Tuesday, August 28, 2018

நனி நாகரிகம்





















தீப்பெட்டியில்
அடைக்கலம் ஆயின
இரட்டைக் கிளிகள்

வறுத்த சேமியாவில்
வாழ்கிறது
அணில்

அலைக்கற்றை பாயும்
செல்ஃபோன் கோபுரங்களால்
அலைபாய்ந்து தொலைந்துபோன
தவிட்டுக்குருவி
கூவுகிறது ட்விட்டரில்

பாஸ்மதி அரிசியில்
இளைப்பாறுகின்றன
இளமான்கள் இரண்டு

சவுக்காரத்தில் நுரையருந்தும்
பொன்வண்டு

மூட்டுவலித் தைலத்தில்
முன்னோக்கிப் பாய்கிறது
சூரப்புலி

பேரீத்தம் பழத்தின்
பெயர் சொல்லிப் பிழைக்கிறது
பிடரி உதிரும் சிங்கம்

பான்டா கரடிக்குச் சீனாவிலும்
கங்காருவுக்கு ஆஸ்திரேலியாவிலும்
கவுரவமாய் ஏதேனும்
பிராண்ட் கிடைத்திருக்கக்கூடும்

காடழித்துக்
கட்டடம் செய்ததில்
வாழ்விழக்கும் விலங்குகள்
நமை மறக்கினும்
நாம் மறக்க மாட்டோமால்
பிராண்டுகளில் இடம் ஒதுக்கி
கௌரவிக்கின்றோம்

நமது நவ நாகரிகம்
நன்றி மறவாததாயிற்றே
நண்பர்களே!

No comments:

Post a Comment