Sunday, April 30, 2017

நான் விளக்கைப் படைத்தேன் - part 1

       
       அடியேன் மார்க்க ஞானம் பேசுகிறேன் என்னும் வதந்தி பரவி கணினித்துறைப் பேராசிரியர் ஒருவர் சந்திக்க வந்திருந்தார். எழுபத்திரண்டு கூட்டங்கள் அவரவரின் பிரதியாக முன்னிறுத்தும் இஸ்லாமில் என்னை என்னவாக ஊகித்துக் கொண்டு அவர் வந்தாரோ யானறியேன். அரைமணி நேரம் உரையாடிக்கொண்டிருந்தவரிடம் நான் மொழிபெயர்த்த “சூஃபிக் கோட்பாடுகள்” என்னும் தண்டியான நூலை விற்றனுப்பினோம் (பதிப்பக உரிமையாளரான சக பேராசிரியரும் சேர்ந்து). தியரியுடன் செய்முறையும் வேண்டும் என்று வலியுறுத்தி வாராந்திர தியானக் கூட்டத்திற்கு வருமாறு அவரிடம் சொல்லியிருந்தேன். ஓரிரு வாரங்கள் ஓடிய நிலையில் வாகன நிறுத்தத்தில் அவரை மடக்கி உசாவியபோது “குர்ஆனை விஞ்ஞான ரீதியாக விளக்குவதுதான் எனக்குப் பிடிக்கிறது” என்று முத்தாய்ப்பாகச் சொல்லிவிட்டார். (நமக்கும் கொஞ்சம் விஞ்ஞானம் வரும் என்றாலும் அது மெய்ஞ்ஞானத்தின் உபநிலை மட்டுமே என்பதுதான் நமது புரிதல். அதைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாட நம்மால் ஆகாது தோழரே! சலாம்!).

      இஸ்லாமியச் சமூகத்தின் விரைவு வண்டிகளே மற்ற வண்டிகளைக் காட்டிலும் சற்றுத் தாமதமாகத்தான் வந்து சேர்கிறது. மேற்குலகில், விஞ்ஞானத்தின் எல்லைகளைத் தாண்டி விரியும் சிந்தனைகள் மெய்ஞ்ஞானத்தில் விடைகள் தேடிக்கொண்டிருக்கும் இந்நாளில், நாம் இப்போதுதான் விஞ்ஞான விளக்கம் என்று பேசத் தலைப்பட்டிருக்கிறோம். எனினும், அறிவியல் ரீதியாக விளக்குகிறேன் பேர்வழி என்று மேடை போட்டு தன்மேல் வெளிச்சம் பாய்ச்சிக்கொள்ளும் ‘மேதாவி’களுக்கு அந்த அறிவியலின் எல்லைகள் நன்றாகவே தெரியும். (விஞ்ஞானம் என்பதே அறிவுநிலை என்பதான ஒரு பார்வையை ஆங்கிலேயக் கல்வி இங்கே கிழக்கு முழுவதிலும் பொதுப்புத்தியில் உண்டாக்கி வைத்திருப்பதால் முஸ்லிம்களிடையே அதனை வாகனமாகக் கொண்டு தமது கொள்கைகளை எளிதாகக் கொண்டு சேர்க்க மதப் பரப்புநர்கள் முனைகிறார்கள்.) “குர் ஆன் என்பது விஞ்ஞான நூல் அல்ல; அது அடையாளங்களின் நூல்” (Quran is not a book of science; it is a book of signs) என்று வஹ்ஹாபிய வறட்டுச் சித்தாந்தி ஜாகிர் நாயக் ஒரு கூட்டத்தில் நயம்பட உரைத்ததை நினைவுகூர்கிறேன்.

      அவர் சொன்னதில் உள்ள எச்சரிக்கையுணர்வு கவனிக்கத்தக்கது. ’குர்ஆனில் விஞ்ஞானம் உள்ளது. ஆனால் அது முற்றிலும் விஞ்ஞானம் பேசும் நூல் அல்ல’ என்பதே அது. எனவே எல்லாத் திருவசனங்களுக்கும் விஞ்ஞான ரீதியான விளக்கத்தைக் கேட்காதீர்கள் என்று பொருள். (இங்கே நான் விஞ்ஞானம் என்னும் சொல்லையே தெரிந்து கையாள்கிறேன். ஏனெனில் விஞ்ஞானம் என்பதும் அறிவியல் என்பதும் ஒன்றல்ல. அறிவு இயல்வது எல்லாமே அறிவியல்தான். விஞ்ஞானம், கலைகள் உட்பட அனைத்துத் துறைகளுமே அறிவியல்தான்.) நாயக்கின் மேற்சொன்ன கூற்று முஸ்லிம்களிடையே (குறைந்தபட்சம் அவரின் ரசிகரிடையே) மிகப் பிரசித்தம். அடியேனுக்கு அதில் உப்புச்சப்பு இல்லை என்றால் என் செய்ய? சூஃபிகள் இந்த நிலைகளை எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடந்துவிட்டார்கள். மனதிற்குள்ளாகவே அந்த ஷோமேனிடம் சொல்லிக்கொண்டேன், “We are neither concerned with the science in the Quran, nor with the science of the Quran, but we are concerned with the conscience of the Quran” (யாம் குர்ஆனில் உள்ள விஞ்ஞானம் பற்றியோ குர் ஆனின் அறிவியல் பற்றியோ கவனம் கொள்ளவில்லை, ஆனால் குர்ஆனின் பிரக்ஞையைப் பற்றிக் கவனம் கொள்கிறோம்) குர்ஆன் மீதான சூஃபிகளின் முதல் நிலைப்பாடு இதுவே என்பதாக நான் புரிந்து வைத்துள்ளேன்.

”குர்ஆனின் பிரக்ஞை” என்னும் சொற்றொடரை எவ்வர்த்தத்தில் நான் கூறுகிறேன் என்பதைச் சற்று விளக்கவேண்டும். குர்ஆன் என்னும் மறைவெளிப்பாட்டை ஏற்று உள்வாங்கி இவ்வுலகிற்கு வெளிப்படுத்தித் தந்த இறைத்தூதரின் பிரக்ஞை நிலை என்று அதன் பொருள் விரியும். அதாவது Conscience of the Prophet who received in him the Scriptural Revelation of the Divine. எனவே குர்ஆனை நாம் விளங்கிக் கொள்வதற்கு இறைத்தூதரது பிரக்ஞை நிலைக்கு உபநிலையாக உள்ள ஓர் பிரக்ஞை நிலை அவசியமாகிறது. ஏனெனில் மறை வெளிப்பாடு என்பது மனிதர்கள் எழுதும் நூற்களைப் போன்றதல்ல. இறைத்தூதரின் பிரக்ஞை நிலை குர்ஆனை உள்வாங்கும், கிரகிக்கும், விளங்கும் நிகழ்வை ”வஹி” என்னும் அரபுச் சொல் குறிக்கிறது. (குறிப்பு: இதனை “Inspiration” என்று ஆங்கிலத்தில் முதலெழுத்தைப் பெரிய எழுத்தாக்கிக் குறிப்பர். ஆனால் அரபி மொழியில், தமிழைப் போலவே, பெரிய /  சிறிய எழுத்துக்கள் என்னும் வேறுபாடு இல்லை. தேனீக்களுக்கும் வஹி அறிவிக்கப்படுவதாகக் குர்ஆன் கூறுகிறது. இறைத்தூதரின் நிலையிலிருந்து தேனீயின் நிலையைப் பிரித்துக் காட்ட ஆங்கிலத்தில் அதனை ‘inspiration’ என்று சிற்றெழுத்து கொண்டு குறிப்பர்.  வஹி என்பதை அதன் நேரடி அர்த்தத்தில் inspiration என்று ஆங்கிலத்தில் பெயர்ப்பது போல் அல்லாது அதன் இன்னொரு அர்த்தபாவமான revelation என்னும் தொனியிலேயே இறையறிவிப்பு அல்லது வேத வெளிப்பாடு என்று மொழிபெயர்க்கின்றனர். ‘inspiration’ என்னும் தொனியில் அதனை அகவெழுச்சி எனலாம். Inspiration என்னும் இறைத்தூதருக்கான வஹியை அகப்பேரெழுச்சி என்று சொல்லலாம்.) இறைத்தூதர் நம்மிடம் அளித்த திருமறையை நாம் உள்வாங்கி கிரகித்து விளங்குவதற்குத் தேவையான பிரக்ஞை நிலையை சூஃபிகள் இல்ஹாம் என்று அழைக்கின்றனர். இல்ஹாம் என்பது வஹி என்பதன் உபநிலை. பொதுவாக நமது பிரக்ஞையானது நமது மனவோட்டங்களால், பருவுலக எண்ணங்களால் குழம்பியோ மூட்டமிடப்பட்டோ இல்லாத தெளிந்த நிலை, மனத்தின் அடுக்குகளில் நாம் அன்றாடச் சிந்தனையடுக்கான conscious mind-ஐ விட்டு இன்னும் ஆழ்ந்து subconscious mind என்னும் நிலையில் இருப்பது கனவு காணும்போதாகும். ஆழ்ந்த தியானம் இந்த நிலைக்கே விழிப்புடன் நம்மை இட்டுச் செல்கிறது. (Alpha State of Brain Activity என்று இதனை நவீன மருத்துவ விஞ்ஞானத் துறையில் சொல்கிறார்கள்) “நற்கனவு என்பது இறைத்தூதுத்துவத்தில் நாற்பதில் ஒரு பங்காகும்” என்று நபிகள் நாயகம் சொல்லியிருப்பதை இங்கே நினைவுகூர வேண்டும். (மேலும், “அவர் சுய மனோ இச்சையிலிருந்து பேசுவதில்லை; நிச்சயமாக அது அகப்பேரெழுச்சியான வஹியே அல்லாது வேறில்லை” (”மா யன்தி(க்)கு அனில் ஹவா, இன் ஹுவ இல்லா வஹ்யு(ன்)ய் யூஹா” –குர்ஆன்:53:4) என்னும் திருவசனமும் நினைவுகூர்க.) வஹி என்பதற்கொரு உப பிரக்ஞை நிலை இருக்கிறது என்பதையும் அது எத்தகைய நிலை என்பதையும் இந்த ஹதீஸ் குறிப்புக்காட்டுகிறது. அது யாரை நோக்கிச் சொல்லப்பட்டதோ அவர்கள் அதனைச் சரியாகவே பிடித்துக்கொண்டார்கள். இறைவேதமான குர்ஆனை நேர்ப்பட விளங்கவும் அதில் பொதிந்திருக்கும் அந்தரங்கமான ஞானங்களை அடையவும் அந்த உப பிரக்ஞை நிலை இன்றியமையாத ஒன்று என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். நற்கனவு ஏற்படும் மன / பிரக்ஞை நிலை என்ன?  அந்நிலையை விழிப்புடனேயே அடைவதற்கான வழிமுறைகள் என்ன என்பதைத் தேடி அடைந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தமது அணுக்கத் தோழர்களுக்கு அளித்த பயிற்சிகளின் வழியே உருவான ஞானியர்க் கொடிவழியில் (சில்சிலாவில்) அதனைக் கண்டடைந்தார்கள். தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் வாழுமியக்கமாக அது ஆயிற்று. பின்னாளில் அதற்கு சூஃபித்துவம் (தஸவ்வுஃப்) என்று பெயர்.

Image result for omar khayyam scientist
Planetarium of Omar Khayyam, the poet-scientist.

குர்ஆனில் உள்ள விஞ்ஞானம் (Science in the Quran) என்பது என்ன? விஞ்ஞானத் துறைகளான இயற்பியல், உயிரியல், புவியியல், வானியல், வேதியல், மருத்துவம் போன்றவற்றின் நோக்கில் திருக்குர்ஆன் கூற்றுக்களை விளக்குவது. (ஆங்கிலேயக் கல்விப்பரவலின் விளைவால் இன்று அவ்வழியில் ‘படித்த’ முஸ்லிம்களிடையே இப்போக்கின் அலை ஓங்கியுள்ளது.) இந்நோக்கில் திருமறை மற்றும் ஹதீஸ்களை ஆய்ந்த கூட்டத்தை இஸ்லாமிய வரலாற்றில் நெடுகிலும் காணலாம். இப்னுல் ஹைத்தம், அல்-குவாரிஸ்மி, உமர் ஃகய்யாம், அல்-ஃபாராபி, இப்னு சீனா, இப்னுர் ருஷ்து, இப்னுல் கய்யிமல் ஜவ்ஸிய்யா போன்ற பெயர்களாக அப்பட்டியல் நீளும். எனினும் இக்குழுவினர் இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பக் கட்டங்களில் இல்லை என்பது அவதானிக்க வேண்டிய ஒன்று. காரணம் என்னவெனில், குர்ஆனையும் ஹதீஸையும் விஞ்ஞான நோக்கில் ஆய்ந்தறிவது என்பது மார்க்கத்தின் முதன்மையான அம்சம் அல்ல என்பதுதான். வேண்டுமெனில் அஃதொரு துணைமை அம்சமாகக் கொள்ளப்படலாம். எனவேதான் நபியோ நபித்தோழர்களோ ஆடிகளும் தொலைநோக்கிகளும் கொண்ட ஆய்வுக்கூடங்களை நிறுவவில்லை.

Image result for study of quran

குர்ஆனின் அறிவியல் ”Science of the Quran” (அரபியில் ”உலூமுல் குர்ஆன்”) என்பது (text of the Scripture) திருமறைப் பிரதியினைச் சார்ந்த அறிவுத்துறை. குர்ஆனின் மொழியியல் சார்ந்த அரபுமொழி இலக்கணங்கள் (நஹ்வு சர்ஃபு போன்றன), தஃப்ஸீர் என்னும் குர்ஆன் விரிவுரைக் கலை, தர்ஜுமா என்னும் குர்ஆன் மொழிபெயர்ப்புக் கலை, தஜ்வீது என்னும் ஒலிப்பு முறைமைக் கலை, கிராஅத் என்னும் ஓதுமுறைக் கலை இத்தியாதிகள் இதனில் அடங்கும். இப்பொருண்மையை விளக்கி ”'Ulum Al-Qur'an: The Sciences of the Qur'an : a Study in Methodology and Approach” என்னும் நூலினை அப்துர் ரஹ்மான் தூயி எழுதியிருக்கிறார். (இவர் 1933-இல் குஜராத்தில் பிறந்தவர். கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்.ஏ.ஜே.ஆர்பரியின் நெறியாள்கையில் டாக்டர் பட்டம் பெற்றவர். நைஜீரிய நாட்டில் மூன்று பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். 1999-இல் சிங்காரச் சென்னையில் இறந்து அங்கேயே அடக்கப்பட்டார்.) இந்த அறிவியல்களைக் கற்பவர்கள் மார்க்க அறிஞர்கள் (உலமாஅ) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் கற்றுள்ள அறிவுகளின் தன்மையை நோக்கி உலமாயே ழவாஹிர் (புறவயமான அறிஞர்கள்) என்று வகைப்படுகிறார்கள். இத்துறையிலும் பேரறிஞர்கள் இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்திலிருந்தே செயல்பட்டு வந்திருக்கின்றனர். அவர்களால்தான் மேற்சொன்ன அறிவுத்துறைகள் வளர்ந்து பரிணமித்தன. ஃபிக்ஹு என்னும் மார்க்கச் சட்டத்துறை இதிலிருந்தே உருவாகி வந்தது. இமாம் அபூஹனீஃபா, இமாம் ஷாஃபிஃ, இமாம் மாலிக், இமாம் அஹ்மதிப்னு ஹம்பல் ஆகிய நாற்பெரும் சட்டத் துறைத் தலைவர்களும், இமாம் தபரீ, இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி, ஸமக்‌ஷரீ, ஃபக்ருத்தீன் ராஜி, அபூபக்ரு இப்னுல் அரபி போன்ற விரிவுரைஞர்களும் இதில் அடங்குவர்.

Image result for sufi consciousness

குர்ஆனின் பிரக்ஞை “Conscience of the Quran” என்பது குர்ஆனை அணுகுவதற்கான சரியான பிரக்ஞை நிலையைக் குறிப்பதாகும் என்பதை மேலே கண்டோம். அதனை அடையும் வழிமுறைகள் ஓர் தனித்துறையாகப் பரிணமித்து தஸவ்வுஃப் (சூஃபித்துவம்) என்று வழங்கப்பட்டது. ’வஹி’ என்னும் மறைவெளிப்பாடு நிகழும் பிரக்ஞை நிலை ’நுபுவ்வத்’ (இறைத்தூதுத்துவம்) என்று குறிக்கப்படுகிறது. இல்ஹாம் என்னும் உள்ளுதிப்புத் தன்மை கொண்ட, அதன் உப பிரக்ஞை நிலை ‘விலாயத்’ எனப்படுகிறது. இதனைக் குறித்தே, “வஹி என்னும் மறைவெளிப்பாட்டின் அனுபவத்தைப் புரிந்துகொள்வதற்கு இல்ஹாம் என்னும் உள்ளுதிப்பின் அனுபவம் மிகவும் அவசியம். அது சூஃபிகளிடமே இருக்கிறது” என்று இமாம் கஸ்ஸாலீ அவர்கள் தனது “அல்-முன்கித் மினழ் ழலால்” (‘பிழையிலிருந்து விடுதலை’) என்னும் நூலில் எழுதியுள்ளார்கள். பிரதான நபித்தோழர்கள் தொட்டு, சய்யிதினா ஹசன் பசரீ, ஜுனைதுல் பக்தாதி, அபூபக்கர் ஷிப்லி, பாயஜீது பிஸ்தாமி, மௌலானா ரூமி, இப்னுல் அரபி, இமாம் கஸ்ஸாலீ, முஹய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ, ருஜ்பிஹான் பக்லீ, ஃபக்ருத்தீன் இராக்கீ, ஃக்வாஜா முய்னுதீன் சிஷ்தி, நாகூர் நாயகம் போன்ற மகான்கள் எல்லாம் இத்துறையைச் சேர்ந்தவர்களே. இவர்களை அவ்லியா (இறைநேசர்கள்), ஆரிஃபீன் (மெய்ஞ்ஞானிகள்), வாசிலீன் (யோகியர்), காமிலீன் (பூரணர்) போன்ற அடைமொழிகளால் குறிப்பர். இவர்களிடம் உள்ள அறிவின் தன்மையை நோக்கி ‘உலமாயே பாத்தின்’ (அந்தரங்க அறிஞர்கள்) என்று வகைப்படுத்துவர்.

குர்ஆனின் திருவசனங்கள் ஆயத் (பன்மையில் ஆயாத்) என்று அரபியில் சொல்லப்படுகின்றது. அத்தியாயம் என்பதற்கு ”சூரா” எனப்படும் (உதாரணமாக, குர்ஆனின் முதல் சூராவில் ஏழு ஆயாத் உள்ளன.) (குறிப்பு: தமிழ்க்கூறு நல்லுலகின் முஸ்லிம் பெருமக்கள் ஆயத்கள் சூராக்கள் என்னும் ரீதியில் தமிழ் மரபு சார்ந்து ’கள்’ சேர்த்துப் பன்மைப் படுத்துவது வழக்காக இருக்கிறது.) ஆயத் என்பதை அத்தாட்சிகள் (Proofs) என்பதாகச் சில இடங்களில் மொழிபெயர்க்கப்படுவதுண்டு. அதேபோல் அடையாளங்கள் (Signs) என்பதாகவும் சில இடங்களில் மொழிபெயர்க்கப்படும். உண்மையில் இவை குர்ஆனின் வார்த்தைகள் (கலிமாத்) சுட்டிக்காட்டும் வெளிப்பொருட்கள் (things, அஷ்யா) ஆகும். (உதாரணமாக, வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும் – ல ஆயாத்தில் லி-உலில் அல்பாப் – இதயத்தின் மையங்கள் கொண்டோருக்கு ’ஆயாத்’ (அடையாளங்கள் / அத்தாட்சிகள்) இருக்கின்றன என்று குர்ஆன் சொல்கிறது (3:190). இதில் வானங்கல் பூமிகள் இரவு பகல் ஆகியன பருவுலகிலான பொருட்கள் (things, அஷ்யா) ஆகும். எனினும், ஆழ்ந்து சிந்தித்து அறிவுக்கண் கொண்டு நோக்கும்போதே அதில் இறைவனின் அடையாளங்கள் அத்தாட்சிகள் புலப்படும். அப்படி, வெளிப்பொருள்களைக் கூர்ந்து சிந்தனையுடன் நோக்குமாறு கட்டளையிடும் திருவசனங்களும் இருக்கின்றன. (உதாரணமாக, “ஒட்டகங்கள், வானம், மலைகள் மற்றும் பூமி ஆகியவற்றைக் கூர்ந்து நோக்குமாறு ஆணையிடும் வசனங்கள் – குர்ஆன்:88:17-20).
குர்ஆன் வசனங்களின் தன்மைகளை அலசிவரும் இப்பின்னணியில் குறிப்பாக ஒரு திருவசனத்தை இங்கே நாம் கவனிக்க வேண்டியுள்ளது. சிறப்பு நிலையில் அமைந்த திருவசனங்களின் வகைப்பாடு பற்றி இவ்வசனம் குறிப்புக் காட்டுகிறது: ”(நபியே!), அவனே உம்மீது மறைநூலை இறக்கியுள்ளான். அதில் மறையின் ஊற்றான தெளிந்த வெளிப்பட்ட திருவசனங்களும் உருவகமான பிறவும் உள்ளன.” (குர் ஆன்:3:7).

குர்ஆனின் திருவசனங்கள் இரண்டு வகைப்படும் எனப்தாக இத்திருவசனம் சுட்டுகிறது: முஹ்கமாத் மற்றும் முதஷாபிஹாத். அவற்றுக்கு அரபியின் மூலத்தில் உள்ள சொற்கள் தரும் அர்த்த விரிவுகளைக் கொஞ்சம் காண்போம்.

முஹ்கமாத்: ஒருமையில் முஹ்கம். இதனை, ’தெளிந்த வெளிப்பாடுகள்’ (‘clear revelations’ - Pickthall), துல்லியமான வசனங்கள் (‘verses precise’ – Sahih International), ’(நிறுவப்பட்ட அர்த்தமுள்ள) அடிப்படை வசனங்கள்’ (’verses basic or fundamental (of established meaning)’ – Yusuf Ali), ‘தீர்மானமான வசனங்கள்’ (‘verses are decisive’ – Shakir) என்பதாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

முஹ்கம் என்பதன் வேரிலிருந்து வரும் இன்னொரு வார்த்தை ”ஹுக்ம்” என்பதாகும். அதற்கு ஆணை / கட்டளை என்று பொருள். முஹ்கமாத் என்னும் இவ்வகையின் திருவசனங்கள் எல்லாம் பெரும்பான்மை இறைவனிடும் ஆணைகளாக இருக்கின்றன. அந்த ஆணைகளும் இருவகைப்படும்: ஏவல் மற்றும் விலக்கல். இறையாணைகள் நல்வினைகளை ஏவவும் தீவினைகளைத் தடுக்கவும் செய்கின்றன. செய் / செய்யாதே எனும்படி அமைந்த திருவசனங்கள். இவ்வகைத் திருவசனங்கள் ”பொருள்விளக்கங்களை ஏற்காதவை” (’which accept no interpretation’) என்கிறார் முஹம்மத் சர்வர்.

ஒரு கட்டளைக்கு மேற்சொன்ன மொழிபெயர்ப்புகள் தரும் அனைத்து அம்சங்களும் இருக்க வேண்டும் என்பதை அன்றாட வாழ்வின் நிகழ்வுகளிலிருந்தே நாம் கண்டுகொள்ளலாம். ஒரு கட்டளை என்பது தெளிவாக, துல்லியமாக, ஒற்றை அர்த்தமுள்ளதாக, தீர்மானமானதாக, பொருள் விளக்கம் தேவையற்றதாக இருக்க வேண்டும். இல்லையெனில் அதனைச் செயல்படுத்துவதில் குழப்பமும் தவறும் ஏற்படும்.

மேலும், இந்த வகைத் திருவசனத்தைக் குறிப்பிடுகையில் இதனொரு தன்மையை இறைவன் விளக்குகிறான்: ”ஹுன்ன உம்முல் கிதாப்”. இத்தொடரை, ”நூலின் அடித்தளம்” (’Foundation of the Book’ – Sahih International, Yusuf Ali, Mohsin Khan), ‘நூலின் பொருண்மை’ (‘Substance of the Book’ – Pickthall), ’நூலின் அடிப்படை’ (’basis of the Book’ – Shakir), ’நூலின் அடிக்கருத்துக்கள்’ (’fundamental ideas of the Book’ – Muhammad Sarwar), ’நூலிம் சாராம்சம்’ (‘Essence of the Book’ – A.J.Arberry) என்றெல்லாம் மொழிபெயர்த்திருக்கிறார்கள். எனினும் இத்தொடரில் உள்ள சொற்களின் நேரடி அர்த்தத்தில் இந்த மொழிபெயர்ப்புக்கள் எதுவுமே அமையவில்லை.

“ஹுன்ன” என்பது பெண்பால் பன்மை சுட்டுவிகுதி (ளமீர் Pronoun). இங்கே அது குர்ஆன் ஆயத்களைச் சுட்டி நிற்கிறது. ஆனால் பன்மையான அச்சொல்லைத் தொடர்ந்து ”உம்ம்” என்னும் பெண்பால் ஒருமைப் பெயர்ச்சொல் இடம்பெற்றுள்ளது. அதற்கு அரபியில் நேரடி அர்த்தம் ‘தாய்’ என்பதே. கிதாப் என்றால் நூல் என்று பொருள். இங்கே அது குறிப்பாக வேதத்தை, இறைமறையைச் சுட்டுகிறது. ஹுன்ன என்பது அஃறிணையான திருவசனங்களைக் குறிப்பதால் அஃறிணைக்கும் ஆண் பெண் பால்விகுதி தரும் அரபியிலக்கணத்தைப் பின்பற்றவியலா நிலையில் தமிழில் “அவை” என்று பெயர்த்துக்கொண்டு “ஹுன்ன உம்முல் கிதாப்” என்பதை “அவை நூலின் தாய்” என்ற பொருளையே நேரடியாக நாம் அடைகிறோம். இங்கே ’தாய்’ என்பதை ’தோன்றுமிடம்’ / ‘தோற்றுவாய்’ என்பதாகப் பொருள்படுத்த வேண்டும். ஏனெனில் ஒரு குழந்தை தாயிடமிருந்தே வருகிறது. அதனடிப்படையில் ஒன்றின் தோன்றுமிடத்தை, மூலத்தை, ஊற்றுக்கண்ணைத் ’தாய்’ என்று அழைப்பது மரபு. அந்நோக்கில், ‘ஹுன்ன உம்முல் கிதாப்’ என்பதை ‘அவை நூலின் தோற்றுவாய்’ என்றும் ‘அவை நூலின் மூலம்’ என்றும் ‘அவை நூலின் ஊற்றுக்கண்’ என்றும் பொருள்கொள்ளலாம். இவற்றுள், “நூலின் ஊற்றுக்கண்” என்பதே என்னை மிகவும் கவர்கின்ற அர்த்தபாவமாய் இருக்கிறது, ஏனெனில் இச்சொற்றொடர் எதனை விளக்குகிறதோ அந்த ‘முஹ்கமாத்’ என்னும் சொல்லின் அர்த்தபாவங்கள் அனைத்தும் இதில் பொருந்திவருகின்றன. ஊற்றுக்கண் என்பது பொதுவாக ஒரு நதியின் பிறப்பிடத்திற்குச் சொல்லப்படும். நதிநீர் ஊற்றெடுத்துத் தோன்றுமிடத்தில் ”தெளிவாக”, “கலங்குதல் இன்றி”, தூய்மையாகவே இருக்கும். எனவே, “ஆயாத்தும் முஹ்கமாத்துன் ஹுன்ன உம்முல் கிதாப்” என்னும் திருவசனத் தொடரை ”தெளிந்த திருவசனங்கள் அவை நூலின் ஊற்றுக்கண்” என்று பொருட்படுத்தலாம்.

Related image
Surah Fathiha - the first chapter of Quran, having seven verses.

”உம்முல் கிதாப்” என்பது குர்ஆனின் முதல் அத்தியாயமான “சூரத்துல் ஃபாத்திஹா”வுக்குரிய சிறப்புப் பெயர்களில் ஒன்றாகவும் உள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. எனவே இச்சொற்றொடர் பொது நிலையில் குர்ஆன் நெடுகிலுமுள்ள தெளிந்த திருவசனங்களையும் சிறப்பு நிலையில் அதன் திறப்பு அத்தியாயமான ஃபாத்திஹாவையும் குறிக்கிறது எனலாம். ஃபாத்திஹாவின் ஏழு திருவசனங்களில் குர்ஆனின் அனைத்துத் திருவசனங்கள் நுவலும் கருத்துக்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன என்று சொல்லப்படும் கருத்தையும் இது தருகின்றது.

முதஷாபிஹாத்:  ஒருமையில் “தஷ்பீஹ்”. இதனை, ‘குறிப்பற்றவை’ (‘unspecific’ – Sahih International), ‘உருவகமானவை’ (‘allegorical’ – Pickthall, Yusuf Ali, Shakir), ‘பல அர்த்த சாத்தியங்களுள்ளவை’ (’verses may have several possibilities’ – Muhammad Sarwar), ‘முழுத்தெளிவு அற்றவை’ (’not entirely clear’ – Mohsin Khan), ‘பலபொருட்படுபவை’ (’ambiguous’ – A.J.Arberry) என்பதாக மொழிபெயர்ப்பிகள் வழங்கியுள்ளனர்.

தஷ்பீஹ் என்பதன் நேரடி அர்தத்தை நோக்கின் ‘உருவகம்’ (allegory) என்னும் மொழிபெயர்ப்பே மிகச் சரியானது. எனவே முதஷாபிஹாத் என்பதை உருவகமானவை என்றே நாம் விளங்கவேண்டும். உருவகம் ஒன்றைப் போல் இருக்கும் வேறொரு பொருள். இங்கே, குர்ஆனின் சூழலில் (context) அதன் வெளிப்பொருள் ஒன்றாகவும் உள்ளுறையும் மெய்ப்பொருள் வேறாகவும் இருக்கும் என்பதாம். எனவே அத்தன்மைத்தான திருவசனங்களுக்கு வெளிப்படையாய்த் தோன்றும் பொருளை, நேரடிப் பொருளை (literal meaning), அகராதிப் பொருளை எடுத்துக்கொள்ளக் கூடாது. எடுப்பின் வழிகேடுறும்.

முதஷாபிஹாத் என்பது நேரடிப்பொருள் அற்றது என்பதால் அதன் எதிர்மறை அம்சமாக (anti-thesis) முஹ்கமாத் என்பதை நேரடிப்பொருள் உள்ளது என்று கொள்ள வேண்டும். எனவே, நேரடியானவை மற்றும் உருவகமானவை என்று இவ்விரு வகைகளைக் கூறலாம்.

முஹ்கமாத் என்பதை ஒற்றை வருணிப்பில் சுருக்கமாக விளக்கிச் செல்லும் இத்திருவசனம் முதஷாபிஹாத் என்பது பற்றிச் சற்று விரிவான விளக்கத்தைத் தருகிறது. அதில் இரண்டு முக்கியமான குறிப்புக்கள் இருக்கின்றன. அதனைக் காணும் முன் இத்திருவசனத்தின் முதற்சொற்றொடரை மீண்டும் சுருக்கமாகத் தொகுத்துப் பார்த்துக்கொள்வோம்.

குர்ஆனில் முஹ்கமாத் முதஷாபிஹாத் (நேரடியானவை, உருவகமானவை) என்று இருவகை வசனங்கள் இருக்கின்றன. நேரடியான திருவசனங்கள் இறைமறையின் (எனவே இஸ்லாமிய மார்க்கத்தின்) அடித்தளமாக, ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. ஊற்றுக்கண் இல்லையேல் நதி இல்லை. அடித்தளம் இல்லையெனில் கட்டடம் இல்லை. அதுபோல் நேரடியான இந்தத் திருவசனங்கள் இல்லை எனில் இஸ்லாம் இல்லை. இப்புரிதலின் அடியாக முஹ்கமாத்தையும் முதஷாபிஹாத்தையும் பின்வருமாறு பிரித்து விளங்கலாம்.

முஹ்கமாத்: நேரடியானவை (எனவே விளங்க எளிதானவை), அடிப்படையானவை, நியதிகளானவை, அனைவருக்குமானவை. இஸ்லாத்தின் வெளிரங்கத்தை புறப்பரிமாணத்தைக் கட்டமைப்பவை. (ஷரீஅத்)

முதஷாபிஹாத்: உருவகமானவை (எனவே விளங்க சற்றுக் கடினமானவை), சிறப்பானவை, நியதிகளற்றவை, தேர்ந்தவர்களுக்கானவை. இஸ்லாத்தின் அந்தரங்கத்தை அகப்பரிமாணத்தைக் கட்டமைப்பவை. (ஹகீக்கத்)

இதனைக் கூர்ந்து நோக்க, முதஷாபிஹாத் இல்லாது முஹ்கமாத்தை மற்றும் கொண்டுள்ள ஒருவர் இஸ்லாத்தில் இருக்கவியலும், ஆனால் முதஷாபிஹாத்தை மற்றும் எடுத்துக் கொண்டு முஹ்கமாத்தை விட்டுவிடுமொருவர் இஸ்லாத்தில் இருக்கவியலாது என்பது விளங்கும்.

ஷரீஅத் என்னும் புறத்திற்கும் ஹகீக்கத் என்னும் அகத்திற்கும் பாலமாக இருப்பதே தரீக்கத் (ஆன்மிகப் பாதை) என்னும் சூஃபித்துவம். பாலம் அமைந்திருக்க இரண்டு கரைகளுமே இருக்கவேண்டும். முதஷாபிஹாத்தான திருவசனங்களை சூஃபிகளே விளங்கிக்கொள்வார்கள் என்று சொல்லும்போது அதன் அர்த்தம் முஹ்கமாத்தை விட்டுவிடுவார்கள் என்பதன்று. ஏனெனில் அப்படி ஷரீஅத்தைத் துறந்துவிட்டுத் தம்மை சூஃபிகள் என்று சொல்லிக்கொள்வோர் மலிந்துவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். (மேற்குலகில் பெரும்பாலும் இத்தகைய போலி சூஃபிகள் பரவியிருக்கிறார்கள். கிழக்குலகிலும் சிறுபான்மை இத்தகையோருண்டு.) அவ்வாறு முஹ்கமாத்தை விட்டு முதஷாபிஹாத்தை மட்டும் தேர்ந்துகொள்வோர் வழிகேடர்கள் என்று குர்ஆனின் இத்திருவசனத்தின் இரண்டாம் சொற்றொடர் தீர்ப்பளிக்கிறது:


”இதயங்களில் பிறழ்வு கொண்டோர் குழப்பத்தைத் தேடியோராயும் சாதகப்பொருட்பாடு தேடியோராயும் அதிலிருந்து உருவகமானவற்றையே பின்பற்றுகின்றனர்.” (குர்ஆன் – 3:7). 

to be continued...

No comments:

Post a Comment