Friday, April 28, 2017

பால்வெண் மேகமொன்று

Related image

பெரிதென்று என் விரல் சுட்ட முடிந்த
சிருஷ்டிகள் யாவினுக்கும் பெரியதாய்
அசைவற்று மிதந்திருந்ததொரு வெண்முகில்

பச்சை மாமலைக்கு மேல்
அதற்கான கம்பளிப் போர்வை போல் இருந்தது அது

மத்தியக் கிழக்கின் பழங்கவிஞர் யாருமிருந்தால்
நோவாவின் கப்பல் என்றதை வருணித்திருப்பார்

அதைச் சுமந்து வருதலாகட்டும்
இங்கிருந்து நகர்த்திவிடுதலாகட்டும்
காற்றால் ஆகாத காரியம் என்பதைத்
தெளிவாகச் சொல்லி நின்றது அதன் பேருரு

செம்மறிக்கூட்டம் போல் மேகங்களை
மேய்த்திருக்கும் ஓர் அந்தரங்கக் கைதான்
அதனை இங்கே கொண்டு வந்து
இப்படி நகராமல் கட்டிவைத்திருக்கிறது

ஒரு சிறு ஒலிச்சலனமும் இன்றி
மௌனமாய்த் திரண்டு உருப்பெற்றுள்ளது அது

எதுவுமே நடவாதது போல் தோன்றியுள்ள இப்பிரம்மாண்டத்தை
எதுவுமே நடவாதது போல் கவனியாதிருக்கும் மக்கள்திரள்
எதுவுமே இவர்களுக்கு ஆவதில்லை எனில் வியப்பென்ன?

தேவையொரு சிசு மனத்தின் விசும்பல்...
காய்ந்த மண்ணாய் வெடித்திருக்கின்ற
வாடிய பயிரெனத் துவண்டிருக்கின்ற
மலர் காணாப் பட்டாம்பூச்சியாய் நொந்திருக்கின்ற
வயல் சாகக் காணுமொரு உழவனின் உளைச்சலை
உணர்ந்து நையுமொரு நெஞ்சின் பிரார்த்தனை

அது சென்று தொட வேண்டும்
இப்போதே
மழைப்பால் பெருக்கிடக் காத்திருக்கும்
ஒற்றைத் தாய்முலையாய்த் திறந்துள்ளது அது

முஹம்மதின் பசித்த உதடுகள் இல்லாது
அலிமா முலையூட்டுப் படலம் இல்லை

No comments:

Post a Comment