Tuesday, August 28, 2018

நனி நாகரிகம்





















தீப்பெட்டியில்
அடைக்கலம் ஆயின
இரட்டைக் கிளிகள்

வறுத்த சேமியாவில்
வாழ்கிறது
அணில்

அலைக்கற்றை பாயும்
செல்ஃபோன் கோபுரங்களால்
அலைபாய்ந்து தொலைந்துபோன
தவிட்டுக்குருவி
கூவுகிறது ட்விட்டரில்

பாஸ்மதி அரிசியில்
இளைப்பாறுகின்றன
இளமான்கள் இரண்டு

சவுக்காரத்தில் நுரையருந்தும்
பொன்வண்டு

மூட்டுவலித் தைலத்தில்
முன்னோக்கிப் பாய்கிறது
சூரப்புலி

பேரீத்தம் பழத்தின்
பெயர் சொல்லிப் பிழைக்கிறது
பிடரி உதிரும் சிங்கம்

பான்டா கரடிக்குச் சீனாவிலும்
கங்காருவுக்கு ஆஸ்திரேலியாவிலும்
கவுரவமாய் ஏதேனும்
பிராண்ட் கிடைத்திருக்கக்கூடும்

காடழித்துக்
கட்டடம் செய்ததில்
வாழ்விழக்கும் விலங்குகள்
நமை மறக்கினும்
நாம் மறக்க மாட்டோமால்
பிராண்டுகளில் இடம் ஒதுக்கி
கௌரவிக்கின்றோம்

நமது நவ நாகரிகம்
நன்றி மறவாததாயிற்றே
நண்பர்களே!

Monday, August 27, 2018

மழைக்காற்று
























மழை பெய்கிறது
வாருங்கள்
என்றழைத்தாள்

எத்தனை முறை ஆனாலும்
பித்தனைப் போல்
மழையை ரசிப்பேன்
என்பதறிவாள்

கணினியை மூடினேன்
வாசற்படியில் இருவரும்
அமர்ந்துகொண்டோம்

வேறேதோ புதிய இடம் போல்
வேறேதோ பழைய காலம் போல்
சித்தத்தில் மழை
தித்தித்தது

எப்போது வரினும்
இடத்தின் தடத்தையும்
காலத்தின் குறிப்பையும்
துடைத்தழிக்கின்றது
மழை எனக்கு

தூறல் கிளர்த்தும்
ஈர வாசத்தில்
ஒருவித போதை

விண்ணும் மண்ணும்
விளையாடும்
பெருமுயக்கு அல்லவோ
மழை

நேராக மேகம் அனுப்பும்
அமிர்தத் துளிகளை
திசைகளில் எல்லாம்
சிதறடித்திருந்தது
கடுங்காற்று

’மழை வந்தாப்லதான் போங்க
காத்து கலைக்குது
நான் உள்ளே போறேன்’
என்றெழுந்து சென்றாள்

அழகிய மழையைக்
கலைத்தபடிச் சுழன்றடிக்கும்
அழகிய காற்றை
ரசிக்கத் தொடங்கினேன்

Tuesday, August 21, 2018

சமத்துவ பிரியாணி



























மணமகள் (தீன்குலச் செல்வி)
’இருபது’ என்றார்கள்
(வயதல்ல)

மணமகன் (தீன்குலச் செலவன்)
‘எட்டு’ என்றார்கள்
(தப்பில்லை,
ஒன்பதாகத்தான் இருக்கக்கூடாது)

பெண்ணின் அத்தா
’பைஅத்’ ஆள் என்றார்கள்
(இனி அவர் மையத் ஆகாதிருந்தால் சரி)

பையனின் அத்தா
தப்லீக் என்றார்கள்
முதற்பந்தி முடித்து நின்றோர்
பல்குத்திக்கொண்டே

சீரகச் சம்பா பிரியாணியின்
ஈடிணை இல்லா நறுமணம்
பிடித்திழுக்க
பந்தியில் அமர்ந்தேன்

எதிர் வரிசையில்
சமிக்ஞை சலாம் சொல்லிப்
புன்னகைத்த
’சமரசம்’ பாய் ஒருத்தர்
சட்டென்று சுதாரித்துக்கொண்டு
சர்வீஸ் பாயிடம்
தாள்ச்சா கேட்டார்

’இறைவன் ஒருவனே’
எனக்காட்டும் விரலால்
(ஆட்டும் விரலால்)
திருப்தியுடன் மௌனமாகப்
பேப்பர் கோப்பையில்
பாயசத்தை வழித்துக்கொண்டிருந்தார்
எம் முஹல்லாக் கிளையின்
சகோதரர்

உண்ணும்போதும்கூடவா
வீடியோ எடுப்பது?
என்னும் அறச்சீற்றம்
பொங்காது பொறுமை காத்து
எக்ஸ்ட்ரா சிக்கன் பீஸ்
கேட்டுக்கொண்டிருந்தார்
சில்லாவில் சதம் கண்ட
சாதனையாளர்

அன்னக்கரண்டி
இலையில் சரித்த பிரியாணியில்
தற்செயலாய்
ஆறேழு ‘துண்டுகள்’
விழுந்துள்ளமை கண்டு
ஜாக்பாட் அடித்ததாய் மகிழ்ந்தார்
’ஜாக்’ தோழர்
(அல்லாஹு ஃகைருர் ராஜிகீன்
இறைவனே
உணவளிப்போரில் சிறந்தவன்)

இறைவனின் ஷுஹூதை
அதிகமாக்கிய பிரியாணியை
இரண்டாம் சுற்றும்
கேட்டுப்பெற்றோம்
நானும் பீர்பாயும்

நெற்றியில்
மந்திரமாகிய நீறணிந்த
நண்பருக்கு
பிரியாணி செய்முறை நுட்பங்களை
விவரித்தபடி சாப்பிடுகிறார்
குழந்தை முகம் கொண்ட ஹாஜியார்

அவரவர் அறிந்த விதத்தில்
எல்லோரின் துஆ வாழ்த்தும்
மனதாற நிகழ்ந்திருக்கும்
மணவீட்டார் மீது

சாந்தியும் சமாதானமும்
பரவச் செய்துவிட்டது
சமத்துவ பிரியாணி இன்று!


Tuesday, August 14, 2018

கனியும் தருணம்




















இரண்டாம் பருவச் சுற்றில்
தள்ளிய குலைகள்
பழுக்கத் தொடங்கின
பப்பாளி மரங்கள்

அடர் மஞ்சளாய்
மாறியிருந்தன ஓரிரண்டு

வீட்டின்
சுற்றுச் சுவர் மீதேறினால்தான்
கைக்கெட்டும் எனக்கு

உறவினர்க்குத் தரல் வேண்டி
“பிடுங்கித் தர்றீங்களா?” என
வினயமாய்க் கேட்டாள்

மோவாயில் விரல்களைத்
தடவியபடி
மேல் நோக்கியபோது தோன்றியது
எவ்வளவு வன்முறையான சொல்
மிக இயல்பாகச் சொல்லிவிட்டாள்

‘பிடுங்க வேண்டாம்
பறித்துத் தருகிறேன்’
எனச் சொன்னேன்

பறித்தல் என்பதும்
வன்முறை அன்றோ?

கவர்தல் என்றார்
வள்ளுவரும்!

’எடுத்தல்’ என்பதிலும் சற்றே
வன்முறை இருக்கிறது

வாங்குதல் எனிலோ
வணிகம் தொனிக்கும்

என்ன யோசனை என்பதுபோல்
பார்த்தவளிடம் சொன்னேன்
’இரு, மரத்திடம் கேட்டுப்
பெற்றுத் தருகிறேன்’