Thursday, May 31, 2012

ஒரு மெல்லிசையைப் போல்
உருமாறிக் கொண்டிருந்த மேகத்தில்
உன் சாயல் தெரிந்தபோது
வந்தது மழை
கண்களில்

அறிஞர்களுக்கு
ஆயிரம் நூல்கள்
காதலனுக்கோ
உன் பெயர் மட்டும்

’கனவில் வருவேன்’ என்ற உன்
வாக்குறுதியின் மகிழ்ச்சியில்
இரவெல்லாம் போனது
தூக்கம் இல்லாமல்

நீ வருவாய் என்ற எதிர்பார்ப்பே
நினைவில் கனவாய் ஆனது.

தவறுகளே இல்லை என்று
கோபித்துக் கொள்கிறாய்…
கோபப்படும் உன் உரிமையை
எதுதான் தடுக்கும்?

சபைக்குள் நுழைகிறாய்
ஒரு மெல்லிசையைப் போல்
அதிகரிக்கிறது என் இதயத்தில்
தாளத்தின் கதி

ஒரேயொரு விழியசைவில்
எழுதிவிடுகிறாய்
ஒருவனின் வாழ்க்கையை
அல்லது அழித்துவிடுகிறாய்
அத்தனை பக்கங்களையும்

இன்று கனவில் மீண்டும்
உன் வீதியில் அலைய
விதிக்கப்பட்டுள்ளேன்…
ஆஹா, எவ்வளவு பெரிதாய்
மதிக்கப்பட்டுள்ளேன்!


Saturday, May 26, 2012

எப்படிச் சொல்வேன்?
காத்திருத்தலின் வலியில்
இன்பம் தோன்றச் செய்தாய்
கஷ்டத்தில் சுகம் வைத்த உன்
கருணையை எப்படிச் சொல்வேன்?

மீண்டும் பூக்கள்
மீண்டும் வண்டுகள்
பூங்காவில் புதுமை என்ன?
என்கிறார் மேதாவி…
பூக்கள் அறியும்
வண்டுகள் அறியும்
புதுமையை எப்படிச் சொல்வேன்?

சபை சுகிக்கவில்லை
தனிமை இல்லாமல்
தனிமை சகிக்கவில்லை
நீ இல்லாமல்…
நானே எனக்கு
முள்ளாய் உறுத்தும்
நிலைமையை எப்படிச் சொல்வேன்?

நெருப்பின் உலகில் உன்
நேசத்தின் பூக்கள்
இப்போதும் மலர்கின்றன…
உன் பார்வை கொளுத்திய
காதல் தீயின்
குளுமையை எப்படிச் சொல்வேன்?

காலத்திற்குள் நுழைகிறது
காலமின்மை
நபியின் கையில்
சுவனத்தின் திராட்சைக்குலை…
கனியை விஞ்சிய ஞானத்தின்
இனிமையை எப்படிச் சொல்வேன்?

Friday, May 18, 2012

அடைக்கும் தாழ்

”ஆன்மிக ரகசியங்களை வெளியே சொல்லக்கூடாது என்று சூஃபிகள் கட்டுப்பாடு வைத்திருக்கிறார்களா? ஏன் அப்படி வைத்திருக்கிறார்கள்? உண்மையை மறைக்கலாகுமா? ஆன்மிகம் மக்களின் நன்மைக்காகத்தான் என்றால் அதன் செய்தியை எல்லோருக்கும் சொல்வதுதானே நியாயம்?”

சூஃபிகளிடம் அப்படி ஒரு கொள்கை உள்ளது உண்மைதான். ‘இழ்ஹாருல் அஸ்ராரி குஃப்ருன்’ – ரகசியங்களை வெளிப்படுத்துவது இறைநிராகரிப்பாகும் என்று அவர்கள் சொல்கிறார்கள். வேண்டுமென்றே ரகசியங்களை பகிரங்கமாக்குவதையே இது குறிக்கும். நிர்ப்பந்த நிலை தன்மீது ஏற்பட்டு (மஜ்பூர்) அதில் ரகசியம் வெளியானால் அவர் மீது குற்றமில்லை.

மன்சூர் அல்-ஹல்லாஜ் என்ன செய்தார்? தன் குருநாதர் ஆன்மிக நுட்பங்களை (தகாயிக்) எழுதி வைத்திருந்த நாட்குறிப்புக்களை அவருக்குத் தெரியாமல் எடுத்துப் படித்தார்; ‘இதுதான் உண்மை என்றால் இதை ஏன் மறைக்கவேண்டும்? இதை நான் உலகத்துக்குப் பறைசாற்றப் போகிறேன்’ என்று கிளம்பிவிட்டார். குருநாதர் எவ்வளவு எச்சரித்தும் கேட்கவில்லை. எந்த அளவு டமாரம் அடித்தார் என்றால் கடைசியில் தோல் கிழிந்தே விட்டது!


‘அனல் ஹக்’ என்ற அந்த இரண்டு வார்த்தைகள் சமுதாயத்தில் பல நூற்றாண்டுகள் குழப்பத்திற்கும் சர்ச்சைகளுக்கும் காரணமாகிவிட்டது. சில குழுவினருக்கு ’அனல் ஹக்’ என்னும் வாசகம் பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் சூஃபிகளுக்கு அந்த வாசகம் பகிரங்கமாகச் சொல்லப்பட்டதில் பிரச்சனையாக இருக்கிறது!

’ஆன்மிகம் மக்களின் நன்மைக்காகத்தான் என்றால் அதன் செய்தியை எல்லோருக்கும் சொல்வதுதானே நியாயம்?’ என்று நீங்கள் கேட்கிறீர்கள். நாட்டில் ராணுவம் இருக்கிறது. அது மக்களின் பாதுகாப்புக்காகத்தான் இருக்கிறது. மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர்தான் அதிலே இருக்கிறார்கள். அதற்காக ராணுவ ரகசியங்களை மக்களிடம் பகிரங்கப்படுத்த முடியுமா? மக்களுக்காகத்தான் ராணுவம் என்றால் அதிலே மக்களிடம் மறைக்கப்படும் ரகசியங்கள் ஏன் இருக்கின்றன என்று கேட்பதுதான் அறிவுடைமையா? அந்த ரகசியங்களை பகிரங்கமாக்கினால் முதலுக்கே மோசமாகி விடாதா? மக்களிடமிருந்து மட்டுமல்ல, ராணுவத்திற்குள்ளேயே கீழ்நிலை சிப்பாய்களிடம் மறைக்கப்படும் பல ரகசியங்கள் மேல்நிலை அதிகாரிகளிடம் இருக்கும். இந்த அமைப்பில்தான் ராணுவம் ஒழுங்காகச் செயல்பட முடியும், மக்களைப் பாதுகாக்க முடியும்.

ஆன்மிகமும் அப்படித்தான். அதன் ஆரம்ப நிலைச் சாதகர்களுக்கே சொல்லப்படாத பல ரகசியங்கள் மேல்நிலையில் இருக்கும். அப்படியிருப்பதுதான் சமூகத்திற்கு நல்லது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கும் எல்லைகள் உண்டு! “என் உரிமையைக் கேட்கிறேன், ராணுவத் தளபதி நேற்று மதியம் ஜனாதிபதியிடம் என்ன பேசினார் என்று எனக்குத் தெரிந்தாக வேண்டும்” என்றெல்லாம் சோன்பப்படி விற்பவன் கோரமுடியாது.
இன்னொரு உதாரணமும் எனக்கு நியாபகம் வருகிறது. இது என குருநாதர் சொன்னது. ‘பிறந்த குழந்தைக்குப் பால்தான் கொடுக்க வேண்டும். பெரியவர்கள் உண்ணும் பிரியாணியை அதற்குக் கொடுத்தால் செத்துவிடும். பிரியாணி பெரியவர்களுக்குப் புஷ்டியைத் தருகிறது. ஆனால் பால்குடிக் குழந்தைக்கு அது உயிரையே போக்கிவிடும். பெரியவர்களோ பாலும் குடிப்பார்கள் பிரியாணியும் சாப்பிடுவார்கள்’ என்று அவர்கள் சொன்னார்கள்.

ரகசியங்களை எல்லோருக்கும் வெளிப்படுத்தக் கூடாது என்பதன் கருத்து இதுதான். பிரியாணி விஷமல்ல. ஆனால் பால்குடிக் குழந்தையின் உயிருக்கு அது ஆபத்துதான். அதுபோல் ஞான ரகசியங்களில் குஃப்ர்-ஷிர்க் இல்லை. ஆனால் பக்குவமில்லாதவர்களுக்கு அவை வெளிப்படுத்தப்பட்டால் அவர்கள் குஃப்ர்-ஷிர்க்கில் விழுவார்கள் என்பது நிச்சயம்!
இந்த உவமையைக் கொஞ்சம் மாற்றி வேறு கோணத்தில் சொல்கிறேன். குழந்தை பெற்ற பெண்ணுக்குத் தாய்ப்பால் ஊறவேண்டும் என்பதற்காகக் கருவாடு சமைத்துக் கொடுக்கப்படுவது உண்டு. அவள் கருவாடு சாப்பிட வேண்டும், அவளின் மார்பில் ஊறும் பாலினைக் குழந்தை குடிக்க வேண்டும் என்பதுதான் சரி. குழந்தைக்கு நேரடியாகக் கருவாடு கொடுத்தால் என்ன என்று விபரீதமாக யோசிக்கக் கூடாது. குழந்தையின் உயிருக்கே அது உலை வைத்துவிடும்!

“இறைத்தூதர் ஏன் வேண்டும்? அல்லாஹ் தன் வேதத்தை நேரடியாக எங்கள் மண்டைமீது இறக்கினால் என்ன? இவரும் எங்களைப் போன்ற ஒரு மனிதர்தானே?” என்று கேட்டார்களே, அவர்களின் சிந்தனைப் போக்கு இங்கே பல பேருக்கு இருக்கிறது.
இன்னொரு உதாரணம்…

‘அந்நிக்காஹ் மின் சுன்னத்தீ’ – ‘திருமணம் என் வழிமுறை’ என்னும் நபிமொழியை ஒருவன் கேள்விப்படுகிறான். அந்த சுன்னத்தை (நபிவழியை) ஹயாத்தாக்க (நடைமுறைப்படுத்த) வேண்டும் என்னும் ஆர்வம் அவன் உள்ளத்தில் கொப்புளித்துப் பீறிடுகிறது. பிரச்சனை என்னவெனில், அவனுக்கு வயது பதினைந்து!

வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார்கள். அவன் கேட்க மறுக்கிறான். ‘தலபுல் இல்மி ஃபரீளத்துன்…’ – கல்வியைத் தேடுவது கட்டாயக் கடமை என்று நபி(ஸல்) நவின்றுள்ளார்கள், எனவே கல்வியைத் தேடு தம்பி என்று சொல்கிறார்கள். அவனுக்கோ படிப்பு தலையில் ஏறிய பாடில்லை. ’முன்சுன்னத்தாக நிக்காஹ் செய்து வையுங்கள், நீங்கள் சொல்லும் ஃபர்ளை அப்புறம் பார்த்துக் கொள்கிறேன்’ என்று தெளிவாகக் (?) கூறிவிடுகிறான்.

வீட்டுப் பெரியவர்கள் அனைவரும் அவனுக்கு அறிவுரை சொல்லிப் பார்க்கிறார்கள். அவர்கள் அனைவரும் அவன் பார்வைக்கு தீனின் எதிரிகளாகத் தெரிகிறார்கள். “சண்டாளர்களே! திருநபியின் சுன்னத்தை ஹயாத்தாக்க இவ்வளவு எதிர்ப்பா?” என்று அவன் நினைக்கிறான். தன் மூத்த அண்ணனுக்கு இவர்களேதான் போன வருடம் நிக்காஹ் செய்து வைத்தார்கள் என்பதை அவன் சிந்திக்கவில்லை. அதையும்கூட தன் பாணியிலேயே விளங்குகிறான், “அண்ணனுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா? தீனில் பாரபட்சமா?”

வேறு சுன்னத்துக்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதையெல்லாம் கடைப்பிடிக்கலாமே என்று அவனுக்கு ஆலோசனை சொல்லப்படுகிறது. ம்ஹூம், அவனுடைய ஆர்வமெல்லாம் இந்தக் குறிப்பிட்ட சுன்னத்தின் மீதுதான் இருக்கிறது. இந்த நிலையில் இவனை என்னவென்று சொல்வார்கள்? ‘நபிவழியில் நடக்கத் துடிக்கும் கொள்கை வீரன்’ என்றா? இல்லையே! ‘பொறுக்கிப் பயல்’ என்றுதானே சொல்வார்கள்?

ஒருசில காரியங்களில் ஈடுபடுவதற்குச் சில பக்குவங்கள் தேவைப்படுகின்றன. ஆன்மிகமும் அப்படியே! எனவே எல்லா விஷயங்களையும் எல்லோரிடமும் பேசிவிட முடியாது.

இரவு நேரம். சாப்பிட்டு முடித்தபின் வீட்டின் கொல்லைப்புறத் தோட்டத்திற்குப் பக்கத்தில் கயித்துக்கட்டிலில் அப்பாவும் நாற்காலியில் பையனுமாக அமர்ந்து பேசத் தொடங்குகிறார்கள். அந்த மூத்தப் பையனுக்குத் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. அப்பா அவனுக்குச் சில அறிவுரைகள் சொல்லிக்கொண்டிருக்கிறார். தானும் கேட்கவேண்டும் என்னும் ஆர்வத்தில் ஒன்பதாங்க்ளாஸ் படித்துக்கொண்டிருக்கும் இளைய தம்பியும் அங்கே வந்து கட்டிலில் அமர்கிறான். அப்பா அவனைப் பார்த்து, “நாளைக்கு ஸ்கூல் இல்லியா?” என்று கேட்கிறார். அவன் ஞாயிற்றுக் கிழமை என்கிறான். சிறிது மௌனம். “சரி நேரமாச்சு போய் படு” என்கிறார். “இல்ல நாளைக்கு லீவுதானே, நானும் பேசிக்கிட்டிருக்கேன்” என்கிறான் அவன். “போய் தூங்குடாங்குறேன், எதுத்தாப் பேசுற… போடா உள்ளே” என்று அப்பா சீறுகிறார். அவன் முணங்கிக் கொண்டே வீட்டுக்குள் போய்விடுகிறான். உரையாடல் தொடர்கிறது. அதை ஜன்னல் வழியாகப் பார்க்கிறான் அந்த இளைய தம்பி. அவன் நினைக்கிறான், “சொத்தில் நம் பங்கையும் அபகரிக்க அண்ணன் ப்ளான் போடுகிறான்! விடமாட்டேன், ஒரு வழி செய்யாமல் விடமாட்டேன்.”

இந்தப் போக்கில் சிந்திப்பவரகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில ஞான ரகசியங்கள் ஏன் மறைக்கப்படுகின்றன என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. தான் அவற்றுக்குத் தகுதியானவன் அல்ல என்று சொல்லப்படுவதே அவர்களின் தன்முனைப்புக்குப் பெரிய கஷ்டமாக இருக்கிறது. தன் அறிவின் எல்லையை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம்கூட அவர்களிடம் இல்லை.

“அண்ணே! நேத்து ராத்திரி அப்பா உங்ககிட்ட என்ன சொன்னாங்கன்னு எனக்குத் தெரிஞ்சாகணும். சொல்லுங்க” என்று அந்த இளைய தம்பி கேட்கிறான். இப்போது அந்த அண்ணன் எல்லாவற்றையும் சொல்லிவிடுவானா? தாம்பத்யம் பற்றித் தனக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள், ஆலோசனைகள், தனக்கிருக்கும் ஐயங்களைப் பற்றி அவன் கேட்டுத் தெரிந்துகொண்ட செய்திகள்… எல்லாவற்றையுமா தம்பியிடம் சொல்வான்? மறைக்க வேண்டியதை மறைக்காவிட்டால் அது பெரிய குற்றம்தானே?

“இழ்ஹாருல் அஸ்ராரி குஃப்ருன்” – ரகசியங்களை வெளிப்படுத்துவது இறைநிராகரிப்பாகும் என்று சூஃபிகள் சொல்வது மிகவும் ஆழமான செய்தி அல்லவா?


“என் முகத்தின் முன்
நீ கதவுகளைத் திறந்துகொண்டே போனாய்
என் முதுகின் பின்
நான் கதவுகளை மூடிக்கொண்டே வந்தேன்”


காயத் தடங்கள்
சூரியனும் சந்திரனும்
நெய்யும் திரைகளில்
மறைந்திருக்கிறாய் நீ

உன் கவிதையில் அசைகிறது
உன் அழகின் நிழல்

உன் பாதம் நோக்கி
என் பார்வை நீளும்போதெல்லாம்
என் முகத்தை உயர்த்துகிறாய்
உன் முகத்திற்கு

உன் பேச்சு
உன் வார்த்தைகள்
உன் அர்த்தங்கள்
நம் உரையாடல்!

நான் உன் பிரதி
நீயே என் நிதி

என் முகத்தின் முன்
நீ கதவுகளைத் திறந்துகொண்டே போனாய்
என் முதுகின் பின்
நான் கதவுகளை மூடிக்கொண்டே வந்தேன்

நீ என்னில் செய்த காயங்கள்
என் பார்வைக்கு மட்டும்
நீ காயம் செய்த இடங்கள்
உனக்கு மட்டும்.

Monday, May 14, 2012

உன் வீதி
இதயம் ஆசிக்கிறது
கையில் கை
இதயத்தில் இதயம்
ஆகிவிட்ட பின்னும்

கண்ணோடு கண்
காணவும் வேண்டும்
ஒருவரில் ஒருவர்
ஒருவரை ஒருவர்

ஒன்று இரண்டு மூன்று…
எண்ணத் தெரிகிறது
எல்லோருக்கும்
என்னவென்று தெரியவில்லை
ஒருவருக்கும்!

உன் வீட்டைக்
கண்டதில் இருந்து
என் வீட்டில்
நாடோடி நான்

உப்பு உரமிட்டுக்
கனி விளைகிறது எனில்
இனிப்பும் கரிப்பும்
இணைதானே?
உன் பெயரைச் சொன்னால்
கலங்குகிறதே கண்கள்!


இசைத் திரைகள்
இட்டு மறைக்கிறேன்
உன் பெயரை

உன் பாதத்தின் கீழ்
உலகமே உனக்கொரு
வீதியாக இருக்கலாம்…
உன் வீதிதான்
உலகம் எனக்கு

இறைவனின் நினைவு
திருப்புகின்றது என்னை
உன்னிடம்
உன் நினைவு திருப்புகின்றது
இறைவனிடம்

உன் வருணனைகள் பாடிக்கொண்டிருந்தேன்
‘மௌனமாய் இரு’ என்று சமிக்ஞை செய்தாய்
உன் உதடுகள் மீது விரல் வைத்து…
இதயத்தில் ஆசை பொங்கியது
இந்த அழகையும் பாடு என்று.

காயம் ஆறிவிட்டது
வடுவும் மாறிவிட்டது
இப்போது இருப்பதெல்லாம்
வலியை இழந்துவிட்ட
வலி மட்டும்…
அன்பே! இன்னோரு முறை பார்.

Thursday, May 10, 2012

மின்னல்கள்

காதலின் கண்
முறைத்த போது
புன்னகைத்துக் கொண்டேன்

‘வெட்டுக்காயமும் மருந்தும்’
என்பதல்லவா உன்
விளையாட்டின் பெயர்!

என் இதயம்
மென்மையானது
அம்பின் கூர்மையை
நீ பரிசோதிப்பதை
நான் கண்டபோது

நூறு மின்னல்கள்
தீக்கொளுத்திய பின்
அனைத்தையும்
அணைக்கட்டும்
ஒரே மழை

குருடர்களின் சந்தையில்
அழகிய அடிமைக்கு
விலையேதும் இல்லை

தங்கள் சுதாரிப்பின் மீது
போதையில் இருப்பவர்கள் மத்தியில்
உன் மீதான போதையில்
சுதாரிப்பாக இருக்கிறேன் நான்


இளமையின் காரைப்பூச்சு
பெயர்ந்து கொண்டுள்ளது
அன்பனே!
சுவர் இற்று வீழும் முன் வா

மண்ணாகி நீராகி
வித்தாகிச் செடியாகி
கொப்பாகி இலையாகி
முள்ளாகி மலரானேன்
எப்போது மணமாவேன்?