“யாமறிந்த மொழிகளிலே…” என்று ஆரம்பித்து பாரதி சொன்ன கருத்து எல்லோருக்கும் தெரியும். அதாவது, தமிழைப் போல் இனிமையான மொழி வேறு இல்லை.
இது அவனது
மொழிக் கொள்கை என்று சொல்வது பிழை என்றே எண்ணுகிறேன். பாரதி மொழிப் பற்றாளன் என்பது
உண்மைதான். ஆனால் அவன் மொழி வெறியன் அல்லன். அவனேதான் ”சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து…”
என்றும் சொன்னான். இப்படியெல்லாம் அவன் சொன்னது அந்த அந்தக் கணத்தின் உணர்ச்சி வெளிப்பாடுகள்,
மனோ பாவனைகள் என்றே எண்ணுகிறேன்.
இதில்
எனக்கு பல வருடங்கள் அனுபவமுண்டு. எனது பதினேழாம் வயதிலிருந்தே பல மொழிகளில் அமைந்த
இசைப் பாடல்களையும், மொழியே இல்லாத இசையையும் ரசிக்கத் தொடங்கி விட்டேன்.
உருது
மொழியின் கஸல் மற்றும் கவ்வாலி பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அந்த மொழியின் அழகில்
சொக்கிப் போயிருக்கிறேன். ரசனை அமைந்துவிட்டால் ஆங்கிலமும்தான் எத்தனைப் பேரழகு! உருதுவுக்கே
உரிய லாவகத்தை எவ்வளவு முயன்றாலும் வேறு எந்த மொழியிலும் கொண்டுவர இயலாது. அம்மொழியை
இலக்கிய ரீதியாக அறிந்தோர் இவ்வுண்மை அறிவர்.
ஆனால்,
பேச்சு வழக்கில் இருப்பதையெல்லாம் கேட்டால் எந்த மொழியையும் நாம் ரசிக்க முடியாது போலும்.
‘என்னப்பா இது, காரே பூரேன்னு பேசுறானுங்க’ என்பார் என் தந்தை, உருதுக்காரர்கள் பேசுவதை.
”தென் இந்திய பாஷையே தகர டப்பாவில் கல்லைப் போட்டு ஆட்டுவது போல் இருக்கிறது. அதில்
இசை நயமே இல்லை” என்றார் ஓஷோ. திராவிட மொழிகளைத்தான்! (மலையாளி ஒருவர் எப்படி மலையாளம்
பேசுவார் என்பதை அறபி ஒருவர் மிமிக் பண்ணிக் காட்டிய காணொளி ஒன்றைக் கண்டபோது ஓஷோ சொன்னது
உண்மைதான் என்று தோன்றியது). ஆனால் இந்திய மொழிகளிலேயே தமிழுக்கு அடுத்து எனக்குப்
பிடித்த மொழி ஒன்று உண்டு என்றால், நான் கற்க விரும்பும் மொழி மலையாளம்தான். வட இந்திய
மொழிகளில் என்னைக் கவர்ந்தது பஞ்சாபி.
பஞ்சாபி
மொழியை எனக்கு பசந்தான மொழியாக (பசந்த் – விருப்பம்) ஆக்கியவர் நுஸ்ரத் ஃபதேஹ் அலீ
ஃகான். கவ்வாலி என்னும் இசை வடிவத்தையும் எனக்குப் பிரியமானதாக ஆக்கியவர் அவரே. உலக
இசை மேதைகளுள் ஒருவராக, லெஜண்டாக வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட அற்புதமான இசைக் கலைஞர்,
பாடகர். உருது மொழியில்தான் அதிகமாகப் பாடினார் என்றாலும் பிற கவ்வாலிக் கலைஞர்களை
விடவும் பஞ்சாபி மொழியை அதிகமாகப் பாடியவர் நுஸ்ரத்-தான். அத்ற்குக் காரணம் பஞ்சாபி
அவரின் தாய்மொழி! ஆம், பிரிவினையில் பஞ்சாப் இரண்டாக உடைந்தபோது பஞ்சாபி முஸ்லிம்கள்
பாகிஸ்தானிலும் பஞ்சாபி சீக்கியர்கள் இந்தியாவிலும் அமைந்தார்கள்.
உருதுப்
பேராசிரியர் ஒருவர் ஒருமுறை அஸ்லம் சாபிரி பாடிய கவ்வாலி குறுவட்டு ஒன்றை எனக்குத்
தந்தார். அவரிடம் நான் ஆவலாக நுஸ்ரத்தைப் பற்றிக் கேட்டேன். ‘அவரோட உருதுவ்ல பஞ்சாபி
சாயல் இருக்கும்’ என்று சொன்னார், எனவே தனக்கு அவ்வளவாகப் பிடிக்காது என்பதைப் போல.
அப்போதுதான் இப்படி ஒரு மொழி அரசியல் இருப்பதை அறிந்தேன். எனக்கோ, ஃபரீத் அயாஜ், சாப்ரி
பிரதர்ஸ், ஜாஃபர் பதாயூனி, அஸ்லம் சாபிரி முதலிய அனைத்துக் கவ்வாலியர்களை ஒரு பக்கம்
வைத்தாலும் நுஸ்ரத்துக்கு ஈடாக மாட்டார்கள் என்பதே கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக
மாறாத அபிப்பிராயம்.
நுஸ்ரத்
தங்களது மொழிக்கு மிகப் பெரிய தொண்டாற்றியிருக்கிறார் என்றே பஞ்சாபிகள் அவரைக் கொண்டாடுகிறார்கள்.
மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கு உலக அரங்கில் இசையின் முகவரியே அவர்தான். உருது மொழியின்
இசையை உலகுக்கு எடுத்துச் சென்றவரின் தாய் மொழி பஞ்சாபி! அதே போல், தனது கவிதையின்
மூலம் உருது மொழியை உலக அரங்கில் முன்னிறுத்திய மகாகவி இக்பாலின் தாய்மொழி பஞ்சாபி!
பஞ்சாபிகள் படைமடம் (chivalry) என்னும் வீரத் தன்மை மிகுந்தவர்கள். அதனால்தான் மிருதுவான
உருதுவை இக்பால் தன் கவிதைகளில் எஃகின் வலிமை கொண்ட மொழியாக மாற்றிவிட்டார் போலும்!
கஸல்
என்பது உருது மொழியின் பெருமை என்பார்கள். காதலின் மென்மையை வெளிப்படுத்துவதில் கஸல்
போன்றொரு கவிதை வடிவம் உலக இலக்கியத்தில் வேறெதுவும் இல்லை எனலாம். கஸல் எழுதிப் புகழ்
பெற்ற கவிஞர்கள் பலருண்டு. அதுபோல், கஸல்களை இசைப் பாடல்களாகப் பாடி உலகப் புகழ் அடைந்தவர்கள்
உண்டு. மெஹதி ஹசன், முன்னி பேகம், ஃபரீதா கானம், குலாம் அலி, பேகம் அஃக்தர், ஜகஜீத்
சிங், தலத் அஜீஸ், பங்கஜ் உதாஸ், ஹரிஹரன் என்று நீளும் பட்டியலில் அவரவருக்கு நம்பர்
ஒன் என்று யாரையாவது மிகவும் பிடித்துப் போகும். நண்பர் நாகூர் ரூமிக்கு குலாம் அலி.
‘கமகம் அப்படியே கொட்டும். கேட்டுப் பாருங்க’ என்று ஒருமுறை சொன்னார். கேட்டேன். பிறகும்
எனக்கு ஜகஜீத் சிங்-தான் முதலிடமாகத் தொடர்கிறார். ஒரு காலத்தில் ஹரிஹரனை அப்படி ரசித்தேன்.
பிறகு ஜகஜீத் மேலே வந்தார். அவர்து குரலில் உள்ள ஆழம் வேறு கஜல் பாடகர்களிடம் இல்லை
என்றே எனக்கு எப்போதும் தோன்றுகிறது. உருது கஜல்களின் சிகரமான ஜகஜீத் சிங்கின் தாய்மொழி
பஞ்சாபி!
”செந்தமிழும்
நாப்பழக்கம்” என்பார்கள். எல்லா மொழிகளுக்கும் இது பொருந்தும். ஆனால், பஞ்சாபிக்கு
நாப்பழக்கத்துடன் மூக்குப் பழக்கமும் முக்கியம். ஆமாம், அது மூக்கொலிகள் (nasal
sounds) கணிசமாக வெளிப்படும் மொழி. ஆனால், சீன ஜப்பானிய மொழிகளின் அளவுக்கு இல்லை.
பஞ்சாபி மொழியை உருவாக்கியதில் சூஃபிகளுக்கு முக்கியமான பங்கிருக்கிறது. அறபி மொழியில்
மூக்கொலியாக ஓசை எழுப்புவதை “குன்னா” (ghunna) செய்தல் என்று சொல்வர். அந்த தாக்கம்
பஞ்சாபி மொழியில் வந்துவிட்டது போலும்.
பஞ்சாபி மொழிப் பாடல்களுக்கு ஒரு துள்ளல் தன்மை உண்டு.
அவர்களது நடனமான ’பாங்ரா’வே துள்ளலானதுதான். பரத நாட்டியம், கதக் போன்ற நடனங்களின்
நுட்பங்கள் இல்லாதது என்றாலும் எளிமையான அசைவுகளில் பரவத்தை வெளிப்படுத்தும் நடனம்
அது. அதற்கும் அறபிகளின் வாளேந்திய நடன அசைவுக்கும் தொடர்பிருப்பதைக் காணலாம். போரின்
பின்னான வெற்றிக் களியாட்டமே அந்த நடனமாக உருவாகியிருக்க வேண்டும். அமர்ந்த படி இரண்டு
கைகளையும் விரித்து மேலும் கீழுமாக அசைத்துக் காட்டினாலே போதும், பாங்ரா நடனத்தை அடையாளம்
காட்டிவிடலாம். அத்துடன் ”பல்லே பல்லே” (B ஓசை) என்று சொன்னால் இன்னும் துலக்கம். (சில
ஆண்டுகளுக்கு முன் எங்கள் கல்லூரிக்கு தர நிர்ணயம் செய்வதற்கு வந்த பல்கலைக்கழக மாணியக்
குழுவின் அணியில் பஞ்சாபி ஒருவர் இருந்தார். அப்போது ஒரு பேராசிரியர், பாங்ரா ஆடுவது
போல் கைகளால் செய்கை காட்டிக்கொண்டு சொன்னார், “சிங் ரொம்ப ஸ்ட்ரிக்டாம். நம்ம டிபார்ட்மண்ட்டுக்கு
பல்லே பல்லேதான்”).
அறியாத மொழி ஒன்றை இசைப் பாடலாகக் கேட்பதில் நமக்கு
மனத் தடைகள் ஏதும் இருப்பதில்லை. அதிலும்கூட பலருக்கும் சிரமம் இருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன்.
ஃபார்சி, ஸ்பானிஷ், சம்ஸ்கிருதம், ஃப்ரெஞ்ச் என்று ஏதாவதொரு மொழியில் நல்ல இசையுடன்
கூடிய பாடலொன்றை நான் லயித்துக் கேட்பதைக் கண்டு “புரிகிறதா?” என்று என்னிடம் சிலர்
கேட்டிருக்கிறார்கள். ‘ஆமாம், மொழி புரியாவிட்டாலும் இசை புரிகிறது’ என்று பதில் சொல்லியிருக்கிறேன்.
விஷயம் யாதெனில், நமக்குத் தெரிந்த மொழிக்குத் தொடர்புடைய மொழியாக இருப்பின் இசை வழியாகக்
கேட்டுக்கொண்டே இருந்தால் அந்த மொழியும் மெல்ல மெல்லப் புரியத் தொடங்கிவிடும்!
அறியா
மொழியில் நல்ல இசைப்பாடலைக் கேட்டுவிடலாம்தான். அதே போல், அறியா மொழியின் திரைப்படத்தைக்கூட,
அதன் காட்சிகள் புரியும்படியாக அமைக்கப் பட்டிருந்தால், பார்ப்பதில் சிரமம் இருக்காது.
ஏனெனில் காட்சிகளே கதையைப் புரிய வைத்துவிடும். ஆனால், அறியாத ஒரு மொழியில் ஒருவர்
சொற்பொழிவு நிகழ்த்துவதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா? பஞ்சாபி மொழியை
அப்படிக் கேட்டு ரசிக்க முடியும்! ஒரு பத்து நிமிடங்களாவது.
அப்படி
நான் ரசித்த ஒரு பேச்சாளர் சூஃபி வழியின் குருவாக இருந்த பீர் நசீருத்தீன் நசீர் (ரஹ்).
பிப்ரவரி 2009-இல் தனது அறுபதாவது வயதில் இறந்தார். அவரது தாய்மொழியான பஞ்சாபியிலும்,
இலக்கிய மொழியான உருதுவிலும் மேடையுரை ஆற்றுவதில் தன்னிகரற்ற திறமை கொண்டிருந்தார்.
கவிஞர், பாடகர், சமய அறிஞர் என்று பன்முகத் திறன் பெற்றவர். அவர் பஞ்சாபி மொழியில்
மேடைப் பிரசங்கம் செய்வதை ஒரு நாடகத்தைப் பார்ப்பது போல் பாக்கலாம். விழியசைவும் முகபாவனைகளும்,
அழகிய விரல்கள் கொண்ட கைகளால் நடன அசைவு போல் அவர் காட்டும் அபிநயங்களும் யாரையும்
ஈர்த்துவிடும்.
இப்படித்தான்
பஞ்சாபி மொழி எனது ரசனையின் ஒரு பகுதியாகவே வேர் பிடித்து வந்திருக்கிறது. சென்ற வாரம்
ஆன்மிகத் தோழர்களுடன் மேலைப்பாளையம் வரை பயணமானேன். காரில் எப்போதும் சூஃபிப் பாடல்களையே
கேட்டுக் கொண்டு போவோம். உருதுக் கவ்வாலிகளுக்கிடையே நான் அலைபேசியிலிருந்து பஞ்சாபிப்
பாடல்கள் சிலவற்றையும் ஒலிக்க விட்டேன். ’குருதாஸ் மான்’ பாடிய ‘கீ பனு துனியா தா’
என்னும் பாடல் அது. அந்த இசையின் எடுத்தல் பாணியே உணர்வுகளைக் கிளர கார் ஓட்டிக்கொண்டிருந்த
நண்பர் துள்ளிக்கொண்டு கைகளைத் தட்டினார். பல்லே பல்லே!
Tumhe Dillagi நுஸ்ரத் அலிகானோட
ReplyDeleteபாடல் அர்த்தம் புரியாவிட்டாலும்
எனக்கு ரொம்ப புடிக்கும் ஜி
//நமக்குத் தெரிந்த மொழிக்குத் தொடர்புடைய
மொழியாக இருப்பின் இசை வழியாகக்
கேட்டுக்கொண்டே இருந்தால் அந்த மொழியும்
மெல்ல மெல்லப் புரியத் தொடங்கிவிடும்! //
அருமை உணர்ந்து இருக்கிறேன்.
//மேடைப் பிரசங்கம் செய்வதை ஒரு நாடகத்தைப்
பார்ப்பது போல் பாக்கலாம். விழியசைவும்
முகபாவனைகளும், அழகிய விரல்கள் கொண்ட
கைகளால் நடன அசைவு போல் அவர்
காட்டும் அபிநயங்களும் யாரையும் ஈர்த்துவிடும். //
ரசனை மட்டும் அல்ல அதையும் தாண்டிய "பார்வை "
கொண்டவர் நீங்கள்
தொடர்ந்து எழுதுங்கள்
என் போன்றவர்களுக்காக
என் அறிவும் மேம்பட
அல்லாஹ்வின் ஞானத்தை
அறிந்து கொள்ளவும்
துஆ செய்யுங்கள் ஜி