Monday, May 9, 2011

கல்லும் கண்ணாடியும்அப்துல் ரகுமான் தன கஸல் கவிதைகளை முதன் முதலில் தொண்ணூறுகளின் மத்தியில் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். அவை அப்போதே பிரபலம் அடைந்ததாகவும் அவற்றைப் பல கவிஞர்கள் 'சுட்டு' வேறு வடிவங்களில் வெளியிட்டதாகவும் திரைப்படப் பாடல்களில் அவை பயன்படுத்தப் பட்டன என்றும் அப்துல் ரகுமான் கூறுகிறார் ('மின்மினிகளால் ஒரு கடிதம்' நூலின் முன்னுரை.)


உருதுக் கவிஞர் ஜிகர் முராதாபாதியின் கஸல்களைப் படித்துக் கொண்டிருந்தபோது அதில் இப்படி ஒரு கண்ணி இருந்தது:

"அன்பர்களே! காதல் என்பது
விளையாட்டல்ல.
அது
கண்ணாடியும் கல்லும்
சந்தித்துக் கொள்வது."

ஜிகரின் இக்கவிதை கவிக்கோவை வெகுவாகப் பாதித்திருக்க வேண்டும். அவர் அதைத் தன் மின்மினிகளுடன் பிடித்து வைத்திருக்கிறார்.

"காதல் என்பது
கல்லும்
கண்ணாடியும்
ஆடும் ஆட்டம்."

என்று அவர் சொல்லியிருந்தார். ஜிகர் முராதாபாதியின் கருத்தை இதில் அவர் மாற்றியிருப்பது தெரிகிறதா?

'காதல் என்பது விளையாட்டல்ல' என்று சொல்கிறார் ஜிகர். 'இல்லை அது விளையாட்டுத்தான்' என்கிறார் அப்துல் ரகுமான். கல்லும் கண்ணாடியும் ஆடும் ஆட்டம்! உடைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. உடைவோம் என்ற பயம் இல்லை. உடைவது விளையாட்டாகவே நடந்து விடுகிறது.

பின்னாள் ஒரு திரைப்பாடலில் இது பள்ளவியாகவே வந்து அலங்கரித்தது. அதை எழுதிய 'களவு'க் கவிஞன் யார் என்று தெரியவில்லை.

"ஒரு கல்
ஒரு கண்ணாடி
உடையாமல் மோதிக்கொண்டால்
காதல்."

என்று அப்பாடல் கதறியது.


இந்தக் கல்-கண்ணாடி ஆட்டத்தைக் கொஞ்சம் நீட்டித்துப் பார்க்க எனக்கும் ஆசை வந்தது. ஜிகரும் அப்துல் ரகுமானும் சொன்னதில் சூஃபிக் கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் அது அவர்களுக்கே வெளிச்சம். என்னால் அனுமானம் செய்ய முடியவில்லை. என் மனதில் இப்படித் தோன்றியது:

"கல் பட்டால்
கண்ணாடி உடையும்.
உன் கண் பட்டால்
கல்
கண்ணாடி ஆகும்."

இதில் என்ன சூஃபித்துவக் கருத்து இருக்கிறது? என்று நீங்கள் நினைக்கலாம். நான் எதை நினைத்து எழுதினேன் என்பதைச் சொல்லிவிடுகிறேன்.

'கண்ணாடி' என்பது ஓர் அருமையான சூஃபித்துவக் குறியீடு. படைப்புக்கள் அனைத்துமே இறைவனைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்னும் சூபிக் கருத்து மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒன்று.

மனிதனின் மனமும் கண்ணாடி என்று சொல்லப்படுவதுண்டு. கண்ணாடியில் தூசு படிந்தால் அது முகத்தைச் சரியாகப் பிரதிபலிக்காது. அதைத் துடைத்து மெருகேற்ற வேண்டும்.

"ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மெருகூட்டல் உண்டு. இதயத்தை மெருகேற்றுவது இறை தியானம்." என்று நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் நவின்றுள்ளார்கள். (அறிவிப்பு: அபூ தர்தா(ரலி); இப்னு உமர்(ரலி), நூல்:பைஹகீ.)  இதயத்தைக் கண்ணாடி போல் ஆக்குவது என்பது சூஃபிகளின் அடிப்படைப் பயிற்சிகளில் ஒன்று. கண்ணாடி இருக்கிறது. ஆனால், அது வெறும் பிரதிபலிப்புத் தன்மை மட்டுமே. சுயமாகக் காட்டுவதற்கு அதில் ஒன்றுமில்லை.

சூஃபி என்பவர் அப்படி ஒரு கண்ணாடிதான். அவர் இல்லாமல் இருக்கிறார். சுயத்தைப் பொறுத்தவரை இல்லாமலும் (ஜாத்தே அதம்), இறைவனின் உள்ளமையைக் கொண்டு இருப்பவராகவும் (மவ்ஜூது பில்லாஹ்).

"ஒரு கண்ணாடியைக் கையில் எடுத்துப் பார்க்கிறீர்கள். உங்கள் முகத்தை அது சரியாகப் பிரதிபலிக்கவில்லை. அல்லது, உங்கள் முகத்தை மாற்றி வேறு மாதிரி காட்டுகிறது. என்ன செய்வீர்கள்? அதை வீசி எறிந்துவிட மாட்டீர்களா? எந்தக் கண்ணாடி சுத்தமாக இருந்து முகத்தை உள்ளபடி பிரதிபலிக்கிறதோ அதைத்தான் கையில் வைத்துக் கொள்வீர்கள். அதுபோல் அல்லாஹ் தன காதலர்களான ஆரிஃபீன்களைப் (ஞானிகள்) பாதுகாத்துக் கொள்கிறான்." என்று சூபி மகான் முஷ்தாகீ ஷாஹ் ஃபைஜி (ரஹ்) அவர்கள் விளக்கினார்கள்.

அக்காலத்தில் ஒரு கலை இருந்தது. கல்லைத் தேய்த்துத் தேய்த்து வழவழப்பாக்கிக் கண்ணாடியாக மாற்றும் கலை. மௌலானா ரூமயின் 'மஸ்னவி' காவியத்தில் அற்புதமான கதை ஒன்றுள்ளது. அதில் கிரேக்கர்களும் சீனர்களும் மன்னனின் அரண்மனைச் சுவரை ஓவியங்களால் அலங்கரிக்கப் போட்டியிடுவார்கள்.

கிரேக்கர்கள் பலவகையான வண்ணங்களைக் கொண்டு பல உருவங்களை மிகத் திறமையாக வரைவார்கள். சீனர்கள் வெறுமனே சுவரைத் தேய்த்து மெருகேற்றிக் கொண்டிருப்பார்கள். இருவருக்கும் இடையில் ஒரு திரை போடப்பட்டிருக்கும்.

ஒரு மாத கெடு முடிந்துவிடும். கிரேக்கர்கள் வெற்றி பெரும் மமதையில் இருப்பார்கள். சீனர்கள் சுவரை ஒரு கண்ணாடியாக மாற்றியிருப்பார்கள். திரை விலக்கப்பட்டதும் கிரேக்கர்களின் ஓவியங்கள் எதிர் சுவரில் - சுவரா? கண்ணாடி அல்லவா அது?- அப்படியே பிரதிபலிக்கும். சூரிய வெளிச்சம் மாறுவதற்கு ஏற்ப அதுவும் மாறி ஜாலம் காட்டும். சீனர்கள் வெற்றி பெற்றார்கள் என்று மன்னன் அறிவித்துவிடுவான்.

இக்கதையின் மூலம் மௌலானா ரூமி விளக்குகிறார்கள், கிரேக்கர்களின் உழைப்பு மூளை உழைப்பு. அவர்கள் தங்கள் திறமையை நம்பினார்கள். சீனர்களின் உழைப்பு இதயத்தின் உழைப்பு. அவர்கள் தங்களின் கவனத்தை மெருகேற்றுவதில் வைத்தார்கள். அதுவே சூஃபிகளின் கலை.எதையும் பிரதிபலிக்காத கல் போன்ற இதயம் கொண்டவர்கள் உண்டு. அத்தகைய கரடு முரடர்கள் சூஃபிகளை எதிர்ப்பவர்கள்.

இறைவனைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்ற இதயம் கொண்டவர்கள் சூஃபிகள்.

கல்லைத் தேய்த்துக் கண்ணாடி ஆக்குவது கொஞ்சம் கஷ்டமான வேலைதான். ஆனால் இறைவனின் அருள்பார்வை விழுந்தால் கல் சட்டென்று கண்ணாடி ஆகிவிடுவதில் ஆச்சரியம் இல்லை.


இதுவே என் கவிதையின் கருத்து.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(விரைவில் வெளிவர இருக்கும் "சூஃபித்துவப் பார்வையில் கவிக்கோ என்னும் நூலில் இருந்து இது ஒரு பகுதி.)

Saturday, May 7, 2011

கஸல் துளிகள்


மௌன ருது
அடைந்தேன்
சொற்கள்
பொம்மைகள் ஆகிவிட்டன.

~~~

தற்காலிகம்
நிரந்தரம்போல் தெரிகிறது
மனிதனின்
வாழ்க்கைக்கு முன்.

விட்டிலின் வாழ்க்கை
வரம்போல் தெரிகிறது
மனிதனின்
வாழ்க்கைக்கு முன்.

~~~உன் நினைவுகள் ஒரு
மலைப்பாதை.
ஏற ஏறத்
தலை சுற்றுகிறது.

~~~


கண்ணின் பாவை...
பார்வை
பர்தா அணிந்துள்ளது.

~~~

உனக்காகக் காத்திருந்தேன்
காதல் கொண்ட 
கன்னிப் பெண்ணின்
ரகசியம் போல்.

~~~கண்ணீர் மழை  
அதிகமாகும் போதெல்லாம்
என் சூரியனே!
உன் வரவையே
எதிர்பார்க்கிறேன். 

Monday, May 2, 2011

ரிட்டர்ன் டிக்கட்பிறப்பு என்பது
யூ-டர்ன்.

இப்போது
என் வயது
x  - 34 

இறப்பில் 
சமன்பாடாகிவிடும்
பூஜ்யத்தொடு.

அதன்பின் 
வாழ்வுண்டு
வயதில்லை.

நேற்று அவர்
அறுபது வயதில்
இறந்தபோதுதான்
தெரிந்தது
அவர் பிறந்தபோது
அறுபது வயதாய்
இருந்த விவரம்.

அவனிடமிருந்து வந்தோம்
அவனிடமே
திரும்பிக் கொண்டிருக்கிறோம். 

கரை கரை... 

ஒன்று
ஒன்று மட்டுமல்ல
ஏகம்.

அல்லாஹ்
அளவற்ற அருளாளன்
இரண்டும் ஒன்று.

தொண்ணூற்றி ஒன்பதும்
ஒன்று.

ஒன்றாகும் வரை
எண்களைக் கரை.

கரையில் நிற்கும்
கணக்கு
கடலுக்கு என்றும்
பிணக்கு.

கரையாத வரை
கரைக்கு வராதது
கிடைக்காது
உனக்கு.