Friday, November 9, 2012

யாளி




கூரிய பற்கள்
சிரிக்கும் வாயினுள்
கிடக்கும் கற்பந்து

கைவிட்டு அந்தக்
கற்பந்து எடுக்க
முயல்வார் யாவரும்
அலகிலா விளையாட்டாய்

வலக்கை மாற்றி
இடக்கை நுழைத்து
முயன்றான் அன்றொருவன்

யுக்தி குயுக்தி
எதுவும் பலிக்காது காணும்

வலக்கை முயல்வதால்
வலதுசாரிப் பந்தென்றும்
இடக்கை முயல்வதால்
இடதுசாரி பந்தென்றும்
இயம்பத் தகுமோ?

அதுவோ கற்பந்து
அதற்கேன் யாளியின் காபந்து?

’அதுதானே விழுங்கிற்று
அதுவே கக்கட்டுமே?’
என்றான் ஒருவன்

’எப்படி விழுங்கிற்றோ
அப்படியே கக்கும்’
என்பதும் சொன்னான் சேர்த்து

’பல்லுடைத்து
எடுப்போம் வெளியே’
என்றானொரு புரட்சிக்காரன்

‘யாளியின் வாய்
காதல்
அதனுள் என் மனம்
கற்பந்து’
என்றான் ஒரு யுவன்

விழுங்கவும் முடியாமல்
துப்பவும் முடியாமல்
அவ்ஸ்த்தை பாவனைதானோ
அதன் முகத்தில்?
அசப்பில்
ஆனந்தச் சிரிப்பாய்
தெரிகின்றதே?
இஃதொரு கலைஞனின்
குறியீட்டுச் சுயோவியம்

’யாருடைய தலை?’
என்றாரொரு தத்துவவாதி
யாருடைய பந்தென்றான்
பித்துவவாதி

யாளியொரு பிள்ளை ஆக
யசோதையின் கண்களால்
அதன் வாய்க்குள் பார்த்து
அதிசயித்தேன் நான்.

No comments:

Post a Comment