Wednesday, September 28, 2011

உள்முகக் காலம் (தொடர்ச்சி #1)கப்பாலா மரபு யூத மதத்தில் உள்ள ஆன்மிக நெறி எனலாம். இஸ்லாத்தில் சூஃபித்துவம், பௌத்தத்தில் ஜென், இந்து மதத்தில் யோகம் போல. இந்த ஒப்பீடுகள் துல்லியமானவை அல்ல என்றாலும் ஒரு பொதுப்பார்வைக்கு இப்படிச் சொல்லலாம். எல்லா ஆன்மிக நெறிகளையும் போலவே கப்பாலாவிற்கும் அதன் சாதகர்களுக்கே உரியதும் பிறர் அறியாமல் மூடலாகப் பேணப்படுவதுமான ரகசியங்கள் உண்டு. கப்பாலா நெறியிலும் காலப்போக்கில் பல கிளைகள் தோன்றின. அதில் ஒன்றான ’ஹஸ்ஸித்’ என்னும் வழிமுறை பற்றி ஓஷோ மிகவும் சிலாகித்துப் பேசியுள்ளார்.

கப்பாலா நெறி ஹீப்ரு மொழியில் அமைந்த மந்திரங்களையே பயன்படுத்துகிறது. இறைத்தூதர் மூஸா (அலை) (MOSES) பேசிய ஹீப்ரு மொழி, ஈசா (அலை) (JESUS) பேசிய அரமைக் மொழியுடனும் நபிகள் நாயகம் (ஸல்) பேசிய அரபி மொழியுடனும் நெருங்கிய தொடர்புடையது. இம்மூன்று மொழிகளும் சகோதரிகள்தான். மலையாளத்தில் எப்படி பல சொற்கள் தமிழாகவே இருக்கின்றனவோ அதைப் போல் இம்மொழிகளுக்குப் பொதுவான சொற்கள் பல உண்டு.


ஹீப்ரு மொழியின் முதல் எழுத்தும் அலிஃப்தான். ஆங்கிலத்தில் எழுதும்போது அது ALEPH என்று எழுதப் படுகிறது. போர்ஹேயின் நாவல் பதிப்புகள் சிலவற்றில் இது EL ALEPH என்பதாக உள்ளது. ’எல்’ என்பது ஆங்கிலத்தில் THE என்பதாக வரும் definite article ஆகும். அரபி மொழியில் இது ’அல்’ என்று வருகிறது. இவ்வளவுதான் வேறுபாடு. இதைச் சொல்லும்போது பாப் இசைக்கலைஞி மடோனாவின் CONFESSIONS ON THE DANCE FLOOR என்னும் இசைக்கோப்பில் உள்ள ‘ஐசாக்’ (ISAAC) என்னும் பாடல் ஞாபகம் வந்தது. அது ஓர் ஆன்மிகப் பாடல். அதன் ஆரம்பத்திலும் இடையிலும் ஹீப்ரு மொழியில் அமைந்த மந்திர வரிகள் இடம்பெறுகின்றன. (டிசம்பர் 1997-இல் மடோனா ‘கப்பாலா’ நெறியில் இணைந்துவிட்டதாகச் செய்திகள் வந்தன. CONFESSIONS ON THE DANCE FLOOR ஆல்பம் நவம்பர் 2005-இல் வெளிவந்தது.) ”இம் நிஃனாலு” (கதவுகள் தாழிட்டிருந்தால்…) என்று தொடங்கும் இந்த ஹீப்ரு வரிகள் யமன் தேசத்து ரப்பி ஷலோம் ஷாபாஸி என்பவரின் பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. அப்பாடலை ஏற்கனவே ஹீப்ரு பாடகி ஒஃப்ரா ஹாஸா (OFRAH HAZA) முழுமையாகப் பாடியிருக்கிறார். பாடலின் இடையே வரும் ஹீப்ரு மந்திர வரிகள் இறைவனைப் புகழ்வதாக அமைந்துள்ளன.
“எல்-ஹய்ய் மருமம் அல் கெருவிம்
குல்லம் ப-ரூஹோ யஃஅலு”
’இறைவன் உயிருள்ளவன், வானவர்கள் மீது உயர்ந்திருப்பவன்
ஒவ்வொன்றும் அவனது ஆத்மாவில் உயரும்”
என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

இந்த ஹீப்ரு மந்திரத்தில் உள்ள சில வார்த்தைகள் அப்படியே அரபியிலும் வருவதைக் காணலாம். இறைவனை ‘எல்-ஹய்ய்’ என்று ஹீப்ருவில் சொல்வதுதான் அரபியில் ‘அல்-ஹய்யு’ என்று வருகிறது. அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடும் நாமங்களுள் இதுவும் ஒன்று. மீது என்பது ஹீப்ருவில் ‘அல்’ என்று வந்திருப்பதுதான் அரபியில் ’அலா’ என்று வரும். ஹீப்ருவில் குல்லம் என்பது அரபியில் குல் என்று வரும். ஆத்மா என்பதற்கு ஹீப்ருவிலும் அரபியிலும் ‘ரூஹ்’ என்றே சொல்லப்படுகிறது. ‘வானவர்கள் மீது உயர்ந்திருப்பவன்’ என்பது வானவர்கள் பற்றிய பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை நினைவூட்டுகின்றது:

“அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனை தியானிக்கின்றார்கள்” (40:7)
“இன்னும் வானவர்கள் அதன் (வானம்) கோடியில் இருப்பார்கள். அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை எட்டுப்பேர் (வானவர்) சுமந்து கொண்டிருப்பார்கள்” (69:17)

“ஒவ்வொன்றும் அவனது ஆத்மாவில் உயரும்” என்னும் வரி பின்வரும் திருக்குர்ஆன் வசனக் கருத்தியலைப் பிரதிபலிக்கிறது என்று காணலாம்:
“நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது” (5:48)
“ஒருநாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும்.” (32:5)இப்போது நம் கவனத்தை இக்கட்டுரையின் தொடக்கத்தில் நாம் குறிப்பிட்டுள்ள, காலம் பற்றிய போர்ஹேயின் மூன்று அவதானங்களின் பக்கம் திருப்புவோம். அதில் முதல் அவதானம்: “மனிதக் கால அளவும், கடவுளின் கால அளவும் மாறுபட்டவை.”
இந்த விஷயமே மனித மொழியில் விளக்குவதற்கு மிகவும் சிரமமான ஒன்றுதான். நாம் அனுபவிக்கும் தொடர்நிலைக் காலத்தைதான் (SERIAL TIME) நாம் அறிவோம். இறைவனின் காலக் கணக்கை நாம் எப்படி அறியமுடியும்? எனவே அவனது காலக் கணக்கை நாம் நம் காலக் கணக்கின்படியேதான் அறிய வேண்டியிருக்கிறது. இது பற்றிக் கோடி காட்டும் திருக்குர்ஆன் வசனங்கள் நம் முன் நிற்கின்றன.

“ஒருநாள் வானவர்களும் அந்த ஆன்மாவும் இறைவனிடம் ஏறிச் செல்வார்கள். அந்த நாளின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகளாக இருக்கும்.” (70:4)
அதாவது இறைவனின் ஒருநாள் = 50000 பூமி ஆண்டுகள்.

”உம்முடைய இறைவனின் ஓர் ஆண்டு என்பது நீங்கள் கணக்கிடுகின்ற ஆயிரம் ஆண்டுகள் போன்றது” (22:47)
“ஒருநாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும். அந்த நாளின் அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்” (32:5)
அதாவது இறைவனின் ஒருநாள் = 1000 பூமி ஆண்டுகள்.

இவ்வசனங்களின் படி 1000 பூமி ஆண்டுகள் என்பதும் 50000 பூமி ஆண்டுகள் என்பதும் இறைவனின் பார்வையில் சமம்தான் என்றாகிறது. ஏனெனில் மனிதன் உணரும் காலக் கணக்கிற்கு அப்பாற்பட்டவன் இறைவன். அவனுடைய காலக் கணக்கு என்ன என்பதை நாம் இப்படித்தான் குருடர்கள் யானையைப் பார்த்ததுபோல் மட்டுமே யூகிக்க முடியும்.

இனி, போர்ஹேயின் இரண்டாம் அவதானத்தைப் பார்ப்போம்:
”காலத்தின் ஒரு துளிக்குள் ஒரு வாரம், ஒரு வருடம், முடிவற்ற ஆண்டுகள் எல்லாமும் ஒளிந்துள்ளன.”

(to be continued...)

Monday, September 26, 2011

உள்முகக் காலம்


“Being with you and not being with you is the only way I have to measure time.”
Jorge Luis Borges

“உன்னுடன் இருப்பதும் உன்னுடன் இல்லாதிருப்பதுமே காலத்தை அளக்க என்னிடம் உள்ள ஒரே வழி” என்னும் இந்தக் கவித்துவமான கருத்தை எழுதியவர் ஜோர்ஜ் லூயி போர்ஹே என்னும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர். அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்தவர். ஸ்பானிய மொழியில் எழுதியவர். மிக முக்கியமான நவீன இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான இவரைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “என்றார் போர்ஹே” என்னும் நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். காலம் மற்றும் வெளி (TIME AND SPACE) குறித்து போர்ஹே தன் எழுத்துக்களின் வழி நிகழ்த்திய சாதகங்கள் பற்றி மீண்டும் மீண்டும் அதில் குறிப்பிட்டிருந்தார். பின்வரும் பத்தி அதில் குறிப்பாக என் கவனத்தை ஈர்த்தது:

“இந்தியக் கடவுளைப் பற்றி போர்ஹே அதிக கவனம் கொள்ளவில்லை. அவர் கதையின் கடவுள் மேற்கு உலகின் அரூபவாசி. இந்த அரூப நபர் ஹெஜ்.ஜி.வெல்ஸின் கட்புலனாகாத மனிதன் நாவலில் வரும் புனைபாத்திரம் போலவே நடமாடுகிறார். அங்கும் கடவுளின் காலைச் சுற்றிப் படர்ந்துள்ள காலம்தான் போர்ஹேயை வசீகரிக்கிறது. மனிதக் கால அளவும், கடவுளின் கால அளவும் மாறுபட்டவை என்ற தகவலே அவரை வியப்பில் ஆழ்த்திச் சிரிக்கின்றது. ‘ரகசிய அற்புதம்’ எனும் போர்ஹே கதையில் ஒரு துளி காலம் உறைந்து அதனுள் ஒரு வாரம், ஒரு வருடம், முடிவற்ற ஆண்டுகள் எல்லாமும் ஒளிந்திருப்பதை அறிய முடிகிறது. இதே போல் குறுக்கு வெட்டுப் பாதைகளின் தோட்டம் என்ற கதையில் மூன்று காலமும் ஒரே நேரத்தில் நிகழ்வுறுவது காட்டப்படுகிறது. காலம் எனும் கடவுளின் சுழியை மீள்வட்டமாகிப் பார்க்கிறார் போர்ஹே.” (’என்றார் போர்ஹே’, பக்.104) 

இப்பத்தியில் காலத்தைப் பற்றிய போர்ஹேயின் அவதானங்களாகச் சொல்லப்பட்டிருக்கும் மூன்று புள்ளிகள் என் சிந்தனையைத் தூண்டின.
1. மனிதக் கால அளவும், கடவுளின் கால அளவும் மாறுபட்டவை.
2. காலத்தின் ஒரு துளிக்குள் ஒரு வாரம், ஒரு வருடம், முடிவற்ற ஆண்டுகள் எல்லாமும் ஒளிந்துள்ளன.
3. மூன்று காலங்களும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.போர்ஹே இலக்கியம் செய்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில் லத்தீன் அமெரிக்க இலக்கிய உலகில் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், அலஜோ கார்பெந்தர், கார்லோஸ் புயண்டஸ் போன்ற இலக்கிய ஆளுமைகளும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் செய்த இலக்கியம் ‘மாய எதார்த்தம்’ (MAGIC REALISM) என்னும் வகையைச் சேர்ந்தது. அவ்வகை இலக்கியத்திலும் கால வெளி குறித்த ஆழமான சாதக அவதானங்கள் உண்டு. உதாரணமாக காலத்தை உணர்தலில் தனிமைக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் புகழ் பெற்ற நாவலான “நூறாண்டு காலத் தனிமை” (A HUNDRED YEARS OF SOLITUDE) என்னும் பெயரைக் கொஞ்சம் ஆழமாக கவனித்தாலே காலத்தின் பாரம் உள்ளத்தில் அழுத்துவதை உணர முடிகிறது. அந்தப் பெயரே காலத்தைக் குறித்த ஒருவித பயத்தை மனதில் தூண்டுவதாக உள்ளது.

போர்ஹேயின் எழுத்துக்கள் மாய எதார்த்த வகையைச் சார்ந்தவை அல்ல. அவர் ஒரு தனிப்பாணியில் எழுதிக்கொண்டிருந்தவர். அவருடைய எழுத்துக்களின் பாணி பற்றி எஸ்.ரா சொல்லும் இந்த வரையரை தெளிவு தரும்: “போர்ஹேயின் கதைகள் யதார்த்தத்தை உள்வாங்கிக் கொண்டு அதீத நிலைகளை உருவாக்கக்கூடியவை. ஒருவகையில் அவை மெடாபிஸிகல் ரியலிச [METAPHYSICAL REALISM] கதைகள் என்று வேண்டுமானால் சொல்லலாம் அல்லது மீமாய கதைகள் என்று வகைப்படுத்தலாம்.” (’என்றார் போர்ஹே’, பக்.17)

மாய எதார்த்தமோ அல்லது மீமெய்ம்மியல் எதார்த்தமோ, எப்படியானாலும் காலத்தையும் வெளியையும் பற்றிய அவதானிப்பில் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் வளர்த்தெடுத்துக் கொண்ட தனித்துவத்தின் பின் கீழைத் தேய ஆத்ம ஞான மரபின் பங்களிப்பு மிக ஆழமாக உள்ளது என்பதை மறுக்கமுடியாது. போர்ஹே பௌத்தம் மற்றும் இந்து ஞான மரபுகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் என்று எஸ்.ரா குறிப்பிடுகிறார். அத்துடன் சூஃபி மரபையும் நாம் குறிப்பிட வேண்டும். போர்ஹேயின் கால அவதானங்களாக முன்வைக்கப்பட்ட மேற்சொன்ன மூன்று புள்ளிகள் அதற்கான ஒரு சங்கேதமாக இருப்பதை நாம் காணலாம்.


லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பிதாமகர் என்று கருதப்படுபவர் செர்வாண்டிஸ் (CERVANTES). அவர் எழுதிய ‘டான் குய்ஷே டி லா மான்ச்சா’ (DON QUIXOTE OF LA MANCHA) என்னும் காவியம் உலகப் புகழ் பெற்றது. அதனைத் திரைப்படமாகவும் நான் பார்த்திருக்கிறேன். என் மனதைக் கவர்ந்த இலக்கியப் பாத்திரங்களில் முன்னணியில் நிற்பவர்களில் நிச்சயமாக டான் குய்ஷேவுக்கு இடம் உண்டு. என் பெரிய தந்தை என்னைக் கிண்டலாக ‘குய்ஷாட்டிக் ஃபெல்லோ’ என்று அழைப்பதை இங்கே நினைவு கூர்கிறேன். செர்வாண்டிஸ் தன் அமர காவியத்தை எழுதப் பின்னணியாக இருந்தது சூஃபி மரபே என்று இத்ரீஸ் ஷா தன்னுடைய மேக்னம் ஒபஸ் படைப்பான “THE SUFIS” என்னும் நூலில் விளக்குகிறார். 

போர்ஹேவின் மீது தாக்கம் ஏற்படுத்திய இன்னொரு எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். பல பல்கலைக்கழகங்களில் அவர் ஷேக்ஸ்பியர் பற்றி உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். ஷேக்ஸ்பியருக்கு ரகசிய சூஃபி மரபுகளுடன் தொடர்புகள் இருந்தன என்றும் அவருடைய படைப்புக்களில் சூஃபி ஞானத்தின் பதிவுகளை நிறையவே காண இயலும் என்றும் இத்ரீஸ் ஷா கூறுகிறார்.


இளம் வயதில் போர்ஹே அவரின் தந்தை சேகரித்து வைத்திருந்த வீட்டு நூலகத்தில் வாசித்த நூற்களில் ரிச்சர்ட் பர்ட்டனின் ஆங்கில மொழிபெயர்ப்பிலான ’ஆயிரத்தொரு அரபுக் கதைகள்’ என்னும் நூலும் ஒன்று. அது ஒரு சூஃபி இலக்கியம். குறியீடுகளால் நிறைந்தவை அந்தக் கதைகள். மாய எதார்த்த உலகத்திற்குள் வாசகனைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்பவை. வாசகனின் அகவெளியின் கட்டமைப்பைக் கரைக்கும் சக்தி பெற்றவை. வாழ்வின் மீதான பார்வையை மாற்றி அமைக்கக்கூடியவை. வேறொரு காலத்தின் லயத்தை அவற்றை வாசிப்பவன் உணரமுடியும். அந்த லயத்தின் தித்திப்பு பின் எப்போதும் மனதை விட்டு அகலாததாக நின்றுவிடக்கூடியது. மீண்டும் மீண்டும் அவனைத் தன்னுள் அழைத்துக் கொண்டே இருப்பது. தன் அக உலகை அவன் மறந்து போய் விடாமல் இருக்க ஒரு நிரந்தர ஞாபகமூட்டியாக இருப்பது. 

ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் தந்தை ஜோர்ஜ் கலிர்மோ போர்ஹே ஃபிட்ஜெரால்டின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த உமர் கய்யாமின் பாடல்களை ஸ்பானிய மொழியாக்கம் செய்து வெளியிட்டார். நேர்த்தியாக இல்லை என்றாலும் பூடகமாகவேனும் சூஃபி மரபு குறித்த ஓர் அறிமுகத்தை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மக்களுக்குத் தந்தவை உமர் கய்யாமின் பாடல்கள். 

இவை எல்லாம் போர்ஹே சூஃபி மரபின் வழியாகவும் தன் மனவளத்தை உருவாக்கிக் கொண்டவர் என்பதற்கான ஏதுக்கள் என்று சொல்லலாம். 

கால வெளி குறித்த போர்ஹேயின் அவதானங்களில் மிக முக்கியமான சிறுகதை “THE ALEPH” என்பதாகும். இது ஒரு சூஃபிக் கலைச் சொல். இதனைக் காலத்தைக் குறிக்கும் சொல்லாக போர்ஹே கையாள்கிறார். ஒற்றைப் புள்ளியான ஒரு காலத்தில் ஒட்டு மொத்தப் பிரபஞ்சமும் அதன் அனைத்து நிகழ்வுகளும் பொதிந்து கிடக்கிறது என்பதுதான் அச்சொல்லின் அர்த்தம். அதனை ப்யுனஸ் அயர்ஸ் நகரில் உள்ள தன் வீட்டில் ஒருவன் உணர்ந்து கொள்வதாக போர்ஹே இக்கதையை அமைத்திருக்கிறார். அது ஒரு ஞான தரிசனம்தான்.போர்த்துகீசிய மொழி எழுத்தாளர் ’பாலோ கோயல்லோ’வும் இதே தலைப்பில் இதே கருத்தியலை வைத்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.ALEPH என்பதை தமிழில் எஸ்.ராமகிருஷ்ணன் ’ஆல்ப்’ என்று எழுதியுள்ளார். அது அலிஃப் என்பதுதான் சரி என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அலிஃப் என்பது சூஃபி மரபில் உள்ள பிரபஞ்ச தோற்றக் கோட்பாடான “தனஸ்ஸுலாத்” என்பதன் முதல் நிலையைக் குறிக்கிறது. பிரபஞ்சம் தோற்றாத நிலையை புள்ளி (DOT) குறிக்கும். அது இறைவன் தன்னில் தான் தனித்திருந்த நிலை (அஹதிய்யத்). பின் இறைவன் பிரபஞ்சத்தை வெளிப்படுத்தியது புள்ளி கீழிறங்கி ஒரு நேர்க்கோடாக ஆன நிலையை வைத்து விளக்கப்படுகிறது. ஒன்று என்பதையும் அது குறிக்கிறது. அந்த எழுத்துத்தான் அலிஃப். அது முழுப்பிரபஞ்சமும் ஒருமை நிலையில் இருப்பதைக் குறிக்கிறது. அது முன் பின்னாகப் பிரியாத, தொடர் நிலையாக உருப்பெறாத ஒற்றைக் காலம். அதுவே நபிகள் நாயகத்தின் எதார்த்தம் என்று சூஃபிகள் கூறுவர். இக்கருத்தில் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடியுள்ள இந்த வரி போர்ஹே குறிப்பிடும் அலிஃப் என்பதற்கொரு நல்ல தமிழ் வார்த்தையைத் தருகிறது:
“ஏகமாய் ஒரு காலம் அழியாத ஒளியான
எம்பிரான் முன்னிற்கவே” (அகத்தீசன் சதகம், பாடல்:5)இந்த அலிஃப்தான் அரபி அட்சரங்களின் முதல் எழுத்து. அலிஃப் என்பது லத்தீன் அமெரிக்க உச்சரிப்பில் அலெஃப் (ALEPH) என்பது போல் எழுதப் படுகிறது. 1999-இல் சூஃபி ராக் இசைக்குழுவான ஜுனூன் வெளியிட்ட ‘பர்வாஸ்’ என்னும் இசைப்பேழையில் அலிஃப் என்னும் ஒரு பாடல் இருந்தது. ஆங்கிலத்தில் அதனை ALEPH என்றுதான் எழுதியிருந்தார்கள். அது பஞ்சாபி சூஃபி மகான் பாபா புல்லே ஷாஹ் அவர்கள் எழுதிய அற்புதமான பாடல். அதன் பல்லவி:

“இல்மோன் பஸ் கரே ஓ யார் / இகொ அலிஃப் தேரே தர்கார்
இல்ம் ந ஆவே விச் ஷுமார் / ஜாந்தி உமர் நஹீ(ன்) இஃத்பார்”
(ஏட்டறிவு போதும் என் நண்பனே!
அலிஃப் ஒன்றுதான் உன் தேவை எல்லாம்
ஏட்டறிவு அளவின்றி வந்துகொண்டே இருக்கும்
நீ எதுவரை இருப்பாய் என்று யார் அறிவார்?)

 
சூஃபி மரபின் தாக்கம் போர்ஹேயிடம் இருந்திருக்கலாம். ஆனால் அலிஃப் என்னும் கோட்பாட்டை போர்ஹே சூஃபி மரபில் இருந்து பெறவில்லை. அதை அவர் வேறொரு மரபில் இருந்து பெற்றார் என்றுதான் சொல்லவேண்டும். அது அவரே மிகவும் ஈடுபாடு காட்டி வந்த ‘கப்பாலா’ (KABBALAH) மரபு.


(TO BE CONTINUED...) 

Wednesday, September 21, 2011

தேவதையின் அரிதாரம்


(சிறுகதை)

 
மாலை ஸ்கூலில் மாறுவேடப் போட்டி நடக்கப்போவதாலும் அதில் என் வாண்டு மகள் கலந்துகொள்ளப் போவதாலும் வேறு எந்த என்கேஜ்மெண்ட்டும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று காலையில் நான் கிளம்பும்போதே என் சகதர்மினி அன்புக் கட்டளை இட்டுவிட்டதன் பேரில் நானும் வேறு வேலைகளை இழுத்துக் கொள்ளாமல் மதியம் ஃப்ரீயாகிக் கொண்டேன். 

அவள் நினைவூட்டியது என் சுபாவம் தெரிந்துதான். இந்த விஷயம் எனக்கு மறந்தேவிட்டது, மற்ற எல்லா விஷயங்களையும் போலவே. பிள்ளைகளின் படிப்பு விளையாட்டு போன்ற விஷயங்களில் எப்போதும் தந்தையை விடவும் தாய்க்குத்தான் அதிக ஞாபகம் இருக்குமல்லவா? விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் இதுதானே விதி? எனவே, இவ்விஷயத்தில் அவளுடன் போட்டி போட இயலாது என்பதைப் புரிந்துகொண்டு நான் எப்போதோ ஜகா வாங்கிவிட்டேன். ஏனெனில் நான் என்னளவிலாவது ஒரு கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் இருக்கிறேன். போதாத குறைக்கு நான் ஆன்மிக நாட்டம் உள்ளவன் வேறு!

கே.ஜி குழந்தைகளுக்கான இந்த மாறுவேடப் போட்டி பற்றி ஒரு வாரத்திற்கு முன்பே மகளின் டீச்சர் சொல்லி அனுப்பிவிட்டார். அது என் கவனத்திற்கு வைக்கப்பட்ட போதே மனதிற்கு உடன்பாடாக இல்லை. மாறுவேடப் போட்டியின் இருத்தலியல் நியாயங்களை நான் கேள்விக்கு உட்படுத்திப் பேசியபோது என் சகதர்மினிக்கு மிகவும் எரிச்சலாகி விட்டது. 

“ஃபேன்சி ட்ரெஸ் காம்ப்பட்டீஷன்–ங்கிறது ச்சில்ட்ரன்ஸோட டேலண்ட்ட வளக்குறதுக்கான போட்டிதான்” என்பதில் தொடங்கி எல்லோரும் கலந்து கொள்ளும் போது மகள் மட்டும் சேராமல் போனால் அவளின் பிஞ்சு உள்ளத்தில் ஏமாற்றமும் டிப்ரஷனும் உண்டாகி அது படிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது வரை சகதர்மினி வரிசையாக தொடுத்த அஸ்திரங்களால் நான் படிந்துவிட்டேன். பின்ன, டிப்ரஷன் அப்படியே லோ.பி.பி வரை கொண்டுபோய்விடும் அல்லவா? தவிர பி.பி உள்ளவர்களுக்கு ’சுகர்’ வந்துவிடும் வாய்ப்புகளும் அதிகமாமே?

நான் பச்சை கொடி காட்டியதோடு அன்றைக்கு அந்த சப்ஜெக்ட் முடிந்தது. கூடத்தின் படுதாவைப் பிடித்துக் கொண்டு பாதி முகம் தெரிய, நானும் அவளும் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த மகள் நான் சம்மதம் சொன்னதும் பூப்போல் முகம் மலர்ந்து ஓடி வந்து என் மடியில் ஏறிக்கொண்டாள்.

“குட்டிக்கு என்ன வேசம் போடலாம்னு நீங்களே ஒரு நல்ல ஐடியா சொல்லுங்க” என்னும் உத்தரவு அடுத்த நாள் மாலை நான் பிரம்பு ஊஞ்சலில் அமர்ந்திருந்தபோது நானே கேட்டு வாங்கிக்கொண்ட சூடான காபியின் ரூபத்தில் வந்தது. காபிக்கு நம் மூளையின் செல்களைத் தூண்டிச் சுறுசுறுப்பாக்கும் தன்மை உண்டாம். அதெல்லாம் எதற்கு? மூளைக்குச் சூடேற்றிக் கொண்டு மேற்படி உலகப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்குத்தானே? நான் ஒன்றும் தப்பாகச் சொல்லவில்லை நண்பர்களே. பெண்களுக்கு இல்லம்தான் உலகம் எனும்போது வீட்டுப் பிரச்சனைகள் எல்லாம் உலகப் பிரச்சனைகள்தானே?

என் சுட்டி மகளுக்கு என்ன வேடம் போட்டால் நன்றாக இருக்கும் என்று நானும் யோசிக்கத் தொடங்கினேன். ஹைசன்பர்க் தியரி, ஐன்ஸ்டீன் தியரி, நீஷேயின் தத்துவம், சிவஞான போதம், களா-கத்ரு மஸ்அலா போன்றவற்றைவிட அதிகமாக மண்டையைக் குடைவதாக அது இருந்தது. 

ஒல்லிக்குச்சி அழகிக்கு என்ன வேடம் பொருத்தமாக இருக்கும்? அவளைப் பெற்ற மகராசி ஏரோப்ளேன் ஓட்டும் பைலட்டாக ஆசைப்பட்டவர். எனவே மகளுக்கு ஏர்-ஹோஸ்ட்டஸ் வேடம் போட்டால் என்ன என்று தோன்றியது. சின்னதாக ஒரு சேலையைக் கட்டிவிட்டு, கையில் ஒரு தட்டில் எக்ளேர்ஸ் சாக்லேட்டுக்களைக் கொடுத்து “ஸ்வாகத்” சொல்லியபடி அதை அப்படியே நடுவர்களுக்குக் கொடுக்கச் சொல்லலாம். இது நல்ல ஐடியாவாகத் தோன்றவே மகிழ்ச்சியோடு முன்வைத்தேன். மகள் பைலட்டாக இருந்தால் என்ன என்று கேட்டுவிட்டு அந்த யோசனையை மேலிடம் ரிஜக்ட் செய்துவிட்டது.

யோசித்து மீண்டும் ஒரு ஐடியாவைக் கொளுத்தினேன். டீச்சர் வேடம். ஆமாம் அதுதான் மகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். சும்மாவே அவள் தன்னை ஒரு டீச்சராகத்தான் பாவித்துக் கொண்டு விளையாடுகிறாள். பொம்மைகள் எல்லாம் எல்.கே.ஜி படிக்கும் பிள்ளைகளாகிவிடும். பொம்மைகள் தவிர வேறு பிள்ளைகளும் அங்கே இருப்பதாகக் கற்பனை செய்துகொள்வாள். அவள்தான் அப்பிள்ளைகளின் டீச்சர். தமிழ் இங்க்லீஷ் பாடல்கள் சொல்லித் தருவாள். ஆனால் பிள்ளைகள் ஏகத்துக்கும் ரகளை செய்து அவளின் கோபத்தைத் தூண்டும். கீச்சுக்குரலில் உச்ச ஸ்தாயியில் “ஆல் ஆஃப் யூ ஷட் அப். சைலன்ஸ்” என்று கத்திக்கொண்டே அவர்களை ஸ்கேலால் விளாசுவாள். அதாவது, அப்படியான பாவனையில் மார்பில் தரையில் டப் டப் என்று அடித்துக் கொண்டிருந்தாள். நான் ஒரு நாள் அவளை அழைத்து, “தரை அடி தப்பாம விழும்னு சொல்லுவாங்க. அப்படி அடிக்காதம்மா” என்று சொல்லிவைத்தேன். என் தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்த வானவர்கள் கோரஸாக “ஆமீன்” சொல்லிவிட்டார்கள் போலும். ஒரு நாள் பள்ளியில் இருந்து வரும்போது இரண்டு கால்களின் முட்டிகளில் சிராய்ப்புக் காயத்துடன் அழுதுகொண்டே வந்தாள். ஓடும்போது சிமிண்ட் தரையில் விழுந்துவிட்டாளாம். அதிலிருந்து தரையை அவள் அடிப்பதே இல்லை. நல்ல டீச்சராக மாறிவிட்டாள்!  
   
நான் முன்வைத்த இந்த யோசனையும் ஏற்கப்படவில்லை. இன்னும் அருமையான ஐடியா வேண்டும் என்று என் சகதர்மினி கேட்கவே அவளிடமே ஏதாவது ஐடியா இருக்கத்தான் வேண்டும் தோன்றியது. “நீயேதான் சொல்லேன்?” என்றேன். மகளிடம் முன்பு பிறந்தநாளுக்கோ வேறு ஒரு வைபவத்துக்கோ எடுத்த பிங்க் நிற கவ்ன் ஒன்று இருப்பதைச் சுட்டிக்காட்டினாள். அடுக்கடுக்காக ஃப்ரில் வைத்து புஸ் என்று பஞ்சுமிட்டாய் போல் பரவி மகளை ஒரு பொம்மை போல் காட்டும் ஆடை. அதைப் போட்டு என்ன வேடம் என்று எனக்குப் புரியவில்லை. “ஏஞ்சல் வேஷம் போடலாம். அதுதான் அவளுக்குப் பொருத்தமாக இருக்கும்” என்றாள். இத்தனை சுலபமாக முடிந்தால் அதை நான் ஏன் வேண்டாம் என்று மறுக்கப் போகிறேன்? “ஆல்ரைட், அப்படியே செஞ்சுறலாம்” என்றேன். “இப்படிச் சொன்னா எப்படி? மத்த தேவையெல்லாம்?” என்றாள். இன்னும் என்ன என்பது போல் பார்த்தேன். சொன்னாள். தேவதை என்றால் அதுக்குன்னு ஒரு லட்சணம் இருக்கே? கையில் ஒரு நட்சத்திர மந்திரக்கோல் வேண்டும். அதை வைத்து வட்டம் போட்டுத்தானே அது வரம் கொடுக்கும்? அப்புறம், தலையில் ஒரு மினுக்கும் கிரீடம் வேண்டும். அது ஒருவித உலக அழகி அல்லவா? அத்துடன் மிக முக்கியமாக, அதன் தனித்தன்மையாக அதற்கு முதுகில் இரண்டு சிறகுகள் வேண்டும். அதை வைத்துத்தானே அது பறந்து வந்து ஜன்னல் வழியாக நுழைந்து நம் கட்டிலின் அருகில் வந்து ஒன்றரை அடி உயரத்தில் மிதக்கும்?


”கிரீடம், ரெக்கை, மந்திரக்கோலா? இதெல்லாம் எப்படிச் செய்யிறது? ரெக்கை வேணும்னா தெர்மோகோல் ஷீட்டில் செய்யலாம்…”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். ஃபேன்சி ட்ரெஸ்சுக்குத் தேவையானதெல்லாம் கடையிலயே செட்டா விக்கிதாம்.”

“எங்கே?”

“அல்லிமால் தெருவில உள்ள கடைகள்ல கேட்டா கிடைக்கும்னு மிஸ்ஸே சொன்னாங்க.”

ஆக, தேவதைக்கான ஸ்பேர் பார்ட்ஸ் வாங்குவதற்காக நானும் சகதர்மினியும் மறுநாள் மதியம் அல்லிமால் தெருவில் அலைவது என்று முடிவாயிற்று. அதன்படி மறுநாள் மதிய உணவும் லுஹர் தொழுகையும் முடிந்த பின் மீண்டும் ஃபார்மல் உடைக்குள் புகுந்துகொண்டு என் ஸ்கூட்டரில் சாவியை மாட்டித் திருகி ஒரு உதை விட்டேன். அலறிக்கொண்டு புகையைக் கக்கியது. அந்த எந்திரக் கரும்புரவியில் என் பட்டத்தரசியுடன் ஆரோகணித்து அதன் விசையை முடுக்கி திருச்சி மாநகரின் தேசிய நெடுஞ்சாலைகளில் கடுகி விரைந்து அல்லிமால் தெருவை அடைந்தேன். கெமிக்கல் திரவியங்கள் விற்கும் கடைகள், பேப்பர் ஐட்டம்ஸ் விற்கும் கடைகள் என்று அந்தக் குறுகிய தெரு நிறைந்திருந்தது. ஒரு பேப்பர் கடைக்குள் நுழைந்தோம்.

என்னே ஆச்சரியம்! அங்கே ஏற்கனவே எம்மைப் போன்ற புண்ணியம் செய்த பெற்றோர்கள் சிலர் இருந்தார்கள்! அவரவர் வீட்டிலும் ஸ்பேர் பார்ட்ஸ் தேவைப்படும் தேவதைகள் இருப்பதை நினைத்து என் நெஞ்சம் நெகிழ்ந்தது! 

இரண்டு தளங்கள் கொண்ட அந்தக் கடையின் மாடியில் இருந்து தக்காளி பழம் போல் இருந்த, பான் போட்ட சேட் முதலாளி இறங்கி வந்தார். லேசாகக் கலங்கியது போன்ற கண்களால் என்னைப் பார்த்து ‘என்ன வேண்டும்?’ என்னும் கேள்வியை வாயைத் திறக்காமலே ஒரு குதப்பல் புன்னகையால் கேட்டார். “ஏஞ்சல் வேஷத்துக்கு….” என்று நான் சொல்லத் தொடங்கியதுமே கையால் ஒரு அபய முத்திரை காட்டிவிட்டு உள்ளே சென்று நான்கைந்து ப்ளாஸ்டிக் பைகளை எடுத்து வந்தார். ஊதா, பச்சை, பிங்க் என்று பல நிறங்களில் செட் செட்டாக தேவதைக்கான உபகரணங்கள். வலைத்துணியால் செய்த தேவதைச் சிறகுகளும் எடுத்துத் தந்தார். அதில் இரண்டு எலாஸ்டிக் வளையங்கள் இருந்தன. கையை விட்டு முதுகில் மாட்டிக் கொள்ள வேண்டியதுதான். ரொம்ப ஈசி.

போட்டியின் நாளும் வந்துவிட்டது. மதியம் மூன்று மணி வாக்கில் மகளை தேவதை ஆக்கும் பணியில் சகதர்மினி இறங்கிவிட்டாள். தேவதை என்றால் மூச்சா கக்கா போன்ற துடக்குகள் கிடையாதல்லவா? அதுவும் போட்டி மேடையில் இதெல்லாம் மைனஸ் பாய்ண்ட் ஆகிவிடுமே? எனவே, மகளைச் சிறிய பெரிய கடன்களெல்லாம் கழிக்கச் செய்து, முகம் கை கால் அலம்பித் துடைத்து, தேவதைக்கான உடைகள் அணிவித்து, முதுகில் சிறகுகளைப் பொருத்தி, தலையில் கிரீடம் மாட்டி, கையில் மந்திரக் கோலையும் தந்து ஒருமுறை அழகு பார்த்து “ஃபைன்” என்று புன்னகைத்தாள். இதோ, ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகளை தேவதையாகக் காணும் தாய்!

தேவதையை என் எந்திரக் கரும்புரவியின் முன் நிற்க வைத்து மகனும் துணைவியும் என் பின்னால் அமர்ந்திருக்க பள்ளிக்கூடம் நோக்கிச் செலுத்தினேன். நிகழ்ச்சிக்காக பள்ளி மண்டபமே களைகட்டியிருந்தது. ஸ்கூட்டரெனும் ’புரவி’யை அணைத்து நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தோம்.

நான் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன். அப்படி ஒரு மேஜிக் ரியலிசக் காட்சி எதிர்பாராமல் கிடைத்தது. என் முன்னே இரண்டரை அடி உசரமுள்ள ’முண்டாசுக் கவிஞன்’ நின்றான். தமிழால் தகுதி பெற்றுப் பின் தமிழுக்குத் தகுதி தந்த கவிராஜனை அக்கோலத்திலா என் கண்கள் காண வேண்டும்? தலையில் முண்டாசு, முகத்தில் முறுக்கிய மீசை, புஷ்கோட், கையில் தடி எல்லாம் சரியாகத்தான் இருந்தன. ஆனால் அரையில் ஒட்டுத் துணி இல்லை! அருகில் மாதிரி இலக்குமி அம்மாள், அதாவது கவிஞனைப் பெற்ற தாய் அவனது பஞ்சகச்சத்தை உதறி சரிசெய்து கொண்டிருந்தாள். அவன் கேவிக் கேவி அழுது கொண்டிருந்தான். சரிதான், விஷயம் விளங்கிவிட்டது. நெக் ஆஃப் தி மூமெண்ட்டில் தனக்கு மோஷன் வருகிறது என்று அவன் தன் தாயிடம் சொல்லியிருக்கிறான். உடனே அரையில் நிர்வாண நிலை சித்திக்கப்பட்டு கழிப்பறைக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறான். பின்பு அவசரமாகத் துப்புரவு செய்யப்பட்டு அந்தக் கடுப்பில் பிட்டத்தில் நாலைந்து மொத்து வாங்கிக் கொண்டு வந்து நிற்கிறான். என்ன கொடும சார் இது? அதே பாரதிதான் நிகழ்ச்சியில் மேடையில் வந்து நின்று “ஓடி விளையாடு பாப்பா…” என்னும் கவிதையை ஒப்பித்தான்.


சற்றே தள்ளி இன்னொரு ஆகிருதியின் போன்சாய் வடிவத்தைக் கண்டேன். “வானம் பொழிகிறது பூமி விளைகிறது, உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்…” என்னும் புகழ்பெற்ற வசனத்தைப் பேசியவன். ஆனால் இந்தக் கட்டபொம்மன் வீரம் ததும்பும் முகமுடையவனாக இல்லை. நான்கு வயதுப் பையனிடம் என்ன வீரம் ததும்ப முடியும்? அதுவும் இவன் அவனது அம்மாவின் ஜாடையில் இருப்பவன் போலும். பெண்மை ததும்பும் பாவ முகம். அமுல் பேபி. அவனைக் கட்டபொம்மன் ஆக்குவதென்றால் சாத்தியமா? பொட்டபொம்மனைப் போல் ஆகிவிட்டது.

மண்டபத்தின் உள்ளே சென்று அமர்ந்தோம். தேவதை அவளின் மிஸ்ஸிடம் ஒப்படைக்கப் பட்டாள். மேற்படிக் காட்சிகள் என் மனதில் ஏற்படுத்திய கிளர்ச்சியான சிந்தனைகளை நான் என் ஜோடியிடம் சொன்னேன். அதை அவள் துளிகூட ரசிக்கவில்லை. “இதப் பாருங்க. இப்படியெல்லாம் கிண்டல் பண்ணாதீங்க. குழந்தைகள என்கரேஜ் பண்ண முடிஞ்சா பண்ணுங்க. இல்லேன்னா பேசாம இருங்க. நம்ம புள்ளைய நாலு பேரு பாத்துக் கிண்டல் பண்ணினா நமக்கு எப்படி இருக்கும்?” என்றாள்.

அதெல்லாம் எனக்குத் தெரியாதா? நம்மையும் நாலு பேர் கிண்டல் செய்யத்தான் செய்வாங்க. அப்படிச் செய்து அவங்க சந்தோஷப் படுறதுக்கு நாமலும் ஒரு காரணமா இருந்தோம்னா அதுவும் ஒரு வகையில் தர்மம்தானே? புண்ணியம்தானே? தவிர, நான் கிண்டல் செய்வது குழந்தைகளை அல்ல. சொல்லப்போனால் நான் குழந்தைகளின் சார்பாகக் குரல் கொடுக்கிறேன். குழந்தைகளை வைத்து டேலண்ட் லேடண்ட் அது இது என்று பெரியவர்கள் செய்யும் கூத்துக்களை விமர்சிக்கிறேன். நான் ஒரு உரிமைப் போராளி! இந்த எண்ணம் என்னை இன்னும் வேகப்படுத்தியது. நிகழ்ச்சி ஆரம்பித்த பின் தொடர்ந்து என் ரன்னிங் கமெண்ட்ரியைக் கொடுத்துக் கொண்டே இருந்தேன். சிரிப்புணர்வு மிக மிக வலியது நண்பர்களே! என்னைக் கடிந்து கொண்டாலும் அவ்வப்போது சகதர்மினி அடக்க முடியாமல் சிரித்தாள். என் மனதைக் கவர்ந்த மாறு வேடங்களையும் அவை எனக்குப் பிடித்திருந்ததற்கான காரணங்களையும் உங்களிடம் சொல்கிறேன்.

ஒரு வாண்டுப் பையன் முழுமையான போலீஸ் யூனிஃபார்மில் மேடையேறினான். நடுவர்களைப் பார்த்து நச்சென்று நாலு சல்யூட் போட்டு வைத்தான். அப்புறம் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தான். புரட்சிக் கலைஞர் பேசுவது போன்ற பாணியில் இருந்தது. ஆனால் அவனுக்கிருந்த மூடில் அது புராண கதைகளில் ப்ராண நாதனை இழந்த பதிவிரதை பேசுவது போல் வெளிப்பட்டது. இறுதியாக “ஜெய்ஹிந்த்” என்று முழங்க முயன்று முனகினான். அந்தப் பையனுக்கு ஆறுதல் பரிசு வேண்டுமானால் தரலாம். ஆனால் முதல் மூன்று பரிசுகள் தரக்கூடாது என்று என் முடிவைச் சொன்னேன். அதற்கான காரணம் மேலே சொன்னது அல்ல. அவன் ஆள் போலீசைப் போலவே இல்லை. நாலைந்து மாதத் தொப்பை இல்லை என்றாலும் பேருக்கு ஒரு மாதத் தொப்பையாவது இருக்கவேண்டாமா? இவனோ வயிறு ஒட்டிப்போனவன். ஒருவேளை ஐடியலிசத்தை வெளிப்படுத்தினான் போலும். ஆனால் மாறுவேடப் போட்டியில் ரியலிசம்தான் வேண்டும்.சிறுமி ஒருத்தி வெள்ளைச் சேலை தரித்து பாரதமாதாவாக அவதரித்து வந்திருந்தாள். கையில் தேசியக் கொடி வைத்திருந்தாள். கீழே நிற்கும் வரை தன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டே நின்றாள். மேடையேறும்போது ஏதாவது சுவாரஸ்யமாகச் செய்யப்போகிறாள் என்று நான் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. மேடையேற மறுத்தவளை அவளின் அன்னை வலிந்து ஏற்றிச் சென்று மைக்கின் முன் நிறுத்தினார். பாரதமாதா ஓவென்று அழத் தொடங்கிவிட்டாள். நாடு இருக்கும் நிலையை எண்ணிப் பிலாக்கணம் வைக்கிறாள். என்னவொரு தத்ரூபமான நடிப்பு! இவளுக்குத்தான் முதல் பரிசு தர வேண்டும் என்றேன். ஆனால் அவள் தன் நடிப்பில் ஓவராக்டிங் செய்து காரியத்தைக் கெடுத்துவிட்டாள். தன் அம்மா கீழே இறங்குவதைக் கண்டவுடன் பாரத மணிக்கொடியைக் கீழே போட்டுவிட்டு பின்னாலேயே ஓடினாள். அதிலும் ஒரு கவித்துவம் இருக்கத்தான் செய்கிறது. நூற்றிப் பத்து கோடி ஜனங்களின் சங்கத்தைப் பெற்ற பாரதத் தாய்க்கும் ஒரு தாயின் அரவணைப்புத் தேவைப்படுவதைக் காணீர்! இப்படியாக, டெட்டிக் கரடி போல் வேடமிட்ட சிறுவன், கிட்னி திருடாத நல்ல டாக்டராக வேடமிட்ட சிறுவன், ஃபீய் ஃபீய் என்று மைக் முன் நின்று விசிலடித்துக் காதைக் கிழித்த ஒரு ட்ராஃபிக் போலீஸ், ஔவைப் ’பேத்தி’, உடலெங்கும் கத்திரிக்காய் கேரட் எலுமிச்சை முள்ளங்கி கீரை போன்ற காய்கறிகளைத் தொங்கவிட்டுக் கொண்டு “வெஜிடபிள் மேன்” என்றெழுதிய ஒரு பலகையைக் கையில் பிடித்தபடிப் பரிதாபமாக வந்த ஒரு காய்கறிக்காரன் மற்றும் பல மாறுவேடமிட்ட வாண்டுகள் மேடையேறி இறங்கினார்கள். ஒருவழியாக நிகழ்ச்சி முடிந்து பரிசுகள் அறிவிக்கப்பட்டு நடுவராக வந்திருந்த ஒரு பெண்மணி இலிப்புஸ்டிக் பூசிய உதடுகளில் செயற்கையான ஒரு சிரிப்பை இழுத்து வைத்துப் பல்லைக் காட்டிப் பேசிக்கொண்டிருந்தபோதே எல்லோரும் வெளியேறத் தொடங்கினோம். தேவதை வாடி வதங்கிப் போயிருந்தாள். இரண்டு ரைம்ஸை தலையை ஆட்டி ஆட்டி மூச்சு முட்ட ஒப்பித்த தேவதைக்கு பரிசு ஒன்றும் கிடைக்கவில்லை.
திறமைகள் வளரவேண்டும் என்பதில் எனக்கொன்றும் ஆட்சேபனை கிடையாது. ஆனால் அதன் பெயரால் நடத்தப்படும் போட்டிகள் அதற்கு நியாயம் செய்வதில்லை என்பதைக் கண்கூடாகக் கண்டவன் நான். வினாடி வினா போட்டிகளில் கலந்துகொள்ளும் நெத்து மண்டைகள் பல தரவுகளை மனப்பாடம் செய்து வைக்கிறார்கள். சவரக் கத்தியைக் கண்டுபிடித்தவனின் பயோ டேட்டா, குண்டூசி ஒரு இன்ச் நீளம் இருந்தால் அதற்கு எவ்வளவு சைசில் கொண்டை போட வேண்டும், மேரத்தான் ரேசில் முதல் தங்கப் பதக்கம் வாங்கியவன் எப்படிச் செத்தான், மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை தடவை துடிக்கிறது, எதிர் அணியில் அமர்ந்திருக்கும் காயத்ரியைப் பார்க்கும்போது மட்டும் அந்த எண்ணிக்கை ஏன் அதிகரிக்கிறது, முதன் முதலில் பூமியில் இருசக்கர சைக்கிள் எந்த ஊரில் எந்தத் தெருவில் ஓடியது, அது எத்தனை பேர் மீது மோதியது என்பன போன்ற தரவுகளைத் தம் மூளையில் பதிவு செய்து வைப்பவர்கள், அதுவும் வினாடி வினாவில் ஜெயித்து இவை எதுவுமே தெரியாத ஒரு கவுன்சிலர் அல்லது வங்கி மேனேஜர் கையால் பிசாத்து சோப்பு டப்பாவைப் பரிசாக வாங்குவதற்காக (கேட்டால் அந்தக் காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் ஜெயிப்பவர்களுக்கு ஒலிவ இலையைத்தான் தந்தார்கள். சோப்பு டப்பா அல்லது டிஃபன் டப்பி எவ்வளவோ தேவலாம் என்று சொல்வார்கள்.) ம்ஹும், இவ்வளவு தரவுகள் உள்ள மண்டைக்குக் கடைசியில் வாழ்வின் ஆதாரமான பல விஷயங்களில் புரிதல் என்பதே இருக்காது!

பேச்சுப் போட்டிக்குச் சென்று வென்ற பலரும் வெறும் கிளிப்பிள்ளைகளாகவும், பாட்டுப் போட்டியில் வெல்லும் பலரும் வெறும் டேப் ரிக்கார்டர்களாகவும்தான் உருவாகிறார்கள். சுயமாகச் சிந்திக்கும் திறனைப் பேச்சுப் போட்டி வளர்ப்பதில்லை என்பதையும் இசை மேதைமையைப் பாட்டுப் போட்டிகள் வளர்ப்பதில்லை என்பதையும் கண்டாகிவிட்டது.

மாறுவேடப் போட்டியில் ஏனோ எனக்கு மனம் லயிக்கவே இல்லை. நாம் வளர்க்க வேண்டியது வேடமிடும் திறமையை அல்ல. வேடமில்லாமல் வாழும் திறமையை என்று நான் நினைத்தேன். ஏற்கனவே தேவதைகளாக இருக்கும் குழந்தைகளுக்குத் தேவதை அரிதாரம் எதற்கு? தேவை இல்லைதானே?

Sunday, September 18, 2011

அவன் அழகன்”எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்க முடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில்கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான். அந்தக் கணங்களையே நீட்டி முடிவற்ற காலமாக்கினால் அதில் வாழ்பவள் யட்சி” (ஜெயமோகன், “யட்சி”.)

மேற்காணும் வரிகளைப் படித்துக் கொண்டிருந்தபோது என் நினைவுகள் ஏழெட்டு வருடங்கள் பின்னோக்கிப் பாய்ந்து நண்பன் ரஃபீக்கின் அறையில் நின்றது. அது ஒரு மாலைப் பொழுது. நாங்கள் இளம் பேராசிரியர்களாக இருந்தோம். ரஃபீக் எனக்கு ஜூனியர். அப்போது அவன் அறையில் அரட்டை அடிப்பதற்காக தாஜ், உமர் மற்றும் ஃபைஸல் மற்றும் சிலர் இருந்ததாக ஞாபகம். எல்லோருமே அப்போது பேச்சுலர்ஸ். மனதின் ஈரமழைக் காட்டில் அழகின் சிரிப்பு சதா கவர்ச்சியுடன் ஒலித்துக் கொண்டிருக்கும் பருவம். மேசை மீது கிடந்த ஒரு வாரப்பத்திரிகையில் சொலித்துக் கொண்டிருந்த ஒரு யுவதியின் பிம்பத்தினடியாக பேச்சு தொடங்கி நகர்ந்தபோது அது என் மனதில் ஒரு ஆதாரமான கேள்வியில் வந்து நின்றுவிட்டது: “அழகு என்பது என்ன?”

நிச்சயமாக வரையறுத்துவிட முடியாத விஷயங்களில் இந்த அழகு என்பதும் ஒன்று என்பது நிச்சயம்தானே? அழகனுபவம் என்பது ஆளாளுக்கு மாறுபடுகிறது. அந்த அனுபவத்தின் அடிப்படை என்ன? என்பது போல் அரட்டை கொஞ்சம் சீரியசாகித் தத்துவத்திற்குள் நுழைந்துவிட்டது. நாங்கள் எல்லோருமே தத்துவத்தை ஒரு லாகிரி வஸ்து போல் அனுபவிப்பவர்கள் என்பதால் பேச்சின் திசையை யாரும் மாற்றவில்லை. எனவே அழகைப் பற்றிய விசாரம் கழுதை கெட்டால் குட்டிச்சுவரு என்பதுபோல் நேராக இறைவனிடம் போய் நின்றுகொண்டது. 

இறைவனின் பிரதான பண்புகளில் ஒன்றாக அழகை முன்வைத்து உபநிஷத்தில் ரிஷிகள் பேசியிருக்கிறார்கள். “சத்யம் சிவம் சுந்தரம்” என்பது அவர்கள் வகுத்துத் தந்த சூத்திரம். “சத் சித் ஆனந்தம்” என்பது இன்னொரு சூத்திரம். இரண்டும் ஒரே கருத்தைத்தான் வெவேறு கலைச் சொற்களில் முன்வைக்கின்றன. அதாவது சுந்தரமும் ஆனந்தமும் தொடர்புடையவை. அழகின் விளைவு ஆனந்தம் என்பதில் அப்போது எங்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கவில்லை. ஆனால் இறைவனின் அழகு எத்தகையது?”இறைவனின் அழகுதான் பிரபஞ்சம் எங்கும் வெளிப்படுகிறது. பிரபஞ்சத்தில் நாம் காணும் அழகு எதார்த்தத்தில் இறைவனின் அழகுதான்” என்று சூஃபிகள் கூறுகின்றார்கள். இருக்கட்டும். ஆனால் இறைவனின் அழகு எத்தகையது?

“திண்ணமாக அல்லாஹ் அழகன் (இன்னல்லாஹ ஜமீலுன்)
அவன் அழகை நேசிக்கிறான் (வ யுஹிப்புல் ஜமால்)”
என்னும் நபிமொழியின் மீது கவனம் விழுந்தது.

பத்திரிகையில் சொலித்துக்கொண்டிருந்த யுவதியின் ரசிகரான ஒரு நண்பர் சொன்னார், “இறைவனின் அழகுதான் எல்லாவற்றிலும் பிரதிபலிக்கிறது என்றால் இவளின் அழகு என்பதும் அதுதானே? அழகை இறைவன் நேசிக்கிறான் என்றால் இந்த அழகையும் அவன் நேசிக்கத்தானே செய்வான்?”

லாஜிக்கான ஒரு மடக்கு வைத்துவிட்டதாக நண்பர் கருதிக் கொண்டார். ஆனால் அதன் தர்க்கம் அப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது என்பதை அவர் அறியவில்லை.
இறைவனின் பார்வையில் அழகு என்பது எது? இறைவனின் பார்வை எத்தகையது என்பதை நாம் அறிய முடியுமா என்ன? அறியமுடியாது எனும்போது அவன் பார்வையில் அழகு என்பது எது என்று நாம் எப்படி அறிவது?

ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதனதன் ஜோடிதான் உச்ச அழகு. உலக அழகி / அழகன் என்னும் கான்செப்ட் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகள் பறவைகள் ஆகியவற்றுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு பன்றிக்கு இன்னொரு பன்றி அழகாகத் தெரியும். அது தன் ஜோடிப் பன்றியின்மீது தீரா மையல் கொண்டு ஆராக் காதலின் அவஸ்தையால் அலமந்து திரியும்ன் அல்லவா? களிற்றின் மனம் பிடியின் சௌந்தர்யத்தில் பிடிபட்டுப் போகிறது. சொறிநாய் ஒன்றும் தன் சோடியின் அழகில் வசமிழக்கும்.

நண்பரிடம் சொன்னேன், “மாப்ள, இந்த நடிகை உங்கள் பார்வையில் உலக அழகியாக இருக்கலாம். ஆனால் இவள் தெருவில் நடந்து சென்றால் உங்கள் வீட்டு நாய் தன் வாலைக்கூட ஆட்டாது. அதே சமயம் தெருவில் ஒரு சொறிநாய் ஓடினால் அதைப் பார்த்து வீட்டுநாய் மிகவும் பரபரப்படையும். உங்கள் பார்வையில் இவள் அழகு. நாயின் பார்வையில் அது அழகு. ஆனால் இறைவன் மனிதனும் அல்ல நாயும் அல்ல. இறைவனின் பார்வையில் இவள் அழகென்றால் அவனிடம் இருப்பது மனிதப் பார்வை என்றாகும். இறைவனின் பார்வையில் இந்த நாய் அழகென்றால் அவனிடம் இருப்பது நாயின் பார்வை என்றாகும். இதெல்லாம் இறைவனை நம் பார்வையின் அடியாகச் சித்தரித்துக் கொள்வதுதான். சுத்தமான ANTHROPOMORPHISM!”

இறைவனின் அழகு என்பது அவனது பண்புகள்தான். அவை எதில் வெளிப்பட்டாலும் அதை அவன் நேசிக்கிறான். “இறைவன் அழகை நேசிக்கிறான்” என்பது அவனுடைய சுய அழகின் வெளிப்பாட்டைத்தான். நிறம், அளவு மற்றும் எடை ஆகியவை இந்த உலகைச் சேர்ந்த பண்புகள். அவை இறைப்பண்புகள் அல்ல. ஆனால் இப்பண்புகள் கொண்ட பொருட்களில் இறைப்பண்புகள் வெளிப்படும்போது அவை நேசிப்பிற்குரியதாகின்றன. அவை நேசிக்கப்படுவது இறைவனின் பண்புகளுக்காகத்தான்.


”ஐம்பது கிலோ தாஜ்மகால்” என்று வருணிக்கப்பட்ட இந்தச் சொலிக்கும் யுவதியின் நிறம், அளவு மற்றும் எடை ஆகிய பண்புகள் காட்டும் உருவப்பரிமாணங்கள் இந்த உலகினைச் சேர்ந்தவை. அவை எதார்த்தத்தில் அழகே அல்ல என்று சூஃபிகள் சொல்கின்றனர். அதில் பார்வை என்ற ஓர் இறைப்பண்பு மட்டும் குறைவதாக வைத்துக்கொள்ளுங்கள், அதன் கதி என்ன? எத்தனை விகாரப்பட்டுப் போய்விடுகிறது? உயிர் என்ற இறைப்பண்பு பிரதிபலிக்கவில்லை என்றால் காரியம் முடிந்தது. ஐம்பது கிலோவுக்கும் சல்லிக்காசு மதிப்புக் கிடையாது!

ஆனால் மனிதனால் இறைப்பார்வையின் எதார்த்தத்தை அறிய முடியாது. அவன் தன் பார்வை கோணத்தில்தான் (PERSPECTIVE) அழகை தரிசிக்க முடிகிறது. இறைவனை அவனின் தூய நிலையில், அரூப நிலையில் அவனையன்றி வேறு யாரும் காண முடியாது. எனவேதான் அவன் மறுமையில் முதலில் தெரியாத ஒரு உருவத்திலும் பிறகு தெரிந்த உருவத்திலும் அடியார்களுக்குக் காட்சியாவான் என்று நபி(ஸல்) அருளினார்கள்.

இறைவனின் அழகைச் சொல்ல வந்தவர்கள் எல்லாம் மனிதப் பார்வை கோணத்தில் வைத்தே சொல்லியிருக்கிறார்கள்.
“நான் என் ரட்சகனை தாடி இல்லாத ஓர் அழகிய வாலிபனின் உருவில் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்.
 
“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமின்சிரிப்பும்…”
“பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண்…”
போன்ற வரிகள் எல்லாம் இறைவனை மனிதப் பார்வையில் வரித்துக் கொண்ட நிலைகளையே காட்டுகின்றன.

மேலே நாம் கண்ட அதே தர்க்கத்தை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் வேறு ஒரு நண்பரிடம் முன்வைத்துப் பேசியதும் இங்கே ஞாபகம் வருகிறது.

“எல்லாப் பொருட்களும் இறையுள்ளமையில்தான் வெளிப்பட்டுள்ளன என்று சொல்லி எல்லாவற்றிலும் இறைவனை அகக்கண்ணால் காணும் பயிற்சியை செய்யும்போது சில நேரங்களில் மிகவும் சிக்கலாக இருக்கிறது. மலத்தில் இறைவனைப் பார்ப்பதா? என்று மனம் பதறுகிறது. அசிங்கத்தில் அவனை எப்படிக் காண்பது?” என்று கேட்டார் அந்த நண்பர். சரிதான், இந்தக் கேள்விக்கு ஸ்பஷ்டமான பதிலைச் சொல்லிவிட வேண்டியதுதான். இதற்கு அறுவை சிகிச்சைதான் தேவை என்று என் மனதில் எண்ணிக்கொண்டு பதில் சொன்னேன்.

“மலம் அசிங்கம் என்று சொன்னீர்கள். யாருக்கு? உங்களுக்கா? இறைவனுக்கா? மலஜலம் பற்றிய சட்டமெல்லாம் உங்களுக்குத்தான். இறைவனுக்கல்ல. மேலும். உங்களிடம் ஒரு கேள்வி. ரிஜ்கில் (உணவில்) உங்களால் இறைவனை தரிசிக்க முடிகிறதல்லவா? அதில் எதாவது சிக்கல் இருக்கிறதா?”

“அதில் எந்தச் சிக்கலும் இல்லை. ரிஜ்கில் (உணவில்) ரஜ்ஜாக்கை (உணவளிப்பவனை) அகக்கண்ணால் காண்பதில் சிரமம் ஒன்றுமில்லை”


“சிரமம் இல்லை என்பது உங்களுக்கு. உங்கள் பக்குவத்திற்கு. இதுவே இன்னொருவருக்குப் பெரிய பிரச்சனையாக இருக்கக் கூடும். ரிஜ்கில் ரஜ்ஜாக் இருக்கிறான் என்றால் நான் ஜாங்கிரி தின்னும்போது அல்லாஹ்வையா தின்கிறேன்? என்றுதான் அவரது அரைவேக்காட்டு அறிவு தடுமாறும். சரி, பிரியாணி என்பது ஒரு ரிஜ்க் (உணவு). யாருக்கு? உங்களுக்கா? இறைவனுக்கா?”

“நிச்சயமா எனக்குத்தான். இறைவனுக்குத்தான் பசி தாகம் உணவு குடிப்பெல்லாம் கிடையாதே.”

“ரொம்ப சரி. இப்போ நிதானமா கவனியுங்க. இறைவன் யாரு யாருக்கு உணவளிக்கிறான்?”
“இது என்னங்க கேள்வி. சர்வ கோடி சிருஷ்டிகளுக்கும் அவன்தான் உணவளிக்கிறான்.”

“உங்களுக்கு அவன் ஒரு உணவைத் தரும்போது நீங்கள் அதை உணவு என்றுதான் பார்க்கிறீர்கள். இறைவனும் அதை உணவு என்றுதான் பார்க்கிறானா?”

”போட்டுக் கொழப்புறீங்களே. இறைவனும் அதை உணவுன்னுதானே பார்க்குவான்?”

“சரி. நீங்கள் மலம் என்று சொன்னீர்ங்களே, அது ஒரு பன்றிக்கோ நாய்க்கோ உணவு அல்லவா? அதை, அதாவது அதற்கான அந்த உணவை இறைவன்தானே அதற்குத் தருகிறான்? அந்த விலங்கு தனக்கான அந்த உணவைப் பார்க்கும் போது, தனக்கு உணவு தந்ததற்காக இறைவனை நன்றியுணர்வோடு புகழ்ந்து துதிக்கும் அல்லவா?”

”நிச்சயம் புகழத்தான் செய்யும்”

”மலம் என்பது உங்களுக்கு அசிங்கம். அதுவே மேற்படி ஹைவான்களுக்கு உணவு. இறைவனின் பார்வையில் அது அசிங்கமா? உணவா? இறைவன் அதை அசிங்கம் (நஜீஸ்) என்று பார்க்கிறான் என்றால் அவனிடம் இருப்பது மனிதப்பார்வை (human perspective) என்றாகிவிடும். இறைவன் அதை உணவு என்று பார்க்கிறான் என்றால் அவனிடம் இருப்பது விலங்குப் பார்வை (animal perspective) என்றாகிவிடும். இறைவனின் பார்வை படைப்புக்களின் பார்வைக்கு அப்பாலானது அல்லவா? மனிதனுக்கு விளங்கவேண்டும் என்பதற்காக மனித மொழியில் மனிதப் பார்வையின் கோணத்தில் இறைவன் பேசியதை எல்லாம் அவனுடைய அசலான தன்மையே அதுதான் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அது ஒரு மனித பலகீனம். அப்படி எடுத்துக் கொள்வதால்தான் இறைவனை மனிதனைப் போல் பாவிக்கும் நிலை – ANTHROPOMORPHISM – உண்டாகிவிடுகிறது. இந்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் மனங்களால் மலத்தில் எப்படி இறைவனை தரிசிக்க முடியும் சொல்லுங்கள்? அல்லது இறைவனின் பார்வையில் அது என்ன என்பதை எப்படி விளங்க முடியும் சொல்லுங்கள்?”

தர்க்க எல்லைகளைத் தாண்டினால்தான் பல விஷயங்கள் விளங்கும். ’அவன் அழகன்’ என்னும் எளிமையான கருத்தை விளங்கிக் கொள்வது அப்படி ஒன்றும் எளிமையான விஷயம் இல்லை பார்த்தீர்களா?

Thursday, September 15, 2011

சிவாஜி நேசன்


”நைமியப்பா, இதப் பாருங்க, தல எப்பிடி கில்லி மாதிரி இருக்கார்னு”

“அட போடா, பல்லி மாதிரி இருக்கான்… ஹீரோன்னா என் அண்ணே(ன்) சிவாஜிதான்”

“ஒங்ககிட்ட போய் காட்னேனே” என்று சொல்லிக்கொண்டே, தனக்கு வந்திருந்த பிறந்த நாள் வாழ்த்து அட்டையை எடுத்துக் கொண்டு உள்ளே ஓடினான் சல்மான். 

திண்ணையில் என்னுடன் உட்கார்ந்திருந்த நைமியப்பா தன் வாயில் மீதமிருந்த நாலைந்து பற்கள் தெரிய குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். தாளாத சிரிப்பு மெல்ல துருப்பிடித்து வந்து இருமலாக இடிந்தது. தோளில் கிடந்த டர்க்கி டவலால் வாயைப் பொத்தி அப்படியே துடைத்துக் கொண்டார். அப்போது அவருக்கு அறுபத்தெட்டு வயது ஆகியிருந்தது. வெளியே நடமாடுவது நின்றுபோனது. ஜும்மாவுக்கு மட்டும் பெரிய பள்ளிக்கு வந்து போய்க்கொண்டிருந்தார். மற்றபடி அந்தத் திண்ணையே பகல் உலகம், வீடே இரவுலகம், ஒரு வருஷமாக.

நைமியப்பா நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர். அந்த வயதில் அவரைப் பார்க்கும்போதுகூட, சட்டையையும் கைலியையும் நீக்கி அரையில் ஒரு துண்டைக் கட்டிவிட்டால்… குளிர் தாங்காமல் கைகளைக் கட்டிக் கொண்டு நடுங்குவாரானால் திருவருட் செல்வர் போலவே இருப்பார் என்று நான் நினைத்ததுண்டு. இது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். நாம் யாருக்காவது தீவிர ரசிகராக இருக்கிறோம் என்றால் அவருடைய சாயலில் பேச்சு, பார்வை, அசைவுகள் எல்லாம் உருக்கொண்டு விடுகின்றன. உருவத்திலும்கூட அந்தச் சாயல் படிந்துவிடுகிறது. நான் பள்ளியில் படித்திருந்த நாட்களில் ஆறுமுகம் என்றொருவன் இருந்தான். வெறித்தனமான ரஜினி ரசிகன். தலைமுடியை அவன் சிலுப்பி விட்டுக்கொள்வதும், இடுப்பில் கைவைத்து நிற்பதும், பந்துமுனைப் பேனாவைக் காற்றில் டைவ் அடிக்க விட்டு வாயால் லாவகமாகக் கவ்வுவதும், முறைத்துப் பார்ப்பதும் என்று அச்சு அசலாக அப்படியே சூப்பர் ஸ்டாரைக் கேவலப் படுத்துவது போல இருப்பான். கலியமூர்த்தி ஐயா பிரம்பால் விளாசும்போது எல்லா மாணவர்களும் ஆஸ் ஊஸ் என்று கையை உதறிக்கொண்டு கதறுவார்கள். ஆனால் ஆறுமுகம் அதில் வீறுமுகம் காட்டுவான். முதல் அடி விழுந்ததும் “ஹஹ்ஹஹா…ஹா… ஹா… ஹா…” என்று ஸ்டைலாக அண்ணாந்து சிரித்து ஐயாவை வெறுப்பேற்றி, தொடர்ந்து இன்னும் இரண்டு அடிகள் வாங்கிய பிறகுதான் “ஹா…ஹாவ்…வ்வ்வ்…வூ…” என்று அழத் தொடங்குவான். அதை நாங்கள் அப்போது மிகுந்த வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்போம். அதெல்லாம் ஒருவித தவம் என்பது இப்போதுதான் புரிகிறது. ஆனால் என் முகத்தில் எந்த நட்சத்திர சாயலும் படியவில்லை. ஒருவேளை ஏகப்பட்ட பேருக்குத் தீவிர ரசிகனாக இருந்தேன் என்பதால் எவருடைய சாயலும் படமால் தப்பித்துவிட்டேன் போலும்.


நைமியப்பாவின் முகபாவனையில் சிவாஜி கணேசனின் சாயல் இருந்தது. குரலிலும் இருந்தது. அறுபதுகளில் நைமியப்பா தன் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று ஃப்ரேம் செய்யப்பட்டு கூடத்தில் தொங்குகிறது. அதில் அவர் கோட்சூட் அணிந்து லேசாகப் பக்கவாட்டில் பார்ப்பதுபோல் இடது பக்கம் நிற்கிறார். நடுவில் சீனியத்தாவும் வலதுபக்கம் ராமகிருஷ்ண ஐயங்காரும் நிற்கிறார்கள். முன்னால் இருவர் அமர்ந்திருக்கிறார்கள். அதைக் காட்டி ”’அந்த நாள்’ சிவாஜி மாதிரி இருக்கேன்ல?” என்பார். அப்போதெல்லாம் அப்படித்தான், நைமியப்பா ரொம்ப மார்டனாக இருந்தார். ‘இந்தியாவின் மார்லன் ப்ராண்டோ’ என்னும் பட்டம் சிவாஜி கணேசனுக்கு என்றால், எங்கள் கிராமத்தின் மார்லன் ப்ராண்டோ நைமியப்பாதான். 

அந்த நாட்களைத் தன் ரசனையின் வசந்த காலம் என்றே நைமியப்பா எப்போதும் நினைவு கூர்வார். நன்கு மழித்த முகத்தில் உதட்டுக்கு மேல் கீறியது போல மையால் மீசை வரைந்துகொள்வது அவருக்கும் அவரின் சகாக்களுக்கும் வழக்கமாக இருந்ததாம். ஒல்லியாக இருந்த தன் உடற்கட்டு பற்றி அவருக்கு மிகவும் விசனம் உண்டாகுமாம். எப்படியாவது சிவாஜி கணேசன் மாதிரி பூசினாற்போன்ற உடல்வாகு பெற்று இன் செய்த சட்டை எடுத்துக்காட்டுகின்ற லேசான தொப்பையுடன் வலம் வந்து கன்னியரின் மனங்களைக் கவர வேண்டும் என்று பெரிதும் ஆசை கொண்டிருந்ததாகச் சொல்வார். சிவாஜி ரசிகர்கள் பத்து பேர் சேர்ந்து ரசிகர் மன்றமும் வைத்திருந்தார்களாம். ஒவ்வொருவருக்கும் ஒரு புனைபெயர் இருந்தது. நைமியப்பா ‘சிவாஜி நேசன்’ என்று புனைபெயர் சூடிக்கொண்டார். சிவாஜி கணேசன் என்ற பெயருடன் ஒலியமைப்பில் இயைந்துள்ள பெயர் அது என்பதை ஒரு நண்பர் சுட்டிக் காட்டியபோது அவருக்குப் பெருமை தாங்கவில்லை. ரசிகர் மன்றத்துக்கு அவரே தலைவராக இருந்திருக்கிறார்.
சிவாஜி நடித்த படம் வெளியாகும் போதெல்லாம் புத்தாடைகள் அணிந்து தியேட்டருக்குச் செல்வதை ஒரு சிரத்தையான கடமையாகக் கடைப்பிடித்துள்ளார். “என்னங்கத்தா, பெருநாளுக்குப் புதுத்துணி போட்டுக்கிட்டு பள்ளிவாசலுக்குப் போவோம் சரி, அப்பிடியா சினிமாவுக்கும் போனீங்க? அந்தளவுக்கா சிவாஜி மேல க்ரேஸு?” என்று ஒருமுறை அவரிடம் கேட்டே விட்டேன். சிரித்துக் கொண்டே நிதானமாகச் சொன்னார், “அது ஒருவிதக் காதல் மாதிரிங்க தம்பி. சொல்லப்போனா காதல விட இன்னும் பெரிய பைத்தியம் அது. சிங்கப்பூரு அஜீஸ் ராவுத்தர் இருக்காறே, அவரு எளமையில ஒரு ஆங்க்லோ இண்டியன் புள்ள மேல ஆசப்பட்டாரு. அவ பொறந்த நாளன்னிக்குத் தானும் புதுத்துணி உடுத்துவாரு. அது மாதிரிதான் இதுவும். ஒரு காலம் வரைக்கும் அப்பிடி இருந்திச்சு. அண்ணே(ன்) மெய்ன் ஹீரோவா நடிக்கிறது கொறய ஆரம்பிச்சப்ப அந்தப் பழக்கம் போயிடிச்சு.”

பி.ஏ முடித்துவிட்டு (உண்மையைச் சொன்னால் அவர் பாஸாகவே இல்லை) ஊருக்கு வந்து கடையில் வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் மனம் அதில் லயிக்காமல் கசந்து கிடந்ததாம். நோட் நோட்டாகக் கதைகளும் கவிதைகளும் எழுதிக் கொண்டிருந்த காலகட்டம் அது. எப்படியாவது சிவாஜி நடிக்கும் ஒரு படத்திற்குத் திரைக்கதை வசனம் மற்றும் பாடல்களைத் தான் எழுதிவிட வேண்டும் என்னும் கனவு அவருக்குள் வேர் விட்டிருந்தது. 


1960-இல் கே.ஆசிஃப் இயக்கத்தில் “முகலே ஆஸம்” வெளிவந்தது. அப்போதே முப்பது லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட மெகா திரைப்படம் அது. சலீம்-அனார்க்கலி ஜோடியின் காதலைச் சொல்லும் அந்தக் காவியம் ஒரே நாளில் இந்தியா முழுவதும் நூற்றி ஐம்பது தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. திலீப் குமார் முகலாய இளவரசர் சலீமாகவும், மதுபாலா இளவரசர் சலீமின் காதலியான அனார்க்கலியாகவும் நடித்திருந்தார்கள். அந்தப் படம் நைமியப்பாவின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அனார்க்கலியாக மதுபாலா நடித்ததில் அவருக்கு யாதொரு ஆட்சேபனையும் இருக்கவில்லை. ஆனால், அண்ணன் சிவாஜி கணேசன் இருக்க இத்தனை பெரிய ப்ராஜக்டில் இன்னொரு நடிகன் சலீமாக நடிப்பதா? அதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. ”சலீம் ரோல் மட்டுமில்ல தம்பி, மாமன்னர் அக்பர் ரோல்ல ப்ரித்விராஜ் கபூர் நடிச்சிருந்தார். அந்த ரோலையும் சேத்தே எங்கண்ணே(ன்) சிவாஜிகிட்ட குடுத்திருந்தா இன்னும் பிரமாதமா பண்ணீருப்பாரு” என்றார். நான் தாங்கமுடியாமல், “ஆமாங்கத்தா, நீங்க சொல்றதுகூட கொஞ்சம் கம்மிதான். அனார்க்கலி ரோலையும் சேத்தே சிவாஜிட்ட கொடுத்திருக்கலாம். பிச்சு ஒதறீருப்பாரு” என்றேன்.

’முகலே ஆஸம்’ படத்தை நைமியப்பா பதினைந்து முறை பார்த்ததாகச் சொன்னார். திருச்சியில் பிரபாத் தியேட்டரில் ஒரு வெற்றிப் படமாக ஓடியதாம். அந்தத் தியேட்டரில் சிவாஜி தன் பால்ய வயதில் வேலை செய்ததாகவும் சொன்னார். அப்போது சிவாஜி தன் பெற்றோர்களுடன் சங்கிலியாண்டபுரத்தில் வசித்த வீடு இன்னமும் இருக்கிறது. ’சின்ன எஜமான்’ என்றழைக்கப்பட்ட அப்துஸ்ஸமது ராவுத்தருடன் ஏ க்ளாஸில் அமர்ந்து அந்தப் படத்தைப் பார்த்ததாகப் பெருமையுடன் சொல்லிக்கொள்வார். “படம் ஆரம்பிச்சு ஓடீட்டிருக்கு. சலீம் வளர்ந்து வாலிபனாயிர்றான். சலீம்னு திலீப் குமார காட்டுறாங்க. நானும் பாக்குறேன். என் மனசுக்குல்ல என்ன ஓடுதுங்கிற? திலீப் குமார் மொகமே தெரியல எனக்கு. சிவாஜியண்ணன் மொகம்தான் தெரியுது. அதுலயும், எறகு ஒன்னு எடுத்து அனார்க்கலியோட கன்னத்துல மெதுவா தடவிக் கொடுப்பானே சலீமு, அந்த ஷாட்ல திலீப் குமாருட்ட எமோஷன் பத்தல தம்பி. என் அண்ணே(ன்) மட்டும் நடிச்சிருந்தார்னா?.... அடடா, அட்டகாசமால்ல இருந்திருக்கும்!” என்று தன் மனக்குறையை ஒருமுறை இறக்கி வைத்தார். தேங்காய் வியாபாரம் லாப கதியில் தொண்ணூறு டிகிரியில் விறுவிறு என்று ஏறுவது போலவும், ஆறு மாதத்திற்குள் ஒரு கோடி ரூபாய் தன் கையில் புரள்வது போலவும், அதை வைத்து முகலே ஆஸம் படத்தைத் தமிழில் தயாரித்து, சிவாஜியை சலீமாகவும் அக்பராகவும் நடிக்க வைத்து ஒரே நாளில் உலகெங்கும் ஐநூறு தியேட்டர்களில் வெளியிட்டு, அது தொடர்ந்து எல்லா தியேட்டர்களிலும் இரண்டு வருடங்கள் ஓடி அமோக வெற்றி பெற்று, அண்ணன் சிவாஜி கணேசன் ஆஸ்கார், நோபல் முதலிய சகல விருதுகளையும் வாங்குவது போலவும் அடிக்கடி பகற்கனவு கண்டு மகிழ்ந்திருந்ததை நைமியப்பா என்னிடம் மட்டும் ஒரு தொண்ணூறு தடவையாவது சொல்லியிருப்பார்.


வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு மட்டும் பள்ளிக்கு வரும் நைமியப்பா வெள்ளை ஜிப்பாவும் கைலியும் அணிந்து தோளில் கறுப்பு அல்லது மரூண் நிறத்தில் பொடிக் கட்டங்கள் போட்ட மெல்லிய துண்டு போர்த்தி தலையில் மரூண் நிறத் துருக்கித் தொப்பி வைத்துக் கொண்டு வருவார். இரு பக்கமும் வயிறு வரை தொங்கும் சால்வை முனைகளை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு பள்ளிவாசல் படிக்கட்டில் கம்பீரமாக நின்று சிங்கம் பார்ப்பது போல் இடமும் வலமும் ஒரு பார்வை பார்ப்பார். இந்தப் போஸ்கூட அவருக்கு அண்ணன்.சி.கவிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்ததுண்டு. அது சரிதான். ‘பாவ மன்னிப்பு’ படத்தின் போஸ் அது என்று ஜாகிர் சிச்சா சொன்னார்கள். பிறகு அதைப் பற்றியும் நான் நைமியப்பாவிடம் கேட்டேன். அதே நிதானமான சிரிப்புடன் அலமாரியில் இருந்து அந்தத் துருக்கித் தொப்பியை எடுத்து என் கையில் கொடுத்தார். உயரமான வட்டமான தொப்பி அது. மேல் பகுதியில் இருந்து குதிரை வால் தொங்குவது போல் குஞ்சம் வைத்த தொப்பி. இப்பவெல்லாம் அதைப் போட்டுக் கொண்டு குஞ்சம் ஆட ஒருவன் நடந்து சென்றால் பயல்கள் ஏகத்துக்கும் கேலி செய்வான்கள். ஆனால் ஒரு காலத்தில் அது ஃபாஷனாக இருந்ததாம். “இந்தத் தொப்பிதான் தம்பி அப்ப இருந்த ஃகான் சாகிபுகள்லாம் போட்டிருப்பாங்க. காயிதே மில்லத் சாகிபும் இந்த மாடல்தான் போட்டிருந்தார். எங்க அத்தாவும் ஐயாவும் இந்த மாதிரித் தொப்பிதான் போட்டிருந்தாங்க. ஊருக்குப் பெரியவங்க இல்லியா? பின்னால ஃபாஷன் மாறிச்சு. ராம்பூர் தொப்பி போட ஆரம்பிச்சாங்க. அப்துல் சமது சாகிபு ராம்பூர் தொப்பிதான் போட்டிருப்பார். ரொம்ப இளமையா ஷோக்கா இருக்கும். இப்பல்லாம் பல மாதிரி தொப்பி போடுறாங்க.” என்று சொல்லி சில நொடிகள் பேசாமல் இருந்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார், “அண்ணே(ன்) பாவ மன்னிப்பு படத்துல முசுலிம் ரோல்ல நடிச்சிருந்தார். அதுல இந்தத் தொப்பிதான் போட்டிருப்பார். அப்பத்தான் நானும் தொப்பி அணிய ஆரம்பிச்சேன். திருச்சிக்குப் போய் இந்தத் தொப்பி கெடைக்குதான்னு பாத்தேன். அங்க கெடைக்கல. நம்ம சேக்தாவூது மெட்றாஸுக்குப் போனவரு வாலாஜா பள்ளிவாசல் பக்கத்துல இது கெடச்சுதுன்னு வாங்கிட்டு வந்து குடுத்தாரு. மச்சான் இவ்வளவு பிரியமா நம்மல நெனப்பு வச்சு வாங்கிட்டு வந்தாரேன்னு அப்பதான் அந்த மேற்கு வயக்காட்டுல பிரச்சனையா நின்ன நாலு செண்ட்ட அவருக்கு விட்டுக் குடுத்தேன்.”

(அண்மைக்காலத்தில் வெளியான ‘பொக்கிஷம்’ என்னும் படத்தில் சேரன் இந்த மாதிரித் தொப்பியை அணிந்துகொண்டுதான் இஸ்லாத்தில் ஆகி நிக்காஹ் முடிப்பது போல் கனவு காண்பதாக ஒரு பாடல் காட்சி வருகிறது. நைமியப்பா இவ்வுலகில் இல்லாத இந்த நேரத்தில் இதை எப்படி நான் அவருக்குச் சொல்வது?)

எண்பதுகளில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி வந்தபோது நைமியப்பாவுக்கு மீண்டும் பழைய சிவாஜி படங்களை அவ்வப்போது பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஞாயிற்றுக் கிழமையானால் சாயங்காலம் என்ன படம் போடுகிறார்கள் என்று மிக ஆவலாக எதிர்பார்ப்பார். ஒரு முறை “சாந்தா சக்குபாய்” என்று ஒரு படத்தை ஒளிபரப்பினார்கள். அது நைமியப்பாவின் தாத்தா காலத்துப் படம். அவர் சரியான கடுப்பாகிப் போனார். “போடுறானுங்க பாரு படம்னு. ஹைதர் காலத்துல எடுத்ததெல்லாம் தூசித் தட்டியெடுத்துப் போடுவானுங்க. பராசக்தி, திரிசூலம் மாதிரி புதுப் படங்களாப் போட்டா என்ன?” என்று சொல்லி நிறுத்தி எங்களைப் பார்த்தார். நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தது ஏன் என்று விளங்காமல் அவரும் சேர்ந்து சிரித்தார். பெருநாட்களை ஒட்டி வரும் வெள்ளிகளில் தூர்தர்ஷனில் ‘ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சி வந்தால் அதில் நிச்சயமாக “எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பேரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி” என்னும் பாடல் இடம்பெறும். நைமியப்பா மிகுந்த பரவசத்துடன் அந்தப் பாடலை ரசித்துக் கொண்டாடுவார். தாளம் போட்டுக்கொண்டே வெடுக் வெடுக்கென்று தலையை ஆட்டுவார். அந்தப் படம் வெளிவந்த சமயத்தில் ஊரில் நடந்த மீலாது விழாவில் குஞ்சம் வைத்த தொப்பியும் தோளில் சால்வையுமாய் கையில் ஒரு தப்ஸ் வைத்துக் கொண்டு இந்தப் பாடலை அவர் பாடியிருக்கிறார். பின்னாளில் அதே போல் “நல்ல மனசில் குடியிருக்கும் நாகூராண்டவா…” என்னும் பாடல் வெளிவந்தபோது அதைப் பார்த்துவிட்டு நக்கலாக “அண்ணே(ன்) மாதிரி ஆவனும்னு ஆசப்படுறானுங்கப்பா எல்லாரும். உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமாப்பா?” என்று தன் சகாக்களிடம் சொன்னாராம்.

என் நண்பனின் தம்பி ஒருத்தன் ஆலிம் பட்டம் பெற்றபோது அவன் முதன் முதலாக வெள்ளிக் கிழமை பயான் செய்வதற்காகப் பெரிய பள்ளியில் ஏற்பாடு செய்தோம். சும்மாவே அவன் தத்தித் தத்திதான் பேசுவான். கன்னி பயான் என்பதால் ரொம்பவும் பயந்து போயிருந்தான். ஆயத்து ஹதீஸ் எல்லாம் குறிப்பு எழுதி ஒரு காகிதத்தைக் கையில் வைத்திருந்தான். உள்ளங்கை வேர்த்துக் குறிப்புக்கள் அழிந்து சோதனை செய்துவிட்டது. தத்துபித்தென்று சின்னப்பிள்ளை போல் உளறிக் குழறி ஒருவழியாகப் பேசி முடித்தான். திருதிரு என்று அவன் முழி பிதுங்கித் தடுமாறியதைப் பார்த்து எங்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. பிரபலமான வெள்ளிமேடைப் பேச்சாளிகளிடம் சில டெக்னிக்குகள் உள்ளன. பாவம் அவனுக்கு அவை தெரியவில்லை. குறிப்புச்சீட்டை வெறுங்கையில் வைக்கக் கூடாது, ஒரு கர்ச்சீப்பை மடித்து வைத்துக்கொண்டு அதன் மீது வைத்துக் கொள்ள வேண்டும். அதை குனிந்து பார்க்கக் கூடாது. இமை தாழ்த்தி மட்டுமே பார்க்க வேண்டும். நாம் அப்படி அதைப் பார்க்கிறோம் என்பது யாருக்கும் தெரியாமல் இருப்பது ஒரு ப்ளஸ் பாய்ண்ட். முடிந்தால் அதற்காக ஒரு கூலிங்கிளாஸ் அணிந்துகொள்ளலாம். ஜும்மா முடிந்ததும் அந்த இளம் ஆலிமுக்கு நைமியப்பா தன் வீட்டில்தான் விருந்துக்குச் சொல்லியிருந்தார். சாப்பிட்ட பிறகு நாங்கள் திண்ணையில் அமர்ந்தோம். நைமியப்பா அவனிடம் உரையாடினார்.

“எங்கே ஓதுனீங்க தம்பி?”
“வேலூர்ல”
”ம்.. பயான்ல எதுக்கு இவ்வளவு பதட்டம்?”
“இதுதான் முதல் தடவை பயான் பண்றேன். அதுனால டென்ஷனா இருந்திச்சு”
”நீங்க சொல்ற பதில ஏத்துக்க முடியில தம்பி. பராசக்தி பாத்திருக்கீங்களா?”
“என்னாது?,,,”
“சிவாஜியண்ண(ன்) நடிச்ச முதல் படம். பராசக்தி. ‘சக்சஸ்’னு சொல்லிக்கிட்டே எண்ட்ரி ஆவாரு. கலைஞர் அப்பிடி ராசியா வசனம் எழுதிக் கொடுத்தாரு. அதுல கோர்ட் சீன் ஒன்னு வருதே பாத்ததில்லியா நீங்க?”
“இல்லையே...”
“அட என்ன ஆளு தம்பி நீங்க, அப்புறம் எப்பிடி பயான் பண்ண கத்துப்பீங்க? சிவாஜியண்ண(ன்) படங்களப் பாத்தீங்கன்னா உணர்ச்சிகரமாப் பேசுறது எப்பிடின்னு கத்துக்கிறலாம். அதுக்காகவாவது பாருங்க. நமக்குத் தேவையான வித்தை யாருட்ட இருந்தாலும் எங்க இருந்தாலும் கத்துக்கிறணும். என்ன, நான் சொல்றது புரிஞ்சுதா?”

அவன் மிரண்டுபோய் தலையாட்டினான். அத்தோடு அங்கிருந்து கிளம்பினோம். நடந்து போகையில் என்னிடம் கேட்டான், “என்னண்ணே, ஒரு ஆலிமப் பாத்து படம் பாக்கச் சொல்லி இவரு நசீஹத்துப் பண்றாரு?”
“இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஆளப் பாத்திருக்கியா நீ?
“இல்ல”
“அதுதான் நைமியப்பா. உள்ள சுத்தமான வெள்ள. நீ ஆலிம்னு ஒனக்கே ஒரு நெனப்பு வந்து அவரு பேசுனது தப்புன்னு தோணுது. நீ நல்லாப் பேசணும்கிற அக்கறையிலதானே அப்பிடிச் சொன்னாரு? அதப் புரிஞ்சுக்க. அவரு சொன்னத கேக்கணும்னு அவசியமில்ல. தனக்குத் தெரிஞ்சத அவரு சொல்றாரு, அவ்வளவுதான்”

கி.பி.2000, ஜூன் மாதம் நைமியப்பா உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையானார். அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்தவரைப் பார்க்கச் சென்றேன். தூங்கிக் கொண்டிருந்தார். கடுமையான ஜுரமும் வயித்தாலையும் என்று அவரது மூத்த மகன் கமாலுத்தீன் சொன்னார். இரண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கே அழைத்து வந்துவிட்டார்கள். இருபது நாட்கள் ஓடியிருக்கும். நான் கடையில் இருந்தபோது சைக்கிளில் அரக்கப் பரக்க வந்த சல்மான் என்னை அழைத்துக்கொண்டு போனான். நைமியப்பாவின் நிலைமை ரொம்ப மோசமாகிவிட்டது. ஏதோ புலம்பிக் கொண்டிருந்தார். நான் பேச்சுக்கொடுத்தேன். குரலை அடையாளம் கண்டுகொண்டு கண்களை லேசாகத் திறந்து பார்த்தார்.

“ஏங்கத்தா, சிவாஜியண்ண(ன்) நரகத்துக்குத்தான் போவாராம்ல?” என்றார்.
“என்னப்பா சொல்றீங்க?”
“ஹஜ்ரத் சொன்னாரே?”
“எப்ப?”
“ஜும்மா பயான்ல.. நீ கேக்கலயா?”

கலிமாவை ஒத்துக்கொள்ளாதவங்க வாழ்க்கை இந்த உலகத்தில் சொர்க்கப் பூங்காவாக இருக்கலாம். ஆனால் மறுமை வாழ்வில் அவர்கள் நரகத்தில் பிரவேசித்து அனுபவிக்கப் போகும் தண்டனைகள் பயங்கரமானவை என்று அவ்வார ஜும்மா பயானைத் தொடங்கி அவற்றை சிம்மக் குரலில் கர்ஜித்து விளக்கியிருந்தார் ஹாஃபிஜா. 

“தொழுகை முடிஞ்சது நான் போயி அவருகிட்ட கேட்டேன் தம்பி..”
“ம்..என்ன கேட்டீங்க?”
“ஹாஃபிஜா, சிவாஜியண்ணனுமா நரகத்துக்குப் போவாருன்னு கேட்டேன். கலிமாச் சொல்லாட்டி யாராயிருந்தாலும் நரகந்தான்னு சொன்னாரு. ரசூலுல்லாவோட சிச்சாவே கலிமா சொல்லாம நரகவாதி ஆகிப்புட்டாங்களாம்.”
நான் ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் சட்டென்று என் கையைப் பற்றினார். 
“சிவாஜியண்ண(ன்) ரொம்பப் பாவம்த்தா. கொழந்த மனசுக்காரரு. இப்ப நான் இருக்கிற நெலமையில மெட்றாசுக்கெல்லாம் போக முடியாது. நான் மவுத்தாயிட்டாலும் நீங்க போய் அவர பாத்து வெளக்கமா எடுத்துச் சொல்லுங்க. அவரு கலிமாச் சொல்லட்டும். எனக்காக இதைச் செய்யிங்கத்தா”
நைமியப்பா அதைச் சொல்லத் தொடங்கியபோது முதலில் என் மனதில் சிரிப்பின் அலை ஒன்று மெல்ல எழுந்தது. அவர் சொல்லிமுடிக்கையில் என் கண்கள் கலங்குவதை நான் உணர்ந்தேன். நான் சிரித்துக் கொண்டே அழுதேன்.