Friday, December 16, 2016

ரூமியின் தோட்டம் - 7

Image result for hatched egg

      சிசுவுக்குக் கருவறை போல், புழுவிற்குக் கூடு போல், நேரம் வரும்போது சௌகரியத்தைத் துறந்துவிடத்தான் வேண்டும். இல்லையெனில், அதுவே உன் ஆன்மாவின் கல்லறை ஆகிவிடும். உருதுப் பழமொழி: ‘பாப் கே மெஹர்பானி சே உஸ்தாத் கா மார் பெஹ்தர்’ – ‘தந்தையின் செல்லத்தை விடவும் ஆசானின் அடி சிறந்தது’. குருநாதர் உன் பாதையில் முட்களைத் தூவுகிறார் எனில் உன்னையே ஒரு பூவாக மலர வைக்கத்தான். மவ்லானா ரூமி சொல்வது கேள்:

மலை முகடு செல்லும் நேரம் இது
குளிர்கால வீடு விட்டு வெளியே

பறவைகள் போல்
நீயே உனது கண்காணியாய் இரு

கால தேச இக்கணம்
நம்பிக்கையின் கருவில் ஊறிக்கொண்டொரு
உயிர் உரையும் முட்டையோடு,

உடைத்துக்கொண்டது அறிவினின்றும்
பறவையின் கடவுளின் பாடலுடன்
வெளியேறும் வரை
அடைகாக்கப்படும்
கருணையின் சிறகடியில்.

v
     
Image result for sun painting

ஐம்பது அடி தூரத்தில் காகம் பார்க்க முடியாததை ஆயிரம் அடி உயரத்திலிருந்து பார்த்துவிடுகிறது பருந்து. பறவைகள் எல்லாம் சமமன்று. அரசனின் கையில் அமர்த்தப்படுவது ராஜாளிதான், அண்டக் காக்கை அல்ல. இறைநேசர் என்பவரின் நிலை என்ன? அல்லாஹ் சொல்கிறான், “அவரின் பார்வையாக நான் ஆகிறேன். அவர் என்னைக் கொண்டு பார்க்கிறார்” (ஹதீஸ் குத்ஸி). ’பாராததேன்?’ என்னும் புலம்பல் சீடனின் வசதிக்காகத்தான். இறைவனாகட்டும், இறைவனைக் கொண்டே பார்க்கும் குருவாகட்டும், எப்போது பார்வை தடைப்பட்டுப் போனது? தனது குருநாதரைப் பற்றி மவ்லானா ரூமி சொல்கிறார்:

’ஷம்ஸ், இப்பக்கம் பாரீர்’

இல்லை. என் சொல் பிழை.
சூரியன் என்பது முழுதும் முகமே
எப்போதும் எத்திசையும் நோக்கியபடி.

தலையின் பின்புறம் என்பது
சூரியனுக்கு இல்லை.

v
 Image result for moon fish painting  

   இறைவனின் சுயம் பூர்வீகம். படைப்பின் சுயம் சுழியம். இருப்பதில் கோலமான இல்லாமை. பூர்வீகத்தில் வந்துள்ளது புதுமை! ’அஸ் பஹ்ரே கிதம் மவ்ஜே நூ’ – பூர்வீகக் கடலிலிருந்து புதுப்புது அலைகள் புறப்படுகின்றன. ’ஒன்று மற்றொன்றாகவே முடியாத இரண்டு, பிரிக்கவே இயலாதபடி ஒன்றில் மற்றொன்றாய் இணைந்திருக்கின்றன. இதுவே இப்பாதையின் சுவை’ என்று சூஃபி மகான் ஃபைஜி ஷாஹ் நூரீ (ரஹ்) அவர்கள் பேச்சிலிருந்து நினைவு. இச்சுவை தவிர யான் கேட்க எச்சுவை உள்ளது?

      அடையவே முடியாத உயரத்தில் இருப்பவராய்த் தோன்றுகிறார் குரு. ’தூ குஜா? மன் குஜா?’ – நீங்கள் எங்கே? நான் எங்கே? மஜ்னூனுக்கு ஈருலகிலும் அடையவே முடியாத ஒன்று இருக்கிறது எனில் அது லைலாதான். மஜ்னூன் அடைந்து கொண்டதும் லைலாவை அன்றி வேறில்லை! எட்டவே முடியாதவர் என்று குருவை உணரும் சீடனே அவரை அடைகிறான். எட்டிவிட்டேன் என்று நினைப்பவன் தவர விடுகிறான். சில்சிலா என்னும் சூஃபி குருவழித் தொடரில் ஒன்றுக்கு மேல் ஒன்று சிகரங்கள்தான். என் சிகரம் தன் சிகரத்திற்கு முன் தானொரு குன்றெனவே கூறிக்கொள்கிறது.

Image result for pt pran nath
      
இசையுலகிலிருந்தொரு உதாரணம். கிரானா இசைப்பள்ளியின் கானரிஷி பண்டிட் ப்ராண் நாத் தனது குரு உஸ்தாத் அப்துல் வாஹித் ஃகான் பற்றிச் சொல்கிறார், “என் குருநாதர் ஒரு குதுப் மினாராக இருந்தார். அதில் முதல் படிக்கட்டில்தான் நான் காலடி வைத்திருந்தேன். அடுத்த அடி வைப்பதற்குள் அவர் சாய்ந்துவிட்டார். அவரின் உயரத்தை நான் அறியவே இல்லையே!”

நானொரு மீன்                                                   
நீ நிலா

எனைத் தீண்ட முடியாது நீ எனினும்
நான் வாழும் கடலில்
நிறைகிறது நின் ஒளி

v
 Image result for ney painting     

மரணித்தில் வாழ்வது எப்படி? ‘மூத்து கப்ல அன்த மூத்து’ – ’சாகுமுன் செத்துவிடு’ (ஹதீஸ்). ’சிரஞ்சீவி பவ’ என்று ஆசீர்வதிக்கிறது சிரத்தை சீவும் குருவின் கை வாள். “நபிகளின் வாள் எது? அவரின் அழகிய பண்புதான்” என்கிறார் ஹஸ்ரத் இனாயத் ஃகான். நபி என்னில் வந்துவிட வேண்டும் என்னும் தவிப்பு, இஷ்கே றசூல் என்னும் நபிக்காதல், தலை போகும் காரியம்தான் உண்மையில் அது! சீடனுக்காகத் தன் தலையைத் தர முன்வந்தார் குரு ஷம்ஸுத்தீன் தப்ரேஸ் எனில் அந்த சீடரான மவ்லானா ரூமியின் ஸ்தானம் நான் என்ன சொல்ல? தெய்வீக இசை வெளிப்பட்ட புல்லாங்குழல் அது. இதோ ஒரு ராகம்:

ஒன்பது ஓட்டைகளுடன்
இந்த நாணற் புல்லாங்குழல்
மனிதனின் பிரக்ஞையைப் போல்

சிரம் துணித்த பின்பும்
உதடுகளின் மீது ஆசை!

v
    
Image result for leaves in wind

  ”அன்ஃபாசே ஈசா” – ஏசுவின் மூச்சு என்று சூஃபிகள் பரிபாஷையால் சொல்வது என்ன? குருவின் உயிரிலிருந்து உன் உயிருக்குப் பாயும் உணர்ச்சிதான். அதனை ‘இல்கா’ என்பர். இல்காவே உண்மையில் ’லிகா’ (சந்திப்பு). உயிர்கள் சந்தித்துக் கொள்ளாமல் உடல்கள் சந்திப்பதில் சங்கமம் இல்லை. குருவின் உயிரில் உன் உயிர் சத்தியத்தை அடைந்து கொள்ளும் சந்திப்பே ’சத்சங்’ ஆகும்.
      ஏசுவின் மூச்சு தம் திசையில் வீச வேண்டுமாய் விருட்சங்கள் கிளைக்கைகள் கூப்பி தவம் இயற்றுகின்றன. வரம் கனிந்து அத்தென்றல் வீசுகையில் என்னவொரு ஆனந்த நடனம்!
ப்ரிய! உன் கிளைகளை எப்போதும் பசுமையாக வைக்கும் அந்தப் புனித மூச்சுக் காற்றினை யாசித்திரு. மவ்லானா ரூமி சொலவதைக் கேள்:

இறந்தவற்றிலிருந்து
உயிர் வளர்கிறது
உயிருள்ளவை மெல்ல மெல்ல
இறப்பினுள் செல்லச் செல்ல.

பசுங்கிளைகள் கனி கொண்டு
தரை நோக்கித் தாழ
காய்ந்த சுள்ளிகள்
தீக்குள் செல்லும்.

v

 Image result for grapes painting chinese    

உணவு குறித்த பாட விரிவுரையில் எரிச்சல் அடைகிறேன் எனில் என்ன அர்த்தம்? மிகு பசி கொண்டவன் நான் என்பதல்லவா? என் உயிர் உணவைத் தேடுகிறது என்பதல்லவா? மேலும் மேலும் வெறுமனே வார்த்தைகள் பரிமாறப் படுதலை எங்ஙனம் சகிப்பேன்? பிரசங்கியே! உம் வார்த்தையில் அல்ல, நான் இங்கே லயித்து அமர்ந்திருப்பது. என் இதயத்துள் ஊன்றிய ஒரு கனிவுப் பார்வையின் இனிமை அது.  மவ்லானா ரூமி சொல்கிறார்:

பழமொழி நினைவு கொள்:
“திராட்சைகளை ருசி”

தோட்டத்தைப் பற்றித்
தொனதொனக்காதே

திராட்சைகளை ருசி.


Tuesday, November 22, 2016

ரூமியின் தோட்டம் - 6

Image result for man is microcosm

அறிவியல் சொல்கிறது, மனிதன் பிரபஞ்சத்தினும் மிக மிகச் சிறியன். ஆன்மிகம் சொல்கிறது, மனிதன் பிரபஞ்சத்தினும் மிக மிகப் பெரியன். “நீயொரு சிறிய பிரபஞ்சம் என்று நினைக்கிறாய். மனிதனே! நீயே பெரிய பிரபஞ்சம் என்பதை அறி!” என்றார்கள் ஹழ்ரத் அலீ முர்தழா. மனிதப் படைப்பின் சாத்தியப் பரிமாணங்களை அடைந்து முழுமைப் பெற்றுவிட்ட மனிதனை சூஃபிகள் “இன்சானுல் காமில்” (செம்மனிதன்) என்று அழைக்கின்றனர். சூஃபி யார்? விருட்சமாய் விரிந்த விதை! பிரபஞ்சத்தில் தானொரு அங்கம் போல் மனிதவுருக் கொண்டு நடமாடும் ஞானியருக்குள் எத்தனையோ பிரபஞ்சங்கள் அடக்கம். அன்னார் பற்றி மவ்லானா ரூமி சொல்கிறார்:

இங்கிப்போது நம்முடன் இருக்கின்றனர்

ஒவ்வொரு அதிகாலையும்
ஒடியாப் புதுக்குதிரை மீதேறி
வானேழின் எல்லைகள் கடந்து செல்வோர்,

சூரியனும் நிலாவும் தலையணையாய்
இரவில் துயில் கொள்வோர்

இந்த ஒவ்வொரு மீனின் உள்ளும்
ஒரு யூனுஸ் நபி
கரிப்புக் கடலினை இனிப்பாக்கியபடி

மலைகளைப் பிசைந்து வடிவமைக்கும் திறத்தினர்
எனினும் அவர்தம் செயல்கள் எதுவும்
வரமும் அல்ல சாபமும் அல்ல

அதி நிதர்சனம் எனினும்
அதனினும் ரகசியம் அவர்

ஓடைப்புனலில் அவர்தம்
பாதப் புழுதியைக் கலந்துவிடு

அது கொண்டு கண்ணுக்கு மை எழுது

இதுவரை உன்னுள் நீ
நிந்தித்திருந்த முள்ளொன்று
ரோஜாவாய் மலர்ந்திடக் காண்பாய்

v
Image result for sufi guru
      
ஆயுள் பரியந்தம் மூளையைக் கசக்கினாலும் எவ்வொரு மேதையும் சிக்கறுக்கக் காணாத கணக்கு இவ்வாழ்க்கை. இரண்டும் மூன்றும் ஏழு என்று லகுவாகச் சொல்லிச் சிரிக்கும் குழந்தையின் பேதைமை. அது வேண்டும் நமக்கு. போரும் அமைதியும் இரவும் பகலும். மண்ணில் மட்டுமல்ல, மனதிலும். சூர்யோதயப் போதுக்கான காத்திருப்புத் துயரம் எல்லோர் வாழ்விலும் உண்டு. ஷம்ஸுத்தீன் என்னும் ஞானச் சூரியன் – குருநாதர் – வரும் வரை மை எழுதிய இருளாய்த்தான் இருந்தது மௌலானா ரூமிக்கும் கல்வியறிவு எல்லாம். குரு யார்? இதயத்திற்குள் தலையை ஊறப்போடும் கலையைச் சொல்லித் தருபவர். உன்னைத் தன் சஹ்ருதயனாய் மாற்றும் தயன். மவ்லானா ரூமி சொல்கிறார்:

நைல் நதி பாய்கிறது
குருதிச் சிவப்பாய்
நைல் நதி பாய்கிறது
ஸ்படிகத் தூய்மையாய்

காய்ந்த முட்களும் அகிலும் ஒன்றுதான்
நெருப்புத் தீண்டும் வரை

வீரனும் கோழையும் சமமாகவே நிற்பர்
சர மழை பெய்யும் வரை

வீரர்களுக்குப் போர் பிடிக்கும்
வியூகம் அறியும் நுட்ப அரிமா
இரையைத் தன்னிடம் ஓடிவரச் செய்கிறது
“என்னைக் கொல்”

இறந்த கண்கள் வெறிக்கின்றன
வாழும் கண்களை.

இது என்னவென்று தலையை உடைக்காதே

காதலின் வேலை அபத்தமாய்த் தோன்றும்
எனினும், அர்த்தம் காணும் முயற்சி
அதனை மேலும் திரையிடுகிறது.

மௌனம்.

v
Related image
     
 கலை என்பது நிஜத்தின் நிழற்படம். தத்துவம் நிழல். கிரேக்கத் தத்துவம்தான் சூஃபித்துவத்தின் பிதா என்பார் உளர். அது ஓர் உட்காய்ச்சலின் உளறல் என்பதறிக. நிழலின் விளைவாய் நிஜம் தோன்றியதில்லை இதுவரை. சூஃபித்துவம் என்பதென்ன? அது எப்போது தோன்றிற்று? இக்கணத்தில் முகம் காட்டும் விடை: ‘ஆதமுக்குள் அல்லாஹ் தன் ஜீவனிலிருந்து ஊதுவதன் அனுபவம் அது.’ இங்கே செய்வது அங்கே அனுபவிப்பதற்கான அறுவடை என்னும் நியதிக்கு மேலே தெய்வீகக் கருணையால் உயர்த்தப்பட்டவர்கள் சூஃபிகள். அவர்க்கு, இங்கும் அங்கும் அறுவடையே! ‘லஹுமுல் புஷ்ரா ஃபில் ஹயாத்தித் துன்யா வ ஃபில் ஆஃகிறா’ – ’அவர்களுக்கு இம்மை வாழ்விலும் மறுமையிலும் சுப சோபனம்’ என்கிறது குர்ஆன். இசைஞனின் மூச்சு ஊதலில் மெய்ம்மறந்து சொக்கியுள்ளது புல்லாங்குழல், வீட்டிலாயினும் காட்டிலாயினும். மவ்லானா ரூமி சொல்கிறார்:

நிலப்பறவை
ஆழ்கடலின் மீது
என்னதான் செய்யும்?

முழுப் பாழின் மதுவிடுதி
வெளித் தள்ளிய சித்தர்கள் யாம்,

கணமேனும் கவலையில்லை
லாபம் அல்லது வரதட்சணை அல்லது
எதை உடுத்துவது என்பதெல்லாம்.

பைத்தியத்திற்கு
நூறாயிரம் வருடங்களுக்கு அப்பால்
இருக்கின்றோம்.
பிளாட்டோ பேசவில்லை இது பற்றி.

ஆண் பெண்ணின் உடலழகு
இங்கொரு உருவம் அல்ல.

எவ்வளவு மரிப்பரோ
அவ்வளவே காதலரின் உயிர்ப்பு

ஷம்ஸிடம் கேட்கிறதொரு புனிதாத்மா:
“என்ன செய்கிறாய் இங்கே?”
விடை:
“அங்குதான் என்ன செய்ய?”

v
Image result for shabda kahn

     பண்பாட்டு அடையாளங்கள் ஆடைகள் எனில் அதன் விழுமியங்கள் தேகம். சத்தியம் என்பது இவற்றில் தன்னைக் காட்டிக் கொள்ளக்கூடும் எனினும் அது இவை அல்ல. எங்கே தேகத்தையே உதறிவிட வேண்டியுளதோ அங்கே ஆடை களையவும் தயங்குவோர்க்கு என்னதான் கிட்டும்? முகமூடி அணிந்து கொண்டு கண்ணாடி பார்ப்பவன் தன் முகத்தை எப்படிப் பார்க்க முடியும்? உன் சுயத்தின் முகத்தை நீ காணவொட்டாது தடுக்கும் முகமூடிகள்தான் எத்தனை, கால தேச இன மொழி மதம் சார்ந்த பண்பாடுகள் என்னும் பெயரில்? சத்தியத்தின் சந்நிதியில் முகமூடிகளுடன் வந்து நிற்போர்க்கு சத்தியத்தின் தரிசனம் ஒருபோதும் இல்லை. மவ்லானா ரூமி சொல்கிறார்:

அக்கறையான அறிவுரைகளைப் புறந்தள்ள
சரியான தருணம் இது,

பண்பாடு நம்மில் இடும் முடிச்சுக்களை
அவிழ்த்துவிட

சீக்கிரம் முடி.
புறச்செவிகள் இரண்டிலும் பஞ்சு அடை

நாணற் காட்டினுள் மீண்டும் செல்
சர்க்கரை இனிமை
மீண்டும் உன்னில் ஏறட்டும்

விதிகளோ அன்றாடக் கடமைகளோ இல்லை
மௌனத்தின் அமைதியை அவை கொண்டு வருவதில்லை

v

Image result for shabda kahn 
    
இன்னல்லாஹ ஜமீலுன் வ யுஹிப்புல் ஜமால்” – ’இறைவன் அழகன், அவன் அழகை நேசிக்கிறான்’ (ஹதீஸ் குத்ஸி). ஒவ்வொரு சிருஷ்டியும் அந்த அழகெனும் சாகரத்தின் ஓர் அலை. சௌந்தர்ய லஹரி. ஞானி யார்? ஆழிப் பேரலை! சூஃபிகளின் தியான சபை என்பதென்ன? அவன் தன் அழகைத் தனக்குக் காட்டித் தானே ரஸித்திருக்கும் நிகழ்வு. பிரபஞ்சம் முழுதும் சூஃபி சபையே. குல்ல யவ்மின் ஹுவ ஃபீ ஷஃன் – ’ஒவ்வொரு நாளும் அவன் தன் வெளிப்பாட்டில் இருக்கிறான்’ (குர்ஆன்: 55:29). அகத்தின் கண் இன்னும் திறக்காத மனிதரின் முன் இப்பிரபஞ்சம் என்பது என்ன? இசையைக் கல்லாதவன் முன் விரிக்கப்பட்ட இசைக் குறிப்பேடு! மவ்லானா ரூமி சொல்கிறார்:

ஒவ்வொரு சபையின் நோக்கமும் இதுவே
அழகைக் கண்டறிதல்
அழகை நேசித்தல்.

பசித்த யாசகரின் அளவுக்கு
அடுமனைக்காரர் அறிவதில்லை
ரொட்டியின் சுவையை

நேசன் அறிய விரும்புவதால்
அருவங்கள் உருக்கொள்கின்றன

மறைவதே படைப்பின்
மறைவான நோக்கம்.

உன் விதையைப் புதைத்துக்
காத்திரு.

v


      அறிஞனின் ஆன்மா வழங்க முடியாத கனிவை ஞானியின் தேகமே உனக்கு வழங்கிவிடும். அவரின் உள்ளும் புறமும் ஒளிமயம். அறிஞனின் தலையை விட்டுத் தப்பித்து ஞானியின் பாதத்தில் அடைக்கலம் ஆகு. உடலுக்கு உண்டாகும் நோய்களை நீக்க மூலிகைகள் பல. அகநோய் நீக்கும் மூலிகை குருவின் கை ஒன்றுதான். வேர்களைத் தான் கெட்டியாகப் பிடித்து வைத்திருப்பதான பெருமிதத்தில் கிடக்கிறது மண். நீ நீராகி வேருக்குள் நுழைந்து விடுவாய் எனில் ஒருநாள் அல்லது ஒருநாள் கொப்பின் நுனியில் சிரிக்கும் மலரில் இருப்பாய், பின் அதன் கனியில் இருப்பாய். மவ்லானா ரூமி சொல்கிறார்:

ஒவ்வொரு மூலிகையும்
ஏதேனும் நோய் நீக்கும்

ஒட்டகைகள் முட்களைத் தின்னும் பிரியமாய்
நமக்கோ உட்பருப்பு வேண்டும்
கொட்டாங்குச்சி அல்ல.

முட்டையின் உட்புறம்
பேரீத்தங்கனியின் வெளிப்புறம்
அப்புறம், உனது உள்ளும் வெளியும்?

பல அடிகள் மேலே
கிளைகள் உறிஞ்சும் நீர் போல

கடவுளிடம் உனது ஆன்மாவும்.


Friday, October 28, 2016

ரூமியின் தோட்டம் - 5

Image result for illumination of heart
    
  ”இறைவனின் வண்ணத்தில் தோய்ந்திரு” (சிப்கதல்லாஹ்) என்கிறது குர்ஆன். இறையுணர்வில் லயித்திரு என்று பொருள். உணர்வின் ஊற்றுக்கண் வேறில்லை என்றறி. நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் வெற்றுத் தாள். ஒவ்வொரு கணமும் அந்த தெய்வீக ஓவியன் தன் வண்ணங்கள் குழைத்து நம்மை வரைகிறான். நாமவன் ஓவியம்.

உன்னுள் மறைந்திருக்கும் ஜம்ஜம் கிணற்றை மறந்த கணம் முதல் திருகு குழாய்களின் உபாசகன் ஆனாய். குழந்தை இஸ்மாயிலின் பாதம் பட்டு மூடியிருந்த ஜம்ஜம் கிணறு திறந்தது. மீண்டும் குழந்தை போல் ஆகிவிட்ட மனிதப் புனிதர் மட்டுமே உதவ முடியும் உனக்கு. சற்குருவின் பாத ஸ்பரிசத்தில் நின் உட்கிணறு திற. மீண்டும் மீண்டும் மண் சரிந்து மூடிக்கொள்ள தோண்ட வேண்டியிருக்கும் மணற்கேணிக்கு கைகள் சலித்துத் துவளாதா? வெளியிலிருந்து திறக்க நினைக்கும் கலைகள் எல்லாம். ஆன்மிகமோ நீரின் விசையில் உள்ளிருந்து திறக்கும் தருணத்திற்கான தவம்.

நாம ரூபங்களின் அலைகளில் கரையொதுங்கவும் மாட்டாது கடலுள் செல்லவும் முடியாது கிடந்துழலும் ஒரு செத்த மீன். அது, மூசா நபியின் கை தொட்டால் உயிர் பெறும். கடலுக்குள் சென்று ஜீவிக்கும். இறைவனே தன் கை என ஆகிவிட்ட ஞானியின் தீண்டலில் நீ சுறா ஆகிவிடு.

உன் பயமும் மகிழ்ச்சியும் வெறுப்பும் சினமும் என எல்லாம் நிழல்களின் அசைவுகள் கண்டு. நிஜத்தின் தரிசனம் கிடைத்துவிடின் நிழல்களின் பாதிப்பு இல்லை.

”சேவலை ஏசேல்” என்பது நபிவாக்கு. எந்த வகையில் அது இறைநேசர் ஆயிற்று? வைகறையின் முதற்கீற்றில் அது கொண்டை சிலுப்பி எழுகிறது, இறைவனின் மகத்துவத்தை வாழ்த்தியபடி. அது, பறவை இனத்தின் பிலால். ’சூஃபி என்பவன் தருணத்தின் பிள்ளை’ (சூஃபி இப்னி வக்தஸ்த்) என்பர். ’தொழுகையின் வக்த் (தருணம்) வந்தால் தொழுது விடு’. சரிதான். எப்போதும் தொழுகையில் தரித்திருக்கும் சூஃபிக்கு தருணம் என்பது என்ன? திரை விலகிய இறைக் காட்சி. மவ்லானா ரூமி சொல்கிறார்:

வண்ணங்களைப் படைத்தவனுக்காக
வெளிறிப் போ!

நிழல்களின் நிமித்தம்
முகத்தில் குங்குமம் பூசற்க

சேவலாய் இரு,
நேரத்தின்மேல் கவனமாய், தலைவனாய்
உன் சேவலைக் கோழி ஆக்கிவிடாதே

***

      ”மெய்ஞ்ஞானிகளுடன் இருங்கள்” (கூனூ ம அஸ் ஸாதிகீன்) என்கிறது குர்ஆன். இதனை சூஃபிகள் ’சுஹ்பத்’ என்பர். உடனிருத்தல் என்பதொரு ரசவாதம். இறைவனின் வற்றாக் கருணை என்னும் பெருநதிக்கும் சிருஷ்டிகள் என்னும் தோட்டத்திற்கும் இடையில் சுழலும் நீர்ச்சரங்களே சூஃபிகள். மவ்லானா ரூமி சொல்கிறார்:

இணைந்திருங்கள் தோழர்களே!
சிதறிவிட வேண்டாம்

நமது நட்பென்பது
விழித்திருப்பதால் ஆகிறது

நீர்ச்சக்கரம்
நீர் ஏற்றபடிச் சுழன்று
கொடுத்துவிடுகிறது அழுதபடி

அவ்வாறு அது தங்கியிருக்கும்
தோட்டத்தில்

***
Image result for sufi ecstasy
     
இறை தியானம் பற்றி சூஃபிகள் சொல்வதென்ன? முதலில் மூன்று சொற்களை நினைவில் வை. திக்ரு, தாக்கிர், மத்கூர் – தியானம், தியானிப்பவன்  மற்றும் தியானிக்கப்படுவோன். ’மன ஒளி’ (ஜியாவுல் குலூப்) என்றொரு சூஃபி நூல். ஹாஜி இம்தாதுல்லாஹ் (ரஹ்) என்னும் ஞானி எழுதியது. ஆரணி பாவா அவர்கள் தமிழாக்கித் தந்த சிறு மா நூல். அதில் வரும் ஆழிய வரிகளைக் கவனி:

      ”திக்ரின் நோக்கம் திக்ருக்கு உரியவனை அடையவேண்டும் என்பதுதான்”

      ”’தகல்லகூ பி அக்லாகில்லாஹ்!’ அல்லாஹ்வின் நற்குணங்களை உன்னுள் கொண்டுவா. உன்னை அழித்துவிடு. உன்னையே மறந்து விடு. திக்ரும், திக்ருச் செய்பவனும் அழிந்து திக்ரே திக்ருச் செய்யப்படும் பொருளாக மாறிவிட வேண்டும்”

      ”உன்னுடைய திக்ரை ‘மத்கூர்’ ஆக (திக்ருச் செய்யப்படுபவனாக) ஆக்கிவிட வேண்டும்”

      ”திக்ரு தானே திக்ரு செய்யப் படுபவனாக மத்கூராக ஆகிவிடுகிறது. இத்தகைய திக்ரு அல்லாஹ்வின் திக்ராகும்”

      இவ்வாறு தியானத்தில் தன்னை இழந்து மூழ்கி இருக்கும் நிலையை சூஃபிகளின் பரிபாஷையில் ”இஸ்திக்ராக்” என்பர்.

      மக்களில் பெரும்பாலோர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்றே தியானத்தில் ஈடுபடுகின்றனர். மேலோட்டமான தியானங்களால் மேல் நிலைகள் சித்திப்பதில்லை. வேர்கள் ஆழப்படாமல் கிளைகள் உயருவதில்லை. எனினும், எல்லாக் காலங்களிலும் ஒரு சில மகான்கள் மேற்சொன்ன நிலைகளில் வாழ்ந்து காட்டுகிறார்கள்.

அவர்களில் ஒருவர் சலாவுதீன் ஸர்கூபி. இவர், மவ்லானா ரூமியின் குருமார்களில் ஒருவர். ஸர்கூபி என்றால் பொற்கொல்லர் என்று பொருள். எவரின் பார்வை கேள்வி கைகள் கால்களாக இறைவனே ஆகிவிடுகிறானோ அந்த மகானின் அசைவுகள் எப்படி இருக்கும்? சலாவுதீன் தனது கடையில் ஆபரணத் தங்கத்தைத் தட்டிக் கொண்டிருக்கிறார். அவ்வழியே சென்ற ரூமியின் செவிகளின் சுத்தியின் ஒலி விழுந்தது. அதன் நாதம் ‘அல்லாஹு அல்லாஹ்’ என்று கேட்டது. ரூமிக்கு மட்டும் அது கேட்டது எப்படி? லைலாவின் அழகைக் காண மஜ்னூனின் கண்கள் வேண்டும். சலாவுதீனின் சுத்தி எழுப்பும் நாதம் கேட்க ’அந்தரங்க சுத்தி’ வேண்டும்! மவ்லானா ரூமி சொல்கிறார்:
ஈருலகும்

பெருஞ்சேவல் ஒன்றின் முன்
ஒற்றைத் தானிய மணி

நேசிப்போனும்
நேசிக்கப் படுவோனும்
ஒன்றுதான்

இறைவனை யாரறிவார்?
’இல்லை’ என்பதன்
வழிப் போன ஒருவன்

உடைந்த காதலன் அறிவான்
நான் சொல்லும் இது
”இந்த ஆடைக்குள் யாருமில்லை
இறைவனைத் தவிர”

நின் நிஜ உருவில் தோன்றுக
சலாவுத்தீன்!
நீ எனது ஆன்மா
கடவுளை நோக்கும் கண்!

***
Image result for bamboo
      
பிரபலமான ஹைகூ கவிதை: “இந்தக் காட்டில் /  எந்த மூங்கில் / புல்லாங்குழல்?”. பிள்ளைக் கூட்டம் காண நேரின் இக்கவிதை நினைவு வரும். பால் வடியும் இம்முகங்கள் வளர்ந்த பின் எவ்வுருக் கொள்ளும்? எல்லா மூங்கிலும் புல்லாங்குழல் ஆகிவிடுவதில்லை. தெய்வீக இசைஞனின் கைச் சுவைக்கும் வாய்ச் சுவைக்கும் மருகியிருப்போரே புல்லாங்குழல் ஆவர்.

      இம்மையிலேயே சொல்லிவிடவும் ஏலாது, மரணித்த பின் யாரின் நிலை யாதாய் இருக்குமென்று. மவ்லானா ரூமி ஓரிடத்தில் சொல்கிறார், “சுவர்க்கத்தில் முள் உண்டா? என்று கேட்பவனே, உன்னைப் பார்!”. மலராத வரை நீயே முள். மலர்ந்து விடின் நீ சொர்க்கத்தில் இருப்பதைக் கண்டு கொள்வாய்.

      அலைகளோட நிற்கும் பசிய வயல் இவ்வுலகு. எல்லோரும் ஓர் நிறை. நாற்றாங்கால் முற்றிய பின் அறுவடை நேர்கையில் கதிரும் பதரும் தனித்தனி ஆகும். மறுமையில் ஒரு குரல் கேட்கும், “வம்தாஸுல் யவ்ம அய்யுஹல் முஜ்ரிமூன்” – ‘இந்நாளில், பிரிந்து நில்லுங்கள் குற்றவாளிகளே!’ (குர் ஆன்:36:59). மவ்லானா ரூமி இசைப்பது கேள்:

சொல்கிறார்கள் சிலர்
மானுடப் பிறவியென்பது
மண்ணிலிருந்து மண்ணுக்கு

சாலைப் புழுதியில்கூட நேர்வழி திறந்துவிடும்
மனிதப் புனிதருக்குப் பொருந்துமா இது?

இன்னும் முற்றாப் பருவத்தே களத்தில்
வேறொன்றாய்த் தெரியும் பயிர்

அறுவடைக் காலம் வருகையில் காண்கிறோம்

அதன் பாதி பதர், அதன் பாதி நெல்

***