Friday, January 25, 2019

ஏகத்துவ ஒருமை


அண்மையில் மிகவும் சுவைத்துப் படித்த நூல் நண்பர் நூருல் அமீன் அவர்களின் “ஏகத்துவ இறைஞானம் – ஓர் எளிய விளக்கம்”. அதன் அழகிய அட்டைப்படம் பற்றி “நின்றிலங்கும் நீலம்” என்னும் குறுங் கட்டுரையில் முன்பே எழுதினேன். அட்டை மட்டும் அல்ல, உள்ளே தாள்களும் வழுவழுப்பான கெட்டியான ஃபோட்டோ தாள்கள். நூற்றி இருபத்தாறு பக்கங்கள். இஸ்லாமியச் சமய ஆன்மிக நூலொன்று இப்படி நேர்த்தியாக உயர்தரப் பதிப்பாக வந்து இதற்கு முன் நான் கண்டதில்லை. 


      


  


இலக்கிய மற்றும் அரசியல் நூற்களெல்லாம் உயர்தரமான ஃபோட்டோ தாள்களில் அழகியல் கொஞ்சும் பல்வண்ண அச்சாக்கத்தில் வெளிவரக் கண்ட போதெல்லாம் மெய்ப்பொருள் உணர்த்தும் ஞானப் பனுவல்கள், ஆன்மிக நூற்கள் இப்படியாக வெளியிடப்படுவதில்லையே என்று நொந்திருக்கிறேன். அந்த மனக்குறை இந்நூலினைக் கண்ணுற்ற கணத்தில் மறைந்தது.
      
 நூல் வரப்பெற்றும் பல நாட்கள் படிக்கும் சூழல் கனியாதிருந்தது. அப்போது ஒரு நாள் உத்தமப்பாளையத்திலிருந்து என் ஆன்மிக சகாவும் தோழருமான அப்துல் காதிர் பிலாலி அவர்கள் அலைபேசியில் அழைத்துப் பேசினார். நூலினைத் தான் படித்துவிட்டதாகச் சொன்னார். “ஆரம்பத்துல கொஞ்சம் சுமாராத்தாங்க போவுது. எனக்கு எழுபத்திரண்டாவது பக்கத்துக்குப் பிறகு சுவாரஸ்யமா இருந்துச்சுங்க. அதிலிருந்தே நீங்க படிங்க” என்று சொன்னார். “நல்லதுங்க. இருந்தாலும் நான் முதல்ல இருந்தே வாசிக்கிறேன். அதுதான் எனக்குச் சரிவரும்” என்று அவரிடம் சொன்னேன்.

      
  
         Noorul Ameen Faizee 

நண்பர் அப்படிச் சொன்னதற்குக் காரணமுண்டு. இந்நூல் நாங்கள் சார்ந்திருக்கின்ற இஸ்லாமிய மெய்யியற் பள்ளியைச் சார்ந்த ஒருவரால் இயற்றப்பட்டுள்ளது. எமது “சில்சிலா” என்னும் ஆன்மிக வழித்தொடரில் நடத்தப்படும் ஞானப் பாடத்திட்டத்தின் ஆரம்ப நிலைப் பாடங்களின் செய்திகளே இவற்றில் செம்பாகம் இடம்பெறுகின்றன. ஒரே கோட்பாட்டினை ஒவ்வொரு ஞானி விளக்கும்போதும் அந்த ஞானியின் ஆளுமைக்குத் தக வெளிப்படும் பாணி வேறு வேறாக இருப்பது இயல்பு. இந்நூலில் அப்படியாக நூருல் அமீன் அவர்களின் பாணியில் அந்தப் பாடங்கள் வெளிப்பட்டுள்ளன. ஏற்கனவே பல்லாண்டுகளாக இப்பாடங்களைப் பயின்று வருகின்ற ஆன்மிகவாதிகளுக்கு ஆரம்பக் கட்டச் செய்திகள் புதியன அல்ல. எனவேதான் அப்துல் காதிர் பிலாலி அவர்கள் இந்நூலினை பதினைந்தாவது அத்தியாயத்திலிருந்து வாசிக்குமாறு எனக்கு ஆலோசனை வழங்கினார்.
     
 ஆனால், இந்நூல் ஆன்மிகப் பள்ளியில் ஏற்கனவே இணைந்தோருடன், அதில் இன்னமும் இணையாதிருப்போரையும் கருத்திற்கொண்டே எழுதப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் ”ஏகத்துவ இறைஞானம்” என்ன என்பதைத் தாம் சார்ந்த ஆன்மிகப் பள்ளியில் தாம் அடைந்த தெளிவின் அடிப்படையில் இப்பள்ளியைச் சாராதோருக்கும் எளிதில் விளங்கும்படி எடுத்துரைக்கும் முயற்சியாகவே இந்நூல் உருவாகியுள்ளது.
      தாம் சார்ந்த ஆன்மிகப் பள்ளிக்கு வெளியே இருக்கும் முஸ்லிம்கள் மட்டுமன்றி, இஸ்லாத்திற்கு வெளியே இருக்கும் பிற சமயத்தவரிடமும் இச்செய்திகள் சென்று சேர வேண்டும் என்று நூருல் அமீன் முனைந்திருக்கிறார். அதனொரு சான்றாக அவரது பால்ய வயதுத் தோழர் திரு.ஸ்டீவன் ராஜ் என்பாரிடமும் வாழ்த்துரை பெற்றுள்ளார் என்பதைக் கருதலாம்.

      ”அல்லாஹ் என்றோ பரம்பொருள் என்றோ கர்த்தர் என்றோ அழைக்கப்படும் அந்த இறைவனைப் பற்றி ஆரம்பமாக சில விளக்கங்களைப் பார்த்தோம்” (பக்கம்:7) என்று சொல்வதிலும் அத்தகைய முனைப்பு தெரிகிறது.

      அறிவுத் துறைகள் சார்ந்த நூற்களைப் பெரும்பாலும் அத்துறை சார்ந்தவரே அன்றிப் பிறர் எடுத்துப் படிப்பது என்பது அரிது. இயற்பியல் சார்ந்த ஒரு நூலினை அத்துறை சார்ந்தோர் முதனிலையாகவும் அத்துறைக்கு நெருக்கமான பிற அறிவியற் துறை சார்ந்தோர் அடுத்த நிலையிலும் வாசிப்பது நடக்கும். கலைத் துறையைச் சார்ந்தோர் அந்நூலினை வாசிப்பது மிகவும் அரிது. அதேபோல் கலைத்துறை சார்ந்த நூலினை அறிவியற்றுறை சார்ந்தோர் ஈடுபட்டுப் படிப்பது அரிதுதான். சமய நூற்கள் பற்றிய நிலையும் இதுதான். காரணம் என்ன? கலைச் சொற்கள்! ஒரு துறை சார்ந்த கலைச் சொற்கள் அத்துறை சாராதோருக்குப் புரியாது. என்னதான் அந்நூலிலேயே கலைச்சொற்களின் அர்த்தங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் இலகுவாக வாசிக்கவும் விளங்கிக்கொள்ளவும் இயலாது. இதனாலேயே அறிவுத் துறைகள் சார்ந்த நூற்கள் அனைவரும் படிக்கும் பொது நிலையில் இருப்பதில்லை.


      எப்போதேனும் ஒரு குறிப்பிட்ட அறிவுத் துறை சார்ந்த நூல் பொது வெளியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவிடும். அண்மையில் மறைந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதிய நூற்களுள் மிகவும் பிரபலமானது “The Brief History of Time”. அதன் முன்னுரையில் அவர் சொல்லியிருக்கும் விடயமொன்று நினைவுக்கு வருகிறது. “நீங்கள் உங்கள் நூலில் இடம் பெறச் செய்யும் ஒவ்வொரு அறிவியல் சூத்திரமும் உங்கள் நூலின் விற்பனையை மேலும் பாதியாகக் குறைத்துவிடும்” என்று அவரின் பதிப்பாளர் அவரிடம் சொன்னாராம். சரிதானே? நெடுகிலும் கணித மற்றும் அறிவியல் சூத்திரங்களாகவே காட்சி தரும் நூலொன்றை நாம் விரும்பி வாங்குவோமா? அதே கதிதான் சமய நூற்களுக்கும்.
      இஸ்லாமிய நூற்களை, இலக்கியப் பனுவல்களை முஸ்லிமல்லாதார் தொடத் தயங்குவதன் காரணம், அறபி ஃபார்சி மற்றும் உருது மொழிச் சொற்கள் நிறைய இருக்கும்; அது தமக்குப் புரியாது என்பதுதான். அப்படி இந்நூலினை ஒருவர் புரட்டிவிட்டுக் கீழே வைத்துவிடக் கூடாது என்று நூருல் அமீன் கவனமெடுத்திருக்கிறார். எனவே, தாம் சார்ந்த ஞானப் பள்ளியின் பாட விளக்கங்களில் அறபு மொழியிற் குறிப்பிடப்படும் கலைச்சொற்களை இயன்ற அளவு அவற்றின் பொருளைத் தரும் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி விளக்கிச் செல்கிறார்.

“உள்ளமை, பண்புகள், செயல்கள் மற்றும் வாழ்வாதார உடைமை” என்று நூருல் அமீன் எழுதுகின்ற இந்நான்கையும் எமது ஆன்மிகப் பள்ளியின் சகாக்களிடையே உரையாடுகையில் அறபி மொழிச் சொற்களால் ஜாத், சிஃபாத், அஃப்ஆல், ஆஸார் என்று சரளமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதேபோல், “உயிர் அறிவு நாட்டம் வல்லமை கேள்வி பேச்சு பார்வை” என்று நூருல் அமீன் அவர்கள் குறிப்பிடும் எளிய தெளிந்த தமிழ்ச் சொற்களை அறபி மொழியில் ஹயாத் இல்மு இராதா குத்ரத் சமாஅத் பஸாரத் கலாம் என்று சரளமாகச் சொல்லிக் கொண்டிருப்போம்.  ஆனால், இச்சொற்களெல்லாம் முஸ்லிம்களிலேயே பலருக்கும்  விளங்காது என்னும் நிலைதான் நிலவுகிறது. இப்புன்மை நிலையை நீக்கும் பணிக்கு இந்நூல் ஒரு கைக்கருவியாய் உதவும் என்று நம்புகிறேன்.

      இந்நூலின் இந்தத் தன்மையினை நாகூர் ரூமி அவர்கள் மிகவும் பாராட்டியிருக்கிறார். “இந்நூலின் முதற் சிறப்பு என்று நான் இதன் தமிழைச் சொல்லுவேன். எளிய தமிழ், இனிய நடை, வழக்கமான ஆன்மீக நூல்களில் உள்ள விளங்குவதற்குக் கடினமான நடை கிடையாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ஆனால், இது ஓர் அறிமுக நூல் மட்டுமே என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும். ஒரு துறையில் உள்ள ஆழமான அறிவுப் பனுவல்கள் பலவற்றையும் எழுத்தெண்ணிப் பயின்ற பின் பொது மக்களுக்காக அத்துறையை அறிமுகப்படுத்தி ஒருவர் எழுதும் நூல் போன்றது இது. எனினும், இது போன்ற நூற்கள் ஓரளவிற்குத்தான் பொதுத்தன்மை பெற்று வெளிவர இயலும். ஃபிர்ட்ஜாஃப் காப்ரா எழுதிய “Tao of Physics”, ஸ்டீஃபன் ஹாக்கிங் எழுதிய “The Brief History of Time”, டீன் ராடின் எழுதிய “The Noetic Universe”, வி.எஸ்.ராமச்சந்திரன் எழுதிய “Phantoms in the Brain” போன்ற அறிவியல் நூற்களைப் போன்றதுதான் இதுவும். அவை எல்லாம் அறிவியல் துறையைப் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நூற்கள்தான். ஆனால், அல்லும் பகலும் அத்துறை சார்ந்த பயிற்சிகளில் பரிசோதனைகளில் பல்லாண்டு காலம் மூழ்கிக் கிடந்து கனிந்தவர்கள் எழுதியவை. அந்நூற்கள் “எழுத்தாளர்”களின் நூற்கள் அல்ல. அவை பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியிருக்கின்றன. எனினும், அறிவுத் தாகம் கொண்டோர்க்கன்றி பொழுது போக்கிற்காக நூற்களை நாடும் எளிய மனிதர்களுக்கு அவற்றின் ஒரு வரியும் விளங்காது. எனவே, “எளிமையா இருக்கும்னு சொன்னீங்க. பாக்கெட் நாவல் புரிய்ற மாதிரி இது இல்லீங்களே” என்று எவரேனும் சொல்வாரெனில் அவர் அறிவை விரிவு செய்துகொள்ளும் ஆர்வம் கிஞ்சிற்றும் அற்றவர் என்றறிக.


      இந்நூலில் என்னைக் கவர்ந்த இடங்கள் என்றிப்போது பட்டியலிட்டுக் கொண்டு எழுதத் தொடங்கினால் அதுவே இன்னொரு தனி நூலாக விரியும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதனையொரு கட்டுரையளவிலேயே நிறுத்திவிடுவதுதான் அழகு என்று கருதுகிறேன். எனினும், ஓரிரு இடங்களை ”ஆசை பற்றி அறையலுற்றேன்” என்றால் அஃது பிழையாகாது என்று நம்புகிறேன்.

      முதலில், இந்நூலின் தலைப்பு “ஏகத்துவ இறைஞானம்”. ஏகத்துவக் கொள்கை என்பதே இஸ்லாத்தின் ஆணி வேர், அடிப்படை அஸ்திவாரம். அக்கொள்கை இன்றி இந்த சன்மார்க்கம் இல்லை. அதில் இறைவன் குறித்த முற்பகுதியும் இறைத்தூதர் குறித்த பிற்பகுதியும் என இரண்டு பகுதிகள் உள்ளன. முதற்பகுதி அறபு மொழியில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்னும் பன்னிரு அட்சர வாசகம் (கலிமா). அதனைப் பற்றிய விளக்கமாகவே இந்தச் சிறு மா நூல் அமைந்துள்ளது.

      அறபு மொழியில் அமைந்த இவ்வாசகம் நாவால் மொழிய மிகவும் எளிய ஒன்று. மழலை மிழற்றும் மதலையர் முதல் மரணத் தருணம் மூச்சுத் திணரும் முதியோர் வரை எவரும் இலகுவாய் மொழிந்திடும் அமைப்பில் அருளப்பட்டுள்ள அற்புத வாசகம் இது. உதடுகள் ஒட்டாமல் உச்சரிக்க வல்ல எழுத்துக்கள், ஓசைகள் கொண்டது இந்த முற்பகுதி வாசகம். இத்தன்மையைத் தமிழிலக்கணத்தில் நீரோட்டகம் என்பர். நா வரண்டு கழுத்து நரம்புகள் காய்ந்திறுகி உதடுகள் ஒட்டவியலாது தவிக்கும் மரணப் படுக்கையிலும்கூட சொல்லுவதற்கு எளிதான அமைப்பில் இவ்வாசகம் அருளப்பட்டிருப்பது இறைவனின் அளப்பரும் கருணைக்கொரு சான்று என்று இதனை இறையருட்கவிமணி கா.அப்துல் கபூர் அவர்கள் வியந்தோதுகின்றார் (நூல்: ‘தித்திக்கும் திருமறை’).
      சொல்ல எளிதாய் உள்ள இவ்வாசகம்தான் அதன் எல்லை கண்டார் இல்லை எனலாய் அள்ள அள்ள ஆன்மிக ஞானங்களை வற்றாது வழங்குகின்றது.


     
இங்கே, நூருல் அமீன் அவர்களின் ஞானகுரு மகான் ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்) அவர்கள் சொன்னதொரு வாசகத்தை இந்நூலில் (பக்கம்:24) அவர் மேற்கோள் காட்டியிருப்பதை நினைவு கூர்கிறேன்: “இஸ்லாத்தின் ஆரம்பப் பாடமும் கலிமா விளக்கம்தான். இன்னும், உச்சக்கட்ட பாடமும் கலிமா விளக்கம்தான்”
      ”தவ்ஹீத்” என்னும் கலைச்சொல் இஸ்லாத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கை வாசகத்திற்கே ”கலிமத்துத் தவ்ஹீது” என்றுதான் பெயர். “லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று இருபத்துநான்கு அட்சரங்களை முழுமைப்படுத்தியே “கலிமத்துத் தவ்ஹீது” எனப்படுகிறது. அதன் முற்பகுதி உலூஹிய்யத் (இறைமை) குறித்ததாகவும் பிற்பகுதி ரிசாலத் (தூதுத்துவம்) குறித்ததாகவும் உள்ளன. இவ்விரண்டும் அறபு மொழியில் தனியே பொருள் நிறைவுறும் முழுமையான இரண்டு வாசகங்கள்தாம் (ஜும்லா). இரண்டு ஜும்லாக்களை (Simple sentences) இணைத்து ஒரு கலவை வாக்கியமாக்கிட (Compound sentence), தமிழில் ’மேலும்’ என்பது போலும், ஆங்கிலத்தில் ’and’ என்பது போலும் அறபியில் ”வ” என்னும் எழுத்து பயன்படுத்தப்படும். (உ.ம்: “நூருன் வ கிதாபுன்” என்றால் Light and Book, ஒளியும் நூலும் என்று பொருள்) ஆனால், கலிமத்துத் தவ்ஹீது என்னும் இஸ்லாமிய மூல மந்திரத்தில் அவ்வெழுத்துப் பயன்படுத்தப்படவில்லை. இஃது, ஆழ்ந்து சிந்திப்பதற்கானதொரு புள்ளி.
      ”தவ்ஹீத்” என்பது ஒரு பெயர்ச்சொல் (இஸ்மு). ஆனால் அது ஒரு வினையை / செயலைக் குறிக்கின்றது (ஃபிஅல்). அதாவது, அதுவொரு வினைப்பெயர் (இஸ்மெ ஃபிஅலி). இறைவனின் தலையான பண்பு வருணனைகளில் ஒன்று ”அஹது” (ஏகன்) என்பது. ஏகனாய் இருக்கும் நிலை ’ஏகத்துவம்’ எனப்படும். அதாவது அஹதாக இருக்கும் நிலை ’அஹதிய்யத்’ எனப்படும். ஏகத்துவம் என்பது ஒரு பெயர்ச்சொல். அதாவது, அது ஒரு பண்புப் பெயர் (இஸ்மெ வஸ்ஃபி). அஹதிய்யத் என்பது ஒரு பெயர்ச்சொல். அதாவது, அது ஒரு பண்புப் பெயர் (இஸ்மெ வஸ்ஃபி). ஒருவன் என்பதற்கு அறபியில் ‘வாஹிது’ என்று சொல்லப்படும். ஒருவன் (வாஹிது) என்பதும் ஒரு பண்புப் பெயர் (இஸ்மெ வஸ்ஃபி). இதைத் தெளிவாக விளங்கவும்.
      ஆனால், தவ்ஹீது என்றால் என்ன என்று வினவினால் பலரிடமும் கிடைக்கும் விடை “ஏகத்துவம்” என்பதாகவும் “இறைவன் ஒருவனே!” என்பதாகவும்தான் இருக்கிறது. அதாவது இஸ்மெ ஃபிஅலி பற்றிக் கேட்டால் இஸ்மெ வஸ்ஃபியை விடையாகத் தருகிறார்கள். அதாவது, தவ்ஹீது பற்றி வினவினால் அஹதிய்யத் என்பதை விடையாகச் சொல்கிறார்கள். இவர்களுக்கு இரண்டைப் பற்றியுமே தெளிவான புரிதல் இல்லை என்பது வெளிப்படுகிறது.
      தவ்ஹீது என்னும் வினைப்பெயரின் நேரடியான அர்த்தம் “ஒன்றுபடுத்துதல்” (To make One) என்பதுதான். அடியான் எப்படி இறைவனை ஒன்றுபடுத்துவான்? ஒன்றுபடுத்துதல் என்பதை எதனைக் கொண்டு செய்வான்? இது உடலால் செய்யப்பட வேண்டிய காரியமன்று. அறிவால் செய்யப்பட வேண்டிய ஒன்று. ”இறைவன் ஏகனே” என்றோ “இறைவன் ஒருவனே” என்றோ கழுத்து நரம்புகள் புடைக்க கதறுவதால் ஏகத்துவ இறைஞானம் வந்துவிடாது. இத்தனை டெசிபலுக்கு மேல் உரக்கக் கத்தினால்தான் கலிமா விளங்கும் என்று இறைவன் நியதி வகுக்கவில்லை. அறிவால் விளங்கவேண்டிய நுணுக்கமான உள்மடிப்புகள் கொண்ட சூத்திரம் (Formula) அது. இந்நூலில் அத்தகைய ஆழமான விளக்கங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
      ”அஹத் ‘ஏகம்’ (One) என்ற சொல், ஒன்று (one) என்ற எண்ணுக்கு (number) சமமானதல்ல. ஏகம் என்பது எண்களுக்கு அப்பாற்பட்டது (Beyond numeration). எண்ணிக்கையற்ற ஒருமையது” என்னும் சிறு பத்தி ஓர் உதாரணம்.

      ”வாஹித் என்பது பன்மையில் ஒருமை. ஏகத்துவம் – ‘தவ்ஹீத்’ ‘ஒன்றுபடுத்துதல்’ எப்போது சாத்தியமாகும்? பன்மை (கஸ்ரத்) என்ற பின்னணி இல்லாமல் ‘ஒன்றுபடுத்துதல்’ என்ற சொல்லுக்கு வேலையில்லை. வாஹித் என்ற பன்மையில் ஒருமை அஹத் என்ற எண்ணிக்கையற்ற ஒருமையில் அடங்கிவிடும் (அல் வாஹித் யத்குலு ஃபில் அஹத்)” என்று தொடரும் வரிகள் மேலுமோர் எடுத்துக்காட்டு.

      இறைஞானம் வழங்கும் திருக்கலிமா வாசகம் வெறுமனேயொரு மட்டையடி மந்திரம் அல்ல. ‘இறைவன் ஒருவனே’ என்று எண்ணிக்கையான ஒருமையில் (numerical oneness) அவனை பாவிப்பது எளிதாக இருக்கலாம். படைப்புக்களைத்தான் அப்படி பாவிக்க முடியும். எண்ணிக்கையின் பாற்பட்ட ஒருமை என்பது படைப்புக்களுக்கு உரியதுதான். ஒரு நாற்காலி, ஒரு மேஜை, ஒரு பேனா, ஒரு புத்தகம், ஒரு பையன், ஒரு மாடு என்பது போல. ஐந்து மாடுகள் என்று சொன்னபோதும் அவற்றில் ஒவ்வொரு மாடும் எண்ணிக்கையான ஒருமைத் தன்மையில் ஒவ்வொன்றுதான். அதாவது இதுவும் ஒரு மாடு, அதுவும் ஒரு மாடு, அந்தா அதுவும் ஒரு மாடு என்பதாகச் செல்லும். ஏதேனுமொரு படைப்பு ஜின்ஸ் என்னும் வர்க்கத்தின் பாற்படாத நிலையில், அதுபோல் இன்னுமொன்று கூட இல்லாத நிலையில், இரண்டோ மூன்றோ பலவோ இல்லாத நிலையில், அது மட்டுமே இருந்தபோதும்கூட எண்ணிக்கையான ஒருமைதான் அது. உதாரணமாக, ஆதம் நபியை அல்லாஹ் படைத்திருந்த அத்தருணத்தில் மனித வர்க்கம் என்று சொல்லும்படியாக வேறு மனிதர் யாருமே இல்லை. மனிதன் என்று சுட்டிக்காட்ட அப்போது ஆதம் (அலை) மட்டுமே இருந்தார். அந்த நிலையிலும், “ஆதம் ஒருவர்” என்னும் அவரின் ஒருமை என்பது எண்ணிக்கையான ஒருமைதான்.   படைப்புக்களுக்கான அந்தத் தன்மையிலேயே படைத்தவனையும் எண்ணிக்கையான ஒருமையில் பாவிப்பது அகக் குருட்டுத்தனமே ஆகும். படைப்புக்களின் தன்மையை இறைவன் மீது சார்த்தும் இணைவைப்பாகவும் (ஷிர்க்) முடியும்.
      இங்கேயொரு கேள்வி எழலாம். இறைவனின் ஒருமை எண்ணிக்கையொருமையாக ஏன் இருக்கலாகாது? ஒரு மான், ஒரு மரம், ஒரு மனிதன் என்றெல்லாம் எண்ணிக்கையொருமையாக இருப்பினும் சிங்கம் சிங்கம்தான், நாய் நாய்தான், மனிதன் மனிதன்தானே? அதுபோல் எண்ணிக்கையொருமை அடிப்படையிலான ஒருவனாக இருப்பினும் இறைவன் இறைவன்தானே? என்று கேட்கலாம்.

      இந்தப் புள்ளியிலிருந்து சிந்தனையை முன்னெடுத்து நகரும்போது மேலும் விளக்கங்கள் விரிந்துகொண்டே போகும். ஒரு மான், ஒரு மரம், ஒரு மனிதன் என்று சுட்டும்போது மூன்றும் அதனதற்கேயான இடவெளியை எடுத்துக்கொண்டிருக்கின்றன. மானிருக்கும் இடத்தில் (space) மான்தான் இருக்கிறது, அங்கே மர்மோ மனிதனோ இல்லை. மரம் இருக்குமிடத்தில் மரம்தான் இருக்கிறது. அங்கே மானோ மனிதனோ இல்லை. எண்ணிக்கைப்பட்ட ஒருமையிலான ஒவ்வொரு படைப்பும் அதனதன் இடவெளியை அதுவேதான் எடுத்துக்கொண்டிருக்கிறது. அவ்வகையில், இருப்பின் தன்மையில் மூன்றும் சமமானவைதான். எண்ணிக்கைப்பட்ட ஒருமையின்படித்தான் இறைவனும் ஒருவன் என்று சொன்னால் இருத்தலின் தன்மையில் இணைவைப்பு உண்டாகிறது. உள்ளமையில் இணைவைப்பு (ஷிர்க் ஃபில் உஜூத்) வந்துவிடுகிறது. இது இறைமைக்குப் பொருந்தாது.

      இதற்கடுத்து முன்னகர்ந்து செல்லும் சிந்தனையோட்டத்தை இங்கே எழுதிச் செல்ல இடமில்லை. விரிவு அஞ்சி இத்துடன் இக்கருத்தை நிறுத்துகிறேன்.

      இந்நூலின் முத்தாய்ப்பாக, இறுதிப் பகுதியான கலைச்சொல் விளக்கம் என்பதன் இறுதி அத்தியாயமாக அமைந்துள்ள “திருக்கலிமாவின் வாசகக் கட்டமைப்பு (தர்கீப் – syntax): ஒரு விளக்கம்” என்பது எனக்கு பேருவகை தந்தது. ஆடுதுறை என்னும் அம்பதி வாழ் ஆன்மிகச் செம்மல் மெய்ஞ்ஞானி ஹகீமி ஷாஹ் ஃபைஜி (தாமத் பரக்காதுஹும்) அவர்களின் சமூகத்தில் தான் பெற்ற விளக்கத்தை, நெடுநாள் நெஞ்சு குடைந்த ஐயம் ஒன்று அகலப்பெற்ற ஆனந்தத்தை நூருல் அமீன் நுவல்கிறார். அந்நிகழ்வு என் சிந்தையில் ஒரு நினைவை மலர்த்தியது.
      ஓராண்டுக்கு முன் என்று ஓர்மை. ஞானியவர்கள் தமது முரீது ஹாஜி ஹபீபுல்லாஹ் ஹகீமி அவர்களின் இல்லத்திற்கு (திருச்சி) வந்திருந்தார்கள். ஆன்மிக உரை நிகழ்த்தினார்கள். திருக்கலிமாவின் தர்கீப் (வாக்கிய அமைப்பிலக்கணம்) பற்றி விளக்கினார்கள். “கலிமா நேரடியாக இல்லாமல் ஏன் சுற்றி வளைத்ததாக இருக்கிறது? Why it is not direct? Why it is circuitious?” என்றொரு வினா தொடுத்தார்கள். சிந்திக்கச் சொன்னார்கள். அலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தோம். தன் கேள்வியை மேலும் விளக்கினார்கள். “நிச்சயமாக அல்லாஹ்தான் இறைவன் (இன்னல்லாஹ இலாஹு)” என்று நேரடியாகச் சொல்லியிருந்தால் அழுத்தம் திருத்தமாக இருக்கும் அல்லவா? ஆனால், “இறைவன் இல்லை அல்லாஹ்வை தவிர” (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று வளைத்துச் சொல்லும்படியாக ஏன் கலிமாவை அமைத்தான்?”. அதன் பிறகு ஒரு மணி நேரம் ஞான அடைமழை பொழிந்தது. 
      அந்த நாளினை நினைவுகூர்ந்தவனாகவே இந்த அத்தியாயத்தைத் தொடர்ந்து படித்தேன். அந்நாளில் அவர்கள் சொல்லாததொரு நுட்பத்தை இங்கே சொல்லியிருக்கிறார்கள். இப்போது போய் கேட்டால், இந்த நிலைக்கும் அப்பால் அவர்களின் விளக்கம் மேலே போயிருக்கும். அதுதான் இறைஞானியரின் நிலை.
      நூருல் அமீன் அவர்கள் தமது குருநாதரிடம் (முர்ஷிதிடம்) கேட்டறிந்த விளக்கங்களே இவை என்று கொண்டால், அந்த குருமகான் தமது வாழ்நாளில் பேசிய ஞான விளக்கங்களை எல்லாம் இதுபோல் நூலாக்கம் செய்தால் ஆயிரத்துகும் மேற்பட தொகுதிகள் ஆகி ஒரு நூலகமே தோன்றிவிடும்.

      இஸ்லாமியக் கொள்கை வாசகமான திருக்கலிமா தரும் ஏகத்துவ இறைஞானம் என்பது ஏற்கனவே அதனை அடைந்திருக்கும் ”சாதிக்கீன்” என்னும் மெய்யாளரின் சகவாசத்தில் சன்னஞ் சன்னமாக இல்மு என்னும் கல்வியறிவு, திக்ரு என்னும் தியானம், ஃபிக்ரு என்னும் ஆழ் சிந்தனை ஆராய்ச்சி, ஷுகல் என்னும் அனுபவம் (உள்ளுணர்வு) ஆகியவற்றின் வழியே அடையப்படும் ஒன்று. எனவேதான், “மெய்யாளருடன் இணைந்திருங்கள்” (”கூனூ மஅஸ் ஸாதி(க்)கீன்” 9:119) என்று குர்ஆன் ஞானத்தின் முகவரியைச் சுட்டிக்காட்டுகிறது. இதனை மறவாத நூலாசிரியர், இறைஞானியரைச் சேர்ந்து அவர்களிடம் மேலும் விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்நூலில் ஆங்காங்கே பொறுப்புடன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.


      
இந்நூல் மீண்டும் மீண்டும் சிந்தனையில் அசை போட்டு பன்முறை படிக்க வேண்டியதொரு அறிவுப் பனுவல் என்று சொல்வது முற்றும் தகும். எல்லாம் வல்ல ஏக இறைவன் நூலாசிரியருக்கு வாழ்வில் நலங்களும் வளங்களும் நல்கி மேலும் பல்லாண்டு காலம் சன்மார்க்க ஞானப் பணி ஆற்ற அருள் புரிவானாக. 
 

நூல் விலை உரூபாய் 180 / --
முகவரி:
ஒமர் முக்தார்,
2/3 கமாலியா பள்ளித் தெரு,
நாகப்பட்டிணம் - 611001
அலைபேசி : 8056468012
மின்னஞ்சல் omarmms01@gmail.com
 

Saturday, January 19, 2019

நின்றிலங்கும் நீலம்சில ஆண்டுகளுக்கு முன் “அகப்பார்வை” என்னும் ஆழிய ஆன்மிக நூலினைத் தந்த நண்பர் நூருல் அமீன் ஃபைஜி அவர்களிடமிருந்து புத்தம் புதிதாக ஒரு நூல் தூதஞ்சலில் வந்து சேர்ந்தது. உறையைப் பிரித்து நூலின் முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் பரவசம்! “ஏகத்துவ இறைஞானம் – ஓர் எளிய விளக்கம்” என்பது நூலின் பெயர். மேலும், நூலின் முன்னட்டையிலேயே இமாம் சாஅதி (ரஹ்) அவர்களின் அழகிய மேற்கோள்:
      ”பாதுகாப்பு வேண்டும் என்றால் கரையில் நில்
      பொக்கிசம் வேண்டும் என்றால் கடலினுள் செல்”

      பார்த்தவுடன் பரவசம் என்று நான் சொன்னது நூலின் நேர்த்தியான அட்டைப்பட ஆக்கத்தை வைத்து. நீல நிறம் பிரதானமாகத் தீற்றப்பட்ட நவீன ஓவியம் அது. கடலின் குறுக்கு வெட்டுத் தோற்றம். மேலும் கீழுமாய் தளும்பும் அலையின் மேலே படகிலிருந்து ஒருவன் கடலுக்குள் தூண்டிலிடுகிறான். உயிர்வளி உருளையை முதுகில் மாட்டிக்கொண்டு ஒருவன் கடலுக்குள் குதித்துச் செல்கிறான். மேற்சொன்ன இரண்டு வரிகளுக்கு மிகவும் பொருத்தமான படம்.

      நீல நிறம் சட்டென்று என் மனதைக் கவரும் ஒன்று. இந்த நூலின் அட்டையைக் கண்டவுடன் இதே போல் நீல நிறம் பிரதானமாக அமைந்த அட்டை போர்த்திய நூற்கள் நினைவில் எழுந்தன. இந்நூல் வந்த அதே கட்டத்தில் என் கைக்கு வந்து சேர்ந்த இன்னொரு நூல், ஜெயமோகன் எழுதிய முக்கியமான நாவல்களில் ஒன்றான பின் தொடரும் நிழலின் குரல்”. வின்செண்ட் வான் கா தீட்டிய ஓவியம் ஒன்று அதன் அட்டைப்படம். நீல நிற வானம் இம்ப்ரஷனிஸ பாணியில் தீற்றல்களாகக் காட்சி தரும்.


       


அதே போன்ற பாணியில் நீல நிற வானின் கீழே நாகூர் தர்காவின் வெண்ணிற விதானம் காட்சி தரும் நவீனக் கணினி ஓவியம் அட்டைப்படமாக அமைந்த ஆங்கில நூல் ”THE OCEAN OF MIRACLES: LIFE OF QADIR WALI”. நண்பர் நாகூர் ரூமி எழுதியது. இந்த நூலினை அடியேன் நாகூர் தர்காவிலேயே வாங்கினேன். அப்போது நூருல் அமீன் அவர்களும் தர்காவிற்கு வந்திருந்தார். இருவரும் இணைந்துதான் ”ஜியாரத்” செய்தோம். அவரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பும்போது இந்த நூலை ஒரு கடையில் வாங்கினேன். சற்று தூரம் சென்றபோது ஒரு வீட்டின் வாசலில் காரிலிருந்து நாகூர் ரூமி இறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன்! சந்தித்து அவரிடமும் சிறிது நேரம் பேசிவிட்டுக் கிளம்பினேன். அற்புதக் கடலிலிருந்து ஓர் அலை!


       

நாகூர் ரூமிக்கும் நீல நிறம் பிடிக்கும் போல. அவர்து சூஃபி வழி (கிழக்குப் பதிப்பகம்), ஆல்ஃபா தியானம் ஆகிய நூற்களின் நீல நிற அட்டைகளை மிகவும் ரசித்திருக்கிறேன். சொல்லாத சொல், வரலாறு படைத்த வரலாறு ஆகிய நூற்களும் பின்னர் நீல நிற அட்டை தாங்கியே வந்தன. செய்கு ஹஸ்ரத் ஆசாத் ரசூல் என்னும் சூஃபி குருவின் நூலினைத் தமிழாக்கம் செய்து “இதயத்தை நோக்கித் திரும்புதல்” என்னும் தலைப்பில் வெளியிட்டார். அந்நூலுக்கும் அட்டை நிறம் நீலம்தான்.
      


 சென்ற ஆண்டு நான் வாங்கிய நூற்களுள் நீல நிறத்தால் கவர்ந்தது ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” (கிழக்கு). அதற்கு முன், பவ்லோ கொய்லோவின் “The Witch of Portobello”. அவரின் இன்னொரு நூலான அலிஃப் என்பதற்கும் அழகிய நீல நிற அட்டை கொண்ட பதிப்பு ஒன்றுண்டு. நான் அமேசானில் ஆர்டரிட்ட போது செந்நிற அட்டை கொண்ட பதிப்பின் பிரதியே வந்தடைய ஏமாற்றத்தில் சற்று நொந்தேன்.


      
 பீர் விலாயத் ஃகான் எழுதிய “Thinking Like the Universe” என்னும் சூஃபித்துவ நூலினைக் கி.பி.2000-இல் சென்னை லேண்ட்மார்க்கில் வாங்கினேன். ஷெல்ஃபிலிருந்து அதனைக் கையில் எடுத்தபோதே அதன் அட்டையின் நீல நிறத்தால் கண்களும் மனமும் குளுமை அடைந்தன. இப்போதும் அந்த அனுபவத்தை என்னால் மனதில் மீட்டெடுக்க முடிகிறது.
       
   இப்படியே நினைவின் அடுக்கில் பின்னோக்கி நகர்ந்து செல்லும்போது எனது பதின்பருவத்தின் இறுதிக் காலத்தில், தஞ்சை முரசு புத்தக நிலையத்தில் வாங்கிய நூலொன்றில் போய் நிற்கிறது. அப்போதைய வயதின் முதிர்ச்சியற்ற மனநிலையில் நான் பெரிதும் சிலாகித்த கவிஞர் வைரமுத்துவின் “சிகரங்களை நோக்கி” (சூர்யா பதிப்பகம்). சிகரமுகடொன்றின் விளிம்பில் கைகளை விரித்தபடி காட்டுவாசி ஒருவன் நிற்கிறான். அவன் பின்னே பிசிரற்ற நீல வானில் நிலா ஒளிர்கிறது.


       சிறு வயதில் எனக்கு ஓவியம் வரைவதில் திறனும் ஆர்வமும் இருந்தது. வரைவதை நிறுத்திய பின்னும் ஓவியர்கள் குறித்து வாசிப்பதில் ஈடுபாடு இருந்து வருகிறது. ஓவியர்களுக்கு நிறங்களை அவதானிப்பதில் ஒரு தனிக் கூர்மை இருக்கும். அவர்களுக்கு நீலம் என்பது மனதிற்கினிய நிறமாதல் வேண்டும் என்றே தோன்றுகிறது. வான்கா, மோனெ ஆகியோரின் ஓவியங்கள் சான்று. மட்டுமல்ல, பாப்லோ பிக்காஸோவின் ஓவிய வாழ்வில் நீலக் காலக்கட்டம் (Blue Period) என்றே தனிப்பகுதி உண்டு.

      நீலம் என்பது கடல். அது ஆழத்தையும் மர்மத்தையும் குறிக்கிறது.

      நீலம் என்பது வானம். அது விரிவையும் உயரத்தையும் குறிக்கிறது.

      நீலம் என்பது அடர்ந்து கொண்டே போய் கருமை ஆகும்போது அதுவே வானின் எல்லைக்கு அப்பால் விரிந்துள்ள விண் வெளி ஆகிறது. அது எல்லையின்மையைக் குறிக்கிறது.

      வெய்யோனின் வெளிச்சம் துலக்கிய பருவுலகின் படிமங்களுள் நீலத்தின் சாயை கொள்ளாமல் இரவின் இருளில் சரிகின்றது ஏது?

      ஜெயமோகனின் செவ்வியற் புதினமான உரைநடைக் காவியம் “கொற்றவை”யின் முதற்பகுதியின் முதற்பத்தி நினைவு வருகிறது: “அறியமுடியாமையின் நிறம் நீலம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். நீலத்தின் எல்லையின்மை வானம். நீலத்தின் அலைகளே கடல். நீலம் ஒரு புன்னகை. கருமைக்குள் ஒளி பரவுவதன் வண்ணம் அது. கருமையோ வெளியை முழுக்கத் தன்னுள் அடக்கிக் கொண்ட பெருவெளி. கருமையில் இருந்தே ஒவ்வொன்றும் பரு திரட்டி வருகின்றன. கருமையை அஞ்சினார்கள். அதன் முடிவற்ற வல்லமையை வணங்கவும் செய்தார்கள். ஆகவே அவர்களுக்கு நீலமே உகந்த நிறமாயிற்று. புன்னகைக்கும் கருமையே நீலம்.” (ப.13; தமிழினி பதிப்பகம்; டிசம்பர் 2012).

      விஷத்தின் நிறமாக நீலமே காட்டப்பட்டு வருகிறது. நச்சரவம் தீண்டிச் சாய்ந்த தேகம் நீலமாகிறது. ஆலகாலம் என்னும் நஞ்சினை உண்டவனின் கழுத்து நீலகண்டம் என்றும் நீலமணிமிடறு என்றும் சுட்டப்படுகிறது. எனில், நீலம் என்பது மரணத்தின் நிறம்.

      மரணம் என்பது இன்னொரு வாழ்வின் தொடக்கம். அவ்வகையில் ஒருவாழ்வின் முடிவான மரணமே மறுவாழ்வின் தொடக்கமான பிறப்பு. எனில், விஷம் என்பது அமிர்தத்தின் போலி. எனவே, நீலம் என்பது அமிர்தத்தின் நிறம். நீலம் என்பது வாழ்வின் நிறம்!

      அடியேனின் ஆடைகளில் செம்பாகம் நீல நிறமாகவே இருக்கின்றன. (சகதர்மினிக்கும் பிள்ளைகளுக்கும்கூட அப்படித்தான் அமைகின்றது). நீல நிறத்துடன் இயைந்து பொருந்தும் பிற நிறங்களும் பிடித்திருக்கிறன. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு இப்படி.
     
நீலத்தின் பிரிகைகளுள் எனக்குப் பிடித்தது ஆழ்கடல் நீலம். அபூர்வமாக, கார்காலத்து வானில், அந்திக்குப் பின்னான நேரத்தில், மக்ரிப் தொழுகையின் தொடக்கத் தருணத்தில் அந்த நீலம் காணப்படும். சூரியன் தலை காட்டுவதற்கு முந்தைய வைகறைத் தருணத்திலும் அந்நீலம் தென்படும். சொர்க்கத்தின் நின்றிலங்கும் பொழுது அவ்வண்ணம்தான் கொண்டிருக்கும் என்று பல முறை எண்ணியதுண்டு.

நீல நிறத்தில் இதுவரை உணவு எதுவும் தட்டுப்படவில்லை. மிஸ்டர் சோடாவில் ப்ளூபெரி சுவையில் நீல நிற சோடா மட்டும் பருகியிருக்கிறேன். பச்சை நிறத்தின் மீது முஸ்லிம்களுக்கு உள்ள ஈடுபாடு பற்றி நாகூர் ரூமி ஓர் அங்கதம் செய்திருப்பார், அது நினைவுக்கு வருகிறது: “முஸ்லிம்கள் எப்பவும் தேநீர்தான் குடிக்கிறார்கள். இத்தனைக்கும் அது பச்சை நிறமாகக்கூட இல்லை” (நினைவிலிருந்து எழுதுகிறேன்).
     
     நூருல் அமீன் அவர்களின் நூல் வந்து சேர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது. யுவனின் “வெளியேற்றம்” நாவலை இரண்டாம் சுற்று வாசித்துக் கொண்டிருந்ததால் உடனடியாக இதனை எடுத்து வாசிக்க முடியவில்லை. ஆனால் அவ்வப்போது அதனை எடுத்து அட்டையை ரசித்துவிட்டு வைத்துவிடுவேன். நூலினை நேற்றுதான் வாசித்து முடித்தேன். அதன் உள்ளடக்கம் பற்றித் தனியே எழுதுகிறேன், இன்ஷா அல்லாஹ்.