காட்டின்
ஆன்மாவைக்
குரலில்
சுமந்தபடி
கட்டிடங்களினூடே
அலையுமொரு
பரிதாபப்
பறவையாய்
அறிமுகமானாய் நீ
அன்றாடம்
அதிகாலை
வேம்பின்
உச்சியில் வந்தமர்ந்து
இணையுடன்
நீ கொஞ்சுதல் கண்டு
மனதுக்கினியை ஆனாய் என்னவளுக்கு
செம்பொன்னாடை
போர்த்தியது போன்ற
நின்
சிறகுகள் விரித்தசைத்து
எருக்கலஞ்
செடியடியில்
ஏதோ பொறுக்கிக்கொண்டிருந்த
உன்னை
மகளுக்குக் காட்டி மகிழ்ந்தேன்
“செந்தோப்பு”
என்றவள்
நின்
பெயரை போலிச் செய்ததில்
செல்லம் பெருகியது நின்மீதெமக்கு
எம் வீட்டுத்
தோட்டத்தில்
பசும்புற்
தரையிறங்கி
நடந்திருந்தாய் நேற்று முன்
இறைத்தேடலாய்
அர்த்தமாகியிருந்த
நின்
குறியீட்டுருவம் கலைத்தது
இரைத்தேடலில் நீ நடந்திருந்த எதார்த்தம்
நேற்று
என்னடாவென்றால்
அலகிலொரு
அரணையைக் கவ்வியபடி
எம் தோட்டம்விட்டுப் பறக்கிறாய்
தினப்பாடுகள்
தீவிரம்கொள்ளும் பாவனையில்
அத்தருணம்
சற்றே
அச்சந்தரும்
பறவையாய் ஆனாய் நீயே
No comments:
Post a Comment