மணமகள்
(தீன்குலச் செல்வி)
’இருபது’
என்றார்கள்
(வயதல்ல)
மணமகன்
(தீன்குலச் செலவன்)
‘எட்டு’
என்றார்கள்
(தப்பில்லை,
ஒன்பதாகத்தான் இருக்கக்கூடாது)
பெண்ணின்
அத்தா
’பைஅத்’
ஆள் என்றார்கள்
(இனி அவர் மையத் ஆகாதிருந்தால் சரி)
பையனின்
அத்தா
தப்லீக்
என்றார்கள்
முதற்பந்தி
முடித்து நின்றோர்
பல்குத்திக்கொண்டே
சீரகச்
சம்பா பிரியாணியின்
ஈடிணை
இல்லா நறுமணம்
பிடித்திழுக்க
பந்தியில் அமர்ந்தேன்
எதிர்
வரிசையில்
சமிக்ஞை
சலாம் சொல்லிப்
புன்னகைத்த
’சமரசம்’
பாய் ஒருத்தர்
சட்டென்று
சுதாரித்துக்கொண்டு
சர்வீஸ்
பாயிடம்
தாள்ச்சா கேட்டார்
’இறைவன்
ஒருவனே’
எனக்காட்டும்
விரலால்
(ஆட்டும்
விரலால்)
திருப்தியுடன்
மௌனமாகப்
பேப்பர்
கோப்பையில்
பாயசத்தை
வழித்துக்கொண்டிருந்தார்
எம் முஹல்லாக்
கிளையின்
சகோதரர்
உண்ணும்போதும்கூடவா
வீடியோ
எடுப்பது?
என்னும்
அறச்சீற்றம்
பொங்காது
பொறுமை காத்து
எக்ஸ்ட்ரா
சிக்கன் பீஸ்
கேட்டுக்கொண்டிருந்தார்
சில்லாவில்
சதம் கண்ட
சாதனையாளர்
அன்னக்கரண்டி
இலையில்
சரித்த பிரியாணியில்
தற்செயலாய்
ஆறேழு
‘துண்டுகள்’
விழுந்துள்ளமை
கண்டு
ஜாக்பாட்
அடித்ததாய் மகிழ்ந்தார்
’ஜாக்’
தோழர்
(அல்லாஹு
ஃகைருர் ராஜிகீன்
இறைவனே
உணவளிப்போரில் சிறந்தவன்)
இறைவனின்
ஷுஹூதை
அதிகமாக்கிய
பிரியாணியை
இரண்டாம்
சுற்றும்
கேட்டுப்பெற்றோம்
நானும் பீர்பாயும்
நெற்றியில்
மந்திரமாகிய
நீறணிந்த
நண்பருக்கு
பிரியாணி
செய்முறை நுட்பங்களை
விவரித்தபடி
சாப்பிடுகிறார்
குழந்தை முகம் கொண்ட ஹாஜியார்
அவரவர்
அறிந்த விதத்தில்
எல்லோரின்
துஆ வாழ்த்தும்
மனதாற
நிகழ்ந்திருக்கும்
மணவீட்டார் மீது
சாந்தியும்
சமாதானமும்
பரவச்
செய்துவிட்டது
சமத்துவ
பிரியாணி இன்று!
No comments:
Post a Comment