Sunday, December 23, 2018

பசுக்கழகக் குழம்பி!



                அரசு வேலைக்கு லாயக்கற்ற 33 முதுநிலை படிப்புகள்” என்பது நாளிதழில் வெளிவந்த செய்தி ஒன்றின் தலைப்பு. எந்த நாளிதழ் என்று தெரியவில்லை. அதன் அலைப்படத்தை வாட்ஸேப்பில் வைத்திருந்த பேராசிரியர் அப்துர் ரஜ்ஜாக் என்னிடம் வாசித்துக் காட்டினார். (பின்னர் எனது அலைப்பேசிக்கும் அனுப்பினார்). 

அந்தச் செய்தியை அவர் வாசிக்கும் போது “தமிழக பல்கலைகள் மற்றும் கல்லூரிகளில்…” எனத் தொடங்கும் பத்தியை வாசிக்க மிகவும் தடுமாறினார். ‘பல்கலை’ என்னும் சொல் அவரைத் தடுமாற வைத்தது. அது அவருக்குப் புதிய சொல்லாக இருந்திருக்க வேண்டும். இணையத்தில் எழுதிவரும் நவீன எழுத்தாளர்களால் புழக்கத்தில் கொண்டுவரப்பட்டு இன்று நாளிதழ் வரை வந்திருக்கும் ஒரு சொற் பயன்பாடு அது. பல்கலைக்கழகம் என்பதைத்தான் அப்படிச் சுருக்கிச் சொல்கிறார்கள்.

பேராசிரியர் வேறு அர்த்தம் தொனித்துக் குழம்பிப் போயிருக்கலாம். “இவர் ஒரு பல்துறை வித்தகர்” என்று நண்பருக்கு ஒருவரை அறிமுகஞ் செய்கிறார் ஒருவர். “அப்படியா?” என்கிறார் இவர். “இல்லியா பின்ன? பிடிஎஸ் எம்,டிங்க இவரு” என்று அநியாயத்துக்குக் கடிக்கிறார் அவர். அப்படி நினைத்திருக்கலாம்.

சரி. பல்கலைக் கழகம் என்பதை பல்கலை என்று பிரயோகித்ததை நான் முதன் முதலில் ஜெயமோகனின் எழுத்தில்தான் கண்டேன். சுருக்கிச் சொல்ல வேண்டினால் அல்லது வேண்டியிருந்தால் ப.க.கழகம் என்றோ ப.க.க என்றோ சொல்லலாமே? வேண்டாம். மேலும் குழப்பம்தான் விளையும். ஏதோ புதிய அரசியல் கட்சி ஒன்றின் பெயர் போல் ஒலிக்கிறது. ஆகையால் பல்கலை என்றே பகர்ந்தனர் போலும்.

யோசித்துப் பார்க்கையில், கழகம் என்ற சொல்லின் மீதான ஒவ்வாமையால்தான் அதை நறுக்கி விட்டுப் பயன்படுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது (’பெயரைக் கேட்டாலே அதிருதுல்ல’). ஆக, இது சுருக்கல் அல்ல, நறுக்கல்!

      அரசியற் கழகங்கள் வந்த பின்புதான் சர்வகலாசாலை என்றிருந்த யூனிவர்சிட்டி தூய தமிழில் ‘பல்கலைக்கழகம்’ என்னும் நாமகரணம் பூண்டது. நல்ல வேலை, மீண்டும் சமற்கிருதச் சொல்லாடலுக்கே போய்விடாமல் பல்கலை என்றாவது எழுதுகிறார்கள். சாலை என்பதும்கூட வடமொழியில் ’ஷாலா’ என்றே உச்சரிக்கப்படும். (இந்தியில் ’சாலா’ என்று வைகிறார்களே. அது வேறு. குறிப்பாக ’மதராசி’களை, அதவாது ’சென்னைட்ஸ்’களையும் அதன்வழி ஒட்டுமொத்த தமிழர்களையும் இழித்து விளிக்கப் பயன்படும் அடைமொழி!). அப்படி யாராவது செம் சமற்கிருத உச்சரிப்பாக ‘சர்வகலாஷாலா’ என்றோ அல்லது சகரத்தை ஷவரம் செய்கிற பிராமண உச்சரிப்பாக ‘ஷர்வகலாஷாலா’ என்றோ செப்பத் தொடங்கிவிடவும் சாத்தியம் உள்ளது. (பிறகு அப்பிரயோகம், பல்கலையைச் சார்ந்த யாரையாவது தூற்றுவதற்கான வடிவமாகவும் மாறிவிடக் கூடும்: ‘அதோ போவுதே, அது ஒரு சர்வகலாசாலா!”).

      வரலாற்றில் சில இயக்கங்கள் தோன்றி வந்து சில மாற்றங்களைச் செய்து விடுகின்றன. அவை காலப்போக்கில் மக்களிடம் ஏற்பும் பெற்று வேர் பிடித்து நிற்கின்றன. அவற்றைத் தேவையில்லாமல் மாற்றிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.















      கும்பகோணம் அருகே ஆடுதுறைக்குப் புறத்தே “ராயல் காஃபி” என்றொரு கடை உள்ளது. அது, பிராமணர்களுக்கான ஓர் நவீன அடுக்குக் குடியிருப்பின் வாசலில் இருக்கிறது. ஓடு வேய்ந்து மரத்தூண்கள் நிறுத்தி குத்து விளக்கெறிய ஊதுவத்திப் புகை நெளிந்திழைய, கல்கி, கிருபானந்த வாரியார் போன்றோரின் நூற்கள் அணியியற்ற கருப்பட்டி, நாட்டுச் சக்கரை, தேய்ங்காய்ப்பால் முறுக்கு, சீடை, ஓலைப்பெட்டிக்குள் இட்ட மிட்டாய் வகைகள் இத்தியாதிகள் என செவ்வியற் கலையம்சத்துடன் அமைந்த பாந்தமான கடை. கர்நாடக ராகங்களின் பெயர் சூட்டப்பட்ட காஃபி வகைகள் விற்கிறார்கள். நாக்கில் வெகு நேரம் சுவையும் மணமும் ஒட்டிக்கொண்டிரும் அருமையான காஃபி சுடச் சுட வேண்டுவோர் அவ்வழியே பயணித்தால் அவசியம் நிற்க வேண்டிய இடம் அது. “இங்கே பக்கத்தில் காஞ்சி காமக்கோடி பீடத்துக்கான ஒரு குருகுலம் இருக்கு. அங்க உள்ள கோசாலையிலிருந்துதான் பால் எடுத்தாறது. அதுனாலதான் இவ்ளோ ஷுவையா இருக்கு” என்றார் கடையின் இளம் ஊழியர் ஒருவர்.

இந்தச் செய்தியை நான் யாரிடமாவது பகிர்வதென்றால், “ஆடுதுறைக்கு வெளியே ஒரு காஃபிக் கடை இருக்குங்க. அல்ஹம்துலில்லாஹ்! என்னா டேஸ்ட்டுங்கிறீங்க! குருகுலம் ஒன்னு இருக்காம். அங்க உள்ள கோசாலைல இருந்து பால் கொண்டு வந்து போடுறாங்களாம்” என்றுதான் சொல்வேன்.

அதை ஒருபோதும் இப்படிச் சொல்ல மாட்டேன்: “ஆடுதுறைக்கு ஊர்ப்புறத்தே ஒரு குழம்பிக் கடை இருக்குங்க. (ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டியபடி) எல்லாப் புகழும் (ஏக) இறைவனுக்கே! என்னா சுவைங்கறீங்க. மறைப்பாடப் பள்ளி ஒன்று இருக்காம். அங்க உள்ள பசுக்கழகத்துல இருந்து பால் கொண்டு வந்து போடுறாங்களாம்!”


No comments:

Post a Comment