Friday, January 28, 2011

நீயே என் தேவை

"நீயே என் தேவை"


உன் உள்ளம்
உருகி உருகி
உச்சரித்ததுண்டா
எப்போதேனும் இப்படி?


பிரபஞ்சத் திரையின்
ஒவ்வொரு இழையும்
ஊடும் பாவுமாய்
உச்சரிக்கின்றது இதை!


சூரியனைச்
சுற்றி வரும் பூமி
சூரியனிடம்...


பூமியைச்
சுற்றி வரும் நிலா
பூமியிடம்...


விரையும் விட்டில்
விளக்கிடம்...


வேர் விரல்களால்
பற்றிப் பிடித்து ஏறிப்
படரும் கொடி
மரத்திடம்...


தாகித்த வாய்
தண்ணீர்க் குவளையிடம்.


கால்களின்
கவசங்களுக்குள்
உயிர் கசியும் இரையிடம்
வேட்டை மிருகம்
வேறென்ன சொல்கிறது?


நிலா எரியும் இரவில்
நினைவு சரியும் உறவில்
காதலர்களின்
முத்தங்கள் பேசும்
முகவுரை ?
முடிவுரை ?


"நீயே என் தேவை"


உயிர் எடுப்பதும்
உயிர் கொடுப்பதும்
நாளும் இப்படியே

தேவைகளின் போர்வையில்
உன்னிடம் வருகிறான்
தேவைகள் எதுவும்
இல்லாதவன்.


அந்த
மேலான நண்பனிடம்
சொல்:
"நீயே என் தேவை"


அந்த வாக்கியத்தின் சுவையைத்
துளித் துளியாய்
அனுபவித்திரு.
பேசாதே!இது
மூச்சு விடும் காலம்.
பேசாதே.

காலத்தின் மூச்சாய்
உன் மூச்சு ஆகும் வரை
பேசாதே.

விண்-மண்
விருட்சங்கள்
விலங்குகள்
எல்லாம் ஏகமென்று
தழுவி வரும் தென்றல்
உன்னைத் தொட்டுச் 
சொல்வது என்ன?

"இது 
மூச்சு விடும் காலம்
பேசாதே!" 

Thursday, January 27, 2011

தட்டினார் திறந்தேன்


காட்டிலிருந்து ஊருக்குள் ஒரு நரிக்குட்டி ஓடிக்கொண்டிருந்தது. வாலில் கால் அடிக்க பீதியுடன் தெரித்து ஓடிக்கொண்டிருந்த அந்த நரிக்குட்டியை வழிமறித்து, “ஏ நன்னாரிக் குட்டியே! ஏன் இப்படி அரண்டு ஓடுகிறாய்? காட்டில் தீப்பிடித்துக் கொண்டதா?” என்று சிலர் கேட்டார்கள். மூச்சு இரைக்க அந்த நரிக்குட்டி சொன்னது, “ஐயா, காட்டிற்குள் அரசன் தன் ஆட்களுடன் வந்திருக்கிறான். அவர்கள் சிங்கத்தைப் பிடிக்கிறார்கள். அதனால்தான் தப்பித்து ஓடிக்கொண்டிருக்கிறேன்.” இதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள். “அட அசட்டு நரிக்குட்டியே, அரசன் சிங்கத்தைத்தானே பிடிக்கிறான். உன்னை ஏன் பிடிக்கப் போகிறான்? நீ நரிக்குட்டிதானே, ஏன் பயந்து ஓடுகிறாய்?” என்று கேட்டார்கள். அந்த நரிக்குட்டி சொன்னது, “உங்களுக்கு விஷயம் புரியவில்லை. அரசனிடம் என்னைக் காட்டி, ‘அரசே, இதுவும் சிங்கக் குட்டிதான்’ என்று யாராவது சொல்லிவிட்டால் அவன் என்னையும் பிடித்துக் கூண்டில் அடைத்துவிடுவான். எத்தனை அபத்தமான விசயம் சொல்லப்பட்டாலும் அதை நம்புவதற்கென்றே நாலு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்!”

இமாம் சாஅதி என்ற பாரசீக சூஃபி ஞானி எழுதிய ’குலிஸ்தான்’ (ரோஜாத் தோட்டம்) என்னும் காவியத்தில் உள்ள இந்தக் கதைதான் எனக்கு ஞாபகம் வந்தது. அத்துடன் சேர்த்து, ‘கேட்கிறவன் கேணையா இருந்தா எறும்பு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்’ என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்களே, அதுவும் ஞாபகம் வந்தது. இதெல்லாம் ஞாபகம் வரும்படி அப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

காலை எட்டேகால் மணி. நானும் மனைவியும் பரபரப்பாக இருக்கும் நேரம். அதாவது குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பி நான் கல்லூரிக்குக் கிளம்பும் நேரம். மனைவி சமையலறையில் தோசை சுட்டுக்கொண்டிருந்தாள். நான் குளியலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அப்போது பார்த்து அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்து பார்த்தேன். வெள்ளை ஜிப்பா & கைலியில் ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். கூட யாராவது நிற்கிறார்களா என்று தேடினேன். அண்ட் கோ யாருமில்லை. ஜமாத்திற்கு அழைக்க வருபவர்கள் என்றால் இந்த நேரத்துக்கு வரமாட்டார்கள். மேலும் அவர்கள் தனியாகவும் வரமாட்டார்கள். கும்பலாகத்தான் வருவார்கள். அமீர் சாகிப் (தலைவர்), ரெஹபர் (வழிகாட்டி), முத்தகல்லிம் ( பேசுபவர். முத்தம் கொடுப்பவர் அல்ல.) மற்றும் முஹல்லா (லோக்கல் ஏரியா) பற்றி ‘பிக்ரு’ (கவலை) படுகின்ற சிலர். இதுதான் தப்லீக் சந்திப்புக் குழுவின் அமைப்பு. இப்படிச் சந்திப்பதை அரபியில் “குசூசி முலாக்காத்” என்று குறிப்பிடுவார்கள். பொதுவாக எனக்கு அது குத்தூசி முலாக்காத்தாக இருப்பதால் என் வீட்டு வாசலில் ஜமாத்தைப் பார்த்தாலே நான் ஊசிக்கு பயப்படும் குழந்தை போல் பம்மிவிடுவேன். இந்த இளைஞன் தனியாக நின்றதால் இது வேறு விசயம் என்று புரிந்துகொண்டு விசாரித்தேன். தான் பி.ஏ அரபி படித்ததாகவும் அதன் பின் இரண்டு ஆண்டுகள் வீட்டில் சும்மா இருந்ததாகவும், நான்கு வருடங்களுக்கு முன் ஹாஸ்டல் ரூமில் என் நண்பர்களுடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது அவனும் அங்கே இருந்ததாகவும் சொன்னான். அவன் சொல்லச் சொல்ல எனக்கு நினைவுகள் மலர்ந்தன. என் ஆன்மிகச் சகோதரர்கள் இருவருடன் ஹாஸ்டல் அறையில் இவன் தங்கி இருந்தான். அவர்கள் எம்.சி.ஏ படித்துக் கொண்டிருந்தார்கள். இவன் பி.ஏ. அரபி படித்துக் கொண்டிருந்தான். நான் என் தோழர்களிடம் சூஃபிசம் பற்றி உரையாடிக் கொண்டிருப்பேன். அதை இவனும் கேட்டிருக்கிறான். “அடடே, ஆமாம் தம்பி, ஞாபகம் இருக்கிறது. இப்போ என்ன செய்றீங்க?” என்று கேட்டேன். அவனுடைய அதிர்ச்சியான பதில்கள் தொடங்கின.

“இரண்டு வருஷம் வீட்ல சும்மாத்தான் இருந்தேன். இப்போ மதரசாவில் சேர்ந்து ஓதலாம்னு வந்திருக்கேன். எனக்குச் சில சந்தேகங்கள் இருக்கு அதை நீங்கள்தான் தீத்து வைக்கணும்.”

“மதரஸா ஹஜ்ரத்துக்கிட்டயே கேக்கலாமே நீங்க”

“இல்லை, நாலு வருஷத்துக்கு முன்னால நீங்க நவாஸ் பிலாலிட்ட ‘நூரே முஹம்மதியா’ பத்திப் பேசிட்டிருந்தீங்க.”

“ஆமாம். அது கொஞ்சம் ஆழமான கான்சப்ட் தம்பி. முஹம்மது (சல்) அகமியத்துல இறைவனின் ஒளியாக இருக்கிறாங்க அப்படீன்னு அர்த்தம்.”

“ஆங்.. அதுதான். அந்த ஒளி எனக்குள்ள குடி வந்திருச்சு! அதப் பத்திதான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்.”

(ஆஹ்ஹா! காலைலியே கண்ணைக் கட்டுதே... என்று என் மனதிற்குள் நான் நினைத்துக் கொண்டாலும், அவன் மேலும் என்ன கூறப் போகிறான் என்ற ஆர்வமும் பிறந்துவிட்டது.)

“அப்படியா? ரொம்ப சந்தோஷம் தம்பி. ஆனால் இதைப் பத்தி உங்களுக்கு வழி காட்ட என்னால் முடியாது. இந்தத் துறையில மேலான நிலையில் இருக்கிற ஒரு குருநாதரைப் பார்த்துக் கேளுங்க.”

“நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. நூரே முஹம்மதி (சல்) என்கிட்ட அப்பப்ப சில விஷயங்கள சொல்றாங்க.”

“சரி. என்ன சொன்னாங்க?”

“நான்தான் ஏசு நாதர்னு சொன்னாங்க”

“அதுவும் ஒரு பார்வைல சரிதான். ஆதம் நபி தொடங்கி பூமிக்கு வந்த ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் நபிமார்களும் எதார்த்தத்துல ஒன்னுதான். அதனால முஹம்மதுதான் ஏசுன்னு சொல்றதுல தப்பில்ல.”

“நான் சொன்னத நீங்க தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க. என்னைத்தான் ஏசு நாதர்னு நபிகள் நாயகம் சொன்னாங்க.”

(எனக்கு லேசாகத் தலையைச் சுற்றியது. வானத்துக்கு உயர்த்தப் பட்ட ஏசு நாதர் உலகம் அழியும் தருவாயில் பூமிக்கு மீண்டும் வருவார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. அவர்களுக்கு அப்போது முப்பத்து மூன்று வயதாக இருக்கும். அவர்கள் டமஸ்கஸ் நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலின் வெண்ணிற விதானத்தின் மீது இறங்கி வருவார்கள். அப்போது அவர்கள் மஞ்சள் நிற அங்கி அணிந்திருப்பார்கள். அவர்களின் தலைமுடி ஈரமாக இருப்பதுபோல் தெரியும் என்ற விவரங்கள் நபிமொழிகளில் கிடைக்கின்றன.
ஏசு நாதர் சொல்லாமல் கொள்ளாமல் இப்படித் திடீரென்று திருச்சியில் உள்ள காஜாமலையில் வந்து இறங்குவார் என்பதையும் அவர் ஜமால் முஹம்மது கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பி.ஏ. அரபி படித்தவராக இருப்பார் என்பதையும் எப்படி நம்புவது? அதுவும் இந்தப் பையனுக்கு இருபத்து இரண்டு வயசுதான் ஆகிறது. இப்படிப் பத்து வருஷங்கள் அட்வான்சாகவே ஏசு ஏன் வரவேண்டும்? இதுவே அவனுக்கு விசயத்தை விளக்கி இருக்கலாம். ஆனால் அவன் தான்தான் ஏசு நாதர் என்று மிக உறுதியாக நம்புவதாகத் தெரிந்தது.)

“தம்பி, ஈசா நபி வானத்துக்கு உயர்த்தப் பட்டு அங்கேதான் இருக்கிறார்கள் என்று நாம் நம்புகிறோம். அவங்களுக்கு வயசு முப்பத்து மூன்று. அதே வயசுலதான் இறங்குவாங்க.” என்றேன் நான். (ஹவ்வீஜிட்? பாய்ண்ட்ட புடிச்சோம்ல.)

இந்தக் கேள்விக்குக் கொஞ்சமும் அசராமல் ‘அவர்’ பதில் சொன்னார்:

“அது வேற உலகம். அங்கே அவங்க ஏசுவா இருக்காங்க. இந்த உலகத்துலதான் நான் ஏசுவா இருக்கேன்.”

மண்டையில் லேசாக மர திருகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அதை முழுசாகக் கழட்டாமல் ‘இவர்’ ஓயமாட்டார் என்று தெரிந்தது. தொடர்ந்து விளக்கினார்:

“ஒரு நாள் நான் பள்ளிவாசலில் படுத்திருந்தேன். அப்போ ஈசா நபியின் (ஏசுவின்) ரூஹ் (உயிர்) என் மூளையில் இறங்கியது. அதனால நான் இந்த உலகத்துக்கு ஏசுவாயிடேன்.”

“இது கனவுதானே? இதை நீங்க நேரடியாப் புரிஞ்சுக்கக் கூடாது.”

“இல்லை, அது கனவில்லை. நான் தூக்கத்தில் பார்த்தது இல்லை”

“அப்ப நீங்க முழிச்சிருந்தீங்களா?”

“முழிச்சிக்கிட்டும் இல்லை. அது ஒருவிதமான வேறு நிலை.”

“நீங்கதான் ஈசா நபின்னு ரசூலுல்லாஹ் சொன்னதாச் சொன்னீங்க?”

“அவங்க அப்படி நேரடியாச் சொல்லல. ரசூலுல்லாஹ் என்கிட்ட பேசும்போது மர்யம் (அலை) அவர்களைத் திருமணம் செய்ய என்கிட்ட அனுமதி கேட்டாங்க. என்கிட்ட அனுமதி கேக்குறாங்கன்னா, அப்ப நான்தான் ஈசா நபின்னுதானே அர்த்தம்?”

(இந்தப் புள்ளியைக் கொஞ்சம் விளக்கிவிடுகிறேன். மறுமையில் ஏசுவின் அன்னையான மர்யம் (மேரி) அவர்கள் நபிகள் நாயகத்தின் மனைவியாக இருப்பார்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. ”சொர்க்கத்தில் இறைவன் என்னை இம்ரானின் மகளுக்கும் (மர்யம்), பிரௌனின் மனைவிக்கும் (ஆசியா), மூசா நபியின் சகோதரிக்கும் திருமணம் செய்து வைத்தான்.” என்பது திப்ரானியில் பதிவாகியுள்ள நபிமொழி. இப்னு கதீரின் கஸசுல் அன்பியாவிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.)

தொடர்ந்து ’அவர்’ என்னிடம் சொன்னார்:

“நான் மூன்று முறைகளில் நபிகள் நாயகத்துக்கு மர்யம் (அலை) அவர்களை நிக்காஹ் செய்துவைத்தேன்.”

“மூன்று முறைகளிலா? எப்படி?”

“அல்லாஹ்வின் முன்னிலையில் நானே சாட்சியாக இருந்து திருமணம் செய்துகொடுத்தேன். இன்னொரு முறை ஆன்மலோகத்தில் அவர்களின் உயிர்களை இணைத்துவைத்தேன்.”

“மூன்றாவது முறை?”

“அதை நான் வெளியே சொல்ல முடியாது. ரகசியமானது”

இதை அவன் சொல்லிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் இருந்து குரல் வந்தது. “காலேஜுக்கு நேரமாச்சு. அங்க என்ன வெட்டிப் பேச்சு?”

“தம்பி, இப்ப நேரமில்லை. நாளை சாயங்காலம் மதறஸாவுக்கு வர்ரேன். லத்தீஃப் ஹஜ்ரத் ரூமுக்கு வந்திடுங்க. விளக்கமாப் பேசலாம்.” என்று கூறி அவரை அனுப்பிவிட்டேன்.

மறுநாள் நான் மதறஸாவுக்குச் சென்று கேட்டபோது முதல் நாள் இரவே சொல்லிக்கொள்ளாமல் அவர் கம்பி நீட்டிவிட்டார் என்று சொன்னார்கள். (அவர் தன் ஊருக்குத்தான் சென்றிருக்க வேண்டும். டமஸ்கஸ் நாட்டிற்குச் சென்றிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.)

தன்னை ஏசு என்று சொல்லிக்கொண்டு உலகில் பல கிராக்குகள் அவ்வப்பொது உலா வருவது உலகம் அறிந்த ஒன்றுதான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜான் நிக்கோலஸ் தோம் என்பவர் தன்னை ஏசு கிறிஸ்து என்று அறிவித்துக் கொண்டார். இங்கிலாந்தில் கெண்ட் என்னும் இடத்தில் 1838-இல் ‘பாஸன்வுட்’ போரில் பிரிட்டிஷ் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.

அர்னால்ட் பாட்டர் என்பவர் தன்னுள் ஏசுவின் ஆவி புகுந்துவிட்டது என்றும் தான் இனி “பாட்டர் கிறிஸ்து” என்றும் அறிவித்துக் கொண்டார். 1872-இல், விண்ணுக்கு ஏறப்போவதாகக் கூறி ஒரு மலை முகட்டிலிருந்து காலடி எடுத்து வைத்தபோது கீழே விழுந்து இறந்தார்.


பஹாவுல்லாஹ் (1817-1892) என்பவர் ஷியா மதத்தில் பிறந்து பின்னர் பாப் மதத்தைத் தழுவினார். ஏற்கனவே 1844-இல் பாப் என்பவர் தன்னை இரண்டாம் ஏசு என்று கூறிக் கொண்டார். அவரைப் பின்பற்றிய பஹாவுல்லாஹ் பின்னர் தன்னையே இரண்டாம் ஏசு என்று அறிவித்துக் கொண்டார். அவருடைய கொள்கைகள் பஹாயி மதமாயிற்று. (கலீல் ஜிப்ரான் இவரை நேரில் கண்டிருக்கிறார். ஓவியமாகவும் வரைந்துள்ளார்.)

வில்லியம் டேவீஸ் என்பவர் தன்னை வானவர் மைக்கேல் என்று சொல்லிக்கொண்டார். 1868-இல் பிறந்த ”ஆர்த்தர்” என்ற தன் மகனை ஏசுவின் அவதாரம் என்று அறிவித்தார். 1869-ல் பிறந்த “டேவிட்” என்ற தன் இரண்டாம் மகனை ‘பரமபிதா’ என்று அறிவித்தார்.

இருபதாம் நூற்றாண்டில்தான் அதிகமான நபர்கள் தங்களை ஏசு நாதர் என்று கூறிக்கொண்டு கிளம்பினார்கள். தனியாக அல்ல, தங்களை நம்பும் ஆயிரக் கணக்கான தொண்டர்களுடன்!1941-இல் பிறந்த வெய்ன் பெண்ட் என்பவர் தன்னை ஏசு என்று அறிவித்துக் கொண்டார். ”நீயே என் தூதன்” என்று இறைவன் தன்னிடம் பேசியதாகச் சொன்ன இவர், “நான் இறைவனின் அவதாரம். தெய்வீகமும் மானிடமும் கலந்தவன்” என்று சொன்னார். ஏழு கன்னிப் பெண்களுடன் உறவு கொள்ள வேண்டும் என்று இறைவன் தனக்குக் கட்டளை இட்டதாகச் சொல்லித் தன் தொண்டர்களின் மகள்களுடன் உறவாடினார். அவர்கள் 14 அல்லது 15 வயதுள்ளவர்களாக இருந்ததால் 2008-இல் மைனர் கேசில் கைது செய்யப்பட்டார்.

1995-இல் மார்ஷல் ஆப்பிள்வைட் என்னும் அமெரிக்கர் இணையத்தில் ஒரு திடீர் செய்தியை அனுப்பினார். தானே ஏசு என்று அதில் குற்ப்பிட்டிருந்தார். 1997-இல் ”சொர்க்கக் கதவு” என்ற தன் குழுவினருடன் தற்கொலை செய்துகொண்டார். எதற்காம்? ஹேல்-பாப் என்னும் வால் நட்சத்திரத்திற்குப் பின்னால் நிறுத்தப்பட்டுள்ள, சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் விண்கலத்தைப் பிடிப்பதற்காம்!பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ரி கிறிஸ்தோ என்பவர் ஆரம்பத்தில் ஜோசியத் தொழில் செய்துவந்தார். தொழிலில் திறமை எந்த அளவு முத்திவிட்டது என்றால் 1969-இல் தன்னை இரண்டாம் ஏசு என்று ‘கண்டுபிடித்துவிட்டார்’! பிரேசில் நாடே புதிய ஜெருசலேம் என்று இவர் கூறுகிறார்.ஜப்பான் நாட்டில் 1944-இல் பிறந்த மிட்சுவோ மடயோஷி என்னும் அரசியல்வாதி உலகப் பொருளாதார கம்யூனிட்டி பார்ட்டி என்னும் கட்சியைத் தொடங்கினார். பரமபிதாவும் ஏசு கிறிஸ்துவும் அவரே என்பதுதான் கட்சியின் பிரதானக் கொள்கை! இறுதித் தீர்ப்பைத் தானே அரசியல் வழியில் வழங்கப் போவதாகக் கூறிவருகிறார்.

ஜோசே லூயி டெ மிராண்டா என்பவர் சற்றே வித்தியாசமாகக் கிறுக்கு என்றுதான் சொல்லவேண்டும். இவர் ஏசுவும் தானே என்றும் அந்திக்கிறிஸ்துவும் தானே என்றும் அறிவித்துக் கொண்டார்! எனவே சாத்தானின் எண் என்று பைபிள் கூறும் 666-ஐத் தன் முன்னங்கையில் பச்சை குத்தியுள்ளார். இவரின் தொண்டர்களும் அவ்வாறே செய்துள்ளார்கள்.

ஏசுவின் அவதாரம் என்று பலரும் சொல்லிக்கொள்வதால் அது கவர்ச்சி இழந்த ஒரு கொள்கை என்று கருதியோ என்னவோ ஜிம் ஜோன்ஸ் என்பவர் தன்னை ஏசு, புத்தர், லெனின், மஹாத்மா காந்தி மற்றும் பரமபிதா ஆகியோரின் அவதாரம் என்று 1970-களில் அறிவித்தார். ”மக்களின் ஆலயம்” என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். 1978-இல் குயானாவில் தன் தொள்ளாயிரம் தொண்டர்களுடன் தற்கொலை செய்துகொண்டார்.

”அயா பின்” என்று அழைக்கப்படும் ஆரிஃபீன் முஹம்மது என்னும் மலேசியர் 1975-இல் “பரலோகச் சமூகம்” என்னும் அமைப்பை உருவாக்கினார். பரலோகத்துடன் நேரடித் தொடர்புள்ள இவரே ஏசு, முஹம்மது, புத்தர், சிவன் ஆகியோரின் மறு அவதாரம் என்று இவரின் தொண்டர்கள் நம்புகிறார்கள். மிகப் பெரிய சந்தன நிறத் தேநீர் கோப்பையே இவரின் வழிபாட்டு முறையில் மையப்பொருளாகும்!தன்னை ஏசு என்று அறிவித்துக் கொண்ட இன்னொரு கிறுக்கர் லாஸ்லோ டாத். வாட்டிகன் நகரில் புனிதப் பேதுரு பெசிலிகா ஆலயத்தில் உள்ள, மைக்கல் ஏஞ்சலோ செதுக்கிய “பியெட்டா” என்ற சிலையை ஒரு சுத்தியலால் தாக்கி “நானே ஏசு. மீண்டும் உயிர்த்தெழுந்து வந்துவிட்டேன்.” என்று கூவினார்.செர்கெய் டொராப் என்னும் ருஷ்யர் தன்னை ஏசுவின் இரண்டாம் பிறவி (விஸ்ஸாரியன்) என்று அழைத்துக் கொண்டார். ருஷ்யாவின் முப்பது கிராமங்களில் அவருக்கு நாலாயிரம் தொண்டர்களும், உலகெங்கிலும் பத்தாயிரம் தொண்டர்களும் இருக்கிறார்கள்.இந்தப் பட்டியலில் இன்னும் சேர்ப்பதற்கு நிறைய நபர்கள் இருக்கிறார்கள். இஸ்லாமிய வரலாற்றில் தன்னை ஏசு என்று அழைத்துக் கொண்டவர்களின் லிஸ்டில் மிக முக்கியமானவர் மீர்சா குலாம் அஹ்மது காதியானி (1838-1908) என்பவர்தான். பாகிஸ்தானில் உள்ள காதியான் என்னும் ஊரில் பிறந்தவர். நபிகள் நாயகத்தால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட மஹ்தி (அலை) மற்றும் ஏசு நாதர் தானே என்று அவர் அறிவித்தார். ஏசு நாதர் சிலுவையில் இறக்கவில்லை என்றும், உயிர் தப்பி அவர் காஷ்மீர் பகுதிக்கு வந்து பின்னர் முதிய வயதில் இயற்கை மரணத்தைத் தழுவினார் என்றும், உலக முடிவுக் காலத்தில் ஏசு வருவார் என்று நபிகள் நாயகம் சொன்னது தன்னைத்தான் என்றும் அவர் கூறினார். மார்ச் 23, 1889-இல் அஹ்மதிய்யா இயக்கத்தைத் தோற்றுவித்தார். இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்வதே தன் இயக்கத்தின் பிரதான கொள்கை என்று கூறினார்.

இந்தப் பித்தலாட்டங்கள் எல்லாம் என் ஞாபகத்தில் ஓடி மறைந்தன. என் வீட்டுக் கதவைத் தட்டி ஒருவன் தன்னை ஏசு என்று அறிமுகப் படுத்திக் கொண்டதை எண்ணி வியந்தேன். ஆனால், மேற்சொன்ன நபர்களைப் போல் அவன் ஹிப்னாட்டிசக் கவர்ச்சி கொண்ட ஆளுமை அல்ல. அவன் கண்களில் ஒரு குழப்பம் இருந்தது. அவன் மனம் பிளவுபட்டிருப்பது போல் நான் உணர்ந்தேன். ஒரு நல்ல உளவியல் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் அவன் நார்மல் ஆகிவிடுவான். உளவியலை ஆழமாகக் கைவசப்படுத்திய ஒரு சூஃபி குருவிடம் சென்றால் நார்மலாவது மட்டுமல்ல, அவன் சிறந்த ஞானியாகவும் பரிணமிக்க முடியும். எங்கே சென்றானோ தெரியவில்லையே!Tuesday, January 18, 2011

மலரும் ரோஜாஒரு ரோஜா என்பது
ஒரு ரோஜா என்பது
ஒரு ரோஜா
என்றாள் ஒரு கவி.

அதுவரை தெரியவில்லை
அந்த ரகசியம் பலருக்கு

ஒரு ரோஜா என்பது
ஒரு ரோஜா மட்டுமல்ல
இதுவரை தெரியவில்லை
இந்த ரகசியம் பலருக்கு.

ஒரு ஊரில் ஒரு ராஜா
அவனுக்கொரு ஆசை ரோஜா
என்று நான் கதை சொன்னாலும்
புரியாமலா போகும்?

ரோஜா மலரினும் மெல்லிது
அதன் வாசம்.
இதயத்திற்கு நல்லது
அதன் வாசம்.

காதல் அதன் அர்த்தம்
ஞானம் அதன் உட்பொருள்
காலத்தின் புன்னகையாய்
மலரும் புதிர் அது.

கஸ்தூரி மானின்
நாபியூற்று போல்
காட்டுக்குள் மலரும்
ரகசிய ரோஜா
இரவுக் காவலனின்
இதயத்தைப் போல்.

சுவாசங்களின்
மணி மாலையில்
நடக்கும் என் தியானம்
ரோஜாத் தோட்டத்தில்
ஒரு முதிய ஞானி போல்.

காலமும் இடமும்
குறுக்கிடும் புள்ளியில்
சட்டென்று மலரும்
சிகப்பு ரோஜா
என் காதலியின்
அடையாளமாய்.

லைலா என்னும்
கறுப்பு ரோஜா
பிரியம் கொண்டவனைப்
பித்தனாக்கும்.

ஒளியில் சுடரும்
வெள்ளை ரோஜா
கன்னி மர்யம்.

மண்ணக மார்பில்
மலர்ந்த நபியை
பச்சை ரோஜா என்றார்
தத்துவக் கவிஞர்.

வண்ணங்கள் வேறு
வாசம் ஒன்று.
எண்ணங்கள் வேறு
ஞானம் ஒன்று.

Saturday, January 15, 2011

வாழ்க நலமுடன்!

ஒரே மந்திரம். மனதில் கவலைகள் காணாமல் போய்விட வேண்டும். நினைத்ததெல்லாம் பலிக்க வேண்டும். உண்மையிலேயே சந்தோஷம் பொங்க வேண்டும், ஆனந்த அலை வீச வேண்டும், சாந்தியும் சமாதானமும் பரவிவிட வேண்டும். அப்படி ஒரு மந்திரத்தை யாராவது கற்றுத் தந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட மந்திரங்களை எல்லா ஆன்மிக மரபுகளும் பேசுகின்றன. ஆனால் அவை நமக்குப் பலிக்கவில்லை!
“கடவுளில் களி கூறுங்கள்” என்றார் ஏசு நாதர். ஆனால் நம்மால் கடவுளின் பெயரால் கலி கிண்டவும் கஞ்சி காய்ச்சி ஊத்தவும்தான் முடிகிறது. “உங்களுக்கு மத்தியில் சலாத்தைப் (சாந்தியைப்) பரப்புங்கள்” என்றார் நபிகள் நாயகம். பார்ப்பவரகளிடம் எல்லாம் ‘சலாம்’ போடுகிறோம். சலாம் என்னும் வார்த்தையைப் பரப்பும் சடங்கு ஜரூராக நடக்கத்தான் செய்கிறது. ஆனால் அமைதி பரவவில்லை. சிலர் “ஸ்லாமலைக்கும்” என்று கூறும்பொதே மனதில் இருக்கும் அமைதி காணாமல் போய்விடுகிறது.

ஒரு தியானக் கூட்டத்தின் ஒலி/ஒளித் தொகுப்பைப் பார்த்தேன். புகைப்படத்திற்குப் போஸ் கொடுக்கையில் காட்டும் செயற்கையான சிரிப்பைப் போல வலிந்து வரவழைக்கப்பட்ட ‘பரவசம்’ முகத்தில் தாண்டவமாட சிலர் அசைந்து கொண்டிருந்தார்கள். அந்தச் செயற்கைப் பரவசத்திற்குப் பேச முடிந்தால் “அழைத்து வரப்படவில்லை, இழுத்து வரப்பட்டுள்ளேன்” என்று மனோகராவைப் போல் வசனம் பேசும். தியானத்தில் நடித்து யாரை ஏமாற்றப் போகிறார்கள்? தம்மையேதான்! என்ன செய்வது, தியான செஸ்ஷனுக்கு ஐயாயிரம் ரூபாய் அழுதிருக்கும்போது உண்மையான பரவசம் பிறக்காவிட்டால் அட்லீஸ்ட் வந்துவிட்ட்து மாதிரி காட்டி பிறரை வயிறெரிய வைத்தாவது ஆறுதல் அடையலாம் அல்லவா?
கு.குசலா: ”சரிங்க, உண்மையான பரவசம் பிறக்க ஏதாவது மந்திரம் இருக்கிறதா?”
நல்ல கேள்வி. குழந்தையைப் போன்ற வெள்ளை மனம் இருந்தால் பரவசம் இயல்பாகவே வந்துவிடும் என்றுதான் நினைக்கிறேன். அப்போது எந்த மந்திரமாக இருந்தாலும் வர்க்-அவுட் ஆகக்கூடும். நீங்கள் குழந்தைகள் போன்று ஆகாதவரை சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது என்று ஏசு நாதர் சொல்லியிருக்கிறார். வேண்டுமானால் குழந்தைகள் கூறும் மந்திரங்களையே நீங்கள் பயன்படுத்தலாம். ஹார்லிக்ஸ் விளம்பரம் ஒன்றில் சிறுவர் சிறுமிகள் கோரசாக “எபாங் ஒபாங் ஜபாங்” என்று கத்துவதைக் கேட்டபோது அது ஏதோ மந்திரம் போன்றுதான் என் காதில் ஒலித்தது. இதையெல்லாம் நீங்கள் கண்டுகொள்ளவே மாட்டீர்கள். ஏதாவது ஒரு எக்ஸான்ந்தா சுவாமிகள் வந்து உங்களிடம் ஆயிரம் ரூபாய் வசூலித்துவிட்டு இதை அருளினால் நீங்களும் பரவசத்துடன் உளறிக் கொண்டு உருளுவீர்கள். 

மந்திரம் என்பதையே நாம் தவறாகத்தான் அணுகுகிறோம் என்று நினைக்கிறேன். மேஜிக் – மாயாஜாலம் என்னும் அர்த்தத்தில் அதைப் புரிந்து வைத்திருக்கிறோம். மந்திர தந்திரம் என்றாலே அது மாயாஜாலம்தான் நமக்கு. எனவே ‘மந்திரத்தால் மாங்காய் காய்ப்பதில்லை’ என்றெல்லாம் சொல்கிறோம். மந்திரம் என்றாலே நமக்கு உடனடி விளைவுகளைத் தர வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் உண்மையில் மந்திரம் என்பது மெதுவாகத்தான் வேலை செய்யும், குளவியின் ரீங்காரம் போல! எதைச் சொல்வதற்காக இந்தக் கட்டுரையை ஆரம்பித்தேனோ அந்த விஷயத்திற்கு வருகிறேன். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் என் நண்பன் ஒருவன் சட்டையில் செருகி வைத்திருந்த பேனாவில்தான் அவரை முதன் முதலில் பார்த்தேன். பிரகாசமான முதியவராக இருந்தார். வெள்ளைப் பஞ்சாக தாடி. தும்பைப்பூ நிறத்தில் இருந்த இஸ்திரி போட்ட நேர்த்தியான ஜிப்பாவின்மீது சந்தன நிற அங்கவஸ்திரம் அணிந்து இரண்டு கைகளையும் தூக்கிச் சிரித்துக் கொண்டிருந்தார். யார் இவர்? என்று கேட்டதற்கு ஒரு மாதிரி என்னைப் பார்த்துவிட்டு “இவரைத் தெரியாதா? வேதாத்திரி மகரிஷி!” என்றான் அந்த நண்பன். (எனக்கு அப்போதெல்லாம் ரமண மகரிஷியைத்தான் தெரியும்.) இப்படித்தான் அவர் எனக்கு அறிமுகமானார். “வாழ்க வளமுடன்” என்ற மந்திரத்தை இருபத்தைந்து வருடங்கள் மிகவும் கஷ்டப்பட்டு அவர் கண்டுபிடித்தார் என்றும் அது மிகவும் சக்தி மிக்க மந்திரம் என்றும் நண்பன் சொன்னபோது எனக்குச் சிரிப்புத்தான் வந்த்து. “வாழ்க வளமுடன்! இதிலென்ன பவர் இருக்கிறது? இது ஒரு இயல்பான வாழ்த்துதானே?” என்று நான் நினைத்தேன். என் நண்பன் எனக்குச் சரியாக விளக்கவில்லை என்று இப்போது தெரிகிறது. “நிறைமொழி மாந்தர் நாவினில் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” என்கிறார் தொல்காப்பியர். அவ்வாறு இருபத்தைந்து ஆண்டுகள் தவத்தில் நிறைமொழி ஞானியாக அவர் பக்குவமடைந்த பின் இதனை அவர் தன் மந்திரமாக உருவாக்கியிருக்கலாம். இல்லையென்றால் இதுபோல் பல வாசகங்களை நாமும் எளிதாக உருவாக்கிவிடலாம். அப்படி ஒரு மந்திரத்தை நான் உருவாக்கவும் செய்தேன்!

“வாழ்க நலமுடன்!” இதுதான் நான் உருவாக்கிய மந்திரம். வேதாத்திரி மகரிஷி போல் இருபத்தைந்து வருடமெல்லாம் கஷ்டப்பட எனக்கு அவகாசம் இல்லாததால், தியானம் என்பது கால இட வரையரை கடந்தது என்பதைப் பயன்படுத்தி யுகங்கள் குவிந்த ஒரு கணத்தில் இதை நான் சட்டென்று கண்டடைந்தேன். யோசிக்கையில் இது இன்னும் பிராக்டிகலான மந்திரமாகப் பட்ட்து. ஏனெனில் வளம் உள்ள பலரிடம் நலம் இருப்பதில்லை. அதனால்தானே அப்போலோ ஆஸ்பத்திரிக்கும் கோர்ட்டு வாசலுக்கும் அலைகிறார்கள்?  
  
கு.குசலா: அண்ணே! மந்திரம் கண்டுபுடிச்சீங்க, அப்படியே ஆசிரமம் ஆரம்பிச்சு அஞ்சாறு அல்லக்கைகள அசிஸ்டண்ட்டா வச்சிக்கிட்டு வசதி பண்ணீருக்கலாமே. ஏன் செய்யல?

என் நல்ல காலம்! மந்திரம் கண்டுபிடித்தவுடன் முதலில் அதை ‘அருளுவதற்கு’ ஒரு பிரத்தியேக போஸ் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் ஆன்மிக நெறியாமே? அந்த ரூட்டுல நம்ம வண்டியை விட்டு யோசித்தபோது மண்டை காய்ந்தது. வேதாத்திரி மகரிஷி பாடு தேவலாம். ஞானி இல்லையா, அதனால அசால்ட்டா ரெண்டு கையையும் ஹாண்ஸ்-அப் பொசிஷனில் தூக்கி “வாழ்க வளமுடன்” என்று சிரிக்கிறார். ‘சரணடைந்துவிட்டால் வளமுடன் வாழலாம்’ என்னும் சரணாகதித் தத்துவத்தை எவ்வளவு எளிமையாகக் கூறிவிட்டார்! 

என்னால் அப்படி ஒரு போசை கண்டுபிடிக்க முடியாததால் கையை எப்படி வேண்டுமானாலும் வைத்து “வாழ்க நலமுடன்” என்னும் மந்திரத்தைக் கூறலாம் என்று முடிவு செய்தேன். காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க என்று எந்தக் கட்சி சின்னத்தைக் காட்டியும் சொல்லலாம். நாமம் போட்டுவிடுவேன் முத்திரை காட்டிக்கூட சொல்லலாம்! ஒன்றுக்கு ரெண்டுக்கு முத்திரைகளுக்கும் தடையில்லை!

(கு.குசலா: அண்ணே! அமெரிக்க அராத்துகள் பாணியில் நடுவிரலைக் காட்டிக் கூறலாமா?
மந்திரத்தை அப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. பக்கவிளைவுகள் உண்டாகிப் படாத பாடெல்லாம் பட நேரும்.)

மந்திரம், போஸ் இரண்டும் தயாராகிவிட்டது. அடுத்து அசத்தலான ஒரு பெயரைக் கண்டுபிடித்தாக வேண்டும் என்று யோசித்தபோது என் மனதில் பல சாமியார்கள் பளிச்சிட்டார்கள். அவர்களில் சிலரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை ஆதலால் கூற வேண்டிய கடமை எனக்கிருக்கிறது.

பாரதியார் எழுதிய ஒரு சிறுகதையில் ‘மிளகாய்ச் சாமியார்’ என்று ஒருவர் வருகிறார். நாளொன்றுக்கு ஒரு கிலோ மிளகாய் மட்டும் சாப்பிட்டுவிட்டுத் தண்ணீர் அருந்தி உயிர் வாழும் அவரை மக்கள் ஒரு சித்தராகவே மதித்துக் காலில் விழுகிறார்கள். ஆன்மிக ஞானிகள் சொன்னது அஷ்டமா சித்திகள்தான் என்றாலும் நம் நாட்டில் பல இஷ்டமா சித்திகள் செய்து சாமியார் ஆகிவிடுவது எளிது. என்ன, அவை மக்களால் செய்யமுடியாத கஷ்டமா சித்திகளாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்!

உதாரணத்துக்கு வாழைத் தோல் சாமியாரைக் கூறலாம். யாரிவர் என்று குழம்ப வேண்டாம். கவுண்டமணி ஒரு படத்தில் சாமியாராகும் கதைதான் இது. கடைக்குச் சென்று வாழைப்பழங்கள் வாங்குவார். கடைக்காரன் கண் எதிரிலேயே உரித்துத் தோலை விழுங்கிவிட்டுப் பழத்தை வீசியெறிவார். இப்படி நான்கைந்து முறை செய்வார். கடைக்காரன் அதிர்ச்சியாகி ‘என்னங்க தோலைச் சாப்பிட்டு பழத்தை வீசி எறியறீங்க?’ என்று கேட்பான். “மானிடப் பதரே!” என்பதுபோல் அவனைப் பார்த்து வெடிச் சிரிப்பு சிரித்துவிட்டு அங்கிருந்து போய்விடுவார். அவ்வளவுதான், வாழைத் தோல் சாமியார் இமயமலையில் இருந்து தங்கள் ஊருக்கு எழுந்தருளியிருக்கும் செய்தி காட்டுத் தீ எனப் பரவி பதினெட்டுப் பட்டி சனமும் வந்து காலில் விழுந்து அருள்வாக்கு கேட்கும்!

இதுபோல் நகத்தால் எலுமிச்சைப் பழத்தை நறுக்கி பக்தர்களின் வாய்குள் பிழிந்துவிட்டு அருள் வாக்கு கூறும் ‘எலுமிச்சை சாமியார்’, சுருட்டுப் புகைத்து பக்தரின் முகங்களில் ஊதி ஊதித் திக்குமுக்காட வைத்து அருள்வாக்கு கூறும் ‘சுருட்டுச் சாமியார்’, பாவாடை சாமியார், கெட்ட வாடை சாமியார், அழுக்குமூட்டைச் சாமியார், ஓட்டை வடை சாமியார், ஒத்த ரூபா சாமியார், ஊத்த வாய்ச் சாமியார், ஊளைச் சாமியார், தினத்தந்திச் சாமியார், டூரிங் டாக்கீஸ் சாமியார், எழரைக்கா சாமியார், வத்திப்பெட்டிச் சாமியார், பல்புச் சாமியார், எருவாட்டிச் சாமியார், கட்டுமுடிச் சாமியார், சிலுக்குச் சாமியார், வல்லூருச் சாமியார் என்று எத்தனையோ கஷ்டமா சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு என்று தனியாக ஒரு என்சைக்ளோபீடியாவே உருவாக்க முடியும்!

இந்தப் பெயர்களை எல்லாம் பார்த்தால் நமக்குச் சிரிக்கத் தோன்றலாம். மகான்களின் மீது மூடியுள்ள திரைகள் இவை என்று சொல்ல முடியும். அல்லது அவர்களே போர்த்திக் கொண்ட திரை. ஞானம் அடைந்தவர்களுக்கும் ஏதேனும் எளிமையான பொருட்களுடன் நீங்காப் புழக்கம் இருந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. அதுவே அவர்களின் அடையாளமாகிப் போனது. பல்லக்கு அவ்லியா என்று ஒரு சூஃபி மகான் இருந்தது நாம் அறிந்ததே. அதேபோல் பாக்குவெட்டி அவ்லியா, பல்லிமிட்டாய் அவ்லியா, பீடி அவ்லியா என்றும்கூட இருக்க வாய்ப்புகள் உண்டு. அது போன்ற விகடமான பெயர்கள் அவர்கள் போலி ஞானிகள் என்பதன் ஆதாரமல்ல. நான் பள்ளி மாணவனாய் இருந்த போது கணக்கில் பெரிய மண்டையான ஒரு வாத்தியார் இருந்தார். கணக்கு அவருக்கு கைவந்த லீலை! ஆள் எப்போது பார்த்தாலும் மட்டமான பாக்குத் தூளை மென்றுகொண்டே இருப்பார். அவரை “பாக்குத் தூள் வாத்தி” என்றே அழைக்கலாம். அதற்காக அவருடைய கணித மேதமை போலியானது என்று ஆகிவிடுமா?

(தவிர்க்க முடியாமல் என் நினைவில் ஜெயமோகன் உருவாக்கிய சூஃபிப் பாத்திரமான “குலாப் தஸ்தகீர் ஜாமூன் பாபா” தோன்றுகிறார். என்ன அட்டகாசமான கேரக்டர்! அப்படியே என் நினைவு ஜீராவில் ஊறிக் கொண்டிருக்கிறார்!) 
            
கிண்டலாகத் தோன்றும் இந்தப் பெயர்களை எல்லாம் தள்ளிவிட்டு சாமியார்களுகென்று சீரியசான பெயர்கள் இல்லையா என்று யோசித்தால், இந்து ஞானிகளுக்கென்றே பொதுப் பெயராக அமைந்துள்ள ‘ஆனந்தா’ என்பதுதான் பளிச்சிடுகிறது. “ஆனந்தம்” என்பது அற்புதமான சம்ஸ்க்ருதச் சொல். இறைவனைக் குறிப்பிட இந்து மறைகள் வகுத்துக் கொண்ட மந்திரங்களுள் ஒன்று ‘சச்சிதானந்தம்’ (சத்-சித்-ஆனந்தம்). எனவே, பழுத்த இரும்பில் தீ ஏறி நிற்பதுபோல் இறைவனைத் தொட்ட உயிர்களில் ததும்பும் பரவசத்தை அது குறிக்கிறது. சுகதுக்கச் சுழற்சியில் இருந்து விடுதலை அடைந்த மனத்தில் பொங்கிப் பிறங்கும் சாத்வீகப் பேரின்பத்தைக் குறிப்பது அது. சுகத்திற்கு எதிர்ச்சொல் துக்கம் என்பது போல் எதிர் நிலை இல்லாத ஏக நிலை அது. ஆன்மிக வரலாற்றில் இந்தப் பெயர் புத்தரின் சகோதரனும் அணுக்கச் சீடனுமான ஆன்ந்தன் என்னும் பாத்திரமாக வருவதைக் காண்கிறோம். ஆனால் இந்தப் பெயரை ஒர் ஆன்மிக மரபாக ஆக்கியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்தான். அவர் தன் சீடர்களுக்கெல்லாம் ‘ஆனந்தா’ என்னும் பின்னொட்டு அமைந்த பெயர்களைத் தந்தார். விவேகான்ந்தா, பிரம்மானந்தா, ப்ரேமானந்தா, யோகானந்தா, நிரஞ்சனானந்தா, சாரதானந்தா, சிவானந்தா, துரியானந்தா, அபேதானந்தா என்பவை போல. 

இன்றைக்கும் நம் காலத்தில் பல ஆனந்தாக்களைப் பார்க்கிறோம். ஆனால் ஆனந்தம் என்னும் சொல்லின் பொருளை எந்த அளவு அனர்த்தமாக்கி விட்டார்கள் என்று பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. நித்தியின் பிரச்சனை ஊடகங்களில் பட்டையைக் கிளப்பிய போது என் நண்பர் ஒருவர் உரையாடும்போது சொன்னார்: “தம்பி, சாமியாருங்க தெளிவாத்தான் பேருலயே சொல்லீருக்கானுங்க. நாமதான் சரியா புரிஞ்சுக்கல. பேரெல்லாம் பாருங்களேன். பிரேம ஆனந்தம், நித்திய ஆனந்தம், சுகம் போதை ஆனந்தம்!”

நித்தியானந்தா எழுதிய கட்டுரைத் தொகுப்பான “கதவைத் திற காற்று வரட்டும்” பற்றியும் சிலேடையாக நையாண்டி பண்ணினார்கள். “நம்மையெல்லாம் கதவைத் திறக்கச் சொல்லிட்டு அவன் கதவைச் சாத்திட்டானே தம்பி!” என்றார் ஒருவர். இன்னொருவர் இந்த நூல் தலைப்பு உருவான ’கதை’யைக் கூறினார். அதாவது நித்தியானந்தா தன் உள்முகக் கரும லீலைகளை முடித்தவுடன் வியர்த்துப் புழுங்கவே சிஷ்யையை நோக்கிக் ‘கதவைத் திற, காற்று வரட்டும்’ என்றாராம். அவரின் போதனைகளின் சாரத்தைக் கச்சிதமாக விளக்குவதால் அதுவே நூலுக்குத் தலைப்பாக வைக்கப் பட்ட்தாம்!இதையெல்லாம் கேட்டபோது ‘சாமி காவடியானந்தர்’ என்னும் பெயர் அச்சுக் கோர்ப்பவன் செய்யும் பிழையால் ‘காமி சாவடியானந்தர்’ என்று மாறுவதாக அறிஞர் அண்ணா ஒரு சிறுகதையில் எழுதியிருப்பது ஞாபகம் வந்தது. அவரின் அருள்வாக்கு பலித்துவிட்டது போல் தெரிகிறது!

இதுபோல் பல பேரை நான் அறிவேன். பக்தர்களின் நடு மண்டையில் நச் என்று சுத்தியலால் அடித்து அவர்கள் காட்டும் ரியாக்‌ஷனை வைத்து ஆணித்தரமாக அருள்வாக்கு கூறுகிறார் ஒருவர். “சுவாமி சுத்தியானந்தா” என்பது அவரின் நாமகரணம்.டான் பிரவ்னின் பிரபலமான மூன்று நாவல்களிலும் வரும் கேரக்டரான ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரொபர்ட் லேங்டன் தன் கையில் மிக்கி மவ்ஸ் பொம்மை உள்ள ஒரு வாட்ச் கட்டியிருப்பார். மிக்கி மவ்ஸின் கைகள்தான் அதில் முட்கள். (பனிரெண்டு மணி காட்டும்போது ஒட்டு கேட்டு வரும் உள்ளூர் அரசியல்வாதி போலவே இருக்கும்!) உலகப் புகழ் பெற்ற ஒரு பேராசிரியர் வினவுவோருக்கு அதன் பின்னணியில் உள்ள உளவியல் காரணங்களை அவர் விளக்குவார். உள்ளத்தால் இன்னும் குழந்தையாகவே இருக்க அது ஒரு ஞாபகமூட்டல் என்பார். இது எவ்வளவு பெரிய ஞானம்! எனவே நான் அவரை ரொபர்ட் லேங்டன் என்பதைவிட ‘சற்குரு மிக்கி வாசுதேவ்’ என்று அழைக்கலாம் என நினைக்கிறேன்! 

ஸ்ரீ என்னும் வடமொழியைப் பயன்படுத்தக் கூடாது என்றும் தமிழ்ப் படுத்தித்தான் எழுதவேண்டும் என்றும் என் நண்பர் ஒருவர் கொள்கை வைத்துள்ளார். அவருடைய கைவண்ணத்தில் இரண்டு ‘ஆன்மிக குருநாதர்கள்’ உருவானதைக் கண்டு நான் சிலிர்த்திருக்கிறேன். ஒருவர் சிரிப்பதையே தியானமாக போதிப்பவர். “சிரி சிரி ரவிஷங்கர்” என்று பெயர். இன்னொருவர் முழியை உருட்டி உருட்டி வெறித்துப் பார்ப்பதையே தியானமாக போதிப்பவர். “திருதிரு ரவிஷங்கர்” என்று பெயர். எப்படியோ, ஆன்மிக நெறி தழைத்தால் சரி!

வாழ்க நலமுடன்! 
         
(பி.கு: இக்கட்டுரையில் வரும் குறுக்குச்சால் ஓட்டும் குரங்குக் குசலா நம் ஒவ்வொருவர் உள்ளும் இருப்பவ்ர்தான். நம் மனத்தின் கீழ்நிலை. திருக்குரானில் இந்த மன நிலை “நஃப்ஸுன் அம்மாரா பிஸ்சூஃ” என்று அழைக்கப் படுகிறது. அதாவது தீமையின் பக்கம் தூண்டும் மனம். மனம் ஒரு குரங்கு என்று சொல்லப்பட்டவர் இவர்தான்.)

Sunday, January 9, 2011

மண்ணாகி...பாலைவனத்தில் சுழலும்
மணற் தம்பமாய்
உன் மூச்சே
என்னை ஆக்கியது.

உன்னிரு கைகளின்
முதல் ஸ்பரிசத்தில்
இணக்கத்தின் ஈரம் கொண்டு
நீ என்னைப் பிசைந்தபோது
உன் அடிமை ஆனேன் நான்.

என்னுள் நீ ஊதிய
அந்த ஒற்றை உயிர்மூச்சே
என் முழு வாழ்க்கை ஆனது.

அந்த மூச்சுக் கடலின்
அலைகளாய்ப் புரள்கிறது
என் ஒவ்வொரு ஸ்வாசமும்.

Thursday, January 6, 2011

ஆனந்த அலைகள்

"முன்பெல்லாம் ஒரு ஊருக்குள் போய் நான் ஆன்மிகவாதி என்று சொன்னால் காலில் விழுவார்கள், வீட்டுக்கு அழைத்துச் சென்று மரியாதை செய்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் நான் ஆன்மிகவாதி என்று யாராவது சொன்னால் இன்வெஸ்டிகேஷன் நடத்த வேண்டும் என்கிறார்கள். ஆன்மிகத்தை அப்படி ஆக்கி வைத்திருக்கிறோம்!"


2 .01 .2011 அன்று மாலை சென்னை YMCA மைதானத்தில் நடந்த 'ஆனந்த அலை' கூட்டத்தில் இப்படிப் பேசினார் ஜக்கி வாசுதேவ். இதுபோல் பல ஆனந்த அலைகள் அவர் சொற்பொழிவில் வீசிக்கொண்டிருந்தன. நித்தியைத்தான் இப்படிச் சுத்தியால் 'நச்' என்று நடு மண்டையில் போட்டுத் தாகுகிறார் என்பதை விளங்கிக் கொண்டதால் பார்வையாளர்களின் மத்தியிலும் ஓர் ஆனந்த அலை ஓடி மறைந்தது. நான் திருச்சியில் இருந்து "சங்கரா" சேனலின் வழியே கண்டு கொண்டிருந்தேன்.
ஜக்கி வாசுதேவின் பேச்சில் பல புதுமையான கருத்துக்களும், புதிய கோணங்களும் இருப்பதைக் கண்டு அவரை ரசிக்கத் தொடங்கினேன். அவரின் ஆளுமையை நான் ரசிப்பது ஆன்மிகத்துக்காக அல்ல என்றாலும் வேறு சில காரணங்கள் இருக்கின்றன:
1 . இத்தனை வயதிலும் ஒரு வாலிபனுக்குரிய சுறுசுறுப்புடன், தேக நலத்துடன் இருக்கிறார். வெறுமனே இருக்கிறார் என்பது மட்டுமல்ல கைப்பந்து விளையாடுகிறார், ஹோவர்கிராப்ட் ஓட்டுகிறார், மிருதங்கம் வாசிக்கிறார், நடனம் ஆடுகிறார் என்று அவருடைய 'ENERGY ' உண்மையிலேயே வியக்க வைக்கிறது. (பல்கலைக்கழக ஹாக்கி வீரராக இருந்தாராம்.)
2 . ஆங்கிலத்தில் பிய்த்து உதறுகிறார்.
3 . பட்லர் தமிழில் பேசுகிறார். அதிலும் ஒரு கவர்ச்சி இருக்கிறது!
ஆரம்பத்தில் அவருடைய கெட்-அப்களைப் பார்த்தபோது ஓஷோவைக் காப்பி அடிக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றியது. அவருடைய கருத்துக்களும் அப்படித்தான் இருந்தன. ஓஷோவின் தாக்கம் நிச்சயம் இவரிடம் இருக்கிறது. வேறு வகையில் அதனை அவர் வடிவமைத்துக் கொண்டுள்ளார் என்றே எண்ணுகிறேன். முக்கியமான இன்னொரு விஷயம்  ஓஷோவைப் போலவே இப்படியும் அப்படியும் விமரிசனம் செய்வதற்கான வசதியை இவரே தருகிறார் என்பதுதான். ஜக்கி வாசுதேவ் கலைஞர் கருணாநிதியின் பினாமி என்பது வரை எதிர்வினைகள் அவர்மீது உண்டு!  

அவர்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மிகவும் சீரியசானது என்று சொல்லவேண்டுமானால் அவருடைய மனைவியின் மரணம் பற்றி எழுந்த சர்ச்சையைத்தான் கூறவேண்டும். 23 -01- 1997 அன்று அவருடைய மனைவி விஜயகுமாரி இறந்தார். உடனடியாக அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அதில்தான் பலருக்குச் சந்தேகம் பிறந்தது. ஜக்கியின் மாமனார் டி.எஸ்.கங்கண்ணா தன் மகளின் இறப்பில் ஏதோ சதி இருப்பதாக பெங்களூரு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். ஜக்கியோ  தன் மனைவி ஆழ்நிலை தியானத்தில் உயிர் துறந்துவிட்டார் என்று கூறினார். இருக்கலாம். இப்படி அவர் வாழ்வில் ஒரு எபிசோடு உண்டு.

ஆனால் அவருடைய பேச்சுக்களில் நான் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டியுருப்பது போன்ற பொறிகள் தெறிக்கும்போது அதை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. அவரே மொத்தமான ஒரு தொகையில் தன் சீடர்களைக் கைலாச மலை வரை யாத்திரை அழைத்துச் சென்றவர்தான். ஆனால் YMCA மைதானத்தில் பேசும்போது ஒரு கருத்தைச் சொன்னார். வருடம் தவறாமல் இமயமலைக்குச் செல்லும் நடிகரை வாருவதுபோல் இருந்தது அது! ("ஆன்மிகத்துக்காக இமயமலைக்குப் போறாங்களாம், அங்கே யாரோ அவதாரமாம், அவரைப் பார்க்கணுமாம், அப்போதுதான் ஆன்மிகம் வருமாம். அதெல்லாம் தேவை இல்லை. ஆன்மிகம் என்பது இங்கே நீங்க இருக்கிற இடத்துலேயே வர்றது. ஆன்மிகம் உண்டாவது மனசுலதான். இமயமலைக்குப் போனாலும் இதே மனசுதானே இருக்கும். இதே மனசைத்தானே தூக்கிக்கிட்டுப் போவீங்க. இமயமலை அற்புதமான இடம்தான். இந்தியனா பிறந்த ஒவ்வொருத்தரும் ஒரு தடவையாவது இமயமலையைப் பார்க்கணும். அதுக்காகப் போங்க. ஆனால் ஆன்மிகத்துக்காக இமயமலைக்குப் போகவேண்டியதில்லை!)

சில இடங்களை அல்லது நபர்களை நாம் முதன் முதலாகப் பார்க்கும்போதே அதற்கு முன்பே எங்கோ எப்போதோ பார்த்திருக்கிறோம் என்ற உணர்வு தோன்றுவதுண்டு. சீல நிகழ்ச்சிகள்கூட அப்படி ரீப்ளே பார்ப்பதுபோல் தோன்றும். எனக்கு இந்த அனுபவங்கள் ஏற்படுவதுண்டு. நோயடிக் அறிவியல் (NOETIC SCIENCE ) இதனை PRECOGNITION என்றும் PRESENTIMENT என்றும் அழைக்கிறது. DEJA VU என்று இத்தைகைய அனுபவங்களுக்கு ஒரு பெயர் உண்டு. இதைப் பலர் பூர்வ ஜென்ம ஞாபகம் என்று எடுத்துக்கொண்டு குழம்புவார்கள். அப்படிப்பட்ட ஒருவர் அதை ரொம்ப சீரியஸாக ஜக்கியிடம் விளக்கம் கேட்கிறார். ஜக்கியின் பதில் எப்படி இருந்தது என்கிறீர்கள். லாவகமான நக்கல்! (அதில் எனக்கு ஓஷோதான் தெரிந்தார்). அந்த உரையாடல் இதுபோல் இருந்தது:
"சத்குருஜி, சிலரை முதல் முறையாப் பார்க்கும்போது அவரை ஏற்கனவே பார்த்து பழகியிருக்கிறேன் என்று தோன்றுகிறது..."
"ரொம்ப அழகா இருப்பாங்க போல!"
"......? சத்குருஜி, இது பூர்வ ஜென்ம ஞாபகமா இருக்குமா?"
"இது இயல்பான ஒரு விஷயம்தான். இயல்பா நடக்குற ஒன்றுதான். இதை அப்படியே விட்டுருங்க. தேவையில்லாம பூர்வஜென்மமா இருக்குமோ அப்படி இப்படீன்னு குழப்பிக்காதீங்க"

இரண்டறக் கலந்து ஒன்றாகிவிட வேண்டும் என்ற தவிப்பு மனிதக் காதலிலும் உண்டு இறைக் காதலிலும் உண்டு. ஒருவரில் ஒருவர் இணைந்து ஒன்றாகிவிட காதலர்கள் தவிக்கிறார்கள். இறைவனை அடைய பக்தன் தவிக்கிறான். (அப்படி ஒன்றாகிவிட்டால் பிறகு காதல் ஏது?) இந்தத் தவிப்பின் 'அபத்தத்தை' ஒரு சொற்பொழிவில் ஜக்கி நக்கலடித்தார்: "ஒன்றாகிவிடனும்னு அப்படி ஒரு தவிப்பு. ஏற்கனவே இது (தன்னைச் சுட்டுகிறார்) ஒன்றாகத்தானே இருக்கு?" உண்மைதான். யோகி என்பவன் அனைத்தும் ஒன்று என்பதை அனுபவத்தில் உணர்ந்து அந்த அனுபவத்திலேயே நின்று வாழ்பவன். அதனால் இப்படி இவ்வளவு எளிமையாகச் சொல்லிகிட முடியும். ஆனால் இது எப்படிக் காதலர்களுக்குப் புரியும்?

ஜனவரி 2004 -ல் EVOLVE என்னும் பத்திரிகையில் ஜக்கியுடன் ஒரு நேர்காணல் வெளியானது. அதில் ஒரு கேள்வி: "சத்குரு, உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லமுடியுமா? நீங்கள் எந்த மரபில் அல்லது பாரம்பரியத்தில் வருகிறீர்கள்?" இந்தக் கேள்விக்கு அவர் சொன்ன பதில்: "அடிப்படையில், நான் எந்தவொரு குறிப்பிட்ட மரபிலிருந்தும் வரவில்லை. நான் உள் அனுபவத்திலிருந்து வருகிறேன். ஆனால், இப்போது நான் பார்க்கும்போது, உலகின் ஒவ்வொரு மரபிலும் நான் இருக்கிறேன்!"இந்த பதிலை வைத்துக்கொண்டு அவர் தன்னை ஒரு இந்து என்று கருதவில்லை என்பதாகவெல்லாம் கூறுகிறார்கள். இது வேறு ஒரு தளத்தில் கூறப்பட்ட பதில். அவருடைய தியான முறைகளும் யாத்திரைகளும் கொண்டாட்டங்களும் அவரை இந்து மரபில்தான் அடையாளம் காட்டுகின்றன. தான் அடைந்த அக அனுபவத்தின் வழியே அதை அவர் வார்த்துக் கொள்கிறார் என்பதுதான் கவனிக்கவேண்டியது. இந்த விடையில் எனக்கு ஏற்பட்ட ஆச்சரியம் என்னவென்றால் இதே கருத்தை ஓரிடத்தில் ஓஷோ கூறியுள்ளார் என்பதுதான். "நான் எந்த மதத்தையும் சேர்ந்தவனல்ல. எல்லா மதங்களும் என்னைச் சேர்ந்தவை!" (I don't belong to any religion. All religions belong to me!)  என்று மிக எகத்தாளமாகக் கூறுவார். கூர்ந்து கவனித்தால் அதில் 'ஏக தாளம்' இருப்பது புரியும்!

ஜக்கி தன் யோகா முறையை "ஈஷா யோகம்" என்று அழைக்கிறார். ஈஷாவாச்ய உபநிஷத்தின் ஆரம்ப வாசகத்திலேயே இந்தப் பெயர் வருகிறது. பதஞ்சலி முனிவரின் யோகா முறைமையை அடிப்படையாக வைத்துத்தான் இதை அவர் உருவாக்கியிருக்கிறார். இதெல்லாம் இந்து ஞான மரபில் அவர் வருவதைத்தான் காட்டுகிறது. நெருடும் ஒரு விஷயம் என்னவென்றால் இதற்கெல்லாம் ஒரு R வட்டம் போட்டு வணிகம் செய்கிறார்கள் என்பதுதான். ஆனால் இதையெல்லாம் வெளியே இருந்து விமர்சிப்பது எளிது. 'உள்குத்து' எவ்வளவு இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஜாக்கியாவது பரவாயில்லை "ஈஷா யோகம்" என்று ஒரு சொற்றடரைப் புதிதாகக் 'காயின்' செய்து வட்டம் போடுகிறார். ஆனால் "வாழும் கலை" (ART OF LIVING ) கற்றுத் தரும் ஸ்ரீ ஸ்ரீ  ரவிஷங்கர் தன் தலைப்பில் வட்டம் போட்டிருப்பதை என்னவென்று கூறுவது? இதே தலைப்பில் அவருக்கு முன்பே ஓஷோவின் ஒரு நூல் வெளிவந்துவிட்டது. சொல்லப்போனால் ART OF LIVING என்பது ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவவாதி எபிக்டீடஸ் பெயரால் உள்ள ஒரு நூலின் பெயராகும். அவரே அதற்கு ரெஜிஸ்டர் வட்டம் போடவில்லை!

சரி, இதெல்லாம் இருக்கட்டும். இந்தக் கட்டுரையை நான் கணினியில் தட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஒரு நண்பர் சொல்கிறார்: "சாமியாரப் பத்தியா எழுதுறீங்க? சூதானமாட்டு எழுதுங்க. பின்னால இவரும் ஏடாகூடமா மாட்டிக்கிட்டா என்ன செய்வீங்க?" அவர் சொல்வதிலும் பாய்ண்ட் இருக்கிறது. நித்த்தியைப் பத்தி "CHILD PRODIGY " என்று நாகூர் ரூமி எழுதிவிட்டு சாமியார் மாட்டிக்கொண்டு மாமியார் வீட்டுக்குப் போனதும் ஏண்டா எழுதினோம் என்று விளக்கம் சொன்னாரல்லவா? அதுபோல் ஜக்கி விஷயத்திலும் ஆகிவிடுமோ என்று நண்பர் கவலைப் படுகிறார். 'நம்பித்தானேங்க எழுதுறோம்' என்றேன் நான். ரிஸ்க் எடுக்கிறது நமக்கெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி இல்லையா?

Wednesday, January 5, 2011

நீரின் தடம்

நூற்றை
ஐந்து வென்றது
பாரத முடிவு.

'மென்மை 
வன்மையை வெல்லும்'
தாவோ ஞானம்.

'மெலியோர் பேறு பெற்றோர்
பூமி அவர்கள் வசமாகும்'
ஏசுவின் வாக்கு.

குருவிகளின் கூட்டத்தால்
யானைப் படை துவம்சம்
குரானின் பாடம்.

யுகங்களின் சேதி
கணங்களில் வெளிப்படலாம்
என்பதறிந்தேன்...

கண்ணீர் சுமந்த
அவளின் புன்னகை
என் உறைந்த உள்ளத்தை
உடைத்தபோது.

Monday, January 3, 2011

புண்ணிய மொழி

"நீங்கள் எம்.ஏ தமிழ் எடுத்துப் படித்ததற்குப் பதிலாக அரபி எடுத்துப் படித்திருக்கலாம். குரான்-ஹதீஸ் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். மனப்பாடம் செய்யும் ஒவ்வொரு வார்த்தைக்கும் புண்ணியம் கிடைத்திருக்கும்" என்று ஒருவர் என்னிடம் சொன்னார். அப்போது நான் எம்.ஏ தமிழ் இலக்கிய மாணவனாக இருந்தேன். தமிழ் படித்தால் நரகத்தில்தான் இடம் கிடைக்கும் என்று ஆழமாக நம்புபவர் அவர் என்பதுபோல் தோன்றியது!

அரபி மொழி சொர்க்கத்தின் மொழி, அது இறைவனின் மொழி என்பதாகச் சொல்லிக்கொண்டு அதுவே ஒரு தன்முனைப்பைக் கட்டமைத்துவிட்ட நபர்களை நான் சந்தித்ததுண்டு. தமிழ்த் துறையை "இறைவன் டிபார்ட்மென்ட்" என்று அரபிப் பேராசிரியர் ஒருவர் கிண்டல் செய்ததாக நண்பர் ஒருவர் வருத்தப் பட்டார். அதாவது 'அல்லாஹ்' என்று சொல்லாமல் 'இறைவன்' என்று சொல்கிறோமாம். "சரி விடுங்க, நாம இறைவன் டிபார்ட்மெண்டாவே இருந்துட்டுப் போறோம், அவரே சைத்தான் டிபார்ட்மெண்டா இருந்துக்கட்டும்" என்று நான் ஆறுதல் சொன்னேன்! இது போன்ற மெண்டல் பேராசிரியர்களை வைத்துக் கொண்டு வேறு என்ன சொல்ல?ஆன்மிகத்தை எந்த மொழியில் வேண்டுமானாலும் பேச முடியும். ஏனெனில் மொழிகள் எல்லாம் படைக்கப்பட்டவை. எனவே இறைவன் மொழிகளுக்கு அப்பாற்பட்டவன். அழகிய முகம் எந்த வடிவக் கண்ணாடியிலும் பிரதிபலிக்கும். என் முகம் சதுரக் கண்ணாடியில்தான் பிரதிபலிக்கும் என்று சொல்லமுடியாது. திருக்குரானிலே இந்தக் கருத்தை விளக்கும் ஒரு வசனம் உள்ளது:
"எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை
அவருடைய சமுதாயத்தின் மொழியைக் கொண்டே தவிர
அவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக"
(14 :4 )

உலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் ஏறத்தாழ ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் என்று இஸ்லாம் கூறுகிறது. இறைத்தூதர்கள் அனுப்பப்படாத சமுதாயமே / இனமே இல்லை என்பது திருக்குர்ஆன் சொல்லும் சேதி.
"திண்ணமாக உம்மைச் சத்தியத்துடன்
நன்மாராயம் சொல்பவராகவும்
எச்சரிப்பவராகவும் அனுப்பியுள்ளோம்.
தன்னில் ஒரு இறைத்தூதர் வாழ்ந்திராத
சமூகம் ஏதுமில்லை."
(35 :24 )

எனவே அந்த அந்தச்  சமூகத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அந்த அந்தச் சமூகத்தின் மொழியில்தான் ஆன்மிகத்தை விளக்கினார்கள் என்பது தெளிவு. ஆனால் இதை எவ்வளவு சவுக்காரம் அரப்புப் புளி  போட்டு விளக்கினாலும் சில அரபுப் புலிகளுக்குப் புரிவதில்லை. "அதெல்லாம் கிடையாது. ஆன்மிகத்தை அரபியில்தான் எத்த முடியும்" என்று அடம் பிடிப்பார்கள். என் ஆன்மிகத் தோழர் ஒருவரிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஒரு வினோதமான கருத்தைக் கூறினார். அப்படி ஒரு விளக்கத்தை அதுவரை நான் கேட்டதே இல்லை. அதாவது, உலகில் தோன்றிய எல்லா இறைத்தூதர்களும் அவரவர் சமுதாய மொழியில்தான் இறைச் செய்தியைக் கூறினார்கள். ஆனால் திருக்கலிமா என்னும் மூல மந்திரத்தை மட்டும் 'லா இலாஹா இல்லல்லாஹ்' என்று அரபியில்தான் சொன்னார்கள்' என்று என் நண்பர் சொன்னார்! இது கேட்பதற்கு ஒரு மொழிப் புரட்சியைப் போல் இருக்கலாம். ஆனால் எதார்த்தத்திற்கு இது தோதுவாக இல்லை! உதாரணமாக, ஜப்பானியர்களிடம் ஜப்பானிய மொழியில் உரையாற்றும் ஒருவர் திடீரென்று துருக்கி மொழியில் இரண்டு வரி பேசுவாறேயானால் அது அவர்களுக்குக் குழப்பத்தையே உண்டாக்கும். தெளிவை அல்ல. "தோழரே, மூல மந்திரத்தையும் அவர்கள் தங்கள் தாய்மொழியில்தான் சொல்லியிருப்பார்கள்" என்று நான் அவரிடம் 'எத்தி'னேன்!இது போன்ற உரையாடல்கள், உண்மையில் 'அரபி' என்றால் என்ன?' என்ற கேள்வியை என் மண்டைக்குள் எழுப்பித் தேட வைத்தது. TAKEN FOR GRANTED - ஆக மதத்தைப் பின்பற்றினால் இந்தக் கேள்வியெல்லாம் தேவை இல்லைதான். ஆனால் கேள்விகள் இல்லாமல் தேடல் என்பதில்லையே?என் கண்ணில் இன்னொரு நபிமொழி பட்டது. 'சேவலைத் திட்டாதீர்கள். அது அதிகாலையில் அல்லாஹூ அக்பர் என்று கூவுகிறது' என்பது அந்த ஹதீஸின் கருத்து. 'அல்லாஹூ அக்பர்' என்பது அரபி மொழி. ஆனால் உலகில் உள்ள எல்லாச் சேவல்களும் "கொக்கரக்கோ.." என்பது போன்ற ஒலிக்குறிப்பில்தான் கூவுகின்றன. ஆனால் அந்த ஒலிக்குறிப்புக்கு சேவலின் மொழியில் 'இறைவன் மிகப் பெரியவன்' என்று அர்த்தம் என்பதைத்தான் நபிகள் நாயகம் அரபியில் 'அல்லாஹூ அக்பர்' என்று கூறுகிறார்கள். சேவலின் ஒலிக்குறிப்பு இங்கே அரபியாக இருக்கிறது என்றுதான் விளங்க முடியுமே தவிர உலகில் எந்த சேவலும் ஒலிக்குறிப்பிலேயே 'அல்லாஹூ அக்பர்' என்று 'மனிதனின்' அரபியில் கூவாது. அப்படி ஏதேனும் ஒரு சேவல் மதரசாவின் கூரைக்கு மேலேயோ அல்லது கீழேயோ ஒதுங்கி அலிஃப், பே, தே ... என்று அரபி அட்சரங்கள் ஓதிக் கற்றுக்கொண்டு அதிகாலையில் எழுந்து 'அல்லாஹூ அக்பர்' என்று அரபியிலேயே பாங்கு முழங்கிவிடுமானால் என்னாகும்? அந்தச் சேவலை தெய்வீகச் சேவல் என்றோ அற்புதச் சேவல் என்றோ சொல்லி காசு வசூலிப்பார்கள்! தவிர, அதன் கழுத்தில் ஒருபோதும் கத்தியை வைக்கமாட்டார்கள். ('அல்லாஹூ அக்பர்' என்று நாளெல்லாம் கூவிய சேவலின் கழுத்தில் அதே மந்திரத்தைக் கூறிக் கத்தி வைக்கிறார்களே, சேவலின் வாழ்வில் என்ன ஒரு ஐரணி பார்த்தீர்களா? திருக்கலிமாவைக் கூறிக்கொண்டே வந்தவர்கள்தானே நபிகளாரின் திருப்பேரர் இமாம் ஹுசைனைக் கொலை செய்தார்கள்? அல்லாவின் பெயரை ஓதிக் கொண்டிருந்தவர்கள்தானே சூஃபி ஞானி மன்சூர் ஹல்லாஜைக் கொலை செய்தார்கள்?).இன்னொரு நபிமொழியும் நினைவுக்கு வந்தது. 'ஒரு குழந்தை அதன் முதல் ஓராண்டில் அழுவது என்பது அது அல்லாஹ்வை துதிப்பதாகும். சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹூ அக்பர், லா இலாஹா இல்லல்லாஹ் என்பதாக அது அல்லாஹ்வைத் துதிக்கிறது' என்பது அந்த ஹதீஸின் கருத்து. (அதற்காக ஒரு குழந்தை வீல்-வீல் என்று கதறிக்கொண்டிருந்தால் அது அல்லாஹ்வைத் துதிக்கிறது என்று நாம் சும்மா இருக்க முடியுமா? எறும்போ கொசுவோ அதைக் கடித்துக் கொண்டிருக்கலாம், அல்லது அது பசியால் கத்தலாம். என்ன விஷயம் என்று பார்ப்பதுதான் நம் பொறுப்பு.) இந்த ஹதீஸின்படியும் குழந்தை நேரடியாகவே அரபி ஒலிக்குறிப்பில் துதிபாடும் என்று பொருள் கொள்ள முடியாது. எதார்த்தத்தில் அப்படி இல்லை. மழலைகூட பேசத் தொடங்காத பச்சைப் பாலகன்/ பாலகி வசம்பு வைத்துத் தேய்த்தாலும் நம் நாக்கில் வர மறுக்கும் அரபி மொழியில் துதிபாடுவதாவது? உலகில் உள்ள எல்லாப் பாலகர்களும் 'வீல்-வீல்' 'விரா-விரா' 'ஞை-ஞை' என்று எப்படிச் சொல்வதென்றே நமக்குத் தெரியாத ஒலிக் குறிப்பில்தான் அழுகின்றன. அந்த ஒலிக்குறிப்புத்தான் அரபி இறைத்துதியாக இருக்கிறது. மாறாக, ஏதேனும் ஒரு குழந்தை பிறந்தவுடனே அட்சரம் பிசகாத அரபியில் "சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி... " என்று மூன்றாம் கலிமா கூறிக்கொண்டு பிறக்குமானால் அதனை ஒரு தெய்வீகக் குழந்தை என்று கூறிவிடுவார்கள். வேண்டாத சிலர் அது சாத்தானின் குழந்தை என்றுகூட சொல்லக்கூடும்!

இறைவனுடைய பேச்சுக்கு வடிவம் கிடையாது என்பதுதான் உண்மையான மார்க்க அறிஞர்களின் - ஞானிகளின் கொள்கை. மனிதர்கள் பேசும் மொழிகளிலும் சரி - அது அரபியோ தமிழோ அல்லது வேறு எதுவோ - அல்லது விலங்குகள் பறவைகள் பேசும் மொழிகளாக இருந்தாலும் சரி, அந்த மொழிகளின் லட்சணங்களை விட்டும் இறைவனின் பேச்சு (கலாம்) பரிசுத்தமானது. அதாவது படைக்கப்பட்ட மொழிகளின் பண்புகள் படைக்கப் படாத - அநாதியான, பூர்விகமான இறைப்பேச்சுக்குக் கிடையாது. படைப்புக்களின் மொழிகளுக்கு சப்தம் உண்டு, அட்சரங்கள் உண்டு, அதனால் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும் தன்மை (SERIALITY ) உண்டு. இவை எதுவுமே இறைப்பேச்சுக்குக் கிடையாது. அவனது பேச்சுக்கு, அவனது மொழிக்கு, அதாவது இறைவனின் அரபிக்கு சப்தமும் இல்லை எழுத்துக்களும் இல்லை! (பிலா சவ்தின் பிலா ஹர்ஃபின்.) இதை இந்திய ஞானிகள் "நாதம்" என்று அழைத்தார்கள். மூல ஒலி - அனாஹதம் (PRIMORDIAL SOUND ) என்றும் படைக்கப்படாத ஒலி (UNCREATED SOUND ) என்றும் அது விளக்கப்பட்டது. எனவே அ,உ,ம் என்னும் மூன்று எழுத்துக்களால் மனித நாவில் மொழியப்படும் "ஓம்" என்பதுகூட அந்த நாதத்தின் தூய வடிவமல்ல என்றார்கள். "ஓம்" என்னும் பிரணவ மந்திரமும் அந்தப் படைக்கப்படாத நாதத்தின் பிரதிபலிப்புத்தான் - MANIFESTATIONதான் என்று சொன்னார்கள்.   

திருக்குர்ஆன் தெளிவான அரபி மொழியில் வெளிப்படுத்தப்பட்டது என்று திருக்குர்ஆன் வசனமே சொல்கிறது ("பிலிசானின் அரபிய்யிம் முபீன்" 26 :195 ). லிசான் என்னும் சொல்லுக்கு மொழி என்றும் நாக்கு என்றும் அர்த்தங்கள் உண்டு. சொல்லப்போனால் நாக்கு என்பதுதான் நேரடிப் பொருள். மொழி என்னும் அர்த்தம் ஆகுபெயராக அமைந்தது. அதாவது நாவால் பேசப்படுவது என்பதால் வந்தது. உருவமற்ற இறைவனுக்கு உடல் இல்லை. எனவே நாவு என்னும் உறுப்பும் இல்லை. (ஒருவேளை இறைவனுக்கு நாவு உண்டு என்பதற்கு இதை ஆதாரமாக சகோ.பி.ஜெ போன்றவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடும்!) எனில் 'தெளிவான அரபியில் வெளிப்படுத்தப் பட்டது' என்பதற்கு என்ன பொருள்? 'சப்தமோ எழுத்துக்களோ இல்லாத இறைவாக்கு நபிகள் நாயகத்தின் நாவின் மொழியான அரபியில் (லிசான்) வெளிப்படுத்தப்பட்டது' என்பதுதான். இதே போன்றுதான் இறைவாக்கு பிற நபிமார்களுக்கு அவர்களின் தாய்மொழிகளில் வெளிப்படுத்தப் பட்டது. திருக்குரானிலேயே அதற்கு முன்பு அருளப்பட்ட வேத வெளிப்பாடுகள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. தாவூத் நபிக்கு "ஜபூர்" வேதம் யுனானி மொழியிலும், மூஸா நபிக்கு "தவ்ராத்" வேதம் ஹீப்ரூ மொழியிலும், ஏசுநாதருக்கு "இன்ஜீல்" வேதம் அரமைக் என்னும் பழைய சிரியன் மொழியிலும் வெளிப்படுத்தப் பட்டதாக இஸ்லாம் கூறுகிறது. இறைவாக்கு அதன் பூர்விக நிலையிலேயே இப்படிப் பல மொழிகளில் உள்ளன என்று அர்த்தமல்ல. மொழிகளுக்கு அப்பாற்ப்பட்ட இறைவாக்கு இறைத்தூதர்களின் தாய்மொழிகளில் பிரதிபலிக்கப் பட்டது என்பதுதான் இதன் விளக்கம். அதனால்தான் திருக்குர்ஆன் அரபியாக வெளிப்படுத்தப் பட்டது என்று கூறாமல் 'அரபியில் வெளிப்படுத்தப்பட்டது' என்று மேற்படி வசனம் சொல்கிறது! இதுவே, இறைவனின் பேச்சுக்கு - இறைவனின் அரபிக்கு என்று சொன்னாலும் சரி - சப்தம் வரிவடிவம் எழுத்துவடிவம் என்ற தன்மைகள் இல்லை என்பதற்கு ஆதாரம்!

என் மனதில் அன்புணர்வு பொங்கும்போது "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று தமிழில் வெளிப்படுத்தலாம், "I LOVE YOU " என்று ஆங்கிலத்தில் வெளிப்படுத்தலாம் அல்லது அவரவருக்குத் தெரிந்த/ பிடித்த எந்த மொழியில் வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அதற்காக அன்பு என்பது தமிழ் மொழி என்றோ ஆங்கில மொழி என்றோ அர்த்தம் அல்ல. அன்புக்கு மொழி இல்லை! அதைப் போல்தான் இறைவனின் மொழியும்.

இந்த விஷயங்கள் "அரபி" என்பதை மூன்று கோணங்களில் விளங்கிக் கொள்ளள உதவுகிறது:
1 . இறைவனின் அரபி - சப்தம் எழுத்து இல்லாதது (பிலா சவ்தின் பிலா ஹர்ஃபின்)
2 . ஒலிக் குறியீட்டு அரபி - குழந்தையின் அழுகை, சேவலின் கூவல் போன்றவை.
3 . மனிதர்களின் அரபி - அலிஃப், பே, தே ... முதலிய எழுத்துக்கள் கொண்டு அமைந்தது.

கொக்கரக்கோவில் அரபி கேட்கிறதா? குழந்தையின் அழுகையில்? சில்லென்று ஓடும் ஓடையின் ஓசையில்? காட்டின் ஊடாக வீசும் காற்றில்? பறவையின் பாடலில்? கேட்கிறது என்றால் நீங்கள் அரபி அறிந்தவர்தான் போங்கள்!