Thursday, December 30, 2010

சினி சித்தர்

அரைக்கால் சட்டைப் பருவத்தில் செருப்பில்லாக் கால்களுடன் தெருத் தெருவாக ஓடி விளையாடிய காலத்தில் தூர்தர்ஷனில் பார்த்த தமிழ்ப் படங்கள் என்ன ஜெனரல் நாலஜை வளர்த்ததோ சொல்லமுடியவில்லை. அனால் அதற்கென்று சில தனித்தன்மைகள் இருப்பதை உணரமுடிகிறது. அதில் ஒன்று திடீரென்று திரையில் தோன்றித் தத்துவக் கருத்துக்களைப் பாடல்களாக சுருதி சுத்தமாகப் பாடும் கேரக்டர்கள். இவர்கள் பாடும் கருத்துக்களை வைத்துப் பார்க்கும்போதும், கதையில் யாருடனும் தொடர்பின்றி தனியாக வந்துபோவதாலும் இவர்களைத் தமிழக சித்தர் மரபுடன் இணைத்துப் பார்க்கலாம்.



இந்த 'OUT OF BLUE ' சித்தர்கள் செய்யும் பணி என்ன என்று பார்க்கும்போதுதான் கதாநாயகனின் உந்துசக்தியே இவர்கள்தான் என்பது புரியும். தாய் தந்தையை இழந்து கதாநாயகன் அனாதைக் குழந்தையாக அழுதுக் கதறும்போது சட்டென்று தோன்றும் இந்த சித்தர் தன் தத்துவப் பாடலால் அவன் அழுகையை நிறுத்துவதுடன் அவனுடைய வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டும் ஒரு ஐடியாவை அவன் மனதில் விதைக்கிறார். (இவ்வாறு அவர் பாடல் இரண்டு தளங்களில் இயங்குகிறது!)  கால காலமாக தமிழ்ப் படங்களில் திடீர் சித்தர்கள் செய்யும் இந்தப் பணியைத்தான் ஹாலிவுட்டில் இப்போது கிறிஸ்டோபர் நோலன் INCEPTION என்னும் திரைப்படத்தில் விஸ்தாரமாக எடுத்து பிலிம் காட்டுகிறார்!



தமிழ்ப் பட சித்தர்களுக்கென்று சில பொதுத் தன்மைகள் உள்ளன. அவர்கள் தாடியுடன் தோன்றுவார்கள். (குளிப்பார்களா என்று தெரியவில்லை.) சீவாத பரட்டைத் தலையுடன் இருப்பார்கள். இதுவே அவர்களுக்கு ஒரு அமானுஷ்ய தன்மையை வழங்கிவிடும். அவர்கள் பெரும்பாலும் இரவில்தான் தோன்றுவார்கள். இது அவர்களைச் சுற்றி ஒரு மர்மத் தன்மையை பரவவிடுகிறது. குறிப்பான ஒரு விஷயம் என்னவென்றால் அவர்கள் கறுப்பு நிறக் கம்பளிப் போர்வையைப் போர்த்தியிருப்பார்கள்! இதனை அவர்கள் சூபி மரபிலிருந்து எடுத்திருக்க வேண்டும். பொதுவாக சூபிகளை 'முஸ்லிம் சித்தர்' என்று அழைப்பார்கள். சூபிகளின் அடையாளங்களில் ஒன்று அவர்கள் முரட்டுக் கம்பளி போர்த்தியிருப்பார்கள் என்பது. அவ்வகையில் இந்த சித்தர்களும் கறுப்புக் கம்பளி போர்த்தியுள்ளார்கள் போலும். இதுமட்டுமல்ல, அவர்களில் பலர் கையில் தபஸ்/ தாயிரா வைத்துக் கொண்டு பாடுவதும் தர்காக்களில் பாடுகின்ற தர்வேஷ்களுடன் அவர்களுக்கு ஒரு லிங்க் இருப்பதுபோல் காட்டுகிறது. 

இவர்களில் சிலரின் அருகில் நாய் ஒன்று இருக்கக் கூடும். அது பட்டினத்தாரின் மரபு. நாய் என்றால் ஏதோ அல்சேஷன், பாமரேனியன், டாபர்மேன் போன்ற உயர்ஜாதி நாய்கள் அல்ல. சித்தர்கள் பொதுவாக மேல்சாதிக்கு எதிரானவர்கள் என்பதாலும் அவர்களின் போக்கே ஒரு தினுசாகத் திரிந்து கொண்டிருப்பதுதான் என்பதாலும் அவர்களுடன் இருப்பது திரி-நாய்கள் (STRAY DOGS ) மட்டும்தான். கழுத்திலே லெதர் பட்டி அணியாத துறவுப் பட்டிகள் அவை.

சினிமாவில் வரும் இந்த சித்தர்களின் முக்கியப் பணியே அல்லது ஒரே பணியே கதாநாயகன் குழந்தையாக அல்லது சிறுவனாக இருக்கும்போதே அவனது பிறப்பின் நோக்கத்தை அவனது மனதில் புரோக்ராமிங் செய்வதுதான் என்பதால் அவர்களை நாம் பேபி சிட்டர்ஸ் என்பதுபோல் பேபி சித்தர்ஸ் என்று அழைக்கலாம்! 

தமிழ்ப் படங்களில் இவ்வாறு இன்றியமையாத ஒரு பாத்திரமாக உள்ள இந்த சித்தர்களின் பாடல்களை ஊன்றிக் கவனித்தபோது அதன் அடிநாதமாக ஒரு குரல் ஒலிப்பதைக் கேட்டேன். அது இசைஞானி இளையராஜாவின் குரல்! ஆமாம், பெரும்பாலான சித்தர் கேரக்டர் பாடல்களை அவர்தான் பாடியிருக்கிறார். எனவே அவரை நான் 'சினி சித்தர்' என்றே அழைக்க விரும்புகிறேன்!



இளையராஜா இப்போது பழையராஜா ஆகிவிட்டாலும் அவருடைய இசைப்பணி ஒரு சகாப்தம் என்பது நிறுவப்பட்டுவிட்டது. எனவே நிதானமாக அவரின் ஆளுமையை அசைபோட்டுப் பார்க்க முடிகிறது. அவ்வகையில் எனக்கு ஏற்பட்ட அவதானங்களில் ஒன்று அவருடைய குரல்தான் அச்சு அசலாக ஒலித்த முதல் கிராமத்துக் குரல் என்பது. அல்லது அவரது இசையில்தான் எனலாம். சீர்காழி கோவிந்தராஜனோ டி.எம்.சவுந்தர்ராஜனோ வேறு வகையில் நல்ல குரலாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாக அவை கிராமத்து உயிரோட்டம் உள்ளவை அல்ல. அதற்கு ஒரு குரல் பண்ணைப்புரத்து ராசையாதான்!

சினி சித்தரின் ஆன்மிக நாட்டம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஹங்கேரி ஆகட்டும் யூ.கே ஆகட்டும், தன் சிம்பனி ஒலிப்பதிவுக்கு முன் தேங்காய் உடைத்து சூடம் கொளுத்தி வெள்ளையர்களைக் கலவரப்படுத்திவிட்டுத்தான் ஆரம்பித்தார். அவர் தலைமையிலான ஒரு படத் துவக்க விழாவில் இதே போல் அவர் செய்ய "படம் துவக்குகிறார்களா மடம் துவக்குகிறார்களா?" என்று ஒரு வார இதழில் எழுதினார்கள். அப்படிப்பட்ட நம் சினி சித்தருக்கு தமிழக சித்தர் மரபின்மீதும் தனி ஆர்வம் உண்டு. சித்தராகவே வாழ்ந்த ரமண மகரிஷியின் மரபில் தன்னை இணைத்துக் கொண்டவர் அவர். குணங்குடி மஸ்தான் சாகிபை ஒரு முஸ்லிம் சித்தராகவே மதித்து அவரின் தர்காவிலும் தியானம் செய்தவர். இதுபோன்ற ஒரு சித்தர் ஆளுமையைத்  தன்னுள் வைத்திருக்கும் அவரின் திரைப்பாடல்களில் மட்டும் அது வெளிப்படாமலா போய்விடும்? எனவே வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் தத்துவத்தைப் பொழிந்து தள்ளியிருக்கிறார்! அதற்கு எசவாப்  பாட்டெழுத நல்லா அகப்பட்டாரே பாக்கலாம் தாடிக்காரக் கவிஞர் வாலி. கேக்கவா வேணும்? (ஆன்மிக விருப்பமெல்லாம் இல்லாத பிற கவிஞர்களையும் அவர் சித்தர் பாடல்கள் எழுத வைத்துள்ளார், பொருள்முதல்வாதி வைரமுத்து உட்பட!)

சித்தர் பாடல்களில் காணலாகும் தத்துவங்களில் ஒன்று தேகத்தைப் பழிப்பது. காயமே இது பொய்யடா / வெறும் காற்றடைத்த பையடா என்ற வரிகள் பிரபலமானவை. தமிழ்த் திரைப்பாடல்களிலேயே ஆக 'ரா'வான தேகப் பழிப்புப் பாடலாக நான் கருதும் பாடல் சினி சித்தர் பாடிய பின்வரும் பாடல்தான்.
"அப்பனென்றும் அம்மையென்றும்
ஆணும் பெண்ணும் கொட்டிவைத்த  
குப்பையாக வந்த உடம்பு - ஞானப் பெண்ணே !
குப்பையாக வந்த உடம்பு!- இது
புத்தனென்றும் பித்தனென்றும் சித்தனென்றும் ஆவதென்ன 
சக்கையாகப் போகும் கரும்பு - ஞானப் பெண்ணே! 
சக்கையாகப் போகும் கரும்பு!
பந்தப் பாசச் சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்?"
என்பது அந்தப் பாடலின் பல்லவி மட்டுமே! இதே பொருண்மை கொண்ட இன்னொரு பாடல்:
"காலிப் பெருங்காய டப்பா 
அதுல வாசனை பலமாத்தான் இருக்கு
இந்த தேகம் அது சந்தேகம்
இந்தக் காயம் வெறும் வெங்காயம்"
(இன்னொரு விதமான ஞானப் பார்வையில் இந்தக் காயம் காலி டப்பாவோ அல்லது வெறும் வெங்காயமோ அல்ல, இது பெருங்காயம் என்பதைக் கண்டுகொள்ள முடியும்!)

தேகாத்ம விசாரம் எப்போது ஆரம்பித்து விட்டதோ "நான் யார்?" என்ற கேள்வி தானாகவே தோன்றிவிடும். ரமணரின் KEY - QUESTION இதுதான். வேறு கேள்விகள் எல்லாம் அர்த்தமற்றவை என்று அவர் கூறுவார். "தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்" என்பது சூபிமொழி/வழி! அதைத்தான் நம் சினி சித்தர் சொல்கிறார்:
"நான் யாரு? எனக்கேதும் தெரியலியே!
அதைக் கேட்டால் நான் சொல்ல வழியில்லையே!"

பல பேர் வெளியே டாம்பீகமாகத் திரிகிறார்கள். உள்ளத்தில் உளுத்துப் போன கட்டையாக இருக்கிறார்கள். வெளியே வெளுப்பு - உள்ளே கறுப்பு என்பது அவர்களின் நிலை. ஞானி இந்த நிலையை தலைகீழாக்கி விடுகிறார். அவருடைய 'நான்' என்பது ஆன்மிக மல்யுத்தத்தில் புரட்டப்பட்ட நான். "பிறரை வீழ்த்துபவன் வீரனல்ல, தன்னை வீழ்த்துபவனே வீரன்" என்று நபிகள் நாயகம் இதனைக் குறிப்பிட்டார்கள். "சூபி என்பவர் பாழடைந்த கோட்டைக்குள் மறைந்துள்ள அரண்மனை" (A SUFI IS A PALACE IN RUIN ) என்றார் ஷம்ஸ் தப்ரேஸ். ஞானிகள் வெளித்தோற்றத்தில் பிச்சைக் காரர்களைப்போல் இருந்தாலும் உள்ளே பேரரசர்களாக இருக்கிறார்கள். அவர்களே உண்மையில் உலகத்தை வென்ற மன்னர்கள்! எனவேதான் பல மண்-மன்னர்களின் பொன் மகுடங்கள் அவர்களின் பாதங்களில் பணிந்தன. மாவீரன் அலேக்சாந்தர்கூட ஒரு ஞானியைத் தேடித்தான் இந்தியாவுக்கு வந்தான் என்று ஒரு குறிப்பு உண்டு. "உள்ளுக்குள்ளே சக்கரவர்த்தி / ஆனால் உண்மையில மெழுகுவர்த்தி" என்று சினி சித்தர் சோகத்தில் பாடுவார். ஞானிகள் தம் போதத்தால் காலம் - இடம் கடந்தவர்கள் அல்லவா? அவர்களுக்கு முன் சுண்டைக்காய் சாம்ராஜ்ய ராஜாக்கள் எம்மாத்திரம்? சினி சித்தர் சொல்வதைப் பாருங்கள்:
"நேற்று இல்லை நாளை இல்லை
எப்பவும் நான் ராஜா.
கோட்டை இல்லை கொடியும் இல்லை
அப்பவும் நான் ராஜா."

சித்தர் பரிபாஷை என்று ஒன்று தனியாக இருக்கிறது. அது ஆழமான ஒரு குறியீட்டு மொழி. நேரடியாகப் பொருள் கொண்டால் அபத்தமாக, சில சமயம் விபரீதமாக ஆகிவிடும். மாங்கைப்பால் - தேங்காய்ப்பால் என்றெல்லாம் குதம்பைச் சித்தர் பாடுகிறாரே, அதுமாதிரி. Don't mess with it, if you don't know the language. இந்த உலகத்தை ஒரு காடு என்பார்கள். "வேட்டை பெரிதென்று வெறிநாயைக் கைப்பிடித்துக் காட்டில் புகலாமோ என் கண்ணே றகுமானே" என்பார் குணங்குடி மஸ்தான். அதாவது, காஞ்ச மாடு கம்பங் காட்டுல பாஞ்ச மாதிரின்னு சொல்றாங்களே, அதுமாதிரிதான் அர்த்தம்தான் இதுவும். சினி சித்தர் ஒரு பாட்டுல சொல்றார்:
"காட்டு வழி கால் நடையா போற தம்பி 
அதி காலையில சேருமிடம் சேர்ந்துவிடு"
ஞானம் அடையும் கணத்தைதான் அதிகாலை - விடியல் என்று சொல்வார்கள். "என்னைக்குத்தான் எனக்கு விடியுமோ?" என்று புலம்புகிறோம் அல்லவா? உண்மை விடியல் உள்ளே நிகழ்வதுதான்!

"சினி சித்தர் அவர்களே! ஞானம் எங்கே கிடைக்கும்? அதைத் தேடுபவன் எங்கே செல்ல வேண்டும்?" என்று கேட்டால் அவர் என்ன சொல்வார் என்று நினைக்கிறீர்கள். இமய மலை, திருவண்ணாமலை என்றா சொல்வார்? அவர் பாடிய பதில் இதோ:
"ஐயா வூடு திறந்துதான் கிடக்கு 
உள்ளே புகுந்து பந்தி போடு 
முத்துக் கடலு மூடியா கிடக்கு 
முடிஞ்சா எடுத்து மாலை போடு"
இதே கருத்தைத்தான் தன் நூல் ஒன்றுக்குத் தலைப்பாக வைத்தார்: "வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது." (ஆனால், 'ஓடுற நரியில ஒரு நரி கிழ நரிதான்' என்று அவர் பாடிய பரிபாஷையின் அர்த்தம் என்ன என்பதை நான் அறியேன். விவேக்கின் கற்பனையில் கிருபானந்த வாரியார் சொன்ன பொழிப்புரையைக் கேட்டுத் தெளிவு பெருக!)

சித்தர்களின் பாடல்களில் காணலாகும் இன்னொரு பொதுக்கூறு பெண் வெறுப்பு என்பதாகும். காமத்தைக் கடப்பதற்குச் சித்தர்கள் பலரும் தடுமாறியிருக்கிறார்கள் என்பதைக் காணலாம். அதனால் பெண்ணை - அவள் உடலை - மிக மட்டமான ஒன்றாக அருவருத்துப் பாடியுள்ளார்கள். சினி சித்தர் அந்த அளவுக்கெல்லாம் போகவில்லை என்றாலும் பெண் மனம்தான் மனிதனுக்கு என்றுமே புரியாத புதிர் என்னும் கருத்தைத் தன் பாடல்களில் கூறுகிறார்.
"ஆறும் அது ஆழம் இல்ல - அது
சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது ஐயா - இந்தப்
பொம்பள மனசுதான்யா"
"பெண் மனசு ஆழமுன்னு ஆம்பளைக்குத் தெரியும்
அது பொம்பளைக்கும் தெரியும்
அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும்?
அதில் முத்திருக்கா? முள்ளு தச்சிருக்கா?
யாருக்குத்தான் தெரியும்?"
என்ற பாடல்கள் சரியான சாம்பிளாக இருக்கும்.

எல்லா செண்டிமென்ட்டுகளையும் தாண்டிய சித்தர்களுக்குக்கூட தாய்ப்பாசம் என்னும் செண்டிமெண்ட் தாண்ட முடியாத ஒன்றாக இருந்திருக்கிறது.தன் தாய் இறந்தபோது பட்டினத்தார் கதறிப் பாடிய பாடல்கள் மிகவும் பிரசித்தம்.('தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன்?'). சினி சித்தரும் இதற்கு விதிவிலக்கல்ல. இது அவர் அன்-அப்போஸ்டாக ஜெயிக்கும் தொகுதி! ஹீரோவின் அம்மா செத்துப் போவதாக ஏதாவது ஒரு டைரக்டர் தப்பித் தவறி ஒரு காட்சியை வைத்துவிட்டால் போதும், 'எல்லோரும் ஒத்துங்கப்பா' என்று கையில் மைக்கைத் தூக்கிவிடுவார். 
"தாயென்னும் கோவில காக்க மறந்துட்ட பாவியடி கிளியே!- என் 
வாயும் வயிறையும் போற்றி வளர்த்திட்ட பாவியடி கிளியே!"
என்று கண்ணீர் கரைந்தோடும். "ஏன் ராசா இப்படி?" என்று கேட்டுவிட்டால் போதும், 'அம்மான்னா சும்மா இல்லேடா' என்று அதற்கும் ஒரு பாட்டு எடுத்துவிடுவார்.

சித்தர்களின் பாடல்களில் "விளி" என்பது ஒரு பாணி. 'குதம்பாய்! குதம்பாய்!' என்று அழைத்துப் பாடுவார் குதம்பைச் சித்தர். 'பாம்பே! பாம்பே!' என்று பாடுவார் பாம்பாட்டிச் சித்தர். மனோன்மணியே! என்று பாடுவார் மஸ்தான் சாகிபு. அதுபோல் நம் சினி சித்தர் ஞானப் பெண்ணே! என்றும், கிளியே! என்றும், கண்மணி! என் கண்மணி! என்றும் அழைத்துப் பாடியுள்ளதைக் கவனிக்கவும்.

இப்படி ஒரு கால் நூற்றாண்டு ஓடியது. சித்தர்கள் சினிமாவிலாவது வந்து கொண்டிருந்தார்கள். தத்துவங்களைத் தந்துகொண்டிருந்தார்கள். பிறகு ஒரு நாள் ஏ.ஆர்.ரகுமான் வந்தார். சித்தர்களை எல்லாம் துரத்தியடித்தார். தத்துவம் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டது. கையில் கிதார் எடுத்துக்கொண்டது. ஆலமரத்தடி அரசமரத்தடி என்ற லொகேஷன் எல்லாம் மாறிவிட்டது. சுழலும் வண்ண விளக்குகள் ஒளி பீச்சும் பப்பில், தலை கால் புரியாத மப்பில் அது ஆடுகிறது.

"யாக்கை திரி 
காதல் சுடர் 
ஃபனா!

ஜீவன் நதி 
காதல் கடல் 
ஃபனா!"

Friday, December 24, 2010

கனியாகும் கட்டம்

ஏதோ   ஒரு திரைப்படத்தில் பார்த்த காட்சி ஒன்று ஞாபகம் வருகிறது. ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொள்வதற்காக ஒருவன் பாலக்கட்டையில் நிற்கிறான். “சாகப் போறீங்க, உங்களுக்கு எதுக்கு மோதிரம் வாட்ச் செய்னெல்லாம்? எனக்குத் தரக்கூடாதா?” என்று அவனிடம் ஒருவன் கேட்கிறான். அதில் ஞாயம் இருப்பதால் உடனே அவன் எல்லாவற்றையும் கழற்றிக் கொடுத்துவிட்டு ஆற்றில் குதிக்கிறான். தண்ணீர் ஆழம் போதாததால் அவன் மூழ்கிச் சாக முடியவில்லை. இடுப்பளவு தண்ணீரில் எழுந்து நின்று மேலே பார்க்கிறான். “ஐயா, நான் என் முடிவை மாற்றிக் கொண்டேன். குடுத்ததை திருப்பித் தா” என்கிறான். “அப்படியெல்லாம் முடிவை மாத்தாதீங்க. ஆழமான இடமா பாத்து குதிக்கலாம்” என்கிறான் வந்தவன். “இல்லை, தற்கொலை செய்வது கோழைத்தனம்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க” என்பான் இவன். வந்த ஆள் சொல்வான், “அதெல்லாம் கோழைங்க சொன்னது. தற்கொலை செய்துகொள்வது வீரத்தனம்!”

ஆன்மிகம் என்பது பகுத்தறிவுக்கு எதிரானது என்று பொதுவாக ஒரு கருத்து உள்ளது. இந்தக் கருத்தை வைத்திருப்பவர்கள் அரைவேக்காட்டுப் பகுத்தறிவுவாதிகள் என்று எனக்கு மிகத் தாமதமாகத்தான் புரிந்தது. அதேபோல் பகுத்தறிவு என்பது ஆன்மிகத்துக்கு எதிரானது என்பதும் ஒரு பொதுக் கருத்து. இதுவும் அரைவேக்காட்டு ஆன்மிகவாதிகள் கூறுவதுதான்.

பகுத்தறிவு (INTELLIGENCE ) என்பதும் உள்ளுணர்வு (INTUITION )  என்பதும் மூளையின் வெவ்வேறு பகுதிகளில் நிகழும் செயல்பாடுகள். இரண்டுமே முழுமை அல்ல. பகுத்தறிவு தர்க்கத்தைக் கருவியாகப் பயன்படுத்துகிறது. அதன் துறை விஞ்ஞானம்/ அறிவியல். உள்ளுணர்வு கற்பனையைக் கருவியாகப் பயன்படுத்துகிறது. அதன் துறை கலை. இந்தப் பிரிவில் ஒன்று உயர்ந்தது மற்றது தாழ்ந்தது என்பதெல்லாம் கிடையாது. ஆனால் கலைகளை விட அறிவியல் உயர்ந்தது என்று ஒரு பொதுப்பார்வை உள்ளது. அதுவும் அரைவேக்காடுகளின் பார்வைதான்.



திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பகுத்தறிவுப் பாசறை ஒன்றின் சுவற்றில் ஒரு வாசகம் கண்டேன். "பக்தி வந்தால் புத்தி போகும். புத்தி வந்தால் பக்தி போகும்" என்று எழுதியிருந்தார்கள். நான் அறிந்த வரையில் புத்திசாலிகளான கணித மேதைகள், விஞ்ஞானிகள் எல்லாம் ஆழமான இறைநம்பிக்கை கொண்டவர்கள்தான். நாத்திகர்கள் கலை உலகில் உருப்படியான பங்களிப்பு எதையும் செய்யவில்லை என்பதே என் அவதானம். ஒரு நாத்திக சிம்பனி இசைக்கலைஞனை நான் கேள்விப்பட்டதில்லை. நியூட்டனோ ஐன்ஸ்டினோ நாத்திகர் அல்லர். ஆனால் அவர்களிடம் கூர்மையான தர்க்கம் இருந்தது. என்னைப் பொருத்தவரை உண்மையான ஆன்மிகம் என்பது பகுத்தறிவு உள்ளுணர்வு இரண்டையுமே முழுமையாகப் பயன்படுத்துவது.

பகுத்தறிவு ரீதியாக மத விளக்கங்கள் கொடுப்பது இன்றைக்கு ஒரு ட்ரென்ட். பலரையும் ஆட்டிப் படைக்கின்ற ஒரு பைத்தியக்காரத்தனமாக அது மாறியிருக்கிறது. குறிப்பாக, முஸ்லிம் இளைஞர்களை இந்த நவீனப் போக்கு மிகவும் பாதித்துள்ளது.திருக்குர்ஆன் வசனங்கள் அனைத்திற்கும் அறிவியல் ரீதியாகவே சரியான பொருளைக் கண்டறிய முடியும் என்பது போன்ற ஒரு மாயத் திரை பல மனங்களின் மீது படர்ந்துள்ளது. என்னைப் பொருத்தவரை, தர்க்கமாகட்டும் அல்லது உள்ளுணர்வு - கற்பனை ஆகட்டும், தான் எட்டிய எல்லையைத் தாண்டி மேலும் காலடி எடுத்து வைக்கத் தவறி ஒரு தளத்தில் நின்று விடுமானால் அது உண்மையை ஒருபோதும் கண்டறியாது. எனவே என் சிந்தனைகளில் எனக்கு நானே எதிர் தர்க்கங்களை முன்வைத்தபடியே நகர்ந்து செல்வதுதான் என் வழக்கம். அது என் உரையாடல் பாணியும் கூட.

"இந்து மதம், கிருத்துவ மதம், புத்த மதம் என்பதுபோல்  இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல. அது ஒரு மார்க்கம்" என்று ஒருவர் கூறினார். இதை அவர் எந்தப் புரிதலில் சொன்னார் என்று குடைந்து பார்க்க நான் ஆவலானேன். மதம் என்றால் என்ன? மார்க்கம் என்றால் என்ன? என்று விளக்கும்படி அவரிடம் கேட்டேன். 'மதம் என்பது மனிதனே உருவாக்கிக் கொண்டது. மார்க்கம் என்பது இறைவனின் வழி' என்பது போல் ஒரு விளக்கத்தை அவர் கூறினார். 'அப்படியானால் இஸ்லாம் மதம் என்று சொல்லக்கூடாதா?' என்று நான் கேட்டேன். கூடாது என்றார். "எனக்கென்னவோ இஸ்லாம் மார்க்கம் என்று சொல்வதைவிட இஸ்லாம் மதம் என்று கூறுவதுதான் பொருத்தமானது என்று தோன்றுகிறது" என்று சொன்னேன். என் பதில் அவருக்கு அதிர்ச்சியைத் தந்தது. என் கருத்தை விளக்கும்படிக் கேட்டார். மதம் என்பது சமஸ்க்ருத வார்த்தை. கொள்கை என்பது அதன் அர்த்தம். இஸ்லாம் மதமல்ல என்று சொன்னால் அதில் கொள்கையே இல்லை என்றாகிவிடும். இஸ்லாத்தில் கலிமத்துத் தவ்ஹீத்  என்னும் கொள்கையும்  (அகீதா) உண்டு, முஆமலாத் - முஆசராத் (சரியை - வழிபாடுகளின் செயல்கள்) என்னும் மார்க்கமும் உண்டு. செயல்களை விட கொள்கைதான் முக்கியமானது. ஏனெனில் கொள்கையின்றி செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே இஸ்லாம் மார்க்கம் என்பதைவிட இஸ்லாம் மதம் என்பது இன்னும் பொருத்தமானது. மதம் என்பது சமஸ்க்ருத வார்த்தை என்பதும் அதன் அர்த்தம் கொள்கை என்பதும் உங்களுக்குத் தெரியுமா?" என்று சகோதரரிடம் கேட்டேன். "தெரியாது, மக்களின் புழக்க பாஷையில் மதம் என்பது பொதுவாகப் பயன்படுவது மாதிரிதான் நான் சொன்னேன்" என்றார். "இதுதான் உங்கள் சமயவியல் அணுகுமுறையின் லட்சணம். அரபி வார்த்தையாக இருந்தால் அகராதி, கலைக்களஞ்சியம் எல்லாம் புரட்டுவீர்கள். பிற சமயச் சொற்கள் என்றால் அதன் பின்னணியும் தெரியாது முன்னணியும் புரியாது. அதற்கு மட்டும் புழக்க பாஷையில் பிளந்து கட்டுவீர்கள்!" என்றேன். என் முகத்தையே இறுக்கமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். நான் பேச்சை மாற்றினேன்.

"ஆப்பிள் என்பதற்குத் தமிழில் என்ன சொல்வது? சங்க இலக்கியத்தில் இருக்கிறதா?"
"ஆப்பிள் என்ற சொல் சங்க இலக்கியத்தில் கிடையாது."
"ஏன் இல்லை?"
"அந்தக் காலத்தில் தமிழ் நாட்டில் ஆப்பிளே இல்லை. அதனால்தான்."
"சரி, மா பலா வாழை என்ற சொற்கள் இருக்கிறதா?"
"இருக்கிறது. அந்தக் காலத்தில் அந்தப் பொருட்கள் தமிழ் நாட்டில் இருந்ததால் சொற்களும் இருக்கின்றன."
"சரி, ஏக இறைவன், ஏகத்துவம் என்றெல்லாம் சொல்கிறோமே, 'ஏகம்' என்ற சொல் என்ன மொழி என்று தெரியுமா?"
"தமிழ் வார்த்தைதானே அது?"
"இல்லை. சமஸ்க்ருத வார்த்தை. ரிக் வேதத்துல இருக்கு. 'ஏகம் சத்' என்று இறைவனை வருணிக்கும் வாசகத்தில் இருக்கிறது. இதுலேர்ந்து என்ன தெரியுது?"
"ஒன்னும் தெரியலியே."
"ஏகத்துவக் கொள்கை ரிக் வேதத்துல இருக்குன்னு தெரியுது!"

மீண்டும் பேச்சு 'மதம்' நோக்கித் திரும்பியது. "இந்து மதம், கிருத்துவ மதம் என்று சொல்வதுபோல் இஸ்லாம் மதம் என்றுதான் சொல்லவேண்டும். இந்து சமயம், புத்த சமயம் என்று சொன்னால் இஸ்லாம் சமயம் என்றுதான் சொல்லவேண்டும். இந்து மார்க்கம், கிருத்துவ மார்க்கம் என்று சொன்னால் இஸ்லாம் மார்க்கம் என்றுதான் சொல்ல வேண்டும். பிற சமயங்களைக் குறிக்க ஒரு வார்த்தையும் இஸ்லாத்தைக் குறிக்க ஒரு தனி வார்த்தையும் சொல்வது திருக்குர்ஆன்-நபிவழிக்கு மாற்றமானது. புரிகிறதா?" என்றேன். எப்பூடி? என்பது போல் பார்த்தவரிடம் விளக்கினேன்.
"உங்களுக்கு உங்கள் வழி
எனக்கு (என்) வழி"
(லகும் தீனுக்கும் வலிய தீன்) (109 : 6 ) என்றுதானே திருமறையில் தான் தூதருக்கு இறைவன் கற்பிக்கிறான்? தன்னை நிராகரித்தவர்களைப் பார்த்து நபிகள் இவ்வாறு கூற  வேண்டும் என்றுதானே இந்த வசனம் அருளப்பட்டது. நிராகரித்தவர்களின் வழிக்கும் தன் வழிக்கும் 'தீன்' என்ற அதே வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறான். வெவ்வேறு வார்த்தைகளை அல்ல!

தர்க்கம் எப்போதுமே இருமுனை கூரான கத்தி. ஒருவர் முன்வைக்கும் தர்க்க வாதம் அவரது வாதத்தின் மீதே பாயவும் கூடும். சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விவாதத்தைக் கண்டேன். அல்லாவுக்கு உருவம் உள்ளதா இல்லையா என்னும் விவாதம் அது. விவாதப் பொருள் திசைமாறிப் போன ஓரிடத்தில் ஒரு சகோதரர் கேட்டார், "அல்லாவுக்கு உருவம் இல்லை என்று கூறுகிறீர்களே, அப்படி என்றால் காற்றுக்கு உருவம் இல்லையே அதை வணங்குவீர்களா?" என்று. நான் ஆச்சரியப்பட்ட இடங்களில் இந்தக் கேள்வியும் ஒன்று. இவ்வளவு சொதப்பலான கேள்விகளையெல்லாம் எப்படித்தான் கேட்கிறார்களோ என்று நினைத்தேன்.காற்றுக்கு உருவம் இல்லை என்று யார் சொன்னது? அங்கேயே அவரின் வாதம் மண்ணைக் கவ்வி விட்டது! காற்றுக்கு உருவம் உண்டு என்ற எளிய உண்மைகூட தெரியாத ஒருவர் சமயத்தை ஆய்வு செய்கிறேன் வாய்வு செய்கிறேன் என்று கிளம்பி, அவர் பின்னால் ஒரு கூட்டமும் போகிறது என்றால் உண்மையிலேயே அது ஒரு கேடுதான்!

காற்று நம் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதாலேயே அதற்கு உருவம் இல்லை என்று அர்த்தமல்ல. பாக்டீரியா, வைரஸ் எதுவும் நம் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் நுண்ணோக்கியில் பார்த்தால் அவற்றின் உருவம் தெரியும். காற்று என்பதே ஆக்சிஜன் ஹைட்ரஜன் கார்பன்-டையாக்சைடு ஹாலோஜன்கள் முதலிய வாயுக்களின் கலவைதான்! வாயு பகவான் ஒரு ஆள் அல்ல. ஒரு கும்பல்! அவை ஒவ்வொன்றும் பலப் பல கோடானு கோடானு....கோடானு கோடி அணுக்களின் மொத்தம். ஸ்கூல் பிள்ளைகளைக் கேட்டால்கூட வாயுக்களின் அணுவிற்கு உருவம் உண்டு  என்பதை, அவற்றின் அணுக்  கட்டமைப்பை (ATOMIC STRUCTURE ) வரைந்தே காட்டிவிடுவார்கள். அணு என்பது அருவமல்ல. அது பருப்பொருளின் நுண்ணிய துகள். இத்தனைக்கும் அணு என்பது அடிப்படைப் பொருள்கூட கிடையாது. அதையும் உடைத்து புரோட்டான் எலெக்ட்ரான் நியூட்ரான் லெப்டன் முவான் நியூட்ரினோ டாவ் என்று மேலும் மேலும் நுண்ணிய துகள்களைக் கண்டுவிட்டார்கள். இவை எதுவுமே அருவம் அல்ல. எல்லாமே உருவம் கொண்ட பருப் பொருள்தான். பருப்பொருள் என்றாலே அது உருவமுள்ளதாகத்தான் இருக்க முடியும். காற்றுக்கு உருவமில்லை என்பது எத்தனை சொத்தையான தர்க்கம்! அது வெறும் குதர்க்கம்தான்!



ஆனால் இந்த வாதத்தில் உள்ள தர்க்கத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல என்னால் முடியும். நான் என்ன நகர்த்திச் செல்வது? அந்த தர்க்கத்தின் கையைப் பிடித்துக் கொண்டால் அது தானாகவே நம்மை அழைத்துச் செல்கிறது. தர்க்கம் என்பது எப்போதும் எதிர்ப் பக்கம் 'கோல்' அடித்தவுடனே சேம்சைடு கோலும் போட்டு மகிழ்கின்ற ஒரு கிறுக்கு விளையாட்டு வீரன். அதனுடன் ஞானிகள் மட்டுமே மகிழ்ச்சியாக விளையாட முடியும்! ஏனெனில் அது உதைத்து விளையாடும் கால்பந்தே நம் தலைதான்!



காற்றுக்கும் உருவம் இருக்கிறது என்பது உண்மைதான். அதற்கு வடிவமும் இருக்கிறது. விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட பூமிப்பந்தின் நிழற்படங்களைப் பார்த்தால் அதனைச் சுற்றி காற்று மண்டலம் வளையமாக இருப்பதைக் காணலாம். அது காற்றின் வடிவம்தான். அதற்கு வெளியே விண்வெளியில் இருப்பதெல்லாம் ஒளியும் காஸ்மிக் கதிர்களும்தான். இவையெல்லாம் உலவும் அந்த வெளி இருக்கிறதே அதற்கு என்ன உருவம்? அதற்கு உருவம் இல்லை! குறைந்த பட்சம் அறிவியல் ஆராய்ந்த வகையில். உண்மையில் அதற்கு உருவமே இல்லை என்றால் பிரபஞ்சம் விரிந்துகொண்டே உள்ளது என்று ஐன்ஸ்டீன் கூறுவதற்கு என்ன அர்த்தம்? அப்படியானால் அந்த விண்வெளியும் கோள வடிவம் என்றால் அதற்கு வெளியே என்ன இருக்கிறது? அதைக் கொலவர்த்வுடையதாக உள்ளடக்கி வைத்திருப்பது எது? தர்க்கம் இப்படிப் போய்க்கொண்டே இருக்கும்.

"சகல கோள்களும் மிதந்துகொண்டிருக்கும் வெளிக்கு உருவம் இல்லை என்றால் அதை வணங்குவீர்களா?" என்று அந்தச் சகோதரர் கேட்டிருந்தாலாவது அந்த வாதத்தில் கொஞ்சம் பலம் இருந்த்ருக்கும். உருவமற்ற அந்த வெளியின் எதார்த்தம் என்ன என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் அதற்கு அடுத்தக் கட்டத்திற்குச் செல்கின்ற கதவு திறக்கும்!

தர்க்கம் தன்னை உடைத்துக் கொள்கின்ற கட்டத்திற்கு முன்னகராவிட்டால், அறிந்ததில் இருந்து அறியாததை நோக்கி அடியெடுத்து வைக்காவிட்டால் அது சாத்தானின் தர்க்கமாகத்தான் இருக்கும் என்பதைத் திருக்குரானில் உள்ள கதை ஒன்று நமக்குக் காட்டுகிறது!

அல்லாஹ் மண்ணைக் கொண்டு மனிதனின் உடலைப் படைத்து அதில் தன் உயிரிலிருந்து ஊதி உயிரூட்டி எழுப்பியவுடன் ஆதம்(அலை) என்ற அந்த முதல் மனிதருக்கு சிரம் பணியுமாறு வானவர்களுக்கும் ஜின்களுக்கும் கட்டளை இடுகிறான். எல்லோரும் சிரம் பணிகின்றார்கள், இப்லீஸ் என்னும் ஷைத்தானைத் தவிர. 'நான் கட்டளையிட்ட போது சிரம் பணியாதபடி உன்னைத் தடுத்தது எது?' என்று அல்லாஹ் அவனிடம் கேட்கிறான்.
"அவன்(இப்லீஸ்) சொன்னான்:
நான் அவரைவிட மேலானவன்.
நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய்
மேலும் நீ அவரை மண்ணிலிருந்து படைத்தாய்"
(7 : 12 ) மற்றும் (38 :76 )
இப்லீஸின் இந்த வாதத்தை ஊன்றி கவனித்துப் பாருங்கள். அவன் சொன்ன தகவல் பொய்யல்ல. ஜின்களை நெருப்பிலிருந்துதான் இறைவன் படைத்தான். (காண்க: குரான் 15 :27 மற்றும் 55 :15 ). மனிதனை மண்ணிலிருந்துதான் இறைவன் படைத்தான். (காண்க 6 :2 ; 15 :26 ; 32 :7 ; 38 :71 ; 55 :14  ). எனவே இந்தத் தகவலில் ஷைத்தான் தவறு செய்யவில்லை. அவன் தவறு செய்த இடம் எது என்றால் சரியான தகவல்களைத் தவறாகப் புரிந்துகொண்டது! "நான் அவரைவிட மேலானவன்" என்று சொன்னானே, அங்கே பிசகிவிட்டது! வெள்ளி மோதிரத்தை விட தங்க மோதிரம் மதிப்பு மிக்கது என்றுதான் எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அதே வெள்ளி மோதிரம் நபியின் விரலை அலங்கரிக்குமானால் அதற்கு ஈருலகம் ஈடாகுமா?

ஷைத்தானின் தர்க்கம் ஒரு கட்டத்தோடு நிற்கிறது. தன்னை இறைவன் நெருப்பிலிருந்து படைத்தான் என்பதை அறிந்த அது அந்த நெருப்பு எதிலிருந்து வந்தது என்பதை சிந்திக்கவில்லை. மனிதனை இறைவன் மண்ணிலிருந்து படைத்தான் என்பதை அறிந்த அது அந்த மண் எதிலிருந்து வந்தது என்பதை சிந்திக்கவில்லை. அதாவது படைப்பாகிய தன்னின் மூலம் நெருப்பு என்னும் இன்னொரு படைப்பு என்றுதான் அவனது குறையறிவு பார்த்தது. படைப்பாகிய மனிதனின் மூலம் மண் என்னும் இன்னொரு படைப்பு என்றுதான் அவனது குறையறிவு பார்த்தது. நெருப்பையும் மண்ணையும் தாண்டி அவனுடைய தர்க்கம் செல்லவில்லை. எனவே, எந்த தர்க்கம் படைப்புக்களைத் தாண்டவில்லையோ அது ஷைத்தானிய தர்க்கம்! அப்படிப்பட்ட தர்க்கத்தைதான் இப்லீஸின் சீடர்கள் செய்யமுடியும்!

எந்த ஒரு பொருளின் மூலம் எது என்னும் கேள்விக்கு விடையாக இன்னொரு படைப்பு சுட்டிக்காட்டப்படுமானால் அந்தப் படைப்பின் மூலம் எது என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கும், தனக்கு மூலம் என்று வேறு இல்லாத ஒன்றைக் காட்டும் வரை! அதை தர்க்கம் தொட்டால்தான் அது சரியான அறிவு. இல்லையென்றால் அனைத்தின் மூலமும் எது என்றும் விளங்காது, ஆதமின் மண்ணுடலுக்குள் அல்லாஹ் ஊதியது எது என்பதும் விளங்காது!

சகோதரர் நன்றாகத்தான் காய் நகர்த்துகிறார். ஆனால் அந்தக் காய்கள் வெம்பிவிடுகின்றன. காய் கனியாகும் கட்டத்திற்கு நகர்த்தத் தெரிய வேண்டும்!

Wednesday, December 22, 2010

ஒரு வழி ஆகும் வழி

"ஜன்னலுக்கு உள்ளே" கட்டுரைக்கு வந்த முதல் பின்னூட்டத்தில் " 78 :33 ல் சம வயது கன்னியர் என்று தானே உள்ளது" என்று அப்துல் ரஹீம் மலிக் குறிப்பிட்டுள்ளார். நானோ  "முற்றிய முலை கொண்ட சம வயது கன்னியர்" என்று எழுதியிருந்தேன். மலிக் என் கட்டுரையைப் படித்துவிட்டு திருக்குர்ஆன் பிரதி ஒன்றை எடுத்து மேற்படி வசனத்தைத் திறந்து பார்த்துள்ளார் என்று தெரிகிறது. முற்றிய முலைகளைக் காணவில்லையே என்று அவர் பதறியிருக்கக் கூடும். அதைத்தான் பின்னூட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளார். ஜன்னலுக்கு உள்ளே இவ்வளவு குழப்பமா என்று எண்ணினேன்.

78 :33 என்று குறிப்பிட்டிருப்பது திருக்குரானின் 78 -ம் அத்தியாயமான சூரத்துன் நபா-வில் உள்ள 33 -ம் வசனத்தை. அரபி மூலத்தில் அந்த வசனம் "வ கவா-இப அத்ராபா" என்றுள்ளது. "கவா-இப்" என்னும் சொல்லும் "அத்ராபா" என்னும் சொல்லும் எதைக் குறிக்கின்றன என்று பார்த்தால் "முற்றிய முலை கொண்ட சம வயது கன்னியர்" என்று நான் அந்த வசனக் கருத்தை எழுதியிருப்பது ஏன் என்பது புரியும்.

"அத்ராபா" என்றால் சம வயதுள்ள கன்னியர் என்று பொருள். "கவா-இப்" என்பதற்கான அர்த்தம் என்ன என்பதுதான் பல மொழிபெயர்ப்பாளர்களுக்கு உள்ள சிக்கல். திருக்குரானை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பலர் இந்த வார்த்தையில் தடுமாறியிருக்கிறார்கள். சிலர் இதனை வெறுமனே "இணைகள்" (COMPANIONS ) என்று மொழிபெயர்த்துள்ளார்கள். அந்த வார்த்தையின் நேரடிப் பொருள் சார்ந்து அவர்கள் மொழிபெயர்க்கவில்லை. பின்வரும் உதாரணங்களைப் பார்க்க:
1 . "COMPANIONS OF EQUAL AGE " - மௌலான யூசுப் அலி.
2 . "AND YOUNG MAIDENS OF EQUAL AGE " - ஷேர் அலி.
3 . "AND THOSE SHOWING FRESHNESS OF YOUTH , EQUALS IN AGE " - எம்.எச்.ஷாகிர்.
4 . "AND MAIDENS FOR COMPANIONS " - முஹம்மத் மர்மதூக் பிக்தால்.
5 . "AND YOUTHFUL (COMPANIONS ), EQUAL IN AGE " - மௌலானா முஹம்மது அலி.
6 . "AND SPLENDID COMPANIONS WELL MATCHED " - முஹம்மது அசத்.
7 . "AND NUBILE MAIDENS OF SIMILAR AGE " - ஆயிஷா பெவ்லி
8 . "AND BUXOM MAIDENS OF MATCHING AGE " - முஹம்மத் தகீ உஸ்மானி.

தமிழில் மொழிபெயர்த்தவர்கள் மௌலானா யூசுப் அலியின் ஆங்கில மொழிபெயர்ப்பை முன்மாதிரியாக வைத்து மொழி பெயர்த்திருக்க வேண்டும் என்பது என் ஊகம். இவை "கவா-இப்" என்னும் சொல்லின் சரியான அல்லது வெளிப்படையான பொருளைத் தரவில்லை. சுற்றி வளைத்துச் சொல்கின்றன. சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பார்த்தால் "கவா-இப்" என்ன என்பது தெரியும். அப்படிப்பட்ட நேரடியான மொழிபெயர்ப்புக்களும் ஆங்கிலத்தில் உள்ளன.
1 . "AND FULL BREASTED MAIDENS OF EQUAL AGE " - அப்துல் மஜீத் தர்யபாதி.
2 . "AND FULL GROWN BREASTS AND SAME AGE / NOT AGING " - அஹமத் அலி.
3 . "MAIDENS WITH PAIRS - SHAPED BREASTS WHO ARE OF EQUAL AGE (TO THEIR SPOUSES )" -முஹம்மத் சர்வர்.
4 . "AND YOUNG FULL BREASTED (MATURE ) MAIDENS OF EQUAL AGE - முஹம்மத் அல்-ஹிலாளி மற்றும் முஹ்சின் காண்.

திருக்குரானை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடிகள் முஸ்லிம்கள் அல்லர். அவர்கள் கிறித்துவ சமயத்தினர். அவர்களும் "கவா-இப்" என்னும் சொல்லின் நேர்ப் பொருளையே கொடுத்துள்ளார்கள்.
1 . "AND MAIDENS WITH SWELLING BREASTS , LIKE OF AGE " - ஆர்தர் ஜான் ஆர்பரி.
2 . "AND GIRLS WITH SWELLING BREASTS AS THE SAME AGE OF THEMSELVES " - எட்வர்ட் ஹென்றி பால்மர்.
3 . "AND DAMSELS WITH SWELLING BREASTS , OF EQUAL AGE WITH THEMSELVES " - ஜார்ஜ் சேல்.
4 . "AND DAMSELS WITH SWELLING BREASTS , THEIR PEERS IN AGE " - ஜான் மெடோஸ் ராட்வெல்.

இந்த வசனத்திற்கு விரிவுரை எழுதியுள்ள மார்க்க அறிஞர்கள் பலரும் இந்த நேரடிப் பொருளையே குறிப்பிட்டுள்ளார்கள். அலீ இப்ன் அபி தல்ஹா அவர்கள் ஹழ்ரத் இப்ன் அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் விரிவுரை (தப்சீர் இப்ன் அப்பாஸ்), அத்-தபரீ, கதாதா, இப்ன் ஜைத், இப்ன் கசீர், அஸ்-சம்'அனீ போன்றோர் அவர்களுள் சிலர். இந்த விளக்கவுரைகளுக்குள் இப்போது நான் செல்லவில்லை. இதுவரை பார்த்த செய்திகளே போதுமானது என்று நம்புகிறேன்.

இந்த நேரடிப் பொருள் சிலருக்கு மனக் கிலேசத்தை உண்டாக்கலாம். திருக்குரானில் இப்படியொரு வருணனையை இறைவன் கூறுவானா? என்று அதிர்ச்சி அடையலாம். அதன் விளைவாக சுற்றி வளைத்து வேறு பொருள் கொடுத்து அமைதி காண அவர்கள் முயல்கிறார்கள். அப்படிப்பட்ட வாதங்களும் இஸ்லாமிய உலகில் புதிதல்ல. மௌலானா யூசுப் அலி போன்றவர்கள் திருக்குரானில் சொர்க்க இன்பங்கள் பற்றி வருகின்ற வசனங்களுக்கு ஆன்மிகக் குறியீட்டுப் பொருள் தந்து அர்த்தத்தை மாற்றுகிறார்கள் என்று அபு ஆமீனா பிலால் பிலிப்ஸ் குற்றம் சாட்டுகிறார். அவர் சொல்கிறார்: "இப்ன் அப்பாஸ் அவர்களின் விரிவுரைபடி 'அத்ராபன்' என்பதற்கு சம வயது என்பதுதான் அர்த்தம். ஆனால் 'கவா-இபா' என்பதற்கு 'இணை' (COMPANION ) என்று பொருளல்ல.கவா-இப் என்பது 'கா-இப்' என்பதன் பன்மை. அதன் பொருள் 'முலை எழுகின்ற பெண் அல்லது எழுந்த முலை கொண்ட பெண்' என்பதுதான். (E. W. Lane, Arabic English Lexicon, vol. 2, p. 2616). 'கவா-இப்' என்றால் திரட்சியான பெண்கள் என்று பொருள். (J. Milton Cowan, ed., A Dictionary of Modern Written Arabic, (Beirut: Libraire Du Liban, 1980), p. 831). கவா-இப் என்றால் நவாஹித் என்று இப்ன் அப்பாஸ் அவர்களும் முஜாஹித் அவர்களும் கூறியதாக இப்ன் கசீர் மேற்கோள் காட்டியுள்ளார். அதன் விளக்கத்தில் அவர் கூறுகிறார்: 'அவர்கள் கருத்துப்படி சொர்க்கக் கன்னியரின் ஸ்தனங்கள் உறுதியாகவும் தொய்வின்றியும் இருக்கும், ஏனெனில் அவர்கள் கன்னியராவர்." இந்த போனஸ் செய்தியும் போதுமானது என்று நம்புகிறேன்.

"ஜன்னலுக்கு உள்ளே" கட்டுரையில் நான் சொல்ல வந்த விஷயம் இதுவல்ல. தொழுகையில் இறைவனை நாம் எவ்வாறு அவதானிப்பது என்பது பற்றித்தான் அது பேசுகின்றது. திருக்குர்ஆன் வசனத்தை ஒதும்போதும் படைப்புக்கள்தான் நம் சிந்தனையில் வருகின்றனவே தவிர படைத்தவன் வருவதில்லையே என்பதைத்தான் அதில் சுட்டியிருந்தேன். வானம்-பூமி பற்றிய வசனம் வானத்தையும் பூமியையும் நம் சிந்தனையில் கொண்டு வரும். இறைவனைக் காட்டுகிறதா? என்ற போக்கில் நான் எழுதியிருந்த விசாரம்தான் அதன் சாரம். அதில் ஒரு எடுத்துக்காட்டுத்தான் சொர்க்கக் கன்னியர் பற்றிய வசனங்கள் ஓதப்படுவதும் அதனைப் பற்றி இஸ்லாமிய அறிஞர்களிடையே காணலாகும் கருத்துக்களும்.

இளைஞர்கள் உள்ள ஜமாஅத் தொழுகைகளில் ஹூருல் ஐன்கள் பற்றிய வசனங்களை ஓதாமல் இருப்பது நல்லது என்று இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் சொன்ன கருத்தையும் அதற்கு அவர்கள் சொன்ன காரணத்தையும் - அதாவது தவறான கற்பனையால் அவர்களின் மனம் சலனப்பட்டுத் தொழுகை பிசகிவிடும் என்பதையும் - எழுதியிருந்தேன். இதைப் படித்தபோதே எனக்குச் சில ஐயங்கள் தோன்றியதுண்டு. அப்படியானால் திருக்குர்ஆன் முழுமையாக ஓதப்படும் தராவீஹ் தொழுகையில் அத்தகைய வசனங்களை ஓதாமல் இருக்க முடியுமா? என்பது போன்ற கேள்விகள் என் மனதில் தோன்றின.

திருக்குர்ஆன் வசனங்களில் செம்பாகம் பிரபஞ்சத்தின் தோற்றம்-இயக்கம், வானங்கள், பூமி, சூரியன், நிலா, கோலங்கள், விண்மீன்கள், நதிகள், மலைகள், தோட்டங்கள், வயல்கள், விலங்குகள், மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறைகள் இத்தியாதி அத்தியாதி என்று படைப்புக்களைச் சொல்லித்தான் இறைவனின் ஆற்றல்களை விளக்குகின்றன. இறைவனை மட்டுமே நேரடியாகக் குறிக்கும்- அவனது உள்ளமை மற்றும் பண்புகளை நேரடியாகச் சுட்டும் வசனங்கள் மேற்படி பாணி வசனங்களுக்கு ஒரு முத்தாய்ப்பு வைத்தது போல சொல்லப்பட்டிருக்கும். படைப்புக்கள் பற்றிய வசனங்களைச் சிந்தனை செய்யும்போது மனக்கண்ணில் படைப்புக்கள்தான் தோன்றும். அவை இறைச் சிந்தனையை விட்டு மனதை திசை திருப்பிவிடாதா? என்ற கேள்வி தவிர்க்கமுடியாதது.

தொழுகையின் நோக்கம் என்ன என்பதை இறைவன் தான் வேதத்தில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளான்:
"நிச்சயமாக நானே அல்லாஹ்
எனக்கே அடிமை செய்க
என்னை நினைவு கூரவே
தொழுகையை நிலையாக்குக"
(20 : 14 )
தொழுகை என்பதே இறைவனை நினைவு கூர்வதற்குத்தான். வேறு நோக்கத்திற்காகத் தொழுகையை நிலைநிறுத்துவது இறைக் கட்டளைக்கு மற்றம் செய்வதாகும். அது நிலையான தொழுகையாக இருக்காது, ஊசலாட்டமுள்ளதாக இருக்கும். அதாவது திருமறை சொல்லியுள்ள இலக்கணப்படி அது தொழுகையே கிடையாது. ஆனால் திருமறையின் வசனகளைச் சிந்திப்பவருக்கு அவரின் மனதில் அது வருணிக்கும் படைப்புக்களின் நினைவு தோன்றாமல் இருப்பது எப்படி? தொழுகையில் திருக்குரானைத்தான் ஓத வேண்டும் என்பது சட்டம். கவ்வாலி படிக்க முடியாது. பஜனை பாட முடியாது. தொழுகை என்பது நாம ஜபமும் அல்ல. தொழுகையில் தன்னையே நினைவுகூர வேண்டும் என்று சொன்ன இறைவன், அந்தத் தொழுகையில் தான் வேதத்தைத்தான் ஓதவேண்டும் என்று சொல்லி நமக்குத் தந்த அந்த வேதத்தில் படைப்புக்களைப் பற்றி வருணித்துள்ளது என் என்று சிந்தித்தால் இந்த மூன்று புள்ளிகளும் இணையும் ஒரு புள்ளியில் இதற்கான விடையைக் கண்டு விடலாம். அதாவது இறைவனை நினைவு கூர்வதர்கான கருவியாகத்தான் சர்வகோடி படைப்புக்களையும் அவன் படைத்துள்ளான் என்பதுதான் அது!

வானங்கள்-பூமி, கால்நடைகள், பறவைகள், மரங்கள், ஹூருல் ஐன்கள் என்று திருமறை வசனங்கள் ஓதப்படும்போது மனக்கண்ணில் அவை தோன்றத்தான் செய்யும்.(ஹூருல் ஐன்களை நேரில் காணாதவருக்கு மனக்கண்ணில் என்ன உருவம் தோன்றும்? என் மாணவன் ஒருவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். பிரபல நடிகை ஒருத்தியின் பெயரைச் சொன்னான். நாசமாப் போச்சு!). அப்படித் தோன்றுகின்ற படைப்புக்களைக் கருவியாக வைத்துத்தான் இறைவனை நினைவுகூர வேண்டும்.



மௌலானா ரூமியின் தந்தையும் இப்னுல் அரபியின் சூஃபி வழியில் குருவாக இருந்தவருமான பஹாவுத்தீன் (ரஹ்) அவர்களின் நூல் ஒன்று உள்ளது. உண்மையில் அது அவர்களின் நாட்குறிப்புக்கள்தான். தினசரி வாழ்வில் நடைபெறுகின்ற சாதாரண நிகழ்ச்சிகளின் குறிப்புக்கள்தான். புதினாச் செடி வளர்ப்பது எப்படி என்பது போன்ற டிப்ஸ்கள்கூட அதில் உள்ளன! அந்த நூலுக்கு அவர் வைத்திருக்கும் தலைப்பு "ம'ஆரிஃப்" (மெய்ஞ்ஞானம்)! என்ன சொல்ல வருகிறார் என்று புரிகிறதா? ஆன்மிகம் - மெய்ஞ்ஞானம் - இறைதியானம் என்பதெல்லாம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளுக்கு அப்பாற்பட்டதல்ல. படைப்புக்களில்தான் படைத்தவனின் தரிசனம்!

பஹாவுத்தீன் தன்னுடைய இந்த நூலைத்தான் மௌலானா ரூமியிடம் தந்தார்கள். ரூமியின் ஆளுமையை உருவாக்கியதில் இந்த நூலுக்கு முக்கியமான பங்கு உண்டு. ரூமியின் குரு ஷம்சுத்தீன் தப்ரேஸ் அவர்கள் ரூமியை முதன்முதலில் சந்தித்தபோது நீர்த்தடாகத்தினுள் போட்டு கொஞ்சமும் நனையாமல் மீண்டும் வெளியே எடுத்துத் தந்தது இந்த நூலைத்தான். இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அமெரிக்கப் பேராசிரியர்களான கோல்மன் பார்க்ஸ் மற்றும் ஜான் மொய்ன் ஆகியோர் இதற்கு "மூழ்கிய புத்தகம்" என்றே தலைப்பைக் கொடுத்துள்ளார்கள். ("THE DROWNED BOOK - ECSTATIC AND EARTHLY REFLECTIONS OF BAHAUDDIN THE FATHER OF RUMI ", Coleman  Barks  & John  Moyne ).



மூழ்கிய புத்தகத்திலிருந்து ஒரு குறிப்பு இது:
"தொழுகையின் நடுவே மீண்டும் நான் சொர்க்கக் கண்ணிகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன் -  பாதி கற்பூரம், பாதி குங்குமப்பூ தேகமும் தூய கஸ்தூரிக் கூந்தலும் கொண்டவர்கள் என்று சொல்லப்படும் அழகிகளை.
அதன்பின் நான் நினைவு கூர்ந்தேன், தலை பாவத்தில் நனைந்திருந்தபோதும் பாதங்கள் சத்தியத்தில் உறுதியாக ஊன்றியிருந்தது என்று சொல்லப்படும் ஒரு மனிதனைப் பற்றி.
பிறகு நான் இறைவனின் பண்புகளை நினைவு கூர்ந்தேன்: கருணை, தயாளம், மகத்துவம், ஞானம், அருள், அழகு. என்னுடைய கொள்ளலவிற்கும் அதற்கு அப்பாலும்கூட, இந்தப் பண்புகளில் சிலவற்றின் சுவையை நான் அறிந்துள்ளேன் என்பதை நினைத்து என் மனதில் நன்றியுணர்வு பெருகியது.
விரிப்புடன் கூடிய ஒரு நீண்ட மேஜையை நான் காண்கிறேன். அதன்மீது சக்திகளும் பண்புகளும் படைப்புக்களும் நம் இன்பங்களைப் பிரதிபலிப்பான போன்று மின்னும் நட்சத்திரங்களும் உள்ளன. நினைவில்லாமல் நான் இருக்கும் நிலையிலும்கூட இறைவன் என் ஆசைகளுக்குள்ளும் ஆன்மாவிற்குள்ளும் தான் பண்புகளின் சுவையைப் புகட்டுகிறான்.
இறைவன் சுவைக்கும் பல வழிகளில் நானும் ஒரு வழி ஆவதை உணர்கிறேன்!"




     

Friday, December 17, 2010

ஜன்னலுக்கு உள்ளே

இறைவனுக்கு உருவம் இல்லை என்பதும் அதனால் உருவ வழிபாட்டிற்கு இஸ்லாத்தில் இடம் இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அப்படியானால் ஒரு முஸ்லிம் எப்படித்தான் வழிபாடு செய்கிறார் என்ற சந்தேகம் பிற சமயத்தவருக்கு இருக்கக் கூடும். அதை என்னிடம் பலரும் கேட்டுள்ளார்கள். உடனே நான் அவர்களிடம் அழைப்புப் பணியில் இறங்கிவிடவில்லை. ஏனெனில் எனக்கு நானே தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டிய பல விஷயங்கள் இருந்தன, இன்னும் இருக்கின்றன. (ஆனால் இறைவனுக்கு உருவம் இல்லை, அவன் அரூபி என்பதில் தர்க்கம் தாண்டிய உறுதி மட்டுமல்ல தர்க்க ரீதியான உறுதியும் எனக்குள்ளது.)

நான் பி.எஸ்ஸி  படித்துக் கொண்டிருந்தபோது ஒருமுறை அம்மாப்பேட்டைக்கு என் நண்பர் கரிகாலனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவரின் அம்மா என்னிடம் தொழுகை பற்றிக் கேட்டார்கள். அந்த உரையாடல் இன்னும் எனக்கு ஞாபகமுள்ளது:
"அல்லா சாமி எப்படி இருக்கும்?"
"அல்லாவுக்கு உருவம் கிடையாதும்மா"
"அப்படீன்னா மசூதிக்குள்ள என்ன இருக்கும்?"
"மக்கா திசைய காட்டுற ஒரு மாடம் இருக்கும். அதுக்குப் பின்னாலதான் அஜரத்து நின்னு தொழ வப்பாரு."
"அதுதான் சாமியா?"
"இல்ல. அது சாமியில்லை. அதுக்குப் பக்கத்துல மூனு படி வச்ச ஒரு மேடை இருக்கும். மிம்பருன்னு சொல்வாங்க."
"அதுதான் அல்லா சாமியா?"
"இல்லை. அது சாமியில்லை"
"அட என்னா ரமீசு, எதுவுமே சாமியில்லைங்கற, அப்புறம் எதைத்தான் கும்பிடுற?" என்று அவர் அலுத்துக்கொண்டார்.



இந்து மதத்தில் உருவம்-அருவம் என்று இரண்டு கோணங்களில் இறைவனைக் காணும் முறை உள்ளது. சற்குண பிரம்மம் என்றும் நிர்குண பிரம்மம் என்றும் கூறுவார்கள். உருவ வழிபாடு பெரும்பான்மையான பொதுமக்களுக்கு உரியது என்றும் அருவ வழிபாடு தேர்ந்த சாதகர்களுக்கு உரியது என்றும் விவேகானந்தரிடம் ராமகிருஷ்ண பரமஹம்சர் விளக்குவார். நண்பர் கரிகாலனிடம் இது போன்ற தத்துவங்களை நான் பேசலாம். அவர் அம்மாவுக்கு என்னால் புரியவைக்க முடியாது. (ஒருவேளை பி.ஜெய்னுலாபிதீனை அனுப்பினால் அவர் புரியவைத்துவிடுவார் என்று நினைக்கிறேன். அல்லாவுக்கு உருவம் உண்டு என்னும் கொள்கையை அவர்தான் பரப்பிக்கொண்டிருக்கிறார்.)

சரி, அல்லாவிற்கு உருவம் இல்லை. பள்ளிவாசலில் இருப்பதெல்லாம் மிஹ்ராப், மிம்பர், ரேக்காளி, அசா, பாய் இவைதான் என்றால் நண்பரின் தாயார் கேட்டதுபோல் எதைத்தான் கும்பிடுகிறேன்? என்று நான் சிந்திக்கலானேன். அதாவது, சிந்தனையில் இறைவன் எப்படித் தோன்ற முடியும்? என்று சிந்தித்தேன். பின்னாளில் நான் எம்.ஏ படித்துக் கொண்டிருந்தபோது குணசேகர் என்ற நண்பன் இதே கேள்வியைக் கேட்டான்.
"அல்லாவை எப்படிச் சிந்தனையில் கொண்டு வருவீர்கள்?"
"அல்லாஹ் நம் சிந்தையில் சிறைபடாதவன். கற்பனைக்கு எட்டாதவன்."
"இதுதான் எனக்குப் புரிய மாட்டேங்குது. எங்களுக்கு சாமிக்குன்னு உருவம் இருக்கு. அதை சிந்தனையில் நினைத்துக் கொள்வோம். அல்லாவுக்கு உருவம் இல்லைன்னா தொழும்போது உங்க சிந்தனைல எதை வைப்பீங்க?"



ஒரு முஸ்லிம் தொழும்போது தன் கவனத்தைக் குரான் ஓதப்படுவதன்மீது (கிராஅத்) வைக்கிறான் என்று சொன்னால் அதுவும் முழுமையான பதில் அல்ல. காரணம், குரான் இறைவனல்ல. அதை ஒரு மனிதர் ஓதி வெளிப்படுத்தும்போது அது ஒலி என்னும் படைப்பு ரூபம் கொள்கிறது. இன்னாருடைய குரல் என்று அடையாளம் பெற்றுவிடுகிறது. அது நாதம் அல்ல. மனித ஓசையைப் போர்த்திக் கொண்ட வடிவம். இன்னொரு காரணம், ஐந்து வேளை தொழுகைகளில் மூன்றில்தான் கிராஅத் செய்யப்படும். இரண்டில் மனதிற்குள்தான் ஓதுவார்கள். அப்போது அவரவர் மனதைத்தான் கவனிக்க வேண்டிவரும். அதாவது மூன்று தொழுகையில் கவனம் வெளிநோக்கிச் செல்கிறது. இரண்டு தொழுகையில் உள்நோக்கிச் செல்கிறது. ஆனால் அவற்றில் அவதானம் ஆவதும் நம் சொந்த எண்ணங்களும் ஒசைகளும்தானே தவிர இறைவன் அல்ல.

"எதையுமே சிந்தனையில் கொண்டுவர மாட்டோம். மனம் வெறுமையாக இருக்கும் பயிற்சி அது." என்று நான் உளறினேன்.
"அப்போ அந்தச் சூனியம்தான் அல்லாவா?" என்று குணசேகர் வச்சானே பாக்கலாம் ஒரு ஆப்பு. எனக்குச் சூனியம் வைத்ததுபோல் ஆகிவிட்டது! அவன் கேட்டது அர்த்தமுள்ள கேள்விதான். மனதில் தோன்றும் எண்ணங்கள் இறைவனல்ல என்றால் எண்ணங்கள் இல்லாத மனதின் வெறுமையும் இறைவன் அல்லவே? பிறகு இறைவனை எப்படித்தான் வணங்குவீர்கள்?



பல வருடத் தேடல்களில் கதவுகள் படிப்படியாகத்தான் திறந்துகொண்டு வருகின்றன.
"நம்மில் கடினமாக முயல்பவர்களுக்கு
நிச்சயமாக நாம்
நம் பாதைகளைத் திறப்போம்"
(29 :69 )
என்று இறைவன் தன் மறையில் சொல்வதைப்போல.

இஸ்லாத்தின் வழிபாடு குறித்த ஐயங்களும் தவறான புரிதல்களும் பல அறிஞர்களிடம்கூட உள்ளது. "திக்கைத் தொழும் துருக்கர்" என்று பாரதியார் பாடினார். முஸ்லிம்கள் பிறையை வணங்குகிறார்கள் என்னும் கருத்தை பாரதிதாசன் ஒரு கவிதையில் பாடினார். கொஞ்சம் யோசித்திருந்தாலே இந்த அபத்தங்களை அவர்கள் தவிர்த்திருக்கலாம். இந்தியாவிலிருந்து மேற்கு திசை நோக்கி ஒருவர் தொழுகிறார் என்றால் அமெரிக்காவில் உள்ள ஒருவர் கிழக்கு நோக்கித் தொழுவார். கிழக்கா மேற்கா வடக்கா தெற்கா என்பதல்ல பிரச்சனை. கஃபா ஆலயத்தை முன்னோக்கவேண்டும் என்பதுதான் கருத்து. அப்படியானால் கஃபாவை வணங்குகிறார் என்று சொல்லலாமா? என்றால் கஃபாவை யாரும் கடவுள் என்று கூறுவதில்லை. அதைக் காட்டி இது என்ன என்று கேட்டால் இறைவனின் வீடு என்றுதான் ஒரு முஸ்லிம் சொல்வாரே தவிர அதையே கடவுள் என்றோ அதைத் தான் வணங்குவதாகவோ கூற மாட்டார். பள்ளிவாசலில்கூட வரிசை வரிசையாக நின்று தொழும்போது ஒவ்வொருவரும் தனக்கு முன்னால் உள்ளவரை வணங்குகிறார்கள் என்று பொருளல்ல. அப்படி யாரும் நினைக்கவில்லை. அப்படிக் குனிந்து எழுந்து தொழும்போது முன்னால் உள்ளவரின் பிருஷ்டத்தில் பின்னால் உள்ளவரின் தலை நங்கென்று மோதுவதும் உண்டு. (சுய அனுபவமும் உள்ளது எனக்கு!). தலை எங்கே போய் மோதுகிறது என்பதை ஒரு பிரச்சனை ஆக்குவதில்லை யாரும். தலைக்குள் இருப்பதுதானே முக்கியம்? 

அதேபோல், பிறையைத் தொழுகிறார்கள் என்று பாரதிதாசன் கருதியது படு அபத்தம். ஏனெனில் ஐவேளை தொழுகை என்பதில் பகல் நேரத் தொழுகையும் உள்ளது. அதுமட்டுமல்ல தினம் தினம் தொழுகிறார்கள். எல்லா நாளுமா பிறை இருக்கும்? இதைக்கூட புரட்சிக் கவிஞர் சிந்திக்கவில்லையா?

இதே லாஜிக்கை ஏன் இந்து மதத்திற்கு அப்பளை செய்யக்கூடாது? என்று யாராவது கேட்டால் "ஓ பேஷா செய்யலாமே" என்றுதான் சொல்லவேண்டும். அப்படி ஒரு கருத்தை ஜெயமோகன் முன்பொருமுறை எழுதினார்.('நான் கடவுள்' திரைப்படம் குறித்த ஒரு நீண்ட பதிலில்.) "இந்து மதத்தில் சிலை வழிபாடு இல்லை என்று நான் சொன்னால் அதை ஒருவர மறுத்துவிட முடியாது" என்று அதில் சொல்லியிருந்தார். இதெல்லாம் தனி மனிதனின் அகநிலை சார்ந்த விஷயம். ஒரு திசையில் உள்ள ஒரு பொருளை நோக்குவதால் ஒருவன் அந்தத் திசையை வணங்குகிறான் என்று கூற முடியாது. இன்னும் ஒரு படி மேலே சிந்தித்தால் ஒரு பொருளின் வழியாக ஒன்றை ஒருவன் அவதானிக்கும்போது அவன் அந்தப் பொருளை அவதானிக்கின்றான் என்று சொல்லமுடியாது.புரிகின்றதா? இல்லை என்றால் ஓர் உதாரணம் சொல்கிறேன்.

எங்கள் வீட்டின் அருகே ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. பதினான்கு வயதுப் பையன் ஒருவன் அந்த ஆட்டோ ஸ்டாண்டைக் கடந்து போகும்போதும் வரும்போதும் டிரைவருக்குத் தெரியாமல் ஆட்டோவில் உள்ள ரப்பர் ஹாரனை (ஏர் ஹார்ன் - காற்றொலிப்பான்) ஒரு அமுக்கு அமுக்கிவிட்டு ஓடிவிடுவான். அதைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்கு கை பரபரக்க ஆரம்பித்துவிடும். அவன் ஏன் அப்படிச் செய்கிறான் என்று பிராய்டிய உளவியல் நிபுணரிடம் கேட்டுப்பாருங்கள் - அந்த ஒலிப்பானில் அவன் வேறு எதையோ காண்கிறான் என்றுதான் சொல்வார். வயசுக் கோளாறு!

இதைத்தான் ஜெயமோகன் சொல்லவந்தார். சிலையை ஒருவன் முன்னோக்குகிறான் என்பதாலேயே அவன் சிலையை வணங்குகிறான் என்று சொல்லமுடியாது. அதன் வழியாக அவன் வேறு ஒன்றை அவதானிக்கின்றான். லைலா- மஜ்னூன் கதையில் ஒரு அழகான ஆழாமான உரையாடல் வருகின்றது. லைலாவின் மீது பைத்தியமாகி "கைஸ்" என்ற மஜ்னூன் அவளுடைய வீதியே கதி என்று கிடக்கிறான். அவனது வெறித்த பார்வை லைலாவின் மீதே நிலைத்துள்ளது. அப்போது லைலாவுக்கும் அவளின் தோழிக்கும் நடக்கும் உரையாடல் அது.
"லைலா, நீதான் உலகிலேயே அழகான பெண் என்பதற்கு மஜ்னூன் சான்றாக இருக்கிறான். உன் அழகில் அவன் மூழ்கிக் கரைந்துவிட்டான்" என்கிறாள் தோழி. அதற்கு லைலா சொல்கிறாள், "அவன் என் அழகில்  மயங்கிவிட்டான் என்றுதான் முன்பு  நானும் நினைத்திருந்தேன். அப்படித்தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அவன் என்னைப் பார்க்கவில்லை. நான் வெறும் ஜன்னல்தான். அவன் என் வழியாக வேறு ஒன்றைப் பார்க்கிறான்!"

"உள்ளம் உறங்கிக்கொண்டு 
பள்ளிவாசலில் நிற்பவனைவிட 
விழிப்படைந்த இதயத்துடன்
கோவிலில் நிற்பவன் மேலானவன்"
என்று பாடியது வேறு யாருமல்ல, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற முஸ்லிம் கவிஞர் என்று போற்றப்படும் மகாகவி இக்பால்தான்!



எடுத்துக் கொண்ட விஷயத்துக்கு வருவோம். சித்தன் போக்கு சிவம் போக்கு என்று ரோலர் கோஸ்டர் மாதிரி போய்க்கொண்டிருந்தால் எப்படி?
தொழுகையில் தான் சிந்தனையில் என்னென்ன வருகிறது என்று கவனித்துப் பார்த்தால் அது பலருக்கும் சிக்கலாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். திருமணமான ஒருவனுக்குத் தான் மனைவியின் முகத்தை நினைப்பதுதான் மிகவும் கடினமான காரியம் என்று ஒரு உளவியல் கருத்தை ஓஷோ கூறியுள்ளார். அதுபோல் தொழுகையில் அல்லாஹ்வை  நினைப்பதுதான் ஒரு முஸ்லிமுக்கு மிகவும் கடினமான காரியம் என்று உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நண்பர் கூட்டம் சொல்கிறது. உலக அழகிகள் முதல் உள்ளூர் அழகிகள் வரை ஓர்  உளவியல் கஜுராஹோவில் தொழுகிறோம் என்ற குற்ற உணர்வில் நெளிபவர்கள் எத்தனைப் பேர்? அத்துடன் ஆடு மாட்டு கழுதை அவன் இவன் அவர் இவர் என்று எத்தனைச் சிலைகள்? ஆயிரம் ஆயிரம் கள்ள தெய்வங்கள்!  அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. மனத்தின் இயல்பு அது. அடிப்படைக் கருவிகளை மார்க்கம் தந்துவிடுகிறது. ஆனால் அவர்கள் இன்னும் ப்ரோக்ராம் எழுதும் கலையைக் கற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் கருவிகளைக் கையிலெடுத்துக் கொண்டு கண்டதையும் நோண்டுகிறார்கள். எழுதத் தெரியாதவன் கையில் தங்கப் பேனாவே கிடைத்தாலும் அதை வைத்து காதுதானே குடைவான்? 

திருக்குர்ஆன் ஓதப்படும்போது அரபி மொழி தெரியாதவன் அதன் ஓசை நயத்தில் - கிராஅத் அழகில் மனதை லயிக்க விடுவான். அரபி மொழி அறிந்தவனாக இருந்தால் அவனுக்கு அந்த வசனங்களின் அர்த்தங்கள் மீது கவனம் போகும். அப்போது அது அவன் மனத்தில் கற்பனைக் காட்சியாக விரியத்தான் செய்யும். "அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்தான் என்பதை அவர்கள் பார்க்கமாட்டார்களா?"(46 :33 ) என்ற வசனக் கருத்தைக் கேட்கும்போது அவன் கற்பனையில் வானமும் பூமியும் வரும். ஆனால் அல்லாஹ் வரமாட்டான். படைப்புக்கள்தான் வருகிறது, படைத்தவனைக் காணவில்லை! 
"ஒட்டகத்தை நாம் எப்படிப் படைத்திருக்கிறோம் என்று அவர்கள் உற்று நோக்க வேண்டாமா?" (88 :17 ) என்னும் வசனத்தைக் கேட்டால் கற்பனையில் ஒட்டகம் வரும். மனதிற்குள் எவ்வளவு உற்று நோக்கினாலும் அல்லாஹ் வரமாட்டான்!
"வானங்கள் மற்றும் பூமியில்
உள்ளவை எல்லாம்
அல்லாஹ்வுக்கே பணிந்து
தலை சாய்க்கின்றன"
(13 :15 ) என்னும் வசனக்கருத்தைக் கேட்டதும் அவர் மனக்காட்சியில் மரங்கள் விலங்குகள் எல்லாம் வளைந்து சாய்ந்து தரையைத் தொடுவது போன்று தோன்றலாம். எதார்த்தத்தில் இப்படி இல்லாததால் அவர் மனம் இப்போது கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்திற்கு வளர்ந்து விட்டது என்றே கூறவேண்டும்! இதிலும் அல்லாஹ் வரமாட்டான். (ஒருவேளை பி.ஜெ.&கோ.வுக்கு வரக்கூடும். இறைவனுக்கு உருவம் உண்டு, கை கால் முகம் என்று திருக்குரானிலும் ஹதீஸிலும் சொல்லப்பட்டதெல்லாம் உருவத்தைதான் குறிக்கும் என்று அவர்கள்தான் நம்புகிறார்கள். எனவே அவர்களின் மனம் அதைச் சார்ந்து கிராஃபிக்ஸ் போடக் கூடும்.)

சொர்க்கக் கண்ணிகளைப் பற்றி வருணனைகள் வரும்போது தொழுபவரின் மனதில் என்ன காட்சி விரியும் என்று யோசிக்க வேண்டியுள்ளது. "ஹூருல் ஐன்" என்னும் சொர்க்கக் கன்னியரை நேரில் பார்த்தவர் யாருண்டு? சில இறைநேசர்களின் கனவில் அவர்கள் தோன்றுவார்கள் என்று பதிவுகள் உண்டு. பார்க்காதவர்கள் என்ன செய்வார்கள்? "ஹூருல் ஐன்" என்றால் 'கண்ணழகி' என்று பொருளாமே? அப்படியானால் அந்த இலக்கணத்திற்குப் பொருந்தி வருவதாக அவரவர் மனம் கருதும் பெண்ணைக் கற்பனையில் காண்பார்கள் என்று நினைக்கிறேன். ஹூரிகள் பெண்கள்தான் என்பதாவது உறுதியாகத் தெரிவதால் சிக்கல் இல்லாமல் ஆயிற்று. அவர்களை ஏதோ ஆண்டனாக்கள் அளையும் ஏலியனிய உருவங்களாகக் கற்பனை செய்து பீதியடைய வேண்டியதில்லை. அப்படியானால் தொழுகை ஃபசாதாகி விடுமே?

இப்போது மட்டும் என்ன வாழுகிறது என்கிறீர்களா? வாஸ்தவம்தான். அதனால்தான், வாலிபர்கள் பங்குபெறும் ஜமாஅத் தொழுகையில் ஹூருல் ஐன்கள் பற்றிய வசனங்களை ஓதலாகாது என்று இமாம் கஸ்ஸாலி எழுதியுள்ளார்கள். (வயதானால் ஒரு பக்குவம் வந்துவிடும் என்னும் நல்ல நம்பிக்கையில் இப்படிக் கூறியுள்ளார்கள். எனவே விதிவிலக்குகள் இருந்தால் அதைப் பற்றி நாம்தான் தனியாக இனிமேல் யோசிக்க வேண்டும்.)  சொர்க்கக் கன்னிகள் பற்றிய வசனங்கள் வாலிபர்களுக்குக் கிளர்ச்சியை உண்டாக்கிவிடும் அல்லவா? பிறகு அவர்கள் தொழுகைக்குள் குண்டலினி யோகம்தான் செய்யவேண்டும்! (அதிலும் குறிப்பாக, ஜட்டி அணிந்துகொண்டு தொழலாமா? என்பது போன்ற அறிவார்ந்த மார்க்க ஆய்வுகளில் ஈடுபட்டு மார்க்கத்தை அதன் தூய வடிவில் வெளிப்படுத்தத் துடிக்கும் வாலிபர்கள் உள்ள இந்தக் காலத்தில் இது மிகவும் சென்ஸிடிவான விஷயம் அல்லவா?)

இஸ்லாமிய அறிஞர்களால் இந்தச் சிக்கல் அவ்வப்போது விவாதிக்கப் பட்டுள்ளது. "Sex with slaves and women's rights" என்னும் கட்டுரையில், நான்காம் கேள்வியின் விடையில் ஜி.எஃப்.ஹத்தாத் இப்படி எழுதுகிறார்:
"....சிருங்காரக் கவிதைகளைக் கேட்டும் அசையாத ஒருவனைப் பார்த்து இமாம் ஷாஃபி அவர்கள் "நீ உணர்ச்சியற்றவன்" என்று சொன்னதுபோல். இறைநம்பிக்கையுள்ள ஆண்களின் விஷயத்தில், ஓர் அவ்லியா சொல்லியிருப்பது போல், அதாவது 'முற்றிய முலை கொண்ட சம வயது கன்னியர்' (78 :33 ) என்னும் திருவசனத்தைக் கேட்டதற்கே அவர்களில் சிலருக்குக் குளிப்பு ('குஸ்ல்' - இந்திரியம் வெளிப்பட்டால் குளிக்க வேண்டியது.) கடமையாகிவிடுகிறது. ஆனால் நம்மைப் போன்ற தற்குறிகள் அந்த வசனத்தை மீண்டும் மீண்டும் வாசித்தாலும் எந்த விளைவும் ஏற்படுவதில்லை!"  

இந்த விவாதம் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அதீதமான கற்பனைத் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் போலும். அந்த அளவு கற்பனைத் திறன் என்பது இறைவனின் அருட்கொடையாகத்தான் இருக்க வேண்டும்! இவ்வளவு பேசினோமே, தொழுகையில் அல்லாஹ்வை தியானிப்பது எப்படி என்பதைக் கடைசி வரை சொல்லவே இல்லை பார்த்தீர்களா?

நீராகி


'உருப்படவே மாட்டாய்' என்னும்
ஒருவாசகத்துக்கு உருகி உருகி
அருவம்போல் தத்தளிக்கும்
திரவம்போல் ஆனேன் நான்.

தண்ணீராய்
கண்ணீராய்
செந்நீராய்
பன்னீராய்
அவ்வப்போது என் 
அவதாரங்கள்.

தாகம் தீர்க்கவும்
சோகம் சேர்க்கவும்
புரட்சி ஆக்கவும்
வசந்தம் பூக்கவும்

அர்த்தமுள்ளதாய் 
ஆயிற்று என் வாழ்வு
ஒருபோதும் உருப்படாமல்.

  

Wednesday, December 15, 2010

கிரேக்க மிக்சர்

அடையார் ஆனந்த பவனில் (சாஸ்திரி சாலை, திருச்சியில் உள்ள கிளை) சீனி போலி வாங்கிக்கொண்டு வெளியே வந்து தலைக்கவசத்தை (ஹெல்மெட்) மாட்டி ஸ்கூட்டரில் ஆரோகணித்தேன். "தம்பி" என்று பின்னாலிருந்து குரல் ஒன்று அழைத்தது. திரும்பிப் பார்த்தபோது ஐம்பது வயது என்று தோன்றிய ஒருவர் தன் மனைவியுடன் நின்றுகொண்டிருந்தார். முகத்தில் வெளுத்த தாடி. கோலிக்குண்டுகள் போல் உருண்ட கண்களால் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். 'என்ன' என்று என் கண்கள் கேட்பதை உணர்ந்தவராக "இந்தப் பக்கமா போறேள்?" என்று தன் கையை மகாத்மா காந்தி ஸ்கூலின் திசையில் காட்டினார். "ஆமாம்" என்றேன். "பாலத்துக்குக் கீழ என்னைக் கொஞ்சம் எறக்கி விடுறேளா? எனக்கு உடம்பு சரியில்ல" என்றார். "நீங்க ரெண்டு பேர் இருக்கேளே? ஒருத்தர்தானே வர முடியும்?" என்றேன். ஜரிகை வைத்த, கிருஷ்ண துளசி நிறப் புடவை அணிந்திருந்த அவர் மனைவி சிரித்தபடி "நான் நடந்து வந்துடறேன். நீங்க இவர ஏத்திண்டு போங்கோ போதும்" என்றார். சரி என்று நான் தலையாட்டினேன். சாந்து நிற ஜரிகை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பின்னால் ஏறி அமர்ந்தார். வண்டியைக் கிளப்பினேன். பேசிக்கொண்டே வந்தார்.
"பேரென்ன?"
"ரமீஸ்"
"ரமேஷா?... என்ன நட்சத்திரம்?"
"நட்சத்திரமெல்லாம் தெரியாது. துலாம் ராசி"
"ஓஹோ! சாஃப்ட் பெர்சன்" என்று சிரித்தார்.உதவி செய்வதால் அப்படிச் சொன்னார் என்று நினைக்கிறேன். ராசி பற்றியெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. நண்பர் சற்குணம் முன்பு ஒரு முறை சொன்னார், "துலாம் ராசிக்கு இந்த ஜென்மத்திலேயே ஞானம் உறுதி. நீ கொடுத்து வச்சவன். நான் பாரு கன்னி ராசி. ஜான் ஏறுனா முழம் சறுக்கும். ராஜராஜனுக்கும் கன்னி ராசிதான். அதீதமான பெண் சகவாசம். சுர ரோகம் வந்து செத்தான்!" பதினைந்து வருடங்களுக்கு முன் இந்த உரையாடல் நடந்தபோது அவர் சொன்னதை வியப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். தகவல்கள் உண்மையா என்று தெரியாது.
"என்ன செய்யறேள்? என்றார் பெரியவர்.
"லெக்சரர்"
"எந்த காலேஜ்?"
"ஜமால் முஹம்மது"
பாலத்திற்குக் கீழே ஓரமாக நிறுத்தினேன். இறங்கிக்கொண்டார். ஹெல்மெட் வழியே பார்வையால் ஊடுருவிப் பார்த்தார். "நீங்க ஹிந்துவா?முஸ்லிமா?" என்று கேட்டார். "முஸ்லிம்" என்றேன். ஏன் அப்படிக் கேட்டார் என்று புரிந்தது. "நான் திருவையாத்தில் வளந்தவன்" என்றேன். "அப்போ நீங்க பாதி பிராமணன்" என்று சொல்லிச் சிரித்தார்.

வண்டியைக் கிளப்பிக்கொண்டு வீடு வந்து சேர்ந்த பின்னும் ஐந்து நிமிடங்கள் தாண்டாத அந்த உரையாடல் மனித இனம் எப்படிப் பின்னிக் கிடக்கிறது என்ற அவதானத்தைக் கிளறிக்கொண்டிருந்தது. தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழி நெடுக உள்ள ஊர்களில் முஸ்லிம்கள் ஜாஸ்தி. அய்யம்பேட்டை  வழுத்தூர் பாண்டாரவாடை ராஜகிரி போன்ற ஊர்களில் உள்ள தெரு அமைப்பும் உயர்ந்த திண்ணையும் ஒட்டுக் கூரையும் கொண்ட பழைய வீடுகளைப் பார்த்தால் அக்ரஹார அமைப்பு தென்படும். உள்ளே ரேழி இருக்கக்கூடும். அந்தப் பகுதியின் பழைய பத்திரங்களை அவற்றின் மொழி நடைக்காக ஆராய்ச்சி செய்த ஒருவர் சொன்னார், 'சீனிவாச ஐயங்காரின் மகனான அபூபக்கருக்கு பாத்தியதையான...' என்பது போன்ற பல குறிப்புக்களை அவற்றில் கண்டு வியந்தாராம். குறிப்பிட்ட ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் பிராமணர்கள் பலர் முஸ்லிம்களாக மாறியிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார். ராஜகிரியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரிடம் இதை நான் ஒரு முறை சொன்னேன். அவருடைய சிவந்த 'காம்ப்லக்ஷனும்' கூர்ப்பான மூக்கும் மேற்சொன்ன கருத்தை உறுதிப்படுத்துவதாக உணர்ந்தேன். தன் முன்னோர்கள் பிராமணர்கள் என்ற கருத்தை அவர் மனம் எப்படி உணர்ந்தது என்பதை அவரது முக பாவனையிலிருந்து என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை!

தமிழ்நாட்டு முஸ்லிம்கள் எல்லாம் அப்படி மாறியவர்கள்தானே? பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உறவுமுறை கொண்ட ஒரு குடும்பம் இஸ்லாத்தைத் தழுவியது என்றும் அதில் வந்த வாரிசுதான் வள்ளல் ஜமால் முஹம்மது என்றும் சொல்கிறார்கள். ஜமால் முஹம்மது ராவுத்தரின் முகம் அதை உறுதிப்படுத்துவதாக உணர்கிறேன். எங்கள் கல்லூரியின் விழா ஒன்றில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.எம்.ஹாரூன் மேடையிலேயே இதைக் குறிப்பிட்டார், "எங்கள் முன்னோர்கள் தேவர் இனத்தைச் சேர்ந்தவர்கள்" என்று. அவர் ஜமால் முஹம்மது குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். இதேபோல் என் பெரியத்தா "நான் புதுக்கோட்டைக் கள்ளன்டா" என்று சொல்வார்களாம். அவரே என்னிடம் கூறிய செய்தி.



இந்தச் சிந்தனைகளை அப்படியே வெட்டிவிட்டு புதிதாக வாங்கி வந்த புத்தகத்தைக் கையில் எடுத்தேன். ஹோல்கர் கெர்ஸ்டன் (HOLGER KERSTEN ) என்பவர் எழுதிய "JESUS LIVED IN INDIA - HIS UNKNOWN LIFE BEFORE AND AFTER THE CRUCIFIXION" என்னும் அந்த நூல் 1981 -ல் ஜெர்மனியில் முதன் முதலாக வெளியிடப்பட்டது. ஏசு தன் பால்ய வயது முதல் முப்பது வயது வரை இந்தியாவில், காஷ்மீரில் வாழ்ந்தார் என்றும், முப்பத்துமூன்று வயதில் 'சிலுவையில் அறையப்பட்ட' பின் அவர் சாகவில்லை, மாறாக, தப்பித்து மீண்டும் காஷ்மீருக்கு வந்து முதிய வயது வரை அங்கேயே வாழ்ந்தார் என்றும் ஹோல்கர் ஆதாரங்களை விளக்கியுள்ளார். அதுமட்டுமல்ல, ஏசுநாதரின் சமாதியும், மோசசின் சமாதியும் காஷ்மீரில்தான் உள்ளது என்றும் இஸ்ரவேலர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலம் என்பது காஷ்மீர்தான் என்றும் அதில் கூறியுள்ளார். ஆப்கானியர்கள் உண்மையிலேயே யூதர்கள்தான் என்பது போன்ற பல கருத்துக்கள் இந்நூலில் விளக்கப்படுகின்றன. 



1887 -ல் திபெத்தின் லெஹ் நகரில் உள்ள ஹெமிஸ் புத்த மடாலயத்திற்குச் சென்ற ருஷ்ய ஆய்வாளர் நிக்கொலாய் நோடோவிச் ஏசுநாதரைப் பற்றிப் பின்வரும் 'செய்தி'களைத் தருகிறார். ஏசு தன் பதினான்காம் வதில் காஷ்மீருக்கு வந்து சேர்ந்தார். இமயமலைப் பகுதிகளில் சுற்றித் திரிந்த அவர் ஜகன்னாத் நகரில் பிராமணர்களிடம் வேதங்களைப் பயின்றார். (பிராமணரல்லாத அவருக்கு வேதங்களை எப்படிச் சொல்லிக்கொடுத்தார்கள்?) அந்த ஞானத்தை அவர் சூத்திரர்களுக்குக் கற்பித்தார். அதனால் பிராமணர்களின் வெறுப்பிற்கு ஆளானார். அதனால் அங்கிருந்து வெளியேறி மீண்டும் இமயமலைச் சாரல்களில் சுற்றித் திரிந்து திபெத்தில் உள்ள லெஹ் நகருக்குச் சென்றார். அங்கு புத்தரின் கொள்கைகளைக் கற்றுக்கொண்டார். பிராமணர்களுடன் வாதம் செய்தபொது சூரிய வழிபாட்டை ஏசு எதிர்த்துப் பேசுகிறார். "இஷ்ட மற்றும் துஷ்ட தேவதைகளைப் போன்றே சூரியனையும் வழிபட வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். உங்கள் கொள்கை மிகவும் தவறானது என்று நான் கூறுகிறேன். ஏனெனில் சூரியனுக்குச் சுயமாக எந்த சக்தியும் இல்லை. மறைந்திருக்கும் இறைவனின் நாட்டத்தின்படியே அது உண்டானது, பகலுக்கொரு விண்மீனாக ஆக்கப்பட்டது, மனிதனின் உழைப்பையும் காலத்தையும் வெதுவெதுப்பாக்குகிறது." என்று அவர் பேசுகிறார். ( பிறகு எப்படி 'கடவுள் இல்லை' என்று புத்தர் போதித்த நாத்திகக் கருத்தை அவர் ஏற்றுக் கொண்டார் என்று சொல்லமுடியும்? அல்லது புத்தரையே கடவுளாக வழிபடுவதை அவர் எப்படி ஏற்றுக் கொண்டிருக்க முடியும்?) 
1925 -ல் திபெத்தின் புத்த மடாலயங்களில் ஆய்வுகள் செய்த ருஷ்ய தொல்பொருள் ஆய்வாளர் நிக்கோலாஸ் ரோறிச் ஏசு தன் இருபத்தொன்பதாம் வயதில் மீண்டும் பாலஸ்தீனுக்குத் திரும்பினார் என்று கூறுகிறார்.



திபெத்தில் ஏசுநாதர் 'இஸ்ஸா' என்றும் 'ஈஸா' என்றும் அழைக்கப் படுகிறார். அரபிமொழியில் - திருக்குரானில் ஏசுநாதரின் பெயர் 'ஈஸா' என்பதுதான்! (ஜப்பானில் தோன்றிய ஹைக்கூ கவிதையின் பிதாமகர்கள் மூவருள் ஒருவர் பெயர் கோபயாஷி இஸ்ஸா என்பதும் ஞாபகம் வருகிறது.)  ஹோல்கர் கெர்ஸ்டன் தன் தேடல்களில் நோடோவிச்சின் டைரியைத் தேடி அலைந்தபோது பேராசிரியர் ஃபிதா ஹஸ்னைன் என்பவரைச் சந்திக்கிறார். ஜம்மு காஷ்மீர் அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை மற்றும் அருங்காட்சியகங்களின் ஆவணக் காப்பகத்தின் தலைவராக இருந்தவர் அவர். ஏசுநாதர் காஷ்மீரில் இருந்தார் என்னும் கருத்தை விளக்கி ஏறத்தாழ முப்பது நூல்கள் எழுதியுள்ளார். அவர் முன்வைக்கும் ஆதாரங்களில் ஒன்று இந்து மதத்தின் பதினெண் புராணங்களில் ஒன்றான பவிஷ்ய மகாபுராணம் ஆகும். (மகாராஜா ரானா பிரதாப் சிங்கிடம் இருந்த பிரதி. தற்போது புனேயில் உள்ள பந்தர்கர் ஆய்வு நிலையத்தில் உள்ளது.) அதில் ஏசு காஷ்மீரின் மன்னரைச் சந்திக்கிறார். தன் பெயரை 'ஈஸா மஸீஹ்' என்று கூறுகிறார். அரபியில் மஸீஹ் என்றால் தூதர் என்று பொருள். (ஆங்கிலத்தில் இச்சொல் MESSENGER என்று ஆகிறது.) இது 'மஸஹ்' என்னும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது. மஸஹ் என்றால் தடவுதல் என்று அர்த்தம்! இறைத்தூதர்கள் பலர் இருந்தாலும் ஏசுவைத்தான் 'மஸீஹ்' என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. ஏனெனில் தன் கையால் தடவி நோய்களை சொஸ்தம் செய்து அற்புதங்கள் நிகழ்த்தியவர் அவர்தான்.(மஸஹ் செய்தவர் மஸீஹ் எனப்பட்டார். ஆங்கிலத்தில் அது messenger ஆகி அவர் வழங்கிய செய்தி message ஆனது. எனவே தடவுதல் மசாஜ் எனப்பட்டது!) இயக்குனர் சசிக்குமார் தற்போது எடுத்து வரும் திரைப்படத்திற்கு முதலில் "ஈஸா" என்றுதான் பெயர் வைத்திருந்தார். ஈஸா என்பது அரபியில் ஏசுவைக் குறிக்கிறது என்றால் சமஸ்கிருதத்தில் சிவனைக் குறிக்கும். அல்லது உபநிஷதத்தில் இறைவனின் பெயர். ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் யத்கிஞ்ஜ ஜகத்யாம் ஜகத்! தினத்தந்தியில் அந்தப் படத்தின் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு என் சகோதரன் ஒருவன் மிகவும் கோபப்பட்டான். "ஈஸா(அலை) நபியின் பெயரை எப்படி ஒரு சினிமாப் படத்துக்கு வைக்கலாம்?" என்று கத்தினான். இந்த ஈஸா சம்ஸ்கிருத ஈஸா என்று நான் விளக்கினேன். படத்தின் பெயர் இப்போது 'ஈசன்' என்று மாற்றப்பட்டுள்ளது. ஜமாத்துகளின் எதிர்ப்பு காரணமாக இருக்கக்கூடும்.



லெவி டௌலிங், நோடோவிச், ரோறிச், கெர்ஸ்டன் வகையறாக்கள் கிளப்பிவிட்ட இந்த காஷ்மீர் பிரச்சனை - அதாவது ஏசு காஷ்மீர் புத்திரன் - என்ற கருத்து இப்போது ஹாலிவுட்டில் "THE AQUARIAN GOSPEL " என்னும் பெயரில் படமாக்கப் படுகிறது! 'டா வின்சி கோட்' கதையில் இருந்த சர்ச்சையைவிட இந்தப் படத்தின் கதையில் இன்னும் அதிகமான சர்ச்சைகள் இருக்குமாம். ஏசுநாதர் சந்தித்த இந்திய ஆளுமைகளில் ஆன்மிகவாதிகள் மட்டுமல்லாது மேனகா என்னும் ஓர் இளவரசியும் அடக்கமாம். சர்ச்சைக்கு இது போதாதா? (மேனகா என்னும் பெயர்தான் மோனிகா என்று ஆகிறதோ?)

ஹோல்கர் கெர்ஸ்டனின் புத்தகத்தில் முன்வைக்கப்படும் முக்கியமான புள்ளிகள் என்று இவற்றைக் கூறலாம்:
1 . யூதர்களின் பூர்விகம் காஷ்மீர். இஸ்ரவேலர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலம் அதுதான்.
2 . ஆபிரஹாம் காஷ்மீரில் இருந்துதான் பலஸ்தீனுக்கு வந்தார்.
3 . இறைத்தூதர் மோசசின் சமாதி காஷ்மீரில் இருக்கிறது.
4 . இயேசு புத்தரின் அவதாரமாகப் பிறந்தார். அவரைத் தேடிக்கொண்டு கிழக்கிலிருந்து பரிசுகளுடன் வந்த மூன்று ஞானியர் புத்த லாமாக்களாவர்.
5 . ஏசுநாதர் தன் பன்னிரண்டாம் அகவையில் காஷ்மீருக்கு வந்தார். புத்தநெறியில் பயிற்சி பெற்றார். அந்த நெறியை போதிக்கத் தன் இருபத்தொன்பதாம் வயதில் மீண்டும் பாலஸ்தீனுக்குச் சென்றார்.
6 . சிலுவையில் அறையப்பட்ட ஏசு சாகவில்லை. உயிருடன் தப்பி மீண்டும் காஷ்மீருக்கு வந்து முதிய வயது வரை வாழ்ந்து மரித்தார். அவரின் சமாதி காஷ்மீரில் உள்ளது.

இந்தப் புள்ளிகள் கிறித்துவம் மற்றும் இஸ்லாம் ஆகிய இரண்டு சமயங்களின் கொள்கைகளுக்கும் எதிராகவே உள்ளது. (ஏசு சிலுவையில் அறியப்படவில்லை என்று இஸ்லாம் சொன்னபோதும் அவர் விண்ணுக்கு உயர்த்தப்பட்டார் என்றும் மீண்டும் வருவார் என்றுமே அது சொல்கிறது.) என்றாலும் இந்த நூலை நான் மிகவும் உன்னிப்பாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். 
"முதலைகள் இல்லாத நதியில் 
நான் என் படகைச் செலுத்துவதில்லை"
என்று மகாகவி இக்பால் பாடுவார். இந்த நூலில் முதலைகள் அதிகமாகவே இருக்கின்றன, அதீதப் பசியுடன்!

காஷ்மீருக்கும் யூதர்களுக்கும் உள்ள தொடர்புகள் ஒருபக்கம் குடைகிறது என்றால் கிரேக்கர்களுக்கும் காஷ்மீருக்கும் உள்ள தொடர்பு இன்னொரு பக்கம். அப்கானிஸ்தான் மற்றும் சிந்து சமவெளிப் பகுதிகளில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் குடையோ குடை என்று குடைந்ததில் கிடைத்த சாமான்களில் ஃபிலிப் , அலக்சாந்தர், இரண்டாம் அலக்சாந்தர், டையோடோடஸ், மேக்சாந்தர் போன்ற பன்னிரு கிரேக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்துக் காசுகள் கிடைத்துள்ளன. இது வணிகத் தொடர்பை உறுதி செய்கிறது. காஷ்மீரின் பழைய வரலாற்றைக் கூறும் 'ராஜதரங்கிணி' (12 -ம் நூற்றாண்டில் கல்ஹானா எழுதியது.) என்னும் நூலில் கிரேக்கர்கள் 'யொவனா' என்றும் 'மிலேச்சா' என்றும் அழைக்கப்படுகிறார்கள். ( சங்கத் தமிழில் கிரேக்கர்களை 'யவனர்கள்' என்று அழைத்தார்கள்.)



கிரேக்க மன்னர்களில் இந்தியா வரை வந்தவன் அலெக்சாண்டர்தான். பீஸ் நதிக்கரையில் போரஸ் மன்னனைப் போரில் வென்றபின் தன் நாட்டிற்குத் திரும்ப அலெக்சாண்டர் முடிவு செய்தான். அவனுடன் வந்த வீரர்களில் சிலர் இந்தியாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்கள். அவர்கள் இந்தியப் பெண்களை மணந்துகொண்டார்கள். அவர்களின் வாரிசுகள் இன்றும் இந்தியாவில் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள "மலானா" என்ற பகுதியில் இருக்கிறார்கள். 'துரோக்பாஸ்' (DROGPAS ) என்று அலைக்கப்பர்டுகிரார்கள். தனிப்பட்ட ஒரு மொழியைப் பேசுகிறார்கள். வெளியே திருமணத் தொடர்புகள் வைத்துக்கொள்வதில்லை. (இவர்களைப் போலவே ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள 'நூரிஸ்தானி'கள் அலெக்சாண்டரின் வாரிசுகள் என்று கருதப்படுகிறார்கள்.பாகிஸ்தானில் உள்ள 'கலாஷ்' இனத்தவர்களும் அப்படியே கருதப்படுகிறார்கள்.)



துரோக்பாஸ் இனத்தவர்களின் 'சாமுத்திரிகா' லட்சணங்கள் கிரேக்கர்களின் அடையாளங்களைக் காட்டுகின்றன. பொன்னிறக் கேசமும் நீலக்கண்களும் கொண்ட குழந்தைகள் பெண்கள் ஆண்கள்! அலெக்சாண்டரின் படையைச் சேர்ந்த ஒரு குழு மட்டும் ஏன் இந்தியாவிலேயே தங்கி விட்டது என்பதற்கு என்ன பதில் இருக்க முடியும்? களைத்துப் போனதால் இங்கேயே தங்கிவிட்டார்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அது அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை. திட்டமிட்டு செய்த ஒன்று என்றுதான் நான் நினைக்கிறேன். எந்தெந்த நாடுகளை ஒரு மன்னன் படையெடுத்துக் கைப்பற்றுகின்றானோ அங்குள்ள பெண்களிடம் தங்கள் வாரிசுகளை உருவாக்குவதன் மூலம் தன் இனத்தை உலகெங்கும் பரவச் செய்யும் திட்டம்தான் அது. அதனால்தான் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் கிரேக்க இனத்த்தின் விதைகளை அலெக்சாண்டர் விதைத்துச் சென்றுள்ளான். ( ஒருவேளை மனித வள மேம்பாடு என்பது இதுதானோ? )

கிரேக்கர்களும் அரேபியர்களும் தமிழகம் வந்த செய்திகளைச் சங்க இலக்கியம் கூறுகிறது. தமிழ் நாட்டுப் பெண்களை மணந்துகொண்டு அவர்களில் பலர் இங்கே(யும்) இல்லறம் பேணியிருக்கலாம்! கிரேக்கர்கள் "யவனர்கள்" எனப்பட்டார்கள். அரேபியர்கள் "சோனகர்" எனப்பட்டார்கள். காயல்பட்டினத்து முஸ்லிம்கள் எகிப்தியர்கள் என்று அரபிப் பேராசிரியர் ஒருவர் கூறினார். எப்பூடி? என்று நான் யோசிக்கும் வேளையில் எடிமாலாஜி காரணமும் சொன்னார். "கைரோ- பட்டினம்" என்பதுதான் காயல்பட்டினம் ஆனதாம். நல்ல ஆய்வு. 

திராவிடம் ஆரியம் கிரேக்கம் எபிரேயம் அரேபியம் மங்கோலியம் என்று இனக்கலப்புகள் நேர்ந்து மனித இனத்தின் ஜீன்கள் ஜீன்ஸ் பான்ட்டுகளைப் போலவே ஒரு சர்வதேசத் தன்மை அடைந்துவிட்டன என்று சொல்லலாம். உலகின் முதல் பெண் -ஏவாள்- எதியோப்பிய இனத்தின் கறுப்புப் பெண் என்று ஓர் மரபணுவியல் ஆய்வு கூறுகிறது. உலகில் நிகழ்ந்த இனக்கலப்புக்களைக் காணும்போது வெள்ளையும் மஞ்சளும் அரக்கும் கலந்த கதைகளைக் காண முடிகிறது. கறுப்பு கலக்கப்படவில்லையே? என்ற கேள்வி எழுகிறது. உடல் வன்மை மிக்க கறுப்பின அடிமைகளைக் காயடித்துதான் சந்தைகளில் விற்றார்களாம். (1001  அரபுக் கதைகளில் இந்தச் செய்தி சார்ந்த கதைகள் உள்ளன!) மனித இன வரலாற்றில் கறுப்பு என்பது இருட்டாகவே இருப்பது ஏன்? என்றும் உள்மனம் கேட்கிறது.





  
     
   

Tuesday, December 7, 2010

5 :5 :25 :30



காலத்தைப் பரிகசிக்கிறது
கடிகாரம்.

அதன் கைகளில் சிக்காமல்
எங்கோ சிறகடிக்கிறது
காலம்.

என் வீட்டில்
என் அலுவலகத்தில்
இரண்டு கடிகாரங்கள்
இருவேறு நேரங்கள்.

எது வேகம்?
எது தாமதம்?

இரண்டுமே சரியாய்
இருக்கக் கூடும்.

ஏனெனில்
எல்லாக் கடிகாரங்களும் இருக்கின்றன
காலத்திற்குள்.

கண்ணீர் தருணம்



சொர்க்கத்துக் கன்னியே!
உன் வாய் ஊறலின்
துளியொன்று சிந்தி
கடல்கள் இனித்துப்போகாமல்
பார்த்துக்கொள்.

மோட்சத் தருணம்
இதுவல்ல.

சொர்க்கத்துக் கன்னியே!
காதலின் சுடர்கள் தவழும்
உன் கற்பூர தேகத்தின்
ஒளி நிழல்
பூமியின் மீது சாயாமல்
பார்த்துக்கொள்.

மோட்சத் தருணம்
அல்ல இது.

சொர்க்கத்துக் கன்னியே!
உன் அவிழும் கூந்தலின்
கஸ்தூரி மணம்
பூமியின்மேல் வீசாமல்
பார்த்துக்கொள்.

மோட்சத் தருணம்
இதுவல்ல.

பூமியின் மீது
உன் கண்ணீர்த் துளிகள்
சிந்தவேண்டிய
காலம் இது.

உன் இதயத்தை
என் இதயத்தில்
இணை.

Monday, December 6, 2010

உருவெளிக் களங்கள் - 9

காரில் சென்றுகொண்டிருந்தபோது எஃப்.எம் கேட்டுக்கொண்டே சென்றேன். டிரைவரின் சாய்ஸ். நான் வைத்திருக்கும் இசைத் தகடுகள் பிறரின் ரசனைக்கு ஒத்துவருவதில்லை. சூஃபிப் பாடல்களை எல்லோரும் ரசிக்க மாட்டார்கள். இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தொகுப்புக்களும் வைத்திருக்கிறேன் என்றாலும் அவை என் தேர்வு என்பதால் பல 'ஹிட்' பாடல்கள் இருக்காது. சோகம் கசியும் பாடல்களை ஒரு முறை போட்டுக்கொண்டு போனேன். "தூக்கம் வருது பாட்டை மாற்றுங்கள்" என்று ஓட்டுநர் கொஞ்சம் கடுப்பாகவே கூறியதால் அதன் பிறகு பெரும்பாலும் எஃப்.எம்தான். சொல்ல வந்த விஷயம் வேறு. நூத்தியாறு புள்ளி அலைவரிசையில் ஒரு புதுப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அதில் ஒரு வரி என் காதுகுடைந்தது. எந்தப் பிக்காளிக் கவிஞன் எழுதினானோ தெரியாது. இளமையின் தத்துவத்தை எழுதுகிறேன் என்று இப்படி எழுதியிருந்தான்: "இளமை விடுகதை. பெண்களே விடை!" NONSENSE ... என்று என் மனதில் திட்டிக் கொண்டேன். பொதுவாக இளமையில் அப்படித் தோன்றுவது இயல்புதான் என்பதால் போனால் போகிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

வாழ்க்கை ஒரு புதிர் என்றால் அதற்குப் பெண் என்பவள் விடை அல்ல என்றாலும் விடையைக் கண்டறிவதற்கான ஒரு குறிப்பு (ஹிண்ட், க்ளூ) என்று அவளைக் கூறலாம். இந்தச் சிந்தனை நான் கல்லூரி மாணவனாக இருக்கும்போதே வந்து விட்டது. பெண் என்பவள் ஆணுக்கு வழித்துணையே அன்றி இலக்கல்ல. எந்த அளவுக்கு அவள் வழித்துணையாக இருக்க முடியுமோ அதே அளவுக்கு அவள் தடையாகவும் இருக்க முடியும்! "ஒரு மனிதனுக்கு அவனின் மனைவி சொர்க்கத்தின் பூங்காவாக இருப்பாள் அல்லது நரகத்தின் குழியாக இருப்பாள்" என்றார்கள் ஹஜ்ரத் உமர்.

சூஃபித்துவம் பெண்ணையே ஒரு குறியீடாகத்தான் பார்க்கிறது. அவளின் அழகு வெறும் ஜடத்தத்துவம் அல்ல. அது ஓர் ஆன்மிக வரைபடம். இந்த சிந்தனை உண்மையான அழகு எது என்னும் விசாரணைக்கு இட்டுச் சென்றது. அக அழகு என்பது பண்புகளால் உருவாகின்றது. அதுதான் உண்மையான அழகு என்று சமயங்களும் ஞானிகளும் கூறினாலும் புற அழகின் தாக்கம் லேசானதாக இல்லை. அதற்கென்று தனி அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் புற அழகு கொண்டவர்கள் எல்லாம் குணத்தால் அழகாக இருக்கிறார்களா என்றால் இல்லையே? பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம், திரைப்படம் போன்ற ஊடகங்கள் வழியே மனங்கள் பெண்ணின் உருவங்களால் நிரப்பப் படுகின்றன. பெண்ணின் உடலழகு ஒரு மாபெரும் வணிகக் கருவியாகியுள்ளது. இலக்கியங்களில் கால காலமாக பெண்ணின் அழகு வருணிக்கப்பட்டு வருகிறது. ஓவியங்களிலும் சிற்பங்களிலும் அவளே! ஆனால் வெறும் புற அழகின் கவர்ச்சி நிலைக்காது என்பது எல்லோருடைய உள்மனதிற்கும் தெரியும். 

ஆனால் ஒரு பெண்ணுக்குப் புற அழகு இல்லாமல் போனால் அதனால் ஏற்படும் இழப்புக்களும் எதார்த்தத்தில் இருக்கவே செய்கின்றன. தான் அழகாக இருக்கவேண்டும் என்னும் கவலை பெண்ணின் ஆதாரக் கவலைகளில் ஒன்றாக இருக்கிறது. அந்தக் கவலையும் ஒரு மாபெரும் வணிகக் கருவியாகியுள்ளது!

ஒரு தூய அழகை தரிசித்துவிடும் தவத்தில் கவிஞர்களும் சிற்பிகளும் ஓவியர்களும் தங்கள் கலைப்பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்பதையே அவர்களின் படைப்புக்கள் காட்டுகின்றன. அது உன்னதப் பண்புகளை, தெய்வீகப் பண்புகளைப் பெண்ணின் உருவில் பிரதிபலித்துக் காண்கிறது. உன்னதப் பண்புகள் பிரதிபலிக்காத புற அழகை எந்தக் கலைஞனும் ஆன்மிகவாதியும் தன் சாதனைக்குப் பயன்படுத்த முடியாது. 

"பாலோடு தேன்கலந்  தற்றே பணிமொழி 
வாளெயிறு  ஊறிய நீர்"
என்று வள்ளுவர் கூறுகிறார்.(கவனியுங்கள், இது ஃபிரெஞ்சு கிஸ் அல்ல, தமிழ் முத்தம்!) இந்தத் திருக்குறளில் அடிக்கோடு இட வேண்டிய சொல் என்று எதை நினைக்கிறீர்கள்? பணிமொழி என்பதைத்தான்!  "பணிவாகப் பேசுகின்ற பெண்" என்று வள்ளுவர் கூறுவது அவளின் பண்பின் அழகைக் காட்டுகிறது. அக அழகுடன் சேர்ந்த புற அழகைத்தான் அவர் முன்வைக்கிறார்.
"மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் 
பலர்காணத் தோன்றல் மதி"
என்று அவர் சொல்வதைப் பாருங்கள். "ஏ நிலாவே! பூப்போன்ற கண்கள் கொண்ட என் காதலியின் முகத்தைப் போல் நீ இருப்பது உண்மை என்றால் இப்படி எல்லோரும் பார்க்கும்படித் திரியாதே!" என்று டோஸ் விடுகிறார். காதலில் அவரும் தனியுடைமைவாதிதான்!

புற அழகும் அக அழகும் சேர்ந்திருப்பதுதான் மனிதன் விரும்பக்கூடிய அகாக இருக்கிறது. காவியங்கள் படைத்த கவிஞர்கள் எல்லாம் தங்கள் கதாநாயகிகளை அப்படிப்பட்ட உன்னத அழகிகளாகத்தான் உருவாக்கியுள்ளார்கள். கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி. தசரதனின் பிரியமான மனைவி அவன் உயிருக்கு உலை வைத்த இரண்டு வரங்களை அவனிடம் கேட்டாள். அந்த இரண்டு வரங்களை அவனிடம் பெற்றே தீருவது என்று என்னென்ன சூழ்ச்சிகள் செய்கிறாள் என்பதைக் "கைகேயி சூழ்வினைப் படலம்" பகுதியில் கம்பன் காட்டுகிறான். தன்னை அலங்கோலமாக்கிக் கொண்டு தரையில் கிடக்கிறாள். கண்ணீர் வடிக்கிறாள். இப்படி தசரதனின் மனதைக் கரைத்து வரங்களையும் கேட்டுவிட்டாள். தன் அழகில் மயங்கித்தான் வரங்கள் தந்து தன்னை தசரதன் மணந்து கொண்டான் என்ற எண்ணம் அவள் மனதில் ஆரம்பத்திலிருந்தே இருந்திருக்க வேண்டும். அதை தசரதன் இப்போது உணர்கிறான். அவளிடம் சொல்கிறான்:
"ஏண்பால் ஓவா நாணம் மடம் அச்சம் இவையே தம்
பூண்பால் ஆகக் காண்பவர் நல்லார்"
"அடியே கைகேயி!, நல்ல பெண்களுக்கு நகை நட்டு அழகில்லையடீ. நாணம் மடம் அச்சம் இதுதான் உண்மையான அழகு" என்று சொல்கிறான். 

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் ஒரு சம்பவம். ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது அவர்களின் மனைவி ஆயிஷா தன் கைகளில் இரண்டு வெள்ளி வளையல்கள் அணிந்திருப்பதைப் பார்க்கிறார்கள். 'ஆயிஷா, என்ன இது?' என்று கேட்கிறார்கள். 'உங்களுக்காக என்னை அலங்கரித்துக் கொண்டேன்' என்று பதில் வருகிறது. 'வேண்டாம் ஆயிஷா, அவற்றைக் கழற்றிவிட்டு' என்று நபிகள் நாயகம் சொல்லிவிட்டார்கள். ஏசுவின் அன்னை மர்யம் அவர்களைத்தான் முஸ்லிம் பெண்களின் முன்மாதிரி என்று திருக்குர்ஆன் சொல்கிறது. அவர்களைப் போலவே நகைகள் அணியாத எளிமையைப் பெண்கள் கடைபிடிப்பதை நபிகள் நாயகம் விரும்பினார்கள் என்று கருதுகிறேன். இன்றைக்கு பெந்தகோஸ் பெண்கள் அந்த எளிமையைக் கடைப்பிடிக்கிறார்கள். துப்பட்டிக்குள் ஒரு நகைக் கடையையே சுமந்து கொண்டு நடமாடும் முஸ்லிம் பெண்களை நினைத்தால் திகைப்பாக உள்ளது!



கலீல் கிப்ரானின் அமர காவியமான 'THE BROKEN WINGS ' நூலைப் படித்தபோது தன் காதலி 'செல்மா கராமி'யை அவன் வருணித்த வரிகள் இன்னும் என் மனதில் உன்னதப் பெண்ணழகின் இலக்கணமாக மின்னுகிறது. அதிலிருந்து கொஞ்சம் இங்கே தருகிறேன்:   
"செல்மா கராமியிடம் உடல் அழகும் ஆத்ம அழகும் இருந்தது. ஆனால் அவளை அறிந்தேயிராத ஒருவருக்கு அவளை நான் எப்படி வருணிப்பேன்?... ... ... செல்மாவின் அழகு அவளுடைய பொன் கூந்தலில் இல்லை. ஆனால், அதனைச் சூழ்ந்திருக்கும் தூய்மையில் இருந்தது. அவளின் நீண்ட கண்களில் இல்லை. ஆனால், அவற்றிலிருந்து வீசிய ஒளியில் இருந்தது. அவளின் சிவந்த உதடுகளில் இல்லை. ஆனால், அவளது வார்த்தைகளின் இனிமையில் இருந்தது. அவளின் தந்தக் கழுத்தில் இல்லை. ஆனால், அது சற்றே முன்னால் சாய்ந்திருப்பதில் இருந்தது. அது அவளின் நேர்த்தியான உருவத்தில் இல்லை. ஆனால், விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் எரியுமொரு வெள்ளைத் தீப்பந்தம் போன்ற அவளது ஆன்மாவின் மேன்மையில் இருந்தது அது."




ஏசுவின் பண்புகளை வைத்தே ஜிப்ரான் தன் கதைகளின் பெண்களை உருவாக்கியிருப்பதைக் காணலாம். எளிமையான தோற்றம் கொண்டவர்களாக அவர்களை வருணிக்கிறார். ஆனால் அந்த எளிமையில் தெய்வீக அழகு பிரதிபலிப்பதாகக் காட்டுகிறார். இறைத்தூதர்கள் இறைவனைப் பிரதிபலித்தார்கள் என்றால் இந்தப் பெண்கள் இறைத் தூதர்களைப் பிரதிபலிக்கின்றார்கள். எதற்காகாக அந்தக் கண்ணாடி மெருகேற்றப் பட்டதோ அதைத் தெளிவாக அது பிரதிபலிப்பதாக!

Sunday, December 5, 2010

உருவெளிக் களங்கள்- 8

பதினைந்து வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது அலசப்பட்ட ஒரு பாய்ண்ட் ஞாபகத்திற்கு வருகிறது. அது கல்லூரிப் பருவம். அரசியல் சினிமா இலக்கியம் இத்தியாதி அத்தியாதி என்று பாடத்தைத் தவிர பிற எல்லாம் சுவாரஸ்யமாக இருந்தன. அதில் சினிமா அதிக வாக்குகள் பெற்று ஜெயித்து எப்போதும் ஆளுங்கட்சியாக இருந்தது. கோலிவுட் பாலிவுட் ஆலிவுட் என்று எல்லா வுட்டுகளையும் கொத்திக் கொண்டிருந்த மரங்கொத்திகளாக இருந்தோம். சினிமா என்றாலே அலர்ஜியாகி அப்பால் ஓடுகின்ற சில நல்லப்பிள்ளைகளும் இருந்தார்கள். அவர்கள் சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுக்கிவிடுவோம். அவர்கள் எங்களுக்கும் சேர்த்துப் பாவ மன்னிப்புத் தேடுவார்கள்.

அப்படியான ஒரு வசந்த காலத்தில் நண்பன் ஒருவன் வீட்டின் மொட்டை மாடியில் நொறுக்குத் தீனிகளுடன் நடந்துகொண்டிருந்த ஜமாவில் அழகியல் பற்றிய பேச்சு கிளம்பியது. அலுக்காத உருப்படியான விஷயம் வேறு என்ன இருக்கிறது?
"கடவுள் எல்லா உயிரினத்திலும் பெண்ணை விட ஆணைத்தான் அழகாக்கி வைத்திருக்கிறான். யானைக்குத் தந்தம், சேவலுக்கு வால், மயிலுக்குத் தோகை என்பதுபோல. மனித இனத்தில் மட்டும் அதை ரிவர்ஸ் செய்திருக்கிறான். ஆணைவிட பெண்தான் அழகாக இருக்கிறாள்" என்று ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது. வைத்த ஞானி நான்தான் என்று ஞாபகம். கலீல் கிப்ரானின் எழுத்துக்களில் மூழ்கியிருந்த காலம் அது. நான் வேறுவிதமாக 'உளற' முடியாது என்பது எனக்கே தெரிந்திருந்தது! ஆனால் என் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுவதற்கும் ஆள் உண்டு என்பதால் உரையாடல் தொடர்ந்தது.

"நீ சொல்றது சரியாப் படல. மனித இனத்துலயும் பெண்ணைவிட ஆண்தான் அழகு"     
"நீங்க ரெண்டுபேரு சொல்றதுமே உண்மைன்னு படுது. அழகு பொதுவானது. ஆண் பெண் ரெண்டு பேரிலுமே அழகானவங்க உண்டு."
"எனக்கு இன்னொரு விதமாத் தோணுது. பெண் முதுமையில் விடவும்  இளமையில் அழகா இருக்கா(ள்). ஆண் இளமையில் விடவும் முதுமையில் அழகா இருக்கான்."

மேற்சொன்ன கருத்தை நான் கூறவில்லை. என் நண்பன் யாரோ சொன்னான். அந்த மகாஞானி யாரென்று நினைவில்லை. ஆனால் அந்தக் கருத்து எனக்கு உடனே பிடித்துப் போனது. என் மனதில் ரமணர், ஓஷோ, அரவிந்தர்  போன்றவர்களின் முகங்கள் தோன்றி வந்தன. அவர்களின் இளமைக் கால உருவத்தைவிட முதுமைக் கால உருவங்கள் அழகானவைதான் என்று உணர்ந்தேன். பெண்களில் அப்படி ஓர் ஆளுமையை என்னால் நினைவுகூர முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை இது ஆணாதிக்கச் சமூகத்தின் பாதிப்பாக இருக்கலாம். கோலி-ஹாலி-பாலிவுட்களில் இளமை இருக்கும் சொற்ப காலத்திற்குத்தான் பெண் முன்மொழியப்படுகிறாள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்ற ஊடகங்களும் அவளை வழிமொழிகின்றன. இளமை தீரும்போது அல்லது முதுமை லேசாக எட்டிப்பார்க்கும்போது அவளை அவை ஒதுக்கிவிடுகின்றன. ஆனால் கதாநாயகன்களோ விட்டால் கொள்ளுப் பேத்திகளுடனும்  டூயட் பாடுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். இது ஒரு அசிங்கமான ஆணாதிக்கம் அல்லாமல் வேறு என்ன?

அதன் பிறகு என்னென்ன பேசிக் கொண்டிருந்தோமோ தெரியவில்லை. விஷயம் வட்டமடித்து மீண்டும் நான் ஆரம்பத்தில் சொன்ன கருத்தையே தொட்டது. இம்முறை அது ஆன்மிகத்தைத் தன் கையில் ஆயுதமாக எடுத்தது.
"ஆணைத்தான் அழகான உருவத்தில் படைத்ததாக இறைவன் கூறுகிறான்" என்று ஒரு நண்பன் சொன்னான். அவன் குறிப்பிட்டது திருக்குரானின் ஒரு வசனத்தை மனதில் வைத்து.
"திண்ணமாக நாம் மனிதனை
மிக்க அழகிய அமைப்பில் படைத்தோம்" (95 :4 )
என்னும் அந்த வசனத்தில் உருவம் - சூரத் -  என்ற சொல் வரவில்லை. "அஹ்சனித் தக்வீம்" என்று வந்துள்ளது. அஹ்சன் என்பது உச்சநிலை அழகைக் குறிக்கும் SUPERLATIVE DEGREE . தக்வீம் என்பது அமைப்பு என்று பொருள் தொனிக்கின்ற சொல். அகம் புறம் இரண்டையுமே ஒருசேரக் குறிக்கின்ற சொல். அதன்படி இந்த வசனக் கருத்தை உடலின் உருவம் சார்ந்து பொருள் கொள்ளவும் இடம் இருக்கிறது. "இன்சான்" - மனிதன் என்று பொதுவாகக் கூறப்பட்டுள்ளபோதும் 'ரஜுள்' - ஆண் என்று சொல்லப்படவில்லை. எனவே இந்த வசனம் ஆண் பெண் இருவரையும் குறிப்பதாகக் கொள்ளலாம். ஆனால் இறைவன் முதலில்  ஆதாம் என்னும் ஆணைப் படைத்ததாகத்தான் திருக்குர்ஆன் கூறுகிறது. அதன்படி இந்த வசனம் குறிப்பிடுவது ஆணைத்தான் என்று ஒரு வாதம் உருவானது. (எங்கள் 'உருப்படாவெட்டி' ஜமாவில்தான்.வேறெங்கே, ஐ.நா.சபையிலா?).



இந்த வாதத்தையே என் மணம் கொஞ்சம் நீட்டித்துப் பார்த்தது. ஒரு புதிய கதவு என் மூளையில் திறந்தது போல் இருந்தது. இறைவன் முதலில் ஆதாம் என்னும் ஆணைப் படைத்தான் என்பது உண்மைதான். ஆதாமை அவன் களிமண்ணில் இருந்து படைத்ததாகக் குரான் சொல்கிறது. ( சில நேரங்களில் வடை சரியாகப் பொரியாமல் உள்ளே மாவாக இருப்பது போல் சில மனிதர்களின் மண்டைக்குள் மூலப் பொருளாகவே இருக்கிறது போலும்.) அதன் பிறகு பெண்ணை இறைவன் ஆதாம் என்னும் ஆணின் விலா எலும்பிலிருந்து படைத்தான். அதன்படி ஆண் மண்ணிலிருந்து வந்தவன். ஆனால் பெண் மண்ணிலிருந்து வந்தவள் அல்ல! கச்சாப் பொருளில் இருந்து உருவாக்கப்பட்டுச் செம்மைப்படுத்தப் பட்டவன் ஆண். 
"உம் மேலான ரட்சகனைத் துதிப்பீராக!
அவன் எத்தகையோன் எனில் 
படைத்தான், பின் செம்மை செய்தான்" ( 87 : 1 , 2 )
எனவே பெண் என்பவள் செம்போருளில் இருந்து படைக்கப்பட்ட அரும்பொருள்! தூய்மையின் தூய்மை!

இப்படி ஒரு வெடியை நான் கொளுத்திப் போட்டதும் நண்பர்கள் முகத்தில் ஈயாடவில்லை. சூப்பரான சிந்தனை என்று சிலர் பாராட்டினார்கள். சிலர் இதை ஒத்துக்கொள்ளவில்லை. (இக்கருத்து அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. எல்லோருக்கும் எல்லாம் ஒத்துக்காது அல்லவா?).

என் மூளை திரி கிள்ளிக் கொண்டிருந்த அடுத்த வெடியை நான் பற்றவைத்தேன். "ஆணின் உருவம்தான் பெண்ணைவிட அழகானது என்றால் இறைவனின் படைப்பாற்றலை அது குறைத்து மதிப்பிடுவதாகும். ஏனெனில் மனிதன்தான் இறைவனின் உச்சகட்டமான படைப்பு. அதில் பெண் சிகரம்." என்று கூறினேன். சிலருக்கு இந்தக் கருத்து பேதியை உண்டாக்கியிருக்கக் கூடும். தர்க்கத்தின் விளையாட்டாக இப்படிக் கூறினேனே தவிர அதுதான் உண்மை என்றெல்லாம் அடித்துச் சொல்லவில்லை. அழகு என்னும் விஷயமே திட்டவட்டமான முடிவுகளுக்கு அப்பாற்பட்டது. அதில் எந்தக் கருத்தும் முழு உண்மை அல்ல என்பது எனக்குத் தெரியும்.



பெண்ணின் படைப்பு மற்றும் உருவம் குறித்து இப்படிப் பல கேள்விகளும் விடைகளும் மனதில் தோன்றி வந்துள்ளன. பெண்ணுருவே புதிரும் வியப்புமாகத்தான் இருக்கிறது. ஆணின் ஜோடியாகப் படைக்கப்பட்டவள் அவள். ஆனால் அவள் ஆணைப்போல் இல்லவே இல்லை! பிற உயிரினங்களில் உள்ள ஆண்-பெண் உருவ வேற்றுமையை விடவும் மனிதப் படைப்பில் அதிகம் என்றே படுகிறது. ஒருவேளை  நான் மனிதன் என்பதால் அப்படித் தோன்றுகிறதோ என்னவோ? ஒரு பெண்ணின் பாதத்தின் படத்தை அல்லது கையின் படத்தை மட்டும் காட்டினால் போதுமே, அது பெண்ணுடையது என்று சொல்லிவிட முடிகிறது அல்லவா? கசாப்புக் கடையில் காலை மட்டும் பார்த்து கிடாவா பெட்டையா என்று அதுபோல் சொல்ல முடியுமா?

"டீசிங்"-ஆக ஒரு கேள்வியை என் நண்பர்களிடம் நான் கேட்டேன்.(ஈவ் டீசிங்காக அல்ல. வேண்டுமானால் ஆதம் டீசிங் என்று சொல்லலாம்). அதாவது, ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியே ஆடைகள் உள்ளன. எல்லாக் கலாச்சாரத்திலும் இந்த வேற்றுமை இருக்கிறது. ஆனால் பெண்ணுக்கென்று பிரத்தியேக ஆடைகள் உள்ளது போல் ஆணுக்கென்று பிரத்தியேக ஆடைகள் இல்லை என்றே படுகிறது! பொதுவாக ஆணுக்கு பேண்ட்- சட்டை என்று ஆடை இருந்தாலும் அதைப் பெண்களும் அணிகின்றார்கள். பெண்களுக்கென்று ஜீன்ஸ் பேண்ட்டுகளும்   உள்ளன. ஆணுக்கென்று உள்ள ஆடை வடிவங்களைப் பெண்களும் அணிகின்றார்கள். ஏன் அணிகின்றார்கள் என்பது அபத்தமான கேள்வி.அது அவர்களுக்கு அழகாக இருப்பதால்தான் அணிகின்றார்கள். அசிங்கமாக இருந்தால் யாரும் அணியமாட்டார்கள். ஆனால் பெண்களுக்கென்று பிரத்தியேகமாக உள்ள ஆடைகளை - தாவணி அல்லது சேலை போல - ஆண்கள் அணிந்தால் அது அவர்களை விகாரமாகக் காட்டுகிறது. கேலிப்பொருள் ஆக்கிவிடுகிறது. நம் மணம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. இது என் என்று நான் கேட்டேன். "பெண்களைப்போல் உடை அணியும் ஆண்களையும், ஆண்களைப் போல் உடை அணியும் பெண்களையும் நபிகள் நாயகம் சபித்தார்கள்" என்று ஒரு நபிமொழி உள்ளது. அது நடைமுறையில் எப்படி இருக்கவேண்டும் என்னும் எதிக்ஸ் சார்ந்த விஷயம். என் கேள்வி வேறு தளத்தில் செயல்படுகிறது. ஆணின் ஆடையை பெண் அணியும்போது அது அவள் உருவத்தை விகாரப் படுத்துவதில்லை. ஆனால் பெண்ணின் ஆடையை ஆண் அணியும்போது அது விகாரமாகத் தெரிகிறது. இது ஏன்? என்று என் மனம் சிந்தித்தது. ஒவ்வொருவரும் அவரவருக்குப் பட்டதைக் கூறினார்கள். சொல்லித் தெரிவதில்லை! வேண்டுமானால் ஒரு 'ஹிண்ட்' கொடுக்கிறேன் என்று கூறி சூஃபி ஞானி இப்னுல் அரபி எழுதிய "ஃபுசூஸ் அல்-ஹிகம்" நூலிலிருந்து ஒரு பகுதியைக் காட்டினேன். அது இது:

"இறைவன் ஆதமிலிருந்து இன்னொரு உருவத்தை உண்டாக்கினான்; அதைப் பெண் என்று அழைத்தான். தனது சொந்த உருவிலிருது ஆன அவளைக் கண்டதும், தன்மீது தனக்கு உண்டாவது போன்ற பிரியம் அந்தப் பெண் மீதும் அவர்களுக்கு உண்டாயிற்று. அதேபோல் அந்தப் பெண்ணும் தன்மீதும், தன் சொந்த மண்மீதும் பட்ட்ருதல் வைப்பதுபோல் அவர்கள்மீது பற்றுதல் கொண்டாள். எனவேதான் நபி பெருமானாருக்குப் பெண் பிரியமானவளாக இருந்தாள். இது இறைவன் தன் நமூனாவில் [வடிவமைப்பு] ஆக்கிய ஆதம் (அலை) மீது பிரியம் வைத்தது போலாம். அமரர்கள் மனிதனைவிட உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளவர்கள், ஒளியிலிருந்து படைக்கப்பட்டவர்கள். இருந்தும் இறைவன் அவர்களை மனிதனுக்கு அடிபணியச் செய்தான். இவ்வாறு இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலும், மனிதனுக்கும் பெண்ணுக்கும் இடையிலும் தொடர்புகள் நிர்ணயமாயின.மனிதன் இறைவனுடைய ஜோடியானான்; பெண் ஆணுடைய ஜோடியானாள். இவ்வாறு மூன்று நபர்கள் உண்டாயினர்: இறைவன் மனிதன் பெண். பெண் தன் அசலான ['அசல்' என்னும் அரபுச் சொல்லுக்கு 'மூலம்' என்று பொருள்.]  ஆணிடம் பற்றுக் காட்டுவது போல் ஆண் தன் அசலான இறைவனிடம் பற்றுதல் கொண்டுள்ளான். மனிதன் பெண்ணிடம் காட்டும் அன்பு யதார்த்தத்தில் இறைவனிடம் காட்டும் அன்பாகும். எனவே, சம்பூரண மனிதரான நபி பெருமானார் 'பெண்கள் எனக்குப் பிரியமானவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்' என்று அருளினார்கள். 'நான் என்னை நேசிக்கிறேன்' என்று அவர்கள் கூறவில்லை. இவ்வாறு அவர்களில் இறைவனின் கல்யாண குணங்கள் கைவந்திருந்தன."
( "மெய்யறிவின் ஒளிச்சுடர்கள்", தமிழாக்கம்: ஆர்.பி.எம். கனி, பக்.189 ,190 )