Sunday, December 23, 2018

பசுக்கழகக் குழம்பி!                அரசு வேலைக்கு லாயக்கற்ற 33 முதுநிலை படிப்புகள்” என்பது நாளிதழில் வெளிவந்த செய்தி ஒன்றின் தலைப்பு. எந்த நாளிதழ் என்று தெரியவில்லை. அதன் அலைப்படத்தை வாட்ஸேப்பில் வைத்திருந்த பேராசிரியர் அப்துர் ரஜ்ஜாக் என்னிடம் வாசித்துக் காட்டினார். (பின்னர் எனது அலைப்பேசிக்கும் அனுப்பினார்). 

அந்தச் செய்தியை அவர் வாசிக்கும் போது “தமிழக பல்கலைகள் மற்றும் கல்லூரிகளில்…” எனத் தொடங்கும் பத்தியை வாசிக்க மிகவும் தடுமாறினார். ‘பல்கலை’ என்னும் சொல் அவரைத் தடுமாற வைத்தது. அது அவருக்குப் புதிய சொல்லாக இருந்திருக்க வேண்டும். இணையத்தில் எழுதிவரும் நவீன எழுத்தாளர்களால் புழக்கத்தில் கொண்டுவரப்பட்டு இன்று நாளிதழ் வரை வந்திருக்கும் ஒரு சொற் பயன்பாடு அது. பல்கலைக்கழகம் என்பதைத்தான் அப்படிச் சுருக்கிச் சொல்கிறார்கள்.

பேராசிரியர் வேறு அர்த்தம் தொனித்துக் குழம்பிப் போயிருக்கலாம். “இவர் ஒரு பல்துறை வித்தகர்” என்று நண்பருக்கு ஒருவரை அறிமுகஞ் செய்கிறார் ஒருவர். “அப்படியா?” என்கிறார் இவர். “இல்லியா பின்ன? பிடிஎஸ் எம்,டிங்க இவரு” என்று அநியாயத்துக்குக் கடிக்கிறார் அவர். அப்படி நினைத்திருக்கலாம்.

சரி. பல்கலைக் கழகம் என்பதை பல்கலை என்று பிரயோகித்ததை நான் முதன் முதலில் ஜெயமோகனின் எழுத்தில்தான் கண்டேன். சுருக்கிச் சொல்ல வேண்டினால் அல்லது வேண்டியிருந்தால் ப.க.கழகம் என்றோ ப.க.க என்றோ சொல்லலாமே? வேண்டாம். மேலும் குழப்பம்தான் விளையும். ஏதோ புதிய அரசியல் கட்சி ஒன்றின் பெயர் போல் ஒலிக்கிறது. ஆகையால் பல்கலை என்றே பகர்ந்தனர் போலும்.

யோசித்துப் பார்க்கையில், கழகம் என்ற சொல்லின் மீதான ஒவ்வாமையால்தான் அதை நறுக்கி விட்டுப் பயன்படுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது (’பெயரைக் கேட்டாலே அதிருதுல்ல’). ஆக, இது சுருக்கல் அல்ல, நறுக்கல்!

      அரசியற் கழகங்கள் வந்த பின்புதான் சர்வகலாசாலை என்றிருந்த யூனிவர்சிட்டி தூய தமிழில் ‘பல்கலைக்கழகம்’ என்னும் நாமகரணம் பூண்டது. நல்ல வேலை, மீண்டும் சமற்கிருதச் சொல்லாடலுக்கே போய்விடாமல் பல்கலை என்றாவது எழுதுகிறார்கள். சாலை என்பதும்கூட வடமொழியில் ’ஷாலா’ என்றே உச்சரிக்கப்படும். (இந்தியில் ’சாலா’ என்று வைகிறார்களே. அது வேறு. குறிப்பாக ’மதராசி’களை, அதவாது ’சென்னைட்ஸ்’களையும் அதன்வழி ஒட்டுமொத்த தமிழர்களையும் இழித்து விளிக்கப் பயன்படும் அடைமொழி!). அப்படி யாராவது செம் சமற்கிருத உச்சரிப்பாக ‘சர்வகலாஷாலா’ என்றோ அல்லது சகரத்தை ஷவரம் செய்கிற பிராமண உச்சரிப்பாக ‘ஷர்வகலாஷாலா’ என்றோ செப்பத் தொடங்கிவிடவும் சாத்தியம் உள்ளது. (பிறகு அப்பிரயோகம், பல்கலையைச் சார்ந்த யாரையாவது தூற்றுவதற்கான வடிவமாகவும் மாறிவிடக் கூடும்: ‘அதோ போவுதே, அது ஒரு சர்வகலாசாலா!”).

      வரலாற்றில் சில இயக்கங்கள் தோன்றி வந்து சில மாற்றங்களைச் செய்து விடுகின்றன. அவை காலப்போக்கில் மக்களிடம் ஏற்பும் பெற்று வேர் பிடித்து நிற்கின்றன. அவற்றைத் தேவையில்லாமல் மாற்றிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.      கும்பகோணம் அருகே ஆடுதுறைக்குப் புறத்தே “ராயல் காஃபி” என்றொரு கடை உள்ளது. அது, பிராமணர்களுக்கான ஓர் நவீன அடுக்குக் குடியிருப்பின் வாசலில் இருக்கிறது. ஓடு வேய்ந்து மரத்தூண்கள் நிறுத்தி குத்து விளக்கெறிய ஊதுவத்திப் புகை நெளிந்திழைய, கல்கி, கிருபானந்த வாரியார் போன்றோரின் நூற்கள் அணியியற்ற கருப்பட்டி, நாட்டுச் சக்கரை, தேய்ங்காய்ப்பால் முறுக்கு, சீடை, ஓலைப்பெட்டிக்குள் இட்ட மிட்டாய் வகைகள் இத்தியாதிகள் என செவ்வியற் கலையம்சத்துடன் அமைந்த பாந்தமான கடை. கர்நாடக ராகங்களின் பெயர் சூட்டப்பட்ட காஃபி வகைகள் விற்கிறார்கள். நாக்கில் வெகு நேரம் சுவையும் மணமும் ஒட்டிக்கொண்டிரும் அருமையான காஃபி சுடச் சுட வேண்டுவோர் அவ்வழியே பயணித்தால் அவசியம் நிற்க வேண்டிய இடம் அது. “இங்கே பக்கத்தில் காஞ்சி காமக்கோடி பீடத்துக்கான ஒரு குருகுலம் இருக்கு. அங்க உள்ள கோசாலையிலிருந்துதான் பால் எடுத்தாறது. அதுனாலதான் இவ்ளோ ஷுவையா இருக்கு” என்றார் கடையின் இளம் ஊழியர் ஒருவர்.

இந்தச் செய்தியை நான் யாரிடமாவது பகிர்வதென்றால், “ஆடுதுறைக்கு வெளியே ஒரு காஃபிக் கடை இருக்குங்க. அல்ஹம்துலில்லாஹ்! என்னா டேஸ்ட்டுங்கிறீங்க! குருகுலம் ஒன்னு இருக்காம். அங்க உள்ள கோசாலைல இருந்து பால் கொண்டு வந்து போடுறாங்களாம்” என்றுதான் சொல்வேன்.

அதை ஒருபோதும் இப்படிச் சொல்ல மாட்டேன்: “ஆடுதுறைக்கு ஊர்ப்புறத்தே ஒரு குழம்பிக் கடை இருக்குங்க. (ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டியபடி) எல்லாப் புகழும் (ஏக) இறைவனுக்கே! என்னா சுவைங்கறீங்க. மறைப்பாடப் பள்ளி ஒன்று இருக்காம். அங்க உள்ள பசுக்கழகத்துல இருந்து பால் கொண்டு வந்து போடுறாங்களாம்!”


Monday, December 17, 2018

இதயம் ஒரு கண்ணாடி              

   அண்மையில் முகநூலில் உந்துலுஸ் நூல் வட்டத்திலிருந்து முகம்மது கீலான் என்பவர் நபிகள் நாயகத்தின் பொன்மொழி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். “சமூக ஊடகம் மற்றும் தொடர்ச்சியான செய்திப்பரப்பு உள்ள இக்காலத்தில் புழங்குவதற்கு மிகவும் கடினமான ஹதீஸ் இது” என்று அந்த நபிமொழியை அவர் குறிப்பிட்டிருந்தார். நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த ஹதீஸ் இதுவே:

      ”தனக்குத் தேவையற்ற விஷயங்களைத் துறந்துவிடுதல் ஒரு நபரின் அழகிய இஸ்லாத்தில் உள்ளதாகும்” (’மின் ஹுஸ்னி இஸ்லாமில் மர்-இ தர்க்குஹு மா லா யஃனீஹி’ - நூல்: திர்மிதி). இந்த வாசகத்தில் உள்ள ”தர்க்” என்னு சொல்லுக்குத் துறத்தல், விட்டுவிடுதல் என்று அர்த்தம்.

      இரண்டு வகையான துறவுகள் உள்ளன. ரஹ்பானிய்யத் மற்றும் ஜுஹ்து என்று அவற்றை அறபியில் குறிப்பிடுவர்.

      ரஹ்பானிய்யத் என்னும் வகையான துறவு இஸ்லாத்தில் அனுமதிக்கப் படவில்லை. “இஸ்லாத்தில் துறவு இல்லை” (”லா ரஹ்பானிய்யத் ஃபில் இஸ்லாம்”) என்று நபிகள் நாயகம் சொன்னது இந்த வகைத் துறவைத்தான்.

      ஆனால், இன்னொரு வகையான துறவான ‘ஜுஹ்து’ என்பதை இஸ்லாம் மிகவும் வலியுறுத்துகிறது. ஜுஹ்து என்றால் பற்றின்மை என்று பொருள். ”தர்க்குஹு மா லா யஃனீஹி” - தனக்குத் தேவையில்லாத விஷயங்களைத் துறத்தல் என்பது அதுதான். அதாவது, உனது ஆன்மிக வாழ்வுக்கு அவசியமே இல்லாத செயல்களையும் பேச்சுக்களையும் எண்ணங்களையும் துறந்து விடுவதாகும்.

      தனது ஆன்மிகத் தோழர்களான ‘சஹாபா’க்கள் பற்றி நபிகள் நாயகம் நவின்றார்கள், “இந்தச் சமுதாயத்தின் சீர்மை அகத்தெளிவு மற்றும் உலகப் பற்றின்மை ஆகியவற்றால் தொடங்கியது” (’அவ்வலு ஸலாஹி ஹாதிஹி உம்ம(த்)தி பில்-யகீனி வல்-ஜுஹ்தி’ - அறிவிப்பாளர்: அம்ரிப்னு ஷுஐப் (ரஹ்); நூல்: பைஹகீ).

      இவ்விருவகைத் துறவுகளுக்கும் வேறுபாடு என்ன? ஒன்றை நபி அனுமதிக்கவில்லை, தடுத்துள்ளார்கள். மற்றொன்றை நபி வலியுறுத்துகிறார்கள், போற்றுகிறார்கள். எனவே, முன்னதான துறவு தீயது என்பதும் பின்னதான துறவு நல்லது என்றும் புரிகிறது. எனில், இந்த இரண்டு துறவு வகைகளின் தன்மைகள் என்ன?


      
 சமய வாழ்வின், ஆன்மிகத்தின் நோக்கமே இறைவனை அடைவதுதான். இறைவனை நெருங்க விடாமல் உன்னைத் தடுக்கின்ற அனைத்தையும் நீ துறந்தாக வேண்டும். இறைவனை நீ நெருங்குவதற்கு உதவியாக இருக்கும் அருட்கொடைகளை நீ பேண வேண்டும். அவற்றைத் துறக்கக் கூடாது.

      எனவே, இறைவனின் அருட்கொடைகளைத் துறப்பதே ‘ரஹ்பானிய்யத்’ என்னும் துறவு. அதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இறைவனை நெருங்குவதற்குத் தடையாகும் விஷயங்களைத் துறப்பதே ‘ஜுஹ்து’ என்னும் துறவு. அதற்கு இஸ்லாத்தில் ஏற்றமானதொரு இடம் உள்ளது.

      தேவையற்ற விஷயங்களை விட்டுவிடுதல் என்றால் என்ன? மனதிற்குள் படைப்புக்களும் உலகமும் நுழையாமல் பாதுகாத்தல். அப்போதுதான் மனம் இறைவனின் தியானத்தில் திளைக்க முடியும். ஒருவர் தனது ”அன்ஃபுஸ்” என்னும் அகத்தினுள் மிக ஆழமாக மூழ்கி இறைவனின் அத்தாட்சிகளைக் காண்பதற்கு மனம் தெளிவாக இருப்பது அவசியம்.

      ”யகீன் வல்-ஜுஹ்து” – அகத்தெளிவும் பற்றின்மையும் என்று நபிகள் நாயகம் அருளியிருப்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இரண்டும் மிக உறுதியான தொடர்பு கொண்டவை. உலகப் பற்று உள்ளவனுக்கு – அதாவது, உலகைத் தனது உள்ளத்தில் சுமந்து கொண்டிருப்பவனுக்கு ஒருபோதும் அகத்தெளிவு ஏற்படாது. அதாவது, “பஸீரா” என்னும் ’அகப் பார்வை’ உண்டாகாது. அவன் அகக் குருடனாகவே இருப்பான். இறைவனின் அத்தாட்சிகளைப் புறத்திலும் அகத்திலும் அவனால் காணவே முடியாது.

   
  


 இங்கே, துறவு குறித்தும், மடப்பள்ளிகள் குறித்தும் முன்பொரு கட்டுரையில் ஜெயமோகன் எழுதியிருந்ததை நினைவு கூர்கிறேன். துறவு ஏன் தேவைப்படுகிறது என்றால், உலகம் உங்கள் மனதிற்குள் தினம் தினம் நாளெல்லாம் பல்லாயிரம் பிம்பங்களைக் கொண்டு வந்து கொட்டுகிறது. பிம்பங்களின் குவியலால் உங்கள் மனம் நிரம்பிக் கிடக்கும்போது அதில் ஒருபோதும் தியானம் சித்திக்க இயலாது. தியான நிலை கூடிவருவது மிகவும் கடினம். தினம் தினம் பிம்பங்களை அழிப்பதில் போராடுவதிலேயே காலம் கணிசமாக விரயமாகி ஒழிந்து போகும். எனவே, புறவுலகின் பிம்பங்களே உள்ளத்தினுள் நுழையாத படிக்கு ஒரு சூழலை உருவாக்கினார்கள். அவையே மடங்கள்’ என்னும் கருத்தினை அவர் சொல்லியிருந்தார். (அவர் சொன்ன கருத்தினை உள்வாங்கி எனது சொற்களில் இங்கே எழுதியுள்ளேன்).

      இஸ்லாத்தில் ‘மதரஸா’ என்னும் கல்விச் சாலைகள் அதே அடிப்படையில்தான் உண்டாயின. ஏனெனில், வீட்டிலிருந்தபடி அவ்வளவு குறுகிய காலத்தில் எளிதாக குர்ஆன் முழுவதையும் மனனம் செய்வதோ அல்லது சமயவியலைப் படிப்பதோ முடியாது. (ஸ்கூல்களும் காலேஜ்களும்கூட ஒருவகையில் பகுதி நேர மடங்கள்தான்). ”ஃகான்காஹ்” என்னும் சூஃபி தியான நிலையங்களும் அப்படித்தான் உருவாகின, புறவுலகின் ஊடுறுவல் இல்லாச் சூழலில் இறைவனை தியானம் செய்வதற்காக. (நபிகள் நாயகம் காலத்தில் தனியாக ஃகான்காஹ் இல்லையே என்றால், நபித்தோழர்களின் இல்லங்களே ஃகான்காஹ் என்னும் நிலையில்தான் இருந்தன. அவர்களின் எளிமை நிலையை எண்ணிப் பாருங்கள்! வீட்டில் அடிப்படையான நான்கைந்து பொருட்கள் மட்டுமே இருந்தன!)

      ’ரஹ்பானிய்யத்’ என்னும் துறவாவது திருமணம் புரியாமல், இல்லறம் பேணாமல், பிள்ளைகள் பெறாமல், அவர்களுக்காக சம்பாதிக்காமல், தனிக்கட்டையாக வாழ்வது. இந்த வகைத் துறவில் மனதிற்குள் பிம்பங்கள் வந்து குவிவதைத் தவிர்ப்பது மிகவும் எளிது என்றாலும் இதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. அதே சமயம், இறைவனை மறந்த நிலையில், அவனை அடைவதற்கான தியானங்களில் ஈடுபடாமல், மனைவி மக்களே கதி என்று வாழ்வதையும் இஸ்லாம் தடுக்கிறது. இல்லற வாழ்க்கை முறையில் அவ்வப்போது இதயத்தில் உலக பிம்பங்கள் வந்து விழுவதைத் தவிர்க்க இயலாது என்பது உண்மை எனினும், அதனை உடனுக்குடன் இறை தியானத்தின் வழி துடைத்துத் தூய்மை செய்துவிடுவது எளிது. அதற்கான வழியை நபிகள் நாயகம் சொன்னார்கள், “ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மெருகு, தெளிவு உண்டு. உள்ளத்தின் தெளிவு, மெருகு இறைவனின் தியானம்” (”இன்ன லி குல்லி ஷை-இன் ஜிலாஅன் வ ஜிலாஅல் குலூபி திக்ருல்லாஹி அஸ்ஸ வ ஜல்ல” – அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரலி); நூல்: பைஹகீ).

இஸ்லாத்தின் அத்தாட்சிகளாகவும் மகத்துவமாகவும் விளங்கும் மாபெரும் மகான்கள், இறைநேசச் செல்வர்கள், சூஃபிகள் எல்லாம் இல்லறம் பேணி ஜுஹ்து என்னும் நல்லறம் புரிந்து, இறைவனின் தியானத்தில் ஈடுபட்டுத்தான் மெய்ஞ்ஞானமும் இறைநேசமும் அடைந்தார்கள். அவர்களில் ஒருவரான, இந்த ரபீயுல் ஆஃகிர் என்னும் மாதத்தில் இம் மண்ணகத்தில் உதித்தவர்களான முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்கள் தமது “சிர்ருல் அஸ்ரார்” (’ரகசியங்களின் ரகசியம்’) என்னும் சிறு மா நூலில் சொல்கிறார்கள்:

“இனிய நண்பா! உனது உள்ளம் ஒரு மெருகூட்டிய கண்ணாடி. அதன் மீது படிந்திருக்கும் தூசுப் படலத்தை நீ துடைத்துத் தூய்மை செய். ஏனெனில், தெய்வீக ரகசியங்களின் ஒளியைப் பிரதிபலிப்பதற்காகவே அது படைக்கப் பட்டுள்ளது.”

இவ்வாறு சொல்லிய பின், அன்னனம் மனதைத் தூய்மை செய்தால் எந்த எந்த நிலைகளில் இறையொளி அதில் பிரதிபலிக்கும் என்னும் விளக்கங்களை மகான் அவர்கள் தருகிறார்கள். இறுதியாகச் சொல்கிறார்கள்:

“இவை எல்லாம் உனது இதயம் என்னும் கண்ணாடி தூய்மை செய்யப்பட்ட பின்னரே ஆரம்பம் ஆகும். நீ அவனுக்காக அவனிடம் அவனைக் கொண்டு நாடி, கேட்கத் தொடங்கும்போது மட்டுமே தெய்வீக ரகசியங்களின் ஒளி அதன் மீது விழும்.”

Friday, December 7, 2018

நீருக்குள் மூழ்கிய புத்தகம் - 10

1:245-247 நான் எங்கு வீழினும் விழு

      “என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், நான் மிக அருகில் இருக்கிறேன், அழைப்பவர்களின் அழைப்பிற்கு விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே கேட்கட்டும்.” (2:186)

      இந்த வசனம் நம் உரையாடல்களுடன் இணைகிறது. நாம் கேட்கும் வினாக்களுடன். வருகின்ற விடைகளுடன். ஒரு பாலைக் காற்று சந்தேகத்தைக் கொண்டு வரும். இன்னொன்று நம்பிக்கையும் உறுதியும் நல்கும். எப்போதுமே அழைப்பும் பதிலும் உண்டு.

      ஒரு நாத்திகன் கேட்கிறான், கடவுள் எங்கே? இடத்தை எனக்குக் காட்டு.

      அபத்தமான கோரிக்கை. இறைவனின் பிரசன்னத்தைப் படைப்பினம் தொடுவதற்கு ஓர் இடம் இல்லை. குறிப்பிடம் என்பது இறைவனின் பண்பல்ல.

      ஃபக்ருத்தீன் ராஸியைக் காண விரும்பும் அனைவரையும் அனுமதிக்கும் கொள்ளளவு ஜும்மாப் பள்ளிவாசலுக்கு இல்லை என்று ஸைன் ஸாவியா கூறுகிறார். மக்கள் மெழுகுவத்தி ஏந்திக்கொண்டு வருவதை அவர் விவரிக்கிறார். தங்கப் பட்டயமும் வெள்ளித் தொப்பியும் அணிந்த உதவியாளர் ஒருவர் ஒவ்வோர் இரவும் பிரசங்க மேடையருகில் அமர்ந்திருக்க வேண்டும் என்று மன்னர் ஆணை இட்டிருக்கிறார். தொழுகை விரிப்பை மக்கா நோக்கி விரிக்கும் எவரும் ஆசீர்வதிக்கப்படுவார்.

      பிறகு, மக்களை நேர்வழியில் இட்டுச் செல்லும் அபூ ஹனீஃபா இருக்கிறார், குர்ஆனையும் கவிதைகளையும் பழஞ்செய்திகளையும் வாசித்துக் கொண்டு. ஆதம் நபி இறைவனிடமிருந்து வார்த்தைகளைக் கற்றுக் கொண்டதை (2:37) மேற்கோள் காட்டியதற்காகப் பிரபலமான காஜி அபூ சயீது இருக்கிறார். முஹம்மதிடமும் அலீயிடமும் யூதர்கள் வந்து தௌராத்தை (யூத வேதத்தை) வாசிக்குமாறு சொன்னார்கள் என்று சுல்தான் அவ்லியா கூறுகிறார்.

      இதையெல்லாம் நான் கேட்டு, அவர்களின் தகுதிக்கு நான் மிகவும் கீழே இருக்கிறேன் என்று உணர்கிறேன். இனி ஒருபோதும் மக்களுக்கு முன் நின்று பேச மாட்டேன். எங்கு வீழினும் நான் வீழ்வேன், எழுந்து நடப்பேன், எந்த அவமானம் பற்றியும் வெட்கம் இல்லை. உழுநிலத்தில் இப்படியும் அப்படியும் அசையுமொரு மண்ணாங்கட்டி நான்.

      வேத வரிகள் தோன்றுகின்றன.  (தவிர்க்கவியலாத) மாபெரு நிகழ்ச்சி ஏற்பட்டால்…(56:1). ”மேலும் மலைகள் தூள் தூளாக்கப்படும் போது…(56:5). அவை தூசிகளாகப் பறந்துவிடும்…(56:6). நீங்கள் மூன்று குழுவினர் ஆகிவிடுவீர்கள்…(56:7). வலதுசாரிகள் – வலதுசாரிகள் யார்?...(56:8). இடதுசாரிகள் – இடதுசாரிகள் யார்? (56:9). மேலும், முந்தியவர்கள் முந்தியவர்களே (56:10). அவர்களே நெருக்கமானவர்கள் (56:11).

      இந்த வரிகளின் அர்த்தம் எனக்குப் புலப்படவில்லை. பிறகு என் குழப்பத்திற்கு விடை வருகிறது, இந்நிலையில் இறைவனை தியானம் செய்.

1:253-254 பிற நண்மைகளின் சகவாசம்
      
      நான் மிக அதிகமாக உண்கிறேன். எனவே, தொழவோ போதிக்கவோ தோன்றவில்லை.

      நான் இறைவனிடம் சொன்னேன், வலிமையுடன் இருக்கவும் உன்னுடன் இருப்பதன் இன்பங்களை இழந்துவிடாமல் இருக்கவுமே நான் உண்கிறேன். ஆனால், இன்னமும் எனக்குச் சரியான அளவு தெரியவில்லை. உற்சாகமாகவே இருக்கவும் இந்த அலங்கோல நிலையில் விழாமல் இருக்கவும் நான் எவ்வளவு உண்ண வேண்டும்?
     
 சில நேரங்களில் என்னை ஒரு துக்கம் பீடித்து, வெட்கக்கேடான சுய சிந்தனையில் மூழ்கடிக்கிறது.
    
  உன் இலக்கு சரியானதாக இருந்தால் நீ இறுதி வரை பாதையில் செல்ல வேண்டும், சிரமத்தைப் பொருட்படுத்தக் கூடாது என்றொரு ஆன்மிகக் கவிதையின் வரிகள் சொல்கின்றன. மாறாக, இலக்கு உண்மை இல்லை எனில் நீ உன் காலத்தை வீணடிக்கிறாய், உன் முயற்சி என்னவாக இருந்தபோதும். அது, நீ பித்தளையைத் தங்கமாக்க முயற்சிப்பது போன்றது. எவருமே தோல்விதான் அடைவார்.
     
 நல்ல பணிகள் இதர நல்லதுகளின் சகவாசத்தில்தான் வெற்றி பெறும். புகையின் ஊடாக நீ நடந்து சென்றால் கரித்துகள் தூசாக உன் மேல் படியத்தான் செய்யும். பூவனத்தின் ஊடாக நீ நடந்து சென்றால் நறுமணம் உன்னைச் சூழ்வதை உணர்வாய்.
     
 இவ்வுலகம் ஒரு திறந்த வானம். மேலும், குப்பைத் தொட்டியும்கூட. சிலருக்கு வாழ்வையும் சிலருக்குச் சாவையும் தருகிறது. விளைவுகள் இந்த உலகத்தால் கட்டுப்படுத்தப் படுவதில்லை.
     
 இவ்வுலகில் உன் விரலை அழுத்தி எடுத்து உன் மூக்கின் அருகில் வை. ஒன்று நீ மலரை முகர்வாய் அல்லது மலத்தை. இவ்விஷயங்களில் தீர்மாணிப்பது இயலும்.
    
  காதல் இயலும் எனில் உண்மையான உள்ளங்கள் விழித்திருக்கும். பிறருக்கு அழகின் தேவை இல்லை, அதன் நம்பிக்கை இல்லை. உன் கையில் தங்கம் உள்ளதெனில், அதைக் களிமண்ணாக மாற்றும் வழிகளை ஏன் கற்பனை செய்கிறாய்?

1:261-262 கள்வர்களுக்கு அதைத் தூக்கி எறி
       
     இறையச்சம் என்பது பிற நடுக்கங்களினும் வேறுபட்டது. இறையச்சத்தை அடைவதற்கு முன் எவை எவை அபாயமானவை என்பது பற்றிய ஆரோக்கியமான அச்சம் உனக்குத் தேவை. பலர் அந்நிலையை அடைவதே இல்லை. நீ ஒரு மெல்லிய பலமற்ற கிளையைப் போல் இருக்கலாம். நீ பலகீனமாகத் தோன்றினாலும் ஈரமுள்ள உட்பகுதி ஆணிவேருடன் இணைந்துள்ளது. ”அதனைப் பிடி; அஞ்சாதே” (20:21). மூசா நபி நடுங்கினார்கள், ஆனால் அவர்களின் மையம் உறுதியாக இருந்தது.
       
     ”சிலர் மக்களிடம் சொன்னார்கள், ’உங்களுக்கு எதிராக பெரும்படை ஒன்று கூடியுள்ளது. நீங்கள் பயப்பட வேண்டும்’. ஆனால் அது அவர்களின் இறைநம்பிக்கையை மேலும் அதிகமாக்கியது. அவர்கள் சொன்னார்கள், ’அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்’” (3:173).
        
       அதிகம் எச்சரிக்கையாக இருக்கும் வணிகர்கள் வெற்றியடைவதே இல்லை. நட்டம் குறித்த அவர்களது அச்சமே காரணம். துணிந்த வணிகர்கள் பத்து முறை ஒடிந்து வீழ்ந்தாலும் இறுதியில் எழுந்துவிடுகிறார்கள். எதை இழப்பதை நீ அஞ்சுகிறாயோ, உன் வண்டியைப் பின் தொடர்ந்து வரும் கள்வர்களுக்கு அதைத் தூக்கி எறி. குறிப்பாக, அது உன் நம்பிக்கை எனில்.

      நீ எதை ஆழமாக நேசித்தாலும் அதற்கு நேரம் கொடு. அதை விட்டும் விலக்கப்பட்டால் கூடிய சீக்கிரம் அதனிடம் மீண்டு வா. சில நேரங்களில் நீ நேசிப்பதற்கும் உன் நம்பிக்கைக்கும் உன் பிள்ளைகளைப் போஷிப்பதற்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றலாம். உன் நேசத்துடன் மிகவும் ஒத்திசைந்த ஒன்றுடன் இரு. மற்றவை தானாகவே மறைந்து போகும்.

      அச்சம் இரண்டு வகை. ஒன்று, நம் முயற்சிக்கு அது மதிப்புள்ளதுதானா? என்னும் கவலை. ஆம் என்பதற்கும் இல்லை என்பதற்கும் இடையில் சிக்கிக் கொண்ட மக்கள் எப்போதுமே வேதனையிலும் குழப்பத்திலும் இருக்கிறார்கள். அச்சத்தின் இரண்டாம் வடிவம் நீ நேசிப்பதை அடைய உன்னால் இயலுமா என்பது. அது கரைந்து போகட்டும். நீ போற்றும் திசையில் நகர்ந்து கொண்டிரு. அறவே உன்னால் இயலாது என்று உணர்த்தப்பட்டால் ஒழிய, அதனை நோக்கிச் சென்று கொண்டிரு.


1:263 இங்கே அமர்கிறோம்

      உடன்படாத பலரிடம் ஒருவன் வேலை செய்கிறான். இன்னொருவன் ஒருவரிடம் மட்டும். அவர்களின் வாழ்க்கைகளை ஒப்பிட்டுப் பார். (காண்க: குர்ஆன்: 39:29).

      நான் இதை இப்படிச் சொல்லலாம். கப்பல் துறையிலேயே அழுந்திக் கிடக்கும் வகையில் உன் கப்பலில் நீ அதிகச் சுமைகளை ஏற்றுகிறாய். அது எங்குமே போகாது.

      உனக்கு நிறைய வேலைத் திட்டங்கள் இருக்கின்றன. நீ அமர்ந்து ஓய்வெடுத்தாக வேண்டும். இலக்கே இல்லாத சரக்குக் கப்பலின் கணக்கு வழக்கை நீ மிகக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். உன் வேலையின் சிரமம் அபத்தமானது.

      நீ சொல்கிறாய், நான் இதையெல்லாம் எனது அழகான பிள்ளைகளுக்காகவும் அவர்களின் குழந்தைகளுக்காகவும் இந்தக் கடைவீதி மற்றும் ஊரின் பண்பாட்டுக்காகவும் நாகரிகத்துக்காகவும் செய்கிறேன். மகத்தான லட்சியங்கள்! அதெல்லாம், இயற்கைக் காட்சியைக் காணவிடாமல் மறைக்கும் திரைச் சீலையில் பின்னப் பட்டிருக்கும் படங்களைப் போன்றவை. அந்த உருவங்களை நீக்கிவிடு. ஏனெனில், அவை ஒருநாள் நிச்சயமாக நீக்கப்படும். உனது பெருமைமிகு பதவிக்கும் உனது பரம்பரைக்கும் அப்பால் பார்.

      ஆக, நாம் இங்கே அமர்கிறோம், விவரங்களில் புதைந்து, ஏதோவொரு ஆட்டத்தில் வெற்றி பெறுவதைப் பற்றிய கவலையுடன், நாம் இறந்துபோவோம் என்ற பயத்துடன். இவை எல்லாம் முக்கியமற்ற மலினமான மாய வித்தைகள். திமிங்கலம் ஒன்றுக்கு உணவளிப்பதற்காக கப்பல் நிறைய உணவை ஏற்றிக்கொண்டு சுலைமான் நபி புறப்பட்ட கதை உனக்கு நினைவிருக்கிறதா? நமது திட்டமிடல்கள் எல்லாம், அவற்றைப் பற்றிய நமது விவாதங்கள் எல்லாம் எவ்வளவு அபத்தமானவை என்பதை நமக்குக் காட்டவே அவர் அப்படிச் செய்தார்.
1:264-265 புகழின் தலம்
       
      இறைவன் ஓர் உதாரணம் சொல்கிறான். ”மணம் மிக்க ஒரு நன்மரம்” (14:24). தோலைப் பொசுக்கும் விஷ வார்த்தைள் உள்ளன. அந்த உதாரண மரத்தைப் போல் நிழலும் கனியும் நல்கி இதயத்தை மகிழச் செய்யும் நல்ல சொற்களும் உள்ளன.

      என் சீடர்களே, அறிஞர்களே, நீங்களனைவரும் ஒரே பணியைத்தான் செய்கிறீர்கள் என்றாலும் யார் மேல் யார் கீழ் என்று முடிவுகட்ட முனைகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் தானே சிறப்பானவர் என்று எண்ணுகிறீர்கள். அந்த கர்வத்தில் நீங்கள் ஒருவரை ஒருவர் பெரிதும் எரிச்சல் பண்ணுகிறீர்கள். போதுமான அளவு இருக்காது என்று நீங்கள் ஒவ்வொருவரும் நினைக்கிறீர். அதனால், தெரு நாய்களைப் போல் உமது பங்குக்காகச் சண்டை போடுகிறீர்கள்.

      இந்தப் பொறாமையின் அரிப்பல்ல, ஒத்திசைவே மெய்வழி. நீயும் இதரக் கழுதைகளும் கோலடி வாங்கும் இந்த நெருக்கடியான கொட்டில் அல்ல. மாறாக, தொழுகை அளவற்றதாக மாறுகின்றதும், காணிக்கை செலுத்துவதன் இன்பத்தை நீ உணர்கின்றதுமான ரகசியத்தினுள், புகழின் தலத்திற்கு நகர்ந்துவிடு.

      இறைவன் ஞானத்தைக் கொடுத்துவிட்டுப் பிறகு அதை ஏன் பறித்துவிடுகிறான் என்று யாரோ கேட்கிறார். நான் சொல்கிறேன், பிள்ளைகளிடம் நாம் நடந்துகொள்வது போலத்தான் அதுவும். அவர்கள் கிரகிக்க முடியாததை அவர்களிடம் சொல்லிவிட்டு மீண்டும் எடுத்துக்கொள்கிறோம் அல்லவா? பெருகிப் பாய்ந்து அகற்றினும் பயன்களைக் கொண்டு வரும் ஆற்று வெள்ளத்தையும் சூறைக் காற்றையும் போன்றது அது. அவை வடியும்போது நாம் சிதலங்களுடன் எஞ்சுகிறோம்.

1:267 நாம் பொய்யுரைக்கிறோம் போலும்

      ’தம் நெறியைப் பற்பல பிரிவுகளாக்கி குழுக்களாகி விட்டார்களே, அவர்களுடன் உமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. அவர்களது விவகாரம் அல்லாஹ்விடமே உள்ளது – அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவனே அவர்களுக்கு அறிவிப்பான்’ (6:159).

      உன் ஆசை, சில காலம் உனது ஈடுபாட்டைப் பிடித்திருக்கும் எதுவும், ஒரு காற்றைப் போன்றது, சிறிது தூரம் உன்னைத் தூக்கிச் சென்று கீழே போட்டுவிடும் பறக்கும் குதிரையைப் போன்றது. அஃது நிகழும்போது அதன் மீது உனக்குக் கட்டுப்பாடு இருப்பதில்லை. அல்லது அது எங்கே உன்னை இறக்கிவிடும் என்றும் உனக்குத் தெரிவதில்லை.

     மார்க்கம், நம்பிக்கை மற்றும் உனது சரணாகதி, இவையே நீ நிலத்தில்தான் வாழ்கிறாய் என்பதற்கான அத்தாட்சிகள். அதன் பின் நீ எவ்விதப் பெருஞ்சுழல்கள் மற்றும் கப்பலைத் தூக்கி அறையும் பேரலைகள் ஆகியவற்றின் அபாயத்தில் இல்லை.

      ’நான் நம்புகிறேன்…’ என்னும் வாசகத்தை ஓதும் எவரும் பின்வரும் விதங்கள் இரண்டிலுமோ அல்லது ஏதேனும் ஒன்றிலோ பொய் உரைப்பவர் ஆகலாம்: அவனது சார்தல் உண்மையில் அவன் சுகம் அனுபவிக்கும் விதத்திலாக இருக்கலாம் அல்லது வேதனைப் படுவதன் கசப்பினாலாக இருக்கலாம்.

      பின்வரும் கவிதை வரிகளை நினைவில் வை, எச்சரிக்கை கொள்:

      ”நின் கண்களே எனது மார்க்கம்,
      இக் கருங்கூந்தல் எனது நம்பிக்கை”.

      அருள்மிகும் பிரசன்னமான அல்லாஹ்வை அழை. (காண்க 17:110). எது நடந்தாலும், உனது அந்த உருகிய அழைப்பின் உள்ளே உன் வாழ்க்கை கம்பீரம் ஆகிறது. வானளாவும் நெடிய ஸ்தூபிகளுடன் நகரங்களைக் கட்டியெழுப்பும் கலைத்திறன் அங்கிருந்தே அருட்கொடையாக வருகிறது. மலைகள் உயர்ந்தோங்குவதும். மேலும், ”வானத்தை நாம் நம் ஆற்றலினால் படைத்துள்ளோம்” (51:47) என்பதும்.1:127 நாம் ஏன் அழுவதில்லை?

      யாரோ கேட்டார், எத்தியோப்பியாவின் மன்னர் அப்பாஸும் கலீஃபா உமரும் குர்ஆனிலிருந்து ஒரேயொரு வசனம் ஓதப்படுவதைக் கேட்டாலும் அதன் அற்புதத்தில் அழுதார்கள். நாமோ முழு முழு அத்தியாயங்களை ஓதுகிறோம், முழு நூலையுமே ஓதுகிறோம், ஆனால் கொஞ்சமும் அசைவதில்லையே? நாம் ஏன் அழுவதில்லை? முஹம்மத் (ஸல்) அவர்களின் வீறுகொண்ட பிரசன்னம் அருகில் வந்த போது அந்த அகவற் பெண்ணின் ஆலயச் சுவரில் இருந்த கல்-புடைப்பான விலங்குருவங்கள் கூட அழுதன. இறைவனை பிரிந்திருப்பதின் கட்புலனாகாத ஏதொவொரு அலங்கோலம், நாம் உணராததொரு ஏக்கம் நம்மிடம் இருக்கிறது போலும். வாழ்வின் அன்றாடப் பிரச்சனைகள் நம்மைக் காய வைத்துவிட்டன போலும். அதனால்தான், இறைக் காதலின் நெருப்பு நம்மிடம் வரும்போது, ஈரக் கிளைகள் தமது நீரைப் பொங்க விடுவது போல் நாம் அழுவதில்லை. மாறாக நாம் சாம்பல் ஆகிவிடுகிறோம். உலக லட்சியம் என்று சொல்லப்படும் பேராசைதான் நம் சுரணையைக் கெடுத்துவிட்டதா?

      குடும்பங்கள் சிதைந்து சிங்கம் புலி ஆகியவற்றால் தின்னப் பட்டாலும் காதலர்கள் காதலின் பாதையில் சென்றுகொண்டே இருக்கிறார்கள். எல்லாமே எடுபட்டுப் போய்விடுகின்றன. அப்போதும் இறைவனின் பிரசன்னம் அவர்களைக் காத்து வளம் பெறச் செய்கிறது.

(to be continued...)