சிசுவுக்குக் கருவறை போல், புழுவிற்குக் கூடு
போல், நேரம் வரும்போது சௌகரியத்தைத் துறந்துவிடத்தான் வேண்டும். இல்லையெனில், அதுவே
உன் ஆன்மாவின் கல்லறை ஆகிவிடும். உருதுப் பழமொழி: ‘பாப் கே மெஹர்பானி சே உஸ்தாத் கா
மார் பெஹ்தர்’ – ‘தந்தையின் செல்லத்தை விடவும் ஆசானின் அடி சிறந்தது’. குருநாதர் உன்
பாதையில் முட்களைத் தூவுகிறார் எனில் உன்னையே ஒரு பூவாக மலர வைக்கத்தான். மவ்லானா ரூமி
சொல்வது கேள்:
மலை முகடு
செல்லும் நேரம் இது
குளிர்கால வீடு விட்டு வெளியே
பறவைகள்
போல்
நீயே உனது கண்காணியாய் இரு
கால தேச
இக்கணம்
நம்பிக்கையின்
கருவில் ஊறிக்கொண்டொரு
உயிர் உரையும் முட்டையோடு,
உடைத்துக்கொண்டது
அறிவினின்றும்
பறவையின்
கடவுளின் பாடலுடன்
வெளியேறும்
வரை
அடைகாக்கப்படும்
கருணையின்
சிறகடியில்.
v
ஐம்பது அடி தூரத்தில் காகம் பார்க்க முடியாததை
ஆயிரம் அடி உயரத்திலிருந்து பார்த்துவிடுகிறது பருந்து. பறவைகள் எல்லாம் சமமன்று. அரசனின்
கையில் அமர்த்தப்படுவது ராஜாளிதான், அண்டக் காக்கை அல்ல. இறைநேசர் என்பவரின் நிலை என்ன?
அல்லாஹ் சொல்கிறான், “அவரின் பார்வையாக நான் ஆகிறேன். அவர் என்னைக் கொண்டு பார்க்கிறார்”
(ஹதீஸ் குத்ஸி). ’பாராததேன்?’ என்னும் புலம்பல் சீடனின் வசதிக்காகத்தான். இறைவனாகட்டும்,
இறைவனைக் கொண்டே பார்க்கும் குருவாகட்டும், எப்போது பார்வை தடைப்பட்டுப் போனது? தனது
குருநாதரைப் பற்றி மவ்லானா ரூமி சொல்கிறார்:
’ஷம்ஸ், இப்பக்கம் பாரீர்’
இல்லை. என் சொல் பிழை.
சூரியன்
என்பது முழுதும் முகமே
எப்போதும் எத்திசையும் நோக்கியபடி.
தலையின்
பின்புறம் என்பது
சூரியனுக்கு
இல்லை.
v
இறைவனின் சுயம் பூர்வீகம். படைப்பின் சுயம் சுழியம். இருப்பதில் கோலமான
இல்லாமை. பூர்வீகத்தில் வந்துள்ளது புதுமை! ’அஸ்
பஹ்ரே கிதம் மவ்ஜே நூ’ – பூர்வீகக் கடலிலிருந்து புதுப்புது அலைகள் புறப்படுகின்றன.
’ஒன்று மற்றொன்றாகவே முடியாத இரண்டு, பிரிக்கவே இயலாதபடி ஒன்றில் மற்றொன்றாய் இணைந்திருக்கின்றன.
இதுவே இப்பாதையின் சுவை’ என்று சூஃபி மகான் ஃபைஜி ஷாஹ் நூரீ (ரஹ்) அவர்கள் பேச்சிலிருந்து
நினைவு. இச்சுவை தவிர யான் கேட்க எச்சுவை உள்ளது?
அடையவே முடியாத உயரத்தில் இருப்பவராய்த் தோன்றுகிறார் குரு. ’தூ குஜா? மன் குஜா?’ – நீங்கள் எங்கே? நான்
எங்கே? மஜ்னூனுக்கு ஈருலகிலும் அடையவே முடியாத ஒன்று இருக்கிறது எனில் அது லைலாதான்.
மஜ்னூன் அடைந்து கொண்டதும் லைலாவை அன்றி வேறில்லை! எட்டவே முடியாதவர் என்று குருவை
உணரும் சீடனே அவரை அடைகிறான். எட்டிவிட்டேன் என்று நினைப்பவன் தவர விடுகிறான். சில்சிலா
என்னும் சூஃபி குருவழித் தொடரில் ஒன்றுக்கு மேல் ஒன்று சிகரங்கள்தான். என் சிகரம் தன்
சிகரத்திற்கு முன் தானொரு குன்றெனவே கூறிக்கொள்கிறது.
இசையுலகிலிருந்தொரு உதாரணம். கிரானா இசைப்பள்ளியின் கானரிஷி பண்டிட்
ப்ராண் நாத் தனது குரு உஸ்தாத் அப்துல் வாஹித் ஃகான் பற்றிச் சொல்கிறார், “என் குருநாதர்
ஒரு குதுப் மினாராக இருந்தார். அதில் முதல் படிக்கட்டில்தான் நான் காலடி வைத்திருந்தேன்.
அடுத்த அடி வைப்பதற்குள் அவர் சாய்ந்துவிட்டார். அவரின் உயரத்தை நான் அறியவே இல்லையே!”
நானொரு மீன்
நீ நிலா
எனைத்
தீண்ட முடியாது நீ எனினும்
நான்
வாழும் கடலில்
நிறைகிறது
நின் ஒளி
v
மரணித்தில் வாழ்வது எப்படி? ‘மூத்து கப்ல அன்த மூத்து’ – ’சாகுமுன் செத்துவிடு’
(ஹதீஸ்). ’சிரஞ்சீவி பவ’ என்று ஆசீர்வதிக்கிறது சிரத்தை சீவும் குருவின் கை வாள்.
“நபிகளின் வாள் எது? அவரின் அழகிய பண்புதான்” என்கிறார் ஹஸ்ரத் இனாயத் ஃகான். நபி என்னில்
வந்துவிட வேண்டும் என்னும் தவிப்பு, இஷ்கே றசூல் என்னும் நபிக்காதல், தலை போகும் காரியம்தான்
உண்மையில் அது! சீடனுக்காகத் தன் தலையைத் தர முன்வந்தார் குரு ஷம்ஸுத்தீன் தப்ரேஸ்
எனில் அந்த சீடரான மவ்லானா ரூமியின் ஸ்தானம் நான் என்ன சொல்ல? தெய்வீக இசை வெளிப்பட்ட
புல்லாங்குழல் அது. இதோ ஒரு ராகம்:
ஒன்பது
ஓட்டைகளுடன்
இந்த
நாணற் புல்லாங்குழல்
மனிதனின்
பிரக்ஞையைப் போல்
சிரம்
துணித்த பின்பும்
உதடுகளின்
மீது ஆசை!
v
”அன்ஃபாசே ஈசா” – ஏசுவின்
மூச்சு என்று சூஃபிகள் பரிபாஷையால் சொல்வது என்ன? குருவின் உயிரிலிருந்து உன் உயிருக்குப்
பாயும் உணர்ச்சிதான். அதனை ‘இல்கா’ என்பர். இல்காவே உண்மையில் ’லிகா’ (சந்திப்பு).
உயிர்கள் சந்தித்துக் கொள்ளாமல் உடல்கள் சந்திப்பதில் சங்கமம் இல்லை. குருவின் உயிரில்
உன் உயிர் சத்தியத்தை அடைந்து கொள்ளும் சந்திப்பே ’சத்சங்’ ஆகும்.
ஏசுவின்
மூச்சு தம் திசையில் வீச வேண்டுமாய் விருட்சங்கள் கிளைக்கைகள் கூப்பி தவம் இயற்றுகின்றன.
வரம் கனிந்து அத்தென்றல் வீசுகையில் என்னவொரு ஆனந்த நடனம்!
ப்ரிய! உன் கிளைகளை எப்போதும் பசுமையாக வைக்கும்
அந்தப் புனித மூச்சுக் காற்றினை யாசித்திரு. மவ்லானா ரூமி சொலவதைக் கேள்:
இறந்தவற்றிலிருந்து
உயிர்
வளர்கிறது
உயிருள்ளவை
மெல்ல மெல்ல
இறப்பினுள் செல்லச் செல்ல.
பசுங்கிளைகள்
கனி கொண்டு
தரை நோக்கித்
தாழ
காய்ந்த
சுள்ளிகள்
தீக்குள்
செல்லும்.
v
உணவு குறித்த பாட விரிவுரையில் எரிச்சல் அடைகிறேன்
எனில் என்ன அர்த்தம்? மிகு பசி கொண்டவன் நான் என்பதல்லவா? என் உயிர் உணவைத் தேடுகிறது
என்பதல்லவா? மேலும் மேலும் வெறுமனே வார்த்தைகள் பரிமாறப் படுதலை எங்ஙனம் சகிப்பேன்?
பிரசங்கியே! உம் வார்த்தையில் அல்ல, நான் இங்கே லயித்து அமர்ந்திருப்பது. என் இதயத்துள்
ஊன்றிய ஒரு கனிவுப் பார்வையின் இனிமை அது. மவ்லானா ரூமி சொல்கிறார்:
பழமொழி
நினைவு கொள்:
“திராட்சைகளை ருசி”
தோட்டத்தைப்
பற்றித்
தொனதொனக்காதே
திராட்சைகளை
ருசி.
No comments:
Post a Comment