாங்கறான்.” (சரிதான், ச்சீப்பாக் கிடைக்கணும்னா குழந்தைகளுக்குக் குமுதமும் ஜூவியுமா வாங்கித்தர முடியும்?)

நம் பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான நூல்களை எந்த எந்த வயதில் வாசிக்கத் தருகிறோம் என்பதில் தமிழகச் சூழலில் என்ன மாதிரியான பிரக்ஞை இருக்கிறது என்பதை யோசித்துக் கொண்டிருந்தேன். குழந்தைகளுக்கான நூல்கள் என்பதிலும் கூட அத்தகுதி பெறுபவை எத்தனை நூற்கள் என்று ஐயமாக உள்ளது.

மரியாதை ராமன் கதைகளை நினைத்தேன். ஊர்ப் பிரச்சனையில் தீர்ப்புச் சொன்னவன் அவன். ஒரு குழந்தைக்குத் தான்தான் தாய் என்று இரண்டு பெண்கள் கோர, குழந்தையைப் இரு பாதிகளாக அரிந்து அவர்களுக்குத் தரும்படி சுலைமான் நபி தீர்ப்புச் சொல்ல, உண்மையான தாய் அலறிக்கொண்டு ’வேண்டாம், அவளுக்கே தந்துவிடுங்கள், குழந்தையை கொன்றுவிடாதீர்கள்’ என்று சொல்லவும் உண்மையான தாய் அவள்தான் என்பதுணர்ந்து குழந்தை அவளிடமே வழங்கப்பட்ட கதை ஒன்றுண்டு. அக்கதை மரியாதை ராமனிலும் வருகிறது. ஆனால் இந்த செண்டிமெண்ட்டெல்லாம் பிள்ளைகளுக்குப் புரியுமா? என்று தெரியவில்லை. இக்கதையை நம் பிள்ளைகளுக்கு நாம் சொல்வதில் இருந்து, அவர்கள் நம்மை உயர்வாக எண்ண வேண்டும் என்னும் நமது எதிர்பார்ப்பே வெளிப்படுகிறது. இது போல் கதைகளை சிரிஞ்சாகப் பயன்படுத்தி உணர்வுகளை இஞ்ஜெக்ட் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்.

அப்பாஜி ராவோ தெனாலி ராமனோ அல்லது பீர்பாலோ – மூன்றிலும் கதை ஒரே தினுசாகத்தான் இருக்கும் – ஒர் கதையில் ராஜாவுக்கும் ராணிக்கும் ஊடல் எழ அதைத் தீர்த்து வைக்குமாறு அ.ரா / தெ.ரா / பீ.பா-விடம் ராஜா கேட்டுக் கொள்கிறார். இது ஒரு ஐந்து வயதுக் குழந்தை படிக்க வேண்டிய கதையா சொல்லுங்கள்?

முல்லா நஸ்ருதீனின் கதைகளைக் கூட என்னால் குழந்தகளுக்கானதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவை நிச்சயமாக அடல்ட்ஸுக்கானவைதான் – அதாவது பெரியவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய, அதுவும் எல்லாருக்கும் என்று சொல்ல இயலாது, ஆன்மிக சாதகர்களுக்கான சூஃபித் தத்துவங்களை நகைச்சுவையாகச் சொல்லுகின்ற கதைகள் அவை. உதாரணமாக, மௌலானா ரூமி தன் மஸ்னவி காவியத்தில் சொல்லும் ஒரு முல்லாக் கதையைப் பாருங்கள்:

முல்லாவின் வீட்டிற்கு அவரின் வெளியூர் நண்பர்கள் வருவதாகத் தகவல் கிடைக்கிறது. வெகு தொலைவிலிருந்து பல காலம் கழித்துத் தன்னைக் காண வரும் நண்பர்களுக்கு விருந்து கொடுப்பதற்காக முல்லா இரண்டு கிலோ ஆட்டிறைச்சி வாங்கி வந்து மனைவியிடம் தருகிறார்: “அடியே! சொல்றத நல்லாக் கேட்டுக்க. வர்றவுங்க நாலு பெரிய மனுஷங்க. நல்லவிதமா இதுல கபாப் செஞ்சு வையி. என்ன புரியுதா?” என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார். பல மாதங்களாகக் கொலை பட்டினி கிடந்து கால் வயித்துக்கும் அரை வயித்துக்கும் அல்லாடிக் கொண்டிருந்த முல்லாவின் மனைவிக்கு லம்ப்பாக இரண்டு கிலோ கறியைக் காணவும் ஆசை பொங்கிக்கொண்டு வந்தது. ஆகட்டும் பாத்துக்கலாம்னு செய்து வைத்திருந்த கபாப் அனைத்தையும் அவளே மொசுக்கிவிட்டாள். வீடு திரும்பிய முல்லா ‘கபாப் எங்கே?’ என்றார். அவள் ஒன்றுமே பேசாமல் அழுதழுது வீங்கி விண்ணாந்தது போன்ற மூஞ்சியுடன் நின்றாள். ‘என்னடி கேக்குறேன் மண்ணு மாதிரி மசமசன்னு நிக்கிற? கபாப் எங்கே?’ என்று மிரட்டினார். கண்ணைக் கசக்கிக் கொண்டே அவள் சொன்னாள், ’செஞ்சு மேஜையில வச்சிட்டுக் குளிக்கலாம்னு கொள்ளப் பக்கம் போயிருந்தேங்க. வந்து பாத்தேன், நீங்க வளக்குறீங்களே ஒரு குட்டிப் பிசாசு, அது எல்லாத்தையும் தின்னுடிச்சுங்க”. குட்டிப் பிசாசு என்றது முல்லா வளர்க்கும் செல்லப் பூனையை. பூனை வளர்ப்பது நபிவழி என்பதால் ஒரு சாம்பல் நிறப் பூனையைப் பிடித்து அதையும் ஏழ்மையான தவ வாழ்வுக்குப் பழக்கிக் கொண்டிருந்தார் முல்லா. மனைவி சொல்வதில் அவருக்குச் சந்தேகம் வந்தது. ‘கள்ளி இவள்தான் முழுங்கிவிட்டுப் பாவம் பூனை மீது பழியைப் போடுகிறாள்’ என்று நினைத்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்து அந்தப் பூனையை எடுத்து வந்தார். “அந்தத் தராசை எடுடி” என்றார். “எதுக்குங்க?” என்றாள். முறைத்தார். எடுத்துத் தந்தாள். பூனையைத் தராசில் வைத்து நிறுத்தார். சரியாக இரண்டு கிலோ இருந்தது! பூனையைத் தாட்டி விட்டு மனைவியை குறுகுறுவென்று பார்த்துக் கேட்டார்: “அடியே! இது பூனைன்னா ரெண்டு கிலோ கறி எங்கே? இல்லை இதுதான் இரண்டு கிலோ கறின்னா அதைச் சாப்பிட்ட பூனை எங்கே?”

இக்கதையைச் சொல்லும் மௌலானா ரூமி இதன் உள்ளிருக்கும் தத்துவத்தையும் விளக்குகிறார்கள்: “எது பருப்பொருள்? எது ஆன்மா? எது ஸ்தூலம்? எது சூக்குமம்? எது உடல்? எது உயிர்? இதுவே அதுவாய் அதுவே இதுவாய் இருக்கும் நிலையில் எப்படிப் பிரித்துச் சொல்வது அன்பர்களே!”

இவ்வாறு, குழந்தைகளுக்கான கதைகள் என்று கிடைப்பனவற்றில் பெரும்பாலானவை குழந்தைகளுக்காக என்றே பிரத்யேகமாக இயற்றப்பட்டவையாக இல்லை. 1001 அரேபிய இரவுக் கதைகளை எடுத்துக் கொள்ளுங்கள், கொடுங்கோல் அரசன் ஒருவனுக்கு அவனின் புதிய மனைவி ஒவ்வொரு இரவும் ஒரு கதை சொல்லியாக வேண்டியிருக்கிறது. விடியும்போது ஒரு புதிர் வைத்துக் கதையை முடிக்கிறாள் அவள். இல்லையெனில், சுவாரஸ்யம் போய்விட்டால் அந்த மன்னன் அவளைக் கொன்றுவிடுவான். கதை சொல்லத் தெரியாத அரசிகள் பலரை அப்படி ஏற்கனவே அவன் கொன்றிருக்கிறான். இந்த அழகிய இளம் அரசி அவனின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கதைகளை 1001 இரவுகள் சொல்கிறாள். அவளே தன் ஆத்மா தேடிக்கொண்டிருந்த பெண் என்பதை ஆழமாக உணர்ந்து அவளை அவன் முழுமனதாக ஏற்றுக் கொள்கிறான். அவள் சொல்லும் கதைகள் அவனின் ஆளுமையை மாற்றிவிடுகின்றன. இதுதான் 1001 இரவு அரபிக் கதைகளின் பின்னணி. இந்தக் கதைகள் அவற்றைப் படிப்பவரின் ஆளுமையையும் மாற்றிவிடும் ஆற்றல்கள் கொண்டவை என்று சொல்லப்படுகிறது. சூஃபிகள் இந்தக் கதைகளைத் தங்கள் ரகசிய ஞானங்களை மறைத்துச் சொல்வதற்கான குறியீட்டுக் கருவிகளாகப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. இதிலிருந்து எடுத்தாளப்படுகின்ற அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் போன்ற கதைகள் குழந்தைகள் படிப்பதற்கு ஏற்ப எளிமைப் பட்டவையே அன்றி அவற்றின் ஒரிஜினல் வடிவத்தில் அவற்றைச் சிறார்கள் படிக்க முடியாது.

குழந்தைகள் கதை என்று சொல்லி நாம் அவர்களுக்குத் தருபவற்றின் இன்னொரு அம்சம் அவற்றில் நாம் ஏதேனும் சமயக் கருத்தையோ அறக் கருத்தையோ வைத்து ‘இந்தக் கதையின் நீதி யாதெனில்’ என்னும் விதமாக முடிப்பதுதான். ஈசாப் நீதிக் கதைகள் இதற்கு நல்ல உதாரணம். ஆனால் ஈசாப் தன் கதைகளைப் பெரியவரகளுக்காகவே எழுதினார், குழந்தைகளுக்காக அல்ல! இத்தகைய கதைகளுமே கூட குழந்தகைகளின் கற்பனையை, வியக்கும் ஆற்றலை, அவர்களின் மனங்களில் இயல்பாகவே உள்ள ‘empathy’ என்னும் அருளுணர்வை வளப்படுத்தும் நோக்கில் அமைந்திருக்காது. நீதி போதிக்காத குழந்தைக் கதை வெட்டித்தனமானது என்று நமக்கு இருக்கும் ஒரு தவறான பார்வையே இதற்குக் காரணம்.

விக்டோரிய இங்கிலாந்தில் உருவான குழந்தைக் கதைகள் எல்லாம் ஏதேனும் வரட்டு அறக்கருத்தை, நீதியை, நன்னெறியை போதிப்பதாகவே இருப்பதைக் கண்டு மனம் வெம்பினார் லூயி கரோல். இது ஒரு மோசமான அணுகுமுறை என்று அவருக்குத் தோன்றிற்று. குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க விடவேண்டும், அவர்களின் மீது கருத்துக்களைத் திணிக்கக் கூடாது என்பது அவரின் கருத்து. எந்த விழுமியமும் அவர்களிடம் இயல்பாகவே அவர்களின் உள்ளிலிருந்து முளைத்து வர வேண்டும். அதற்குத் துணை செய்யும் வகையில் எழுதப்படும் கதைகளையே அவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று எண்ணினார்.

1862-ஆம் ஆண்டு லூயி கரோல் தன் நண்பர் ஒருவருடனும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அப்போதிருந்த ஹென்றி லிட்டலின் மூன்று மகள்களுடனும் ஐந்து மைல்கள் படகுச் சவாரி சென்றார். அந்தப் பிள்ளைகளுக்கு முறையே 13, 10 மற்றும் 8 வயது. நடுப்பெண்ணின் பெயர் ஆலிஸ் லிட்டல் (Alice Liddell). அந்தப் படகுப் பயணத்தில் அவர்கள் ஒரு கதை கேட்கவே ஆலிஸின் பெயரை வைத்தே ஒரு சிறுமியின் கதையைக் கற்பனையாக லூயி கரோல் மனம் போன போக்கில் சொன்னார். அக்கதை அந்த மூன்று சிறுமிகளுக்கும் மிகவும் பிடித்துப் போனது. கணித அறிஞரான லூயி கரோல் ஒரு குழந்தை இலக்கியவாதியாக மாறியது அப்படித்தான். அவருடைய அக்கதை நூலுருப் பெற்று 1865-ல் வெளிவந்தது.

ஆலிஸின் அற்புத உலகம் கதையில் லூயி கரோல் நிறைய கணிதப் புதிர்களையும் கணிதத்தின் அற்புதத் தன்மைகளையும் இடம்பெறச் செய்துள்ளார். ஆனால் அவை எதுவும் துருத்திக் கொண்டு இதோ பார் கணிதச் சிக்கல், இதற்கு விடை சொல் பார்ப்போம் என்று பூச்சாண்டி காட்டாது. அதனால்தான் இக்கதையைக் குழந்தைகள் விரும்புகின்றார்கள். எனினும் அவர்களின் உபமனத்தில் கணித்திற்கான கண்ணோட்டத்தை இக்கதை அவர்களையே அறியாமல் வளர்க்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரு நல்ல கதை இப்படித்தான் செயல்பட வேண்டும்.

ஆலிஸின் அற்புதவுலகம் கதையின் பாதிப்பில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இன்னொரு குழந்தைகள் கதை நூல் ‘The Wonderful Wizard of Oz’. எல்.ஃப்ரான்க் பாம் என்பவரால் எழுதப்பட்ட இந்நூல் 1900-ல் வெளிவந்தது. இது போன்ற சின்ன சின்ன கதைகள் ஆங்கிலத்தில் அனேகம். இங்கே தமிழில் வால்யூம் வால்யூமாக கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் போல, அங்கே குழந்தைகளுக்கான காவியங்களை எழுதியிருக்கிறார்கள். சி.எஸ்.லூவிஸ் ஏழு புதினங்களாக எழுதிய “The Chronicles of Narnia”, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜே.ஆர்.ஆர்.டால்க்கியன் மூன்று பாகங்களில் எழுதிய ‘Lord of the Rings’ மற்றும் ஜே.கே.ரவ்லிங் ஏழு நாவல்களாக எழுதிய Harry Potter ஆகியவை நூற்களாகவும் பின்னர் திரைப்படங்களாகவும் வந்து உலகெங்கும் பெரியவர்களையும் வசீகரித்தன. அதி கற்பனை ஆக்கங்கள (high fantasy) என்பதே அவற்றின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. தமிழில் இது போல் குழந்தைகளுக்கான அதி கற்பனை நூல்கள் வெளிவந்ததில்லை என்பது வருத்தம் தரும் உண்மை.

இக்கதைகள் குழந்தைக் கதைகள் என்று சொல்லப்பட்டாலும் இவற்றின் மீதுள்ள ஒரு குற்றச்சாட்டு இவை ”FREEMASONS” என்னும் ரகசிய இயக்கத்தினரின் கொள்கைகளை மறைமுகமாக குழந்தைகளின் மனங்களில் திணிப்பவை என்பதாகும். லூயி கரோல், எல்.ஃப்ரான்க் பாம் போன்ற குழந்தை எழுத்தாளர்களும் அமெரிக்க ஜனாதிபதிகளாகவும் தொழிலதிபர்களாகவும் ஹாலிவுட் திரைப்பட அதிபர்களாகவும் கலைஞர்களாகவும் வருகின்றவர்கள் பொதுவாக ஃப்ரீமேசன் இயக்கத்தின் உறுப்பினர்களே என்றொரு கருத்து உண்டு. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி விவாதிக்கப்பட்டு வரும் விஷயமாகும்.

ஃப்ரீமேசன்ஸ் இயக்கத்தில் இந்திய வாமசார சடங்குகளை ஒத்த செயல்பாடுகள் உண்டு என்று கூறப்படுகிறது. Pagan கலாச்சாரக் கூறுகளைப் பற்பல குறியீடுகளின் வழியே அவர்கள் நவீன நாகரிகமாக உருக்கொள்ளச் செய்து உயிருடன் வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. லூயி கரொலின் போன்றோர் எழுதும் கதைகள் உண்மையில் பிள்ளைகளின் மனங்களை வசியப்படுத்தித் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஃப்ரீமேசன்ஸ் பயன்படுத்தும் ஒரு கருவியே என்று ஒரு பார்வை உண்டு. லூயி கரோலே அப்படித்தான் ஆலிஸின் அற்புத உலகத்தை எழுதினார் என்கிறார்கள். ’கதையின் ஆரம்பத்தில் ஒரு வெண்முயல் வருகிறதே, அது பாதாள உலகில் உருமாற்றம் கொண்டதும் ஏன் கைகளில் வெள்ளை உறை அணிந்திருக்கிறது? ஏனெனில் அது ஃப்ரீமேசன்ஸ் இயக்கத்தின் உறுப்பினர்களின் அடையாளம்’ என்று தொடங்கி, ’அந்த வெண்முயலே பாலியலுக்கான ஒரு குறியீடுதான், ப்ளே பாய் முயல் அது’ என்கிற ரீதியில் வாதங்கள் தொடர்கின்றன.

லிட்டல் சகோதரிகள் மூவரில் இரண்டாமவளான பத்து வயது ஆலிஸ் லிட்டல் மீது லூயி கரோலுக்கு உண்டான பாலியல் ஈர்ப்புத்தான் அவரின் கதைக்கு அவளின் பெயரையே அவர் தேர்ந்தெடுக்க வைத்தது என்றும், ஆலிஸை அவர் ‘abuse’ செய்து கொண்டிருந்ததாகவும், ஃப்ரீமேசன்ஸ் இயக்கத்தில் உறுப்பினரான ஹென்ரி லிட்டலின் சம்மதத்துடன் தான் இக்காரியங்கள் நடந்தன என்றும் சொல்லப்படுகின்றது. லூயி கரோல் ஒரு paedophile என்று வசை பாடுபவர்கள் இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது Alice in Wonderland என்பதன் பின்னணி ஆலிஸின் ரகசிய உலகம் (Alice in Secretland) என்பதாகவும் ஆலிஸின் க்ரைம் உலகம் என்பதாகவும் மாற்றம் கொள்கிறது.

இதற்கு வேறான பார்வை கொண்டவர்களும் இருக்கிறார்கள். ’செ, செ, என்னப்பா இது, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்றாப்ல இருக்கு. லூயி கரோல் ஒரு மேதை. கணித அறிஞர் மட்டுமல்ல, குழந்தைகளின் உளவியலை அறிந்தவர் மட்டுமல்ல, ஒரு குழந்தைக் கதை மூலம் அற்புதமான ஆன்மிக விஷயங்களைச் சொன்னவர். மறைஞான (OCCULT) ரகசியங்களை மிக லாவகமாக அவர் தன் கதையில் மறைத்துச் சொல்லியிருக்கிறார்’ என்று அவர்கள் வாதிடுகிறார்கள். ’ஆலிஸின் அற்புத உலகம்’ நூலில் வரும் சில காட்சிகளின் குறியீட்டு விளக்கங்களாக ”Masonic Forum of Light” என்னும் விவாதக் குழுமத்தில் லொவிட்டே என்னும் பெயரில் ஒருவர் எழுதியிருப்பவை வியப்பூட்டுகின்றன:

“ஒரு நவீனச் செவ்வியல் பிரதிக்குள் நாம் நுழைகிறோம். பல குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கற்பனையைச் சமவீச்சில் தூண்டிய ஒரு கதை. வளர்வதின் சிக்கல்கள், மொழியின் விசித்திரங்கள், மெய்ம்மை பற்றிய நம் பார்வைகள் ஆகியவை பற்றி இக்கதை விவாதங்களை எழுப்புகிறது என்றபோதும், இது நம்மிடம் ஓர் ஆழ்நிலையில் உரையாடுகிறது என்று நான் நம்புகிறேன்.

ஆலிஸ் ஓர் வெண்முயலின் பின்னால் ஓடிச் சென்று பூமியில் உள்ள ஒரு குழிக்குள் விழுகிறாள் என்று இக்கதை ஆரம்பம் ஆகிறது. (இந்தக் காட்சியின் மீது ஃப்ராய்டின் கராறான உளவியல் பார்வையைப் போட்டால் அதன் விளக்கம் பின்வருமாறு அமையும்: ஆலிஸ் என்னும் பத்து வயதுப் பெண்ணை வசீகரித்துத் தன் பின்னால் ஓட விடும் அந்த வெண்முயல் பாலியலின் குறியீடு. பூமியில் உள்ள அந்தத் ஆழ்துளை என்பது பெண்ணுடலின் புழையைக் குறிக்கும். அதனுள் ஆலிஸ் வீழ்கிறாள் என்பது ஆலிஸ் தன் உடலில் / உடலின் பாலியலை முதன் முதலில் உணர்ந்துகொள்ளும் தருணத்தைக் குறிக்கிறது.) கதை நினைவு மனத்திற்குக் கீழே உள்ள நினைவிலி மனத்தில் (Unconsious Mind) நடக்கிறது என்பதை இது சொல்ல வருகிறது. இது நினைவுலகிலிருந்து கனவுலகிற்கான ஒரு பெயர்வு ஆகும். வனங்களுக்கும் ஓடைகளுக்கும் அடியிலிருக்கும் தேவதையின் உலகிற்கு இறங்குவதாகும்.

அலமாரிகளையும் புத்தக அடுக்குகளையும் கடந்தபடி அவள் மிகவும் மெதுவாக விழுகிறாள் என்பது ஒழுங்கு முறைகளைப் பின்னே விட்டு நாம் நினைவிலிக்குள் ஆழமாகச் செல்கிறோம் என்பதைக் காட்டுகிறது. தன்னுடைய அனுபவங்கள் நெடுக ஆலிஸ் இந்த இரண்டு உலகங்களில் எது உண்மையானது என்று குழம்பிக்கொண்டே இருக்கிறாள். அவை இரண்டுமே உண்மைதான் என்பது விடையாக இருக்கக்கூடும்!

அவளுடைய முதல் சவால், வெண்முயலைப் பின்தொடர்வதற்காக அவள் ஒரு கதவின் வழியே கடந்து செல்ல வேண்டும் என்பது. அந்தக் கதவை ஒரு தங்கச் சாவியால்தான் திறக்க முடியும். தங்கம் என்பது ஞானத்தைக் குறிக்குமாதலால் தங்கச் சாவி என்பது ஞானத் திறவுகோல் என்பதன் குறியீடு எனலாம். அந்தக் கதவின் வழியே அப்பால் செல்லும் முயற்சியில் ஆலிஸ் தன் அளவில் பல மாறுதல்களை அடைகிறாள். ஒவ்வொரு முறையும் அந்த மாற்றம் அவள் உண்ணும் பண்டத்தால் ஏற்படுகிறது. உண்பது என்பது சுயம் ஞான போதனையை உள்வாங்கிக் கொள்வது என்பதைக் குறிக்கும். ஒரு மனிதனின் அளவு என்பது அவனுடைய சுயத்தின் அடையாளத்தைக் குறிக்கும். ‘நான் யார்?’ என்னும் கேள்வி இக்கதையில் பல முறை கேட்கப்படுகிறது.

அவள் பூதாகரமாகப் பெருத்துவிடும் போது எக்கச்சக்கமாக அழுது வைக்கிறாள். அப்போது சட்டென்று அவளின் உருவம் மிகவும் சிறியதாகிவிடத் தன் கண்ணீரில் தானே மூழ்கிக் கொண்டிருப்பதை உணர்கிறாள். இந்தக் கண்ணீர்க் குளியல் என்பது ஒருவகை ஞான ஸ்நானத்தைக் குறிக்கும். எவ்வொரு நிலையிலும் அவளுடன் ஏதேனும் ஒரு விலங்கு இருக்கிறது. அவை நாமும் விலங்குகள்தான் என்றும் இயற்கையுடன் இணைந்தே இருக்கும் அதனொரு பகுதி என்றும் நமக்கு உணர்த்தும் கருவிகளாகத் திகழ்கின்றன.

விரைவில், ஆலிஸ் அந்த வெண்முயலின் வீட்டிற்குள் நுழைந்து விடுகிறாள். அந்த முயலுக்கு அதன் கையுறைகளையும் விசிறியையும் எடுத்துச் செல்ல வேண்டிய பணி அவளுக்கு. அவை அவளுக்கு எட்டாத உயரங்களில் உள்ளன. அதை எடுக்க வேண்டும் எனில் அவள் வளர வேண்டும். அவள் எதையோ தின்கிறாள். உடனே அந்த அறையையே நிரப்பிவிடும் அளவு பெரிதாகி விடுகிறாள்! பொருட்களை எடுத்துக் கொள்கிறாள். இப்போது எப்படி வெளியேறுவது? இன்னொரு பொருளை உண்கிறாள். சட்டென்று சின்னதாகி வெளியே வந்துவிடுகிறாள். சில நேரங்களில் நாம் இப்படி நம் வேலைக்கு மிகப் பெரியவர்களாகவும் – ‘இதையெல்லாம் நான் செய்யவேண்டியிருக்கு, என்ன சொல்ல?’ – சில நேரங்களில் நம்மை நாமே மிகவும் பலகீனமாகவும் சின்னவர்களாகவும் – ’இதெல்லாம் நம்மால நடக்குற காரியமா சொல்லுங்க? உசரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுங்களா?’ – உணர்கிறோம் அல்லவா? (இது மிகவும் அற்புதமான உளவியல் விஷயம். இதன் உள்ளர்த்தமாக எனக்குத் தோன்றுவது என்னவெனில் நம் வாழ்வில் சில நேரங்களில் குழந்தைகளின் உளவியல் நமக்குத் தேவைப்படுகிறது. பெரியவர்களின் உளவியலால் தீர்க்க முடியாத விஷயங்கள் அவை. சில நேரங்களில் முதிர்ந்த உளவியல் தேவைப் படுகிறது. திறமை என்னவெனில், இவ்விரு நிலைகளுக்கு நம் உளவியலை நம்மால் மாற்றத் தெரிய வேண்டும் என்பதுதான்த்ட். வேறு விதமாகச் சொல்வதெனில், வாழ்வின் சில கட்டங்களில் நமக்கு அறிவியல் பார்வையும் சில கட்டங்களில் கலையியல் பார்வையும் தேவைப்படும். காதலியுடன் படகுச் சவாரி செய்யும் தருணத்தில் கவித்துவ மனநிலை இருந்தால் அனுபவம் சோபிக்கும். அங்கு போய் அக்கவுண்ட்ஸ் ச்சார்ட் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது. வீட்டின் மாத பட்ஜெட்டைத் திட்டமிடும்போது கவித்துவச் சிந்தனைகள் உதவாது. சில நேரங்களில் நமக்கு தர்க்க நோக்கு தேவைப்படும், சில நேரங்களில் அதர்க்க நோக்கு தேவைப்படும். இரண்டையுமே கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.)

இப்போது அவள் காளான்மீது அமர்ந்திருக்கும் கம்பளிப்பூச்சி ஒன்றைக் காண்கிறாள். “நீ யார்?” என்று அது அவளை வினவுகிறது. அவள் சொல்கிறாள், “இன்று காலை எழுந்த போதாவது நான் யார் என்பதை அறிந்திருந்தேன். ஆனால் இப்போது நான் பல முறை வேறு வேறு ஆளாக மாறிவிட்டேன் என்று நினைக்கிறேன்.” இதைச் சொல்லிவிட்டு அவள் அந்த காளானை நுள்ளி உண்கிறாள். உடனே அவளின் அளவு மீண்டும் மாறி ஓர் இலகுவான நிலையை அடைகிறது. அதன் பின் தான் ஒரு குறிப்பிட்ட அளவானவள் என்னும் பிரக்ஞயே அவளில் இல்லாமலாகிறது.

அவளின் பயணங்களில் அவள் ஒரு பூனையைச் சந்திக்கிறாள். அது மந்திர சக்திகள் உள்ள பூனை. அதன் உதவியால் தான் மீண்டும் வீட்டுக்குத் திரும்பிவிடலாம் என்று அவள் நம்புகிறாள். ஆனால் அந்தப் பூனை செய்யும் மந்திர ஜாலங்கள் எதுவும் அவளுக்குச் சாதகமாக அமையவில்லை. நம்முள் அற்புதமான மனோ சக்திகள் இருப்பது உண்மைதான் என்றாலும் அவை கட்டுப்பாட்டையும் வழிகாட்டுதலையும் வேண்டி நிற்கின்றன. நம்முள் குழப்ப நிலை உள்ளவரை நம் அந்தரங்க ஆற்றல்கள் சரியாக வேலை செய்யாது என்பதை அந்தப் பூனை உணர்த்துகிறது.

ஒருமுறை அவள் ஒரு முயலின் வீட்டில் விருந்துக்கு வருகிறாள். அந்த முயல் நீளமான தொப்பி அணிந்திருக்கிறது. அங்கே மேஜையைச் சுற்றிலும் பல காலி நாற்காலிகள் இருக்கின்றன. ஆனால் அந்த முயல் அவளைப் பார்த்து, ‘உனக்கு இங்கே இடம் காலியாக இல்லை பெண்ணே!’ என்று கூறுகிறது. அந்தத் தொப்பி கண்காணிக்கப்படாத அறிவுக்குக் குறியீடு. அது நம்மை வழிகெடுக்கிறது, திசை திருப்புகிறது. ’ஏற்கனவே பல பேர் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள், நான் இப்பச் செயதால் என்ன ஆகப்போகிறது?’ என்பது போல் நொட்டைச் சொல் சொல்லிக்கொண்டு நம் கடமையில் இருந்து நாம் விலகும்படிச் செய்கிறது. ஆனால், எத்தனைப் பேர் செய்துகொண்டிருந்தாலும் நம் பணியை நாம் செய்வதற்கான இடம் இப்பிரபஞ்சத்தில் எப்போதும் உண்டு!

இறுதியாக, ஆலிஸ் அந்த அற்புத உலகின் அரசியுடன் சீட்டு ஆடுகிறாள். இந்த அரசி நம்முடைய ego - தன்முனைப்பைக் குறிப்பவள். ஈகோ என்றால் தற்பெருமை மட்டுமல்ல. நம்முடைய குறுகிய மனநிலையும்கூட. வெற்றி பெற விடாமல் நம்முள்ளிருந்தே நம்மைக் கட்டிப் போடும் மனப்பான்மை. ஒவ்வொரு முறை ஆலிஸ் பாசிட்டிவாக விளையாடும் போதும் அந்த ராணி வெறி வந்தவளைப் போல் “அவளின் தலையை வெட்டுங்கள்” என்று ஆணையிடுகிறாள். உடனே ஆலிஸ் நைச்சியமாகப் பேசி அந்த அரசியின் கோபத்தை ஆறப்போடுகிறாள். மீண்டும் சீட்டாட்டம். கடைசியில் அரசி பிடிவாதமாக ஆலிஸுக்கு மரண தண்டனையை விதித்துவிட்ட தருணத்தில் வாழ்வே இருண்டு போய்விட்டதாக ஆலிஸுக்குத் தெரியும் நிலையில் சட்டென்று அவள் தன் ஆரம்ப அளவுக்குப் பெரிதாகிறாள். நம்முடைய அனுபவங்களின் பலனாக நம் ஆளுமை கொள்ளும் வளர்ச்சி நிலை அது. நம்முடைய அகக்கட்டமைப்பில் குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறந்துவிடுகிறது. சத்திய தரிசனம் கிடைக்கிறது. ஆலிஸ் அந்த அரசியை நோக்கி ‘நீ வெறும் சீட்டுக் குவியல்தான், போ’ என்று கத்த, அவள் சீட்டுக்களாகச் சிதறிப்போகிறாள். தன்முனைப்பின் அழிவு என்று இதனைச் சொல்லலாம். ஆலிஸ் மீண்டும் தன்னை நினைவுலகில் கண்டுகொள்கிறாள்.

இந்தக் கதை நம் ஆன்மிக வளர்ச்சியின் பாதையை மிக விரிவாக எடுத்துரைக்கிறது. யாத்ரிகனின் முன்னேற்றத்தில் (Pilgrim’s Progress) வரும் நடுப்பகுதியை இது விளக்குகிறது. தெய்விக அறிவு நம்மில் விழிப்பதற்கான முன்னேற்பாடாக அகத்தைத் தூய்மை செயவதன் விளக்கம் அது. அகக் குழப்பத்தை நீக்குவது அதன் ஆரம்ப நிலை. எனவேதான் ‘உன்னை அறிவாய்’ என்று நமக்குச் சொல்லப்படுகிறது. இதுவரை நாம் பார்த்த கதை அகப் போராட்டத்தைச் சொன்னது. ஆனால் அதன் நுட்பங்களுக்குள் செல்லவில்லை.”

உஃப். குழந்தைகளுக்கான கதைகள் இப்படியெல்லாம் உள்விவகாரங்கள் உள்ளவை என்பதை அறியும்போது சற்று பயமாகத்தான் இருக்கிறது. ஒன்று தோன்றுகிறது, குழந்தைகள் தங்களுக்கென்று தாங்களே கதைகளை எழுதிக்கொள்ள வேண்டியதுதான். பெரியவர்கள் திருந்த மாட்டார்கள் என்று தோன்றுகிறது!

சமீபத்தில் என் மகன் ஒரு கதை எழுத ஆரம்பித்தான். கீபோர்டின் பெயரையே தன் கதையின் நாயகிக்குச் சூட்டியிருந்தான். “Once there was a girl named Qwerty.”

ஆமாம், அது ஏன் girl என்று எழுதுகிறான்?
அடப் பெரியவங்களா, திருந்த மாட்டீங்கய்யா!

Sunday, November 25, 2012

ச்சோட்டா பீமின் பிரதியாக்கம்

’படிக்கவே மாட்டேங்குறான். எப்பப் பாத்தாலும் சோட்டா பீம் சோட்டா பீம்னு அதுதான் மண்டையில இருக்கு. கிறுக்குப் பிடிச்சாப்ல நாள் பூராவும் அதையே பாத்துக்கிட்டிருக்கான்’
மேற்படி வசனம் என் வீட்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பது நமக்குத் தெரிந்ததுதான். கிட்டத்தட்ட தமிழ் கூறு நல்லுலகின் அனைத்து இல்லத்திலும் இதுதான் ட்ரெண்ட் ந்யூஸ்.


இன்றைய குழந்தைகளின் ஆதர்ச நாயகன் ச்சோட்டா பீம் என்னும் கார்டூன் பாத்திரம். இதுபோல் ஒவ்வொரு மூன்றாண்டுக்கு ஒருமுறை ஏதாவது ஓர் அலை குழந்தைகளின் பொழுபொக்கு உலகிலும் அடிக்கிறது. இதற்கு முன் டோரா புஜி அலை வீசிற்று. எங்கும் எதிலும் டோரா என்னும் சிறுமியும் அவள் வளர்க்கும் புஜி என்னும் குரங்கும் தென்பட்டன. (புஜியை எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் திருமுகம் எனக்குப் பிடிக்காத ஒரு பேராசிரியரின் முகத்தை ஒத்திருந்த போதும். இந்த உளவியலுக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை!)  பென்சில் டப்பா, வாட்டர் பாட்டில், டிஃபன் பாக்ஸ், பனியன், நிக்கர், ஃப்ராக், தொப்பி, ஸ்கூல் பேக், லேபில்கள் என்று எதில் பார்த்தாலும் டோரா புஜி. பல்லவன் ரயிலில் பயணம் செய்யும் போது பத்து நிமிடத்திற்கு ஒருமுறை காமிக்ஸ் புக் விற்பவர்கள் டோரா புஜி டோரா புஜி என்று மந்திரம் ஜெபித்துக் கொண்டே இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தார்கள்.

குழந்தைகள் உலகம் முதலாளிகளுக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று. அதிக லாபகரமான உலகம் அது! வீட்டில் ஏற்கனவே ஐந்தாறு வாட்டர் பாடில்கள் இருந்தாலும் டோரா புஜியோ ஷின் ச்சானோ போக்கேமானோ ச்சோட்டா பீமோ படம் போட்ட வாட்டர் பாட்டிலைப் பார்த்துவிட்டு அதை வாங்கித் தந்தால்தான் ஆச்சு என்று வாண்டுகள் தரையில் கிடந்து புரண்டு அழிச்சாட்டியம் பண்ணிக் குடும்ப மானத்தை வாங்கும்போது பெற்றோர்கள் வேறு வழியின்றி ஐந்து ரூபாய் பெறாத அந்த டப்பாவை ஐம்பது ரூபாய்க்கு வாங்கத்தானே செய்வார்கள்? (விதிவிலக்கான பிள்ளைகளும் உண்டு. பெற்றோர்களே வாங்கித் தருகிறேன் என்று சொன்னாலும் ஒரு பட்ஜெட் அறிக்கையே கொடுத்து வேண்டாம் என்று சொல்லிவிடும் சாதுரியம் கொண்ட பிள்ளைகள்!)

என் வாரிசு ச்சோட்டா பீம் மீது மாலாகியுள்ளான் என்பதறிந்து அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்று அடியேனும் சில வாரங்கள் தொடர்ந்து அதை அவதானிக்கலானேன். (அது சரி, ஐயா இலக்கியவாதி அல்லவா? அதிலும் கொஞ்சம் ஸ்பிரிச்சுவல் பெண்ட் உள்ள ஆளாச்சே. ’பார்த்தேன்’ என்னும் சாதாரண வார்த்தையெல்லாம் உமக்கு இழுக்கு ஐயா. எதுவாக இருந்தாலும் நீங்கள் தரிசிப்பீர்கள் அல்லது அவதானிப்பீர்கள்! –உள்குத்து உலகநாதன்).

ச்சோட்டா பீமை எனக்கும் பிடித்துப் போனது! மகனுடன் நானும் சேர்ந்து வாயை அங்காந்து இருப்பதைப் பார்த்து சகதர்மினி தலையில் அடித்துக் கொண்டாள். ‘அவனைத் திருத்துங்கன்னா நீங்களும் சேந்துக்கிட்டு (கெட்டுப் போறீங்க)’. நானோ ச்சோட்டா பீம் ப்ரோக்ராமின் கதை வசன கர்த்தாக்களின் படைப்பாக்க உளவியலை ஆராய்ந்து கொண்டிருந்தேன்.

ச்சோட்டா பீம் என்பது பஞ்ச பாண்டவர்களில் வரும் பீமனின் பால்ய காலச் சித்திரமாக இருக்க வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் இதில் பஞ்ச பாண்டவர்களோ குந்தி தேவியோ இல்லை. ச்சோட்டா பீம் தனியாள். பீமன் என்றால் அவன்தான் பாண்டவர்கள் கௌரவர்கள் அனைவரிலும் அஜானுபாகு. ஆனால் ச்சோட்டா பீம் நார்மலான உடலமைப்புள்ள சிறுவன்தான். அவனுடைய நண்பனான காலியாதான் பீமசேனன் மாதிரி இருக்கிறான். மகாபாரத பீமன் என்றால் அவன் அரண்மனையில் இருக்க வேண்டும். ஆனால் ச்சோட்டா பீம் ‘டோலக்பூர்’ என்னும் ராஜ்யத்தில் ஒரு (அ)சாதாரண பிரஜை. ஆக, பீம் என்பது ஒரு பெயர், அவ்வளவுதான். மகாபாரதத்துடன் இதற்கு ஒரேயொரு தொடர்பு என்றால் அவ்வப்போது கிருஷ்ணன் (சிறுவனாக) விடுமுறையில் வந்து பீமுடன் சாகசங்களில் கலந்துகொண்டு போகிறான் என்பதைத்தான் சொல்ல முடியும்.

சமீபத்தில் ஒரு ரியல் எஸ்டேட் போஸ்டரைக் கண்டேன். (ஐயா உள்குத்து உலகநாதன் அவர்களே! கண்டேன் என்றுதான் சொல்கிறேன் என்பதைக் கவனியுங்கள். தரிசிக்கவெல்லாம் இல்லை). ஒரு ப்ளாட் வாங்கும் பட்சத்தில், மூவாயிரம் மரங்களுடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும் வனச் சூழலை வாழ்க்கை முழுவதும் ’இலவசமாக’ நாம் அனுபவிக்கலாம் என்று சொன்னது அந்தச் சுவரொட்டி. பாரதிக்கே வந்த ஆசை அல்லவா? காணி நிலத்தில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களுடன் கூடிய தனி வீடு, மொட்டை மாடியில் நிலா வெளிச்சம் விழ, கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் விழும் சூழலில் – பாட்டுக் கலந்திடப் பக்கத்திலே ஒரு பத்தினிப் பெண் (ஆமாம், ஒன்றுக்கு மேற்பட்ட பத்தினிகள் இருந்தால் அங்கே சக்களத்திச் சண்டைதானே நடக்கும்? பாட்டா படிக்க முடியும்? பாரதி இஸ் வெரி ப்ராக்டிக்கல்!) மேலும் மொட்டை மாடியிலேயே கூட்டுக் களி! எனில், பக்கத்து வீட்டு மொட்டை மாடியிலிருந்து யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் இல்லாதபடிக்கான தனி வீடு. பாரதி கேட்பது சரியான ஹாட் ப்ராப்பர்ட்டி ஐயா! சென்னையில் இதுமாதிரி எனில் இப்போது பல கோடிகள் தேறும். பாரதி இந்த வசதிகளைப் பராசக்தியிடம் கேட்டது பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திடும் பணியை செய்வதற்காக. அகாதமிகளும் பீடங்களும் வழங்கும் சான்றிதழும் மெடலும் தொகையும் வெறும் பிஸாத்து.  வில்லாஸ் என்று சொல்கிறார்களே – கொரியன் க்ராஸ் lawn கொண்ட தோட்டத்தின் நடுவே சகல வசதிகளும் கொண்ட வீடு – அப்படியொன்றை இலக்கிய கர்த்தாக்களுக்குத் தந்தால் என்ன என்று ஒருகணம் தோன்றிற்று. பாரதி கேட்டது போல் பராசக்தியிடமே கேட்டுக்கொள் என்று சொல்லி விடுவார்கள். கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையின் புறப்பகுதியில் இயற்கைச் சூழலில் ஓரகடம் என்னும் அடுக்குமாடிப் பகுதி உருவாக்கப்பட்டு வீடுகள் விற்பனைக்கு என்று மாதவனை வைத்து விளம்பரம் செய்தார்கள். (மிடில் க்ளாஸ் மாதவன் அல்ல.) இன்றைக்கு ரியல் எஸ்டேட்டின் டிரெண்ட் என்னவெனில் சுவையும் தூய்மையும் கொண்ட தண்ணீர் வசதி, தூய காற்றும் பசுமையும் கொண்ட சுற்றுப்புறச் சூழல் என்னும் இரண்டு விஷயங்கள்தான் டாப் கவர்ச்சி! இதற்கான உத்தரவாதம்தான் கஸ்டமர்களைக் கவர்ந்திழுக்கும் glow worm நெளியும் தூண்டில் முள்!

ஏன், உங்களுக்கு அப்படியொரு ஆசை இல்லையா? என்று கேட்காதீர்கள். இது மாதிரி சின்ன சின்ன ஆசையெல்லாம் கிடையாது. எனக்கு இருப்பதெல்லாம் பேராசைகள். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமாக அட்லீஸ்ட் பாரதி கேட்டது போன்ற ஒரு வீடு ப்ராப்தமாக வேண்டும். (Interlude #1: Mu.Metha’s poetry in Bharathiraja’s voice – “அவன் பட்டுவேட்டி பற்றிய ஒரு கனவில் இருந்தபோது கட்டியிருந்த வேட்டியும் களவாடப் பட்டது.” Interlude #2: இந்த அடுக்கு மாடி வீடுகளைக் கண்டாலே எரிச்சல் எரிச்சலாக வருகிறது yaar. அதில் இருப்பவைகள் வீடுகள் அல்ல, செல்கள் என்று தோன்றுகிறது. பின் வரும் உரையாடலை கவனிக்கவும்:
What’s your address?
25-C, 11th floor, Golden Eagle Nest, Pannikkuppam.
O.K, Your cell number please...
25-C.
அவ்வப்போது இப்படி அடைப்புக் குறிகளுக்குள் அடியேன் செய்யும் உபத்திரவங்களை தயை கூர்ந்து உபப்பிரதியாக எடுத்துக் கொள்ளவும்.)

ச்சோட்டா பீம் ரிட்டன்ஸ். சிக்மண்ட் ஃப்ராய்டு, கார்ல் குஸ்தாவ் யுங் ஆகிய சைக்கோ மேதைகள் மனிதனின் மனம் தனியாக இல்லை என்னும் கருத்தை முன்வைத்தார்கள். கூட்டு நினைவு மனம் (collective consciousness) கூட்டு உபநினைவு மனம் (collective subconscoiousness) என்றெல்லாம் பேசினார்கள். அதன்படிக்குக் கால காலமாக ஆசைகள் நிராசைகள் எல்லாம் நம் அனைவரின் மன அடுக்குகளில் சேகரமாகிக் கொண்டே வருகின்றன. நம் மனங்களின் பின்னலான ஒரு நெட்வொர்க்கில் அவை செயல்படவும் செய்கின்றன. ஒரு போக்கான ஃபேஷன் அலை, ரசனை, லட்சியம் எல்லாம் உருவாவது இப்படித்தான் என்று அவர்களின் உளவியல் கோட்பாடு கூறுகிறது.

ச்சோட்டா பீமின் கதைக் களத்தைப் பார்க்கும் போது என்னை முதலில் ஈர்த்த விஷயம் அவன் வாழும் டோலக்பூர்தான். மக்கள் நெரிசல் இல்லாத கிராமம் அது. குடிசைகள், வயல்கள், தோப்புக்கள், சுற்றிலும் காடுகள். ஊர் நடுவே ஒரு பஞ்சாயத்து மரம். அது ஓர் அமைதியான சிற்றூர். ஆனால் அதுதான் அவர்கள் நாட்டின் தலைநகர்! சொல்லப்போனால் அந்த டோலக்பூர் ஒரு குறுநில மன்னன் ஆளும் நாடு! அரண்மனை இருப்பது அந்த ஊரில் உள்ள ஒரு மலை மீது. இன்றைய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வாக்குறுதியளிக்கும் ஹாட் ப்ராப்பர்ட்டி களம்தான் டோலக்பூர் – ஷாப்பிங் மால், மல்டிப்ளெக்ஸ், ஸ்கூல், காலேஜ், ஹெல்த் செண்ட்டர், நெட்காஃபே போன்ற நவீன வசிதகளை உருவாக்கிக் கொண்டால். அமைதியான தூய்மையான பசுமையான வாழ்விடம் என்று நம் அனைவரின் மன வலைப் பின்னலில் கிடக்கும் ஆசையின், மூதாதையர்களின் இயற்கை சார்ந்த கிராமிய வாழ்வை இழந்து விட்ட ஏக்கத்தின் வெளிப்பாடுதான் ச்சோட்டா பீமிடம் நமக்குத் தோன்றும் ஈர்ப்பு. நம் பிள்ளைகளுக்குத் தெரியாமலே அவர்களின் கூட்டு உபநினைவு மனம் அதற்கு ஆட்படுகிறது எனலாம்.

ச்சோட்டா பீம் கதையில் நான் அவதானித்த இன்னொரு அம்சம் அது நம் காலப் பிரக்ஞையை அசைத்துப் பார்க்கிறது என்பது. ஒரு குறிப்பிட்டக் காலத்தில் நிகழ்வது என்னும் தன்மையை அது மீறுகிறது. பல்வேறு காலகட்டங்கள் ஒரு புள்ளியில் குவிவது போன்ற உணர்வை அது ஏற்படுத்துகிறது. இதைச் சாத்தியமாக்க அது பல்வேறு காலகட்டங்களின் அடையாளங்களைத் தன் கதைக்குள் கொண்டு வருகிறது. உதாரணமாக, டோலக்பூரில் திடீரென்று ஒரு ராட்சதக் கூடாரம் தோன்றுகிறது. ஊர் மக்கள் அதற்குள் என்ன இருக்கிறது என்று பரபரப்பாகப் பேசிக் கொள்கிறார்கள். ஒரே மர்மமாக இருக்கிறது. அதை அறிவதற்காக காலியா முயற்சி செய்து நொக்குப் படுகிறான். நையாண்டியை கவனியுங்கள்: அணு உலை சைஸில் இருக்கும் அந்தக் கூடாரத்திற்குள் என்னதான் நடக்கிறது என்பது டோலக்பூர் அரசருக்கே தெரியாது! (எல்லாக் கதையிலுமே இப்படித்தான். நாட்டுக்கே வரும் ஆபத்து பற்றி அரசருக்கு ஒன்றுமே தெரியாது. அத்தகைய சூழ்நிலையில், ஆபத்தைக் கண்டுபிடித்து பகையை வென்று நாட்டைக் காக்கும் பொறுப்பை அவர் ச்சோட்டா பீமிடம் ஒப்படைப்பார். விஜயகாந்துக்கும் அர்ஜுனுக்கும் சொல்லப்படும் புரட்சிக் கலைஞர், ஆக்‌ஷன் கிங் ஆகிய பட்டங்களை ச்சோட்டா பீமுக்குக் கொடுக்கலாம். ஹி ரியல்லி டிசர்வ்ஸ்.) கடைசியில் பார்த்தால் அந்தக் கூடாரத்திற்குள் அதுநாள்வரை ஒரு ராட்சத ரோலர் கோஸ்டர் கட்டப்பட்டு வந்திருக்கிறது. இன்றைய தீம்பார்க் கான்செப்ட். அல்லது டோலக்பூரில் அன்னிய முதலீடு என்னும் கோணத்திலும் இதைப் பார்க்கலாம். சிஅல் நாட்கள் கழித்து மக்கள் அதன் மீதான ஈர்ப்பை இழக்கவும் வியாபாரம் தொய்கிறது. அதன் வேகத்தை அநியாயத்துக்கு அதிகரித்து மக்களுக்கு ஒரு த்ரில்லை ஏற்படுத்த முதலாளி முடிவு செய்கிறான். அழைப்பின் பேரில் ரோலர் கோஸ்டரில் பயணம் செய்து மீண்டும் தொடங்கி வைக்க அரசரே வருகிறார். அதாவது, அன்னிய முதலீட்டுக்கு அரசின் ஆதரவு. “இது நாட்டிற்கு நன்மை பயக்கும் விஷயம்தானே மக்களே!” ஆனால் அது ஓடும் அசுர வேகத்தில் நட்டுகள் பிடுங்கிக் கொண்டு தெறிக்கின்றன. அதை இயக்குபவனால் கட்டுப்படுத்த முடியாமல் போக, அரசரையும் நண்பர்களையும் காப்பாற்றும் கடமை உணர்வு பீறிட ச்சோட்டா பீம் அதன் மீது பாய்ந்து பின்னால் இருந்து இழுத்து நிறுத்துகிறான். ச்சோட்டா பீம் கதையின் களம் திரேதா யுகமோ துவாபர யுகமோ போல் இருந்தாலும் அதில் நீங்கள் அமெரிக்க பாணியிலான ரோலர் கோஸ்டரைப் பார்க்கிறீர்கள்! இதைத்தான் கால போதத்தில் ஓர் அசைவு என்று குறிப்பிட்டேன்.

இன்னொரு எபிஸோட். ச்சோட்டா பீமின் தோழி ஒருத்தி. பெயர் ச்சுட்கி. அவளின் அம்மா லட்டு செய்து விற்பவர். அந்தக் காலகட்டத்தில் ஸ்வீட் ஸ்டால் என்றால் லட்டு என்னும் ஒரேயொரு ஐட்டம் மட்டும் விற்கப்படும் ச்சுட்கியின் வீடுதான். அங்கே ஒருநாள் இரண்டு நபர்கள் வருகிறார்கள். தலையில் பாகை, சுருளும் தாடி, போர்வாள் எல்லாம் இருக்கிறது. அரேபியாவில் இருந்து வந்தவர்கள் போல் தெரிகிறது. ஒரு லட்டுவை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு ‘ஆகா அருமையான ருசி’ என்கிறார்கள். ச்சுட்கியின் அம்மா சந்தோசப்பட்டு அவர்கள் யாரென விசாரிக்கிறாள். அவர்கள் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதை தெரியுமா என்று அவளைக் கேட்கிறார்கள். அப்போது அவர்கள் பேசிக்கொள்வதைப் பாருங்கள்:
“அடடே, நீங்கள் அலிபாபாவின் ஆட்களா?” (இதைத்தான் மேனேஜ்மண்ட் ஸ்டடீசில் positive thinking என்கிறார்கள். உங்களைக் கொத்த வரும் பாம்பு நல்ல பாம்பாகத்தான் இருக்கும், நம்புங்கள்!)
“இல்லை, நாங்கள் அந்த நாற்பது திருடர்களின் வாரிசுகள்!”
இதைக் கேட்டதும் ச்சுட்கியின் தாய் திகிலில் வெளிறிப் போகிறாள். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், தினமும் பத்துக் கூடை லட்டுக்களைக் கொண்டு வந்து ஊருக்கு வெளியே உள்ள கோயிலின் வாசலில் வைக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவளைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிச் செல்கிறார்கள் அவர்கள்.

அவளும் விதியே என்று பத்துக் கூடை லட்டுக்களை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு கஷ்டப்பட்டுத் தள்ளுகிறாள். அதைப் பார்க்கும் காலியா அவளுக்குத் தான் உதவுவதாகச் சொல்லி வண்டியை அவன் தள்ளிக்கொண்டு போய் கோவிலின் வாசலில் வைக்கிறான். “கண்ணா லட்டு தின்ன ஆசையா?” என்னும் மன அரிப்பு மேலிட ஒரு கூடையை லவட்டிக் கொண்டு வந்து காட்டில் தன் சிஷ்யப் பொடியன்களான டோலு போலுவுடன் அமர்ந்து சாப்பிடுகிறான்.

அப்போது அங்கே வரும் திருடர்கள் அந்த வண்டியை எடுத்துக் கொண்டு போகிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று Kaalia & Co. மறைந்திருந்து பார்க்கிறார்கள். அந்தத் திருடர்கள் மலையருவியின் முன்னால் நின்று, ”அண்டா கா கஸம் திறந்திடு சீசேம்” என்று கூவ அருவி உடனே மறைந்து ”உத்தரவு எஜமானே” என்ற குரலுடன் பாறைகள் கதவுகளாகத் திறக்கின்றன. உள்ளே ஒரு குகை. அதற்குள் அவர்கள் போய் நின்றுகொண்டு “அண்டா கா கஸம் மூடிடு சீசேம்” என்றதும் குகை மூடிக்கொள்ள மீண்டும் அருவி கொட்டுகிறது. இங்கே அலிபாபாவின் அண்ணன் கேரக்டர் இந்தக் கதையின் பிரதியில் காலியாவின் மீது நிகழ்த்தப்படுகிறது. “கண்ணா, மீண்டும் லட்டு தின்ன ஆசையா?” அலிபாபாவின் காலத்திலிருந்து திருடர்கள் பரம்பரை பரம்பரையாகச் சேர்த்து/ சேமித்து வைத்திருக்கும் (ஒரு பங்களா கூட கட்டாம இப்படிக் குகைல கொசுக்கடியில் லோல் பட்டுக்கிட்டு என்ன எழவுக்கு இந்தச் சேமிப்பு? என்று வினவுகிறார் ஆண்பாவம் கொள்ளங்குடிக் கருப்பாயி) பொக்கிஷ்ங்களை அள்ளி வர ஆசைப்பட்டுக் காலியா அதே மந்திரத்தைக் கூறிக் குகைக்குள் போய் திருடர்களிடம் மாட்டிக் கொள்கிறான். கூடை ஒன்று குறைந்ததால் கடுப்பாகிப் போன திருடர்கள் ச்சுட்கியின் அம்மாவையும் கடத்திச் செல்கிறார்கள்.

நடந்ததை எல்லாம் அறிந்த ச்சோட்டா பீமுக்குக் கடமை உணர்வு கண்டமேனிக்கு எகிற ச்சுட்கி, டோலு-போலு, ராஜு மற்றுக் ஜக்குக் குரங்கு ஆகியோருடன் அந்தக் குகைக்குப் போகிறான். டோலு அந்த மந்திரத்தைச் சொல்லிக் குகையைத் திறக்கிறான். உள்ளே போய் பார்த்தால் அங்கே தடியன் காலியா திருடர் தலைவனுக்குக் கால் அமுக்கிக் கொண்டிருக்கிறான். “நமக்கொரு அடிமை சிக்கிட்டான்யா சிக்கிட்டான்” என்று அவனை அப்படி வேலை வாங்குகிறார்கள். ச்சுட்கியின் அம்மா லட்டு சுட்டுக்கொண்டிருக்கிறாள். (அடக் கருமமே! லட்டுவை மட்டுமே உண்டு வாழும் பிராணிகளா அவர்கள்? அவர்களுக்கெல்லாம் ஷுகரே வராதா? சுகர் முனிவரிடம் அப்படியேதும் வரம் வாங்கியவர்களா?. அது சரி, நாற்பது திருடர்களின் வாரிசுகள் என்று சொல்லிக்கொண்டு இது என்ன இரண்டு பேர்தான் இருக்கிறார்கள்? நோட் தி பாய்ண்ட்: திருடர்களுக்கு சந்தான விருத்தி நஹி. அல்லது பிராக்டிகலான ரீசன் என்னவெனில் குகையில் வாழும் திருடர்களுக்குப் பெண்டாட்டிகள் அமைவது சாத்தியமில்லை. மேலும் அவர்களுக்கு மாசிலா உண்மைக் காதலெல்லாம் வராது. இல்லையெனில் பானுமதியைக் கடத்திக்கொண்டு போக பி.எஸ்.வீரப்பா ஏன் அவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? நாற்பது திருடர்கள் அவர்களுக்குள்ளேயே ஸ்த்ரீ பார்ட் போட்டுக் கொள்வார்கள் போலும்.)

ச்சோட்டா பீம் அந்தத் திருடர்களுடன் சண்டை போட்டு அவர்களைக் கொன்றொழித்துத் தன் தோழியின் தாயையும் நண்பனையும் மீட்கிறான். அவர்கள் இனிதே வீடு திரும்புகிறார்கள். குகையை விட்டு வெளியே வரும்போது அவன் ஒரு காரியம் செய்கிறான். மிகவும் முக்கியமானது அது. “குகையே! உன் மந்திரத்தைப் பலபேரும் அறிந்துவிட்டார்கள். அதனால் பல பிரச்சனைகள் உண்டாகும். எனவே மந்திரத்தை நான் மாற்றி விடுகிறேன். இனிமேல் இந்த மந்திரத்தைச் சொன்னால்தான் நீ திறக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு அதன் காதில் ஏதோ கிசுகிசுக்கிறான். இனி யாராவது போய் அந்தக் குகை முன்னால் நின்றுகொண்டு “அண்டா கா கஸம் திறந்திடு சீசேம்” என்று சொன்னால் ‘wrong password’ என்ற கமெண்ட்தான் வரும். கதவு திறக்காது. புதிய கடவு மந்திரத்தை ச்சோட்டா பீம் மட்டுமே அறிவான். எத்தனை லாவகமாகக் குகையுடன் அத்தனைப் பொக்கிஷங்களையும் சுருட்டிவிட்டான் பாருங்கள்! இவ்வாறு ஒரு கதையின் பிரதியில் இன்னொரு கதையின் பிரதியைத் திருத்தி அமைக்கும் ‘inter-textuality’-ஐ நோக்க ச்சோட்டா பீம் கதையைக் குழந்தைகளுக்கான பின்–நவீனத்துவப் பிரதி என்று சொல்லத் தோன்றுகிறது.

எல்லாக் கதைகளிலும் இப்படி ஏதாவது அரிய சாகசம் நிகழ்த்திய பின் ச்சோட்டா பீம் அதற்காகப் பெறும் சன்மானம் என்ன தெரியுமா? அவனாகக் கேட்பதெல்லாம் ச்சுட்கியின் அம்மாவிடமிருந்து லட்டுக்களை மட்டும்தான்! “அம்மா! ஒங்க கையால ரெந்து லத்து தாங்க” என்று சொல்லும் ச்சோட்டா பீமை ’மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரின் கலை வாரிசு எனப் பகரலாம்! (’அம்புக்கு நான் அதிமை –தமிழ்ப் பம்புக்கு நான் அதிமை’ என்னும் அடக்கம் கருதி.)
இதுபோல் ஒவ்வொரு எபிஸோடிலும் சுவாரஸ்யமான கதைகள். ஆமிர் கான் நடித்த லகான் படம் தெரியும்தானே? பிரிட்டிஷ் காரர்களை விரட்ட லோக்கல் ஃபெல்லோசுக்குப் பயிற்சி அளித்து வெள்ளையர்களுடன் கிரிக்கட் விளையாடி ஜெயிப்பார். அந்தக் கதையையும் ‘Independence day’ கதையையும் ஒரு செம்புக்குள் போட்டுக் கலக்கிக் கமுத்தினால் வெளிவந்து விழுவது ச்சோட்டா பீமின் கதை. படையெடுத்து வந்த ஏலியன்ஸுகளை விரட்டுவதற்காக டீல் போட்டு ச்சோட்டா பீம் தலைமையிலான டோலக்பூர் அணி ஏலியன்ஸ் அணியுடன் மோதுகிறது!

இன்னொரு கதையில் சீனாவிலிருந்து வந்து வம்பிழுக்கும் குங்ஃபூ வீரனை ச்சோட்டா பீம் வீழ்த்துகிறார். ச்சக் நாரிஸுடன் ஜெய்சங்கர் கராத்தே போட்டு ஜெயிப்பதாகத் தமிழில் ஒரு படம் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அப்படியொரு எஃப்பெக்டைக் கொடுத்தது.

இன்னொரு கதையில் வில்லனுடன் சேர்ந்து தங்கப் புதையலைத் தேடிக்கொண்டு பாலைவனமெங்கும் பயணம் செய்கிறது ச்சோட்டா பீம் குழு. Indiana Jones படங்கள் மற்றும் மெக்கனாஸ் கோல்ட் ஆகியவற்றின் பிரதிகளின் மறு ஆக்கம்.

பகடியும் நவீன / பின் நவீன உத்திகளும் கலந்து இப்படியெல்லாம் ரகளையுடன் உருவாக்கப்படும் உழைப்புக்கு நாம் கொஞ்சமாவது மதிப்புக் காட்ட வேண்டாமா? ச்சோட்டா பீம் பார்க்கவே கூடாது என்று நான் எப்படி என் பிள்ளைகளிடம் சொல்வது?

Saturday, November 24, 2012

ஆல்ஃபா ஆசான்
நவம்பர் 20-ம் தேதி நாகூர் ரூமியிடமிருந்து இப்படி ஒரு மின்னஞ்சல் வந்தது:

அன்பு ரமீஸ்

கட்டுரையை ஒரு பத்து நாட்களுக்கு முன் எழுதி பாதி முடித்தேன்.

எதிர்பாராத விதமாக, கடந்த 14ம் தேதி அன்று, எனக்கு தீவிரமான மாரடைப்பு ஏற்பட்டு, சென்னையில் ஆன் ஜியோக்ரா செய்து, ஆன் ஜியோப்ளாஸ்டி செய்து நேற்றுத்தான் சென்னை வீடு திரும்பினேன்.

இப்போது கட்டுரையை முடிந்த வரை முழுமைப்படுத்தி அனுப்புகிறேன்.

அலைபேசியில் கொஞ்ச நாளைக்குப் பேசமாட்டேன். என் மகள் எடுப்பாள். விபரம்சொல்லுவாள்.

அன்புடன்
ரூமி

படித்துவிட்டு ஒரு நிமிடம் சிந்தனையே ஓடவில்லை. பாடத்திட்டத்தில் வைக்க ஒரு கட்டுரை கேட்டிருந்தேன். பதினைந்து நாட்களில் எழுதி அனுப்புமாறும் சொல்லியிருந்தேன். அதை எதிர்பார்த்துத்தான் மின்னஞ்சலைத் திறந்தேன். இப்படி வந்திருந்தது. இணைப்பில் கட்டுரையும் இருந்தது. உடனே இப்படி பதிலனுப்பினேன்.
அன்புள்ள ரூமி,
தங்களின் உடல் நலம் சீர் பெற பிரார்த்தனைகள்.
கட்டுரை கிடைத்தது. நன்றி,
வஸ்ஸலாம்.

மறுநாள் ரூமியின் மகள் அலைபேசியில் அழைத்துக் கட்டுரை வந்ததா என்று விசாரித்தார். மின்னஞ்சலில் நான் அனுப்பிய பதிலை அவர் பார்த்திருக்கவில்லை. தந்தையின் உடல்நலத்துக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு சொன்னார்.

வைத்தபின் பல சிந்தனைகள் – மருத்துவம், தியானம், உடல் நலம், மூப்பு, பிணி, மரணம் என்கின்ற சுழற்சியில் வந்தன.

நாகூர் ரூமியிடம் நன் வியக்கும் விஷயங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று, ‘இந்த விநாடி’ நூலில் அவர் சொல்வது போல், முப்பதாண்டு காலமாக ஒரு மாத்திரை கூட உட்கொள்ளாமல் வாழ்ந்து வந்திருப்பது.

’நோய்களுக்கான எல்லா மருந்துகளும் நம் உடலிலேயே இருக்கின்றன. மாத்திரை உள்ளே போய் அதைத் தூண்டி விடுகின்ற வேலையை மட்டுமே செய்கிறது. என்ன, தூங்கிக் கொண்டிருக்கும் வேறு ஆட்களையும் எழுப்பி விட்டுவிட அவர்கள் சள்ளுபுள்ளுன்னு எரிந்து விழுகிறார்கள். அதை நாம் சைடு எஃப்பக்ட்ஸ் என்கிறோம். நம்முள் இருக்கும் மருந்தைத் தூண்டிவிட நம் சிந்தனையே போதுமானது. அதற்கான ஒரு தியான முறை உள்ளது” என்னும் சித்தாந்தத்தை முன் வைத்து தீபக் சோப்ரா, டாக்டர் ப்ரூஸ் லிப்டன் போன்ற ஹோலிஸ்டிக் மருத்துவர்கள் தரும் விளக்கங்களையும் சொல்லி ‘அடுத்த விநாடி’ நூலை அவர் எழுதியிருந்தார்.

இப்படியெல்லாம் வாழ்ந்துவரும் ஒருவருக்கு இருதயத்தில் அடைப்பா? என்று நான் கொஞ்சம் மலைப்பாகவே இருந்தது. சரி, தர்க்கத்துக்கு அப்பால் உள்ள எத்தனையோ புதிர்களில் இதுவும் ஒன்று. தக்தீர் – விதியில் எழுதி வைக்கப்பட்டது.

“ஜீன்ஸ் அணிந்த இந்த மனிதர் உங்களுக்கு ஓய்வெடுப்பது எப்படி என்று கற்றுத் தருகிறார்” (This man in jeans teaches you how to relax) என்றுதான் அவரைப் பற்றி சென்னையில் ஒரு நாளேடு அறிமுகப் படுத்தியிருந்தது. ‘ஆல்ஃபா தியானம்’ என்னும் நூலில் அவர் விவரித்திருந்த அந்த தியானத்தைச் செய்முறைப் பயிற்சி தரும் வகுப்புக்கான விளம்பரம் அது.

ஜமால் முகமது கல்லூரிக்கு அவரை நாங்கள் அழைத்திருந்த போதும் அப்படித்தான் வந்திறங்கினார் – ஜீன்ஸ் அணிந்த ஐம்பது வயது இளைஞராக. அதற்குக் காரணம் அவருடைய உள்ளத்தில் அடைப்புக்கள் ஏதுமில்லை என்பதுதான்! (பலருக்கும் வாழ்க்கையில் ப்ராப்ளம் வரக் காரணமே உள்ளத்தில் ’கொழுப்பு’ அடைப்பதுதானே?) ’அடுத்த விநாடி’, ‘ஆல்ஃபா தியானம்’, ‘இந்த விநாடி’ ஆகிய ட்ரிலாஜியில் அவர் விளக்கும் தியான முறையாகட்டும், அல்லது வேறு தியான முறைகளாகட்டும் எல்லாமே மனத்தடைகளை நீக்குவதற்குத்தான்.

கல்லூரியில் எங்கள் மாணவர்களுக்கு ஓர் உரையாற்ற வேண்டி அவரையே தலைப்புச் சொல்லச் சொன்னேன். இரண்டு அற்புதமான தலைப்புக்கள் கொடுத்து எங்களையே தேர்ந்தெடுக்குமாறு சொன்னார்:
“நூராவது டிகிரி”
“நானே சிற்பி! நானே சிலை!”

என் தேர்வு “நூராவது டிகிரி”. ஆனால் அதில் ஒரு பேராசிரியருக்கு மிகுந்த ஆட்சேபனை தோன்றவே (ஒன்னுமே புரியல ஒலகத்துல, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது!) அதை விட்டுவிட்டு அடுத்த தலைப்பைத் தெரிவு செய்தோம்.

“இது என்ன சிலைன்னெல்லாம் வருது. மிஸ்லீடிங்கா ஆயிடப் போவுது. தலைப்பை மாத்துங்க” என்று அரபிப் பேராசிரியர் ஒருவர் ஃபத்வா வழங்கினார். இது குறியீடு என்று சொல்லி அதை எவ்வளவு விளக்கியும் அவருக்கு கன்வின்ஸ் ஆகவில்லை. இது என்னடா இவருக்கு இப்படி சிலையோஃபோபியா வந்திருக்கே என்று நொந்து கொண்டு சமாளித்தோம்.

நாகூர் ரூமி அந்த உரைக்காக தனது மடிக்கணினியில் பவர்பாய்ண்ட் தயாரிப்புடன் வந்திருந்தார். அதை அடியேன்தான் இயக்க வேண்டும் என்று ஏற்பாடு. ஆனால் நிகழ்ச்சி ஆரம்பமாகி ஐந்து நிமிடத்தில் பவர்பாய்ண்ட்டை இயக்குவதில் சொதப்பினேன். யூட்யூபில் எடுத்த இரண்டே காட்சிகளை மட்டுமே காண்பிக்க முடிந்தது. அந்த உரையிலும்கூட தனக்கே உரிய ஹாஸ்ய பாணியில் மாணவர்களுக்கு மூச்சுப் பயிற்சியையும் சொல்லிக் கொடுத்துவிட்டார்.

அன்று மாலை அவருடைய ரசிகரான நகைக்கடை உரிமையாளர் ஒருவரின் வீட்டில் வாசகர்களுக்கு ஆல்ஃபா தியானம் செஷன் நடத்தினார். என் வீட்டிற்கும் சிறிது நேரம் வந்து சென்றார். அப்போது என்னிடம் சொன்னார், “உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. நல்லா வருவீங்க”

லட்சக்கணக்கான மனங்களில் நம்பிக்கை விதையை முளைவிடச் செய்த நாகூர் ரூமி அவர்களே! நீங்களும் நன்றாகி வந்து இன்னும் பல்லாண்டுகள் உற்சாகமாய் உலா வந்து உலகில் தியானத்தைப் பரப்புவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு, இன்ஷா அல்லாஹ்!

Friday, November 23, 2012

ஒவ்வொரு தோசையிலும்ஒரு சராசரி வாசகன் எப்போது இலக்கியவாதி ஆகிறான்? என்ற சர்ச்சை கிளம்பியது வகுப்பில். நிறைய நூற்களைப் படித்துவிட்டால் இலக்கியவாதி ஆகிவிடலாம் என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கிறது. எவ்வளவு நூற்கள் என்று எதாவது கணக்கு இருக்கிறதா என்ன? ‘இலக்கிய ரீதியாகச் சிந்திப்பவன்தான் இலக்கியவாதி’ என்று சொன்னேன். இலக்கிய ரீதியாகச் சிந்திப்பது என்றால் என்ன? என்ற கேள்வி எழுப்பபட்டது. இது என்னடா இது, கிணறு வெட்ட பூதங்களாகக் கிளம்புகிறதே என்று ரூட்டை மாற்றினேன்.

“ஒருவன் இன்னொரு தோசை வேண்டும், இன்னொரு தோசை வேண்டும் என்று நூறு தோசைகளை வாங்கிச் சாப்பிடுகிறான். அவனுக்கும் இலக்கியத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியுதா?

“இல்லை”

“அதே இன்னொரு ஆள் இரண்டாம் தோசைக்கு ஆர்டர் கொடுக்கும் போதே ‘அம்மா தோசையின் இன்னொரு பிரதி கிடைக்குமா?’ன்னு கேட்குறான்னு வை, அவன் நவீன இலக்கிய வட்டத்திற்குள் நுழைந்தே விட்டான்னு அர்த்தம்”

“எப்பூடி சார்?”

“அதாவது தோசை என்பது ஒரு ப்ரோட்டோடைப். வீடுகளிலும் விடுதிகளிலும் கல்லில் ஊற்றப்படுவதெல்லாம் அதன் பிரதிகளே என்னும் பிரக்ஞை அவனிடம் இருக்கிறது.”

“அப்டீன்னா, இலக்கிய விமரிசகன் யார்?”

“தோசையே சாப்பிடாட்டியும், டைனிங் ஹாலில் இருந்தபடியே கிச்சனை நோக்கி ‘என்னது தோசை தீய்ற வாடை வருதுன்னு?’ சொல்றான்னு வச்சுக்க, அவன்தான் இலக்கிய விமரிசகன். Critical thinking on dosai from the desk of the connoisseur என்று அவன் இதை 
வைத்து நானூற்றி சொச்ச பக்கங்களில் ஒரு நூலே எழுதிவிடுவான்”

‘சார், நவீனத்துவத்துக்கும் பின்-நவீனத்துவத்துக்கும் என்ன சார் வித்தியாசம்?’

‘பின்-நவீனத்துவம்கிறது நவீனத்துவத்துக்குப் பின்னாடி நிக்கிற நவீனத்துவம். இதன்படிப் பார்த்தால் நவீனத்துவம்னா என்னங்கறதுதான் விளங்குறதுக்குக் கொஞ்சம் கஷ்டம்னு தெரியுது”

“சார், கிண்டல் பண்ணாதீங்க. நான் சீரியஸாக் கேக்குறேன். சீரியசாவே பதில் சொல்லுங்க”

“ஓக்கே. நவீனத்துவம்கிறது தோசைய வட்டமாச் சுடாம சதுரமாகவும் முக்கோணமாகவும் செவ்வகமாகவும் சுடுறது. பெண்டகன் ஷேப்ல தோசை சுட்டா அது அமெரிக்க நவீனத்துவம். பின்–நவீனத்துவம்னா மையப்புள்ளி இல்லாம தோசை சுடுறது. இந்த விளக்கத்தின்படிப் பார்த்தால் பின்–நவீனத்துவம்தான் ரொம்ப கஷ்டம்”

இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நினைவிலி மனத்தின் நனவோடை (Stream of consciousness என்று வில்லியம் ஜேம்ஸ் சொன்னது) முந்திய நாள் இரவு கிச்சனுக்கு ஓடுகிறது. சகதர்மினி தோசை ஊற்றிக் கொண்டிருக்கிறாள். நான்-ஸ்டிக் கல்லின் நடுவில் இறங்கும் மாவு அடுத்து வளையம் வளையமாகப் பரப்பப் படுகிறது. எத்தனை கான்செண்ட்ரிக் வட்டங்கள் என்று என் கணிதப் பிரக்ஞை எண்ணவும் திகிலாகிறேன். இலக்கியவாதி + ஆன்மிகவாதி என்னும் அடையாளமே தாங்க முடியல. இது வேற என்ன புதுசா? என்று சுயநிந்தனைக்கு என் உள்மனம் சொன்னது, ‘இல்லப்பா, இந்தக் காட்சியை ராமாநுஜம் பார்த்தான்னா என்ன நினைப்பான்னு ஒரு சின்ன கற்பனை. வேறொன்றுமில்லை. இலக்கியவாதின்னா நாலு தினுசா யோசிக்கத் தெரியனுமா இல்லையா? An epic should be written by an erudite scholar-னு சொல்வாங்க. இப்ப கவனி. சகதர்மினி தோசையின் மையப் புள்ளியிலிருந்து அதன் விளிம்பு வரை அதன் ஓர் ஆரத்தில் தோசைத் திருப்பியின் பக்கவாட்டினைக் கொண்டு வெட்டுகிறாள். பிறகு அந்த ஆரவெட்டிலிருந்து அப்படியே தோசையை சுருட்டிக்கொண்டு வர அது ஒரு கூம்பு வடிவம் பெறுகிறது. அதை ஒரு கூடாரம் போல் தட்டில் எடுத்து வைத்து மேசையில் காத்திருக்கும் பிள்ளைக்கு எடுத்துச் செல்கிறாள். ராமாநுஜம் இதைப் பார்த்தால் அந்த கான்செண்ட்ரிக் வளைவுகளின் உருவாக்கத்திற்கும், வட்டம் ஒரு கூம்பாக மாறுவதற்குமான ஒரு கணித சூத்திரத்தை இந்நேரம் சிந்தித்திருக்க மாட்டானா? அதிலிருந்து புதிய தியரி எதையாவது அவன் கண்டுபிடித்திருக்கக் கூடும். Mathamatical analysis of Dosa from the master’s desk! நீயும்தான் இருக்கிறாயே, மண்டு மண்டு’

தோசைக்கும் கணிதத்திற்கும் என்ன தொடர்போ, யானறியேன். ஆனால் அடியேன் தோசை சுட முயன்றபோது அது நான் கணக்குப் பரிட்சை எழுதிய அனுபவம் போலவே இருந்தது. அதாவது கல்லில் ஊற்றும்போதே தோசை தாறுமாறாகப் பிய்ந்து கொண்டு வந்தது!

மணி அடிக்கவும் அத்துடன் அந்த வகுப்பு முடிவுற்றது. இலக்கியவாதி ஆவதற்கு ஒரே வழி இனி தோசை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு இட்லி பூரி ஆப்பம் என்று சாப்பிடுவதுதான் என்ற நல்ல முடிவை நோக்கி மாணவர்களை நகர்த்திய திருப்தியுடன் ஸ்டாஃப் ரூமுக்குத் திரும்பினேன்.

இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு மீண்டும் வகுப்பு. “பா.விஜய் ஒரு தத்துவ வித்தகர்” என்று சொல்கிறான் ஒரு மாணவன். ரொம்பக் கடுப்பேத்றார் மை லார்ட்! – என்னும் ஸ்திதிக்கு நான் ஆளாகிறேன். தத்துவம் என்றால் என்ன? என்னும் கேள்வியை எழுப்பி அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிட எனக்குள் இருக்கும் இம்சை அரசன் சித்தம் கொண்டாலும் நல்ல புத்தி சொல்லி நளினமாகப் பேசத் தொடங்குகிறேன்.

”ஜெயமோகன் அற்புதமாக ஒரு விளக்கம் சொல்றார் தம்பி:
‘சிந்தனை என்பது மூச்சு; தத்துவம் என்பது பிராணாயாமம்’”

“கவிதையா சார்?”

“இதை வைரமுத்து எழுதினாத்தான் கவிதை. ஜெயமோகன் எழுதினாக்க கவிதை இல்லை”

“ஏன் சார் அப்படி?”

“ஏன்னா வைரமுத்து கவிப்பேரரசு. ஆனால் ஜெயமோகன் அப்படி அல்ல”

“ஒருத்தர் கவிஞர்னும் ஒருத்தர் கவிஞர் இல்லைன்னும் எப்படி சார் முடிவு செய்றது?”
(ரொம்பக் கடுப்பேத்றார் மை லார்டு! – பார்ட் 2)

“பாக்குற எல்லாத்திலயும் ஒரு கவித்துவத்தை உணரணும் தம்பி. அவன்தான் கவிஞன். உதாரணமா,
‘பல்லேலக்கா பாளையத்தில்
வெள்ளைக் காக்காய்
மல்லாக்கப் பறக்குது’
என்று சாரு நிவேதிதா எழுதும் வரிகளைப் பார். (அவர் இதை உரைநடையாகத்தான் எழுதினார். அடியேனுக்கு இது ஒரு கவிதையாகத் தெரிந்ததால் மடக்கிப் போட்டிருக்கிறேன்.) இதில் சர்ரியலிசம் இருக்கிறது தெரியுதா? மேல் மிச்சமாக ஸ்ட்ரக்ச்சுரலிஸமும் உனக்கு தரிசனமானால் நீ கவிதையே எழுதாவிட்டாலும் கவிஞன்தான் தம்பி”

Bingo! சிறிது நேர மௌனம் நிலவ ஏதோ எக்ஸானந்தா நடத்தும் யோகா க்ளாஸ் போல் தோன்ற சுதாரித்துக் கொள்கிறேன்.

”ஜெயமோகன் சொல்றார்: சிந்தனை என்பது மூச்சு; தத்துவம் என்பது பிராணாயாமம். அதாவது மூச்சைப் முறையாகப் பயன்படுத்துவது. அப்படிப் பயன்படுத்தும் போது சாதாரணமாக மூச்சு விடுகையில் கிடைக்காத பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன என்னும் விளக்கங்கள் அவரின் இந்த உதாரணத்திலிருந்து விரிகின்றன. இன்னும் சொல்லலாம். இயல்பான மூச்சு ஆழமாக இல்லை. நுரையீரல் நிரம்பி விரியும்படி மனிதர்கள் மூச்சு விடுவதில்லை. அரைகுறை மூச்சுத்தான் விடுறாங்க. ஆனால் பிராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி அதை ஆழமாக்குது. அது போல் மேம்போக்கான சிந்தனைகளை ஆழமாக்குவதுதான் தத்துவ முறைமை. எந்தச் சிந்தனையாயிருந்தாலும் அதை முறைமைக்குள் கொண்டு வந்தால் அது ஒரு தத்துவமாகிவிடும். ஆனால், தத்துவவாதி எல்லோருமே ஞானிகள் அல்ல. அது இன்னும் ஒருபடி மேல”

“அப்ப தத்துவஞானிங்கறவன் யாரு சார்?”

“அத்தர் வாசம் வீசினாலும் மல நாற்றம் அடித்தாலும் பிராணாயாமம் பிசகாமல் இருப்பவன்!”

மணி அடித்தது.


பின் குறிப்பு: இப்பதிவில் எஸ்.ராமகிருஷ்ணனைப் பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லையே என்று சிறு வருத்தம் எழவே, தலைப்பை அவர் பாணியில் இட்டு நிம்மதி அடைந்தேன்.