Saturday, November 26, 2011

சமவெளிக் காற்று

மடிக்கணினி சரியாகி வர இன்னும் ஒரு வாரம் ஆகலாம். கணினி மருத்துவர் அப்படித்தான் சொன்னார். பதினைந்து நாட்கள் அவகாசம் வேண்டும் என்று சொல்லியிருந்தார். இந்த இடைவெளி இறைவனின் திட்டம் என்று மனதார ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இப்படியொரு கால இடைவெளி எனக்குத் தேவை என்பதை அவன் அறிந்திருக்கிறான். தியானத்தில் என்னை நான் கொஞ்சம் ஆழமாக்கிக் கொள்ள இந்த இடைவெளி எனக்குத் தரப்பட்டுள்ளது என்று புரிந்து கொள்கிறேன்.

எனி அப்டேட்ஸ்? என்று சகோதரர் பக்ருதீன் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். (பல நாட்கள் கழித்து இப்போதுதான் 
இணையத்தைத் திறந்து பார்க்கிறேன். என் பெற்றோரின் வீட்டுக்கு வந்திருக்கிறேன். இது என் அம்மாவின் மடிக்கணினி.) எப்படி நான் அப்டேட்டுவது என்று யோசிக்கிறேன். அதற்கும் ஒரு நேரம் வந்துகொண்டுள்ளது என்று உணர்கிறேன், இன்ஷா அல்லாஹ்!

முதலில் என் மனதை நானே துருவிப் பார்த்துக் கொள்கிறேன். எழுத முடியவில்லையே என்று நான் வருந்துகிறேனா? என்று. வருத்தம் இருக்கிறது என்றால் ஏன்? என் எழுத்து அமுதசுரபி என்றால், நான் ஒரு மணிமேகலை என்றால் என் வருத்தம் கருணை ஆகலாம். ஆனால் என் எழுத்து ஒரு உணவு விடுதி என்றால்? என் வருத்தம் வெறும் வியாபாரம்தான். வருத்தம் இருக்கக் கூடாது. ஒரு கட்டுரையில் வெங்கட் சாமிநாதன் சொல்லியிருந்தார், இப்போதெல்லாம் எழுத்தாளன் என்பவன் தொடந்து எழுதியாக வேண்டும். எதையாவது எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் அவனை நியாபகம் வைத்திருப்பார்கள். இடைவெளி விட்டான் என்றால் அவன் கதை முடிந்தது. அவனை மறந்து விடுவார்கள். இந்தச் சூழலின் அழுத்தம் எழுதும்படி நிர்ப்பந்திக்கிறது என்றால், அதன் அழுத்தத்தில் எழுதப்படும் எழுத்து எந்த அளவு ஜீவனுள்ளதாக இருக்க முடியும்?

சபாவில் புல்லாங்குழல் வாசிக்கும் ஒரு கலைஞனாக அல்லாமல், தான் ஒரு கலைஞன் என்ற பிரக்ஞையே இல்லாமல் சமவெளியில் புல்லாங்குழல் வாசிக்கும் ஒரு இடையனைப் போல் எழுத வேண்டும் என்று என் உள்மனம் உணர்கிறது.

உண்மையில், இந்தச் சிறிய கால இடைவெளியில் மனம் கொஞ்சம் நெட்டி முறித்துக் கொண்டுள்ளது, பாயை உதறிப் போட்டுள்ளது.குடும்பத்தோடு, உறவினர்களோடு பாண்டிச்சேரி செல்ல சந்தர்ப்பம் வாய்த்தது. உடனே கிளம்பிவிட்டேன். ஆரோவில் உள்ளே இருந்த சூழல் என் மனநிலையை ஒத்திருந்தது. உள்ளும் வெளியும் ஒத்திசையும் தருணங்கள் மிகவும் அரிதாகவே அமைகிறது. இங்கே திருச்சியில் என்றால் சாத்தனூர் பக்கம் உள்ள காட்டுக்குள் சென்றுவிடுவேன்.இப்போது இதை எழுதிக் கொண்டிருப்பதற்கும் ஒரு தூண்டுதல் காரணம். ஒரு வருடத்திற்கு முன் பாதியில் வாசிப்பை நிறுத்தி வைத்திருந்த ஒரு நாவலை எடுத்துத் தொடர்ந்தேன். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான பவ்லோ குய்லோ எழுதிய "THE ZAHIR". ( அவர் பெயரை இப்படித்தான் அவரது தாய்மொழியில் உச்சரிக்கிறார்கள் என்பதை சமீபத்தில்தான் ஒரு வீடியோவில் கண்டறிந்தேன்.)
அதில் இரண்டு பத்திகள் என் வாழ்வின் இப்போதைய தருணத்தைப் பிரதிபலிப்பதாகக் காண்கிறேன். 

"I try to log on to the internet but it's not working. It's never been the same since I destroyed the connection. I called various technicians, but, when they finally turned up, they could find nothing wrong with the computer. They asked me what I was complaining about, spent half an hour doing tests, changed the configuration, and assured me that the problem lay not with me but with the server. I allowed myself to be convinced that everything was, in fact, fine, and I felt ridiculous for having asked for help. Two or three hours later, the computer and the connection would both crash. Now, after months of physical and psychological wear and tear, I simply accept that technology is stronger and more powerful than me: it works when it wants to, and when it doesn't, it's best to sit down and read the paper or go for a walk, and just wait until the cables and the telephone links are in a better mood and the computer decides to work again. I am not, I have discovered, my computer's master: it has a life of it's own.
                    I try a few more times, but I know from experience that it's best just to give up. The Internet, the biggest library in the world, has closed its doors to me for the moment."

என் மடிக்கணினி கொலாப்ஸ் ஆனதை ஒரு பிள்ளைக்கு நேர்ந்த உடல்நலக் குறைவைப் போலவே நான் சித்தரித்து எழுதியிருந்ததை பேராசிரியர் வ.மு.யூனுஸ் மிகவும் பாராட்டினார். கணினிக்கு அதனுடைய சொந்த உயிர் உண்டு என்று பவ்லோ குய்லோ எழுதியிருப்பதைப் படித்தவுடன் சந்தோஷமாக இருந்தது. கீழை ஞான மரபின் பார்வை இது. ஜீவன் இல்லாத ஓர் அணுவும்கூட பிரபஞ்சத்தில் இல்லை. ஒரு மரத்தை வெட்டுவதற்காக அதனிடம் அனுமதி வேண்டி நிற்கும் ஜென் தச்சன் என்  நினைவில் வந்து நின்றான். சூபிகளின் ஞான தரிசனமும் இதுதான். உயிரற்ற பொருள் என்று எதுவுமே இல்லை என்கிறார் இப்னுல் அரபி.

"பஞ்ச பூதங்களும் தாதுப்பொருட்களும்
மனிதனின் பார்வையில் உயிரற்றவை
ஆனால் அவை இறைவனின் பார்வையில்
உயிருடன் இயங்கிக் கொண்டுள்ளன"
என்கிறார் மவ்லானா ரூமி. சூபி ஞானி இறைவனின் பார்வைக் கோணத்தில் உலகைக் காண்பவர். எனவே அவருக்கு எல்லாப் பொருட்களும் உயிருள்ளவையே.

நாவலின் இந்தப் பத்தியைப் படித்தபோது உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். தொடர்ந்து கதை வேகமாக நகர்ந்தது. கதைப்படி, அதன் முக்கிய பாத்திரமான எழுத்தாளன் தன்னை விட்டு ஒருநாள் மாயமாய் மறைந்து போய்விட்ட தன் மனைவியைத் தேடிக்கொண்டு அமெரிக்காவிலிருந்து பாரிஸ் செல்கிறான். பின்னர் பாரிஸில் இருந்து கசகிஸ்தானுக்குச் செல்கிறான். கசகிஸ்தான் நாட்டின் சமவெளிகளில் வாழும் தொல்குடியினரின் வீட்டில் "டெங்ரி" என்னும் சமய மரபைக் கற்றுக்கொண்டும், கம்பளி பின்னிக்கொண்டும் இருக்கும் தன் மனைவியைக் கண்டடைகிறான். இரண்டு வருடங்கள்- ஒன்பது மாதங்கள்- பதினொரு நாட்கள்- பதினொரு மணிநேரம் அவரைப் பிரிந்திருந்த மனைவி அப்போது கர்ப்பமாக இருக்கிறாள் என்பதையும் அறிகிறார். அவள் ஏன் அப்படி சொல்லாமல் திடீரென்று அவரைப் பிரிந்து வந்தாள்? ஏன் அங்கே வந்தாள்? என்பதெல்லாம் கதையோட்டத்தோடு வலிக்க வலிக்கச் சொல்லப்படுகிறது. அதையெல்லாம் இந்த நாவலை வாசித்துத்தான் அனுபவிக்க முடியும்.கசகிஸ்தான் நாட்டின் சமவெளிகளில் அவர் அடையும் அனுபவத்தை இப்படி வருணிக்கிறார் பவ்லோ குய்லோ:
"I saw the endless steppes, which, although they appeared to be nothing but desert, were, in fact, full of life, full of creatures hidden in the low scrub. I saw the flat horizon, the vast empty space, heard the sound of horses hooves', the quiet wind, and then, all around us, nothing, absolutely nothing. It was as if the world had chosen this place to display, at once its vastness, simplicity and complexity. It was as if we could - and should- become like the steppes, empty, infinite and, at the same time, full of life.
I looked up at the blue sky, took off my dark glasses, and allowed myself to be filled by that light, by the feeling of being simultaneously nowhere and everywhere. We rode on in silence, stopping now and then to let the horses drink from streams that only someone who knew the place would have been able to find. Occasionally, we would see other horsemen in the distance or shepherds with their flocks, framed by the plain and by the sky. ............    ........    .........
.........  .........  ..........  A sense of Paradise descends from the skies. And I am aware that I am living through an unforgettable moment in my life; it is the kind of awareness we often have precisely when the magic moment has passed. I am entirely here, without past, without future, entirely focused on the morning, on the music of the horses' hooves, on the gentleness of the wind caressing my body, on the unexpected grace of contemplating sky, earth, men. I feel a sense of adoration and ecstasy. I am thankful for being alive. I pray quietly, listening to the voice of nature, and understanding that the invisible world always manifests in the visible world."இந்தப் பத்திகளைப் படித்தபோது மூச்சு இயல்பாக ஆழம் கொண்டு நெஞ்சு விம்மியது. ஆழ்மனதிலிருந்து ஓர்மைகள் மேலெழுந்து வந்தன. இதேபோன்ற தருணங்களை நான் அடைந்துகொண்ட நினைவுகள். குறிப்பாக, இந்தப்  பத்திகளைப் படிக்கையில் நான் 'ராமக்கல்மேட்டில்' நின்றபோது அடைந்த அதே அனுபவத்தை பவ்லோ குய்லோவின் வழியாக நான் மீட்டெடுப்பதாக உணர்ந்தேன். மீண்டும் ஒருமுறை ராமக்கல்மேட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. வாகமன் என்றொரு அற்புதமான இடமும் இருக்கிறதாம். அங்கேயும் செல்ல வேண்டும்.


கேரளா இடுக்கி மாவட்டத்தின்
ராமக்கல்மேட்டில் ஒரு மலையின் உச்சியில் உள்ள சிலை.

Wednesday, November 9, 2011

அனாதைக் கல்
கற்களின் வசீகரம்
குறைந்ததாயில்லை
புற்களின் அழகிற்கொன்றும்

புல்
அவளின் நடனம்
கல்
தியானம்.

உயிரின் அலைவுகளை
தேகமெங்கும் கோடெழுதிக்
கிடக்கின்றன இந்தக்
கல்வனமெங்கும்

ஓடைக்கரை நெடுகில்
நீரின் கல்வெட்டு

கதிரில் கனலுமொரு
பெருங்கல்லின் நிழலில்
தண்ணென்றிருக்குமொரு
சிறிய கல்.

மனதில் மிதப்பதாய்
இருக்குமிந்தக் கற்கள்
கனப்பதாயிருக்கக்கூடும்
கைகளில்

கல்லொலி சொல்லும்
கதைகள் கேட்டபடிக்
காலாற நடந்தேன்
தொடர்வண்டிப் பாதையில்
அன்றொரு நாள்

கண்கொட்டாமல்
பார்த்துக்கொண்டிருக்கையில்
கருவிழிகளைக்
கண்ணீரால் கழுவியது
பிளவுக் காயத்தில்
ஊழிக் கருமை மின்ன
கிடந்ததொரு
அனாதைக் கல்.