Tuesday, November 13, 2012

ஒரு புரட்சி நூலும் அல்லோபநிஷத்தும்




பல வருடங்களுக்கு முன் படித்த ஒரு நூலை மீண்டும் ஒரு ஞாபகத்தில் எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். ஆங்காங்கே தென்பட்ட மின்னல் வீச்சுக்கள் வியப்பைத் தூண்டின. அது ஒரு சாதாரண புத்தகமாகப் படவில்லை. அதிலிருந்து சில பத்திகளை உங்கள் முன் வைக்கிறேன். இந்தச் சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர் யார் என்று நீங்கள் சரியாக அடையாளம் காண்பீர்கள் என்று நம்புகிறேன். ட்ரை இட்
.
வெளியுலகம் நம்முடைய ஆக்கமே என்னும் கருத்துக்கு இப்படி ஓர் அருமையான விளக்கம்:
”நீங்கள் எல்லோரும் முத்துச் சிப்பிகளைப் பார்த்திருப்பீர்கள். முத்து எப்படி உண்டாகிறது என்பதைப் பற்றியும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு மணல் துகள் அந்த முத்துச் சிப்பிக்குள் எப்படியோ போய்விடுகிறது. அதனால் வரும் உறுத்தலைத் தணிப்பதற்காகச் சிப்பி தன் உடலிலிருந்து உண்டாக்கும் ஒருவித திரவத்தால் மணலை மூடுகிறது. நாட்கள் செல்லும்போது அது கெட்டியாகி முத்தாக மாறுகிறது. உலகம் முழுவதும் இங்ஙனமே இருக்கின்றது. நம்மால் உருவாக்கப்பட்ட முத்தே உலகம். வெளி உலகிலிருந்து வரும் உணர்ச்சிகள் நம்மைப் பாதிக்கின்றன. அதை உணரும்போதுதான் நாம் மனத்தை அதில் செலுத்துகிறோம். எனவே வெளி உலகம் என்பது உண்மையில் நம் மனத்தையே பொறுத்திருக்கிறது. அந்தச் சிப்பிக்குள் வரும் மணல், கேவலம் ஒரு தூண்டுதலாக மட்டுமே இருந்தது. ஆனால் முத்தை உருவாக்கியது சிப்பியே. அதுபோல புற உணர்ச்சிகள் மனிதனுக்கு வெறும் தூண்டுதல்களாகவே இருக்கின்றன. வெளி உலகம் அனைத்தும் மனத்தின் செய்கையால் உண்டாக்கப்படுகின்றது. எனவே, வெளி உலகம் உண்மையே என்று நம்புகிறவர்கள், வெளி உலகை மட்டும் நாம் தனியாக உணர்வதே இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”

இந்தப் பத்தியில் உள்ள, ”நம்மால் உருவாக்கப்பட்ட முத்தே உலகம்” என்னும் அற்புதமான வரியைப் படிக்கும் போது மகாகவி இக்பால் இறைவனிடம் பேசும் கவிதை வரிகள் நியாபகம் வருகின்றன:
“நீ இரவைப் படைத்தாய்
நான் விளக்கைப் படைத்தேன்”

“உருவக் கடவுளை நிரூபிக்க முடியாது என்பதை நாம் கண்டோம். ஒரு குயவன் பானையை உண்டாக்குவது போல் கடவுள் இந்த உலகை உண்டாக்கி இருக்கிறார் என்று சொன்னால், தற்காலத்தில் குழந்தைகூட ஒப்புக்கொள்ளாது. அப்படியானால் குயவனும் கடவுள்தான். கைகாலில்லாமல் குயவன் பானையைச் செய்தான் என்றால் அவனை நீங்கள் பைத்தியக்கார விடுதிக்கு அல்லவா கொண்டு செல்வீர்கள்! இவ்வுலகை ஆக்கியதாக நீங்கள் சொல்லும் இந்தக் கடவுளை இரந்து உங்கள் ஆயுள் முழுவதும் அழுதுகொண்டிருக்கிறீர்களே, அவர் எப்போதாவது உங்களுக்கு உதவி செய்திருக்கிறாரா என்று இன்றைய விஞ்ஞானம் கேட்கிறது. நீங்கள் பெற்ற உதவியெல்லாம் உங்கள் உழைப்பின் காரணமாகவே ஏற்பட்டதென்றும், அழுவதிலும் கெஞ்சுவதிலும் நீங்கள் அதிக சக்தியை வீணாக்காமலிருந்தால் இன்னும் அதிகப் பயனைப் பெற்றிருக்கலாமென்றும் அது நிரூபிக்கிறது.”

இதே கருத்தை நான் பல தருணங்களில் விவாதித்திருக்கிறேன், பகுத்தறிவு முஸ்லிம்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் அரைவேக்காடுகளிடம். இறைவன் ஏழு வானங்களுக்கு அப்பால் அர்ஷ் என்னும் ‘இடத்தில் மட்டுமே’ இருக்கிறான் என்று நம்புகின்றவர்கள் அவர்கள். இறைவன் சர்வ வியாபி என்பதை மறுப்பவர்கள். இதே குயவன் –பானை உதாரணத்தை அவர்கள் சொல்வதுண்டு. ‘குயவன் பானையைச் செய்கிறான். எனவே குயவன் பானையில் இருக்கிறான் என்று சொல்ல முடியுமா? அதுபோலத்தான் இறைவனும் அவன் படைத்த உலகமும்’ என்று அவர்கள் வாதிப்பார்கள். அறிவில் கொஞ்சம் நுண்ணுணர்வு இருந்தால்கூட இந்த வாதத்தின் அபத்தம் விளங்கும். அவர்களின் தர்க்கமே அவர்களின் வாதத்தை உடைத்துவிடும். நான் அவர்களிடம் கேட்பேன்: “குயவன் பானையை செய்தபின் பானையின் இருப்பிற்குக் குயவனின் இருப்புத் தேவை இல்லாமல் ஆகிவிடுகிறது. அந்தக் குயவன் இல்லாமல் போய்விட்டாலும்கூட பானை என்பது இருந்து கொண்டிருக்கும். என் பெரியம்மா வீட்டில் ஒரு பானை இருக்கிறது. குளுமையான பானை நீர் வேண்டுமென்றால் அவர்கள் வீட்டிற்குப் போய்தான் வயிறு முட்டக் குடித்துக் கொள்வேன். அந்தப் பானையை வனைந்த குயவன் இப்போது இருக்கிறானா என்பதே தெரியாது. ஆக, பானையின் இருப்பிற்குக் குயவனின் இருப்பு ஆதாரமாக இல்லை. இருவேறு இருப்புக்கள் அவை. இந்த உவமை அபத்தமாவது இதனால்தான். பானை தானாக உருவாகாது. அதை உருவாக்க ஒரு குயவன் தேவை என்னும் அளவில் மட்டும்தான் இது பொருந்தி வருகிறது. ஆனால் அதனுடைய நீட்சி பானையின் இருப்பிற்குக் குயவனின் இருப்புத் தேவையில்லை என்பதைக் கொண்டு வந்து விடுகிறது. இது துவிதமே அன்றி ஏகத்துவம் அல்ல.”

சரி, நான் சொன்ன நூலில், மேலே நாம் பார்த்த பத்தியில் தொடர்ந்து அவர் என்ன சொல்கிறார் என்பதைப் படியுங்கள். எத்தகைய வெடிகுண்டை வீசுகிறார் என்று பாருங்கள்:
“தவிர உருவக் கடவுளுடன் புரோகிதர்களும் அவர்களின் கொடுமைகளும் இருந்து வந்திருக்கின்றன என்பதும் நமக்குத் தெரியும். உருவக் கடவுளின் வழிபாடு இருக்கும் இடங்களில் எல்லாம் புரோகிதர்களின் கொடுமையும் இருந்து வந்திருக்கிறது. புரோகிதர்களின் கொடுமையை ஒழிக்க வேண்டுமானால், உருவக் கடவுள் என்ற கருத்தை ஒழிப்பதன் மூலம்தான் அது முடியும். மனிதன் ஒரு வெளிச் சக்தியைப் படைத்து அதற்காகப் பயந்து கொண்டிருக்கும்வரை, அதனிடம் அருள் அல்லது சலுகை பெற்றதாகக் கருதப்படும் சில புரோகிதர்களும் பூசாரிகளும் இருக்கத்தான் செய்வார்கள். இவர்கள் இருக்கும்வரையிலும், பாவம் ஏழை மக்கள் இவர்களிடம் சென்று தெய்வத்திடம் தங்களுக்காகப் பரிந்து பேசும்படிக் கேட்கத்தான் செய்வார்கள். நீங்கள் இப்பொழுது பிராமணனை ஒழித்து விடலாம்; ஆனால் உருவக் கடவுள் என்ற கருத்து இருக்கும்வரை வேறு ஒரு கூட்டத்தார் அவர்கள் இடத்தைப் பெற்று இன்னும் மோசமாக நடந்து கொள்ள நேரிடும். எனவே உருவக் கடவுளை வழிபடும்வரை புரோகிதர்களும் பூசாரிகளும் இருந்தே தீருவார்கள்; புரோகிதர்களும் பூசாரிகளும் இருக்கும்வரை மதத்தின் பேரால் மக்களைச் சுரண்டுதலும் இதரக் கொடுமைகளும் இருந்தே தீரும். இதன் காரணமாக உயர்ந்ததொரு ஒழுக்கமுறை சமுதாயத்தில் இருக்க முடியாமல் போய்விடுகிறது. புரோகிதமும் கொடுமையும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. இவை ஏன் தோன்றின? பழங்காலத்தில் பலசாலி ஒருவன் மக்களை அடக்கினான். ‘எனக்கு அடங்காவிடில் உங்களை அழிப்பேன்’ என்றான். இதுவே அது தோன்றிய கதை. ’மஹத்பயம் வஜ்ரமுத்யம்’- தனக்கு அடங்காதவர்களை அழித்துவிடும் கொள்ளைக்காரனின் கருத்து இது.”

அதே நூலில் வேறொரு உரையில் ஹிந்து என்னும் சொல்லின் பின்னணி பற்றி அவர் இப்படிப் பேசுகிறார்:
“நமது மதமும் மக்களும் சாதாரணமாக இந்து என்று அழைக்கப்படுகிறார்கள். ‘வேதாந்தம்’ என்பதைப் பற்றி நான் கூறப்போகும் விளக்கத்தைப் புரிந்துகொள்ள, ‘இந்து’ என்ற இந்தச் சொல்லையும் அறிய வேண்டியது அவசியம். பழங்காலப் பாரசீகர்கள் ‘ஸிந்து’ நதியை ‘ஹிந்து’ என்று அழைத்தார்கள். சமஸ்கிருதத்தில் ‘ஸ’ என்ற சப்தம் பாரசீகத்தில் ‘ஹ’ என்று மாறிற்று. எனவே ‘ஸிந்து, ஹிந்து’வாயிற்று. கிரேக்கர்களுக்கு ‘ஹ’வை உச்சரிப்பது கஷ்டமாயிருந்தது. ஆதலால் அந்த ‘ஹ’ சப்தமும் போய் ’இந்தியர்’களானோம். ‘ஹிந்து’ என்ற சொல்லுக்கு சிந்து நதிக்கு இந்தப் பக்கத்தில் இருப்பவர்கள் என்று பொருள். அக்காலத்தில் அந்த வார்த்தை பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அது பொருந்தாது.”

இப்பத்தியைப் படிக்கும்போது என் பெரியம்மா தனது ஹஜ் பயண அனுபவமாகச் சொன்ன ஒரு நிகழ்ச்சி நினைவு வருகிறது. ஜித்தாவில் விமானம் இறங்கி அவர்களின் லக்கேஜ்கள் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. அரபியர்கள் அப்பணியைச் செய்து கொண்டிருந்தார்கள். என் பெரியம்மாவின் பெட்டியில் இருந்த பெயரையும் விலாசத்தையும் பார்த்துவிட்டு அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிச் சிரித்தார்களாம், “அல்-ஹிந்தி... ஹிந்திய்யா” என்று. பிறகு அவர்களின் பெயரையும் கிண்டல் செய்து தாளம் போட்டுப் பாடினார்களாம். இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ் புனிதப் பயணிகளின் கதி இது. ஏனெனில் அரபியர்களின் பொதுமனத்தைப் பொருத்தவரை இந்தியாவின் முஸ்லிம்கள் அனைவரும் இந்துக்களே. அதன்படி, ரமீஸ் பிலாலியாகிய அடியேன் அவர்களுக்கு ஓர் இந்து. இது ஒரு நிலச்சுட்டாக மட்டுமே பாவிக்கப்படுமானால் இதை யாரும் மறுக்க வேண்டியதில்லை, மறுக்கவும் முடியாது. சமய ரீதியாக இப்பெயர் வழங்கப்படவில்லை என்றபோதும் அவர்களைப் பொருத்தவரை அரபிகள் மட்டுமே முழுமையான முஸ்லிம்கள் என்றும் அஜமிகள் எல்லாம் செமி-முஸ்லிம்ஸ் என்றும் ஒரு நினைப்பு உண்டு.

மேலே நாம் பார்த்த மேற்கோள் உங்களுக்கு அடையாளம் காட்டியிருக்கும், நான் சொல்லும் நூல் யாருடையது என்று. கண்டுபிடித்து விட்டீர்கள் அல்லவா? அதே நூலில் இருந்து, இன்னொரு உரையில் அவர் வீசும் வெடிகுண்டு:
“வர்ணாசிரமம், உணவு முதலியவை பற்றிய கூக்குரல் இன்று எங்கும் எழுந்துள்ளது. வங்காளிகளே இதில் பெரும் கூச்சலிடுபவர்கள். உங்கள் ஒவ்வொருவரையும் கேட்கிறேன். வர்ணாசிரமம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அன்றைய நான்கு ஜாதிகள் இன்று எங்கே உள்ளன? பதில் கூறுங்கள். நான்கு ஜாதிகளை நான் காணவில்லையே! ‘தலையே இல்லாத போது வந்த தலைவலி’ என்னும் வங்கப் பழமொழி போலவே வர்ணாசிரமத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள். இங்கு நான்கு ஜாதிகளே இல்லை. பிராமணர்களும் சூத்திரர்களும் மட்டுமே உள்ளனர். சத்திரியர்களும் வைசியர்களும் இருந்தால், அவர்கள் எங்கே? ஒவ்வோர் இந்துவும் செய்ய வேண்டிய முறைப்படி பூணூல் போட்டு வேதம் பயில அவர்களுக்கு ஏன் பிராமணர்கள் கட்டளையிடக் கூடாது? வைசியர்களும் சத்திரியர்களும் இல்லாமல், பிராமணர்களும் சூத்திரர்களுமே இருக்கும் நாட்டில் வசிக்கக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறுங்கள். கடந்த ஆயிரம் ஆண்டுகளாக மிலேச்சர்களின் அரசில் வாழ்ந்து, அவர்களின் உணவை உட்கொள்ளும் உங்களுக்கு சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள பிராயச்சித்தம் என்ன தெரியுமா? உங்களை நீங்களே எரித்துக் கொண்டு உயிர்விடுதல். ஆசாரியார்கள் என்று கூறிக்கொண்டு வெறும் வேடதாரிகளாக நடக்க விரும்புகிறீர்களா? உங்கள் சாஸ்திரங்களில் உங்களுக்கு நம்பிக்கையிருக்குமானால் முதலில் தீக்குளித்து உயிர் விடுங்கள். அலெக்சாந்தருடன் சென்ற பிராமணன் ஒருவன், தான் மிலேச்ச உணவு உட்கொண்டதாகக் கருதித் தீயில் விழுந்து உயிர் விட்டானே, அந்த மாதிரிச் செய்யுங்கள். நாடு முழுவதும் உங்கள் காலில் விழுந்து வணங்கும். உங்கள் சாஸ்திரங்களில் உங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆனால் பிறர் மட்டும் அதை நம்ப வேண்டும் என்று சொல்கிறீர்கள்.”

இந்தப் பத்தியில் உங்களுக்கு ஒரு துப்பு – க்ளூ இருக்கிறது. இது யாருடைய பேச்சு என்பதை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் அல்லவா?

இந்தக் கருத்துக்களை முன்பொரு நாள் நண்பர்களிடம் வாசித்துக் காட்டியபோது – இதே போல் யாருடைய கருத்து என்று ஊகிக்கச் சொன்னபோது – தந்தை பெரியார் என்று சிலர் சொன்னார்கள். அப்படித் தோன்றியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் இந்நூல் பெரியாரின் நூல் அல்ல என்றதும் அம்பேத்கார் என்று சிலர் சொன்னார்கள். அவரும் அல்ல என்றதும் யோசித்தார்கள். கடைசியாக வாசித்த பத்தியில் வங்கம் பற்றிய குறிப்புள்ளது. எனவே வங்கத்தைச் சேர்ந்த யாரோ ஒரு சமூக சிந்தனையாளர்தான் இக்கருத்துக்களைக் கூறியிருக்க வேண்டும் என்று முடிவாகச் சொன்னார்கள்.

உண்மைதான் இக்கருத்துக்களைச் சொன்னவரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவரின் குருநாதர் அவருக்குச் சூட்டிய பெயர் சுவாமி விவேகானந்தர். மேற்கண்ட கருத்துக்கள் அவர் பதினொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் பேசிய உரைகளில் உள்ளவை. அவ்வுரைகளின் தொகுப்பு ‘வேதாந்தச் சொற்பொழிவுகள்’ என்னும் நூலாக ஸ்ரீராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்டுள்ளது. (என்னிடம் உள்ளது மூன்றாம் பதிப்பு, 1986.)

விவேகானந்தரின் உலகப் புகழ்பெற்ற வரிகள் இந்த வேதாந்தச் சொற்பொழிவுகளில்தான் உள்ளன. உதாரணமாக, “விழியுங்கள், எழுங்கள், நோக்கம் கைகூடும் வரை நிற்காதீர்கள்” என்பதைச் சொல்லலாம். Arise, Awake and stop not till the goal is reached என்னும் இந்த மின்சார வாக்கியத்தைப் பேச்சாளர்கள் பலரும் மேடையில் முழங்குவதைக் கேட்டிருக்கிறேன். சில பிரகஸ்பதிகள் இதனை மாற்றிச் சொதப்புவதையும் கேட்டுள்ளேன், ’எழுமின் விழிமின், இலக்கை அடையும் வரை நில்லாது செல்மின்’ என்பார்கள். ஏன்யா, தூங்குபவன் முதலில் விழித்துவிட்டுப் பிறகுதானே எழுவான்? நீ என்னய்யா எழுமின் விழிமின் என்கிறாய்? இதாவது பரவாயில்லை. சில பேச்சாளிகள் ’‘எழுமின் விழுமின்’ என்று விவேகானந்தர் முழங்கினார்’ என்று பேசுவார்கள். உங்கள் பேச்சையெல்லாம் கேட்டால் எழுந்த வேகத்தில் விழத்தான் வேண்டும்!

இந்தியாவில் இரட்டை மாநிலங்கள் என்று நான் அழைப்பேன் என்றால் அது கேரளாவையும் மேற்கு வங்கத்தையும்தான். இரண்டு மாநிலங்களுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. சக்தி வழிபாடு, தாந்திரீகம், சினிமாத்துறை, படிப்பறிவு, இலக்கியம், கம்யூனிசம், மீன் உணவு போன்ற பல கூறுகளில் கால்பந்தும் அடங்கும். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் கிரிக்கட் மயக்கம் இருக்கும்போது இந்த இரு மாநிலங்களிலும் ஃபுட்பால் க்ரேஸ் இருக்கிறது. (சமீபத்தில் கால்பந்தின் கதாநாயகன் டீகோ மரதோனா கேரளா வந்தார். மக்கள் அவருடைய பிறந்த நாளை பெரிதாகக் கொண்டாடினார்கள்.) கால்பந்து பற்றி விவேகானந்தர் சொன்ன புகழ் பெற்ற மேற்கோள் இந்த வேதாந்தச் சொற்பொழிகளில் ஒன்றில் உள்ளதுதான். “நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்தாடுவதன் மூலம் சுவர்க்கத்திற்கு அருகில் எளிதாகச் செல்ல முடியும்” என்று அவர் பேசியபோது அப்போது மக்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இன்று ஒரு கார்ப்பரேட் சாமியார் இப்படிச் சொன்னால் அவரின் நிறுவனத்தின் அஸ்திவாரத்திற்கு அவரே குண்டு வைத்துத் தகர்க்கும் தற்கொலையாகத்தான் அது அமையும். விவேகானந்தரே இதை மிகவும் துணிச்சலான வாசகம் என்று சொல்வதையும், எந்தப் பின்னணியில் அவர் இதைக் கூறுகிறார் என்பதையும் பாருங்கள். அப்போதுதான், அறிவுரை என்பது யாருக்குச் சொல்கிறோம் என்பதைக் கவனித்துச் சொல்லப்பட வேண்டும் என்னும் உளவியலை அவர் எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறார் என்பது விளங்கும்:

“முதலில் நமது இளைஞர்கள் வலிமை பெற்றவர்களாக வேண்டும். மத உணர்ச்சி அதற்குப் பின்னரே வரும். எனது வாலிப நண்பர்களே! வலிமை பெறுங்கள். அதுதான் நான் உங்களுக்குக் கூறும் அறிவுரை. நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்தாடுவதன் மூலம் சுவர்க்கத்திற்கு அருகில் எளிதாகச் செல்ல முடியும். இவை தைரியமான வார்த்தைகள். இருப்பினும் உங்களுக்கு இவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் நான் உங்களை நேசிக்கிறேன். பிரச்சனை எங்கு என்பது எனக்குத் தெரியும். எனக்குக் கொஞ்சம் அனுபவமிருக்கிறது. உங்கள் கை, கால் தசைகளில் இன்னும் கொஞ்சம் வலிமை வந்தால், கீதையை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.”

இந்த இடத்தில், விவேகானந்தர் பற்றி அவரின் சகசீடர் ஒருவர் சொல்லும் செய்தி ஒன்று நியாபகம் வருகிறது. இராமகிருஷ்ணர் நடத்தும் சத்சங்க நிகழ்வுகளில் சீடர்கள் உணர்ச்சி மேலிட்டு அழுது புரள்வதும், பரவசத்தில் குதிப்பதும் வழக்கமான காட்சிகளாக இருந்தன. சில சீடர்களுக்கு மட்டும் அவ்வாறு எதுவும் நிகழவே இல்லை. அது குறித்து அவர்கள் மிகவும் மனச்சோர்வில் இருந்தார்கள். ஆன்மிகப் பிராப்தம் இல்லாப் பாவிகள் தாங்கள் என்னும் கருத்து அவர்களின் மனத்தில் உண்டாகிவிட்டது. அந்த நிலையில்தான் விவேகானந்தர் வந்து சேர்கிறார். “நரேந்திரா, உனக்காக நான் எவ்வளவு வருடங்கள் காத்திருந்தேன். ஏன் இவ்வளவு தாமதம்?” என்று இராமகிருஷ்ணரே ஆரத் தழுவிக் கொண்ட சீடராக அவர் இருந்ததால் அவர் ஒரு தனிப்பிறவி என்று சீடர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். சத்சங்கத்தில் சீடர்கள் தன்னிலை இழந்து குதித்துப் புரண்டு கொண்டிருக்கும் போது விவேகானந்தர் எந்த அசைவும் இல்லாமல் கையைக் கட்டிக்கொண்டு சாந்தமாக நின்று கொண்டிருப்பார். இதைப் பார்த்த அந்த ‘பிராப்தம் கெட்ட’ சீடர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் தம் மனக்குறையை அவரிடம் எடுத்துச் சொன்னபோது அவர் சொன்னார், “உங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. கவலைப் படாதீர்கள். அவர்களுக்குத்தான் கொஞ்சம் நரம்பு மண்டலம் பலவீனமாக இருக்கிறது. அணையை எழுப்பிக் கட்டும்போது நிரைய தண்ணீரைத் தேக்க முடியும். அணை இல்லாத இடத்தில்தான் நீர் தேக்கப்படாமல் பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கும்.” ‘Don’t settle down for cheap consolations’ என்று மௌலானா ரூமி சொல்லும் கருத்துத்தான் இது.

இருநூற்றி நாற்பது பக்கங்களில் உள்ள இந்த வேதாந்தச் சொற்பொழிவுகளில் அவர் பேசுவதெல்லாம் அத்வைதத்தை நோக்கிய விளக்கங்களே. அந்த விளக்கங்களில் ஞானியின் கருணையும் கவிஞனின் கவித்துவமும் கலகக்காரனின் முற்போக்கும் இருக்கின்றன. நல்லொழுக்கம் என்பதற்கு அத்வைத உணர்வே அடிப்படை என்பதை அவர் சொல்லும் இடத்தைக் கவனியுங்கள்:
“மிகத் தாழ்ந்த படைப்பான புழுவிலும் மிக உயர்ந்த படைப்பான மனிதனிலும் ஒரே வகையான தெய்விகமே இருக்கிறது. இந்தத் தெய்விகம், புழுவில் மிக அதிகமாகவும் மனிதனில் மிகக் குறைவாகவும் மாயையால் மறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் உள்ளே தெய்விகம் இருக்கிறது. இதுவே நல்லொழுக்கமும் என்பதற்கு அடிப்படை.” விவேகானந்தரிடம் ஒரு கருத்துச் சொல்ல தோன்றுகிறது: “இங்கே உள்ள சிலரைக் கவனித்துப் பார்த்தால் புழு அவர்களுக்கு எவ்வளவோ மேல் என்று சொல்லலாம் ஐயா.”

”எப்போது ஒரு மனிதன் ஒரு பூச்சிக்காகக்கூடத் தன் உயிரையே கொடுக்கும் தியாக நிலையை அடைகிறானோ, அந்தக் கணமே அவன் அத்வைதிகளின் இலட்சியமான பூரண நிலையை அடைகிறான்” என்கிறார். எத்தனை மகத்தான நிலை! ஆனால் இன்றைய மனிதர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்ற மனிதர்களை எல்லாம் பூச்சிகள் என்று பாவிக்கிறான். ‘கலக மானிடப் பூச்சிகள்’ என்று பாரதியார் சொன்னாரே, அப்படி இருக்கிறார்கள்.

மதவாதியாக இருந்து விட்டாலே போதும், கூட்டத்தோடு கோஷம் போட்டுக்கொண்டு சொர்க்கத்தை அடைந்து விடலாம் என்னும் பொதுபுத்தியின் செவுணியில் ’பளேர்’ என்று அறை கொடுப்பது போல் ஒரு கருத்து: “சமயக் கருத்தின் உச்ச நிலையை அடைய மனிதச் சமுதாயம் எந்தப் படிகளைக் கடந்திருக்கிறதோ, அந்தப் படிகளையெல்லாம் தனி மனிதனும் கடந்தால்தான் ஆன்ம இலட்சியத்தை அடைய இயலும்.” ஆம், ஒரே இலட்சியத்தை நோக்கிக் கூட்டமாகப் பறந்தாலும் ஒவ்வொரு பறவையும் தன் சிறகைத் தானேதான் அசைத்தாக வேண்டும்!

கேட்டால் சார்ல் டார்வின் வாயைப் பிளக்கும்படி ஒரு கருத்தைப் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் விவேகானந்தர். அவரின் கருத்துப்படி பரிணாமம் என்பது உடலுக்கு மட்டும் அன்றி ஆன்மாவிற்கும் உண்டு. குரங்கு மட்டும்தான் மனிதனாகிறது என்று டார்வின் சொன்னார். விவேகானந்தர் அவரின் குறுகிய பார்வையை விரிவு செய்து எல்லா உயிர்களுமே மனிதர்கள் ஆகின்றன என்று சொல்கிறார்: “மக்களின் எண்ணிக்கை வளர வளர விலங்குகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது கவனத்திற்குரிய ஓர் உண்மை. விலங்குகள் எல்லாம் மனிதர்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. எத்தனையோ வகை விலங்குகள் ஏற்கனவே மனிதர்கள் ஆகிவிட்டன. இல்லையானால், அவை வேறு எங்குதான் போயிருக்க முடியும்?”

இந்தக் கருத்து எனக்கு மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது. டைனோசர்கள் எல்லாம் இப்போது மனிதர்களாகி வாழ்கின்றன என்று என்னால் நினைக்க் முடியவில்லை. ஆனால் ஒரு கருத்து மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்: விவேகானந்தரே! நீங்கள் சொல்லும் மாற்றத்தை விலங்குகள் முழுமையாக அடைந்ததாகத் தோன்றவில்லை. சில பல விலங்குகள் இண்டர்மீடியட்டில் ஃபெயிலாகி நிற்பதாகத் தெரிகிறது!

சமயப் பிரச்சாரம் என்பது அர்த்தமுள்ளதாக நியாயமானதாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. பொய்யான ஆதாரங்களை (கப்சாக்களை) உருவாக்கிக் கொண்டு மதம் பரப்புவது அந்த மதத்திற்கு இழிவையே தேடித் தரும். இறைவன் அத்தகைய அணுகுமுறையை ஆதரிப்பான் என்றும் ஆனந்தப்படுவான் என்றும் நினைப்பது அந்த இறைவனையே கேவலப் படுத்துவதாகும். ‘தாஜ்மகால்’ படம் போட்டு ‘book of love’ என்று தலைப்பிட்டு ஒரு நூல். உள்ளே புரட்டிப் பார்த்தால் எல்லாம் பைபிள் வசனங்கள். இதுதான் முறைகேடான சமயப் பிரச்சாரம் என்பது. இந்தப் போக்கு எந்த மதத்தில் இருந்தாலும் அது கண்டிக்கத் தக்கதுதான். ”மதமல்ல, மார்க்கம்” என்று மார்தட்டிக் கொள்வது ஒருபக்கம் இருக்கட்டும். நபி(ஸல்) அவர்களின் வருகையை முன்னறிவுப்புச் செய்யும் ஆதாரங்கள் என்று இஸ்லாமிய அழைப்பாளர்கள் முன் வைத்துப் பேசும் கிரந்தங்களில் இரண்டு மிகவும் முக்கியமானவை. புதிய ஏற்பாட்டிலிருந்து ரோமன் கத்தோலிக்க நிறுவனத்தால் நீக்கப்பட்ட பைபிள் பகுதியான பர்னபாஸ் எழுதிய சுவிசேஷம் மற்றும் இந்து மரபின் வேதங்களின் முடிபுகளான உபநிஷத்துக்களின் தொகுப்பைச் சேர்ந்ததாகச் சொல்லப்படும் அல்லோபநிஷத்.

பர்னபாஸின் சுவிசேஷம் குறித்த செய்திகளில் எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இந்த அல்லோபநிஷத் விஷயம் என் மனதைக் குடைந்துகொண்டே இருந்தது. அதன் உண்மைத் தன்மைமீது எனக்கு நம்பிக்கை ஏற்படவே இல்லை. இன்றுவரை. ஏ.ஹெச்.வித்யார்த்தி மற்றும் யு.அலீ ஆகியோர் எழுதிய “MUHAMMAD IN PARSI, HINDOO AND BUDDHIST SCRIPTURES” என்றொரு நூல். அதில் பார்சி கிரந்தங்களுக்கான அத்தியாயம் முப்பது பக்கங்களும், இந்து கிரந்தங்களுக்கான அத்தியாயம் என்பத்தெட்டுப் பக்கங்களும், பௌத்த கிரந்தங்களுக்கான அத்தியாயம் நூற்றியிருபது பக்கங்களும் உள்ளன. அந்நூலில் நால்வேதங்களில் சொல்லப்பட்டுள்ள செய்திகளில் நபிகள் நாயகம் பற்றிய முன்னறிவுப்புக்கள் ஆராயப்பட்டுள்ளதே தவிர அல்லோபநிஷத் என்று ஒன்று இருப்பதற்கான குறிப்பே இல்லை. இதைக் கண்ட பின் இந்த அல்லோபநிஷத் ஒரு கப்சாதான் என்ற என் எண்ணம் மேலும் உறுதி பெற்றது.

உபநிஷத்துக்களை ஆராய்ந்த பலரும் இது குறித்து எழுதியிருக்கிறார்கள் என்பது இணையத்தில் தேடிப் பார்க்கும்போது தெரிந்தது. 1947-ல் ஆங்கிலேயரின் ஆட்சி முடிவுக்கு வந்த காலம் வரை பல்வேறு உபநிஷத்துக்கள் தோன்றி வந்துள்ளன என்றுகூட ஒரு கருத்து சொல்லப்பட்டுள்ளது. (ஓஷோவின் ஒரு நூலுக்கு ’ஓஷோ உபநிஷத்’ என்று தலைப்பு இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இது அவரின் ஆங்கில உரைகளின் தொகுப்புத்தான். சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அல்ல.)

”சில உபநிஷத்துக்கள் சமீப காலத்தில் எழுதப்பட்டவை என்பதில் ஐயமே இல்லை. பாருங்கள், அல்லா-உபநிஷத் என்றுகூட ஒரு கிரந்தம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது” என்கிறார் மாக்ஸ் முல்லர். அதர்வ வேதத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் இந்த அல்லோபநிஷத் பிற்காலத்து இடைச்செருகல்தான்; ஏனெனில் அதர்வ வேதத்தின் பழைய உரையான கோபத்ப்ராஹமத்திலோ அல்லது அதன் சாகைகளிலோ இது பற்றிய குறிப்பே இல்லை என்கிறார் தயானந்த சரஸ்வதி.

முகலாய மன்னர் ஷாஜஹானின் மகன்களில் ஒருவரான தாரா ஷிகோஹ் இந்து ஞான மரபில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பண்டிட் ஜகந்நாத் என்ற சமஸ்கிருத அறிஞரின் உதவியுடன் ஏறத்தாழ ஐம்பது உபநிஷத்துக்களை அவர் ஃபார்சியில் மொழிபெயர்த்தார். இந்த அல்லோபநிஷத் என்பது அவர் இயற்றியதாக இருக்கலாம் என்று ஒரு கருத்துள்ளது. தன் பாட்டனாரான அக்பரின் பேரில் அக்பரோபநிஷத் என்ற ஒன்றும் அவரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அக்பர் ஒரு ஸ்த்ரீ லோலன் என்பது உலகறிந்த சேதி. தன்னுடைய அந்தப்புரத்தில் அவர் ஒருமுறை ‘பார்த்த’ ஆசை நாயகியை மறுமுறை பார்ப்பதற்கான வாய்ப்பு வருமா என்பதே தெரியாது என்ற அளவுக்கு அத்தனை பெண்களை வைத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. அவருக்கு இந்து மனைவியரும் பலர் இருந்தனர். ஜோதா பாய் மிகப் பிரசித்தம் (இப்போது அவர் ’போலிவுட் புகழ்’). அவரின் இந்து மனைவியர் துளசி பூஜையில் ஓதுவதற்காக ஒரு சமரசப் பிரதியாக எழுதப்பட்டதே இந்த அல்லோபநிஷத் என்றொரு பார்வை உண்டு. அக்பரின் அவையில் இருந்த இந்து பண்டிதர் ஒருவர் இதனை இயற்றியதாகவும் சொல்லப்படுகிறது. “அல்லோபநிஷத் அல்லா சூக்தம் என்பது இஸ்லாத்திற்கு மாறிய ஓர் இந்து அறிஞரால் எழுதப்பட்டது” என்றுரைக்கிறார் ஜெர்மன் இந்தியவிலாளரான ஆல்ப்ரெச் வெபர்.

எது எப்படியோ, இந்தக் கொளருபடி உபநிஷத் பற்றி ‘வந்தேமாதரம்’ பாடலை எழுதிய பங்கிம் சந்திர ச்சாட்டர்ஜி மிகக் கோபமாகக் குறிப்பிடுகிறார்: “முசல்மான்களின் ஆட்சியில் எவனோ ஒரு கிறுக்கனின் வெட்கங்கெட்ட வெளிப்பாடு இது” (”the shameless production of some sycophant of the Mussalman rulers of India.”)

’அல்லோபநிஷத்’ பற்றி விவேகானந்தர் பேசியிருக்கிறார். அப்போதே முஸ்லிம் பிரச்சாரகர்கள் இதனைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்று தெரிகிறது. விவேகானந்தர் பேசுவதைக் கேளுங்கள்: “உபநிடதங்கள் பல. அவை நூற்றெட்டு என்று கூறப்படுகின்றன. இன்னும் அதிகம் என்று சிலர் கூறுகிறார்கள். அவற்றுள் சில காலத்தால் மிகவும் பிற்பட்டவை என்பது தெளிவாக விளங்கும். அல்லோபநிடதம் என்று ஒன்றுள்ளது. இந்த உபநிடதத்தில் அல்லா புகழப்படுகிறார்; ராஜசுல்லா என்று அழைக்கப்படுகிறார் முகம்மது. இந்துக்களையும் முகம்மதியர்களையும் ஒன்றுபடுத்துவதற்காக அக்பர் காலத்தில் எழுதப்பட்ட உபநிடதம் இது என்று நான் கேள்விப்பட்டேன். சம்ஹிதையில் ‘அல்லா’ அல்லது ‘இல்லா’ என்ற சொல்லைக் கண்டுவிட்டார்கள். எனவே இந்த அல்லோபநிடதத்தில் முகமது, ராஜசுல்லா என்று அழைக்கப்படுகிறார். அதன் பொருள் எதுவோ, யாருக்குத் தெரியும்? இவ்வாறே பல உபநிடதங்கள் நவீன காலத்தில் தோன்றியுள்ளன. இவ்வாறு எழுதுவது எளிது. இதற்கு இலக்கணம் தேவை இல்லை. ஏனெனில் வேதத்தின் இப்பகுதிகளும் இலக்கணம் இன்றியே உள்ளன.”

கடைசியாக ஒரு மின்னல்: “’ஏறத்தாழ மனித இனமே பைத்தியக் கும்பல்தான்’ என்றார் புத்தர்பிரான். அது முற்றிலும் உண்மை என்றே தோன்றுகிறது.” விவேகானந்தரே! உங்களுக்குப் பின்னால் நூறு வருஷங்கள் கழித்துக் கேட்கும் எனக்கும் அது உண்மையாகத்தான் தோன்றுகிறது. புத்தர் சொன்ன கருத்து சும்மா ’நச்’னு இருக்கு!

6 comments:

  1. சிப்பிக்குள் நுழைந்த மண்ணை சிப்பி முத்தாக மாற்றுவதில்லையே.சிப்பிக்குள் "எப்படியோ" நுழையும் மண் என்று சொல்லும்போதே, எப்படி நுழைகிறது என்பதற்கு விளக்கம் கொடுக்க இயலாதபோதே, சிப்பிக்குள் மண் நுழையும் நிகழ்வு நிகழ்த்தப்படுவது என்பது தெளிவாகிறதே...மண்ணின் உறுத்தலை தணிக்கும் பொருட்டு சிப்பி செய்வதெல்லாம் மண்ணின் மீது ஒரு விதமான திராவத்தை ஊற்றி மூடுவது மட்டும் தானே? அப்படி இருக்க, சிப்பிக்குள் முத்து சிப்பியின் ஆக்கம் என்று எப்படி சொல்ல முடியும் ரமீஸ் பிலாலி அவர்களே?

    சிப்பிக்குள் மண்ணை எப்படியோ நுழைப்பதும், மண்ணை முத்தாக்கும் திறன் கொண்ட திராவத்தை சிப்பிக்குள் உண்டு பண்ணுவதும் இறைவனின் ஆக்கம் தானே அன்றி அது எப்படி சிப்பியின் ஆக்கம் ஆக முடியும்?

    "சிப்பிக்குள் வரும் மணல், கேவலம் ஒரு தூண்டுதலாக மட்டுமே இருந்தது. ஆனால் முத்தை உருவாக்கியது சிப்பியே" -- முத்து உருவாக தூண்டுதலாக (catalyst) இருக்கும் மண்ணை கேவலம் என்று எப்படி சொல்ல முடியும்? "எப்படியோ" அதை சிப்பிக்குள் நுழைய செய்வதும், மண்ணை முத்தாக்கும் ஆற்றல் உள்ள திராவத்தை சிப்பிக்குள் வைத்ததும் இறைவனின் செயலாக இருக்க "முத்தை உருவாக்கியது சிப்பியே" என்கிற விவாதம் எப்படி சரியாக இருக்க முடியும் என்று என்னுடைய சிற்றறிவு கொண்டு சிந்திக்கிறேன்.

    முத்தினை படைக்க இறைவன் பயன்படுத்தும் கருவிகளே மண்ணும், முத்தும், முத்துக்குள் உருவாகும் திரவமும், மண்ணுக்கும் திராவத்துக்கும் இடையே நடக்கும் வேதியியல் பரிமாணமும் என்றே நான் கருதுகிறேன். படைத்தல் என்னும் நிகழ்வில் எப்படி ஆணும், ஆணுக்குள் உண்டாகும் திராவமும், பெண்ணும், பெண்ணுக்குள் உண்டாகும் கரு முட்டையும், உள்ளே செலுத்தப்படும் இலட்சக்கணக்கான விந்தணுக்களில் "எப்படியோ" ஓர் விந்தணு மட்டும் உள்ளே இருக்கும் இலட்சக்கணக்கான கரு முட்டைகளில் "எப்படியோ" ஒரு கரு முட்டைக்குள் சென்று படைத்தலின் ஆரம்பம் நிகழ்வதை போலவே இதுவும் என்றே எனக்கு நினைக்க தோன்றுகிறது. அன்றியும் முத்தை உருவாக்கியது சிப்பியே என்கிற விவாதம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லையே?

    ”நம்மால் உருவாக்கப்பட்ட முத்தே உலகம்” -- இவை அற்புதமான வரிகளாக எப்படி ஆக முடியும்? இறைவனால் உருவாக்கபட்ட முத்தே உலகம். அந்த முத்தான உலகத்தை பார்த்து வியக்கும் போதெல்லாம் நாம் இறைவனை உணர்வதே ஞானம் அன்று நான் கருதுகிறேன்.


    “நீ இரவைப் படைத்தாய்
    நான் விளக்கைப் படைத்தேன்”-- இரவை படைத்தவனும் இறைவனே ....இரவுக்கான விளக்கை (நிலவை) படைத்தவனும் இறைவனே ....கதிரவனின் ஒளியை உள்வாங்கி பிரதிபளிக்கும் நிலவின் தன்மையே (அதிலிருந்து பெற்ற அறிவியியல் அறிவே) மனிதன் மின்சார விளக்கை படைத்ததன் மூலம். நீயும் படைக்கிறாய், நானும் படைக்கிறேன் ....நீயே நான் என்று சொல்லிக்கொள்வதில் மனிதனுக்கு இருக்கும் அற்ப ஆசையை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு முயற்சியாகவே இக்பாலின் இந்த கவிதை வரிகளை நான் காண்கிறேன்.

    ReplyDelete
  2. அடுத்து இந்த "குயவன், பானை" விவகாரத்திற்கு வருவோம். குயவன் பானையை படைத்தது போல இறைவன் இந்த உலகை படைத்தான் என்னும் உதாரணம் என்ன காரணத்தால் ஒரு குழந்தையால் கூட ஏற்றுக்கொள்ள முடியாத விசயமாகி போனது? உண்மையில் சொல்லப்போனால் இந்த உதாரணம் குழந்தைகளால் மட்டுமல்ல, மிக பெரிய ஞானிகளாலும் கூட ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு மிக சிறந்த உதாரணமே....இந்த உதாரணமும் அதை சார்ந்த விளக்கமும் ஏகத்துவமே...துவேதம் அல்ல என்றே எனக்கு தோன்றுகிறது. இதோ உங்கள் கேள்விகளுக்கு இந்த அரைவேக்காட்டின் [-:) ] விளக்கமும், உங்கள் சிந்தனைக்கு சில கேள்விகளும்:

    முதலில் இந்த உதாரணத்தை சரியாக புரிந்துகொள்ள முயற்ச்சிப்போம்:

    1. குயவன் பானையை படைத்தது போல இந்த உலகை இறைவன் படைத்தான் என்றால் குயவனை போல இறைவனும் இரண்டு கைகளும், கால்களும் கொண்டு இந்த உலகை படைத்தான் என்று அர்த்தம் கொள்வது தவறு. களிமண்ணில் இருந்து குயவன் எப்படி இறைவன் அவனுக்கு கொடுத்திருக்கும் படைப்பாற்றலையும், கலை நயத்தையும், இரசனையையும், மதி நுட்ப்பத்தையும் கொண்டு பானையை படைக்கிறானோ அதே போலவே இறைவன் தன்னுடைய படைப்பாற்றலையும் , கலை நயத்தையும், இரசனையையும், மதி நுட்பத்தையும் கொண்டு இந்த உலகை படைத்தான் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். படைப்பாளிகள் எல்லாம் கடவுள் என்று இந்த உதாரணம் கூற முயற்சிக்கவில்லை. படைப்பாளிகளிடம் இறைவனின் மேலே சொல்லப்பட்டுள்ள இறைத்தன்மைகள் இருக்கிறது என்று மட்டுமே இந்த உதாரணம் விளக்க முற்படுவதாக நான் கருதுகிறேன்.

    2. இறைவன் ஏழு வானங்களுக்கு அப்பால் அர்ஷ் என்னும் இடத்தில் மட்டுமே இருக்கிறான் என்று மட்டுமே நினைக்கும் அரைவேக்காட்டு பகுத்தறிவு முஸ்லிம்களும் தவறு. இறைவன் சர்வ வியாபி என்று நினைக்கும் (அரைவேக்காட்டு) ஏகத்துவ மெய்ஞாநிகளும் தவறு என்றே நான் நினைக்கிறேன். இறைவன் தன்னுடைய இறைத்தன்மைகள் மூலமாக எங்கும் வியாபித்திருக்கிறான். இரண்டையும் சேர்த்து இறைவன் அவனுடைய அரசிலிருந்து அவனுடைய இறைத்தன்மைகள் மூலமாக சர்வ வியாபியாக இருக்கிறான் என்று சொல்லிப்பாருங்களேன். அதில் தவறேனும் தொனிக்காது என்று நான் நினைக்கிறேன். அதுவே உண்மையான ஏகத்துவ மெய்ஞானம் என்றும் நான் நினைக்கிறேன்.

    3. "குயவன் பானையைச் செய்கிறான். எனவே குயவன் பானையில் இருக்கிறான் என்று சொல்ல முடியுமா? அதுபோலத்தான் இறைவனும் அவன் படைத்த உலகமும் என்று அவர்கள் வாதிப்பார்கள்" --- இதில் தவறென்ன இருக்கிறது ரமீஸ் பிலாலி அவர்களே? குயவன் செய்த பானையில் குயவன் இல்லை....குயவனின் படைப்பாற்றல், இரசனை, கலைநயம், மதி நுட்பம் போன்ற தன்மைகள் இருக்கிறது. அதை போலவே இந்த உலகத்தை படைத்த இறைவன் இந்த உலகத்தில் இல்லை ....இறைவனின் தன்மைகள் மட்டுமே இந்த உலகத்தில் இருக்கிறது என்ற விவாதத்தைதானே அவர்கள் முன்வைக்கிறார்கள்? பானையை பார்க்கும் தருணத்தில் அதை செய்த குயவனை நினைப்பது போலவே, இந்த உலகத்தை பார்க்கும் தருணத்தில் இந்த உலகை படைத்த இறைவனை நினைக்கிறோம். எப்படி பானையை செய்த குயவனை நினைக்க அவனுடைய உருவமோ, அவனுடைய இருப்பிடமோ தெரிந்திருக்க வேண்டிய தேவையில்லையோ, பானையும் அதில் தெரியும் குயவனின் தன்மைகளும் எப்படி போதுமானதோ அதை போலவே உலகை படைத்த இறைவனை நினைக்க அவனுடைய உருவமோ, அவனுடைய இருப்பிடமோ தேவையில்லை. உலகமும் அதில் தெரியும் இறைவனின் தன்மைகளும் போதுமானதாக இருக்கிறது. இந்த கோணத்தில் யோசிக்கும் போது இது மிக சிறந்த உதாரணமாக உங்களுக்கு தோன்றவில்லையா?

    அடுத்து ......உங்கள் பதிவின் மிக முக்கியமான பகுதி





    ReplyDelete
  3. 4. "....பானையின் இருப்பிற்குக் குயவனின் இருப்புத் தேவையில்லை என்பதைக் கொண்டு வந்து விடுகிறது. இது துவிதமே அன்றி ஏகத்துவம் அல்ல.” ---
    பானையின் இருப்பிற்கு குயவனின் இருப்பு தேவையில்லை என்ற நிலைப்பாட்டினை இந்த அரைவேக்காட்டு பகுத்தறிவு முஸ்லிம்களின் விவாதம் கொண்டுவந்து விடுவதால் இது துவிதமே அன்றி ஏகத்துவம் இல்லை என்றா சொல்கிறீர்கள்? "என்ன கொடுமை சரவணன் இது?" -:)

    பானையின் செயல்பாட்டிற்கு தேவையான விசயங்களை அதை செய்யும் போதே கவனத்தில் கொண்டு செய்துவிட்ட பிறகு பானையின் இருப்பிற்கு குயவனின் இருப்பு தேவையில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா நீங்கள்? ஏற்றுக்கொள்கிறேன் ....பானைக்கு குயவனின் இருப்பு தேவையில்லை....அனால்...இந்த உலகத்தின் இருப்பிற்கு இந்த உலகத்திலேயே இறைவனின் இருப்பு தேவை என்று சொல்ல முற்ப்படுகிறீர்களா?

    இந்த உலகத்தின் இருப்பிற்கும், இந்த உலகத்தில் உயிர்களின் பிறப்பிற்கும், இருப்புக்கும் தேவையான விசயங்களை இந்த உலகத்தை படைக்கும் போதே கவனத்தில் கொண்டு இறைவன் படைத்துவிட்ட பிறகு, மேற்கொன்டு வழிகாட்டுதலுக்கென வேத நூல்களையும், இறைத்தூதர்களையும் ஏற்பாடு செய்துவிட்டபிறகு இந்த உலகத்திலேயே இறைவனின் இருப்பிற்கு அவசியம் எது? அவனுடைய அர்ஷ்ளிருந்தே அவன் ஆட்சி செய்ய இயலாதோ?

    நம்மில் பெரும்பாலோர் இறைவனுக்கும் இறைத்தன்மைகளுக்கும் உள்ள வேறுபாட்டினை உணர்ந்துகொள்ள வில்லையோ என்ற அச்சமும், கவலையும் எனக்கு இருக்கிறது.
    இறைத்தன்மைகளே இறைவன் என்ற விவாதத்தை எடுத்துக்கொண்டாலும் இந்த உலகத்தில் அவன் வெளிப்படுத்தியிருக்கும் (கவனிக்கவும்: கடந்த காலத்தை மட்டுமே இங்கே நான் உபயோகபடுத்தி இருப்பதை) அவனுடைய தன்மைகள் மட்டுமே இறைத்தன்மைகள் என்று நம்மால் நிச்சயமாக சொல்ல முடியுமா? நாம் சார்ந்த இந்த உலகம் போலவும் எத்தனையோ உலகங்கள் இருக்கலாம், அந்த உலகங்களில் எத்தனையோ படைப்புகள் இருக்கலாம், அங்கே, அவற்றில் நாம் இங்கே உணர்ந்திருக்கிற, புரிந்திருக்கிற இறைத்தன்மைகளுக்கு முற்றிலும் வேறான இறைத்தன்மைகள் வெளிப்படுத்த பட்டிருக்கலாம், வெளிப்படுத்த பட்டுக்கொண்டிருக்கலாம், வெளிப்படுத்தபடலாம் இல்லையா? இந்த கேள்விக்கான உங்களுடைய பதிலை "ஆம்" என்று கொண்டால்.....அப்படி இருக்கும் போது, இறைவனின் இருப்பு இங்கேயே இருக்கிறது என்று சொல்லமுடியாமல் இறைவனின் இருப்பு இங்கேயும் இருக்கிறது என்று மட்டுமே சொல்ல முடியும் இல்லையா? ஆக, இறைவனின் இருப்பு வேறு ஏதேனும் இடங்களிலும் இருக்கலாம் என்றாகிறபோது இறைவன் அவனுடைய அர்ஷ்லிருந்து ஆட்சி செய்கிறான் ....அவனுடைய தன்மைகளின் மூலமாக அவன் சர்வ வியாபியாக இருக்கிறான் என்று சொல்வதுதானே சாலபொருத்தம் ....அல்லது...சாலபொருந்தும்?



    “மிகத் தாழ்ந்த படைப்பான புழுவிலும் மிக உயர்ந்த படைப்பான மனிதனிலும் ஒரே வகையான தெய்விகமே இருக்கிறது. இந்தத் தெய்விகம், புழுவில் மிக அதிகமாகவும் மனிதனில் மிகக் குறைவாகவும் மாயையால் மறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் உள்ளே தெய்விகம் இருக்கிறது. இதுவே நல்லொழுக்கமும் என்பதற்கு அடிப்படை.” ---விவேகானந்தரின் சொல்லாடலை இங்கே கவனியுங்கள்....தெய்வீகம் என்றே அவர் சொல்லி இருக்கிறார்...எல்லா படைப்புகளிலும் தெய்வீகம் இருக்கிறது என்கிறாரே அன்றி தெய்வம் இருக்கிறது என்று சொல்லவில்லை .....தெய்வம் வேறு தெய்வீகம் வேறு என்பதை விவேகானந்தர் புரிந்து கொண்டிருந்திருக்கிறாரோ?


    விவேகானந்தரிடம் ஒரு கருத்துச் சொல்ல தோன்றுகிறது: “இங்கே உள்ள சிலரைக் கவனித்துப் பார்த்தால் புழு அவர்களுக்கு எவ்வளவோ மேல் என்று சொல்லலாம் ஐயா.”
    --- புழுவிலும் புழுவிலும் கீழான நீங்கள் குறிப்பிடும் சிலரிலும் (இன்னமும்) தெய்வீகம் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடகூடாதே .....மறந்து அவர்களை மருதலித்துவிடகூடாதே. மறுதலித்து புத்தனை போலவும் "ஏறத்தாழ மனித குலமே பைத்திய கும்பல்தான்" என்று நாமும் அவசரமாக ஏதேனும் பிதற்றி விட கூடாதே என்ற கவலை வருகிறது எனக்கு.

    ReplyDelete
  4. "ஆசையே துன்பங்களுக்கெல்லாம் காரணம்" என்கிற புத்தனின் ஒரு பிதற்றலைதான் நான் இத்தனை நாளும் அறிந்திருந்தேன் ....இன்று உங்கள் பதிவின் மூலமாக புத்தனின் "ஏறத்தாழ மனித குலமே பைத்தியக்கும்பல்தான்" என்கிற இன்னொரு பிதற்றலையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். "பிதற்றல்" என்கிற சொல்லாடலுக்காக இப்போதைக்கு மன்னிக்கவும்.....வேறோர் சந்தர்ப்பத்தில் ஏன் நான் அப்படி சொல்கிறேன் என்பதற்கான விளக்கத்தை தருகிறேன் (இறைவன் நாடியிருந்தால்).

    ஆசையே துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்பது "வெறும் ஞானம்",
    ஆசையே இன்பங்களுக்கு (for the spiritual pleasure and for salvation) எல்லாம் காரணம் என்பதே "மெய் ஞானம்" என்று நான் கருதுகிறேன்.

    ஏறத்தாழ மனித குலமே பைத்தியக்கும்பல்தான் என்ற புத்தனின் அசரவைக்கும் ஞானம் என்னை ஏனோ அதிரவைக்கிறது, அலறவைக்கிறது ....."ஏறத்தாழ" என்கிற வார்த்தை பிரயோகத்தின் காரணமாக அது இருக்கலாம். "மனித குலமே பைத்தியக்கும்பல்தான்"என்று மட்டுமே சொல்லி இருந்தாலாவது புத்தனை ஞானகிருக்கன் என்கிற அளவிலாவது ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

    உங்களின் அடுத்த பதிவிற்க்காக வழக்கம் போலவே ஆவலுடன் காத்திருக்கிறேன் ......

    ReplyDelete
  5. அன்புள்ள சையத்,
    அருமையான பின்னூட்டம் இது. சில இடங்களில் உங்களின் பார்வைக் கோணம் எனதுடன் ஒத்துப்போகிறது. சில இடங்களில் மாறுகிறது. இது இயல்புதான். சில விஷயங்களை நீங்கள் புரிந்து கொண்டிருக்கும் கோணத்தில் உள்ள் குறைபாடுகளை வைத்துத்தான் நீங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கு விடை பகர முடியும். இப்போதே தொடங்கி நான் எழுத ஆரம்பித்தால் இன்னொரு வாரம் காலி! ஒரு நூலாக விரியும் அளவுக்கான விவாத விதைகளை உங்களின் இந்தப் பின்னூட்டங்கள் தூவியுள்ளன. சாவகசமாகப் பேசுவோம்.

    ReplyDelete
  6. "இந்தியாக்காரன் பேசலைனா செத்துப்போயிடுவான்" அப்படின்னு பாட்சாவில் தலைவரே சொல்லி இருக்காரே .....
    அவர் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி இல்லையா? -:)
    ஏதோ சில வரிகளில் பின்னூட்டம் எழுதாமல் பக்கம் பக்கமாய் எழுதியிருக்கிறேனே அதிலிருந்தே தெரியவில்லையா அப்படி பேசலைனா செத்துப்போய்விடக்கூடிய இந்தியாக்காரன் நான் என்று. என்னிடம் நிறைய பேசலாம் என்கிறீர்களே!!! சர்க்கரை வியாதி இல்லாத (இதுநாள்வரை - இறைவன் போதுமானவன்) எனக்கு கரும்பு தின்ன கசக்குமா என்ன? -:)
    நிச்சயமாக பேசுவோம் ரமீஸ் பிலாலி அவர்களே.....பிரபஞ்சக்குடிலும் நெஞ்சாங்க்கூட்டிலும் ஒத்துப்போயிருக்கிற விசயங்களை பற்றியும் பேசுவோம்
    குடிலும், கூடும் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிற (?!) விசயங்களைப்பற்றியும் பேசுவோம் (இறைவன் நாடியிருந்தால்)

    ReplyDelete