Wednesday, November 14, 2012

கவிதையும் எய்ட்ஸும்



நான் ஒரு கவிஞன் என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். சமயத்தில் நானே அப்படி நம்புவதுண்டு. தமிழ்ச்சூழலில் ஒருவன் கவிஞன் என்று தன்னை அழைத்துக் கொள்வதற்குச் சிறப்பான திறமை ஏதும் தேவை இல்லை. எகனை மொகனையாக நாலு வார்த்தை வந்து விழுந்தால் போதும், ‘கவிஞரே’ என்று விளிக்கப்படுவீர்கள். ஆனால் அப்படி உங்களை அழைப்பவர்களுக்குக் கவிதை என்றால் என்னவென்றே தெரியாது என்பது வேறு விஷயம்.

அன்றொரு நாள் ஸ்டாஃப் ரூமில் இதழ்களை மேய்ந்துவிட்டு – அதாவது, செய்தித்தாள்களும் வார மாத பத்திரிகைகளையும் புரட்டிவிட்டு – மணி அடித்ததும் வகுப்பறைக்குச் செல்ல நடந்து கொண்டிருந்தேன். மூச்சிரைக்கப் பின்னாடியே ஓடி வந்த ஒரு மாணவன், ‘சார், ஒரு உதவி’ என்றான். என்ன என்று கேட்டதற்கு கவிதை ஒன்று எழுதித்தர வேண்டும் என்றான். அவனுடைய நண்பனின் அண்ணனுக்குக் கல்யாணமாம். அதற்கு நான் ஒரு வாழ்த்துக் கவிதை எழுதித் தர வேண்டுமாம்.

”தம்பி, இப்படித் திடுதிப்புன்னுக் கேட்டா கவிதை வராது. அப்படியெல்லாம் இன்ஸ்டண்ட்டா எழுதிப் பழக்கமில்ல”

“பரவாயில்லை சார். நீங்க டைம் எடுத்துக்கங்க. நான் கடைசி ஹவர் முடிஞ்சதும் வந்து வாங்கிக்கிறேன்”

“இல்லப்பா, இந்த மாதிரி வாழ்த்துக் கவிதையெல்லாம் நான் எழுதறதில்ல.”

இப்படி நான் சொன்னது பொய் அல்ல. வாழ்த்துக் கவிதை எழுதுவதற்கு ஓர் ஆத்மார்த்தமான ஈடுபாடு வேண்டும். யாரென்றே தெரியாத பண்ணாடைக்கெல்லாம் எப்படி வாழ்த்துக் கவிதை எழுதுவது? சமீபத்தில் இளையராஜா, நுஸ்ரத் ஃபதேஹ் அலீ ஃகான் ஆகியோரைப் பற்றிக் கவிதை எழுதியிருந்தேன். அவர்கள் என் அகத்தைச் செழுமை செய்தவர்கள். என் ஆளுமையின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு உண்டு. அதனால் அவர்களைப் பற்றிக் கவிதை தானாகவே சுரந்து வந்தது. நேரில் அவர்களை நான் பார்த்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அகவெளி என்று ஒன்றுண்டு. அது கால தேச வர்த்தமானஙகளுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான் மௌலானா ரூமியுடன் ஒரு அன்யோன்யத்தை நான் உணர முடிகிறது. நான் அவருடன் வாழ்ந்து வருகிறேன் என்று சொன்னால் அது உண்மை. நேரில் பார்க்கும் எல்லோருடனும் நாம் அகத்தால் உறவு கொள்வதில்லை. எனவே, என் உடலின் வளர்ச்சிக்கு அரிசி பருப்பு இத்தியாதிகளை நான் வாங்கும் மளிகைக் கடை அண்ணாச்சியுடன் நான் மனிதாபிமான அடிப்படையில் சிரித்துப் பேசிவிட்டு வருவேன் என்றாலும் அவரின் சஷ்டியப்த பூர்த்திக்கு வாழ்த்துக் கவிதையெல்லாம் எழுதித் தர முடியாது.

ஆனால் தமிழ்ச்சூழலில் கவிதை என்றாலே அது பல்லிளிப்பு விவகாரமாக மாறிக் கிடக்கிறது. திருமண வாழ்த்துக் கவிதை, வளைகாப்புக் கவிதை, பிறந்த நாள் கவிதை, பிறந்தால் கவிதை, இறந்தால் கவிதை, வழியனுப்பக் கவிதை, வரவேற்கக் கவிதை, கிரகப் பிரவேசக் கவிதை, சிறைப் பிரவேசக் கவிதை, விவாகரத்துக் கவிதை, விவகாரம் ஆனால் கவிதை, பாஸ் ஆனால் கவிதை, ஃபெயில் ஆனால் கவிதை, காதலை ஜொல்லக் கவிதை, காதல் தோல்விக் கவிதை, சாதித் தலைவனின் திமிரைப் பாராட்டும் கவிதை, போலிச் சாமியாரின் புகழ் பாடும் கவிதை, தொழிலதிபரின் சாதனைகளை விளக்கும் கவிதை என்று இப்படித் தமிழ்க்கிவிதை பல ரூபங்களில் வெளிப்பட்டு நோகடிக்கிறது.

இது போன்ற சூழல் வேறு மொழிகளில் இருக்குமா என்று எனக்கு ஐயமாக இருக்கிறது. மகாகவி பாரதியாரையே டபுள் மீன்ங் செய்யுள்கள் எழுத வைத்து மகிழ்ந்த புரவலர்கள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே! ’தமிழ் என்பது கவிதையின் மொழி; இங்கேதான் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் கவிதை இருக்கிறது” என்று ஒருவர் குறிப்பிட்டார். ஆமாம், “சூறியன் மரைந்தது! இமயம் சாய்ந்தது! இதயம் வழிக்கிறது!” என்று போஸ்டர் போடுவார்கள். அதெல்லாம் இங்கே கவிதை! கவிதை! ஆர்டர் கொடுத்துச் செய்யப்படும் பொம்மைகளுக்கும் குழந்தைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களிடம் என்ன பேச முடியும்? ’செய்யுள் என்பது செய்யப்படுவது; கவிதை என்பது உருவாகி வருவது’ என்று ஒரு விளக்கம் உண்டு. கால அட்டவனை போட்டுக் கவிதை எழுத முடியாது. செய்யுள்தான் செய்யலாம். செய்யப்படுவதற்கும் நிகழ்வதற்கும் அடிப்படையிலேயே பெரிய வேறுபாடு உண்டு. விபச்சாரத்திற்கும் தாம்பத்யத்திற்கும் போல. இந்த வாழ்த்துக் கவிதைக் கலாச்சாரம் என்பது விபச்சாரத்தைப் போல் அருவருப்பானது.

“சார் அப்படியெல்லாம் நீங்க சொல்லக்கூடாது சார். போன வருஷம் ஒரு பையனோட அண்ணன் கலியாணத்துக்கு நீங்க ஒரு கவிதை எழுதித் தந்தீங்க. நச்சுன்னு இருந்திச்சு சார்”

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “நானா எழுதிக் கொடுத்தேன்? இருக்காதேப்பா” என்றேன்.

“நீங்கதான் சார் எழுதிக் கொடுத்தீங்க. செகண்ட் யேர் கெமிஸ்ட்ரி பையனுக்கு”

“அப்படியா? என்ன எழுதீருந்தேன்?”

“அவனோட அண்ணன் சாஃப்ட்வேர் இஞ்சினியர் சார். அதுனால ‘சாஃப்ட்வேரும் ஹார்டுவேரும் போல் வாழ்க’ன்னு ஒரு வரி போட்டிருந்தீங்க. அதை எல்லாரும் பாராட்டுனாங்க சார். அது மாதிரி ரெண்டு வரி சொல்லுங்க சார்”

புரிகிறது. வாழ்த்துக் கவிதையெல்லாம் எழுத முடியாதுன்னு சொல்லிவிட்டு, எப்படியெல்லாம் கவிதைங்கற பேர்ல கிறுக்கித் தள்ளுகிறார்கள் என்று ஒரு லெக்ச்சர் கொடுத்தேன். அப்போது பகடியாகச் சொன்னதையே அவன் அற்புதமான கவிதை என்று நினைத்துக் குறிப்பெடுத்துப் போட்டுவிட்டான் போலும்!

”சரிப்பா. உன் ஃப்ரெண்டோட அண்ணன் என்ன செய்றார்னு சொல்லு. சாஃப்ட்வேரும் ஹார்டுவேரும்னு அவனுக்குச் சொன்ன மாதிரி எதாவது வருதான்னு பாக்கலாம்”

“அவரு அண்டர்கார்மெண்ட் ஷோரூம் வச்சிருக்கார் சார்”

“ம்க்கும், கிழிஞ்சுது. இதுக்கெல்லாம் எப்படிய்யா எழுதுறது? அண்டர்வேரும்... ம்ஹும் இதெல்லாம் ஒத்துவராதுய்யா. ஆள விடு”

“சார் சார் சார், அப்படிச் சொல்லாதீங்க சார். நீங்கதான் கவிதை எழுதுறதுல எக்ஸ்பெர்ட்டுன்னு ஒங்க டிபார்ட்மெண்ட்ல சொன்னாங்க”

உள்குத்து: ஆஹா, நமக்கு எதிரிகளே இல்லேன்னுல்ல நெனச்சுக்கிட்டிருக்கோம்.

“தம்பி, சொன்னாக்க கேளுப்பா. நான் க்ளாசுக்குப் போயிட்டிருக்கேன். சர்ரியலிசக் கவிதை மாதிரியெல்லாம் ஃப்ளோவா எனக்கு வராது.”

“பரவாயில்ல சார். சட்டுன்னு என்ன தோனுதோ சொல்லுங்க”

”ம்... இந்தியாவும் எய்ட்ஸும் போலன்னு தோனுது. இந்த வரிய போட்டுக்கலாமா?”

நான் கோபமாகச் சொன்னதாக நினைத்துக் கொண்டு அவன் திரும்பிப் போய்விட்டான். எய்ட்ஸ் என்னைக் காப்பாற்றி விட்டது! நினைத்துப் பார்த்தால், கவிதைக்கான மனநிலையே இங்கே எய்ட்ஸ் பீடித்துக் கிடக்கிறது என்பது விளங்கும். ஜனரஞ்சக இதழ்களின் இலவச இணைப்புக்கள் வழங்கும் துணுக்குக் கவிதைகளால் இந்த எய்ட்ஸ் பரவுகிறது.

சட்டென்று வந்த இந்த வரி எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது. ஸ்டாஃப் ரூமில் படித்த பத்திரிகை ஒன்றில் சர்வே ரிப்போர்ட் போட்டிருந்தார்கள். இந்தியாவில் எய்ட்ஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறதாம். அந்தச் செய்தியின் எதிரொலிதான் மாணவனிடம் நான் சொன்ன வரி. இதுவே பத்தாண்டுகளுக்கு முன்பாக இருந்தால் ‘அமெரிக்காவும் எய்ட்ஸும் போல’ என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இப்போது நம் நாட்டையே குறிப்பிட முடிகிறது. இந்தியா வல்லரசாகி வருகிறது அல்லவா?

No comments:

Post a Comment