Monday, December 17, 2018

இதயம் ஒரு கண்ணாடி



              





   அண்மையில் முகநூலில் உந்துலுஸ் நூல் வட்டத்திலிருந்து முகம்மது கீலான் என்பவர் நபிகள் நாயகத்தின் பொன்மொழி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். “சமூக ஊடகம் மற்றும் தொடர்ச்சியான செய்திப்பரப்பு உள்ள இக்காலத்தில் புழங்குவதற்கு மிகவும் கடினமான ஹதீஸ் இது” என்று அந்த நபிமொழியை அவர் குறிப்பிட்டிருந்தார். நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த ஹதீஸ் இதுவே:

      ”தனக்குத் தேவையற்ற விஷயங்களைத் துறந்துவிடுதல் ஒரு நபரின் அழகிய இஸ்லாத்தில் உள்ளதாகும்” (’மின் ஹுஸ்னி இஸ்லாமில் மர்-இ தர்க்குஹு மா லா யஃனீஹி’ - நூல்: திர்மிதி). இந்த வாசகத்தில் உள்ள ”தர்க்” என்னு சொல்லுக்குத் துறத்தல், விட்டுவிடுதல் என்று அர்த்தம்.

      இரண்டு வகையான துறவுகள் உள்ளன. ரஹ்பானிய்யத் மற்றும் ஜுஹ்து என்று அவற்றை அறபியில் குறிப்பிடுவர்.

      ரஹ்பானிய்யத் என்னும் வகையான துறவு இஸ்லாத்தில் அனுமதிக்கப் படவில்லை. “இஸ்லாத்தில் துறவு இல்லை” (”லா ரஹ்பானிய்யத் ஃபில் இஸ்லாம்”) என்று நபிகள் நாயகம் சொன்னது இந்த வகைத் துறவைத்தான்.

      ஆனால், இன்னொரு வகையான துறவான ‘ஜுஹ்து’ என்பதை இஸ்லாம் மிகவும் வலியுறுத்துகிறது. ஜுஹ்து என்றால் பற்றின்மை என்று பொருள். ”தர்க்குஹு மா லா யஃனீஹி” - தனக்குத் தேவையில்லாத விஷயங்களைத் துறத்தல் என்பது அதுதான். அதாவது, உனது ஆன்மிக வாழ்வுக்கு அவசியமே இல்லாத செயல்களையும் பேச்சுக்களையும் எண்ணங்களையும் துறந்து விடுவதாகும்.

      தனது ஆன்மிகத் தோழர்களான ‘சஹாபா’க்கள் பற்றி நபிகள் நாயகம் நவின்றார்கள், “இந்தச் சமுதாயத்தின் சீர்மை அகத்தெளிவு மற்றும் உலகப் பற்றின்மை ஆகியவற்றால் தொடங்கியது” (’அவ்வலு ஸலாஹி ஹாதிஹி உம்ம(த்)தி பில்-யகீனி வல்-ஜுஹ்தி’ - அறிவிப்பாளர்: அம்ரிப்னு ஷுஐப் (ரஹ்); நூல்: பைஹகீ).

      இவ்விருவகைத் துறவுகளுக்கும் வேறுபாடு என்ன? ஒன்றை நபி அனுமதிக்கவில்லை, தடுத்துள்ளார்கள். மற்றொன்றை நபி வலியுறுத்துகிறார்கள், போற்றுகிறார்கள். எனவே, முன்னதான துறவு தீயது என்பதும் பின்னதான துறவு நல்லது என்றும் புரிகிறது. எனில், இந்த இரண்டு துறவு வகைகளின் தன்மைகள் என்ன?


      
























 சமய வாழ்வின், ஆன்மிகத்தின் நோக்கமே இறைவனை அடைவதுதான். இறைவனை நெருங்க விடாமல் உன்னைத் தடுக்கின்ற அனைத்தையும் நீ துறந்தாக வேண்டும். இறைவனை நீ நெருங்குவதற்கு உதவியாக இருக்கும் அருட்கொடைகளை நீ பேண வேண்டும். அவற்றைத் துறக்கக் கூடாது.

      எனவே, இறைவனின் அருட்கொடைகளைத் துறப்பதே ‘ரஹ்பானிய்யத்’ என்னும் துறவு. அதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இறைவனை நெருங்குவதற்குத் தடையாகும் விஷயங்களைத் துறப்பதே ‘ஜுஹ்து’ என்னும் துறவு. அதற்கு இஸ்லாத்தில் ஏற்றமானதொரு இடம் உள்ளது.

      தேவையற்ற விஷயங்களை விட்டுவிடுதல் என்றால் என்ன? மனதிற்குள் படைப்புக்களும் உலகமும் நுழையாமல் பாதுகாத்தல். அப்போதுதான் மனம் இறைவனின் தியானத்தில் திளைக்க முடியும். ஒருவர் தனது ”அன்ஃபுஸ்” என்னும் அகத்தினுள் மிக ஆழமாக மூழ்கி இறைவனின் அத்தாட்சிகளைக் காண்பதற்கு மனம் தெளிவாக இருப்பது அவசியம்.

      ”யகீன் வல்-ஜுஹ்து” – அகத்தெளிவும் பற்றின்மையும் என்று நபிகள் நாயகம் அருளியிருப்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இரண்டும் மிக உறுதியான தொடர்பு கொண்டவை. உலகப் பற்று உள்ளவனுக்கு – அதாவது, உலகைத் தனது உள்ளத்தில் சுமந்து கொண்டிருப்பவனுக்கு ஒருபோதும் அகத்தெளிவு ஏற்படாது. அதாவது, “பஸீரா” என்னும் ’அகப் பார்வை’ உண்டாகாது. அவன் அகக் குருடனாகவே இருப்பான். இறைவனின் அத்தாட்சிகளைப் புறத்திலும் அகத்திலும் அவனால் காணவே முடியாது.

   
  














 இங்கே, துறவு குறித்தும், மடப்பள்ளிகள் குறித்தும் முன்பொரு கட்டுரையில் ஜெயமோகன் எழுதியிருந்ததை நினைவு கூர்கிறேன். துறவு ஏன் தேவைப்படுகிறது என்றால், உலகம் உங்கள் மனதிற்குள் தினம் தினம் நாளெல்லாம் பல்லாயிரம் பிம்பங்களைக் கொண்டு வந்து கொட்டுகிறது. பிம்பங்களின் குவியலால் உங்கள் மனம் நிரம்பிக் கிடக்கும்போது அதில் ஒருபோதும் தியானம் சித்திக்க இயலாது. தியான நிலை கூடிவருவது மிகவும் கடினம். தினம் தினம் பிம்பங்களை அழிப்பதில் போராடுவதிலேயே காலம் கணிசமாக விரயமாகி ஒழிந்து போகும். எனவே, புறவுலகின் பிம்பங்களே உள்ளத்தினுள் நுழையாத படிக்கு ஒரு சூழலை உருவாக்கினார்கள். அவையே மடங்கள்’ என்னும் கருத்தினை அவர் சொல்லியிருந்தார். (அவர் சொன்ன கருத்தினை உள்வாங்கி எனது சொற்களில் இங்கே எழுதியுள்ளேன்).

      இஸ்லாத்தில் ‘மதரஸா’ என்னும் கல்விச் சாலைகள் அதே அடிப்படையில்தான் உண்டாயின. ஏனெனில், வீட்டிலிருந்தபடி அவ்வளவு குறுகிய காலத்தில் எளிதாக குர்ஆன் முழுவதையும் மனனம் செய்வதோ அல்லது சமயவியலைப் படிப்பதோ முடியாது. (ஸ்கூல்களும் காலேஜ்களும்கூட ஒருவகையில் பகுதி நேர மடங்கள்தான்). ”ஃகான்காஹ்” என்னும் சூஃபி தியான நிலையங்களும் அப்படித்தான் உருவாகின, புறவுலகின் ஊடுறுவல் இல்லாச் சூழலில் இறைவனை தியானம் செய்வதற்காக. (நபிகள் நாயகம் காலத்தில் தனியாக ஃகான்காஹ் இல்லையே என்றால், நபித்தோழர்களின் இல்லங்களே ஃகான்காஹ் என்னும் நிலையில்தான் இருந்தன. அவர்களின் எளிமை நிலையை எண்ணிப் பாருங்கள்! வீட்டில் அடிப்படையான நான்கைந்து பொருட்கள் மட்டுமே இருந்தன!)

      ’ரஹ்பானிய்யத்’ என்னும் துறவாவது திருமணம் புரியாமல், இல்லறம் பேணாமல், பிள்ளைகள் பெறாமல், அவர்களுக்காக சம்பாதிக்காமல், தனிக்கட்டையாக வாழ்வது. இந்த வகைத் துறவில் மனதிற்குள் பிம்பங்கள் வந்து குவிவதைத் தவிர்ப்பது மிகவும் எளிது என்றாலும் இதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. அதே சமயம், இறைவனை மறந்த நிலையில், அவனை அடைவதற்கான தியானங்களில் ஈடுபடாமல், மனைவி மக்களே கதி என்று வாழ்வதையும் இஸ்லாம் தடுக்கிறது. 



























இல்லற வாழ்க்கை முறையில் அவ்வப்போது இதயத்தில் உலக பிம்பங்கள் வந்து விழுவதைத் தவிர்க்க இயலாது என்பது உண்மை எனினும், அதனை உடனுக்குடன் இறை தியானத்தின் வழி துடைத்துத் தூய்மை செய்துவிடுவது எளிது. அதற்கான வழியை நபிகள் நாயகம் சொன்னார்கள், “ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மெருகு, தெளிவு உண்டு. உள்ளத்தின் தெளிவு, மெருகு இறைவனின் தியானம்” (”இன்ன லி குல்லி ஷை-இன் ஜிலாஅன் வ ஜிலாஅல் குலூபி திக்ருல்லாஹி அஸ்ஸ வ ஜல்ல” – அறிவிப்பாளர்: அபூ தர்தா (ரலி); நூல்: பைஹகீ).

இஸ்லாத்தின் அத்தாட்சிகளாகவும் மகத்துவமாகவும் விளங்கும் மாபெரும் மகான்கள், இறைநேசச் செல்வர்கள், சூஃபிகள் எல்லாம் இல்லறம் பேணி ஜுஹ்து என்னும் நல்லறம் புரிந்து, இறைவனின் தியானத்தில் ஈடுபட்டுத்தான் மெய்ஞ்ஞானமும் இறைநேசமும் அடைந்தார்கள். அவர்களில் ஒருவரான, இந்த ரபீயுல் ஆஃகிர் என்னும் மாதத்தில் இம் மண்ணகத்தில் உதித்தவர்களான முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்கள் தமது “சிர்ருல் அஸ்ரார்” (’ரகசியங்களின் ரகசியம்’) என்னும் சிறு மா நூலில் சொல்கிறார்கள்:

“இனிய நண்பா! உனது உள்ளம் ஒரு மெருகூட்டிய கண்ணாடி. அதன் மீது படிந்திருக்கும் தூசுப் படலத்தை நீ துடைத்துத் தூய்மை செய். ஏனெனில், தெய்வீக ரகசியங்களின் ஒளியைப் பிரதிபலிப்பதற்காகவே அது படைக்கப் பட்டுள்ளது.”

இவ்வாறு சொல்லிய பின், அன்னனம் மனதைத் தூய்மை செய்தால் எந்த எந்த நிலைகளில் இறையொளி அதில் பிரதிபலிக்கும் என்னும் விளக்கங்களை மகான் அவர்கள் தருகிறார்கள். இறுதியாகச் சொல்கிறார்கள்:

“இவை எல்லாம் உனது இதயம் என்னும் கண்ணாடி தூய்மை செய்யப்பட்ட பின்னரே ஆரம்பம் ஆகும். நீ அவனுக்காக அவனிடம் அவனைக் கொண்டு நாடி, கேட்கத் தொடங்கும்போது மட்டுமே தெய்வீக ரகசியங்களின் ஒளி அதன் மீது விழும்.”

No comments:

Post a Comment