Jean Louis Michon (at right)
கலையெழுத்தைப் பொருத்த வரை, குர்ஆனின்
சாஸ்வத அழகினை புலப்படுத்துவதில் அதன் பணி மறையோதலுக்கு இணையானது. நபியின் இறப்பிற்குப்
பின் இருபது ஆண்டுகளில் இறுதிவடிவம் பெற்றுவிட்ட நிலையில் குர்ஆனின் பிரதிகள் பரப்பட்டபோது,
முஸ்லிமல்லாதாரும் அரபியல்லாதாரும்கூட கண்டு வியக்கும்படி அழகியல் பண்புகளுடனான எழுத்து
முறைகள் உருவாகின.
எழுத்தின் வடிவங்கள் பரிமாணங்கள் மற்றும் விகிதங்களின் மீதியங்கி,
ஒவ்வொரு பிரதியும், சில இறைப்பண்புகளை உணர்த்துகின்றன. இறை வல்லமை, ஆற்றல் மற்றும்
அப்பாலைத்தன்மை ஆகியவற்றை நெடுங்கோடுகள் உணர்த்துகின்றன, குறிப்பாக அலிஃப் என்னும்
எழுத்து, பிரதியின் நெடுகிலும் இழையோடும் இறையேகத்துவத்தைக் குறிப்பதாக உள்ளது. அழகு,
மென்மை மற்றும் உள்ளுறை ஆகியவற்றைக் கிடைமட்டக் கோடுகள் உணர்த்துகின்றன. அதன் மேலும்
கீழும் ஒலிக்குறிகள் இசைக்குறிப்புக்களைப் போல் எழுதப்படுகின்றன. மக்ரிப் பாணியில்
எழுதப்படும் ’நூன்’ எழுத்தினது போன்ற வட்ட வடிவங்கள் முழுமை மற்றும் நிறைவை உணர்த்துகின்றன.
(குறிப்பு: இஸ்லாமியச் சூழலைப் பிரதிபலிப்பதான கட்டடங்களிலும் பொருட்களிலும் எவ்வாறு
கலையெழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அ.வெல்ச் எழுதிய “Calligraphy in the
Arts of the Muslim World” என்பதில் காண்க. அஃது, 1979-ஆம் ஆண்டின் பனிக்காலத்தில்
நியூயார்க்கின் ஆசியச் சமூகத்தில், ஆசிய இல்லக் கூடத்தில் நடைபெற்ற கலைக்காட்சியின்
அட்டவணை ஆகும். அதில் இப்பொருண்மைக்கான நல்லதொரு நூற்பட்டியலுமுண்டு. காலந்தோறூம் இடங்கள்
தோறும் குர்ஆனைப் பதிவதற்கென பயன்படுத்தப்பட்ட கலையெழுத்து ரகங்களை மார்டின் லிங்க்ஸ்
எழுதிய “Splendors of Qur’an Calligraphy and Illumination” (Liechtenstein: Thesaurus
Islamicus Foundation, 2005) எனபதில் காண்க. இஸ்லாமியப் பண்பாட்டிலும் சூஃபிசத்திலும்
கலையெழுத்து கொண்டுள்ள ஆழமான பணியைப் பற்றிய ஆய்வுக்கு அன்னிமேரி ஷிம்மெல் எழுதிய
“Calligraphy and Islamic Culture” (London, I.B.Tauris and Co., 1990) என்பதைக் காண்க)
அரபி எழுத்துக்களின் வடிவம், அவற்றின் சமயத்தன்மை – குறிப்பாக குர்ஆனின்
ஆரம்ப காலப் பதிவுகளில் – மற்றும் அவற்றின் வரைவுகளை ஒழுங்கமைக்கும் விகிதங்கள், அரபிகளுக்கே
பிரத்தியேகமானதும் மிக அபூர்வமான மலர்ச்சித் தருணத்திற்கு இஸ்லாம் வித்திட்டதுமான இன்னொரு
கலையாக்க வடிவிற்கு நம்மை இட்டுச் செல்கின்றன. நான் கூற வருவது, எண்களுடன் தொடர்புடையதான
ஜியோமிதி உருவஙள் மற்றும் வடிவங்களின் மொழியாகும்.
இருத்தலின் பற்பல தளங்களிலில் வெளிப்படும் இறையுள்ளமையின் முடிவற்ற
ஒளிவீச்சு (தஜல்லி) போன்றதொரு நுட்மான கோட்பாட்டினைக்கூட வரைந்துணர்த்துவதில் முஸ்லிம்
கலைஞர்கள் ஜியோமிதி வழியாக வெற்றி கண்டுள்ளனர். தன்னை எங்கிலும் எப்போதும் தான் நாடியபடி
வெளிப்படுத்திக் கொண்டு தான் ஒருபோதும் தாக்கமுறாமல் மாறாமல் மங்காமல் இருக்கின்றதொரு
சாஸ்வத சர்வவியாபக மையப்புள்ளி என்னும் கருத்தே ’அராபிஸ்க்’ மற்றும் பூவேலைப்பாடு அல்லது
பன்கோண அலங்காரம் போன்றதான ஜியோமிதிய ஊடிழைமை ஆகியவற்றின் முழு தத்துவமாக இருக்கிறது.
விதானக் கூரையில் விண்மீன் சிதறல் – குறிப்பாக பாரசீக துருக்கி மற்றும் மத்திய ஆசிய
பள்ளிவாசலகளில் – என்பது இந்த அறிக்கைக்கான புறச்சான்று. கதவு அல்லது தொழுகை மாடத்தின்
சட்டம், அல்லது மேற்கூரையின் விளிம்பு, அல்லது தொழுகை விரிப்பின் விளிம்பு ஆகியவற்றை
வரையறுக்கும் பட்டை நமது வாழ்வுகளை ஒழுங்குறுத்தும் காலத்தின் பீடுநடை போல், அனைத்துலகங்களையும்
அனைத்துயிர்களையும் வழிநடத்தி ஒருங்கிணைக்கும் இறையாட்சியை நினைவூட்டும் குறியீடாக
இருக்கின்றது. (குறிப்பு: இஸ்லாமியக் கலை பற்றிய ஒவ்வொரு குறிப்பேட்டிலும் இயல்பாக
இடம்பெறுவதற்கு அப்பால், ஜியோமிதியக் கதவு (கட்டடக் கலையிலும் இசையிலும் சீர்ப்பிரமாணம்
/ சந்தத்துடன் ஒப்பிடத்தக்கது) ஆற்றும் ஒருங்கிணைப்புப் பணி இஸ்ஸாம் அல்-சய்யித் மற்றும்
ஐஸி பார்மன் ஆகியோரின் “Geometric Concepts in Islamic Arts” (London, World of
Islam Festival Publishing, 1976) என்பதிலும், கீத் க்ரிச்லோ எழுதிய “Islamic
Patterns: An Analytical and Cosmological Approach” (London: Thames and Hudson,
1976) என்பதிலும் சிறப்பாக ஆயப்பட்டுள்ளது. ஜியோமிதி வடிவம் மற்றும் இதர இஸ்லாமியக்
கலை வடிவங்களின் தத்துவ அடிப்படையும் தியானத் தன்மையும் அபாரமான தெளிவுடன் டைட்டஸ்
புகார்ட் எழுதிய “Art of Islam: Language and Meaning” (Bloomington, IN: World
Wisdom, 2009) என்னும் நூலில் முன்வைக்கப்பட்டுள்ளது; அதில் குறிப்பாக ‘இஸ்லாமியக்
கலையின் பொது மொழி’ பற்றிப் பேசும் நான்காம் இயலினைக் காண்க).
’அரபிஸ்க்’ மற்றும் இழைமையின் நேரியல் திட்டவரைவு, அதன் நிறையிணைவு
முத்திரைகள் மற்றும் இடைவெளிக்கூறுகளின் மாற்றமைவுடன், ஒரு பாடகனின் கூவல்களும் பதில்களும்
ஊடாடியபடித் துலக்கம் கொள்ளும் அரபி இசையமைப்புடன் மிகவும் ஒப்புள்ளது என்பதை இத்தருணத்தில்
நான் சொல்ல விரும்புகிறேன்.
அதேபோல், பன்கோண நட்சத்திர வடிவங்களின் வலைப்பின்னலால் உருவாகும் இடப்பகுப்பிற்கும்
மறையோதல் மற்றும் அரபிக் கவிதையின் அடித்தளத்தில் இருக்கும் காலப் பகுப்பிற்கும் இடையே
பிரக்ஞைபூர்வமான முன்னோக்கமான ஒப்புமை இருக்கிறது. ஒவ்வொரு பன்கோண வலைப்பின்னலும் வட்டத்தை
சமபாகங்களாகப் பகுப்பதில் தொடங்குமொரு ஜியோமிதி வரைவின்படிக் கட்டமைக்கப்படுகிறது.
வட்டம் முதலில் மூன்று, நான்கு அல்லது ஐந்து துண்டங்களாகப் பகுக்கப்படுவதைப் பொருத்து
வலைப்பின்னலின் சீர்மையான அடிப்படை முறையே சமபக்க முக்கோணம், சதுரம் அல்லது ஐங்கோணம்
(ஐமுனை விண்மீன்) ஆகவும் இவ்வடிவங்களின் பன்மைப் பெருக்கமான அறுகோணம் அல்லது இரண்டு
தலைகீழ் முக்கோணங்கள், எண்கோணம் அல்லது எண்முனை விண்மீன் இத்தியாதி. ஆகவும் அமையும்.
இந்த வடிவங்கள் மற்றும் எண்கள் அனைத்துடனும் துல்லியமான குறியீட்டு அர்த்தங்களும்,
கிரகங்கள் மற்றுமவற்றின் சுழற்சிகள், இயற்கை சுழற்சி நிகழ்வுகள், நிறங்கள், மனோநிலை
மற்றுமவற்றின் மெய்ப்பாடுகள் ஆகியவற்றுடனான தொடர்புகளும் இருக்கின்றன. இவற்றைப் பற்றிய
அறிவு மரபுசார்ந்த கலைக் கல்வியில் கற்பிக்கப்பட்டது என்பதைப் பல்வேறு பதிவுகள், குறிப்பாக
அக்காலகட்டத்தின் கலைகள் மற்றும் அறிவியலைப் பற்றி நமக்கு அறிவிப்பதாக ஹிஜ்ரி நான்காம்
நூற்றாண்டில் (கி.பி.பத்தாம் நூற்றாண்ட்டில்) எழுதப்பட்ட ”இஃக்வானுஸ் ஸஃபா” அமைப்பின்
கடிதங்கள் வாயிலாக நாம் அறிகின்றோம்.
முடிவுரை
ஒரு விளக்கவுரைக்கு முடிவுரை ஒன்று
இருக்க வேண்டும். இவ்விஷயத்தில் நான் ஆத்மார்த்தமாக ஈடுபட்டுள்ளேன் என்பதால், நான்
இங்கே ஓர் எச்சரிக்கையுடனும் ஒரு கோரிக்கையுடனும் முடிப்பேன்.
புரப்பு இன்றியும், தொழிற்சாலைப் பணியாளர்களாக அல்லது ஷாவூஷ் என்னும்
அரசூழியர்களாக வேலை பெறும் நோக்கிலும், முஸ்லிம் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இக்காலத்தில்
கலைஞர்கள் தமது கலைத்தொழிலைத் துறக்கின்றனர். அவர்களின் முன்னோர்களின் கலைத்தொழில்
அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதுகாக்க முடியாது என்பதால் அவற்றை அவர்கள்
தேவையாலும் அரைமனதுடனும் துறக்கின்றனர்.
ஏற்கனவே ஆன்மிக விழுமியங்களில் வறுமையாகிவிட்ட, நீண்ட காலமாகவே மேற்குலகு
தனது புனிதக் கலையைத் தொலைத்துவிட்ட உலகில் ஒப்பற்ற கலை வெளிப்பாடு ஒன்று மெல்லத் தேய்ந்து
மறைவதை ஒருவர் சுரணையற்று நின்று பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? “ஒப்பற்றது”, ஏனெனில்,
இஸ்லாமியக் கலை என்பது, நான் இங்கே காட்ட முடிந்தபடிக்கு, அமானுஷ்ய அகத்தூண்டுதல் கொண்டது.
மனிதனின் அகத்தில் பதிந்துள்ள ’ஹகீக்கத்’ என்னும் ஆன்மிக உண்மைகள் அவன் வடிவமைத்த பொருட்களில்
பிரதிபலிப்பது அது. அந்த உண்மைகளைக் கட்புலனாக்குவதில் ஒரு கலைஞன், இவ்வுலகின் பொருட்டு
இறைவன் காட்டும் அக்கறைகளின் நீரூபணங்களை விட்டுச் செல்கிறான்.
இஸ்லாமியக் கலை முழுவதும், அதன் மகத்தான நினைவுச் சின்னங்களிலிருந்து
எளிய சிருஷ்டிகள் வரை, பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நபி முஹம்மத் பெற்ற செய்தியின்
உண்மைக்குச் சான்று பகர்கின்றது. மேலும், கால தேசம் ஊடாக அந்தச் செய்தி கொண்டுள்ள ஆற்றலையும்
உயிர்ப்பையும் செயல்படுத்துகின்றது. முடிவாக, தன் தூண்டும் அழகால் அணுகி வருவோரை ஈர்க்கின்றது.
நகரங்களின் ஒட்டுமொத்த மக்களையும் கிஞ்சிற்றும் இரக்கமின்றிக் கொன்றொழித்த “அழிவாளன்”
தமர்லேன் (1336-1405)கூட மார்க்க அறிஞர்களையும் (’உலமாஃ’) சட்டவியலாளர்களையும் (’ஃபுகஹா’)
மற்றும் ’சமர்கந்த்’ என்னும் தனது தலைநகரை அலங்கரிக்க அவன் தூக்கிச் சென்ற கலைஞர்களையும்
கொல்லாது விட்டுவிட்டான்.
நவீன நாடுகள், அவற்றின் தொழில்நுட்ப அதிகாரம் மற்றும் பொருளாதார லாபத்தின்
தேடலில் மரபார்ந்த விழுமியங்களைத் தகர்ப்பதில் தமர்லேனின் படைகளை விடவும் கேடுகெட்டவை
என்று நாம் முடிவு செய்ய வேண்டுமா? வாழ்வாதாரங்களின் மேம்பாடு என்பது மரபார்ந்த கலைஞர்களைக்
காவுகொடுக்கத்தான் வேண்டும் எனபது தவறானதொரு கணிப்பு என்பதால் இக்கேள்விக்கு ஒருவர்
எதிர்மறையாகவே பதிலளிக்க விரும்புவார்.
இஸ்லாமிய மண்ணில் ஆதாரமான கலை தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணி குறித்துச்
முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள் சிலர் இப்போதும் விழிப்புடன் இருக்கின்றனர். மதீனாக்களான
பழைய இஸ்லாமிய நகரங்களைப் பாதுகாப்பதும் புணருத்தாரணம் செய்வதும் மற்றும் வாழும் கைவினைக்
கலைகளைப் பேணுவதும் பற்றிக் கடந்த சில காலங்களில் நிறையவே பேசப்பட்டுள்ளன. சொல்லப்போனால்,
இது முஸ்லிம்கள் பற்றிய பிரச்சனை மட்டுமல்ல, உலகில் எங்ஙனும் வாழ்வின் தரத்தை பேணவும்
மீட்டுருவாக்கவும் உள்ள அக்கறை இது. இவ்வாறு, மனித தேவைகள், உத்வேகங்கள் ஆகியவற்றுக்கும்
தொழில்நுட்ப நியதிகளுக்கும் இடையில் சமநிலையைக் கொண்டுள்ள “சிறந்ததோர் உலக”த்தை உருவாக்குவதற்கான
தீர்வுகளைத் தேடும் மேற்குலகக் கட்டடவியலாளர்கள், நகர வடிவமைப்பாளர்கள் மற்றும் சமூக
விஞ்ஞானிகளின் கவனம் அரபிய – இஸ்லாமிய மாதிரியின் பக்கம் திரும்பியுள்ளது.
உதாசீனத்தாலும் அறியாமையாலும் பெருமதிப்புள்ள இயற்கை மற்றும் கலாச்சார
வளங்களைப் பாழ்படுத்துவதன் மீது வருந்தி எதிர்வினை ஆற்றுகின்ற கட்டடவியலாளர்கள், திட்ட
வல்லுநர்கள் மற்றும் மனித அறிவியல் விற்பன்னர்கள் அடங்கிய புதிய தலைமுறை ஒன்று முஸ்லிம்
உலகில் இன்றுள்ளது. அவர்களின் போராட்டங்களும் பொதுத் தளத்திலான கடின உழைப்பும் தேசப்
பாரம்பரியத்தைக் காத்து முன்னெடுத்துச் செல்லும் கவனமாகத் தீட்டப்பட்டுச் செயல்படுத்தப்படும்
திட்டங்களுக்கு வழிகோலட்டும். அதன் விளைவாக, கலைப் படைப்புக்கள் என்னும் கனிகளின் வழியே
அவற்றை உண்டாக்கி முதிரச் செய்து வழங்கிய புனித மரத்தை நாம் தொடர்ந்து அறிந்து கொண்டிருப்போம்.
முற்றும்.
No comments:
Post a Comment