Saturday, April 29, 2017

இப்னுல் அரபியின் சமாதியில்

சையத் ஹுசைன் நஸ்ர்

Related image

(ஈரான் நாட்டில் பிறந்தவரும், அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வுத் துறையின் பேராசிரியருமான சையத் ஹுசைன் நஸ்ரு எழுதிய “With Titus Burckhardt at the Tomb of Ibn ‘Arabi” என்னும் கட்டுரையின் தமிழாக்கம் இது).

Image result for titus burckhardt
Titus Burckhardt 

      1966-ஆம் ஆண்டின் இலையுதிர் பருவத்தில், பெய்ரூட் நகரின் அமெரிக்கப் பல்கலைக்கழக நூற்றாண்டுக் கொண்டாட்ட நிகழ்வு டைட்டஸ் புக்கார்ட்டைச் சந்திப்பதற்கான வாய்ப்பை நல்கிற்று. முன்பெல்லாம் நிகழ்ந்தது போல் ஐரோப்பிய மண்ணில் அல்லாது இத்தருணம் முதன் முறையாக அவரை அரபுலகின் எல்லைக்குள் சந்தித்தேன். நவீன மற்றும் மேற்குமயமான பெய்ரூட் நகரின் சத்தமும் இரைச்சலும் தாண்டி அதன் பாங்கோசை (அதான்) கேட்டபோது, இஸ்லாமிய உலகில் நவீனமயமாதல் மற்றும் மேற்குமயமாதலின் பரவலுக்கான துறைமுகம் என்று குறிக்கப்படும் இந்த மூலையிலும்கூட இஸ்லாத்தின் உயிரோட்டம் உணரப்பட வேண்டும் என்று அவர் சொன்னார். அருகில் உள்ள பழைய மஸ்ஜிதுகள் சிலவற்றைக் காணவும், மத்திய தரைக்கடலின் நீலவான விரிவின், மத்திய கிழக்கின் தெளிந்த வானத்தின் வெளிச்சத்தில் மர்யமியத் துதிகள் சிலவற்றை ஓதி தியானித்து மத்திய தரைக்கடற் பகுதி முழுவதுமான சமயச் சூழலில் கன்னி மர்யமின் தாக்கம் பற்றிச் சிந்திக்கவும் வாய்த்தது.

      மேலும், நாங்களிருவரும் புனிதரான யஷ்ருதி சூஃபிப் பெண்மணி சய்யிதா ஃபாத்திமா அவர்களைச் சந்திக்கவும் வாய்ப்புப் பெற்றோம். (யஷ்ருதி சூஃபி வழி 1841-இல் அப்போதைய பாலஸ்தீனத் தலைநகரான அக்ரா நகரில் வட ஆப்ரிகாவிலிருந்து வந்த ஷாதுலியா சூஃபி வழியின் குருவான அலீ நூருத்தீன் அல்-யஷ்ருதி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. – மொ.பெ.) சூஃபித்துவம் பற்றி அவர் எழுதிய மிகப் பிரலமான நூல் அர்-ரிஹ்லா இலல் ஹக் என்பது. தனது நூலுக்கான தலைப்பைத் தேர்ந்தெடுக்க முடியாமல் மிகவும் தவித்ததாகவும், ஒரு நாள் கனவில் இப்னுல் அரபி அவர்கள் தோன்றி அந்தத் தலைப்பை அவர்களுக்குத் தந்ததாகவும் சொன்னார். யஷ்ருதியா வழியின் நிறுவனரின் மகளான அவர் டைட்டஸ் புக்கார்ட்டின் ஆன்மிகப் பிரசன்னம் மற்றும் பிரகாசமான ஆளுமையால் மிகவும் கவரப்பட்டார். அதன் அடையாளமாகத் தனது சுயசரிதையான மசீர(த்)தி இலல் ஹக் என்னும் நூலில் டைட்டஸுக்கும் அவரின் சந்திப்புக்கும் ஒரு தனிப்பக்கம் வழங்கியிருந்தார்.

Image result for ancient damascus
damascus 

      எனினும், பெய்ரூட்டில் காண்பதை விடவும் மரபான இஸ்லாமிய வாழ்க்கை மற்றும் கலைகள் காணக் கிடைக்கும் அரபுலக அருகாமைக் கிழக்கின் மரபான இஸ்லாமியத் தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்றே டைட்டஸ் புக்கார்ட் பேரார்வம் கொண்டிருந்தார். எனவே, சில ஆசோசனைகளுக்குப் பின்னர், நாங்களிருவரும் ஒன்றாக டமஸ்கஸுக்குச் செல்ல முடிவு செய்தோம். (டமஸ்கஸ் அரபி மொழியில் திமிஷ்க் என்று சொல்லப்படும். “இப்பூமியிலொரு சொர்க்கம் உள்ளதெனில் அது இதுதான் இதுதான் இதுதான்” என்று நபிகள் நாயகம் சிலாகித்த நகர் அது. –மொ,பெ.) அமைதி மற்றும் நிற்சலனத்தின் அற்புத உணர்வுகளைத் தந்த அழகிய மலைகள் மற்றும் சமவெளிகளின் ஊடான இரண்டு மணி நேரப் பயணத்தில் இஸ்லாமியப் பண்பாடு மற்றும் மரபின் பல்வேறு அம்சங்கள் குறித்துப் பொதுவாக அவர் தனது கருத்துக்களைச் சொல்லிக்கொண்டு வந்தார். அந்நிலப்பகுதியானது அவர் நன்கறிந்த ஸ்பெயினின் அந்தலூசியப் பகுதி மற்றும் மக்ரிப் என்னும் ஆஃப்ரிக்க வடமேற்குப் பகுதியின் (மொரொக்கோ, அல்ஜீரியா, துனீசியா மற்றும் லிப்யா –மொ,பெ.) நிலவியலுடன் கொண்டிருக்கும் சூழலியல் மற்றும் புவியியல் ஒப்புமைகளையும், டமஸ்கஸ் மற்றும் மர்ரகஷ் போன்ற இஸ்லாமிய நகரங்கள் பலவற்றைச் சூழ்ந்துள்ள மலைகள் மற்றும் பாலைவனங்களின் ஒத்துறவையும் பற்றிப் பேசிக்கொண்டு வந்தார். அவரது கருத்து நான் அன்றாடம் பார்த்து வந்திருக்குமொரு இயற்கைக் காட்சியின் அனுபவத்திற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தந்து, நாட்டுப்புறச் சூழலின் அனுபவத்தை அகவயமாக்கிற்று. அத்தகைய ஆன்மிக விளைவு ஒரு மகானின் சகவாசத்தில் மட்டுமே நிகழ முடியும்.

Image result for sayyidah zaynab mosque damascus
Sayyidah Zaynab Tomb Damascus

      டமஸ்கஸுக்கு வந்து சேர்ந்ததும், முதலில் நபிகள் நாயகத்தின் பேத்தியான சய்யிதா ஜைனப் அவர்களின் சமாதியை அல்லது அடக்கஸ்தலத்தைக் (மகாம்) காண்பது என்றும், அதனைத் தொடர்ந்து இப்னுல் அரபியின் சமாதி, உமய்யாக்களின் பள்ளிவாசல் ஆகியவற்றைக் காண்பது என்றும் முடிவு செய்தோம். ஏனெனில், மரபான ஒழுக்கம் (அதபு) முதலில் நாம் நமது மரியாதையை ஹழ்ரத் அலீயின் மகளாரும் நபிகள் நாயகத்தின் பேத்தியுமானவருக்கே செலுத்த வேண்டும் என்பதைக் கோருவதாக டைட்டஸ் புக்கார்ட் சொன்னார். (குறிப்பு: சய்யிதா ஜைனப் அவர்கள் அடக்கப்பட்டிருப்பது அங்கே திமிஷ்க்கிலா அல்லது எகிபிதின் கைரோவிலா என்பதில் அறிஞரிடையே விவாதமுள்ளது. கைரோவில் ஒன்றாகவும் திமிஷ்கில் ஒன்றாகவும் அவரின் பெயருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இரண்டு சமாதிகள் உள்ளன. அருகிலிருந்தும் தொலைவிலிருந்தும் மக்கட் பெருந்திரள் யாத்திரை வருமிடங்களாக அவை உள்ளன. வரலாற்றுண்மை எதுவாயிருப்பினும் அவையிரண்டுமே அவரது ”மகாம்”கள்தாம். அவற்றில் அவர் உறைகிறார், அவருடன் தொடர்புடைய பேரருளான பரக்கத்தின் வீச்சுக்கள் வெளிப்படும் மையப்புள்ளியாக அவை திகழ்கின்றன.)

 திமிஷ்கிகளால் ”சித் ஜைனப்” என்றழைக்கப்படும் அவ்விடம் பொதுவாக யாத்ரீகர்களால் நிறைந்து காணப்படும். ஆனால் அந்தக் காலை வேளையில் வினோதமாக நாங்கள் மட்டுமே அங்கு இருந்தோம். எங்களை அன்றி வேறு மக்கள் அங்கே இருந்தனர் எனில் அவ்விடத்தின் விதானத்தைப் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, கட்டடச் சுவரில் ஓடுகள் பதித்திருந்த இஸ்ஃபஹான் நகரத்துப் பாரசீகக் கைவினைஞர் மட்டுமே. பிரார்த்தனைகள் மற்றும் நீண்ட நேர அமைதியான தியானத்திற்குப் பின், அந்தக் கைவினைஞரின் பக்கம் எங்கள் கவனம் திரும்பிற்று. தற்கால உலகில் இஸ்லாமியக் கலை குறித்துத் தனித்தன்மையான பெரு நூற்களைத் தந்தவரான அந்த மேதையின் கவனத்தை அவர்களின் வேலை ஈர்த்திருந்தது. தமது தொழிலில் அந்தக் கைவினைஞர் கொண்டிருந்த ஆழமான பக்தி மற்றும் பணிவை புக்கார்ட் சுட்டிக் காட்டினார்.

Image result for fez morocco culture
Bab Jeloud , Fez, Morocco

அப்போது நாங்கள் ஃபேஸ் நகரை நினைவு கூர்ந்தோம். (மொரொக்கோ நாட்டின் இரண்டாவது பெருநகர் ஃபேஸ். 1925 வரை அதன் தலைநகராகவும் இருந்தது –மொ.பெ.)  ஸ்விட்சர்லாந்தில் உள்ள ’உர்ஸ் க்ராஃப் வெர்லாக்’ பதிப்பகத்திற்காக அவர் அப்போது தொகுத்துக்கொண்டிருந்த ”ஆன்மாவின் நகரங்கள்” (Cities of the Spirit) என்னும் நூல் வரிசையில் இஸ்ஃபஹான் பற்றியும் ஒரு நூலை அவர் எழுதவேண்டும் என்று நாங்களிருவரும் செய்திருந்த திட்டத்தையும் ஆலோசித்தோம். அழகிய நகரான இஸ்ஃபஹான் பற்றி எழுதப்பட்ட ஃபேஸ்-ஸ்டாட் தெஸ் இஸ்லாம் (Fes-Stadt des Islam) என்னும் நூலினைப் போலொரு நூல் வரவேண்டும் என்பது எனது ஆறாத ஆசையாக இருந்தது. அந்நகரையும் சென்று காண அவர் விரும்பினார். ஆனால் அக்கனவு ஒருபோதும் நினைவாகவில்லை. புக்கார்ட் போன்றதொரு இஸ்லாமியக் கலை விமரிசகரின் கண்களின் வழியே ஸஃபாவித் வம்சத் தலைநகரின் நுட்பமான மற்றும் வானுலகு அனைய மாளிகைகளைக் கண்டு பயனுறும் பேறு இவ்வுலகிற்கு வாய்க்கவில்லை. 
  
          சய்யிதா ஜைனபின் சமாதியில் பணியாற்றியிருந்த அந்த பாரசீகக் கைவினைஞரின் ஆளுமையிலும் தொழிலிலும் பாரசீகக் கலையை தரிசித்த அந்நிகழ்வு மற்றும் அந்த யாத்திரையின் பின்புதான் டைட்டஸ் புக்கார்ட்டும் நானும் அச்சமாதி (மகாம்) அமைந்துள்ள தெற்குச் சமவெளிகளை விட்டுக் கிளம்பி இப்னுல் அரபியின் சமாதி அமைந்துள்ள வட திமிஷ்கின் மலைச்சரிவுகளுக்குச் சென்றோம். பிரார்த்தனைகள் மொழிந்த பின், மரியாதையுடன் அந்தச் சந்நிதிக்குள் நுழைந்து, ஞானியும் மாபெரும் மீப்பொருண்மைவாதியுமான அவரின் சமாதியருகில் அமர்ந்தோம். தியானத்தின் நிற்சலனமும் நிசப்தமும் அதனைச் சூழ்ந்திருந்தது. தெய்வீகப் பெரு மையத்தின் எதிரொலியாகவும் விளிம்புலக வாழ்வின் சலனத் தோற்றத்தின் மீதான சாஸ்வதத்தின் பிரதிபலிபாயும் திகழ்கின்ற புனிதத் தலங்களில் ஒன்றான அந்தப் புனிதத் தலத்தில் அத்தருணத்தில் புக்கார்ட்டும் நானும் மட்டும் மீண்டும் தனிமையில் இருக்கிறோம் என்னும் உண்மை அதன் சூழலின் அமைதி மற்றும் தூய்மையை மேலும் துலங்கச் செய்தது.

Image result for tomb of ibn arabi
Tomb of Ibnul Arabi

      சூஃபித்துவத்தின் இதயத்தில் இருக்கும் மெய்ம்மையின் (ஹகீக்கத்) விகிதங்களை நான் சிந்தித்தபோது எனது சகாவின் முகத்தை அடிக்கடி திரும்பிப் பார்த்தேன். அவரின் மூடிய கண்கள் உள்முகமாக இதயத்தை நோக்கியிருப்பன போலும், அவரது மனமும் ஆன்மாவும் ஸ்படிகமாகி முன்னோக்கும் பேரறிவின் ஒளி அவரின் முகத்தில் பிரதிபலிப்பது போலும் இருந்தது. இப்னுல் அரபியை மேற்குலகிற்கு அறிமுகப்படுத்தியதில் புக்கார்ட்டின் பங்களிப்பைப் பற்றி அப்போது நான் எண்ணினேன். அவரின் La Sagesse des prophetes, Vom Sufitum என்னும் நூலினை நான் நினைவுகூர்ந்தேன். (இப்னுல் அரபி எழுதிய அல்-ஃபுஸூஸுல் ஹிகம் என்னும் நூலின் ஃபிரெஞ்ச் மொழிபெயர்ப்பு. ‘மெய்யறிவின் ஒளிச்சுடர்கள்’ என்னும் தலைப்பில் தென்காசி ஆர்.பி.எம்.கனி அவர்களின் தமிழாக்கம் சில பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்தது. –மொ.பெ) இதனை ஃப்ரெஞ்சில் Introduction aux doctrines esoteriques de l’Islam, Cle Spiritual de l’astrology musulmane (இஸ்லாமிய அகமியக் கோட்பாடுகள் மற்றும் முஸ்லிம் வானியலின் ஆன்மிகம் பற்றிய அறிமுகம்) என்றும் De l’homme Universel (பிரபஞ்ச மனிதன்) என்றும் சொல்வார்கள். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நான் மாணவனாக இருந்தபோது படித்திருந்த அதன் ஒப்பற்ற முகவுரையையும் இப்போது நினைவு கூர்ந்தேன். பேராற்றலும் தெளிவும் கொண்டதொரு மீப்பொருண்மை மொழியில் இப்னுல் அரபி மற்றும் அவரது சிந்தனைப் பள்ளியின் போதனைகளின் சாராம்சத்தை விளக்குவதில் இந்த எழுத்துக்கள் எத்தனை அவசியமானவை! அந்த மீப்பொருண்மை மொழியானது முதலில் ரெனீ ஜினான் அவர்களால் வரையப்பட்டு ஃப்ரிட்ஜாஃப் ஷுவான் அவர்களால் அற்புதமான முறையில் செம்மையாக்கப்பட்டு, ஷைகுல் அக்பரின் (மகாகுரு இப்னுல் அரபியின்) போதனைகள் மீது தனித்த முறையில் புக்கார்ட் அவர்களால் பொருத்தப்பட்டது.

      பாரசீக நாட்டில் மரபான சூஃபி குருமார்களிடம் இப்னுல் அரபியின் பனுவல்களை பல்வேறு அரபி மற்றும் பாரசீக உரைகளுடன் பயில்வதில் நான் மூழ்கிப்போயிருந்த காலத்திலும், ’இப்னுல் அரபி அறிஞராக புக்கார்ட்டால் பாராட்டப்பட்ட டி.இஜுட்சு மற்றும் ஹென்றி கார்பின் ஆகியோருடன் அந்நூற்களை விரிவாக விவாதித்த காலத்திலும் புக்கார்ட்டின் சாதனையை நான் முழுமையாக உணர்ந்தேன். சூஃபித்துவ மரபு மற்றும் சூஃபித்துவத்தின் பரக்கத் (அபிவிருத்தி) ஆகியவற்றிலிருந்து துண்டிக்கப்பட்டுவிடாமல் அக்பரிய மீப்பொருண்மையை அதன் இதயத்தை அடைந்து சமகால மொழியில் அதை வெளிப்படுத்தியதில் புக்கார்ட் வெற்றி கண்டிருக்கிறார். அவரின் மொழிபெயர்ப்புக்களும் உரைகளும் ஒரே சமயத்தில் மரபுத் தன்மை கொண்டதாகவும் வாழும் ஞானமும் ஒளியும் நிறைந்ததாகவும் இருக்கின்றது. அவ்வகையில், மரபுப்பள்ளியைச் சேர்ந்தவர்களாகத் தம்மைக் கோரிக்கொள்ளும் சிலரின் பகட்டான வறட்டு மொழிபெயர்ப்புக்களை விட்டும் அவை தெளிவாக வேறுபட்டுள்ளன. அந்தப் போலிகள் சூஃபித்துவத்தை இப்னுல் அரபியிலும், இப்னுல் அரபியை செயலற்ற மீப்பொருண்மையின் சிந்தனைவாதத்திலும் குறுக்கிவிடுகின்றனர். அவர்களின் இச்செயல், இப்னுல் அரபியின் போதனைகளிலிருந்து வெளிப்படும் ஜீவ பிரசன்னத்தை விட்டும் வெகுதூரம் விலகியுள்ளது. புக்கார்ட்டின் எழுத்துக்களிலும் பாரசீகத்தில் நான் பயின்ற இப்னுல் அரபி வழியின் மரபான சூஃபி குருமார்களிடத்திலும் அந்த உயிர்த்துடிப்பை நான் கண்டிருக்கிறேன்.

      இப்னுல் அரபிச் சிந்தனைப் பள்ளியில் பின்னர் நான் அடைந்த அனுபவங்கள் திமிஷ்கில் அவரது சமாதியில் டைட்டஸ் புக்கார்ட்டுடன் நான் அமர்ந்திருந்த நினைவை அவ்வப்போது கிளர்த்தியுள்ளன. ஆன்மிக மரபுகள் அனைத்தின் இதயத்தில், குறிப்பாக சூஃபித்துவத்தில் உறைகின்ற சத்தியத்தை தியானித்தபடி தன்னை மறந்து அங்கே புக்கார்ட் அமர்ந்திருப்பதைப் பார்த்தது, புனிதப் புவியியலால் தீர்மானிக்கப்படுவதும் மாபெரும் ஞானியரின் சமாதிகளுடன் பொதுவாக அடையாளம் காணப்படுவதுமான குறிப்பிட்ட மையங்களில் மர்மமான முறையில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் சத்தியத்தின் முன் ஸ்படிகமெனத் திறந்தவராக, தெய்வீகப் பிரசன்னத்தின் முன் பணிந்தவராக அவரைக் கண்டது, அல்-ஹிக்மா என்னும் ஞானத்தை வெறுமனே நூலறிவாக விளங்கியிருப்பதற்கும் அனுபவித்தறிவதற்கும் இடையிலுள்ள அகண்ட இடைவெளியை உணர்த்துவதாக இருந்தது. சூஃபித்துவ உண்மையை உணராமலேயே இப்னுல் அரபியைப் பற்றி எழுதிக்கொண்டு கராரான மரபாச்சாரத்தைக் கோருவோருக்கு மாற்றமாக புக்கார்ட் தான் எழுதியதன் உண்மையை வாழ்ந்தார். அவரிலிருந்து வெளிப்பட்ட தனித்த அறிவொளி அவர் படித்த பிரதிகளின் இதயம் வரை துளைத்து, உண்மையானது மனத்தின் தளத்திலிருந்து இதயத்தின் மையத்திற்கு இறங்கி முழுமையாக அனுபவப்பட்டு ஊர்ஜிதமான ஒருவரால் மட்டுமே சாத்தியமாகக்கூடிய முறையில் அவற்றின் அர்த்தங்களை வெளிச்சப்படுத்தியுள்ளார்.  அசாதாரணத் தெளிவுள்ள துளைக்கும் கூர்மதியுடன் ஒழுக்கமும், எதன் கோட்பாட்டு அம்சங்களை அத்தகைய ஆழத்துடனும் புரிதலுடனும் அவர் கற்றாரோ அந்த பேருண்மையின் பிரசன்னத்தால் நிலைமாற்றம் பெற்ற ஆன்மாவும் கொண்டதொரு மகானின் பண்புகளை புக்கார்ட் அவர்கள் இப்னுல் அரபியின் சமாதியில் வெளிப்படுத்தினார்.

      சூஃபித்துவ வரலாற்றில் தனித்தன்மையதாய் இருப்பதும் பரந்த திரைச்சீலையில் பற்பல துணைக்கூறான போதனைகளின் ஊடிழைகளுடன் நெய்யும்படியாய் இப்னுல் அரபிக்கு விதிக்கப்பட்ட மிகச்சிறந்த மீப்பொருண்மைத் தத்துவத்துடன் ஒரு சிறப்பு நெருக்கத்தை உணர்ந்தவர்களாக அந்த ஞானியின் சமாதியை விட்டுத் திரும்பி வந்தோம்.

      புக்கார்ட் ஜெருசலேமுக்குக் கிளம்பினார். இப்னுல் அரபி விரிவாக விளக்கி எழுதியுள்ள நபிகள் நாயகத்தின் இரவு விண்ணேற்றம் (மிஃராஜ்) நிகழ்ந்த இடத்தைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, எவரைப் பின்பற்றி புக்கார்ட்டுக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளதோ அந்த இறைத்தூதரும் ஏகத்துவத்தின் பிதாமகருமான இப்றாஹீம் நபி அவர்களின் அடக்கத்தலத்தை ஹிப்ரானில் தரிசிக்க வேண்டியும்தான். (ஜெருசலேமிற்கு 30.கி.மீ தெற்கே ஜிபாலுல் ஃகலீல் என்னும் ஜூதி மலையில் அமைந்துள்ள இந்நகரம் அரபியில் அல்-ஃகலீல் என்று அழைக்கப்படுகிறது. இப்பெயர் இப்றாஹீம் நபியின் சிறப்புப்பெயர்தான். அணுக்கத் தோழன் என்று பொருள். யூத மொழியில் ஹிபர் என்றாலும் அதே பொருள்தான். அச்சொல்லிலிருந்தே ஹிப்ரான் என்னும் பெயரை இவ்வூர் அடைந்திருக்கிறது. டைட்டஸ் புக்கார்ட் பின்னாளில் இப்றாஹீம் இஸ்ஸுத்தீன் என்று இஸ்லாமியப் பெயர் சூடினார்.  – மொ.பெ.)

Image result for titus burckhardt
Titus Burckhardt in his last years

      இந்நெடும் பயணத்தில் உடன்வருமாறு அவர் என்னை அழைத்தார். ஆனால் எதிர்பாரா நிலையில் வந்த பல அலுவல்களின் அழுத்தத்தால் நான் டெஹ்ரானுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. சில மாதங்களிலேயே ஜெருசலேம் மற்றும் அல்ஃகலீல் (ஹிப்ரான்) ஆகியவற்றின் நிலை தாறுமாறாகிவிடும் என்பதை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை. தனது பயணத்தின் தனிப்பட்ட அருள்கள் பற்றியும், அவை எல்லாம் அந்தவொரு அற்புத நாளில் திமிஷ்கில் சய்யிதா ஜைனப் மற்றும் இப்னுல் அரபியின் சமாதிகளில் விண்ணிலிருந்து நாங்கள் பெற்ற அருளாசிகளின் தொடர்ச்சியே என்பது பற்றியும் பின்னால் அவர் எனக்கு எழுதினார்.

      பல வருடங்கள் கழித்து, நாங்களிருவரும் ஒன்றாக கஃபாவைச் சுற்றிவந்த போது பெரு மையத்தின் பரக்கத்திற்கும் (அபிவிருத்திக்கும்) அதனைப் பிரதிபலிக்கும் சிறு மையங்களுக்கும் இடையிலான உறவிணைவின் எதார்த்தம் பற்றி மீண்டும் பேசினோம். ”மக்கத்துத் திறப்புகள்” (ஃபுத்தூஹாத்துல் மக்கிய்யா) எழுதிய அந்த மகானின் (இப்னுல் அரபியின்) சமாதிக்குச் சென்றதன் அருளாசிகள் வந்தன.

      டைட்டஸ் புக்கார்ட் இப்போது இந்த நிலையற்ற இடத்தை விட்டு ஆன்மாவின் உலகிற்குச் சென்றுவிட்டார். ஆனால், அனுபவ ஞானத்தின் விளைச்சலான அவரது எழுத்துக்கள் இன்னமும் பொதுவாக சூஃபித்துவத்திலும் குறிப்பாக இப்னுல் அரபியிலும் அக்கறையான ஈடுபாடு கொண்டோரின் பாதையைத் தனித்தன்மையான முறையில் வெளிச்சப்படுத்தி வருகின்றது. இறைவன் அவனது தேர்ந்த அருளை அவரின் மீது பொழிவானாக. ரஹிமஹுல்லாஹ்.


No comments:

Post a Comment