Friday, April 21, 2017

இஸ்லாமிய ஆன்மிகம் - part 3

Related image

உண்மையான சூஃபி குரு என்பவர் யார்? என்று ஒருவர் கேட்கக்கூடும். கேட்கத் தகுந்த கேள்விதான். ஏனெனில், மேற்குலகில் சமீப காலங்களில் சூஃபித்துவத்தில் போதிய தகுதியே இல்லாத நபர்கள் பலரும் தம்மை சூஃபி குருமார்கள் என்று கூறிக்கொண்டு கிளம்பியுள்ளார்கள். குறைந்தபட்சம் அவர்களைப் பற்றிச் சொல்லவேண்டும் எனில் இப்படிச் சொல்லலாம், அவர்களது ‘பாதை’ இஸ்லாமும் அல்ல சூஃபித்துவமும் அல்ல. ஏனெனில் இரண்டும் ஒன்றாகவே செல்லும். மேற்கண்ட வினாவின் பொருட்டு இன்னொரு விஷயத்தையும் நினைவுகொள்வது பொருந்தும். அதாவது, இறைவன் மற்றும் ஆன்மிக தியானம் சார்ந்த அவர்களின் அடிப்படைக் கொள்கைகளைப் பொருத்தவரை சூஃபிகள் எப்போதும் இஸ்லாமிய மறைவெளிப்பாட்டின் பரிமாணங்களுக்கு உள்ளாகவே இயங்கி வந்துள்ளனர். இது மிகவும் முக்கியமான விஷயமாகும். ஏனெனில், விளைவை உண்டாக்கும் ஆற்றலை அவர்களது போதனைகள் மற்றும் பயிற்சிகளுக்குத் தருவது இஸ்லாமிய மறைவெளிப்பாடுதான். 

பழைய சூஃபிகளின் போதனைகளும் பயிற்சி முறைகளும் என்னென்ன என்பதை நாம் வரலாற்று ரீதியாக அறிந்திருக்கவில்லை எனில் தற்போது தன்னை சூஃபி குரு என்று கூறும் ஒருவரின் நம்பகத்தன்மையை நாம் உறுதிப்படுத்த வழியிராது. சூஃபித்துவம் பற்றியோ அல்லது சூஃபிப் பாதை பற்றியோ எந்த விதிகளும் நியதிகளும் நம்மிடம் இல்லாத நிலையில் இன்னொருவரை விடுத்து ஒரு குறிப்பிட்ட சூஃபி குருவை நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்று நாம் காரணம் சொல்லவும் முடியாது. ஆனால், முற்காலத்திய சூஃபி போதனைகள் மற்றும் பயிற்சிகள் பற்றிய வரலாறு நம்மிடம் இருக்கவே செய்கிறது. இஸ்லாமிய மறைவெளிப்பாடு இன்றி சூஃபித்துவம் என்பது இறைவனை அடையும் பாதையாக இருக்கவியலாது என்பதைக் கண்டுகொள்வதற்கு அவ்வரலாறு போதுமானதாகவுள்ளது.

      கடந்த நூற்றாண்டுகளில், குர்ஆன் மற்றும் சுன்னத் மீதான அவர்களது நேசம் மட்டுமன்றி, இஸ்லாமியச் சமயத்தின் வட்டத்திற்கு வெளியே அவர்களது ஆன்மிகப் பாதை பற்றிய அறிவு இயங்கவியலாது என்பதையும் சூஃபி மகான்மார்கள் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். தன்னை சூஃபி குரு என்று அழைத்துக்கொள்ளும் ஒருவர் தனது போதனைகளையும் பயிற்சிகளையும் இஸ்லாமிய மறைவெளிப்பாட்டிற்குத் தொடர்பின்றி வைப்பார் எனில் சூஃபித்துவத்தை நன்கு அறிந்தோர் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடந்த ஆயிரம் ஆண்டுகளில் பல்லாயிரம் சூஃபி குருமார்கள் மறைவெளிப்பாட்டின் கண்ணோட்டங்களுக்கு உட்பட்டே தமது சீடர்களுக்குப் போதித்து வந்துள்ளார்கள் எனும்போது நமது காலத்திலும் ஒரு சூஃபி குருவை இதே விதி கொண்டுதான் கண்டடைய வேண்டும். வேறு வகையில் அமையுமெனில், நம் காலத்தின் அக்கறையுள்ள சாதகன் தனது மாயைகளில் சிக்கிக்கொள்வான். உண்மையான குருவைக் காட்டித் தரும் பரிச்சயமான அடையாளங்கள் அவனது காட்சியை விட்டும் மறைந்துவிடும். உண்மையில், இறைத்தேடல் கொண்டவருக்காகத்தான், மரபான சூஃபி குருவை அவர் அடையாளம் காணவும் போலி குருமார்களிடம் சிக்காமல் தப்பவும், அந்த அடையாளங்கள் எல்லாம் நீண்ட நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.

      கடவுளை அடைவதற்காக ஒரு மனிதன் தன் சொந்தப் பாதையை உருவாக்கிக்கொள்ள உரிமை உடையவன், கடவுள் கருணையுள்ளவராதலால் அந்தப் பாதையை ஏற்றுக்கொள்வார் என்று சிலர் எண்ணக்கூடும். இங்கே, இஸ்லாமியப் பாதை என்பது ஞானிக்ளுக்கு அன்றி, ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறுமுன் ஆதாமும் ஏவாளும் பெற்றிருந்த இறைஞான நிலையை இழந்து நிற்கும் பெரும்பான்மை மக்களை நோக்கியே பேசப்படுகிறது. எனவே, தனது வீழ்ந்த இயல்பை வைத்து இறைவனிடம் செல்லும் பாதையை இங்கே மனிதன் உருவாக்கவில்லை; வீழ்ந்த மனிதனுக்கு அவன் தனது வீழ்ச்சியின் விசையை முடிப்பதற்கும் ஆதி சுவனத்தின் புனித மற்றும் ஞான நிலையை மீட்பதற்குமான பாதையைக் கடவுள்தான் தனது பெருங்கருணையினால் காட்டித் தருகிறான்.

      அனைவருமே புனிதர்களாகவும் ஞானிகளாகவும் இருந்துவிட்டால் மறைவெளிப்பாட்டின் தேவையே இருக்காது; அன்மிக வாழ்வு என்பது இயல்பாகவே ஒவ்வொருவரிடமும் இருந்திருக்கும். இக்காலத்தின் நிலை அதுவல்ல. ஏன், இஸ்லாமிய மறைவெளிப்பாட்டின், சொல்வதெனில் உலகிற்கு வந்த முந்தைய மறைவெளிப்பாடு எதுவாயினும் அக்காலத்தின், நிலையும் அப்படியல்ல. அதன் விளைவாக, சூஃபித்துவம் என்பது தனது பிடிப்பை மறைவெளிப்பாட்டிலிருந்தே பெற வேண்டும். குர்ஆன் இவ்வுலகிற்கு இறங்கிற்று என்றும் நபி வானங்களைக் கடந்து மேலேறிச் சென்று இறைவனுடன் ‘இணைந்தார்’ என்றும் சொல்லப்படுகிறது. சூஃபிப் பாதைக்கான விளக்கம் நமக்கு அதில் இருக்கிறது: இறைவனின் கருணையான மறை வெளிப்பாட்டில் அது ஆரம்பித்து இறை சன்னிதானத்தை நோக்கிய நபியின் முன்மாதிரியான பயணத்தில் அது தொடர்கிறது. ஒருவகையில், ஒவ்வொரு சூஃபி ஷைஃகும் நபியின் பணியை மீண்டும் தொகுத்துரைக்கிறார் எனலாம். வீழ்ச்சியின் விளைவுகளிலிருந்து மீண்டு சுவனத்தை எய்தும் பொருட்டுத் தனது காலத்தின் புறச்சமய அரபிகளை இஸ்லாமிய நம்பிக்கைக்குள் நபி கொண்டுவந்ததைப் போன்று சூஃபி ஷைஃகுகளும் நபி நிறுவிய கட்டமைப்புகளுக்குள் இயங்கி, சீடர்தம் மனங்களின் தன்முனைப்பான அசைவுகளால் தடங்கலுறாது அவர்களின் இதயங்களில் தெய்வீக உள்ளமை பிரகாசிக்கவும் அனைத்தின் மூலமான தெய்வீகத்தை நோக்கி அவர்களும் தமது தியானப் பயணத்தை நிகழ்த்தவும் அவர்களது உட்குழப்ப நிலைகளைச் சீர்படுத்தி இறைச்செய்தியில் உறுதிப்படுத்துகின்றனர்.

Image result for sufi disciple

      உண்மையான குரு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் உண்மையான சீடனைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. போலி குருமார்களை அடையாளம் காண்பது சாத்தியம் எனில் போலில் சாதகர்களை அடையாளம் காண்பதும் சாத்தியமே. சொல்லப்போனால், அவர்கள் ஒருவருக்கொருவர் படைக்கப்பட்டுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை! இக்காலத்தில், பாதை தனது விருப்பத்தின்படி இருக்க வேண்டும் அல்லது அது இருக்கவே வேண்டாம் என்று நினைக்கும் சீடர்கள் பலர் இருக்கின்றனர். பாதை என்பது அறிவியல் ரீதியானதாக, அல்லது உளவியல் ரீதியானதாக அல்லது பரிணாம ரீதியானதாக, அல்லது ஜனநாயக ரீதியானதாக அல்லது சமாதான ரீதியானதாக அல்லது இவை அனைத்துமாக இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். அவர்கள் எல்லாம் சூஃபிப் பாதையை உண்மையாகத் தேடுபவர்கள் அல்லர். ஏனெனில், உண்மையான சாதகன் என்பவன் ஆன்மிகப் பாதையை, தன்னை அழிக்கும் அதன் நியதிகளுடன் ஏற்றுக்கொள்பவனே அன்றி, நாம் முன்பு காட்டியது போல், பல வண்ணங்களிலான நவீன சிந்தனையால் முடக்கப்பட்ட மனத்தினது போல் முற்றிலும் மாயையான தனது விருப்பங்களை ஆன்மிகப் பாதையின் மீதான நியதியாக்குபவன் அல்லன். மனிதன், சமூகம், கலைகள், மதம் மற்றும் பல துறைகளையும் பாதித்திருக்கின்ற நவீனக் கூர்தலறக் கொள்கைகள் பதிந்திருக்கும் ஒருவனின் மனம் அனைத்து மறைவெளிப்பாடுகள் மற்றும் ஆன்மிகப்பாதைகளால் பொதுவாக முன்வைக்கப்படும் ”ஆதாமின் வீழ்ச்சி” என்னும் கோட்பாட்டினை எப்படி மதிக்கும்? மனித மனங்கள் மதக்கொள்கைகள் மற்றும் உண்மைகளால வடிவமைக்கப்பட்டிருந்த அந்தக் காலகட்டத்திலேயே சுயதிருப்தி மற்றும் பிணக்கம் ஆகியவற்றாலானதும் வீழ்ச்சியின் விளைவுமான மனச்சிக்கல்கள் கொண்ட சீடர்களின் சிந்தனை முறைகளையும் வாழ்வியலையும் சூஃபி குருமார்கள் மறுகட்டமைப்புச் செய்ய வேண்டியிருந்தது எனும்போது, மதம் என்பது எங்ஙனும் திரிபுபட்டும் வெளிப்படுத்தப்பட்ட மறையுண்மைக்கு மனித மனங்கள் கோணியுமுள்ள இக்காலகட்டத்தில் அவர்களின் வேலை எவ்வளவு கடினமானதாக இருக்கவேண்டும்?

      உண்மையான சீடன் பற்றி சூஃபித்துவம் தரும் படம் தெளிவானது: ஆன்மிகப் பாதை வழங்கும் அனைத்தையும் அவன் ஏற்றுக்கொள்வான், அதற்கான அவனின் பங்களிப்பு ஏதுமில்லை, ஏனெனில் வழங்குவதற்கு அவனிடம் எதுவுமில்லை. அவனது சுய-அழிவிற்கு மாற்றாக குரு அவனுக்கொரு புது வாழ்வைத் தருகிறார். படிப்படியாக, அவனுடைய வீழ்ந்த இயல்பு இல்லாமலாகிறது – பழைய ஆதம் மெல்ல மறைகிறார். சீடனில் சொர்க்க மனத்தினை மீட்டுருவாக்கி வீழ்ச்சிக்க்கு முந்தைய ஆதமாக அவனை ஆக்குவதற்கே சூஃபி ஷைஃகு பாதையில் அவனுக்கு வழிகாட்ட முனைகிறார். நபி சொன்னது போல், “அல்லாஹ் அழகன், அவன் அழகை விரும்புகிறான்” என்பதால், திருந்தாத மனத்துடன் அல்லது மனதின் ஆழத்தில் இன்னமும் இறை சன்னிதிக்குப் பொருந்தாத வாழ்க்கை முறைகளுடன் இறைவனைச் சந்திப்பதை அவன் ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடியாது.

      ஆன்மிகப் பாதையின் லட்சியம் இறைவனுடன் ஒன்றாவதுதான். அது தூய்மையான ஆன்மிக இணைவுதான். ஆனால் நபருக்கேற்ப அதில் ஆழத்திலும் ஆற்றலிலும் பல்வேறு நிலைகள் இருக்கின்றன. ஹக்கின் (இறைவனின்) இந்த ஒருமையறிவையே சூஃபிகள் ஞானம் (மஃரிஃபா) என்று சொல்கின்றனர். அது ஒரு சீடனின் மனத்தை மட்டும் பாதிப்பதில்லை, அவனின் சுயத்தையே மாற்றுகிறது. ஏனெனில், ஆன்மிக அனுபவத்தின் நிகழ்வில் அவனில் எதுவும் விடுபடக்கூடாது. மெய்ஞ்ஞானம் என்பது அல்லாஹ்வுடன் தக்க முறையில் நடந்துகொள்ளாத எவருக்கும் கிட்டாததொரு பேரறிவும் புனிததன்மையுமாகும் என்பதை சூஃபி இலக்கியங்கள் தெளிவாக இயம்புகின்றன. இக்காரணம் பற்றியே, தனது அகங்காரத்தை வலுப்படுத்தி, தன்னுள் அல்லது அனைத்துப் படைப்புக்களுள் இறையுள்ளமையை நெருங்கவிடாத அனைத்துச் சிக்கல்களுடன் தனது ’வீழ்ந்த’ ஆதமைப் புறந்தள்ளும் பொருட்டு ஒரு சாதகன் தன்னில் வளர்த்தெடுக்க வேண்டிய சரியான கண்ணோட்டங்களை எல்லாம் மிக விரிவாக விளக்குகின்ற கையேடுகளை சூஃபி மகான்கள் பலரும் மெனக்கெட்டு எழுதி வைத்திருக்கிறார்கள். இறைவனை அறியும் வகையில் மனதைத் திறக்கும் கலையானது இஸ்லாத்தினுள் சூஃபித்துவம் மட்டுமே கற்பிப்பதற்குச் சிறப்புத் தகுதி பெற்ற ஒன்றாகும். மேலும், சூஃபித்துவத்தினுள் அக்கலையில் தேர்ச்சி பெற்ற ஷைஃகு மட்டுமே ஆதார பூர்வமாக அதனைப் பிறருக்குக் கற்பிக்கவியலும்.

Image result for sufi disciple

      சூஃபிப் பாதையைப் பின்பற்றுகின்ற அனைவருமே அதன் முடிவை எட்டிவிடுகிறார்கள் என்பதல்ல. அதெல்லாம் மிகப் பழங்காலத்தே, ஒவ்வொரு சாதகனின் சுயமும் ஆன்மிகத்தால் கருக்கொண்டிருந்தபோது. நமது காலம் போன்ற ஒன்றில், பேதங்களாலும் பொருட்துய்ப்பாலும் ஆன்மிக வாழ்வின்மீது கிரகணம் பீடித்திருக்கும் நிலையில், முஸ்லிம் உலகம் அதற்கே உரிய வழியில் சமய விழுமியங்களில் உலகெங்கும் வீழ்ந்துபட்டிருப்பது வியப்பான ஒன்றல்ல. எனினும், தேடுவோருக்குப் பாதை கிட்டும் சாத்தியமுள்ள வகையில் அது தனது மரபான அமைப்புக்களையும் இலட்சியங்களையும் போதிய அளவு தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதன் அனைத்து சாதகர்களும் இவ்வுலகிலேயே அதன் இலட்சியத்தை அடைந்துவிடுகிறார்கள் என்று சொல்லவியலாத போதும் அவர்கள் தமது காலத்தை வீணடித்துவிடவில்லை என்பது உண்மை. ஏனெனில், அத்தகையோருக்கு ஆன்மிகப் பாதைக்கு வெளியே வாழ்வின் அர்த்தம் ஏதுமில்லை. அத்தகையோருக்கு, சூஃபிப்பாதையின் வெளியே உலக நிகழ்வுகளின் அழுத்தும் பிடியில் உள்ள வாழ்க்கை காலம் மற்றும் முயற்சியை வீணடிபப்தாகவே இருக்கும். சூஃபிப்பாதையே அவர்களது அறிவு மற்றும் நற்பண்பை விழிக்கச் செய்கிறது. ஏனெனில், சத்தியத்தில் அமைதிபெறும் வாய்ப்பை அது அவர்களின் மனத்தில் துலக்கி, பேரான்மாவின் வாழ்வில் தம்மை விரித்துக்கொள்வதை விட்டும் தடுக்கின்ற அழுக்காறுகளை அகற்றுவதற்கு வழி செய்கிறது.

      மேலும், சூஃபிப் பாதையின் இலட்சியம் என்று சொல்லப்படுவதில் பல படித்தரங்கள் இருக்கின்றன. பரம்பொருளின் ஆணைகளுக்கிணங்க வாழப்பட்டு வந்திருக்கும் வாழ்க்கை என்பது ஏற்கனவே ஒருவகை இறையிணைவைப் பெற்றுள்ளது. இறுதி அலசலில் தெரிவது யாதெனில், அதே பரம்பொருள்தான் தியானிப்பவனின் மனத்திலிருக்கும் உண்மைகளில் தன்னப் பிரதிபலிக்கிறது, அதே பரம்பொருள்தான் அவனது முயற்சிகளிலும் நம்பிக்கையிலும் நற்பண்புகளிலும் நல்லியல்பிலும் பிரதிபலிக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சாதகன் ஏற்கனவே தன்னுள் இறைவனை வைத்திருக்கிறான். இன்னும் சிறப்பாகச் சொல்வதெனில், இறைவன் அவனை வைத்திருக்கிறான். அது அதற்கேயான நிலையில் உள்ளதொரு இணைவாகும். அது, இணைவின் உயர்வான படித்தரங்களில் மிக அபரிதமாக ஞானம் மற்றும் பேரின்பத்தின் கனிகளை அள்ளித் தருகிறது. சூஃபிப் பாதையின் முடிவு சூஃபிகள் பேசுகின்ற பெருங்கொடைகளைக் கொண்டுவருகிறது என்பது உண்மை என்றபோதும், அதன் ஆரம்பத்திலேயே, ஷைஃகு தனது சீடனுக்கு சூஃபிப் பாதையின் போதனைகளையும் பயிற்சிகளையும் வழங்கும் போதே அந்த பெருங்கொடைகளில் சில இருக்கவே செய்கின்றன. 

      இஸ்லாமிய மதத்தின் கூறாக இருப்பினும் சூஃபிப் பாதை என்பது இஸ்லாத்தின் கோலங்களுக்கு அப்பாலும் விரிந்து மனிதகுலத்தின் பிற பெருமதங்களின்  ஆன்மிக மையத்துடன் பொருந்திக்கொள்வதாகவும் இருக்கிறது. ஹிந்து மதத்தின் வேதாந்தம், பௌத்தத்தின் மஹாயானம் மற்றும் தாவோயிசம், சொல்வதற்கு இவை சில, ஆகியனவெல்லாம் உண்மையில் சூஃபித்துவம் சொல்வதைத்தான்  தாமும் சொல்கின்றன. ஆன்மிகப் பாதையின் உண்மைகளை வெளிப்படுத்துவதில் அவற்றின் மொழிபு வேறுபட்டிருக்கிறது, அவ்வளவுதான். அனைத்து ஆன்மிகப் பாதைகளும் (இறைவன் என்னும்) ஒரே மலையுச்சிக்குத்தான் இட்டுச் செல்கின்றன என்பது உண்மை ஆயினும் மலையடிவாரத்தில் அவை வெவ்வேறு புள்ளிகளிலிருந்து தொடங்குகின்றன என்பதும் அங்குதான் ஒருவர் பல மதங்களைக் காண்கிறார் என்பதும் உண்மையாகும். இருப்பினும், அனைத்துப் பெருமதங்களின் ஒருமைப்பாட்டை, அவை அனைத்தும் தமது ஒற்றைப் பேரூற்றில் கலந்து மறையும் மலையுச்சியில்தான் காணவேண்டும் என்பதல்ல. அனைத்து மறைவெளிப்பாடுகளிலும் உள்ளுறையும் தெய்வீகத்தின் பிரதிபலிப்பாய் உள்ளதான, அம்மதங்களின் ஆன்மிகப் பாதைகளிலுள்ள பொதுப்பண்பு கொண்ட பயிற்சிகள் மற்றும் கண்ணோட்டங்களிலேயே காணலாம். இது உண்மையெனில், மனிதகுலத்தின் சமயப்பன்மியத்தின் அடியோட்டமாக ஒரு ஆன்மிக ஒருமைப்பாடு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. சூஃபிகளேகூட இதைப் பற்றி அதிகம் பேசியுள்ளார்கள்.

      கடந்த காலங்களில், ஆன்மிக வாழ்வில் ஆர்வம் காட்டியோர் பிற மதங்களில் பரம்பொருளின் வெளிப்பாட்டை அசட்டை செய்யமுடிந்தது. ஆனால் நமது காலச்சூழல், பிற மறைவெளிப்பாடுகள் இறைமையத்திற்கு இட்டுச் செல்லும் தமது சொந்த ஆன்மிகப் பாதைகளைக் கொண்டிருக்கின்றன என்பதை அங்கீகரிக்கும்படி, புரிதலும் நம்பிக்கையும் உள்ளோரிடம், கோருகிறது. அனைத்துச் சமயங்களின் அந்தரங்க ஒருமைப்பாட்டைக் கண்டுகொள்வது நோக்கி அழைத்துச் செல்ல சூஃபித்துவம் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதோடு, இன்றைய முஸ்லிம் உலகில் அது தொடர்ந்து வருவதன் மூலம், நவீனத் தொழிற்ச்சாலை நாகரிகத்திற்குத் தக தம் மதத்தை வடிவமாற்றம் செய்வதில் அனைத்து மத நவீனவாதிகளும் மிக எளிதாக உதாசீனப்படுத்திவிட்ட, சடங்கு வாழ்வின் மேலாக தியான வாழ்வின் முதன்மையை மீண்டும் உறுதிப்படுத்தவும் செய்கிறது.

Related image
சையத் அஹ்மத் ஷாஹ் சிஷ்தி , சுவாமி வேத் பாரதி, சுவாமி மங்கலானந்தா 

      இந்நிலையில், அனைத்து மதங்களும் ஏற்கனவே தமது ஆன்மிகச் சாராம்சத்தில் ஒருமைப்பட்டுள்ளன – சிந்திப்போர் கண்டுகொள்வது மட்டுமே தேவைப்படுகிறது எனில், தொல் நம்பிக்கைகள் மற்றும் ஆன்மிகங்களின் சிதலங்கள் மீது மனிதகுலத்தை ஒன்றுபடுத்துவதாகப் பறைசாற்றும் ஒரு புதிய உலகளாவிய மதம் அல்லது ஆன்மிகம் உருவாகிறதா? என்னும் கேள்விக்கிடமில்லை. ஆனால், நம்மிடையே நின்றுகொண்டிருக்கும் பெருமதங்கள், சக்கரத்தின் ஆரங்கள் போல் அவற்றின் தெய்வீக மையத்துடன் அவற்றை இணைப்பதான ஆன்மிக வாழ்வை ஒருநாள் ஆற்றலுடன் மீண்டும் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்ப்பது வீணாகாது. அப்போது அவற்றின் உள்ளொருமைப்பாடு மிகப் பரவலாக கண்டுகொள்ளப்படும். இதனால் அவற்றின் வெளி வேற்றுமைகள் மறைந்துவிடும் என்று இது எவ்வகையிலும் சொல்வதாகாது.


      மீண்டும் சூஃபிசம்:  இக்காலத்திலும் தகுதிசால் ஷைஃகுகள் முஸ்லிம் உலகில் இருப்பது பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் குர்ஆன் மற்றும் சுன்னத்தில் முதலில் வெளிப்பட்ட பிரபஞ்சப் பரம்பொருள் இப்போதும் இந்த மகான்களின் வழியே வெளிப்பட்டு வருகிறது என்பதை நிரூபிக்கின்றது. சாதாரண விசுவாசிகளின் நிலை எப்படியுமிருக்கட்டும், சூஃபித்துவம் மட்டுமே வெளிப்படுத்துகின்ற இஸ்லாத்தின் முழுமையான செய்தி அச்சமயத்தின் நிறுவனரது காலத்திலிருந்து எவ்விதத்திலும் குறைபட்டுவிடவில்லை என்பதற்கு இந்த மகான்களின் இருப்பே ஆதாரமாகும். வரலாற்று ரீதியாக மட்டுமன்றி ஆன்மிக ரீதியாகவும் இந்த மகான்மார்கள் அனைத்துக்கும் நபிக்கே கடன்பட்டுள்ளனர். இஸ்லாத்தின் தூதராக முஹம்மத் அவர்கள்தான் தமது சமுதாயத்திற்கு இந்தப் பெரும்பாதையைக் கொண்டுவந்தார்கள். சூஃபிகளின் பார்வையில் அவர்களே அதன் பூரணமான தோற்றமாக இருக்கிறார்கள். அல்லாஹ் என்று குர்ஆன் அழைக்கும் அந்த உன்னத காரண கர்த்தனுடன் சேர்தற்கு சூஃபி ஞானிகளையும் மகான்களையும் ஆற்றுப்படுத்த எங்கும் எப்போதும் பிரசன்னமாயுள்ள  மறைபொருளான ஆன்மாவாக அந்த முஹம்மத் அவர்களே இருக்கிறார்கள். 

முற்றும்.

No comments:

Post a Comment