Friday, April 28, 2017

ஆதன் ஔவை

Related image

’ஊரினும் பெரிய மேகம் பார்’ என்று
அழைத்துக் காட்டினேன் அவளிடம்
மேகங்களற்ற தெளிவானம்தான்
தனக்குப் பிடித்ததென்று சொல்லிப் போனாள்

அவள்
என் இடதுபாகத்து அத்திப்பூவை
என் முழுமைக்காண இணை
எனினும்
ரஸனை பேதங்கள் இல்லாமலா போகும்?

ஆதமும் ஹவ்வாவும்
இறக்கப்பட்ட ஸ்தலங்களின் பேதமது

வரனுறல் அறியாச் சோலையென்று புளகித்துக்
கபிலன் உலவியிருந்த குறிஞ்சித் திணை
என் மனத்துக்கினிய நிலம் எனில்
பெருங்கடல் தொட்டு நிற்கும் நெய்தலே
அவளின் நெஞ்சுக்கு நனி இனிது

மண்ணில் நின்றபடி தூவெளியைத் தீண்டலாகும்
ஒளி நனையும் உச்சிகளே நாட்டம் எனக்கு
அறியா ஆழம் அனுப்புகின்ற அலைகள்
மீண்டும் மீண்டும் தொட்டிருக்க வேண்டும் அவளுக்கு

No comments:

Post a Comment